பின்நவீனத்துவப் புன்னகைகள்

இராஜசேகரனின் கவிதைகள்

(இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால், 2012 மார்ச்சில், பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. இராஜசேகரனின் ‘பின்நவீனத்துவப் புன்னகைகள்’ என்னும் கவிதை நூலுக்கு அளிக்கப்பட்ட முன்னுரை இது – மதிப்பீடு என்றும் வைத்துக் கொள்ளலாம்.)

இயற்கையோடு ஒட்டியிருந்த காலத்தில் சொற்களுக்கு வலுவிருந்தது. மந்திரமாக இருந்தது. இயற்கை சொற்களைத் தாங்கி நின்றது. அதை அழிக்கப் புறப்பட்டுவிட்ட போது சொற்களுக்கு வலுவேது? இன்று கவிதைக்கு என்ன வலு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் இயற்கையோடு கொண்ட பழைய நட்பை மறக்காமல் சொற்கள் அதைத் தாங்க முற்படுகின்றன. கனம் தாங்காமல் அவ்வப்போது மூச்சு வாங்குகின்றன, சமயத்தில் தளர்ந்துவிழுகின்றன. கொஞ்சம் கழித்து ஏதோ உணர்த்தி விட்ட இறுமாப்பில் மகிழ்ச்சியோடு குதிக்கவும் செய் கின்றன. இறுமாப்பை எதிர்த்து மக்கள் போராடுவதற்கு உதவும் போது அந்தச் சொற்களுக்குச் சற்றே ஆற்றல் வாய்த்தாலும், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டுக்கொள்ளை களில் அந்த வலு இற்றுப்போய் கணினியின் செயற்கை மொழி களாக மாறவும் செய்கின்றன.

இராஜசேகரனின் கவிதை இப்படிப்பட்ட தாங்குதலையும் மூச்சு வாங்குதலையும் நொய்ந்து விழுதலையும் குதித்தலையும் புலப் படுத்துகிறது. பிரபஞ்சத்தில் பரிதிக்கும் நிலவுக்கும் மேகத்திற்கும் உள்ள உறவைப் பற்றி யோசிப்பது தொன்மக்கால நிகழ்வு. அந்தத் தொடர்பை இவருடைய கவிதைகள் மறுபடியும் நினைவுகூர் கின்றன. நம்மை எங்கோ ஒரு முற்காலத்துக்குக் கொண்டுசெல்ல முற்படுகின்றன. தோல்வியுறுகின்றன.

இயற்கைக்கும் சொற்களுக்குமான உறவைத் துண்டித்தது யார்? இயற்கையை அழிக்கப் புறப்பட்டது யார்? பன்னாட்டு நிறுவனங் களின் பேராசைதான். அதனை எதிர்க்கத்தானே வேண்டும்? எல்லாமே விற்பனைப் பண்டமாகிவிட்ட காலத்தில், பழைய மதிப்புக்குரிய பிம்பங்கள் வெறும் சிமெண்ட் சிலைகளாக மாற அவற்றின் யோனியைப் பிளாஸ்டிக் பைகள்தானே அடைத்துக் கொள்ளும்?

காக்கை, சேவல், பிற பறவைகள் எல்லாம் இருக்கவே செய்கின்றன. ஆனால் குருவிகள் மட்டும் இல்லை. பெரியபெரிய செல்ஃபோன் கோபுரங்கள் வந்ததில் முதல் பலி அவைதான். அதனால் ஒப்பாரி பற்றிய இரகசியத்தை அவை கூகைக்குக் கொடுத்துச் சென்றுவிட்டன. கூகைக்கு மட்டுமல்ல, குழந்தை யைத் தூங்க வைக்கவேண்டி தொலைக்காட்சிகளுக்கும் கொடுத்து விட்டன. என்றைக்கு வாழ்க்கை இயந்திர மயமானதோ, அன்றைக்கே அலாரம் துயிலெழுப்ப வந்து விட்டது. வருந்திப் பயன்என்ன? பற்றிப் பரவி வருகின்ற நெருப்பு, நம் அண்டை நாடுகள் வரை வந்தது மட்டும் அல்ல-நம் சொந்த நாட்டிலேயே நீண்ட காலமாக எரிந்துகொண்டிருக்கிறது. அந்த நெருப்பில்தான் முத்துக்குமார் போன்ற எத்தனையோ பேர் எரிந்தார்கள்.

இராஜசேகரனின் கவிதைகளில் நிறைய செயப்பாட்டுவினைகள். செய்வினைகளை விட எடுப்பாக. ‘அடைக்கப்பட்ட’, ‘சேதப்படுத் தப்பட்ட’ (சேதப்பட்ட அல்ல), ‘புனிதப்படுத்தப்பட்ட’, ‘செப்பனிடப் பட்ட’, ‘கையளிக்கப்பட்ட’, ‘பேணப்பட்ட’ (பகல்), ‘கொன்றொழிக்கப் பட்ட’, இப்படி. நிறைய நிறைய. இந்தச் செயப்பாட்டு வினைச் சொற்கள், இன்றைக்கு நாம் பிறரால் பிறருக்காக பிறரின் பேராசைக்காகச் செயல் படுத்தப்படும் பொருளாக மாறிக்கொண்டி ருக்கிறோம், நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றன.

சில காதல் கவிதைகள் உள்ளன. எல்லாம் அற்புதமான மழை வீடுகள், கனவுக் குடைகள். ரொமாண்டிக் தப்பித்தல்கள். இதுவும் இன்றைய வாழ்க்கைக்கு ஒருபுறம் தேவையாகத்தான் இருக்கிறது. மகன் பற்றிய கவிதைகளில் மிக எளிமையான மகிழ்ச்சியும் கொண்டாடலும் தென்படுகின்றன. மிகச்சில கவிதைகளில் பைபிளின் தாக்கமும் கிறித்துவச் சொல்தாக்கமும் (பலுகிப் பெருகி…) தென்படுகின்றன. (பல்குதல், சமயநடையில் பலுகுதலா கிறது.) அவ்வப்போது நீலத்தேவதை நீலப்பூச் சூடி வந்து போகிறாள்.

கல்வியை எப்படி வியாபாரப் படுத்தினார்கள் என்று மிக எளிமையாகவும் வேகமாகவும் ஒரு கவிதை பேசுகிறது. என்ன, அரிசிக்கு பதிலாக இப்போது குடோனில் மூட்டைகளாக்கப் படுபவர்கள் மாணவர்கள். டிக்கெட் கொடுக்குமிடம் தன் பழைய பணியை மாறாமல்-காசு வாங்கிக்கொண்டு ‘சீட்டுக்’கொடுக்கும் பணியைச்-செய்கிறது. அங்கதம் இயல்பாக எழுகிறது. அதுபோலத் தான் திணை மயக்கம் கவிதையிலும்.
ஒரு கவிதை உனக்கு என்ன பெயர்வைப்பது என்று கேட்கிறது. எதற்குப் பெயர் வைக்கவேண்டும்? கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொள்ள வேண்டியது தான். ஆண்கள் வியாபாரிகளாக வும் வியாபார விலைப்பொருள்களாகவும் ஆகிப்போனார்கள். பெண்களோ அதிகாரத்தின் நீளும் கரங்கள் பற்றி எவ்விதக் கவலையுமற்று முகப்பரு பற்றிய கவலையில் ஆழ்ந்திருக் கிறார்கள்.

பின்நவீனத்துவப் புன்னகைகள் பூமியைச் செவ்வாய் ஆக்குவது ஒரு புறம். ஆக்குபவர்கள் சந்திரனில் வீடு தேடுவது இன்னொரு புறம். ஆனால் சாமானிய மக்களாகிய நாம் என்ன செய்வது? விளைநிலங்களை யெல்லாம் பிளாட்போட்டு விற்கும்போது தொலைக்காட்சிப் பெட்டிகளில் நீட்டப்படும் நெல்நாற்றுகளைப் பார்த்துக்கொண்டிருப்பதா? பன்னாட்டு நிறுவனங்களின் மின்சாரக் கொள்ளைக்காகத் தமிழ்நாட்டுக்கே உரிய தொழில்கள் பலியிடப் படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதா? அண்டை நாட்டின் டைடல் பூங்காக்களுக்காகக் கூடங்குளமும் முல்லைப் பெரியாறும் விலை போவதைப் பார்த்துக்கொண்டிருப்பதா? இந்தக் கையறுநிலைதான் வாழ்க்கையா என்ற கேள்விகளையெல்லாம் இராஜசேகரனின் கவிதைகள் எழுப்புகின்றன.

இராஜசேகரனின் கவிதைகள் சமுதாய உணர்வும் தனிவாழ்க்கை யின் சிறுசிறு மகிழ்ச்சிகளும் அடங்கிய நல்ல தொகுப்பு. ஆனால் அந்தச் சொற்களில் ஆறு மணிக்கு வீடு திரும்பும் தொழிலாளி யின்-அல்ல அல்ல, கணினி மென்பொருள் துறை தன் சகல சக்திகளையும் உறிஞ்சியபின் நள்ளிரவில் வீடுதிரும்பும் மிடில் கிளாஸ்காரனின் நிராசை அதிகமும் தென்படுகிறது. (அதற்கு மாற்றுக் கனவுதான் காதலும் குழந்தையும் நீலத் தேவதையும் மழைத் திரைச்சீலைகளும்.) 1960களில் நாலுமாதத்திற்குப்பின் விளைச்சலை அறுவடை செய்யப்போன விவசாயியின் முகத்தில் தென்பட்ட குதூகலமும் வலுவும் இப்போது தென்படவில்லை. ஒருவேளை இதுதான் இந்தக் காலத்திற்கு வாய்த்திருக்கிறதோ என்னவோ?
சொல்லை வேய்பவர்களாகிய கவிஞர்கள் எதிர்காலச் சமுதாயத் திற்கு இந்தச் சொற்களைத் தவிர வேறு எதை அளித்துச் செல்ல முடியும்? இராஜசேகரனும் தனது பங்காகக் கொஞ்சம் சொல் விதைகளை உணர்வுபூர்வமாக அளித்திருக்கிறார்.

முதுகலையில் எல்லோருக்கும்போலவே-எந்த வகையிலும் ஒரு வழிகாட்டியாகக் கூட அல்லாமல்-கொஞ்சம் கொஞ்சம் அவருக் குப் பாடம் நடத்தியவன் நான் என்பதில் பெருமைகொள்கிறேன்.


அழிவை நோக்கி நாமும் உலகமும்

அழிவை நோக்கி நாமும் உலகமும்

எஸ். என். நாகராஜனின் ‘கீழை மார்க்சியம்’
என்ற நூலை முன்வைத்துச் சில எண்ணங்கள்

எஸ். என். நாகராஜன் பலராலும் மதிக்கப்படுகின்ற மார்க்சியத் தத்துவ அறிஞர். அவர் உருவாக்கியிருக்கும் தத்துவம் கீழை மார்க்சியம். அவருடைய குறிப்பிடத்தக்க நூல் ‘அழிவை நோக்கி நாமும் உலகமும்’ என்பது. அது கீழை மார்க்சியம்-வரலாறு-அரசி யல்-மெய்யியல் பற்றிய நூல்.

இத்தொகுப்புநூலில் ஐந்து தனித்தனி நூல்கள் அடங்கியுள்ளன.

இவற்றுள் முதலாவது, கம்யூனிசம்-விடுதலையின் இலக்கணம் என்னும் நூல். மனிதன் படைப்பினால் ஆண்டவன் ஆகிறான், ஆனால் இவ்வுலகில் அவன் அடிமையாகக் கிடக்கிறான். தான் ஒரு அடிமை என்று அறியாதவனுக்கு விடுதலை இல்லை என்று் இந்நூலில் நாகராஜன் கூறுகின்றார். வாழ்வு உண்டென்று புலனா னால், உழைக்கும் மக்கள் ஒன்றுபடுவர் என்கிறார். பின்னர் முதலாளித்துவ முறையின் குறைகள் விரிவாக அலசப்பட் டுள்ளன. ஆழ்நோக்கில் வறட்டு நாத்திகமும் மதமும் ஒன்றே என்பதையும் விளக்கியுள்ளார். நூலின் இரண்டாம் பகுதியில் ‘அந்நியமாதல் கோட்பாடு’ விளக்கப் படுகிறது. அதன் பின், கிறித்துவர்களுக்கும் மார்க்சியர்களுக்கும் இடையில் உரையாடல் நிகழும் பொதுக் களம் விவரிக்கப்படு கிறது. “மார்க்ஸை இளம் மார்க்ஸ், முதிய மார்க்ஸ் எனப் பிரித்துப் பார்க்கக்கூடாது” என்பதற்கான காரணங்களை எடுத் துரைக்கிறார். மூன்றாவது பகுதியில் உள்ள அறிவியல் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. உழைக்கும் மக்களுக்குத் தேவையான அறி வியல் பற்றிப் பேசுகிறார். புதியவகை விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் தேவை என்கிறார். இவ்விதம் ஏழு கட்டுரைகள் அடங்கியுள்ளன. 1982இல் வெளிவந்த நூல் இது.

இரண்டாவது நூல், மார்க்சியம்-கிழக்கும் மேற்கும் இதில் பதினைந்து கட்டுரைகள் அடங்கியுள்ளன. 1993இல் வெளிவந்த நூல் இது. காலனியத்தின் வரலாறு, அது திட்டமிட்டு எப்படி மக்கள் இயக்கங்களை அழிக்கிறது என்பது முதலில் பேசப்படுகிறது. பின்னர் மக்கள் விடுதலைபெறுவதற்கு, புரட்சிக்கு எதிர்நிலையில் ஏன் இருக்கிறார்கள் என்பது பற்றி. பின்னர் ஆசிய உற்பத்தி முறை பற்றியும், உழைப்பாளி வர்க்கத்திற்குத் தேவையான அறிவியல் பற்றியும் பேசப் படுகிறது. அதன்பின் மெய்காண் முறைகள் பற்றி. பிறகு கீழைமார்க்சியம் பற்றிய விரிவான விளக்கம் அடங்கியுள்ளது. இயங்கியல், மதச்சார்பின்மை போன்றவை பற்றிய விரிவான ஆய்வுகள் உள்ளன.

அடுத்த நூல், அழிவின் தத்துவம் இதில் பத்துக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இது 1997இல் வெளியான நூல். அழிவின் தத்துவம் என்ற கட்டுரையிலிருந்தே இந்த நூலின் தலைப்பு பிறந்துள்ளது. அதில் அறிவியல் பற்றியும் சுற்றுச்சூழல் ஆபத்து பற்றியும் மனிதர்களைப் பற்றிய விஞ்ஞானிகளின் விவாதங்கள்பற்றியும் விரிவாக ஆராயும் நாகராஜன், இறுதியாக வரும் ஒரு முடிவு வியப்பில் ஆழ்த்தும்-”வலுவற்றதே வாழும்”. மேற்கத்திய அறிவியல் தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். தேவைகளைக் கட்டுப்படுத்தல், அள வாக வாழ்தல் போன்றவற்றை வலியுறுத்துகிறார். பெண்ணியம் பற்றி விரிவான அலசல் இல்லை. சுருக்கமாக, மேற்கத்திய மார்க்சியம் ஆணியம்-கீழை மார்க்சியம் பெண்ணியம் எனக்கூறி முடித்துவிடுகிறார். பசுமைப்புரட்சி, அது தந்த வீரியவித்துகள், பூச்சிக்கொல்லிகள் முதலியன உண்டாக்கிய சீரழிவுகள் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். சுருங்கச் சொன்னால், மேட்டுக்குடி அறிவியலை எதிர்க்கும் நூலாக இது அமைந்துள்ளது.

நான்காவது நூல், கிழக்கு வெல்லும் இதில் ஆறு கட்டுரைகள் உள்ளன. நூல் தலைப்பிலேயே முதற் கட்டுரை அமைந்துள்ளது. இது வெளியான ஆண்டு 1997. முன்நூலில் கூறிய ‘வலுவற்றது வாழும்’ என்பதன் நீட்சியாகவே இத்தலைப்பைக் கருதலாம். முதலில் டார்வினியத்தை ஆராய்கி றது இந்நூல். பிறகு நவகாலனியம், இந்தியஅரசின் பங்கேற்பு, இன்றைய போலிகம்யூனிஸ்டுகளின் நிலை, சூழலைக் காப்பாற் றுதல் போன்ற பலவிஷயங்கள் பேசப்படுகின்றன. நூலின் முக்கியக் கரு, “கீழைக்காற்று, மேலைக்காற்றை வெல்லும்” என்பதாகிறது. (இதனை நான் “தென்றல் வாடையை வெல்லும்” என்று சொல்லவிரும்புவேன்).

கடைசிநூல், எஸ் என் நாகராசன்-75ஆம் பிறந்தநாள் மலர் இதில் எட்டுக் கட்டுரைகள் உள்ளன. ‘வாழும் மார்க்ஸ்’ என்ற கட்டுரை, மார்க்சின் பதினான்கு மேற் கோள்களை எடுத்துக்காட்டி இவை தவறானால், மார்க்சியம் அழிந்துவிட்டதாகக் கூறலாம்; ஆனால் இவை இன்றும் உண்மையானவை; எனவே இன்றுதான் மார்க்ஸ் முன்னைவிட அதிகமாகத் தேவையாக இருக்கிறார் என்று நிறுவுகிறது. பிறகு சர்வதேசப் பொதுவுடைமை இயக்கங்கள் பற்றியும், இஸ்லாமியர், தலித்துகள் பிரச்சினைகள் பற்றியும் சிறிய அளவில் சொல்லப் படுகிறது. டாங்கே பற்றியும் இந்தியப் பொதுவுடைமைக்கட்சிகள் பற்றியும் விமரிசனம் ஒரு கட்டுரையில். பின்னர் மாவோவிட மிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடியவை பற்றிச் சொல்லப் படுகிறது.

ஆக எஸ்.என். நாகராஜன் 1965முதல் எழுதிய கட்டுரைகள்-ஏறத் தாழ 45 ஆண்டுக ளின் சிந்தனைகள் தொகுக்கப்பட்டு ஒரே நூல் வடிவம் பெற்றுள்ளன. பின்னிணைப்பாக ஆசிரியர் முன்னுரைகள் சில, ஞானியின் அறிமுகங்கள், பேட்டிகள், கடிதங்கள் போன்றவை உள்ளன.இதனை வெளியிட்டிருப்பது காவ்யா. எஸ். என். நாகராஜன் அவர்களுடைய நூல்களை முன்னரே நான் அவ்வப்போது வாசித்திருக்கிறேன். என்றாலும் இப்போது முழுமை யாகச் சேர்த்து வாசிக்கும் அனுபவம் கிடைத்தது. நாகராஜன் இந்தக் கட்டுரைகளை எழுதிக் குறைந்தபட்சம் பன்னி ரண்டு ஆண்டுகளேனும் ஆகின்றன. இந்தக் காலப்பகுதியில் உலகில், இந்தியாவில் ஏற்பட்ட மாறுதல்கள் மிகமிக அதிகம். இதை நாம் மனத்தில் கொள்ளவேண்டும். ஆயினும் சில ஆண்டு களுக்கு முன் வெளிவந்த தமிழ் நேயம்-36இல் அவர் கூறியிருக்கும் கருத்துகள் நூலின் கருத்துகளோடு முற்றிலும் ஒத்தே செல்கின்றன. தமிழ்நேயம் கட்டுரையில் அவர் மார்க்சியத் திற்குத் தமது பங்களிப்பாகக் கூறியுள்ள கருத்துகளைக் காண்போம்:

1. மார்க்சியத்தைப் புரட்சிகர மெய்யியல் என்று அறிமுகப்படுத் தியமை, எளிதில் புரியக்கூடியதாக அது உள்ளதைச் சுட்டிக் காட்டியமை.
2. இனிவரும் புரட்சி உலகப்புரட்சியே, அதற்குத் தலைமை தாங்கப் போகின்றவர்கள் பெண்களே என்பதைச் சுட்டிக்காட் டியமை.
3. மாவோவையும் காந்தியையும் இணைக்கவேண்டும் எனக் கூறியமை.
4. பசுமைப்புரட்சியின் தீங்கான விளைவுகளை அறிவித்தமை.
5. கீழைமார்க்சியம் ஆகிய பெண்ணியம், சுற்றுச்சூழலை அடிப் படையாகக் கொண்ட சோஷலிசமாக அமைந்து எதிர்ப்பியக்கங் களை இணைக்கும் எனச் சுட்டிக்காட்டியமை.
6. மக்கள் தேவைகளைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்றும் ஆயுதங்களற்ற போர் வேண்டும் என்றும் வலியுறுத்தியமை.

என ஆறு விஷயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றுள் இரண்டாவது நடக்கும் என்று தோன்றவில்லை. மூன்றாவதற்குத் தேவையேயில்லை. பிற நான்கும் நானும் என்னைப் போன்றவர் களும் உடன்படக்கூடிய விஷயங்களே.

1. மேற்கத்திய நாகரிகத்தின் அறிவு வன்முறை, அறிவியல் தொழில்நுட்பம் உண்டாக்கும் பேரழிவு, சுற்றுச்சூழல் உணர்வற்ற பொறுப்பின்மை போன்றவை நிச்சயம் வற்புறுத்தப்பட வேண்டி யவைதான். ஆனால் நாகராஜனின் மக்கள் தொகைப் பெருக்கம் பற்றிய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. மால்தூஸ் கருத்தை ஏற்கிறோமோ இல்லையோ, பொதுவாக அனைவரும் சொல்லும் விஷயம், குழந்தை ஒரு வயிற்றுடன் மட்டுமல்ல, இரண்டு கைகளுடனும் பிறக்கிறது என்பது. இக்கருத்தை நாம் மறுக்க வில்லை. ஆனால், இதில் உழைப்புப் பிரச்சினை மட்டுமில்லை. உலகின் மூலவளங்கள் எல்லைக்குட்பட்டவை. யாரும் உலகத் தின் பரப்பளவை மாற்றிவிடமுடியாது. மண்ணெண்ணெய் வளம் குறைந்துகொண்டே வருகிறது. லட்சக்கணக்கான ஆண்டுகள் மட்கி எரிந்து இறுகி நிலக்கரியாகவோ எண்ணெயாகவோ மாறும் எரிபொருளை நூறே ஆண்டுகளில் சாப்பிட்டுவிட்டோம். மூல வளத்தைப் பெருக்க நமக்கு வழியில்லை. மாற்றுச் சக்திகளைக் கையாள்வதை முதலாளித்துவ அமைப்புகள் வேண்டுமென்றே தடுத்து வருகின்றன.

எல்லையற்றுப் பெருகும் மக்கள், நகர்ப்புறங்களுக்குத் தள்ளப் படுகிறார்கள், விவசாய நிலங்களில், ஏரிகளில் வீடு கட்டுகிறார் கள். காட்டை அழித்து வீடு கட்டு கிறார்கள். வீடுகட்டுவதற்கு ஆறுகளை மொட்டையடித்து மணல் அள்ளிக்கொண்டு போகிறார் கள். எங்கு பார்த்தாலும் தூசியையும் நச்சுப்புகையையும் வெளி விடும் சிமெண்ட் ஆலைகள். சாக்கடையாகும் நதிகள், குப்பை மேடுகளாகும் நகர்ப்புறங்கள். மேலும்மேலும் கழிவுகள், சாக்கடை கள், நோய்கள், வாழ்க்கை நரகமாதல். இப்படி மக்கள் தொகைப் பெருக்கத்தின் உபவிளைவுகளைச் சொல்லி மாளாது. உணவு மட்டுமே பிரச்சினை அல்ல. மக்கள் தொகை அதிகமாக அதிகமாக உணவு மட்டுமல்ல, இடம் தேவைப்படுகிறது. மின்சாரம் தேவைப் படுகிறது. வாகனங்கள் வசதிகள் தேவைப்படுகின்றன. பிரிவினைப் பட்ட பலவித வேலைகள் தேவைப்படுகின்றன. இன்னும் கனரகத் தொழிற்சாலைகள் தேவைப்படுகின்றன. விளைவு, இயற்கை அடியோடு நாசம். நமது அடுத்த தலைமுறைக்கு என்ன வைத்து விட்டுப் போகப்போகிறோம்? வறண்ட பாலை வனத்தையா?

இது நாகராஜனுக்குத் தெரியாததல்ல. அதனால்தான் இனிவரும் போராட்டம் என்பது வழக்கமான வர்க்கப் போராட்டமாக இருக்காது, உலக அளவிலான, பெண்கள் தலைமை ஏற்கின்ற, சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதை உள்ளடக் கிய போராட்டமாக இருக்கும் என்கிறார். இங்கே சீனாவை ஒப்பிடக்கூடாது. ‘நம்மைப் போன்று இரண்டுமடங்கு மக்கள் தொகையுள்ள சீனா’ என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் நாகராஜன். இருமடங்கு மக்கள்தொகை இல்லை. ஏறத்தாழ ஒன்றரை மடங்கு, அவர்கள் மக்கள்தொகையில் பூச்சியவளர்ச்சிநிலைக்கு வந்துவிட்டார்கள். ஒருவீட்டுக்கு ஒரு குழந்தை என்பதை அமுல்படுத்திவிட்டார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களிடம் நம்மைப்போல் மூன்றரை மடங்குப் பரப்பு இருக்கிறது. மக்கள் தொகை அடர்த்தியைப்பற்றிச் சிந்திப்பது முக்கியம். எட்டடிக்குச்சில் எட்டுப்பேர் இருப்பதற்கும் நூறடி மாளிகையில் எட்டுப்பேர் இருப்பதற்கும் வித்தியாசம் இல்லையா?

ஒன்றரை ஆண்டுக்குமுன் சர்வதேச உணவுக்கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலகின் அதிஏழ்மை நாடுகள் 119இல் இந்தியா 92ஆம்இடத்தில் இருக்கிறது. பாகிஸ் தான் 88ஆம் இடத்தில், மியான்மர்கூட 68ஆம் இடத்தில், இடைய றாது போர்நடந்த இலங்கை 69ஆம் இடத்தில். இந்திரா அம்மையார் அவசரநிலை பிரகடனம் செய்தபோது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் 41 விழுக்காடு பங்க ளித்த இந்திய வேளாண்மை, இன்று 18 விழுக்காடுதான் பங்களிப் பதாக இருக்கிறது. கிராமப்புற இந்தியக் குழந்தைகளில் பாதிப்பேர் உணவுச்சத்துக் குறைபாடுகளோடிருக்கிறார்கள். 1997-2005 காலப்பகுதியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏழைகளுக்கென ஒருலட்ச ரூபாய்க்குக் கார் தயா ரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்போகிறார், நமது அரசியல்-பொருளாதார-வாழ்க்கைநிலைத் தலைவிதிகளை நிர்ண யிக்கும் முதலாளிகளில் ஒருவர்.

இந்தியாவில் ஒருலட்சம் குழந்தைகள் பிறக்கும் போது ஐநூறு தாய்மார்கள் இறந்துபோகிறார்கள் (சீனாவில் இது ஒருலட்சத் திற்கு 45தான்). உலகில் மிகஅதிகமான பேர் படிக்காமலிருப்பது இந்தியாவில் தான். படிக்கத் தெரிந்தவர்கள் குமுதம் படித்துச் சந்தோஷமாக இருக்கிறார்கள். குமுதம் போன்ற பத்திரிகைகளைப் படிக்க இயலாதவர்கள், தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து மிக்க மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். அதுவும் செய்ய மனமில்லாத வர்கள், வேறு ஜாதி, இனம், மதம் சார்ந்தவர்களைக் கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

2. இன்று மக்கட்சமூகம் மாறிவிட்டது. முதலாளித்துவம் காலப் போக்கில் எப்படி மாறிவந்திருக்கிறதோ, அப்படியே பணிசெய் வோரின் இயல்பும் மாறிவிட்டது. இன்று மிக அடிப்படையான விவசாயத் தொழிலாளிகள், கீழ்த்தட்டுத் தொழிலாளிகளைத் தவிரப் பிற அனைவரும் (மத்தியதர, உயர்மத்தியதர மக்கள்) முதலாளிகளே. எல்லாரும் பங்குமார்க்கெட்டில் பங்குகள் வாங்கு கிறார்கள். பரஸ்பரநிதிகளில் முதலிடுகிறார்கள். அம்பானியின் தொழிற்சாலைகள் இன்று அம்பானிக்கு மட்டுமே சொந்தமில்லை. பங்குதாரர்கள் எவ்வளவோபேர் இருக்கிறார்கள். இருமாதங்கள் முன் ஒரு பெரிய ஐ.டி. நிறுவன இயக்குநர்மீது குற்றச்சாட்டு. அந்த நிறுவனம் அந்த நபருக்கு மட்டுமே சொந்தமானால், அதிலிருந்து பணத்தை எடுத்து அவர் மகன்களுக்குத் தருவது அவர் இஷ்டம். ஆனால் அது அவர் சொந்த நிறுவனம் அல்ல. பங்குதாரர்களின் நிறுவனம். அதனால் அவர் கையாடல் செய்தவராகிறார், குற்றம்செய்தவராகிறார்.

3. இன்று இரண்டுவர்க்கங்கள் இல்லை. பல வர்க்கங்கள் உருவாகிவிட்டன. அதனால் வர்க்கப் போராட்டம் என்பதும், அதன் அடிப்படையிலான பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் என்பதும் எந்த அளவு ஏற்புடையவை என்ற கேள்வி எழுந்துள்ளது.

4. பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம், அல்லது பெண்கள் தலைமை யிலான சுற்றுச்சூழல் அடிப்படையிலான புரட்சி ஏற்புடைய தெனவே வைத்துக்கொள்வோம். பெரும் அளவில்- ”உலகத் தொழிலாளிகளே/விவசாயிகளே/பெண்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து ஒன்றுகூட்டுவதாகக் கொள் வோம். எங்கு அமைப்பு உருவாகிறதோ, அங்கு அதிகாரக் கட்டமைப்பு உருவாகிறது, ஊழல் உருவாகிறது. தலைமையில் போட்டி உருவாகிறது. உள்வட்டங்கள் பல தோன்றுகின்றன. யாவரும் சமம் என்பதுபோய், ஒரு உள்வட்டத்திற்கு இன்னொரு உள்வட்டம் மேலானது எனப் பலபடிமுறையமைப்பு உருவாகி விடுகிறது. ‘All are equal, but some are more equal’ என்று ஆர்வெல் சொன்னது நடந்துவிடுகிறது. அதாவது முதலாளித்துவத்தின் நோய்க்கூறுகள் என்னென்ன உண்டோ அத்தனையும் வந்துவிடு கின்றன. உருவாகும்போதே எந்த அமைப்பும் புற்றுநோயாகத்தான் உருவாகிறது. இதுவரை இதற்கு விதிவிலக்கில்லை.

5. நான் பார்த்தவரை, மார்க்சியவாதிகள் அனைவரும் மகிழ்நோக்குடையவர்கள். எதிர்காலத்தில் நம்பிக்கை உடையவர் கள். இதில் அவர்கள் விஞ்ஞானிகளுடனும் அறிவுஜீவிகளுடனும் ஒன்று படுகிறார்கள். நாகராஜனும் இப்படித்தான். மிக அதிக நம் பிக்கை வைத்திருக்கிறார். விதிக்கொள்கையைச் சான்று காட்டு கிறார். “நல்லது செய்தால் நல்லது விளையும்” என்று நம்புகிறார். எனது கல்லு£ரியில் சில மாதங்களுக்குமுன் இரண்டு பேராசிரியர்கள் சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் வறட்சியையும் வெப்பத்தையும் நீரை விலைகொடுத்து வாங்கியே தீர வேண்டி யிருப்பதையும் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பேராசிரியர் கடைசியாகச் சொல்கிறார்- ”கவலைப்படாதீர்கள், நமது விஞ்ஞானிகள் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். எதையா வது கண்டுபிடித்து இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுவார்கள்”. இந்த அசட்டு நம்பிக்கை எனக்கு இல்லை. நாகராஜன் அளவுக்கு நான் உயிரியல் படிக்கவில்லை என்றா லும், நான் ஓரளவு இயற்பியல் படித்தவன். அதனால் என்ட்ராபி என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம். இந்த நூலில் ஓரிடத்தில் நாகராஜன் சொல்வது போல நெகடிவ் என்ட்ராபி உருவாவது/ உருவாக்குவது கடினம்; சாத்தியமற்றது என்பேன் நான்.
பிரபஞ்சம் என்பது வெறும் தாறுமாறான சங்கதியா (chaos-ஆ)? அல்லது ஒழுங்கமைவுள்ள விஷயமா(cosmos-ஆ)? இது அடிப்படைப் பிரச்சினை. cosmos என்பவர்கள் கோள்கள் ஒழுங்கான பாதையில் சுற்றுவது முதலாகப் பலவற்றை-பழைய ஆத்திக வாதிகள் போல-மேற்கோள் காட்டுகிறார்கள். எங்கேனும் நன் மைக்கு நன்மை, தீமைக்குத் தீமை என ஒழுங்கான விதியமைவு உண்டா? அப்படியிருக்குமானால் தீமைசெய்ய மக்கள் எவ்வளவு பயப்படுவார்கள்? சுனாமி சுற்றுச்சூழல் சீர்கேட்டின் எதிர்விளைவு என்றால் செத்துப்போன இலட்சக்கணக்கான மக்கள் அத்தனை பேரும் பாவிகளா? கிறித்துவம் பாவத்தின் சம்பளம் மரணம் என்றல்லவா சொல்கிறது? எங்கே எதில் ஒழுங்கு இருக்கிறது? பிரபஞ்சம் ஓர் நியதி தவறா ஒழுங்குமுறை (ordered system) என்றால் மட்டுமே நெகடிவ் என்ட்ராபி சாத்தியம்.

6. இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தினால் ஏற்படும் பேரழிவுகள் விளையாமல் இருக்க வேண்டுமானால் மனிதன் பேரளவு தன் சுயநலத்தைத் துறக்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் தேவையற்ற வசதிகளையும் ஆடம்பரங்களையும் அளித்தன்றி வேறென்ன செய்திருக்கிறது? எல்லாத் தொழில்நுட் பமும் மனித உறுப்புகளின் விரிவாக்கமே என்பார்கள். எதற்கு இந்த விரிவாக்கங்கள்? மனிதனை மனிதன் கொள்ளையடிக்க உதவுவதன்றி இவை வேறு எதற்குப் பயன்படுகின்றன? இன்று பேராசைமிக்க சுயநலம் என்பதின்றி மனிதன் உண்டா? எல்லோரும் எங்கு ஓடுகிறார்கள்? எதைத் தேடி அலைகிறார்கள்? ஏன் அந்நியப்பட்டுப் போகிறார்கள்? எனக்குத் தோன்றுகிறது, தமிழ் இலக்கியங்களிலுள்ள நிலையாமையை வலியுறுத்தும் பாக்களை அனைத்துலகப் பாடத்திட்டமாக வைக்க வேண்டுமென்று. வாழ்க்கையின், செல்வத்தின், இளமையின் நிலையின்மை தெரியாமலே “இதில் அது கிடைக்கும் அதில் இது கிடைக் கு”மென்று நாடிஓடுகின்ற மக்கள்கூட்டத்தை என்ன செய்வீர்கள்? ஆடம்பரத்தை தினசரி விரும்பி அலையும் மக்கட்கூட்டத்தி லிருந்துதானே புரட்சிக்கு உலகத் தொழிலாளர்களை, பெண்களை, விவசாயிகளை உருவாக்க வேண்டும்? அதனால் பின்னமைப்புவாதிகள் சிலர் இனி வர்க்கப் போராட்டம் என்பதே இயலாது, skirmishes எனப்படும் சிறுசிறு கலகங்கள்தான் இயலும், இனிமேல் அனைவரும் ஆங்காங்கு தங்கள் தங்கள் இடங்களில் மக்களைச் சிற்றளவில் திரட்டிப் போராட வேண்டும் என்று சொல்லும் நிலைக்குப் போய்விட் டார்கள்.

7. தான் தென்கலை வைணவனாக இருந்ததால்தான் கீழைமார்க்சியத்திற்கு வரமுடிந்தது என்பதைப் பலப்பலமுறை சொல்லி மகிழ்கிறார் நாகராஜன். அது அவருடைய தனிப்பட்ட அனுபவமாகலாம். தென்கலை வைணவம் என்ன, சைவசித் தாந்தம் என்ன? யாவும் கொள்கையளவில் ஒன்றைத்தான் சொல் கின்றன. ஆனால் நடைமுறை, அமைப்பு என்ற வகையில் தென்கலை வைணவத்தின்மீதும் எனக்கு மரியாதையில்லை. சீரங்கத்திற்கு அருகிலேயே முப்பத்தைந்து ஆண்டுகளைக் கழித்தவன் என்றநிலையில் அங்குள்ள தென்கலையாரும் பார்ப்பனத் திமிரோடும் சமஸ்கிருதச் சார்போடும் நடந்துகொள்வ தைத்தான் நான் நடைமுறையில் கண்டிருக்கிறேன். அவ்வாறில் லையேல் ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க.வினர் சீரங்கத்தில் கருவறை நுழைவுப் போராட்டம் ஏன் நடத்து கிறார்கள்? ஏன் விரட்டி யடிக்கப்படுகிறார்கள்? அங்குள்ளவர்கள் ஏன் பெரியார் சிலையை உடைக்கிறார்கள்? இப்படி எத்தனையோ சொல்லலாம். அமைப்புரீதியான எதுவும் நம்புவதற்குரியதல்ல என்பது இக்காலத்தின் பாலபாடம். இன்றைக்கு இருக்கட்டும். பழங்காலத்தில் மட்டும் என்ன வாழ்ந்தது? நந்தனைச் சிதம்பரத்தில் தீயிட்டுக் கொன்றதுபோல, காவிரியாற்றில் திருப்பாணாழ்வார் மீது கல்லெறிந்தார்கள். அடிபட்டுக்கிடந்த அவரை ஆண்டவன் அழைக்கிறான் என்று கோவிலுக்குள் கொண்டு சென்று சமாதிகட்டிவிட்டார்கள். பக்தி இயக்கங்களையும் புகழ்கிறார் நாகராஜன். ஆனால் பௌத்த மதம் ஏன் இந்தியாவை விட்டுப் போய்விட்டது என்று கவலைப்படுகிறார். பௌத்தத்தையும் சமணத்தையும் வறட்டு அறவொழுக்க மதங்கள் என்று ஒழித்துக்கட்டியவையே பக்தி இயக்கங்கள்தானே? “சமணர் பௌத்தர் தலைகளையெல்லாம் அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி யாழ்வார் (ஒருவேளை பழையகால பஜ்ரங்தள் தொண்டரோ?) பாடுகிறாரே – இதுதான் வைணவம் கூறும் கைங்க ரியமா? எங்கும் கொள்கை வேறு, நடைமுறை வேறு.

8. இங்கு முதலில் இந்தியா என ஒரு நாடு உண்டா என்ற விவாதம் தேவை. நாகராஜன் கேள்வியின்றி பாரதம் என்பதை ஏற்கிறார். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் தமிழனுக்கு துரோகம் செய்கின்றன. தமிழ் மீனவன் சிங்களப்படைகளிடம் தினசரி அடிவாங்கினாலும் கொல்லப்பட்டாலும் நாதியில்லை. இதேபார்வைதான் ஈழத்தமிழன் மீதும் தொடர்கிறது. நதிநீர்ப் பங்கீட்டிலும் துரோகம். நதிநீரைச் சுரண்டுவதிலும் துரோகம். கோதாவரியும் கிருஷ்ணாவும் துங்கபத்ராவும் வடபெண்ணையும் ஓடும் ஆந்திரம், ஓர் இருபது மைல்தூரம் மட்டுமே ஆந்திரா வுக்குள் பாலாறு ஓடுமிடத்தில் அணைகட்ட முனைகிறது. தமிழர் களுக்குத் தக்க தலைவர்கள் இல்லை. தமிழ்நாட்டில் மார்க்சியக் கட்சிகளும் வெறும் சோற்றுக்கட்சிகளாகவும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளாகவும் இருக்கும் கேவலம். உலகமும் தமிழர்கள் பக்கம் இல்லை. ஐ.நா.சபையும் துரோகம் செய்கிறது. சீனா ஈழத்தமிழர்களைக் கொல்லப் படை அனுப்பு கிறது. இந்தமாதிரிச் சூழலில் தமிழன் தன்னைத் தீயிட்டு மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாத கையறு நிலை. இப்படி ஒரு பாரதமா? இதற்கு நாம் அங்கமாக இருக்கவேண்டுமா? நாமெல்லாம் உப்பிட்டுச்சோறு தின்பவர்கள் தானா? நான் எந்த மொழியையும் வெறுக்கவில்லை. 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆனால் 1968இல் இந்தி பிரவீண் படித்துமுடித்தேன். வடநாடு சென்றால் எந்தக் காரணமும் இல்லாமல் மதராசி என்று கேலிசெய்கிறார்களே, வெறுக்கிறார்களே, அதற்கு என்ன பதில்? இப்படிப் பல கேள்விகள் நமக்கு முன்னால். வடக்கு முழுதும் மதவாதத்தில் ஒன்று திரண்டு நிற்கிறது. அத்வானியும் மோடியும் வருண் காந்தியும் வெளிப்படையாகவே முஸ்லிம்களைக் கொல்லவேண்டும், கிறித்துவர்களை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். உச்சநீதிமன்றமும் இவர்களுக்கு ஜால்ரா போடுகிறது. இவர்களோடு நமக்கு என்ன ஒட்டுறவு? தமிழகத்தில் பலகாலமாக இல்லாதிருந்த மதஅடிப்படைவாதச் சக்திகள் இப்போது ஓரளவு நுழைந்துவிட்டன. இன்னும் அதிகமாக நுழையப் பெருமுயற்சி செய்கின்றன. இவற்றை எப்படி எதிர் கொள்வது? நான் படித்தவரை பலநூல்களும் “ஒருமொழிக்கு ஒரு கலாச்சாரம், ஒரு கலாச்சாரத்திற்கு ஒரு நாடு” என்றுதான் சொல்கின்றன. அப்படியானால் தமிழகத்திற்கு விடிவு என்ன?
நாகராஜன் மாவோகாலத்துச் சீனத்தையும் யேனானையும் மீண்டும் மீண்டும் புகழ்கிறார். மேற்கண்டதுபோன்ற பிரச்சினைகள் சீனாவிலோ, அல்லது வேறு உலக நாடுகளிலோ இல்லை. 22 பாஷைகள் நம்நாட்டில். எனவே குறைந்தது 22 வித கலாச்சாரங்கள். இதில் மதமும் ஜாதியும் புகுத்தும் பிரிவினைகள் வேறு. எப்போது எந்தெந்த விதத்தில் இடையூறு செய்யலாம் என்று நோக்கும் பகைவர்கள் மத்தியிலேயே தமிழகம் மட்டு மல்ல, இந்தியாவும் வாழநேர்ந்திருக்கிறது. இதில் சுற்றுச்சூழல் சீர்கேடும் மாசுபாடும் அளவிறந்துபோய்விட்டன. எது எப்படிப் போனால் என்ன என்று நமது அரசியல்வாதிகள் அனைவரும் சுருட்டியபடி இருக்கிறார்கள். இந்தியாவை என்றோ அமெரிக்கா வுக்கும் மேற்கத்திய வல்லரசுகளுக்கும் எழுதிக்கொடுத்தாகி விட்டது. அண்மையில் அரவிந்த அடிகா எழுதிய நாவல் ஒன்றில் (The White Tiger) மிகத் தெளிவாக முன்வைக்கப்படும் ஒரு கருத்து, “இந்தியாவில் இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன. கடலோர இந்தியா வெளிச்சமாக இருக்கிறது. நதியோர இந்தியா இருளில் ஆழ்ந்திருக்கிறது”. (இந்தப் பார்வை முன்பே எனக்குப் பரிச்சயமா னதுதான். இந்தியாவின் விளிம்புப்பகுதிகள் அனைத்தும் முன்னே றியுள்ளன, உள்நாட்டுப்பகுதி பின்தங்கிவிட்டது என்று கூறும் வடநாட்டு அதிருப்திப்பார்வை இது). இப்படிப்பட்ட பிரச்சினைகள் எந்தநாட்டில் இருந்தன? சோவியத் ரஷ்யாவில், சீனாவில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், கியூபாவில்-எங்கே?

9. சீனாவில் யேனான் புரட்சி ஏற்பட்டபோது இவ்வளவு பிரச் சினைகளை எதிர் நோக்கவில்லை. இந்தியாவைவிடப் பலமடங்கு பரப்புள்ள சீனாவில் (வேறு ஐந்துமொழிகளும் பல கிளைமொழிக ளும் இருந்தாலும்) மாண்டரின் ஒன்றுதான் அலுவல்மொழி. அதற்குத் தடையோ எதிர்ப்போ கிடையாது. தமிழகத்தில் தமிழ்வழி படிக்கக்கூட நாதிகிடையாது. விவசாயிகளும் கிராமப் புற மக்களும் கூலித்தொழிலாளரும் யாவருமே மனத்தளவில் ஆங்கில அடிமைகளாக – மேட்டுக்குடி எச்சங்களாக மாறியிருக்கி றார்கள். இந்த மனப்பான்மை மாறுவதற்கு எந்தப் புரட்சி உதவும்? மாவோ காலத்துச் செயல்களைப் புகழ்கிறார். ஆனால் மாவோ காலத்திலேயே அல்லது அவர் மறைந்தவுடனே சீனா மாறிவிட் டதற்குக் காரணம் என்ன? சோவியத் யூனியனிலாவது புரட்சி நடந்து பலஆண்டுகள் கழித்து, ஸ்டாலினும் குருஷ்சேவும் போன பிறகுதான் பெரெஸ்த்ரோய்க்கா வந்தது. சீனாவில் உடனே சந்தைச் சோஷலிசம் என்றும் பன்னாட்டு முதலாளித்துவம் என்றும் மாறிப்போனதற்குக் காரணம் என்ன? மார்க்சியம் அவ்வ ளவு பலவீனமானதா, ஒரு தலைவர் போனவுடனே அதுவும் மறைந்து போய்விடுவதற்கு? சுயநலத் தலைவர்களை மட்டுமே நம்பாமல், மக்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல யோக்யதை இல்லாத தத்துவம் எவ்விதத்தில் பயன்தரும்?

10. நெறியும் குறியும் (means and ends) பற்றி நூலில் பல இடங்களில் பேசப்படுகிறது. சரியான நெறிதான் சரியான இலக்கிற்கு அழைத் துச் செல்லும் என்பதுதான் நாகராஜன் கொள்கை என நினைக் கிறேன். நெறி தவறாக இருந்தால், இலக்கும் தவறித்தான் போகும். கத்தி எடுத்தவன் கத்தியாலே மாள்வான், மாந்திரீகம் செய்பவனை அந்த மாந்திரீகமே அழிக்கும் என்றெல்லாம் நமது கிராமப்புறங்களில் பழமொழிகள் இல்லையா? அதுபோல ஆயுத மேந்திய போராட்டம் என்பது சரியான பலனைத் தருவதற்கு வாய்ப்பே இல்லை. இதனை நாகராஜனும் ஏற்கிறார். காந்தியை ஓரிடத்தில் கடுமையாகச் சாடும் நாகராஜன், பல இடங்களில் ஏற்றுக் கொள்கிறார். காந்தி ஒரு சனாதனவாதி. பெரியார் பல முறை சாதியம் பற்றி எழுதிய கடிதங்களுக்கும் அவர் விடையளித்தது கிடையாது. வருணாசிரம தர்மமே நல்லது என்றவர் அவர். அவரிடம் உடன்பாடான விஷயங்கள் இரண்டு தான். ஒன்று நமது நாட்டுக்குப் புதியதல்ல என்றாலும் உலகிற்கு அன்று புதியதாக இருந்த அஹிம்சை வழி. இரண்டாவது பெருந்தொழில்களை, பெரும் ஆலைகளை மறுத்தது. இவ்விரண் டில் மட்டுமே அவரை நாம் இன்று ஏற்க இயலும். எனவே காந்தி-மாவோ இணைவு தேவைதானா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

11. தத்துவஞானிகள் யாவரும் உலகை மாற்ற நினைத்தனர், மார்க்ஸ் ஒருவர்தான் உலகை மாற்றும் நெறிமுறையைத் தந்தார் என்று பொதுவாகச் சொல்லுவார்கள். நாகராஜன் பழைய தத்துவ ஞானிகள் போலததான் தத்துவம் பேசுகிறார். அவை எதுவும் நடைமுறைக்கு, போராட்டத்திற்கு ஏற்றவையாக இல்லை. சீனா விலும் மார்க்சியம் தோற்றபிறகு மாவோவின் மார்க்சியமும் குறையுள்ளது என்றே நினைக்க வேண்டியுள்ளது. தமிழனுக்குத் தேவையான தனிவகை மார்க்சியம் ஒன்று இன்றைய தேவை. நாகராஜனே சொல்வதுபோல, நமது சித்தர் களும், பழங்கால இலக்கியவாதிகளும் இதை உருவாக்கப் போது மானவர்கள். மாவோ வந்து நமக்கு “அகந்தையை ஒழி” என்று சொல்லவேண்டியதில்லை. சைவ சித்தாந்தம் கூறும் மும்மலங் களில் அழிக்கமுடியாதது, மிகக்கடினமானது ஆணவமலம்தான். அதனை விட்டால்தான் ஈசனை அடையமுடியும். நான்கு குரவர் களில் திருநாவுக்கரசர் தொண்டின் வடிவம். தாசமார்க்கம் எனப் படும் சேவை வழியைக் கடைப்பிடித்தவர். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். எனினும் மேலே நான் சுட்டிக்காட்டியபடி, பக்தி இலக்கியத்தில் கசடுகளும் உண்டு. எச்சரிக்கையாக எடுக்கவேண்டும்.

12. நாகராஜன் மேற்கத்திய மார்க்சியத்தில் அன்பைப் புகுத்தி நோக்குகிறார் என்று சொல்லப்படுகிறது. அன்பு என்பதைவிட அருள் என்றோ மக்கட்பண்பு என்றோ சொல்வது பொருந்தும். ஏனெனில் அறிவு தவறு செய்வதைப் போலவே அன்பும் தவறுசெய்யக்கூடும் என்று வள்ளுவர் சொல்கிறார். “அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்/ மறத்திற்கும் அஃதே துணை”. தேசத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் மதத்தின் பெயரா லும் இன்னும் பலவற்றின் பெயராலும் நடக்கும் அட்டூழியங் களுக்கெல்லாம் காரணம் குறுகிய விதத்திலான அன்பே அல் லவா? ஒரு தாய் தன்மகனுக்கு வரதட்சிணை வாங்குவதற்குக் காரணம்கூட அவன் மேலுள்ள அன்பு என்றுதான் சொல்கிறாள். அன்பு குறையுடையது. அருள் குறையற்றது. மக்கட்பண்பு அல்லது மனிதநேயம் என்று வள்ளுவர் போற்றுவது குறையற் றது. “அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்/ மக்கட் பண்பில்லாதவர்”. எனவே நாகராஜன் அன்பு என்று பேசுவதற்கு பதிலாக அருள் என்றோ, மக்கட்பண்பு என்றோ குறிப்பிடவேண் டும்.

13. நாகராஜன் கருத்துகளோடு எனக்குப் பெரும்பாலும் உடன்பாடுதான். ஏன் எனில், நான் ஓர் ஆன்மிகவாதி என்று சற்றே தற்பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம். வள்ளலாரு டைய ஆன்மநேயக்கொள்கைகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று நினைப்பவன். எனது நோக்கில் நாகராஜனும் முழுஆன்மிக வாதியே. தென்கலை வைணவ ஆன்மிகவாதி.
ஆன்மிகம் என்ற சொல்லை இங்கு வரையறுக்கவேண்டும். மரபாக இது மனிதனுக்கு ஆன்மா என ஒன்று உண்டு, அது அழியாதது, பல பிறப்புகளை அது மீண்டும் மீண்டும் எடுக்கிறது என்ற கொள்கை. நான் கூறும் ஆன்மிகம் இது அல்ல. புல், நெல் முதலாக, தாவரங்கள் முதலாக எல்லா உயிர்களுக்கும் இயற் கையில் ஓரிடம் உண்டு, எனவே அவற்றை மதிக்க வேண்டும், அவற்றைத் தேவையின்றி அழிக்கக்கூடாது. ஒவ்வொரு உயிரும் – அது தாவரமோ, விலங்கோ, புழுவோ, பறவையோ, இன்னும் கேட்டால் பாக்டீரியமோ, வைரஸோ – எதுவாயினும் அழிக்கப் படும்போது இயற்கைச் சீர்குலைவு ஏற்படுகிறது என்பது எனது கருத்து. மனிதனால் ஒரு அமீபாவைக்கூடப் படைக்கஇயலாது (குளோனிங்கை விட்டுவிடுங்கள், அது போலி செய்வது). அப்படி யிருக்கும்போது அழிக்க என்ன உரிமை இருக்கிறது என்று கேட்பது எனது ஆன்மிகம். மற்றப்படி கடவுளிலோ மறுபிறப் பிலோ ஆன்மாவிலோ எனக்கு உடன்பாடு இல்லை.

புழுபூச்சிகள் முதலாகவே அழிக்கக்கூடாது, அவை துன்புறக் கூடாது என்றால், மனிதர்களைக் கேவலப்படுத்துவதோ கொடு மைப் படுத்துவதோ (சாதியின் பெயராலோ, தொழிலின் பெயராலோ, இனத்தின் பெயராலோ) எப்படி ஆன்மிகம் ஆகும்? அதுவும் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடக்கூடிய, நாகராஜனின் சொற்களில் இன்றைய ஆண்டவர்களாகிய, படைப்பவர்களாகிய உழைக்கும் மக்களை உயர்வாகப் போற்ற அல்லவா வேண்டும்? நான் சொல்லும் அர்த்தத்தில் ஆன்மிகவாதி என்பவன் மார்க்சியத்தை (நாகராஜன் கூறும் கீழை மார்க்சியத்தை) முழு அளவில் உடன்பட்டு ஏற்பவனாகவே இருப்பான். தேவையற்ற அழிவு கூடாது என்பதை விளக்கவேண்டும். புல் பூண்டு முதலாக அனைத்தும் உயிர்கள் என்றாலும் நாம் உணவுக்காக ஓரளவேனும் அவற்றை அழித்தே தீரவேண்டும் என்பது இயற்கைவிதி. புல்லை உண்ணாமல் பசுவாலோ, மாமிசம் உண்ணாமல் புலியாலோ ஜீவிக்கமுடியாது. இந்த இயற்கை விதிக்குத் தலைவணங்காமல் நாமும் வாழமுடியாது. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் கூட அரிசியுணவையோ வரகையோ பிற தாவரங்களையோ உண் ணாமல் 58 ஆண்டுகள் வாழ்ந்திருக்கமுடியாது.
ஆனால் புலியின் தோலுக்காகப் புலிகளையும் பாம்பின் தோலுக்காகப் பாம்புகளையும், அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் எத்தனை எத்தனையோ உயிரினங்களையும் அழிப்பது எந்த நேயமாகவும் தோன்றவில்லை. இங்கு அவசியத்திற்கும் ஆடம்பரத்திற்குமான வேறுபாடு வருகிறது. ஆடம்பரத்திற்காக ஏன் அழிக்கிறீர்கள் என்று கேட்டால் “நீங்கள் (அவசியத்திற்காக வேனும்) அழிக்காமலா இருக்கிறீர்கள், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?” என்று என்னிடம் பலர் வாதம் புரிந்திருக்கிறார்கள். கொல்லாமையை அறத்துப்பாலில் முதன்மை அறமாகப் போற்றும் திருவள்ளுவரும், பொருட்பாலில் “கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்” என்று சொல்லத் தலைப்படுகிறார். இதுதான் கொள்கைக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி. அதனால் வேறு வழியின்றி வர்க்கப்போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று சிலர் வாதிட்டுள்ளனர்.

14. Humanism என்ற சொல் மனிதநேயம் என்று தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் மனிதநேயம் அல்ல, மனிதமையவாதம். மனிதநேயத்தை Humanitarian compassion என்று சொல்லவேண்டும். டே கார்ட்டே, பேகன் முதலாகத் தொடங்கி மனிதனையும் அவனது அறிவையும் மையப்படுத்தும்போக்கு முக்கியத்துவம் பெற்றதல்லவா, அதற்குப் பெயர்தான் ஹ்யூம னிசம் அல்லது மனிதமையவாதம். இதனை நான் முற்றிலுமாக ஏற்பதில்லை. “மனிதன்தான் உலகின் மையம்” என்று சொல்லும் இது, கிறித்துவத்தின் பைபிளில் உள்ள விஷயம். இறைவன் மனிதனைப் படைத்து, “எல்லாவற்றையும் உனக்காகப் படைத்தி ருக்கிறேன், நீ அவற்றை அனுபவிக்கலாம்” என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. “உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக” என்ற முதலாளித்துவ சங்கதி இது. புரோடஸ்டண்டு இயக்கம் தோன்றியபிறகுதான் முதலாளித்துவம் உருவாயிற்று. முதலாளித்துவத்தின் சுயநலச் சிந்தனைக்கும் புரோடஸ்டண்டு இயக்கத்திற்கும் உள்ள தொடர்பினைச் சுட்டி மாக்ஸ் வெபர், ‘Protestantism and the Rise of Capitalism’ என்று ஒரு நூலே எழுதி யிருக்கிறார்.

15. அறிவியல் தொழில்நுட்பம் பற்றி நாகராஜன் பேசும் கருத்துகள் எனக்கு மிகவும் உடன்பாடானவை. அறிவியலில் இருவேறு அமைவுகள் உண்டென்பதிலும் ஐயமில்லை. சான்றாக, நமது விவசாயிகள் காலங்காலமாகப் பாவித்துவந்த உரங்கள், விதைகள் போன்றவை அவர்களால் அனுபவமுறையில் நம் சூழலுக்கேற்ற வகையில் அமைந்தவை. ஆனால் பசுமைப் புரட்சி என்றபெயரால் மேற்கத்திய அறிவியலைப் புகுத்தினோம். மருத்துவத்தில் எத்தனையோ விதமான அறிவுச்சட்டகங்கள் (Frameworks or Paradigms of Knowledge) உண்டு என்பது என்றைக்கோ தெளிவான விஷயம். அலோபதி மருத்துவம் மட்டுமே மருத்துவமல்ல. யூனானி, சித்த வைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என எத்தனை மாற்றுச் சட்டகங்கள் உள்ளன? இவை யாவும் உலகை வெவ் வேறு வகைகளில் பகுத்துப்பார்க்கும் பார்வைகள். அதுபோல அறிவியலையும் மேற்குநாட்டு நோக்கில்தான் காணவேண்டும் என்ற அவசியமில்லை. பல்வேறு அறிவுச்சட்டகங்கள் வாயிலாகக் காண இயலும், ஒற்றை அறிவியல் என்பது பாசிடிவிசத்தின் நேர் விளைவு.

16. மார்க்சியம் – எந்த மார்க்சியமாயினும் – சூழலடிப்படையில் மனிதன் உருவாகிறான் என்று பேசுகின்றன. அதில் தவறில்லை. பெருமளவு அப்படித்தான். ஆனால் சிற்றளவிலேனும் மரபணுக்கள்
(ஜீன்கள்) அடிப்படையில் பாரம்பரியப்பண்பு சுமத்தப்பட்டே வரு கிறது. (எனக்கு லைசென்கோவின் மரபியம் தெரியாது). பாரம் பரியப் பண்பில் மாற்றம் மிகமிக மெதுவாக நிகழக்கூடியது. எனவே மக்கள் அனைவரும் திடீரென்று நல்லவர்களாக மாறிவிடுவார்கள் என்று நம்ப ஏது இல்லை. மேலும் புறச் சக்திகளுக்கு மார்க்சியம் தரும் அழுத்தத்தை அகத்திற்கு அளிப்பதில்லை. இங்குதான் ஃப்ராய்டியம், இருத்தலியம், நிகழ்வுவாதம், ஆன்மிகம் எதுவாயினும் தேவைப்படுகிறது. ஆனால் அகத்தைச் சீர்ப்படுத்த இலக்கியம் ஒன்று மட்டுமே உதவும். வேறெதுவும் உதவாது.

17. எனவே நமது கல்விமுறை மாறவேண்டும். அடிப்படை மக்க ளுக்கான கல்வியாக அது அமையவேண்டும். அதில் அறிவியலுக் கும், மனிதவியல்களுக்கும் சமபங்கு அளிக்கவேண்டும். அதே போல அறிவியல் தொழில்நுட்பமும் மாறவேண்டும். இவற்றில் ஐயம் இல்லை. ஆனால், கல்விச்சூழல் மாறி நல்ல மக்களை உருவாக்கி, மரபணுக்களும் சில தலைமுறைகளிலேனும் ஓரளவு மாற்றம் பெற்று, நல்ல மனிதர்கள் உருவானபின்னர்தான் நாகராஜன் கூறும் போராட்டத்தைச் செய்யமுடியும். இதற்குச் சிலநூறு ஆண்டுகளேனும் தேவை. ஆனால் ஒரு நூறு ஆண்டு களேனும் உலகம் இருக்குமா என்ற தீவிரமான கேள்வியைச் சுற்றுச்சூழலியம் எழுப்புகிறது.

18. இந்தநாட்டை வர்க்கப் புரட்சியினாலோ, பெண்களின் சுற்றுச் சூழல் புரட்சியினாலோ, எதனாலுமோ காப்பாற்றமுடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஏனெனில் எல்லாவற்றிற்கும் மக்களைக் கருத்தடிப்படையில் திரட்டவேண்டும். நடிகைகள் குத்தாட்டம் போடுகிறார்கள் என்றால் ஒருவேளை நம் இந்தியர்கள் லட்சக் கணக்கில் திரளக்கூடும். அல்லது கிரிக்கெட் பார்ப்பதற்குத் தொலைக்காட்சிமுன்னால் லட்சக்கணக்கில் ஒரே சமயத்தில் உட்கார்ந்திருக்கக்கூடும். பிறஎதற்கும் – குறிப்பாகப் போராட்டத்திற் குத் திரளமாட்டார்கள். மக்களின் மனப்பாங்குகள் மாறிவிட்டன. எல்லாரும் முதலாளிகளோ இல்லையோ, முதலாளித்துவ மனப் பான்மைகள் இந்தியாவில், தமிழகத்தில் முற்றிலும் ஊறியிருக் கின்றன. இந்த விதத்தில் நமது அரசியல் கட்சிகளின் நோக்கம் மிக நன்றாக ஈடேறி யிருக்கிறது. முதலாளித்துவ விளம்பரங்க ளின் நோக்கமும் முற்றிலும் ஈடேறியிருக்கிறது.

உடலில் ஏதோ ஓரிரு பாகங்கள் நைந்திருந்தால் வைத்தியம் செய்யலாம். உடல் முழுவதுமே புரையோடி அழுகிப்போன பிறகு என்ன செய்வது? இன்று இந்தியாவும், தமிழகமும் முற்றிலும் புரையோடி அழுகிப்போய்விட்டன. நாகராஜன் கூறும் கீழை மார்க் சியமெல்லாம் இன்று உதவும் என்று தோன்றவில்லை. அதனால் தான் நாகராஜனுக்கு நம்பிக்கை அதிக அளவில் இருக்கிறது என்று முன்பு சொன்னேன். இன்னும் பத்துப்பதினைந்து ஆண்டு கள்கூட இந்தியா பிழைத்திருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. பத்தாண்டுகள் கழித்துத் தமிழகத்தில் குடிப்பதற்குத் தண்ணீர் தடையின்றிக் கிடைக்கும் என்று எவரேனும் உறுதி யளிக்கமுடியுமா? தமிழகத்தில் விவசாயிகள், அடிமட்டத் தொழிலாளிகள் ஏதோ சம்பாதித்துக்கொண்டு உயிரோடாவது இருப்பார்கள் என்று உறுதிகூற முடியுமா? ஜாதிக்கொடுமைகள் ஒழியும் என்று சொல்லமுடியுமா? பெரும்பான்மை மக்களின் வறுமை ஒழிந்து வாழ்க்கை சீர்ப்படும் என்று கூறமுடியுமா? பெருமுதலாளித்துவம் ஓரளவாவது கட்டுப்பட்டு, இயற்கை வளம் பெறும் என்று சொல்லமுடியுமா? இப்படியெல்லாம் உறுதி கூறுபவர்கள் இருந்தால், பிறகு கீழை மார்க்சியம், இந்திய மார்க்சியம், தமிழக மார்க்சியம் யாவற்றையும் பற்றி நாம் பேசலாம்.

19. ஒரேஒரு நம்பிக்கை இருக்கிறது. உலகின் எல்லாப்பகுதிகளும் இன்று ஒன்றோடொன்று பிணைப்புண்டிருக்கின்றன, ஒருநாடு அழிந்தாலும் உலகம் முழுவதும் அழியும் என்ற எண்ணத்தி னால்தான் இந்த நம்பிக்கை வருகிறது. தமிழகம் அழிந்தால் தமிழகம் மட்டும் அழியாது, இந்தியா முழுதும் பாதிக்கப்படும். இந்தியா அழிந்தால், உலகமே அழியும் நிலை ஏற்படும் என்று ஓரளவு நம்பலாம். ஆனால் அண்மை நிகழ்வுகள் இதிலும் மண்ணை அள்ளிப் போடுகின்றன. தமிழினமே அழிந்தாலும் சரி பரவாயில்லை என்று உலகநாடுகள் இருக்கவில்லையா? பாலஸ் தீனப்போராளிகள் அழிந்தாலும் இஸ்ரேலை எப்படியேனும் காப்பாற்ற வேண்டும் என்று மேற்கு முயல வில்லையா? அது போல இந்தியா போன்ற ஏதேனும் ஒருநாடு அழிந்தாலும் பரவாயில்லை எனப் பிறநாட்டினர் கருதிவிட்டால் என்னஆகும்?

20. 2020இல் இந்தியா வல்லரசாகும் என்று பழைய குடியரசுத் தலைவர் பாடிவந்தார். ஆம், ஒருவேளை வல்லரசாகலாம். இந்தியாவில் இரண்டு சதவீத முதலாளிகள் உலகிலேயே பெரும் பணக்காரர்களாகத் திகழ, பிறயாவரும் பிச்சையெடுக்க அல்லது மடிய, இந்தியா பெரும்பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கக் கூடும்.
“குப்பையையும் மலத்தையும் நீக்கும் அழுக்குப் படிந்த கைகளே தூய்மையான கைகள். இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மற்றும் மலைவாழ் மக்களும் பெண்க ளுமே இனி மாந்தஇனத்தை, மறுமலர்ச்சியை உருவாக்கப் போகின்றார்கள்” என்று எஸ்.என்.என் இந்நூலின் ப.368இல் குறிப் பிடுகிறார். அப்படி நடந்தால் நல்லதுதான். ஆனால் இந்த நம்பிக்கை மனத்தில் உதயமாகப் பெரும்பிரயத்தனம் தேவைப் படுகிறது.


ஆகாசம் நீலநிறம்

ஆகாசம் நீலநிறம்

(இந்தக் கட்டுரை, கவிஞர் விக்ரமாதித்தனின் ‘ஆகாசம் நீலநிறம்’ என்ற கவிதைத் தொகுதியை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துமுகமாக, 1983ஆம் ஆண்டு யுரேகா என்ற சிற்றிதழில் எழுதப்பட்டது.)

மல்லார்மே என்ற ஃபிரெஞ்சுக் கவிஞரின் நண்பர் ஒருவர், அவர் எந்த அனுபவத்தைக் கொண்டு எழுதுகிறார் என்று கேட்டாராம். கவிதை எழுதுவதற்கு அனுபவம் முக்கியமில்லை, வார்த்தைகள்தான் முக்கியம் என்று மல்லார்மே கூறினாராம். யேட்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞர்கூட, ‘தரிசனம்’ என்ற ஒரு தத்துவ நு£லைத் தாம் உருவாக்கியதுகூட, அந்த நூல் தனக்கு கவிதை எழுதுவதற்குப் படிமங்களைத் தருவதற்கே என்றார் என ஒரு கதை உண்டு. ஒரு கவிஞன், ஒரு தத்துவத்தையோ ஒரு கொள்கையையோ எழுதவேண்டுமென்ற நிர்ப்பந்தம் கிடையாது. அவனுக்கு அடிப்படை சுயநிர்ப்பந்தம்தான். அவன் தன்இச்சைப்படி எதைப் பற்றியானாலும் எப்படிவேண்டுமானாலும் எழுதவேண்டும் என்ற கருத்துப்பட ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற அமெரிக்கக் கவிஞர் கூறியிருக்கிறார். ஒரு படைப்பு நமக்கு இன்பத்தைத் தருவது, அது ஒரு சன்மார்க்கக்கருத்தைக் கூறுவது என்பதாலோ அல்லது ஒரு அரசியல் கொள்கையை வற்புறுத்துவது என்பதாலோ அல்ல.

எந்தப் படைப்பும் தன் கட்டமைப்பின் சிறப்பினால், நடை உயர்வினால், அதை எழுதிய ஆசிரியரின் பிரத்தியேகப் பார்வையால், நமக்கு ஒரு கலை இன்பத்தைத் தருகிறது. இந்த அடிப்படைகளுக்குஅரசியல், தத்துவம், எந்த விஷயமும் பயன்படுத்தப்படலாம். இன்னும் தெளிவாகக் கூறினால், கவிதைப் படைப்புக்கென இவை இங்குவந்து சேர்ந்திருக்கின்றனவே அன்றி, இவற்றிற்காகக் கவிதை பயன்படுத்தப்படுவதில்லை. தாஸ்தாயேவ்ஸ்கி ஒரு நூலில் கூறியதுபோல, “வாழ்க்கையின் எந்த அவமானத்தையும்விட வாழ்க்கைதான் முக்கியம்”.

விக்கிரமாதித்தன் தன் கவிதைகளில் தன் அனுபவத்தை கலைவடிவமாக மாற்றியிருக்கிறார். அந்த அனுபவங்கள் கசப்பாக இருக்கலாம் என்பது வேறு. இந்த அடிப்படையில் நோக்கும்போது விக்ரமாதித்தன் என்ற கவிஞரின் கருத்தியல்கள் அல்லது கொள்கைகள் யாவை என்பது பற்றிய கேள்விகள் இலக்கிய விமரிசனத்திற்குப் பொருத்தமற்றவைதான். ஆனால் தமது வாழ்க்கைப் பார்வைகள் அல்லது தன்மைகள் அனைத்தும் ஒருசேர விகற்பமின்றி இணையுமாறு சில உத்தமமான கவிதைகளை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவர் வாழ்க்கையின் கசப்பு அவர் கவிதையில் எவ்வளவு இன்பமாக நாம் சுவைக்குமாறு ஒலிக்கிறது என்பதற்கு ஓர் உதாரணத்தை நாம் பார்க்கலாம்.
கற்றுக் கொண்டு விட்ட தமிழ்
கவிதை எழுத மட்டும் உதவும்
இம்மாதிரி வரிகளால்தான் விக்ரமாதித்தன் என்ற ஒரு மனிதரைப் பற்றி நாம் யோசிக்க முடிகிறது. அவர் வாழ்க்கையின் பார்வையில் தத்துவ, அரசியல், மதச்சார்பான கொள்கைகள் எல்லாம் பின்தள்ளப்பட்டு, ஒரு கவிஞரின் பார்வை – தன்னளவில் வாழ்க்கையை நுட்பமாக, ஆழமாக, விரிவாகப் பார்த்தவிதம் நமக்கு ஒரு சிறந்த கலையின்பத்தைத் தருகிறது. இங்குதான் அவர் கவிதை வெற்றி பெறுகிறது. இதுவும் காலம் காலமாக ஒலிக்கும் குரல்தான். இதற்கு ஒத்த குரலை மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இராமச்சந்திரக் கவிராயரிடமும் கேட்கலாம். ஆயினும் கவிஞனிடம் அந்தந்தக் காலத்துக்கேற்ற தன்மைகளும் ஒலிக்கவே வேண்டும்.

‘எப்பவுமே ரசனை கெட்ட மனிதர்கள்’  ‘திசை முடிவுக்குத் தெரிவதெல்லாம் ஆகாசம் நீலநிறம்’  என்றெல்லாம் வருணிக்கும்போது அதனைக் காண்கிறோம்.

சிதைவுகள் என்ற கவிதையில் கவிஞரின் நுண்ணிய மென்மையான மன இயல்பு வெளிப்படுகிறது.

லௌகீக வாழ்க்கை நெருக்கடியில்
மனசின் பாஷையை
யார் புரிந்துகொள்ளப் போகிறார்கள்

நண்பா, இனிமேல் எந்த சூரிய சந்திரன்
என்னைப் பூக்க வைக்கும்?
எனக்கில்லை
என் சந்ததிக்கேனும்
தப்பித்தல் அல்லாமல்
விடுதலை எப்போது பூக்கும்?

நிலை என்ற கவிதையில் இப்படிச் சொல்கிறார்:
மலையேறும் வாழ்க்கையில்
மகா உன்னதம் தேடி என்ன லாபம்?

மொழியைக் கையாள்வதிலும் கவிஞர் சம்பிரதாயங்களை- இது சரி, இது தவறு என்ற வரையறைகளை உடைத்தெறிந்துவிட்டு அனுபவத்தினுடைய அடிநிலையான மூர்க்கத்தன்மையுடன் வெளிக்காட்டிவிடுகிறார்.

வாழ்க்கை
தேவடியாளின் வக்கிரத்துடன்
இருத்திவைத்திருக்கிறது
மிக உதாசீன பாவத்துடன் (கேஷுவலாக) எழுதப்பட்ட இந்தத் தொடர், பொருளில்லார்க்கு வாழ்க்கை வசீகரமாக இருப்பதில்லை என்ற தரிசனத்தையும் உட்கொண் டிருக்கிறது.

புதுக்கடன் கேட்கும்போது
பழைய கடனை ஞாபகப் படுத்துவான்
பெட்டிக்கடைக் கருப்பையா
இந்தக் கவிதையிலும் ஒரு கசப்புத் தெறிக்கிறது. கடனில்லாமல் வாழமுடியாது என்ற நிலை வந்தபின் கடனுக்குமேல் கடன் கேட்காமல் மனிதன் என்னதான் செய்ய முடியும்?

கவிதையின் உருவ அமைப்பைத்தான் அதன் கட்டுக்கோப்பு என்கிறோம். ஒரு கவிதையின் பகுதிகள் எவ்வாறு இணைகின்றன, அவற்றின் ஆரம்பம், நடு, இறுதி இவைகளிடையே நிகழும் இயக்கம் எவ்வாறு செல்கிறது என்பது கட்டமைப்பு. இந்தப் புற அமைப்பின்பின்னால் கவிஞர் மனத்தின் நுடபமான இயக்கத்தை நாம் காணலாம். தட்சணாமூர்த்தியாக, ஏகாதசி, ஸ்வயம்புகள் என்ற கவிதைகளில், கவிதை கடைசியிலிருந்து தொடர்ந்து தலைப்புடன் முடிந்து ஒரு மண்டலமிட்டுக் கிடக்கும் பாம்புபோல் (பழங்காலச் சித்திரக்கவிதைபோல்) தோற்றமளிக்கிறது. ஆகாசம் நீலநிறம் என்ற கவிதையில், திசைகள் அனைத்தும் உள்பரவி, பலபடியாகத் தொடர்ந்து, கடைசிப்பகுதியில் அவை சுவடு தெரியாமல் மறைந்துவிடுவதைப் பார்க்கலாம். இந்தக் கட்டுக்கோப்பே கவிதையில் சொல்லப்படும் அனுபவத்தின் வீச்சையும் ஆழத்தையும் பலதளங்களுக்குக் கொண்டுசெல்கிறது.

பார்வை என்ற கவிதையில் சிகரெட் நுனி, முக்கால் சிகரெட் என்ற படிமங்களில் நுட்பமான அமைப்பின்மூலம் பார்வை என்ற அனுபவத்தை மறைமுகமாகக் காட்டுகிறார் கவிஞர். இதைப்போலவே கடல் என்ற குறுங்காவியக் கட்டத்தில் வேலை இல்லாதவன் என்ற தொடங்கும் கவிதை, அதன் கடைசி அடியான ‘ஓயாத காற்று’ என்ற சொற்றொடர் மூலம் உச்சகட்டத்தை அடைந்துவிடுகிறது. கண்ணாடியில் தெரியும் கவிதை என்ற மூன்று அடிக் கவிதையில் கண்ணாடி என்ற சொல் மூன்றுமுறை திரும்பிவருவதில் அடிக்கு அடி அதன் அர்த்தம் திசைதிரும்பி ஒரு முழுமை அடைகிறது. ‘இருட்டுக்கு நட்சத்திரங்கள் நிறைய’ என்று தொடங்கும் கவிதையின் கட்டுக்கோப்பைப் பார்க்கும்போது கவிதை முடியாமல் இருப்பது அதற்கு அர்த்தமில்லை என்று தோன்றவைக்கக்கூடும். ஆனால் ஈடுபாட்டுடன் வாசிப்பவர் களுக்கு அதன் அர்த்தம் வயப்படும்.
விக்ரமாதித்தன் கவிதைகளில் யாப்பில்லை என்றாலும் நுட்பமான ஓசை இருககிறது. சான்றாக
சிதைவும் சீரழிவும் கலைஞனுக் கில்லை

எனக்கில்லை
என் சந்ததிக்கேனும்
விடுதலை எப்போது பூக்கும்

வொத்தையடிப் பாதையிலே
வொரு சுவடும் மிச்சமில்லை

என்ற கவிதைகளின் ஒலியமைப்பைக் காணலாம்.

சாதாரணமாக மொழி நமது அன்றாட வாழ்க்கை அவசியங்களுக்கும் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் பயன்படும் அளவுக்கு அனுபவத்தின் நுணுக்கத்தையும் ஆழத்தையும் பிறருடன் பகிர்ந்துகொள்ள உடன்படுவதில்லை. இது கவிஞனுக்கும் ஒரு பிரச்சினையாகத்தான் இருக்கிறது. இதற்காகவே கவிஞர்கள் வெவ்வேறு ஆளுமைகள் கொண்ட, வெவ்வேறு தன்மைகள் கொண்ட வட்டார வழக்குகள் போன்றவற்றையும் ஆளுகிறார்கள். மொழியைக் கடந்துசெல்வதையும் மொழியை வைத்துக்கொண்டுதான் செய்யவேண்டியிருக்கிறது. கவிஞன் தனது மொழியை மொழி மூலமாகவே படைக்கின்ற அனுபவம் வெற்றிபெறுகையில் அப்படிப்பட்ட அனுபவமில்லாதவர் களுக்கு அது ஒரு பிரமிப்பையும் விளைவிக்கலாம். ஆனால் வெற்றி பெற்றவையில்கூட அனுபவத்தின் எல்லையும் ஆழமும் முழுமையாக வெளிப்படுகின்றனவா என்பது ஐயத்திற்குரியது.

கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன் போன்றவர்களின் மொழி வட்டாரப் பேச்சுத் தமிழின் வேகத்தினால் வகை செய்யப்பட்டு வெளியீடு பெற்றவை. அடிப்படைகள்கூட, காலப்போக்கில் வெவ்வேறுவிதமாக மொழி பார்க்கப்படுவதால் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துவிடுகின்றன. உருவமும் உள்ளடக்கமும் வேறுபிரிக்கமுடியாமல் பிணைந்துபோகையில் சம்பிரதாயமான பார்வைகளிலும் ஒரு கலைப்பூர்வமான விளைவு ஏற்படுகிறது. ஆகவே, உருவத்தையும் உள்ளடக்கத்தையும் வெவ்வேறாகப்பிரித்து விக்ரமாதித்தன் கவிதைகள் பொருளாதார நெருக்கடியில் மனிதன் உறும் அவஸ்தைகளைச் சித்திரிக்கின்றன என்று பொருளை மட்டும் பாராட்டுவதில் அர்த்தம் இல்லை.

விக்கிரமாதித்தன் கவிதையின் மொழி திருநெல்வேலித் தமிழ். அதிலும் திருநெல்வேலிப் பிள்ளைமார் தமிழ் என்று சொல்லலாம். இந்தப் பிள்ளைமார் தமிழ் என்ற பேச்சுத் தமிழில் இடம்பெறும் தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் கவிதையின் கட்டுக்கோப்புடன் முரணில்லாமல் இயைந்து கவிதைகளுக்கு ஒரு வேகத்தைக் கொடுத்து விடுகிறது. இதற்கு நூற்றுக்கணக்கான சொற்களை உதாரணம் காட்டலாம். மேலும் கவிஞருடைய பிரக்ஞையை மீறி, அவர் பாரம்பரியத்தின் இயல்பான சில மதச்சார்பான சொற்களுடன் அவை இயைந்து புதுப்புது அர்த்தங்களை உருவாக்கிவிடுகின்றன.

ஒவ்வொரு கலைஞனும் கடவுளுக்குப் போட்டியாகப் படைப்புத் தொழிலைச் செய்கிறான் என்று சொல்கிறார்கள். கடவுள் படைத்த உலகிற்கு, வாழ்விற்கு, திட்டவட்டமாக, தீர்மானமாக, இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை என்று அர்த்தம் கூறமுடியாது. அது போலத்தான் படைப்பும்.


சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

பாரதிதாசனை அறியாத இலக்கிய ஆர்வலர்கள் இருக்கமுடியாது.
“பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துகள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம்  என்ற பாரதிதாசன் என்று சொல்லவேண்டும்” என்று சொல்கிறார் புதுமைப்பித்தன்.
பாரதிதாசன், முதன்முதலில் படைத்த தொடர்நிலைச் செய்யுள் (சிறிய காவியம்) ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’. அவருடைய மிகச் சிறந்த காவியப் படைப்பும் இதுதான் என்பது என் கருத்து. இது பஃறொடை வெண்பாவினால் அமைந்தது. பல சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்லும் பாங்கில் ஒரு கதையைச் சொல்வதாக அமைந்தது.
ஓர் அழகிய சூழலில் கதை நிகழ்கிறது. அந்த இயற்கைச்சூழல் ஒரு மலைச்சாரல். சஞ்சீவி பர்வதம் என்பது அம்மலையின் பெயர்.
குப்பன் என்ற இளைஞன், தன் காதலி வஞ்சி என்பவள் வரவுக்காகக் காத்திருக்கி றான். அவளும் வருகிறாள். மனமகிழ்ந்து அவளை முத்தமிடச் செல்கையில் மறுக்கிறாள் அவள். காரணம் கேட்கிறான் குப்பன். முன்நாள் சொன்னபடி குப்பன் அந்த மலையிலிருக்கும் இரண்டு மூலிகைகளைப் பறித்துத் தரவேண்டும் என்கிறாள் வஞ்சி. “இல்லையென்றால் என் உயிர் இருக்காது” என்று மிரட்டுகிறாள். “நீ கல்லில் நடந்தால் கால்கடுக்கும், மற்றும் கொடிய விலங்குகளால் ஆபத்து ஏற்படும்” என்கிறான் குப்பன். “வாழ்வில் எங்கும் உள்ளது தான், வாருங்கள்” என்கிறாள் வஞ்சி.
இம்மூலிகைகள் அசாதாரணமானவை. ஒன்றைத் தின்றால், உலகின் மாந்தர்கள் அனைவரும் பேசும் பேச்சையெல்லாம் கேட்கலாம். மற்றொன்றைத் தின்றால், இவ்வுலகில் நடக்கும் நிகழ்ச் சிகளையெல்லாம் பார்க்கலாம். “ஆதலால் மூலிகையின் ஆசையை விடு” என்கிறான் குப்பன். கேட்கும் வஞ்சிக்கோ இன்னும் அதிகமாக ஆசை மூள்கிறது.
கோபமுற்ற குப்பன், “என்னடி பெண்ணே, இது தகுமோ பெண்களுக்கு?” என்கிறான். வஞ்சி, “பெண்ணை அடிமையாக நினைத்தீரோ?” என்கிறாள். “நான் தனியாகவே பர்வதம் செல்வேன். இல்லையென்றால் உயிரைவிடுவேன்” என்று மீண்டும் மிரட்டுகிறாள். அவள் கோபத்திற்கு பயந்த குப்பன் அவளைத் தூக்கிக்கொண்டு மலைமீது செல்கிறான். மூலிகைகளைக் கண்டு பறித்துத் தருகிறான்.
இருவரும் முதலில் ‘கேட்கும் மூலிகை’யைத் தின்கின்றனர். ஃபிரெஞ்சு நாட்டில் எங்கோ ஒரு உணவுவிடுதியில் நிகழும் ஓர் உரையாடல் அவர்களுக்குக் கேட்கிறது. ஓர் இத்தாலி நாட்டவனுக்கும் ஃபிரெஞ்சுக்காரனுக்கும் இடையில் நிகழ்வது அது. உரையாடல் சூழலிலிருந்து அந்த இத்தாலிக்காரன் தன் எதிரில் ஒரு கருப்பன் உட்கார்ந்திருப்பதைச் சகிக்கவில்லை என்று தெரிகிறது. அவனுக்கு புத்திசொல்லும் ஃபிரெஞ்சுக்காரன், “எங்கள் பிராஞ்சியர்கள் இப் பேதம் பாராட்டித் தங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய ஒப்பார்கள்; பேதபுத்தி சற்றும் பிடிக்காது போ,போ,போ! பேதம் கொண்டோர்க்குப் பிராஞ்சில் இடம் இல்லை” என்கிறான். குப்பனும் வஞ்சியும் பிரெஞ்சுக்காரருக்கு வாழ்த்துரைக்கின்றனர்.
பிறகு நல்ல அமெரிக்கன், பொல்லா அமெரிக்கன் என்று அமெரிக்கர்களை இருவகையாகப் பாகுபடுத்தி ஒரு அமெரிக்கன் பேசுவதைக்கேட்கிறார்கள். அவனையும் வாழ்த்தி, பிறகு இங்கிலாந்து தேசத்திலிருந்து எவனோ பேசுவதைக் கேட்கின்றனர்.
“இந்தியாவில் முப்பதுகோடிப் பேர் வாழ்கிறார்கள் என்றால், அவர்களிடையே உள்ள பேதங்களும் அவ்வளவு இருக்கும்; அவற்றை வளர்க்க, புராணங்கள், இதிகாசங்கள் வேறு இருக்கின் றன; சாதிப்பாகுபாடுகள் வேறு. எனவே அங்குள்ள மாந்தர் கல்லாய்க் கிடக்கிறார்கள். கொள் கைப் பிடிப்பு கொள்வோரையும் வேரறுக்க சாக்குருவி வேதாந்தம் வேறு இருக்கவே இருக்கி றது; எனவே நாவலந்தீவு நம்மைவிட்டுப் போகாது” என்கிறான் ஆங்கிலேயன். இருவரும் தம் சொந்த நாட்டு நிலைக்குத் துயருறுகின்றனர்.
“சொந்த நாட்டில் நடக்கின்ற பேச்சில் என் கவனம் செல்கிறது” என்கிறான் குப்பன். சொந்த நாட்டுக்குரல் ஒன்று காதில் விழுகிறது. “சஞ்சீவி பர்வதத்தை ஒருநொடியில் கொண்டுவர வேண்டுமா ஐயாவே?” என்ற குரல். அதைக் கேட்டுக் குப்பன் அஞ்சுகிறான். “சஞ்சீவி மலையைப் பெயர்க்கின்ற ஆட்கள் யாரும் பிறக்கவில்லை இன்னும்” என்று அவனைத் தேற்றுகிறாள் வஞ்சி.
மேலும் உரையாடல் காதில் விழுகிறது: “உங்களுக்குத்தான் வானம்வரை வளரும் உடல் உண்டே; உடனே சஞ்சீவி மலையை எடுத்துவருக” என்கிறது அக்குரல். இதைக்கேட்டுக் குப்பன் இன்னும் அஞ்சுகிறான். ‘அந்த மனிதன் வந்து மலையைத் தூக்குவதற்குள் நாம் இறங்கிச் சாரல் சென்று விடுவோம் வா” என்கிறான். “மலையைத் து£க்கும் ஆற்றலிருந்தால் நாம் ஏன் அடிமையாய் மிடிமையில் வாழ்கிறோம்?” என்று வஞ்சி தன் பதிலை முடிப்பதற்குள், “அந்த மலையை இதோ தூக்கிவந்து உம் எதிரில் வைக்கிறேன் ஐயா” என்ற குரல் கேட்கிறது.
இதைக்கேட்ட குப்பனின் நிலை இரங்கத்தக்கதாகிவிடுகிறது. “ஐயோ வஞ்சி, சாவு வந்ததே! மூலிகையைக் கொணர வம்பு புரிந்தாயே! முத்தம் கொடுத்தே முழுநேரமும் தொலைத்தாயே! என் உயிரையும் தொலைத்தாய், உன் உயிரையும் இழக்கப்போகிறாய்” என்று புலம்புகிறான்.
வஞ்சி நகைக்கிறாள். அவளுக்கு இது எவனோ ஒரு பாகவதன் சொல்லும் கதை என்பது புரிந்துவிட்டது. ஆனால் குப்பனோ உண்மையான உரையாடல் என்றே இதைக் கருதுகிறான். “மலையைத் தூக்கும் மாமனிதன் எவனும் இல்லை, காதல் நிசம்; இக்கனிமுத்தம் மிக்க உண்மை” என்றெல்லாம் தேற்றும் வஞ்சியின் சொல்லையும் ஏற்கமறுக்கிறான்.
“இந்நேரம் போயிருப்பார்; இதோ சத்தம் கேட்கிறது; வானத்தில் பாய்கிறார்” என்றெல்லாம் மீண்டும் குரல்கள் கேட்கின்றன. குப்பன் இப்போது பேசும் ஆற்றலையும் இழந்துவிட்டான். “ஐயோ” என்று மட்டுமே அவனால் சொல்லமுடிகிறது. “இனிமேல் காதில் விழுவதையும் கேளுங்கள்” என்கிறாள் வஞ்சி. “இப்படியாக அநுமார் எழும்பிப்போய் சஞ்சீவி மலையைக் கொண்டுவந்து இலங்கையில் வைத்தார். அதன் சக்தியால் இராமனும் இலட்சுமணனும் எழுந் தார்கள்”  என்கிறது குரல். “இலங்கையில் வைத்துவிட்டானே, நாம் தப்பப்போவதில்லை” என்கி றான் குப்பன். “அநுமார் மீண்டும் சஞ்சீவி பர்வதத்தைக் கொண்டுசென்று இருந்த இடத்திலே யே வைத்துவிட்டார்” என்கிறது குரல்.
குப்பன் இப்போது நகைக்கிறான். “நான் அப்போதே ஆபத்து இருக்காதென்று நினைத்தேன். நான் நினைத்தபடியே நடந்தது பார், அதுதான் ஆச்சரியம்” என்கிறான். வஞ்சி அவனிடம் “நடந்த செய்தி என்ன, அதைக் கூறுங்கள்” என்கிறாள். “நாம் இங்கே வந்தோம், நாம் இங்கே இருக்கும்போதே அநுமார் இந்த மலையைத் தூக்கிச் சென்று இலங்கையில் வைத்தது, பிறகு இராமன் எழுந்ததும் இங்கேயே மலையைக் கொண்டுவந்து வைத்துவிட்டது. மலையைச் சற்றேனும் குலுங்காமல் கொண்டுசென்றதும் வைத்ததும் ஆச்சரியம்” என்கிறான்.
“இங்கே கதையை இன்று நிறுத்துகிறேன். இந்தக் கதையைக் கேட்டவர்கள் எல்லாரும் இம்மை மறுமைப் பயன்களை அடைவார்கள்” என்று நாமபஜனை செய்து கதையை முடிக்கும் பாகவதன் குரல் மீண்டும் காதில் விழுகிறது. இதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை குப்பனால். வஞ்சி, காட்சிமூலிகையை அவனிடம் கொடுத்து “ஐயா, இதை விழுங்கி அங்கே பாருங்கள்” என்கிறாள். ஒரு பாகவதன் உட்கார்ந்து தனக்குக் கிடைத்த காசுகளைத் தட்டிப்பார்ப்பது தெரிகிறது. சிரிக்கிறார்கள் இருவரும். மூடப்பழக்கவழக்கங்கள் பற்றி நீண்டதொரு உரையாற்றுகிறாள் வஞ்சி. “செம்மை முத்தம் கொள்ளவில்லை, சேர்த்து முத்தம் கொள்வீரே” என்று முடிக் கிறாள்.
“இன்றுதான் இத்தகைய நலிவுதரும் கதைகளெல்லாம் நாட்டிலிருப்பதைத் தெரிந்துகொண் டேன். மூடப்பழக்கம், முடிவற்ற கண்ணுறக்கம் ஒழிவதென்றோ?” என்று அறிவுபெற்ற குப்பன் உரைக்கிறான்.
உடல்சிலிர்த்த வஞ்சி, “காதலுக்குத் தக்க இடம் சாரல்தான், அங்குச் செல்வோம் வாருங்கள்” என்று குப்பனை அழைக்க, காதலர்கள் சாரல் செல்கிறார்கள். சாரலின் இயற்கையழகு, கவிதையின் தொடக்க அடிகளில் சொல்லப்பட்டவாறே மீண்டும் வருகிறது, வஞ்சியின் வார்த்தைகளில்.  “இன்பமும் நாமும் இனி” என்று வஞ்சி சொல்வதுடன் கவிதை முடிகிறது.
இக்கவிதைப் பிரதி, பல அறிஞர்களாலும் பாராட்டப்பட்ட ஒன்று. அவர்களது கருத்துகள் சிலவற்றைக் காண்பது நல்லது.
“இப்பாடல் அகநிலைச் செய்யுள் வகையைச் சார்ந்ததாகும். குப்பன் வஞ்சி ஆகியோர் காதல் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அக்காதல் வாழ்க்கையில் சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்வதுதான் இப்பாடலின் சிறப்பாகும். அகஇலக்கணத்தின்படி முதல், கரு, உரிப் பொருள்களில் அமைந்துள்ளது” என்கிறார் சி.கே. சீனிவாசன்.
“சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்பது பாரதியின் குயில் பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. சில இடங்களில் அழகாக இருக்கிறது” என்கிறார் சிறுகதையாசிரியர் கு.ப. ராஜகோபாலன். குயில் பாட்டுப்பாணி என்பதில் இது ஒரு அதீதநவிற்சிக் கதை என இனம்காணப்படுகிறது.
கு,ப. ரா.வின் கருத்தினை ஒத்த ஒன்றினை நாவலாசிரியர் ஹெப்சிபா ஜேசுதாசனும் வெளியிட்டுள்ளார்.
“சஞ்சீவிபர்வதத்தின் சாரல் கவிஞரின் கவிதைகளுள் முதல் ஸ்தானத்தை எளிதில் பிடித்துக் கொண்டிருக்கிறது. இது பாரதியாரின் குயில்பாட்டின் சாயல் கொண்டுள்ளது. ஆனால் குயில் பாட்டின் உட்கரு ‘காதல்போயின் சாதல்’ என்பதல்லவா? பாரதிதாசனின் உட்கருவோ முழுக்க முழுக்க ஆரியதிராவிட வேறுபாடாகும்” என்பது அவர் கூற்று.
சஞ்சீவிபர்வதத்தின் சாரல் கவிதையின் கருப்பொருள் வெவ்வேறு நிலைகளில் கணிக் கப்பட்டுள்ளது. பெண்ணுரிமை, சமதர்மம், ஆரியதிராவிட வேறுபாடு என்பன சுட்டிக்காட்டப் பட்ட கருப்பொருள்களில் சில.
“பாரதிதாசனின் சிறப்புவாய்ந்த அங்கதப் பாடலே சஞ்சீவிபர்வதத்தின் சாரல். மற்றொன்று இருண்டவீடு” என்று இதை அங்கதப் பாட்டாகக் கண்டுள்ளார் ஓர் அறிஞர்.
இது ஒரு அதீதப் புனைவா, அங்கதமா என்பதுபோன்று விவாதங்கள் இருந்தாலும், கருப் பொருள்கள் வெவ்வேறாகச் சொல்லப்பட்டாலும், பாரதிதாசனின் கவிதைகளில் முதன்மை பெறுவது சஞ்சீவிபர்வதத்தின் சாரல் என்பதில் எவருக்கும் கருத்துவேறுபாடில்லை.


வேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு

திருச்சி புனித சிலுவைக் கல்லூரியின் முதல்வர் சகோ. ஜெஸின் ஃபிரான்சிஸ் அவர்கள் எழுதிய “வேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு” என்னும் நூலுக்கு அளித்த முன்னுரையும் மதிப்பீடும். (மார்ச் 2013)
அறம் மனிதச் சமூக வாழ்க்கைக்கு அடிப்படையானது. மானிடப் பரிவர்த்தனையின் அடிப்படையிலிருந்து அது எழுகிறது. சமூகம் இயங்குவதற்குத் தேவையான பொதுவான விஷயங்கள் அறம் என்னும் தொகுப்பில் அடங்குகின்றன. அதன் அடிப்படை “உன்னைப் போலப் பிறரையும் நோக்கு” என்பதாகும். பிறரிடம் திருடுகின்ற கள்வனும், தன்னிடம் ஒருவருவம் திருடுவதை விரும்புவதில்லை. பிறன் மனைவியைக் கள்ளத்தனமாக நோக்குபவர்களும் தன் மனைவியை இன்னொருவர் பார்க்கச் சகிப்பதில்லை. மற்றவர்களைக் கொலைசெய்யும் முரடர்களும் தன்னையோ தனக்கு வேண்டியவர்களையோ பிறர் கொலை செய்வதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆக இதுதான் அறத்தின் அடிப்படை. அறம் பொதுவாகக் கடைப்பிடிக்கப் படுவதால்தான் சமூகக் குடும்ப வாழ்க்கையும் சாத்தியமாகிறது.

ஒழுக்கம் வேறு, அறம் வேறு. அறத்தை மதங்களும் வாழ்க் கைத் தத்துவங்களும் ஏற்கும்போது சில விதிகளாக அவற்றை வகுத்துக்கொள்கின்றன. அப்போது அது ஒழுக்கம் ஆகிறது. ஒழுகுதல்-அதாவது, கடைப்பிடித்தல் என்பதிலிருந்து ஒழுக்கம் என்ற சொல் வருகிறது. ஆகவே ஒழுக்கம் பெருமளவு தனிமனித சம்பந்தப்பட்டது. ஒழுக்கத்தில் அற அடிப்படைகள் இருக்கலாம், அறத்திற்குத் தொடர்பற்ற விதிகளும் இருக்கலாம். உதாரணமாக, “திருடக்கூடாது” என்று மதம் சொல்வது அறத்தின் அடிப்படை கொண்டது. “பெண்கள் பர்தா அணிய வேண்டும்” என்பதற்கோ, “ஆண்களுக்கு அடங்கி நடந்துகொள்ள வேண்டும்” என்பதற்கோ அறத்தின் அடிப்படை இல்லை, அச்சத்தின் அடிப்படைதான் இருக்கிறது. இவை ஒழுக்க விதிகள். ஒழுக்கம் காலத்திற்குக் காலம் மாறுகிறது. அறம் அவ்வளவு எளிதாக மாறுவதில்லை.

அறத்தின் அடிப்படை சமூகம் அதை ஏற்று நடத்தல். ஒழுக்கத்தின் அடிப்படை தனிமனிதனுக்கு “நீ இவ்வாறு நட (அல்லது நடக்காதே)” என்று கற்பித்தல்.

சமூக வாழ்க்கைக்கே அறம் அடிப்படையாக இருக்கும்போது, அதன் ளிப்பாடான இலக்கியத்தில் அறம் அடிப்படை இடம் பெறுவதில் வியப்பில்லை. காலத்துக்குக் காலம் இலக்கியம் அடிப்படையான மனித தர்மங்களை வலியுறுத்தி வருகிறது. உதாரணமாக, ஜாதிசார்ந்த நீதிகள் இறுக்கம் பெற்று வந்த நாளில், கம்பராமாயணம், இராமன் இழிகுல வேடனான குகனையும் குரங்கினத் தலைவனான சுக்ரீவனையும் சகோதரர்களாக ஏற்றான் என்று சொல்லும்போது அறத்தை எடுத்துரைப்பதாகிறது. இப்படித் தான் இலக்கியங்கள் இயங்குகின்றன. இப்படிப்பட்ட பொதுவான மானிடத் தன்மைகளைப் பேசுவதனால்தான் திருக்குறள் சிறந்த அற நூலாக அமைகிறது.

 

ஆனால் காலத்தின் தன்மைக்கு இலக்கியங்களும் பலசமயங் களில் ஒத்துச் செல்கின்றன. “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” என்றும், “கொழுநன் தொழுதெழுவாள்” என்றும் இலக்கியம் பேசும்போது தன் காலத்தைத் தாண்டி அறத்தைப் பற்றிச் சிந்திக்க வில்லை என்றுதான் கூறவேண்டும்.

 

இதனை இங்கு சொல்வதற்குக் காரணம், வேதநாயகம் பிள்ளை, அறவியல் நோக்கில் தோய்ந்தவர். ஆனால் அவர் இலக்கிய வாயிலாகப் பேசும்போது ஒழுக்கங்களைத்தான் முதன் மைப் படுத்திப் பேசுகிறார். அது மட்டுமல்ல, அவர் ஆங்கிலக் கல்வி வாயிலாகப் பெற்ற சில நோக்குகளின் அடிப்படையில் பெண்கல்வி, பெண் சமத்துவம் போன்றவற்றை வலியுறுத்திப் பேசினாலும், பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நிற்க வேண்டும் என்பதுதான் அவருடைய வரையறை. இந்த இடத்தில் அவர் காலத்தின் போக்கிற்கு எதிராகச் சிந்திக்கவில்லை.

 

காலத்தின் போக்கிற்கு முற்றிலும் எதிராகச் சிந்தித்தல் சிலரால்தான் இயலும். எனவே அதனை இலக்கியத்தின் ஒரு குறையாகக் கணிக்க இயலாது. ஆனால் வெறும் ஒழுக்கத்தையே இலக்கியம் பேச முற்படும்போது அது இலக்கியத் தன்மையை இழந்து விடுகிறது. உதாரணமாக, திருக்குறள் சில இடங்களில் தன் காலத்தை மீறிச் செல்லா விட்டாலும், பொதுவாக அறம் என்பதன் அடிப்படையில் பேசுவதால் அது சிறந்த இலக்கியமாக நிற்கிறது. ஆனால், ஆசாரக்கோவை வெறும் ஒழுக்கங்களையே பேசுவதால் அது இலக்கியமாக நிற்பதில்லை. இன்று சமூக ஆவணமாகத்தான் அதை நோக்குகிறோம்.

அதுபோலவே அறத்தின் பாற்பட்டு இயங்கும் இலக்கியங்கள், “நீ இப்படி நட, அப்படி நட” என்று எளிய விதிகளாக மாற்றிவிடுவ தில்லை. எல்லாச் சமயங்களிலும் அப்படிச் செய்யவும் இயலாது. ஆனால் ஒழுக்கத்தைப் பேசுபவை “நீ இதைச் செய், அதைச் செய்யாதே” என்று எளிதாகக் கூறிவிடுகின்றன. தமிழில் இன்னா நாற்பது, இனியவை நாற்பது முதல் “ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்” என்பதுவரை இப்படிப்பட்டவை.

வேதநாயகரின் நூல்களை நாம் இன்று படிக்கும்போது அவற்றில் காணப்படும் ஆழ்ந்த சமூக அக்கறை நம்மை பிரமிப்புக் கொள்ளச் செய்கிறது. அதே சமயம், அவர் எல்லாவற்றையும் பெருமளவு ஒழுக்கவிதிகளாக மாற்றிவிடுகிறார் என்பதும், அழகி யல் மதிப்புகளில் பெருமளவு அக்கறை கொள்ளவில்லை என்பதும் அவருடைய இலக்கியங்களின் மதிப்பைக் குறைத்துவிடு கின்றன.

உதாரணமாக, வேதநாயகர், ‘தமிழ் நாவலின் தந்தை’ என்று புகழப்படுகிறார். ஆனால் அவருடைய கதைக் கட்டமைப்பு இறுக்க மாக, காரண காரியத் தொடர்புடையதாக இல்லை. தளர்த்தியாக, தொடர்பற்ற பல சம்பவங்களின் கோவையாக இருக்கிறது. அவை கதைத் தலைவனால்தான் இணைப்புப் பெறுகின்றன. கதைத் தலைவன் மிகவும் கள்ளமற்றவன், மிகச் சூதுவாதற்ற எளிய உள்ளம் படைத்தவனாக இருக்கிறான். அதேசமயம் நன்கு கற்ற றிந்தவனாகவும் இருக்கிறான். அவனிடம் காணப்படும் அறிவார்த் தமான மகிழ்வூட்டும் தன்மையும் ஹாஸ்யமும் ஆச்சரியமாக இருக்கின்றன. கதை “நான்” என்று தற்கூற்றாகச் சொல்லும் போக்கில் அமைகிறது. ஏறத்தாழ இப்போது நூற்று முப்பத்தைந் தாண்டுகளுக்குப் பிறகு அதைப் படிக்கும்போது, கதையின் தனித்த சம்பவக்கோவைகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஒரு கதை என்று தொடர்ச்சியாகப் படிக்கும்போது சலிப்பு ஏற்படுகிறது. மேலும் ஏராளமான உபகதைகள் வாசிப்பைக் கெடுக்கின்றன. அவை சமயங்களில் சாத்தியமின்மை என்ற எல்லைக்கும் செல்கின்றன. ஒழுக்கத்தை போதிக்கும் தன்மை மிக முனைப்பாக இருக்கிறது. சமூக, கலாச்சாரச் சீர்திருத்தங்கள் பலவற்றிற்கு ஆசிரியர் வேண்டுகோள் விடுக்கிறார்.

ஆகவே இந்த நாவலை நாவல் என்று சொல்வதைக் காட்டி லும் அவரே சொன்னதுபோல, குறித்த நோக்கத்தைக் கருதி இயற்றப்பட்ட ‘வசன காவியம்’ என்ற சொல்லால் குறிப்பது ஏற்புடையதாகத் தோன்றுகிறது. நல்லவேளையாக, இந்த நாவ லுக்கு அடிப்படையாக அமைந்த விஷயங்கள், அக்கால யதார்த் தத்தோடு ஒத்துச் செல்கின்றன என்பது ஒன்று, இரண்டாவது, அவற்றை கவனித்து நாவலில் இடம்பெறச் செய்த வேதநாயகரின் கூர்மையான, விமரிசன நோக்குள்ள பார்வை. இவை இந்த தளர்த்தியான வீரசாகசக் கதைக்கு (ரொமான்சுக்கு) சிறந்த இலக்கியப் பண்பை அளித்துவிடுகின்றன. வேதநாயகரின் நடை பொதுவாகப் பண்டிதத் தன்மை கொண்டது என்றாலும் அவர் எடுத்துக் கொண்ட விஷயமே அதை மாற்றி இலகுவான தன்மை கொண்டதாகச் செய்கிறது என்பதோடு இன்று அதன் பழங்கவர்ச் சிக் கெனவே நாம் அதை வாசிக்க முடிகிறது.

ஆக, இன்று நோக்கும்போது, வேதநாயகர் ஓர் அறிஞர், சீர் திருத்த வாதி, சமூக மேம்பாட்டு உற்சாகி என்பவை அவருடைய படைப்பாற்றலை விட மேம்பட்டுத் தெளிவாகத் தெரிகின்றன. இதனை அவருடைய பொதுவான இலக்கிய இயல்பு என்று நாம் ஏற்கலாம். நாவலை ஓர் உதாரணத்துக்காக எடுத்துக் கொண் டோமே அன்றி, சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள், பெண்மதி மாலை போன்ற பொதுவான நூல்களில் மட்டுமன்றி, தேவமாதா அந்தாதி போன்ற சமய நூல்களிலும் இந்தப் பண்புகளே மேலோங்கி நிற்கின்றன.

இதுவரை நான் பொதுவாகப் பேசிவந்ததுபோலத் தோன்றும். இல்லை. “வேத நாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு” என்ற இந்த நூலில் மேற் கண்ட கருத்துகளை முனைவர் சகோதரி ஜெஸின் ஃபிரான்சிஸ் அவர்கள் சிறப்பாக ஆங்காங்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நூலின் அமைப்பு,

அறவியல் அணுகு முறையும் விளக்கமும்,

வேதநாயகம்பிள்ளையின் படைப்புகளும் வாழ்வியல் கூறுகளும், அறக் கருத்துகள்,

திருக்குறளின் தாக்கம்,

படைப்பாளுமைத் திறன்,

அறவியல் நோக்கு

என்னும் ஆறு இயல்களாக அமைந்திருக்கிறது. கூறியது கூறல் இன்றி, ஒவ்வொரு இயலும் தன்னளவில் ஒரு நோக்கம் சார்ந்த தாக அமைந்திருக்கிறது. வேண்டியவர்களைப் பாராட்டுவது, வேண்டாதவர்களைத் தேவையின்றி இகழ்வது என்னும் நோய்கள் இன்றைய ஆய்வுகளிலும் திறனாய்வுகளிலும் காணப்படும் மிக முக்கியமான குறைகள். இந்தக் குறைகள் இந்த நூலில் அறவே இல்லை என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது, சகோதரி எவ்வளவு துல்லியமாக வேதநாயகரின் நூல்களை மதிப்பீடு செய்கிறார் என்பதைப் பாருங்கள்:

“பிரதாப முதலியார் சரித்திரமும், சுகுணசுந்தரியும் அறவியல் நோக்கில் தோல்வியே அடைந்திருகின்றன என்பதுதான் முக்கிய மான உண்மை….வேதநாயகம் பிள்ளையின் உத்திகள் மிக பலவீனமானவை….தமிழுக்கே புதிய வடிவமான புதினத்தை, முதன்முதலில் கையாளுவதனால் வேதநாயகர் தோல்வியடைந் திருக்கிறார் என்று சொல்வதே பொருத்தமாக அமையும்….வேத நாயகர் முதன்மையாக ஒரு புதின ஆசிரியர், இலக்கியப் படைப்பாளி என்பதை விடவும் அறவியல்வாதி, தற்செயலாகவே அவர் புதினம் என்னும் வடிவத்தைச் சென்றடைந்தார் என்றே கூறவேண்டும்.” (ப. 181)

சகோதரி அவர்கள் ‘அறவியல் நோக்கு’ என்னும் இயலின் தொடக்கத்தில் அதன் குறைபாடாகச் சொல்வன எல்லாம் ஒழுக்கவியல் நோக்கின் குறைபாடுகளே அன்றி, அறவியல் சிந்தனையின் குறைபாடுகள் அல்ல. ஆனால், ஒருவகையில் அறத்தைச் செயல்படுத்தும்போது அது ஒழுக்கமாகக் குறைந்து விடுகிறது என்பதும் அறவியலைப் பேசும்போது ஒழுக்கவியலாகி விடுகிறது என்பதும் கோட்பாடு-செயல்முறை சம்பந்தப்பட்ட இடர்ப்பாடுகள்.

முடிவுரையில் சகோதரி தொகுத்துச் சொல்லும் கருத்துகள், அவருடைய திறனாய்வு நோக்கு அடிப்படையினைத் தெளிவு படுத்துவதோடன்றி, இலக்கியத்தை எவ்விதம் மதிப்பிட வேண்டும் என்பதை மாணவர்க்குச் சொல்லித் தருவனவாகவும் அமை கின்றன.

“அறக்கருத்துக்களை நேராகச் சொல்லிப் பயனில்லை. மேலும் அறக்கருத்துகளைச் சொல்வோர் தம்மை ஓர் உயர்ந்த பீடத்தில் வைத்துக்கொண்டு பிறரை இழிவாக நோக்குவதற்கே அறம் கூறுதல் பயன்படுகிறது. எனவே அறக்கருத்துகள் இலக்கியத்தில் நேர்முகமாக வெளிப்படலாகாது. எவ்வளவுக் கெவ்வளவு மறைமுகமாக வாழ்க்கை அனுபவங்களின் வாயிலாக வெளிப்படுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அவற்றுக்கு ஆற்றல் அதிகம். எனவே அறநூல்கள் கூடியவரை மறைமுகமாகக் கூறும் இலக்கியங்களாக அமையவேண்டும்.”

இவ்விதம், வேதநாயகரின் படைப்பாளுமையை மதிப்பிடுவதில் இந்த நூல் நேர்மையான ஒன்றாக நிற்கிறது என்பது இதன் சிறப்பாகும். ஆனால் வேதநாயகரின் வாழ்க்கையையோ, அவர் அக்காலத்தின் பிற சிறந்த ஆளுமைகளோடு கொண்டிருந்த தொடர்பையோ இவ்வளவு முனைப்பாகச் சொல்லியிருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. அவை இந்த நூலின் ஓட்டத்தைக் குறைக்கின்றன. ஆனால் அந்தச் செய்திகளும் பெரும்பாலும் பிறர் அறியாதவை, பிற்கால ஆய்வாளர்களுக்குப் பயன்படுபவை என்ற அளவில் பயனுடையவையே.

வேதநாயகரின் வாழ்க்கையையும் அவரது நூற்கருத்துகளையும் தொடர்புபடுத்திக் காட்டுவதில் சகோதரி முனைப்புக் காட்டியிருக் கிறார், அதற்காகவே இந்த நூலின் நிறையப் பக்கங்களைச் செலவழித்திருக்கிறார் என்றாலும், இன்றைய திறனாய்வில் நாம் அப்படிச் செய்வதில்லை. அது தேவையுமில்லை. அந்த அளவுக்கு ஒரு இலக்கியவாதியின் வாழ்க்கைக்கும் படைப்புகளுக்கும் தொடர்பிருக்குமா என்பதும் ஐயத்திற் குரியது. அறம், அனுபவத் தின் வடிவத்தை ஏற்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. வாத்ஸ்யாயனரின் காமசூத்திரமும் இலக்கியமாகக் கொண்டாடப் படுகின்ற நாட்டில், ஐந்து மனைவியரோடு வாழ்ந்த வேதநாயகர், திருக்குறளின் காமத்துப்பாலிலிருந்து ஒரு கருத்தையும் ஏற்கவோ மேற்கோளாகக் காட்டவோ இயலவில்லை என்பதை நாம் துறவி களுக்குரிய ஒரு மனத்தடை (இன்ஹிபிஷன்) அவரிடமும் இருந்ததாகக் காண முடியுமே அன்றி அதனை ஒரு சிறப்பாகக் கொள்ளமுடியுமா என்பது எண்ணத் தக்கது.

எவ்வாறாயினும், இது இந்த நூலின் சிறப்பை எவ்விதத்திலும் குறைப்பதன்று. இந்நூல், அறவியல் நோக்கில் ஆய்வு செய்ய வரும் மாணவர்களுக்குப் பயன்படும் என்பதோடு பொதுவாக இலக்கியத்தை எவ்விதம் அணுக வேண்டும் என்பதற்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக நிற்கவல்லது.

கடைசியாக, இந்த நூல், சகோதரி அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் அடிப்படையில் உருவானது என்பதைச் சொல்லி யாகவேண்டும். தற்செயலாக சகோதரி அவர்களின் ஆய்வுக்கு வழிகாட்டியாக அமைந்தவன் நான் என்பதைத் தவிர இதற்கு முன்னுரை வழங்கச் சிறப்புத் தகுதி ஒன்றும் எனக்கு இல்லை. சகோதரி அவர்களின் சமயச் சார்பற்ற தன்மையும் தமிழின் மேலும் தமிழ் இலக்கியத்தின் மேலும் அவர்கள் கொண்டுள்ள பற்றும் மிகச் சிறப்பாக இந்த நூலில் புலனாகின்ற விஷயங்கள். அவர்கள் மேலும் இம்மாதிரி நூல்கள் பலவற்றைச் சிறப்பாகத் தமிழில் இயற்றிக் கல்வி உலகிற்கும் தமிழுலகிற்கும் பயனளிக்க வேண்டும் என்பது என் முனைப்பான வேண்டுகோள்.


பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்

Intermountain West Dairy Cow Blend

Cows, Pigs, Wars, Witches என்ற நூல் மார்வின் ஹாரிஸ் என்ற மானிடவியல் பேராசிரியர் எழுதியது (1974). ஹாரிஸ் (1927-2001) கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியவர். அவருடைய நூலின் ஒரு பகுதி துக்காராம் கோபால்ராவ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு எனிஇந்தியன் பதிப்பகம் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது (விலை ரூ.95; ஜனவரி 2005). (மூலநூலின் சூனியக்காரிகள் பற்றிய பகுதி மொழிபெயர்க்கப்படவில்லை). நூலில் அடங்கியுள்ள விஷயத்திற்கு இந்த விலை சற்று அதிகம்தான்.
மார்க்சிய கலாச்சாரப் பொருள்முதல்வாத நோக்கில் இந்நூலின் கட்டுரைகள் அமைந்துள்ளன. இக்கட்டுரைகள் வெளிவர கோ. ராஜாராம் தொடங்கிய திண்ணை.காம் உதவி புரிந்துள்ளது.
இந்நூலில் ஐந்து கட்டுரைகள் உள்ளன. ‘ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை?’
என்பது முதல் கட்டுரை. பயனற்றுப் போகும் பசுக்களை இந்துக்கள் கொன்று தின்றுவிடலாம் என்பது மேற்குநாட்டினரின் பொதுவான கருத்து. ஆனால் அப்படிக் கொன்று தின்னாமல் இருபபதன் மூலம், உண்மையிலேயே இந்தியர்கள் தங்கள் கால் நடைகளை அமெரிக்கர்களை விட அதிகத் திறனான முறையில் உபயோகிக்கிறார்கள் என்று நிரூபிக்கிறார். அவை தங்கள் உணவுக்கு விவசாயியை நம்புவதில்லை; அவற்றின் சாணம் எரிபொருளாகவும் வேறுவிதங்க ளிலும் பயன்படுகிறது; அவை கடும் பஞ்சங்களைத் தாங்கும் ஆற்றல் பெற்றுள்ளன; பஞ்சத்திற்குப் பிறகும் விவசாயத்திற்கு உதவிசெய்கின்றன என்று வாதிடும் அவர், மாட்டைக் காப்பாற்றும் ஓர் இந்தியப் பிரஜை வீணாக்குவதைவிடப் பலமடங்கு அதிகமான எரிபொருள் சக்தியை அமெரிக்கர்கள் வீணாக்குகிறார்கள் என்று சாடுகிறார்.
இரண்டாவது கட்டுரை, ‘பன்றியை விரும்புபவர்களும் பன்றியை வெறுப்பவர்களும்’ என்ற விஷயத்தைப் பற்றியது. பொதுவாக யூதர்களும் முஸ்லிம்களும் பன்றியை (அசுத்தமான பிராணி என்பதற்காக) வெறுக்கிறார்கள். சீனர்கள் பன்றியை விரும்புகிறார்கள். இதற்கான வரலாற்றுக்காரணத்தை ஆராய்கிறார் ஆசிரியர். யூதர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்த நீரற்ற பிரதேசங்களில் பன்றியை வளர்ப்பது சூழலுக்குப் பொருந்தாது (பன்றிகளுக்கு அதிக நீர் தேவை). மாரிங், செம்பகா என்ற பழங்குடி மக்கள் எவ்வாறு பன்றிகள் மீது அன்பு செலுத்துகிறார்கள், அவற்றைக் கொன்று விழா நடத்துகிறார்கள் என்பதையும் வருணிக்கிறார். இவ்வாறு நடத்தும் விழாக்கள், அவர்கள் தங்களைப் போருக்குத் தயார் செய்துகொள்ளவும், புது நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவும் உதவுகின்றன. இவர்களது ஏற்பாடுகள் திறமையான முறையில் தாவரங்களும் மிருகங்களும் மனிதர்களும் சுற்றுச் சூழலில் இணைந்து அதன் வளத்தைச் சிறப்பாகப் பகிர்ந்துகொள்ள உதவுகின்றன.
மூன்றாவது கட்டுரை, ‘ஏன் போர்கள்நடக்கின்றன?’ என்பது பற்றியது. பொதுவாகப் பழங்குடி சமூகங்களில் பெண்கள் போர் செய்வதில்லை. ஆண்கள் போர் செய்து இறந்து போகின்றார்கள். ஆண் பெண் விகிதத்தைச் சமன் செய்து மக்கள் தொகையைச் சரிசெய்து தங்கள் பொருளாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பழங்குடி மக்கள் கையாளும் ஒரு உத்தியாகவே போர் இருக்கின்றது.
‘ஆண் என்ற காட்டுமிராண்டி’ என்பது அடுத்த கட்டுரை. போர் என்பது ஆணாதிக்கம் சார்ந்த செயல்முறை. இதற்கு யானோமாமோ என்ற பழங்குடி மக்களின் நடைமுறையை ஆதாரமாகக் காட்டுகிறார். இவர்களிடையே பெரிய வன்முறைச் சண்டைகள் நடக்கின்றன. பெண்கள் யாரும் போரில் ஈடுபடுவதில்லை. என்றாலும் பெண்சிசுக் கொலை மூலமாகப் பெண்கள் மக்கள்தொகையைக் -குறிப்பாக ஆண்-பெண் விகிதத்தைக் காப்பாற்றுகிறார்கள். ஆண்கள் போரில் ஈடுபடுவதற்குக் காரணம், முரட்டுத்தன உருவாக்கம் (brutalisation). முரட்டுத்தனத்தினால் உணவு வசதி, ஆரோக்கியமான வாழ்வு, பாலுறவு ஆகியவை எளிதாகக் கிடைக்கின்றன. சமூகத்தில் ஆண்-பெண் இரண்டு பால்களும் முரடர்களாக இருக்கமுடியாது. எனவே ஏதாவது ஒரு பாலை(ஆணை) தைரியமாக்கவும், இன்னொரு பாலை(பெண்ணை)க் கோழையாக்கவும் கலாச்சாரம் போதிக்கிறது. இன்றைய போர்முறை மாற்றங்களும் ஆண்- பெண் பேதத்தை முற்றிலுமாகத் தவிர்க்கவில்லை. உண்மையான ஆண்-பெண் சமத்துவம் வருவதற்கு இன்றைய இராணுவம் போலீஸ் போன்ற சக்திகளை முழுமையாக நீக்கவேண்டும் என்கிறார்.
ஐந்தாவது கட்டுரை ‘போட்லாட்ச்-அந்தஸ்துக்கான போட்டி’ என்பது. («)பாட்லா(ட்)ச் (potlatch) எனப்படும் பெருவிருந்துகளைப் பற்றியது. பழங்குடி மக்களிடையே நிகழும் அந்தஸ்துக்கான போட்டி இது. நமது காலத்திலும், அடிக்கடி ஆடைகளையும் கார்களையும் மாற்றி சிலர் தங்கள் அந்தஸ்தைக் காட்டுவதுபோலச் சில பழங்குடி மக்களின் குழுத்தலைவர்கள் தங்கள் அந்தஸ்தைக் காட்டப் பெருவிருந்துகளை நடத்துகின்றனர். இதில் நிறையப் பரிசுகள் சேகரிக்கப்பட்டுப் பிறருக்கு வழங்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுமுழுதும் குழுத்தலைவர்கள் உழைத்துச் சேகரிக்கிறாக்ள், ஆனால் மற்றவர்களைவிடக் குறைவாக எடுததுக்கொள்கிறார்கள். அவர்களுடைய ஒரேபரிசு அந்தஸ்து மட்டுமே. இந்த விருந்துகள் பொருள்களின் மறுவிநியோகத்தின்மூலம் (redistribution) ஒருவகையான சமத்துவ வாழ்வு முறையை ஏற்படுத்துகின்றன. ஆனால் எல்லாப் பழங்குடி மக்களும் இப்படி இல்லை. எக்சிமோ, புஷ்மன், செமெய், போன்றோர் ‘சவுக்குகள் நாய்கள் உருவாக்குவதைப் போல, பரிசுகள் அடிமைகளை உருவாக்குகின்றன’ என்கிறார்கள். என்றாலும் பெருவிருந்தின் மூலமாக அந்தஸ்து தேடுவதின் ஊடே பெரும் மனிதக்கூட்டம் வளமாக முடிகிறது என்கிறார் ஆசிரியர்.
இதற்கு திண்ணை.காம் ராஜாராமின் பதிப்புரை, மார்வின் ஹாரிஸின் முன்னுரை, ரவிசங்கரின் முன்னுரை, மொழிபெயர்ப்பாளர் முன்னுரை என எத்தனை உரைகள்(!) ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய நூல். சமூகவியல்-குறிப்பாக மார்க்சியச் சமூகவியல் அணுகுமுறையை அவர்கள் அறிந்துகொள்ளப் பயன்படும்.
மொழிபெயர்ப்பு படிக்கச் சரளமாக இருந்தாலும் சிலசமயங்களில் நெருடலாகவும் இருக்கிறது. முதல் பக்கத்திலேயே ‘பஞ்சத்தில் அடி(ப்)பட்ட’ ‘அடிப்பட்ட’ என இருமுறை எழுதுகிறார் ஆசிரியர். அடிப்பட்ட= ‘பலகாலமாக வழக்கிலுள்ள’ என்று பொருள்படும். (கோவில்களில் தேவாரம் பாடுவது அடிப்பட்ட வழக்கு என்பதுபோல). ‘பஞ்சத்தில் அடிபட்ட’ என இருக்க வேண்டும். Holy cow என்ற ஆங்கில மரபுத்தொடரினை விலாவாரியாக விளக்கும் ஆசிரியருக்குத் தமிழ் மரபுத்தொடர்கள் பற்றிய தெளிவில்லை. பக்கம் 106இல் feedback என்பதை ‘உள்திரும்புதல்’ என்பது அபத்தம். (பின்னூட்டு/பின்னூட்டம் என்ற சொல் தொடர்பியலில் 1990இலிருந்தே வழக்கிலுள்ளது). ஆங்காங்கு எழுத்துப்பிழைகள் சொற்பிழைகளுக்கும் பஞ்சமில்லை. தமிழ் நாட்டில் ஆங்கிலம் தெரிந்தால்போதும், எழுதுவதற்கு. தமிழ் அறிந்துதான் எழுதவேண்டும் என்று யார் சொன்னது?
—–
அன்புமிக்க தீராநதி ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
தாங்கள் அனுப்பிய நூலுக்கு மதிப்புரை உடனே எழுதி அனுப்பவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்றாலும் பல அலுவல்களினூடே மறந்துவிட்டேன். காலதாமதத்திற்கு மன்னிக்கவும். அன்புகூர்ந்து தஙகள் இதழில் வெளியிட வேண்டுகிறேன்.
க.பூரணச்சந்திரன்.


வேர்களின் பேச்சு

Book write
நாஞ்சில்நாடு தமிழுக்கு வழங்கியிருக்கும் சிறந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான். ஒரு கடலோர கிராமத்தின் கதை வழி அறிமுகமாகி, சாய்வுநாற்காலி போன்ற நாவல்களை எழுதிய, சாகித்திய அகாதெமி உட்படப் பல பரிசுகளைப் பெற்ற இவரை அறிமுகம் செய்யத் தேவையில்லை. இவரது சிறுகதைகளின் முழுத் தொகுப்பு ‘வேர்களின் பேச்சு’. முன்னர் ஆறு சிறுகதைத் தொகுப்புகளாக வெளி வந்தவை.
தமது எழுத்துகளில் மீரான் ஒரு பெரிய ஜாலமே செய்கிறார். என்ன அற்புதமான கவிதை ததும்பும் நடை! பல கதைகளின் தலைப்புகளே கவித்துவமாக உள்ளன. மீரானின் சிறுகதைகளில், நாவல்களைவிட மலையாளக் கலப்பு குறைவு. முஸ்லீம்களின் வட்டார மொழிக் கலப்பு உண்டு. ஆனால் அது எவ்விதத்திலும் இக்கதை களின் சுவாரசியத்தைக் குறைக்கவில்லை.
மீரான் பெரிய உலகளாவிய பிரச்சினைகளில் ஈடுபடுவதில்லை. தமக்குத் தெரி யாத விஷயங்களைப் பற்றி அறவே எழுது வதில்லை. தமது கிராமம். அதில் வசிக்கும் முஸ்லீம் மக்கள். அவர்கள் படும் பாடு, அவர்களின் மூடநம்பிக்கைகள். அவ்வளவு தான் அவரது உலகம். அவர்களைப் பற்றிய மிக நுட்பமான பதிவுகள். மீரானிடம் ஒரு ரொமாண்டிக் தன்மையும் இருக்கிறது. பழையதன்மீதுள்ள நாட்டம், தீமைகளுக்குத் தண்டனை காத்திருக்கிறது என்ற நம்பிக்கை, அவ்வப்போது வேடிக்கையாக பேய்கள், ஜின்களும் வருகின்றன. மனிதர்களுக்கு புத்தியும் சொல்கின்றன பேய்கள்!
அவரைச் சுற்றியுள்ள சமூகத்தின் ஆதரவற்ற மனிதர்களின்-ஆனால் இச்சமூகத்தின் வேராக இருப்பவர்களின் உணர்ச்சிகள் அவரை பாதிக்கின்றன. அதைத்தான் அவர் தமது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார். வேர்களின் பேச்சு!
தமது சமூகத்திற்கு வெளியே சென்று அவர் எழுதியுள்ள கதைகள் மிகக் குறைவு. அவற்றில் குறிப்பிட வேண்டிய முக்கியமான கதை மிஸ்டர் மார்ட்டின். எவ்வளவு நைச்சியமாக நமது கிராமங்களின் உள்ளே நுழைகிறார்கள் உலக முதலாளிகள் என்பதை அழகாக வெளிப்படுத்தும் கதை. ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் மிக மென்மையாக நமது நகர்ப்புற மனப்பான்மையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைப் பதிவுசெய்யும் கதை.
சிறிய வெற்றிகளில் அகமகிழ்ந்து போய்விடாமல் மிகச்சரியான முறையில் பதிவு செய்தலும் தகவல்கள் மீது துல்லியமான கவனம் செலுத்துதலும் மீரானை மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆக்கியிருக்கின்றன. தொடக்க காலத்தில் அவர் முஸ்லிம் இதழ்களிலேயே எழுதிய சிறுகதைகளிலும் ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய அக்கறை-குறிப்பாக வேறு வழியின்றிப் பணியில் ஈடுபடுத்தப்படும் சிறுவர் சிறுமியரைப் பற்றிய கவனம் ஆழமாக வெளிப்படுகிறது.
சற்றுப் பிந்திய கதைகளில் முதியவர்கள் ஆதரவின்றிப் படும் வேதனைகளும், நடுத்தர வயதுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கப்படும் அவதிகளும், சிறியவர்கள் தங்களை ஆளாக்கிய முதியவர்கள் மீது காட்டும் அவமதிப்புகளும் போன்ற விஷயங்கள் முதலிடம் பெறுகின்றன. சமயமோதல் பற்றிய குறிப்பு அபூர்வமாக ஓரிரண்டு கதைகளிலேயே வருகிறது. மற்றப்படி மீரான் காட்டும் இஸ்லாமிய சமூகத்தினர், தாங்கள் சிருஷ்டித்துக்கொண்ட ஒரு வட்டத்திற்குள் அதன் படிநிலைகளுக்குள் ஏற்றத்தாழ்வுகளுக்குள் வெந்துநொந்துகொண்டோ சந்தோஷமாகவோவாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிற சமயத்தினர் பற்றிய பதிவுகள் மிகக் குறைவு என்றாலும் அவர்களுள் ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்ட முஸ்லிம் முதியோர் மீது காட்டி எடுக்கும் பரிவு ஓரிரு கதைகளில் மிக நன்றாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகாலக் கதைகள் சில மிதமிஞ்சிய உணர்ச்சியைக் கையாண்டாலும், ஒரு செய்தியாளனின் பார்வையில் கதையைச் சொல்கிற மீரானின் நடை, பிரச்சினைகளைக் கூர்மையாக வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாத ஒரு சமூகத்திற்குள் நுழைந்து அவர்களின் வாழ்க்கைகளைச் சந்திக்கும் அனுபவத்தைச் சிறப்பாகத் தருகிறார் முகமது மீரான். அடையாளம் பதிப்பகம் மிகச் சிறப்பான கட்டமைப்பில், அச்சில் இந்த நூலை வெளியிட்டுள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. மொத்தத்தில் தமிழ்ச் சிறுகதை உலகிற்கு ஓர் அருமையான பங்களிப்பு.


ஜோசப் ஹெல்லரின் கேட்ச்-22

Catch22

ஜோசப் ஹெல்லரின் கேட்ச்-22

இது ஒரு அமெரிக்க நாவல். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் இருக்கும். என் நண்பர் ராஜன் குறை ஒரு நாள் இந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். படித்துப்பாருங்கள், ரொம்ப நல்ல புத்தகம் என்றார். ஆனால் அப்போது ஏதோ வேலைகள். ஏறத்தாழப் பத்துநாட்கள் கழித்து அவரிடம் படிக்காமலே திரும்பக் கொடுத்தபோது என்னை மிகவும் கேவலமாகப் பார்த்தார். சரி, சமயம் வாய்க்கும்போது படித்துவிடவேண்டும் என்று நினைத்தேன். சில ஆண்டுகள் கழித்துத்தான் படிக்கமுடிந்தது.
மிகச் சிறப்பான சமூக அங்கதம், நையாண்டி, கேலி. கதையின் சூழல்கள் மிகவும் அபத்தமான நிலைகளுக்கும் மிகமோசமான துன்பியல் நிலைகளுக்கும் இடையில் ஊடாடுகின்றன. கதையைச் சொல்பவன், யோசேரியன் என்ற விமானப்படைக் கேப்டன்.
கேட்ச்-22ஐத் தமிழில் தர்மசங்கடம் என்று சொல்லலாம். ஒன்றைச் செய்தாக வேண்டும் என்று சிலசமயம் நமக்குத் தோன்றும், ஆனால் அதைச் செய்யவே முடியாதவாறு அந்த அபத்தமான சூழல் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட நிலையை கேட்ச்-22 எனலாம். உதாரணமாக, நான் அடிக்கடி என் கண்ணாடியைத் தொலைத்துவிடுவேன். அதைக் கண்டுபிடித்தாக வேண்டும். அப்போது தான் அடுத்தவரி படிக்கவோ எழுதவோ முடியும். ஆனால் அதைத் தேடுவதற்கே கண்ணாடி இருந்தால்தான் முடியும். இல்லாவிட்டால் தேடுவதற்குக் கண் தெரியாது. என்ன செய்வது? இது ஒரு கேட்ச்-22 சூழல் எனலாமா?
இந்த நாவலின் அபத்தமும் அப்படித்தான். அந்த படைத் தளபதி, தன் வீரர்களை மேலும் மேலும் மோசமான போர்ச்சூழல் பறத்தல்களில் ஈடுபடுத்துகிறார். தப்பிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தான் ஒரு பைத்தியம் என்று நம்பவைத்துவிட்டால் இராணுவத்திலிருந்து விடுவித்துவிடுவார்கள். ஆனால் ஒரு பைத்தியம் என்று ஒருவன் விண்ணப்பிக்கும் செயலே அவன் பைத்தியம் அல்ல என்பதைக் காட்டிவிடுகிறது. ஆகவே அவன் விடுவிக்கப்பட மாட்டான். மாறாக மேலும் மேலும் போரில் ஈடுபடுத்தப்படுவான்.
ஏறத்தாழ காஃப்காவின் கதைத் தன்மைகளைக் கொண்ட நாவல். நம் காலத்தின் அதிகாரஆட்சியின் மிகமோசமான குணங்களை இந்த நாவல்போல் எதுவும் விமரிசனம் செய்ததே இல்லை என்று சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆங்கில நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் இதைத் தயவுசெய்து படித்துப்பாருங்களேன். இம்மாதிரி தீர்க்கமாகச் சமகால விஷயங்களை விமரிசனம் செய்கின்ற நாவல் எதுவும் தமிழில் வெளிவரவில்லையே என்பது என் மனக்குறை.


தமிழ் மலர் 2010

தமிழ் மலர் 2010

கோவை ஞானி அவர்கள், 2010இல் ‘தமிழ் மலர் 2010 ‘என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். கி.பி. 2000ஆம் ஆண்டில் காலச்சுவடு அமைப்பு ‘தமிழ் இனி’ என்ற பெரும் கருத்தரங்கினை நடத்தி, அதில் படிக்கப்பட்ட கட்டுரைகளைத் ‘தமிழ் இனி 2000’ என்ற பெரிய தொகுப்பு நூலாக வெளியிட்டது. ஞானியின் இந்த முயற்சி அதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது, அதுபோல ஒன்றைத் தாமும் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தையும் காட்டுகிறது. அதைவிட முக்கியமாக, கோவை செம்மொழித் தமிழ் மாநாடு நடக்கப்போகின்ற நிலையில் அதற்கு எதிர்வினையாகத் தம்மால் இயன்ற முயற்சியைச் செய்ய வேண்டுமென்ற ஞானியின் பேரார்வத்தையும் இம் மலர் காட்டுகிறது.

பெரும்பொருட்செலவில் அது நடக்கப்போகின்ற நிலையில், ஞானி, குறைந்த பொருட்செலவில், கட்டுரை களை வருவித்துத் தொகுத்துத் தந்துள்ளார். பாராட்டுக்குரிய முயற்சி, சிறந்த கட்டுரைகளைத் தாங்கிய அருமையான தொகுப்பு. இந்த மலரை வெளியிட்டபின் இதற்கென ஒரு சிறியவிழாவினையும் இலக்கியக் கருத்தரங் கினையும் ஏற்பாடு செய்து அந்த முயற்சியை அவர் நிறைவுசெய்தார். தமிழ் ஆர்வமுள்ள நண்பர்கள் யாவரும் இந்த தமிழ்மலர் 2010ஐ வாசிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.

(நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது எழுதப்படும் கட்டுரை அல்ல இது. 2010இல் தமிழ்மலர் வெளியீட்டு விழாவிலே படிக்கப்பட்ட கட்டுரை. ஆகவே இதில் சொல்லப்படுபவை அப்போதைய 2010 நிலை பற்றிய கருத்துகள். முதலில் ஒரு புறவுரை.)

[புறவுரை:  தமிழ் மலர் 2010 தக்க நேரத்தில்தான் வெளிவருகிறது. ஏறத்தாழ சென்ற வருடத்தின் (2009) பாதிப்புகளை ஓரளவு தமிழ் மக்கள் சற்றே மறந்திருக்கும் வேளையில் சிங்கள அதிபர் தில்லிக்கு வந்துவிட்டார். பற்றுள்ளோர் சிலர் கருப்புக்கொடியேனும் காட்டினார்கள். மிகப் பெரிய இனப்படுகொலை நடந்து, பின்னும் இலட்சக்கணக்கான தமிழர் இரும்புவேலிகளுக்குள் அடைபட்டுத் தவிக்கும் வேளையில், அரசியல் தீர்வே கிடையாது என்று அந்தக் கொலைகாரன் மறுத்துவிட்டநிலையில், அக்கொலைகாரனிடமே நம் தமிழகத் தலைவர் இலங்கைத் தமிழர்களைக் ‘காப்பாற்று, காப்பாற்று’ என்று மனுக்கொடுக்கிறார் இன்னும். நம்மால் வாயால் சிரிக்கமுடியவில்லை. இந்த நிலையில் செம்மொழி மாநாடு அடுத்த பத்துநாட்களில் நிகழ இருக்கிறது.

செம்மொழி என்ற அறிவிப்பு வந்தபோதே நமக்கு அதன் பின்னணியில், அந்த ‘மத்திய அரசாங்க விருது’ அளிக்கப்பட்டதில் உடன்பாடில்லை. ஞானி உடனே எதிர்ப் புத் தெரிவித்தார் என ஞாபகம். நான் என்னுடைய ‘இந்திய மொழிகள்’ என்ற நூலில் தெரிவித்த கருத்தைச் சொல்லிச் சற்றே ஆறுதல டைகிறேன். “ஆயிரம் ஆண்டுப் பழமைதான் செம்மொழித் தன்மைக்குக் காரணம் என்றால் பல மொழிகள் தமிழோடு போட்டிக்கு வந்துவிடும். நியாயமாகவே ஆயிரம் ஆண்டு வரலாறு உடைய தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் எங்களுக்கும் செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று கேட்கக்கூடும். இறுதியில் செம்மொழி என்பதற்கான அர்த்தமே அபத்தமாகிவிடும்” (ப.136) என்று அந்நூலில் ஆறாண்டுகளுக்கு முன் எழுதினேன். அக்கூற்று இப்போது பலித்து விட்டதா இல்லையா?

சுமார் 40-45 ஆண்டுக்குமுன் தி.மு.க. என்னை தீவிரமாக பாதித்திருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னால் இப்போது செம்மொழி மாநாட்டைக் கூட்டுபவர் வசனம் எழுதிய ‘அவன் பித்தனா’ என்ற திரைப்படத்தைப் பார்த்த ஞாபகம். அதில் கடைசியாகக் கதாநாயகர், இலட்சிய நடிகர் இராசேந்திரன், ‘இன்னின்னவற்றையெல்லாம் இலட்சியத்திற்காக, பொது நன் மைக்காகச் செய்தேன், நான் பித்தனா’ என்று அடுக்கிக் கொண்டே போய், ‘அட பைத்தியக்கார உலகமே’ என்று முடிப்பார். இன்று அந்த வசனகர்த்தா தமது வசனத்தை மறுபடியும் கண்டிப்பாக மீண்டும் படித்துப்பார்க்க வேண்டும். எவைஎவை யெல்லாம் சமூக அநீதி என்று அவரால் கண்டிக்கப் பட்டனவோ அவையெல்லாம் இன்று அவராலே மிகத் திருத்தமாகச் செய்யப்பட்டுவிட்டன. அவர் தாம் பித்தரல்ல, தமிழ்மக்கள்தான் பைத்தியங் கள் என்று நிறுவுவதில் உலகளாவிய வெற்றி கண்டுவிட்டார். இதைத்தான் காலத்தின் கோலம் என்பதா? (1914-பின் குறிப்பு: அவருக்குப் பின் வந்தவர் தமிழ் மக்களை இன்னும் அதிக பைத்தியக்காரர்கள் ஆக்குவதில் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டியது.)

இதை இங்கே நான் நினைக்கக் காரணம், இப்போதைய பின்னணி மட்டுமல்ல. நம் தமிழ்த்திரைப்படங்கள் ஒரு போதும் திரைப்படங்களாக இருந்ததில்லை. பழங்காலத்தில் அவற்றில் சில இலக்கிய வெளிப்பாடுகளாக இருந்தன. இலக்கியம் என்ற தலைப்பு அவற்றில் ஒன்றை நினைக்கத் தூண்டியது-அவ்வளவுதான். மற்றப்படி, செம்மொழி மாநாட்டின் வன்மை மென்மை பற்றித் ஞானி விமர்சித்த சிந்தனைப்பகுதிகள், ம.இலெ. தங்கப்பா போன்ற அறிஞர்களின் கருத்துரைகள் ஆகியவை பொருத்தமே.

இதுவரை என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஏழு மாநாடுகள் நடந்துள்ளன. இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு 1968இல் நான் பி.எஸ்சி படித்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்தது. எனது ஊரான வேலூருக்குச் சென்னை வெகுதொலைவில் இல்லை. அதை வேடிக்கை பார்க்கப்போனேன். பல தமிழ் அறிஞர்களை தூரத்திலிருந்து தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. பல கேளிக்கைகளையும் சிலை திறப்புகளையும் பார்க்கும் பாக்கியமும்கூட. அடுத்தடுத்த மாநாடுகள் நிகழ்ந்தபோது நான் தமிழ் ஆசிரியனாகிவிட்டபோதிலும் ஒன்றிலும் நான் பங்கேற்றதில்லை. ஆறாம் மாநாடு மதுரையில் நடந்தபோது மட்டும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்ற உணர்வோடு சென்றோம். அப்போதுதான் அறிஞர் எஸ் ஆர் கே, கைலாசபதி, சிவத்தம்பி, கவிஞர் அக்னிபுத்திரன் போன்றோரை முதன்முதல் சந்தித்தேன். ஏழாம் மாநாடு நினைவில் புகவேயில்லை. எட்டு பெரும் வெறுப்பை உண்டாக்கியிருந்தது. விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கையில் இப்போது நிகழ்கிறது ஒன்பதாம் திருவிழா-செம்மொழி மாநாடு என்ற பெயரில். இதற்குத் தமிழ்மலர் 2010 போன்றதொரு எதிர்வினை தேவைதான்.]

இந்தத் தொகுப்புநூலை ஞானி நான்கு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார். முதற் பகுதியில் அவருக்குப் பிடித்தமான தமிழியக்கம், தமிழ் நாகரிகம் பற்றிய சிந்தனைகள் அடங்கியிருக்கின்றன. அதில் 22 கட்டுரைகள் உள்ளன. பகுதி இரண்டில் இலக்கியம் பற்றிய கட்டுரைகள் உள்ளன. மூன்றாம் பகுதியில் கவிதைகளும், நான்காம் பகுதியில் நூல்கள் அறிமுகமும் உள்ளன. இவற்றுடன் ஆர்வலர்கள் சிலரின் நினைவுக்குறிப்பு களும் உள்ளன. இம்மலரில் வெளிவந்துள்ள இலக்கியக் கட்டுரைகள் பற்றி மட்டும் அறிமுகப் படுத்த விரும்புகிறேன்.

இலக்கியக் கட்டுரைகள் என்ற தொகுப்பில்,
1 தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் (மருதநாயகம்),
2 தொல்காப்பியம்-எடுத்துரைப்பியல் நோக்கு (பஞ்சாங்கம்),
3 அகப்பாட்டின் கவிதைக்கோட்பாடு (குளோரியா சுந்தரமதி),
4 அமைப்பியல்வழி சங்கப்பாடல்களை அணுகுதலின் தேவை (விஷ்ணுகுமா ரன்),
5 மரபியலும் சொருகியலும் (இரணியன்),
6 குறுந்தொகை ஆய்வுகள் இதுவரையும் இனியும் (அறவேந்தன்),
7 வெட்சியும் முல்லையும் (சிலம்பு நா. செல்வராசு),
8 கபிலர் அகவல் தரும் சாதிச் சிந்தனை (மணியன்),
9 தமிழின் செவ்வியல் மரபுத்தொடர்ச்சி (நளினிதேவி),
10 புலம்பெயர் இலக்கியம் (பூரணச்சந்திரன்),
11 பின்காலனியப் புலப்பாடுகளும் மட்டுப்பாடும் (சபா. ஜெயராசா),
12 தமிழில் இரண்டு உலக நாவல்கள் (யமுனா இராசேந்திரன்),
13 நவீனத் தமிழ்த் திறனாய்வாளர்கள் (வேணுகோபால்),
14 தமிழ்ச் சிற்றிதழ்கள் 2009 (கோவைவாணன்),
15 ஞானியின் மாயக் கம்பளம் (செந்தமிழ்த் தேனீ)
ஆகிய கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த இலக்கியக் கட்டுரைத் தொகுப்பு தொல்காப்பியம், சங்க இலக்கியம் பற்றி மிகுதியாகப் பேசுகிறது. அவை பற்றி ஏழு கட்டுரைகள். நவீன இலக்கியம் பற்றி நான்கு கட்டுரைகள் உள்ளன. சிற்றிதழ்கள் பற்றி ஒன்றும், பொதுவான நோக்கில் ஒன்றும் உள்ளன.

{இறுதிக்கட்டுரையாக (15) அமைந்துள்ள ‘ஞானியின் மாயக்கம்பளம்’ என்பது இலக்கியக்கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கப்பட இயலாத ஒன்று. அது தன் அனுபவத்தைப் பேசும் கட்டுரை. படைப்பிலக்கியப் பாங்கில், பாராட்டு நோக்கில் அமைந்தது. கடைசியில் ஞானியை நெடியோனாகிய மாயக் கண்ணனின் அவதாரமாக்கி விடுகிறார் கட்டுரையாசிரியர் செந்தமிழ்த்தேனீ. கடவுளே இல்லை, கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை என்றெல்லாம் கேள்வியெழுப்பிய ஞானியையே கடவுளாக்கி விசுவரூபம் எடுக்கவைத்தி ருப்பது அதிசயம்தான். ஆனால் ஞானியைக் கடவுளாக்குவதற்கு முன்பு நிச்சயமாகக் கார்ல் மார்க்ஸையும் இன்னும் பலரையும் கடவுளாக்கினால்தான் முடியும். செந்தமிழ்த் தேனீ போன்றவர்கள் பலர் இருந்தால் எதிர்காலத்தில் கார்ல் மார்க்ஸுக்கும் ஊருக்கு ஊர் கோயில் தென்படலாம்.}

(14) தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிக் கோவைவாணன் எழுதியிருப்பது கட்டுரையல்ல. சிறு நினைவுக்குறிப்பு. ஏறத்தாழ அறுபத்தைந்து வயதுள்ள யாவருக்கும் குறைந்தது ‘எழுத்து’ காலத்திலிருந்தேனும் சிற்றிதழ்களின் வரலாறு தெரியும். சிற்றிதழ்களின் வன்மை மென்மைகள் சாதனைகள் தோல்விகள் போன்றெல்லாம் ஆராய்ந்திருந்தால், ஆங்கிலத்தில் வெளிவரும் சிற்றிதழ்களுடனாவது ஒப்பிட்டுச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பொதுவாகப் பிற கட்டுரைகள் தங்கள் இலக்கை எட்டியுள்ளன.

(9) நளினிதேவி சொல்லவருவதை மிகவும் கஷ்டப்பட்டு, கஷ்டப்படுத்திச் சொல்கிறார். இன்னும் எழுத்தில் எளிமை கூடவேண்டும். அவர் கூறும் சில விஷயங்கள் விவாதத் திற்குரியவை. சான்றாக, (ப.283) இளங்கோவடிகளைப் பற்றிப் பேசும்போது “அரசியல் பிழைத்தோருக்கு மக்கள் போராட்டம் மூலமே தீர்வு காணப்படவேண்டும் என்று தீர்வு கூறியுள்ளார் இளங்கோவடிகள்” எனவரும் பகுதியைக் காட்டலாம். பொதுவா கப் பெரியாரியத்தையும் சமதர்மத்தையும் வலியுறுத்தும் கட்டுரை.

(11) சபா. ஜெயராசாவின் கட்டுரையிலும் விஷயம் போதாது. கட்டுரை முடிவுபெறவே இல்லை என்று அதன் வடிவம் காட்டுகிறது. இன்னும் நிறையச் சொல்லக்கூடிய தலைப்பு அது. குறிப்பாக காயத்ரி ஸ்பீவக்கின் முறையியல் பற்றி நிறைய விமரிச னங்கள் இன்று எழுந்துள்ளன.

(5) ‘மரபியலும் சொருகியலும்’ போன்ற கட்டுரைகள் இன்று தேவைதானா? தொல்காப்பியத்தில் இடைச்செருகல் உள்ளது என்ற கருத்து ஏறத்தாழ 1920-30களில் முன்வைக்கப்பட்டது. உண்மையிருப்பினும் இந்தக்கருத்தை எத்தனைகாலம் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? ஏற்கெனவே கிடைக்கும் சான்றுகள் தெளிவற்ற நிலையில், தொல்காப்பியத்தில் இடைச்செருகல் இருப்பதை மூலப்பிரதித் திறனாய்வு மூலம் மட்டுமே உறுதிப்படுத்தமுடியும். புதிய ஓலைச்சுவடிகள் கிடைக்காத நிலையில் இது இயலாதது. பொதுநிலையில்-நமது தமிழ்ஆர்வ மிகுதியினால், மரபியலில் இடைச்செருகல் உண்டு என நாம் ஏற்றாலும், அயல்நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற இடங்களிலிருந்தும் வாசிப்போர் ஏற்கமாட்டார்கள். மீண்டும் மீண்டும் நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில்தான் இது முடிவடையும்.

(8) கபிலர் அகவல் தரும் சாதிச் சிந்தனை-அல்ல, கபிலர் அகவல் தரும் சாதிஎதிர்ப்புச் சிந்தனை என்று தலைப்பு அமைந்திருக்கவேண்டும். மணியன் எழுதிய கட்டுரையில் கபிலர் அகவல் மூலத்தையும் தந்து தமதுநோக்கை வெளிப்படுத்தியுள்ளார். அது மிகப் பிற்கால நூல். ஆனால் சாதி எதிர்ப்பைத் தெளிவாக முன்வைக்கும் நூல். இப் பாட்டைக் கூறுபவர் எவர் என்னும் கேள்வி சிந்திக்கத்தக்கது.

(10) புலம்பெயர் இலக்கியம் பற்றிய சிந்தனை இன்று உருவாகியிருக்கிறது. ஆனால் ஆழமாகத் தமிழ்ச்சூழலில் விவாதிக்கப்படவில்லை. எனது கட்டுரை இத்துறை பற்றிய ஓர் அறிமுகமாக அமைந்திருக்கிறது. புலம்பெயர் இலக்கியம் பற்றி விவாதிக்க நிறைய மொழிபெயர்ப்புகள் நம்மிடையே தேவை. இலங்கையைச்சேர்ந்த சிவானந்தனின் கீலீமீஸீ னீமீனீஷீக்ஷீஹ் பீவீமீs நாவலையும்கூட நாம் ஆங்கிலத்தில்தான் வாசிக்கவேண்டியிருக்கிறது. எண்பதுகளின் ஈழப்போராட்டம் பற்றிய மிக முக்கியமான நாவல் அது.

[தமிழ் ஆய்வின் குறைபாடுகள் இத்தொகுப்பிலும் நன்றாகவே வெளிப்படுகின்றன:
நன்கு வாசிக்காமலே பொதுநோக்கில் கட்டுரை எழுதுதல்,
தரவுகளைச் சரிவரத் தராமை,
தகவற்பிழைகள்,
குழுமனப்பான்மையோடு சிலரை மட்டும் மேற்கோள் காட்டுதலும் வலியுறுத்தலும், முன்னரே ஒரு துறையில் எழுதப்பட்டவற்றை மறந்து இன்று எழுதப்படுவனவற்றைப் புதிதாகச் சொல்கிறது எனப் பாராட்டுதல்,
அவசரக்கோலத்தில் போதிய தரவுகளின்றி எழுதுதல்,
அதிகமாக எழுதி வெளியிட்டு அங்கீகாரம் பெற்றுவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுதல்
எனப் பல குறைகள் தமிழ்ச் சூழலில் உள்ளன. இப்படி எழுதுபவர்களிலும் சிலர் என் மாணவர்கள், நண்பர்கள், மதிப்புக்குரியவர்கள். ஆனால் ஆய்வு என்பதன் புறநோக்கு அடிப்படையை அவர்கள் மறந்து விடுகிறார்களே என்பது வேதனைப்படுத்துகிறது.
இலக்கியம் படிப்பவனுக்குப் பரந்த வாசிப்பு இல்லாமல் இருக்கலாம். அது குறையல்ல. விமரிசகனுக்குப் பரந்த வாசிப்பு தேவையெனினும் தான் எடுத்துக்கொண்ட இலக் கியம் பற்றிய அறிவே மிகுதியாக இருக்கலாம். அதுவும் தவறல்ல. ஆனால் ஆராய்ச்சித் துறையில் வருபவன், தனக்கு முன் அத்துறையில் என்ன சாதனைகள் நிகழ்ந்துள்ளன, என்ன என்ன கூறப்பட்டுள்ளன என்பனவற்றை முற்றிலும் நன்கு வாசித்தறிந்த பின் னரே ஆய்வில் ஈடுபட முடியும். இல்லாவிட்டால் ஆய்வுகளே பயனற்றுப் போய்விடும். தமிழ்ச்சூழலில் பெருமளவு இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.]

(13) வேணுகோபாலின் கட்டுரை முதலில் வரலாற்றுப் பாங்கிலும் பின்னர் ஞானி பற்றிய பகுதிக்கு வரும்போது முற்றிலும் புகழ்பாடும் நோக்கிலும் அமைந்துள்ளது. அப்பகுதியைக் குறைத்திருக்கலாம். அல்லது வன்மை மென்மைகளைப் பேசியிருக்க லாம். இந்த மலர் ஞானிக்குப் பாராட்டு மலர் என்று நான் நினைக்கவில்லை. ஒரு பெரிய மாநாடு (செம்மொழித் தமிழ் மாநாடு) நிகழப்போகும் சூழலில் அதற்கு நியாயமான, அறிவார்த்தமான எதிர்வினை என்றே கருதுகிறேன்.

(2 & 3) பஞ்சாங்கம், குளோறியா சுந்தரமதி ஆகியோரின் கட்டுரைகள் நன்கு அமைந்திருப்பினும் முன்னர் தங்களால் எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்ட கருத்து களையே மீண்டும் கூறியிருக்கிறார்கள். சுந்தரமதி புதியதாக எதையும் கூறவில்லை. தொல்காப்பியப் பொருளதிகாரத்தை இன்னும் பலநோக்குகளில் ஆராயவேண்டும் என்பதே கட்டுரை கூறவிரும்புவது என்று முடித்துவிடுகிறார். பஞ்சாங்கம் தொல்காப் பியக் கருத்துகள் சிலவற்றை அமைப்பிய, குறியியல் கருத்துகளோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.

(6) அறவேந்தனின் கட்டுரை இன்னும் ஆழமாக அமைந்திருக்கலாம். குறுந்தொகை ஆய்வில் இதுவரை வெளிவந்த நூல்கள், நல்ல கட்டுரைகள் ஆகியவற்றைப் பட்டிய லிட்டுக் கூறியிருந்தால் சிறப்பு. பின்வருவோர்க்கு-குறிப்பாக ஆய்வு மாணவர்களுக் குப் பயன்படக்கூடியதாக அமைந்திருக்கும். குறுந்தொகையின் ஈற்றடிகள் போன்ற என்னுடைய முன்னோடியான கட்டுரையை அவர் குறிப்பிடவில்லை. அவர் பாராட் டும் பாலசுப்பிரமணியன் நூலின் கருத்துகளும், தலைப்பும்கூட (கட்டுடைத்துக் கோர்த் தல்) எனது பழையதொரு நூலின் தலைப்பை (கவிதைமொழி-தகர்ப்பும் அமைப்பும்) ஒட்டியிருக்கிறது என்பதையும் கூறியிருக்கலாம். வரலாற்று ஆய்வைப் பற்றியே (மௌரியர்/பாடலிபுத்திரம்) இறுதியில் பேசியுள்ளார். அதனை எத்தனையோ அறிஞர் கள் செய்திருக்கிறார்கள். சான்றாக, தமது ஆய்வேட்டில் அறிஞர் பே.க. வேலாயுதம், நந்தர் காலத்தின்பின் மௌரியர் காலத்தில் அமைந்த தமிழக மூவேந்தர் கூட்டணி, அக்கூட்டணி ஏறத்தாழ ஒன்றேமுக்கால் நூற்றாண்டு நிலைத்திருந்த தன்மை, பின்னர் அது வலுவிழந்தமைக்கான காரணங்கள் என்பதையெல்லாம் நன்கு ஆராய்ந்திருக் கிறார். ஏறத்தாழ சங்ககாலத்தின் வரலாற்றைச் சிறப்பாகக் கட்டமைத்துக் காட்டியவர் களில் அவர் ஒருவர். ஆனால் பாவம், அவர் எந்தக்குழுவிலும் இல்லை என்பது அவர் செய்த பாவம்!

(7) பெருங்கற்படைக் காலத்தோடு சங்ககாலத்தை இணைத்துப்பார்க்கமுடியுமா என்பது ஐயத்திற்குரியது. சிலம்பு நா. செல்வராசு ‘வெட்சியும் முல்லையும்-பெருங்கற்படைக் கால இலக்கிய மரபுகள்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். வெட்சியோ முல்லை யோ குறிஞ்சியோ கரந்தையோ-எதுவாயினும் இவை தொல்காப்பியரால் உண்டாக்கப் பட்ட-அல்லது அவருடைய காலத்திற்கு முன்னரே உருவாகியிருந்த இலக்கிய மரபுகள். இவை காலத்தால் பிற்பட்டவை. தமிழ்மொழி மிகச் செம்மையடைந்த பிறகு, தமிழர் கள் நன்கு நாகரிகம் பெற்ற பிறகே உருவானவை. பெருங்கற்படைக்காலம் (மெகாலிதிக்) என்பது காட்டுமனிதர்களுடைய காலம். நாகரிகம் பெறாத காலம். தமிழகத்தைப் பொறுத்தவரை, பெருங்கற்காலம் கி.மு. பத்தாம் நூற்றாண்டு அளவில் முடிந்ததாகக் கருதலாம். அடுத்த பத்து நூற்றாண்டுகளில் தமிழனும் தமிழும் செம்மை பெற்றதன் விளைவே தொல்காப்பியமும் சங்கஇலக்கியமும் என்பது எனது கருத்து. செல்வராசு கூறுவதுபோல கி.மு.9க்கும் கி.மு.3க்கும் (sic-கி.மு. 9ஆம் நூற்றாண்டுக் கும் 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்பதே இப்படிக் குறிப்பிடப் பட்டிருக்கிறது)-வெட்சி முல்லைக் காலமாக ஏற்க இயலவில்லை. நான் வரலாற்ற றிஞன் அல்ல; அதனால் இதை அறிஞர்களின் ஆய்வுக்காக விட்டு விட்டு மேற்செல்கிறேன்.

(1, 4 & 12) இப்போது மூன்று கட்டுரைகளே-மருதநாயகம், விஷ்ணுகுமாரன், யமுனா ராஜேந்திரன் ஆகியோருடையவை எஞ்சியிருக்கின்றன. இவை மூன்றும் இந்நூலில் சிறந்தவை.

(4) விஷ்ணுகுமாரனின் கட்டுரை ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுடையது. அமைப்பியத்தை ஒரு தத்துவமாகவும் கற்கமுடியும். ஒரு ஆய்வுவழிமுறையாகவும் காணமுடியும். இங்கு அமைப்புவழி ஆய்வினைப் புறநானலூற்றினை ஆராயப் பயன் படுத்திக் காட்டியிருக்கிறார். அந்நூலின் தொடர்களை வைத்துப் பதினாறு அமைப்பு களுக்குள் அடக்கலாம் என்கிறார். இம்மாதிரி அமைப்புசார் ஆய்வுகளை ஏ,கே, இராமானுஜன், குளோறியா சுந்தரமதி, ஆலிஸ், (இவர்களுடன் என்னையும் சேர்த்துக்கொள்ளலாம்) போன்றோர் செய்துகாட்டியுள்ளனர். சங்கப்பாக்களைக் கட்டுடைப்போர் எதிர்நிலையிலும் செய்துள்ளனர். இதனை ஏற்கெனவே நாட்டார் வழக்காற்றியலில் பாளையங்கோட்டை சேவியர் கல்லலூரியினர் செய்து காட்டியுள் ளனர். பொதுவாகத் தத்துவநோக்கில் அணுகி வன்மை மென்மை என்று செல்லாமல் ஓர் ஆய்வு நெறிமுறையாக அவர் காட்டியிருப்பதை நமது மாணவர்கள் நன்கு புரிந்து கொண்டு பயன்படுத்த இயலும். ஆய்வுக்குத் தெளிவானதோர் வழிமுறை சொல்ல வேண்டிய அவசியம் இன்று மாணவர்களிடையே உண்டு. சங்க இலக்கிய ஆய்வினை இவ்வாறு பலவழிகளில் முன்னெடுத்துச் செல்லலாம்.

(1) தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் கட்டுரை மதிப்பிற்குரிய பேரா சிரியர் மருதநாயகம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இதனை நன்கு கற்றுணர மிகப் பரந்த மேற்கத்தியத் திறனாய்வு வாசிப்பும் ஆழ்ந்த தொல்காப்பிய அறிவும் தேவை. ஒரு பருந்துப் பார்வையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

தொல்காப்பியப் பொருளதிகாரம் ஒரு கவிதையியல் நூல். அதன் முதல் ஐந்து இயல் கள் எடுத்துரைப்பியல் பற்றியவை. கடைசி நான்கு இயல்களில் விடுபட்ட சில அழகி யல் கோட்பாடுகளையும் மரபையும் பற்றிச் சொல்கிறார்.

செவ்வியம், ரொமாண்டிசிசம் என்னும் உலகளாவிய இருவகை மரபுகளில் தொல் காப்பியம் செவ்வியமரபைச் சார்ந்தது என்பதை முதலில் எடுத்துக்காட்டுகிறார் மருதநாயகம். இது பாராட்டுக்குரியது. தொல்காப்பியம் சங்க இலக்கியத்திற்கு முந்தி யது என்பது ஆசிரியரின் கருத்து. தொல்காப்பியம் சங்ககாலத்தை ஒட்டி அதன் இறுதியில் எழுந்தது என்று வைத்துக்கொண்டாலும், இக்கருத்து தேவையான ஒன்றே. இது கைலாசபதி போன்றோரின் கருத்துக்கு எதிரானது. கைலாசபதி The Tamil Heroic Poetryயில் சங்க இலக்கியம் வாய்மொழி மரபுசார்ந்த செவ்வியநிலை பெறாத வெளிப்பாடு என்றே கருத்துரைத்திருக்கிறார். சங்கஇலக்கியத்தை கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான பாக்களின் தொகுப்பாகக் காணும் நாம், அதுவரையில் தமிழ்மரபு வெறும் வாய்மொழி-பாண மரபாகவே இருந்தது என்று நினைப்பது சாத்தியமில்லை. தொல்காப்பியத்தில் செவ்வியற்கூறுகள் உள்ளன என்பது தமிழின் பழஞ்செம்மை நிலையை உணர உதவும்.

பிறகு டி.எஸ்.எலியட் கூறிய ‘அப்ஜெக்டிவ் காரலேடிவ்’ என்ற வெளிப்பாட்டு முறை சங்கப்பாக்களில் சிறப்புற அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதனை சங்கப்பாக்கள் உதாரணவழி விளக்கியிருப்பின் நன்றாக இருந்திருக்கும். (இது பற்றி முதன்முதலில் எழுத்து இதழிலேயே எழுதிவிளக்கியவர் சி.சு. செல்லப்பா).

பிறகு பிரவுனிங்கின் நாடகத்தனிமொழி பற்றிச் சொல்லிவிட்டுக் கவிஞனின் ஆளுமை பற்றிப் பேசமுனையும்போது டி.எஸ். எலியட் அக்கருத்தைப் பெறக் காரணமாக இருந்த எஃப். எச். பிராட்லிக்கும் அவரது உடனடி அனுபவம் என்னும் அகவய மெய் யியற் கருத்துக்கும் சென்றுவிடுகிறார்.
தொல்காப்பியம் குறிப்பிடும் சுட்டி ஒருவர் பெயர்கொளப்பெறாத கவிதை முறைக்கு ஒப்பேயில்லை. சங்கப்பாக்களின் நாடகத்தன்மை வாய்ந்த படைப்பு முறையை பிரவு னிங்கின் ஃப்ரா லிப்போ லிப்பிக்கும் எலியட்டின் ப்ரூஃப்ராக்கிற்கும் ஒப்பிட்டுப் பாராட்டுவது சிறப்பு. பிரவுனிங்கின், எலியட்டின் பாக்கள் பெயர்சுட்டப்பட்ட தனி மனிதனின் நாடகப்பாங்கான வெளிப்பாடுகள். ஆனால் சங்கப்பாக்கள் இவற்றிற்குக் காலத்தில் எவ்வளவு முந்தியவை? பிரவுனிங் படைத்த சகோதரர் லிப்பி பற்றிப் பின்னரும் பேசியிருக்கலாம்-கலைபற்றிய பிரச்சினைகளுக்காக (கவிதை-அறமுரைத் தலுக்கா, மகிழ்வூட்டலுக்கா என்பதைப் பற்றிப் பேசும்போது) இக்கவிதைக் கருத்தை விவாதித்திருந்தால் பயனுடையதாக இருந்திருக்கும்.

அகப் பாக்கள் அகவய அனுபவங்களைச் சித்திரிப்பவை என்பதைவிட ஒரு மரபைக் கைவிடாமல் போற்றுபவை என்பதுதான் சிறப்பு. அகவய அனுபவங்கள் நோக்கமாக இருந்திருப்பின் காதல் கொள்ளும் சமயம்தொடங்கி அதிகபட்சமாக முதல்குழந்தை யைச் செவிலி காணவரும் காலத்தோடு ஆண்-பெண் அனுபவங்களை வரையறைப் படுத்த வேண்டிய அவசியமில்லை.
தமிழ்க் கவிஞர்கள் எளிய இயற்கைக் காட்சியுருக்களைப் பயன்படுத்த வல்லவர்கள் என்பது தெளிவு. அதனை விளக்க, பழங்கால ஐரோப்பிய வழக்கமான தீமீணீக்ஷீதீணீவீtவீஸீரீ என்பதை ஷேக்ஸ்பியர் சிறப்பாகக் கையாண்டுள்ளதனோடு ஒப்பிட்டுக்காட்டுகிறார். கடைசியாகக் கவிதை எவ்வாறிருக்க வேண்டும் என்பது பற்றியும் கவிதைமொழி பற்றியும் தொல்காப்பியர் கூறியுள்ள அளவைகள் ரிச்சர்ட்ஸ் தொடங்கி அண்மைக் காலப் புதுத்திறனாய்வாளர்கள் கூறியுள்ளவற்றிற்கு ஒத்துச் செல்லுதலை ஆசிரியர் எடுத்துக் காட்டுவது சிறப்பாக அமைந்துள்ளது.
புதுத் திறனாய்வாளர்களின் ஆய்வுமுறைக்கு ஒத்த “நோக்கு” என்ற கருத்தைப் பற்றித் தொல்காப்பியர் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி முதன்முதலில் அழுத்திக் கூறியவர் தமிழண்ணல் என்பது என் ஞாபகம்.

மருதநாயகத்தின் கட்டுரையின் கருத்துகள் பல்வேறு சமயங்களில் பலரால் முன்னரே சொல்லப்பட்டவை என்றாலும், தொடர்ச்சியான நோக்கில் தொல்காப்பியத்தின் பல்வேறு கூறுகளையும் விட்டுவிடாமல் அவை தொடர்பான ஆங்கிலத் திறனாய்வுக் கருத்துகளை ஒப்பிட்டுச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளது.
போகும் போக்கில் சங்க இலக்கியத் தலைவர்கள் யாவரும் வீரர்கள், தலைவியர் யாவரும் அழகியர் என்று ஒரு கருத்தைச் சொல்கின்றார் ஆசிரியர். சங்க இலக்கியத்தைப் படித்தபோது இவ்வாறான ஓர் உணர்வு எனக்கு ஏற்படவில்லை. தலைவன் வீரனோ, வியாபாரம் செய்பவனோ-தலைவி அழகானவளோ அழகற்றவளோ அவர் களுக்கிடையிலான அன்பு வாழ்க்கைதான் அதில் பேசப்படுகிறது. பெரும்பாலான தலைவன் தலைவியர் மேல்தர வாழ்க்கையைச் சேர்ந்தவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம். மீண்டும் இப்பண்பும் செவ்வியத்தன்மைக்கே இட்டுச் செல்லக்கூடியது.
(ஓர் அடைப்புக்குறி இடப்படாமை (ப.209) பொருள்மயக்கத்தைத் தோற்றுவித்து விடுகி றது. The Well Wrought Urn  என்ற தொடர் அடைப்பில் இருக்கவேண்டும். இல்லை எனில் அதுஒரு கவிதையின் பெயர் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும்.)

ஆகவே கடைசிநோக்கில் ஆங்கிலம் நன்கு அறிந்தவர்களுக்கே இந்தக் கட்டுரை பயன் தருவதாகிறது. ஆங்கிலம் அறியாதவர்களுக்கும் பயன்தருமாறு எழுதினால் நலம் பயக் கும். உதாரணமாக கிளெந்த் புரூக்சின் ‘தி வெல்ராட் அர்ன்’ நூலையோ (குறிப்பாக paradox கவிதையின் உயிர் என்று விளக்கும் அதன் முதல் இயல் முக்கியமானது), நீண்ட கவிதை என்பது இருக்கவே இயலாது என்று வாதிடும் எட்கர் ஆலன்போ-வின் ‘தி ஃபிலாசஃபி அவ் காம்போசிஷன்’ என்னும் கட்டுரையையோ மொழிபெயர்த்து அளிப்பது நம் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும்.

மேலும் சில அடிக்குறிப்புகள் தந்திருந்தால் ஆய்வாளர்க்கும் மிகவும் பயனுடையதாக இருந்திருக்கும். உதாரணமாக “புளூம்பீல்டு, சாம்ஸ்கி போன்றோரின் கவனத்தை தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும் ஓரளவு கவர்ந்தன” என்று கூறுகின்றார். எந்த நூலில், எந்தப் பக்கத்தில் என்ற குறிப்பைத் தருவது நன்று. அதேபோலத் தமிழில் முதன்மையாக எழுதுவோரின் நூல் தலைப்புகளை ஆங்கிலத்தின் மொழி பெயர்ப்புகளாகக் குறிப்பிடாமல் (வ.சுப.மாணிக்கம், தமிழண்ணல் போன்றோரின் நூல்கள்) தமிழ்த் தலைப்புகளிலேயே குறிப்பிட்டிருக்கலாம் (The Tamil Concept of Love என்பதைவிடத் ‘தமிழ்க்காதல்’ நூல் பலருக்கும் அறிமுகம்).

மருதநாயகத்தின் கட்டுரை எழுத்துப்பெயர்ப்பிலும் பிரச்சினைகளை உருவாக்குகிறது. பிரா லிபோ லிபி (Fra Lippo Lippi), புரூச்சு (Brooks), சான்சன் (Johnson), ரிச்சர்ட்சு (Richards) போன்ற எழுத்துப்பெயர்ப்புகள் சற்றே சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. டகரத்திற்குப் பக்கத்தில் வரும் சகரத்திற்கு ஒலிப்பற்ற ஒலியே உண்டு. அதை ஸகரமாக ஒலிக்கஇயலாது. (Richards in English becomes Richardchu in Tamil). (குறிப்பாக சுயேச்சை-சுய+இச்சை போன்ற சொற்களை யெல்லாம் ‘சுயேட்சை’ என எழுதுகின்ற தற்கால நிலையையும் இன்று கருதுகிறேன்.) அறிஞர்கள் கூடி தமிழில் ஒலிபெயர்ப்பு, எழுத்துப் பெயர்ப்பு பற்றி ஓர் ஒருமைப்பாட்டுக்கு வரவேண்டும். இப்படிப் பொதுநிலையில் செய்யவேண்டியவை எத்தனையோ உள்ளன. இவற்றை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களோ, அடுத்தபத்துநாட்களில் நிகழவிருப்பது போன்ற அறிஞர்கள் கூடும் மாநாடுகளும்தான் செய்ய இயலும். மாறாக இவை என்ன செய்கின்றன?

(12) கடைசியாக யமுனா ராஜேந்திரனின் கட்டுரை. ‘வரலாறும் கருத்துலகமும்-தமிழில் இரண்டு உலக நாவல்கள்’ என்பது அவரது தலைப்பு. இன்று தமிழிலும் பிறநாட்டு வாழ்க்கையை மையமாகக்கொண்டு நாவல்கள் என எழுதப்படுகின்றன. தமிழ்நாட்டிலி ருந்து போலந்திற்கு ஆசிரியப் பணிக்கெனச் சென்ற இந்திரா பார்த்தசாரதியும் தமிழவ னும் அப்படிப்பட்ட இரண்டு நாவல்களை (ஏசுவின் தோழர்கள், வார்ஸாவில் ஒரு கடவுள்) எழுதியிருக்கிறார்கள். இரண்டிற்கும் கால இடைவெளி இருபதாண்டுகள். முதல் நாவல் 1987இலும், அடுத்தது 2007இலும் வெளியாகியிருக்கின்றன. இரண்டிற் கும் இடைப்பட்ட காலவெளியில் சோவியத் அமைப்பு வீழ்ந்து விட்டது. போலந்து கம்யூனிசத்திலிருந்து விடுபட்டு ஐரோப்பியக் கூட்டணியில் சேர்ந்து விட்டது.

இந்த இரண்டு நாவல்களையும் பற்றிக் கருத்துரைக்கவரும் யமுனா ராஜேந்திரன், வேறு ஐந்து தென்னாசிய நாவல்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறார். இவை, அருந்ததிராய் எழுதிய God of  Small Things, பங்கஜ்மிஸ்ரா எழுதிய The Romantics, அரவிந்த அடிகா எழுதிய The White Tiger, மைக்கேல் ஒண்டாட்ஜி எழுதிய Anil’s Ghost, சிவானந்தன் எழுதிய When Memory Dies ஆகிய நாவல்கள். சுருக்கமாகக் கூறினால், இவற்றுள் அருந்ததி ராயின் நாவலும், சிவானந்தனின் நாவலும் மேற்குலக விற்பனையை முன்நிறுத்தி எழுதப்படாதவை, கலைத்தன்மை கூடியவை. மைக்கேல் ஒண்டாட்ஜியின் நாவலும் ஓரளவு அப்படிப்பட்டதுதான். அடிகாவின் நாவலும் பங்கஜ் மிஸ்ராவின் நாவலும் மேற்குலக விற்பனையை முன்னிறுத்தி எழுதப்பட்டவை, கலைத்தன்மை குறைந்தவை என்பது யமுனா ராஜேந்திரனின் மதிப்பீடு.

அருந்ததி ராயின் God of Small Things, கேரள சிரியக் கிறித்துவ வகுப்புக்குடும்பம் ஒன்றின் அதிஉயர் சாதி ஒழுக்கம், அதில் சாதிக்கலப்பு ஏற்படுதல், அதன் காரணமாக அடித்தட்டு மக்கள் கொல்லப்படுவது, அக்குடும்பத்தில் ஏற்படும் தளர்ச்சி, பின்வரும் தலைமுறைகள்-குறிப்பாக இரட்டையர் இருவர் வாழ்க்கை நாசமாகிப்போவது என்பதையெல்லாம் சித்திரிக்கிறது.

பங்கஜ் மிஸ்ரா எழுதிய நாவலில் கிராமத்தில் பிறந்த பிராமண இளைஞன், வாரா ணசியில் தன் வாழ்க்கையை நிறுவிக்கொள்ளமுற்படும்போது தற்செயலாக ஏற்படும் மேற்கத்திய மக்களின் தொடர்பு, அவர்களுடன் ஏற்படும் பாலியல் தொடர்பு, பின்னரும் அவன் நிலைபெறாமல் தன்வாழ்க்கையைத் தேடி அலைதல் போன்றவை சொல்லப்படுகின்றன.

அரவிந்த அடிகா எழுதிய நாவலில் ஒரு கீழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவன் பிழைப்பிற் காக தில்லிவந்து டிரைவராக வேலை செய்யும்போது தனது எஜமானனையே கொன்று விட்டு அவன் பணத்தைக் கவர்ந்து பெங்களூருக்கு வந்து ஒரு பெரு முதலாளி ஆகிவிடுகிறான். இந்தியாவுக்கு, பெங்களூருக்கு வரும் சீனப்பிரதமருக்குத் தன் வாழ்க்கையைக் கடிதமாக எழுதுகிறான்.

மைக்கேல் ஒண்டாட்ஜி சிங்களர். அவர் கதாபாத்திரங்களும் சிங்களர்களே. அனில் என்ற பெண்-நீச்சல் வீராங்கனை-புலம்பெயர்ந்து மேற்கில் வளர்ந்து ஈழத்திற்குத் தொல்பொருளாய்வாளராகத் திரும்புகிறாள். தற்செயலாக அவள் கண்டெடுக்கும் ஒரு எலும்புக்கூடு யாருடையது என்ற ஆராய்ச்சி அரசியல் தலைமையை பாதிக்கக் கூடியது என்பதனால் இடைஞ்சலுக்கு ஆளாகித் தன் நண்பனின் உதவியால் தப்பிச் செல்கிறாள். இதில் சிங்களருடைய நோக்கில் ஈழத்துப்போர் நோக்கப்படுகிறது.

சிவானந்தனின் நாவல் ஈழத்தில் மூன்று தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் அவலத்தைப் பேசும் நாவல். அறுபதுகள் முதல் எண்பதுகள் வரை ஈழப்போராட்டம் இதன் பின்னணியாக அமைந்திருக்கிறது.

இந்த நாவல்கள் அனைத்திலும் மேற்கு-கிழக்கு வாழ்க்கை ஊடாட்டம் பிரதானம் பெறுகிறது. இன்று போலந்து நாவல்கள் ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்படும் நிலையில், இந்திரா பார்த்தசாரதி, தமிழவன் ஆகியோரின் நாவல்கள் தமிழில் எழுதப் பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை என்றாலும் அவையும் ஐரோப்பாவில் பல மொழிகளுக்குச் செல்லும் வாய்ப்பிருக்கிறது.

இவை இரண்டுமே சுய அனுபவம் இன்றி-போலந்து மக்களின், குறிப்பாக அவர்களில் அடித்தட்டு மக்களைப் பற்றிய நேரடி அனுபவம் இன்றி ஒரு பொதுப் பார்வை யில் எழுதப்பட்டதால் கலைத்தன்மை குறைந்து காணப்படுகின்றன என்பது யமுனா ராஜேந்திரனின் மதிப்பீடு. இவற்றிலும் இந்திரா பார்த்தசாரதியின் நாவல், தமிழவனின் நாவலைவிடச் சற்றே மேலானது என்ற அளவில் அவருடைய மதிப்பீடு அமைந்துள் ளது. இதனைச் சற்றே இடைஞ்சலான மொழியில்-பற்பல விஷயங்களுக்கிடையே சொல்லி முடித்திருக்கிறார் யமுனா ராஜேந்திரன். அவருடைய மதிப்பீடுகள் ஏற்புடை யவைதான்.

தமிழிலக்கியம் பற்றிய ஒரு முழுப்பார்வையை தமிழ்மலர் தொகுப்பிலுள்ள கட்டுரை கள் அளிக்கவில்லை. இடைக்கால இலக்கியங்களில் கபிலர் அகவல் தவிர ஏனைய வை பற்றிக் குறிப்புகள் கூடக் கிடையாது. குறிப்பாகக் காப்பியங்கள் பற்றியோ பக்தி இலக்கியம் பற்றியோ எந்தக் கட்டுரையும் இல்லை என்பது வருத்தம் தருவது. விமரிசனங்கள் அல்லது ஆய்வுரைகள் பாராட்டாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றி நுணுக்கமான கருத்தளிப்பு கள் உள்ளன. பிற சில இலக்கியப்பகுதிகள் தொடப்பட்டுள்ளன. நூல் அரங்கும், நினைவுக் குறிப்புகளும் வரலாற்று நோக்கில் எதிர்கால நோக்கர்களுக்கும், ஆய்வாளர் களுக்கும் பயன்படக்கூடியவை.
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


வேர்களின் பேச்சு

வேர்களின் பேச்சு

(இந்தப் பெயர்கொண்ட சிறுகதைத் தொகுப்பு 2009இல் அடையா ளம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தபோது எழுதிய மதிப்புரை.)

meeranநாஞ்சில்நாடு தமிழுக்கு வழங்கியிருக்கும் சிறந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ என்ற நாவல் வழி தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகமாகி, ‘சாய்வுநாற்காலி’ போன்ற நாவல்களை எழுதியவர். சாகித்திய அகாதெமி உட்படப் பல பரிசுகளைப் பெற்ற இவரை அறிமுகம் செய்யத் தேவை யில்லை. இவரது சிறுகதைகளின் முழுத் தொகுப்பு ‘வேர்களின் பேச்சு’. முன்னர் ஆறு சிறுகதைத் தொகுப்புகளாக வெளி வந்தவை.

தமது எழுத்துகளில் மீரான் ஒரு பெரிய ஜாலமே செய்கிறார். என்ன அற்புதமான கவிதை ததும்பும் நடை! பல கதைகளின் தலைப்புகளே கவித்துவமாக உள்ளன. மீரானின் சிறுகதைகளில், நாவல்களைவிட மலையாளக் கலப்பு குறைவு. முஸ்லீம்களின் வட்டாரமொழிக் கலப்பு உண்டு. ஆனால் அது எவ்விதத்திலும் இக் கதைகளின் சுவாரசியத்தைக் குறைக்கவில்லை.

மீரான் பெரிய உலகளாவிய பிரச்சினைகளில் ஈடுபடுவ தில்லை. தமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி அறவே எழுது வதில்லை. தமது கிராமம். அதில் வசிக்கும் முஸ்லீம் மக்கள். அவர்கள் படும் பாடு, அவர்களின் மூடநம்பிக்கைகள். அவ்வளவு தான் அவரது உலகம். அவர்களைப் பற்றிய மிக நுட்பமான பதிவுகளை அளிக்கிறார். மீரானிடம் ஒரு ரொமாண்டிக் தன்மையும் இருக்கிறது. பழையதன் மீதுள்ள நாட்டம், தீமைகளுக்குத் தண் டனை காத்திருக்கிறது என்ற நம்பிக்கை. அவ்வப்போது வேடிக்கை யாக பேய்கள், ஜின்களும் வருகின்றன. மனிதர்களுக்கு புத்தியும் சொல்கின்றன பேய்கள்!

அவரைச் சுற்றியுள்ள சமூகத்தின் ஆதரவற்ற மனிதர்களின்-ஆனால் இச்சமூகத்தின் வேராக இருப்பவர்களின் உணர்ச்சிகள் அவரை பாதிக்கின்றன. அதைத்தான் அவர் தமது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்: வேர்களின் பேச்சு!

தமது சமூகத்திற்கு வெளியே சென்று அவர் எழுதியுள்ள கதைகள் மிகக் குறைவு. அவற்றில் குறிப்பிட வேண்டிய முக்கிய மான கதை ‘மிஸ்டர் மார்ட்டின்’. எவ்வளவு நைச்சியமாக நமது கிராமங்களின் உள்ளே நுழைகிறார்கள் உலக முதலாளிகள் என் பதை அழகாக வெளிப்படுத்தும் கதை. ‘ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்’ மிக மென்மையாக நமது நகர்ப்புற மனப்பான்மை யால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைப் பதிவுசெய்யும் கதை.

சிறிய வெற்றிகளில் அகமகிழ்ந்து போய்விடாமல் மிகச் சரியான முறையில் பதிவு செய்தலும் தகவல்கள் மீது துல்லிய மான கவனம் செலுத்துதலும் மீரானை மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆக்கியிருக்கின்றன. தொடக்க காலத்தில் அவர் முஸ்லிம் இதழ்களிலேயே எழுதிய சிறுகதைகளிலும் ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய அக்கறை-குறிப்பாக வேறு வழியின்றிப் பணியில் ஈடுபடுத்தப்படும் சிறுவர் சிறுமியரைப் பற்றிய கவனம் ஆழமாக வெளிப்படுகிறது.

சற்றுப் பிந்திய கதைகளில் முதியவர்கள் ஆதரவின்றிப் படும் வேதனைகளும், நடுத்தர வயதுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கப் படும் அவதிகளும், சிறியவர்கள் தங்களை ஆளாக் கிய முதியவர்கள் மீது காட்டும் அவமதிப்புகளும் போன்ற விஷயங்கள் முதலிடம் பெறுகின்றன. சமயமோதல் பற்றிய குறிப்பு அபூர்வமாக ஓரிரண்டு கதைகளிலேயே வருகிறது. மற்றப்படி மீரான் காட்டும் இஸ்லாமிய சமூகத்தினர், தாங்கள் சிருஷ்டித்துக் கொண்ட ஒரு வட்டத்திற்குள் அதன் படிநிலைகளுக்குள் ஏற்றத் தாழ்வுகளுக்குள் வெந்து நொந்துகொண்டோ சந்தோஷமாகவோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிற சமயத்தினர் பற்றிய பதிவுகள் மிகக் குறைவு என்றாலும் அவர்களுள் ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்ட முஸ்லிம் முதியோர் மீது காட்டும் பரிவு ஓரிரு கதைகளில் மிக நன்றாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகாலக் கதைகள் சில மிதமிஞ்சிய உணர்ச்சியைக் கையாண்டாலும், ஒரு செய்தியாளனின் பார்வையில் கதையைச் சொல்கிற மீரானின் நடை, பிரச்சின களைக் கூர்மையாக வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாத ஒரு சமூகத்திற்குள் நுழைந்து அவர்களின் வாழ்க்கைகளைச் சந்திக்கும் அனுபவத்தைச் சிறப்பாகத் தருகிறார் முகமது மீரான். அடையாளம் பதிப்பகம் மிகச் சிறப்பான கட்டமைப்பில் இந்த நூலை வெளியிட்டுள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. மொத்தத்தில் தமிழ்ச் சிறுகதை உலகிற்கு ஓர் அருமையான பங்களிப்பு.