புதிய நூல் – தமிழ்ப் பொழில் ஆய்வு

குறிப்பு:
1980களில் தொடக்கத்தில் நான் தமிழ்ப்பொழில் என்ற தமிழ் ஆய்விதழை என் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கென ஏற்றேன். அதைப் பற்றிய கட்டுரைகளையோ அந்த ஆய்வேட்டையோ நான் நூலாக இதுவரை வெளியிட வில்லை. அவற்றை இப்போது வெளியிட முனைகிறேன். இப்பகுதி, ஆய்வேட்டின் முதற் பகுதியான முன்னுரையாக அமைந்தது.

தமிழ்ப் பொழில் ஆய்வு-முன்னுரை

ஆய்வுப் பொருள்

இதழ்கள் பலவகை. அவற்றுள், இலக்கிய இலக்கண ஆய்வுக்கென இயங்கும் இதழ்கள் ஒருவகை. இம்மாதிரி இதழ்களில் ஒன்று, ‘தமிழ்ப்பொழில்’. இந்த இதழைப் பற்றியது இந்த ஆய்வு. தமிழ்ப்பொழில், தஞ்சாவூரின் ஒரு பகுதியான கரந்தையில் (கருந்தட்டான்குடியில்) விளங்கும் தமிழ்ச் சங்கத் திலிருந்து குரோதன ஆண்டு சித்திரைத்திங்கள் (1925 ஏப்ரல்) முதல் வெளிவரலாயிற்று. இன்றுபோல் இதழ்கள் பல்கிப் பெருகாத காலத்திலிருந்தே இந்த இதழ் தமிழியல் ஆய்வுக்கென உழைத்து வந்துள்ளது.1 இது ஓர் தமிழியல் ஆய்விதழ் என்பதனால் இந்த இதழ் தமிழ் ஆய்வுக்கு ஆற்றிய பணி இங்கு ஆய்வுப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. சுருக்கமாக இதனைத் ‘தமிழ்ப் பொழில் தந்த தமிழ் ஆய்வு’ என்று பெயரிடலாம். தமிழ்ப் பொழில் இதழ்வழி வெளிப்பட்ட ஆய்வுப்பொருள் (முதன்மையாக இலக்கிய, இலக்கண ஆய்வு), ஆய்வு முறை, ஆய்வுப்போக்குகள் ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாக இங்கு இது ஆளப் படுகிறது.

ஆய்வுத் தேவை
தமிழில் இலக்கிய இலக்கண ஆய்வுக்கென நடத்தப்படும் இதழ்கள் மிகக் குறைவு. வணிக நோக்குடன் வெளிவரும் இதழ்களின் நோக்கம் மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவதாக மட்டுமே இருக்கிறது. அவை இலக்கண இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டால் அவற்றின் விற்பனை குறைந்துபோகும் என்ற வணிக நோக்கு காணப்படுகிறது. புத்திலக்கியத் தோற்றத்துக்கு உதவும் இதழ்க ளும் பழைய இலக்கண இலக்கிய ஆய்வுகளைப் பொருட் படுத்துவதில்லை. இப்படிப்பட்ட சூழலில், ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்ப்பொழில் இதழ், பொருள் பற்றாக்குறை ஒருபுறம் இருநதபோதிலும், தமிழியல் ஆய்வுக்கெனத் தொடர்ந்து இயங்கி வருகிறது.2 இதுவரை இந்த இதழின் பணி பற்றிய எவ்விதக் கட்டுரைகளும் ஆய்வுகளும் வெளிவரவில்லை. தமிழ் இதழ்கள் பற்றி ஆய்வாளர்கள் வரைந்துளள கட்டுரைகளில் ஆங்காங்கு இந்த இதழ் பற்றிய குறிப்புகள் சில உள்ளன.

ஐம்பதாண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வருவதால் இந்த இதழ் ஆய்வாளர்களின் பார்வைக்கு உரியதாகிறது. ஏறத்தாழ இரண்டு தலைமுறைத் தமிழியல் ஆய்வுக்களத்தில் தமிழ்ப் பொழில் இதழின் கொடை என்ன, இந்தக் கொடை எந்த அளவு தமிழ் ஆய்வுக்களத்தில் விழிப்புணர்ச்சியோ தாக்கமோ பலனோ ஏற்படுத்தியிருக்கிறது என்பதைக் காண்பது அவசியம். இனிமேல் இந்த இதழின் எதிர்காலம் என்ன என்னும் வினாவும் இயல்பாகவே எழக்கூடியது. இந்த வினாக்களுக்கு விடைகாணும் முயற்சி இந்த ஆய்வு என்று கொள்ளலாம்.

ஆய்வு எல்லை
இந்த ஆய்வினைத் தொடங்கியபோது (1982), தமிழ்ப்பொழில் ஐம்பதாண்டுகளைக் கடந்திருந்தது. ஐம்பத்துநான்காம் ஆண்டில் நடையிட்டுவந்தது. எனவே ஐம்பதாண்டுகளுக்குரிய தமிழ்ப் பொழில் இதழ்கள் மட்டும் இந்த ஆய்வுக்கான மூலமாகக் கொள்ளப்பட்டன.

தமிழ்ப்பொழிலின் பன்னிரணடு மாத இதழ்களின் தொகுப்பு ஒரு ‘துணர்’ எனப்படுகிறது. ஆகவே இந்த ஆய்வின் எல்லை, தமிழ்ப்பொழிலின் முதல் ஐம்பது துணர்கள்.

ஆய்வுநோக்கம்
இந்த ஆய்வின் நோக்கங்களாகப் பின்வருவனவற்றைக் கொள்ளலாம்.
1. முதல் ஐம்பது துணர்களில் வெளிவந்த கட்டுரைகளைப் பகுத்து, அவற்றைப் பற்றிய தகவல்களை முறைப்படுத்துதல்.
2. இக்கட்டுரைகளை அடைவு படுத்துதல்; இவற்றில் சிறப்பானவற்றை எடுத்துக் காட்டுதல்; அதனால் இவற்றை ஆய்வுலகிற்குப் பயன்படுமாறு வெளிப்படுத்துதல்.
3. இக்கட்டுரைகளில் காணப்படும் புதிய செய்திகளை வெளிப்படுத்துதல்.
4. இக்கட்டுரைகளின்வழி பெறப்படும் ஆய்வுமுறைகள் சிறப்பாக இருப்பின் அவற்றை எடுத்துககாட்டுதல்.
5. இக்கட்டுரைகளின் ஆய்வுப்போக்குகளை எடுத்துக்காட்டுதல்.
6. இவ்வாறு பெற்ற ஆய்வுச் செய்திகள், ஆய்வுப்போக்குகள், ஆய்வுமுறைகள் ஆகியவற்றை பொதுவான தமிழ் ஆய்வுப் பின்னணியில் மதிப்பிடுதல்.
7. ஆய்வுப்பணிகள் தவிர, தமிழ்ப்பொழில் செய்துள்ள தமிழ் மேம்பாட்டுப் பணிகளையும், அது மேற்கொண்ட போராட்டங்க ளையும் தமிழ்ச் சமூகப் பின்னணியில் எடுத்துக்காட்டுதல்.
8. தமிழ்ப்பொழில் இதுவரை கடந்துவந்த பாதையை மதிப்பிடுதல். அதன்வழி இனி அது மேற்கொள்ளவேண்டிய செய்திகளை எடுத்துரைத்தல்.

தமிழ்ப்பொழில் உள்ளடக்கம்
தமிழ்ப்பொழிலில் இடம்பெற்ற படைப்புகளைப் பின்வருமாறு பகுக்கலாம்.
1. தமிழ்ச் செய்திகள்
2. புதுப்படைப்புகள்
3. தமிழ் ஆய்வுக்கட்டுரைகள்
4. பொதுவான கட்டுரைகள்
5. தமிழ்நூல் பதிப்புகள்
இவற்றைப் பற்றி வரிசையாகக் காணலாம்.
1. தமிழ்ச் செய்திகள்
இவற்றை
அ. கரந்தைத் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்புடைய செய்திகள்
ஆ. தமிழ் தொடர்பான பிற செய்திகள்
இ. பொழிற்றொண்டர் கருத்துரைகள்
ஈ. பொழிற்றொண்டர் நூல் மதிப்புரைகள்
எனப்பகுத்து நோக்கலாம்.

அ. கரந்தைத் தமிழ்ச் சங்கம், இராதாகிருட்டினன் தொடக்கப் பள்ளி, உமாமகேசுவரன் மேல்நிலைப்பள்ளி, கரந்தைப் புலவர் கல்லூரி, திக்கற்ற மாணவர் இல்லம் ஆகியவற்றை நடத்தி வருகிறது. இந்த நிறுவனங்களைப் பற்றிய செய்திகளும் விளம்பரங்களும் தமிழ்ப்பொழிலில் இடம்பெற்றுள்ளன. மேலும், கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டுவிழாக்கள், கரந்தைக் கல்லூரியைச் சேர்ந்த இளங்கோவடிகள் தமிழ்க் கழக விழாக்கள் ஆகியவை பற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளன.

கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாக்களில் அறிஞர்கள் சொற் பொழிவாற்ற வரும்போது அவர்களுக்கு அளித்த வரவேற்புரைகள், வாழ்த்துரைகள், வாழ்த்துப் பாக்கள் ஆகியனவும் வெளியிடப் பெற்றுள்ளன.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்புடையோர், உயர் பதவி கள், பட்டங்கள், சிறப்புகள் முதலியவற்றைப் பெறும்போது ‘மகிழ்ச்சி’ என்னம் தலைப்பில் அச்செய்திகள் வெளியிடப்பட்டன. சங்கத்துடன் தொடர்புடையோர் எவரேனும் மறைந்தால், அச்செய்தி ‘துயரம்’ என்னும் தலைப்பில் இடம்பெறும். சிலசமயங்களில் கையறுநிலைப் பாக்களும் இடம்பெறுவது வழக்கம்.

ஆ. ஏனைத் தமிழ்ச் சங்கங்கள், தமிழ் வளர்ச்சி அமைப்புகள், தமிழாசிரியர் கழகங்கள் போன்ற அமைப்புகள் தரும் செய்திகள் பிற செய்திகள் என்பதில் அடங்கும். மேற்கண்டவை ஆற்றும் தமிழ்ப்பணிகள், அவற்றின் அறிவிப்புகள், விளம்பரங்கள் போன்றவையும் இடம்பெறும்.

இ. தமிழ்ப் பொழிலின் ஆசிரியர், பொழிற்றொண்டர் (பொழில் + தொண்டர்) எனப்பட்டார். தமிழ் ஆக்கம் தொடர்பான செய்திகள், தமிழகம் பற்றிய செய்திகள், இந்திய, உலக நடப்புப் பற்றிய செய்திகள் என எதைப் பற்றியும் பொழிற்றொண்டர் அல்லது பொழிலாசிரியர் வரையும் கருத்துரைகள் பொழிற்றொண்டர் கருத்துரைகள் எனப்படும். இவை பிற இதழ்களின் தலையங் கங்கள் அல்லது ஆசிரியவுரைகள் போன்றவை.

ஈ. பொழிற்றொண்டர் நூன்மதிப்புரைகள்
தமிழ்ப் பொழிலில் வெளிவந்த நூல் மதிப்புரைகள் இரு வகைப்படும். ஒன்று, பொழிலாசிரியர் தாமே ஒரு நூலுக்கு வழங்கிய மதிப்புரை; மற்றது, பிறர் எவராயினும் ஒரு நூலை மதிப்பிட்டு எழுதிய மதிப்புரை. இவை சிறப்பாக இருப்பின், கட்டுரை வடிவில் எழுதப் பட்டிருப்பின் கட்டுரைப் பகுதியில் இடம்பெறும். குறிப்புரைகளாக இருப்பின் தமிழ்ச் செய்திகள் என்பதில் இடம்பெறும்.

பொழிற்றொண்டரின் நூல் மதிப்புரைகள், இரண்டு மூன்று வரிகள் முதலாக ஓரிரு பத்திகள் வரை செல்லும். இவற்றில் நூல் பற்றிய மதிப்பீடு இருக்காது. நூலினை வெளியிட்டோர் பற்றிய குறிப்பு, நூலாசிரியர், ஆண்டு, விலை, நூல் கூறும் சுருக்கமான பொருள் ஆகியவை பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.

இந்த ஆய்வேட்டில் இவை தமிழ் ஆய்வுக் கட்டுரைகளாக ஏற்கப்படவில்லை.

ஆ. புதுபபடைப்புகள்
கவிதைகள், நாடகங்கள், படைப்புக் கட்டுரைகள், அறவுரைக் கட்டுரைகள், வாழ்வியற் கட்டுரைகள், தமிழ்நேயக் கட்டுரைகள், பிற கட்டுரைகள் என அனைத்தும் புதுப படைப்புகள் என்று கொள்ளப்பட்டுள்ளன.

இ. தமிழியற் கட்டுரைகளும் பதிப்புகளும்
தமிழ்ப்பொழிலில் வெளிவந்த தமிழியற் கட்டுரைகளைப் பின்வருமாறு பகுக்கலாம்.

க. இலக்கியக் கட்டுரைகள்
கா. இலக்கணக் கட்டுரைகள்
கி. தமிழக வரலாற்றுக் கட்டுரைகள்
கீ. தமிழ்ப் பண்பாட்டுக் கட்டுரைகள்
கு. கலைச் சொல்லாக்கக் கட்டுரைகள்
தமிழ்ப் பொழிலில் வெளியான படைப்புகள் இருவகை.
ங. பழைய நூல் பதிப்புகள், பழம்பாடல் பதிப்புகள்
ஙா. கல்வெட்டு வெளியீடுகள்

இவற்றில் அனைத்தும் ஆய்வாக உள்ளவை என்று கொள்ள முடியாது. இவற்றில் ஆய்வு£க உள்ளவை, தமிழ்ப் பொழிலின் ஆய்வு பற்றிய இந்த ஆய்வேட்டின் பொருளாகக் கொள்ளப்படுகின்றன. பிற கொள்ளப் படவில்லை. தமிழ்ப் பொழிலின் இலக்கியக் கட்டுரைகள் அனைத்தையும், இலக்கியக் கட்டுரைகள், இலக்கணக் கடடுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள் என மூன்று பெரும்பரிவுகளில் அடக்கிவிடலாம்.4

இந்த ஆய்வேட்டின் ஆய்வுமுறை
ஆய்வுமதிப்பீட்டு நோக்கு முதல் இடத்தைப் பெற்றாலும் அது இறுதியில் நிகழ்வது. கட்டுரைப் பொருள் பகுப்பு நோக்கு எல்லாவற்றுக்கும் அடிப்படை யானது. காலப்பகுப்பு நோக்கும் கையாளப்பட்டுள்ளது. தேவைப்படுமிடங்களில், புள்ளிவிவர நோக்கு, சமூகவியல் நோக்கு இரண்டும் ஆளப்பட்டுள்ளன.

ஆய்வு மதிப்பீட்டு நோக்கு
இலக்கியமோ, இலக்கணமோ எத்துறைக் கட்டுரை ஆயினும் அது ஆராய்ச்சி சார்ந்ததா, ஆராயச்சியற்றுக் கூறியது கூறலாக எழுதப்பட்டதா என்பது முக்கியமானது. இவ்வாறு பகுத்து நோக்குவதை ஆய்வு மதிப்பீட்டு நோக்கு எனலாம். பலவேறு அறிஞர்களும் பொதுவாக ஆய்வு என்ற சொல்லுக்குச் சுட்டியுள்ள பொருளே இங்கு ஆய்வு என்பதற்குக் கொள்ளப்படுகிறது.5
ஒரு துறையிலுள்ள புலமையின் காரணமாக அத்துறையில் காணப்படும் சிக்கல்கள் ஆராய்ச்சியாளன் கண்ணில் படுகின்றன. ஒரு சிக்கலை எடுத்து, அதற்கான கருதுகோளை அமைத்துக்கொள்ளும் நிலை வரை தேடல் (சர்ச்) எனலாம். பின்னர் அக்கருதுகோளை ஆய்வாளன் சான்றுகள் காட்டி நிறுவ முற்படும் முயற்சி மறுதேடல் (ரிசர்ச்) எனப்படுகிறது.6 இதுதான் ஆய்வு என்பது.

ஏதேனும் ஒரு கருத்தை (அதாவது கருதுகோளை) மனத்தில் கொண்டு அதை நிறுவ முற்படும் கட்டுரையை ஆய்வுக்கட்டுரை என்கிறோம். நிறுவுகின்ற முயற்சி தான் ஆய்வு. முடிவுகள் அவரவர் மனப்பாங்கிற்கேற்ப, நோக்கிற்கேற்ப, கருத்துநிலைக் கேற்ப மாறுபடலாம்.7

சிலசமயங்களில், இவ்வாறு நிறுவும் முயற்சியில் குறித்த தேடலின்றி, மேம்போக்காகத், தான் கருதிய கருதுகோளையே ஒரு ஆசிரியன் சிறியதொரு கட்டுரையாக ஆக்கிவிடுவதுண்டு. இன்னும் சில சமயங்களில் கருதுகோளை நிறுவப் போதுமான சான்றுகள் இனறி, ஓரிரண்டு சான்றுகளோடு கருத்தை முன் வைத்துச் சென்றுவிடுவதும் உண்டு. இவைகளும் ஆய்வுக் கட்டுரைக்கான தன்மை உடையனவே.

தமிழ்ப்பொழில் இதழ்க்கட்டுரைகள், பெருமபாலும் நான்கு பக்க அளவின. சிலசமயம், ஒரு பக்கம், இருபக்கம் என்னும் குறைந்த அளவுகளிலும் அமைவதுண்டு. அவை ஒரு நூல் அல்லது ஆய்வேடு போன்று அளவில் பெரியவை அல்ல. எனவே போதிய சான்றுகளின்மை பெரிதாகக் கொள்ளப்பட வில்லை. மேற்கூறிய அடிப்படைகளில் தமிழ்ப்பொழிலின் தமிழியற் கட்டுரைகள் ஆய்வா, ஆய்வுப்போக்கு அற்றனவா என்ற சோதிக்கப்பட்டு தேறியவை ஆய்வு என்றும், தேறாதவை ஆய்வற்றவை என்றும் இந்த ஆய்வாளரால் கொள்ளப்பட் டுள்ளன.6 சில சமயங்களில் ஆய்வு என்று தேறாத நிலையிலும் சில கட்டுரைகளில் புதிய தகவல்கள் தரப்பட்டிருக்கலாம். அபபோது அவையும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

கட்டுரைப்பொருள் பகுப்பு
அனைத்துக் கட்டுரைகளும் அவற்றின் பொருள் அடிப்படை யில், இலக்கியம், இலக்கணம், தமிழக வரலாறும் பண்பாடும் என்னும் முன்று அடிப்படைத் தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மேலும் உட்பகுப்புகளுக் குள்ளாக்கப் படலாம். உதாரண மாக, இலக்கிய ஆய்வுக்கட்டுரைகளை, இலக்கிய வரலாறு, இலக்கியக் கொள்கை, இலக்கியத் திறனாய்வு என்று பகுத்துப்பார்க்கலாம்.9 இலக்கணக் கட்டுரைகளை மரபுவழியான இலக்கண ஆய்வு, மொழியியல் ஆய்வு என்னும் பகுப்புகளுக் குள்ளாக்கலாம்.10 மரபுவழி இலக்கண ஆய்வுகளை எழுத்து, சொல், பொருள் போன்ற அடிப்படைகளில் பகுக்கலாம். மொழியியல் சார்ந்த ஆய்வுகளை, மொழி விளக்க ஆய்வுகள், மொழிவரலாற்று ஆய்வுகள், ஒப்பியல் ஆய்வுகள் என்ற நிலைகளில் பகுத்துப் பார்க்கலாம். இலக்கணக் கட்டுரைகளின் ஒரு பகுதியாகவே கலைச்சொல்லாக்கமும் நோக்கப்படுகிறது. வரலாற்று, பண்பாட்டு ஆய்வுகளை வரலாற்றாய்வுகள், பண்பாட்டாய்வுகள் எனத் தனித்தனியே நோக்கலாம். இவை மேலும் உட்பகுப்புகளுக்குள் வைக்கப்பட்டுள்ளன.11
இவ்வாறு பகுத்து நோக்குதல், காலந்தோறும் எந்தெந்தத் துறைகளில் எந்தவிதப் போக்குகள் தோன்றியுள்ளன அல்லது வளர்ச்சி பெற்றுள்ளன என்க் காண்பதற்கு உதவும்.

காலப்பகுப்பு
தமிழ்ப்பொழிலின் ஐம்பதாண்டுக் கட்டுரைகளைப் பத்தாண்டுக ளுக்கு ஒரு காலப்பகுதி என ஐந்து பகுப்புகளாகக் காணலாம். பத்தாண்டுகள் என்பது பெரும்பாலும் கட்டுரைப்பொருள், ஆய்வு முறை போன்றவற்றின் மாற்றத்துக்கு ஓரளவு ஒத்துச்செல்லும் காலப்பகுதி எனலாம். சிலசமயங்களில் பத்திரிகை நின்றும் போயிருக்கிறது. சில மாற்றங்களுக்குள்ளாகியிருக்கிறது. இம் மாதிரிக் காரணங்களால் மிகத் துல்லியமாகப் பத்துப் பத்தாண்டு கள் எனப் பிரிப்பதற்கு மாறாக, சற்றே கூடக்குறையக் கால அளவைப் பகுத்துக் கொள்ளலாம். எனவே
1).முதல் துணர் முதல் பதினோராம் துணர் வரை-தொடக்க காலப்பகுதி
2) பன்னிரண்டாம் துணர் முதல் இருபத்தோராம் துணர் வரை- இரண்டாம் காலப்பகுதி
3) 22ஆம் துணர் முதல் 30ஆம் துணர்வரை-மூன்றாம் காலப்பகுதி
4) 31ஆம் துணர் முதல் 42ஆம் துணர்வரை-நான்காம் காலப்பகுதி
5) 43ஆம் துணர் முதல் 50ஆம் துணர்வரை-ஐந்தாம் காலப்பகுதி
சிறுகாலப்பகுதி மாறுதல்களுக்குக் காரணங்கள் ஆங்காங்கு தரப்பட்டுள்ளன. கால அடிப்படை நோக்கில் ஆய்வுப்போக்கைக் காண உதவும் என்பதால் இந்த அடிப்படையில் இயல்கள் அமைகின்றன. பொதுவாக இவ்வாறு பகுப்பதற்கான அடிப்படை கள் அந்தந்த இயலின் தொடக்கத்தில் தரப்பட்டுள்ளன. சான்றாக, ஐம்பதாண்டுக்கால அளவில் இலக்கிய ஆய்வு எவ்விதம் வளர்ந்துள்ளது என்பதை ஒரே நோக்கில் காணும் சிரமத்தை நோக்கிப் பத்துப் பத்தாண்டுகள் எனக் காலப்பகுதியை வரையறுத்துக்கொண்டு நோக்குவது எளிதல்லவா?
பொதுவாக அந்தந்தக் காலப்பகுதியில் வெளியான கட்டுரைகள் பற்றிய புள்ளி விவரங்களும் தேவையான இடங்களிலும் பின்னிணைப்பிலும் தரப்பட்டுள்ளன.

மேற்கூறியவாறு, இயல் பகுப்புமுறை, கால அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே இந்த முன்னுரை அன்றி, ஐந்து காலப்பகுதிகளுக்கு ஐந்து இயல்கள், பிறகு முழுப்பார்வை குறித்த இயல் ஒன்று, முடிவுரை என இந்த ஆய்வேடு அமைந்துள்ளது.

ஐம்பதாண்டுகளில் காணப்படும் பத்திரிகைப் போக்கினைத் தேட முயலுவதால், இந்த ஆய்வு ஒருவித அகலாய்வாகவே (மேக்ரோஸ்டடி) அமைந்துவிடுவதில் வியப்பில்லை. மேலும் ஆராய விருமபுகின்றவர்கள் நுட்ப ஆய்வைக் (மைக்ரோ ஸ்டடி) குறித்த துறைகளில் மேற்கொள்ளலாம். மேலும் குறித்த துறைகளாகப் பகுத்தும் நோக்கலாம். சான்றாக தமிழ்ப்பொழில் நடை பற்றிய ஆய்வு என்று ஒன்றை மேற்கொள்ள இயலும. மேலும் சமூகவியல் நோக்கிலும் தமிழ் இயக்க அல்லது திராவிட இயக்க நோக்குகளிலும் பார்க்கலாம். காரணம், இந்த இதழ், தொடக்கத்தில் நீதிக்கட்சி சார்பாகவும், பின்னர் திராவிட இயக்கச் சார்பாகவும், அதன்பிறகு தனித்தமிழ் இயக்கச் சார்பாகவும் மாறியுள்ளது. இது ஒரு தர்க்கரீதியான, தவிர்க்கவியலாத மாற்றம் என்று கருதமுடியும். இவ்வித மாற்றம் ஏன் நிகழ்ந்துள்ளது என்பதை நோக்கலாம்.

மேலும் இந்தி எதிர்ப்பு, கலைச் சொல்லாக்க இயக்கம், தமிழிசை இயக்கம் போன்ற பல இயக்கங்களில் இந்த இதழ் மிகுந்த பங்காற்றியுள்ளது. இவற்றின் அடிப்படையிலும் இந்த இதழை மதிப்பிடுவதற்கான வாய்ப்பு உண்டு.

இறுதியாக

‘செந்தமிழ்’ என்ற ஆய்விதழின் தொடகக காலத் தொகுப்புகளை அடைவுபடுத்திய முனைவர் பா.ரா. சுப்பிரமணியன் கூறுகிறார்:
“செந்தமிழ் இதழின் தொடக்க காலத் தொகுப்புகளை அடைவு படுத்துவது என்பது ஒருவகையில் ஒரு மாயப் பெட்டியைத் திறப்பதுபோன்றது. இந்தத் தொகுப்புகளில் அடங்கியுள்ள பொருட்கள் படிப்போரை மெய்சிலிர்க்கச் செய்யும்; எழுச்சியூட்டும்; போலச் செய்திருக்கும்; ஏமாற்றவும் செய்யும். இவற்றை அடைவுபடுத்துவதே பெரிது. மதிப்பீடு என்பது பின்னால் வருவது.”12

தமிழ்ப்பொழில் இதழின் கட்டுரைகளை அடைவு படுத்துபவர்க ளுக்கும் இதே உணர்வுகள்தான் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அவை வியப்பூட்டும்; சிலசமயங்களில் மற்றவர் எழுதியதன் நிழலாகவும் இருக்கும்; சிலசமயம் எழுச்சியூட்டும்; சிலசமயம் ஏமாற்றவும் செய்யும். தமிழ்ப்பொழில் முதல் ஐம்பது துணர்களில் வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளும் இந்த ஆய்வுக்கான பணியில் அடைவு படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுநோக்கில் மதிப்பிடப் பட்டும் உள்ளன.

அடிக்குறிப்பு
1. தமிழ்ப்பொழில் தோன்றிய 1925ஆம் ஆண்டினை ஒட்டிய காலப் பகுதியில் இதழ்க ளின் எண்ணிக்கை மிகக்குறைவு. அதிலும் இலக்கியத் திங்களிதழ்கள் மிகக் குறைவு. இது பற்றி வெ. சாமிநாத சர்மா கூறுவது இங்கு கருதத் தக்கது:
“அப்பொழுதைய (1920-30 காலப்பகுதி) தமிழ்ப் பத்திரிகை உலகம் குறுகிய விஸ்தீரணமுள்ளதாகவே இருந்தது. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இரண்டுமூன்று பத்திரிகைகளே அதில் உலாவிக் கொண்டிருந்தன….ஓரளவு பிரசித்தியடைந்திருந்த வார இதழ்களும் மாத சஞ்சிகைகளும் ஏழெட்டுக்குமேல் இல்லை.” சோமலெ, தமிழ் இதழ்கள், ப.20.

2. தமிழ்ப்பொழில் இதழ் 1977 ஏப்ரலுடன் ஐம்பதாண்டு நிறைவுபெற்றது. 1925இல் ஆரம்பிக்கப்பட்டதனால், இது 1975இலேயே ஐம்பதாண்டு நிறைவுபெற்றிருக்க வேண்டும். ஆனால் 41ஆம் துணர் முடிந்தவுடன் (1966 ஏப்ரல்) இதழ் நின்றுபோயிற்று. பிறகு 1968இல் மீண்டும் வரத்தொடங்கியது. இதனால் காலத்தாழ்ச்சி ஏற்பட்டது.

3. இந்த ஆய்வேட்டின் பின்னிணைப்புகளில் இவை பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

4. “இக்காலத்தில் வெளிவந்திருக்கும் ஆராய்ச்சி நூல்கள்-இலக்கிய ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, வரலாற்று ஆராய்ச்சி என மூவகைப்படும்.” சோமலெ, வளரும் தமிழ், ப.361.

5. “ஆராய்ச்சி என்பது ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மைத்து என ஆராய்தல். ஆராய்தல் எனினும், தெரிதல் எனினும், தேர்தல் எனினும், நாடல் எனினும் ஒக்கும்.” தொல். 1206, பேராசிரியர் உரை.
“ஆய்வு என்ற சொல்லே, ‘ஆய்’ என்ற உரிச்சொல்லடியாகப் பிறந்தது. ஆய்வு என்றால், நுணுக்கமாகக் காணல்.” ந. சஞ்சீவி, ஆராய்ச்சி நெறிமுறைகள், ஆராய்ச்சி நெறிமுறைகள், ப.90

6. இரண்டாவது முறை தேடுதல், அல்லது மறுதேடல் அல்லது மீண்டும்மீண்டும் தேடல் என்பதை ஆய்வுக்குரிய முதன்மைப் பொருளாக ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கூறுகிறது. The Compact Edition of the Oxford Dictionary, Volume II, p.2505..

7. “அறிவியல் முறைப்படி சிக்கல்களுக்கு விடைகாணும் முயற்சி ஆய்வு எனப் பெயர் பெறும்.” முத்துசசண்முகன், சு. வேங்கட ராமன், இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள், ப.2,
“Research is any systematic quest for knowledge that is characterized by disciplinal enquiry.” Allan Kent (ed), Encyclopaedia of Library and Information Sciences, Vol.25., p.254.
“Empirical Social research, like any other type of research, does not aim at persuasion nor at finding ultimate truths.” Pauline V. Young, Scientific Social Surveys and Research, p.31.

8. வெறும் தகவல்களைத் தனியாகவோ அன்றித் தொகுத்தோ தரும் கட்டுரைகள் ஆய்வு அல்ல. அத்தகவல்கள் புதியவையாக இருந்தாலும் சரி, தகவல்களை மட்டுமே தருவது ஆய்வாகாது. ஒரு தகவலைவிட, அது அடையப்பட்ட நெறிதான் ஆய்வுக்கு முதன்மையானது. இக்காரணத்தால் வெறுமனே பதிப்பிக்கப்பட்ட பாடல், நூல் வெளியீடுகளோ, கல்வெட்டு, தொல்பொருள் வெளியீடுகளோ இந்த ஆய்வேட்டில் ஆய்வு எனக் கொள்ளப்படவில்லை.

9. இலக்கிய ஆய்வை இவ்வாறு மூவகையாக அடக்கிப்பார்த்தல் அறிஞர்களுக்கு உடன்பாடானது. “இலக்கிய வரலாறு, இலக்கியத் திறனாய்வு, இலக்கியக் கொள்கை என மூவகைக் கல்வி பற்றிக் குறிப்பிடுவர்.” ச. வே. சுப்பிரமணியன், இலக்கியக் கல்வி, இலக்கி யக் கொள்கை-8, ப.2.
“Within our proper study, the distinctions between literary theory, literary criticism and literary history are clearly the most important.” Rene Wellek and Austin Warren, Theory of Literature, p.39.

10. மொழியின் இயல்பை விளக்கிப் பழங்காலத்தில் எழுதப்பட்ட கருத்துத் தொகுப்பு களை இலக்கணங்கள் என்கிறோம். அறிவியல் முறைப்படி, இன்று மொழியை ஆராய்தலை மொழியியல் என்கிறோம். மொழியியலுக்கும் இலக்கணத்திற்கும் உள்ள தொடர்பு, ஒற்றுமை வேற்றுமைகள் ஆகியவற்றை மோ. இசரயேல் நன்கு விளக்கியுள்ளார். மோ. இசரயேல், தலைமை உரை, அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழக முதல் மாநாட்டுக் கருத்தரங்கு மலர், மொழியியல், தொகுதி 8, எண் 3-4, பக். 9-14.

11. தமிழ்ப்பொழில் இதழில் வரலாற்று-பண்பாட்டுக் கட்டுரைகளின் எல்லைப் பரப்பும் குறைவு, அவற்றின் எண்ணிக்கையும் இலக்கிய இலக்கணக் கட்டுரைகளின் எண்ணிக்கையைவிடக் குறைவு. எனவே இந்த இரு பகுப்புகளே போதும் என விடப்படலாயிற்று.

12. P. R. Subramanian, Annotated Index to Centamil, Part B, p.xiv.


இலக்கியம் என்றால் என்ன?

இலக்கியம் என்றால் என்ன?

(இந்தக் கட்டுரை, 1984இல், பதினாறாம் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற மலரில் வெளியானது. முதன்முதலாக நான் அமைப்பியக் கருத்துகள் அடிப்படையில் எழுதிய கட்டுரை இது. எழுதப்பட்ட அக்காலத்தில் இக்கட்டுரை அவ்வளவாக கவனம் பெறவில்லை என்பது குறை.)

‘இலக்கியம்’ என்பதற்கு இதுவரை எத்தனையோ விளக்கங்கள் காலந்தோறும் இடந்தோறும் தரப்பட்டு வந்துள்ளன. நம் யாவர்க்குமே இலக்கியம் என்றால் என்ன, அது எது என்று தெரியும். ஆனால் யாவரையும் திருப்திப்படுத்தக்கூடிய் அளவில் இதுவரை எந்த விளக்கமும் அமையவில்லை என்றே கூறலாம்.

இதுவரை கூறப்பட்டுவந்த விளக்கங்களை நாம் இரண்டுவகைகளில் பகுக்கலாம்.

1. இலக்கியம் என்பது ஒருவகைப் புனைந்துரைத்தல் (ஃபிக்ஷனலைசேஷன்) என்று கூறுபவை.

2. இலக்கியம் என்பது அழகியல் இன்பம் தரும்வகையில் அமைக்கப்படும் மொழியமைப்புமுறை (ஈஸ்தடிகலி ப்ளீசிங் லாங்வேஜ் ஸ்ட்ரக்சர்) என்று கூறுபவை.

முதல்வகை விளக்கத்தில் புனைந்துரைத்தல் என்பது விரிவான பொருளில் ஆளப்படுகிறது. இதில் பிளேட்டோ கூறிய போலச்செய்தல் (இமிடேஷன்) முதல், கோல்ரிட்ஜ் கூறிய கற்பனை (இமேஜினேஷன்) வரை, அனைத்தையும் அடக்கி விடலாம். இலக்கியம் என்பது சமுதாயத்தின் பிரதிபலிப்பு போன்ற விளக்கங்களும் இதில் அடங்கிவிடும்.

இரண்டாவது வரையறை, மொழியமைப்பு முறைக்கு முதன்மை – வடிவத்திற்கு முதன்மை – தருவது. தமிழில் இலக்கியத்தைக் குறிக்கும் பழைய பெயர்களான செய்யுள்,  பனுவல்,  நூல்  போன்றவை இக்கருத்தை உட்கொண்டுள்ளன.

முதல்வகை விளக்கம் செயல்படும் முறைக்கு முக்கியத்துவம் தருகிறது. இரண்டாவது விளக்கம், செய்யப்பட்ட விளைவுக்கு முக்கியத்துவம் தருகிறது.

ஒரு கருத்தை, ஒரு பின்னணி தந்து, வடிவம் ஏற்கவைத்து, அர்த்தமுள்ளது ஆக்குவதற்குச் செய்யும் பணிதான் புனைவு என்பது. எனவே புனைவை அடிப்படையாகக் கொண்ட விளக்கத்தில், வரலாறு, தன்வரலாறு, பயண இலக்கியம் போன்றவற்றை அடக்கமுடியாது. இவற்றில் புனைவு இல்லை.

இரண்டாவது வகை விளக்கத்திலோ, துணுக்குகள், சிலேடைகள், கூர்மையாகச் செயல்படுமாறு தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள் போன்றவையும் அடங்கிவிடும். ஆகவே இந்த விளக்கங்கள் எவ்வகையிலும் இலக்கியம் என்ற ஒன்றை மட்டுமே அடக்கக்கூடிய தன்மை பெற்றிருக்கவில்லை. ஆகவே புது விளக்கம் தேவையா கிறது. பெரும்பாலான இலக்கியவாதிகளும் திறனாய்வாளர்களும் இவ்விரண்டையும் இணைத்தோ, அல்லது இவ்விரண்டிற்கும் நடுநிலை வகித்தோ இவற்றை ஏற்றுவந்துள்ளனர் (எடுத்துக்காட்டு, ரெனி வெல்லக், நார்த்ராப் ஃப்ரை) என்பதும் இவற்றின் போதாமையைக் காட்டுகிறது.
இவ்வாறு இடர்ப்படும் நிலை தேவையில்லை என்கிறது, நவீன திறனாய்வு வளர்ச்சி. இன்றைய திறனாய்வாளரான டேவிட் லாட்ஜ், மொழியியல் அடிப்படையில், இலக்கியம் என்பது ஏற்புடைய ஒழுங்கான முன்புலஆக்கத்தை (அல்லது முன்னணிப்படுத்தலை) உட்கொண்ட ஒன்று என்று விளக்குகிறார். பின்புலம்  அல்லது பின்னணி (பேக்கிரவுண்ட்) என்பது நாம் அனைவரும் அறிந்தது. இலக்கியப் படைப்பிலும், பொதுவான பேச்சுமொழி, ஏற்புடைய இலக்கிய மரபு இவை பின்புலமாக அமைந்துள்ளன. பின்புலத்திற்கு மறுதலை முன்புலம் (ஃபோர்கிரவுண்ட்).

முன்புலஆக்கம் (ஃபோர்கிரவுண்டிங்) என்பது பின்புலத்தில் நிறுத்துவதற்கு பதிலாக முன்னணியில் ஒன்றை நிறுத்துவதாகும். இலக்கிய மொழியை இலக்கியமல்லாத மொழியின் பின்னணி கொண்டே அறிகிறோம்.

வழக்கமான முறையில், எதிர்பார்க்கக்கூடிய முறையில் அமையும் மொழியமைப்பில் நம் கவனம் செல்லுவதில்லை. அதன் பொருள் மட்டுமே விரைந்து உணர்கிறோம். இது பின்னணி மொழி. இதற்கு மாறாக, அழகான அல்லது மாறுபட்ட அமைப்பால் நம் கருத்தை உணர்த்தவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே செய்யப்படும் உருத்திரிபே (இண்டென்ஷனல் டிஸ்டார்ஷன்) முன்புல ஆக்கம் என்பது. முன்புல ஆக்கம், முன்கூறிய இருவகைப் பின்னணிகளுக்கும் மாறுபட்டது மட்டுமன்றி, ஒரு இலக்கியப் படைப்பிலே பொதுநிலையில் உருவான மொழியியல் கூறுகளுக்கும் மாறுபட்டு அமையும்.

முன்புல ஆக்கம்தான் மொழியமைப்பை வேறுபடுத்துகிறது. ஆகவே இதுவும் இலக்கியத்துக்கு மட்டுமே உரிய ஒன்றாகாது. நம்முடைய அன்றாடப் பேச்சிலும், சிலேடைகள், நகைச்சுவைத் துணுக்குகள், அறுவைஜோக்குகள், முரண், அங்கதம் ஆகியவற்றை உண்டாக்குவது இதுவே. ஆனால் இவற்றில் ஒழுங்கான அமைப்பு முறை இல்லை. ஆகவே எங்கே ஒழுங்கான (சிஸ்டமேடிக்), ஏற்புடைய முன்புல ஆக்கம் செய்யப்படுகிறதோ அங்கே இலக்கியம் உருவாகிறது.

அமைப்பியலாளரான ரோமன் யாகப்சன் என்பவரும் இலக்கியத்துக்குப் புதுவிளக்கம் தருகிறார். எந்தக் கலைப்படைப்புமே தன்னைப் பற்றியதுதான் என்பது அவர் கருத்து. கலைப்படைப்பு என்பது ஒருவித தொடர்புமுறை (கம்யூனிகேஷன் ப்ராசஸ்). எந்தத் தொடர்புமுறைக்குமே சொல்பவர், கேட்பவர் என இருவர் வேண்டும். மேலும் இருவருக்கும் பொதுவான ஒரு சூழல் (காண்டெக்ஸ்ட்), பொதுவான ஊடகம் (கோட்), பொதுவான இணைப்பு (காண்டாக்ட்) இவையும் வேண்டும். உணர்த்தப்படும் செய்தி, விஷயம் (மெசேஜ்) ஆகும். இலக்கியமும் ஒருவகை விஷயமே. விஷயங்கள் ஆறுவகையில் அமையலாம் என்கிறார் அவர்.
1. பொருள் அடிப்படையிலான விஷயம் – சூழலை மையமாகக் கொண்டது
2. உணர்ச்சி அடிப்படையிலான விஷயம் – சொல்பவரை மையமாகக் கொண்டது
3. து£ண்டல் அடிப்படையிலான விஷயம் – கேட்பவரை மையமாகக் கொண்டது
4. தொடர்பு உண்டாக்கல் அடிப்படையிலான விஷயம் – இணைப்பை மையமாகக் கொண்டது
5. தெளிவுறுத்தல் அடிப்படையிலான விஷயம் – பயன்படுத்தும் மொழிச்சொற்க ளை மையமாகக் கொண்டது
இவை ஐந்திலிருந்தும் மாறுபட்டு தன்னிடமே ஈர்க்கும் சக்தியுள்ள விஷயம் இலக்கியம் என்கிறார் யாகப்சன்.
6. இலக்கிய அடிப்படையிலான விஷயம் – தன்னையே மையமாகக் கொண்டது

இப்படிப்பட்ட விளக்கம், உருவவியல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சாதாரணநிலையிலிருந்து விலகிய, அசாதாரண அமைப்புக் கொண்டவற்றையே (டீவியண்ட் ஃபார்ம்) இலக்கியமாக ஏற்பது. ஆனால் எல்ல இலக்கியங்களும் அசாதாரண வடிவம் கொண்டவை அல்லவே? நடப்பியல்சார் இலக்கியங்கள் இவ்விளக்கத்தின்கீழ் வருவது கடினம். எனவே இவ்விளக்கமும் பூர்த்தியானதாக இல்லை. டேவிட் லாட்ஜின் விளக்கமே இதைவிடப் பொருந்தியதாக உள்ளது.

அமைப்பியல்சார் விளக்கங்கள் இவற்றின் குறைகளை நீக்குகின்றன. அமைப்பியலில் இலக்கியத்தைப் பிரதி (டெக்ஸ்ட்) என்றும், விஷயம் (டிஸ்கோர்ஸ்) என்றும பிரிக்கிறோம். இலக்கியப் பிரதி என்பது ஒரு இலக்கியப் படைப்பு பெற்றிருக்கும் மொழியடிப்படையிலான வடிவம். அப்படைப்பில், மொழி செயல்படும் முறையை இலக்கிய விஷயம் (லிடரரி டிஸ்கோர்ஸ்) என்கிறோம்.

ஒரு படைப்பு, பிரதி என்ற முறையில் பிறவற்றிலிருந்து வேறுபட்டிருக்கா விட்டாலும், இலக்கிய விஷயம் என்ற முறையில் நிச்சயமாக வேறுபட்டிருக்க வேண்டும் என்பது அமைப்பியலாளர் கருத்து. அதாவது வெளிப்படையான முன்புலஆக்கம் இல்லாவிட்டாலும் உள்ளமைவான முன்புலஆக்கம்தான் இலக்கியப் படைப்பை பிற ஆக்கங்களிலிருந்து வேறுபடுத்துகிறது.

இங்கு இலக்கிய விஷயம் என்பது வெறும் உள்ளடக்கத்தை மட்டும் குறிப்பதன்று. மார்க்சியவியலாளர்கள், பொருளாதாரம் என்ற அடிக்கட்டுமானத்தின் மேலாக உள்ள மேற்கட்டுமானங்களில் ஒன்றே இலக்கியம் என்று கொள்கின்றனர். இப்போது இந்த நிலைப்பாடு கேள்விக்குரியதாக்கப் பட்டுள்ளது. பண்பாடு என்ற அடிக்கட்டுமானத்தின் ஒரு வெளிநிலை (மேனிஃபெஸ்டேஷன்) மொழி என்றும், மொழி என்ற அடிப்படையின் மேற்கட்டுமானமே இலக்கியம் என்றும் கொள்ளலாம். ஆனால் அதேசமயம், ஓர் இலக்கியப் பிரதி ஒரு சமூகச் சூழலின் அழுத்தத்தால் வெளிப்படும் எழுத்துமுறை என்பது இங்கே மறுக்கப்படவில்லை. ஆனால் இலக்கியப் பிரதி என்பது மார்க்சியக் கருத்துருவாக்க நிலையிலிருந்து சற்றே மாறுபட்ட நிலையில் இங்கு ஆளப்படுகிறது.

ஓர் இலக்கியப் பிரதி எழுதப்படட நிலையில் முழுமை பெற்ற ஒன்று என்று மரபான கருத்துகள் சொல்கின்றன. ஆனால் அமைப்பியலாளர் அவ்வாறு கூறுவதில்லை. இலக்கியப் பிரதிகள், இலக்கியமாகப் படித்தல் என்ற செயலுக்கு உட்படும்போதுதான் முழுமை பெறுகின்றன. இச்செயல் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளுதல் என்பதை உள்ளடக்கியது. இலக்கியமாக ஏற்றுக்கொள்ளுதல் என்பது புனைவாக ஏற்றுக் கொள்ளுதல் என்பதை உட்கொண்டது. அதாவது, உ. வே. சா. வின் மீனாட்சிசுந் தரம் பிள்ளை சரித்திரத்தை, சரித்திர விஷயத்திற்காக அன்றி, இலக்கியமாகப் படித்தல் என்ற நிலைக்குட்படுத்தும்போதுதான் அது இலக்கியம் ஆகின்றது. இலக்கியப் படிப்புக்குட்படாத எந்த நு£லும் இலக்கியம் ஆகாது.

இந்த நிலைப்பாடு இலக்கியம் என்ற கருத்தை விளக்கினாலும, வேறு ஒரு புதிய நிலைக்கு அழைத்துச் செல்கிறது. இலக்கியம் என்பது முன்புல ஆக்கம் கொண்டது; படிப்புச் செயலினால் முழுமை அடைகிறது என்றால் முன்புல ஆக்கம் செய்யப்பட்டு, இலக்கியப் படிப்பினை எதிர்நோக்கி வெளியிடப்படும் எந்த நூலும் (தரம் பற்றிய கருத்தின்றி) இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றாகிறது. ஆனால் உ. வே. சா. வின் வாழ்க்கைக் குறிப்புகள் போன்ற நூல்கள், வெளிப்படையான முனபுலஆக்கமோ இலக்கியமாகப் படிக்கப்படும் எதிர்பார்ப்போ இன்றி வெளியிடப்பட்டிருப்பினும், அவை இலக்கிய அந்தஸ்தை அடைந்துள்ளன. மேற்கூறிய கருத்தடிப்படையில், இவை முதல்நிலையில் இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இந்த நிலை ஒரு தீவிரமான குறையைக் காட்டுகிறது. அதாவது தரமற்ற கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் போன்றவற்றையும் இலக்கியமாக ஏற்றலும், பிற அறிவுத்துறை நு£ல் கள், சிறந்த இலக்கியத் தரம் பெற்றிருப்பினும அவற்றை இலக்கியப் படிப்புக்கு ஈடுசெய்யும் இரண்டாம் தர நிலையிலேயே இலக்கியமாகக் கொள்ளலும் என்பது அந்தக் குறை. ஆகவே அமைப்பியலாய்வுகளில் தரமதிப்பீடு புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஆனால் இந்த பயம் தேவையில்லை என்று தோன்றுகிறது. இலக்கியப் பிரதி முழுமை பெற இலக்கியப் படிப்பு என்பதைப் பூர்த்திசெய்யும் நூல்களே இலக்கியமாக அமையும். இலக்கியப் படிப்பு என்பது நுகரும் அழகியலின் விளைவாக எழுந்துள்ள பொழுதுபோக்குப் படிப்பு அன்று. அல்லது ஒரே ஒரு நூலை மட்டுமே படித்துவிட்டு அபிப்பிராயங்களை உருவாக்குவதன்று. இலக்கியப் படிப்பு முழுமை பெற்றதாக உருவாகாத நிலையில் தவறான மதிப்பீடுகளுக்கு அழைததுச் செல்லும். கல்வித்துறை ஆய்வுகளில் இன்று காணப்படும் தவறான மதிப்பீடுகள் இலக்கியப் படிப்புப் பயிற்சி இன்மையாலும ஏற்படுபவை.

பார்வை நூல்கள்

1. The Modes of Modern Writing-David Lodge, 1977.      2. ஸ்ட்ரக்சுரலிசம்-தமிழவன், 1982

 


பாரதியும் யேட்ஸும் – ஓர் ஒப்புமைக் காட்சி

பாரதியும் யேட்ஸும் – ஓர் ஒப்புமைக் காட்சி

~~டிசம்பர் 11 பாரதி நினைவு நாளின் அடையாளமாக~~
(இந்தக் கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு அநேகமாக 1982ஆக இருக்கலாம். அப்போது நிகழ்ந்த பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றில் இது வெளிவந்ததாக நினைவு.)

பாரதியை மேற்குநாட்டுக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பார்வைகள் பெருகி வருகின்றன. ஷெல்லி, கீட்ஸ், பைரன், வால்ட்விட்மன் போன்றோருடன் பாரதி ஒப்பிடப்பட்டுள்ளார். பாரதியை ஐரிஷ் கவிஞர் டபிள்யூ. பி. யேட்ஸுடன் (W.B. Yeats) ஒப்பிடவும் வாய்ப்புண்டு. எனினும் ஒரு வேறுபாடு. மேற்குறிப்பிட்ட அயல்நாட்டுக் கவிஞர்கள் அனைவரும் பாரதிக்கு முன் னோர்கள். யேட்ஸ், பாரதியின் சமகாலக் கவிஞர். அவர் இன்று ஒரு குறியீட்டுக் கவிஞராக அறியப்படுபவர். தாகூரின் மொழியாக்கங்களைச் செம்மைப்படுத்த உதவியவர். தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைத்தவர். எனினும் பாரதியுடன் இவருக்கு எவ்விதத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. பாரதி் இவரை அறிந்திருந்தாரா என்பதும் கேள்விக்குரியதே.

யேட்ஸ் 1865 ஜூன் 13ஆம் நாள் தோன்றினார். 73 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து 1939 ஜனவரி 28ஆம் நாள் மறைந்தார். பாரதிக்குப் பதினேழு ஆண்டுகள் முன்னர் பிறந்து, பதினேழு ஆண்டுகள் பாரதிக்குப் பின்னும் வாழ்ந்தவர். யேட்ஸ், 1885 முதல் 1836வரை 51 ஆண்டுகள் எழுத்துலகில் இருந்தவர். பாரதியின் எழுத்துக் காலமோ 1905 முதல் 1921 வரை ஏறத்தாழ பதினேழு ஆண்டு களே. (இச்சமயத்தில் பாரதிக்கு 20 ஆண்டுகள் முன்னர் பிறந்து அவருக்குப் பின்னரும் 20 ஆண்டுகள் வாழ்ந்த தாகூரின் நினை வும் வருகிறது.)
பாரதி தோன்றிய காலத்தில், இந்தியா போன்றே அயர்லாந்தும் ஆங்கில ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு வந்த நாடு. அந்நாடும் இந்தியா போன்றே தன் அடிமைத்தளையை வெறுத்தது. இந்தியா மேல் அனுதாபம் காட்டியது.

யேட்ஸின் கவிதைகளை அரசியல் கவிதைகள், குறிக்கோள் சார்ந்த கவிதைகள், ஒரு புதிய கனவுலகைநோக்கித் தப்பிக்கும் கருத்துடைய கவிதைகள், காதற் கவிதைகள், அனுபூதிக் கவிதை கள், நினைவுகூர் கவிதைகள் என்றெல்லாம் வகைப்படுத்துவர். இதே வகைப்பாடுகளை பாரதியின் கவிதைகளிலும காணலாம் என்பது கவனிக்கத் தக்கது.

இருவருமே தத்தம் வெளியீட்டுக் கருவியாகத் தன்னுணர்ச்சிக் கவிதை வடிவத்தை (லிரிக் வடிவத்தை)க் கொண்டனர்.

இருவருமே மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்டவர்கள். ஆனால் நாடகவடிவத்தில் யேட்ஸுக்கு ஆர்வம் மிகுதியாக இருந்தது. நாவல்-சிறுகதை வடிவங்களில் அவருக்கு ஆர்வமில்லை. பாரதியோ, நாவல் சிறுகதை வடிவங்களிலும் ஆர்வம் காட்டியுள் ளார்.

யேட்ஸின் கவிதைகள் அவர் வாழ்நாளிலேயே 14 தொகுதிகளாக வெளிவந்தன. நாடகங்கள் 9 தொகுதிகள். இவை தவிரப் பல உரை நடை நூல்கள், திறனாய்வுகள். ‘தி விஷன்’ என்பது அவர்தம் முக்கிய உரைநடை நூல். பல மொழிபெயர்ப்புகளைப் படைத்தார். பல நூல்களைப் பதிப்பித்தார். ‘டென் பிரின்சிபல் உபநிஷத்ஸ்’ என்பது அவர்செய்த முக்கிய மொழிபெயர்ப்புகளுள் ஒன்று. ‘தி ஆக்ஸ்போர்டு புக் ஆன் இங்லீஷ் வெர்ஸ்’ அவரது தொகுப்பு நூல். பாரதியைப் போலவே யேட்ஸும் பகவத்கீதையால் கவரப்பட் டவர்.

இந்தியத் தத்துவஞானத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. யேட்ஸின் வாழ்க்கையில் மூன்று இந்தியர்களுக்கு முக்கியப் பங்குண்டு. ஒன்று தாகூர். மற்றவர், மோகினி சட்டர்ஜி என்ற தியாசாபிகல் சொசைட்டி சார்ந்த இளைஞர். இன்னொருவர் புரோகித் ஸ்வாமி என்பவர். உபநிடதங்களை மொழிபெயர்க்க யேட்ஸுக்கு உதவியவர். பாரதிபோலவே யேட்ஸுக்கும் முக்தி அல்லாத புத்தமதம் கூறும் பரிநிர்வாண நிலை போன்றவற்றில் நம்பிக்கையில்லை. இவற்றிற்கு பதிலாகத் தாமே ஒரு தீர்வு காணமுடியுமா என்று பார்க்கவும் முயன்றிருக்கிறார். எனினும் இந்தியத் தத்துவங்களில் அவருக்கிருந்த ஈடுபாடு, அவரை ஒரு இந்தியக் கவிஞர் என்று கூறுமளவுக்கு நெருக்கத்தில் கொணர்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக்கவிதை, கற்பனாவாத இயக்கத்தின் (ரொமாண்டிக்) பிடியில் இருந்தது. பின்னர் நடப்பியற் பாணி மிகுந்துவரலாயிற்று. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீனத்துவ இயக்கம் தோன்றியது. யேட்ஸ் இம்மூன்று இயக்கங்களிலும் தொடர்புகொண்டவர். அவருடைய முதற்காலக் கவிதைகள் ரொமாண்டிக் தன்மை கொண்டவை. பின்னர் நடப்பியல் பதிவுகளைக் கொண்டவை. இதன் பின்னர், முக்கியமாக மல்லார்மே, ரிம்போ, வெர்லேன் போன்ற ஃபிரெஞ்சுக் கவிஞர்கள் வழிவந்த குறியீட்டிய இயக்கம் சார்ந்த நவீனத்துவக் கவிஞரானார்.

தமிழில் ஒப்பிட்டு நோக்கும்போது இந்த நூற்றாண்டின் தொடக்கத் தில்தான் புனைவியப் போக்கு கவிதையில் தோன்றியது. புனைவியப் போக்கு நடப்பியப் போக்கு என்னும் இரண்டுமே இன்றைய கவிதையில் காணப்படுகின்றன. நவீனத்துவப் போக்கு குறைவு. பாரதியின் வசனகவிதைகூட, வால்ட் விட்மன் போன்ற முந்திய தலைமுறைக் கவிஞர்களின் பாதிப்பு என்று சொல்லக் கூடியதே தவிர, நவீனத்துவக் கூறுகள் கொண்டதல்ல. தமிழ்ப் புனைவியக் கவிதை, தமிழ் நாவலைப்போலவே, உலக இயக்கத் திற்கு ஒரு நூற்றாண்டு பிந்தியது.

எனினும் பாரதி, யேட்ஸ் போன்றே பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலமாக அமைந்தவர். யேட்ஸ், பழைய ரொமாண்டிக் மரபுக்குத் தான் கடைசிப் பிரதிநிதி என்பதை உணர்ந்தே பாடுகிறார்.
We were the last romantics…
Chose for the theme traditional sanctity and loveliness

பாரதியும் இப்படிப் பழைய மரபின் பிரதிநிதியாகவே தம்மை உணர்ந்தவர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் தரலாம். பாரதியை யேட்ஸுடன் ஒப்பிடும்போது, இருவர்தம் புனைவியக் கவிதைகள், நடப்பியக் கவிதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். நவீனத்துவக் கவிதைகள் இருவர்தம் வேறுபாட்டையும் நன்கு சுட்டுவதாக அமைகின்றன.

கற்பனாவாத அல்லது ரொமாண்டிக் கவிதைகளின் ஒரு முக்கியமான அம்சம், அவை நடப்புலகிற்கு மாறான, குறிக்கோள் உலகு ஒன்றினைப் படைத்துக்காட்டுவதாகும்.. இது தன்னிச்சை யின்றியும், கவிஞரின் அகமன வெளிப்பாடாகவும் அமையலாம். தன்னைச் சுற்றியுள்ள நடைமுறை உலகின் கோரங்கள், கொடு மைகள், ஏற்றத்தாழ்வுகள், வேதனைகள் ஆகியவற்றைக் காணும் கவிஞன் அதிலிருந்துமாறுபட்ட, தொல்லைகளற்ற, இனிமையான, ஏற்றத் தாழ்வற்ற உலகினைக் காண விரும்புவது இயல்பே. நடைமுறையுலகில் உடனே இதனை நிகழ்த்தமுடியாத கவிஞன், தான் விரும்பும் இனிமையான உலகைமனத்திற் படைத்து நிறைவடைகின்றான். தப்பிப்புப் போக்கு (எஸ்கேபிசம்) என்று கூறு வது இதையே.

யேட்ஸின் கவிதைக் காலப்பகுதிகள் நான்கனுள், முதலிரண்டு காலப்பகுதிகளிலும் நழுவற்போக்கு அல்லது தப்பிப்புப் போக்கு மிகுந்தே காணப்படுகிறது, பாரதியைப் பொறுத்தவரை இறுதிவரை யிலுமே இப்போக்கு உண்டு. பாரதி குறுகிய காலமே வாழ்ந்து படைப்பில் ஈடுபட்டதால் தப்பிப்பு என்பது ஒரு குறையுமன்று. நடைமுறையுலகின் உக்கிரம் தாங்காதவர்கள் மிக எளிதில் அடை யக் கூடிய இயல்பே அது. ஏனெனில் புறஉலகின் உக்கிரங்களால் தனிமனிதன் சுட்டெரிக்கப்படுவது போல எந்தத் தனிமனிதனாலும் சமூகத்தை உடனடியாக மாற்றிவிட முடிவதில்லை.

யேட்ஸின் ஆரம்பக் காலக் கவிதைகளில் ஒன்றான The Lake Isle of Innisfree (இன்னிஸ் ப்ரீ ஏரித்தட்டு) என்ற கவிதையில்

இப்போதே புறப்பட விழைகிறேன் இன்னிஸ்ப்ரீக்கு
என்கிறார் யேட்ஸ். பரபரப்பும் சந்தடியும் மிகுந்த லண்டன் தெருக்களிலே நடந்து கொண்டிருந்த யேட்ஸுக்கு ஒரு கடையிலிருந்த செயற்கை நீரூற்றைப் பார்த்தவுடன் தன் இளமைக் காலத்தில் கழித்த இனிய சொர்க்கம் போன்ற இடம் நினைவுக்கு வருகிறது. ஒரு தவிப்பின் மனோஆவேசத்துடன் தொடங்கிவிடு கிறது கவிதை. உடனே அங்குச் சென்றுவிட வேண்டும் என்ற அவரது ஆற்றாமையைத் தொடக்க வரியான

I will arise and go now to Innisfree
என்பது காட்டுகிறது. அங்குச் சென்றதும் கவிஞர் விரும்புவது என்ன? ஒரு சிறிய மண்குடிசை கட்டிக்கொண்டு அமைதியாக நிம்மதியாக வாழ்வது ஒன்றே. அங்கே வெட்டுக்கிளிகள் பாடும் இனிய காலைத்திரைகளிலிருந்து அமைதி சொட்டிவிழும்.

And I shall have some peace there:
For peace comes dropping from the veils of the morning
When the cricket sings.

பாரதியின் ‘காணிநிலம் வேண்டும்’ பாடலுக்கும் இதற்கும் மிகுந்த அளவு ஒற்றுமையிருக்கிறது. காணிநிலத்தின் மையத்தில் ஓர் அமைதியான தனி மாளிகை வேண்டும். கேணியருகினில்
தென்னை மரம் கீற்றும இளநீரும்.
பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கத்திலே வேணும்
எனத் தொடரும் பாரதியின் விருப்பங்கள் யாவும் அமைதியின் ஆட்சியை வேண்டியே.
பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் என்று போகிறபோக்கில் ஒரு வீச்சாக பாரதி கேட்பதுபோலவே

Nine bean rows will I have there
A hive for the honey bee
என்று யேட்ஸும் கேட்கிறார். இருவர் தம் சொல்லாட்சிகள்கூட ஆச்சரியமான ஒற்றுமை கொண்டிருக்கின்றன.

பின்னர் ஒரு ஒளிப்படிமம். ஒளிப்படிமத்தைத் தொடர்ந்து ஒரு ஒலிப்படிமம்.

நல்ல முத்துச்சுடர் போல நிலாவொளி முன்பு வரவேணும். (பாரதி)

There midnight’s all a glimmer, and noon a purple glow (Yeats)

கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் விழவேணும்

And  evening full of linnets’ songs
I hear lake water’s lapping with the sounds on the shore

இவ்வாறு நிகழும் மனவுணர்வின் ஒருமைப்பாடு நம்மைக் களி கொள்ள வைத்தாலும், நுணுக்கமான வேறுபாடுகளும் உள்ளன. அவைதான் இருவரது ஆளுமைகளின் தனித்தன்மைகளையும் நிறுவுகின்றன. யேட்ஸின் கவிதை தப்பிப்புக்கு மத்தியிலும் நிகழ்வுப் பாங்கைக் கொண்டுள்ளது. இன்னிஸ்ப்ரீ தீவு அவருக்குப் பொய்ம்மையில்லை, மெய்யானது. உண்மையான இடமே. யேட்ஸ் தனது தப்பிப்புப் போக்குக்கு உறுதுணையாகக் கடவுள ருளை வேண்டவில்லை. தானே செல்லுவது இயலும், அங்குச் சென்று வண்டுகள் முரலும் தனிமையில் வாழமுடியும்.

And I live alone in this beeland glade

ஆனால் பாரதி முற்றிலுமாகத் தப்பிப்புப் போக்கிற்கு ஆடபட்டவர்.

பாட்டுக்கலந்திட ஒரு பத்தினிப் பெண்ணும் வேண்டும். கூட்டுக் களியினில் கவிதைகள் கொண்டு தந்திட வேண்டும். அந்தக் காட்டுவெளியினில் ‘பராசக்தி நின் காவலுற வேண்டும்’. இந்த வையம் முழுவதையும் ‘பாட்டினால் பரிபாலிக்கவேண்டும்’ என்பன முற்றுமுழுதான கனவுகள். பாட்டினால் உலகைப் பரிபாலித்தல் என்றும் நிறைவேறாக் கனவென உணர்ந்ததனால் தான் பிளேட் டோ கவிஞர்களைக் கனவுகளை விதைப்பவர்கள் என்றுகூறி அவர் களை நாடுகடத்தச் சொன்னார் போலும். இவ்வாறு இரு பாக்க ளிலுமே கவிஞர்களாகத் தனிஆளுமையுடன் கவிஞர்கள் வெளிப்படுவதைப் பார்க்கிறோம். இதேபோல பாரதியின் அரசியல் சார்ந்த நடப்பியக் கவிதைகளையும், யேட்ஸின் நடப்பியக் கவி தைகளையும் ஒப்பிட்டுக் காணவழியுண்டு. பொதுவாகவே இருவர் தம் கவிதைகளையும் ஒப்பிட நிறைய வாய்ப்புகள் உண்டு என் பதை அவர்கள் தம் கவிதைப் போக்குகள் காட்டுகின்றன.

 


கிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்

கிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்

(இக்கட்டுரை, 1981ஆம் ஆண்டு பதின்மூன்றாம் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக்கருத்தரங்கு மலரில் வெளியாயிற்று.)

உலக நாடக இலக்கியங்களில் சில பொதுவான இயல்புகள் காணப்படுகின்றன. இவ்வியல்புகள் சிலப்பதிகாரத்திலும் உள்ளன என்று நிறுவப்பட்டு, அது ஓர் அவல நாடகக் காப்பியம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிலப்பதிகார நாடக அமைப்பு முறையில் உள்ள மற்றுமொரு இயல்பு, உலகச் செவ்வியல் நாடகத்தின் ஓர் அமைப்போடு இயைந்துவருவதை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

செவ்வியல் நாடகங்களில் பின்னணிப் பாடற்குழு
கிரேக்கச் செவ்வியல் நாடகங்களில் பின்னணிப் பாடற்குழு (கோரஸ்) என்ற ஓர் அமைப்பு உண்டு. சிறந்த நாடகாசிரியர்களாகிய ஏஸ்கைலஸ், சோஃபோக்ளிஸ் போன்றோர் நாடகங்களில் இதனைக் காணலாம். ஆங்கிலச் செவ்வியல் நாடகங்களிலும பிற மேலைநாட்டுச் செவ்வியல் நாடகங்களிலும கோரஸ் பின்பற்றப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மில்டனின் சாம்சன் எகனிஸ்ட்ஸ் என்ற நாடகத்திலும், இருபதாம் நூற்றாண்டில், டி.எஸ். எலியட்டின் மர்டர் இன் தி கெதீட்ரல் என்ற நாடகத்திலும கோரஸ் முறை மிகச் சிறந்த பயன்பாடு பெற்றுள்ளது. புனைவியல் நாடகங்களில் (ரொமாண்டிக் டிராமா) இம்முறை கையாளப்படுவதில்லை.
சிலப்பதிகாரத்தில உள்ள சில அமைப்புக் கூறுகள் இந்த கோரஸ் முறையைப் பெரிதும் ஒத்துள்ளன.

கோரஸின் பணிகள்
கோரஸ் என்பது பாடகர் அல்லது உரையாடுவோர் குழு ஆகும். நாடக மேடையின் பின்னணியில் நாடகம் முழுவதும் இக்குழுவினர் இருப்பர்.
1. கோரஸ், நாடகத்தின் முக்கியக் கதை மாந்தரைப் பார்ப்போர்க்கு அறிமுகப்படுத்துகிறது. இதனைப் பழைய தமிழ் நாடக அமைப்பான கட்டியங்காரன் பாத்திரத்திற்கு ஒப்பிடலாம்.

2. கதைத் தலைவர்களையும் கதை நிகழுமிடத்தின் ஆளுவோரையும் கிரேக்க நாடகப் பின்னணிக்குழுவினர் வாழ்த்துவர். இந்த அமைப்பைச் சிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்துப் பாடலிலும் வாழ்த்துக்காதையிலும் காணலாம்.

யாரோ சிலபேர், குழுவாக, “திங்களைப் போற்றுதும்…” என்று தொடங்கி, “ஓங்கிப் பரந்தொழுகலான்” என முடியும் மூன்று பகுதிகளையும் சிலப்பதிகாரத்தில் பாடுவதாக வைத்துக்கொண்டால், இதற்கும் கிரேக்க கோரசுக்கும் வேற்றுமையில்லை. வாழ்த்துக் காதையிலோ, வஞ்சி மகளிர் ஆயம், மூவேந்தரையும், “தொல்லை வினையான்…” என்ற பாடற்பகுதி தொடங்கி வாழ்த்திப் பாடுகிறது.

3. கோரசின் மற்றுமொரு மிக முக்கியமான பணி, நாடக மாந்தரின் முற்கதையை, அவர்களின் பின்புலத்தினைப் பார்வையாளர்க்கு உணர்த்துவதாகும். எடுத்துக்காட்டாக, மில்டனின் சாம்சன் எகனிஸ்ட்ஸ் நாடகத்தில், சாம்சன் காஸா நகரச் சிறையில் கண்ணிழந்து வருந்தும் காட்சி முதற்கண் தொடங்குகிறது. அவன் அந்நிலை அடைந்ததற்கான முன்நிகழ்வுகளைக் கோரஸ் விமர்சிக்கின்றனர்.

இவ்வாறே டி. எஸ். எலியட்டின் கதீட்ரல் கொலை நாடகத்திலும், தாமஸ் பெக்கெட் என்ற தலைமைமாந்தரின் முன்வரலாறு கோரஸ் மூலமாகவே தெரிகிறது. நாடக வளர்ச்சி நிலையில் நாடக மாந்தரின் முன் வரலாறு மற்றொரு பாத்திரத்தின் வாயிலாக உணர்த்தப் பெற்றால் அவரைக் ‘கோரஸ் பாத்திரம்’ எனலாம். சிலம்பில், கோசிக மாணி, மாடல மறையோன் ஆகியோர் இத்தகையவர்கள்.

4. செவ்வியல் நாடகங்களில் கொலை போன்ற வன்முறைக் காட்சிகளை மேடை யில் காட்டி நடிக்கலாகாது என்ற வரையறை உண்டு. இத்தகைய நிகழ்வுகள் கோரஸ் மூலமாகவோ தூதுவர் மூலமாகவோ உணர்த்தப்படும். ஆனால் சில நாடகங்களில் இம்முறை மீறப்பட்டுள்ளது. கதீட்ரல் கொலை நாடகத்தில நான்கு வீரர்கள் தாமஸ் பெக்கெட்டினைக் கொல்கின்றனர். இக்காட்சி நேராகவே நடிக்கப் பெறுகிறது. மில்டனின் நாடகத்தில் சாம்சன் கொலையுண்ட செய்தி ஒரு தூதுவன் வழி தெரிகிறது. சிலம்பில் இவ்விரு முறைகளும் கையாளப் பட்டுள்ளன.

கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கு ஊடு அறுத்தது

இது நேரடி முறை.

இதனைக் கண்ணகிக்குத் தெரிவிக்க வரும் பெண் ஒருத்தி சொல்லமுடியாமல் தவித்து நிற்கிறாள்.

ஓர் ஊர் அரவம் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்
அவள்தான், சொல்லாடாள், சொல்லாடாள் நின்றாள்

இது மறைமுக முறை.

5. கோரஸ் என்பது மூன்று முதல் ஏறத்தாழப் பத்து வரையிலான மக்கள் (ஆடவரோ, பெண்டிரோ, இருபாலருமோ) அடங்கிய குழு. இவர்கள் நாடகத்தில் தலைமை மாந்தருக்குப் பின்னர் நிகழப்போகும் நிகழ்ச்சிகளை, அவலங்களை, தம உள்ளுணர்ச்சியால் முன்னரே ஒருவாறு அறிந்து பார்வையாளர்களுக்கு உணர்த்துகின்றனர்.
இந்த முக்கியக் கூறு சிலம்பில் மிக நன்றாக இடம்பெற்றுள்ளது. ஆய்ச்சியர் குரவையும் வேட்டுவ வரியும் இதனை உணர்த்துகின்றன. ஆய்ச்சியர் குரவையில் இடை முதுமகள் மாதரி, “தீய அறிகுறிகள் தோன்றுகின்றன, குரவையாடலாம்” என்கிறாள்.

குடப்பால் உறையா குவிஇமில் ஏற்றின்
மடக்கண் நீர்சோரும் வருவதொன்று உண்டு
உறிநறு வெண்ணெய் உருகா நிற்கும்
மறிதெறித்து ஆடா வருவதொன்று உண்டு
நான்முலை ஆயம் நடுங்குபு நின்றிரங்கும்
மான்மணி வீழும் வருவதொன்று உண்டு (ஆய்ச்சியர் குரவை)

இப்பகுதி கோரசின் முக்கிய இயல்பை உள்ளடக்கியுள்ளது.

இவளோ, கொங்கச் செல்வி குடமலையாட்டி
தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி (வேட்டுவ வரி)

எனச் சாலினி தெய்வம் ஏறப்பெற்று உரைப்பதும் கோரசின் கணிப்புகளோடு ஒப்பீடு பெறுவதாகும்.

6. அவல நிகழ்ச்சி நடைபெற்று முடிந்ததும், அதனால் ஆற்றாமை கொள்ளாது, பார்ப்போர், “இது உலகியல்பு, எனவே இவ்விதம் நிகழ்ந்தது, நாம் இதனை அமைதியுடன் ஏற்கவேண்டும்” என்ற சலிப்பற்ற உளப்பாங்கினைப் பெறுமாறு அறிவுறுத்துவது கோரசின் இன்னொரு முக்கியப் பணியாகும். சாம்சன் இறந்தபின் மற்றவர்கள்  Calm of mind, All passion spent  என மன அமைதியுடன் திரும்பவேண்டும் என்ற கோரப்படுகின்றனர்.

சிலம்பின் இறுதிக்காதையான வரந்தரு காதையில் மாடலன் இப்பங்கேற்கிறான்.

பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவதன்றே தொன்றியல் வாழ்க்கை

என ஆறுதல் உரைக்கிறான்.

மேலும் இளங்கோவடிகளே, பின்னணிக்குழுவின் பங்கினை இறுதியில் ஏற்கிறார். “யானும் சென்றேன், என் எதிர் எழுந்து…” என்று தம்மைக் கதையில் ஈடுபடுத்திக் கொள்ளும் அவர்,

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்…
… … … ….
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்

என்று கூறுவது, மேற்குநாட்டுக் கோரசின் இயல்பினை ஒத்ததாகும்.

மேற்கத்தியச் செவ்வியல் நாடகங்களில் கோரஸ் என்பது ஒரு பின்னணிக் குழுவினர். இசைப்பாடல் இசைக்கவும் ஆடலியற்றவும் தகுதிபெற்றது. சிலப்பதிகாரத்திலும், வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, வாழ்த்துக்காதை, வரந்தருகாதை ஆகியவற்றில் ஆடல்பாடல் குழுவினரைக் காண்கிறோம்.

சிலம்பிற்கும் மேற்கத்தியக் கோரசுக்கும் சில வேற்றுமைகள் உள்ளன.

1. செவ்வியல் நாடகங்களில் கோரஸ் ஆரம்பமுதல் இறுதிவரை எல்லாக் காட்சிகளிலும் இடம்பெறும். அது நாடக அமைப்பின் தவிர்க்கமுடியாக் கூறு. பிற பாத்திரங்கள் உரையாடும் இடங்களிலும் கோரஸ் அமைதியாகச் செவிமடுப்போராக நாடகக்களத்தில் இடம்பெற்றிருக்கும்.
சிலப்பதிகாரம் ஒரு காவியம். (நாடகமாகவே இருப்பினும் இம்மேற்கத்திய முறை இங்கு முழுவதும் பயின்றுவந்திருக்க வேண்டும் என்பதில்லை.) ஆகவே இங்கு குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி, வாழ்த்துக் காதை, வரந்தரு காதை ஆகிய சில காட்சிகளில் மட்டுமே இடம் பெறுகிறது.

2. மேற்கத்தியச் செவ்வியல் நாடகங்களில் கோரசின் இடமும் பங்கும் மிகுதி. பாத்திரங்களின் செயல்கள் பற்றி மதிப்புரை கூறுவது அதன் முக்கியப் பணிகளில் ஒன்று. இதனை நாம் சிலப்பதிகாரத்தில் காணமுடியாது.

3. கதை மாந்தர உரையாடலுக்கு இடையிலும் கோரஸ் பங்குபெற இயலும். சிலப்பதிகாரத்தில் அவ்வாறு இல்லை.

இவ்வாறு கிழக்கில் ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்திற்கும், மேற்கில் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நாடக இலக்கியங்களுக்கும் ஒருபுடை அமைப்பொற்றுமை காணப்படுவது விந்தையாக உள்ளது. ஒப்பிலக்கிய ஆய்வில் ஆழ்ந்து ஈடுபடுபவர் கள் இங்ஙனம் தற்செயலாக எதிர்ப்படும் ஒப்புமைகளைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர், மகிழ்ச்சியடைகின்றனர். அவற்றை உலக இலக்கியப் பொதுக்கூறுகளாகப் பார்வைக்கு நம் முன் வைக்கின்றனர்.