சங்ககாலப் போர்முறைகளும் விதிகளும்

mqdefault
போர்முறைகளும் விதிகளும் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே வருகின்றன. வாளையும் ஈட்டியையும் கொண்டு போரிட்ட காலத்துப் போர் முறைகள் ஒருவிதம். துப்பாக்கியையும் பீரங்கியையும் கொண்டு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு போரிட்ட முறைகள் இன்னொரு விதம். டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு போர்முறை வேறுவிதமாக மாறியது. டாங்கிகள், போர் விமானங்கள் வந்த பிறகு போர்முறை முற்றிலும் வேறுவிதமாக மாறியது. கடைசி யாக இப்போதோ அணுகுண்டு, ஹைடிரஜன் குண்டு போன்ற அணு ஆயுதங்கள், வேதியியல் நச்சுகள், உயிரியல் அழிப்புப் போர்முறைகள் போன்ற பலவிதமான அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. போரின் வரலாற்றை நோக்கும்போது, தனி மனித அழிப்பிலிருந்து மாறி எவ்விதத் தொடர்புமற்ற அப்பாவி மக்களைக் கோடிக் கணக்கில் கொன்று குவிப்பதே போரின் இலட்சியமாகி இருக்கிறது. அதிலும் போர்க் குற்றங்களின் தன்மையும் நம்மை நடுங்கச் செய்கிறது.

வரலாற்றையோ நடைமுறையையோ அறியாத மக்கள் மனத்தில் இராணுவம் என்பது நாட்டைக் காப்பாற்றுவது, தேசத்தைப் பாதுகாப்பது என்றெல்லாம் கருத்து கள் விதைக்கப்படுகின்றன. ஆனால் அது ஒரு குறிப்பிட்ட அளவுதான். சாதாரண மாகப் போர் என்பது இக்காலத்தில் கிடையாது. ஏனென்றால் அது பேரழிவு, பொருளாதார நாசம் என்பது எல்லா அரசாங்கங்களுக்கும் தெரியும். நேரடியான சுரண்டல் கருதிப் போர் செய்யமுடியாத நிலையில் இன்றைய வல்லரசுகள் உலகமயமாக்கல் போன்ற கொள்ளைடியக்கும் முறைகளைக் கையாளுகின்றன. அதனால் ஆயுதங்களைக் குவித்துவைத்திருந்தாலும், இப்போதைய வல்லரசுகள் நேரடியாக அணுகுண்டுகளை வீசுவதில்லை. ஆயினும் ஈரான்மீது தாக்குதல், ஈராக் போர் போன்றவற்றில் போரின் அரக்கத்தனத்தையும் இயற்கைச் சீரழிப்பையும் நாம் சில ஆண்டுகளுக்கு முன்பு நேரிலேயே கண்டோம்.

 இராணுவம் என்ற பெயரில் ஒரே இடத்தில் குவிக்கப்படும் பல்லாயிரக் கணக்கான ஆடவர்கள் ஆண்டுக்கணக்கில் குடும்பங்களைப் பிரிந்து இருந்தால் என்னென்ன நிகழும் என்பதைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள். இக்காலத்தில் போர்கள் எய்ட்ஸ் முதலான நோய்களைத் தோற்றுவிக்கும் ஓரினச் சேர்க்கையை உருவாக்குகின்றன. முதலாம் உலகப் போருக்குப்பிறகு ஓரினப் புணர்ச்சி இலக்கியம் என்ற தனிப்பிரிவே உருவாயிற்று. வேசியர் காலனிகளை உருவாக்குதல், பெண்களைக் கற்பழித்தல், பொருளாதாரச்சீரழிப்பு வரை இவர்களின் பாதிப்பு (போர் நடைபெறாத காலத்திலேயே) மிகவும் அதிகம்.

ஆனால் போர் ஏதோ உன்னதமானது, புனிதமானது போன்ற கற்பனையை ஆளும் வர்க்கம் திட்டமிட்டு உருவாக்குகிறது. சான்றோர் என்றைக்குமே போர் கூடாது என்றே கூறிவருகிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் போர்ச்சீரழிவுகளைப் பற்றி எண்ணற்ற திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது இராணுவ வீரர்கள் சொந்த மக்களையே கொல்லும் பாதகர்கள் என்பதை அஸாம் முதலிய மாநிலங்களில் அவர்கள் நடந்துகொண்ட முறையிலிருந்தும், நக்ஸலைட்டுகள் எனப் பெயர்வைத்து பெருமுதலாளித்துவக் கொள்ளைக்கு எதிராகப் போராடுபவர்களை அவர்கள் கற்பழித்துக் கொல்லும் முறையிலிருந்தும் அறிவுள்ளவர்கள் தெரிந்து கொண்டிருக்கலாம்.

 தமிழ்மக்கள் பெரும்பான்மையினரும் பழங்காலத்தில் சீனப்படையெடுப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட இரத்தத்திலகம் போன்ற படங்களைப் பார்த்து மூளைச் சலவைக்கு ஆளாகி போர் என்பது புனிதமானது, இராணுவ வீரன் என்பவன் ஏதோ புனிதமான ஆசாமி என்பதுபோன்ற கற்பனையில்தான் இருந்தார்கள். அவர் களை போரின் நடைமுறைத் தன்மைகளுக்குச் சற்றேனும் அறிமுகப்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது, முன்னாளில் ஜெயவர்த்தனாவும், கடந்த ஆறேழு ஆண்டுக ளில் இராஜபட்சேவும் தங்கள் இராணுவத்தைவிட்டுச் செய்யவைத்த செயல்கள்தான்.

ஆனால் உத்மானிய துருக்கர் காலத்திலிருந்தே, செங்கிஸ்கான் தைமூர் காலத் திலிருந்தே, புனிதமான சிலுவைப்போர்கள் காலத்திலிருந்தே போர் நடைமுறைகள் என்பவை கொலை, உறுப்புகளைச் சிதைத்தல், கற்பழிப்பு, பொருளாதார நாசம் என்பவைதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உலகில் மதம் சார்பாக நடந்த போர்களே அதிகம் என்பது வரலாற்றாய்வு கூறுவது. ஆனாலும் அவற்றிற் கும் அடிப்படையாக பொருளாதாரக் காரணங்கள்தான் பின்னணியில் இருந்தன.

இப்படி இன்றைய போர் நடைமுறையையும் வரலாற்றையும் பார்க்கும்போது சங்ககாலச் சமுதாயத்தில் போர் நடந்திருக்கும் விதங்கள் மிகவும் போற்றத்தக்கவை யாகவே காட்சியளிக்கும். ஆனால் தனிமனித அடிப்படையில் ஒருவருக்கொருவர் நேருக்குநேர் வாளைக் கொண்டு போரிட்டாலும், விமானத்திலிருந்து அணுகுண்டு வீசி ஒரே நொடியில் ஐந்து லட்சம் பேரை அழித்தாலும், போர் போர்தான். ஏன் மனிதன் கூட்டங்கூட்டமாகத் தன் இனத்தையே அழிக்கிறான் என்பதன் உளவியல் பின்னணிகளை இன்னொரு சமயம் பார்க்கலாம். ஆனால் விலங்குகள்கூடத் தங்கள் இனத்தையே பெரும் எண்ணிக்கையில் அழிப்பதில்லை, உணவுக்குத் தவிரப் பிறசமயங்களில் கொலை செய்வதில்லை. மனிதன் பெற்றிருக்கும் ‘நாகரிகம்’ நம்மை வியக்கவைக்கிறது!

சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னால் இயற்றப்பட்டவை. அக்காலத்தில் நிகழ்ந்த பல போர்ச் சம்பவங் களைப் புறநானூறும் பதிற்றுப்பத்தும் விளக்குகின்றன. தொல்காப்பியத்தில் புறத் திணையியலும் போர்ச்சம்பவங்களைப் பற்றியே எடுத்துரைக்கிறது.

வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்ற ஏழு திணைகளாகப் புறப்பொருளை வகுத்துக் கவிதை இயற்றலாம் என்பது தொல்காப்பியத்தின் கருத்து. இவற்றில் காஞ்சி, பாடாண் ஆகிய இரண்டினைத் தவிரப் பிற ஐந்து திணைகளும் போர் தொடர்பானவை. புறநானூற்றில், காஞ்சி, பாடாண் ஆகிய திணைகளும், பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பொதுவியல் என்ற திணையும் முதன்மை பெறுகின்றன. போர்த்திணைகள் அவ்வளவாகப் பாராட்டப் படவில்லை. இது ஒரு நல்ல போக்கு என்றே கூறவேண்டும். காஞ்சி என்பது பொதுவான மானிட நிலையைப் பாடுவது, பாடாண், அரசர்களையும் தலைவர்க ளையும் புகழ்வது, பொதுவியல் அறிவுரைகளை உரைப்பது என்று இன்றைய நோக்கில் பொதுவாகக் கூறலாம். ஆகவே புறநானூற்றில் போர்நிகழ்வுகள் குறிக்கப்படுவன குறைவு என்பதில் ஐயமில்லை.

அகப்பாக்களில் அறநோக்கு வகுக்கப்பட்ட அளவுக்குப் புறப்பாடல்களுக்கான அறநோக்கு வரையறுக்கப்படவில்லை. சங்கப்பாக்களின் அறநோக்கு இன்றைய அறநோக்கும் அல்ல. சான்றாக, சங்க இலக்கியத்தில் பரத்தைமை ஒழுக்கம் இயல்பான ஒன்றாக ஏற்கப்படுகிறது.

புறத்திணை இயலில் போர்த் தொடர்பான ஐந்து இயல்களிலும் வீரர்கள் நிகழ்த்தும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவற்றை நேரடி வாழ்க்கையில் கண்ட காட்சிகளின் வாயிலாகவே தொல்காப்பியர் பெற்றார் என்று கொண்டாலும், அவை சம்பவங்கள்தானே ஒழிய நியமங்கள் அல்ல. உதாரணமாக, படை செல்லு கின்ற ஆரவாரம், நற்சொல்லை ஆராய்தல், பிறர் அறியாமல் ஒற்றறிதல், சூழ்ந்தவர் களை அழித்தல், பசுக்கூட்டத்தைக் கவர்தல், அப்போது பகைவரோடு செய்யும் சண்டை, பசுக்கூட்டத்தைத் தன் நாட்டுக்குக் கொண்டு வருதல், அதைப் பங்கிடுதல், கள்ளுண்டு மகிழ்தல் போன்றவை வெட்சித் திணைக்குரிய துறைகளாகச் சொல்லப் படுகின்றன. இவை யாவும் போரின் தொடக்கநிலையில் நிகழக்கூடிய சம்பவங்கள்.

இதுபோலவே பிற திணைகளிலுள்ள துறைகளும் போர்ச்சம்பவங்களாகவே அமைந்துள்ளன. புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற இலக்கியங்களிலோ சம்பவங் கள்தான் வருணிக்கப்பெற இயலும் என்பது நாம் அறிந்ததே. இவை எதுவும் போருக்கு இலக்கணம் அல்ல.

போரின் ஐந்து நிலைகள்:

தொல்காப்பியர் ஐந்து புறத்திணைகளில போரின் ஐந்து நிலைகளைக் குறிப்பிடுகிறார். அந்த ஐந்து நிலைகளுக்கும் ஐவகைப் பூக்களை அணிந்தனர் வீரர்கள். பழங்காலத்தில் வீரர்கள் வட்டுடை என்ற தனியான உடையை அணிந்தனர் என்று தெரிந்தாலும், அவர்களுக்கெனத் தனித்தனி சீருடைகள் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால் பூக்களை வீரர்கள் அணிந்தனர் என்று கருதலாம். தொல்காப்பியர் கூறுவதன்படி, ஆநிரை கவர்தல் போரின் தொடக்கமாய் அமைந்தது. ஆநிரை கவர்வோர் வெட்சிப் பூ அணிந்துகொள்வர். அவர்கள் நற்குறிகண்டே தங்கள் பணியினைத் தொடங்கினர். வீரர் கள் நற்சொல் அல்லது விரிச்சி கேட்க ஊருக்குள் சென்று நோக்குவர். பின் உளவு பார்ப்பர். ஆநிரைகளைக் கவர்வதைத் தடுப்பவர்களுடன் போர் தொடுப்பர். பின் வெற்றிக்குரிய தெய்வமான கொற்றவையை வணங்கி உண்டு கள் குடித்துக் கொண்டாடுவர்.

ஆநிரைகள் அக்காலச் செல்வ இருப்பு. அதனால்தான் மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்ற பொருள் எழுந்தது. பெற்றம் (கால்நடைக்கூட்டம்) என்ற சொல் செல்வத்தைப் பெறுதல் என்ற சொல்லின் அடிப்படையாக அமைந்தது. எனவே ஆநிரைகவர்தல் என்பது இன்னொருவனுடைய செல்வத்தைத் திருடும் செயலே ஆகும். பசுக்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கைவிட, எதிரியின் பசுக்கூட்டமாகிய செல்வத்தைக் கொள்ளையடித்தலே ஆநிரை கவர்தலின் நோக்கமாக இருந்தது. இது எதிரி அரசனுக்கு இந்த அரசன் படையெடுப்பதைக் குறிக்கும் சூசகமாகவும் அமைந்திருக்கலாம். ஆனால் அரசனுக்காக அன்றி, தனிமனித நிலையிலும் ஆநிரை கவர்தல் (கால்நடைத் திருட்டு) நடைபெற்றதைப் பிற்கால நூல்கள் காட்டுகின்றன.

களவு மேற்கொள்ளுதல் (ஆநிரை கவர்தல்) வெட்சி என்றால் அதற்கான அற அடிப்படை என்ன? அரசன் படையெடுக்கப்போகிறான், அதனால் அதற்கு முன் னோடியாக ஆநிரைகளை இன்னொரு நாட்டிற்குள் புகுந்து திருடுகிறான் என்பது அறவொழுக்கத்தின் பாற்பட்டதாகுமா?

தொல்காப்பியமோ சங்க இலக்கியங்களோ போர்ச்சம்பவங்களுக்கு அடிப்ப டையான விதிகளையும் கூறியிருக்கலாம். சான்றாக, வெட்சித்திணை என்பது வேற்றுப்புல அரசனின் ஆநிரை கவர்தல் பற்றியது என்பது புலனாகிறதே அன்றி, எந்தச் சந்தர்ப்பத்தில் அதை மேற்கொள்ளவேண்டும், எந்த விதிகளைப் பின்பற்றி வெட்சிப்படைகள் செல்ல வேண்டும், ஆநிரை மேய்ப்பவர்களை அவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் விதிகள் இல்லை. சேர சோழ பாண்டிய அரசுகள் தோன்றுவதற்குமுன்பு, அக்கால அரசுகள் சிற்றரசுகள் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு சிற்றரசின் சுற்றளவு நூறுமைல் வரை இருக்கலாம். குறுக்கு நெடுக்காக 20-25 மைல்கள் இருக்கலாம். சில நூறு கிராமங்கள் அப்பகுதியில் இருக்கக்கூடும். அவ்வாறாயின் ஆநிரை கவர வருபவர்கள் எல்லையிலே கண்ணில் படும் ஆநிரைகளைக் கவர்வார்களா, அல்லது அரசனைத் தேடிச்சென்று அவனுக்குரிய ஆநிரைகளைக் கவர்வார்களா என்பதும் தெரியவில்லை.

ஆநிரைகளை மீட்பவர்கள் கரந்தைப்பூ அணிந்து போரிடுவது வழக்கம்.

பகைவர் நாட்டைக் கவர விரும்பும் மன்னன் வஞ்சிப்பூ அணிந்து செல்வது வழக்கம். போரின் இறுதியில் பகைவர் நாடு எரிக்கப்படும். தமக்கு அடங்கித் திறை செலுத்தாத நாட்டின்மீது மீண்டும் போர்தொடுக்கப்படும். இப்போரில் உதவு வோர்க்கு மாராயன் என்று பட்டமளிப்பது பிற்காலத்து வழக்கு. போர்க்காலத்தில் வீரர்களுக்குப் பெருஞ்சோற்று உருண்டைகள் அளிப்பது வழக்கம்.

கோட்டைப் போரில் ஈடுபடுவோர் உழிஞைப்பூ சூடிக்கொள்வர். முற்றுகைப் போர் உழிஞைப் போர் எனப்படும். முற்றுகையை முறியடிக்கும் போர் நடவடிக் கைகள் நொச்சி எனப்படும். கோட்டைக்குள் இருப்பவர் வெற்றியடைவதும் உண்டு, வெளியிலிருந்து தாக்குவோர் வெற்றியடைதலும் உண்டு. தாக்கச் செல்வோர் வெற்றி பெற்றால் அதன் அடையாளமாக மண்ணுமங்கலம் (வெற்றி நீராட்டு) நடைபெறும்.

கோட்டைக்கு அப்பால் வெட்ட வெளியில் இருபெருவேந்தரும் போர்புரிவது தும்பைப்போர் ஆகும். போரிடுவோர் தும்பைப் பூ சூடிக்கொள்வர். இப்போரில் தான் நால்வகைப் படைகளும் பயன்படுத்தப்படும்.

போரில் வெற்றிபெற்றோர் வாகைப் பூ சூடுவர். யானைமீதிருந்த வேந்தனைக் கொன்ற மற்றொரு வேந்தன் தன் வாள்வீரர் சூழ ஆரவாரம் செய்தல் ஒள்வாள் அமலை எனப்பட்டது. இவை யாவும் தொல்காப்பியத்தினால் தெரியவரும் செய்தி கள். சேவியர் தனிநாயகம் அடிகள், இவை யாவும் பழங்காலச் சமூகத்தின் எச்சங்க ளாகவும் நினைவுகளாகவும் இருந்து எழுதப்பட்டவையே அன்றி, உண்மையில் சங்க காலத்தில் நிகழ்ந்தவை அல்ல என்கிறார். அகத்திணையைப் படைக்கக் கவிதை மரபுகள் வகுக்கப்பட்டது போல, புறத்திணையைப் படைக்கத் தொல்காப்பியர் வகுத்த கவிதை மரபுகள் இவை என்று நாம் முடிவுசெய்யலாம்.

போர் விதிகள்:

சமஸ்கிருதத்தில் கவுடலீயம் என்ற அரசியல் நூல் இருப்பதுபோலத் தமிழில் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே ஓர் அரசன் எப்படிப் படைகளை நிர்வாகம் செய்ய வேண்டும், அதற்கு எவ்வளவு பொருள் செலவிடவேண்டும், போர்க்களத்தில் பயன்படுத்த வேண்டிய நியமங்கள் என்ன என்பனவற்றை யெல் லாம் தமிழில் நேரடியாக அறிய வழியில்லை. கிடைக்கும் சில இலக்கியக் குறிப்புகளை வைத்து யூகிக்கவேண்டிய நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். போருக்கு இலக்கணம் கூறும் புறநானூற்றுப பாக்களிலும் பார்ப்பனர்களுக்கு ஆதர வான கூற்றுகளே இடம்பெறுகின்றன. பசுக்களைக் கொல்லக் கூடாது, பசுப்போன்ற பார்ப்பனரைக் கொல்லக் கூடாது, புதல்வரைப் பெறாதவர்களைக் கொல்லக் கூடாது போன்ற விதிகள் சொல்லப்பட்டுள்ளன.

                “ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்,

                பெண்டிரும் பிணியுடையீரும், பேணித்

                தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

                பொன்போற் புதல்வர் பெறாஅதீரும்,

                எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என

                அறத்தாறு நுவலும் பூட்கை”

என்று பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய புறநானூறு 9ஆம் பாட்டினால் அக்காலப் போர்களில் எவ்வாறு அறப்போர் என்ற கருத்து செயல் வடிவம் பெற்றது, எவரையெல்லாம் கொல்லக்கூடாது என்று கருதினார்கள் என்னும் விளக்கம் தென்படுகிறது.

புதல்வரைப் பெறாதவரைக் கொல்லக்கூடாது என்ற விதி இருப்பதைப்போல புதல்வியை (மகளை)ப் பெறாதவர்களைக் கொல்லக்கூடாது என்ற விதி இல்லை. ஏனென்றால் ‘புத்’ என்ற நரகத்தை அடையாமல் ஆன்மாவைக் காப்பாற்றக் கூடியவன் மகன் மட்டுமே. மகள் அல்ல. இவ்வாறு பார்ப்பன ஒழுக்கங்களே புறநானூற்றில் விதிகளாகச் சொல்லப்படுகின்றன. பெண்களைக் கொன்றுவிட்டால் சந்ததி அற்றுப் போய்விடும், பிறகு போரிடுவதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்பதால் பெண்கள் போரில் விதிவிலக்குப் பெறுகிறார்கள்.

                                                                  -தொடரும்

சங்ககாலப் போர்முறைகளும் விதிகளும்- பகுதி 2

sangakaala-pormurai1

சங்ககாலத்தில் போருக்கெனச் சில ஒழுங்குமுறைகள்-பார்ப்பனச் சார்பானவையாக இருப்பினும்-இருந்தன என்பதைத்தான் மேற்கண்ட அடிகளில் வரும் அறத்தாறு நுவலும் பூட்கை என்ற தொடர் காட்டுகின்றது. பழங்காலத்தில் நேருக்கு நேர் வாள், வில், ஈட்டி முதலியன கொண்டு போரிடும் முறையே இருந்தது. எந்தச் சமூகத்திலும்-மிகப் பழமையான குடிகள் உட்பட-சண்டைக்கெனச் சில விதிகள் இருக்கவே செய்யும். சான்றாக நேருக்குநேர் ஆட்கள் போரிடும் பழங்கால முறையில், எந்த நாட்டிலும் முதுகில் தாக்குவது ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை.

புறமுதுகிட்டு ஓடும் எதிரியையும் ஆடைகழன்ற நிலையில் நின்றோரையும் மேய்ச்சல் நிலத்தில் வீழ்ந்தோரையும் நீரில் பாய்ந்தோரையும் படைக்கலமின்றி நிர்க் கதியாய் நிற்போரையும் தாக்குதல் கூடாது என்பவை பொதுவான அக்கால விதி கள் என்று கூறலாம்.

சங்ககாலச் சமுதாயம்:

புறநானூறு, பதிற்றுப்பத்தின் வழி காணுகின்ற சங்கச் சமுதாயம், மாறிவந்த ஓர் அமைப்பு. சங்ககாலத்தின் தொடக்கப்பகுதியில் வேள் பாரி, வல்வில் ஓரி, மலையமான் திருமுடிக்காரி, அதியமான் போன்ற சிற்றரசர்களும் பண்ணன் போன்ற ஊர்த்தலைவர்களும் மிகுதியாக இருந்தனர். ஆனால் கொஞ்சம்கொஞ்ச மாக இவர்களை அழித்துச் சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர் செல்வாக்குப் பெற்றனர். இந்த மாற்றத்தைச் சங்கப்பாக்கள் தெளிவாகக் காட்டுகின்றன. மூவேந்தர்களும், சிற்றரசர்களுடன் போரிட்டது நாட்டைக் கொள் ளை கொள்வதற்காக என்றால், சிற்றரசர்கள், தங்களுக்குள் அப்பெரு வேந்தர்களின் (ஆதரவு வேண்டி) சார்பாகப் போரிட்டனர்.

sangakaala-pormurai2
புறநானூற்றில் சில பாக்கள் மூவேந்தர்கள் பிற சிறுவேந்தரை ஆக்கிரமித் ததைக் கூறுகின்றன. ஆக்கிரமிப்பவர்கள் சார்பாகவே விதிகள் வகுக்கப்படுவதும், வரலாறு எழுதப்படுவதும் காலங்காலமாக நாம் காணும் உண்மை. எனவே ஆக்கிர மிப்பவர்கள் சார்பாக,

“ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை”

என்று கொள்கையே வகுக்கிறார் இடைக்குன்று£ர் கிழார். இது நெடுஞ்செழியன் என்ற பெரும் வேந்தனுக்கெனப் பாடப்பட்ட புறம் 76ஆம் பாட்டு. அதாவது உலகில் இயற்கையாகவே ஒருவனோடு ஒருவன் போரிடுவதும் ஒருவனை ஒருவன் கொல்லு தலும் நடைபெற்று வருகிறது என்பது பொருள். போரில் பிறரை அழிப்பவர்களுக்கு மிகச் சாதகமான பாட்டு இது. பாதிக்கப்பட்ட தலைவன் ஒருவனின் சார்பாகப் பாடியிருந்தால், ‘கொல்லாமையே இவ்வுலகத்து இயற்கை’ என்று பாடியிருந்தாலும் இருப்பார்.  ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தோல்வியுற்றவர்களுக்கு யாரும் ஆதரவு இல்லை என்பது உண்மை.

வீரத்தின் பெருமிதமும் வாழ்க்கைமதிப்புகளும்:

சங்க கால அரசர்கள், போரினால் பெற்ற வெற்றிகளைத் தங்கள் பெயருடன் இணைத்து-தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பது போலப் பெருமைப்பட்டுக்கொண்டனர். போரில் இறந்தாலும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், கூடகாரத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டதனால் அவர்களது வெற்றிப் பெருமிதம் புலனாகிறது.

கரிகால் வளவன் போரில் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருந்தான். முதுகில் எவ்வாறோ புண் பட்டதை எண்ணி இரும்பொறை வடக்கிருந்து உயிர்நீக்க முடிவுசெய்தான். அதனால் “மிகப்புகழ் உலகம் எய்தப் புறப்புண் நாணி வடக்கிருந்த சேர மன்னன்” என வெண்ணிக் குயத்தியாரால் குறிக்கப்படுகிறான். கரிகால் வளவனைப் பாடும் வெண்ணிக் குயத்தியார், அவன் நின்னினும் ‘நல்லன் அன்றே’ என்று பாடுவதைப் புறநானூறு 66 காட்டுகிறது. “முதுகில் காயம்படச் செய்த உன்னைவிட, அதற்கு வெட்கப்பட்டுப் பட்டினிகிடந்து புகழ் உலகம் அடைய முயலும் அவன் அல்லவா நல்லவன்” என்ற கருத்து இப்பாட்டில் இடம்பெறுகிறது.

போருக்குப் புறப்படும் அரசர்களும் வீரர்களும் வஞ்சினம் உரைப்பதைக் காண்கிறோம். போர்க்களத்தில் ஒரு குறித்த சாதனையைச் செய்யாவிட்டால் இன் னின்னவன் ஆகுக என்று மன்னர்கள் வஞ்சினம் உரைப்பது வழக்கம். புறநானூற் றில் மூன்று அரசர்கள் (பூதப் பாண்டியன், நெடுஞ்செழியன், நலங்கிள்ளி) இவ்வாறு வஞ்சினம் உரைத்துள்ளனர். சான்றாக, நெடுஞ்செழியன், “நான் பகையரசர்களைத் தாக்கி வென்று, அவர்கள் முரசத்தைக் கைப்பற்றவில்லை என்றால், என் குடிமக்கள் என்னைக் கொடியவன் என்று தூற்றுவார்களாக, மாங்குடி மருதன் முதலிய புலவர்கள் என்னைப் பாடாமல் விடுவார்களாக, நான் இரப்போர்க்கு இல்லை என்று கூறுவேன் ஆகுக” என்று கூறுவது, அக்கால அரசர்கள் எவ்வித மதிப்பு களைத் தலையானவையாகக் கருதினார்கள் என்பதைக் காட்டுகிறது.

இவற்றை வீரயுகத்திற்குரிய மதிப்புகள் என்று கணித்து இவை போன்றவை முதன்மை பெற்றுக் காணப்படுவதால் சங்க இலக்கியத்தில் சில புறநானூற்றுப் பாக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி. யு. போப் அவற்றிற்கு Tamil Heroic Poems என்ற பெயர் தந்தார். இதற்கு ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்குப் பின்னால் சங்க இலக்கியத்தை ஆராய்ச்சி செய்த கைலாசபதியும் Tamil Heroic Poems என்னும் தலைப்பில்தான் ஆய்வு செய்திருக்கிறார். அதன்பின் மிகச் சிறப்பான முறையில் சங்கஇலக்கியத்தை மொழிபெயர்த்த ஏ.கே. இராமானுஜன் அதற்குக் கொடுத்த பெயர் Poems of Love and War. இவையெல்லாம் சங்க இலக்கியப் புறப்பாக்களில் காணப்படும் வீரத்தன்மையை வலியுறுத்துவனவாக உள்ளன,

பழங்காலத்தில் போரினால் பரத்தையர் என்ற தனிஇனமே உருவாயிற்று. சங்க இலக்கியங்கள் மருதத்திணை என்ற பெயரில் பரத்தையர் தொடர்பை நியாயப் படுத்துகின்றன.

படைப்பிரிவுகள்:

sangakaala-pormurai3
அரசனுக்கு இருக்கவேண்டிய அங்கங்கள் ஆறினுள் முதலாவதாகக் கூறப் படுவது படை. பிற ஐந்து-குடிமை, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பவை. எனவே தமிழக மன்னர் யாவரும் படை வைத்திருந்தனர் என்பதை உணரலாம். யானை குதிரை தேர் காலாள் என்னும் நால்வகைப்படைகளோடு கப்பற்படையும் இருந்தது. சங்ககாலத்திலிருந்தே இந்தியாவில் தமிழ் மக்கள் மட்டுமே கப்பற்படை வைத்திருந்தனர்.

யானைப்படை மிக இன்றியமையாத ஒன்று. ஆனால் முன்னணிப்படையில் பயன்படுவதில்லை. பின்னால் சென்று எதிரிகளைப் பெரிய எண்ணிக்கையில் அழிக்கவும், அரண்களை உடைக்கவும் யானைகளே உதவும். அரசனும் முதன் மையான படைத் தலைவர்களும் யானைமீது சென்றனர். எண்பேராயத்தின் உறுப்பினர்களில் ஒருவர் யானை வீரர். இவரை யானைப்படைத் தலைவர் எனக்கருதமுடியும். யானைகளுக்கு மதுவூட்டி வெறியேற்றி அழைத்துச் சென்றனர். வலிமை மிக்க கோட்டை வாயில்களைத் தாக்கி உடைப்பதற்கு யானைகளைப் பயன்படுத்தினர்.

குதிரைப்படை விரைந்து தாக்குவதற்குரியது. எனவே முன்னணிப்போரில் அதன் பயன் மிகப் பெரிது. எண்பேராயத்தின் உறுப்பினர்களில் இன்னொருவர் இவுளிமறவர். இவரைக் குதிரைப்படைத் தலைவர் எனக் கருதலாம். போருக்கான குதிரைகள் எப்போதுமே அரபு நாட்டிலிருந்துதான் நம் நாட்டிற்கு இறக்குமதி யாயின. பாண்டிய அரசன் 4000 குதிரை வீரர்களை வைத்திருந்ததாக மெகஸ்தனிஸ் (கி.மு.4ஆம் நூற்றாண்டு) கூறுகின்றார். ஆனால் அக்காலத்தில் குதிரைகளுக்கு இலாடம் அடித்துப் பயன்படுத்தாமையால் ஏராளமான குதிரைகள் விரைவில் இறந்துவிட்டன என்றும் தமிழர்களுக்குக் குதிரைகளைச் சரிவரப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றும் வாசப் கூறுகிறார்.

தேர்ப்படையும் பழங்கால மன்னர்களுக்கு உண்டு. உருவப் பஃறேர் இளஞ் சேட் சென்னி என்ற சோழன் பல அழகிய தேர்களை உடையவன் என்று அவன் பெயரிலிருந்தே தெரிகிறது. அக்காலத்தில் தேர்செய்யும் தச்சர்கள் சிறப்பாக மன்ன னால் பணியமர்த்தப் பட்டிருந்தனர். தேர்கள் குதிரைகளால் இழுக்கப்பட்டன.

காலாட்படையில் மறவர், எயினர், வேடர், மழவர், மள்ளர், பரதவர், மலையர், ஒளியர், கோசர் போன்ற பல இன வீரர்கள் இருந்தனர். யவனர்களும் படைவீரர்களாகப் பணியாற்றினர். மழவர்கள் அடிக்கின்ற கோலுக்கு அஞ்சாது மேன்மேலும் சீறிவருகின்ற நாகம் போல அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள் என்று இலக்கியங்கள் சிறப்பிக்கின்றன. முன்னணிப்படைப் பிரிவு தூசிப்படை எனப்பட் டது. இறுதியாக வரும் படை கூழை எனப்பட்டது.

கடல் வாணிகத்திற்குப் பாதுகாப்பளிக்கவும், கடற் கொள்ளைக்காரர்களை அழிக்கவும் கப்பற்படை பயன்பட்டது. கரிகாலன் இலங்கைமீது படையெடுத்துச் சென்று கைதிகளைப் பிடித்துவந்ததற்குக் காரணம், அவனிடம் வலிமைமிக்க கப்பற் படை இருந்தமையே. கடல் அரண் அமைத்து கடற்கொள்ளையில் ஈடுபட்ட கடம்பர் களை ஒழித்துக் ‘கடல்பிறக்கோட்டிய’ என்னும் சிறப்புப்பெற்றான் சேரஅரசன் செங்குட்டுவன்.

sangakaala-pormurai6
வேல், வாள், வில், அம்பு, கோல் ஆகியவை சங்ககாலப் படைக்கலங்கள். வேலும் வாளும் எஃகினால் செய்யப்பட்டதால் எஃகம் எனப்பட்டன. வேல்வடித்துத் தருவதற்கெனக் கொல்லர்கள் இருந்தனர். வாள் தகுந்த உறைகளில் இடப்பட் டிருந்தது. மன்னனின் வாள் நுண்ணிய அழகிய வேலைப்பாடுகளையும் விலை யுயர்ந்த கற்களையும் உடையதாயிருந்தது. அம்பு அறாத் தூணியில் அம்புகள் வைக் கப்பட்டிருந்தன. சுற்றி எறியவல்ல கனமான திகிரி (சக்கரம்), கவண் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டன.

கொல்லிமலைத் தலைவன் ஓரி, அம்பு எய்வதில் வல்லவனாதலின் வல்வில் ஓரி எனப்பட்டான். பலவேல்களை ஒருங்கே வீசுவதில் வல்லவனாதலின் பெரு விறற்கிள்ளி என்ற சோழ அரசன் பல்வேல் தடக்கை என்ற சிறப்புப் பெற்றிருந்தான்.

மேற்கூறப்பட்ட ஆயுதங்களைச் சமாளிக்கத்தக்க கேடயங்கள் இருந்தன. அவை இரும்பினாலும் தோலினாலும் செய்யப்பட்டன. உடலில் போர்த்திக் கொள் ளும் கவசமும் இருந்தது.

போர் நடவடிக்கைகள்:

போரைத் தொடங்குவதெனத் தீர்மானித்தவுடன் படைக்கான போர்வீரர் களைத் திரட்டுவதற்குத் தூதுவர்களை அனுப்புவது வழக்கம் ஆகலாம். சிலப்பதி காரம் முதலிய பிற்கால இலக்கியங்கள் இதனைக் குறிப்பிடுகின்றன. மறவர், எயினர், மழவர் போன்றவர்கள் போரில் சேர்ந்தனர். படை புறப்படுவதற்கு முன் நன்னிமித்தங்கள் பார்க்கப்பட்டன. படை புறப்படுவதற்கு முன்னர் நல்ல நாளில் வாளைப் புனித நீராட்டி குடை முரசு ஆகியவற்றுடன் அணிவகுப்பு நடத்தினர். இதனை நாட்கோள் என அழைத்தனர். மன்னர்கள் தங்கள் மரபிற்குரிய மாலை களைச் சூடினர். மன்னனின் வெண்கொற்றக் குடையும், கொடியும், முரசும் முன் கொண்டுசெல்லப்பட்டன. கொற்றவைபோன்ற போர்க்கடவுளரின் அருளை வேண் டினர். முரசுகள் ஒலித்தன.

பாசறை:

போர்க்களத்தில் போர் நடைபெறாத சமயத்தில் போர்வீரர்களும் மன்னனும் தங்கியிருக்கும் இடம் பாசறை எனப்பட்டது. பாடிவீடு என்று சொல்வர். பாசறை யில் தங்கியிருக்கும் மன்னனுக்குப் பணிபுரியப் பெண்கள் இருந்தனர். சட்டை அணிந்த யவனர்கள் மெய்க்காவலர்களாக இருந்தனர். மொழி தெரியாதவர்களை மெய்க்காவலராகக் கொள்வது பாதுகாப்பு என்று அக்காலத்தில் கருதியிருக்கலாம்.

நேரத்தை அறிவிக்கும் நாழிகைக்கணக்கர் இருந்தனர். அரசன் காயம்பட்ட வீரர்களைக் கண்டு ஆறுதல் உரைப்பதும் வழக்காக இருந்தது. அரசன் பாசறையைப் பார்வையிடும்போது படையின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் வீரர்கள் புண்பட் டோர்களைக் காட்டி விளக்கம் தருவது வழக்கமாக இருந்தது.

கோட்டை:

sangakaala-pormurai4
தலைநகரங்களைச் சுற்றிக் கோட்டைகட்டிப் பாதுகாப்பது அக்கால வழக்கம், கோட்டைச் சுவர்கள் உயரமாக இருந்தன. அவை செங்கற்களால் கட்டப்பட்டு மண்ணால் பூசப்பட்டன. கோட்டையைச் சுற்றி அகழிகள் உண்டு. அகழிகளைச் சுற்றிலும் காவற்காடு என்ற சிறிய காட்டைச் சிலமைல் தொலைவுக்குப் பாதுகாப் புக்கென அக்காலத்தில் அமைத்தனர்.

கோட்டை முற்றுகைப் போர் அக்காலப் போர்முறைகளில் ஒன்று. கோட்டைக்குள் இருப்பவர்களுக்கு எவ்வித உணவுப் பொருளும் செல்லாமல் அவர்களைப் பட்டினிபோட்டுப் பணிய வைக்க முயற்சிசெய்வர். இக்காலப்போர்களில் இவ்வாறு செய்வது இயலாது என்பதை அறிவோம். நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையிலிருந்த போது நலங்கிள்ளி அக்கோட்டையை முற்றுகையிட்டமை தெரிகிறது. பாரியின் பறம்புமலையை மூவேந்தரும் முற்றுகையிட்டபோதும் பட்டினிபோட்டுப் பணியவைக்க இயலவில்லை. வஞ்ச கத்தால்தான் பாரி கொல்லப்பட இயன்றது.

ஆகவே பேரரசர்கள் உருவானபோதே வஞ்சகத்தினால் செய்யும் போர்முறை யும் வந்துவிட்டது என்று கருதலாம்.

போர்ப்பண்புகள்:

sangakaala-pormurai5
நாட்டிற்காகப் போரிட்டு இறப்பது உயரிய பண்பு எனக் கருதப்பட்டது. இதனை இன்றுவரை நமது கவிதைகள் முதற்கொண்டு திரைப்படம் வரை வலியுறுத்தி வருகின்றன. போரில் புறமுதுகிடுவதும் முதுகில் புண்படுவதும் இழுக்கு எனக் கருதப்பட்டது. போரில் இறந்துபட்ட வீரர்களின் பெயரால் அவர்தம் உறவினர்களுக்கு ஊர்கள் பரிசளிக்கப்பட்டன. போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நடுவது வழக்கம். அக்கல்லில் அவ்வீரனைப் பற்றிய குறிப்புகள் பொறிக்கப்பட்டன.

போரில்பட்ட காயங்களை விழுப்புண்கள் எனப் போற்றினர். போரில் காயமுற்றோரைப் பேண மனைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு அடையாளமாக அங்கு வேப்பந்தழைகள் செருகப்பட்டிருக்கும். அவர்களுக்கு மருந்து அளிக்கப்பட்ட தோடு மனச்சோர்வு நீக்க இசையும் இசைக்கப்பட்டது.

போரில் பகையரசர்களின் அரசுச் சின்னங்களான முரசு, குடை ஆகிய வற்றைக் கவர்தல், காவல் மரத்தை வெட்டிவீழ்த்தல் போன்றவை நிகழும். நெடுஞ்சேரலாதன் கடம்பர்களின் காவல்மரத்தை வெட்டிவீழ்த்திய வீரச்செயல் பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ளது.

        -தொடரும்

 

 

சங்ககாலப் போர்முறைகளும் விதிகளும்- பகுதி 3

 

sangakaalappor1

ஊதியம்:

சங்ககால மன்னர்கள் பெரிய அளவில் நிலையான படைகளை வைத்திருந் தார்களா என்பது தெரியவில்லை. எனவே போர்வீரர்களின் ஊதியம் பற்றியும் குறிப்புகள் இல்லை. போர் தொடங்குவதற்கு முன் அரசன் படைவீரர்களுக்கு வெகுமதிகள் அளிப்பதும் சிறப்பான விருந்தளிப்பதும் இயல்பு. மன்னனே அவர்களுக்குப் போர்ப்பூவைச் சூட்டுவதும் மரபு. போர்த் தொடக்கத்தின்போது கவர்ந்து வரப்பட்ட கால்நடைகள் இறுதியில் வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. பகைப்புலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்திலும் பங்களிக்கப்பட்டது. வெற்றிபெற்ற வீரர்களுக்குப் பொற்பூக்கள் வழங்கப்பட்டன. இறையிலி நிலங்களும் வழங்கப் பட்டன.

போரின் நோக்கம்: கொள்ளையிடுதல்

பரஸ்பரம் போட்டி, பொறாமை, ஆதிக்க விரிவாக்கம், பிறர்நாட்டு ஆக்கிர மிப்பு, புகழ் எய்துதல் ஆகிய பல காரணங்களால் பண்டைத் தமிழ் மன்னர்கள் இடைவிடாமல் போர் புரிந்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் கூர்ந்து நோக்கும்போது இன்னும் தெளிவாகப் போருக்கான காரணத்தை வரையறுக்க முடிகிறது.

                1853இல் கார்ல் மார்க்ஸ் பண்டைய இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி எழுதிய கூற்று இது:

                “பண்டைக்காலத்திலிருந்து ஆசியாவில் (ஆசியாவில் என்று மார்க்ஸ்

                குறிப்பிடுவது இந்தியாவைத்தான்) மூன்று அரசாங்கத் துறைகள்

                இருந்துவந்திருக்கின்றன. ஒன்று நிதித் துறை, அதாவது உள்நாட்டுக்

                கொள்ளை. இரண்டு போர், அதாவது வெளிநாட்டுக் கொள்ளை.

                மூன்றாவது பொதுப்பணித் துறை. பாசனவசதிகள் முதலியவற்றை

                அமைத்துத் தருதல்…இந்தியாவின் கடந்த காலத்தின் அரசியல் தோற்

                றங்கள் மாறியிருப்பதாகத் தோன்றினாலும் அதன் சமூக நிலைமை

                மிகப்பழங்காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல்

                பத்தாண்டு வரை மாறாமலே இருந்துவந்துள்ளது”.

போர் என்பதை வெளிநாட்டுக் கொள்ளை என்றே கார்ல் மார்க்ஸ் குறிப் பிடுவது இங்கு நோக்கத்தக்கது. கோப்பெருஞ்சிங்கனும் இரண்டாம் ராஜராஜனும் போரிடும் சிறிய சண்டையானாலும், அணுகுண்டினால் இருபெரு நகரங்களையே அழித்து இறுதிகண்ட உலகப் போரானாலும், அடிப்படை நோக்கம் பொருளாதாரம் தான் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இந்தப் பொது மானிடநிலைக்குத் தமிழகத்தின் நிலையும் வேறாக இருந்திருக்க இயலாது.

பகைவீரர்களைக் கைப்பற்றல்:

பகைவீரர்களைக் கைப்பற்றிப் போர்க்கைதிகளாகப் பழங்காலத்தில் வைத்திருந்ததாகத் தெரியவில்லை. மாறாக, அவர்களைத் தம் நாட்டுக்கு அழைத்துவந்து பல்வித வேலைகளுக்காகக் குடியமர்த்தியிருக்கிறார்கள். அசோகன் கலிங்கத்துப் போரில் ஒன்றரை லட்சம் போர் வீரர்களை அடிமையாக்கிக் கொணர்ந்தான் என்று அவனுடைய சாசனங்கள் குறிப்பிடுகின்றன. தரிசு நிலங்களில் விவசாயத்திற்கென அவர்கள் குடியேற்றப்பட்டனர் என்று நாம் யூகிக்கலாம் என்று ரொமிலா தாப்பர் குறிப்பிடுகின்றார். (வரலாறும் வக்கிரங்களும், ப.51. தமிழில் நா. வானமாமலை. அலைகள் வெளியீடு, சென்னை). இதேபோல் கரிகால் சோழனும் இலங்கைமீது படையெடுத்துப் பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்டு வந்து காவிரிக்குக் கரைகட்டினான் என்று சங்க இலக்கியத்தின் வாயிலாக அறியமுடிகிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தோற்றுப்போன யவனவீரர்களைப் பின்கட்டாகக் கட்டி தலையில் எண்ணெய் ஊற்றி அழைத்துவந்தான் என்ற குறிப்பு வருகிறது. இவ்வாறே பகைமன்னர்களின் அந்தப்புரப் பெண்களைக் கைப்பற்றி ஏவல் மகளிராக ஆக்கிக்கொள்வதும் வழக்கம். இவர்கள் கொண்டிமகளிர் எனப் பட்டனர்.

போர் நடந்தது பகலிலா, இரவிலா?:

                “எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்

                ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்

                கொள்ளை மேவலை ஆகலின்”

என்று கரிகாற்சோழனைக் கருங்குழலாதனார் பாடுகின்றார் (புறநானூறு 7). இந்த அடிகளில் இரண்டு செய்திகள் தெளிவாகின்றன. ஒன்று, மேலே கார்ல் மார்க்ஸ் கூறியதுபோல, போர் என்பது வெளிநாட்டுக் கொள்ளை என்ற விஷயம். (உள்நாட்டுக் கொள்ளைதான் நேர்முக, மறைமுக வரிவிதிப்பு.) இன்னொன்று, ‘எல்லையும் இரவும் எண்ணாய்’ என்பதனால் வெளிப்படுகிறது. அதாவது போருக்கு இரவோ பகலோ, அதைப்பற்றிக் கவலையில்லை என்பது. இரவிலும் போர் நடைபெற்றதை இந்தப் பாடலின் வாயிலாக அறியமுடிகிறது.

                “எல்லுப்படவிட்ட சுடுதீ விளக்கம்

                செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்

                புலம்கெட இறுக்கும் வரம்பில் தானை” (புறம் 16)

என்ற பாண்டரங்கண்ணனார் பாட்டிலும் இரவிலும் அக்காலப் போர்கள் நடந்தன என்பதை அறியமுடிகிறது. சில அறிஞர்கள் ஆநிரைப்போர் மட்டுமே இரவில் நடை பெறும், பிற போர்நிகழ்வுகள் யாவும் பகலிலேயே நடைபெறும் என்று கூறியுள் ளனர். மேற்கண்ட புறநானூற்று அடிகள் அக்கருத்தை மறுக்கின்றன.

போரில் ஈடுபடும் சிறுவர்கள்:

உலகமுழுவதும் இன்று சிறுவர்கள் ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். பலசமயங்களில் அவர்கள் கடத்தப்பட்டும் கட்டாயமாகப் படைகளில் சேர்க்கப்படுகின்றனர். பழங்காலத்தில் சிறார்கள் இப்படி கடத்தப்பட்டுப் படைகளில் சேர்க்கப்பட்டதற்கான குறிப்புகள் இல்லை. என்றாலும், சிறுவர்களும் போரில் ஊக்கத்துடன் அக்காலச் சமூகத்தினால் ஈடுபடுத்தப்பட்டதை இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன. சான்றாக,

                “இரு தினங்களுக்கு முன் தன் தந்தையைப் பறிகொடுத்த ஒரு பெண் முந்திய

                தினத்தில் கணவனைப் பறிகொடுத்தாள். இன்று போர்ப்பறை கேட்டதும்

                அவள் தன் ஒரே மகனை, இளஞ்சிறுவனைக் கையில் வேல்தந்து போருக்கு

                அனுப்பிவைத்தாள்”

என்றசெய்தி புறநானூற்றில் வருகிறது.

                “போரில் என் மகனுக்கு முதுகில் காயம் பட்டிருந்தால் அவனுக்குப்

                பாலூட்டிய என் மார்பை அறுத்தெறிவேன்”

என்று சூளுரைத்தாள் ஒரு பெண். தன் மகன் மார்பில் காயம் பட்டு மாண்டு கிடப் பதைக் கண்ட பெண் ஒருத்தி அவனைப் பெற்ற நாளில் உற்ற மகிழ்ச்சியைவிட அதிகமான உவகை கொண்டாள் என்றும் சங்க இலக்கியக் கவிதை சொல்கிறது. இன்னொரு தாய் சொல்கிறாள்:

              sangakaalappor5
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

                யாண்டுளனோ என வினவுதி என்மகன்

                யாண்டுளன் ஆயினும் அறியேன் ஓரும்

                புலிசேர்ந்து போகிய கல்லளைபோல

                ஈன்ற வயிறோ இதுவே

                தோன்றுவன்மாதோ போர்க்களத்தானே.

“என் மகன் எங்கிருக்கிறான் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவன் போர்க்களத்தில்தான் நிச்சயமாக இருப்பான்” என்கிறாள். இவையனைத்தும் அக்காலத்தில் சிறுவர்கள் போரில் ஈடுபட்ட அல்லது ஈடுபடுத்தப்பட்ட செய்தியைத் தெரிவிக்கின்றன.

சிறுவர்கள், கட்டாயமாகப் போர்புரிய அனுப்பப்பட்டிருந்தால் போரைவிட்டு ஓடி வந்துவிடுவதும் நிகழ்ந்திருக்கக்கூடும்.

                “ஆய்பெரும் சிறப்பின் சிறுவன் பெயரத்

                தாய்தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்”

என்ற தொல்காப்பியத் தொடருக்கு “போர்க்களத்தில் சிறுவன் புறமுதுகிட்டான் எனக் கேட்டுத் தாய் வருந்தி வரும் தலைப்பெயல்நிலைக் காஞ்சியும்” என்று உரையாசிரியர்கள் பொருள் தருகின்றனர்.

மன்னர்களே சிறுவயது முதலாகப் போரில் ஈடுபட்டனர் என்று சங்கப் பாக்கள் குறிப்பிடுகின்றன. சான்றாக, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டி யன் நெடுஞ்செழியன் சிறுபிள்ளையாக இருந்தபோதே போர்செய்தவன் என்று புறநானூறு 77 குறிப்பிடுகிறது. “இவ்வளவு இளஞ்சிறுவனாக இருக்கும்போதே மிக்க வீரத்தோடு போர் செய்கின்றானே யார் இவன்?” என்று கேட்கும் புலவர் இடைக்குன்றூர் கிழார்,

                “தார்பூண்டு தாலி களைந்தன்றும் இலனே,

                பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே”

என்று கூறுவதை மிகையான கூற்று என்று வைத்துக் கொண்டாலும், பாண்டியன் சிறுவனாகவே இருந்ததை இப்பாட்டு அழுத்தமாகக் குறிப்பிடுகிறது என்று கருதலாம். மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பார்கள். அரசனே சிறுவயது முதல் போரிட்டான் என்றால், குடிமக்களும் அவ்வாறே இருக்க முனைந்ததில் ஆச்சரியமில்லை.

போர்க்குற்றங்கள்:

sangakaalappor4
மிகப்பெரிய போர்க்குற்றங்களுக்கு உதாரணமாக ஜெர்மனியின் ஹிட்லர் உருவாக்கிய ஆஷ்விட்ஸ் படுகொலையையும், அண்மையில் தமிழர்களைச் சிங்கள அரசு அழித்த படுகொலையையும் கூறலாம். எதிரி நாட்டில் போரில் ஈடுபடாத சாதாரண மனிதர்களை (சிவில் சொசைட்டி) பாதிக்கும்படியாக காரியங்களைச் செய்வது போர்க் குற்றங்கள் என்பதில் பெரும்பான்மையும் அடங்கும்.

ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின்படி, போர்க் குற்றங்கள் என்பன போரின் சட்டங்கள் அல்லது மரபுகளை மீறுதல் என்று வரையறுக்கப்படுகின்றன. அவை சாதாரண மக்களைக் கொலை செய்வது, அடித்துத் துன்புறுததுவது, ஆக்கிரமித்த இடத்தில் வாழும் குடிமக்களைக் கீழ்த்தரமாக நடத்துவது, அடிமை முகாம்களுக்கு மக்களை இடம்பெயர்ப்பது போன்றவை. போர்க்கைதிகளைக் கொலைசெய்தலும் தரக்குறைவாக நடத்துதலும், பிணைக்கைதிகளைக் கொலைசெய்தல், தேவையின்றிப் பெருநகரங்களையும் ஊர்களையும் அழித்தல், பிறவகையான குற்றங்கள் எனப் பலவும் போர்க்குற்றங்களில் அடங்கும்.

தமிழக அரசர்கள் இவற்றில் குறைந்தபட்சம் இரண்டு குற்றங்களையேனும் செய்தனர் என்பது இலக்கியத்தின் வாயிலாகத் தெரிகிறது. ஒன்று, ஆக்கிரமித்த இடங்களின் அரசர்களையும், அவற்றில் வாழும் குடிமக்களையும் கீழ்த்தரமாக நடத் துதல், இன்னொன்று நகரங்களையும் ஊர்களையும் அழிததல். இந்தக் குற்றங்களை அக்காலப் புலவர்கள் கண்டிக்கவில்லை, பலர் ஆதரிக்கவே செய்தார்கள், சிலர் அதைத் தவறென உணர்ந்தாலும், ஒரு புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டனர் என்றே தோன்றுகிறது.

எதிரி நாடுகளை எரிபரந்து அழித்தல்:

தோற்ற நாட்டில் ஏர்பூட்டி உழுது அதில் எருக்கு, கொள் போன்றவற்றை விதைத்து, தன் வெற்றியைப் பறைசாற்றுவது அக்கால அரசர் வழக்கம். பதிற்றுப்பத்து-13இல், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாராட்டும் குமட்டூர்க் கண்ணனார்,

                “கூற்றடூஉ நின்ற யாக்கைபோல

                உள்ளுநர் பனிக்கும் காடு ஆயினவே

                பூத்தன்று பெரும நீ காத்த நாடே”

என்று பாராட்டுகின்றார். அதாவது, “உன் பகைவர்களின் நாடுகள் எமன் உயிரைக் கவர வந்த மக்களின் உடல்கள் போலக் காண்பவர் நினைத்தாலும் கண்ணீர் விடக் கூடிய காடுகள் ஆயின, ஆனால் நீ காக்கும் நாடு மட்டும் பூத்து வளத்தோடு இருக் கிறது” என்பது கருத்து.

                எரியூட்டி எதிரி நகரங்களை அழிப்பதும் வழக்கமாக இருந்தது.

                “வாடுக இறைவ நின் கண்ணி, ஒன்னார்

                நாடுசுடு கமழ்புகை எறித்தலானே”

என்று பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடுகிறார் காரிகிழார் (புறம். 6). “பிறருடைய நாட்டைச் சுடுகின்ற புகையினால் உன் மாலை வாடட்டும்” என்று பாடுவது பிறர் நாட்டை அழிப்பதைக் கவிஞர் ஏற்றுக்கொள்வதைக் காட்டுகிறது.

                “நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு

                இறங்குகதிர்க் கழனிநின் இளையரும் கவர்க.

                நனந்தலைப் பேர் ஊர் எரியும் நைக்க

                நின் நெடுவேல் ஒன்னார் செகுக்கினும் செகுக்க”

என்று பாண்டியன் நன்மாறனைக் காரிக்கண்ணனார் புறநானூறு 57இல் பாடுகிறார். “நீ பிறர் நாட்டைக் கைப்பற்றும்போது, உன் இளைஞர்கள் அவர் நாட்டுக் கழனிகளைக்  கொள்ளையடிக்கட்டும். பெரிய ஊர்களைக் கொளுத் தினாலும் கொளுத்தட்டும். உன் வேலும் பகைவரைக் கொன்றாலும் கொல்லட்டும்” என்று சொல்வது போர்க் குற்றங்கள் இயற்றுவதைப் பாராட்டும் செயலே ஆகும்.

                “தாய் இல் தூவாக் குழவிபோல

                ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே”

என்று பரணர், இளஞ்சேட்சென்னியைப் பாராட்டுவது, (புறநானூறு 4) உள்ள நிலையை அப்படியே காட்டுகிறது.

ஒரு புன்முறுவலோடு இக்கொடுமைகளைப் புலவர்கள் ஏற்றுக்கொண்ட நிலையை நெட்டிமையார் பாட்டில் காண்கிறோம்.

                பாணர் தாமரை மலையவும், புலவர்

                பூநுதல் யானையடு புனைதேர் பண்ணவும்

                அறனோ மற்றிது விறல்மாண் குடுமி,

                இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு

                இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே? (புறம் 12)

என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடும்போது, “பிறரைக் கொடுமைப்படுத்தி, உனக்கு வேண்டிய புலவர் பாணர் போன்றோருக்கு ந்னமை செய்கின்றாயே, இது நியாயமா” என்று கேட்கும் தொனியில் இதை நாம் உணர்கிறோம்.

வேறுசில போர்க்குற்றங்கள்:

தமிழ் அரசர்கள் நடத்தியபோர், நாட்டை விரிவு படுத்துவதற்காகவும், கொள்ளையடிப்பதற்காகவும் மட்டுமன்று. போர்க்கைதிகளான எதிரிமன்னர்களைத் தங்கள் முன் காலில் விழவைத்துப் பெருமிதம் அடைதலும் காரணமாக இருந்தது. போரில் தோற்ற பகைமன்னர்களைக் கைப்பற்றி அழைத்துவருவது வழக்கம். இவர்கள் கொண்டி மன்னர் எனப் பட்டனர்.

போர் எதிரிகளைக் குறிக்கும் சொல்லாகச் சங்ககாலத்தில் பயன்படும் வட்கார் என்ற சொல், வணங்காதவர்கள் அல்லது தனக்கு அடங்காதவர்கள் என்பதைக் குறிக்கும். வட்காரை (வணங்காதவர்களை) வணங்கவைப்பது சங்ககாலப் போர்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இன்றைய மதிப்புகளின் அடிப்படையில் இதுவும் தவறான செயலே. இன்னொரு நாட்டின் அரசன் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வது குற்றமா என்ன?

ஆனால், தமிழ் அரசர்களின் ஒரு நல்ல பண்பு, எக்காலத்திலும் தமிழ் அரசர்கள் போரில் வென்ற நாட்டைத் தாங்களே வைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. (அதாவது காலனியப் படுத்தவில்லை.) எதிரி அரசனைத் தோற் கடித்து அவமானப்படுத்தினாலே போதும் என்று கருதினார்கள் போலும்!

                “வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின் தண்டமும் தணிதி”

என்று இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் புறநானூறு 10இல் பாடியுள்ளார். இதனால் காலில் விழுந்து இறைஞ்சினால் வேறு தண்டனை எதுவுமின்றிப் பிற அரசர்களை விட்டு விடுதல் வழக்கமாக இருந்தது என்று கருதலாம்.

பெருவேந்தர்கள் சிலர் மட்டும் எதிரி அரசர்களைக் கைப்பற்றிச் சிறையில் அடைத்ததாகத் தெரிகிறது. சான்றாகக் கணைக்கால் இரும்பொறை என்ற சேர அரசனைச் சோழன் செங்கணான் சிறையில் அடைத்திருந்தான். அச்சேர அரசன் கேட்டபோது உடனே குடிக்கும் நீர் கிடைக்கவில்லை. அதனால் அவன் நீர் குடிக்காமலே உயிர் துறந்தான் என்ற செய்தி கிடைக்கிறது. பாண்டியன் நெடுஞ்செழியன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைச் சிறையில் அடைத்த செய்தியும் சங்க இலக்கியத்தில் வெளிப்படுகிறது.

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமான் திருமுடிக்காரியை வென்றதுடன் நிற்காமல், அவனுடைய மக்களை யானைக்காலில் இட்டு இடற நினைத்தான். இதுவும் போர்க்குற்றமே. அச்சமயத்தில் கோவூர்கிழார் என்னும் புலவர் மலையமானின் பெருமையை எடுத்துக்கூறி, அந்த இளஞ்சிறுவர்களைக் காப்பாற்றிய செய்தியை புறநானூறு 46ஆம் பாடல் தெரிவிக்கிறது.

எதிரிநாட்டு ஒற்றர்களுக்கு மரணதண்டனை வழங்குவது அக்காலத்திய செயல். அதனால் நலங்கிள்ளியிடமிருந்து வந்த இளந்தத்தன் என்னும் புலவனை ஒற்றன் எனக் கருதி நெடுங்கிள்ளி கொல்லப்புகுந்ததில் தவறில்லை என்றாலும், அவன் கோவூர் கிழாரின் அறிவுரையை ஏற்று அப்புலவனைக் கொல்லாமல் விட்டான் என்ற செய்தி கிடைக்கிறது.

sangakaalappor2
பிறர் நாட்டைக் கைப்பற்றாமை:

பெரிய நிலைப்படை இருந்தால்தான் இன்னொரு நாட்டைக் கைப்பற்றித் தாங்களே வைத்துக்கொள்வது (‘காலனி ஆக்குவது’) சாத்தியம். அதனால் தான் சங்ககால அரசர்கள் கொள்ளையோடு நிறுத்திக்கொண்டார்கள் என்று தோன்று கிறது. ஆனால் இதனை முடிந்த முடிபு எனக் கொள்வதற்கில்லை.

ஏனெனில், நிலைப்படை வைத்திருந்த பிற்கால மன்னர்களும் காலனி யாதிக்கத்தில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. வஞ்சினத்திற்கென சாளுக்கிய அரசன் புலிகேசியை வென்ற மாமல்ல பல்லவனும் சாளுக்கிய நாட்டைத் தன் காலனி ஆக்கிக்கொள்ளவில்லை. வணிக நோக்கில் ஸ்ரீவிஜய அரசைக் கைப்பற்றிய இராசேந்திர சோழனும், அதனைத் தனது காலனியாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. பிறர் நாட்டைக் கைப்பற்றி ஆள்வது ஒருகாலத்திலும் தமிழர்களின் இலட்சியமாக இருந்ததில்லை என்பது முன்பே கூறியதுபோல குறிப்பிடத்தக்க ஒரு தமிழர் நற்பண்பு.

தூது:

போரைத் தொடங்குமுன் பகைநாட்டு அரசனுக்குத் தூது அனுப்பும் வழக்கம் இருந்தது என்பதனை அதியமான் சார்பாக ஒளவையார் தூது சென்றதிலிருந்து அறியலாம். தூதுவர்களுக்கு இருக்கவேண்டிய சிறப்பான குணங்கள் பற்றித் திருக்குறள் குறிப்பிட்டுள்ளது. போர்செய்ய வேண்டாம் என்று எந்தப் புலவரும் எந்த அரசனுக்கும் அறிவுரை கூறியதாகத் தெரியவில்லை. அரசர்களும் எவரும் போர் வேண்டாம் என்று மறுத்ததாகவும் தெரியவில்லை.

ஆனால் சிலவகைப் போர்களைப் புலவர்கள் தடுத்துள்ளனர். புறம் 26இல் கிள்ளி வளவனை ஆலத்தூர் கிழார் பாடும்போது,

                “காவுதொறும் கடிமரம் தடியும் ஓசை

                தன் ஊர் நெடுமதில் வரைப்பின் கடிமனை

                இயம்ப, ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு

                மலைத்தனை என்பது நாணுத் தகவுடைத்தே”

என்று சொல்கின்றார். எதிரிநாட்டு அரசன் வந்து தன் காவல் மரங்களை வெட்டு கின்ற நிலையிலும் காணாதிருப்பதுபோல் பாவனை செய்யும் அரசனோடு போர் செய்வது வெட்கத்திற்குரியது என்பது கருத்து.

உள்நாட்டுப் போரா?:

                நாட்டைக் காப்பாற்றுவது அரசர்களின் பணி என்பதை அரசர்களும் யாவரும் ஏற்றுக்கொண்ட போதிலும், தங்கள் எல்லைக்குட்பட்ட பாலைநிலங்களில் வாழ்ந்த, கொள்ளையடித்து வாழ்க்கை நடத்திவந்த எயினர், வேடுவர், மறவர் போன்றவர்களை அரசர்கள் கண்டித்துத் திருத்தியதாகவோ தண்டித்ததாகவோ தெரியவில்லை. மாறாக, அவர்களைத் தக்க நேரத்தில் படைகளில் சேர்த்துக் கொண்டதற்கான சான்றுகளே உள்ளன. (இவர்களை ஆங்கில அரசாங்கம், குற்றச் சாதியினர் என்று கூறி அவமரியாதை செய்தது.)

                “செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்

                அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத் …

                துன் அருங்கவலை நின் நசை வேட்கையின்

                இரவலர் வருவர், … அவர்

                இன்மை தீர்த்தல் வண்மையானே” (புறம் 3)

என்று இரும்பிடர்த்தலையார் கூறும்போது அவர் இரவலர்கள் வண்கண் ஆடவர் களுடைய அம்பினால் வீழ்ந்ததைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தோன்றவில்லை. அவர்களைத் தண்டிக்கவேண்டும் என்று அரசனிடம் வேண்டவுமில்லை. ஆனால் எப்படியேனும் அவர்களிடம் தப்பிப்பிழைத்துவந்த இரவலர்களுடைய வறுமையைத் தீர்க்க வேண்டும் என்றுமட்டும் வேண்டுகின்றார் என்பது விசித்திரமாகத் தெரிகிறது.

பொதுவாக,  நீர்நிலைகளைப் பெருக்கவேண்டும் என்றும், விவசாய மக்க ளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் புலவர்கள் வேண்டியுள்ளனர். விவசாயம் இல்லாவிட்டால் போர் நடைபெற இயலாது என்பதையும் புலவர்கள் மன்னர்க ளுக்கும் எடுத்துரைத்துள்ளனர்.

                “பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை

                ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே,..

                பகடுபுறந்தருநர் பாரம் ஓம்பிக்

                குடிபுறந்தருகுவை ஆயின் நின்

                அடிபுறந்தருகுவர் அடங்காதோரே”

என்று வெள்ளைக்குடி நாகனார் கிள்ளிவளவனுக்குக் கூறும் தெளிவான அறிவுரை யினால் இதனை அறியலாம்.

தனியழுக்கமும் பொது (சமூக) ஒழுக்கமும்:

இந்திய ஒழுக்க மரபுகள் யாவுமே தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவன வாகவே உள்ளனவே அன்றி, பொது அல்லது சமூக ஒழுக்கத்தை வலியுறுத்து வனவாக இல்லை. எனவே புலவர்கள் அரசர்களுக்கு அறிவுரை கூறும்போதும் தனி மனித நிலையில் நின்று ஒழுக்கத்திற்கான அறிவுரைகள் கூறியுள்ளனரே அன்றி, பொதுவாக மக்களை பாதிக்கின்ற சமூக ஒழுக்கங்கள் பற்றி எவரும் கூறவில்லை. போர் தொடர்பான விதிகள் வரையறுத்துச் சொல்லப்படாமைக்கு நம் நாட்டின் இந்த மரபும் காரணமாகலாம்.

அக இலக்கியத்திற்கு மட்டும் அறநோக்கு வகுக்கப்பட்டமையும், புற இலக்கி யத்திற்கு அறநோக்கு வகுக்கப்படாமையும் தமிழர்களின் பண்பினை இன்றுவரை பாதித்துள்ளது. இன்றும் நாம் தனிப்பட்ட ஒழுக்கத்தை மட்டுமே மதிக்கிறோம். ஒருவன் குடிப்பதில்லை, புகைபிடிப்பதில்லை, பிறபெண்களை நோக்குவதில்லை என்பதைப் பாராட்டுகிறோம். ஆனால் அவன் லஞ்சம் வாங்குகிறானா, கொள்ளை யடிக்கிறானா, பிறரது நிலங்களைக் கவர்ந்துகொள்கிறானா, தவறான வழிகளில் சொத்து சேர்க்கி றானா என்பதையெல்லாம் கவனிப்பதில்லை என்பது மட்டுமல்ல, தவறான வழிகளில் சொத்துசேர்ப்பதையும் வரிகொடுக்காமல் ஏய்ப்பதையும், பொது நலனை பாதித்தாவது கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பதையும் பாராட்டவே செய்கி றோம். சமூக ஒழுக்கம் என்பது நமக்கு (பொதுவாக இந்தியர்களுக்கும்தான்!) அறவே கிடையாது. பெரியபெரிய செயல்களைக்கூட விடுங்கள், சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதில், போக்குவரத்தில் வரிசையில் செல்வதில், கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில்…இவைபோன்றவற்றில் பொதுவிதிகளைக் கருதும் மனிதர்கள் எத்தனை பேர்?

சங்க இலக்கியமும் தனிப்பட்ட ஒழுக்கம்பேணும் மரபையும் சமூகஒழுக்கம் பேணாத் தன்மையையும் வரையறுப்பதாக அக்காலத்திலேயே அமைந்துவிட்டது.

sangakaala-pormurai1
போர் என்பது கொடிய செயல். எந்தக் காலப்போராயினும் மனிதர்களை அழித்தலும், கொள்ளையிடுதலும், மகளிர்-சிறார்-முதியோர் போன்றவர்களைத் துன்புறுத்தலும் இயல்பாக நடப்பவையே. தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்துகின்ற, தனிமனிதக் கொலையைக் கேவலமாக நினைக்கின்ற இக்காலப் பண்பட்ட சமூகங் கள், ஒட்டுமொத்தமான மனிதப் பேரழிவைப் போர் என்ற பெயரில் வரவேற் கின்றன. இக்காலத்தில் போருக்கென ஐ.நா. போன்ற அமைப்புகள் துல்லியமான விதிகளை வரையறுத்து வைத்திருந்தபோதிலும் போரில் ஈடுபடும் எந்த நாடும் அவற்றைச் சட்டைசெய்வதே இல்லை. மாறாக, பெரும் வல்லரசுகள் உலகத்தைப் பன்முறை அழிக்கக்கூடிய பலவகை ஆயுதங்களைத் தம்மிடம் வைத்துள்ளன. அக்காலப் போர்கள் தனிமனித அழிப்பில் நிறைவு கொண்டன, இக்காலப் போர்கள் வெகுஜன அழிப்பில் ஈடுபடுகின்றன என்பது ஒன்றுதான் வித்தியாசமாக உள்ளது. போரினால் ஏற்படும் நாடழிவு தொழிலழிவு முதலியவை அவ்வக்காலப் போர்க் கருவிகளுக்கேற்ப மாறுபடுகின்றன.

போரே இல்லாத சமுதாயம்தான் மிகவும் மேம்பட்ட சமுதாயம் ஆகும், மனிதன் பண்பட்டவன் என்பதைக் காட்டுவதும் ஆகும். போரினால் ஏற்படும் அழிவு ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் இராணுவத்திற்கெனச் செலவிடும் தொகை யினை ஆக்கபூர்வச் செயல்களுக்கெனச் செலவிட்டால் உலகில் எங்கும் வறுமையும் கல்வியறிவின்மையும் வேலையின்மையும் போன்ற கொடுமைகளே இருக்கமாட்டா என்பதனை எத்தனையோ சான்றோர்கள் எத்தனையோ விதங்களில் அறிவுறுத்தியுள்ளனர். போர்விதிகள், ஒழுங்குமுறைகள் பற்றிய ஆய்வெல்லாம் இறுதியில் போரற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கே பயன்படவேண்டும்.


தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி

thamiz01
க. பூரணச்சந்திரன், திருச்சி. 

தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி என்ற தலைப்பில் ஒரு புறநிலையிலான, ஆய்வு பற்றிய ஆய்வாக-metaresearch ஆக இக்கட்டுரையை, இக்-கட்டு-உரையை, இக்கட்டு-உரையை நான் அமைக்கவில்லை. மாறாக, தமிழ் ஆய்வுபற்றிய எனது சில மனப் பதிவுகளை-எண்ணங்களை இங்குக்கூற நினைக்கிறேன்.

தமிழ் ஆராய்ச்சி வளர்ந்திருக்கிறதா இல்லையா? ஆமாம் என்று அடித்துக் கூறவும் முடியாத, இல்லை என்று அறவே ஒதுக்கிவிடவும் இயலாத ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் இன்று நாம் இருக்கிறோம். இவ்வாறு சொல்வதற்குப் பல காரணங்கள் உண்டு.

முதலில் வளர்ந்துள்ளதா என்ற கேள்வி, எங்கிருந்து, எந்தக் கட்டத்திலிருந்து என்ற கேள்வியை உள்ளடக்கியது. சங்ககாலத்திலிருந்து வளர்ந்திருக்கிறதா? 18ஆம் நூற்றாண்டிலிருந்தா? 19ஆம் நூற்றாண்டிலிருந்தா? 2001இலிருந்தா? எங்கிருந்து? பொதுக்கருத்துநிலையில் இருபதாம் நூற்றாண்டிலிருந்து என்று பெரும்பாலும் பொருள் கொள்கின்றனர் பலர்.

இரண்டாவது, மாற்றம் என்பது எந்தத் துறையிலும்-வாழ்க்கையின் அத்த னைக் களங்களிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் மாற்றம் என்பது வளர்ச்சியாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஏற்றம் போலவே இறக்கமும் மாற்றம்தான். ஒரு துறையில் கட்டாயமாக ஏற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இறக்கமும் இருக்கலாம்.

இவை ஒருபுறம் இருக்க, ஆராய்ச்சி, திறனாய்வு இரண்டிற்குமான வேறுபாடுகளை முதலில் நோக்கவேண்டும். ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் research, criticism என்ற சொற்களில் எவ்விதக் குழப்பமும் இல்லை. ஆனால் தமிழில் ஆய்வு, திறனாய்வு என்ற இருசொற்களிலும் ஆய்வு என்ற சொல் இடம்பெறுகிறது. இது குழப்பத்திற்கு ஓரளவு வித்திடுகிறது. இரண்டின் அடிப்படைகளும் வெவ்வேறு. இரண்டையும் ஒன்றாக இணைத்துப்பார்க்கத் தேவைஇல்லை. நான் முதுகலை ஆங்கிலம் படிக்கும் போது The Scholar Critic என்ற அரிய நூலைப்படித்தேன். ஆசிரியர் பெயர் Bates அல்லது Bateson என்று ஞாபகம். அது இருதுறைகளையும் இணைத்து விரிவாக நோக்கிய ஒரு நூல்.
நடுநிலை நோக்கு என்பதே இயலாத ஒன்று என்று இன்று பின்னமைப்பிய வாதிகள் கூறிவருகின்றனர். ஆனால் நடுநிலை நோக்கினை அவாவுகின்ற நிலையிலேனும் எழுவதுதான் ஆராய்ச்சி. திறனாய்வு அப்படியில்லை. அதில் மதிப்பீடுதான் முக்கியமானது.

தனது கருத்தைச் சொல்லும் ஒருவர், அதற்கான நியாயப்படுத்தல்களை வழங்கவேண்டும் என்பதுதான் திறனாய்வு. ஆராய்ச்சியிலும் முடிவுரைத்தல் உண்டு என்றாலும் அதன் தன்மை வேறு. ஆராய்ச்சியில் இலக்கியப் பண்பு சார்ந்த திறனாய்வு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தமிழ் ஆராய்ச்சியின் துறைகள், களங்கள் பலவாக இன்றைக்கு விரிந்துள்ளன. மொழியியல்சார்ந்த ஆய்வு, ஒப்பிலக்கியம் போன்ற துறைகள் புதிதாக உருவாயின. அறிவியல் தமிழ் நான்காம் தமிழ் என்று பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அமைப்பியம் பின்னமைப்பியம் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிய நோக்கு பல புதிய சிந்தனைப்பாதைகளைத் திறந்து விட்டிருக்கிறது.

ஆய்வு வரலாற்றைச் சொல்லுகின்ற நூல்கள் சிலவற்றை புதுவைப்பல்கலைக் கழகப் பேராசிரியர் மதியழகன் தமது தமிழாய்வு திறனாய்வு வரலாறு என்ற நூலில் கொடுத்துள்ளார். ஆனால் அப்பட்டியல் குறையுடையது. தனிநாயக அடிகள், தி.முருக ரத்தனம், அன்னி தாமஸ், தமிழண்ணல், அ.அ. மணவாளன் போன்றவர்கள் செய்த அடைவுகளைக் குறிப்பிட்டுள்ளார். “பழைய இலக்கிய இதழ்களான செந்தமிழ், செந் தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில் போன்றவற்றில் இடம்பெற்ற கட்டுரைகளைத் தொகுத்து மதிப்பீடு செய்தால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய திறனாய்வுப்போக்கை உணரமுடியும்” என்றும் சொல்கிறார். ஏற்கெனவே செந்தமிழ் இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் அடைவை (பெயர்கள்-ஆசிரியர்-ஆண்டு மட்டும்) மதுரைத் தமிழ்ச்சங்கமே வெளியிட்டுள்ளது. சிறந்ததொரு தேர்ந்தெடுத்த அடைவினை பா.ரா. சுப்பிரமணியன் தொகுத்திருக்கிறார். இவையிரண்டும் நூல்களாக வெளிவந்துள்ளன. அதே அடிப்படையில் நான் தமிழ்ப்பொழில் இதழில் வெளிவந்த கட்டுரைகளை (1925-1980) நான் தொகுத்திருக்கிறேன். இது நூல்வடிவம் பெறவில்லையாயினும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உள்ளது. பலர் இதைப் பயன் படுத்தியுள்ளனர்.

இந்த முயற்சி, தமிழ்ப்பொழிலின் ஆய்வுத்திறனை வெளிப்படுத்துவ தற்காக மேற்கொண்ட எனது பிஎச். டி. ஆய்வின் (தமிழ்ப்பொழில் தந்த தமிழ் ஆய்வு) ஒரு பகுதி. ஆனால், தமிழ்ப்பொழில், செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி ஆகியவற்றில் ஆய்வுமேற்கொள்வோர் அதன் வாயிலாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய ஆய்வுப்போக்கினை உணரமுடியுமே தவிர, திறனாய்வுப் போக்கினை உணரமுடியாது. நாம் இன்று திறனாய்வு என்ற சொல்லை எந்த அர்த்தத்தில் கையாளுகின்றோமோ அந்த அர்த்தத்தில் அவர்கள் செய்யவில்லை. தமிழ்ப்பொழில் இதழை மதிப்பிட்ட எனது ஆய்வேட்டின் முடிவுகளில் மிகத் தெளிவான ஒன்று, அவ்விதழ் இலக்கண, இலக்கிய, கல்வெட்டு, வரலாற்று ஆய்வுகளுக்கு உதவியுள்ளது, ஆனால் திறனாய்வு நோக்கு அதில் அறவே இல்லை என்பது. வருத்தத்துக்குரிய செய்தி, செந்தமிழ்ச் செல்வி இதழ்க்கட்டுரைகள் இதுவரை இப்படித் தொகுக்கப் பெறவில்லை.
தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் சென்ற நூற்றாண்டு முதல் இந்த நூற்றாண்டுவரை அறிவியல் இதழ்களில் வெளிவந்துள்ள கட்டுரைகளின் அடைவை வெளியிட்டுள்ளார்.

மேலும் மதியழகன் தமது நூலின் முன்னுரையில் க. பஞ்சாங்கத்தின் நூலைக் குறிப்பிட்டுள்ளார். 1983இலேயே அதைவிட விரிவாக எழுதப்பட்ட-ஆனால் இரண்டு ஆண்டுகள் முன்புதான் வெளியிடப்பட்ட எனது தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு என்ற நூலைக் குறிப்பிடவில்லை. பக்.20-21இல் திறனாய்வுக் கோட்பாடுகள் குறித்த நூல்கள் என்பதிலும் என்னுடைய அமைப்புமையவாதம், செய்தித்தொடர்பியல் கொள்கைகள் (குறியியல் கோட்பாடுகள் பற்றியது) என்னும் நூல்கள் சேர்க்கப்பெற வில்லை.

(அடிக்குறிப்பு-மதியழகன் நூலைப்பற்றி இங்கே குறிப்பிட்டதனால், இக்கருத்தையும் இங்கே சொல்லத் தோன்றுகிறது. ப.92இல் “பின்நவீனத்துவ நோக்கில் பண்டைய இலக்கியங்களை அணுகிய க.பூரணச்சந்திரன் சங்க இலக்கியங்களுக்குப் புதிய விளக் கங்கள் கொடுத்துள்ளார். பின்நவீனத்துவம் இலக்கிய விமரிசனம் செய்யவில்லை என்று கூறிவிட்டுப் புதிய நோக்கில் விமரிசனம் செய்திருப்பது எடுத்துக்கொண்ட பின்நவீனத்துவக் கொள்கைக்கு முரண்பட்டதாகவே தோன்றுகிறது” என்று அவர் தமது நூலில் கூறியிருக்கிறார். இங்கு அவரிடம் ஒரு கருத்துக்குழப்பம் காணப்படு கிறது. அமைப்பியம், பின்னமைப்பியம் போன்றவை தத்துவங்கள் மட்டுமல்ல, அவற்றின் அடிப்படையிலான விமரிசனமுறைகளும்கூட. தகர்ப்பமைப்பும் பின்ன மைப்பிய முறைக்குத் தொடர்புடைய ஒன்றுதான். அவற்றின் அடிப்படையில் விமரிசனம் செய்கிறோம். பின்நவீனத்துவம் என்பது ஒரு படைப்பு முறை. நான் எங்கும் பின்நவீனத்துவ நோக்கில் விமரிசனம் செய்கிறேன் என்று குறிப் பிடவே இல்லை. குறியியல், பின்னமைப்பிய, தகர்ப்பமைப்பு நோக்கில் விமரிசனம் செய்வதா கவே கூறியுள்ளேன் என்பதை அன்புகூர்ந்து நோக்கவும். மேலும் இந்தக் கோளாறு பிரேம்-ரமேஷ்-சாரு போன்றோர் நூல்களில்தான் உண்டு. பின்னமைப்பியத்திற்கும் பின்நவீனத்துவத்திற்கும் வேறுபாடு தெரியாமல், ‘பின்நவீனத்துவ நோக்கில் இது’, ‘பின் நவீனத்துவநோக்கில் அது’ என்றெல்லாம் தலைப்பிட்டு எழுதுபவர்கள் கட்டுரைகளை மதியழகன் காணவும். மேலும் அதே பக்கத்தில் “அமைப்பியல் பின்னமைப்பியல் போன்றவை தத்துவங்களை, மையங்களை விமரிசிக்க வந்தவையாகும்” என்ற தொடரும் இடம் பெற்றுள்ளது. அமைப்பியத்திற்கு மையம் உண்டு. அதனால்தான் எனது முதல் நூலுக்கு அமைப்புமையவாதமும் பின்னமைப்புவாதமும் என்று பெயர்வைத்தேன். இரண்டாவது, எந்த ஒரு தத்துவமும் இன்னொரு தத்துவத்தை விமரிசிப்பதே ஆகும்.)

தமிழ் ஆராய்ச்சி வரலாற்றில், ஆய்வடங்கல்கள், நூலடைவுகள் ஆகியவற்றிற் கான சிறப்பிடம் உண்டு. ஆனால் தமிழ் ஆராய்ச்சி வரலாறு என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் குறையுடையனவாகவே உள்ளன.
தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தோன்றிய ஆராய்ச்சி சமய/மத ஆராய்ச்சி. இது செய்யுள் வடிவில், மணிமேகலை, நீலகேசி போன்ற நூல்களிலேயே தொடங்கி விட்டது. நீலகேசி உரையாசிரியர், சிவஞான முனிவர் போன்ற உரையாசிரியர்கள் இந்த விஷயத்தில் பெருந்தொண்டு ஆற்றியுள்ளனர். தங்கள் மதக் கருத்துகளை வலியுறுத்துதல் (சுபக்கம்), பிறமதக் கருத்துகளை ஆராய்ந்து மறுத்தல்(பரபக்கம்) அல்லது ஒரோவழி உடன்படுதல் இந்த ஆராய்ச்சியின் சாராம்சம். வீரமாமுனிவர் காலம் முதல் இது பரவலாக வெளிப்பட்டது. தங்கள் கொள்கைகளை ஆதரித்தும், சைவ வைணவக் கொள்கைகளை மறுத்தும் கிறித்துவர்கள் எழுத, அவை தவறு என்று சித்தாந்த வித்தகர்களாகிய சிவஞான முனிவர் போன்ற தமிழ் அறிஞர்கள் எழுத, ஒரே களேபரம்தான். குறிப்பான ஒரு விஷயம், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்தச் சண்டையைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்படிப்பட்ட மத ஆராய்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது.

கால அடிப்படையில் தமிழ்மொழியில் இரண்டாவதாகத் தோன்றிய ஆராய்ச்சி, இலக்கிய இலக்கண உரைகள். பலபேர் உரையாசிரியர்களைத் திறனாய்வாளர்கள் அல்லது திறனாய்வு முன்னோடிகள் என்று தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார் கள். உரையாசிரியர்களின் நோக்கில் மதிப்பீடு கிடையாது. மதிப்பீட்டுக்கு அடிப்படை யான ஒப்பீடும் கிடையாது. ஆனால் எடுத்துக்கொண்ட நூலின் அமைப்பை விவரித் தல், அதில் இலக்கண ஆய்வு அடிப்படையில் குறிப்புரைகள் தருதல், பொருள்கோள் முறையைத் தெரிவித்தல், தங்கள் நோக்கில் விரிவான அல்லது செறிவான உரையை வழங்குதல் போன்ற தன்மைகள் உண்டு. இவை யாவும் ஆராய்ச்சியின்பாற் பட்டவை. (மதஅடிப்படையில் சுயஸ்தாபனமும் பரநிராகரணமும் செய்த நீலகேசி உரையாசிரியர் முதலியவர்களையும் இங்கே இணைத்து நோக்கினால், உரையாசிரியர்கள்தான் நமது முதல் ஆராய்ச்சியாளர்கள்.)
உரையாசிரியர்களுக்கும் அக்காலக் கவிஞர்களுக்கும் துணையாக எத்தனையோ மடங்கள், ஆதீனங்கள் இருந்துள்ளன என்பது நமக்குத் தெரியும். ஏறத்தாழ உ.வே. சுவாமிநாதையர் காலம் வரை ஆதீனங்கள்தான் தமிழ்க்கல்விமுறையையும், படைப்பு முறையையும் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றன. குறிப்பிட்ட வகைப் படிப்பு முறை என் பதே பின்னர் எவ்வகையான தமிழ் இலக்கியங்கள் காப்பாற்றப்படவேண்டும், படிக்கப் படவேண்டும் என்பதற்கான அளவுகோலாக மாறியிருக்கும்.

மேற்கண்ட இருவகை முயற்சிகளுக்கும் பின்னால் தோன்றியவை பதிப்பு முயற்சிகள். பதிப்புகளில் பலவித ஆய்வுக்குறிப்புகள் உண்டு. முதன்முதலில் தமிழில் அச்சுப்பதிப்பான நூல் திருக்குறள். 1812ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதனை அக்காலத்தில் வெளியிட்டவர்கள் தாங்கள் அதைப் பிழைநீக்கிய சுத்தப் பதிப்பாகக் கொண்டுவர எத்தனை முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்பதைக் குறித்திருக்கி றார்கள். மூலப்பதிப்பாய்வு தோன்றும் முன்னரே சுத்தப்பதிப்பு என்பதை மேற் கொள்ள இவர்கள் செய்த முயற்சிகள் அருமையானவை.
அதற்குப் பிறகு தொடங்கிய ஆராய்ச்சி கால ஆராய்ச்சிதான். சுந்தரம் பிள்ளை காலத்திலேயே கால ஆராய்ச்சி தொடங்கிவிட்டது. கால ஆராய்ச்சியோடு சமூக வருணனைப் பார்வையும் சேர்ந்துகொண்டது வி. கனகசபைப் பிள்ளை போன்றவர்க ளால். இந்தப் போக்கு 1950வரை தொடர்ந்தது. சாணக்கியனின் நூலுக்குப் பின்னால் திருக்குறள் எழுந்து அதைக் காப்பியடித்ததா? திருக்குறளுக்குப் பின்னால் கௌடில் யம் எழுந்ததா போன்ற ஆய்வுகளை 1960கள் வரை கண்டிருக்கிறேன்.

ஒப்பிலக்கியம் என்றதொரு புதிய துறை 1980வாக்கில் தமிழ்த்துறைகளில் புகுந் தது. கால ஆராய்ச்சி கொண்டு இது முன்னதா, அது முன்னதா என்று ஆராய்ச்சி செய்வது ஒப்பிலக்கிய ஆய்வே அல்ல என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

காலஆராய்ச்சியை ஒட்டி எழுந்த இன்னொரு விஷயம் புதியஉரை எழுதுவது. இதுவும் 1950கள் வரை தொடர்ந்தது. உ.வே. சாமிநாதையர், இரா. இராகவையங்கார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை, சோமசுந்தரனார் போன்ற சிலர்இத்துறையில் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளனர். பிறகு ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு உரை எழுதுதல் என்ற விஷயம் தூங்கிவிட்டது. இப்போது பழைய உரைப்பதிப்புகள் எவையும் கிடைப்பதில்லை என்ற நிலையில் மீண்டும் உயிர்பெற்று இன்றைக்குத் தக்கார்-தகவிலார் யாவரும் சங்கஇலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை உரையெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கால ஆராய்ச்சியோடு ஒட்டிய ஆய்வு ஒப்பிலக்கிய ஆய்வு. இலக்கிய வரலாற் றாய்வுதான் பின்னர் ஒப்பிலக்கிய ஆய்வாக உருவெடுத்தது என்பதையும் மனத்திற் கொள்ளவேண்டும். தமிழில் கால ஆராய்ச்சி இலக்கிய வரலாற்று ஆய்வாகவோ ஒப்பி லக்கிய ஆய்வாகவோ சிறப்பாக உருப்பெறவில்லை. இது ஏன் என்பதை ஓரளவு கா. சிவத்தம்பி தமது தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் ஆராய்ந்துள்ளார். அவரும் முழுஅளவில் ஆராயவில்லை.
எந்த இலக்கிய ஆராய்ச்சிக்கும் அடிப்படை இலக்கியவரலாறுதான். தமிழில் இலக்கிய வரலாற்று நூல்களே இல்லை என்பது ஒரு முக்கியமான குறை. இந்தி மொழியைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அது அண்மையில் தோன்றிய மொழி என்று நம் தமிழாசிரியர்கள் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இந்தியின் இலக்கிய வரலாற்றைச் சொல்கின்ற விரிவான நூல்கள் பல உள்ளன. ஆயிரம் பக்க அளவில் விரிவாக எழுதப்பட்ட இந்தி இலக்கியவரலாற்று நூலை நானே பயன்படுத்தியிருக்கி றேன். தமிழில் மிக விரிவாக எழுதப்பட்ட ஒரே இலக்கிய வரலாற்று நூல் மு. அருணாசலத்தினுடையது மட்டும்தான். அதுவும் 9ஆம் நூற்றாண்டுமுதல் 16ஆம் நூற் றாண்டுவரைதான் உள்ளது. பிறகு சிற்சில குறிப்பிட்ட போக்கிலான நூல்கள்-மயிலை சீனி வேங்கடசாமியின் சமணமும் தமிழும் பௌத்தமும் தமிழும் போன்றவை உள்ளன. மற்றபடி பூரணலிங்கம் பிள்ளை, கா.சு. பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரன் முதல் ஜேசுதாசன், மு. வரதராசன் வரை எழுதியவை அனைத்தும் குறிப்புகளே. அதற்குப்பின் இளங்கலைத் தேர்வுப்பாடத்திட்டப் பட்டியல் நோக்கைத் தாண்டி நமது இலக்கிய வரலாற்று நூல்கள் முன்னேறவில்லை. உண்மை யில் நாம் செம்மொழி என்பதை நிறுவவேண்டுமானால் இன்று தேவையானது மிக விரிவான உண்மையான நேர்மையான ஒரு தமிழ் இலக்கிய வரலாற்று நூல்.

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஏற்பட்ட நிறுவனங்களின் ஆய்வுப் பணி குறிப்பிடத்தக்கது. எத்தனையோ தமிழ்ச்சங்கங்கள் சென்ற நூற்றாண்டில் எழுந் தன. மிகவும் குறிப்பிடத் தக்கவை மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி சைவசித்தாந்த சபை, சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகள். 1912ஆம் ஆண்டு அளவிலேயே தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒன்றைத் தோற்றுவிக்கவேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. அவ்வாறு முன் வைத்தவர்களில் மிகமுக்கியமானவர் பள்ளியகரம் நீ. கந்தசாமிப் பிள்ளை. 1924-25 அளவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தோன்றியபோது அதுவே தமிழ்ப் பல்கலைக்கழகம் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பற்றிய செய்திகளைத் தமிழ்ப் பொழில் இதழ்களில் காணலாம்.
பிறகு தமிழிசை வளர்ச்சிக்கென, தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்குவதற் கெனச் சில அமைப்புகள் எழுந்தன. தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்குவதில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பணி மிகவும் குறிப்பிடத் தக்க ஒன்று. தனி மனிதர்கள் என்ற அளவில் நீ. கந்தசாமிப் பிள்ளையும், கோவை கலைக்கதிர்இதழ் தாமோதரனும் பெரும் பணியாற்றியுள்ளனர்.

பல தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ்ஆய்வு, தமிழ்க் கலைச்சொற்கள் போன்றவற் றிற்கு உறுதுணையாக இருந்துள்ளன. குறிப்பாக யுனெஸ்கோ கூரியர் இதழின் தமிழ்ப் பதிப்பு (மணவை முஸ்தபா பல ஆண்டுகள் இதன் ஆசிரியராக இருந்தார்) தந்திருக் கும் உலகளாவிய விவரங்கள் மிகுதி. தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே பலவகையான இதழ்கள்-சாதி சார்ந்தவை, பெண்கள் சார்ந்தவை, அறிவியல் சார்ந் தவை என்றெல்லாம் எழுந்தவை-ஆற்றியுள்ள பணிகளும் மிகுதி. சிற்றிதழ்களைப் பொறுத்தவரை, அவை திறனாய்வை வளர்த்த அளவு ஆராய்ச்சிக்குப் பணியாற்ற வில்லை. அக்காலத்தில் தோன்றிய செந்தமிழ், தமிழ்ப்பொழில், சித்தாந்தம் போன்ற இதழ்களையோ, அண்மைக்கால ஆராய்ச்சி, இக்காலச் சமூகவியல் போன்ற இதழ்க ளையோ சிற்றிதழ்கள் என்று நோக்கமுடியுமா என்பது ஐயத்திற்குரியது.

இப்படி நோக்கிக்கொண்டே நாம் ஏறத்தாழ இருபதாம் நூற்றாண்டின் பிற் பகுதிக்கு வந்துவிட்டோம். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக் கழகம் போன்றவை தோன்றின. முன்பேஆராய்ச்சியாளர்கள் பல்கலைக்கழக அமைப்புகளைச் சேர்ந்தவர்களாகத்தான் ஓரளவு இருந்தனர் என்றாலும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தமிழ் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் பணியாற்றுபவர்களையே முற்றிலும் சார்ந்ததாகி விட்டது. இதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. ஆய்வுக்குத் தேவையான உதவி, கொடை போன்றவை எளிதில் கிடைத்தமை நன்மை. ஆய்வு ஆழமாக இல்லாமல் சிமெண்டுத் தரையில் தண்ணீர் பரவுவதைப்போன்று பயனின்றி அகன்று போய்விட்டது மிகப் பெரிய குறை.

1966இல் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது தொடங்கியது. இதன் வாயிலாகப் பல நாட்டுத் தமிழ் ஆர்வலர்களின், ஆராய்ச்சியாளர்களின் தொடர்பு ஏற்பட்டது நன்மை. ஆனால் ஒட்டுமொத்தமான விளைவு என்று நோக்கினால் இவற்றில் செல விடப்படும் தொகைக்கும் ஆய்வுக்கும் எவ்விதத் தொடர்புமே இல்லை.
கல்லூரிகளிலிருந்து பியூசி என்ற வகுப்பு நீக்கப்பட்டது முதலாகக் கல்லூரி ஆசிரியர்களுக்கு யுஜிசி உதவிபுரியும் ஆய்வுப்படிப்புகள், எஃப்ஐபி போன்ற வசதிகள் ஆகியவை கிடைத்தன. ஆனால் இவற்றால் என்ன பயன் விளைந்தது என்பதை நேர்மையாக எவரேனும் மதிப்பிட வேண்டும். என் கண்ணோட்டத்தில், குப்பைகள் பெருகின. தகுதியற்றவர்கள் மிகவும் உயர்ந்த பட்டங்களையும் அதனால் உயர்ந்த பதவிகளையும் பெற்றனர். அதனால் இன்னும் தரமற்ற, தகுதியற்ற ஆய்வுகள் பெருகின. இது ஒரு விஷச்சுழல் அல்லவா? இன்றைய மாணவர்கள்தானே நாளைய ஆசிரியர்கள், நெறியாளர்கள்? இவர்கள் எல்லாரும் எழுதுவதற்காகவே இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் முதலிய மன்றங்கள் தொடங்கப்பட்டன. பலன் என்ன?
தனிப்பட்ட முறையிலும், பல்கலைக்கழக மானியக்குழு சார்பிலும் முதலில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அவை பிறகு தேசியக் கருத்தரங்குகள் ஆயின. தொண்ணு£றுகளில் அவை சர்வதேசக் கருத்தரங்குகளாயின. ஆனால் கட்டுரைகளின் தரம் என்னமோ தொடக்கத்தில் இருந்த அளவுக்கும் குறைவுதான்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது தனிப்பட்டோர் முயற்சிகளே நல்ல ஆய்வுகளாக நிற்கின்றன. செல்வக்கேசவராய முதலியார், மறைமலையடிகள், மு. இராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, மயிலை. சீனி. வேங்கடசாமி, ந.மு. வேங்கட சாமி நாட்டார், வே. வேங்கடராஜுலு ரெட்டியார் என்று எத்தனையோ பெயர்கள் நமக்கு நினைவில் வருகின்றன. அவர்கள் காலத்தைத்தாண்டி சற்றே பின்னால் வந்தால் தெ.பொ.மீ,-மு.வ. சகாப்தம் ஆரம்பமாகிறது. சமகாலத்தில் வானமாமலை, பேராசிரியர் இராமகிருஷ்ணன் போன்ற சில மார்க்சிய அறிஞர்கள் சிறந்த ஆய்வுகளை அளித்துள்ளனர். இலங்கையிலிருந்தும் ஆ. வேலுப்பிள்ளை, க. கைலா சபதி, கா. சிவத்தம்பி, நுஃமான், சுப்பிரமணியம் போன்ற ஆய்வாளர்கள் வழி பல நூல்கள் கிடைத்துள்ளன. ஆய்வு வளர்ச்சியில் நிறுவனங்களின் பங்களிப்பு மிகக் குறைவு-தனிப்பட்டோர் ஆர்வமே சிறந்த பலன் தந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.

சிலர் குறிப்பிட்ட தனித்துறைகளைத் தங்களுக்கெனத் தேர்ந்துகொண்டு சிறந்த பணியாற்றியுள்ளனர். வடமொழி இலக்கியக் கோட்பாடுகளை அறிமுகம் செய்த கு. சுந்தரமூர்த்தி, பக்தி இலக்கியங்களை மட்டுமே ஆராய்ந்த வெள்ளை வாரணன், ப. அருணாசலம், சிற்றிலக்கிய ஆய்வைச் செய்த ந. வீ. ஜெயராமன், நாட்டார் இலக்கிய ஆய்வை முன்னெடுத்துச்சென்ற லூர்து, கிறித்துவஇலக்கிய ஆய்வை மட்டுமே மேற் கொண்ட இன்னாசி, மார்க்சியநோக்கில் சிற்றிலக்கியங்களைப் பார்த்த கோ. கேசவன், மொழியியல் நோக்கில் கவிதையாக்கத்தை விளக்கும் செ.வை. சண்முகம் போன்று எத்தனையோ பெயர்களைக் குறிப்பிடலாம். தலித்திய நோக்கில் மட்டுமே எழுதும் ராஜ்கௌதமன் போன்றோரையும் இதில் சேர்க்கலாம். நான் நினைவில் வந்த பெயர் களைக் குறிப்பிட்டிருக்கிறேன். இது தனியாகத் தொகுக்கப்பட வேண்டியதோர் பட்டியல்.

தமிழ்த்துறைக்குத் தொடர்பற்ற அ. மார்க்ஸ், பொ. வேலுச்சாமி, அம்பை போன்றவர்களும் ஆய்வில் ஈடுபட்டனர். பழங்கருத்தாக்கங்கள் சிலவற்றை உடைப்ப தில் இவர்களின் ஆய்வுகள் பயன்பட்டுள்ளன. குறிப்பாக அம்பை தமது பிஎச்.டி பட்ட ஆய்வுக்கெனத் தந்த A face behind the mask என்பது தமிழ்ப் பெண் சிறுகதையாளர்கள் பற்றிய, பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட சிறந்த ஆய்வுநூல்.

அண்மைக்காலத்தில், மார்க்சிய நோக்கு, தலித்திய நோக்கு, பெண்ணிய நோக்கு போன்றவற்றின் நோக்கில் பல ஆய்வு நூல்கள் வெளிவருகின்றன. இவற்றின் தகுதியை மதிப்பிடுவது அவசியம். பல நூல்களில் ஆழமில்லை. சில கூறியதுகூறலாக வே இருக்கின்றன. அண்மைக்காலத்தில் சங்க இலக்கியங்களைத் தகர்க்கும் பலரும் ஒரேமாதிரியான கருத்துகளையே கூறிவருகின்றனர். பன்முகநோக்கும் அதற்குத் தேவையான உழைப்பும் இன்மையே காரணம்.
இக்கட்டுரைத் தொடக்கத்தில் ஆய்வு வளர்ந்துள்ளதா இல்லையா என்பது இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டேன். இதுவரை ஓரளவு ஆய்வு வளர்ந்துள்ளது என்பது விரிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. இனி இதன் மறு தலையைக் கொஞ்சம் பார்ப்போம்.

தமிழிலக்கிய ஆய்வு வளரவில்லை என்று கூற மிக முக்கியமான ஒரு காரணம், தமிழில் உள்ளடக்க ஆய்வு பெருகிய அளவுக்கு உருவ ஆய்வு பெருகவில்லை என்பது. ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு இலக்கிய ஆராய்ச்சியை நோக்கும்போது, குறிப்பிட்ட நூல் அல்லது இலக்கியம் என்ன சொல்கிறது என்பதை வைத்துப் பெரும்பாலும் ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்களே தவிர, அது எப்படி இலக்கியமாகியிருக்கிறது என்பதைப் பலரும் ஆராய்ந்ததில்லை. ஒருபுறம் உள்ளடக்கம்-உருவம் என்று பிரிப்பது தவறு என்று சொல்லிக்கொண்டே மறுபுறம் அந்த இலக்கியம் காட்டும் வீடு, நாடு, காடு, மாடு என்று ஆராயத்தான் நமது ஆய்வாளர்களுக்குத் தெரியும்.

இதன் விளைவு தமிழ் ஆய்வு மாணவர்களை மிகவும் பாதித்திருக்கிறது. புதுப் புது நூலாகத் தேடி அதன் உள்ளடக்கம் என்ன என்று எம்.ஃபில்லுக்கும் பிஎச்.டிக்கும் ஆலாய்ப் பறப்பார்கள். பழைய இலக்கியங்களிலேயே செய்யக்கூடிய பணிகள் ஏராள மாக உள்ளன என்பதை அறியமாட்டார்கள். நற்றிணையின் மொழியமைப்பு, வாக்கிய அமைப்பு பற்றி நான் ஒரு கட்டுரை எழுதியபோது இரா. கோதண்டராமன் அதை மிகவும் பாராட்டி, இத்தகைய கட்டுரைகள் ஏராளமாக வெளிவரவேண்டும் என்றார். இத்தனை சங்க நூல்கள் இருக்கின்றனவே, அவற்றின் மொழியமைப்பு, வாக்கிய அல் லது தொடரமைப்பு, உள்கட்டுமான அமைப்பு போன்றவற்றைப் பற்றி எவரேனும் ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்களா? தலைப்பைத் தேடி ஏன் அலையவேண்டும்?

இன்னொன்று, ஆய்வுசெய்யும் மாணவர்களின் சோம்பேறித்தனம். “சார், ஏதா வது ஈசியா நாவல் இருந்தா குடுங்க ஆய்வு செய்யலாம். இலக்கணம், பழைய இலக் கியமெல்லாம் கஷ்டம்” என்று நிறைய மாணவர்கள் சொல்வதை நான் கண்டிருக் கிறேன். ஏறத்தாழ இருபதாண்டுகள் இருக்கும். எனக்கென்று ஒதுக்கப்பட்ட எம்.ஃபில் மாணவர் ஒருவர் வந்தார். ‘என்ன படித்திருக்கிறாய்? எதில் உனக்கு ஆர்வம்?’ என்ற பொதுவான கேள்விகளை நாம் கேட்பது வழக்கம்தானே? அவருக்குத் தமிழின் எந்த இலக்கியத்திலும்-செய்யுள், உரைநடை எதிலும் ஆர்வமில்லை. கடைசியில் நான் அவருக்கு வாலியின் திரைப்படப் பாடல்களை ஆய்வுத் தலைப்பாகத் தர நேரிட்டது.

இன்று நாம் ஒரு நூற்றாண்டுக்காலத்தில் உருவான பல கருத்தாக்கங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலையில்இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட கருத்து உருவா வதற்குச் சமூகரீதியாகச் சில காரணங்கள் உண்டு. எதுவும் தானாக வரலாற்றில் முளைப்பதில்லை. அதுபோல வரலாற்றுரீதியான காரணங்கள் சிலவற்றால் தமிழின் பெருமை, முதன்மை பேசவேண்டிய ஒரு தேவை முன்பு இருந்தது. சில இயக்கங்கள் தோன்றியதற்குப் பலவித காரணங்கள் இருந்தன. உதாரணமாகத் தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், தலித் இயக்கம் போன்ற வற்றைச் சொல்லலாம். ஆனால் ஓர் இயக்கம் எல்லையற்றுக் காலத்தில் நிற்கமுடியாது. எல்லா இயக்கங்களும் காலத்திற்குக் கட்டுப்பட்டவை-காலம் மாறினால் மாறிவிடுபவை. அதுபோலத் தனித்தமிழ் இயக்க மும் திராவிட இயக்கமும் இன்று காலாவதியாகிவிட்டன.

தமிழ்இயக்கங்கள் வரலாற்றில் உருவான விதத்தைப் பற்றிப் பலர் பல நூல் களில் பேசியிருக்கிறார்கள். எனதுநோக்கில் சுருக்கமாக அவற்றை முன் வைத்து மேற் செல்கிறேன்.
19ஆம்நூற்றாண்டில் இரண்டுவிஷயங்கள் தமிழரின் வாழ்க்கையை பாதித்தன. ஒன்று ஆங்கிலம், இன்னொன்று சமஸ்கிருதம். ஆங்கிலம் என்பது ஆங்கிலேயரின் பழக்கவழக்கங்கள், பாஷை. அதன் இலக்கியவளம், பிற வளங்கள், கலாச்சாரம் முதலியவற்றை உள்ளடக்கியது. இன்னொன்று சமஸ்கிருதத்தின் முதன்மையை ஐரோப் பியர்கள் ஏற்றுக்கொண்ட நிலை. இவையிரண்டும் தமிழர்களின் தன்மானத்தை பங்கப்படுத்துவதாக இருந்தன. இவற்றை எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நல்லவேளையாக தமிழர்களுக்குச் சாதகமாகவும் மூன்று விஷயங்கள் வாய்த் தன. சமஸ்கிருதத்திலிருந்தே அத்தனை இந்திய மொழிகளும் பிறந்தன என்ற கருத்து அக்காலத்தில் நிலவியது. விண்டர்நிட்ஸ் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய இந்திய இலக்கிய வரலாற்றிலும்கூட இப்படித்தான் குறிப்பிடுகிறார். இப்படிப் பட்ட சமயத்தில் திராவிட மொழிக்குடும்பம் என்பது தனியானது, தமிழ் அதில் மூத்த மொழி என்ற அந்தஸ்தினை நாம் பெற்றோம். இதற்கு உதவியாக இருந்தவர் கால்டுவெல். இன்னொன்று சங்க இலக்கியங்களின் பதிப்பு. இதற்கு உதவியாக இருந்தவர்கள் சுவாமிநாதையர் உள்ளிட்ட பல பதிப்பாசிரியர்கள். மூன்றாவது, சிந்து வெளி நாகரிகத்தின் வெளிப்பாடு. இதற்கு உதவியாக இருந்தவர்கள் சர் ஜான் மார் ஷலும் ஹீராஸ் பாதிரியாரும். இதனுடன், ஆரியர்கள் கி.மு. 3500 வாக்கில் இந்தியாவுக்குள் நுழைந்த வந்தேறிகள் என்ற சரித்திரக் கருத்து. இவை தமிழர்களின் தன் மானத்தைக் காப்பாற்றின.

இவற்றின் விளைவாக எழுந்தவை தனித்தமிழ் இயக்கமும் தமிழிசை இயக் கமும். இவை சாராத ஒரு சமூக, அரசியல் நிகழ்வு, இட ஒதுக்கீட்டிற்கென ஏற்பட்ட நீதிக்கட்சி. இரண்டிற்கும் பொதுவானது அக்கால வேளாளர்கள் நிலைப்பாடு அல்லது மனப்பான்மை. இவையிரண்டிலும் அவர்களுக்கு உடன்பாடு இருந்தது. இரண்டிற்கு மெனத் தனித்தனியே இயங்கியவர்கள்கூடச் சில மேடைகளில் ஒருங்கே நின்றார்கள். உதாரணமாகத் தமிழிசை இயக்கத்தில், தனித் தமிழ் இயக்கம் சார்ந்தவர்களும் நீதிக் கட்சி சார்ந்தவர்களும் உடன்பட்டு இயங்கியதைக் காணமுடிந்தது.
திரு.வி.க. போன்றவர்கள் இவற்றை முழுதும் உடன்படாவிட்டாலும் பார்ப்ப னர்களைத் தனிமைப்படுத்திவிடக்கூடாது என்பதில் கண்ணாக இருந்தார்கள். மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த சாதிகளுக்குரிய தலைவர்கள் சிலர் அக்காலத்தில் இருந்த போதிலும் அவர்களை இந்த இயக்கங்கள் சேர்த்துக்கொள்ள நினைக்கவில்லை-அவற் றை பாதிக்குமளவிற்கு அவர்களை முக்கியமானவர்களாகக் கருதவில்லை. நீதிக்கட்சி அழியும் நிலையில் திராவிட இயக்கம் தோன்றிவிட்டது.
திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலேயே சில தமிழறிஞர்கள் வெளிப் படையாகத் தங்கள் நிலைப்பாட்டைக் கூறியதில்லை. உதாரணமாக 20ஆம் நூற் றாண்டில் தமிழ் ஆராய்ச்சியைப் பெரிதும் பாதித்தவர்களான டாக்டர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரும், டாக்டர் மு. வரதராசனாரும். இவர்கள் நூல்கள் இவர்களை திராவிட இயக்கச் சார்பானவர்களாகக் காட்டுகின்றன. அக்காலத்தில் சங்க இலக் கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை திராவிட இயக்கச் சார் பான நூல்களாகக் கருதப்பட்டன. பிற காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் போன்றவை சமஸ்கிருதத் தொடர்பினால் கெட்டுப்போனவை என்ற கருத்து நிலவி யது. அக்காலத் தமிழ் அறிஞர்கள் முன்சொல்லப்பட்ட நூல்களையே பெரிதும் ஆராய்ந்திருப்பதைக் காணலாம்.

மாறாக, காங்கிரஸ் கட்சியில் ஆதியிலிருந்தே பார்ப்பன ஆதிக்கம் இருந்தது. அதனால் அவர்கள் கம்பராமாயண ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினார்கள். ஏறத் தாழ 1960வரை கம்பராமாயண ஆய்வில் ஈடுபட்டவர்களை நோக்கினால், கம்பன்விழா நடத்தியவர்களை நோக்கினால் அவர்கள் யாவருமே காங்கிரஸ்கட்சி சார்ந்தவர்களாக இருப்பதைக் காணலாம்.

அவர்களும்கூட வில்லிபாரதத்தை மதிக்கவில்லை. காரணம் அது வேளாளர் சார்புடைய, கிராம மக்கள் சார்புடைய நூல். நமது கிராம மக்களின் நாட்டுப்புற தெய்வங்கள், கலைகள் ஆகியவற்றின் சார்பு வில்லிபாரதத்தை ஒட்டியதாக இருப்ப தைக் காணலாம். திரௌபதியம்மன் நாட்டாரின் முக்கிய தெய்வங்களில் ஒருத்தி. கோடைகாலங்களிலெல்லாம் வடக்குத் தமிழ்நாட்டு கிராமங்களில் பாரதக்கதை படிக் கப்பட்டதை, தெருக்கூத்தாக நடிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். ராமசாமி கிருஷ்ணசாமி என்றெல்லாம் பெயர்வைத்துக்கொள்ளும் ஐயர்களும் ஐயங்கார்களும் தருமன், அருச்சுனன், சகாதேவன் என்று பெயர்வைத்துக்கொள்ளமாட்டார்கள். அவை தாழ்ந்த சாதிக்குரிய பெயர்கள். பெயரளவில் மகாபாரதம் ஐந்தாம் வேதம் என்று பார்ப்பனர்களால் சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டு நடைமுறையில் அப்படியில்லை.

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் நமது தமிழ் ஆராய்ச்சியையும் வளர்ச்சியையும் சாதியநோக்கு-வகுப்புவாத நோக்கு முதலிலிருந்தே பாதித்துவந்திருக் கிறது என்பதைச் சுட்டிக்காட்டத்தான். தமிழ் ஆராய்ச்சியையும் வளர்ச்சியையும் இந்த நோக்கு வளர்ப்பதற்கு மாறாகக் கெடுத்துவிட்டது.

பெரியாருக்குத் தமிழின்மீது பெரிய அபிமானம் இருந்ததாகச் சொல்ல முடி யாது. அவர்கூட சங்க இலக்கியம், திருக்குறள் பற்றி ஓரளவுதான் சாதகமாகப் பேசி யிருக்கிறார். சிலப்பதிகாரத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலான நூல்கள் யாவும் பொதுவாக மக்களையும், குறிப்பாகப் பெண்களையும் ஒடுக்குவதற் காகத் தோன்றியவையே என்பது அவர் கருத்து. ஆனால் தமிழ்ப் பெருமை பேச விரும்புபவர்களால் சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் ஒதுக்க முடியாது. கம்பராமாயணத்தையும் புராணங்களையும் சிற்றிலக்கியங்களையும் பக்திப்பாக்களையும் அவர்கள் ஒதுக்கினார்கள்.

பாரதியார் இதற்கு விதிவிலக்கு. அவரை ஒருவாறு திராவிட இயக்கத்தவரும் அல்லாதவர்களும் ஏற்றுக்கொண்டனர். திராவிட இயக்கத்தினர் அவரை ஒரு சீர் திருத்தவாதியாகக் கண்டனர். பிறர் அவரை தேசியவாதியாகக் கண்டனர். திராவிட இயக்கத்தினரின் canon சங்கஇலக்கியம்-திருக்குறள்-இரட்டைக் காப்பியங்கள்-தமிழ் சார்ந்த சில சிற்றிலக்கியங்கள்-பாரதி-பாரதிதாசன் என்று அமைந்தது. பார்ப்பன நோக்குடையவர்களின் canon (திருக்குறள்)-சமய இலக்கியங்கள்-கம்பராமாயணம்-புரா ணங்கள்-பாரதி என்று அமைந்தது. (இதில் பாரதிதாசனும் அவர் பரம்பரை யினரும் இடம்பெற மாட்டார்கள்).

இவற்றை மீறிப் பொதுநிலையில் செயல்பட்ட சில ஆராய்ச்சியாளர்களாக வையாபுரிப்பிள்ளை, மயிலை.சீனி. வேங்கடசாமி போன்ற ஒருசிலரை மட்டுமே அக் காலத்தில் குறிப்பிடமுடியும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்து தமிழ் ஆராய்ச்சியை இரண்டு போக்குகள் கட்டுப்படுத்தின. ஒன்று வரலாற்று ஆய்வு. இன்னொன்று உரை எழுதுதல். இவற்றில் சைவநோக்கு கலந்திருந்தது. இருநோக்குடையவர்களும் தங்கள் கருத்துகளைப் பெருமளவு பரிமாறிக் கொண்டனர். இதற்கு அக்காலத்தில் தோன்றிய செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி, சித்தாந்தம் போன்ற இதழ்கள் உதவி யாக இருந்தன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அக்காலத்தில் சதாசிவப் பண் டாரத்தார்-ஒளவை.சு.துரை சாமிப்பிள்ளை-வெள்ளைவாரணன் மூவரும் ஒன்றாகவே வலம்வருவதைப் பலர் கண்டு சொல்லியிருக்கிறார்கள். வெள்ளைவாரணன் என்னி டம் நேரிலும் கூறியிருக்கிறார். முதல்வர் வரலாற்றாசிரியர் என்பதும், இரண்டாமவர் உரையாசிரியர் என்பதும் மூன்றாமவர் சைவஇலக்கிய ஆய்வாளர் என்பதும் நாம் அறிந்தது. இது அக்காலப் பொதுப்போக்கு. (விதிவிலக்குகள் இருந்தன-அவற்றிற்குள் நான் இப்போது புகவில்லை).

சைவசைமய-உரையாசிரிய-வரலாற்றாசிரியக் கூட்டணி தமிழில் உருவாக்கிய பொதுப்புத்தி மிகவும் முக்கியமானது. ஏனெனில் அதுதான் இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் ஆராய்ச்சியைக் கட்டுப்படுத்தியது. இக்கூட்டணியின் விளைவாக, உரு வான பொதுக்கருத்தாக்கங்கள் சிலவற்றை இங்கே பட்டியலிடலாம்.

1. தமிழின் தனித்தன்மை. சமஸ்கிருதம்இன்றி இந்தியாவில் தனித்தியங்கக்கூடிய மொழி தமிழ் ஒன்றே என்ற தற்பெருமை இதில் அடக்கம். இது வரலாற்றுப் பூர்வமானது. ஒரு வேளை சங்கஇலக்கியம் தோன்றிய காலத்தில் இக்கருத்துக்கு நியாயம் இருந்தி ருக்கலாம். இத்தற்பெருமைக்கு இன்று எந்தவித நியாயமும் இல்லை. தொல்காப்பியம் சங்கஇலக்கியம் தொடங்கியே சமஸ்கிருதத்தின் கலப்பு நிகழ்ந்திருப்பதைக் காண்கி றோம். பிராகிருதம், தெலுங்கு முதலியவற்றின் கலப்பும் உள்ளது. சமஸ்கிருத மொழி யைப் பாராட்டுபவர்கள்தான் தாங்கள் தான்தோன்றிகள், பிற மொழிக் கலப்பற்ற வர்கள், தேவபாஷைக்காரர்கள் என்று முட்டாள்தனமாக நினைத்தால் நாமும் முட்டா ளாக வேண்டிய அவசியம் என்ன?எந்தச் சமூகத்திலும் பிற சமூகங்களுடைய-பிறமொழிகளுடைய கலப்பு இருக் கத்தான் செய்யும். கலப்பை இழிவாக நினைப்பது தவறான மனப்பான்மை. உண்மை யில் கலப்புதான் இயல்பானது. இன்றும் நாகர்கோவில் கன்யாகுமரி தமிழில் மலையா ளக்கலப்பு அதிகமாகத்தான் இருக்கிறது. சென்னைத் தமிழில் உருது, தெலுங்குக் கலப்பு இருக்கிறது. அதிலும் நாம் பேதம் பாராட்டுகிறோம். மலையாளம் தமிழிலிருந்து தோன்றி யது, சேரநாடு பழங்காலத்தில் செந்தமிழ்நாடு என்ற எண்ணம் இருப்பதால், பேசுபவர் கள் அனைத்து சாதியினருமாக இருப்பதால் குமரி வட்டாரவழக்கைக் குறை சொல்வ தில்லை. திரைப்படம் முதற்கொண்டு மலையாளக் கலப்பை ஏற்றுக்கொண்டு பாராட் டுகிறோம். தெலுங்கரை வடுகரென்றும், உருதுவை எங்கிருந்தோ வந்தவர்கள் (‘துலுக் கர்கள்’) பேசியமொழி என்றும் நினைத்ததாலும், இவற்றைக் கலந்து பேசியவர்கள் பொருளாதார, சாதிஅடிப்படையில் தாழ்ந்தவர்களாக இருந்ததாலும், சென்னைமொழி இழிவானதென்று நினைக்கிறோம். அங்கு எழுந்த கலைகளும், கானாப்பாட்டுகளும் இழிந்தவை என்ற எண்ணம் நெடுங்காலம் நிலவியது. இப்போது சற்றே மனப் பான்மை மாற்றம் காணப்படுகிறது.தனித்தமிழ் இயக்கம் சொல்லுருவாக்கத்தில் மட்டும் சில நன்மைகளைச் செய் தது. ஆனால் தமிழ் ஆய்வுப்போக்கை அறவே கெடுத்துவிட்டது. அறிவியல் மனப்பான் மையின்றியே மொழி, இலக்கியம், இலக்கணம், வரலாறு ஆகியவற்றை அணுகும் முறையை ஏற்படுத்திவிட்டது. இதற்கு மாபெரும் சான்று தேவநேயப் பாவாணரின் ஆய்வுமுறை. இன்றைய கணிப்பொறிக் காலத்தில் தமிழின் பழம்பெருமை பேசுவ தற்குத் தவிர வேறு எதற்கு இது பயன்பட்டிருக்கிறது?

2. காலமுதன்மை. முன்னரே கால ஆய்வு பெருவரவாக இருந்த நிலை பற்றிப் பேசி யிருக்கிறோம். கால ஆய்வுசெய்தால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தியது என்று சொல்லிவிடுவது பழந்தமிழ் ஆய்வுகளின் வழக்கம். எத்தனை தமிழ் அறிஞர்கள் சிவபெருமானும் முருகப்பெருமானும் இருந்து தமிழாய்ந்த காலத்தைப்பற்றித் தங்கள் ஆய்வுநூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்! எது பொய் எது உண்மை என்றே அறியாதவர்கள்-பாவம். சமயநம்பிக்கை அவர்களின் ஆய்வுப்போக்கைக் குலைத்து விட்டது. சமயநம்பிக்கையால் ஆய்வுப்போக்கு குலைந்த ஒரு மாபெரும் நூலுக்கு உதா ரணம், மறைமலையடிகள் மாணிக்கவாசகர் காலம் பற்றிய ஆய்வு.
சமஸ்கிருதத்தை விட நாங்கள் முந்தியாக்கும் என்று சொல்லமுனைந்த தமிழ்ப் பற்றுக்கு ஆராய்ச்சி பலியாகிவிட்டது.

3.பழம்பெருமை பேசுதல். சங்ககாலம் பொற்காலம் என்று தமிழ்அறிஞர்களும், சோழர்காலம் பொற்காலம் என்று பண்டாரத்தார் போன்ற வரலாற்றாசிரியர்களும், பக்திக்காலம் பொற்காலம் என்று சமயம்சார்ந்தவர்களும் நீண்டகாலம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்றும் இப்படிப்பட்டவர்கள் உண்டு. இதனால் ஆகப்போவது என்ன? என் தாத்தாவுக்கு யானை இருந்தது, ஆனால் நான் பிச்சைக்காரன் என்ப வனை யாரேனும் மதிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இன்று நமது வளர்ச்சி என்ன, சாதனை என்ன என்பதுதான் பிறர் நம்மை மதிப்பிடும் முறை. நமது பழம் பெருமை, கலாச்சாரப் பெருமை என்பது நம்மை வளர்த்துக்கொள்வதற்கான சாதன மாகவே இருக்கவேண்டும்.

4. இங்கு இல்லாதது இல்லை இளங்குமரா என்ற மூடமனப்பான்மை. பக்தர்கள் பிள்ளையார் சுழி போடுவதைப்போல, சமஸ்கிருத பக்தர்கள் எல்லாம் வேதத்திலிருந்து வந்தது என்பதைப்போல, மார்க்சியவாதிகள் எல்லாவற்றையும் மார்க்ஸ் முன்னரே சொல்லி விட்டார் என்பதைப்போல, பெரும்பாலும் தமிழ் ஆய்வினைத் தொடங்குபவர்கள்-குறிப்பாக பிஎச்.டி. ஆய்வளார்கள் தொல்காப்பியத்திலிருந்துதான் எல்லாவற்றையும் ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பித்தால்தான் அவர்களுடைய வழிகாட்டிமார்கள் விடுவார்கள். சிறுகதையா, தொல்காப்பியத்தில் இலக்கணம் சொல்லப்பட்டிருக்கிறது. புதுக்கவிதையா, தொல்காப்பியத்தில் அதன் இலக்கணம் இருக்கிறது. நகைச்சுவைக் கட்டுரையா, தொல்காப்பியம் அதைப்பற்றிப் பேசியிருக்கிறது…எல்லாவற்றையும் தொல் காப்பியம் சொல்லிவிட்டதென்றால் உனக்கு என்ன வேலை இங்கே? அப்படி எல்லாவற்றையும் ஒருவன் சொல்லிவிட முடியுமா? காலம் எவ்வளவு மாறுதல்களை உண்டாக்கும்? நானும் என் பங்குக்குச் சொல்லிவிடுகிறேன், இவற்றையெல்லாம் உணர்ந்துதான் தொல்காப்பியர் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்று சொல்லியிருக்கிறார். போதுமா?
நமக்கென்று உள்ள பாரம்பரியத்தை நான் மறக்கவுமில்லை, மறைக்கவுமில்லை. ஆனால் அந்தக் கலைகளின் அஸ்திவாரங்கள்தானும் எங்கே? சமஸ்கிருதக்காரன் நாடகக்கலை பற்றிப் பேசினால் அவனிடம் இருநூறு நாடகங்கள்-பாஸன் எழுதியவை முதலாக காளிதாசன் எழுதியவை முதலாக இருக்கின்றன. இலக்கிய வரலாற்றுப் புத்தகங்களில் தமிழில் நாடகம் இருந்தது என்று சாதிக்க நமது தமிழ் ஆசிரியர்கள் படும் பாட்டைப் பார்க்கும்போதெல்லாம் மனசு நோகிறது. மயிலை சீனி வேங்கடசாமி மறைந்துபோன தமிழ்நூல்கள் என்று பட்டியல் எழுதிப் பெரிய பாவத்தைச் செய்துவிட்டார்.

5. தவறான சரித்திர ஏற்புகள். குமரிக்கண்டம், லெமூரியாக் கண்டம் என்றெல்லாம் கப்சா விட்டார்கள் நமது சரித்திர ஆசிரியர்கள். அங்குதான் தமிழினமே தோன்றியது, தமிழ்தான் உலகின் மூத்தமொழி என்று போய்விட்டார்கள் நமது ஆய்வாளர்கள். எத்தனை புதுமைப்பித்தன்கள் உலகில் தோன்றிய முதல் குரங்கு தமிழ்க்குரங்கா என்று கிண்டலடித்தாலும் புத்திவராது நமக்கு. இன்றைக்கும் மங்கோலிய பாஷைக்கும் ஜப்பா னிய பாஷைக்கும் மூலம் தமிழ் என்பவர்கள் இருக்கிறார்கள். பெரியபெரிய உலகளா விய ஆராய்ச்சி நிறுவனங்களை வைத்து இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

6. சைவசித்தாந்தம் பற்றிய பெருமை. தமிழர்களின் பங்களிப்பு சைவசித்தாந்தம் என்ப வர்கள் உண்டு. சைவம் இந்தியாவின் பிறபகுதிகளில் மேன்மையோடு இல்லாமையால் ஒருவேளை இக்கருத்து உண்மையோ என்ற ஐயம் எழுகிறது. ஆனால் அதுவும் வட மொழிசார்ந்த ஒரு பாஷையில்தான் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. ஏன்?

7. அறநோக்கு. பழங்காலத்தில் அறம்பொருள் இன்பம்வீடு அடைதல் நூற்பயனே என்று சொன்னாலும் சொன்னான், நாம் எல்லா நூல்களிலும்-குறிப்பாக இலக்கிய நூல்களில் அறங்களைத் தேடியே வாழ்நாளைக் கழிக்கிறோம். ஆனால் நம் வாழ்க் கையில்தான் அறம் இல்லை. இலக்கியம் வாழ்க்கையை மேம்படுத்தவேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை மேற்கொண்டுவிட்டால் பிறகு எப்படி மதிப்பிடமுடியும்?
இதெல்லாம் இப்படியிருக்க, திராவிட இயக்கங்கள் தமிழ் ஆராய்ச்சியை எங்கே கொண்டுவிட்டிருக்கின்றன? ‘பேசுவது மானம் இடைபேணுவது காமம்’ என்பான் கம்பன். சுயமரியாதைவீரர்கள் பேச்சில்தான் சுயமரியாதையே தவிர, நிஜத்தில் ஒருவர் காலில் இன்னொருவர் விழுவதுதான் அவர்கள் கலாச்சாரம் ஆயிற்று. தமிழர்கள் காலில் மட்டுமல்ல-எங்கே பதவி பணம் கிடைக்குமோ அங்கெல்லாம் காலில் விழுந் தார்கள். தமிழர்கள் மானத்தை அடியோடு விலை பேசினார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் என்றைக்குமே ஜனநாயகம் என்பது மருந்துக்கும் இல்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிசெய்த காலத்திலேயே கைதூக்குவதற்கென்று மட்டுமே எம்எல்ஏ ஆனவர்கள்-ஆக்கப்பட்டவர்கள் உண்டு. பின்னர் அதுவே வாடிக் கையாயிற்று. ஜனநாயகம் இல்லாத கூட்டத்தின் மத்தியில் ஆராய்ச்சி எப்படி வளரும்?
இறக்கும்போதும் இரண்டு மதத்தலைவர்களை இருபுறமும் வைத்துக்கொண்டு நான் இயேசுவைப்போல இறக்கிறேன் என்று நையாண்டி செய்த இங்கர்சால் எங்கே? இங்கர்சால் பற்றி எழுதிக் கொட்டியவர்கள்-கடவுள் இல்லை என்று கத்தியவர்கள்-கடைசியில் ஓட்டுவாங்குவதற்காக ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’தான் எங்கள் கொள்கை என்று உளறிய தமிழ் திராவிட மானஸ்தர்கள் எங்கே? நேர்மையற்ற சமூகத்தில் ஆராய்ச்சி பிறக்காது. திறனாய்வு கருவிலேயே கலைந்துவிடும்.

பெரும்பாலும் இன்றைக்கு ஆராய்ச்சியில் இறங்குபவர்கள் எல்லாம் இதனால் பின்னால் என்ன லாபம் கிடைக்கும் என்ற நோக்கோடுதான் இறங்குகிறார்கள். யாரைப்பற்றிய தலைப்பு எடுத்தால் விற்கும்? பணம் பாராட்டு பதவி கிடைக்கும் என்ற எண்ணத்திலே மனத்தைவிட்டபிறகு ஆராய்ச்சிக்கு எங்கே போவது? அல்லது குழு மனப்பான்மையோடு ஆராய்ச்சி என்ற பெயரில் குப்பைகளை உருவாக்குகிறார் கள். குழுமனப்பான்மை எப்படி ஆராய்ச்சியில் கெடுதலை விளைவிக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் காட்டுகிறேன்.

எங்கள் கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர். இரா. ஜெய்சங்கர் என்று பெயர். அவரது பிஎச்.டி ஆய்வேட்டைத் தமிழில் சமூகவியல் திறனாய்வு என்ற பெயரில் நூலாக தாயறம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டிருக்கிறார் (2007). சமூகவியல் ஆராய்ச்சியாளர்களாகப் பன்னிரண்டு பேரையும் ஒரு கட்டுரைத் தொகுப் பாளரையும் சொல்லியிருக்கிறார். அவரது வரிசை இது-க.ப. அறவாணன், அன்னி தாமஸ், ஈஸ்வரப் பிள்ளை, (இவர்களுக்குப் பின்) கோ. கேசவன், க.கைலாசபதி, கா. சிவத்தம்பி, சிலம்பு நா. செல்வராசு, (மறுபடி இவர்களுக்குப் பின்) தொ. பரமசிவன், சி. இ. மறைமலை, பெ. மாதையன், (மீண்டும் இவர்களுக்குப் பின்) நா. வானமாமலை, ஆ. வேலுப்பிள்ளை, கடைசியாக ஞா. ஸ்டீபன் என்பவர். இவர்களில் உண்மையான சமூகவியல் திறனாய்வாளர்கள் யார், அவர்களுடைய பங்களிப்பு என்ன, பொருத்த மான வரிசைமுறை என்ன என்பது உங்களுக்கே தெரியும். இது அவரது திறனாய்வுக் கருத்தாக இருந்தால் நான் பொருட்படுத்தமாட்டேன். க.நா.சு. எப்போதும் ஒரு பட்டி யல் வெளியிடுவதுபோல, இவருக்கும் ஒரு பட்டியல் என்று விட்டுவிடுவேன். இது ஆய்வு-பிஎச்.டி. ஆய்வு. இதை ஏற்றுக்கொள்ள மூன்று தேர்வாளர்கள், ஒரு புறத் தேர் வாளர். எங்கே சொல்வது இப்படிப்பட்ட வேதனைகளை? இதனால் யாருக்கு எவ்வ ளவு லாபம் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். ஆனால், எதிர்கால மாணவர்களுக்கு இது தவறான வழிகாட்டுதல் அல்லவா?
தன் கருத்தைத் தீர்க்கமான ஆய்வுக்குப் பின்னரே சரியான முறையில் வெளியி டும் திறன் ஆராய்ச்சியாளனுக்கு வேண்டும். அது எப்படியிருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சமுதாயத்திற்கு வேண்டும். நன்கு ஆராயப்பட்ட இன்றைய கருத்தும் அல்லது கண்டுபிடிப்பும் நாளை தவறாகலாம். அத்தன்மையை உடன்பட்டுத் தான் ஆய்வுக்களத்தில் இறங்குகிறோம். அறிவியல் துறையிலேயே நியூட்டனின் கருத்து களைத் தூக்கி எறிந்தார் ஐன்ஸ்டீன். ரூதர்ஃபோர்டின் கருத்துகளைப் பொய்யாக் கினார் ஹைசன்பெர்க்.

ஆய்வுசெய்பவர்களுக்குப் பணிவு அவசியம். நியூட்டன் ஒருசமயம் சொன்னா ராம்-“நான் கடற் கரையில் கூழாங்கற்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தை” என்று. பௌதிகத்தில் ஒளிபற்றிய அடிப்படைகள் யாவற்றையும் கண்டறிந்த மேதை-ஈர்ப்புத் தத்துவத்தைக் கண்டறிந்த பேரறிவாளர்-கால்குலஸ் என்ற கணிதத் துறையையே உருவாக்கிய வித்தகர்-அவரது தன்னடக்கம் அது. நம்மையும் ஆராய்ச்சி யாளர்கள் என்று சொல்லிக் கொள்ள நாக்கூசுகிறது. கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னொப்பில் என்னையும் என்று பாடிய கதைதான்.

நேர்மையான ஆய்வுக்குப் பின் தங்கள் மனத்தில் பட்ட கருத்துகளை-சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது, இல்லை என்ற பயமின்றி-தர்க்கரீதியாக முன்வைத்தவர்கள் யாரா னாலும் அவர்கள் நல்ல ஆராய்ச்சியாளர்கள்தான் என்ற வரையறையை வைத்துக் கொண்டு இருபதாம் நூற்றாண்டு முழுவதும் தமிழ் ஆய்வாளர்களைத் தேடினால் அப்போது நமக்குக் கிடைப்பவர்கள் நல்ல ஆய்வாளர்களாக இருக்கக்கூடும்.

1980 வாக்கில் தமிழியல் என்ற ஒரு சொல் புழக்கத்துக்கு வந்தது. அதை ஆங்கிலத்தில் Tamilology என்று பெயர்த்துக் கொண்டனர். நான் முதுகலை படிக்கும் போதுதான் என்று நினைக்கிறேன்-ஒரு நூல்-அதன் தொகுப்பாசிரியர்களில் வ.சுப. மாணிக்கமும் ஒருவர்- Glimpses of Tamillogy என்ற பெயரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தமிழ்க்கட்டுரைகளைத் தாங்கி வந்தது. அந்தத் தலைப்பு அப்போது எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது.
எனக்குப் பிடிக்காத பல சொற்கள் தமிழில் இருக்கின்றன. அவற்றில் வாழ்வி யல், தமிழியல் என்பவை முக்கியமானவை. அது என்ன வாழ்வியல்? Is there any subject called Lifeology?வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சி என்றால் அது தத்துவம்- philosophy or metaphysics தான். அதேபோலத்தான் தமிழியலும். எல்லாத் துறைகளிலும் தமிழைவிடப் பன்மடங்கு மிக அதிகமான நூல்களைக் கொண்டிருக்கும் மொழி ஆங் கிலம் என்பதை அநேகமாக ஒப்புக் கொள்வீர்கள். Is there any field called Englishology? நண்பர் மதியழகன்கூட தமது நூலில் “தமிழ் ஆராய்ச்சி வரலாற்றை வெறும் இலக்கிய ஆய்வு வரலாறாக இல்லாமல் தமிழியல் ஆய்வு வரலாறாகப் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்றும் “தமிழியல் ஆய்வு புதிய பரிமாணத்தை அடையக்கூடும்” என்றும் எழுதியிருக்கிறார்.
தமிழியல் என்பது கல்வெட்டுக்கல்வி, சுவடியியல் தொடங்கி அறிவாராய்ச்சி யியல் வரை எல்லாவற்றையும் அடக்குவதற்குக் கொண்டுவரப் பட்ட ஒரு எல்லா மடக்கி- holdall சொல். முதலில் இப்படி அடக்கினாலே ஆய்வு வளராது. கல்வெட்டு, அந்தத் துறையில் கற்ற நிபுணர்கள் செய்யவேண்டிய பணி. இதில் தமிழ் வாத்தியாருக்கு என்ன வேலை?
தமிழ் இலக்கியம் இலக்கணம் படித்தவர்கள் அத்துடன் தங்கள் வேலையை நிறுத்திக் கொண்டால் தமிழ் எவ்வளவோ வளர்ந்திருக்கும். தொல்காப்பியத்தை ஆராய்ச்சி செய்கிறாயா, செய். சிலப்பதிகாரத்தை ஆராய்கிறாயா, செய். அல்லது இக்காலத் தமிழிலக்கியத்தை-புதிதாக வந்த நாவலையோ சிறுகதையையோ கவிதை யையோ ஆராய்கின்றாயா, செய். அதைவிட்டுக் கல்வெட்டு ஆய்வில், சமூகவியலில், உளவியலில், கோயில் கட்டடக்கலையில், தமிழக வரலாற்றில், தமிழ் இசையில், நாடகத்தில், இவற்றிலெல்லாம் தமிழ் இலக்கியம் படித்தவனுக்கு என்ன வேலை? அது அந்தந்தத் துறைசார்ந்த நிபுணர்கள் செய்யவேண்டிய காரியம் அல்லவா?
உதாரணமாக, ஆங்கிலத்தில் சிறந்த ஆய்வாளர்களோ திறனாய்வாளர்களோ அவ்வளவு எளிதாக A sociological approach என்றோ A psychological approach என்றோ போட்டுக்கொள்ள மாட்டார்கள். சமூகவியல் நோக்கு என்று போட்டுக் கொண்டால் முறையாக அந்தத் துறையில் படித்துக் குறிப்பிட்ட ஒருவருடைய நோக்கில்-உதாரண மாக எமில் டர்க்ஹீம், அல்லது மாக்ஸ் வெபர் அல்லது டால்காட் பார்சன்ஸ் போன் றோர் ஒருவருடைய பார்வையில்-ஒரு குறிப்பிட்டநோக்கில் ஆய்வைச் செய்வார்கள். நமது ஆய்வேடுகளில் போல சமூகவியல் ஆய்வு என்று போட்டுவிட்டு ஒரு சமூக வியல் அறிஞரின் கருத்துகளையும் தெரிந்து கொள்ளாமல் குடும்பம், பெண்ணின் நிலை என்று பொத்தாம் பொதுவாக எழுதிக்கொண்டு போகமாட்டார்கள்.

சமூகவியல் நோக்கில் என்று போடப்பட்ட ஆய்வேடுகளை உருவாக்கிய பல மாணவர்களை நான் உசாவியபோது அவர்கள் படித்தது பத்து-பதினொன்று-பன்னி ரண்டாம் வகுப்புக்குரிய பாடநூல்களுக்குமேல் எதுவும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த தமிழில் அவ்வளவு தரத்தில்தான் நூல்கள் கிடைத்தன.
இந்த நிலைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில்-பிற துறையினர் ஆர்வம் காட்டவில்லை என்பதனால், தமிழ் அறிஞர்களிலேயே ஒரு சிலர் வரலாறு, கோயில், கட்டடக்கலை, இசை, நாடகம் போன்ற தமிழ்க்கலாச்சாரம் சார்ந்த துறைகளில் ஈடுபட்டார்கள். ஆனால் அப்படிப் பட்ட பொது ஆய்வுக்காலம் முடிந்துவிட்டது. உதாரணமாக இன்று யாரும் வ.சுப. மாணிக்கம் ஆய்வு செய்தது போல தமிழ்க்காதல் என்ற ஒட்டுமொத்தமான தலைப்பில் செய்யமுடியாது. அது ஒரு காலகட்டம். அவ்வளவுதான். இப்போது நாம் தனித்தனித் துறைகளாகப் பகுத்து நுணுக்கமான ஆராய்ச்சி மேற்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம். இன்று வரலாற்று வரைவியலில் சீனிவாச ஐயங்காரையும் கே.கே. பிள் ளையையும் தரமான வரலாற்றறிஞர்களாக ஏற்பதில்லை.
தமிழியல் மாயைக்கு இன்னொரு காரணம் முத்தமிழ் என்ற சொல். நான் வெறுக்கும் சொற்களில் இன்னொன்று. ஏதோ ஒரு காலத்தில் தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் என்று சொல்லி எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்துவிட்டார்கள். அது என்ன முத்தமிழ்? இசையும் நாடகமும் எந்த மொழியில் இல்லை? எங்கேயாவது மூவாங்கிலம், மூஇந்தி (திரிஹிந்தி) போன்ற தொடர்களைக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? ஏன், ஆங்கிலமொழிக்கென இசை இல்லையா? நாடகம் இல்லையா? கேட் டால் இது தமிழின் தனித்தன்மை என்பார்கள்.

இயல்-தமிழ்தான். இலக்கியம் தமிழ்தான். இலக்கணம் தமிழ்த்துறை சார்ந்தது தான். இசை எப்படித் தமிழ்த்துறை சார்ந்தது ஆகும்? இசை தனிக்கலை அல்லவா? அதில் வன்மை பெறவேண்டுமென்றால் குறைந்தது ஐந்து முதல் பத்தாண்டுகள் வரை யில் இசையை-அது கர்நாடக இசையோ, இந்துஸ்தானியோ, மேற்கத்திய இசையோ எதுவாயினும் கற்கவேண்டும் அல்லவா? தமிழ் மட்டும் படித்தவன் இசையில் சொல்வ தற்கு என்ன இருக்கிறது? 72 மேளகர்த்தா ராகங்களின் அமைப்பையும் பாடும் முறை யையும் தெரியாமல் சும்மா பழங்காலத்தில் அந்த இலக்கணம் இருந்தது, இந்தப் பண் இருந்தது என்று சொல்வதற்குமேல் என்ன செய்துவிடமுடியும்?
அதேபோல் தான் நாடகத்திலும். நாடகம் என்பது அரங்கக்கலை என்ற உண் மையே தெரியாமல் மனோன்மணீயத்தைப் பின்பற்றி மேடைக்குச் சம்பந்தமில்லாமல் ஸ்கிரிப்ட் எழுதியவர்கள் எல்லாம் இங்கே நாடகாசிரியர்கள். விஷயம் தெரிந்தவர்கள் அவற்றைக் குறைகூறியபோது படிப்பதற்குரிய நாடகங்கள் (அப்படி ஒரு பிரிவே உண்மையில் கிடையாது) இவை என்று பகுத்து ஆராய்ச்சி வேறு செய்யத் தொடங்கி விட்டார்கள். தமிழ்க் கவிதை நாடகங்கள் என்ற தலைப்பில் ஒரு பழங் கல்லூரி ஆசிரியர் ஆய்வே நிகழ்த்தியிருக்கிறார். கவிதையோ உரைநடையோ விஷயமல்ல. அது நாடகமா என்பதுதான் விஷயம். அரங்கக் கலை என்பது ஸ்கிரிப்ட் கற்பனையில் தயாரிப்பது மட்டுமல்ல. ஒப்பனையிலிருந்து, ஒளிஒலி அரங்க அமைப்பிலிருந்து நடிப் பிலிருந்து எத்தனை விஷயங்கள் அதில் இருக்கின்றன? பெக்கட் எழுதிய சில நாடகங் களில் காட்சிகள்தான் உண்டு. வார்த்தைகளே கிடையாது. இம்மாதிரி பேச்சுமொழி யற்ற-ஆனால உடல்மொழி மட்டும் கொண்ட நாடகங்களை நம் முத்தமிழ் அறிஞர்கள் எப்படி ஆராய்வார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

அவரவர் வேலையை அவரவர் நேர்மையாகச் செய்தாலே போதும், உலகம் மிகவும் பரிசுத்தமான இடமாகிவிடும். இன்னொருவரது வேலையை நாம் ஏற்றுச் செய்யவோ, பிறருக்கு அறிவு கொளுத்தவோ தேவையில்லை.
ஒருகாலத்தில் தொல்காப்பியம் வாழ்க்கைக்கு இலக்கணம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கைக்கு யாரால் இலக்கணம் வகுக்க முடியும்? வாழ்க்கை என்ன ஒரு சிமிழில் அடைத்துவிடக்கூடியதா அல்லது சில அறக்கோட்பாடுகளுக்குள் கட்டுப்படுத்தக்கூடியதா? காலத்திற்குக் காலம் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன? இவற்றையெல்லாம் எவராலேனும் ஒரு சிறுநூலுக்குள் அடைக்கமுடியுமா? தொல் காப்பியம் கவிதைக்கு-அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்த கவிதைகக்கு-இலக்கணம். அவ்வளவுதான். இந்தக் காலத்திற்கே தொல்காப்பிய இலக்கணத்தைப் பயன்படுத்தமுடியுமா என்பது கேள்விக்குறி. தொல்காப்பியத்தில் எல்லாம் இருக்கிறது என்பவனின் மூடத்தனம், வேதத்தில் எல்லாம் இருக்கிறது என்று சொல்பவனின் மூடத்தனத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல.
மேற்கண்ட காரணங்களாலும் பின்னால்வரும் காரணங்களாலும் தமிழ் ஆய் வில் துல்லியம் குறைந்து இப்போது அறவே இல்லாமல் போய்விட்டது. ஆய்வின் துல் லியமும், ஆய்வுப்பொருளின் துல்லியமும் மிகவும் அவசியம். மேலே கூறப்பட்ட உதா ரணம்-பின்னமைப்பியம், பின்நவீனத்துவம் என்பவற்றைப் பலரும் குழப்பிக்கொள்வ தும் துல்லியமின்மைதான். அமைப்பியம் என்பதற்கு பதிலாக அமைப்பியல் என்றா லும் துல்லியமின்மைதான். தமிழில் கலைச்சொற்களின் துல்லியத்தைப் பற்றியோ, ஆய்வின் துல்லியத்தைப் பற்றியோ கவலைப்பட ஒருவருமில்லை. பிரபலமான ஒருவர் எழுதிவிட்டால் அப்படியே பின்பற்றுவது என்றாகிவிட்டது. எல்லாம் மரபுவழுக்கள் தான். வழுஅமைதியாக ஆக்கிக்கொள்க.

1975இல் பிஷப் ஹீபர் கல்லூரியில் சேர்ந்த நான் 2007இல் 32ஆண்டுகள் கழித்து ஓய்வு பெற்றேன். இந்த 32 ஆண்டுகளில் அநேகமாகப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்திற்கென எழுதிய கட்டுரைகள் ஆறு அல்லது ஏழு இருக்கலாம். அவையும் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களுக்கென எழுதப்பட்டவை. உதாரணமாக எங்கள் கல்லூரியிலேயே இரண்டு முறை பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற விழா நடந்திருக்கிறது. அந்த இருமுறைகளும் நான் எழுதியிருக்கிறேன். நான் பிஎச்.டி ஆய்வுசெய்யத் தொடங்கியபோது எனது தலைப்பை அறிமுகப்படுத்தி ஒரு கட்டுரை வரையுமாறு எனது நெறியாளர் கூறினார். அதற்காக ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் எழுதினேன். ஒருமுறை புதுதில்லியில் தமிழாசிரியர் மன்றம் நிகழ்ந்தபோது அதற் காகவே எழுதப்பட்ட கட்டுரை, ரஷ்ய உருவவியலின் கூறுகளை அறிமுகப்படுத்து கின்ற கட்டுரை. ஆனால் இப்போதெல்லாம் தமிழாசிரியர்கள் பல்கலைக்கழகத் தமிழா சிரியர் மன்றத்திற்கு ஆண்டுதவறாமல் கட்டுரை வரைகிறார்கள். காரணம் வேறொன் றுமல்ல-அக்கட்டுரைகள் யுஜிசியினால் அவர்களது படைப்பாக ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. அவ்வளவுதான்.
யுஜிசி ஊதியக்குழுவின் பரிந்துரைகளையட்டி அந்த ஊதிய விகிதங்களை அறிமுகப்படுத்தியபோது அவர்களுடைய விதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந் தம் நேரிட்டது. அதனால் சில ஆய்வுக்கட்டுரைகளை ஆசிரியர்கள் வெளியிட்டிருக்க வேண்டும் என்றானது. பின்னர் பிஎச்.டி. பட்டம் பெற்றோர் நெறியாளராகப் பணியாற்றவும் கட்டுரைகள், நூல்கள் தேவைப்பட்டன.

இடையில் மாலைநேரக் கல்லூரிகள் வந்தன. அவை பின்னர் சுயநிதிக் கல்லூரிகள் ஆயின. அவற்றில் வேலைசெய்பவர்களுக்கு யுஜிசி ஊதியம் பெறக்கூடிய அரசாங்க அல்லது உதவிபெறும் கல்லூரிப்பதவிகளில் சேர்வது ஒரு கனவு. அதனால் அவர்கள் நெட், ஸ்லெட் போன்றவற்றை எழுதநேரிட்டது மட்டுமல்ல, டி.ஆர்.பியின் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காகவே நூல்களை எழுதவேண்டிய அவசியம் நேரிட்டது. டிஆர்பியில் தேர்ச்சிபெற வேண்டி, எனது மாணவர் ஒருவர் (தெரிந்தே அது உருபைப் பயன்படுத்துகிறேன்) தம்முடைய பிஎச்.டி. ஆய்வேட்டைப் பகுத்து ஆறு நூல்களாக வெளியிட்டது நினைவிருக்கிறது. எழுத வேண்டிய நிர்ப்பந்தத்திற்காக- கணக்குக் காட்டுவதற்காக எழுதுபவர்களின் எழுத்தில் எவ்வளவு ஆய்வு நேர்மை, ஆய்வு மனப்பான்மை யெல்லாம் இருக்கும்?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நெறியாளர்கள் செய்யும் ஊழல். தங்களுக் குள் குழுக்கள் அமைத்துக் கொண்டு உன்னுடைய மாணவனை நான் தள்ளிவிடுகி றேன், என்னுடைய மாணவனை நீ குறைசொல்லாதே என்பதுபோல-பண்டப்பரிவர்த் தனையில் இறங்குகிறார்கள். நேர்மையாக மதிப்பீடு செய்பவரை ஒருவரும் மதிப்பதும் இல்லை, அவருக்கு ஆய்வேடு செல்வதும் இல்லை.

இவை யாவற்றிற்கும் மேலாக, ஆராய்ச்சி பொதுப்புத்தியினால் எடைபோடப் படுகிறது. அவர் மனத்தைப் புண்படுத்தக்கூடாது, இவர் மனத்தை பாதிக்கக்கூடாது, மதச்சார்பாளர்களை அவமதிக்கக்கூடாது, இந்தக் கட்சியை எதிர்க்கக்கூடாது, அந்தக் கட்சியைக் குறைசொல்லக்கூடாது என்ற நிலை. எல்லாம் எப்படியோ போகட்டும், எதுக்கய்யா நமக்கு வம்பு? முதலில் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்தானே?
ஆக இன்றைய நிலை, நான் பல ஆண்டுகளாக என் மாணவர்களிடையே சொல்வதுபோல, 100 பக்கம் எழுதினால் முதுகலை திட்டக்கட்டுரை, 200 பக்கம் எழுதினால் எம்.ஃபில் ஆய்வு. 300 பக்கம் எழுதிவிட்டால் பிஎச்.டி ஆய்வேடு. தலைப்பு உள்ளடக்கம் பற்றியெல்லாம் கவலை இல்லை. ஆய்வுநெறிமுறை பற்றிக் கவலையே இல்லை. அப்புறம் ஆய்வு எப்படி தமி ழில் வளரும்? அதுகூடப் போகட்டும், தமிழ் ஆய்வைப் பற்றிப் பிறதுறையாளர்கள் இடையே என்ன மதிப்பு இருக்கும்? தங்கள் மதிப்பைக் குறைத்துக்கொள்வதோடு, தமி ழின் மதிப்பையும் குறைத்து, இறுதியில் தமிழ் படிப்பதில் கஷ்டம் என்ன இருக்கிறது என்ற கேலிக்கு மொழியை ஆளாக்கிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட தமிழாசிரியர்களை யும் ஆய்வாளர்களையும் பார்த்தவர்கள் உயர் அதிகாரிகள் ஆகும் வாய்ப்பு நேரிட்டால் தமிழ்க்கல்விக்கு என்ன மரியாதை தருவார்கள்? கடைசியாகத் தமிழாசிரியரின் நிலை கமலாம்பாள் சரித்திரத் தில் வரும் ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளையின் நிலைதான்.

நாம் என்ன செய்தாலும் அது நம்மை மட்டுமல்ல, தமிழின் நிலையையும் பாதிக் கும் என்ற உணர்வு இருந்தால் ஒழுங்காகவே தமிழ் வளரும், தமிழ்க் கல்வி வளரும், தமிழ் ஆராய்ச்சி வளரும். ஆனால் சுயநலம் மிகுந்த இக்காலத்தில் இதைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் யார்? தமிழ்ச்சாதியில், தமிழ்நாட்டில் பிறந்துவிட்டோம். அதிலும் தமிழ் கற்கவும் தொடங்கிவிட்டோம். நாம் செய்யும் எல்லாக்காரியங்களும் தமிழின் மதிப்பையும் தமிழ்நாட்டின் மதிப்பையும் தமிழர்களின் மதிப்பையும் பாதிக்கக்கூடி யவை என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால் காலம் மாறும்.

555882_475200095840939_39838795_n-1

 

 

Critical analysis on

மேற்கு நாட்டில் ஆய்வு வளர்ச்சி எந்த அளவு பெருகியுள்ளது

ஆய்வு நெறிமுறைகள்
ஆய்வு வளர்ச்சியில் சிறுபத்திரிகைகள் என்ன பங்களிப்புச் செய்தன?
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு போன்ற மாநாடுகள்
தனியார் அமைப்புகள், நிறுவனங்கள்
தமிழ் ஆராய்ச்சியை வளர்ப்பதற்கென சில தமிழ் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழ்ப் பல்கலைக் கழகம்
ஆசிய ஆய்வு நிறுவனம்
இதேபோல ஆண்டுதோறும் ஒருமுறையாவது எழுதவைக்கின்ற
பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்
மதுரையில் இதையட்டி இன்னொன்று தோன்றியது
பல்கலைக்கழக அமைப்புகள்
ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள்
பல்கலைக்கழக ஆய்வேடுகள்வையை மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தில் தோன்றிய முன்னோடி அமைப்பு
பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆண்டுதோறும் இரண்டு ஆசிரியக் கருத்தரங்கங்கள்
அவற்றைத் தொகுத்து வெளியிடுதல்
கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் மருதம் என்ற பெயரில் வெளியிட்டார்கள். இதுபோல அந்தந்தப் பல்கலைக்கழகம், கல்லூரி அவற்றின் ஆய்வுஅமைப்புகளுக்கும் வெளியீடுகளுக்கும் பெயர்களை நிர்ணயித்துக்கொண்டன.


தமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்

tamil-ilakkiya-1
ரெனி வெல்லக்ஆஸ்டின் வாரன் எழுதிய ஒப்பிலக்கியக் கொள்கை நூலில் இலக்கியக் கல்வியை இலக்கிய வரலாறுஇலக்கியக் கொள்கைஇலக்கியத்திறனாய்வு என மூன்றாகப் பிரித்துஒன்று இன்றி மற்றது இல்லை எனக் காட்டினார்கள். இலக்கியக்கொள்கை அடிப்படையிலேயே மதிப்பிடுதல் நிகழ்வதால், இலக்கியக் கொள்கை இன்றித் திறனாய்வு இல்லை. எவை சிறந்த நூல்கள் என்பதை மதிப்பிடும் துறைதான் இலக்கியத்திறனாய்வு ஆகையால் இலக்கிய வரலாற்றில் எந்தெந்த நூல்களை நாம் தேர்ந்தெடுத்து எப்படி விளக்கப் போகிறோம் என்பதற்குத் திறனாய்வே அடிப்படை. இலக்கியத் திறனாய்வோ, இலக்கிய வரலாறோ இன்றி இலக்கியக்கொள்கை என ஒன்றை வகுக்கவோ வரையறுக்கவோ முடியாது.

ஒப்பிலக்கியத்திற்கு அடிப்படை இலக்கிய வரலாறு என்றார்கள், ஃபிரெஞ்சு இலக்கியவாதிகள். தமிழில் இதுவரை சரியான இலக்கிய வரலாறு எழுதப்படாத காரணத்தினாலேயே ஒப்பிலக்கிய வளர்ச்சியும் சரிவர ஏற்படவில்லை என்று தோன்றுகிறது. வையாபுரிப்பிள்ளைதெ.பொ.மீசி. ஜேசுதாசன்மு.வ. போன்றோர் எழுதிய இலக்கிய வரலாறுகள் எல்லாம் முழுமைத் தன்மையுடையனவாக இல்லை. பிறர் எழுதிய இலக்கிய வரலாறுகள் யாவும் தேர்வுக்குறிப்புகளாகபட்டியல்களாக அமைந்துள்ளன.

      மு.அருணாசலம்பிள்ளைமயிலை சீனி. வேங்கடசாமிஆ.வேலுப்பிள்ளை போன்றோர் முயற்சிகள் குறிப்பிடத்தக்கன. என்றாலும் முழுமையான இலக்கிய வரலாறுகளாக இவற்றையும் பல காரணங்களால் கருதமுடியவில்லை. மு. அருணாச்சலத்தின் இலக்கிய வரலாறு சில நூற்றாண்டுகளுக்கு மட்டுமே விரிவாகக் கிடைக்கிறது. தமிழில் இலக்கிய வரலாற்றுப் பிரச்சினைகளைக் கோடிட்டுக்காட்டும் முறையிலும்எப்படித் தமிழ் இலக்கிய வரலாற்றை அமைக்க வேண்டும் என ஆலோசனை கூறும் முறையிலும் கா. சிவத்தம்பியின் தமிழில் இலக்கிய வரலாறு என்னும் நூல் அமைந்துள்ளது.

tamil-ilakkiya-2

“உண்மையான இலக்கிய வரலாறு என்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்றை,அதன் இலக்கியங்களைக் கொண்டுஅதன் இலக்கியங்களின் அடிநாதங்கள்,வெளிப்பாடுகள்தாக்கங்கள் ஆகியன கொண்டு எடுத்துக்கூறுவதாகும். இலக்கிய வரலாறு என்னும் தொடரை நாம் நான்காம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு விட்டோம். அதனை ஓர் உம்மைத் தொகையாகக் கொண்டு இலக்கியமும் வரலாறும் இன்றியமையாவகையிற் பின்னிப் பிணைந்து கிடப்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் சிவத்தம்பி. (தமிழில் இலக்கிய வரலாறுப.9)

இலக்கியப்போக்கில்வரலாற்றில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை இலக்கிய வரலாறு உணர்த்த முனைய வேண்டும். ஆனால் அவற்றுக்குப் பாதுகாப்புரை வழங்கவோ அவற்றை நியாயப்படுத்தவோ முனையக்கூடாது. காலப்போக்கில் ஒரு மொழியில் ஏற்பட்ட படைப்புணர்வு அனுபவங்களின் பரிணாமத்தை வெளிப்படுத்துவதாக இலக்கிய வரலாறு அமையவேண்டும்.

tamil-ilakkiya-3

ஆங்கிலத்தில் இலக்கிய வரலாறு எழுதிய ஜார்ஜ் சாம்சன்செயிண்ட்ஸ்பரிகாம்டன் ரிக்கட் போன்றவர்கள் காலவரிசை அடிப்படையிலே தங்கள் இலக்கிய வரலாற்று நூல்களை எழுதினார்கள். தமிழ் இலக்கிய வரலாற்று முயற்சிகள் இவற்றைப் பின்பற்றிஆனால் சுருக்கமாக அமைந்தன. ராபர்ட் இ. ஸ்பில்லர் போன்ற நவீன அறிஞர்கள் கால அடிப்படை இல்லாமலே இலக்கிய வரலாற்றை அமைத்துள்ளார்கள். குறித்த ஒரு மொழியில் நிகழும் படைப்பியக்க வெளிப்பாடுகள் தற்செயலாக ஒரு காலப்போக்கில் அமைந்து விடுகின்றன. இவற்றில் சில எழுத்துருப் பெறுகின்றன,சில எழுத்துருப் பெறாமலே மறைந்துபோகின்றன.

ஒரு நல்ல இலக்கிய வரலாறு இலக்கியப் பிரதிகளின் நம்பகத்தன்மைமூலபாடம்இலக்கியத் தகுதி,மொழியடிப்படைகள்இவற்றிற்கும் மூலமாக உள்ள சிந்தனைக் கட்டமைப்புகள் போன்ற அனைத்தையும் கணக்கில் கொண்டு விவாதிக்க வேண்டும். தமிழில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடைக்கின்றஅல்லது கிடைக்காத நூல்களின் வரலாற்றுத்தன்மை முழுவதையும் கணக்கில் கொண்டு ஓர் இலக்கிய வரலாற்று நூலை உருவாக்குவது மிகக்கடினம்.

tamil-ilakkiya-4

தமிழில் ஒரு நல்ல இலக்கிய வரலாற்று நூலை உருவாக்குவதற்கு இரு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்றுநமக்குக் கிடைக்கும் மூல ஆதாரங்கள் மிகக்குறைவானவை. இரண்டுஇவற்றை நாம் எந்த அளவுக்குப் புறவயநோக்கில் (முழு அளவிலான புறவயநோக்கு என்பது இயலாதது என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும்இயன்ற அளவிற்கு இதனைக் கையாள முயலுதல் சிறப்பு) கிடைக்கும் தகவல்களை விளக்கி எழுத முனைகின்றோம் என்பது. இந்த இரண்டிலுமே எண்ணற்ற குறைகள் இருப்பதனால் ஒரு சரியான இலக்கிய வரலாற்றை உருவாக்க இயலவில்லை. இலக்கிய வரலாறு என்பது காலப்போக்கில் என்னென்ன படைப்புகள் தோன்றின எனப்பட்டியலிடுவதன்று. இப்பட்டியல்களுக்கு ஆதாரமாக அமையக்கூடிய மெய்ம்மைகள்அதற்கு அடிப்படையாக உள்ள காலச்சூழல் போன்றவை எப்படி அக்கால அனுபவங்களோடு தொடர்புறுகின்றன என்று காட்டவேண்டும். எந்திரத்தனமாகஅடுத்தடுத்துக் காலவரிசைப்படி தோன்றுதல் என்னும் முறையில் இலக்கிய வகைகள் தோன்றவில்லை. குறித்த ஒரு காலத்தில் எப்படி ஒரு இலக்கியப் படைப்பு தோன்றியதுஎப்படி அது சமூகத்தில் வெளியானதுஎப்படி ஏற்கப்பட்டது என்பனவற்றை எல்லாம் இலக்கிய வரலாறு சொல்லவேண்டும்.

இலக்கிய வரலாற்றின் பிரச்சினைகளை ஆராய மரபு ரீதியாகக் கையாளப்படும் வழிமுறைகள் சில உள்ளன. அவற்றுள் முதலாவதும் பழையதுமான வழிமுறைஇலக்கியப் படைப்புகளைத் தேர்ந்தெடுத்துஅவற்றைக் காலவரிசையின்படி அமைத்துக் கூறுவதாகும். ஆங்கில இலக்கியத்தில் பேராசிரியர் ஜார்ஜ் செயின்ட்ஸ்பரி இம்மாதிரி முறையில் எழுதியவர். ஆனால் இம்முறையைத் தமிழில் கையாளுவதில் அடிப்படையான வினாக்கள் உள்ளன.

“தமிழின் இலக்கிய வரலாற்றை எழுதுவதிலுள்ள மிக முக்கியமான பிரச்சினைகி.பி.1300க்கு முந்தியனவாக நம்மிடத்தே இன்றுள்ள தமிழிலக்கியங்கள் எந்த அளவுக்குப் பூரணமானவைஎந்த அளவுக்கு உண்மையில் இருந்த இலக்கியங்களின் முற்று முழுதான தொகுதியாகக் கொள்ளப்படத்தக்கன என்பதாகும். அதாவது உள்ள இந்த இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு நாம் முற்று முழுதானஐயந்திரிப்பற்ற இலக்கிய வரலாற்று ஆய்வினில் இறங்கலாமா? என்பதே பிரச்சினையாகும் என்கிறார் கா. சிவத்தம்பி. அதாவது இருக்கும் இலக்கியங்களை நம்பி இலக்கிய வரலாறு எழுத முடியுமா? என்பதே பிரச்சினை. இதற்குள் இன்னும் ஒரு பிரச்சினையும் உண்டு. அதாவது குறிப்பிட்டதொரு காலப்பகுதியிலிருந்தாவது (சங்க காலம் என்று வைத்துக் கொள்வோம்) தமிழில் இயற்றப்பட்ட எல்லா இலக்கியங்களும் இன்று நமக்குக் கிடைக்கின்றனவா? என்பதும் சந்தேகம்.

tamil-ilakkiya-5

இன்னொரு வழி இலக்கிய வரலாற்றுக்குரிய படைப்புகளை அவற்றின் வரலாற்று மூலங்களுடன் சேர்த்தும்படைப்பாளிகளின் இலக்கிய அனுபவங்கள் கலாச்சார அனுபவங்கள் ஆகியவற்றோடும் சேர்த்தும் கூறுவதாகும். மூன்றாவது முறை,காலத்தின் இயக்கத்திற்கேற்ப இலக்கியப்படைப்புகளைத் தொடர்புபடுத்தல். இலக்கியப் படைப்புகள் காலப்போக்கில் சுழற்சிமுறையில் அமைகின்றன என்ற கருத்தை அடிப்படையாக வைத்து அமெரிக்க இலக்கிய வரலாற்றை எழுதியவர் ராபர்ட் இ. ஸ்பில்லர் என்பவர். இதுவரை எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாறுகளை ஆராயும் கா. சிவத்தம்பி அவற்றிற் காணப்படும் பலவேறு குறைபாடுகளையும் சுட்டியுள்ளார். உதாரணமாகசைவத்தை மட்டுமே தமிழ் இலக்கியத்திற்குரிய பாரம்பரியமாகக் கொண்டுபிற சமயத்தவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியதாகக் கருதும் மனப்பாங்கு அடிப்படையில் காணப்படும் ஒன்று. இதைப்பிற சமயத்தவர்களும் (கிறித்தவர்களும்முஸ்லீம்க ளும்) எதிர்க்கவில்லை.

இன்னொன்றுபிறநாட்டு அறிஞர்கள் தமிழில் எழுதியுள்ளனவற்றை ஆராயும்போது அவற்றுள் அந்த அறிஞர்களின் தாய்மொழி மரபு எவ்விதம் தொழிற்பட்டுள்ளது என்பதை இதுவரை எவரும் ஆராய்ந்ததில்லை. “உதாரணமாக வீரமாமுனிவருடையஅன்றேல் தத்துவபோதகருடைய தாய்மொழி இலக்கிய மரபுகள் எந்த அளவுக்கு அவரவர் ஆக்கங்களிலே காணப்படுகின்றன என்பது பற்றி நாம் இதுவரை ஆராயவில்லை (மு.நூ.,ப.172).

tamil-ilakkiya-6

மேலும் தமிழ்மக்களின் முழுமையான இலக்கிய வரலாற்றை எழுதுவது பற்றிச் சிந்திக்கும்போது, “தமிழர்களால் வடமொழியில் எழுதப்பட்டுள்ள நூல்கள் பற்றிய முற்று முழுதான ஆய்வு மேற்கொள்ளப்படல் வேண்டும் என்கிறார் கா. சிவத்தம்பி. வடநாட்டில் முஸ்லிம்கள் ஆட்சி நிலைபெற்ற பின் தமிழ்நாட்டிலிருந்தே பிரதானமாக வடமொழி இலக்கியங்கள் எழுதப்பட்டன என்று கூறிஆதாரமாக பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி எழுதிய வடமொழி இலக்கிய வரலாற்றைக் காட்டுகிறார். மேலும் தெற்கிலிருந்து எழுதப்பட்ட சமஸ்கிருத இலக்கியங்கள் மொழிமரபுத்தொடர்நடை ஆகியவற்றில் வடக்கிலிருந்து எழுதப்பட்டவையிலிருந்து மாறுபடுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இத்தகையதொரு ஆய்வினை – அதாவது கேரளத்திலிருந்து எழுதப்பட்ட சமசுக்கிருத இலக்கியங்கள் பற்றிய ஆய்வினை குஞ்சுண்ணி ராஜா என்பவர் மலையாளத்தில் எழுதியுள்ளார். அதுபோன்றதொரு முயற்சி தமிழில் உருவாக வேண்டும்.

தமிழில் பிராமண மனப்பான்மையுடையவர்கள்அனைத்தும் சமஸ்கிருதத்திலேயிருந்தே வந்தன என்னும் மனப்போக்கை இன்றளவும் கொண்டுள்ளார்கள். இது ஒரு தலைச்சார்பானது என்பது மட்டுமன்றி,தமிழ்க்கலாச்சாரம் சார்ந்த அவர்களது பங்களிப்பை அவர்களே மறுப்பதாகவும் அமைகிறது. எனவே நடுநிலையானசமஸ்கிருத இலக்கியமும் தமிழிலக்கியமும் திரிபறக்கற்ற அறிஞர்கள் இத்துறையில் ஈடுபட வேண்டும். இது இந்தியப் பண்பாட்டில் தமிழரின் பங்களிப்பினை நன்கு வெளிப்படுத்துவதாகவும் அமையும். வடமாநிலத்தவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் நிலவும் தேவையற்ற மொழிகலாச்சாரப் பிரச்சினைகள் பலவற்றைத் தீர்ப்பதாகவும் அமையும். இதுபோலவே பிற திராவிட மொழிகளுக்கும் தமிழுக்குமான உறவும் சரிவர ஆராயப்படவேண்டும். இதற்கு ஒப்பிலக்கியத்துறையின் வளர்ச்சி தேவை.

இதனை ஒட்டிக் கருத்துரைக்கும் கா. சிவத்தம்பி, “நேர்சீரான தமிழிலக்கிய வரலாறானதுதமிழர்களின் சிந்தனை வளர்ச்சியின் தன்மையையைம் அளவையும் நன்கு நிறுவிக் கொள்வதற்காக வடமொழிதெலுங்குமலையாளம்,சிங்களம் போன்ற மொழிகளிலுள்ள தொடர்பான நூல்கள் பற்றிய ஆய்வையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். அத்தகைய ஓர் ஆய்வினாலே தான் தமிழின் இந்தியத் தன்மையை நிறுவுதல் முடியும். தமிழிலக்கியத்தின் சர்வதேசியத் தன்மை (நாவல்சிறுகதைபுதுக்கவிதை போன்ற இலக்கிய வகைகளின் வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் மூலம்) இன்று வற்புறுத்தப்படுவது போன்றுதமிழிலக்கியத்தின் இந்தியத் தன்மையும் நன்கு வலியுறுத்தப்படல் வேண்டும் என்கிறார் (மு.நூ.,ப.175)

இதுவரை நாம் கண்ட கருத்துகளே தமிழ் இலக்கிய வரலாற்றிற்கும்ஒப்பிலக்கிய ஆய்வுக்கும்தமிழின் தனித்தன்மை பற்றி நாம் பேசுவனவற்றை நிரூபிக்க வேண்டிய நிலைக்குமான தொடர்புகளை நன்கு எடுத்துக்காட்டக்கூடியவை.

இவையன்றிஇலக்கிய இயக்கங்களுக்கும் இலக்கிய வரலாற்றிற்கும் ஒப்பிலக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இலக்கிய இயக்கங்கள் யாவும்அடிப்படையில்பொதுவான கலை இயக்கங்களே. எனவே பல்வேறு கலைகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கலாச்சார அடிப்படையில் ஆராய்வது முக்கியமானது. உதாரணமாக, “கி.பி.600க்குப்பின்வரும் இலக்கியங்களில் வரும் மரபுநிலைப்பட்ட உவமைகள் படிமக்கலையை ஆதாரமாகக் கொண்டவை என்பது அதிகம் உணரப்படுவதில்லை(மு.நூ.ப.177). எனவே கலையியக்கங்கள்-செவ்வியம்ரொமாண்டிசிசம் முதல் படிம இயக்கம்குறியீட்டியம் போன்றவை ஊடாக இப்போதைய பின்நவீனத்துவபிற்காலனியதலித்தியபெண்ணிய இயக்கங்கள் வரைஎந்தெந்தத் தாக்கங்களால் எவ்விதம் காலப்போக்கில் பரவியுள்ளனஒரு குடும்ப மொழிகளுக்குள்ளும்பிறமொழிகளின் ஊடாகவும் இவை எவ்வகை மாற்றங்களை இலக்கியத்திலும் பிற கலைகளிலும் ஏற்படுத்தியுள்ளன என்பதையெல்லாம் ஆராய வேண்டியிருக்கிறது. உதாரணமாகவங்காளி மொழியின்தாகூரின் பாதிப்பினால் தான் தமிழின் ரொமாண்டிய இயக்கம் கூர்மைப்பட்டது என்பதை மறுக்க இயலாது.

இவற்றோடு புத்தக அபிவிருத்தி (புத்தக உற்பத்திபுத்தக வியாபாரம்புத்தக விநியோகம்நூல் மதிப்புரை முறைகள்எழுத்தறிவு வீதம்நூலகங்கள் போன்றவை) பற்றிய ஆய்வு இன்றி நவீன கால இலக்கிய வரலாறு எழுதப்படவும் முடியாது என்பதை சிவத்தம்பி வலியுறுத்தியுள்ளார்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழில் இனிவரும் இலக்கிய வரலாறுகள் எழுதப்படவேண்டும். இம் முயற்சிகள் தமிழில் ஒப்பிலக்கியத்தின் வளர்ச்சிக்கும்தமிழுக்கும் பிறமொழிகளுக்குமான உறவுகள் சீர்ப்படுவதற்கும் பெரிதும் துணை புரியும்.


மார்க்ஸிய அழகியலும் ஞானியும்

மார்க்ஸிய அழகியலும் ஞானியும்

ஞானி தமிழுலகில் ஏறத்தாழ முப்பதாண்டுகளாகத் திறனாய் வாளராக இயங்கி வருபவர். படைப்புலகிலும் அவர் சில காரியங் களைச் செய்துள்ளார் என்ற போதிலும் அவை முக்கியமானவை அல்ல என்று கருதுகிறேன். ஆனால் திறனாய்வுலகில் அவரது சாதனை என்றும் நிற்கக்கூடியது. அத்திறனாய்வுகளுக்கெல்லாம் அடிப்படையாக அவருக்கு ஓர் தனித்த அழகியல் பார்வை இருக்கிறது. அது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாக இருப்பதால் அதனைப் பற்றிய கட்டுரையாக இது அமைகிறது.

அவரது பார்வைகள் பெரும்பாலும் எனக்கு உடன்பாடாக இருப்பத னால் ஞானியின் அழகியல் கொள்கை அல்லது விமரிசனக் கொள்கை பற்றி நான் இதுவரை எதுவும் எழுதியது கிடையாது. பொதுவாக அவருடைய அழகியல் என்பது மார்க்ஸிய சித்தாந்த எல்லைக்குள் இயங்குவதால் அதனை ‘மார்க்ஸிய அழகியல்’ என்பதற்குள் அடக்கலாம். ஆனால் அது பிற மார்க்ஸியவாதிகள் முற்றிலும் ஏற்கக் கூடிய அழகியலும் அல்ல.

ஞானி எங்குநல்லது காணப்படினும் அதை எடுத்துக்கொள்ளும் ஒரு விமரிசகர். நமது சித்தர் மரபிலிருந்து நாம் நமக்கென்ற பார்வைகளைப் பெறவேண்டும் என்பார். அதேசமயம் பக்தி இலக் கியத்தையும் பாராட்டுவார். பொன்னீலன் போன்ற மார்க்ஸிய நோக்குடைய எழுத்தாளர்களையும் பாராட்டுவார். ஒருபடி மேலேசென்று ஜெயமோகன், சுந்தர ராமசாமி போன்றவர்களின் படைப்பு களைப் புறக்கணிக்கக்கூடாது என்பார். இவையெல்லாம் கட்சிசார்ந்த பிற மார்க்ஸியர்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றவை. அவர்களது கட்சி சார்ந்த அழகியலுக்குப் புறம்பானவை. எங்கு நல்லது காணினும் எடுத்துக்கொள்ளக்கூடிய இத்தகைய பார்வையை ‘எக்லெக்டிக்’ என்பார்கள். இந்த எக்லெக்டிக் பார்வை மார்க்ஸிய அழகியலுக்கு முரணானது எனக் கட்சி சார்ந்த மார்க்ஸியர்கள் நினைக்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் நூல்களில் ஞானிக்கு முக்கியத்துவம் தந்தது கிடையாது.
மார்க்ஸிய அழகியல் என்ற பெயரில் ஞானி உட்படப் பலர் நூல் கள் எழுதியிருக்கிறார்கள். அவற்றின் ஆதாரக் கருத்துகளைத் தொகுத்து நோக்கி ஞானியின் அழகியல் பார்வை அவற்றிலிருந்து எப்படி மாறுபடுகிறது என்பதைப் பார்ப்பது நலம். எனவே அடிப் படையாக இங்கே சில செய்திகளைத் தொகுத்துக் கொள்வோம்.

மார்க்ஸ்-ஏஞ்சல்ஸ் எழுத்துகளில் கலை பற்றி முறையான கொள்கை எதுவும் காணப்படுவதில்லை. ஆனால் இருவருமே தங்கள் இளமை தொடங்கி வாழ்நாள் பூராவும் கலையில் பேரளவு ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் எழுத்துகளில் ஆங்காங்கு காணப்படும் குறிப்புகளால் அறியலாம். அண்மைக் காலத்தில் பலரும் இத்தகைய குறிப்புகளைத்தான் மார்க்ஸிய அழகியல் ஒன்றை உருவாக்கப் பயன்படுத்திவந்துள்ளனர். குறிப் பாக, ஆங்கிலத்தில் ஆர்வன் (1973), லய்ங் (1978) ஆகியோரின் நூல்கள் இதற்குத் துணைபுரிகின்றன.

மார்க்ஸ்-ஏஞ்சல்சின் அழகியல் பொதுவாக அவர்களது இலக் கியப் பார்வையின் விளைவேயாகும். அவர்கள் படித்த இலக்கியங் களில் நாடகங்களும் அடங்கும். எனினும் இவை அழகியல் கொள்கையாக உருப்பெறக்கூடிய அளவுக்கு ஒருசீர்த்தன்மை உடையனவாக இல்லை. அவையும் பெரும்பாலும் உள்ளடக்கம் தொடர்பானவையாகவே இருப்பதால் பிற்காலத்தில் மார்க்ஸிய இலக்கிய விமரிசனம் முழுமையுமே உள்ளடக்கத் தொடர்பாக மாறிப்போயிற்று. வடிவத்திற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்க வில்லை. 1945வரை மார்க்ஸ்-ஏஞ்சல்சின் கடிதங்கள், அவர் களது அழகியல் கருத்துகள் ஆகியவை தொகுத்துத் தரப்படவே யில்லை. இதனால் அவர்களது பார்வைகளையும் பின்வந்த திற னாய்வாளர்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏஞ் சல்ஸ் மறைந்து ஏறத்தாழ ஐம்பதாண்டுகள் சென்ற பிறகே மார்க்ஸ்-ஏஞ்சல்ஸுடைய அழகியல்கருத்துகள் ஒருவாறாகத் தொகுக்கப்பட்டுத் திறனாய்வுக்கெனப் பயன்படுத்தப்படலாயின. இருந்தாலும் மார்க்ஸிய அழகியல் ஒன்றை உருவாக்கவேண்டு மென்று பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதி முதலாகவே முயற் சிகள் மேற்கொள்ளப் பட்டன. மெரிங் (1893), பிளஹெனாவ்(1912) ஆகியோர் செய்த முயற்சிகளை இங்கே குறிப்பிடலாம்.

பிந்தைய மார்க்ஸிய எழுத்தாளர்கள் செய்த முயற்சிகளின் சாரத் தினை ‘யதார்த்தத்தை வடிவமைத்தல்’ என்ற தொடருக்குள் அடக்கிவிடலாம். இதற்கு அடிப்படையாக அமைவது மார்க்ஸின் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் இயங்கியலுமாகும். இவற் றைப் பின்பற்றினால் யாரும் இலக்கியப் படைப்புகளையோ அவற் றின் அழகியலையோ பொருளாதார வரலாற்றுமைய வாதத்திற் குள் முடக்கிவிடமுடியாது. என்றாலும் எப்படியோ பின்னாளைய இலக்கியப் படைப்புகளும் விமரிசனங்களும் மார்க்ஸிய அடிப்படை யிலான ஓர் அறவியல் பிரசாரத்திற்குள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. பெரும்பாலும் வர்க்கப் பார்வை, யதார்த்தத்தை மீள்படைப்புச் செய்தல் என்ற அளவிலேயே மார்க்ஸியப் படைப் புலகம் முடங்கிவிட்டது.

1840களில் பாட்டாளிவர்க்கத் தலைமை என்பதைச் சிந்திக்கத் தொடங்கிய நாள்முதல் வர்க்கப்பார்வை என்பது முக்கியமான மார்க்ஸியச் சிந்தனையாகிவிட்டது. உண்மையில் வர்க்கச் சமன் மைகள் (Class Equivalents) என்னும் விஷயம்பற்றி முதலில் பேசிய வர்கள் மார்க்ஸோ ஏஞ்சல்ஸோ அல்ல. பிளெஹனாவ்தான் இக் கொள்கையை உருவாக்கினார். இளம் ஹெகலியர்கள் வெளிப் படையாகவே அரசியல் பிரசாரத்தைத் தங்கள் படைப்புகளில் வைத்தபோது அவை வரலாற்று உணர்வுடையவை என்ற காரணத்தினால் மார்க்ஸ் ஓரளவு ஏற்றுப் பாராட்டவும் செய்தார். ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் வர்க்க உணர் வைத் தாண்டி ஒரு பிரபஞ்ச ஒத்துணர்வுத் தன்மைக்குச் சென்று தங்கள் படைப்பினை மேம்படுத்த முடியுமா என்பதில் மார்க்ஸுக்குப் பெரும் ஐயப்பாடு இருந்தது. வர்க்க உணர்வைத் தாண்டியும் பிரபஞ்ச ஒத்துணர்வோடு படைத்த பால்ஸாக் மாதிரியான எழுத் தாளர்களை அவர் பாராட்டத் தயங்கவில்லை. மாறாகத், தங்கள் வர்க்க மூலங்களைத் தாண்டி வெளியே வராமல், சமத்துவம் சகோதரத்துவம் என்று பெயர் பண்ணிப் படைத்த எழுத்தாளர்களை -உதாரணம் யூஜின் சூ போன்றவர்கள் – எள்ளி நகையாடத் தயங்க வில்லை.

பின்னாளில் வர்க்க இணைவுகள் பற்றிய பார்வைகள் எழுத்தாள ருக்கு எழுத்தாளர் வேறுபடத்தொடங்கின. பக்தின் முன்வைத்த தீவிர மனிதமையவாதம் (Humanism), புரட்சியை வலியுறுத்தியது. அதேசமயம், அவருக்கு முப்பதாண்டுகள் கழித்து லூசியன் கோல்ட்மன் முன்வைத்த ‘மரபுவழி அமைப்பியம்’ என்னும் கொள்கை ஒரு வர்க்கத்தினரின் உலகப்பார்வை என்பதை அடிப் படையான இலக்கிய அளவுகோலாகக் கொள்கிறது. 1930களில் போல்ஷ்விக் விமரிசனங்களில் ஓர் எழுத்தாளரின் வர்க்க அடிப்ப டையே இலக்கியத்தின் வர்க்க அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. இப்படிப்பட்ட பார்வைகள் வர்க்கச் சமன்மைகள் என்னும் பார்வை யை வெறுமனே பெயரளவுக்குப் பயன்படுத்துகின்றன. ஆனால் இதே பார்வையை சார்த்தர், ஃப்ளாபேரின் வர்க்கக் கல்வி பற்றிய நூலில் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

துண்டுதுண்டாக உள்ள இந்தக் குறிப்புகள், பலவேறு விதமான அழுத்தங்களும் நிலைப்பாடுகளும் மார்க்ஸிய அழகியல் கொள்கை யில் உருவாக வழிவகுத்துள்ள்ன. பொதுவாக நோக்கினால் மார்க்ஸின் எழுத்துகளை வைத்து ஓர் மனிதமைய அழகியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி கலை என்பது படைப்புச் சக்தி யுள்ள ஓர் உழைப்பு (creative labour). பிற அந்நியப்படாத உழைப்புக ளிலிருந்து இது எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல. கட்டடக் கலை ஞனையும் தேனியையும் தொடர்புபடுத்தி மார்க்ஸ் தமது மூல தனம் நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில் பேசுகிறார். இங்கு கட்டடக் கலைஞனை அவர் உதாரணம் தந்தது, அவனுக்குப் பிரதானம் தரவேண்டும் என்ப தற்காக அல்ல. மனித உழைப்பாளி ஒருவன் என்ற அளவிலேயே அங்கு அந்த உதாரணம் அளிக்கப் படுகிறது. அந்நியமாகாத எந்த உழைப்பும் படைப்பாற்றல் கொண் டதே ஆகும் என்பது மார்க்ஸின் கருத்து. மார்க்ஸின் இந்த அற்புதமான கருத்து, கலையினை அதன் மாயத் தன்மையினின்றும் விலக்கி, வரலாற்றுப் பூர்வமாக அதை நம்மை நோக்கவைத்து, பிற செயல்களிலிருந்து கலைச்செயல் உயர்ந்ததோ மாறுபட்டதோ அல்ல, அனவைர்க்கும் அது இயல்பாகக் கைவருவது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

முதலாளித்துவ அமைப்பில் பிற உழைப்புகளைப் போலவே கலை யும் மேலும் மேலும் அந்நியமாக்கப்படுகிறது என்பதை இப் பார் வையின் ஓர் உபதேற்றமாக நாம் கொள்ளலாம். கலை என்பது ஓர்விலைப் பண்டமாக மாறிவிடுகிறது. கலைஞனும் ஓர் சுரண்டப் படும் தொழிலாளியாகி, படைப்பின்மீது தனக்குள்ள உரிமையை இழந்துவிடுகிறான். பிற தொழிலாளரைப் போலவே உபரிமதிப்புக் கெனப் படைக்குமாறு தூண்டப்படுகிறான். ”முதலாளித்துவ முறை, சிலவித ஆன்மிகப் படைப்பு முறைகளுக்கு எதிரானது – உதாரண மாகக் கவிதையும் கலையும்” என்று மார்க்ஸ் சொல்வதை நாம் இங்கு மனத்திற் கொள்ளலாம். முதலாளித்துவத்தின் கீழ் கலை எப்படி உருமாற்றம் அடைகிறது என்பதை அவர் விளக்குகிறார்:

(முதலாளித்துவ நோக்கில்) “ஐந்து பவுண்டு காசுக்காக சுவர்க்கநீக் கம் படைத்த மில்டன் ஓர் உற்பத்தித் திறனற்ற தொழிலாளி. ஆனால் அதேசமயம் தொழிற் சாலையில் உற்பத்தி செய்வது போலத் தன் முதலாளிக்காகப் படைப்புகளை உற்பத்தி செய்து தள்ளும் ஓர் எழுத்தாளன் உற்பத்தித் திறன்மிக்கவன்-ஏனென்றால் அவன் படைப்பு ஆரம்பத்திலிருந்தே மூலதனத்தினால் உருவாக் கப்பட்டு அந்த மூலதனத்தினை மேலும் பெருக்க உதவுகிறது. தனது மனநிறைவுக்காகப் பாட்டுகளைப் பாடும் ஒருபாடகி உற்பத் தித்திறன் அற்றவள். ஆனால் அவளே ஒரு முதலாளியால் வேலைக்கு ஏற்கப்பட்டு முதலாளி சம்பாதிப்பதற்காகப் பாடினால், அவள் உற்பத்தித் திறன் கொண்டவளாகிவிடுகிறாள். ஏனென்றால் அவள் மூலதனத்தை உருவாக்குகிறாள்.”

இவை மார்க்ஸின் வார்த்தைகள். மார்க்ஸுக்குப் பின்னர் கலாச் சாரத் தொழிற்சாலை என (உதாரணத்திற்கு அடார்ணோ, ஹார்க் ஹைமர் போன்றோர் சொல்வது போல) கலைத் தொழிலைச் ‘சிதைத்து’ முதலாளித்துவத்தின் கீழ் விலைப்பொருளாக மாற்று வதைப் பகுப்பாய்வு செய்து கூறுவதே மார்க்ஸியக் கலைக் கொள்கை ஆயிற்று.

தேவை-உற்பத்தி என்னும் பொருளாதார விதிக்கேற்பக் கலைப் பண்டங்கள் வியாபாரப் பொருட்களாக மாற்றப்பட்டு விடுவதோடு மட்டுமல்லாமல், அவை முதலாளிக்கெனவும் அரசாங்கத்திற்கென வும் பிரசாரம் செய்வதற்கே ஆளாக்கப்பட்டுவிடுவதால் ஒத்துச் செல்லும் குணம் கொண்டவையாகவும், கூறியதையே திரும்பக் கூறுவனவாகவும் மாறி, அரசாங்கத்திற்குத் தேவையான ‘அமைதி’ யை மக்கள்பால் உருவாக்குவதற்கே அவை பயன்படுவன ஆகி விடுகின்றன.

விலைப்பொருள் பற்றிய மார்க்ஸின் கொள்கையிலிருந்து ‘வரலா றும் வர்க்கஉணர்வும்’ என்ற தமது கட்டுரையில் ஜார்ஜ் லூகாச் தமது கலைக்கோட்பாட்டினை உருவாக்கினார். முதலாளித்து வத்தின்கீழ் பொருளுறவாக்கப்பட்டு துண்டுதுண்டாகச் சிதிலமாகிப் போகின்றன மனித வாழ்க்கையும் அதன் அனுபவங்களும் என்ப தை அவர் காட்டுகிறார். சமூக, பொருளாதார உறவுகளைப் புரிந்து கொள்ளப் பொருளுறவாக்கப்பட்ட மனத்தினால் முடியாது என்ப தையும் அவர் விளக்குகிறார்.

தமது வாழ்நாள் முழுவதும் ஓர் இலக்கியக் கொள்கையை உரு வாக்கப் பாடுபட்ட லூகாச்சின் எழுத்துகளில் முழுமை என்பது ஓர் மையஇடத்தைப் பெறுகிறது. மேலோட்டமான தோற்றங்களுக்கு அப்பால் சென்று சமூக முழுமையை அதன் அடிப்படையான முரண்பாடுகளோடும் கண்டறிந்து வெளிப்படுத்துவதே பேரிலக்கி யம் என்பது லூகாச்சின்கொள்கை. இங்கு முழுமை, பேரிலக்கியம் என்று சொல்லப்படும் கருத்துகளுக்குச் சற்று நாம் பின்னால் வருவோம்.

இக்கொள்கையோடு தொடர்புடையது யதார்த்தவாதக் கொள்கை. வகைமாதிரியான கதைமாந்தர்களைக் கொண்டு முழுமையைப் படைத்துக்காட்டுவது நல்லதொரு யதார்த்த இலக்கியத்தின் பணி என்பார் லூகாச். மார்க்ஸியத்தை நிறுவிய மற்ற அறிஞர்களின் ஆதரவை இந்த யதார்த்தக் கொள்கை பெற்றது. மேலும் இதற்கு ஆதாரமாக 1880களில் ஏஞ்சல்ஸால் எழுதப்பட்ட இரு கடிதங்கள் அமைந்தன என்பதால் இக்கொள்கைக்கு ஆதரவு உறுதி பெற்றது. இக்கடிதங்களில் வெளிப்படையாக அரசியல் பிரசாரம் செய்கின்ற இலக்கியத்தை மறுத்து ஏஞ்சல்ஸ் எழுதியிருக்கிறார். அவ்வகை இலக்கியங்களை tendency literature என்று கூறி அவர் புறக்கணிக் கிறார். இதற்கு மாற்றாக அவர் வைப்பதுதான் சரியான யதார்த்த இலக்கியம் என்பது. இதிலும் அரசியல் அணுகுமுறை விவாதிக் கப்பட்டாலும் அது வெளிப்படையான பிரசாரமாக அமைவ தில்லை.

”எவ்வளவுக்கெவ்வளவு ஆசிரியனின் கருத்துகள் உள்ளாழத்தில் மறைந்திருக்கிறதோ அவ்வளவுக்கு ஓர் கலைப்படைப்புக்கு அது நல்லது. ஆசிரியன் கருத்துகள் வெளிப்படையாக இல்லாவிட்டா லும் அவன் குறிக்கும் கருத்துகள் பகுப்பாய்வில் வெளிப்படவே செய்யும்.”
(ஏஞ்சல்ஸ், மார்கரெட் ஹார்னசிற்கு எழுதிய கடிதம், 1888).
அவர் உதாரணம் காட்டும் எழுத்தாளர் பால்ஸாக்.

”இன்னும் சிலகாலங்களில் அழிந்தொழியுமாறு சபிக்கப்பட்டு விட்ட பிரபுத்துவ வர்க்கத்திற்கு அனுதாபம் காட்டும் ஒரு லெஜிடிமிஸ் டாக பால்ஸாக் இருந்தபோதிலும் அவர் நம்மை மிகு வியப்புக்குள் ளாக்கக்கூடிய ஃபிரெஞ்சு சமூக வரலாற்றைப் படைத்துக் காட்டு கிறார்” என்று அவரைப் பாராட்டுகிறார் ஏஞ்சல்ஸ்.

”வகைமாதிரியான கதைமாந்தர்களால் சமூக அமைப்பினை அதன் வர்க்கமுரண்பாடுகளோடு சேர்த்துத் துல்லியமாகப் படைத்துக் காட்டுவது யதார்த்தவாதம்”
என்னும் கொள்கை இதனால் மார்க்ஸியத்தின் மையஅழகியல் கொள்கையாகிவிட்டது. இன்னும் விரிவாக நோக்கினால், கலைக ளுக்கும் அவை உற்பத்தியாகின்ற சமூக அமைப்புகளுக்குமான உறவைப் பற்றிப் பேசும் கொள்கைகள் யாவிற்கும் அடிப்படையாக அமைவது மார்க்ஸ் 1859இல் Critique of Political Economy என்னும் பிரதிக்கு எழுதியமுன்னுரை. அதில்தான் அடிக்கட்டுமானம் மேற் கட்டுமானம் பற்றிய கருத்து இடம்பெறுகிறது. மேற்கட்டுமானத் தின் பகுதியாகவே அழகியல் அதில் சொல்லப்படுகிறது. வர்க்க முரண்பாடுகள் மோதிக்கொண்டு வெளிவரும் கருத்துருவ வடிவ மாகவும் அது குறிப்பிடப்படுகிறது.
பிளெஹனாவின் எழுத்துகளிலும் ‘கலை தனது காலத்தின் கருத் துருவ வெளிப்பாடு’ என்னும் கருத்து நன்கு வெளிப்படுகிறது. “சமூக வாழ்க்கையின் பிரதிபலிப்பே கலையும் இலக்கியமும்” என்பது அவர் கூற்று. இம்மாதிரிப் பார்வை, கலையைச் சமூக உறவுகள், வர்க்க அமைப்புகள் இவற்றின் பிரதிபலிப்பாகக் குறுக்கி விடுகின்றது. ஆகவே கலை என்பது சமூகத்தின் பொருளியல் தன்மைகளால் உருவாக்கப்படுவதாகவும் குறுக்கப்படுகிறது. ‘கருத் துருவத்தின் வெளிப்பாடே கலை’ என்பதை இன்னும் சிக்கலான முறையில் விளக்கி அண்மைக்காலத்தில் லூசியன் கோல்ட்மன் போன்றவர் கள் எழுதியுள்ளனர்.

இக்கொள்கையிலிருந்து சற்றே மாறுபட்டதொரு பார்வை, புரட்சிக் குக் கலை நிலைக்கள ஆற்றலாகும் தன்மையினையும் கலைஞ னுக்கு இருக்கவேண்டிய ஈடுபாட்டினையும் வலியுறுத்தி எடுத் துக்காட்டுகிறது. முன்பே ஏஞ்சல்ஸ் மிகச் சரியாகவே நேரடிப் பிரச்சாரத்திற்கும் யதார்த்த வகையிலான, மறைமுகமான படைப் புகளுக்குமான வேறுபாட்டினை எடுத்துக்காட்டியிருந்தபோதும், கட்சி மார்க்ஸியர்கள் எவ்வாறோ தீவிர நேரடிப் பிரசாரத்திற்கான ஒரு கொள்கையை மார்க்ஸ்-ஏஞ்சல்சிடமிருந்தே உருவாக்கியி ருக்கிறார்கள் என்பது விநோதம். ‘கட்சியின் சேவைக்காகவே கலை செயல்படவேண்டும்’ என்று லெனின் போன்ற மேதையும் ஒரு சமயம் கூறியிருக்கிறார். ஆயினும் அவரது டால்ஸ்டாயின் கலை பற்றிய விவாதங்களை வைத்து நோக்கும்போது இது அவரது மெய்யான கருத்தென்று தோன்றவில்லை.
மனிதர்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள், அரசியல்மாற்றத்தில் மனிதப்பிரக்ஞை முக்கியப் பங்காற்றுகிறது என்னும் மார்க்ஸியக் கொள்கை அடிப்படையில் மயகாவ்ஸ்கி, பிரெஹ்ட், பெஞ்சமின் முதல் கோடார்ட், பாசோலினி முதலான இருபதாம் நூற்றாண்டுத் திரைப்பட இயக்குநர்கள் வரை பலர் புரட்சிகர அழகியல் செயல்முறைக்கான வழிவகை ஒன்றைச் சிறப்பாகவே உருவாக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

சோவியத், சீன அடிப்படையில் அமைந்த சோஷலிஸ யதார்த்த வாதமானாலும், மேற்கத்திய யதார்த்த வாதமானாலும், அல்லது வேறுவித யதார்த்த வாதங்களானாலும், யதார்த்தவாதம் என்பது மார்க்ஸிய அழகியலின் மையக்கொள்கையாகவே ஆகிவிட்டிருக் கிறது. லூகாச்சுக்கும் பிரெஹ்டுக்கும் நடந்த விவாதத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் யதார்த்த இலக்கியம் இருபதாம் நூற் றாண்டுக்குப் பொருந்தாது என்றார் பிரெஹ்ட். மனித உணர்வை தீவிரப்படுத்தும் சக்தியை அது இழந்துவிட்டதே காரணம். ஆக இங்கு, கலை துல்லியமான விமரிசனயதார்த்த நிலைப்பாட்டில் சமூகத்தைப் படம்பிடிப்பதுமுக்கியமா, அல்லது கலையின் புரட் சிக்கான ஆற்றலை வைத்து அதன் மதிப்பைத் தீர்மானிப்பதா என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்வி, இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், வடிவவியல் நோக்கில் எழுதப்பட்ட கலை – அதாவது முன்னணிக் கலைக்கும் பழைய வடிவத்திலான கலைக்குமான முரண்பாட்டை விவாதிக்கும் விவாதமாக மாறிப்போயிற்று. இத னால் யதார்த்தவாதக் கொள்கைமீது பெருந்தாக்குதல்கள் முன் வைக்கப்பட்டன. நவீனத்துவ நோக்குக் கொண்டவர்கள், யதார்த்த வாதக்கலை, செயலூக்கமற்ற, சமூகத்தில் போதிய விமரிசனமற்ற ஒரு பங்கேற்பை முன்வைக்கிறது என்றார்கள்.

யதார்த்தக் கலை முன்வைக்கும் அழகியல், ஒருசீர்த் தன்மை யுடைய, முழுமை என்பதை வலியுறுத்துகின்ற, ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்ற எடுத்துரைப்புத்தன்மை வாய்ந்தது. ஆகவே பிரதிபலித்தலில் நிஜமான முரண்பாடுகளையும், எதிர்வுகளையும் அது சரிவரக் கொண்டுவர இயலுவதில்லை. உலகத்தைத் தனது எடுத்துரைப்பில் மீள்கட்டமைப்புச் செய்யும்போது செயற்கையான தோர் ஒருமைப்பாட்டினை உருவாக்கி அது வாசகர்களை மயங்க வைக்கிறது. ஆனால் நவீனத்துவப் பிரதி, பிரதிகளைச் சிதைத்தல், பிற குறுக்கீடுகள் போன்றவை வாயிலாக முரண்பாடுகளைக் கைப்பற்றிக் காட்டவும், உள்மறைந்திருப்பனவற்றையும் அமை தியில் ஓய்ந்துகிடப்பனவற்றையும் பேசவைக்கவும் முயற்சி செய்கிறது. நாவல் போன்ற யதார்த்த உரைநடைப் படைப்புகளையே பாராட்டிய பெரும்பான்மை நோக்கிற்கிடையே கவிதையின் பிறப்பு பற்றியும் இயல்புகள் பற்றியும் எழுதிய கிறிஸ்டஃபர் காட்வெல் லின் ‘மாயையும் மெய்ம்மையும்’ (Illusion and Reality) முக்கியமான நூலாகிறது.

நவீனத்துவப்போக்கு, குறிப்பாக பியர் மாஷரி, ரோலான் பார்த், ஜூலியா கிறிஸ்தவா போன்ற குறியியலாளர்கள் கருத்துகள் வாயிலாக முழுமைபெற்றது. கலையைக் கருத்தியலாகப் பார்க்கும் நோக்கு மேற்கத்திய மார்க்ஸிய அணுகுமுறையில் மட்டுமல்ல, முந்தைய கிழக்குஜெர்மனி, பிளவுபடாத சோவியத் ஒன்றியம் ஆகியவற்றின் பார்வையிலும் புதுமைகளை ஏற்படுத்தியது.
முக்கியமானஅர்த்தத்தில் இன்றும் கலை என்பது கருத்துருவக் கருவியாகப் பார்க்கப்பட்டாலும், இன்று அது சமூக வாழ்க்கையின் பிரதிபலிப்பாக மட்டும் பார்க்கப்பட்டு புறக்கணிக்கப்படுவதில்லை. மாறாக, கருத்துருவத் தொடர்புறுத்தக்கருவி/வடிவம் ((art as mediated instrument or form) என்பதாக நோக்கப்படுகிறது. குறிப்பாக, கலை இலக்கிய வடிவங்களும், அவற்றில் கருத்துருவத்தைக் குறியமைக்கும் செயல்பாடுகளும் அவற்றிற்குரிய மரியாதையோடு
கவனிக்கப்படுகின்றன. இந்நோக்கை உருவாக்குவதில் அமைப்பியம், குறியியல் ஆகியவற்றின் செல்வாக்கு இணையற்றது. அதேபோல ரஷ்ய வடிவவியல்வாதிகள் மீதான கவனக்குவிப்பும் பல நல்ல விளைவுகளைத் தந்துள்ளது. மேலும் கலை இலக்கியத் தின் உற்பத்தி, இயல்புகள் போன்றவற்றைப் புரிந்துகொள்வதில் அவற்றை உருவாக்கும் நிறுவனங்கள், முறைகள் போன்றவற்றின் பங்கும் இன்று நன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. வெளியீட்டாளர்கள், இலக்கிய மன்றங்கள், அரங்குகள், விமரிசகர்கள் போன்ற நேரடி ஊடகர்களின் செய்கைகள் இப்போது ஓரளவேனும் ஆராயப்படுகின்றன. இவற்றை முன்பு எவரும் கருத்தில் கொண் டதே இல்லை. மேலும் கலையுருவாக்கத்தில் இன்று வாசகர்ககள் பார்வையாளர்களின் பங்கேற்பும் ஆக்கமும் குறித்தும் ஆராயப் படுகின்றது.

இந்த நோக்குகளுக்கு ஆதாரமும் மார்க்ஸ் ‘க்ருண்டிஸ்’ நூலுக் கான முன்னுரை அறிமுகத்தில் கூறிய ‘நுகர்வுதான் உற்பத்தி யைத் தூண்டுகிறது’ என்ற கருத்தேயாகும். மார்க்ஸிய மரபுக்குள் வராத பொருள்கோள், குறியியல், ஏற்பழகியல் போன்ற துறைகள் கலாச்சாரப் படைப்புகளை உருவாக்குவதிலும் அவற்றைப் பொருள் கொள்வதிலும் ஆழ்ந்த நுண்ணோக்குகளையும், அவற்றை ஆராய் வதற்கான கருவிகளையும் அளித்துள்ளன. ஒரு படைப்பின் அர்த்தம் என்பது அதற்குள் உறைவதல்ல, அது வாசகர்களைச் சார்ந்த ஒன்று என்ற முக்கியமான அறிவும் இவற்றால் ஏற்பட் டுள்ளது. இன்னும் அரசியலுக்கும் அழகியலுக்குமான பொருத்தப் பாடு பற்றிய விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. அவையனைத்திற் கும் மேற்கூறிய யதார்த்தவாதம் சம்பந்தமான விவாதங்களுடன் தொடர்பு உண்டு.

இம்மாதிரி விவாதங்கள் ரேமண்ட் வில்லியம்ஸ் (தன்னைக் கலாச்சாரப் பொருள்முதல்வாதி என்று கூறிக்கொண்டவர்), டெரி ஈகிள்டன் போன்றோர் நூல்களில் நன்கு ஆராயப்பட் டுள்ளன.
கலை இலக்கியங்களின் உள்ளடக்கமோ, அவற்றின் வடிவமாற்றங் களோ மட்டும் கலையைப் புரட்சிகரமானதாக மாற்றிவிட முடி யாது. பெஞ்சமின் சொன்னதுபோல, கலைப்படைப்பு உற்பத்தியை அரசியல்செயல்பாடாகவும் செயல்படுமுறையாகவும் மாற்றினால் தான் கலையைப் புரட்சிகரத்தன்மை வாய்ந்ததாக மாற்றஇயலும். மேற்கண்ட யதார்த்தவாதத்தின் ஏற்புடைமை, அமைப்பியம், நவீ னத்துவம், பின்நவீனத்துவம் ஆகியவற்றை ஏற்பதன் தேவை போன்றவற்றைக் குறிப்பிடும் ஞானி, வால்டர் பெஞ்சமினுடைய நிலைப்பாட்டைக் குறிப்பிடவோ ஏற்கவோ இல்லை.

இந்தவிதத் தில் ஞானி கட்சிசார்ந்த பிற மார்க்ஸியர்கள் போல மரபுரீதியான தொரு நிலைப்பாட்டில்தான் நிற்கிறார். வால்டர் பெஞ்சமின் போன்ற மேற்கத்திய மார்க்ஸியர்களின் கோட்பாடுகளுக்கு மாறாக, அவர் மாசேதுங்கின் கொள்கைகளுக்குச் சென்று கீழை மார்க்ஸி யம் என்ற ஒன்றினை வலியுறுத்தத் தொடங்குகிறார். (இதனை உருவாக்கியதில் அறிஞர் எஸ்.என். நாகராஜனுக்கு முக்கியப்பங்கு உண்டு). நமது நாட்டின் ஆன்மிக மரபுகள் போன்றவற்றையும் ஏற்றுக்கொண்டு, நமது மண்ணுக்கேற்ற தனித்ததொரு மார்க்ஸி யத்தினை உருவாக்கவேண்டும் என்கிறார். அந்தந்த மண்ணுக் கேற்ற வகையில் மார்க்ஸியம் உருவாக வேண்டும் என்பதை நாம் ஏற்கமுடியும். ஆனால் மார்க்ஸியத்திற்குள்ளாகவே பல சிக்கல்கள் உள்ளன.

மார்க்ஸியம், மனிதத்துவத்தின் வளர்நிலையில் மனிதனின் அறி வாற்றலை மதித்துப்போற்றும் மனிதமையத் தத்துவமாக எழுந்த ஒன்று. மனிதமையவாதத்தின் உடன்பாடான நல்ல அம்சங்களை மார்க்ஸ் ஏற்றுக்கொண்டார் எனப் பொதுவாகச் சொல்லலாம். அதன் மோசமான அம்சங்களை முதலாளித்துவம் ஏற்றுள்ளது. இயற்கையோடு மனிதன் போராடி, அதைக் கட்டுப்படுத்தித்தான் வாழமுடியும் என்பது மார்க்ஸிய சித்தாந்தத்திலும் உள்ளது. முதலாளித்துவமோ, ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என எல்லாவற்றையும் இடைவிடாது சுரண்டுகிறது. சுரண்டலை மார்க்ஸியம் எதிர்த்தாலும் மனிதமையத் தத்துவத்தி லிருந்து விலகவில்லை.
நாம் ஆன்மிகம் என்று பேசும்போது மனிதமையத்தினைப் புறக்கணிக்கவேண்டும் என்கிறோம்.

மனிதமையம் என்பதுதான் மானிடச் சிந்தனையின் வீழ்ச்சி. மேற்கத்திய நாகரிகத்தின் சுரண் டல் பார்வை பைபிளிலிருந்து தொடங்குகிறது. ஆண்டவர் எல்லா வற்றையும் மனிதனின் நுகர்வுக்காகவே படைத்தார் என்று மனிதன் பிற ஜீவராசிகள், தாவரங்கள் அவை சார்ந்துள்ள இயற் கைப் பின்புலம் எல்லாவற்றையும் எல்லையற்றுச் சுரண்டத் தொடங்கி விட்டான். மனிதன்
எல்லாவற்றையும் அனுபவித்து,நுகர்ந்து வாழ்வதில் தவறில்லை. ஆனால் தன் சிந்தனையாற்றலால், பிற உயிர்கள், இயற்கை யாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றலால், தனது பேராசையால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கான மூலவளங்கள் யாவற்றையும் இரண்டே நூற்றாண்டுகளில்-வித்து அழித்து உண்ட உழவன்போல -அழித்துவிட்டான். இயற்கையை மனிதன். பத்தொன்பதாம் இருப தாம் நூற்றாண்டுகளில் அறிவியலின் பெயரால் எல்லையற்றுச் சுரண்டியதன் விளைவே இன்று தண்ணீருக்கும் உணவுக்கும் பெரும்பான்மை மக்கள் அலையும் நிலையும் இன்றைய இயற் கைச் சீற்றங்களும். அகழ்வாரைத் தாங்கும் எல்லையற்ற பொறுமை கொண்ட பூமிக்கும் சீற்றம்வ்ந்துவிடுகிறது, சுரண்டல் எல்லையற்றுப் போகும்போது.

எனவே மனிதமைய வாதத்தைத் தகர்த்து, மார்க்ஸியத்தில் மனிதமையமற்ற ஒரு நிலைப்பாட்டினைக் கொள்ள வேண்டும். அமைப்பியம், பின்னமைப்பியம் தொடங்கி வளர்ந்துவரும் கோட்பாடுகள் யாவுமே மனிதமையமற்ற நிலைப்பாடுகள்தாம். ஆனால் மேற்சொன்னவாறு மனிதமையத்தைத் தகர்த்து, இயற்கையை மையத்தில் வைக்கும் கோட்பாடுகள் அல்ல அவை. மாறாக, மனிதமையத்தைத் தகர்த்து, மனிதனின் ஆக்கங்களில் ஒன்றான மொழியை மையத்தில் வைக்கின்றன.

இன்றைய சுற்றுச்சூழல்விமரிசனம், தலித்திய, பெண் ணிய விமரிசனங்கள் ஆகியவை இயற்கைமையக் கோட்பாடு களாக அமைகின்றன, அமையவேண்டும். இதனை மார்க்சியம் ஏற்க வேண்டும். ஒருவகையில் காந்தியடிகள் முன்பே சொன்னது போல, கனரகப் பெருந்தொழில்களால் மனிதகுலத்துக்கு நன்மை யில்லை. (காந்தியடிகள் கனரகப்பெருந்தொழில்களுக்குக் கூறிய தை இன்றைய கணினித்தொழில்களுக்கும் பொருத்திப் பார்க்க லாம்). அதற்காகக் குடிசைத் தொழில்களை நம்பியும் இனி வாழ்வ தற்கில்லை. பிற உயிர்கள் யாவற்றையும் அழித்துவிட்டு மனித இனம் மட்டுமே எல்லையற்றுப் பெருகிப்போய் 800 கோடிக்கும் மேல் பூமியில் வாழும்நிலையில், குடிசைத்தொழில்களாலும் அவை சார்ந்த நிலவுடைமைச் சமூகத்தாலும் பயனில்லை. வரலாறு என்றும் பின்னோக்கிச் செல்வதில்லை. அப்படியானால், எப்படிப் பட்ட தொழில்கள் வேண்டும், எப்படிப்பட்ட வளர்ச்சி வேண்டும் என்பது இன்றைய அடிப்படையான கேள்வி. இத்தகைய கேள்விகளுக்குச் சரியான விடை காணாமல் (விடை காணாவிட் டாலும் சரியான நோக்காவது தேவை) வெறுமனே இலக்கியம் பற்றிப் பேசிவிட இன்று முடியாது. மாவோவின் தத்துவத்திலும் மனிதமையவாதம் அடிப்படையாக இருக்கிறது என்பதே கீழை மார்க்ஸியத்தை நாம் முழுதும் ஏற்றுக்கொள்ளவும் தடையாக உள்ளது.

எனவே இன்றைய மார்க்ஸியம், மனிதமைய வாதத்தினை விட்டு விட்டு, பிரபஞ்சவாதத்தை ஏற்று, பிற உயிர்களின் இணக்கத்தோடு மனிதன் வாழும்வகையைப் பேசவேண்டும். இதற்கு வள்ளலார் போன்றவர்களின் கொள்கைகள் ஓரளவு துணைபுரியக்கூடும். ஞானி கூறுவதுபோல நமது சித்தர் தத்துவங்கள் இதற்குப் பயன் படக்கூடும். கட்சிசார்ந்த பிற மார்க்ஸியர்கள் இவற்றையெல்லாம் பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்கள் வாய்பாடுபோல மக்களை ஒன்றுதிரட்டிப் புரட்சிசெய்தல் என்பதை மட்டுமே பேசிக்கொண்டி ருக்கிறார்கள்.

முதலாளித்துவம் எல்லைமீறிய வளர்ச்சி பெற்றுப் பன்னாட்டு முதலாளித்துவமாக, எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக்கொள் ளும் ஒற்றையாதிக்க முதலாளித்துவமாக வளரும் என்று மார்க்ஸ் எதிர்நோக்கவில்லை. எனவே அவரது எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போயிருக்கின்றன. ரஷ்யாவும் சீனாவும்கூட ஒற்றை யாதிக்கப் பன்னாட்டு முதலாளித்துவத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ரஷ்யா வீழ்ந்து விட்டது, “எங்கள் ஒற்றை உலகம் மட்டுமே நிலைத்திருக்கிறது” என்று அமெரிக்கா கொக்கரித்ததுபோல இன்று “மார்க்ஸியம் அழிந்துவிட்டது, எங்கள் ஏகபோக முதலாளித்துவம் மட்டுமே உல கத் தத்துவம்” என்றுசொல்லி முதலாளித்துவம் கொக்கரிக்கிறது. இந்த நிலையை எதிர்கொள்ளப் புரட்சி என்பது சாத்தியமா, மக்களை ஒன்று திரட்டுதல், ஒற்றை நோக்கின்கீழ்த் திரட்டுதல், நிறுவனமாக்கல் என்பவற்றிற்குள்ளாகவே மேற்கத்திய மார்க்ஸி யத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்த சக்திகள் செயல்பட வில்லையா, ஆதிக்கம் ஏற்படவில்லையா என்பன பின்நவீனத்து வம் கேட்கும் அடிப்படைக்கேள்விகள். எனவே மார்க்ஸ் ஒன்றரை நூற்றாண்டிற்குமுன் உறுதிபடக்கூவியது போல ‘உலகத்தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்’ என்று நாம் கூவ முடியவில்லை. சந்தேகம் எழுகிறது. ஒற்றைத்தத்துவத்தின்கீழ் இலட்சக்கணக்கான மக்கள் திரளும்போதே ஆதிக்கம் என்பதும் உருவாகிவிடுகிறது.

ஒரு ரசமான விவாதம் நடைபெற்றதை எடுத்துக்காட்டலாம். இது எவ்விதம் இன்று மார்க் ஸியக்கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வது என்பது பற்றியதுதான். தொலைக்காட்சிக்கு ஒரு பெரும் பார்வையாளர் பின்புலம் இருக்கிறது, மேலும் பல பிரெஹ்டிய உத்திகளையும் புதுமையாக்கங்களையும் அதில் எளிதாகக் கையாள இயலும், அதனால் முற்போக்குக் கருத்துகளைத் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்குக் கொண்டுசெல்லவேண்டும் என்ற கருத்து ஒரு சாராரிடம் உள்ளது. மற்றொரு சாரார், தொலைக்காட்சி ஊடகத் தையும் அதன் பெரும் ஜனரஞ்சகசக்தியையும் மார்க்ஸியக் கருத் துப் பரப்பலுக்கும் புரட்சிக்கும் சாதகமாகக் கட்டமைக்கவே இய லாது, ஏனெனில் அங்கு தொழில் சார்ந்த, அமைப்புசார்ந்த சுதந்தி ரம் அறவே கிடையாது. அம்மாதிரி ஊடகங்களை ஆட்சிசெய்யும் பெருமுதலாளிகள் இதற்கு ஒத்துழைக்கமாட்டார்கள். எனவே சிற்றளவாக இருந்தாலும் திருப்பக்கூடிய ஒரு பார்வையாளர் குழுவுக்காகவே வீதிநாடகங்கள் போன்ற ஊடகங்கள் வாயிலாகச் சுதந்திரமான கருத்துகளை முன்வைக்கலாம் என்று கருதுகின் றனர்.

இது ஒருபுறமிருக்க, இன்று மார்க்ஸியத் தத்துவத்திற்குள்ளாக வே சில குறுக்கீடுகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாகப்பெண்ணியத்தின் பங்களிப்பு. மார்க்ஸியத்திற்குள்ளும் செயல்படும் ஆணாதிக்கப் போக்குகளைப் பெண்ணிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவற்றை மேற்கத்திய மார்க்ஸியம் இன்று ஏற்றுள்ளது. இதே போல இன்று அவ்வளவாகச் சக்தியுடன் இல்லாவிட்டாலும், கருப்பினக் கொள்கை என்பது சிலகாலம் வலிமையோடு செயல் பட்டுள்ளது. நமதுநாட்டில் கருப்பினக்கொள்கையின் நிழல்போல உருவானது தலித்தியக் கொள்கை எனலாம். முன்பெல்லாம் நம்நாட்டுக் கட்சிசார்ந்த மார்க்ஸியர்கள் வர்க்கபேதமற்ற ஒரு சமத்துவ சமுதாயம் அமையும்போது தானாகவே சாதியும் அழிந்து போய்விடும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தனர். சமூக மாற்றத்துக்கான ஒரு கூறாக அதையும் பார்க்கவேண்டும் என்ற ஞானம் இப்போது சிலகாலமாகத்தான் உருவாகியிருக்கிறது. இதில் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் பங்களிப்பு சிறப் பானது. இன்று தலித்தியம், பெண்ணியம் ஆகிய கொள்கைக ளோடு மார்க்ஸியம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தான் கருதும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் போராடமுடியும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. ஞானியும் இத்தகையதொரு நோக்கினைத்தான் தமது விமரிசனங்களில் வலியுறுத்தி வருகிறார் என்பது பாராட்டுக்குரியது.

மார்க்ஸிய அழகியல், காலங்காலமாக நமது நாட்டில் வலியு றுத்தப்பட்டுவரும் அழகியல் மதிப்பு என்ற கருத்தாக்கத்தின் அடிப் படையையே கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறது. இது நாம் க்டைசி யாகச் சிந்திக்கவேண்டிய முக்கியமான விஷயம். கலைகள் மட்டு மல்ல, கலைகள் சார்ந்து செயல்படும் நிறுவனங்களும் விமரிசகர் களும், சார்பியல் நோக்கிலேயே காணப்பட வேண்டும். இந்த ஞானம் இங்கு (தமிழ்நாட்டில்) ஓரளவு உருவாக (எதிர்மறைக்) காரணமாக இருந்தவர், அந்தக் காலத்திலேயே மார்க்ஸுக்குக் கல் லறை கட்டிய வெங்கட் சாமிநாதன். ஏனென்றால் அவர் ‘பாலை யும் வாழையும்’ ‘ஓர் எதிர்ப்புக்குரல்’ என்றெல்லாம் தமிழினத்தின் அழகியல் வறட்சி என்னும்நோக்கினை முன்வைக்கப் போய்த்தான் பலரும் அதற்கு எதிர்வினை புரியவும், அதற்கு எதிரான பார்வைக் கோணத்தில் சிந்திக்கவும் தொடங்கினர். ஞானியும் அதனைச் செய்துள்ளார். மேற்குநாடுகளில் அமைப்பியத்தாலும் மறுவாசிப்புக ளாலும் இத்தகைய நோக்குகள் உருவாயின. இங்கு தலித்தியம் இத்தகைய மறுவாசிப்புகள் பலவற்றை முன்வைத்துள்ளது. இவற்றின் வாயிலாக மரபுசார்ந்த கலைபற்றிய, அழகியல்பற்றிய பார் வைகள் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளன. அண்மைக்காலம்வரை அழகியல் பற்றிய மீள்நோக்கு உருவாகவே யில்லை. லூகாச் போன்றவர்களும் ஒரு மரபான உயர்கலைப் பார்வையையே கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட எஃப்.ஆர்.லீவிஸ் கூறிய உயர்மரபுக் கலை போன்ற பார்வையாகவே அது இருந்தது. இப்போது இம்மாதிரிப் பார்வைகள் மாறிவருவது வரவேற்கப்படவேண்டியது. இதில் ஞானியின் பங்களிப்பு கணிசமானது.

இங்கு ஞானிக்கு முன்னும் அவரது சமகாலத்திலும் தமிழு லகில் மார்க்ஸிய விமரிசன முன்னோடிகளாக அமைந்தவர்க ளைப்பற்றியும் கொஞ்சம் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டில் முதன் முதலாக ஒரு பரந்த பார்வையுடன், பாரதி, கம்பன் முதலாக எல்லா இலக்கியங்களையும் இரசனைநோக்கில் பாராட்டியவர் ஜீவா. ஒரு விமரிசகர் என்று மதிப்பிட இயலவில்லை என்றாலும், ஜீவா மார்க்ஸிய விமரிசனத்துக்கு ஒரு நல்ல தொடக்கம் என்ப தில் ஐயமில்லை.

ஜீவாவைத் தொடர்ந்து முக்கிய இடம் வகித்தவர் நா. வான மாமலை. ‘ஆராய்ச்சி‘ என்ற இதழை நடத்தி மார்க்ஸிய நோக்கில் இலக்கியத்தை அணுகக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கிய வர். அவரது ‘புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்’ போன்ற நூல்களைப் படிப்பவர்களுக்கு பெரிய ஏமாற்றமே ஏற்படும். இன் றும் அவர் பெயரைச் சொல்ல தி.சு. நடராஜன், முத்துமோகன் போன்றவர்கள் இருக்கிறார்கள். எஸ்.தோதாத்ரி, வெ. கிருஷ்ண மூர்த்தி போன்றோர் கொஞ்சம் மிகையாகவே அவரது பாடங்க ளைக் கையாண்டு நிறைய வாங்கிக்கட்டிக் கொண்டவர்கள். ஜீவா, வானமாமலை போன்றோரைப் பின்தொடர்ந்து பலர் மார்க்ஸிய விமரிசகர்களாக ஆயினர். ச.செந்தில்நாதன், ஆர். கே. கண்ணன், முத்தையா போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. செந்தில் நாதனின் ஆரம்பகாலப் படைப்பான ‘தமிழ்ச் சிறுகதை விமரிசனத்’ தைப் படித்தபோது வெறும் வறட்டுவாதமாகவே காட்சியளித்தது. முக்கியச் சிறுகதைப் படைப்பாளிகளான தி.ஜானகிராமன், லா.ச. ராமாமிருதம், மௌனி போன்றோரை அவரால் சரிவர அணுக முடியவேயில்லை. ஆர்.கே. கண்ணனின் பாரதி பற்றிய நூல் ஒரு சரியான பார்வையைத் தந்தது. இந்தப் பாரம்பரியம் – கட்சி சார்ந்த ஒன்று, இப்போது மக்கள் கலைஇலக்கியக் கழகத்தின் மருதை போன்றவர்கள் வரை தொடர்கிறது.

தமிழ்நாட்டில் மிக முக்கியமான தாக்கத்தை உருவாக்கிய இலங்கை விமரிசகர்களையும் குறிப்பிடவேண்டும். க.கைலாசபதி அவர்களுள் முக்கியமானவர். க. கைலாசபதியின் விமரிசனமும் சரியான பாதையில் சென்றதாக எனக்குத் தோன்றவில்லை. சில ஆண்டுகளுக்குமுன் ஒருகட்டுரையில் க.நா.சு.வையும் கைலாசபதி யையும் ஒப்பிட்டபொழுது ‘கைலாசபதி சரியானஆய்வுமுறையைக் கையாண்டு தவறான முடிவுகளுக்கு வந்தார், க.நா.சு.வோ எந்த ஒரு முறையும் இன்றி சரியான முடிவு களைக் கூறினார்’ என்று குறிப்பிட்டிருந்தேன். அக்கருத்தில் இன்றுவரை மாற்றமில்லை. கா. சிவத்தம்பியின் சிறுகதைபற்றிய நூலைத் தவிரப் பிறஅனைத்தும் இலக்கியவரலாறு, நாடகக்கலை தொடர்பானவை. எந்த மதிப் பீடுகளையும் நேராக முன்வைப்பன அல்ல. இவர்கள் இருவரைத் தவிர ஏ.ஜே. கனகரட்ணா, நுஃமான் போன்ற பலர் நினைவுக்கு வருகிறார்கள். ஏ.ஜே.கனகரட்ணா ‘எழுத்து’ பத்திரிகையிலேயே மௌனி வழிபாடு குறித்து எச்சரித்தவர். நுஃமான் வெங்கட் சாமி நாதனுக்கு எதிராக எழுதிய விமரிசனம் இன்றும் ஞாபகத்தில் நிற்கிறது.

தமிழவனும் முதலில் மார்க்ஸிய விமரிசகராகத்தான் தொடங் கினார். ஆனால் ‘படிகள்’ பத்திரிகையின் ஆரம்பகாலத்தில் அவர் ஒரு நவமார்க்ஸியராக மாறி, பிறகு அமைப்பியம் பற்றி எழுதலா னார். ஆனால் அமைப்பியத்தையோ பின்னமைப்பியத்தையோ அவர் ஜீவனோடு புரிந்துகொண்டாரா என்பது ஐயமே. அல்தூசர் தவிர ஏனைப் பின்னமைப்பியவாதிகளோடு அவருக்கு மானசீக மாகத் தொடர்பில்லை என்றே சொல்லலாம். அவற்றைச்சரிவர விமரிசனத்தில் அவரால் நடைமுறையில் கையாளவும் இயல வில்லை. எஸ்.வி. ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற சிலரும் மார்க் ஸிய விமரிசகர்களாகத் தொடங்கி வெவ்வேறு பாதைகளில் இன்று பயணம் செய்கின்றனர்.

இப்படித் தமிழ் மார்க்ஸிய விமரிசனப் பாரம்பரியத்தை ஒரு நோட்டம் விடும்போது சரியான திறனாய்வாளர்களாகவும், மார்க் ஸிய விமரிசனம் என்ற களத்தில் முனைப்போடு தொடர்ந்து இயங்கியவர்களாகவும்- ஞானி ஒருவரைத் தவிர வேறெவரையும் காணமுடியவில்லை. எல்லாவகை இலக்கியங்களையும் ஏற்று ஆராயும் பரந்தமனப்பான்மையில் அவரை ஜீவாவின் வாரிசாகக் காணலாம் என்று தோன்றுகிறது.

ஞானியை எனக்கு முதலில் அறிமுகம் செய்துவைத்த நூல் அவரது சிறு வெளியீடான ‘கலை இலக்கியம் ஒரு தத்துவப் பார்வை’ என்பது. அந்த நூலிலேயே இந்திய ஆன்மிகத் தத்துவங் களுடன் இணைந்து மார்க்ஸியம் இந்த மண்ணுக்கேற்றபடி மாறி வேர்பிடிக்கவேண்டும் என்ற அவா காணப்படுகிறது. ஞானக் கூத்தன், கலாப்ரியா போன்றவர்களை அவர் அந்நூலில் விமரி சனம் செய்திருந்த விதமும் என்னைக் கவர்ந்தது. ஏறத்தாழ அதேசமயத்தில் ‘பிரக்ஞை’ பத்திரிகையில் அவர் எழுதிய சில கட்டுரைகள் எனக்குள் மிகுந்த பாதிப்பினை உண்டாக்கியவை. காரணம், அடிப்படையில் ஆங்கில இலக்கியம் படித்து புதுவிமரிச னத்தையும் ஓரளவு அமைப்பியத்தையும் அக்காலத்தில் கற்றி ருந்த எனக்கு மார்க்ஸிய விமரிசனப்பார்வை பற்றிய அடிப்படைப் புரிந்துகொள்ளலை உருவாக்கியவை ஞானியின் கட்டுரைகள்தான். இதற்குப் பிறகுதான் லூகாச், காட்வெல், வால்டர்பெஞ்சமின், பிரெஹ்ட் போன்றவர்கள் எனக்கு அறிமுகமானார்கள்.

ஞானியின் குறைகளாக நாம் நோக்க வேண்டியவை சில உண்டு. அவர் சிறுகதை பற்றிய ஆய்வில் தீவிர அக்கறை காட்ட வில்லை. பொதுவாகக் கவிதைகள், நாவல்கள் பற்றியே அதிகம் எழுதியுள்ளார். புனைகதைகளில் நாவலுக்குள்ளஇடம் தனியானது. பழங்காலக் காவியங்கள்போல இன்று மனித வாழ்க்கையின் பன்முக வீச்சுகள் அத்தனையையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரே வடிவம் நாவல்தான். அதனால் ஞானி நாவலில் மிகுதியான அக்கறை காட்டுகிறாரோ என்றுதோன்றுகிறது. ஆனால் தமிழில் நாவல் பற்றி மிகுதியாக எழுத ஒன்றுமில்லை என்பது என் கருத்து. எந்த அழகியல் அளவுகோல்களை வைத்துப் பார்த்தாலும், தமிழ்நாவல்கள் சர்வதேசஅழகியல் தரத்தினையோ இந்திய அளவி லான தரத்தையோ கூட எட்டவில்லை.

தமிழ்ச் சிறுகதைகள் விதிவிலக்காக, மிகச் சிறப்பாகப் படைக்கப் பட்டுள்ளன. அவற்றைப் போதிய அளவு ஞானி ஆராயாதது மிகப் பெரிய குறை எனத் தோன்றுகிறது. கவிதை இலக்கிய ஆய்வில் குறையில்லை. கவிதைகள் காலங்காலமாக எல்லாமொழிகளிலும் இருந்து வருபவை. உயர்ந்த அந்தஸ்து அளிக்கப்படுபவை. எனி னும் பக்தி இலக்கியத்தை இன்னும் நன்றாக ஆராயவேண்டும். தமிழ் இலக்கியத்தின் பெரும்பகுதியை பக்தி இலக்கியம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. பக்திப்பாக்களில் பல உயர்ந்த சிந்தனை கள் வெளிப்பட்டிருந்தாலும், அவற்றில் எதிர்மறைக் கருத்துகளும் உள்ளன. மேலும் அவை பாடல் தன்மை கொண்டவை. பாடல்கள் சிறப்பாக அமைந்தாலும் கவிதையாக மாட்டா. அவற்றிற்கு இசை என்ற ஊன்றுகோல் வேண்டும். மேலும் கூறியதுகூறல் பாடல்க ளில் மிகுதி. தேவாரத்தைப் படிப்பவர்கள் என்னதான் உருகி உருகிப் படித்தாலும் திரும்பத்திரும்ப சிவபெருமான் முப்புரத்தை அழித்ததும், கயிலையை எடுத்த இராவணனுக்கு அருள் செய்ததும் போன்ற ஒரேவிதமான வருணனைகளில் சிக்கி அவஸ்தைப்பட வைக்கின்றன. ஒரு பேரிலக்கியத்திற்கான செறிவும் பன்முகத்தன் மை யும் வாழ்க்கை பற்றிய நோக்குகளும் பக்தி இலக்கியத்தில் உண்டா என்பது தெரியவில்லை. உணர்ச்சிவெள்ளம்தான் பெருக் கெடுத்து ஓடுகிறது. இலக்கியத்திலே உணர்ச்சிதான் பிரதானம் என்ற கோட்பாடு உருவாக பக்தி இலக்கியங்கள்தான் வழிவகுத் துத் தந்தன. இம்மாதிரியான விஷயங்களை ஞானி எடுத்துக்காட்டி யிருக்கிறாரா என்பது சந்தேகமே. ஒருவகையில் ஞானியின் விமரிசனமும் வடிவநோக்கினைவிட உள்ளடக்கத்துக்கே முதன் மை தருவதாக அமைவதால் இத்தகைய சிக்கல்கள் எழுகின்றன.

மேலும் எல்லாவற்றையும் பாராட்டிவிடும் பரந்த மனப்பான்மை ஞானிக்கு உண்டு. வல்லிக்கண்ணனோடும், ஓரளவு தி.க. சிவ சங்கரனோடும் அதனால் ஞானியை ஒப்பிடத் தோன்றுகிறது. இங்கு வெளிச்சம் தொகுதிக்கு அவர் எழுதிய ஆர்வக்கோளாறான முன்னுரை போன்றவை நினைவுக்கு வருகின்றன. இன்றுவரை வானம்பாடி இயக்கம்பற்றி மிகையான மதிப்பீடுகளும் எதிர்மறை மதிப்பீடுகளும்தான் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு சரியான பார் வையில் அதனை மதிப்பிட்ட நூல் இதுவரை தோன்றவில்லை. வானம்பாடி இயக்கம் பற்றிய மதிப்பீடுகளை ஆரம்பித்து வைத் தவரும் ஞானிதான். மார்க்ஸியத்தின்மீதுள்ள அளவில்லாப்பற்றும் தமிழமீதான ஆர்வமும் அவரைப் பலசமயங்களில் தவறான முடிவுகளுக்குத் தள்ளுகின்றன.

மேலும் ஞானியின் மொழிநடை பற்றியும் குறிப்பிட்டாகவேண் டும். தெளிவான, எளிய, ஆற்றொழுக்கான, எதிரிலிருப்பவரை நேராக விளித்துப் பேசும் நடை ஞானியினுடையது. ஆனால் கூறியது கூறலும் சொற்களை விரயமாக்குதலும் மிகுதி. செறிவு என்பது அடியோடு கிடையாது. இதனை அவரது குறையாகக் கூறவும் இயலவில்லை. பார்வையற்ற நிலையில் வாயினால் சொல்லிப் பிறர் எழுதவேண்டிய நிலை ஏற்படும்போது இது தவிர்க்கப்படமுடியாதது என்றாலும், எதிர்வரும் வாசகர்கள், எழுதி யவரைப் பார்க்கமாட்டார்கள், எழுத்தை மட்டுமே பார்ப்பார்கள் என்பதனால் இதனைக் கூற நேர்கிறது.

ஞானியின் அழகியல்பார்வை சிறப்பானது. பாசிஸத்தை எந்த ரூபத்திலும் எதிர்க்கின்ற, பன்முகநோக்குகளுக்கு இடம் தருகின்ற, மேற்கத்திய ஆதிக்கப்போக்குக்கு எதிரான, கீழைமார்க்ஸியத்தோடு இணைந்த நோக்கு அது. நவீன இலக்கிய, திறனாய்வு இயக்கங்க ளையும் புறக்கணிக்காமல் உள்வாங்கி ஏற்கின்ற தன்மை கொண் டது. எவ்வளவு தடைகள் வந்தபோதும் மானிடம் வெல்லும் என்ற நன்னோக்கும் கொண்டது. அதேசமயம் மனிதனின் இன்றைய வாழ்நிலை பற்றிய ஆழ்ந்த கவலைகளும் கொண்டது. பெண்ணி யம், தலித்தியம், சுற்றுச்சூழல் திறனாய்வு போன்ற இயக்கங்கள் முன்வைக்கும் எதிர்நிலைப்பாடுகளையும் உள்வாங்கி, ஏற்று, மேலும் போராடவேண்டும் என்ற கருத்தினைக் கொண்டது. ஒரு நிலையிலும் அறிவுத் தேட்டத்தில் தேங்கிவிடாதது-இத்தகைய தொரு அறிவியல்பூர்வமான வழியையே மார்க்ஸ் இன்று இருந்தால் ஆதரிப்பார் என்பதில் ஐயமில்லை.

 

 

 

 

 

 

 


மனக்கோட்டை

மௌனியின் ஒரு சிறுகதை-மனக்கோட்டை

மௌனியின் கதைகள் பிரசித்தமானவை. தங்கள் உள்ளத்துக்ள்ளேயே உணர்ச் சிகளை அழுத்திக் கொள்பவர்கள் மௌனியின் கதாபாத்திரங்கள் என்பது போன்ற குறிப்புகள் திரைப்படங்களில்கூட வரத்தொடங்கிவிட்ட காலம் இது. மொத்தம் இருபத்திரண்டு கதைகளே எழுதிய மௌனி பலவகைகளில் தம் கால எழுத்துகளை மீறி ஒருவகையான புகழைப் பெற்றுவிட்டார். இங்கு அவரது கதையான மனக்கோட்டை பற்றிச் சற்றே நோக்கலாம். இக்கதை தெரிவிக்கும் அடிப்படையான விஷயங்கள் மூன்று.

1. தமிழ் எதிர்ப்பும் திராவிட எதிர்ப்பும்
2. தடைசெய்யப்பட்ட பாலுறவு
3. அத்வைத தத்துவம்

இது மௌனியின் கதைகளில் மிகவும் பாராட்டுப் பெற்ற ஒன்று. இக்கதையின் பாலியல் தளமே இதற்கு ஒரு “பயங்கரத்தின் கவர்ச்சி”யினை அளிக்கிறது. சாதாரணமாகப் பார்த்தால் இது ஒரு பெண்ணைத் தேடுகின்ற கதை. ஆனால் கதை யை மேலோட்டமாகப் பார்க்கும்போது அது வேதாந்தத் தளத்தில் இயங்குவது போலத் தோற்றம் தருகிறது. தெளிவாக உருப்பெறாத மூன்றுபேர் இக்கதையில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர். சேகரன்-சுமி-சங்கர் என்னும் மூன்று கதாபாத்திரங்களுக்கிடையிலான உறவைச் சொல்லுவதாக இக்கதை அமைகிறது. சுமி என்பவள் சங்கரின் தங்கை. சேகரன் சுமியைக் காதலிக்க சங்கரே து£ண்டு கோலாக இருக்கிறான்.

கதைப்பின்னல் பின்வருமாறு அமைகிறது. சேகரன் என்பவன் தனது நண்பன் சங்கர் இறந்துவிட்டான் என்பதை அறிந்து அதனால் ஏற்படும் மன அழுத்தத்திலி ருந்து விடுபட ஒரு மலைக்கோட்டையைப் பார்க்கச் செல்கிறான். சங்கரின் கடைசிக் கடிதம் அவனது “தங்கை சுமியுடன் அவன் (சேகரன்) பேசி அவன் (சங்கர்) பார்க்கவேண்டும்” என்பதாக இருக்கிறது. இதுவரை சுமி இறந்துவிட்ட செய்தி சேகரனுக்குத் தெரியாது. இக்கடிதம் சங்கர் வீட்டிற்குச் செல்லும் ஆவலை அவனுக்குள் உண்டாக்குகிறது. ஆனால் சங்கர் இல்லாமல் அவன் வீட் டிற்குச் சென்றால் அங்கு தன்னை எவரும் அறியமாட்டார்கள் என்பதனாலும், தற்சமயம் சங்கர் வீடு எது என்பது தனக்குத் தெரியாது என்பதனாலும் சேகரன் சங்கர் வீட்டிற்குச் செல்லக் கிளம்பினாலும் அதைத் தவிர்க்கிறான். எனவே வழியில் ஒரு மலைக்கோட்டை தென்படும்போது அங்கே இறங்கிவிடுகிறான். மலைக்கோட்டையைச் சுற்றிவந்த பிறகு மாலையாகிவிடுகிறது. தங்குவதற்காக அருகிலுள்ள நகருக்குச் செல்கிறான். அங்குத் தற்செயலாக அவன் மழைக்காக நிற்கச் செல்லும் வீடு சங்கரின் இன்னொரு தங்கையான சசி என்பவள் வீடாக அமைந்துவிடுகிறது.

இக்கதையின் வாயிலாக ஒருசேர இரண்டு விஷயங்கள் விமரிசனம் செய்யப்படு கின்றன. மலைக்கோட்டையைக் காணும்போது தற்கால அரசியல் விமரிசனத்துக் குள்ளாகிறது. சங்கரின் வீட்டினரைச் சந்திப்பதன் வாயிலாக ஒடுக்கப்படட ஒரு பாலியல் தளம்-தகாத பாலியல் உறவைச் சித்திரிக்கும் களம் கதைக்குள் வருகி றது.
மலைக்கோட்டை, “பருவகால வித்தியாசத்திலும் பார்ப்பவர் மனநிலையோடு கலந்து வெவ்வேறுவகைக்குக் காண எண்ணிலாச் சாயை கொண்டதாக” அமைந் திருக்கிறது. இங்கு ஒரு கவித்துவமான வருணனை இடம் பெறுகிறது. மலைக் கோட்டையைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது “நடுப்பகல் சரிவுகண்டுவிட, எல்லாம் எட்டி நகர்ந்து மறையத் துடித்துக் கானல் சலனத்தில் தெரிந்தன”.

இரவு நேரத்தில் ஆங்காங்கே தெரியும் குன்றுகளைப் பார்க்கின்ற அவனுக்கு அது தேவ அசுர யுத்தத்தினை நினைவூட்டுகிறது. தேவர்கள் என மௌனி இங்குச் சொல்வது ஆரியர்களையும் அசுரர்கள் என்று அவர் குறிப்பிடுவது திரா விடர்களையும் என்பது ஓரளவு வெளிப்படையாகவே தெரிகிறது. அங்குள்ள கோயிலைப் பார்க்கும்போது “பக்தியில் கோவிலுக்கு வெங்கலத் தேரை வார்த்து விட்டு எதிரிகளை முறியடிக்க விநோதமான குறுக்குப் பாதைகளை வெகு யுக்தி யுடன் கண்ட ஒரு மேதாவி வீரதீரச் சக்ரவர்த்தி” என்னும் நையாண்டியில் தமிழ்நாட்டுக் கோயில்களைக் கட்டிய சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. இச்சக்ரவர்த்தி, தோற்றுப்போன பிறகு தனது நிலை மறந்து மக்களுடன் மக்களாக ஜேஜே கோஷம் போட்டுக்கொண்டு வந்து கோட்டையை அடைந்து அந்த மக்களால் மீண்டும் தலைவனாக்கப்படுகிறான். மீண்டும் நையாண்டி தொடர்கிறது. அந்த அரசன், அவன் தகப்பன், அவன்-அவன் மகன் இவன் எனக் கொண்டு கடல் கடந்து வாணிபம் செய்தது, இமயத்தை வென்றது, பேரவை கூட்டியது, முத்தமிழ் பரிமாறியது, அது இது எல்லாமும் மனப்பிராந்தி யில் சரித்திரமாகிவிட, கற்பனைகளுடன் உண்மையும் மறந்துவிட்டது, மறைந்தும் விட்டது. இதில் குறிப்பாகச் சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிய கேலி இருப்பது தெளிவு. தமிழ்நாட்டு வரலாற்றையே மூன்று வரிகளில் அடக்கி அதுவும் மறந்துவிட்டதாகவும் மறைந்துவிட்டதாகவும் சொல்கிறார் மௌனி. தமிழின் எழுச்சியையே ஒரு மனப்பிராந்தி என்கிறார். தமிழர்கள் கடல்வாணிகம் செய்ததையும் தமிழ் வளர்த்ததையும் நீலகண்ட சாஸ்திரி, ராமச்சந்திர தீட்சிதர் போன்ற பார்ப்பன ஆசிரியர்களே விதந்து எழுதியிருக்க, அதை ஏற்றுக்கொள்ள வும் இந்த மௌனியின் பார்ப்பன மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டுப் பார்ப்பனர் கள் தமிழ் மக்களின்மீது எவ்விதக் காழ்ப்புணர்ச்சியோடு வாழ்ந்தார்கள் என்ப தைத் தெரிவிக்க மௌனியின் இந்த ஒரு பகுதி போதும்.
தேவ அசுர யுத்தம் பற்றிய நினைவு வரும்போதுதான் இந்த அரசனுடைய தோல் வியும் நினைவுக்கு வருகிறது. தேவ அசுர யுத்தத்தில் தேவர்கள் வெற்றி பெற்றது போலவே ஆரியர்கள் தமிழகத்தில் வெற்றி பெற்று விட்டார்கள் என்பதையும் இந்தக் கோயில்கட்டிய திராவிட அரசனின் தோல்வி தெரிவிக்கிறது. (ஒருவகை யில் நாம் இந்தத் தொன்மத்தை நீட்டிக்கொள்ளலாம். தேவ அசுர யுத்தத்தில் அசுரர்களை ஏமாற்றித் தாங்கள் மட்டுமே அமுதம் உண்ட தேவர்களைப் போலவே தமிழகத்திலும் பிறரை ஏமாற்றித் தாங்களே வெற்றி பெற்றுவிட்டார் கள் ஆரியர்கள் என்பதையும், அவர்களது சூழ்ச்சிகள் இன்றுவரை வென்று வருகின்றன என்பதாகவும் நாம் பொருள்கொள்ளலாம்.) கதைக்கிடையில் “ஆர்ப்பாட்டமாக, தமுக்கடி தமாஷாவாக, அபத்தமாக, அல்பசித்தியாக” திராவிட இயக்க முயற்சிகள் நோக்கப்படுகின்றன. வெளிப்படையாகவே கேட்கிறார் மௌனி: “இரவின் அந்தகார இருளைக் காண ஒரு சிறு ஒளிப்பொறி போன்றாக முடியுமா இப்பகல் தீவட்டிகளின் ஒளிகாட்ட முயலுதல்கள்?” என்று.

கதையில் பிரச்சாரம் வந்துவிட்டால் அது இலக்கியமாகாது என்று குரைக்கும் பல விமரிசகர்கள் கதைக்குத் தொடர்பே இல்லாத இந்தப் பார்ப்பனப் பிரச்சாரத்தைப் பார்த்து மௌனியை எப்படிப் பாராட்டுகிறார்கள்? ஒருவேளை மார்க்சியத்தையும் திராவிட இயக்கத்தையும் பெரியாரியத்தையும் அம்பேத் கார்இயத்தையும் மறுப்பது, கேவலமாக எழுதுவது பிரச்சாரம் ஆகாது போலும்!

உண்மையில் மௌனியின் கதைகள் அனைத்தும் பிரச்சாரங்களாக-அப்பட்ட மான வைதிக நோக்கின் ஆதரவுகளாக வெளிப்படுபவைதான்.

மௌனியின் கதைகளில் மழை ஒரு முக்கியமான நிகழ்வு. மழை பாலியல் உறவின் குறியீடாகவே மௌனியின் கதைகளில் இடம்பெறுவதைப் பல ஆண்டு களுக்கு முன்பே விமரிசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நனையாமலிருக்க ஒரு பங்களா வாசலில் ஒதுங்குகிறான் சேகரன். அப்போது இருபத்தைந்து வயது மதிக்கத் தக்க பெண் ஒருத்தி அவனைக் கூர்ந்து நோக்குகிறாள். தன்னை யாரென அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாத நிலையை மனவேதனையாகக் கண்ட அவன், “அப்பெண்ணின் கணவருக்குப் பின்னால் தன் பார்வையில் பட அவள் எப்போது வந்தாள் என்பதை கவனிக்கவில்லை.” அதேசமயம் அவள் கணவரும் “நாங்கள் எப்படி எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் என்பது புரியவில்லை” என்று தொடங்குகிறார். “உங்களுக்கு உங்கள் நண்பர் சங்கரை நினைவிருக்கிறது” என்று எப்படி அவர் இவனை அடையாளம் கண்டார் என்பதே புரியவில்லை நமக்கு. இதுவரை கதையில் அவன் என்றே சொல்லப்பட்டு வந்த அவன் இப்போது சேகரனாக மாறுகிறான். அவனது தன் வரலாற்றில் சங்கர் அவன் தங்கை சுமி ஆகியவர்களுடனான அவனது உறவு இப்போது முன்னுக்குத் தள்ளப்படுகிறது. ஆனால் இந்த விஷயம் முன்பே சங்கரின் கடித வாயிலாகச் சொல்லப்பட்டுவிடுகிறது. “என் கற்பனையில் பிறந்து அவர்கள் மனத்தில் நீ வாழ்வது எவ்விதமோ தெரியவில்லை” என்று அவன் எழுதியிருக்கிறான். சங்கரின் கற்பனையில் பிறந்தவன் சேகரன் என்றால் அவன் இதுவரை எப்படி வாழ்ந்தான், எப்படி மலைக்கோட்டையைப் பார்வையிட்டான், எப்படி மழையில் நனையாமலிருக்க வீட்டிற்குள் வந்தான்? இதுதான் மௌனியின் அற்புதமான “உன்னதமான பாஷை.”
சங்கரின் இறப்பைச் சேகரனுக்கு அவன் தங்கை கணவர் சொல்கிறார். தெற்கிலி ருந்து வடக்கே ஏதோ ஒரு படிப்புக்குச் சென்றவன், ஒரு சுரங்கக் கம்பெனியில் உயர்பதவி வகித்து பூமிக்கு இரண்டாயிரம் அடி கீழே சுரங்கத்தைப் பார்வை யிடும்போது ஏதோ விஷம்தீண்டி இறந்துவிடுகிறான் சங்கர். ஆனால் உண்மையில் கதையை நடத்திச் செல்லும் சேகரனுக்கு சங்கர் இறக்கவில்லை. சங்கர், அவனது தங்கை சுமி ஆகியோர் நினைவாகவே அவன் வாழ்ந்து கொண் டிருக்கிறான். சங்கர் தனக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அனுமானிக் கும் அவன் பிறகு வாயிலைத் தாண்டி படிகளைத் தாண்டி கதவையும் தாண்டி-எல்லாவற்றையும் “தாண்டிக்” கடந்து சென்றுவிடுகிறான். இவ்வளவுதான் கதை.

கதையின் இந்த இறுதிப்பகுதி முக்கியமானது. சங்கரும் அவன் தங்கை சுமியும் பிரிக்க இயலாமல் சங்கரின் நினைவில் வாழ்பவர்கள். ஆனால் சங்கரோ அவர் கள் நினைவில் தான் வாழ்வதாக நினைக்கிறான். இதுதான் கதையின் முக்கியச் செய்தி. அதாவது உயிரோடிருப்பவனாகிய இவன் நினைவில் அவர்கள் வாழ, இறந்துவிட்ட அவர்கள் நினைவில் இவன் வாழ்வதாக ஒரு சுழற்சியில்-விஷச் சுழலில் சிக்குகிறது கதை. இச்சுழற்சி, இக்கதா பாத்திரங்களின் உடனிருப்பை முற்றிலுமாக மறுக்கிறது. மேலும் சங்கரின் கனவாகத் தன்னைக் கருதிக்கொள் ளும் சேகரன், சுமி நாடிச் செல்லும் கனவும் தானே என்பதாக முன்னாலே வருகிறது.

கதையில் சேகரன் சுமியைத் திருமணம் செய்துகொண்டதற்கான குறிப்பு எதுவும் இல்லை. என்றாலும் இருவருக்குமிடையிலான ஈர்ப்பு, மிக நுட்பமாகச் சொல்லப் படுகிறது. சேகரனை அவள் கதவிடுக்கில் நின்று பார்த்ததையும், அவனைக் குறித்து அழகாகப் புரிந்துகொண்டவளாக இருந்ததையும் சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறான். சுமிக்கும் சேகரனுக்கும் சங்கருக்கும் இடையிலிருந்த உள்ளார்ந்த பாலியல் ஈர்ப்பைச் சொல்ல முனையும் ஆசிரியர், தம்மையறியாமலேயே தடை செய்யப்பட்ட பாலியல் உறவுக்குள் சென்றுவிடுவதால் அதைத் தவிர்கக்வேண்டி மூவரையும் உடலற்றவர்கள் ஆக்கிவிடுகிறார். சங்கரின் இறப்போடு தன் இருப்பும் கூடச் சந்தேகம் கொள்வது சரி என்று நினைக்கிறான் சேகரன். மேலும் சங்கரின் பேச்சில் தன்னைத் தான் பார்ப்பதாகவும் கருதுகிறான். இம்மா திரிப் பல்வேறு குறிப்புகள் சஙகரையும் சேகரனையும் ஓர் உடலின் இருவேறு உருக்களாகவே காட்டுகின்றன. அதாவது அவன் ஒரு பிளவுபட்ட ஆளுமை (ஸ்ப் ளிட் பெர்சனாலிட்டி) கொண்டவன். பிறருடன் அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது இன்னொரு சுயம் கனவுகாணத் தொடங்கிவிடுகிறது. “அநேக மாணவர் மத்தியில் ஒரு மதிப்பில் வீற்றிருக்கும்போது அவனை (சங்கர்) அங்கு பார்க்கமுடியாது. கொஞ்சம் எட்டியோ, அல்லது பார்வையில்கூடப் படமுடியாத வகையில் அவன் அங்கிருப்பது மட்டும் நிச்சயம். அவசியமானால் பார்வை கொள்ளக் கூடிய விதத்தில் அவன் எங்காவது பகற்கனவு கண்டுகொண்டிருப் பான்”. ஒரே உடல், ஆனால் ஓர் உரு அண்ணனாக இயக்கம் கொள்கிறது, மற்றொரு உரு காதலனாக, சங்கராக இயக்கம் கொள்கிறது.
சேகரன் என்னும் இவனது பெயரே, முதன்முதலில் இவன் மழைக்கு ஒதுங்கும் வீட்டின் சொந்தக்காரர், சங்கரின் தங்கை கணவர் சொல்வதாகத்தான் வருகிறது. கதையில் இவன்தான் உண்மையிலேயே சங்கரின் நண்பன் சேகரன் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. மௌனியின் எழுத்து இந்தத் தகாத பாலியல் உறவுச் சிக்கலை உருவெளித் தளத்திற்கு மாற்றி மறைக்கவே கோட்டை யைப் பார்க்கும் நிகழ்ச்சி நுழைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணன் தங்கை இடையிலான பாலியல் தொடர்பு சமூகத்தடைகளில் முக்கிய மான ஒன்று. இதனைத் தாங்கமுடியாமல்தான் சங்கர் இறந்துவிடுகிறான். அவனுக்குப்பின் அவன் தங்கையான சுமியும் இறந்துவிடுகிறாள். இதைச் சொல்வதே ‘மனக்கோட்டை’ கதை. மௌனியின் நினைவுச்சுழல் என்னும் கதையும் இதேபோன்ற தடுக்கப்பட்ட பாலுறவு அடிப்படையிலேயே அமைந்திருப் பதையும் விமரிசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தத் தடைசெய்யப்பட்ட பாலுறவுக் கதை, வெளிப்படையாகத் தோன்றாமலிருக் கவே
சேகரன் மலைக்கோட்டையைக் காண்பதையும் பிறகு வெளிப்படையான அரசியல் விமரிசனத்தையும் வைக்கிறார் மௌனி. அதுமட்டுமின்றி மூன்று பேரையும் மன வுருக்களாகவே மாற்றிவிடுகிறார். அதாவது தடைசெய்யப்பட்ட பாலியல் உறவுக் கதையை மறைப்பதற்காக அரசியல் விமரிசனமும் வேதாந்தமும்! இது மௌனியின் முக்கியமான ஒரு முகம்.


‘பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுதி

‘பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுதி – ஒரு பார்வை

கௌதம சித்தார்த்தனின் ‘பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுதியில் பதினொரு சிறுகதைகள் இருக்கின்றன. இந்த மண்ணின் அசலான சாயல் இரு கதைகளில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. இவற்றில் ஒரு கதை-‘மண்’-இந்தப் புத்தகத்தின் மூன்றில் ஒரு பங்கினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இன்னொன்று ‘தொப்புள் கொடி’.

இரண்டுமே யதார்த்தமான கதைசொல்லல் முறையில் அமைந்தவைதான். கதைகளின் தீவிரம் உடனே வாசகரைத் தொற்றுமாறு அமைந்துள்ளது. முன்தலைமுறை விமரிசகர்கள் சொல்லுவதுபோல, ஆசிரியரின் தரிசனம் வெளிப்படுமாறு அமைந்துளளன. பிற கதைகளில் ஆசிரியருக்கு ஓர் மன நெருக்கடி இருக்கிறது-யதார்த்த முறையில் கதையைச் சொல்லலாகாது, போஸ்ட் மாடர்னிச அல்லது மந்திரயதார்த்த முறையில் என்று சொல்லலாமா-ஏதோ ஒரு செயற்கையான புதிய முறையில் ரொமாண்டிக் பாணிக் கதைகளைச் சொல்லவேண்டும் என்று நினைத்து வெளிப்படுத்தும் நெருக்கடி. பொதுவாகக் கலை என்பது-தான் செய்யப்பட்ட ஒன்று என்பது-வாசகருக்கு வெளிப்படாமல் இருக்கும்போதுதான் சிறப்புப்பெறுகிறது.

‘ஒழிக உங்கள் துப்பாக்கிகள்’-முதல் கதை. உருவச் செம்மை அமையவில்லை. அன்போ, படைப்பாற்றலோ-ஏதோ ஒன்றை மலராக உருவமைத்துக்கொண்டு அது துப்பாக்கி ஆவதாக எழுதுகிறார். ஆனால் அந்தப் பூ எப்படித் துப்பாக்கி ஆயிற்று? அதுதானே கதையாக முடியும்? ‘அவன் செத்துப்போனான்’ என்றால் அது செய்தித்தாள் செய்தி. ‘ஏன் செத்தான்’ என உணர்வுபூர்வமாக விவரித்தால் அது கதை. மேலும் இந்த மாற்றம் ஏற்படப்போகிறது என்பதற்கான முன்னறிகுறிகளும் கதையில் இல்லை. “அந்தக் குழந்தை என் அருகாமையில் வந்தது….அதைப் பிடிக்க, அது பதறி யோட….அந்தக் காட்சி ஒரு தலைசிறந்த சிருஷ்டி” என்கிறான் கதைசொல்லி. இப்படி உணர்பவனின் பூ எவ்விதம் துப்பாக்கி ஆகமுடியும்? பூ துப்பாக்கி ஆயிருந்தால் இம் மாதிரி நினைப்புக்கு இடமே இல்லை.

இரண்டாவது கதை, ‘நுனி மீசையில் திறந்துகொள்ளும் சிரிப்பு’. பால்ய காலக் காதலைப் பற்றிய சாதாரணமான கதை. “நித்யத்துவம் கவிந்த அதே முகம். வாழ்வின் அர்த்தம் பூரணத்துவம் அடைந்துவிட்ட உன்னத கணங்கள் அவள் உடம்பெங்கும் ஒளிர்ந்தன. தனது ஜீவித ரகசியத்தை மறைத்துவைத்திருக்கும் உள்முகம் நோக்கி ஓடி னான்….” இக்கதையின் இறுதியில் ஒரு பகுதி இது. நித்யத்துவம், உன்னதம், வாழ்வின் அர்த்தம், பூரணத்துவம், ஜீவித ரகசியம்….என வெற்றுச்சொற்கள். மேலும், ஆசிரியர் தான் பின்பற்றுவதாகக் கூறுகின்ற பின்நவீனத்துவத் தன்மைக்கு முற்றிலும் எதிரான வையும்கூட. இலட்சியவாதச் சிந்தனைக் குப்பை. இதுதான் கௌதமனின் சிக்கல். பச்சைப்பறவையோ, சிவப்பு வயல்களோ இம்மாதிரி வண்ண வருணனைகள் பதிவு நவிற்சித்தன்மையைக் காட்டுபவை.

மூன்றாவது கதை, ‘முகம்’. நல்ல நவீனத்துவப் பிரதி ஆகும் தன்மைகள் இதில் உள்ளன. ஆனால் இதுவும் சரிவர உருப்பெறவில்லை. ஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னரே ந. முத்துசாமியின் கதை ஒன்றில், ஒருவன் திடீரெனத் தன்னை ஒரு spectre ஆக உணர்கிறான். தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அவ்வாறே கண்டு ஒரு விபத்தில் சிக்கி இறந்தும் போகிறான். அக்கதையின் நவீனத்துவமும் முழுமையும் வாய்ப்பது அரிது. காரணம், நவீன வாழ்க்கையான நகர வாழ்க்கை, இம்மாதிரி சிதிலமான பிரமைகளை உருவாக்க முடியும். ‘முகம்’ கதையின் நாயகன், தனது கிராமத்திற்கு (ரஜனிகாந்த், விஜய்காந்த் பாணியில் கிராமத்தில் நிறைய சேவை வேறு செய்திருக்கிறான்) சென்றவுடனே அவனது இழந்த முகம் திரும்பக்கிடைத்துவிடுகிறது. ‘இயற்கைக்குத் திரும்பு’ அல்லது ‘கிராமத்திற்குத் திரும்பு’ என்ற எளிய செய்தியைக் கொண்ட கதை இது.

‘தரிசனம்’ அடுத்த கதை. ஒரு தப்பிப்புப் பாணிக் கதை. சாதாரணமாகக் கணவர்களின் தான் எப்படி மனைவிமார்களை மிரட்டுகிறது என்பதை ஓரளவு இயல்பாகச் சொல்லு கிறது. ஆனால் ஜெயித்தால் முத்தம் தருவது போன்ற சினிமாத்தனமான செயல்கள் இதைக் கெடுக்கின்றன.

‘கனவு-ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்’ என்பது ஐந்தாவது கதை. நான்கு கனவுகள். ஃப்ராய்டிய மணம் மாறாமல் எல்லாமே ஆண்குறி மையப்பட்டவையாக அமைந்திருக் கின்றன.

ஆறாம், ஏழாம் கதைகள்தான் முன்பே கூறிய ‘மண்’ணும் ‘தொப்புள்கொடி’யும். தொப்புளான் என்ற ஆட்டக்கலை வாத்தியார். அவருடைய கலை பிடிக்காமல் முதல் மனைவி ஓடிப்போய்விடுகிறாள். இரண்டாவது மனைவி வாயிலாகப் பிறந்த பிள்ளை யிடம் பாரம்பரியமாக வந்துவிட்ட அந்தத் திறமையைப் பார்த்துவிட்டு நெஞ்சு துடிக்கிறார் அவர். கதை நன்றாக வந்திருக்கிறது.

‘மண்’ என்றுதான் இந்தச் சிறுகதைத் தொகுதிக்குப் பெயர் வைத்திருக்கவேண்டும். அண்மைக்காலத்தில் படித்த சிறந்த கதைகளில் ஒன்று ‘மண்’ என்று எளிதாகவே சொல்லி விடலாம். கிராமப்புறங்களில் நமது பெண்களுக்குச் சாதிக்கட்டுப்பாடுகளின் பெயரால் இழைக்கப்படும் எத்தனையோ கொடுமைகளில் ஒன்றை மிக அழகாக ஆவேசத்தோடு சொல்கிற கதை இது.

எட்டாவது கதை ‘பலிபீடம்’. ஒருவகையில் ஏழாவது கதையின் தொடர்ச்சி. ‘மண்’ கதையில் ஆணாதிக்க மமதையின் உருவமாகப் படைக்கப்பட்ட ஜமதக்னி முனிவர்; பலிபீடத்தில் ரேணுகா, தேவியாக மாறிய தொன்மம்; கதையாகியிருக்கிறது. கதையின் ஆகிருதியை மீறிய சொல்நடை பெரிய இடறலாக அமைகிறது.

‘சாத்தாவு’ (குட்டிச்சாத்தான்) அடுத்த கதை. சாத்தானை அடிமைப்படுத்தி வைத்திருந்த மூதாதையின் முடிவு பற்றியது.

” ‘மூன்றாவது சிருஷ்டி’ தொகுப்பில் ‘சாபம்’ கதையில் மூட நம்பிக்கை எனக் கிண்டலடித்திருந்த என் அம்மாவின் குறிசொல்லலை, ஐந்து வருடங்களுக்குப் பின்னான என் எழுத்து வீச்சு அற்புத மரபாகக் கணித்தது” என்கிறது சித்தார்த்தனின் முன்னுரை. இது பார்வைக்கோளாறுதான். ஐந்தாண்டுகளுக்கு முன்பு மூடநம்பிக்கையாக இருந்தது, இப்போது அப்படி இல்லாமல் போய்விடமுடியுமா? அக்கால சமய, சமூகப் பின்னணியில் இப்படித்தான் மக்கள் வாழ்ந்திருக்கமுடியும் என்று நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் அந்த மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியுமா? அற்புத மரபாகக் கணிக்க முடியுமா? இம்மாதிரி நிலவுடைமைக்கால சமூக மதிப்புகள் தங்கள் ஆதிக்கத்தினால் நம்மை எவ்வளவு சீரழித்துள்ளன? அவற்றைக் கட்டுடைக்காமல், ஏற்றுக்கொண்டு பாராட்டுவது ஒரு பிற்போக்கு வாதியாகவே ஆசிரியரைக் காட்டுகிறது.

இறுதியாக, ‘பச்சைப் பறவை’, ‘வெற்றுவெளி’ ஆகிய இருகதைகள் இருக்கின்றன. ‘வெற்றுவெளி’, புதுமைப்பித்தனின் ‘ஞானக்குகை’ கதையை நினைவூட்டுகிறது. அதன் அர்த்த விசாலமில்லை. முற்றுப்புள்ளியில்லாமல் எழுதிச் செல்வது ஒரு விளையாட்டு. இந்த மாதிரி விளையாட்டுகளுக்குப் பழங்கவிதைகளில் பஞ்சமா என்ன? நாகபந்தம் ரதபந்தத்திலிருந்து யமகம் திரிபு மடக்கிலிருந்து நிரோட்டகப் பாக்கள் வரை எத்தனை விளையாட்டுகள்? இம்மாதிரி விளையாட்டுகளை இலக்கியமாகக் கணிக்கமுடிந்தால், ‘வெற்றுவெளி’யும் அப்படியே.

தமிழில் தொன்மங்கள் குறைவு. அதனாலேயே சமஸ்கிருதப் புராணக்கதைகள் இங்கே ஆட்சிசெய்கின்றன என்று தோன்றுகிறது. பச்சைப் பறவையிலும் ஒரு தொன்மம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு புராணிகமும், ஒரு காதல் கதையும். எந்த விதத்திலும் வாசகருக்கு எவ்வித சலனத்தையும் உருவாக்க இயலாத கதைகள் இறுதி இரண்டும் என்று சொல்லலாம்.

நம் நாட்டில் யதார்த்தப்பாணியில் மிக நன்றாக எழுதக்கூடியவர்கள், ஏனோ ஃபேஷன் எனக்கருதி வேறு பாணிகளைப் பின்பற்றி வீணாகிவிடுகிறார்கள். இதற்குக் கோணங்கியை நல்ல உதாரணமாகச் சொல்லமுடியும். அவரது ‘மதினிமார்கள் கதை’ எழுப்பிய பாதிப்பினைப் பிறகுவந்த சிறுகதைத்தொகுதிகள் எழுப்பமுடியவில்லை. சித்தார்த்தனும் அவரைப்போலவே செயல்படுகிறார். மேலும் இந்தப் புத்தகத்தின் முன்னுரை ஒரு மிதமிஞ்சிய ‘தானை’ (ஈகோவைக்) காட்டுகிறது. ‘உரையாடலுக்கப்பால்’ எனக் காணப்படும் தலைப்பில் வரிக்கு வரி, நான், நான், நான், …. “பத்துவருடங்களுக் குப் பிறகு தொகுப்பாக வெளிவரும் என் எழுத்துகளினூடே துலங்கிநிற்கும் காலப் பிரக்ஞையை கவனிக்கவேண்டும்…”  “சரித்திரத்தின் திருகுவழிப் பாதையினூடே உள்ளோடிய என் கதைமொழி தமிழின் புதுமலர்ச்சியை வெளிப்படுத்தவல்ல ஜீவத் துடிப்புடன் விரிவுபெற்றது….”  பத்தாயிரம் பாட்டெழுதித் தமிழில் பாரகாவியம் படைத்த கம்பர்கூட இப்படிப் பெருமை பேசியதில்லை.

உண்மையில் இக்கதைகள் யாவற்றிலும் திரும்பத் திரும்பவரும் ஒரே மாதிரிப் படிமங் கள், வரிகள், சொற்கள் ஆகியவை நமக்கு அலுப்பூட்டுகின்றன. திரும்பத் திரும்ப வரும் சொற்கள், எழுத்துகள் பற்றி வரும் குறிப்புகள்… எழுத்தும் ஒருவகையில் நடிப்பைப் போன்றதுதான். ஒரு நல்ல நகைச்சுவை நடிகன், தான் சிரிக்காமல், பார்வையாளர்களைச் சிரிக்கவைக்கிறான். அதுபோலத்தான், ஒரு நல்ல எழுத்தாளனும் ‘என் எழுத்து இப்படிப்பட்டது, அப்படிப்பட்டது’ என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. மாறாக, அவன் எழுத்து செய்யவேண்டிய பணியைச் செய்கிறது. செய்யவேண்டும்.

கடைசியாக, கௌதம சித்தார்த்தனின் கதைப் பொருள்கள் யாவும் ரொமாண்டிக் தன்மை கொண்டவை. பழமையைப் பாராட்டுவது, கிராம வாழ்க்கையின் மூடத்தன்ங்களையும் பாராட்டுவது போன்றவை வெற்றுக்கனவுத் தன்மை கூடியவை. இம்மாதிரிக் கனவுத்தன்மை, நவீன எழுத்துமுறைக்கு முற்றிலும் மாறானது. இதனை அவர் விட்டு வெளியேறினால், பிறகு நாம் அவரது “அக்குளில் முளைக்க இருக்கும் புதுவிதச் சிறகு எழுத்தைப்” பற்றிப் பேசலாம்.


தொல்காப்பிய நோக்கில் வக்ரோக்தி

தொல்காப்பிய நோக்கில் வக்ரோக்தி

கவிதைமொழி பற்றி அண்மைக்காலத்தில் மிகுதியாகச் சிந்திக்கப்பட்டுள்ளது. கவிதை என்பது மொழியை மிகுந்த பிரக்ஞையுடன் கையாளுவதாகும். சாதாரணப் பேச்சுமொழிப் பயன்பாட்டிலி ருப்பதை விட அல்லது உரைநடைப் பயன்பாட்டிலிருப்பதை விட கவிதையில் மொழி மிகவும் அமைப்புற்றதாக உள்ளது. கவிதை மொழி என்பதை மிகவும் விரிந்துபட்ட ஒரு மொழி என்றும் தொடர்புகோளின் எல்லா மூலவளங்களையும் ஒருங்கே கையாளு கின்ற மொழி என்றும் சொல்லலாம். கவிதைமொழி பற்றி மேற் கத்தியவர்கள் சிந்தித்தவைகளை வெளிப்படுத்தும் ஆயிரக்கணக் கான நூல்கள் உள்ளன. சமஸ்கிருதத்தில் பல கொள்கையாளர்கள் கவிதைமொழி பற்றிச் சிந்தித்துள்ளனர். நமக்குத் தொல்காப்பியம் ஒன்றே பழங்காலக் கொள்கைகளை எடுத்துக்காட்டக்கூடிய ஒரே சான்றாக, அரும்பேறாக உள்ளது.
தொல்காப்பியம் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தாக இருந்தபோதும் அண்மைக்காலத்தில் சிந்திக்கப்படுபவை போன்ற கவிதைக்கொள்கைகள் பலவற்றை நேரடியாகவும் மறை முகமாகவும் முன்வைக்கிறது. பொருளதிகாரம் கவிதைமொழியை எவ்விதம் கையாளுவது என்பதற்கான விதிகளை வகுத்துரைப்பதற்காகவே எழுதப்பட்டது. கவிதை உருவாக்கம் பற்றிக் குறிப்பிடும்போது தொல்காப்பியர்
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல்சான்ற புலனெறி வழக்கம் என்கிறார்.
மேலோட்டமாக இக்கூற்று யதார்த்தத்திற்கு அப்பாலுள்ள புனைந்துரை, யதார்த்தத்திற்கு இயைந்த வழக்கு ஆகியவற்றைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் ஆழமாக நோக்கினால் இது இருவகையான கவிதைச் செயல்முறைகளைக் குறிப்பிடுகிறது. நாடகவழக்கு என்பது இயல்புநவிற்சிக்கு மாறான எழுத்து முறையைக் குறிப்பிடுகிறது. உலகியல் வழக்கு என்பது இயல்பு நவிற்சிக்கு இயைந்த எழுத்துமுறையைக் குறிப்பிடுகிறது.
செய்யுள்தாமே இரண்டென மொழிப (1384)
என்னும் தொல்காப்பியர் கூற்றும் இங்கு மனங்கொள்ளத்தக்கது. “பொருளுணர்த்தும் முறையால் செய்யுள் இரண்டு வகைப்படும். அதாவது நேரடியாகப் பொருளுணர்த்தலும் குறிப்பாற் பொருளுணர்த்தலும்” என்று இதற்கு உரைதருவர். ‘குறிப்பாற் பொருளுணர்த்தல்’ என்பதை விட, நேரான மொழியால் அல்லாமல் பொரு ளுணர்த்தலும் என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும். அதாவது
-நேரடியாகப் பொருளுணர்த்தும் செய்யுள்
-சுற்றிவளைத்துப் பொருளுணர்த்தும் செய்யுள்
எனச் செய்யுள் இருவகைப்படும் என்று தொல்காப்பியர் கூறுவதாக வைத்துக்கொள்ளலாம். இரண்டாவது வகை, அழகுபடுத்தி – அலங்கார மொழியால் சுற்றிவளைத்துச் சொல்வதன் வாயிலாக அமையும் செய்யுள் எனப் பொருள்படும்.
மேற்சுட்டிய ‘உலகியல் வழக்கு’ என்பதோடு
உண்மை செப்பும் கிளவி (1153),
கிளந்தாங்கு உரைத்தல் (1157),
வழக்கு வழிப்படுத்தல் (1163)
வாய்மை கூறல் (1183)
என்பது போன்ற இடங்களிலெல்லாம் நேரடிக் கவிதை முறையை யே தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். ஆனால் பிற இடங்களிலெல்லாம் அவர் மறைமுகக்கூற்று (அல்லது கோணல்கூற்று அல்லது நேரல் கூற்று) முறையையே வலியுறுத்துகிறார்.
தொல்காப்பியருக்கு ஒத்த கருத்து அவருக்குப் பின் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த குண்டகர் என்ற சமஸ்கிருத இலக்கியாசிரியரிடம் காணப்படுகிறது. அவர் எழுத்துமுறைகளை ஸ்வபாவோக்தி, வக்ரோக்தி (இதற்கு ‘அதிசயோக்தி’ என்றும் பெயர்) என இரண்டாகப் பகுக்கிறார். இவற்றுள் வக்ரோக்தி பற்றி விரிவாகப் பேசுகிறார். அவருடைய முக்கியமான நூல் ‘வக்ரோக்தி ஜீவிதம்’ என்பது.
இயல்பான எழுத்து அல்லது பேச்சுமுறை ஸ்வபாவோக்தியின் பாற்படும். ஸ்வப வோக்தி (ஸ்வபாவ + உக்தி) அல்லது இயல்பு நவிற்சிக்கு மாறான எழுத்து முறை வக்ரோக்தி எனப்படும். வக்ரோக்தி என்பது வக்ர + உக்தி எனப் பிரிவுபட்டுக் கோணற் கூற்றுமுறை (நேரல்கூற்று, மறைமுகக்கூற்று, கூடமான முறை யில் கூறும் கூற்று) எனப் பொருள்படும். அதாவது எதையும் நேராகப் பேச்சு வழக்கிலுள்ளது அல்லது அறிவுநூல்களில் உள்ளது போன்ற முறையில் அல்லாமல் சுற்றிவளைத்து அழகுபடுத்திக் கூறுதல் என்பதாகும்.
சாதாரணமொழியை விட வேறுவிதமாக மொழியைவளைத்துக் கையாளும்போது அவ்விதம் கையாளுவது மிகுந்த பயன் அல்லது விளைவைத் தருவதாக அமைந்து விட்டால் அது வக்ரோக்தி எனப்படுகிறது.
தொல்காப்பியர் கூறும்,
ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறுபொழுதே புள்ளே நெஞ்சே
அவையல பிறவும் நுதலிய நெறியால்
சொல்லுந போலவும் கேட்குந போலவும்
சொல்லியாங்கு அமையும். (1456)
என்பது வக்ரோக்தியின் பாற்படக்கூடிய சிந்தனையே. மேற்காட்டியது இலக்கணை பற்றிய நூற்பா.
அங்கதம் பற்றிக் கூறும்பொழுதும் செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இரண்டாகப் பகுப்பார் தொல்காப்பியர். செம்பொருள் அங்கதம் என்பது நேரடி வசை. அதில் சுற்றிவளைத்துச் சொல்லுதலோ குறிப்புப் பொருளோ இல்லை. ஆங்கிலத்தில் லாம்பூன் எனப்படும் வகையைச் சேர்ந்தது இது. பழிகரப்பு அங்கதம் என்பது மறைமுகமான சொற்களால் கேட்பவன் உய்த்துணருமாறு கூறப்படுவது.
இவற்றால் பிற்கால சமஸ்கிருதக் கொள்கையாளர்கள் போன் றே அவர்களுக்கெல்லாம் முற்பட்ட தொல்காப்பியருக்கும் நேரடிக் கவிதை, மறைமுகக்கவிதை என்னும் இருவகைகளில் நம்பிக்கை இருப்பது தெளிவாகும். ஆங்கில நூலார் மறைமுகக்கவிதை என்பதை oblique poetry என்பர்.
குண்டகர், மஹிமா பட்டரைப்போல த்வனிக் கொள்கைக்கு எதிரானவர் அல்ல. அவர் தமது வழியில் கவிதை உருவாக்க அடிப்படையைக் கூறுகிறார். தொல்காப்பியர் த்வனிக் கொள்கையை உடன்படுபவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். உள்ளுறை, இறைச்சி போன்ற த்வனிப் பொருள்களை வலியுறுத்தல் தொல்காப்பியரிடம் காணப்படுகிறது. இருப்பினும் எல்லாக் கவிதைகளும் த்வனிப் பொருள் உடையனவாக இருக்கவேண்டும் என்று தொல்காப்பியர் வலியுறுத்தவில்லை. ஆனால் நேரடியான கூற்று முறை கொண்ட கவிதைகளும் மறைமுகக்கூற்றுமுறை கொண்ட கவிதைகளும் உண்டு என்பதைச் சொல்லும் முறையில் குண்டகரை ஒத்த (அவருக்கு முன்னோடியான) சிந்தனையாளர் ஆகிறார். தொல்காப்பியர் தமது கொள்கையை விரிவாக்கிக் ‘கற்பனையின் வெளிப்பாடு என்பதே வக்ரோக்திதான்’ எனக் கூறவில்லை. மேலும் குண்டகர் வக்ரோக்தியின் விளைவு ரஸம் என்று கூறி, அதனை ரஸக்கொள்கையோடு இணைக்கிறார். ஆனால் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலின் அடிப்படைகள் வேறாக இருக்கின்றன.
தமிழ்க் கோட்பாட்டின்படி, மறைமுகக் கவிதை என்பதை நேரல் கூற்றுமுறைக் கவிதை என்பதோடு குறிப்புணர்த்தும் கவிதை என்றும் சொல்லலாம்.
நோயும் இன்பமும் இருவகை நிலையில்
காமம் கண்ணிய மரபிட தெரிய
எட்டன் பகுதியும் விளங்க ஒட்டி
உறுப்புடையதுபோல் உணர்வுடையதுபோல்
மறுத்துரைப்பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும்
சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ
செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும்
அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும்
அறிவும் புலனும் வேறுபட நிறீஇ
இருபெயர் மூன்றும் உரியவாக
உவம வாயிற் படுத்தலும் உவமம்
ஒன்றிடத்து இருவர்க்கும் உரியபாற் கிளவி (1142)
என்னும்போது குறிப்பாற் புலப்படுத்தலே அன்றிக் கூடமாகச் சொல்லுதலும் விவரிக்கப் படுகிறது.
‘கனவும் உரித்தால் அவ்விடத்தான’ (1143) என்னும்போதும் மறைமுக வெளிப்பாடே சொல்லப்படுகிறது. கனவு என்பதே தன்னுணர்வற்ற ஒரு வெளிப்பாட்டு முறை என்று சர்ரியலிசக் கொள்கையாளர்கள் போன்றோர் ஏற்பர்.
என் உற்றனகொல் இவையெனச் சொல்லுதல் (1149),
நெஞ்சொடு உசாவுதல் (1150),
நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்
புரைபட வந்த அன்னவை பிறவும் (1156)
போன்ற நூற்பாக்களும் சுற்றிவளைத்துச் சொல்லுதல் என்னும் கருத்தை உணர்த்து கின்றன.
உண்டற்குரிய அல்லாப் பொருளை
உண்டன போலக் கூறலும் மரபே (1159)
என்பதும் மறைமுக வெளிப்பாடே ஆகும்.
சமஸ்கிருதக் கொள்கையாளர்களில் வக்ரோக்தி பற்றிய சிந்த னையை பாமகர், தண்டி, குண்டகர், போஜர் போன்ற ஆசிரியர் களின் நூல்களில் காணலாம். பாமகர், தண்டி காலத்திற்கு (கிபி ஒன்பதாம் நூற்றாண்டு) முன்பிருந்தே இது அறியப்பட்டிருந்தது எனக் கருதலாம். பாமகர் உயர்வு நவிற்சி அல்லது அதிசயோக்தியைப் பற்றிப் பேசும்போது அதிசயோக்தியின் இன்னொரு பெயர் தான் வக்ரோக்தி என்பதுபோல எழுதுகின்றார்.
“எல்லா அணிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது இது. அவற்றிற்கு அழகைத் தருவது. ஆகவே கவிஞர்கள் கண்டிப்பாக முயன்று அடையவேண்டியது. காரணம், இது இன்றி எந்த அணி யும் இல்லை” என்பது அவர் கூற்று. தண்டியும் ஸ்வபாவோக்தி தவிர ஏனைய எல்லா அணிகளுக்கும் அடிப்படையாக வக்ரோக்தியைக் குறிப்பிடுகிறார். ஸ்லேஷத்தை (சிலேடையை) அதன் முக்கிய வெளிப்பாடாகவும் குறிப்பிடுகிறார்.
இதற்கு மாறாக வாமனர், உருவகம் என்பதே வக்ரோக்தி என்னும் கொள்கையினராகக் காணப்படுகிறார். ஆனந்த வர்த்தன ரின் த்வன்யாலோகத்தில் வக்ரோக்தி பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் அவருக்கு உரை எழுதிய அபிநவ குப்தர், வக்ரோக்தியை ‘உத்க்ருஷ்ட சங்கடனம்’ என்று குறிப்பிடுகிறார். இச்சொல்லுக்கு ‘நிறைவுற்ற ஒரு படைப்பு உத்தி’ என்று பொருள். எனினும் குண்டகர், போஜர் இருவரையும் தவிரப் பிற அனைத்து ஆசிரியர்களும் வக்ரோக்தியை ஒரு சப்தாலங்காரம் என்றே கருதியுள்ளனர். (அதாவது ஒலியின் அடிப்படையில் அமையும் அணி).
தொல்காப்பியருடைய நோக்கில் கூற்று என்பது கவிதையை வெளிப்படுத்தும் முறை. வாசகர் கவிதையைக் கற்கும் முறை என்றும் கொள்ளலாம். நாடக மாந்தரின் (தலைவன், தலைவி, செவிலி, தோழி போன்றோருடைய) கூற்றினை அவர் கிளவி என்றும் கிளத்தல் என்றும் சொல்வார். எனவே தொல்காப்பியர் ‘கிளத்தல்’ என்னும் சொல்லைத் தவிரப் பிற சொற்களைப் பயன்படுத்துமிடங்களை (கூற்று போன்ற சொற்களைப் பயன்படுத்துமிடங்களை)க் கவிதை வெளிப்பாட்டினைக் குறிப்பனவாகக் கருதி ஆராய்தல் நாம் அவரது கவிதைக் கொள்கையை இன்னும் சரிவரப் புரிந்து கொள்ள வழிவகுக்கும்.
பாமகர் கூறும் ஒரு சில கருத்துத் துணுக்குகளை எடுத்தே குண்டகர் வக்ரோக்தி என்னும் கொள்கையாக உருவாக்கியிருக்கிறார். கவிதையின் இயல்பும் வெளிப்பாடும் வக்ரோக்தியே என்பது அவர் கருத்து. கவிதைமொழி பற்றிக் குண்டகர் போல ஆழமாகச் சிந்தித்தவர் எவருமில்லை என்றே கூறலாம்.
திகைப்பூட்டும் புதிய மொழி அல்லது மொழி விலகல் (deviations of language) என்னும் கருத்தைத்தான் அவர் வக்ரோக்தி என்பதன் வாயிலாக முன்வைக்கிறார். குறிப்புமொழி என்று தொல்காப்பியர் கூறுவதையும், வக்ரோக்தி என்று குண்டகர் கூறுவதையும் மேற் கத்தியக் கவிதை மரபிலுள்ள விலகல் என்னும்கருத்துடன் ஒப்பி டலாம்.
அரிஸ்டாடில் காலத்திலிருந்தே மேற்கத்தியக் கவிதையியலில் விலகல்தான் கவிதை மொழியினை உருவாக்குவது என்னும் கருத்து ஏற்கப்பட்ட ஒன்றாகும். “கவிதையில் அதீத கவர்ச்சியை உண்டாக்குவதற்கு அடிப்படையான மொழிச்சிந்தனை” என்று வக்ரோக்தியை குண்டகர் விவரிக்கிறார்.
‘லோகாத்தர சமத்காரகாரி, வைசித்ரிய சித்தயே’
சாதாரண மொழி வெளிப்பாட்டிலிருந்து மாறுபட்டதொரு கவர்ச்சி மிக்க வெளிப்பாட்டின் காரணமாகத்தான் கவிதையின் ஆன்மா உருவாகிறது என்பது குண்டகர் கருத்து.
கவிதைமொழி, பேச்சுமொழியினின்றும் வேறுபட்டது, அது உயர் அழுத்த மின்சாரம் போன்றது, சாதாரணமொழி குறைந்த அழுத்த மின்சாரம் போன்றது என்பது வடிவவியல் திறனாய்வாளர்களின் கருத்து இதனை ஒட்டி குண்டகர் கருத்துகள் அமைகின்றன. தொல்காப்பியர் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அவரது கருத்துகளும் இதனை ஒத்தவையே.
விலகல் என்பது ஒரு பிரதியைப் புரிந்துகொள்வதில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துவதன் வாயிலாகச் சாதாரணத் தொடர்புகோள் முறையிலிருந்து மாறுபடுவது ஆகும். இலக்கண விதிகளை விட்டுவிடுதல் வாயிலாக அது நிகழலாம். அவற்றின் விதிகளைப் பயன்படுத்தலில் மாற்றங்கள் செய்வதன் வாயிலாக வும் நிகழலாம். அல்லது புதிய விதிகளை உருவாக்குதல் வாயிலாகவும் நிகழலாம். மொழியின் எல்லாத் தளங்களிலும் அது நிகழும். கவிதையின் எல்லாச் சிறப்பான கருவிகளும் விலகலை முன்னுதாரணமாகக் கொண்டுள்ளன என்கிறார் லெவின் என்னும் ஒப்பியல் ஆய்வாளர்.
லெவின் இரண்டு வகை விலகல்களைக் குறிப்பிடுகிறார்.
அகவிலகல், புறவிலகல் என்பன அவை.
கவிதையின் பின்னணியிலிருந்தே எழும் விலகல் அகவிலகல் ஆகும். கவிதைக்கு அப்பாலுள்ள ஏதேனும் ஓர் ஒழுங்கின் அல்லது விதியின் அடிப்படையில் எழும் விலகல் புறவிலகல் எனப்படும்.
அவர் இன்னோரிடத்தில் நிச்சயமான, நிச்சயமற்ற விலகல்கள் பற்றியும் குறிப்பிடுகிறார்.
இதைத்தவிர வேறு தளங்களிலும் விலகலை நாம் பொருத்திப் பார்க்க முடியும. தொடர் இணைப்பு முறையில் ஏற்படும் விலகல் (syntagmatic deviation), தேர்வு அடிப்படையில் ஏற்படும் விலகல் (paradigmatic deviation) என்றும் பொருத்திப் பார்க்கலாம். தொடர் இணைப்பு விலகலில் தொடரமைப்பு முறை விலகலுக்குள்ளாக்கப் படுகிறது.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
என்பது விலகலே.
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
என்பதும் விலகலே. இவை வார்த்தைத் தேர்வு குறித்த விலகல் கள்.
கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்
என்பதும்
எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்
என்பதும் தொடர்இணைப்புமுறை விலகல்கள்.
வடிவப் பிரக்ஞையோடு எழுதப்பட்ட இலக்கியங்களைப் படிப்ப தற்குத் தொல்காப்பியரின் குறிப்புமொழி, வக்ரோக்தி, விலகல் போன்ற கருத்துகள் மிகவும் உதவுவன.
கவிஞன் முயன்று உருவாக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வில கல்கள்தான் சிறப்புப் பெறும். ஞாபக எல்லைகள், கவனச் சிதறல் கள், கவிதைப் பொருளிலிருந்து கவனத்தை விலக்கும் தாவுதல் கள், தவறுகள் போன்றவை விலகல்களாகக் கருதப்படமாட்டா. கவிதை மொழியில் விலகல் என்பது “மூன்றாம் பிறையின் வளைவு போன்றது, நாய்வாலின் வளைவு போன்றதல்ல” என்பர்.
உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்
வழக்கு வழிப்படுத்தல் செய்யுட்குக் கடனே (1163),
ஒருபாற் கிளவி ஏனைப்பாற்கண்ணும்
வருவகைதானே வழக்கென மொழிப (1165)
என்றெல்லாம் வழக்கின் ஆதிக்கத்தைத் தொல்காப்பியர் வலியு றுத்துவது விலகலை மனம்போனபோக்கில் கையாளக்கூடாது என்னும் எச்சரிக்கையாகவே தோன்றுகிறது.
கவிதை மொழியை பிறவகை மொழிப் பயன்பாடுகளிலிருந்து எந்த அளவு சரியான விலகல்களை மிகுதியாகப் பெற்றிருக்கிறது என்பதனால்தான் சிறப்புப் பெறுகிறது. விலகல்கள் என்பது தொடர் அமைப்பு அல்லது சொல் தேர்வு இவற்றில் ஏற்படும் மாற்றங் களை மட்டும் குறிக்காது. நாம் எதிர்பாராது அமைக்கும் அமைப் புத் தேர்வுகளிலிருந்து விலகும் தன்மைகளையும் இச்சொல் குறிக் கும். உதாரணமாக, ஓ ஹென்றி யின் கதைகள் சிறப்புப் பெறுவது அவற்றின் விலகல் தன்மை கொண்ட முடிவுகளால்தான்.
குறிப்பாகச் சில கவிதைக் கூறுகள் பிரக்ஞை பூர்வமாக விலக லுக் குள்ளாக்கப் படும்போது அவற்றை முன்னணிப்படுத்தல் என்று குறிப்பிடுவார் ழான் முகராவ்ஸ்கி என்னும் வடிவவியல் திறனாய்வாளர்.
சாம்ஸ்கி கூறும் ஆழ்அமைப்பு, மேற்புற அமைப்பு என்னும் கருத்துகளும் இரு வகை விலகல்களை நமக்கு இனம் காட்டுவ தாக அமையும். மோசமான அல்லது எளிய கவிதைகளில் மேற்புற அமைப்பு மட்டுமே விலகலுக்குள்ளாக்கப்படுகிறது. ஆனால் நல்ல கவிதைகளில் ஆழ் அமைப்பே விலகலுக்குள்ளா கிறது என்று சொல்லலாம்.
குண்டகர் வக்ரோக்தியை ஆறுவகைகளாகப் பிரிக்கிறார்.
ஃ அசைகளின் சேர்க்கையில் ஏற்படும் வளைவுகள்,
ஃ அடிப்படைச் சொற்களின் பயன்பாட்டில் ஏற்படும் நெளிவுகள்,
ஃ வேற்றுமை வடிவம் ஏற்ற சொற்பயன்பாட்டில் ஏற்படும் நெளிவு கள்,
ஃ வாக்கியப் பகுதிகளில் ஏற்படும் நெளிவுகள்,
ஃ வாக்கியங்களில் ஏற்படும் நெளிவுகள்,
ஃ வாக்கியச் சேர்க்கைகளில் உருவாகும் கவிதையமைப்பில் ஏற்ப டும் சுழற்சிகள்
என்பன அவை. இவை ரஸம், த்வனி ஆகியவற்றையும் வக்ரோக் தியின் எல்லைக்குள் கொண்டு வந்துவிடுகின்றன. இவ்விதம் பார்க்கும்போது
இறைச்சிதானே பொருட்புறத்ததுவே (1175)
இறைச்சியுட் பிறக்கும் பொருளுமாருளவே (1176)
உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பென
கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே (1188)
கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க்கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங்குரைத்தே (1221)
முன்ன மரபின் கூறுங்காலை (1244)
என்னும் நூற்பாக்களில் கூறப்படுவனவும், கூற்றெச்சம், குறிப்பெச் சம் என்றெல்லாம் தொல்காப்பியர் குறிப்பிடுவனவாகிய குறிப்பு மொழிகளும் உறுதியாக வக்ரோக்தியில் அடங்குவனவே என லாம்.
விலகல் என்னும் கருத்தைவிட வக்ரோக்தி தெளிவானதும் குறுகியதும் சுருக்கமானதும் ஆகும். காரணம், இந்தியக் கவிஞர்கள் பெரிதும் மரபுக்குக் கட்டுப்பட்டவர்கள். மரபை மீறித் தன்னிச்சையாகப் படைப்பது என்பதை இந்தியக் கவிஞர்களிடம் காண்பது அரிது. விலகல் என்பது ஒட்டுமொத்தமான இலக்கணமற்ற தன் மைகளையும் ஏற்பிலாத் தன்மைகளையும் குறிக்கின்ற ஒரு சொல்.
விலகல் என்பது ஒரு விதி அல்லது ஒழுங்கு என்பதன் அடிப்படையாகப் பிறப்பது. எது விதியோ, அதை மீறுவதுதான் விலகல். ஆனால் எது விதி என்பதை மொழியில் வரையறுத்துச் சொல்ல முடியாது என்பதுதான் இதிலுள்ள சிக்கல். மக்கள் பேச்சுமொழி அமைவுகளின் எண்ணிக்கையைப் (frequency) பொறுத்து விதி என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சில மொழியிய லாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ரிஃபாத்தர் (கவிதையின் குறியியல் என்னும் பிரபலமான நூ லை ஆக்கிய ஃபிரெஞ்சுமொழித் திறனாய்வாளர்) என்பவர் கவி தையின் சூழலைப் பொறுத்து விதி என்பது நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் விதி என்பதே இலக்கணக் காரர்கள் மனத்தில் செயற்கையாக உருவான ஒன்று என்ற கருத்தும் உண்டு. மக்களின் உண்மையான பேச்சு என்பது சமயத்தில் எந்தவித விதியையும் மீறிச்செல்லக் கூடியது.
மேலும் விலகல் என்பது வடிவம் சம்பந்தமான ஒன்றாகவே மேற்கத்திய விமரிசனத்துறையில் கொள்ளப்படுகிறது. ஆகவே பொருளுக்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படு வதில்லை. ஆனால் சமஸ்கிருத மொழியில் சொல்லப்படும் வக்ரோக்தி என்பதும், தமிழில் சொல்லப்படும் குறிப்புமொழி என்னும் கருத்தும், பொருளுக்கு முக்கியத்துவம் தருவதால் விளைபவை. வெறும் வடிவத் தோற்றங்களை மட்டுமல்ல. இவற்றிலும் தொல்காப்பியர் கூறும் குறிப்பு, வாசக எதிர்வினையை அடிப்படையாகக் கொண்டது என்னும் முறையில் சிறப்பானது.
வக்ரோக்திக் கொள்கையில் சில குறைபாடுகள் இருக்கின்றன. பாமகரும் குண்டகரும் அவர்களது கோட்பாடுகளில் ஸ்வபாவோக் திக்கு இடமே அளிக்கவில்லை. ஆகவே சிலவகைக் கவிதைக ளுக்கு அவர்கள் கொள்கை போதுமானதன்று. கவிச்செயல்பாடு (கவி-வ்யாபார) என்பதாகவே குண்டகர் வக்ரோக்தியை வருணிக் கிறார். கவிதை உருவாக்கமும் நேர்த்தன்மை அற்றதாக்கலும் வக்ரோக்தியும் ஒன்றெனவே அபிநவகுப்தரும் கருதுகின்றார். குணங்களின் வித்தியாசங்களும் அலங்காரங்களின் வித்தியாசங்களும் கவிதைச் செயல்பாட்டில் ஏற்படும் மாறுதல்களுக்கேற்பவை அமைகின்றன என்பதும் அவர் கருத்து.
குண்டகர், ‘கற்பனையின் விளைவே வளைத்தல்-வடிவங்களை அமைத்தல்’ (வக்ர-கவி-வ்யாபார) என்கிறார். கற்பனையின்றிச் சாதாரணமொழிக்கும் கவிதைமொழிக்கும் வேறுபாடில்லை. மேலும் அவர், கற்பனை பற்றிப் பேசிய பத்தொன்பதாம் நூ ற்றாண்டு ஆங்கில ரொமாண்டிக் கவிஞர்கள் போன்றே ‘கற்பனை மேதைமையின் வெளிப்பாடு’ என்கிறார். விலகலைக் கையாள ஒரு கவிஞனுக்குப் போதிய காரணம் இருக்கவேண்டும். கவிதை யின் மையக்கருத்துக்கு உகந்தவற்றை வெளிச்சமிட்டுக் காட்டுவ தற்கே வக்ரோக்தி பயன்படவேண்டும்.
பழங்காலக் கோட்பாட்டின்படி ஸ்வபாவோக்தி, வக்ரோக்தி என்ற இரண்டின் பாற்பட்டதாகக் கவிதைமொழி கருதப்பட்டது. ஆனால் இக்காலப் பின்னமைப்புவாதக் கருத்துகளின்படி எல்லா மொழியும் அணியலங்காரங்களுக்குட்பட்ட மொழியே. இயல்பான மொழி என்பதே கிடையாது.
உவமப்பொருளின் உற்றது உணரும்
தெளிமருங்குளவே திறத்தியலான (1241)
இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்
உவம மருங்கின் தோன்றும் என்ப (1249)
வேறுபட வந்த உவமத் தோற்றம்
கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல் (1253)
ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே (1259)
போன்ற நூற்பாக்களால் தொல்காப்பியர் உவமையை அடிப்படை அலகாகக் கொள்வதைக் காணலாம்.
இக்கால மேற்கத்திய இலக்கியக் கொள்கையின்படி உருவகம் என்பதே அடிப்படை அலகாகக் கொள்ளப்படுகிறது. காரணம், நாம் சிந்திப்பது உருவக அடிப்படையில்தான். உவமை என்பது மொழி யில் செயற்கையாகச் செய்யப்படுவதே.
தமிழ்ப் பண்பின் அடிப்படைத் தன்மை எங்கு நல்ல கொள்கை இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளுதல். திருக்குறளாசிரியரும் இந்த அடிப்படையிலேயே செயல்பட்டுள்ளார். தொல்காப்பியரும் இவ்வாறே கவிதைக் கொள்கையில் செயல்பட்டுள்ளார். இது நல்லதுதான் என்றாலும், கருத்து வளர்ச்சிக்கு இடம்தராது. சமஸ் கிருதக் கொள்கையாளர்கள் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டத னால்தான் கவிதைக் கொள்கை பலவாகக் கிளைத்து வளர முடிந்தது.
இதுவரை நோக்கியவற்றால், தொல்காப்பியரது மொழிபற்றிய சிந்தனைக்கும், சமஸ்கிருத வக்ரோக்திச் சிந்தனைக்கும், மேற்கத் திய நடையியலாளர்களின் விலகல் என்னும் சிந்தனைக்கும், வடிவவியலாளர்களின் முன்னணிப்படுத்தல் என்னும் சிந்தனைக் கும் வடிவ அடிப்படையில் வளைத்துக்கூறல், அழகுபடுத்திக் கூறல், புதுமையாக்கிக் கூறல் என்னும் விதங்களில் ஒப்புமைகள் காணப்படுகின்றன என்பதை அறியலாம்.
ஆனால் விலகல் என்னும் கொள்கை, மொழியில் காணப்படும் எவ்வித மாற்ற்த்திற்கும் உடன்படுவதால் அது மிகப் பொதுவா னது. முன்னணிப்படுத்தலும் வக்ரோக்தியும் மொழியை மாற்றுவதை முதன்மையாகக் கருதுவன. இவை பொருளமைப் பின்மீது போதிய கவனம் செலுத்துகின்றன. தொல்காப்பியரது மொழிக்கொள்கை, வடிவச் செம்மை அல்லது மாற்றத்தைவிட பொருளமைப்பினை வலியுறுத்துவது என்பதோடு வாசக எதிர் வினைக் கொள்கை சார்ந்தது என்பதும் தெளிவாகிறது.

—–


12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்

12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்

“அறிவுஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமாக, அறிவுச்செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக்கொண்டு, சில தியரிகளை உச்சாடனம் செய்துகொண்டு, உஞ்சவிருத்தி செய்கின்ற பிராமண பிம்பத்தின் கைதிகள்” -ஆதவன்

ஒரு காலத்தில் நனவோடை இந்த நாவலில் இருக்கிறது, அந்த நாவலில் இருக்கிறது என்று பேசுவது ஃபேஷனாக இருந்தது. இப்போது தமிழ்த்துறைகளிலும் சிறு பத்திரிகைச் சூழல்களிலும் இந்த எழுத்து லீனியர், இது நான்லீனியர் என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள்!

லீனியர் எழுத்தை ‘நேர்க்கோட்டு எழுத்து’ என்றும் நான்லீனியர் எழுத்தை ‘அ-நேர்கோட்டு எழுத்து’ என்றும் பலர் பயன்படுத்துகிறார்கள். இந்த மொழிபெயர்ப்பு களே தவறு என்று நான் கருதுகிறேன். லீனியாரிட்டி என்பது தொடர்ச்சி. நான்லீனியாரிட்டி என்பது தொடர்ச்சியற்ற தன்மை. தொடர்ச்சி (நேர்க்கோட்டுத் தன்மை) என்பது பல விஷயங்களை உள்ளடக்கியது.

1. ஒரு கதையாடலில் (நேரடிவ்) சம்பவங்களைக் காலக்கிரமப்படி அடுக்கிக்கொண்டு செல்லுதல்.

2. தர்க்கரீதியான கதை வளர்ச்சி.

3. யதார்த்தத்திற்கு மாறுபடா வகையில் சொற்களையும் சம்பவங்களையும் அமைத்தல்.

4. அரிஸ்டாடில் கூறிய தொடக்கம்-வளர்ச்சி-முடிவு என்ற (நேர்க்கோட்டு)பாவனையில் வளர்கின்ற கதைசொல்லல் அல்லது எழுத்துமுறை.

நான்லீனியாரிட்டி (நேர்க்கோடற்ற தன்மை அல்லது தொடர்ச்சியற்ற தன்மை) என்பது,

1. கதை சொல்வது சுற்றிச் சுழன்று தொடங்கிய இடத்திற்கே திரும்ப வருவதாக இருக்கலாம்.

  1. தர்க்கரீதியான தொடக்கம்-வளர்ச்சி-முடிவு என்ற முறையைப் பின்பற்றாததாக இருக்கலாம். தன்போக்கில் எதையோ சொல்லிக்கொண்டே போவதாக அமையலாம்.

3. சுற்றிவளைத்து ஒன்றைப் பிரலாபிப்பதாக (எலிப்சிஸ்) அமையலாம்.

4. தர்க்கரீதியாகத் தொடரும் சம்பவங்களைக் காலமுறைப்படி அமைக்காததாக இருக்கலாம் (நான்சீக்வென்ஷியல்).

இவையெல்லாம் இந்தத் தலைப்பு பற்றிச் சிந்திக்கும்போது மனதில் எழுபவை. நேரடாலஜி (எடுத்துரைப்பியல்) பற்றி எழுதிய ஆங்கில நூல்களில் பொதுவாக லீனியர், நான்லீனியர் என்ற இருமை எதிர்வை நான் காணவில்லை. ஒருவேளை போர்ஹே, பார்த்தெல்மே, ராபேக்ரியே போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளிலிருந்து இந்தச் சொற்கள் எடுக்கப்பட்டிருக்கலாம். நான் அவர்களது படைப்புகளை முழுவதுமாக வாசித்ததில்லை.

என்னைப் பொறுத்தவரை, பின்நவீனத்துவ எழுத்தின் ஒரு பகுதியாகவே, பெருமளவு தொடர்ச்சியறு (நான்லீனியர்) எழுத்து என்பதைக் காண்கிறேன். இதே போல், தொடர்ச்சிமிகு (லீனியர்) எழுத்து என்பதை யதார்த்தவாத மரபின் பகுதியாகவே பெருமளவு பார்க்கிறேன். பெருமளவு என்று சொல்வதற்குக் காரணம், தொடர்ச்சியறு எழுத்து சிறுபான்மை எந்தக்காலத்திலும் இருந்துவந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதுதான். ஆங்கில நாவல்களான ட்ரிஸ்ட்ராம் ஷேண்டியை, ஆஸ் ஐ லே டையிங்-ஐ அல்லது யுலிசிஸை வெறும் லீனியர் எழுத்துகள் என்று சொல்லிவிட முடியாது. இவையனைத்தும் ஏதோ ஒருவிதத்தில், அல்லது சிலவிதங்களில் தொடர் தன்மை (லீனியாரிட்டி)யைத் தகர்த்தவை. அதாவது தொடரா எழுத்துகள்தான். ஆனால் இவை நவீனத்துவ மரபு என்பதில் கொள்ளப்படுகின்றன. தமிழில் நான் பார்த்தவரை, பழங்காலத்தில் தொடர்சியறு எழுத்துகள் தென்படவில்லை. ஆனால் பின்நவீனத்துவத் தன்மையுள்ள எழுத்துகள் இருக்கின்றன. சித்தர் பாடல்களில், காளமேகப் புலவர் கவிதைகளில், செயங்கொண்டாரின் நூலில் எல்லாம் பின்நவீனத்துவ அம்சங்கள் இருக்கின்றன.

தொடர்தன்மை அல்லது தொடர்ச்சியறு தன்மை என்பதை முடிவு செய்வதில் காலம் பிரதான பங்கு வகிக்கிறது. ஒருவகையில் பார்த்தால், சிறுகதைகள் நின்று போன கணம் (ஹால்டட் மொமெண்ட்) ஒன்றைச் சித்திரிப்பவை. ஆகவே பத்துச் சிறுகதைகள் (வெவ்வேறு கருப்பொருள்கள், கதாபாத்திரங்கள் கொண்டவை) அடங்கிய ஒரு தொகுப்பைக்கூட நாம் ஒரு தொடர்ச்சியறு புதினம் (நான்லீனியர் நாவல்) என்று சொல்லிவிடலாம். ஆனால் இப்பார்வை எந்தப் பயனும் தரக்கூடிய தல்ல. சிறுகதைக்கு மாறாக நாவல் என்பது தொடர்ச்சியான காலத்தைச் சித்திரிப்பது. ஆகவே நாவலில் இயங்கும் காலம் என்பது மேலும் மேலும் நாவலாசிரியர்களின் கவனத்திற்குள்ளாகியிருக்கிறது. ஐன்ஸ்டீன் தமது சார்பியலின் பொதுக் கொள்கையில் காலம்-இடம் இவற்றிற்கான தொடர்பை ஆராய்ந்தது முதலாக, காலம் நான்காவது பரிமாணமாகவே ஏற்கப்பட்டு கதை சொல்பவர்களால் ஆராயப்படவேண்டிய தாகிவிட்டது.

ஆரம்ப காலக் கதைகள் எல்லாமே பெரும்பாலும் தொடர்ச்சியாக, வாழ்க்கையில் சம்பவங்கள் நடப்பதுபோன்ற வரிசையிலேயே நிகழ்வுகளைச் சித்திரிப்பவையாக இருந்தன. அதனால் அவை வாழ்க்கைச் சரிதங்கள் என்றே கருதப்பட்டன. கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் போன்ற பெயர்களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். ஆனால் நாளுக்கு நாள் கதாசிரியர்கள், சம்பவங்களுக்கு மாறாக, கதாபாத்திரங்களின் உள்மன வாழ்க்கையைச் சித்திரிப்பது பற்றிக் கவலைகொள்ளத் தொடங்கிய பின்னர், உடல்சார்ந்த காலத்திலிருந்து உள்ளம்சார்ந்த காலம் வேறு என்று உணரத் தலைப்பட்டனர். உடல்சார்ந்த காலம், ஒவ்வொரு இதயத்துடிப்பிலும், நாடித்துடிப்பிலும் பதிவாகியிருக்கிறது. ஆனால் மனம் சார்ந்த காலம் வெவ்வேறு வகைகளில் இயங்குகிறது. கொஞ்சம் அதீத மனப்பான்மை கொண்டவர்கள் காலத்திலிருந்து தாங்கள் விடுபட்டதாகக் கூட உணரமுடியும். அப்படியில்லாதவர்கள்கூட, கனவு போன்ற நிலைகளில் காலம் வெளி பற்றிய சாதாரணக் கருத்தாக்கங்கள் உடைபட்டு விட்ட நிலையை உணரலாம். கனவில் ஒருவன் இறந்தவர்களைச் சந்தித்து அளவளாவலாம். பௌதிக உலகத்துடன் சம்பந்தப்படாத ஒரு எதிர்காலத்திலும் சர்வநிச்சயமாக உலவலாம். அப்படியானால் நிஜமான காலம் என்பதுதான் என்ன? எளிதில் ஒருவரும் விடைசொல்லிவிட முடியாத கேள்வி இது.

பல ஆண்டுகளாகவே உள்மனக் காலத்தை ஆராய்வதில் நாவலாசிரியர்கள் அக்கறை செலுத்திவருகிறார்கள். இவர்களில் மிக முக்கியமான முன்னோடி மார்சல் புரூஸ்ட். பதினைந்து பாகங்கள் கொண்ட பெரிய நாவலான ‘Ada Recherche du temps perdu’ (இந்த நாவல் ஆங்கிலத்தில் Remembrance of things pastஎன மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; உண்மையில் இந்தத் தலைப்பு ‘இழந்த காலத்தைத் தேடுவது’ என்றே அர்த்தமாகும்) என்பதில் காலமாயத் தன்மையை (volatality of time)ஆராய்கிறார். இந்தப் படைப்பு யதார்த்தக் கதை சொல்லல் முறையில் ஒரு பெரிய புரட்சியை உண்டாக்கி விட்டது. யதார்த்தவாதம் என்பது கற்பனாஜால அல்லது அதீதப் புனைவு (fantastic) இலக்கியத்திற்கு பதிலாக, நிஜவாழ்க்கையை உள்ளது உள்ளவாறே உண்மையாக, நேர் மையாகப் படம்பிடித்துக் காட்டுவது என்பதாகத் தன் இலக்கை நிர்ணயித்துக் கொண்டது. ஆரம்பகால ஆங்கில நாவலாசிரியர்களில் ஒருவரான வில்லியம் காட்வின் என்பவர் தமது நாவலுக்கு உள்ளது உள்ளவாறே (Things as they are)என்றே பெயரிட்டிருக்கிறார்.

உண்மையில், பல தமிழ(வ)றிஞர்கள் கூறுவதுபோல, யதார்த்தவாதம் செத்தும் விடவில்லை, அல்லது சலித்துப்போகவும் இல்லை. (நமது தொலைக்காட்சிகளில் பல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வாரங்கள் செல்லும் சோப்-ஆபராக் களை, அவற்றின் மிதமிஞ்சிய பாதிப்பைப் பார்த்தாலே இது தெரியும்.) யதார்த்தவாதம் இரண்டு சங்கடங்களில் மாட்டிக்கொண்டது என்பதுதான் உண்மை. முதல் சங்கடம், நாம் ஒருபோதும் வாழ்க்கையை உள்ளது உள்ளவாறே படைக்க இயலாது என்பது. யதார்த்த நாவலாசிரியனும்கூட யாருடைய வாழ்க்கையையும் உள்ளது உள்ளபடி படைத்துவிடுவதில்லை. எண்ணற்ற சம்பவங்களில் ஏதோ சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து விளக்கித்தான் படைக்கவேண்டியிருக்கிறது. (ஆகவே யதார்த்தவாதம் என்பதோ, அதன் சார்பான நேர்க்கோட்டுத் தன்மை என்பதோ உண்மையில் கிடையாது, எல்லாமே நான்லீனியர் எழுத்துதான் என்று ஓர் எல்லைக்குச் சென்று வாதிப்பவர்கள் இருக்கிறார்கள்.)

எந்த எழுத்துக்கும் இரண்டு அடிப்படைகள் இருக்கின்றன. ஒன்று காலம், இன்னொன்று வெளி. வெளியையும் காலத்தையும் நம்மோடு இணைக்கக்கூடியது மொழி. அது எப்போதுமே செயற்கையானதாகவும் சடங்கானதாகவுமே இருக்கிறது. நாம் பேசியாக வேண்டும், எழுதியாக வேண்டும் என்றால் இந்தச் சடங்கில் ஈடுபட்டாக வேண்டும். இங்கே யாரும் இதுதான் சரி, இது தவறு என்று சொல்லக்கூடிய ‘அத்தாரிட்டி’ கிடையாது. மொழி என்னும் அமைப்பு, ஒவ்வொருவருடைய பேச்சு அல்லது எழுத்திலுமே குறுக்கீடு எய்தி, தன் குறியமைப்புகளை மாற்றிக்கொண்டே செல்கிறது. மனிதன் தான்தான் மொழிக்கு எஜமானன் மாதிரியும், அதை வடிவமைப் பவன் மாதிரியும் நடந்துகொள்கிறான். ஆனால் உண்மையில் மொழிதான் நமக்கு எஜமானனாக இருக்கிறது. இது இரண்டாவது சங்கடம். இன்றிருக்கும் எழுத்தாளர்கள் பலரும் இந்த உண்மையை உணர்ந்துதான் இருக்கிறார்கள். பழைய எழுத்தாளர்களிடம் தான் மொழிக்குத் தாங்களே எஜமானர்கள், தாங்கள்தான் படைப்பாளர்கள் என்ற எண்ணம் இருந்தது.

ஈரோட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் கௌதம சித்தார்த்தன் என்ற எழுத்தாளர் “நான்தான் தமிழில் புதுவகை எழுத்தை உருவாக்கினேன்” என்று பலமுறை வலியுறுத்திச் சொன்னார். புதுவித எழுத்து என்பதன் அடிப்படையையே அவர் புரிந்துகொள்ள வில்லை என்பதைத்தான் இம்மாதிரிக் கூற்றுகள் காட்டுகின்றன. மொழிகள்ளமின்றி யதார்த்தத்தைப் பிரதிபலிக்கக்கூடியது, அதை நாம் எந்த வகையிலும் பயன்படுத்த லாம் என்ற தவறான நம்பிக்கையில்தான் இம்மாதிரிக் கூற்று எழுகிறது. யாரும் ஒரு புதுவித எழுத்தை உருவாக்கிவிட முடியாது என்பதுதான் நிஜம். எல்லாமே always alreadyஇருந்தவற்றின் மாற்றுகள், மாற்றிப் பொருத்தல்கள், சேர்க்கைகள். இவை புதிய எழுத்தாக உருக்கொள்கின்றன. இதேபோல விமரிசகனுக்கும் எழுத்தாளனுக்கும் வேற்றுமையில்லை என்பதும் இங்கே நினைவில் வைக்கவேண்டியது. லீனியர், நான்லீனியர் இருவகை எழுத்துகளுக்கிடையிலான அடிப்படை வித்தியாசமே எழுத்தின் தன்மை பற்றிய இந்த போதம்தான்.

ஒரு குறித்த வடிவம், தனது நோக்கில் சிறந்த வடிவம் என்பதை அமைக்க, எழுத்தாளன் எண்ணற்ற தகவல் குவியல்களில் ஏதோ சிலவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. கலை என்பது இப்படித் தேர்ந்தெடுத்து அமைக்கும் செயற்கையான ஒன்றுதான். எழுத்தைப் பிரக்ஞையோடு கூடிய நெறிப்படுத்தலாகப் பார்க்காமல், ரொமாண்டிக் எழுத்தாளர்கள் கூறியதுபோலத் தானாகவே பீறிட்டு வெளிவருவதாகக் கருதினாலும், வாழ்க்கை போல எவ்வித ஒழுங்குமுறையும் அற்ற ஒன்றாக எழுத்து இல்லை. கலை என்பது வாழ்க்கையின் நிஜமான பிரதிபலிப்பு அல்ல. வாழ்க்கை போலக் கலை ஒருபோதும் முரண்கள் கொண்டதாக (paradoxical), குழப்பமான தாக, சிக்கலானதாக, ஜீவத்துடிப்புள்ளதாக இல்லை. ஆனால் இப்படியெல்லாம் கலையை அல்லது எழுத்தை மேலும் சற்றே மாற்றியமைப்பதற்குத்தான் நான் லீனியர் வடிவம்.

லீனியர் எழுத்தின் இலக்கு-உள்ளதை உள்ளவாறே படைத்தல் என்பது-கானல் நீராகிப் போய்விட்டது. லீனியர் எழுத்தும் illusion அல்லது இல்லாததற்கு ஓர் ஆசிரியத் தன்மை அல்லது ஆதிக்கத்தன்மை தரும் முயற்சிதான். உள்ளதை உள்ளவாறே கூறுவதற்கும் (அல்லது கூறுவதுபோலக் காட்டிக்கொள்வதற்கும்) எழுத்து எத்தனையோ கற்பனைக் கருவிகளைக் கையாள வேண்டியிருக்கிறது. வாழ்க்கை போன்றதொரு இலக்கிய மாதிரியை அது உருவாக்கிவிடவில்லை. வாழ்க்கையைப் புரிந்துகொள்ள ஒரு கற்பனையான மாதிரியை, ஒரு சட்டகத்தை அது உருவாக்கித் தருகிறது. அவ்வளவு தான். சிலருக்கு இந்தச் சட்டகமே போதுமானது. சிலருக்குப் போதாது. போதாதவர்கள் வெவ்வேறு வகை எழுத்துகளை முயற்சி செய்துபார்க்கிறார்கள்.

ஓர் உதாரணத்தால் இதை விளக்கமுடியுமா பார்ப்போம். நியூட்டன் கண்டுபிடித்த இயக்கவிதிகளைப் பயன்படுத்தும் லீனியர் (அல்லது பழைய) இயக்கவியல் இருக்கிறது. இன்று விண்வெளியில் ராக்கெட் போன்றவற்றைச் செலுத்துவதற்கு இவ்விதிகள் பயன்படவில்லை. இதனால் இன்று நியூட்டனின் இயக்கவிதிகள் இன்று இல்லாமற்போய்விட்டன அல்லது பயனற்றவை என்று கூறிவிடமுடியாது. இன்றும் நம் அன்றாட வாழ்க்கையில் நடப்பதற்கு, ஓடுவதற்கு, பஸ்கள், லாரிகள் முதலிய இயங்குவதற்கு, நியூட்டனின் இயங்கியல்தான் பயன்படுகிறது. ஆனால் நியூட்டன் காலத்தைவிட இன்று நமது வானியல் அறிவும், மின்னணுவியல் அறிவும் பெருகியிருக்கிறது. மின் துகள்களின் இயக்கங்களை அறியவோ, ராக்கெட்டுகளின் கற்பனைக்கெட்டா வேகங்களைவைத்துக் கணக்கிடவோ அல்லது பிரபஞ்சத்தின் நட்சத்திரங்களிலிருந்து வரும் கதிர்களின் வேகங்களைக் கணக்கிடவோ நியூட்டனின் இயக்க விதிகள் பயன்பட வில்லை என்று அதனைக் குறைகூறிப் பயனில்லை. அதற்குப் பயன்படுத்த வேண்டிய சட்டகம் வேறு. ஐன்ஸ்டீனிய சட்டகம் அல்லது குவாண்டம் இயங்கியல் சட்டகம். அதுபோலத்தான் சிலவகை எழுத்துகளுக்கு யதார்த்தச் சட்டகம் போதும். சிலவற்றிற்குப் போதாது. ஒன்றின் வருகையினால் இன்னொன்று காலாவதியாகிவிட்டது என்ற எண்ணம் தவறு. இரண்டின் களங்களும் அல்லது தளங்களும் வெவ்வேறு. ஆகவே இருவிதமான எழுத்தாளர்களுக்கும் அல்லது எழுத்து முறைகளுக்கும் முரண்பாடுகளோ மோதல்களோ தேவையில்லை. சிலருக்கு இறுமாப்பும் தேவையில்லை. மொழியின், காலப் பிரக்ஞையின் சிக்கலான தன்மையை உணர்ந்த எழுத்தாளர்கள், எப்படி வாழ்க்கையை உருவாக்கிக் காட்டுவது என்று ஆராயும்போதுதான் பின்நவீனத்துவ எழுத்தும் நான்லீனியர் எழுத்தும் வருகின்ற.ன.

தொழில் நுட்பம் இன்று ஒரு பெரிய பிரச்சினை ஆகியிருக்கிறது. உயர்கலை-தாழ் கலை ஆகியவற்றிற்கிடையிலான எல்லைக்கோடு நவீனத்துவ காலத்தில் பத்திரமாக இருந்தது. இன்று அது அழிந்துகொண்டிருக்கிறது. இந்த எல்லைக்கோடு அழிந்துபடுவ தைலூகாச், அதார்னோ, பிரடெரிக் ஜேம்சன், டெரி ஈகிள்டன் போன்றவர்கள் எதிர் மறையான, மோசமான விளைவாகப் பார்க்கிறார்கள். வால்டர் பெஞ்சமின், பிரெஹ்ட், ஹேபர்மாஸ் போன்றவர்கள் உடன்பாடான விளைவாகக் காண்கிறார்கள். எதிர்மறையான விளைவாகக் காண்பவர்களுக்கு, உயர்கலை அல்லது அவண்கார்டே கலை என்பது பயனுள்ள முரண்பாடுகளை வளர்க்கும் ஒன்றாகத் தோன்றுகிறது. தாழ்கலை அல்லது ஜனரஞ்சகக் கலை என்பது முதலாளித்துவத்துடன் கூட்டுச்சேர்ந்து விடுகிறது. பொதுவாக நவீனத்துவம், வெகுஜனக் கலாச்சாரத்துக்கு எதிராகவே இயங்கிவந்தது. இப்போது பின்நவீனத்துவம், இந்த நிலைப்பாட்டைச் சாடுகிறது. ஒரு புதிய வெகுஜன வாசகர்களின் பிறப்பு பழைய வகுப்புக் கட்டுமானங்களைத் தகர்த்து விடும் என்றார் ஹேபர்மாஸ். தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் இது நடைபெறவேயில்லை.

லியோடார்டைப் பொறுத்தமட்டில், ஒரு படைப்பு பின்நவீனத்துவம் சார்ந்ததாக இருந்தால்தான் அது நவீனத்துவப் படைப்பாகவும் இருககமுடியும், பின்நவீனத்துவப் படைப்பாகவும் இருக்கமுடியும். பின்நவீனத்துவம் புதிய புதிய வெளிப்பாடுகளைத் தேடக் காரணம், அதனால் ஏற்படும் மகிழ்ச்சிக்காக அல்ல, வெளிப்படுத்த இயலாமை பற்றிய வலுவான பிரக்ஞையை வாசகர் மனத்தில் ஏற்படுத்தத் தான். ஒரு பின்நவீனத்துவக் கலைஞன், முன்கூட்டியே அமைந்த விதிகளுக்கெனப் படைப்புகளை உருவமைக்க இயலாது. முன்கூட்டியமையும் கூட்டு மனப்பான்மை, மொழி விளையாட்டுகளின் வெவ்வேறுபட்ட தன்மையை அழித்துவிடுகிறது. பிரபலமான, ஜனநாயகப்பட்ட கலைகள் என்பவற்றின் அர்த்தம் இப்போது மாறிவிட்டது. இவை இப்போது பாப் கலைகளுக்குரியவை ஆகிவிட்டன. பாப் கலை, ஒரு வணிகக் கலை. தனக்குரிய வாசகர்/இரசிகர் கூட்டத்தை அது தானே உற்பத்தி செய்துகொள்கிறது. இதனை மக்கள் கலை என்று கூற முடியாது.

தொடர்ச்சியறு எழுத்து என்பதைப் பின்நவீனத்துவ எழுத்தின் ஒரு பகுதியாகக் காணலாம் என்று முன்பு கூறினேன். பின்நவீனத்துவப் படைப்பு எதுவாயினும்,

1. சுயபோதத்தின் அல்லது சுயவிமரிசனத்தின் அரசியல் பரிமாணங்களை உணர்தல்.

2. சுயத்தையும் வரலாற்றையும் சிக்கலுக்குட்படுத்தி ஒரு சிந்தனைக்கட்டாகக் காணல்.

3. பிரதியையும் வாசகர்களையும் மையத்திலிருந்து வெளியேற்றுதல்.

ஆகியவற்றைச் செய்யவேண்டும். இவற்றைச் செய்யவில்லை எனில், ஒன்றைப் பின்நவீனத்துவ எழுத்தாகவோ மையமழிக்கும் எழுத்தாகவோ தொடர்ச்சியறுக்கும் எழுத்தாகவோ கணிக்க இயலாது. தங்களைப் பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் என்று தாங்களே வருணித்துக்கொள்ளும் சில எழுத்தாளர்கள் வாசகர்களை/விமரிசகர்களை இழிவுபடுத்தும் அராஜகம் தமிழில் கவனிக்கவேண்டிய ஒன்று. நாகார்ஜுனன், தனது சிறுகதையில் (கர்நாடக முரசு நூலில்) “உங்களுக்குப் பிடித்தது: (அ) எனது விந்து (ஆ) உங்களது விந்து” என்றவாறும், பிரேதா-பிரேதன், “You critic, you’re sucking my cock”என்றும் Zero Degreeயில் சாருநிவேதிதாவும் வாசக/விமரிசகர்களை அவமானப்படுத்து கின்றனர். விமரிசகன், படைப்பாளனைத் தொடர்பவன் என்பதுதான் இங்கே கருத்து. பேசுவது மானம், இடை பேணுவது காமம் என்று கும்பகருணன் இராவணனை விமரி சித்தது போல நாமும் இவர்களைப் “பேசுவது போஸ்ட்மாடர்னிசம், இடை பேணுவது நாலாந்தரப் பிற்போக்குத்தனம்” என்று சொல்லலாம்.

தொடர்ச்சியறு எழுத்துகள், தங்களிடையே உள்ள சுயமுரண்களை முன்னிலைப் படுத்தியே தங்களைக் குறிமீட்புச் செய்துகொள்ள இயலும். Illusion அல்லது மாயை என்பதற்கு ஃபாசிசம் கெட்ட பெயரை உருவாக்கியிருந்தது. பின்நவீனத்துவ அல்லது தொடர்ச்சியறு எழுத்து வரும்போது மாயை என்ற அவப்பெயர் அழிந்து விடுகிறது. காரணம், சிலவிதமான மாயைகளின்றி வாழ்க்கையில்லை என்பதையும் பெருமளவு மாயைகளால் ஆனதே வாழ்க்கை என்பதையும் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம்.

ஒரு தன்னிலையைச் சமூகக் கட்டமைப்பு உற்பத்தி செய்கிறது. இந்த உற்பத்தியில் மாயைக்குப் பெரும் இடம் இருக்கிறது. ஆகவே அழகியலும் அரசியலும் எல்லைகள் அழிந்து ஒன்றுக்குள் மற்றொன்றாக ஊடுருவி இருப்பதைத் தொடர்ச்சியறு எழுத்து எளிதாக உணர்த்துகிறது. மேலும் மாயை இன்றி யதார்த்தத்தை நாம் உணர முடியாது. ஆகவே மாயையிலிருந்து தப்பிக்கவும் இயலாது. பெருங்கதையாடல்கள் இப்போது பயனற்றுப் போய்விட்டன என்கிறார்கள். மாயை என்பது போலியான அல்லது தவறான பிரக்ஞை அல்ல. சுயம் என்பதே முழுக்க முழுக்க illusionதான் என்று காட்டியுள்ளனர் அறிஞர்.

இப்போது எழுத்து என்பது ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டில் நாம் ஈடுபடக் காரணம், இந்த விளையாட்டிற்கான விதிமுறைகளை நாம் வகுப்பதற்குத்தான். விதிமுறைகளை ஏன் வகுக்க வேண்டும்? ஏன் விளையாட வேண்டும்? யார் யார் எந்த எந்த நோக்கங்களோடு விளையாட வருகிறார்கள் என்று அறிந்துகொள்வது நமக்குத் தேவையாக இருக்கிறது. ஆகவே நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து பின்நவீனத்துவப் பிரதிகள் விளிம்புக் கலாச்சாரத்தை நோக்கித் திரும்புகின்றன.

நவீனத்துவப் பிரதிகள் சுயபிரக்ஞையோடுகூடிய பல்பிரதித்துவம் கொண்டவை. அவை மற்ற பிரதிகள் அல்லது எழுத்துகளுக்கான எதிர்விளைவாக உருவானவை. உதாரணமாக, தனக்கு முந்திய எழுத்துகளைத் தன்னகத்தே பொதிந்துள்ள ஒரு திசுவாகத்தான் பாழ்நிலம் (Wasteland – T.S.Eliot) கவிதை அமைந்திருக்கிறது. தனக்கு முந்திய பிரதிகள், கவிதைகளின்gestation, எஸ்ரா பவுண்டின் விமரிசனக் கடிதங்கள் போன்ற யாவற்றிற்குமான எதிர்வினை அது. மரபான குரல்கள், இன்னவென்று பிரித் துக் காணமுடியாத பல குரல்கள், டி.எஸ். எலியட்டின் வினையூக்கத்தால்(catalysis) உந்தப்பட்டு, குறுக்கீடு செய்யப்பட்டு, இந்தப் பிரதியின் கூட்டுப் பொருளை உருவாக்குகின்றன. மரபுக்கும் தனித்திறனுக்குமான இயங்கியல் தொடர்பு இதுதான்.

தமிழில் உச்சபட்ச நவீனத்துவ எழுத்துகள் உருவாகவில்லை என்பது உண்மை. ஆகவே லியோடார்டின் கருத்துப்படி, பின்நவீனத்துவ எழுத்துகளும் உருவாகவில்லை என்பது உண்மை. தமிழின் உச்சபட்ச நவீனத்துவ எழுத்தாகக் கணிக்கக்கூடியவை, சி. மணியின் நரகம், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் போன்றவைதான். யுலி சிஸ் அல்லது சவுண்ட் அண் தி ஃப்யூரி (வில்லியம் ஃபாக்னர்) போன்ற படைப்புகளோடு இவற்றை வைத்து மதிப்பிட முடியுமா என்று யோசியுங்கள். எழுத்து எப்போதுமே எதிர்வினைதான். இருக்கும் படைபலத்திற்கு எதிரான சமபலத்துடன் அல்லது அதற்கு மேற்பட்ட பலத்துடன் அணிதிரளுதல் ஒவ்வொருமுறையும் நிகழ்கிறது. புருஷோத்தமனின் படைபலத்திற்கு எதிராக அலெக்சாண்டரின் படை நின்றதுபோல. அல்லது இரண்டாம் புலிகேசியின் படைபலத்திற்கு எதிராக நரசிம்ம வர்மனின் படை திரண்டதுபோல. அல்லது உடலில் புகுந்துவிட்ட பாக்டீரியாவிற்கு எதிராக வெள்ளை அணுக்கள் அணிதிரள்வதுபோல. முந்திய மரபு வலுவாக இல்லாத பட்சத்தில் அதற்கு எதிராகத் திரளும் மரபும் வலுவானதாக இருக்க இயலாது. ஜே.ஜே, சில குறிப்புகளோ அல்லது விஷ்ணுபுரமோ வலுவாக இல்லாத பட்சத்தில் சரித்திரத்தில் படிந்த நிழல்களோ, சீரோ டிகிரியோ மட்டும் எப்படி வலுவான எழுத்தாக நிற்கும்?

தமிழில் தொடர்ச்சியறு எழுத்தைப் பற்றிப் பேசியவர்களால் செய்யமுடிந்தது, மாயாஜால யதார்த்தத்தைக் கொண்டுவந்து புகுத்தியதுதான். பின்நவீனத்துவ எழுத்தின் இன்னொரு பகுதியாகக் கணிக்கப்பட வேண்டியது மாஜிக்கல் ரியலிசம் என்று சில விமரிசகர்கள் கருதுகிறார்கள். (இதற்கு எதிர்க்கருத்தும் உண்டு.) ஒருபக்கம் பார்த் தல்மேயையும் அலன் ரோபே கிரியேவையும் பற்றிப் பேசிக்கொண்டே தமிழ் எழுத்தா ளர்கள் பின்பற்றியது என்னவோ மார்க்விஸையும் சல்மான ருஷ்டியையும்தான். அதையும் இயல்பற்ற கடினமானதொரு நடையில். உதாரணத்திற்குத் தமிழவனின் ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள் முதலிய நாவல்கள். இவை தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றிய விமரிசனங்கள், இவற்றில் படைப்புத் தன்மை இருக்கிறது என்றாலும், பெருமளவு போலிசெய்தல், செயற்கையான இயல்பற்ற கடினமான நடை என்பவை இவற்றை இரண்டாம் தரமானதாக்கி விடுகின்றன. மார்க்விஸ் ஐந்து தலை முறைகளின் கதையைச் சொன்னால் நான் மூன்று தலைமுறைகளின் கதையையேனும் சொல்லவேண்டும் என்று நினைக்கிறார் தமிழவன். நமது பின்நவீனத்துவப் படைப்பா ளிகள், பிரதியையும் வாசகனையும் மையத்திலிருந்து வெளியேற்றுதல் என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள். படைப்பின் மையத்திலிருந்து புறந்தள்ளுவதற்குப் பதிலாகப் படைப்பிலிருந்தே புறந்தள்ளிவிட்டார்கள்.

தர்க்கரீதியான கதைத் தன்மையிலிருந்து ஜால யதார்த்தம் மாறிவிடுவதில்லை. ஒரு allegorical அல்லது குறியீட்டு ரீதியான அர்த்தம் கொள்ளலை அது வரவேற்கிறது. ஆகவே ஜாலயதார்த்தக் கதைகளை நாம் நான்லீனியர் என்று கொள்ளமுடியாது. சில் வியாவின் பிரம்மனைத் தேடி தொகுப்பிலுள்ள கதைகளும் அஸ்வமேதாவில் அவர் எழுதிய மர்மக் கதையும் கதைசொல்லும் முறையில் புதுமைகளைப் புகுத்தவில்லை. காலரீதியாக முன்னும்பின்னும் செல்லுதல்(temporal oscillation)என்பதற்கு மாறாக, இடரீதியாக இடைவெளிகளை உண்டாக்குதல் (spatial breaks) போன்ற முயற்சிகள் அவர் கதைகளில் இருந்தன. காலவரிசைப்படி சம்பவங்களின் அமைப்பும், சொற்கள் தம்மளவிலே சிரமமின்றிப் பொருள்கொள்ளும் அமைப்பும் லீனியர்வகை எழுத்தாளர்களுக்கு முக்கியமானவை. இவை மாறாதவரை, மாற்றப்படாதவரை, நான்லீனியர் எழுத்துக்குத் தமிழில் இடமில்லை. ஆங்கிலத்தில் இம்மாதிரி மாற்றங்களைச் செய்து காட்டியவர்களில் மிக முக்கியமானவர் ஜாய்ஸ். யுலிசிஸ் நாவலின் காலப் பிரக்ஞை பழங்கிரேக்க கால முதலாக, நவீன காலம் வரை விரிவடைவதைக் காணலாம். ஆனால் அக்கதை சொல்லப்படு கால அவகாசமோ ஏறத்தாழ 22 மணிநேரம்தான். சொற்களை மாற்றியும் சிதைத்தும் வளைத்தும் இணைத்தும் அவர் செய்யும் ஜாலங்கள் நமக்கு வியப்பூட்டுகின்றன. அவை எழுத்து வெளிப்பாட்டில் பெரும் மாயங்களைச் செய்கின்றன. சில்வியாவும் நாகார்ஜுனனும் தங்களுக்குச் சிரமமின்றி, இதுபோல் செய்ய ஓரிரு கதைகளில் முயன்றிருக்கிறார்கள். இது எவ்வகையிலும் நான்லீனியர் எழுத்தின் வருகைக்குப் போதாது.

சாரு நிவேதிதாவும் கதைசொல்லும் முறையில் பெரும்பாய்ச்சல்கள் எதையும் நிகழ்த்தவில்லை. அடிக்கடி பார்வைக்கோணத்தையும் கதை சொல்பவனையும் மாற்றுகிறார், அவ்வளவுதான். சாரு நிவேதிதா சாதித்திருப்பதெல்லாம் taboo என்று கருதப்படும் சில கருத்துகளையும் சொற்களையும் பாலியல் பிறழ்வுகளையும் எழுத்தில் கொண்டுவந்ததுதான். பாலியல் விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசக் கூடாது என்ற தடை தகர்க்கப்படவேண்டியதுதான். ஆனால் அது மட்டுமே தொடர்ச்சி யறு தன்மையையும் பின்நவீனத்துவத் தன்மையையும் நாவலுக்கு அளித்துவிடுமா? நான்லீனியர் எழுத்து என்ற சொல் தமிழில் பலமுறை கையாளப்பட்டிருப்பினும், நான் லீனியர் நாவல் என்று சொல்லுமாறு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் சாரு நிவேதிதாவின் பேன்சி பனியன் முதலாக பிரேதன் பிரேதாவின் புதைக்கப்பட்ட பிரதிகள் வரை மெடாஃபிக்ஷன் என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொண்டு வந்திருக்கின்றன. மெடாஃபிக்ஷனின் அடிப்படைப் பண்புகளாக, நையாண்டி அடிப்படையிலான பல்பிரதித்துவம், வரலாற்றுடனான தொடர்பு, சுயதகர்ப்பும் விமரிசனமும் என்பவற்றைச் சொல்லலாம். இவை இந்த நாவல்களில் எந்த அளவு இருக்கின்றன என்பதை வாசகர்கள் தேடிப் பார்ப்பது நல்லது. அமெரிக்காவில் சர்ஃபிக்ஷன் என்றும், பிரான்சில் நியூஃபிக்ஷன் என்றும் வழங்கப்பட்ட மெடா ஃபிக்ஷன் எழுதுவது ஏறத்தாழ எண்பதுகளிலேயே கடும் விமரிசனத்துக்குள்ளாகி செல்வாக்கிழந்தும் போயிற்று.

சாரு நிவேதிதாவின் நாவல்களில் மையமழிவு என்பது அறவே இல்லை. மிக வலுவானதொரு ஈகோ உட்கார்ந்து அவர் எழுத்தை ஆட்சிசெய்கிறது. அவரது இரு நாவல்களுமே ஆண்மையப்பட்ட, அல்லது செக்ஸை ஆணின் பார்வையிலிருந்து ஒரு தரப்பாக வெளிப்படுத்துகின்ற நாவல்கள்தான். ஒரு பெண்ணின் பார்வைக்கு மாறவோ இடம்தரவோ அவரது வலுவான ஈகோ மறுக்கிறது. அப்படியிருக்கும்போது மையமழிப்பு, விளிம்புத்தன்மை கொள்ளல், காலத்தைப் புரட்டுதல் எல்லாம் எங்கே இயலும்? சாரு இங்கே செய்யும் அல்லது செய்ததாகச் சொல்லும் புரட்சியை எத்தனையோ ஆங்கிலப் பாலியல் நாவல்களில் பார்த்தாகிவிட்டது. அவ்வளவு ஏன்? யுலிசிஸே ஒருவகையில் முழுக்க முழுக்கப் பாலியல் நாவல் என்று சொல்லக்கூடியது தானே?

“Postmodern art is particularly a didactic art; it teaches us about those counter currents, if we are willing to listen”என்கிறார் பிரடெரிக் ஜேம்சன். நம்மூர் எழுத்து ஆளர்களோ, நாங்கள் immoralists என்று பறையடித்துக்கொள்கிறார்கள். Focalized, closed. centralizedஅமைப்புகளை உடைக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் விதிகள் ஏதுமற்ற அராஜகத்திற்குப் பெயர் பின்நவீனத்துவம் அல்ல. அவ்விதம் எழுதுவதுதான் தொடர்ச்சியறு எழுத்துமல்ல.

பிரேம் பிரேதாவிற்கு அதீதம் என்பதன்மீது காதல். தமிழவனுக்கு ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள் என்றால் இவர்களுக்கு எழுதப்பட்ட மனிதர்கள். வெளிப்பாட்டில்கூடப் புதுமையில்லை. அதீதம் பற்றி எமர்சன் பாணியில் அல்லது நம்மூர் பிரமீளின் பாணியில் எழுதுவதற்கு மாறாக, வெறும் பாலியல் சார்ந்த சொற்களில் தங்கிவிட்டார்கள். அதீதமும் ஒரு தப்பிப்புத்தான். தப்பிப்பு இலக்கியத்திற்குப் பெயர் பின்நவீனத்துவ, தொடர்ச்சியறு எழுத்தா? அதீதமான ரொமாண்டிக் கற்பனைகள் தான் பிரேம் பிரேதாவின் கிரணம் கவிதைகள் தொடங்கி புதைக்கப்பட்ட பிரதிகள் வரை காணக்கிடக்கிறது.

நான்லீனியர் எழுத்தைப் பற்றிப் பேசுபவர்களில் முக்கியமானவர் கோணங்கி. (உப்புக்கத்தி நூலின் முன்னுரையிலும், கல்குதிரை இதழ்களிலும் பார்க்க.) அவருடையதும் நான்லீனியர் எழுத்துக்கான அடிப்படைகளைக் கொண்டிருக்கவில்லை. அவரது எழுத்துகள் அனைத்திலும் காணப்படுவது ஒருவித nostalgia. இழந்த காலத்தைப் போற்றுதல், பாராட்டுதல், அதற்காக ஏங்குதல் என்பது. அவர் கதை சொல்லும் பாணி, நீளநீள வாக்கியங்களை அமைத்து அவற்றை முன்பின்னாக்குவது (invertசெய்வது). இந்த ஒரே பாணி, கதை சொல்லலில் புதுமையை ஏற்படுத்துவதற்கு மாறாகப் படிப்பவர்களுக்குப் பெரும் சலிப்பைத் தோற்றுவிக்கிறது. மற்றப்படி அவரது நிறப் படிமங்கள், விலங்குப் படிமங்கள், தாவரப் படிமங்கள் அனைத்திற்கும் எளிதான ஒரு உருவக வாசிப்புத் தர இயலும். ஆக, கோணங்கியின் எழுத்தும் தமிழில் ஒரு முன்னேற்றத்தை உருவாக்கவில்லை.

மேலும் அண்மையில் கோணங்கி, ஒரு நண்பருக்குக் கொடுத்த குறிப்பில், “பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமத்தில் 3, 5, 6, 2, 7, 9, 1, 4, 8 என்ற வரிசைப்படி கதைகளைப் படியுங்கள், உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தையில் 2, 5, 6, 7, 8, 10, 9, 1, 3, 4, 11 என்ற வரிசையில் கதைகளைப் படியுங்கள். அப்போது கதைகளை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்” என்று சொல்லியிருக்கிறார். அர்த்தக் கருவறையில் நுழைவதற்குப் பூசாரி கொடுத்த நுழைவுச்சீட்டு இது. கோணங்கி இந்த வரிசையிலேயே ஏன் தமது கதைகளை வெளியிட்டிருக்கக்கூடாது? அவரது புதிர்ப் பாதைகள் அழிந்துபோய்விடும் என்ற பயமா? அல்லது வாசகனை மிரட்டும் முயற்சியா? இம்மாதிரிப் பல போலித்தனங்கள் இன்று புத்திஜீவித்தனமாக உலா வருகின்றன.

பழைய தொன்மங்களைச் சேகரித்து வெளியிட்டுவிட்டாலோ, நாட்டார் கூறுகளைப் பயன்படுத்திவிட்டாலோ அது ஆதிக்கத்திற்கு எதிரான பின்நவீனத்துவ எழுத்தாகிவிடுகிறது என்பது நம் எழுத்தாளர்கள் மனங்களில் உள்ள ஒரு தவறான கருத்து. இன்று நிலவும் புராணிகங்களில் எந்த அளவு ஆதிக்கத் தன்மையும் ஆபத்தும் இருக்கின்றனவோ அதே அளவு பழைய புராணிகங்களிலும் உண்டு. உதாரணமாக, ஒரு கோடாங்கி குறிசொல்வதைப் பாராட்டி அது ஏதோ ஒரு உன்னதமான விஷயம் போல எழுதுகிறார் கௌதம சித்தார்த்தன். அவரது அறியாமைதான் இதில் வெளிப்படுகிறது. இன்று எப்படிச் சில சமூகச் சட்டகங்களை நாம் மீறமுடியாதோ, அதுபோல பழையகாலத்திலும் சில சட்டகங்கள் இருந்தன. உதாரணமாக, ஒரு கோடாங்கி அல்லது பூசாரி சொல்வதை அக்கால கிராம சமூகம் மீறமுடியாது. ஒரு பெரும் ஆதிக்கச் செயல்பாடு அது. அதை நமது கலாச்சார வரலாறாகப் பதிவுசெய்யலாம். ஆனால் அதைச் சிலாகிப்பதற்கு ஒன்றுமில்லை. இதேவிஷயம் கோணங்கிக்கும் பொருந்தும். பழைய வரலாற்றைப் பதிவுசெய்வது வேறு, பாராட்டுவது வேறு. திராவிட இயக்கத்தி லேயே இந்த முரண்பாடு ஏற்பட்டுப் போனதால்தான் அது பழமை பாராட்டும் ஓர் இயக்கமாகத் தேங்கிப்போயிற்று. அதுமட்டுமல்ல, தலைமை வழிபாட்டை மிதமிஞ்சி வளர்க்கும் ஓர் இயக்கமாகவும் மாறிப்போயிற்று.

ஆகவே புதியதொரு எழுத்தை உண்டாக்கியதாகக் கருதப்படும் நமது எழுத் தாளர்கள் செய்திருப்பதெல்லாம், வெளியீட்டு உத்தி முறைகளில் சில புதுமைகளே அன்றி, உள்ளடக்கத்தில் எவ்வித மாற்றத்தையும் அல்ல. இவை புதுவித எழுத்துகளாகவும் இல்லை. புதிய எழுத்துகள் போலத் தோற்றமளிக்கின்ற இவை, படிக்கும்போது பெரும் எரிச்சலைத்தான் உண்டாக்குகின்றன. புதுக்கவிதை என்று பெயர்வைத்துக் கொண்டு பழங்கந்தல்களையே மேத்தா வைரமுத்து வகையறாக்கள் வெளிப்படுத்தும் போது நமக்கு ஏற்படும் சோர்வும் ஏமாற்றமும் மேற்கண்ட புதுவகை எழுத்தை ஆளும் எழுத்தாளர்களைப் படிக்கும்போதும் ஏற்படுகிறது. புதுவகை எழுத்துகளுக்கு அடிப்படையான மையமழித்தல், சுயநோக்கும் சுயதகர்ப்பும், நையாண்டி, காலத்தை முன் பின்னாகப் பயன்படுத்தல், இவற்றின் விளைவான தர்க்கத்திற்கு எதிரான மனப்பாங்கு ஆகியவை கொஞ்சம்கூட நாம் விவாதித்த தமிழ் எழுத்தாளர்களிடம் இல்லை என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இனிமேல்தான் பின்நவீனத்துவ எழுத்தும் அதன் சார்பான தொடர்ச்சியறு எழுத்தும் தமிழில் உருவாக வேண்டியிருக்கிறது.

 


வெள்ளிவீதியார் கவிதைகள்

வெள்ளிவீதியார் கவிதைகள்

(இக்கட்டுரை, திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழாய்வுத் துறையின் பதினோராம் ஆசிரியர் கருத்தரங்கிற்கென எழுதப்பட்டது. 30-09-1997 அன்று அக்கருத்தரங்கில் படிக்கப்பெற்றது.)

1

வெள்ளிவீதியார் அகம் மட்டுமே பாடிய ஒரு சங்கக் கவிஞர். (அவர் பாடியதாகச் சொல்லப்படும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இங்கே கணக்கில் கொள்ளப்பட வில்லை.) அவர் பாடியவையாகக் கிடைத்துள்ளவை:
அகநானூற்றில் இரு கவிதைகள் – 45, 362
குறுந்தொகையில் எட்டுக் கவிதைகள் – 27, 44, 58, 130, 146, 149, 169, 386
நற்றிணையில் மூன்று கவிதைகள் – 70, 335, 348
ஆக 13 கவிதைகள்.
வெள்ளிவீதியார் கவிதைகளில் ஒரே ஒரு உணர்ச்சிதான் ஆழமாக வெளிப்படு கிறது. காதலன் அல்லது தலைவன் கிடையாமை அடிப்படையில் பிறந்த ஆழ்ந்த சோகம். இந்த உணர்வைச் சுருக்கமாக ஆற்றாமை எனலாம். பழைய மரபின்படி, காமமிக்க கழிபடர் கிளவிகள் அவரது கவிதைகள். வேறு எந்த உணர்ச்சியையும் அவரது கவிதைகள் வெளிப்படுத்தவில்லை.

2

தாம் எடுத்துக்கொண்ட விஷயத்தின் அடிப்படையில் வெள்ளிவீதியார் கவிதைகள் ஒரு பெரும் மீறலைச் சாதிக்கின்றன. ஓர் ஆண் தனது காதலுணர்வை வெளிப்படுத்தலாம், பெண் அவ்வாறு வெளிப்படுத்தல் ஆகாது என்ற சமூகக் கட்டுத்திட்டத்தை உடைத்துக்கொண்டு பிறந்தவை அவை.

காமத் திணையிற் கண்ணின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆகலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள் வயினான. (தொல்காப்பியம், பொருளதிகாரம், 106)

தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணுங்காலைக் கிழத்திக் கில்லை
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப. (தொல்காப்பியம், பொருளதிகாரம், 116)

ஒரு தலைவி, தலைவன்முன் தன் வேட்கையைக் கிளத்தல் கூடாது; மண்கலத்தில் நீர் உள்ளது எனபதை அதன் கசிவு காட்டுவதுபோல, வேட்கை தலைவியிடம் வெளிப்படவேண்டும் என்னும் பழங்காலக் கோட்பாட்டினை இதன் வாயிலாக அறிகிறோம். பெண்ணின் காமவேட்கையின் சமூகக் கட்டுப்பாட்டுப் பின்னணியே இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படை. அதாவது, ஆண் தனது காம வேட்கையை வெளிப்படையாகத் தெரிவிக்கலாம், அதனால் சமூகம் ஒன்றும் கெட்டுப்போகாது; ஆனால் பெண்ணின் வேட்கை வெளிப்பட்டால் சமூகம் கெட்டுப்போய்விடும் என்ற எண்ணம்தான் இந்தமாதிரிக் கட்டுப்பாட்டின் நோக்கம்.

வெள்ளிவீதியார் கவிதைகள் இம்மாதிரிக் கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை. “எனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாது, பசலை உணீஇயர் வேண்டும், திதலை அல்குல் என் மாமைக் கவினே” எனப் பெண்ணின் உடல்சார்ந்த ஆசையை வெளிப்படையாகப் பேசும் கவிதைகள் இவை. “எமக்கும் பெரும்புலவாகி, நும்மும் பெறேஎம் இறீஇயர் என் உயிரே” என்று பெண் தனது ஆசையினால் வதைபடுவதைக் காட்டுபவை.

இவ்வாறு ஒரு பெண்- சங்ககாலத் தலைவி- தனது வேட்கையை நாணமற்று, மண்கலக் கசிவுபோல அன்றி, வெளிப்படையாக வே காட்டுதல் வெள்ளிவீதியார் கவிதைகளின் தனித்துவம் ஆகும். இது இலக்கணத்தை மீறிய சுதந்திரக் குரல். ஆகவே தமிழ்/இந்தியப் பெண்ணின் ஒரு மூலக் குரலாகவும் இதனைக் காணமுடியும்.

3

இன்னொரு வகையிலும் வெள்ளிவீதியாரின் கவிதைகள் ஒரு மீறலை உட்கொண்டுள்ளன என்று மரபுவழி ஆய்வாளர் சொல்கின்றனர். வெள்ளிவீதியும் ஒளவையாரும் – இவர்கள் இருவர் மட்டுமே – தலைவியின் எல்லைமீறிய ஆற்றாமை உணர்ச்சியைப் புலப்படுத்தியவர்கள். இவர்கள், “வாழ்க்கைக் குறிப்பு தந்து காட்டிக்கொடுத்தவர்கள்” என்று அறிஞர் வ. சுப. மாணிக்கம் கூறியிருப்பதாக நினைவு. இது அகப்பாடல் மரபுகளுக்கு எதிரானது என்பது அவரது வாதம். ஆதிமந்தியைப் பற்றிய குறிப்பை வெள்ளிவீதியார் தர, வெள்ளி வீதியார் பற்றிய குறிப்பை ஒளவையார் தர, இருவரும் அகப்பாடல் மரபை மீறி வாழ்க்கையோடு இணைத்துவிட்டார்கள் என்பது வ. சுப. மாணிக்கம் போன்ற மரபுவழி ஆய்வாளர்களின் வாதம்.

மேற்கண்ட கருத்துக்கு இரு மறுப்புகளை நாம் தர இயலும். சங்க அகப்பாடல்கள் யாவும் நாடகத்தன்மை வாய்ந்த தனிப்பேச்சுகள் (டிரமாடிக் மானோலாக்ஸ்) என்பது அறிஞர்கள் கருத்து. அவை நாடகத்தில் நடிப்பவனின் பேச்சுப் போன்றவை. புனைவே அன்றி வாழ்க்கையை உரைப்பன அல்ல. இலட்சியப் படுத்தப்பட்ட, பத்துவிதப் பொருத்தங்களும் தமக்குள் கொண்ட, தலைவனும் தலைவியும் ஊழ்வினையால் எதிர்ப்பட்டு, தாங்களே கொண்ட காதலைச் சொல்வன சங்க அகக் கவிதைகள். இம்மாதிரி உண்மையில் சங்ககாலச் சமூகத்திலும் நடந்திருக்க இயலாது. அதனால்தான் முதல் உரையாசிரியர் இளம் பூரணர், “ஐந்திணை சிறுபான்மை, பெருந்திணை என்பதே நடைமுறையில் அதிகமாகக் கடைப்பிடிக்கப்பட்டது ஆதலின் பெருந்திணை எனப் பெயர் பெற்றது” என்று விளக்கியுள்ளார். இலட்சிய மயப்படுத்தப்பட்ட காதலர் பிம்பங்களே உரையாடுவதால்தான், அவர்கள் பெயரைச் சுட்டக்கூடாது என்ற கட்டுப்பாடும் பிறந்தது.

1. சங்ககால மரபின்படியே, வெள்ளிவீதியார் பாடல்களிலோ, ஒளவையார் பாடல்களிலோ தலைவன் தலைவி பெயர் சுட்டப்படவில்லை. உவமையாகவே வெள்ளிவீதி, ஆதிமந்தி ஆகிய பெயர்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. ஆகவே இது மரபுமீறல் அல்ல. இவ்வகையில் பட்டினப்பாலை செய்த மீறலைக்கூட வெள்ளிவீதியாரின் கவிதைகளும் ஓளவையாரின் கவிதைகளும் செய்துவிடவில்லை.

2. வெள்ளிவீதியையும் ஒளவையையும் சங்க மரபை மீறியவர்களாகக் கருதும் ஆய்வாளர்கள், பிற சங்க அகப்பாக்கள் யாவும் நாடகத்தன்மை வாய்ந்தவை, இலட்சிய மயமாக்கப்பட்ட வாழ்க்கையின் புனைவின் மாதிரிகள் என்று கொண்டு, இந்த ஓரிரு பாக்கள் மட்டும் அவற்றின் மீறலாக, யதார்த்தக் கவிதை களாக, வாழ்ககையில் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்வனவாக அமைந்துவிட்டன என்கின்றனர்.
அவ்வாறு கருத இடமில்லை. எப்போது எல்லாச் சங்க அகப்பாக்களும் நாடகத் தன்மை கொண்ட புனைவுகள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதோ, அப்போதே மேற்கண்ட இருவர் கவிதைகளும் புனைவுகளே என்றாகிவிட்டது.

வெள்ளிவீதி யார் காட்டும் தலைவியின் செய்கையை வெள்ளிவீதியார்மீதே ஏற்றிக்காணும் போக்கு தவறானது. நாடகத்தன்மை கொள்ளாத, தன்னுணர்ச்சிக் கவிதைகள் என்பவைகூட, கவிஞர்களின் செயற்கையான புனைவுகளே அன்றி, அவர்களது இயல்பான உணர்ச்சி வெளியீடுகள் அவை என்றோ, வாழ்ககை அனுபவக் குறிப் புகள் என்றோ கெள்வது சரியான இலக்கிய நோக்கு ஆகாது.

இவையன்றி, இன்னொரு மறுப்பையும் நாம் கூறலாம். வெள்ளிவீதி, ஆதிமந்தி, ஒருமுலை குறைத்த திருமாவுண்ணி போன்றவர்களை எல்லாம் அக்காலப் புனைவுச்சட்டகத்தின் ஒரு பகுதியாகவே நாம் காணமுடியும். பெயர்சுட்டுவதால் தனிவிளைவு ஏற்படாத அளவுக்கு ஆதிமந்தி கதை, வெள்ளிவீதி கதை, திருமாவுண்ணி கதை போன்றவை தொன்மங்களாக அக்காலத்தில் ஆகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இக்கவிஞர்கள் எடுத்தாண்டிருக்க மாட்டார்கள்.

இதற்கு ஓர் உதாரணத்தைத் தரலாம். கல்கியின் சிவகாமியின் சபதம் ஒரு புனைகதை. அதில் வரும் சிவகாமி பாத்திரத்தை வரலாற்றுப் பாத்திரம் என்றே நம்புபவர்கள் இருக்கிறார்கள். கலங்கரை விளக்கம் என்னும் திரைப்படத்தில் இப் பாத்திரம் உண்மையாக இருந்தவள் போலவே பேசப்படுகிறாள். அதனால், உண்மையாகவே சிவகாமி இருந்தாள் என்றாகிவிடுமா? புனைவின் தொடர்ச்சி யான இன்னொரு புனைவு அது. இதுபோலத்தான் ‘காதலர்க் கெடுத்த ஆதிமந்தி’, ‘வெள்ளிவீதி போலப் பேதுற்று உழலுதல்’ போன்றவற்றை அக்காலப் புனைவு களின் தொடர்ச்சியாகவே கருதலாம். இப்படி நோக்கும்போது வெள்ளிவீதியார் கவிதைகளோ, ஒளவையார் கவிதைகளோ மீறல் எதையும் நிகழ்த்திவிடவில்லை என்பது தெளிவு. கவிதை என்பதே ஒரு புனைவு. அதில் வரும் செய்திகளை வைத்து வாழ்க்கை வரலற்று ஆராய்ச்சி செய்வது தவறு.

4

சங்க காலத்தில் வாழ்ந்த எத்தனையோ கவிஞர்களின் பெயர்களைப் போலவே வெள்ளிவீதி என்ற பெயரும் காரணம் அறிய இயலா மறைபொருள் தன்மை கொண்டுள்ளது. வெள்ளிவீதி என்ற பெயரை ஆய்ந்த ஆய்வாளர்கள், சைவர்களாக இருப்பின், அவர் மதுரை வெள்ளியம்பலத் தெருவில் வாழ்ந்தவராக இருக்கலாம். அதனால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்பர். வெள்ளியம்பல வீதியார் என்னும் பெயர், வெள்ளிவீதியார் என்று ஆகுமா? மேலும் திருவிளையாடற் புராணத்தில் திரும்பத் திரும்பக் குறிக்கப்படும் வெள்ளியம்பலம், சங்ககாலத்தில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே இக்காரணம் ஏற்புடையதல்ல.

வெள்ளிவீதியார் கவிதைகளைக் காணும்போது அவர் பெயர் ஒருவேளை காரணப் பெயராக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. தங்கள் தொடரால் பெயர்பெற்ற சங்கப் புலவர்கள் பலர் உள்ளனர். அதுபோலவே, அவர் பாட்டில் இடம் பெறும் ‘வெள்ளைவீததை’ என்ற தொடரினால், ‘வெள்ளைவீததையார்’ என்று அவர் பெயர்பெற்றிருக்கலாம். பிறகு அது ‘வெள்ளிவீதியார்’ என மருவியிருக்கலாம் என்பார் முனைவர் அருளி. வெள்ளைவீததையார் என்ற தொடர் வெள்ளிவீதியார் என மருவுதல் மொழியியல் மாற்றத்தின்படி இயலாது.

வெள்ளிவீதி என்ற சொல், வானத்திலுள்ள வெண்நட்சத்திரங்கள் செறிவாகத் தோன்றும் பாதை போன்ற ஓர் அமைப்பைக் குறிக்கிறது – அதாவது பால்வழி மண்டிலத்தைக் (மில்க்கி  வே) குறிக்கிறது என்று காணமுடியும். அதாவது இன்று நாம் பால்வழி என்று சொல்வதே அக்காலத்தில் வெள்ளிவீதி என்று வழங்கியிருக்கலாம். அப்பெயரை இக்கவிஞருக்கு இட்டிருக்கலாம்.

வெள்ளிவீதியாரின் பாடல்களில் அநேகமாகப் பாடல்தொறும் வரும் ஒரு வண்ணப் படிமம், வெண்மை (அல்லது வெள்ளி – இக்கால வழக்கில் வெள்ளை). அவரது பெயரில் வெண்மை அடைமொழியாகி உள்ளதுபோலவே, அவரது பாக்களிலும் வெண்மை மிகுதியான இடம் பெறுகிறது.

வெண்கோட்டு யானை, இலங்கு வெள்ளருவி – அகம். 362.
வெண்டலைச் சிதவலர் – குறு. 140.
வெண்ணெய் உணங்கல் போல – குறு. 58.
வால் வெள்ளெயிறு – குறு. 168
வெண்மணல் – குறு. 386.
வெள்ளாங்குருகு – நற். 70

போன்ற தொடர்களைப் பாருங்கள். மேலும், திங்கள், விண்மீன், பால் போன்ற வெள்ளிய பொருள்களும் அவரது பாக்களில் மிகுதியாக இடம் பெறுகின்றன. பொதுவாக வெள்ளி என்பது எட்டாத் தன்மை, அறியாமை, இன்மை, களங்கமற்ற தன்மை போன்ற பண்புகளுக்கு உருவகமாக இயங்குவது.
வீதி என்ற சொல் நடத்தல், அடிக்கடி புழங்குதல், இன்னும் தீவிர எல்லையில் உழத்தல் ஆகிய சொற்களோடு தொடர்புகொண்டது. வழங்குதல், உழத்தல், நடத்தல், பெயர்தல், தேடுதல் போன்ற நேரடியான, வீதி தொடர்புடைய சொற்க ளும் அதனோடு மறைமுகமாகத் தொடர்புகொண்ட அலத்தல், உழத்தல், புலம்புதல், உயவுதல் போன்ற சொற்களும் இவருடைய கவிதைகளில் மிகுதி. ஆகவே வெள்ளி என்பதன் தன்மையும், வீதி என்பதன் தன்மையும் புலப்பட வெள்ளிவீதி என எவரேனும் பெயரளித்திருக்கலாம்.

ஆனால் சங்கப் புலவர்களுக்குப் பிற்காலத்தில் பெயர் வைத்தவர்கள் இத்தகைய அருவப்படுத்தலைக் கொண்டு பெயரிடவில்லை. மேலும், இவருடைய பெயரே இன்னொருவர் கவிதையில் எடுத்தாளப்படுகிறது என்பதைப் பார்க்கும்போது இது பிற்காலத்தில் இடப்பட்ட பெயரல்ல.

வெள்ளிவீதியார் பாக்களின் ஒரே தன்மை ‘தலைவன் கிடைக்கப்பெறாத ஆற்றாமை உணர்வு’ என்பது முதலிலேயே சொல்லப்பட்டது. ஒருவகையில் வெள்ளி என்பது வானத்திலுள்ள கோள். வீதி என்பது மக்கள் பூமியில் உழலும் ஒரு தெரு. இரண்டும் ஒருபோதும் ஒன்றுசேர முடியாது. பொதுவாகக் கவிதைகளில் வானம் என்பது ஆணையும், பூமி என்பது பெண்ணையும் குறிக்கும் உருவகங்கள். ஆக ஒன்றுசேர முடியாத தலைவன் தலைவி என்ற என்றைக்குமான காவியக் காதல் பிம்பங்களை இச்சொல் குறிப்பதாக இன்றைய நோக்கில் நாம் காணமுடியும். சுருங்கச் சொன்னால், இப்பெயரே, நிறைவேறாக் காதலைக் குறிப்பதாகிறது.

5

வெள்ளிவீதியாரின் கவிதைகள் யாவுமே ஆற்றாமை உணர்வை முழுவீச்சில் வெளிப்படுத்துபவை.
‘அஞ்சுவரு நோயடு துஞ்சாதேன்’, ‘அலந்தனென் உழல்வேன் கொல்லோ’
‘நசைதர வந்த நன்னராளன்’, ‘வறுவியன் பெயரின்’, ‘இன்று இப்பொழுதும் யான் வாழலனே’
என்ற அகநானூற்றுத் தொடர்களைப் பாருங்கள்.

நற்றிணை 70, ‘இறைநெகிழ் பருவரல்’ (துன்பத்தைச்) செப்பாத வெள்ளாங்குருகினைத் தலைவி கடிந்துகொள்வதாக அமைகிறது.

நற்றிணை 335, ‘காமம் பெரிதே, களைஞரோ இலரே’ என்று உழல்கின்ற தன்மையைக் காட்டுகிறது.

நற்றிணை 348, ‘உலகமொடு பொருங்கொல் என் அவலமுறு நெஞ்சே’
எனத் தலைவி துடிப்பதைக் காட்டுகிறது.

சில குறுந்தொகைப் பாக்களுக்கு இக்கூற்றினை ஏற்பதில் சிலருக்குத் தயக்கம் ஏற்படலாம். காரணம், அவற்றிற்கு வரன்முறையாகச் சொல்லப்பட்டு வரும் கூற்றுகள் மாறுபட்டவை.

சான்றாக, குறுந்தொகை 44. ‘காலே பரிதப்பினவே’ எனத் தொடங்கும் இப்பாடல் இடைச்சுரத்துச் செவிலி கூற்றாகவே காலங்காலமாகக் கொள்ளப்பட்டுவருகிறது. இப்பாடலின் பொருளை ஊன்றி கவனித்தால், காதலனை எதிர்பார்த்து நெடுநாள் காத்திருந்த ஒரு தலைவி, பிறகு அவனைத் தேடியலையும்போது கூறிய கூற்றாகக் கொள்ள இடம் தருகிறது. இந்தத் தலைவி, ஆதிமந்தி போலப் பேதுற்று அலைவேன் கொல்லோ என்று இன்னொரு அகப் பாட்டிலும் சொன்னவள். ஊரின் ஊரின், நாட்டின் நாட்டின், குடிமுறை குடிமுறை தோறும் தேடினால் நம் காதலர் கிடைக்காமலா போவார் என்று ஒரு குறுந்தொகைப் பாட்டிலும் கூறியவள். இவற்றை உட்கொண்டால், மேற்கண்ட பொருள்கொள்ளல் முறை சரியானதாகவே தோன்றும்.

குறுந்தொகை 58, ‘இடிக்கும் கேளிர்’ என்று தொடங்குவது. இதுகாறும் கழற்றெதிர்மறையாகவே கருதப்பட்டு வந்துள்ளது. அதாவது ஒரு பாங்கன், தலைவனைக் கடிந்துகொள்ளும் போக்கில் இப்பாடற்பொருள் கொள்ளப்படு கிறது. இப்பாடலையும் தலைவி கூற்றாகவே கொள்ளமுடியும். இடிக்கும் கேளிர் என்பது தலைவன் வரும்வரை, அடங்கியிருக்குமாறு கூறும் உறவினரைத் தலைவி விளிப்பதாகக் கொள்ளமுடியும். தலைவனைத் தேடும் தலைவியின் செயலை ஒப்புக்கொள்ளாத தோழி, செவிலி முதலிய தமரை நோக்கித் தலைவி கூறுவது என்று கொண்டால் இந்த அர்த்தம் ஏற்புடையதாகும். இதன் தொடர்ச்சியே, தலைவி தனது உறவினர்கள் கூற்றைப் புறக்கணித்துச் சென்று, தலைவ னைத் தேடும்போது ‘காலே பரிதப்பினவே’ எனப் புலம்பும் பாடல் எனலாம்.

குறுந்தொகை 146, பிரிந்தோரைப் புணர்க்காமல், ‘நன்று நன்று’ என்று தலைய ஆட்டிக் கொண்டு செல்லும் முதுமாக்களைக் கேலிசெய்கிறது. இதன் அடியிலும் காணப்படும் உணர்ச்சி ஆற்றாமைதான். இந்த மாக்கள், தன்னைத் தன் தலைவனோடு சேர்த்து வைக்கச் சக்தியற்றவராக உள்ளனரே என்னும் ஆற்றாமை.

குறுந்தொகை 149, வெளிப்படையாகவே காமம் நெரிதரக் கைந்நில்லாத நாணத்தை அனுதாபத்தோடு நோக்குகிறது.

குறுந்தொகை 169, தலைவி, நேராகவே தலைவனை அல்லது தலைவனின் உருவெளித்தோற்றத்தைப் பார்த்துக் கூறுவதுபோல அமைந்திருக்கிறது. “நும்மும் பெறேஎம் இறீஇயர் எம்முயிரே”.

குறுந்தொகை 386, மாலை புலம்புடைத்தாகிய தன்மையை எடுத்துரைக்கிறது.

ஆகவே வெள்ளிவீதியார் பாடிய ஒரே உணர்ச்சி ஆற்றாமைதான். சோகம், கையற்ற நிலை, காமத்தால் வருந்தும் காதல் நெஞ்சத்தின் அவலம்.

6

வெள்ளிவீதியார் பாடல்களில் இருவகை அமைப்புகள் காணப்படுகின்றன. ஒன்று, குறிய அடிகளை உடைய குறுந்தொகைப் பாடல்களில் காணக்கூடியது. இவற்றில் நேராக ஓர் உணர்வுப்பொருள் புலப்படுத்தப்படுகின்றது. சுற்றிவளைத்துச் சொல்லுதலோ படிமங்களின் மிகுதியோ இல்லை.

இன்னொரு வகை அமைப்பு, நற்றிணை, அகநானூற்றுப் பாக்களில் காணக்கிடப்பது. இப்பாடல்களில் படிமங்கள் மிகுதி. பல்வேறு படிமங்களையும் கூர்ந்து நோக்கும்போது பெரும்பாலும் அவை புணர்ச்சி சார்ந்த படிமங்களாக-குறிப்பாகப், புணர்ச்சி நிறைவைக் குறிக்கின்ற படிமங் களாக அமைகின்றன. ஆனால் அவற்றில் நேராக உணர்த்தப்படும் உணர்வுப்பொருள் அல்லது உரிப்பொருள், புணர்ச்சியின்மையை, காதலர் கிடைக்கப் பெறாமையைக் குறிக்கிறது.

இவ்விதமாக, படிமங்கள் மூலமாகப் புணர்ச்சிநிறைவும், உரிப்பொருள் மூலம் இன்மையும் குறிக்கப்படுவது இவரது பாக்களின் தனித்தன்மை. மேலும் புணர்ச்சி நிறைவு என்பது படிமங்கள் மூலமாக மட்டுமே உணர்த்தப்படும் நிலை, அது கனவுத்தன்மை சார்ந்த ஒரு விருப்ப நிறைவேற்றம் (விஷ் ஃபுல்ஃபில்மெண்ட்) என்பதைக் காட்டுகிறது. பலகாலமாக ஒரு பொருளைக் குறித்து ஏங்குபவர்கள், கனவில் அப் பொருள் கிடைத்துவிட்டதாகக் கருதி நிறைவு பெறுவது உளவியலுக்கு ஒத்ததே ஆகும்.

வெள்ளிவீதியாரின் அகநானூற்று, நற்றிணைப் பாக்களிலும், நிஜத்தில் கிடைக் கப் பெறாத தலைவன், படிமங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுவதாக நினைக்கும் தன்மை காணப்படுகிறது.
சான்றாக, அகநானூறு 362ஆம் பாடலைக் காண்போம். இதில் முதல் படிமம், “பாம்பு உடை விடர, பனிநீர் இட்டுத் துறைத் தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே” என்பது. இது ஒரு பாலியல் படிமம். புணர்ச்சி நிறைவினைக் குறிக்கும் படிமம்.

இரண்டாவது படிமம், “வெண்கோட்டு யானை, பொருத புண்கூர்ந்து, வைங்கண் வல்லியம் கல்லளைச் செறிய, முருக்கரும்பன்ன வள்ளுகிர் வயப்பிளவு கடிகொள வழங்கார் ஆறே” என்பது. இதுவும் ஒரு பாலியல் படிமமே.

மூன்றாவது படிமம், “நம் இடைமுலைச் சுணங்கு அணிமுற்றத்து ஆரம் போலவும், சிலம்புநீடு சோலைச் சிதர் தூங்கு நளிர்ப்பின் இலங்கு வெள்ளருவி போலவும், நிலம் கொண்டனவால் திங்களம் கதிரே” என்பது. இதுவும் பாலியல் படிமமே.

இவை அனைத்தும் புணர்ச்சியைக் குறிக்கின்றன. ஆனால் வெளிப்படையாகக் கூறப்பெறும் செய்தியோ, “நன்னர் ஆளன் நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் இன்று இப்பொழுதும் யான் வாழலனே” என்பது. மேற்கண்ட மூன்று படிமங்களின் கருத்துக்கும் இது எதிர்நிலையில் நிற்கிறது.

இதுபோல, நற்றிணை 348ஆம் பாடலையும் காண்போம். இங்கும் “நிலனே, நீல்நிற விசும்பின் பல்கதிர் பரப்பிப் பால்மலி கடலின் பரந்து பட்டன்றே; ஊரே, ஒலிவரும் சும்மையடு மலிதொகுபு ஈண்டிக் கலிகெழு மறுகின் விழவு அயரும்மே; கானே, பூ மலர் கஞலிய பொழிலகம் தோறும் தாம் அமர் துணையோடு வண்டு இமிரும்மே;”  என வரும் அடுத்தடுத்த மூன்று படிமங்கள், புணர்ச்சி நிறைவினைக் குறிப்பனவாக அமைகின்றன. ஆனால் இங்கும் வெளிப்படையாகச் சொல்லப்படும் பொருள், “யானே, புனையிழை நெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு கனையிரும் கங்குலும் கண்படையிலனே” என்பது. இதிலும் மேற்கண்ட அகநானூற்றுப் பாடல் போன்றே, பாலியல் நிறைவும் இன்மையும் எதிரெதிர் நிலைகளில் காட்டப்படுகின்றன.

7

இனி ஒரேமாதிரியான இரு பாக்களை ஒப்பிட்டுப் பார்ப்போம். சங்கப் பெண்பாற் புலவர்களில் வெள்ளிவீதியாரும் ஒளவையாரும்தான் ஆற்றாமை உணர்ச்சியை மித மிஞ்சிப் பாடியவர்கள். ஒளவையார் காட்டும் தலைவியும் ஆற்றாமை மீதூர, “முட்டு வேன் கொல், தாக்குவேன் கொல்” என்று துடிப்பவளே. ஆகவே இருவரையும் ஒப்பிடுவது சிறப்பானது. அதிலும் ஒரேமாதிரிப் பாக்களை ஒப்பிடுவது இன்னும் சிறப்பாகும். எனவே அகநானூற்றில் வெள்ளிவீதியாரின் 45ஆம் பாடலையும், ஒளவையாரின் 147ஆம் பாடலையும் ஒப்பிடலாம்.

வெள்ளிவீதியாரின் 45ஆம் அகப்பாடலில் “நோய்கூர்ந்து, ஆதிமந்திபோலப் பேதுற்று அலந்தனென் உழல்வேன் கொல்லோ” என்ற தொடர் இடம்பெறுகிறது. ஒளவையாரின் 147ஆம் அகப்பாட்டில், “நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவயர்ந்திசினால் யானே” என்னும் தொடர் வருகிறது. இந்த ஒற்றுமை கருதியே இவை இங்கு நோக்கப்படுகின்றன.

இரண்டுமே பாலைத்திணையில் அமைந்தவை. இரண்டுமே தோழிக்குத் தலைவி கூறுவன. ஒன்றில் வற்புறுத்தும் தோழி என்றும், மற்றொன்றில் செலவுணர்த்திய தோழி என்றும் தோழியின் செயல்கள் கூறப்பட்டுள்ளன. இரண்டிலுமே தோழியர், தத்தம் தலைவியரைப் பிரிவினால் கலங்காமல் இருக்குமாறு வலியுறுத்துகிறார்கள்.

வெள்ளிவீதியாரின் பாடலோடு ஒப்பிடும்போது ஒளவையாரின் பாடல் சிக்கலற்றது. ஒளவையாரின் பாட்டில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில், ஓர் ஆண்புலி, பெண்புலியின் அன்பு வாழ்க்கை சொல்லப்படுகிறது. பெண்புலி, குருளைகள் மூன்றினை ஈன்று, வேட்டையாடச் செல்லஇயலாத நிலையில் உள்ளது. அதற்காக ஆண்புலி வேட்டையாடி உணவு கொண்டுவந்து தரும் அன்பு வாழ்க்கை. இரண்டாவது பகுதியில், தலைவி தன்னை நொந்துகொண்டு, தலைவன் பிரிந்தபின் தன் அழகு குலைந்து, வருத்தமிகுதியுடன், வேறு எவ்வித மருந்துமின்றி இருக்கும் நிலை சொல்லப்படுகிறது. மூன்றாவது பகுதியில், தலைவி, ‘யான் வெள்ளிவீதியைப் போல செலவு அயர்ந்திசின்’ எனக்கூறுதல் காணப்படுகிறது.

வெள்ளிவீதியார் பாட்டின் முதற்பகுதியும் சற்றேறக்குறைய ஒளவையார் பாட்டின் முதற்பகுதி மாதிரியாகவே அமைகிறது. இங்கும் ஒரு புலி. ஒரு குன்றுப் பகுதியில் நீரற்ற வழியில் ஒரு யானையைக் கொல்கிறது. ஒளவையாரின் பாட்டில் புலி மானைக் கொன்றது, தன் துணைக்காக வேண்டி. இப்பாட்டில் புலி யானையைக் கொல்வது துணைக்காக அல்ல. “இப்படிப்பட்ட கொடிய காட்டுவழியில் சென்றாரே காதலர்” என்று தலைவி கவலைப்படுமுகமாகவே இந்தப் படிமம் இடம்பெறுகிறது. முன் படிமம், விலங்குகளின் அன்பு வாழ்க்கையை உணர்த்த, இந்தப் படிமம், கொடுமை யைச் சுட்டிக்காட்டுகிறது. (புலியின் கொடுமை மட்டுமல்ல, தலைவனின் கொடுமை யையும்தான்.) ஒரே மாதிரிப் படிமங்கள் போல் தோன்றினாலும், வெவ்வேறு பண்பு களை உணர்த்துகின்றன இவை.

வெள்ளிவீதியாரின் பாட்டில் அடுத்துவரும் படிமங்கள் இவை:

அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணிப் புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் இன்னிசை ஆர்ப்பினும்,

என்னைப் பற்றிய அலர் பெரிதாக உள்ளது என்று தலைவி நினைக்கிறாள். இது ஒரு நீண்ட காப்பிய உவமை (எபிக் சிமிலி). இவ்விதக் காப்பிய உவமைகளை ஒளவையார் கையாளவில்லை.

இன்னொரு காப்பிய உவமையையும் வெள்ளிவீதியார் இதே பாட்டில் கையாள்கிறார்.

பொலந்தார்க் கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல் வானவரம்பன் அடல்முனைக் கலங்கிய உடைமதில் ஓரரண் போல,

நான் தூங்கவில்லை என்று தலைவி நினைக்கிறாள். பிறகு இறுதிப்பகுதி வருகிறது: “யானே, காதலர்க் கெடுத்த சிறுமையடு நோய்கூர்ந்து ஆதிமந்திபோலப் பேதுற்று, அலந்தனென் உழல்வேன் கொல்லோ” என்று தலைவி நினைக்கிறாள்.

வெள்ளிவீதியின் பாட்டுமுழுவதும் வரும் படிமங்கள் – இவை காவிய உவமைகள் வாயிலாக வருகின்றன – தலைவன் தலைவி முரண்பாட்டைக் குறிக்கின்றன. ஒளவையாரின் பாட்டில் வருவதுபோல தலைவன் தலைவியின் அன்பான இல்லற வாழ்க்கையைக் காட்டவில்லை. இந்த முரண், முக்கியமான இறுதிப்பகுதியிலும் வெளிவருகிறது.

வெள்ளிவீதியார் பாட்டில், பேதுற்று, அலந்தனென், உழல்வேன் என்னும் துயரச் சொற்களோடு கொல்லோ என்ற ஐயச் சொல் நிற்கிறது. ஒளவையாரின் பாட்டிலோ, ‘வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால்’ என இறுதிப்பகுதி அமைகிறது. நன்றும்-செலவு-அயர்ந்திசின் என்னும் மகிழ்வில் முடியும் தொடர்கள். ஆல் என்ற அசை, உறுதிப்பாட்டை உணர்த்துகிறது. அயர்தல் என்பதும் (விழவு அயர்தல் என்பதில் போல) இன்பநிறைவில் ஏற்படும் அயர்ச்சி என்றே பொருள்படும். இங்கு தலைவனோடு மகிழ்வுறச் செல்வதைச் சுட்டிக்காட்டுகிறது எனவே கொள்ளமுடியும்.

இவ்வாறு நோக்கும்போது, இவையிரண்டும் பலவிஷயங்களில் ஒத்ததன்மை கொண்டவை போலக் காணப்படினும், ஒளவையார் பாட்டில், தலைவி, தலைவனை விட்டுப் பிரிந்திருந்தாலும், அதனால் ஏற்படும் வருத்தத்தைப் புலப்படுத்தினாலும், தன் தலைவனைத் தேடிச் செல்வதாகக் கூறினாலும், அவள் ஓர் இன்ப இல்லற வாழ்க்கைக்குரியவள், அவளது தேவை நிறைவேறும தன்மையது என்ற மகிழ்நோக்கு உள்ளது. வெள்ளிவீதியார் பாட்டிலோ, தலைவனுடன் தலைவி இன்புற்று வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை. இவள் தன் தலைவனைத் தேடிப் பேதுற்று, பித்துப்பிடித்து, அலைந்து உழலவேண்டியவளே என்ற துயர்நோக்கு காணப்படுகிறது. இவள் ஆசை நிறைவேறுமா என்பது ஐயப்பாட்டிற்குரியது.

இவ்வேறுபாடுகள், வெளிப்படையாக இப்பாட்டுகளில் சொல்லப்படவில்லை. தொனிப் பொருளாகவே உணர்த்தப்படுகின்றன.

இதுவரை, வெள்ளிவீதியாரின் கவிதைகளின் தலைவியிடம் காணப்படும் பண்புகள் சுட்டிக்காட்டப்பட்டன. ஒளவை யாரின் தலைவியுடன் ஒப்பிட்டும் காட்டப்பட்டன. அவரது பாட்டுகளில் ஒரு மீறல் இருப்பதாக இக்கட்டுரைத் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் உண்மையில் அது மீறலே அல்ல. காரணம், “வினையே ஆடவர்க்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” என்னும் சங்ககாலக் கருத்துச்சட்டகம் இவரது கவிதைகளில் உடைக் கப் பெறவில்லை. காதலனது இருப்புக்காகவே காதலி வாழ்பவள் என்னும் சங்ககாலக் கருத்தாக்கம், அனைவரது பாக்களிலும் போலவே இவரது பாட்டுகளிலும் வெளிப்படவே செய்கிறது. இக்கருத்தாக்கம், ஆணுக்கு மிகவும் இன்பம் தரும் ஒன்று. வரன்முறையான கருத்தமைவுக்கு உட்பட்டு வாழும் பெண்ணுக்கும் இன்பம் தரும் ஒன்று. இருப்பினும் இது இன்று உடைக்கப்படவேண்டியது என்பதும் தெளிவு.

இலக்கிய நுகர்ச்சி என்பது ஓர் எதிர்நிலையை உள்ளடக்கிய செய்கை. கவிதையின் ஆதாரமான சொற்களின், சொற்களை மீறிய அமைவுகளின் அழகும், அச்சொற்கள் வெளிப்படுத்துகின்ற கருத்துருவமும் என இம்முரண் அமைகிறது. வெள்ளிவீதியார் கவிதைகள் மட்டும் இப்பொதுத்தன்மைக்கு விலக்காகுமா?

 


சிறுபத்திரிகைகளில் இடம்பெற்ற தமிழ்க்கவிதைகள்

சிறுபத்திரிகைகளில் இடம்பெறும் தமிழ்க்கவிதைகளின் வடிவ உள்ளடக்கக் கோட்பாடுகள்

(“கோட்பாட்டியல் நோக்கில் இக்காலத் தமிழ்க் கவிதை இலக்கியம்”-என்ற தலைப்பில் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம் 1991 அக்டோபர் 4,5,6 தேதிகளில் நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை)

கட்டுரையில் புகுமுன் சில கருத்துகள்

1. விமரிசன வளர்ச்சியின்றி கோட்பாட்டு ரீதியாகக் கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதோ அவற்றைத் தொகுப்பதோ இயலாது. விமரிசனத்திற்குப் பிந்தித்தான் கோட்பாடு. எது சிறந்த கவிதை, நல்ல கவிதை, கவிதையல்லாதது என்ற பாகுபாடு இன்றி வெறும் உள்ளடக்க வடிவ உத்தி அடிப்படைகளில் கவிதைகளைத் தொகுப்பது தொகுப்பின் நோக்கத்தையே குலைத்துவிடக்கூடும். எழுதப்படுவன எல்லாம் கவிதையல்ல.

2. புதுக்கவிதை என்பது மேலை மண்ணிலிருந்து தமிழ் மண்ணுக்குப் பிடுங்கி நடப்பட்ட ஒரு செடி. சரியான முறையில் அது உருப்பெற்றிருக்கிறதா என்ற ஐயப்பாடும் இருக்கிறது. எனவே தொகுப்புச் செய்வதற்கான அவசரம் உடனடியாக இல்லை. மேலும், மேற்கு நாட்டுக் கவிதைத் தொகுப்புகள் பலவும் கூட, கோட்பாட்டு அடிப்படையில் தொகுக்கப்பட்டவை அல்ல. சிறந்த கவிஞர்கள், அவர்களுடைய தவிர்க்கமுடியாத படைப்புகள் என்ற நோக்கிலேயே தொகுப்புகள் செய்யப்படுகின்றன. தமிழிலும் இப்படிப்பட்ட தொகுப்புகள் (சான்றாக, சி.சு. செல்லப்பா தொகுத்த ‘புதுக்குரல்கள்’) பல வெளிவந்த பிறகே (சங்க இலக்கியம் போலக்) கோட்பாட்டு அடிப்படையில் தொகுக்க வாய்ப்பு உண்டு.

3. மேலும், இன்றைய கவிதைகளைச் சங்கக் கவிதைகள்போலத் தொகுத்து வைத்தால்தான் நிலைபேறடையும் என்று சொல்வதற்கில்லை. படித்தவர்கள் தொகை குறைவாகவும், படித்தவர்களும் ஏட்டில் எழுத்தாணியால் பனையோலைகளில் எழுதிவைத்துக் காப்பாற்ற வேண்டிய நிலையும் இருந்த அக்காலத்தில் சங்க இலக்கியம் போன்ற தொகுப்புகளுக்குத் தேவை இருந்திருக்கலாம்.

இன்று அச்சுச்சாதனத்தில் நூல்கள் வெளிவருகின்றன. அவையும் மைக்ரோ பிலிம் முதலான சாதனங்களால் பாதுகாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே இம்மாதிரித் தொகை நூல்கள் மட்டுமே காலத்தினால் காப்பாற்றப்படும் என்று சொல்ல இயலாது. இனி கட்டுரைக்குள்:

உலகெங்கிலும் சிறுபத்திரிகைகளே தரமான இலக்கியத்தை இந்த நூற்றாண்டில் வளர்த்து வந்திருக்கின்றன. இலக்கியச் சிற்றிதழ்கள் என்னும் நிகழ்வு தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரியதன்று. எல்லா நாடுகளிலும், மொழிகளிலும் சிறுபத்திரிகைகள் உண்டு. புகழ்பெற்ற எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய யுலிசிஸ் என்னும் நாவல், லிட்டில் ரிவியூ என்னும் ஆங்கிலச் சிறுபத்திரி கையில்தான் வெளிவந்தது. டி.எஸ். எலியட்டின் பாழ்நிலம் (வேஸ்ட்லண்ட்) என்னும் கவிதை, டயல் என்னும் சிற்றிதழில் வெளியானது. வில்லியம் ஃபாக்னரின் சிறுகதைகள், விமரிசனங்கள் பல டபுள் டீலர் என்னும் சிற்றிதழில் வெளியாயின. சிற்றிதழ்கள் வாயிலாகவே இலக்கியம் இந்த நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்தமைக்குப் பல சமூகவியற் காரணங்கள் உண்டு. அவற்றைப் பற்றி வேறிடத்தில்.

தமிழில் மணிக்கொடி என்னும் சிற்றிதழே சிறுகதையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்பதைப் பலரும் அறிவர். எழுத்து பத்திரிகை, ஐம்பதுகளின் இறுதிமுதலாகப் புதுக்கவிதை வளர்ச்சிபெறக் காரணமாக அமைந்தது. எழுத்து இதழைத் தொடர்ந்து அறுபதுகள், எழுதுபதுகள், எண்பதுகளில் பல இலக்கியச் சிற்றிதழ்கள் புதுக்கவிதை வளர்ச்சிக்குத் துணைபுரிந்துள்ளன. ந. பிச்சமூர்த்தி முதலாக இன்று எழுதுகின்ற இளங்கவிஞர்கள் வரை, தரமான படைப்பாளிகள் யாவரும் இச்சிறுபத்திரிகைகள் வாயிலாக அறிமுகமாகிப் பிறகு நூல்கள் வெளியிடுவோராக மாறியிருக்கிறார்கள்.

எழுத்து இதழில் புதுக்கவிதைகள் வெளியாகும்வரை, தமிழ்க்கவிதை, ரொமாண்டிக் தன்மை வாய்ந்ததாக அமைந்திருந்தது, அல்லது செய்யுளாக்கலாக இருந்தது. அக்கவிஞர்கள் கையாண்ட கவிப்பொருள்கள், ஏற்கெனவே பலமுறை பலரும் “போட்டிடித்துக் காய்ச்சி வறுத்த கவிப்பொருட்கள்”. (வானம் நிலவு இயற்கை தமிழ் இத்தியாதி). இலங்கைக் கவிஞர் இ. முருகையன் இவற்றை வெளியதுக்கற் கவிதைகள் என்பார். இம்மாதிரிக் கவிதைகளுக்கு முற்றிலும் மாற்றாக எழுத்து இதழ்க் கவிதைகள் அமைந்திருந்தன. இவற்றைத் தனிநபர்க் கவிதைகள் என்று சுருக்கமாகக் கூறலாம். இன்றிருக்கும் நல்ல கவிஞர்கள் பலர், எழுத்து பாரம்பரியத்தில் வந்தவர்கள்.

எழுத்து கவிதைகளின் இயல்புகள்

1. உயிருள்ள கவிதை மொழியை உருவாக்க முயன்றார்கள் எழுத்துக் கவிஞர்கள். தருமு சிவராமு போலப் புத்தம்புதிதாகவோ, நகுலன் போலப் பழைய கவிதைகளின் மொழியைக் கையாண்டோ இதனை உருவாக்க முயன்றனர். அடிப்படையில் பேச்சோசையிலிருந்து மாறுபடுவதாக இருக்கலாகாது.

2. பருமையான அனுபவங்களைப், பருமையான சொற்களால் வெளிப்படுத்துவதாகக் கவிதை அமையவேண்டும். இந்த அனுபவங்கள், உணர்ச்சி அடிப்படையிலோ, புத்திசார்பு கொண்டவையாகவோ இருக்கலாம். எந்தக் கவிதை ஆயினும், புலனுணர்வுக்கு உடனடியாக எட்டும் வகையில், பருமையான சித்திரிப்புப் பெற வேண்டும்.

3. பிரச்சாரத்திலிருந்து கவிதை விலகியிருக்கவேண்டும். கவிஞன் தன்னளவில் நேர்மையாக இயங்கவேண்டும்.

4. சோதனை முயற்சிகள் வேண்டும். இருண்மை, இயல்பு விலகல், படிமச் சேர்க்கைகள் ஆகியவை இருப்பின் நல்லது.

5. போலிசெய்தலைத் தவிர்க்க வேண்டும். கவிஞனின் திறன் என்பது தனித்துவம் சார்ந்தது. பிறர் பாணியில் உருவாகுவதல்ல.

6. ரொமாண்டிசிஸம் கூடாது. கனவுகளை நெய்வதும், தப்பிப்புக்குச் செலுத்துவதும் கவிதையாகாது. அர்த்தமற்ற இலட்சியவாதமும் கூடாது. கூடியவரை யதார்த்தத்தை ஒட்டியிருக்கவேண்டும்.

7. விளம்பர மொழி, சினிமா பாஷை போன்ற பாதிப்புகளும், தேய்ந்துபோன மொழி வழக்குகளும் தவிர்க்கப்பட வேண்டியவை.

8. கவிதையில் கவிஞனின் தனிக்குரல் ஒலிக்கவேண்டும். இன்று வெகுஜன சமூகக் கூக்குரலும், கும்பல் மனப்பான்மையும் ஆதிக்கம் செலுத்தும் காலம். இதிலிருந்து விலகி வாழ விரும்பும் கவிஞன், தனக்கென ஒரு கூட்டுக்குள் ஒடுங்க வேண்டியவனாகிறான். அவன் அவனைப்போன்ற யாரோ ஒருவனுக்காக எழுத வேண்டியவனாகிறான்.

தன்னுணர்ச்சிக் கவிதை, தனிமனித வெளிப்பாட்டின் வடிவம். தனித்த இயல்பு கொண்ட, வித்தியாசமான, இலட்சிய நோக்குக் கொண்ட, கும்பலில் சேர விரும்பாத, தனி-மனிதர்கள் தங்களைப் போன்றவர்களுக்காக உருவாக்கிய வடிவம் தன்னுணர்ச்சிக் கவிதை.

எழுத்துக்கவிதைக்கு இம்மாதிரி வாசகர்களை எட்டுவதே நோக்கம். கும்பலை ஈர்த்துக் கைதட்டல் பெறுவதல்ல. (இவையாவும் முன்பே கூறிய தனிநபர்க் கவிதைகளின் இயல்புகள்).

9. யாப்பினால் செய்யுள் கட்டும் செய்யுள் கொத்தர்களாகக் கவிஞர்கள் ஆக வேண்டாம் என்பதால் பழைய யாப்பும் தேவையில்லை. வசனநடையிலேயே கவிதை இயங்கவல்லது. யாப்பினைப் புறக்கணித்துச் சுதந்திரமாக எழுதலாம். அதேசமயம், யாப்பு, கட்டாயம் புறக்கணிக்க வேண்டியதும் அல்ல.

ஆக, எழுத்து கவிதை, மரபுவழியான மொழியை வெறுத்தது, ரொமாண்டிக் கூச்சல்களை ஒதுக்கியது, கனவுப்படுத்தல்களை விலக்கியது. இலட்சியத்திற்கும் நடை முறைக்குமான இடைவெளியை முக்கியக் கவிப்பொருளாக்கியது. இந்த இடைவெளி, ஒரு பாழ்நிலமாக, அல்லது நரகமாக உணரப்பட்டது. குறுகிப்போன, சாதாரண, சிற்றளவு வாழ்க்கையைச் சிறந்த முறையில் வெளிப்படுத்தும் ஒன்றாக அமைந்தது. விண் முதல் பாதாளம் வரை பாயும் கவிஞனின் சர்வஞானப் பார்வை தூக்கி எறியப் பட்டது. புத்திச் சார்பும், வெளிப்படையாக எல்லா உணர்ச்சிகளையும் தடையின்றிப் பேசுவதும் கவிதைக்குள் வந்தன. எனவே உண்மையிலேயே இது புதுக்கவிதை ஆயிற்று. இவற்றோடு ஒரு துயரம் சார்ந்த வாழ்க்கை நோக்கும் இவற்றில் இருந்தது.

மேற்கூறியவை யாவும் மேற்கு நாடுகளில் நவீனத்துவம் (மாடர்னிசம்) என்று சொல்லப்பட்டதன் இயல்புகள். நவீனத்துவம், புதிய பரிமாணங்களைத் தமிழ்க் கவிதைக்குத் தந்தது. புதிய கவிப்பொருட்களை எழுத்து கவிஞர்கள் பயன்படுத்தினர். (சான்றுக்கு, பசுவய்யாவின், ‘உன் கை நகம்’). எழுத்து கவிஞர்களின் சொல்தேர்வு, படிமங்கள், பேச்சோசை போன்ற பண்புகள், இன்னும் பலவிதக் கவிதை உத்திகளில் ஆர்வத்தைப் புதிய தலைமுறைக் கவிஞர்களிடம் ஏற்படுத்தின.

எழுத்து கவிதைகள் முதல் தலைமுறை என்றால், ஞானக்கூத்தன் தொடங்கி இரண்டாம் தலைமுறை எனலாம். பிரம்மராஜன் போன்றவர்கள் அடுத்த தலைமுறையினர் எனலாம்.

கடந்த முப்பதாண்டுச் சாதனைகள், ஒருபுறம், மனிதனின் அந்நியப்பட்ட நிலையையும், வேரற்ற நிலையையும் காட்டுகின்றன. மறுபுறம், தமிழ்க் கவிஞர்களின் சோதனை முயற்சிகள், சவாலை ஏற்றல் ஆகியவற்றையும் காட்டுகின்றன. ஆனால் இக்கவிதைகள் குறைகளே அற்றவை என்றும் சொல்லமுடியாது.

எழுத்து காலத்திற்கு முன்பு வரை, கவிதை சமூகத்தின் பொதுக்குரலாக கூட்டுக்குரலாக அமைந்திருந்தது. எனவே அதற்கு அங்கீகாரம் எளிதில் கிடைத்தது. ஆனால் எழுத்து கவிதைகளில்தான் கவிதை தனிமனித வெளிப்பாடு என்பது ஓர் அதிர்ச்சியூட்டும் விதத்தில் உணரப்பட்டது. அதனால் இவ்விதக் கவிதையை மார்க்சிய முகாமைச் சேர்ந்தவர்கள் எதிர்த்தனர்.

தனிநபரின் அந்நியமாதலை உணர்த்தும் குரலாக அமையும்போதே கவிதை சமூகப் பிரச்சினைகளையும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். (சான்று, பாப்லோ நெரூடா, பிரெஃட் போன்றோரின் கவிதைகள்). எழுத்து கவிதைகள் இத்தகையனவாக இல்லை. எழுத்து கவிஞர்கள், பாப்லோ நெரூடாவையும் பிரெஃடையும்விட, எஸ்ரா பவுண்ட், டி.எஸ். எலியட் போன்றவர்களையே தங்கள் முன்மாதிரிகளாகக் கொண்டனர். எழுத்து கவிதைகளில் சமூகத்தன்மை அருகியிருந்த காரணத்தினால்தான், வானம்பாடி இயக்கம் தோன்றியது.

எழுத்து கவிதைகளில் பல, படிம நிலையில் சிறப்பாக இருந்தபோதிலும், தமிழின் வழக்குமொழியோசை (இடியம்) சிறப்பான முறையில் இவற்றில் அமையவில்லை. இக்கவிதைகளின் மொழி, ஓர் அந்நியத்தன்மையைக் கொண்டிருந்தது. புதுமைப்பித்தன் கவிதைகளில் காணப்பட்ட இயல்பான பேச்சோசையும் மொழியும் இக் கவிஞர்களிடம் வரவில்லை. இதற்கு யாப்புக் குறைபாடும் ஒரு காரணம். சரியான யாப்பறிவும் பேச்சுமொழியும் இருந்திருந்தால், எழுத்து கவிதை, “யாயும் ஞாயும் யாராகியரோ?” என்ற சங்கக் கவிதையின் நேர்வாரிசாக அமைந்திருக்கும்.

மேலும் எழுத்து கவிதை, கட்டாயம் இருண்மை, தெளிவின்மை, பன்முக அர்த்தநிலை (பொருள்மயக்கம்) போன்றவை கவிதையில் இருக்கவேண்டும் என்பது போன்ற தவறான எண்ணங்களையும் கொடுத்தது. ஆகவே தமிழ்க்கவிஞர்கள் தெளிவும் ஆழமுமே நல்ல கவிதையின் இயல்புகள் என்பதை மறந்தனர்.

வானம்பாடிகளும் சமூகக் கவிதையும்

எழுபதுகளின் இறுதியில் வானம்பாடி இயக்கம் தோன்றியது. இந்த இயக்கத்திலிருந்த கவிஞர்கள் பெரும்பாலோர் தமிழாசிரியர்களாக இருந்தவர்கள். தமிழ் மரபின் வாரிசுகள். இவர்களிடம், கவிதை தனிக்குரலாக அன்றி, சமூகத்தின் பொதுக்குரலாக மறுபடியும் மாறியது. இவர்களின் வரவினால், அதுவரை ஒரு தீண்டாத சாதியாகக் கருதப்பட்டு வந்த புதுக்கவிதை, எல்லாரிடையிலும் ஏற்பும் பெற்றது. தமிழில் மீண்டும் சமூகக் கவிதை பிறந்தது.

ஆனால் வானம்பாடிகளிடம், குணங்களைவிடக் குறைகள் மிகுதியாக இருந்தன. தேவையற்ற வடமொழிக் கலப்பு, அலங்கார நடை, போலிசெய்தல் ஆகியவை மிகுந்தன. அனுபவச் சார்பு குறைந்தது. சமூகக் கவிதை படைக்கவேண்டும் என்று விரும்பிவந்த இவர்கள், உண்மையில் மக்களிடமிருந்து விலகியவர்களாகவும், ரொமாண்டிக் தன்மை கொண்டவர்களாகவும், தப்பிப்புக் கவிதை படைப்பவர்களாகவும் இருந்தனர். அதீதச் சொற்சேர்க்கைகள் (ரத்த புஷ்பங்கள், ராஜராகம், அக்கினி வீணைகள் போன்றவை) இருந்தாலே கவிதையாகிவிடும் என்ற எண்ணம் பிறந்தது.

இவர்களால் வணிக இதழ்களில் புதுக்கவிதைககு அங்கீகாரம் கிடைத்தது. அதனால், துணுக்குகளும், சமத்காரங்களும் மட்டுமே கவிதையாகிவிடும் நிலை ஏற்பட்டது. இதனால் இலக்கியச் சிற்றிதழ்களிலும் அலங்கார வார்த்தைச் சேர்க்கைகள் துணுக்குகள் ஆகியவை கவிதையாகிவிடும் நிலை ஏற்பட்டது. (இம்மாதிரிக் கவிதைகளை இனம் கண்டு, அவற்றை ஒதுக்கிய பிறகே ஒரு சரியான பெருங் கவிதைத் தொகுதியை உருவாக்க முடியும்.)

வானம்பாடி இயக்கத்திற்குப் பிறகு மார்க்சியப் பார்வை கொண்ட சமூகக் கவிதைகள் பிறந்தன. (சான்றுக்கு இன்குலாப்). இவற்றில் அலங்கார வார்த்தைச் சேர்க்கைகள், துணுக்குகள் போன்றவை இருக்காது. ஆனால் அனுபவத்தின் இடத்தைச் சமூகத்தை உற்றுநோக்கிக் காட்சிப்படுத்தும் தன்மை பிடித்திருக்கும். பல சமயங்களில் இவ்வகைக் கவிதைகள் உரத்த குரல் கோஷங்களில் முடியும்.

புதுக்கவிதைகளின் வடிவம்

மேலோட்டமாகப் பார்க்கும்போது, எல்லாப் புதுக்கவிதைகளுமே ஒரேவிதமான அமைப்புக் கொண்டவை போலவே தோன்றுகின்றன. மரபுவழி யாப்புக்கும் சந்தத்திற்கும் பதிலாக, உரைநடையில் இருப்பதுபோல, சிந்தனை அலகு (தாட் யூனிட்) என்பதை வைத்தே புதுககவிதையின் அடிகள் அமைகின்றன. இன்னும் தெளிவாகச் சொன்னால், அண்மையுறுப்புகளின் தொடர்ச்சி, அவற்றின் பின்னர் வரும் தற்காலிக நிறுத்தம் (pause) ஆகியவை, புதுக்கவிதைகளின் ஒலிநயமாக அமைகின்றன. குறுங் கவிதைகள், சிறு கவிதைகள், நெடுங்கவிதைகள் என்று நாம் அடி எல்லையை வைத்து இன்றைய கவிதையைப் பாகுபாடு செய்யலாம். ஆனால் இவற்றிற்கான அடி வரையறை செய்வது எளிதல்ல.

கவிதைப் பகுப்பு

மேற்கில், தன்னுணர்ச்சிக் கவிதை, எடுத்துரை கவிதை, நாடகப்பாங்குக் கவிதை என்னும் மூன்று பிரிவுகள் உண்டு. இவற்றைத் தமிழ்ப் புதுக்கவிதைகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியும்.

பொருள் அடிப்படையில் பிரித்தால், முன்பே கூறியதுபோல, தனிநபர்க் கவிதைகள், சமூகக் கவிதைகள் என்ற பொதுப்பாகுபாடு கிடைக்கும். அல்லது அகம் புறம் என்ற சங்கச் சொற்களைச் சற்றே வேறு அர்த்தத்தில் பயன்படுத்தினால், தனி நபர்க்கவிதைகள் அல்லது எழுத்துபாணிக் கவிதைகளை இன்று அகக் கவிதைகள் என்றும், வானம்பாடிக் கவிதைகள், சமூக நோக்குக் கவிதைகள் ஆகியவற்றைப் புறக் கவிதைகள் என்றும் பிரிக்கலாம்.

1. நாங்கள் நீங்கள் வடிவம்: பெரும்பாலான சமூகக் கவிதைகள், நாங்கள்-நீங்கள் என்ற வடிவம் கொண்டவை ஆயின. இந்தச் சுட்டுச் சொல் வேறுபாடு, மக்கள் நிலையை அல்லது செயல்களுக்கிடையிலான முரணை, அதனால் சமூகச் சார்பைக் காட்டுவதாக அமைகிறது. சான்றாக,

நாங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால்

நீங்கள் சோற்றில் கைவைக்க முடியாது

2. ஏவல் கவிதைகள்: இவ்வகைக் கவிதைகள் ஓர் ஆணையாக, ஏவலாக வடிவம் பெற்றிருக்கும். நீ என்பது ஒடுக்கப்பட்ட சமூக அமைப்பின் உறுப்பினர். நான் வெளிப் படையாக இடம்பெறாது.

பெண்ணே!

உன்னில் பதிந்த அம்பை உருவு!

திருப்பி வீசு!

குறிவைத்து வீசு!

இது இந்தக் கவிதைகளின் பாணி.

3. விவரிப்புக் கவிதை: சமூகத்தின் இருப்புநிலையை மட்டும் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ விமரிசனத்தோடு எடுத்துரைப்பதாக அமைந்தவை இக்கவிதைகள். எடுத்துரைப்புக் கவிதையின் கூறுகள் கொண்டவை. சான்றுக்கு,

கலப்படம் செய்து / கடைவிரித்து / கொள்ளை லாபமடித்து /

மாடிமேல் மாடி கட்டி / மாண்புடன் வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா /

விவஸ்தை கெட்ட / தமிழ் வியாரிபாரிகள் //

எப்போதுமே வியாபாரிகள் முன்தான் /

பல்காட்டிக் கொண்டு நிற்கும் / துப்புக்கெட்ட சமூகம். //

இம்மூன்று வகைக் கவிதைகளிலும், முரண், குறிப்பு முரண், படிமங்கள் போன்றவை சேர்ந்து பலவேறு வடிவ மாற்றங்களை அளிக்கின்றன.

எழுத்து பாணிக் கவிதைகள்

இவற்றின் இயல்புகளை முன்னர்க் கண்டோம். எழுத்துவுக்குப் பின் வந்த நடை, கசடதபற, அஃ, பிரக்ஞை, ழ, கவனம், மீட்சி, போன்ற தூய இலக்கியச் சிற்றிதழ்களில் வெளிவந்த கவிதைகளை எழுத்து பாணிக் கவிதைகள் எனலாம். வானம்பாடிக் கவிதைகளையும் சமூகக் கவிதைகளையும் முன்பு பகுத்தது போன்ற அடிப்படையில் இவற்றையும், நான்-கவிதைகள், நாம்-கவிதைகள், புறப்பொருள் கவிதைகள் என மூவகையாகப் பகுக்கலாம். நான்-கவிதைகள் பொதுவாக, தன்னுணர்ச்சிப் பாங்கா னவையாகவும், நாம்-கவிதைகள் நாடகத் தன்மை கொண்டவையாகவும், புறப்பொருள் கவிதைகள் என்பன தற்சார்பற்ற கவிதைகளாகவும் அமைவதைக் காணலாம்.

நான்-கவிதைகளுக்கு உதாரணம்

காக்கையை எனக்குத் தெரியும்

யாருக்குத்தான் தெரியாது

ஆனால் இந்தக் காக்கையை எனக்குத் தெரியாது

எனக்கு நேரே ஏதோ என்னிடம்…..(ஞானக்கூத்தன், ழ இதழ்)

 

நாம்-கவிதைகளுக்கு உதாரணம்

உனக்கும் எனக்கும் இடையில்

கணக்கில்தான் வேறுபாடு

உன் பலநூறு வருடங்கள்

என் சிறு பொழுதில் விரைந்தோடும்….(ஆனந்த், ழ)

புறப்பொருள் கவிதைகள்-உதாரணம்

மல்லாந்த மண்ணின் கர்ப்ப

வயிறெனத் தெரிந்த கீற்றுக்

குடிசைகள் சாம்பற்காடாய்ப் போயின……

இரவிலே பொசுக்கப்பட்ட அனைத்துக்கும் அஸ்தி கண்டார்

நாகரிகம் ஒன்று நீங்க (கீழ்வெண்மணி, ஞானக்கூத்தன்)

இன்னும் பலவேறு முறைகளிலும் உள்ளடக்க அடிப்படையிலும், எடுத்துரைப்பு முறை அடிப்படையிலும் வடிவ அடிப்படையிலும் இக்கவிதைகளைப் பகுக்கமுடியும். சான்றாக, குறியீட்டுக் கவிதைகள், படிம அடுக்குக் கவிதைகள்….என்பதுபோலப் பகுத்தல் ஒருவகை முறை. உணர்ச்சி வெளிப்பாட்டுக் கவிதைகள், சுயசிந்தனைக் கவிதைகள்….என்பதுபோலப் பகுத்தல் இன்னொரு முறை. மோன்டாஜ் கவிதைகள், கொலாஜ் கவிதைகள் என்பது போலப் பகுத்தல் வேறொரு முறை. எந்தப் பகுப்பிலும் அடக்கமுடியாத சோதனைமுறைக் கவிதைகளும், சர்ரியலிசக் கவிதைகளும் உள்ளன.

ஆட்டோமேடிசக் கவிதைகள் அல்லது தாமே நிகழும் கவிதைகள் என்று ஒரு வகை உண்டு. இத்தகைய முயற்சிகள் சில பிரம்மராஜனாலும், கலாப்ரியாவாலும் செய்யப்பட்டுள்ளன.

சோதனைக் கவிதைகளுக்கு இரு உதாரணங்கள் தரலாம். மீட்சி-33 இல், நாகூர் ரூமி தமிழில் ஒரு கம்ப்யூட்டர் கவிதை என எழுதியுள்ளார். பேசிக் மொழியின் சில கட்டளைகளைப் பயன்படுத்தி கணினித்திட்டம் எழுதும் முறையில் இது எழுதப்பட்டுள்ளது. இக்கட்டளைகளின்படி வாசித்து இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள (?) வேண்டும். விருட்சம்-3இல் நகுலனின் கவிதை இப்படி அமைகிறது.

நில்-போ-வா

வா-போ-நில்

போ-வா-நில்

நில்-போ-வா?

உத்தி அடிப்படையில் நோக்குதல்

கவிஞன், தான் உணர்த்த விரும்புவதை (அல்லது தனது நோக்கத்தினை) நிறை வேற்றுவதற்காக வடிவத்தில் செய்யும் எவ்விதத் தொழில் நுட்பத்தினையும் உத்தி என்கிறோம். தமிழ்க்கவிதைகளில் காணப்படும் முக்கிய உத்தி முரண் (காண்ட்ராஸ்ட்). சமூகக் கவிஞர்களால் வெறுப்பூட்டக்கூடிய அளவுக்குப் பயன்படுத்தப்பட்ட உத்தி இது. (நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம், ஆடைகள் வாங்க….இது போல)

ஞானக்கூத்தன் எள்ளலைச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். (தோழர் மோசிகீரனார், பரிசில் வாழ்க்கை போன்றவற்றைப் பார்க்க). போலிசெய்து எள்ளல் (பேரடி) என்பதும் காணக்கிடக்கிறது. சான்றாக:

களப்பிரர்கள் நாட்டில் திரும்பிவந்த காலம்

இருளாடைக் காரர்கள் ஆளுகின்ற காலம்

…..வாளாத் தமிழர்கள் மங்கிவிட்ட காலம்

மக்கள் வாழ்வு திரைப்படமாய் மாறிவிட்ட காலம் (காலம்-காசியபன், ழ இதழ்)

நந்திக் கலம்பகக் கவிதையைப் போலிசெய்து எள்ளும் கவிதை இது.

சிலசமயங்களில் துணுக்குகள், ஜோக்குகள்கூடப் புதுக்கவிதைகளாய் மாறிவிட்டிருக்கின்றன. சான்றாக,

தெருவெங்கும் பான்சாய்க்காரர்

என் தோட்டத்தைக் காப்பாற்ற வேண்டும். (அப்துல் ரகுமான், அன்னம்விடுதூது)

ஹைக்கூ பாணியில் சில கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் சில நல்ல படிமங்கள் காணக்கிடைக்கின்றன.

இப்படிப் பலவகைகளாகப் பகுத்தாலும் எந்த ஒன்றும் முடிந்த முடிபாக அமைய இயலுமா என்பது அடிப்படைக் கேள்வி.

கவிதைப் பொருள் அடிப்படையில்

கவிஞர்கள் பெரும்பாலும் தத்தமக்கென உரிய, தங்கள் ஆழ்மனத்தில் புதைந்துள்ள கவிப்பொருளையே ஆளுகின்றனர். சான்றாக, பழமலை, விளவை ராமசாமி போன்றோரின் பழையநினைவுக் கவிதைகள். தேவதேவனின் கவிதைகளில் இயற்கைச் சார்பு. பிரம்மராஜன், சுகுமாரன் போன்றோர் கவிதைகளில் எந்திரமயமாதல் எதிர்ப்பு, அணுசக்தி எதிர்ப்பு, சுற்றுச்சூழல் மாசுபடல் எதிர்ப்பு போன்ற பொருள்கள்.

இவையன்றி ஆன்மிகம் சார்ந்த கவிதைகள், சமூகச் சிக்கல்கள் சார்ந்தவை, பாலியல் சார்ந்தவை, அறிவியல் சார்ந்தவை, அந்நியமாதல் சார்ந்தவை என்றெல்லாம் உள்ளடக்க அடிப்படையில் பகுக்கலாம்.

மேலே வடிவ அடிப்படையில், உள்ளடக்க அடிப்படையில், உத்திகள் அடிப்படையில் பகுக்கச் செய்த முயற்சிகள் யாவும் இறுதியாகக் கோட்பாட்டு ரீதியாகத் துல்லியமாகப் பகுப்பதற்கு உதவ வேண்டும். கடைசியாக நோக்கும்போது, கோட்பாட்டு அடிப்படையில், அகவுலகம் சார்ந்தவை, புறவுலகம் சார்ந்தவை (சமூகம் சார்ந்தவை, சமூக மாற்றத்தை வேண்டுபவை) என இரண்டே வகைகளில் தமிழ்க்கவிதைகளை அடக்கலாம். எந்தக் காலத்திலும், சமூகத்தைப் பற்றிக் கவலைப்பட்டு சமூக மாற்றத்தை விரும்பும் கவிஞர்கள் உள்ளனர். இதற்கு எதிராகத் தங்களுக்குள் அமிழ்ந்து ஆன்மிக, அகவுலகங்களில் மூழ்கிப் படைக்கும் கவிஞர்களும் உள்ளனர். தமிழில் பெரும்பாலும் இவற்றின் நல்ல கலப்பு உருவாகவில்லை. ஆனால் சமூகக் கவிதைகள் எழுதுவோரில் வெளிப்படையான கூச்சலாக எழுதுவோரும், உள்ளடங்கிய தொனியில் எழுதுவோரும் உண்டு. இவர்களுக்குள் கோட்பாடு சற்றே வேறுபடுகிறது. பெரும்பாலும் இதுவரை நோக்கும் போது, எழுத்துபாணிக் கவிதைகள் பெரும்பகுதி அகவுலகக் கவிதைகளாகவும், வானம்பாடிப் பாணிக் கவிதைகளும் மார்க்சிய இதழ்களில் வெளிவரும் கவிதைகளும் புறவுலகக் கவிதைகளாகவும் அமைந்துள்ளன என்று கோட்பாட்டு அடிப்படையில் நோக்கலாம். இன்னும் சற்றே ஆழமாக நோக்கினால், கருத்துமுதல் வாத அடிப்படையிலான கவிதைகள், பொருள்முதல்வாத அடிப்படையிலான கவிதைகள் என்றும் பகுக்கலாம். மேலும் துல்லியமாகக் கோட்பாட்டு நோக்கில் கவிதைகளைப் பகுக்கும் அளவுக்குக் கவிஞர்களும் கோட்பாடுகளை உணரவில்லை, அல்லது கோட்பாடுகளை வெறுக்கின்றனர் என்றும் கூறலாம், விமரிசகர்களுக்கு இடையிலும் கோட்பாட்டு அடிப்படையில் நோக்கும் பார்வை துல்லியமாக உருவாகவில்லை என்றும் கூறலாம்.