திராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை

thiraavida-iyaaka-1

இருபதாம் நூற்றாண்டில் மூன்று இயக்கங்கள் தமிழ்நாட்டில் முதன்மைபெற்றன. அவை தமிழக இலக்கியப்போக்குகளையும் தீர்மானித்தன. தேசியம்-காந் தியம் என்பது முக்கியமான ஓர் இயக்கமாகச் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் அமைந்தது. பாரதி, வ.வே.சு.ஐயர் முதற்கொண்டு பல எழுத்தாளர்கள் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டவர்கள். அதற்குப் பின் திராவிட இயக்கம் மதிப்புப் பெற்றது. கடைசியாகத் தமிழகத்தில் வந்த இயக்கம் மார்க்சியம்.

காந்திய இயக்கத்தினர் நாவல், சிறுகதை, கவிதைத் துறைகளில் ஓரளவு ஆக்கம் புரிந்தபோதிலும் திறனாய்வுத்துறையில் அவ்வளவாக ஈடுபடவில்லை. இருபதாம் நூற்றாண்டில் காந்தியவாதிகளாகவும் திறனாய்வாளர்களாகவும் எஞ்சியவர்கள் நாமக் கல் கவிஞரும் சி.சு. செல்லப்பாவும் மட்டுமே.

ஆங்கிலேயர்கள் ஏறத்தாழ இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சிக்கீழ் கொண்டுவந்தபோது, இந்தியா முழுவதும் சமஸ்கிருதக் கலாச்சாரமே நிலவுவதாக நினைத்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களுக்கு ஒரு தாழ்வுணர்ச்சி ஏற்பட்டது. சமஸ் கிருதத்தை விடப் பல நூற்றாண்டுகள் பின்னர் தோன்றியவை ஐரோப்பிய மொழி கள். அவை தங்கள் கலாச்சாரத்தை இந்தியாவில் புகுத்த முற்படும்போது தாம் அடிமைகளாக இருந்து அதை ஏற்றுக் கொள்வதா என்ற எதிர்ப்புமனநிலை தோன்றியது. இதனால் தேசியவாதிகள் சமஸ்கிருதத்தின் மேன்மை, இந்திய நாகரிகத் தின் பழமை, வேதங்களின் தொன்மை, உபநிடதங்களின் பெருமை போன்ற வற்றை வலியுறுத்தலாயினர். இந்தியா முழுவதும் ஒரு சமஸ்கிருத எழுச்சி ஏற்பட்டது. இதற்கு சமஸ்கிருத மொழியிலிருந்து நூல்களை மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்ததும் உதவியது.

இந்த சமஸ்கிருத எழுச்சியை தேசியவாதம், இந்திய சுதந்திரப்போருக்கு ஆதரவாக மிக நன்றாகப் பயன்படுத்திக்கொண்டது. பாலகங்காதர திலகர், காந்தியடிகள், வினோபா பவே போன்ற தேசியவாதிகள் பலரும் பகவத்கீதைக்கு உரை எழுதினர். மேலும் தேசிய இயக்கம், இந்தியா என்ற கற்பனையான ஒற்றைத் தேசத்தைக் கட்டி யெழுப்பி, அதற்கு ஒற்றைத் தேசியமொழியாக இந்தியை முன்வைத்தது.

இந்தியா முழுவதும் சமஸ்கிருதக்கலாச்சாரம் உண்மையில் என்றும் நிலவவில்லை, இன்றும் நிலவவில்லை. சமஸ்கிருதத்தை முற்றிலும் தவிர்த்தும் இயங்கக் கூடிய முக்கிய மொழியாகத் தமிழ் இருந்தது. சமஸ்கிருதத்தினாலேயே ஒதுக்கப்பட்ட,, ‘தேசி’ என்று சொல்லக்கூடிய நாட்டார் கலாச்சாரங்களும், பழங்குடி இனத்தவர்களின் கலாச்சாரங்களும் இருந்தன. தெற்கில் திராவிடக் கலாச்சாரம் இருந்தது. மேலும் இந்தியாவில் முஸ்லிம்களும், கிறித்துவர்களும், பார்சி போன்ற பிறமதத்தினரும் இருந்தனர். இந்தியக் கலாச்சாரம் உண்மையில் பன்முகத்தன்மையுடையது. சமஸ்கிருதம் அல்லது இந்துமதம் என்ற ஒற்றைக் கலாச்சார அடையாளம் உடையதல்ல.

எனவே தேசியத்துடன் சமஸ்கிருதமும் இந்தியும் சேர்ந்துவந்தபோது அதை ஏற்றுக்கொள்ளத் தமிழகத்தில் மனத்தடை ஏற்பட்டது. சமஸ்கிருதத்திற்கு இணையாகவோ அல்லது அதற்கும் முற்பட்டதாகவோ உள்ளதோர் கலாச்சார அடையாளத்தைக் கொண்டவர்கள் தமிழர்கள். எனவே தமிழர் தங்கள் அடையாளத்தை முன்வைக்க முற்பட்டனர். கலாச்சார அளவில் வடமொழியை எதிர்ப்பதாகவும், ஆதிக்கநிலையில் இந்தியை எதிர்ப்பதாகவும் இது அமைந்தது.

இன்னொரு வகையிலும் இந்த நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1909இல் மிண்டோ மார்லி குழு இந்தியாவுக்கு வந்தபோது இந்தியச் சாதிகளை வகைப்படுத்த வேண்டிய நிலை உருவாகியது. சாதியடிப்படையில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கை எழுந்தது. பார்ப்பனர்களே எல்லாப் பதவிகளிலும் அமர்ந்திருந்த நிலையில் அடுத்தநிலையில் படித்திருந்தவர்கள் தங்களுக்குப் பதவிகளில் தக்கவாறு இடஒதுக்கீடு வேண்டுமெனக் கேட்டனர். தமிழகத்தில் பார்ப்பனர்-அல்லாதார் என்ற பார்வை உருவாக இதுவும் ஒரு காரணம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சிந்துவெளி அகழ்வாய்வு நடத்தப்பட்டது. சர் ஜான் மார்ஷல், இதனை நடத்தியவர். ஹீராஸ் பாதிரியார் சிந்துவெளி எழுத்துகளைப் படிக்க முற்பட் டவர். இவர்கள் இருவரும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்ற கருத்தை வலுவாக முன்வைத்தனர்.

ஏற்கெனவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ராபர்ட் கால்டு வெல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி, திராவிட மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளினின்றும் (சமஸ்கிருதம் இந்தோஐரோப்பிய மொழிகளில் ஒன்று) வேறுபட்டவை, தமிழ் அதன் மூலமொழி என்ற கருத்தை முன்வைத்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து சங்க இலக்கியங்கள் பதிப்பிக்கப்படலாயின. சங்கஇலக்கியங்கள் வாயிலாகத் தெரியவந்த கலாச்சாரம் முற்றிலும் வடநாட்டுக் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டதாக, சிறந்ததாக இருந்தது.

இவை அனைத்தும் தமிழின் மேன்மையான இடத்தையும், திராவிட மொழிகளில் அதன் முதன்மையையும், சமஸ்கிருதத்தைவிட மூத்ததான அதன் கலாச்சாரத்தை யும் வலியுறுத்துவனவாக அமைந்தன.

எனவே 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்தே திராவிட நாகரிகம் பற்றிய சிந்தனையும் தமிழரின் தொன்மை பற்றிய சிந்தனையும் தமிழ்ப்பற்று மிக்க சிந் தனையாளர்களிடம் தோன்றியிருந்தன. இவ்விரண்டின் முதற்பிரதிநிதி பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை.

     ஆரியர் X திராவிடர், (ஆரியர்கள் = பார்ப்பனர், திராவிடர்கள் = தமிழர்)

     ஆரியரது மொழி சமஸ்கிருதம் X திராவிடரது மூலமொழி தமிழ்,

     ஆரியக் கலாச்சாரத்தை வலியுறுத்துவோர் பார்ப்பனர் X அதனை எதிர்ப்போர்      திராவிடர்

என்ற வகையில் இருமை எதிர்வுகள் முன்வைக்கப்பட்டன. (இன்றும்கூட பார்ப்பனர் கள் நடத்தும் உணவுவிடுதிகளுக்கும் ஆரியவிலாஸ் என்று பெயர்வைப்பதையும், பார்ப் பனர்கள் மட்டுமே ஆர்யா என்று பெயர்வைத்துக்கொள்வதையும் காணலாம். இது இன்றும் மேற்கொண்ட கொள்கைக்கு ஆதாரம் இருப்பதை நினைவூட்டுகிறது.)

இந்த எதிர்வுகளை உட்கொண்டு எழுந்ததுதான் திராவிட இயக்கம். எனவே திராவிடர் இயக்கம், பழமைவாத, மீட்புவாத இயக்கமாகக் காலத்தின் கட்டாயத்தினால் தோன் றிய ஒன்று.

ஆனால் சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்குமான முரண் பழங்காலத்திலேயே தோன் றியிருந்ததை நம்மால் உணரமுடிகிறது. நக்கீரர் பற்றி வழங்கிவரும் கதை இதை உணர்த்தும். குயக்கொண்டான் என்பவன் சமஸ்கிருதம் உயர்ந்தது என்று வாதிட, நக்கீரர் தமிழே உயர்ந்தது என்று வாதிட்டும் இறந்தவனைப் பிழைக்க வைத்தும் நிரூ பித்ததாகக் கதை. இதனைத் தாழ்வு மனப்பான்மையினால் எழுந்த கதை என்றுதான் மதிப்பிட முடியும். இந்தத் தாழ்வு மனப்பான்மையை தமிழுக்கு இலக்கணம் எழுத முன்வந்தவர்களிடமும் காணலாம். இலக்கணக் கொத்து எழுதிய சாமிநாத தேசிகர் என்பவர், “ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று அறையவும் நாணுவரே அறிவுடை யோர்” என்று தமிழை இழித்துக் கூறியுள்ளார்.

’1800ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலினைப் படைத்த வி. கனக சபை, பழந்தமிழர் நாகரிகம் குறித்தும் திராவிடர் வரலாறு குறித்தும் முதன் முதலில் சிந்தித்தவர். திராவிட இயக்கத்தின் பிற முன்னோடிகள் எனப் பின்வருவோரைக் கூறஇயலும்: பரிதிமாற் கலைஞர், (பார்ப்பனராக இருந்தாலும் தனித்தமிழ் வளர்க்க முற்பட்டவர், தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை முதன்முதல் வலியுறுத்தியவரும் ஆவார்), ஞானியாரடிகள் (சைவப்பற்று மிகுந்தவராயிருந்தாலும், திராவிட உணர்வி லும் தனித்தமிழ்ச் சிந்தனையிலும் ஈடுபட்டவர், இந்தித்திணிப்பை எதிர்த்தவர்), திரு.வி.க. (தூய தமிழும் காந்தியமும் சமுதாயச் சிந்தனைகளும் வளர உழைத்தவர்), இப்படிப் பலர் தமிழகத்தில் பழந்தமிழ்ச் சிறப்பையும் திராவிட இனப்பற்றையும் வளர்த்தனர். முற்றிலும் காந்தியவாதியாக இருந்த திரு.வி.க.வும், காங்கிரஸ் இயக்கத் தில் காணப்பட்ட பார்ப்பன ஆதிக்கம் காரணமாகவே திராவிடச் சார்புக்கு மாற நேர்ந்தது.

‘திராவிட’ என்ற சொல்லை அமைப்பு ரீதியாக முதன்முதலாகப் பயன் படுத்தியவர் டாக்டர் சி. நடேசன். 1912இல் உருவாகிய சென்னை ஐக்கிய சங்கம் என்னும் அமைப்பிற்கு 1913இல் திராவிடர் சங்கம் என்ற பெயரை வைத்தவர். (திராவிடன் இல்லம் என்ற மாணவர்களுக்கான விடுதியையும் நடேசன் நடத்தினார்.) இந்தத் திராவிடர் சங்கமே நீதிக்கட்சியாக மாறியது என்று கூறுவர். 1925 காஞ்சிபுரம் மாநாட்டில் பெரியார் காங்கிரஸிலிருந்து பிரிந்து திராவிட இயக்கத்தைத் தொடங் கினார். (இதற்குப் பின்னணியில் வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவியில் நடத்திய பாட சாலையில் உணவுப்பரிமாறலில் சாதிய நோக்கு கடைப்பிடிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் இருந்தன.)

     பழங்காலத்தில் திராவிட என்ற சொல் தமிழை மட்டுமே குறிப்பதாக சமஸ்கிரு தத்தில் கையாளப்பட்டது. அது தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுபவர்களைக் குறிக்கவில்லை. திருஞானசம்பந்தரை சங்கராச்சாரியார் திராவிட சிசு என்று குறித்தது நோக்கத்தக்கது. சமஸ்கிருதத்தின் வாயிலாக இந்த நோக்கு மலையாள, கன்னட, ஆந்திர மாநிலங்களில் பரவியிருந்ததால் அங்குள்ளவர்கள் தங்களை திராவிடர்களாக எண்ணவே இல்லை என்பது நோக்கவேண்டிய ஒன்று. ஆனால் தமிழகத்தில் மட்டும் சில ஆந்திரர்களும் மலையாளிகளும் நீதிக்கட்சியில் ஈடுபட்டிருந்தனர் (அவர்களும் திராவிட என்ற நோக்கினை ஏற்றவர்களா என்பது சந்தேகத்திற்குரியது.)

     1944 ஏப்ரல் 4இல் சேலத்தில் நடந்த மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக மாற்ற அண்ணாதுரை தீர்மானம் கொண்டுவந்தார். (சக்கரவர்த்தி இராஜ கோபாலாசாரியார் கொண்டுவந்த குலக்கல்வி முறையும் இந்தித்திணிப்பும் ஓரளவு இதற்குக் காரணங்கள். 1938இல் இதற்குமுன்பே முதல் இந்தி எதிர்ப்பு இயக்கம் தோன்றிவிட்டது.) அண்ணாவின் தீர்மானத்தை ஏற்ற பெரியார் ஈ.வெ.ரா., புதிய இயக்கத்தை ஆரம்பித்தார். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து திராவிடர் கழகம் உருவாகியது. சில ஆண்டுகள் பின்னர், பெரியார் ஈ.வெ.ரா. திருமணத்திற்குப் பிறகு “கழகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகக் கழக நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டன.”

     இந்நிலையை    மாற்றப் பெரியார் தலைமைப் பதவியை இராஜிநாமா செய்

     யாமல் கழகத்தில் செயலாற்றிக் கொண்டிருப்பதால் இப்பொழுதிருக்கிற நாட்டு

     நிலையில் மக்களின் எதிர்கால வளர்ச்சிக்குப் பெரிதும் ஊறு பயக்கும் என்று

     இக்கமிட்டி கருதுவதால் கழகக் கொள்கைகளும் இலட்சியமும் நசுக்கப்பட்டுப்

     போகும் என்று அஞ்சுவதால் திராவிட முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை

     ஏற்படுத்திக்கொண்டு செயலாற்றுவது

என்று தீர்மானம் கொண்டுவந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் அண்ணா.

     சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் இலக்கியநோக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. பகுத்தறிவை வலியுறுத்துகின்ற சிந்தனை பெருகியது. 1930 முதல் 1965 வரை பேசியும் எழுதியும் பகுத்தறிவுக் கருத்துகளை வளர்த்துவந்தனர் திராவிட இயக் கத்தினர்.

     திராவிட இயக்கங்கள் செய்த பத்திரிகைப் பணி குறிப்பிடத்தக்கது. வடமொழி கலவாத தமிழை ஜனரஞ்சகப்படுத்தியதில் இப்பத்திரிகைகளுக்குப் பெரியபங்குண்டு. நாவல் சிறுகதை போன்ற துறைகளில் சாதனை படைக்கவில்லை என்றாலும், திரைப் படம், நாடகம், கவிதை, பத்திரிகைத் தமிழ் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தது திராவிடஇயக்கம். பட்டிமன்றம் என்ற புதிய சமூகநிகழ்வினை அறிமுகப்படுத்தியதும் திராவிட இயக்கமே.

     பெரியார் 1925ஆம்ஆண்டு குடிஅரசு வார இதழைத் தொடங்கினார் பகுத்தறிவு  எழுத்தாளர்களுக்குக் குடிஅரசு இதழ் வாய்க்காலாக அமைந்தது. 1935ஆம் ஆண்டு விடுதலை நாளிதழ் பெரியாரால் தொடங்கப்பட்டது. 1942இல் திராவிட நாடு என்ற இதழை அண்ணா தொடங்கினார். 1949இல் மாலைமணி என்ற இதழைத் தொடங் கினார். 1953இல் நம்நாடு இதழ் தொடங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியால் முரசொலி இதழ் 1942இல் தொடங்கப்பட்டது. 1963இல் அண்ணாவால் காஞ்சி என்னும் இதழ் தொடங்கப்பட்டது. தமிழ் உலகம், தனிஅரசு, தம்பி, தென்னகம், அறப் போர், தென்னரசு, அறிவுப்பாதை, போர்வாள் போன்ற வார ஏடுகளும், சமதர்மம், குயில், மன்றம், புதுவாழ்வு, குத்து£சி, பூமாலை போன்ற வார ஏடுகளும் நடத்தப் பட்டன.

     தமிழின் முதன்மையை வலியுறுத்தியவர்களில் இரு பிரிவினர் இருபதாம் நூற்றாண்டில் உருவாயினர். ஒருபிரிவினர், கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்று, ஈ.வெ.ரா. பெரியாரின்பின் சென்றவர்கள். இன்னொரு பிரிவினர், சைவ சித்தாந்தக் கொள்கையே தமிழரின் தனிக்கொள்கை என்ற சிந்தனைகொண்டவர்கள். அநேகமாக இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பார்ப்பனரல் லாத புலமை/கல்வித்துறை ஆய்வாளர்கள் அனைவருக்கும் தமிழும், சைவமும் இரு கண்களாகவே இருந்தன. இவர்களை நாம் திராவிட இயக்கத்தினராக ஏற்க முடியாது என்றாலும் திராவிட இயக்கச் சார்பு கொண்டவர்கள் என நோக்கலாம். அல்லது சைவத்தமிழ் ஆய்வாளர்கள் என்று குறிக்கலாம். 1950வரை இந்த நிலை இருந்தது. அதற்குப் பின்னர், புதிய கல்வித்துறை ஆய்வாளர்கள் வந்த போது, அவர்கள் தமிழின் முதன்மையை ஏற்ற திராவிட இயக்கச் சார்பாளராக மாறினர். சைவம் பின்னுக்குச் சென்றது.

     திராவிட இயக்கச் சார்பான சைவசமயப் புலவர்கள், தமது நம்பிக்கைகளை உறுதியாக ஏற்றனர், அவர்கள் சில சமயங்களில் கம்பராமாயணத்தில் உள்ள ஆரியக் கற்பனைகளை மறுத்தும் எழுதினர். தாங்களே சமயத்தை நம்பும் இவர்கள், பிறர் நம்பிக்கைகளை மறுக்கும் முயற்சியில் ஈடுபட்டது ஏன்? சைவசமயம் தமிழரின் முதற்சமயம் என்றால், அதில்மட்டும் புராணக்கதைகள் இல்லையா? இது போன்ற கேள்விகள் இவர்களிடம் ஏன் எழவில்லை என்பது நம் சிந்தனைக்குரியது. பார்ப்பன/ பார்ப்பனிய எதிர்ப்புச் சிந்தனையுடனும் கடவுள் மறுப்புக் கொள்கையுடனும் இலக்கிய விமரிசனத்தில் ஈடுபட்டவர்களை திராவிட இயக்க இலக்கிய விமரிசகர்கள் எனலாம்.

திராவிட இயக்க முன்னோடி, சைவத்தமிழ் ஆய்வாளர்-பெ. சுந்தரம் பிள்ளை

     திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி, மனோன்மணீயம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். மனோன்மணீய நாடகத்தில் தமிழ்த்தெய்வ வணக்கமாக இடம்பெற்ற செய்யுள்தான் இப்போது சிற்சில மாற்றங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைந்துள்ளது. இப்பாட்டில் ‘ஆரியம்போல் வழக் கொழிந்து போகாமல் இளமையாக உள்ளது தமிழ்’ எனக்குறிப்பிடுகின்றார். ‘கன்னட மும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்’ என்று தமிழே தென்னிந்திய மொழிகளின் தாய் என்பதையும் வலியுறுத்துகிறார். தமிழ்நாட்டை திரவிடநாடு என்று குறிப்பிடுகிறார். இச்செய்யுளில் சில விமரிசனங்களும் உள்ளன.

     வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள்

     உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி

என்பதில் வடமொழியின் மனுநூல் மீதான விமரிசனம் அடங்கியுள்ளது.

     பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

     எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

என்பதில் பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களின் இயற்கையான கற்பனைநெறி வயப்பட்ட இலக்கியங்களைக் கற்றவர்கள் பொருளற்ற புராணக் கற்பனைகளை உடைய வடமொழிச் சார்பான நூல்களைப் படிப்பார்களோ என்ற விமரிசனத்தை முன்வைக்கிறார். புராணக்கதைகளையும் சாடுகின்றார். தமிழ், இயற்கையான கற்பனை நெறியில் அமைந்த இலக்கியங்களைக் கொண்டது, வடமொழி அவ்வாறல்ல என்பது உட்கிடை.

     வடமொழிப் புராணக் கதைகளில் சமஸ்கிருதத்தை உயர்த்த வேண்டுமென்று, கல்வித்தெய்வம் சரஸ்வதிக்கு வலது கண் வடமொழி எனவும், தமிழ் அவளுடைய இடது கண் எனவும் புனைந்துரைத்துள்ளனர். (வலப்புறம் உயர்வு, இடப்புறம் தாழ்வு என்ற கருத்து நிலை. இக்கருத்துநிலை பெண்ணை அடிமைப்படுத்துவதாக, சிவன்-பார்வதி அர்த்தநாரீஸ்வர உருவிலும் இருப்பதைக் காணலாம்). அதேசமயம், சரஸ்வதி கிழக்குநோக்கி அமர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். கலைமகள் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தால், அவளது வலது கண் தெற்குப்புறத்திலும், இடக்கண் வடப் புறத்தி லும்தானே அமைந்திருக்க முடியும? எனவே தென்மொழியாகிய தமிழே வாணியின் வலக்கண் என்று புலனாகிறது என்று தர்க்கரீதியாக வாதிடுகிறார் சுந்தரம் பிள்ளை.

     முதன்முதலில் திராவிடர் பெருமையைத் தமது நூல்களின் மூலமாக உணர்த்த முயன்ற இவரைத் திராவிட ஆராய்ச்சிகளின் தந்தை என்று கூறுவது பொருத்தமாகும். சென்னைக் கிறித்தவக் கல்லு£ரித் திங்கள் இதழிலே முதலில் கட்டுரைக¬ளாக வரையப்பெற்றுப் பிறகு நூல்வடிவம் பெற்ற இவரது ஆய்வுரைகள் குறிக்கத்தக்கன என்று கைலாசபதி கூறியுள்ளார். பத்துப்பாட்டு என்னும் பொருள் பற்றிப் பொது வாகவும் நெடுநல்வாடை பற்றிச் சிறப்பாகவும் சொல்லும் ஆய்வுரை The Ten Tamil Idylls  என்பது.

பெரியார் ஈ.வெ. ராமசாமி (1897-1973)

பெரியாரின் இலக்கிய விமரிசனம், அவருடைய பின்வரும் பணிகளோடு தொடர்புடையது.

1. பகுத்தறிவு-கடவுள் எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு.

2. சீர்திருத்தம்-எழுத்துச் சீர்திருத்தம், புராண இதிகாச எதிர்ப்பு, கலப்பு மணம், கைம் பெண் மணம், பெண்ணுரிமை.

3. ஆரிய எதிர்ப்பு-கடவுள் நம்பிக்கை, மூட நம்பிக்கை, விழாக்கள் ஆகியவற்றை எதிர்த்தல்.

4. பொதுவுடைமைச் சார்பு-நிலவுடைமை சார்ந்த கருத்துகளை எதிர்த்தல், வர்க்கப் பிரிவு, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஆகியவற்றை எதிர்த்தல்.

5. இலக்கியம்-புராணங்கள், இதிகாசங்கள் எதிர்ப்பு, மொழி பற்றிய கருத்துகள்.

     பெரியார் ஆராய்ச்சிநூல்கள் எழுதவில்லை. சொற்பொழிவாளராகவே இருந்தவர். மக்களை நேரடியாகச் சென்று அடையவேண்டும் என்பதே அவரது நோக்கம். அவருடைய சொற்பொழிவுத் தொகுதிகள் நூல்களாக வந்துள்ளன. வே. ஆனைமுத்து வின் பெரியார் சிந்தனைக் களஞ்சியம் என்னும் தொகுப்பு முக்கியமானது.

மொழி பற்றிப் பெரியார்

     பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல. அவர் வாழ்நாள் முழுதும் ஆங்கிலத்தைக் கொண்டாடுவதையும் தமிழை இழித்துப் பேசிவந்ததையும் காணலாம். குறிப்பிட்ட இடத்தில் வாழும் மனிதர்கள் தங்கள் கருத்து களைப்பகிர்ந்து கொள்ளத் தாங்கள் உணர்வதிலிருந்து எழுந்ததே மொழி என்னும் அவருடைய கருத்து குறையுடையது. மொழி வெறும் பகிர்வுச்சாதனமாக மட்டும் அமைவதல்ல. அது பண்பாட்டையும் உருவமைக்கிறது என்ற விஷயத்தை அவர் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை.

     தொல்பழங்காலத்திற்கு முன்னரே மக்களினம் எல்லாம் கலந்து பழகும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பின் ஒரே மொழி உலகம் முழுவதும் பரவியிருக்கும் என்பது பெரியாரின் கருத்து. (விடுதலை 15-10-1962 தலையங்கம்). இது கத்தோலிக்கக் கிறித்துவச் சிந்தனை.

     எவ்வாறு மதமானது புகுத்தப்படுகிறதோ அவ்வாறே தாய்மொழியும் புகுத்தப்

     படுவதுதான். மொழிமீது வீணான பற்றுக் கொள்ளக்கூடாது. ஒன்றன் பயனறியாமல்

     தொடர்போ மதிப்போ பற்றோ வைக்கக் கூடாது. ஒருமொழியின் தேவை

     முக்கியத்துவம் எல்லாம் அது பயன்படுகிற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது

     எவ்வளவு பெரிய காவிய, இலக்கியங்களை உடைய மொழியாக இருந்தாலும் சரி.

     மொழி அன்றாட வாழ்வில் அறிவை வளர்ப்பதாக எப்படி உதவுகிறதோ அதைக்

     கொண்டே மொழியை அளக்க வேண்டும்.

என்று விடுதலைஇதழ்க் கட்டுரை ஒன்றில் கூறுகிறார்.

     பயனற்ற ஒன்றை முயன்று கற்பது அறிவற்ற செயல், அதனால் ஆங்கிலத்தைக் கற்கவேண்டுமே தவிர தமிழைக் கற்பதில் பயனில்லை என்றார். சாதிநோக்கிற்காக வடமொழியை இகழ்ந்த பெரியார், சாதியை வெறுத்து சமதர்மத்தை மலரச்செய்ய உதவுவது ஆங்கிலமே என்றார். ஆனால் இப்படிப்பட்டவர், இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் எப்படி மனமுவந்து ஈடுபட்டார் என்பது நம் மனத்தில் எழும் கேள்வி.

     சமூகத்தில் மொழிபற்றி வழங்கிவரும் இருவிதக் கருத்துகளைக் காணலாம். ஒருவிதநோக்கு, மொழி கருத்துணர்த்துவதற்கும் வாழ்க்கையில் பலவிதமான பயன் பாடுகளுக்குமான கருவியே என்பதாகும். இதனைக் கருவிநோக்கு (Instrumental outlook)எனலாம். இப்படிப்பட்டவர்கள் நமக்கு ஆங்கிலம் பயன்படுமானால் அதனையே தாய் மொழியாக வைத்துக்கொள்ளலாமே என்று சொல்பவர்கள். ஆங்கிலப் பள்ளிகளையும் ஆங்கிலக் கல்வியையும் வலியுறுத்துபவர்கள். நம்நாட்டில் பெரும்பாலான பார்ப்பனர் களிடமும் மேட்டுக்குடி மக்களிடமும் இத்தகைய நோக்கே உள்ளது. பெரியாரின் நோக்கு இதிலிருந்து வேறுபட்டதன்று. மொழிபற்றிய வெற்றுக் கூச்சல்கள் கூடாது, அதனால் மொழி வளராது என்ற அளவில் பெரியாரது கருத்துகளை நாம் உடன்படலாம்.

     இன்னொருவித நோக்கு கலாச்சார நோக்கு (Cultural outlook). மொழி வெறும் கருவியல்ல. நமது கலாச்சாரத்தை நமக்குள் உருவாக்குகின்ற ஒன்று. மொழியின்றிக் கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பது இல்லை. எனவே நமது பண்பாட்டை நாம் அறிந்து போற்றவும் அதனைக் கடைப்பிடிக்கவும் மொழி என்பது மிக முக்கியமானது. கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்தது மொழி என்பதால் நமது வாழ்க்கையோடும் இரண்டறக்கலந்த தொடர்புடையது. இம்மாதிரி நோக்குதான் பெரியாரைத் தவிர்த்த ஏனை திராவிட இயக்கத்தவர்களுக்கு இருந்தது. எனவே தமிழுக்காக உயிரும் கொடுப் போம் போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள். இந்தி எதிர்ப்பில் ஈடுபட் டார்கள். பாவாணர் முதல் பெருஞ் சித்திரனார், குணா வரை இத்தகைய நோக்கில் ஊறியவர்கள்.

     இந்தப் பார்வையின் கிளைத்தேற்றங்கள் பின்வருமாறு அமையும்:

1. மொழி நமது கலாச்சாரத்திற்கு ஆதாரமானது. எனவே அதைப் பிறமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து காக்கவேண்டும். இல்லாவிட்டால் அது அழிந்துவிடும்.

     (அதனால்தான் மொழிக்காவலர், முத்தமிழ்க்காவலர் போன்ற காவல்காரச் சொற்களை விரும்பிப்பட்டங்களாக ஏற்றார்கள் திராவிட இயக்கத்தினர்)

2. மொழி அழிவதிலிருந்து காப்பாற்றவேண்டுமென்றால் புதிதுபுதிதாகச் சொற்களை உருவாக்க வேண்டும். அவை தனித்தமிழ்ச் சொற்களாக அமையவேண்டும்.

     (இதன் விளைவாகத் தமிழுக்கு நல்ல தமிழ்ச் சொற்கள் கிடைத்தன. குறிப்பாக முப்பதுகளின் இறுதியில் சென்னைமாகாணத் தமிழ்ச்சங்கம் கலைச்சொல்லாக்கத்தில் ஆற்றிய பணி சிறப்பானது).

     மூன்றாவதான ஒரு சிந்தனைப் போக்கும் உள்ளது. அதுதான் மிகவும் முக்கியமானது. மொழியின்றிச் சிந்தனை இல்லை. ஒருவன் குழந்தைப் பருவத்தில் சிந்திக்கத் தொடங்குவதே மொழியின் வாயிலாகத்தான். மொழியற்ற விலங்குகளுக்கோ, அல்லது ஓநாய்மனிதன் (நாகரிகமின்றி விலங்குகளுக்கு மத்தியில் காட்டில் வளர்ந்த மனிதன்) போன்றவர்களுக்கோ சிந்தனை என்பது கிடையாது. அடிப்படை உள்ளுணர்வுகள் (basic instincts) மட்டுமே உண்டு. பசி, பாலியல் நாட்டம், எதிரிகளிடம் பயம் போன் றவை அடிப்படை உணர்வுகள். எனவே மனிதன் மனிதனாக இருப்பதில் சிந்தனை-பகுத்தறிவு மிக முக்கியமானது. பகுத்தறிவை உண்டாக்குவது மொழி. ஃப்ராய்டுக்குப் பின்வந்த லக்கான் போன்ற பின்னமைப்புவாதிகள், மனிதன் சமூகத்திற்குள் புகுவதே மொழியின் வாயிலாகத்தான் என்று கூறியுள்ளனர். எனவே மொழியில்லையேல், சிந்த னையில்லை, சமூகம் என்பது இல்லை, பண்பாடு இல்லை, சுருங்கச் சொன்னால் எதுவுமே இல்லை.

எழுத்துச் சீர்திருத்தம்

     மொழியும் எழுத்தும் ஒன்றே எனப் பலர் நினைக்கின்றனர். அது தவறு. ஒரு மொழியைப் பலர் பலவிதமான எழுத்துமுறைகளால் எழுதலாம். அதனால் மொழி மாறுபடுவதில்லை. எந்த எழுத்து வகையில்-லிபியில் எழுதினாலும் மொழி தனது தனித்தன்மையைப் பெரும்பாலும் இழப்பதில்லை. சமஸ்கிருதம், கிரந்தம், நாகரி, ரோமன் முதலிய எழுத்து வடிவங்களில் இன்று எழுதப்படுகிறது. ரோமன் லிபியில் படிக்கும் ஒருவன் தான் சமஸ்கிருதம் படிப்பதாக உணர்கிறானே ஒழிய ஆங்கிலமோ, ஜெர்மனோ படிப்பதாக நினைப்பதில்லை. இதற்குக் காரணம் மொழி என்பது லிபி யில் (எழுத்துவடிவத்தில்) இல்லை,

     (இன்று தமிழ்வாக்கியங்களையும் ரோமன் எழுத்துவடிவில் எஸ்எம்எஸ் அல்லது மின்னணுஅஞ்சல் போன்றவற்றில் அனுப்பும் வழக்கம் வந்துவிட்டதால் இந்தக் கருத்து இக்கால இளைஞர்களுக்கு எளிதில் புரியும்.)

     மேலும் லிபி அல்லது எழுத்துமுறை அல்லது வரிவடிவம் என்பது காலத் திற்குக் காலம் மாறி வருவது. தமிழின் எழுத்துமுறை எப்படியெல்லாம் மாறிவந்திருக் கிறது என்பதை ஐராவதம் மகாதேவன் போன்ற எழுத்து வல்லுநர்கள் பல நூல் களில் விளக்கியுள்ளார்கள். பெரியார் எழுத்தைப்பொறுத்தவரையில் மிகவும் முன் னேற்றமான கருத்துகளைக் கொண்டிருந்தார். அதனால் எழுத்தமைப்பில் சில சீர்திருத் தங்களைச் செய்தார். அவை இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இலக்கிய விமரிசனம்

     தமிழிலக்கியம் எல்லாமே பார்ப்பனரின் வருகைக்குப் பின்னர் இயற்றப் பட்டதே. தமிழனுக்கு என்று தனித்த இலக்கியம் ஒன்று கூட இல்லை என்பது பெரியார் கருத்து. சங்க இலக்கியத்திற்குப் பிறகு தமிழரின் நாகரிகம் பண்பாடு கலை போன்றவற்றைக் காண்பது அரிது. நமக்கு இருக்கும் இலக்கியங்கள் எல்லாம் கடவுள் தன்மையைப் புகுத்தக்கூடியதாக, மடமையை வளர்க்கக் கூடியதாக, அறிவைப் பாழாக்கக்கூடியதாக, நம்மை மானமற்றவராக்கி இழிவு படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. நமது இலக்கியங்கள் தன்னம்பிக்கையை இழக்கச் செய்கின்றன என்கிறார். சில சமயங்களில் பெரியாரின் வாதங்கள் நகைச்சுவையாகவும் இருக்கும்:

     பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்க அடிகள் எல்லாம் தமிழ்படித்துச் சாமி

     யானவர்கள். தமிழ் படித்தவனெல்லாம் சாமியானானே தவிர எவனும் பகுத்தறிவு

     வாதியாகவில்லை.

     சங்கஇலக்கியம் பற்றிப் பெரியார் அதிகம் பேசவில்லை. அவர் அதிகமாகக் குறைகூறாத ஒரே இலக்கியம் திருக்குறள்தான்.

திருக்குறள் பற்றிப் பெரியார்

     வள்ளுவர் யார், எந்தக் குலதைச் சார்ந்தவர் என்று நிச்சயமாகக் கூறமுடி

     யாது. வள்ளுவர் ஆரியத்தை எதிர்ப்பவர்; ஆரியக் கருத்துகளைக் கண்டிப்பவர்;

     அவைகளை வெறுப்பவர் என்றுதான் நமக்குத் தெரிகிறது…குறளாசிரியர்

     கடவுளையும் மோட்ச நரகத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. குறளில் அறம்

     பொருள் இன்பம் என்ற அளவில்தான் காணமுடியுமே தவிர, வீடு-மோட்சம்

     பற்றி அவர் கூறியிருப்பதாக இல்லை…திருக்குறளின் முதல் அத்தியாயத்தில்

     கடவுள் வாழ்த்து என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக்

     கொள்கைகள் இடம்பெறவில்லை. கடவுள் வாழ்த்து கூறப்படும் பத்துப்

     பாட்டிலும், ஒரு பாட்டிலாவது வள்ளுவர் கடவுள் என்ற சொல்லைக் கையாள

     வில்லை…வள்ளுவர் கடவுள் வாழ்த்து பாடியிருப்பதெல்லாம் ஒவ்வொரு

     நற்குணத்தை வைத்து அந்தப்படியாக நடக்கவேண்டும் என்பதாகவே பத்துப்

     பாட்டிலும் பத்துவிதமான குணங்களைக் கூறினார்

என்பவை பெரியாரின் கருத்துகள்.

     குறள் முக்காலத்திற்கும் முழுவதும் பொருந்துமென்பது தவறு. இக்காலத்திற்கு ஒவ்வாதனவும் சில அதில் உண்டு; குறளில் காணப்படும் அனுபவ உண்மைகளும், அறிவுப் பண்புகளும், இழிவுநீக்க முயற்சிக்கும் முன்னேற்ற முயற்சிக்கும் பெரும் ஆதரவு தரக்கூடியனவாய் உள்ளன. திருக்குறளில் ஆபாசத்திற்கு இடமில்லை. பாவம் என்பதற்காக பயப்படும் கோழைத்தனமான கருத்துகளுக்கு இடமில்லை. அதனால் தான் அதைக்காட்டிப் பிழைக்கமுடியாது எனக் கருதினர் ஆசாரியர். அதனால் திருக்குறள் அதிக செல்வாக்குப் பெறமுடியாது போயிற்று. திருக்குறள் பெருமையை அடையாததற்குக் காரணம், அது ஒரு திராவிட நூல் என்பதால்தான். குறளிலும் ஆரி யத்திலுள்ளது போலச் சில காட்டுமிராண்டிப் பண்புகள் உள்ளன. மூடநம்பிக்கையும் நிறைந்துள்ளது என்றும் பெரியார் கூறுகிறார்.

சிலப்பதிகாரம் பற்றி

     சேரன் செங்குட்டுவன் மாடலன் என்னும் மறையவனின் சூழ்ச்சிவலை

     யில்சிக்கி ஆரியத்திற்கும் ஆரியமடமைக்கும் மண்டியிட்டவன் ஆனான். ஆரியப்

     படையை வென்ற சேரனால் ஆரியப் பஞ்சாங்கத்தை வெல்லமுடியவில்லை.

     சிலப்பதிகாரத்தால் தமிழகம்பெற்ற பயன் யாது? ஆரியத்தை வென்ற வீரமா?

     ஆரியத்தின் முன் வீழ்ந்த வீழ்ச்சியா?

     கண்ணகி சாபமிட்டு மதுரையை எரிக்கும்போது ஆரியர்களைத் தீ எரிக்கக்

     கூடாது என்று கட்டளையிடுகிறாள்.  இது எப்படிப்பட்ட சூழ்ச்சி?

     சிலப்பதிகாரமானது போன ஜன்மத்தையும் வருகிற ஜன்மத்தையும் கூறி

     தலைவிதியைக் காட்டி மனிதனை இழிவுக்கு அழைத்துச் செல்கிறது. முட்டாள்

     தனமான கற்பையும் பெண்ணடிமைத் தனத்தையும் வலியுறுத்தும்

     சிலப்பதிகாரம் நமக்குத் தேவையா?

     பாண்டியன் விசாரணை செய்து தண்டனை கொடுத்தான் ஆனால் கண்ணகி

     விசாரணை எதுவும் புரியாமல் அப்பாவி மக்களைக் கொல்கிறாள். அவள்

     எப்படிக் கற்புக்கரசியாவாள்? வணங்குவதற்கு உரியவள் ஆவாள்? தெய்வம்

     ஆவாள்? பாண்டியன் குற்றவாளி என்பதுதானே சிலப்பதிகாரக் கதையாக

     உள்ளது? தமிழனைக் குற்றவாளியாக்கிக் காட்டுவதுதான் தமிழர் பண்புகூறும்

     இலக்கியமா?

இப்படியெல்லாம் வினவும் பெரியார் தமக்கே உரிய முறையில் சுருக்கிச்சொல்லி விடுகிறார்: “சிலப்பதிகாரம் விபசாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷமாகும்”.

     கம்பராமாயணத்துக்கும் சிலம்புக்கும் இந்த நாட்டில் மதிப்பு இருக்கிறது என்றால் இந்த

     நாட்டு மக்களுக்கு அறிவும் இல்லை, மானமும் இல்லை, இன உணர்ச்சியும் இல்லை

     என்றுதானே பொருள்…இவைகளின் தன்மையே இப்படி இருந்தால், இவைகளைத்

     தாங்கி நிற்கும் தேவாரம், திருவாசகம், திருமறை, பிரபந்தம், பெரியபுராணம் முதலிய

     குப்பை கூளங்களின் யோக்கியதை எப்படி இருக்கும்?

இராமாயணம் பற்றி

     பெரியாருடைய இராமாயணப் பாத்திரங்கள் என்ற நூல் 1930இல் வெளி வந்தது. இராமாயணப் பாத்திரப் படைப்பின் ஆபாசத்தைச் சுட்டிக்காட்டுவதாக அந்நூல் உள்ளது.

     புத்தநெறி, ஓரளவிற்கு அறிவூட்டுவதாக அமைந்ததால் அதை அழிததுத் தம் நெறியைப் புகுத்தவே இராமாயணக் கதை உருவாக்கபட்டது. புத்தருக்குப் பின்னரே இராமன் கிருஷ்ணன் போன்ற கதைகள் உருவாக்கப்பட்டன.

     கம்பராமாயணம் வெறும் பொய்க்களஞ்சியம். அதன் கற்பனை சிற்றின்ப சாக ரம். ஒருவிதத்தில் இது ஒரு காமத்துப்பால். அதன் நடப்பு காட்டுமிராண்டித் தனத்தின் உருவம்.

1. இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தமானதோ நடந்த நடப்புகளைக் கொண்டதோ அல்ல.

2. காட்டுமிராண்டிக் காலத்திய உணர்ச்சியைக் கொண்டது. ஆரியப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.

3. கோர்வையற்றது. முன்னுக்குப் பின் முரணாக உள்ளது, மனிதப் பண்பிற்கு ஏற்றதல்ல.

4. உண்மையான வீரமும் யுத்த முறையும் இல்லாது கற்பனைவீரமாக உள்ளது.

5. அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தொடர்பில்லை. தேவர்கள் இராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கமில்லை. பாத்திரங்களின் வயது முரண்பாடாக உள்ளது.

6. ஆதாரங்களும் பொருத்தமாகத் தரப்படவில்லை. பாத்திரங்களின் சக்தி சில நேரங்களில் காணாமல் போகிறது.

7. இராமாவதாரம் இராவணனைக் கொல்வதற்கே உருவானது போல் உள்ளது.

     பெரியார் இராமாயணத்தைப் பற்றிக்கூறிய செய்திகள் யாவுமே வான்மீகியின் இராமாயணத்தை அடியற்றி உள்ளனவே தவிரக் கம்பரைப் பற்றியனவாக இல்லை.

புராணங்கள் பற்றி

     புராணம் என்றாலே பொய். கிறுக்கியல் மூளைகளின் படைப்பே புராணங்கள். அக்கிறுக்கியல் மூளைக்கு மதம் என்னும் கள் ஊற்றிச் சாதிநலம் என்னும் தேளையும் கொட்டவிட்டால் அந்த மூளை எப்படிச் செயல்படுமோ அப்படிச்செயல்பட்டதன் வெளிப்பாடே புராணங்கள்.

     கந்தபுராணக் கதையும் இராமாயணக் கதையும் ஒரே அடிப்படைக் கருத்தை உடையதாகும். ஒன்றை ஆதாரமாக வைத்துப் பிறிதொன்று இயற்றப்பட்டுள்ளது. இப்படிச் சொல்பவர், தமது நகைச்சுவைப்பாணியில் சொல்கிறார்:

     மக்கள் காட்டு மிராண்டிகளாய் வாழ்நதபோதே உருவாக்கப்பட்ட கடவுளே சிவன்.

     விஷ்ணு சிறிது நாகரிகமடைந்தபின் உருவாக்கப்பட்ட கடவுள். எனவே சிவன்

     முந்தியவன். அதனால் கந்தபுராணமே இராமாயணத்தைவிட முந்தியதாகும்.

கலைகள்

     கலை கலைக்காகவே என்ற கொள்கையைப் பெரியார் ஏற்கவில்லை. கலை மக்களுக்காக இருக்கவேண்டுமென விரும்பினார். மக்களிடம் மறைந்திருக்கும் அறிவை வெளிப்படுத்தவும் தமக்கு வேண்டியவற்றைக் கற்கவும் து£ண்டுவனவாகக் கலைகள் அமையவேண்டும். கற்கத்தகுந்தவைகளையும் அறியவேண்டியவைகளையும் தொகுத்துத் தருவதே கலைகளின் பணியாக இருக்க வேண்டும்.

     கலையானது வெறும் இன்பமூட்டுவதாகமட்டும் அமைந்துவிடக்கூடாது. மக்கள் முன்னேற்றத்திற்காகவும், சமூகமுன்னேற்றத்திற்காகவும் உழைத்திடுவனவாகத் திகழ்தல் வேண்டும்.

     நம் கலைகளெல்லாம் மூடநம்பிக்கைகளையும் முட்டாள்தன்மைகளையும் விளைவித்து அவ்விளைவின் பயனைப் பார்ப்பனரின் ஏகபோகமாக்கி அதனால் ஆரியப் பார்ப்பனரின் மேலாதிக்கத்திற்கு நல்ல கொழுகொம்புகளாக மாற்றப் பட்டுவிட்டன.

     நாடகக்கலை பிற கலைகளைப் போல வெறும் பொழுதுபோக்கிற்காகவோ காமம் போன்ற சுவையுணர்வுகளுக்காகவோ இருநதுவிடக்கூடாது. நாடகம் என்பது ஒருவிஷயத்தைத் தத்ரூபமாய் நடித்துக்காட்டுவதோடு மக்கள் நடத்தைக்கு வழிகாட்டி யாகவும் ஒழுக்கங்களைக் கற்பிப்பதாகவும் இருக்க வேண்டும்.

     புராணக்கதைகளைக் கலைத்துக்காட்டியதிலும், கலை மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கினைத் தமிழ் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிய வைத்ததிலும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் சமகால வாழ்க்கைக்குமான தொடர்பினைக் கேள்வி கேட்டதிலும் பெரியாரின் முக்கியத்துவம் உள்ளது.

     பாரதியையும் பெரியார், கிறுக்கன் பாரதி என்றுதான் குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்தின் கருத்துநிலையை அதன் இலக்கியங்கள் பெருமளவு வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அதனைத்தீர்மானிக்கவும் செய்கின்றன. பெரியார் அவ்வளவு து£ரம் இலக்கியத்தின் இன்றியமையாமையைக் குறித்துச் சிந்திக்க வில்லை. அவர் இலக்கியப் புலவரோ படைப்பாளியோ அல்ல. என்றாலும் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதன் தேவையை ஓரளவு அவர் உணர்ந்திருந்தார்.

அண்ணாதுரை (1909-1969)

     தி.மு.க. என்னும் கட்சியைத் தொடங்கி 1967இல் ஆட்சியைப் பிடிக்க வைத்தவர் பேரறிஞர் என்று போற்றப்பட்ட அண்ணா. தமிழ் மொழி, இலக்கியம், இனம், நாடு, தமிழர் பண்பாடு ஆகியவற்றில் உணர்வூட்டினார். சிறந்த பேச்சாளராகவும் ஓரளவு நல்ல எழுத் தாளராகவும் திகழ்ந்தார். பத்திரிகைக் கட்டுரைகள், நாடகம், திரைக்கதை, அரசியல் தமிழ், கடித இலக்கியம் என அவரது உரைநடைப் பணி பரந்துபட்டது. எண்ணற்ற கட்டுரைகளைப் படைத்துள்ளார். அதனால் அறிஞர் அண்ணா என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார்.

     உரைநடையில் புதிய இலக்கிய வடிவங்கள் பலவற்றை அண்ணா அறி முகம் செய்தார். ஊரார் உரையாடல், அந்திக் கலம்பகம், கார்ட்டூனாயணம் என்பவை அவற்றுள் சில. மாலைப்பொழுதில், திண்ணையிலும் குளத்தடியிலும் மரத் தடியிலும் ஆண்கள் ஊர்வம்பு அளப்பதுண்டு. இதனை ஊரார் உரையாடல் என அண்ணா வெளியிட்டார். அரசியல், சமுதாயநிலை பற்றி இவற்றில் விளக்கமாகப் பேசுவார். பெண்கள் ஓய்வுநேரங்களில் ஒன்றுகூடி ஊர் வம்பு அளப்பர். இதனை அந்திக் கலம்பகம் என்ற பகுதியாக ஆக்கினார். இவற்றில் மக்கட்பண்புகளையும் அரசியல் போக்குகளையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் அறிவியல் செய்திகளையும் எழுதி னார். அரசியல் கார்ட்டூன்களை வைத்து நகைச்சுவையாகக் கார்ட்டூனாயணம் என்ற பெயரில் எழுதினார்.

     அண்ணாவின் கட்டுரைகள் இலக்கிய மணம் உடையவை. அவரால் தமிழகத் தில் இதழ்கள் படிப்போர் எண்ணிக்கை பெருகியது. அண்ணாவின் எழுத்தினால் இதழ்ச் செய்திகள் இலக்கிய வடிவமாயின. தலையங்கம், கட்டுரை, சிறுகதை, புதினம், உரையாடல், கடிதம், என்னும் வடிவங்களில் சமுதாய, பொருளாதார, இலக்கியச் சிந்தனை களை அளித்தார். நாடகத்திற்குப் புத்துயிர் அளித்தார். நீதிதேவன் மயக்கம், கண்ணீர்த் துளி, இரக்கம் எங்கே, கல்சுமந்த கசடர் என 46 நாடகங்கள் எழுதினார்.

     சில நாவல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அண்ணாவின் மொத்தப்படைப்புகளாக சுமார் 1235க்குமேல் உள்ளன. இவை பதிப் பிக்கப்பட்டவை மட்டுமே. இன்னும் பல அவருடைய குறிப்பேடுகளில் உள்ளன. இதழ்களில் ஆசிரியர் என்ற முறையில் அவர் தீட்டிய இதழுரைகள் இரண்டாயிரத் திற்கும் மேல் என்பர். மேடைப்பொழிவுகள் கிடைப்பவை 200 இருக்கலாம். சட்ட மன்றச் சொற்பொழிவுகள் 1760 என பி. இரத்தினசபாபதி குறிப்பிடுகிறார்.

     ஆரியமாயை, நாடும் ஏடும், ஏ தாழ்ந்த தமிழகமே, நிலையும் நினைப்பும், தீ பரவட்டும், கம்பரசம், போன்ற நூல்களிலும், திராவிட நாடு, காஞ்சி, போன்ற இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளிலும் இலக்கியவிமரிசனங்கள் உண்டு.

     அண்ணாவின் காலத்திற்குமுன் இதழ்களில் மணிப்பிரவாளமும் கொச்சை மொழியும் ஆங்கிலக்கலப்பும் ஆட்சிசெய்தன. விடுதலை, குடிஅரசு, திராவிடநாடு இதழ்களில் தொடர்ந்து எழுதி இந்நிலையை மாற்றினார் அண்ணா. இதழ்களில் செய்திகள், இலக்கியவடிவம் பெறத் தொடங்கின. இதழியல் எழுத்து இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற நெறிமுறை உருவானது. இதனால் இதழ்கள் படிப்போர் எண்ணிக்கை அதிகமானது.

     தலையங்கம், கட்டுரை, சிறுகதை, புதினம், கற்பனை உரையாடல், கடிதம், இசைப்பாடல், கருத்துரை, திறனாய்வு, குறிப்புகள், கார்ட்டூன் போன்ற பகுதிகளில் சமுதாய, பொருளாதார, இலக்கியச் சிந்தனைகளை வழங்கியுள்ளார். சௌமியன், வீரன், குறும்பன், பரதன், துரை, சமதர்மன், ஒற்றன், நீலன், ஆணி, காலன், சம்மட்டி, பேகன், வழிப்போக்கன், வேலன், சிறைபுகுந்தோன், பாரதி, கொழு, நக்கீரன், கிராணிகன், சாவடி, பித்தன் போன்ற  புனை பெயர்களில் எழுதியுள்ளார். ஒரு முழு நேர அரசியல்வாதி என்னும் நிலையில் அவர் செய்த இந்தப் பணிகள் மிகப் பெரியவைதான்.

மொழி எளிமை அவர் வற்புறுத்திய ஒன்று.

     இலக்கியம் கோபுர உச்சியிலிருந்து குப்பைமேட்டுக்கு வரத் தயாராக

     இருக்கவேண்டும். கற்றோரும் மற்றோரும் பண்டிதரும் பாமரரும் பணக்

     காரனும் ஏழையும் படித்துணரும்பாங்கிலே எளிய நடையிலே இயற்கைக்

     கருத்துகள் கவின்பெற எடுத்துரைத்தும், ஏடுகள் எழுதப்படவேண்டும்.

என்று கூறும் அண்ணா நம்நாட்டு இலக்கிய கர்த்தாக்கள் இதற்கு நேர்மாறாகச் செய்து விட்டனர் என்கிறார். பகுத்தறிவற்ற தன்மையுடனே நம் இலக்கியங்களைப் பண்டிதர்கள் உருவாக்கினர். இதனால் சிற்றறிவுடையோர் நூல்களைப் படித்துச் சிந்திக்க முடியாவண்ணம் ஆகிவிட்டது என்று அவர் கூறினாலும், இது முழுவதும் ஏற்கக்கூடிய கொள்கை அல்ல. ஓர் அரசியல்வாதி, சமூகசீர்திருத்தவாதி என்ற அளவில் இது சரி.

     இலக்கியங்களுக்கு உரைஎழுதும்போது அவ்வுரை எளிதாகப் புரியும்படி இருக்க வேண்டும். ஆனால் நம் இலக்கிய உரைகள் மூலநூலைவிடப் பன்மடங்கு கடினமாகத் திகழ்கின்றன என அண்ணா கூறுகிறார்.

     நாட்டின் நிலை நவிலா ஏடு மாளட்டும். இலக்கியம் இறக்கட்டும். கலை

     கலையட்டும். நமக்கு வேண்டுவது ஏட்டைப் புரட்டினால் நாடு, நாட்டின்

     மக்கள், மக்கள் வாழ்க்கை, நாகரிகம், இன்னபிறவும் தெள்ளிதின் விளங்

     குதல் வேண்டும்.

என்பதில் இலக்கியத்தின் சமகாலத்தன்மையை வலியுறுத்துகிறார்.

     ஒரு காலத்திய ஏடுகள் பிறிதொரு காலத்தில் நிலைக்கும் கருத்திற்கும்

     பொருந்தாவெனின் அவை மாற்றப்பட வேண்டும். அந்தந்த காலத்திற்

     கும் கருத்திற்கும் ஒத்த ஏடுகள் உண்டாக்கப்பட வேண்டும். மக்கள் உள்

     ளத்தில் உண்மையை உள்ளவாறு ஊட்டும் ஏடுகள்தான் தேவை. மடமை

     யை மடியவைக்க வழிகோலும் வழிகாட்டும் வளம் பொருந்திய காவியங்

     கள், கதைகள்தான் தேவை. அங்ஙனமில்லாத ஏடுகள் நமக்கு வேண்டாம்.

புதிதாக உருவாக்கும் ஏடுகளை நம் விருப்பத்திற்கு ஆகலாம். பழைய ஏடுகளை மாற்றுவது எப்படி?

     நாவலர்களும் பாவலர்களும் சங்க இலக்கியங்களைச் சுற்றி நாலுபக்கமும் வேலிகள் அமைத்து அங்கே எட்டாத அளவிற்கு எழுப்புச் சுவரை எழுப்பி “உள்ளே ஆடுது காளி, வேடிக்கை பார்க்க வாடி” என்பதுபோலத் “தொல்காப்பியத்தைப் பாரீர்! அதன் தொன்மையைக் காணீர்!” என்று கூறினால் அதனிடம் யார்தான் போவார்கள் என்று சங்க இலக்கியத்தைப் பண்டிதர்கள் ஒளித்துவைத்து விட்டதாகக் கூறுகிறார் அண்ணா.

     தொல்காப்பியத்தைச் சிறுசிறு நூல்களாக வெளியிடவேண்டும். சங்க இலக்கியங்களைச் சிறுசிறுபகுதிகளாக வெளியிடவேண்டும். எல்லோர் வீடுகளிலும் இந்நூல் கள் இருக்க வகைசெய்யவேண்டும் என்பது 1947ஆம் ஆண்டிலேயே அண்ணா சிந்தித்த ஒன்று.

     சங்க இலக்கியப் பாடல்களின் செய்திகளைப் புராணக் கதைக¬ளாக மாற்றி யிருக்கிறார்கள். சான்றாக, மேடையில் நடிக்கப்படும் வள்ளி திருமணத்தைக் கூறலாம். வேட்டைக்குச்செல்லும் தலைவைனைப் பெண்ணொருத்தி கண்டு காதல்கொள்கிறாள். யானையன்று பிளிற அவள் அவன் தோள்களில் சாய்கிறாள் என்பது குறிஞ்சிப் பாட்டின் செய்தி. இச்செய்தியே மதச்சாயம் பூசப்பட்டு வள்ளி திருமணம் ஆகியுள்ளது என்று மானிடவியல்நோக்கில் விமரிசனம் செய்கிறார்.

     ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பு அகம் புறம் என்னும் அமைப்புகள் இரண் டினை அறிந்து அவை மக்கட்குத் தேவை என்பதால் புலவர் இயற்றினர். கட்டற்ற களியாட்டத்திற்கு அல்ல. இல்லற இன்பம் குறைவற்றதாக இருத்தல் வேண்டும். வாழ்க்கை ஒரு கலை. அதனை மக்கள் உய்த்து உணரவேண்டும் என்பதற்காகவே சங்கப்பாடல்கள் இயற்றப்பட்டன என்ற கருத்தையே பின்னர் வ.சுப.மாணிக்கம் உளவியலின் துணையோடு தமது தமிழ்க்காதல் நூலில் நிரூபித்துள்ளார்.

     புராணங்களை அண்ணா பலநிலைகளில்நோக்கித் தம் விமரிசனக் கருத்து களை இதழ்களில் எழுதியுள்ளார். குறிப்பாகக் கம்பராமாயணம் திராவிட இயக் கத்தினரால் வன்மையாகச் சாடப்பட்டுள்ளது. இதற்கு அண்ணாவும்விலக்கல்ல. நடைமுறை வாழ்விற்கு ஒத்துவராத ராமாயணத்தைச் சாடுவதில் அண்ணா உறுதியாக இருந்தார்.

     கலையை அழிக்கின்றனர், கம்பன் புகழை மறைக்கின்றனர் எனப்பழி

     கூறுகின்றனர். கம்பரின் இராமாயணமும் சேக்கிழாரின் பெரியபுராண

     மும் கலை என்று கருதும் அன்பர்கள் ஒரு பெரியாரின் பெயரால்,

     அண்ணாவின் பெயரால் அக்கலை அழிந்துபடும் என்று கூறுவரானால்,

     அத்தகைய கலை கலை ஆகாது. அத்தகைய கலை இருந்தாலும் பயன்

     இல்லை. எமது கலையிலே புரட்சியை  உண்டாக்க விழைகின்றோம்.

என்று தீ பரவட்டும் நூற்கட்டுரையில் சொல்கிறார். ஆனால் புரட்சி உண்டாக்க அண்ணாதுரையிடம் இருந்த திட்டம் அல்லது கொள்கை என்ன?

     இராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் கொளுத்துவதனால் நமது இலக் கியம் அழிந்து விடாது. கம்பர் எழுதியுள்ள முறை தமிழர் ஆரியத்தை ஏற்றுக் கொள் ளத் து£ண்டுகோலாகவும் தமிழினம் ஆரிய இனத் தலைவனிடம் தோற்றுவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளச் செய்வதாகவும் இருப்பதனால் அந்நூலைப்படிக்கும் தமிழினம் அழிந்து விடும் என்கிறார். இலக்கியத்தை வெறும் கருத்துநிலையை மட்டும் வைத்து மதிப்பிட்டது அண்ணாதுரை செய்த தவறு.

     தேவபாடையில் இதனை மூவர் செய்தனர் மூவருள் முதல்வரான வால்மீகியது நூலை நான் மூலமாகக் கொண்டேன் எனக் கம்பர் கூறுகிறார். இங்கே வடமொழி யைக் கம்பர் எப்படி தேவபாடை எனலாம்? ஆரியரால் தேவபாடை எனக் கூறப் படும் வடமொழி எனக் கூறாது கம்பரே ஏற்றுக்கொண்டு கூறுவது தமிழரைத் தாழ்த்துவதல்லவா? பண்டிதர்கள் கம்பரை எந்தத் திறமைக்காகப் புகழ்கின்றனரோ அதே திறமையே தமிழர் கெட வழிசெய்தது.

     கதையிலே வரும் பாத்திரங்களின் மனப்பாங்கையும் செயலையும்விளக்

     குவதிலே கம்பர் மிக சமர்த்தர் என்றுரைப்பர் அறிஞர்கள். அந்தச்

     சமர்த்துதான் குற்றம்குறைகொண்ட ஆரியரைத் தலைவராக்கி வணக்கத்

     துக்குரியவராக மாற்றியது.

வான்மீகி இராமாயணத்தில் குற்றம்குறை கொண்ட பாத்திரங்களைக் கம்பர் ஆரியத் தலைவராக்கி நல்லவர்களாகக் காட்டுகிறார். இது நாம் ஆரிய இனத்தவரை வணங்க வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்டது போலல்லவா உள்ளது?

     இராமன் கடவுளாக்கப்பட்டும் சீதை கற்புக்கணியாக்கப்பட்டும் இராவணன் இரக்கமில்லா அரக்கனாக்கப்பட்டும் அனுமன் ஆண்டவனாக்கப்பட்டும் வாலி கொடியவனாகக் கொல்லப்பட்டும் கூறப்படுவதில் கம்பர் ஒரு ஆழ்வாராகவே மாறி விட்டார் என்றல்லவா தோன்றுகிறது?

     இராவணன் சீதையைக் கவர்ந்தது காமத்தினாலன்று, போர்மரபு முறையி னாலே என்கிறார். அக்காலப் போர்களிலே ஆநிரைகளைக் கவர்தல், மாதரை எடுத் தல், கோட்டையைத் தாக்குதல் என்பன முறைகள். தன் தங்கையை மானபங்கம் செய்த பின்னர் இராமனைப் போருக்கிழுக்க இராமனிடம் எஞ்சியிருந்த விலை மதிக்கக்கூடிய பொருள் சீதை மட்டுமே ஆகையால் சீதையை எடுத்துச் சென்றான்.

     இராவணன் சீதையை பர்ணசாலையுடன் து£க்கிச் சென்றதைச் சுட்டிக்காட்டி இராவணன் பெருந்தன்மையுடன் நடந்துள்ளான் என்கிறார். இராம இலக்குவர்கள் சூர்ப்பணகையை மானபங்கப்படுத்த, இராவணன் சீதையைத் தொடாது து£க்கிச் சென் றதே அவனது உயர்வைக் காட்டுகிறது.

     இராமனைவிடப் பண்பில் உயர்ந்தவன் பரதனே. அதனால் தான் இராமனின் பாத அணிகளைத் து£க்கிச்சென்றான். கற்புக்கு உதாரணமாக அகலிகை சொல்லப்படு கிறாள். ஆனால் அவள் சிறந்த கற்புடையவள் அல்ல என்று எடுத்துக் காட்டுகிறார் அண்ணா. இப்படிப்பட்ட பெண் முன்னால் இராமன் விழுந்துவணங்கியதை எடுத்துக் காட்டி அவன் பண்பினை மதிப்பிடுகிறார். அகலிகையின் மனத்தில் தவறில்லை, அதனால் அவள் கற்புடையவள் என்று இராமன் நினைத்திருக்கலாம். அவ்வாறாயின் அதே அளவுகோலை ஏன் தன்மனைவி சீதைக்குப் பயன்படுத்தவில்லை?

     கம்பராமாயணம் வெறும் பொய்க்களஞ்சியம். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் சிற்றின்ப சாகரம்; நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவம் என்கிறார். தமிழர் தம்மை இகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகக் கம்பர் சீதையைக் கற்புப் பெண் ணாகப் படைக்கிறார். சங்கப் புலவர்களையும் தமிழ் மன்னர்களையும் கடவுளாக்கிப் பார்க்காத பொழுது வடஇந்திய இராமனைக் கடவுள் ஆக்குவது தவறு.

     இராமாயணத்திலுள்ள வீரம் காதல் நட்பைவிட நல்ல சான்றுகள் தமிழி லக்கியத்தில் உள்ளன. கம்பராமாயணம் முழுக்க்வும் ஆபாசமாகவே உள்ளது. பெரிய புராணம் அதிகமான பக்தியை ஊட்டி மக்களை ஏமாற்றுகிறது. தொழில் ஜாதிப் பாகு பாட்டை வலியுறுத்துகிறது. சீர்திருத்தக் கருத்துகள் சிறிதுமில்லை.

     கம்பராமாயணத்தில் ஆபாசச் செய்திகளை அண்ணா தொகுத்துக் கம்பரசம் என்னும் நூலாகப் படைத்தார். எந்தெந்த இடங்களில் ஆபாசச் செய்திகள் மிகுந்துள்ளன என்பதைத் தொகுத்தார்.

 பத்துப்பாடல்களுக்கு ஒரு முறையாவது கம்பர் பெண்களைப் பற்றி வருணிக்கிறார். அயோத்தியிலுள்ள மக்களெல்லாம் அயோக்கியர்களாகவும் காட்டுமிராண்டிக ளாகவும் உள்ளனர். அயோத்தி வீரர்கள் ஓடத்தில் செல்லும் போது பெண்களின் மறைவிடங்களைக் கண்டு மகிழ்கின்றனராம். (குகப்படலம், பாடல் 56). நடிப்புக்கலை யில் சிறந்த நடனப் பெண்கள் தங்கள் உடலை அலங்கரித்து பஞ்சணையில் ஆடவரை அழைக்கின்றனர்.

 அனுமனிடம் இராமன் தன் மனைவி எப்படியிருப்பாள் என்று கூறும் போது சீதையின் முழு உடலமைப்பையும் வருணிக்கிறான். சீதையின் வெளி உடலமைப்பை மட்டும் வருணிக்காது மறைவிடங்களையும் வருணிக்கிறான்.

     வாராழி கலசக்கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள்தன்

     தாராழிக் கலைசார் அல்குல் தங்கடற்கு உவமை தக்கோய்

என்பதுபோன்ற வருணனைகள் கம்பனில் ஏராளம்.

     உலகிலுள்ள எந்தப் பித்தனும் வெறியனும்கூட தன் மனைவியின் மறைவிடத்தை

     வேறொருவனிடம் வருணிக்கமாட்டான். அங்ஙனம் வருணிக்கும் கதாநாயகனை

     எந்த நாட்டு இலக்கியத்திலும் எந்தக்கவியும் சித்திரிக்கவில்லை.

     சீதையும் இராமனும் காட்டுவளம் காணச் செல்கிறபோது இயற்கைக் காட் சிகளை வருணிக்காது இராமன் சீதையின் உடலழகை வருணிக்கிறான். இராமன் சீதையை நோக்கும்போது அவளது கண்ணை மட்டும் நோக்காது உடலுறுப்புக்களைப் பார்த்து ரசிக்கிறான். கடவுளின் அவதாரமும் அயோத்தியின் மன்னனாகப் போகின்ற வனுமாகிய இராமனுடைய மனமே இவ்வாறு உள்ளது!

     இராமன் பட்டாபிஷேகத்திற்கு அரண்மனை அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங் குள்ள இயற்கைக்காட்சிகளைக் கம்பர் பெண் உறுப்புகளோடு உவமைப்படுத்துகிறார். செவிலித்தாயரின் கால்களில் கன்னியர் படுத்திருக்கின்றனர். தெங்கின் குரும்பை போன்று செவிலித்தாயரின் மார்பமைப்பும் தாமரைமலர் போன்று கன்னியரின் மார் பமைப்பும் உள்ளது.

     இராமன் வில்லொடிக்கும்போது சீதையின் மேகலை கீழேவிழுவதைக் கம்பர் வருணிக்கிறார். இராமன் கானகம் செல்லும்போது அயோத்திப் பெண்களெல்லாம் அழுகின்றனர். அவர்களது கண்ணீர் அருவிகள். மலைகளைத் தாண்டி கடலைச் சேர்வது போலப் பெண்களின் உடல்மேல் ஓடுகிறதாம்.

     அதர்மத்தை வீழ்த்தி தர்மத்தைத் தழைக்கச் செய்ய அவதரித்த ஆண்டவன்

     வரலாற்றில் இந்த வர்ணனையா? கடவுள் கதையில் தேவாரம் இருக்கலாம்,

     பக்தி ரசம் சொட்டலாம், தேவரகசியங்கள் வெளியிடலாம். இதையெல்லாம்

     விட்டு காமரசத்தைக் கொட்டுவது முறையா?

என அண்ணா கூறுகிறார். வள்ளுவரும் தம் அனுபவத்தால் உலகம் வியக்கும் இலக் கியம் படைத்தார். ஆனால் கம்பரோ சொந்த நாட்டின் வரலாறும் சொந்தக் கற்பனை யும் மொழி பெயர்ப்பும் அல்லாத ஒன்றைப் படைத்துள்ளார்.

     பெரியபுராணம் பற்றியும் இறையடியார்களின் பத்தித்திறம் பற்றியும் அண்ணா பின்வருமாறு கூறுகிறார். பெரிய புராணக் கதைகளைப்படிப்பதனால் மக்களின்அறிவு பாழ்படுகிறது. பெரியபுராண அடியவர்களின் கதைகளிலுள்ள கடவுள் கருத்துகள் அறிவீனமாக உள்ளன. பெரியபுராணம் வருணாசிரம தர்மத்தைப் போதிக்கிறது. பகுத்தறிவைப் பாழ்செய்வதாகவே இக்கதைகள் உள்ளன. ஜாதியையும் தொழிற்பாகு பாட்டையும் வலியுறுத்துகிறது.

     சமரசம் போதிக்கிறது பெரியபுராணம் என்கின்றனர். புலையனேனும்

     சிவனடியாராக இருந்தால் மோட்சம் பெறுவர் எனக்கூறுகிறது. புலை

     யனேனும் – இதிலுள்ள உம் எதைக் குறிக்கிறது? ஜாதியிலே ஏற்றத்

     தாழ்வு இருக்கிறது, எனவேதான் தாழ்ந்தோரும் பக்தி செய்தால் முக்தி

     பெறலாம் என்கிறது.

     பெரியபுராணக் காலத்துக்குப் பின் நாட்டில் செல்வம் குறைந்துபோயிற்று. பாடுபடுவோர் பட்டினி கிடக்கின்றனர். பாடுபடாத பார்ப்பனர்கள் செழுமையில் வாழ்கின்றனர். மக்கள் கிடைக்கின்ற பொருள்களையெல்லாம் பக்திக்காகச் செல விடுகின்றனர்.

     செல்வம் கொடுத்த தமிழகத்திலே பட்டினிக் குரல். தங்கச் சிலைகள் கோயி

     லிலே. வைரமுடிகள் அவைதம் சிரங்களிலே. சிங்கத் தமிழன் செத்து வீழ்ந்தான்

     பாதையிலே. பஞ்சத்தால். பக்தியையும் சிவத்தையும் உண்டாக்கிய ஏடன்றோ

     என்று கொண்டாடுகிறார்கள் பெரிய     புராணத்தை. ஆனால் அதை நாட்டிலே

     பரப்பி மக்களையும் மன்னரையும் நீறுபூசிகளாக்கிய பிறகு நாடு செழித்ததோ?

     வளம் வளர்ந்ததோ? இல்லை. கிடைத்ததை எல்லாம் ஆலயத்திருப்பணிக்கும்

     அம்மையப்பன் திருவிழாவிற்கும் செலவிட்டு மக்கள் ஓய்ந்தனர்.

     அன்பை போதிக்கும் பெரியபுராணத்தில் சிவபெருமானுக்குப் பிடித்தது மனித உயிர்களே. இறைவனை நேசித்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று பக்தியை வலியு றுத்தும் பக்தனிடம் சீர்திருத்தத்திற்கு ஏது வேலை?

     சிவலிங்கத்தின் கண்ணில் இரத்தம் வடிந்தது என்பதை ஏற்கஇயலாது. கருவில்

     உருவான உடலில்தான் இரத்தம் வடியும். கல்லில் கட்டையில் செம்பில் இரத்

     தம் உருவாகும் என்பது கற்பனையே.

     கடல்நீரை எங்கு மொண்டாலும் உப்புநீராக இருக்கும். பெரியபுராணத்

     தில் சமணர்களைப் பற்றி எங்கு பேசப்பட்டிருந்தாலும் அங்கெல்லாம் அவர்

     களை இழித்தும் பழித்தும் திட்டியும் அன்றோ பேசப்பட்டிருக்கிறது? மறந்

     தேனும் ஒரு சொல்கூட அவர்கள் செய்த நன்மைக்காக அவர்களைப் பாராட்

     டும் குறிப்பு இல்லையே? இப்படிப்பட்ட ஒரு நூலுக்குப் பெரிய புராணம்

     என்ற பெயரைக்காட்டிலும் சமணர் வசைப்புராணம் அல்லது குண்டர்

     புராணம் என்று வைத்திருக்கலாமே?

என்று திராவிடநாடு இதழின் கட்டுரைகளில் எழுதியுள்ளார்.

     அண்ணாவின் விமரிசனக்கருத்துகளின் சாராம்சம் இதுதான்: தமிழறிஞர் களிடம் பற்றின்மையே தமிழ்வளராமைக்குக் காரணம். வாழ்க்கையை உயர்த்த மொழி உதவுகிறது. தமிழரைப்போல் தமிழ்ப்பற்றற்றவர்களை வேறெங்கும் காண இயலாது. இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும். நமது இலக்கியங்கள் வாழ்க்கைக்குப் பொருந்தாதவையாக உள்ளன. சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன.

     பெரியார் இலக்கியத்தில் புலமைக்கல்வி பெறாதவர், எனவே அவரது நோக்கு வெறும் கதைகள் சார்ந்ததாக இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அண்ணா நன்கு படித்தவர். தமிழிலக்கியப் பரப்பு முழுவதையும் ஓர் இலக்கிய மாணவன்போல் அறிந்திருக்க மாட்டார் என்றாலும் சங்க இலக்கியத்தின் முக்கியமான பகுதிகள், சிலப் பதிகாரம், கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள் போன்ற முதன்மையான தமிழிலக்கியப் பகுதிகளை அவர் நன்கு படித்திருப்பார் என நாம் நினைக்கமுடியும். அண்ணாவின் ‘ஏ தாழ்ந்த தமிழகமே!’ பாரதிதாசன் கவிதைகளின் இலக்கியச் சிறப்பு பற்றிய சொற்பொழிவு.

     கலை வாழ்க்கைக்குப் பயன்படுவதாக அமையவேண்டும் என்ற அடிப்படையி லேயே இலக்கியத்தை மதிப்பிடுகிறார். ஆரியர்களின் கொள்கைகள், தமிழருக்கும் அவர்களது பண்பாட்டிற்கும் ஏற்புடையவை அல்ல என்பதனால் எதிர்மறையாக மதிப் பிடுகிறார். மக்களைச் சிந்திக்க வைத்தல், பகுத்தறிவைப் பயன்படுத்தத் து£ண்டுதல் என்ற அளவில் அண்ணாவின் கருத்துகள் ஏற்புடையனவே ஆகும்.

     ஆனால் அவரது இலக்கிய விமரிசன நோக்கு ஏற்புடையதன்று. தமிழிலக்கியத் தைப்போல (அல்லது வடமொழி இலக்கியத்தைப்போலவே) ஏராளமான புராணக் கதைகள் கிரேக்க-ரோமானிய மொழிகளில் உள்ளன. இங்குள்ளவற்றை விட ஆபாச மான வருணனைகளும் அவற்றில் உள்ளன.

     ஆண்களின் நோக்கிலிருந்து பெண்களை வருணித்தல் உலகெங்கும் எல்லா மொழிகளிலும் காணப்படும் வருணனைப் பொது இயல்பு. இதற்குக் காரணம், உலக முழுவதுமே ஆணாதிக்கம் நிலைபேறு கொண்டிருப்பதுதான்.

     அறிவியல் பார்வை தோன்றாத நாட்களில், தெய்வங்களையும் தேவர்களையும் பேய்களையும் மக்கள் நம்பிய அந்நாட்களில், இம்மாதிரிப் புராணக் கதைகள் தோன்று வதில் ஆச்சரியமில்லை. அமைப்பிய அறிஞரான லெவிஸ்டிராஸ், இம்மாதிரிப் புரா ணக் கதைகளை ஆதிஅறிவியல் என்ற மதிப்புத் தந்து நோக்குகிறார்.

     பழங்கால மனிதன் மனத்தில் எழுந்த அறியவேண்டும் என்ற ஆசையைத்தான் புராணக்கதைகள் காட்டுகின்றன. இருத்தல் சார்ந்த வினாக்களுக்கு ஏதோ ஒருவகை யில் அக்கால அறிவுக்கேற்றவாறு அளிக்கப்பட்ட விடை என்றுதான் புராணக்கதை களைக் கொள்ள வேண்டுமே தவிர, இக்கால நோக்கில் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என விமரிசனம் செய்வதில் பொருளில்லை.

     கலையில் எது ஆபாசம்-எது அழகு என்ற முடிவற்ற கேள்வி ஒன்று உண்டு. கலைத்திரைப்படங்களிலும் நிர்வாணக்காட்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றைவைத்து அத்திரைப்படங்களை ஆபாசமானவை என எவரும் முடிவுகட்டுவதில்லை. அதுபோல உலகத்திலுள்ள அனைத்துமொழிக் காப்பியங்களிலும் உடல் சார்ந்த வருணனைகள் உண்டு. அவற்றை வைத்து அவை ஆபாசமானவை, மனத்தைக் கெடுப்பவை அல்லது பண்பாட்டைக் கெடுப்பவை என்று சொல்லி விடமுடியாது.

     இந்தக் கேள்வி ஏறத்தாழ இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பிளேட்டோவின் மனத்தில் எழுந்து, கவிஞர்களை நாடுகடத்தவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். சாக்ரடீஸ், இங்கர்சால் போன்றோரின் அறிவு மரபின் கூறுகளை ஏற்றுக்கொண்ட திராவிட இயக்கத்தினரும் இதே கேள்விகளுக்கு இதே விடைகளை மொழிந்ததில் ஆச்சரியமில்லை.

     பத்தாயிரம் பன்னிரண்டாயிரம் பாடல்கள் வாயிலாகப் பெரிய கதை ஒன்றைக் காவியகர்த்தா படைக்கும்போது அதன் பாவிகம், மொத்தச் செய்தி என்பனவற்றைக் காணவேண்டுமே தவிரத் தனித்தனிப் பகுதிகளாகப் பார்க்கக் கூடாது என்பது முக்கியமானது. மேலும் மிகச் சிறந்த புலமையாளர்கள் தவிர வேறு எவரும் எளிதில் கம்பரை அணுகிவிட முடியாது. கம்பரை முழுதும் கற்கும் திறன்படைத்த திறமை யாளர்கள் இத்தகைய வருணனைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள் என உறுதியாகச் சொல்லலாம். மாறாக, அனைத்துப் பொதுமக்களும், கற்றவரும் கல்லாதவரும்-மன முதிர்ச்சியற்றவர்கள் உட்பட இன்றைய திரைப்படங்கள் (இப்போது தொலைக்காட்சித் தொடர்கள் உட்பட) போன்ற ஊடகங்களாலேயே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் ஆபாசப்போக்கின்றிப் பார்த்துக்கொள்வதே முக்கியமானது.

     அண்ணாவின் இலக்கிய விமரிசனப் பார்வையை நாம் குறைகூற வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. எனினும் இலக்கியத்தில் பகுத்தறிவுநோக்கும் தேவையான ஒன்றேயாகும். இன்றைய இலக்கியம் படிப்பவர்களுக்கு அது இன்னும் மிகுதியாகத் தேவை.

     இன்றும் இதேபோலப் புராணக்கதைகளைக் கருத்துமாற்றமின்றி எடுத்தாண்டு கொண்டிருக்கும் சாதியக்கட்சிகளால் உள்ளன. (இன்றும் இராமன்கட்டிய பாலம் பாக் ஜலசந்தியில் இருக்கிறது என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அதனால் பகுத்தறிவுநோக்கு இன்று மிகுதியாகவே தேவைப்படுகிறது). அறிவியல் நோக்கு என் பது வாழ்க்கையில் முக்கியமானது. இவ்விதத்தில் அறிஞர் அண்ணாவின் பங்களிப்பு முதன்மையானது. திராவிட இயக்கம் கொண்டிருந்தவை போன்ற நோக்குகளை இப்போது நாட்டார்வழக்காற்றிலும் மானிடவியலிலும் பயன்படுத்துவதைக் காணலாம்.

     அண்ணாவின் கம்பரசம் நூலுக்கு அக்காலத்திலேயே பல எதிர்நூல்கள் உருவாயின. சான்றாக, கு. பாலசுப்பிரமணிய முதலியார் என்பவர் எழுதிய கம்பரச மறுப்பு (1951) என்னும் நூலைக் கூறலாம்.

திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் பிறர்

     1947-60 காலப்பகுதியில் திராவிடப்பார்வையிலான திறனாய்வு தீவிரமடைந் தது. பெரியாரைப் பின்பற்றிப் புராண இதிகாச காவியங்களில் காணப்படும் கடவுட் கொள்கை, ஆபாசவருணனைகள் ஆகியவற்றைக் கண்டிக்கும் ஆய்வுநூல்கள்பெருகின. பெரியாரையும் அண்ணாதுரையையும் தவிர்த்த ஏனை திராவிட இயக்கத்தினரின் பார்வைகள் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரிய புராணம், பாரதிதாசன் படைப்புகள் ஆகிய இலக்கியங்களில் மட்டுமே குவிந்திருந்தன. சில சமயங்களில் சங்க இலக்கியத்தைச் சேர்த்துக்கொண்டனர், பிற இலக்கியங்கள் பற்றி அவர்கள் கவலைப்படவும் விமரிசனம் செய்யவும் இல்லை.

     ஆங்கிலப் பேராசிரியராக விளங்கியவர் மு. சி. பூரணலிங்கம் பிள்ளை. அவர் தமிழ் இலக்கிய வரலாற்றையும் எழுதியுள்ளார். திராவிட இயக்கக் கருத்துகளை ஏற்று, இராவணப் பெரியார் என்னும் நூலை வரைந்துள்ளார். பா.வே. மாணிக்கநாயக்கர், கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் என்னும் நூலை எழுதியுள்ளார்.

     இ.மு. சுப்பிரமணிய பிள்ளை (1896-1975), பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க வர். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுக் குடிஅரசு இதழில் சந்திரசேக ரப் பாவலர் என்னும் புனைபெயரில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். தமிழ்த்தாய் என்ற பெயரில் காலாண்டு இதழ் ஒன்றையும் நடத்தினார். சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் உருவாகத் துணைநின்றவர். தமிழ்க்கலைச் சொல்லாக்க முயற்சியில் ஈடுபட்டவர். தமிழ்மொழியின்மீது இவர் வைத்த பற்று அளவற்றது. தமிழ் மொழி உலக மொழி, தமிழரே உலகின் முதல் மக்கள், சைவசமயமே தமிழரின் முதல் சமயம் என்று நம்பினார். இராமாயணத்தில் ஆபாசம் இவரது முக்கியமான நூல் (1929). வடமொழிப் புராணங்கள் இராமன் பிறக்கக்காரணமாகக் கூறும் கதைகள் திருமாலின் தகாத வாழ்வைச் சித்திரிப்பவை. இராமனின் பிறப்பு புனிதமற்ற ஒன்றே யாகும். ஆனால் இராமனை நாம் புனிதனாக வழிபடுகிறோம். தசரதன் யாகம் புரிவதில் யாகத்தின்போது முனிவர்களுக்குத் தன் மனைவிகைளக் கொடுக்கிறான். அதனாலேயே இராமன் சகோதரர்கள் பிறக்கிறார்கள். இராமாயண பாரதக் கதைகள் தமிழர்களுடைய தன்மான வாழ்வைக் கெடுப்பன..

     கைவல்ய சாமியார்,          பெரியாரின் குடிஅரசு இதழில் கடவுள் புராணம் வேதம் சாத்திரம் மூடநம்பிக்கை போன்றவற்றைப் பற்றித் தொடர்ந்து எழுதிவந்தார். மதங் களைக் ‘கட்டுடைத்’துள்ளார். சைவ வைணவ இலக்கியங்களெல்லாம் உயர்ந்த நோக்க மின்றி எழுதப்பட்டவை என்கிறார். பௌத்த சமண சமயங்கள் நமதுநாட்டில் தழைத்த பொழுது அச்சமயங்களை அழிக்க நமது மக்கள் உள்ளத்தில் மோக உணர்வை எழுப்பக்கூடிய நூல்களை எழுதினர். பாமர மக்கள் எதைச் சொன்னால் நம்புவர் என்பதை அறிந்து அதற்கேற்ப இலக்கியங்களைப் படைத்தனர்.

     பெண்களைச் சிறையெடுக்காத தெய்வங்கள் உண்டா? ஒழுக்கத்துடன்

     நடந்த     ரிஷிகள் உண்டா? இப்பொழுது பக்தியோடு அவைகளைப் படிக்

     கிறார்கள். இலக்கிய இலக்கணத்துடன் பிரசங்கமும் செய்கிறார்கள். இவை

     யெல்லாம் பௌத்த சமண மதங்களைத் தொலைக்க ஏற்பட்டனவே.

என்று திராவிட நாடு இதழில் எழுதினார். குடிஅரசு இதழில் எழுதியது இது:

     புராணங்களிலுள்ள கதைகளில் தெய்வாம்சம் இருக்கிறது என்றும் நீதி

     இருக்கிறது என்றும் ஜனங்களிடையே பார்ப்பனர்கள் கூறிவருகிறார்கள்.

     இராமன் பூமியில் பிறப்பதற்கான காரணங்களைப் புராணங்கள்

     சொல்வதை அவர்கள் படித்துப்பார்க்கவேண்டும். அந்நியப்பெண்ணை

     (துளசி என்பவளை) அனுபவித்ததற்காக விஷ்ணுவுக்குக்கிடைத்த தண்ட

     னையே இராமாவதாரம். இது பிராமணரின் ஆதிக்கம் எங்கும் தடை

     யில்லாமல் நிலைநிறுத்திக் கொள்ள எழுதப்பட்டதாகும்.

தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கத்தை அவர் முற்றாக நிராகரித்தார்.

     இராமாயணக் கதைள், பாரதக்கதைகள், சைவவைணவ புராணங்கள் எல்லா வற்றிலும் காணப்படும் கதைகளை விமரிசிக்கிறார்.

     இராமாயணம் காட்டும் வீரத்தினால் நாம் கற்றுக்கொண்டவை யாவை?

     இராம பஜனை, நாமசங்கீர்த்தனம், துளசிமாலை, உண்டியல், பெருமாள்

     பிரசாதம் இவைகளெல்லாம் சேர்ந்த மோட்சம். மேலும் அந்நியரால் அடியும்

     உதையும் குத்தும்பட்டு அங்குமிங்கும் ஓடி ராமா அரங்கா எனக்கூப்பாடு

     போட்டுக் கட்டியழுவதற்கு வீரத்தன்மை வந்ததே யல்லாமல் மனிதனுக்கு

     மனிதன் சமமாக நிற்கும் வீரம் வரவில்லை.

     இன்று நாட்டார் வழக்காற்று விமரிசனம் எழுதுபவர்களுடைய அடிப்படைக் கூறுகள் இவரிடம் உள்ளன.

     அகத்தியர் தெய்வத்திடமிருந்து தமிழைக் கற்றுக்கொண்டு அதை உருவாக்கி

     னார் என்ற கதை ஏற்புடை யதன்று. ஒரு மொழி என்பது சமூகத்தின்

     வெளிப்பாடு. தனிமனிதர் ஒருவர் ஒருமொழியை எக்காலத்திலும் உருவாக்க

     இயலாது.

என்று அறிவியல்பூர்வமாக வாதிடுகிறார்.

     இந்துமதமும் தமிழரும், பெரியபுராண ஆராய்ச்சி போன்ற நூல்களை எழுதியவர் ஈழத்தடிகள். திராவிட நாடு, குடி அரசு இதழ்களில் கட்டுரைகள் வரைந் துள்ளார். திராவிட இயக்கத்தின் வழக்கமான கருத்துகளே இவரிடமும் எஞ்சியுள்ளன.

     வெ.சு. சுப்பிரமணிய ஆச்சாரியார், சிலப்பதிகாரமும் ஆரியக்கற்பனையும் என்ற நூலை 1951இல் எழுதினார். “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஐயர் ஒருவர் புகழ, அவரைப் பின்பற்றிய போலித்தமிழரும் புகழ்வாராயினர். ஆரியப் பண்பாட்டினைப் பரப்பும் நூலை அவர்கள் புகழாது வேறு யார்தான் புகழ்வது?” என்று கேட்கிறார் அவர்.

     இப்படிப்பட்டஆராய்ச்சிகளைப் பெரியாரே தோலுரித்துக்காட்டியிருக்கிறார்.

     இது சாதிக்கேற்ற ஆய்வு. சுப்பிரமணிய ஆச்சாரியார் பொற்கொல்லர் வகுப்பைச்

     சேர்ந்தவர் என்பதால் சிலப்பதிகாரத்தை வெறுக்கிறார், ஆர்.கே. சண்முகம் செட்டி

     யார் வணிக வகுப்பைச் சேர்ந்தவர் ஆதலின் சிலப்பதிகாரத்தைப் பாராட்டுகிறார் என்கிறார் பெரியார்.

     பாரதிதாசன்(1891-1964) கட்டுரைகள் ‘மானுடம் போற்று’ என்னும் தலைப்பில் வெளி வந்துள்ளன. ‘பாரதிதாசன் பேசுகிறார்’ என்ற நூலிலும் அவரது கட்டுரைகள் உள்ளன. தாம் நடத்திய குயில் இதழுக்காகவும் பல கட்டுரைகள் எழுதி வெளி யிட்டார். திருக்குறளின் ஒரு பகுதிக்கு திராவிட இயக்கநோக்கில் உரை எழுதினார். பலவேறு திராவிட இயக்க இதழ்களிலும் எழுதிவந்தார். குயில் போன்ற பத்திரிகை களை நடத்தினார். வழக்கமான திராவிட நோக்கு எழுத்துதான் இவருடையது. தமிழ்ப் புலவர்கள் புதிதாக இலக்கியம் படைப்பதில்லை. எதையாவது மொழிபெயர்ப்பது, பிற நூல்களைக் குறைசொல்வதுமட்டுமே தம்வேலையாகக் கொண்டுள்ளனர். கம்பராமாய ணத்தையும் பெரிய புராணத்தையும் விட்டால் அவர்களுக்கு வேறு ஒன்றுமில்லை என்று கடிந்து கொள்கிறார்.

     தமிழ் இலக்கியத்தில் ஜாதியும் மதமும் ஆரியரால் புகுத்தப்பட்டவை.

     இதனால் தமிழ்மொழியும் இலக்கியமும் அழிந்து கொண்டிருக்கின்றன.

     சமயச்சார்புடைய கதைகளும் இலக்கியங்களும் கலை அல்ல. இழிவான

     கதைகளை எங்ஙனம் கலை என்று கூற இயலும்? தென்னகத்தவரை

     அரக்கராக, குரங்கினமாகக் குறித்த இராமாயணம் நம்மை இழிவு

     படுத்துகிறது.

     திருக்குறளில் அந்தணர் என வரும் சொல்லிற்குத் துறவறத்தார் எனப்பொருள் தருகிறார். அந்தணர் என்போர் பார்ப்பனர் அல்ல. ஆதி பகவன் என்ற தொடரில் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முப்பண்புகளின் ஒன்றுபட்ட நிலைதான் ஆதி எனப் படுவது. பகவன் என்பது பகல் எனப் பொருள்படும். இதற்கு மதச்சாயம் பூசுவது தவறாகும்.

     பகுத்தறிவு நோக்கிற்கேற்ப, காலத்திற்கேற்ப, பழைய இலக்கியங்களை பாரதி தாசன் மாற்றி வாசித்து நாடகங்கள் இயற்றியுள்ளார். திறனாய்வு என்ற முறையில் அவர் அதிகமாகப் பணிசெய்யவில்லை. இம்மாதிரி மாற்றி வாசிக்கும் இலக்கியப் படிப்பு இன்று பின்னமைப்பியர்கள், பெண்ணியவாதிகள் போன்றோரால் மிக முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. வெறுமனே புராணக்கதைகளைக் கண்டிக்கும் நோக்கினைவிட இது மேம்பட்ட நோக்காகும்.

     திராவிடச் சார்பாளர்கள் அனைவரும் கம்பராமாயணத்தை எதிர்த்தனர். பாரதி தாசனும் அவ்வாறே என்றாலும் தமிழ்க்கவிஞன் என்ற முறையில் அவர் மனநிலை வேறாக இருக்கிறது. டி.கே.சி.யின் கம்பராமாயணப் பதிப்பைப் பற்றி அவர் கவலைப் படுவதைப் பாருங்கள்.

     கோவையிட்ட கம்பனது  செய்யுளிலே முக்காலும்  கோணல் என்றே

     கம்பனார் பதினோரா யிரம்பாட்டில் முக்காலும்  கழித்துப்போட்டு

     நம்பினால் நம்புங்கள்  இவைதான்கம்பன் செய்யுள்என அச்சிட்டு

     வெம்புமா றளிக்கையிலும்  மேவாத செயல்இதனைச் செய்ய இந்தக்

     கொம்பன்யார் எனக்கேட்க ஆளிலையா புலவர்கூட்டந் தன்னில்

எனக் கேட்கிறார் பாரதிதாசன்.

     பாரதிதாசனைப் பாராட்டி எழுந்த நூல்களில் கா. கோவிந்தனின் இலக்கிய வளர்ச்சி (1955), சாமி.பழநியப்பனின் குழந்தை இன்பம் (1956) ஆகியவை குறிக்கத் தக்கவை. இவற்றுக்குப் பின்னர்தான் சாலை இளந்திரையனின் திறனாய்வு நூலான ‘புரட்சிக்கவிஞர் கவிதைவளம்’ வெளிவந்தது.

     குத்து£சி குருசாமி, குடிஅரசு, ரிவோல்ட், இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். உலகத்திலேயே மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பவை சமயஇலக்கியங்களே. முன்னேற்றத்தின் முதற்படியில் காலெடுத்து வைக்கும்போதே சமய இலக்கியம் எனும் பேய் காலைத் தள்ளிவிடுகிறது. மத இலக்கியங்களால் ஒழுக்கமோ ஒழுங்குமுறையோ அன்போ அறிவோ வளர்வ தில்லை. பகுத்தறிவையும் தன்னம்பிக்கையையும் சமத்துவஅறிவையும் அடிப்படை யாகக் கொண்டு அடைய வேண்டிய ஒன்றை மூடநம்பிக்கையாலும் தன்னம்பிக் கையில்லாத் தன்மையாலும் பெற இயலாது. வடமொழிக்கதைகளையும் புராணங் களையும் நமது சமய இலக்கியத்திலிருந்து தள்ளிவிட்டால் அதில் மிஞ்சுவது எதுவுமில்லை என்று 1929 அளவிலேயே குடிஅரசு இதழில் கருத்து வெளியிட்டவர்.

     அ. பொன்னம்பலனார், 1928ஆம் ஆண்டுமுதல் திராவிட இயக்கத்தில் பங்கேற்றவர்.

     நமது இலக்கியங்கள் ஜாதியத்தையும் மதத்தையும் மதவெறியையும் து£ண்டி

     யுள்ளன. எண்ணாயிரம் சமணர்களைக் கொன்ற மதம் உண்மையான மத

     மில்லை. அதன் இலக்கியம் நல்ல இலக்கியமாக இருக்கமுடியாது. கல்வி

     யறிவு, ஆராய்ச்சியறிவு ஊட்டுவ தற்கு பதிலாக மூடநம்பிக்கையையும் வீண்

     பக்தியையும் வளர்க்கிறது. சமண பௌத்த மதக்கொள்கைளை அழிக்கவே

     சைவ வைணவ இலக்கியங்கள் தோன்றின. சமணர்கள் பாரதமக்களே.

     வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. பாரதத்தில் அஹிம்சையை நிலை

     நாட்ட ஆரியரோடு போராடியவர்கள். ஆரிய வேதங்களையும் வேள்வியையும்

     உயிர்க் கொலையையும் எதிர்த்து நின்றவர்கள்.

     சேக்கிழார் பல உண்மைகளை மறைத்து பொய்யைப் பரப்பியுள்ளார். சிவன்

     ஒரு சமூகத்தின் தலைவனாக நின்று மற்றொரு சமூகத்தை அழிக்கநினைப்பது

     கடவுள் தன்மையாக இல்லை. அநபாய மன்னன் சமண சாதுக்களை ஆதரித்த

     தால் சேக்கிழார் தாம் இயற்றியதை சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்

     தார் என்று பொய்க்கதை கூறி மன்னனை மயக்குகிறார்.

     திருநாவுக்கரசர் சமணத்திற்கு எதிராகச் சூழ்ச்சி செய்தவர் என்கிறார். மதுரை மன்னனுக்கு நோய் ஏற்படும்படி செய்ததும் சிவபெருமானால் நோய் நீங்கியது என்பதும் சம்பந்தர் மங்கையர்க்கரசி செய்த சூழ்ச்சியாகும்.

     எல்லா இன மக்களையும் சைவத்திற்கு இழுக்க சம்பந்தர் சிறு தெய்வ வழி பாட்டை ஆதரிக்கிறார். கோயில்களில் பலியிடல், வழிபாடுகள் நடக்கின்றன. நாவுக் கரசர் இதனை எதிர்க்கிறார். ‘தில்லைக்கோயிலில் பலியிடுதல் நடக்க ஏற்பாடு நடந்தது. நாவுக்கரசர் எம்பெருமானுக்கு பலியிட்டு வழிபாடா? நான் சென்று தடுப்பேன்Õ என்று தில்லை செல்கிறார். கோயிலினுள் அவரைக் கொலை செய்கிறார் ஞானசம்பந்தர். மக்களிடம் இவர் உயிரோடு மேலுலகம் எய்தினார் எனக் கதைகட்டிவிடுகின்றனர். இதைத்தான் சிதம்பர ரகசியம் என்றார்கள். சம்பந்தர் மணக்கோலத்தில் இருக்கின்ற போது சமண முனிவர்கள் அவர் வீட்டைச்சுற்றி நெருப்பு வைக்கின்றனர். அதனால் சம்பந்தர் மணக்கோலத்தில் மேலுலகம் சென்றார் எனக் கூறப்படுகிறது.

இவைபோன்று பெரிய புராண நிகழ்ச்சிகளுக்குத் தம் மனம்போனபோக்கில் பொன் னம்பலனார் விளக்கம்கூறியுள்ளார்.

     பொதுவாகப் பழங்காலத்தில் ஒவ்வொரு மொழியையும், இனத்தையும் சார்ந்தே தேசியத்தன்மை (அப்பெயரால் அப்போது அறியப்படாவிட்டாலும்) சார்ந்த சிந்தனை இருந்தது. விவிலியத்திலும் எகிப்தியர்களை வென்று, அவர்களிடமிருந்து இஸ்ரேலியர் கள் தப்பிவந்தனர் என்ற கதையையும், அவர்களுக்குக் கடவுள் உதவி செய்தார் என்ற கற்பனையையும் காணலாம். இங்கும் சமணர்கள் என்ற வேற்றினத்தாரை அழிக்கக் கடவுள் உதவிபுரிந்துள்ளதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.

     புலவர் குழந்தை (1906-72), இராவண காவியம் படைத்தவர். தொல்காப்பியக் காலத் தமிழர், யாப்பதிகாரம், தொடையதிகாரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். பாரதிதாசன் செய்தது போன்ற ஒரு மறுவாசிப்பையே புலவர் குழந்தையும் இராமா யணக் கதையில் செய்துள்ளார் என்ற அளவில் இது பாராட்டத்தக்கது. ஆனால் இராவணன் திராவிடர் தலைவன் என்பதற்கோ, தாடகை தமிழ்ப்பெண் என்பதற்கோ தக்க ஆதாரங்கள் இல்லை.

     திராவிடர்களை வெற்றிகொண்ட ஆரியர்கள் தஸ்யூக்கள் என்று அவர்களை அழைத்தனர். இராவணன் சூர்ப்பநகை முதலிய புராணப் பாத்திரங்களுக்கு இக்கருத் தைப் பொருத்திப் பார்த்தல் இயலாது. ஓர் இனம் இன்னொரு இனத்தை வெற்றி கொள்ளும்போது அவர்கள் சார்பாகக் கதைகள் படைக்கப்படுகின்றன என்ற பொது நோக்கில் மட்டுமே இவற்றைப் பார்க்கவேண்டும். தனித்த மனிதர்களைச் சார்த்தி நோக்குவதற்கு வரலாற்று ஆதாரங்கள் தேவை. ‘திருக்குறளும் பரிமேலழகரும்’ என்ற நூலில் வர்ணாசிரமக் கொள்கைகளுக்குத் திருக்குறள் உடன்பாடானதல்ல என்பதை விளக்கியுள்ளார்.

     கா. அப்பாத்துரை (1907-89), தென்னாட்டுப் போர்க்களங்கள், தென்மொழி, தென்னாடு, உலக இலக்கியங்கள், மொழி உரிமை போன்ற நூல்களைப் படைத்துள் ளார். கலை, இனம், நாகரிகம், வரலாறு, சமயம், தத்துவம் முதலியவை குறித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அப்பாத்துரையின் தென்மொழி, உலக இலக்கியங்கள் ஆகிய நூல்களில் சில மதிப்பீடுகள் உண்டு.

     உலக நாகரிகத்தின் முன்னோடிகள் தமிழர்களே ஆவர். உலக வரலாற்றில் வேறுஎந்த மொழிக்குமில்லாத இளமை, தமிழுக்கு உண்டு. மனித இலக்கியமாகவும் உலகிலுள்ள எல்லாச் சமயங்களின் பொது இலக்கியமாகவும் திகழ்கிறது தமிழ் இலக்கியம். சங்க இலக்கியம் கண்ட தமிழகம் இன்றைய தமிழகத்திலிருந்து மிக உயர்ந்திருந்தது. யாருக்கும் அடிபணியா இலக்கியமாக விளங்கியது சங்க இலக்கியம்.

     அன்றைய தமிழர்கள் வெறும் உழவர்களாகவும் நாட்டுப்புறத்தவராகவும் இல்லாமல் சிறந்த செல்வந்தர்களாக விளங்கினர். சங்கத்தமிழருடைய இசைக் கருவிகள் இன்று நாம் காணும் இசைக்கருவிகளைவிட உயர்ந்தவை. அவர்களுடைய ஆடைஅணிகளும் உயர்ந்தவைகளே. இடைக்காலத்தில் இருந்ததுபோல் அன்று அடிமை     யாக இருக்கவில்லை. கடற்கோளினால் நம் பழம் இலக்கியங்கள் பல அழிந்துவிட சிலப்பதிகாரம் நமக்குக் கிடைத்திருப்பது நாம் பெற்ற பேறு. தமிழக மறுமலர்ச்சிக்கு உதவிய ஏடுகளில் தலை சிறந்தது சிலப்பதிகாரமே. தொல்காப்பியம், சங்கஇலக்கியம், திருக்குறள் இவைகளை விட சிலப்பதிகாரத்தில் மறுமலர்ச்சிக் கருத்துகள் மிகுந்துள்ளன. புதுமலர்ச்சிக்கு உரிய பல விதைகள், து£ண்டுதல்கள் சிலப்பதி காரத்தில் உள்ளன. கம்பராமாயணமும் பெரிய புராணமும் நமக்கு அமிழ்தமாகவோ மருந்தாகவோ அமையவில்லை. இரண்டும் இருவேறு வகையில் நமக்கு ஊறு செய்பவையாகும்.

     சங்ககாலம் பற்றிய பொற்காலப் பார்வையை இவ்வாறு பிறரைவிட காத்திரமாக அப்பாத்துரை முன்வைப்பதைக் காணலாம். அதேபோலச் சிலப்பதி காரத்தைப் பற்றிய இவரது கருத்தும் மாறுபட்டிருப்பதைக் காணலாம்.

     கம்பரிடம் சொற்சுவை பொருட்சுவையைக் காணலாம். அவை பாமர மக்களி டமிருந்து கவிதையைப் பிரிக்கின்றன. ஆனால் சிலப்பதிகாரம் அப்படியன்று. குடிமக் களைக் காப்பியத்தோடு இணைக்கிறது. சிலப்பதிகாரம் நாகரிகத்தின் ஊன்று கோலாக வும் பண்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்கிறது. கம்பராமாயணத்திற்கு முற்பட்ட இலக்கியப் பெருமையை மக்கள் அறிந்துவிடக் கூடாது என்பதற்காக இராமாயணம் புகுத்தப்பட்டது. சிந்தாமணி, கம்பராமாயணத்தைவிட எளிதாகக் கேட்பவர்களைப் பிணிக்கக்கூடியது.

     10ஆம் நூற்றாண்டில் சிந்தாமணிக்கு இருந்த புகழைக்கண்டு கம்பராமா யணத்தையும் பெரியபுராணத்தையும் படைத்தனர். சிந்தாமணி மக்களிடையே பரவாத தாலேயே இவ்விரண்டும் தனிப்பெரும் நூல்களாகத் திகழ்ந்தன.

     பெரியபுராணம், கம்பராமாயணத்தைப்போல ஆரியமாயைக்கு இடம்தர வில்லை. தமிழுக்குச் சிறுமையை அளிக்கவில்லை என்று கூறும்போது பிற திராவிட இயக்கத் திறனாய்வாளர்களுக்கு முரண்படுகிறார்.

     இராவணன் இராமனின் எதிரி மட்டுமல்ல, ஆரிய முனிவர்களின் எதிரியும்

     கூட. காரணம், வேள்விகளுக்கு இராவணன் எதிர்ப்புத் தெரிவித்தான்.

     சி. இலக்குவனார், 1910ஆம் ஆண்டு பிறந்து 67 ஆண்டுகள் வாழ்ந்தவர். பள்ளிகளிலும் கல்லு£ரிகளிலும் பணியாற்றியுள்ளார். தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக் கொண்டவர். குறள் நெறி என்ற தனித்தமிழ் இதழை நடத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைசென்றார். பழந்தமிழ், தொல்காப்பிய ஆராய்ச்சி, தமிழ்மொழி, போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

     தமிழரின் வாழ்க்கை மரபுகளையும் இலக்கிய மரபுகளையும் காப்பதற்காகவே தொல்காப்பியம் படைக்கப்பட்டது. ஆரியரின் ஆதிக்கம் தொல்காப்பியத்தில் தெரிகி றது. சிவனை முதற்கடவுளாகக் கொண்ட வழக்கம் தொல்காப்பியர்காலத்தில் இல்லை. தொல்காப்பியரின் காலத்தை இலக்கியத்தின் பொற்காலம் எனலாம். இடைக் காலத் தில் இலக்கியங்கள் புராணங்களாக மாறிவிட்டன. கடவுட்பாடல்களே இலக்கிய மாயின. இதனால் மக்கள் பக்தர்களாக மாறினர். தொல்காப்பியரின் அறிவியல் சிந்த னை மறைந்து மூடநம்பிக்கைகளும் வீண்பக்தியும் தோன்றின.

     ஓதலும் து£தும் உயர்ந்தோர் மேன என்ற நூற்பாவுக்கு உரையாசிரியர்கள் சிலர் முதலிரு வருணத்தாரே என்று கூறுவர். வேளாளர் ஒழிந்தோர் என நச்சினார்க் கினியர் கூறுவர். காரணம் உரையாசிரியர்கள் காலத்தில் நால்வகை வருணம் செல் வாக்குப் பெற்றது. தொல்காப்பியர் காலத்தில் இல்லை. எனவே தொல்காப்பியர் வேளாளரைத் தாழ்ந்த குலத்தவர் என்று ஒதுக்கியிருக்க இயலாது முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை என்று கூறக்காரணம் பெண்ணை அடிமைப்படுத்துவதன்று. ஆண்கள் பெண்களுடன் வெளியூர் சென்றுவிட்டால் சொந்த நாட்டிற்குத் திரும்பிவர மாட்டார்கள். பெண்கள் வீட்டிலிருந்தால்தான் சொந்தநாட்டிற்கு வருவர். அதற்கா கவே தொல்காப்பியர் இவ்வாறு கூறியுள்ளார். .

     தொல்காப்பியர்காலச் சிந்தனையெல்லாம் மறைந்து மூடப்பழக்கவழக்கம் மலர, இடைக்கால பக்தி இலக்கியங்கள் காரணமாயின என்று சி. இலக்குவனார் கூறுகிறார்.

     ஞா. தேவநேயப்பாவாணர் (1902-81) மொழிஞாயிறு எனச் சிறப்பிக்கப்படுப வர். இவரும் தனித்தமிழ் இயக்கத்திற்கு ஊக்கமளித்தவர். தமிழ்மொழி இலக்கணம், சொல்லாராய்ச்சியில் ஈடுபட்டு எண்ணற்ற கட்டுரைகளைப் படைத்தவர். .

     தமிழரின் கொடைமடத்தைப் பாவாணர் இகழ்கிறார். கொடைமடப்பண்பினால் தான் தமிழர்கள் ஆரியர்க்கு அடிமையாயினர். ஆரியர்கள் தமிழரின் பண்பைப் பயன் படுத்திக் கோயில்களில் இடம்பெற்றுவிட்டனர். பல காணி நிலங்களைத் தானமாகப் பெற்றனர்.

     சிலப்பதிகாரத்தில் ஆரியத் தாக்கம் உள்ளது. பார்ப்பனியத்தைப் பரப்புவதற் கென்றே சிலப்பதிகாரம் படைக்கப்பட்டது என்கிறார். மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிடக் கண்ணகி கோவலன் திருமணம் நடந்தது. கண்ணகியின் தோழி தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண்ணாவாள். மாதவியிடம் கௌசிகன் வசந்தமாலை என் னும் பார்ப்பனர் பணிபுரிந்தனர். மாடல மறையோன் செல்வாக்கு சிலம்பு முழுவதும் உள்ளது. பாண்டியன் நெடுஞ்செழியன் திருட்டுத்தொழில் புரிந்த வார்த்திகன் என்னும் பார்ப்பனனைச் சிறையிலிட, பூசாரி கோயிலைப் பூட்டினான். பார்ப்பனர் போராடி னர். இறுதியில் பாண்டியன் வார்த்திகனை விடுதலைசெய்தான். அவன்காலில் விழுந் தான். எனினும் பார்ப்பனர் கோபம் தணியவில்லை. இச்சம்பவத்தினால் பார்ப் பனரின் செல்வாக்கு புரிகிறது. கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது தவறு. பார்ப்பனரே மன்னன்மீது உள்ள கோபத்தில் மதுரையை எரித்தனர் எனப் பாவாணர் கூறுகிறார்.

     மு. அண்ணாமலை திராவிட இயக்கம் சார்ந்த சிந்தனையாளர்களில் குறிப் பிடத்தக்கவர்.    பேராசிரியராகப் பணியாற்றியவர். 1928ஆம் ஆண்டு செட்டிநாடு கொத்தமங்கலத்தில் பிறந்தவர். அலை, இமயவரம்பன் என்னும் புனைபெயர்களில் எழுதியவர். நல்ல கவிஞர். மலரும் புனலும், தாமரைக் குமரி, அதிசயக் காதலி போன்ற கவிதைத் தொகுதிகளாக அவர் கவிதைகள் வெளிவந்தன. பொன்னி இதழ் வழி எழுதத் தொடங்கிய இவருடைய சிறிய, ஆனால் சிறந்த நூல், நச்சினார்க்கினியர் என்பதாகும். இதுவே உரையாசிரியர்கள் பற்றித் தமிழில் எழுந்த முதல் திறனாய்வு. குற்றம்-நிறை இரண்டையும் சீர்து£க்கிப் பார்க்கும் நூல். மறைமலையடிகளும் திராவிட இயக்கம் சார்ந்தவர்களும் நச்சினார்க்கினியரை அவர்தம் வடமொழிச் சார்புடைய கருத்துகளுக்காகக் கண்டித்துவந்துள்ளனர்.

     நச்சினார்க்கினியரை முழுக்க முழுக்கத் தள்ளிவிட வேண்டும்

     என்று தொடங்குவது அறிவுலகிற்கு ஒவ்வாத செயலாகும்.

     காணும் எல்லாவற்றையும் Ôநன்று நன்றுÕ என அப்படியே வாங்

     கிக் கொள்ளும் சிந்தனையற்ற வறட்டுக்கும்பலையும் நான் சேர்ந்

     தவனல்லன். அவர்கருத்துகள் அத்தனையையும் அப்படியே நான்

     ஏற்றுக்கொள்ள நான் என்ன மொத்த வியாபாரியா? அதற்காக

     Ôநச்சினார்க்கினியர் தமிழைக் கெடுத்துவிட்டார்Õ என்ற பல்லவி

     யைத் திருப்பித் திருப்பிப் பாடும் உதவாக்கரைக்கூட்டத்தைச்

     சேர்ந்தவனும் நானல்லன்.

     இந்த மேற்கோள் இவரது நடுநிலைப்பாங்கான விமரிசனத் தன்மையைக் காட்டக்கூடியது. நச்சினார்க்கினியரின் உரைச்சிறப்புகளை விளக்குகின்ற அதே நேரத் தில், ÔÔஒரு விமரிசகர் உரையாசிரியர் வடிவில் வெளிப்படுமபோது எப்படித் தடுமாற் றம் நிகழ்கிறது என்பதைக் காட்டியுள்ளேன்ÕÕ என்கிறார். Ôவள்ளுவர் தனித்தன்மைÕ என்ற நூலையும் ‘கம்பன் கெடுத்த காவியம்’ என்னும் நூலினையும் எழுதியுள்ளார். அநுமன் து£தன் எனக் கூறப்படுது பொருந்துவதாக இல்லை. து£தனுக்குரிய வேலை களைச் செய்யாது சீதையைத் திருட்டுத்தனமாகச் சந்தித்தல், இராவணனைச் சந்திக்காமை, இலங்கையை அழித்தல் இவையெல்லாம் து£தனுக்குரிய செயல் அல்ல. இராவணன் அம்புபட்டு இறந்துகிடக்கிறான். உடல் முழுக்க காயம். சீதைமேல் கொண்ட காதல் அவனுடலில் எங்கும் தங்கிவிடக்கூடாது என்பதற்காகவே இக் காயங்கள். இவ்வுவமை பொருத்தமானது. ஆனால் இவ்வுவமையைக் கூறுவது இராவ ணன் மனைவி. அவள் தன் கணவன் இறந்திருக்கும் நேரத்திலும் சீதையின் அழகை வருணிக்கிறாள். இராமனை ஒரு வார்த்தைகூட இகழவில்லை. இந்நிகழ்ச்சிகள் யாவும் பொருத்தமுடையவையாகத் தோன்றவில்லை.

     கைகேயியை அனுதாபத்துக்குரியவளாக முதலில் படைத்த கம்பர் இறுதியில் அவளை வெறுப்பதுபோல் அமைக்கிறார். இது கம்பரின் நடுநிலையற்ற தன்மையைக் காட்டுகிறது. கம்பர் சில பாத்திரங்களை உயர்த்தியும், சில பாத்திரங்களைத் தாழ்த்தி யும் காட்டுகிறார். அளவுக்கதிகமான கற்பனைப் பாடல்களால் வாசகரைச் சலிப்படை யச் செய்கிறார். தேவையான இடங்களில் கற்பனை வளத்தைக் கூட்டுவதை விட்டு விட்டு எல்லா இடங்களிலும் புனைவது அழகாக இல்லை. கம்பரின் யாப்பு வன்மை விருததப்பாக்களை அமைத்த முறை, புதுமையிலும் புதுமையாக உள்ளது. கம்பர் ஒருசில குறையுடையவராயிருப்பினும், கவித்திறத்தால் உயர்ந்து நிற்கிறார்.

     1940களின் இறுதியில் வெளியான கலையும் வாழ்வும் (க. அன்பழகன்), புதிய பாதை (இரா. நெடுஞ்செழியன்), விருந்து (மு. அண்ணாமலை), புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் (முல்லை முத்தையா), கவிஞரின் கதை (மணி) போன்ற நூல்களில் பாரதிதாசன் கவிதைகள் பற்றிய நலம் பாராட்டல்கள் இடம்பெற்றன. திராவிட இயக்கம் சார்ந்த இதழ்களான, பொன்னி, திராவிடநாடு, உண்மை போன்ற இதழ் களிலும் இலக்கியம் பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன.

     திராவிடஇயக்கப்பார்வை பன்முகப்பட்டது என்பதற்கு அப்பாத்துரை, மு. அண்ணாமலை போன்றோரின் பார்வைகள் சான்றுதரும். பெரியார் சிலப்பதிகாரத் தையும், பெரியபுராணத்தையும் ஏற்கவில்லை. அப்பாத்துரை, இவையிரண்டையும் நல்லிலக்கியங்களாக ஏற்றுக் கொள்கிறார். அண்ணாதுரை முதற்கொண்டு திராவிட இயக்கத்தினர் கம்பராமாயணத்தை எதிர்த்தபோது அண்ணாமலை அதைப் பாராட்டி யிருக்கிறார்.

     ப. கண்ணன், பகுத்தறிவு என்ற மாதஇதழை நடத்தினார். வீரவாலி என்னும் நூலை எழுதியுள்ளார். வாலியை வீரமிக்கவனாகவும் இராமனைக் கோழையாகவும் காட்டி எழுதப்பட்டநூல் இது. இராமன் ஒளிந்துநின்று வாலியைக் கொன்றது சரியா என்ற கேள்வி உண்டு, வாலியை எதிர்ப்படுபவர்கள் தங்கள் பலத்தில் பாதியை இழந்துவிடுவர் என்ற புராணக்கதை உள்ளது. அதனால் இராமன் மறைந்து நின்று அம்பெய்தான். இதில் இராமனின் இயலாமை வெளிப்படுவதை உணரலாம். சுக்கிரீ வனுக்காக வாலியைக் கொலைசெய்த இராம அவதாரத்தை மனிதர்களை மீட்க வந்தவன் என்று கூற முடியுமா? இராமாயணம் என்பது ஆடுமாடு மேய்த்துவந்த ஆரியர்கள் நம் நாட்டில் நுழைந்தபொழுது திராவிடர்களுக்கும் அவர்களுக்கும் நடந்த போராட்டச் சித்திரிப்பே ஆகும். திருவாரூர் தங்கராசுவும் ஏறத்தாழ இதே போன்ற கருத்துகளைக் கூறியுள்ளார்.

     கலைஞர் கருணாநிதி, திராவிட இயக்கத்தின் தொடக்ககாலத்திலேயே அதிக ஈடுபாடு கொண்டு பெரியார் அண்ணா இவர்களோடு நெருங்கிப்பழகி, திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவராக இன்று வாழ்பவர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திரைக் கதை என்று படைப்பிலக்கியத் துறையில் ஈடுபட்டவர். சங்கத்தமிழ் தொல்காப்பியப் பூங்கா முத்துக் குவியல் குறளோவியம் எனப்பல நூல்களைப் படைத்துள்ள போதிலும் திறனாய்வு நோக்கு இவற்றில் இல்லை. இவரும் சில மறு வாசிப்புகளை வைத்துள்ளார். குறளோவியத்தில் தாழ்ந்தமக்களைத் தலைவர்களாகக் கொள்ளுகிறார். சிலப்பதிகாரக் கதையையும் பகுத்தறிவு முறையில் மாற்றி அமைத்துள் ளார். சான்றாக, மதுரையை எரித்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு சரிந்து விழுந்து குடிசை பற்றிக் கொள்வதாக அமைப்பதைக் காட்டலாம்.

     முடியரசன் (1920-1998), பாரதிதாசன் பரம்பரையில்வந்த கவிஞர். 1940இல் திராவிட இயக்கத்தில் இணைந்தவர். போர்வாள், கதிரவன், குயில் முதலிய இதழ் களில் எழுதினார். வீர காவியம், பூங்கொடி, காவியப் பாவை என்னும் நூல்களை இயற்றியுள்ளார். கவிதையில் வரும் சொல்லழகை அது தரும் அழகுநோக்கி மூன்று வகையாகப் பகுக்கலாம். ஏற்ற இடத்தில் ஏற்ற சொல்லை அமைப்பத ஒருவகை. இதனைச் சொல்லாட்சி என்பர். சொல்லும் சொல்லால் பிற குறிப்புகளும் பெறுமாறு அமைட்பபது மற்றொரு வகை. இதைச் சொல்நயம் என்பர். ஒரு சொல் பல பொருளை உணர்த்தி நிற்பது மூன்றாம் வகை. இதனை இரட்டுற மொழிதல் என்பர். முதல் இரண்டு வகையாகிய சொல்லாட்சியும் சொல்நயமுமே கவிதக்கு மிகச் சிறந்தன என்று கவிதை இன்பம்-சொல்லழகு என்னும் கட்டுரையில் கூறுகின்றார்.

     இடைக்காலப் புலவர்கள் இயற்றியவையெல்லாம் சமயக்காப்பியங்களே. அவை களால் எப்பயனும் இல்லை. மணிமேகலை தமிழ் உணர்வை வளர்க்கிறது. அறிவையும் நீதியையும் தர்மத்தையும் வலியுறுத்துகிறது. தொல்காப்பிய அமைப்பு முறை வேறு எந்த மொழி நூலிலும் இல்லாத அளவு சிறப்பானது.

     வீண் தமிழ்ப்பற்று கொண்டு முழங்குபவரைத் தமிழ் வாணிகர் எனக் குறிப்பிடு கிறார். இலக்கண வரையறைகளுக்கு உட்படாத புதுக்கவிதைகளை அடியோடு வெறுக் கிறார். பழமையைப் பாராட்டுபவர், இடைக்கால இலக்கியங்களை வெறுப்பவர். நவீன இலக்கியங்களில் கனவுத்தன்மை சார்ந்த-ரொமாண்டிக் படைப்புகளை மட்டுமே இவர் போற்றுகிறார்.

     இரா. நெடுஞ்செழியன் (1920-2000), திராவிட இயக்கக் கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். உரிமைப்போர், மதமும் மூடநம்பிக்கையும், திராவிட இயக்க வரலாறு போன்ற நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளில் உவமைநயம், பகுத்தறிவு நெறியே பண்பட்ட நெறி போன்ற இலக்கியக் கட்டுரைகளை மன்றம், திராவிட நாடு, உண்மை, இதழ்களில் எழுதினார். மொழிப்பற்றும் இலக்கியப் பற்றும் கொண்டவர்.

     நாகரிகத்தின் தோற்றமாக வளர்ந்த மொழி தமிழ். வேகமாக முன்னேறிய

     தமிழனின்அறிவு இரண்டாம் நூற்றாண்டுக்குப்பின் நின்றுவிடக் காரணமாக

     அமைந்தது மூட நம்பிக்கையும் குருட்டு பக்தியுமே. அவற்றைப் போதித்தவைகள்

     பக்தி இலக்கியங்களும் புராணங்களும். போர், காதல், என்ற வாழ்க்கை முறை

     மாறி தவம், வரம், என்ற நிலை உருவாகி யாகத்திலும் யோகத்திலும் தன்

     சிந்தனையைச் செலுத்தத் து£ண்டியது புராணங்களே.

     சங்க இலக்கியங்கள் மனிதநலச் சிந்தனையின் முழு வளர்ச்சியாய் உள்ளன.

     ஐம்பூதங்களின் வழியாகத்தான் உலகம் இயங்குகிறது என்பதை வலியுறுத்துகிறது

     சங்க இலக்கியம், உயிரும் ஆன்மாவும் அழிவற்றது என்ற மதவாதிகளின் கூற்றை

     சங்க இலக்கியம் மறுக்கிறது. மூடப் பழக்கவழக்கத்திற்கு எதிரானது சங்க

     இலக்கியம், தொல்காப்பியம் உலகம் கடவுளால் உருவாக்கப்பட்டது என்பதை

     ஏற்பதில்லை. திருக்குறளும் இதே கருத்துகளையே வலியுறுத்துகிறது. பதினெண்

     கீழ்க்கணக்கு நூல்களுள் சிற்சில இடங்களில் ஆன்மிகம் தலைது£க்கினாலும்

     பகுத்தறிவையே வளர்க்கின்றன. சித்தர்களின் பாடல்கள் பொதுஅறிவையும்

     பகுத்தறிவையும் ஊட்டி ஜாதி, மதம், கடவுளை கண்டிக்கின்றன.

     பெரியபுராண அடியார்களில் அதிகத்துன்பத்திற்குள்ளான அடியார்கள் பிரா மணர் அல்லாதாரே. பிராமணர் மேம்போக்காகவே சோதிக்கப்பட்டு பரமபதம் அடைந்துள்ளனர். தாழ்ந்த சாதியினர் கடுந்துன்பப் பட்டுள்ளனர். திருவிளையாடல் புராணத்தில் தாயைப் புணர்ந்து அதுகண்டு சகியாத தந்தையைக் கொன்ற பார்ப் பனனின் பாவம் தீர்ந்துவிடுகிறதாம். மனிதத்தன்மையற்ற செயலையும் பார்ப்பனன் செய்தால் அவனுக்கு மன்னிப்பு உண்டு என்பதைத்தான் புராணங்கள் வலியுறுத்து கின்றன என்பது அன்பழகனின் நோக்கு. புராணக்கதைகளைப் பற்றி அன்பழகன் எழுப்பும் வினாக்கள் சுவையாக உள்ளன. இவற்றில் வெளிப்படும் பகுத்தறிவு நோக்கினை நாம் இரசிக்கலாம். மேலும் இன்றைய தலித்திய விமரிசன நோக்கிற்கு ஆதாரமான சில பார்வைகள் அவரிடம் உள்ளன.

     புலவர் ந. இராமநாதனின் கவிஞரும் காதலும் என்ற நூல் பாரதிதாசன் பற்றிய திறனாய்வு நூல். பாரதிதாசன் கவிதைகளில் மரபும் புதுமையும் என்னும் நெல்லை ந. சொக்கலிங்கத்தின் நூலும் நன்கு அமைந்தது. மு. அண்ணாமலையின் இலக்கிய மேடையிலும் பாரதிதாசன் பற்றிய மதிப்பீடு உண்டு.

     பகுத்தறிவியக்கம் சார்ந்த பிற திறனாய்வாளர்களில் பெருஞ்சித்திரனார் போன் றோர் தென்மொழி இதழில் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. வெ. வரத ராசனின், தமிழும் தேனும், வ. சுப்பிரமணியனின் வாழ்வியற் கவிஞர்கள் ஆகிய வையும் பாரதிதாசன் பற்றியவை. புலவர் குழந்தையின் தொல்காப்பியர் காலத் தமிழர் என்ற நூலில் பகுத்தறிவாளர் கொள்கைச் சார்புத் திறனாய்வைக் காணலாம். தென்மொழி, குயில், உண்மை, தென்னகம், மன்றம், பகுத்தறிவு போன்ற இதழ்களில் பாரதிதாசன் பற்றிய இரசனைக் கட்டுரைகளைச் சிலர் வரைந்தனர்.

     வே. ஆனைமுத்து (1925), 1976இல் மார்க்சியபெரியாரிய-பொதுவுடைமைக் கட்சியையும் 1978இல் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையையும் அமைத்தார். சிந்தனையாளன் என்னும் இதழையும் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் ஆங்கில இதழை யும் நடத்தினார். பெரியார் களஞ்சியம் என்னும் பெருநூலைத் தொகுத்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்த வழக்கமான திராவிடப் பார்வையையே இவர் வலியுறுத் துகிறார்.

     சிலப்பதிகாரத்திலேதான் முதல்முதல் சமயக்கருத்துகள் புகுந்தன. மணிமேகலை யில் அது வளர்ந்தது. பெரும், சிறு காப்பியங்களில் மதக்கருத்துகள், தாராளமாகப் புகுந்தன. கம்பராமாயணம், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம் போன்றவை புண்ணிய நூல்களாகக் கருதப்படும் அளவுக்கு சமயவெறி நாட்டில் வளர்ந்துவிட்டது. இங்ஙனம் சமயம் கலந்த இலக்கியமாகத் தமிழிலக்கியம் மாறியதால் இலக்கியத்தின் உண்மைக் கருத்துகளை அறிஞர்கள் ஆய்ந்துகூறத் தயங்கினர். இதுபோன்ற நூல்களில் குறை காண்பது தம்குறை என ஏற்றுக்கொண்டனர். தழுவல் இயல்புகொண்ட உயிரினங்களே இன்றும் வாழ்கின்றன. இலக்கியமும் அவ்வாறே. திருக்குறளில் தழுவல் தன்மை சமயம், மொழி, நாடு கடந்து நிற்பதால், அழியா இலக்கியமாய் உள்ளது. சிலப்பதிகாரம் தொடங்கி எல்லா இலக்கியங்களும் மதப்பிடியில் சிக்கியுள்ளன என்பது போன்ற கருத்துகள் இவரிடம் வெளிப்படுகின்றன.

     கொண்டல் சு. மகாதேவன் 1925இல் கொண்டல்வட்டம் திடல் என்னும் ஊரில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக திராவிட மாணவர் செயலாளராக விளங் கினார். 1948இலேயே எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பேசியவர். கண்ணகியின் மணம் காதல் மணமாகும், குலமகளிர் கோவலனைப் பாராட்டும் முறை குலமரபு என்றே கொள்ள வேண்டும். கோவலன் ஒரு சமூக அடிமையாகக் காட்டப்பட்டுள்ளான்.

     கானல்வரிப் பாட்டு காதல் போட்டியல்ல, கலைப்போட்டியே ஆகும். கலையின் மீது ஆர்வம் கொண்ட கோவலனால் கலையை மதிப்பிடத் தெரியவில்லை. கலைவழி மாதவியின் கண்கள் அசைய, அவ்வசைவைக் காதல்வலையாகப் புரிந்து கொண்டான். இறுதியில் காதலால் அவள்அழும்போது இது கலையினால் வரும் உணர்ச்சியற்ற கண் ணீர் என நினைக்கிறான். செங்குட்டுவன் இமயம் நோக்கிப் படையெடுத்தது, கண்ண கிக்காக அல்ல, கனகவிசயர்மீது கொண்ட பகைமைநோக்கியே என்பன போன்ற கருத்

துகளை வழங்கியுள்ளவர் இவர்.

     ஏ.பி. ஜனார்த்தனம்    அண்ணாதுரை படைப்புகள் பற்றிய ஆய்வினை முதன் முதலில் தொடங்கி வைத்தவர். அண்ணாவின் நாடகங்கள் பற்றிய ஆய்வு இவரது முனைவர்பட்ட ஆய்வாக அமைந்தது. அண்ணாவின் நடை பற்றி விரிவாக எழுதி யுள்ளார்.

     ந. சஞ்சீவி, சிலம்புத்தேன், சிலப்பதிகாரப் பெண்டிர், ஆராய்ச்சிக் கட்டுரைகள் போன்ற பல நூல்களை எழுதியவர். மருதிருவர் பற்றிய நூலும் குறிப்பிடத்தக்கது. முதன்முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வரங்குகள் நடத்தி, பல்கலைப் பழந்தமிழ், தெய்வத்தமிழ், சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள் போன்ற பல நூல்களையும் வெளியிட்டவர். இலக்கிய இயல் அ-ஆ என்பது இவரது கோட்பாட்டு நூல். மா.கி. தசரதன், வேதங்களும் புராணங்களும் மக்களைப் பிரித் தாளுகின்றன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழுணர்வை ஊட்டுகின்றன. சங்க இலக்கியம் ஒரு சில மேட்டுக்குடியினர் கையில் உள்ளது. பழம்பாடல்களைப் பாராட் டினால் மட்டும் தமிழ் வளராது. சிவன் படைத்த மொழி எனப் பேசிக்கொண் டிருப்பதாலும் குமரிக்கண்டம், சிந்து சமவெளி நாகரிகச் சிறப்பு, மன்னர்களின் வெற்றி போன்றவைகளைப் பேசினால் தமிழ் வளராது என்கிறார்.

     சங்க இலக்கியம் முழுதுமே மனித வாழ்வுக்குத் தேவையான உயர்ந்தகொள்கை களை உடையதாக உள்ளது. சங்க காலத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத் தப்பட்டனர். ஆண்களின் அறிவை மயக்கி, தீயவழி செலுத்தும் இயல்புடையவர்கள் பெண்கள்-மாயப்பிசாசு என்றெல்லாம் இடைக்காலத்திலேதான் பெண்கள் இகழப் பட்டனர். தமிழ்மண்ணில் வேற்றுநாட்டு மொழியோ பண்போ பரவாமல் தமிழ்ப் பண்பு தன் தனித்தன்மையுடன் விளங்கிய நாட்களில் ஆணுக்கு இருந்த உரிமையும் உயர்வும் பெண்ணுக்கும் சமுதாயத்தில் இருந்துவந்தது. ஆனால் வடவருடைய கூட் டுறவு ஏற்பட்ட பின்னர்தான் பெண்ணடிமைத்தனம் என்ற புன்மை ஏற்பட்டது. பரிமேலழகர் ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் என்ற குறளுக்குப் பொருள் எழுதும்போது-தன் மகனைச் சான்றோன் எனப் பிறர்கூறக்கேட்ட தாய் என்று எழுதுகிறார். காரணம் பெண் இயல்பாய்த் தானாக உணரும் ஆற்றல் அற்றவள் என்ற சிந்தனை பரவியிருந்த காலம் அது. இடைக் காலத்தில் எழுந்த புராணங்கள் எல்லாம் பெண்களை ஆபாசமாகவும் இழிவாகவும் அடிமையாகவுமே படைத்துள்ளன.

திராவிட இயக்கச் சார்பும் பிற சார்புகளும் கொண்ட சில அறிஞர்கள்

சாமி. சிதம்பரனார் (1900-1961)

     மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் 1923ஆம் ஆண்டு பண்டிதர் பட்டம் பெற்றவர். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ஓராண்டுக்காலம் பணியாற்றினார். பெரியாரின் குடிஅரசு இதழைப் படித்துப் பகுத்தறிவுக் கொள்கையில் பெரும் ஈடுபாடுகொண்டார். சுயமரி யாதை இயக்கத்திலும் நீதிக்கட்சியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 1928 முதல் குடிஅரசு இதழில் கடவுள் மதம் ஜாதி புராணம் சாத்திரம் மூட நம்பிக்கை போன்றவற்றைக் கண்டித்துஎழுதினார். தொல்காப்பியத் தமிழர், ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன், பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், வள்ளுவர் வாழ்ந்த தமிழகம், பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை போன்ற எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்.

     சாமி. சிதம்பரனார், சரஸ்வதியிலும், இன்னும பல ஏடுகளிலும் எழுதிவந்த பகுத்தறிவியக்கம் சார்ந்த முற்போக்குத் தமிழ் அறிஞர். இவர் பிற திராவிட இயக்கத்தி னர் செய்ததுபோல கம்பராமாயணம் போன்ற பழைய இலக்கியங்களைக் கண்மூடித் தனமாகச் சாடவில்லை. வடிவ அடிப்படையிலான இலக்கியப் பார்வையுடன் எழுதி னார். வள்ளுவர் காட்டிய வைதீகம், சிலப்பதிகாரத் தமிழகம், மணிமேகலை காட்டும் சமுதாய நிலை, என்றாற்போல சமூகப் பின்னணிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினார். ஆழ்வார்கள் அருள்மொழி, சங்கப்புலவர் சன்மார்க்கம், இலக்கியம் என்றால் என்ன, சித்தர்கள் கண்ட விஞ்ஞான தத்துவம் போன்ற இவரது நூல்கள் சிறப்பானவை. இவர் தம் இரசனைச் சிறப்புக்கு இவரது கம்பராமாயணப் பதிப்பு எடுத்துக்காட்டு. பிற நூல்களை சமூகப்பார்வைகள் என்று சொல்லலாம்.

     மொழி என்பது ஒருநாட்டின் மக்கள் அறிவு வளர்ச்சி பெறுவதற்கும் நாகரிகமடை வதற்கும் முதன்மையான காரணமாக இருப்பது. தமிழ்மொழியை மட்டும் படித்த ஒருவர் குறுகியஅறிவுகொண்டு மதவேற்றுமை வகுப்பு வேற்றுமை பாராட்டுகின்றார்.

     தொல்காப்பியத்தில் சாதி என்னும் சொல் மக்களைக் குறிக்கவில்லை. தண்ணீரில் வாழும் உயிரினங்களைத்தான் குறிக்கிறது. பிற்காலத்தில்தான் இச்சொல் மனிதப் பிரிவுகளைக் குறித்தது. தொல்காப்பியர் ஆண் பெண் சமத்துவத்தை விரும்ப வில்லை. ஆண்கள் பல பெண்களை மணந்துகொள்ளலாம், விலைமாதருடன் கூடி வாழலாம் என்பது சங்க இலக்கியத்திலும் உண்டு. ஆண்பெண் வேறுபாட்டைப் பழம் இலக்கியங்கள் போற்றியதையே இது எடுத்துக்காட்டுகிறது.

     பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பயனற்ற செய்திகள் பல உள்ளன. திருக்குறள் நாலடியார் தவிர மற்ற அறநூல்களினால் எந்தப் பயனும் இல்லை. சோம்பேறி வேதாந்தங்களையே அவை போதிக்கின்றன. ஐம்பெரும் காப்பியங் கள் சமண புத்த மதத்தை போதிக்கும் கதைகளே. தமிழ்மொழியிலுள்ள இலக்கி யங்கள் புராணங் களாகவும் சமயநூல்களாகவும் நீதிநூல்களுமாகவே உள்ளன. ஒருநூல் அந்நாட்டு மக்களுக்குப்பயன்படும் விதத்தில் நாட்டு மொழியில் வெளி வந்தாலொழிய அந்நூலினால் எந்தப் பயனுமில்லை. இம்மாதிரி திராவிட இயக்கத்தின் கருத்துகளை அப்படியே எடுத்துரைத்தாலும், கண்மூடித்து£ற்றுவதையோ போற்றுவதையோ இவரது நூல்களில் காணமுடியாது. மேலும் இவரது இலக்கியப் பார்வையும் நடையும் திராவிட இயக்கத்தின் பார்வை, நடையைவிட மார்க்சிய இலக்கிய நோக்கிற்கு அணுக்கமானது.

சாலை. இளந்திரையன்

     புரட்சிக் கவிஞர் கவிதைவளம் (1964) என்ற நூல் அக்கால எல்லை வரை வெளிவந்த பாரதிதாசன் திறனாய்வுகளில் முக்கியமானது. புதுமையானது. பகுப்பு முறைத் திறனாய்வும் பதிவுநவிற்சித் தன்மையும் கலந்தே காணப்படுவது. நிறைகளை யும் குறைகளையும் ஒரு விரிந்த பார்வையில் இயம்பி மதிப்பீடு செய்வது. இந்நூல் சாலை. இளந்திரையனை ஒரு முக்கியமான திறனாய்வாளராக நிறுவியது.

     அடுத்து இரு ஆண்டுகளில், இவருடைய தமிழில் சிறுகதை, சிறுகதைச் செல்வம் ஆகிய இரண்டும் வெளிவந்தன. முன்னது சிறுகதை பற்றிய அறிமுக நூல். இலக்கிய உலகில் நுழைய விரும்பும் இரசிகனுக்கு ஒரு தக்க வழிகாட்டி. பின்னது, இருபது எழுத்தாளர்களின் சிறுகதைகளை அறிமுகம் செய்யும் பாராட்டு நூல். இந்நூல் முன்னுரையில் சாலை. இளந்திரையன் கூறுகிறார்:

     சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் நமது வாசகர்களில் பெரும்பாலோர்க்கு இன்னும் சரிவரப் பிடிபடாததால், எது நல்ல சிறுகதை என்ற கேள்விக்கு அவர் களால் சரியானபதில் தெரிந்துகொள்ளமுடியவில்லை. இந்தநிலை நீடித்தால், அவசர கால வாழ்வின் து£துவனாகிய திருவாளர் பத்திரிகை, எதையெதையோ சிறுகதைகள் என்று மக்களிடம் கூறி நிலைநாட்டி விடுவார். அப்படி அவர் செய்து விட்டால், அதன்பிறகு நமது மக்களை நல்ல இலக்கிய ரசிகர்களாக்குவது முடியாத காரிய மாகவே போய்விடக்கூடும்.

     இந்நூலின் தோரணவாயில்என்ற முன்னுரை, 1966 வரை தமிழ்ச் சிறுகதைத் திறனாய்வின் வரலாற்றையும் அளிக்கிறது. இந்நூல் முதல் வரிசைத்தரம் உள்ள இருபது சிறு கதைகளின் அறிமுக விமர்சனக் குறிப்புகள் என்கிறார் சாலை. மேற்குறிப்பிட்ட மூன்று நூல்களின் பின்னணியில் பார்க்கும்போது தர நிர்ணயம் செய்யும் நல்ல மதிப்பீட்டாளராகச் சாலை மலர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. அவர் ஒரு புலமையாளராக இருப்பினும் நல்ல திறனாய்வாளராகியிருக்கிறார்.

      புதுத்தமிழ் முதல்வர்கள், புதுத்தமிழ் முன்னோடிகள் என எழுதிய இரு நூல்க ளும் தற்கால இலக்கிய வரலாற்றுப் பாங்கானவை என்றாலும் அவற்றில் திறனாய்வுக் குறிப்புகள் மிகுதியாக உண்டு.

ம.பொ. சிவஞானம்

     ம.பொ.சி. 1945 அளவில் எழுதத்தொடங்கியவர். இவருடைய முதல் இலக்கிய நூலான சிலப்பதிகாரமும் தமிழரும் 1947இல் வெளிவந்தது. இதன்பின் ஏறத்தாழ இலக்கியம் பற்றிய நாற்பது நூல்களை ம.பொ.சி. வெளியிட்டுள்ளார். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூல் பாராட்டுமுறைத் திறனாய்வு. இளங்கோவின் சிலம்பு, உலக மகாகவி பாரதி. இவ்வளவு நூல்கள் எழுதினாலும் அவரை ஒரு ஆழமான திறனாய்வாளராக எண்ணமுடியவில்லை. காரணங்கள் இரண்டு. ம.பொ.சி யின் நூல்களில் சொற்கள் வீணாக்கப்படுகின்றன. ஒரு தொடரில் சொல்லவேண்டிய கருத்தினை, ஒரு அத்தியாயம் எழுதிச் சொல்வார். இரண்டாவது, இவருடைய ஆய்வு, மரபுவழிவந்த பாராட்டுத் திறனாய்வு குணம் காணல் மட்டுமே. பெரும்பாலும் நவீன விளக்கவுரை எழுதிப் பாராட்டிவிட்டுச் சென்றுவிடுவது இவரது இயல்பு. கம்ப ராமா யண ரசனைக்கு ஒரு டி.கே.சி. என்பதுபோல, சிலப்பதிகார ரசனைக்கு ஒரு ம.பொ.சி. என்று பேசப்படும் நிலை சாதாரணப் படிப்பறிவு உடையோர்இடையே சிலப்பதிகார ரசனை வளர்வதற்கு ம.பொ.சி. எவ்வளவு உதவிசெய்தார் என்பதை விளக்குகிறது.

     1945ஆம் ஆண்டிலிருந்து ம.பொ.சி. பல இலக்கிய ஆய்வுநூல்களை எழுதியுள்ளார். 1950களில் மட்டும், கண்ணகி வழிபாடு, வள்ளுவர் வகுத்தவழி, இலக்கியச் செல்வம், இளங்கோவின் சிலம்பு ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. 1960களில் பாரதியும் ஆங்கிலமும், எங்கள் கவி பாரதி, வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, வள்ளலாரும் பாரதியும், உலகமகாகவி பாரதி போன்றவை வெளிவந்தன. 1970களில் இலக்கியங் களில் இனஉணர்ச்சி, கலிங்கத்துப்பரணி திறனாய்வு, திருக்குறளில் கலைபற்றிக் கூறாததேன், சிலப்பதிகார யாத்திரை, சிலப்பதிகாரத் திறனாய்வாளர், சிலப்பதிகார ஆய்வுரை, சிலப்பதிகார உரையா சிரியர்கள் சிறப்பு, திருவள்ளுவரும் கார்ல் மார்க்சும் போன்ற நூல்களை எழுதி யுள்ளார். விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, தமிழகத்தில் பிறமொழியினர் போன்ற பிற நூல்களையும் எழுதியுள்ளார்.

     தொல்காப்பியப்பொருளதிகாரம் வறட்டு இலக்கணமாக இல்லாமல் தமிழினத் தவரின் வாழ்க்கைநெறியை இலக்கியமாக்கிக் காட்டுகிறது. தொல்காப்பியம் தொகுப்பு நூலே அன்றிப் படைப்புநூல் அல்ல. புதிதாக எதுவும் எழுதப்படவில்லை. முன்னி ருந்த வகைகளைத் தொகுத்துள்ளார். தொல்காப்பியக் களவியல் வெறும் நாடகவழக் கேயன்றி நாட்டு நடப்பல்ல. தொல்காப்பியர் வடபுலத்திலிருந்து வந்தவரா அல்லது தமிழராஎன்ற வினாவுக்குத் தொல்குடியைச்சேர்ந்த தமிழர் என்று சொல்கிறார். வீடு பேறு பற்றிய சிந்தனை வடக்கிலிருந்து வந்ததே. சங்க இலக்கியத்தில் இச்சிந்தனை இல்லை.

     சிலப்பதிகாரம் முதன்மையாக ஒரு பிரச்சார இலக்கியம் எனலாம். அதுவும் அரசியல் பிரச்சாரமாகும். அந்தஅரசியல், தமிழினவழிப்பட்டது. மணிமேகலை மக்கள் இலக்கியமாக இல்லாது மதஇலக்கியமாக உள்ளது. மணிமேகலை சிலப்பதிகாரத்திற்கு இணை நூலன்று, தனி நூல். களப்பிரன் காலத்தில் தமிழ்ப்பண்பாட்டை போதிக்க இனஒருமைப்பாட்டை வளர்க்க சமயவேற்றுமை கடந்த சமுதாய உறவை வலியுறுத்தத் தோன்றிய நூல் முத்தொள்ளாயிரம். நந்திக்கலம்பகத்தில் நந்திவர்மனை ஓட்டிய வர லாற்றுச் செய்திகள் முலாம் பூசப்பட்டுள்ளன. அது வரலாற்று இலக்கியமன்று. அது கட்டுக் கதையே.

     நந்திக்கலம்பகம் பண்ணோசையும் பொருள் செறிவும் உடைய சிறந்த

     இலக்கியமாகும். ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு ஒருசிறிதும் அது உதவி

     புரியவில்லை. என்றாலும், தமிழ்மொழி வளர்ச்சியற்றுக்கிடந்த பல்லவர்

     ஆட்சிக்காலத்தில் பிறந்த ஒரேஒரு சமூகஇலக்கியம் என்ற வகையில் அதற்கு

     வரலாற்றில் தனி இடம் உண்டு.

என்பது நந்திக்கலம்பகம் பற்றி இவரது கருத்தாகும். கலிங்கத்துப் பரணி சிலப்பதி காரத்துக்குப் பின் தோன்றிய வரலாறு தழுவிய இலக்கியமாகும். தமிழர் என்ற இனக் கண் கொண்டு பார்த்தால் தமிழினத்திற்குத் தேவையற்ற இலக்கியமாகும்.

     கலிங்கத்துப்பரணியில் கடைதிறப்பு காமரசம் நிறைந்தததாக உள்ளது. கடவுள் வாழ்த்தை அடுத்துக் காமத்தை ஊட்டும் கடைதிறப்பு தேவையற்றது. இதனை சுடு காட்டுப் புராணம் என்றும் செயங்கொண்டாரை காமரசம்வழங்கிய முதற்புலவர் என்றும் கூறலாம். பக்தி இலக்கியமான திருப்புகழிலும் நாயகநாயகி பாவனையில் பாடப்பட்டுள்ள பிரபந்தங்கள் சிலவற்றிலும் காம உணர்வூட்டும் செய்திகளே இடம் பெறுகின்றன.

     ம.பொ.சி.யின் திறனாய்வில் மிக நீண்ட விளக்கங்கள், செறிவின்மை, மரபுவழி வந்த பாராட்டுமுறை போன்ற குறைபாடுகள் உள்ளன. இவை தன்மை ரீதியானவை. சமயக்கருத்துகளையும், அரசியல் கருத்துகளையும் இலக்கியத்தில் பொருத்திப்பார்த்தல், ஆகியவை உள்ளடக்க ரீதியானவை. அவருடைய இலக்கியக் கண்ணோட்டம், இன வுணர்வு, தமிழ்ப்பற்று, சமுதாய விழிப்புணர்ச்சி ஆகிய தளங்களின்மீது அமைந்தது. வெறும் இலக்கிய அழகுக்காக மட்டுமன்றி, சமுதாயத்தை உயர்த்தும் கருத்தாக்கம் இருந்தால் மட்டுமே அவர் ஒரு நூலைப் பாராட்டுகிறார்.

     பல்வேறு வகையான இலக்கியங்களையும் திறனாய்வு செய்ததில் இவர் திராவிட மரபில் தனித்தன்மைபெற்றவராக உள்ளார். பாரதியார் நூல்கள், சிலப்பதி காரம், வள்ளலார் பாக்கள் ஆகியவற்றைத் திறனாய்வு செய்தவர்களில் முக்கியமானவ ராக இருக்கின்றார். குறிப்பாகச் சிலப்பதிகாரத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டதால் சிலம்புச் செல்வர் என்ற சிறப்பு இவருக்கு வாய்த்து.

மயிலை. சீனி. வேங்கடசாமி

     1925முதல் திராவிடன் இதழாசிரியராகப் பணியாற்றியவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். குடிஅரசு, திராவிடன், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், தமிழ்ப்பொழில் இதழ்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதியுள்ளார். சங்ககால அரசியல், பத்தொன்பதாம் நூற்றாண்டுத்  தமிழ் இலக்கியம், தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள், இறையனார் களவியல் ஆராய்ச்சி, சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும் போன்றவை அவரது சில முக்கிய நூல்கள். சிறந்த வரலாற்றாசிரியராகவும் வரலாற்று நெறிப்பட்ட திறனாய் வாளராகவும் திகழ்ந்துள்ளார்.

     முச்சங்கங்கள் வெறும் கற்பனையே என்று ஸ்ரீனிவாசய்யங்கார், வையாபுரிப் பிள்ளை போன்றோர் கூறுவதை இவர் மறுக்கிறார். பொய் என்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் இவை பற்றிக் கூறப் படும் ஆண்டுக்கணக்குகளே. இவற்றில் கூறப்படும் மன்னர்கள் எண்ணிக்கை, அவர் களது ஆட்சிக்காலம் முதலியனவும் நம்பக்கூடியனவாக இல்லை. மன்னராட்சிக் காலத்தை வைத்துச் சங்கத்தைப் பொய் என்பது சரியன்று என்பது இவர் கருத்து.

     முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்னும் நூற்பாவுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் மாறுபட்ட உரைகள் தருகின்றனர். இளம்பூரணர் கடல்வழி என்று கூற, நச்சினார்க்கினியர் மூன்று தன்மையில்-அதாவது ஓதல், தூது, பொருள் காரண மாகப் பிரியும்போது பெண்ணுடன் செல்வதில்லை என்று பொருளுரைக்கிறார். நச்சினார்க்கினியர் உரை தவறெனக்கூறுகிறார் வேங்கடசாமி.

     பத்தினிச்செய்யுள் என்று ஒரு பழங்கதைச் செய்யுள் உள்ளது. சிலப்பதிகாரத் திற்கு இதுவே மூலம் என மு.இராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் கூறினர். இதை மறுத்து இரண்டிற்கும் தொடர்பில்லை எனக் காட்டியுள்ளார். பத்தினிச்செய்யுள், வீரன் ஒருவன் கையில் மணிக்கடகத்துடனும் கட்டாரியுடனும் இறந்துகிடப்பதைக் காட்டுகிறது. சிலப்பதிகாரக் கோவலன் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. மதம்கொண்டயானையை அடக்கியபோதும் கோவலன் கையில் ஆயுதம் இல்லை. நகர் என்றால் அரண்மனை என்றபொருளும் உண்டு. மதுரை நகரம் எரிந்தது எனச் சிலம்பில் கூறுவது முழுநகரத்தைக் குறிக்கவில்லை, அரண்மனை எரிந்தது என்பதையே இது குறிக்கிறது.

     செங்குட்டுவன் தன் தாயை கங்கைக்கு நீராட்டச்சென்ற செய்தி பொய் என நீலகண்ட சாஸ்திரி கூறுவதை வேங்கடசாமி மறுத்துள்ளார். தன் தாயின் உருவச் சிலையை அல்லது எலும்பைக் கையில்கொண்டு நீராட்டச் சென்றான் என்று பொருள் கொள்ளலாம். முழுதும் இச்செய்தி பொய்எனக் கூறவியலாது.

     சங்கப்பாக்களில் ஒரு முலை இழந்த பெண் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. வேறெங்கும் இத்தொடர் பயன்படுத்தப்படவில்லை. கண்ணகி தன் மார்பைச் சிதைத் தாள் என்ற கதை பொருத்தமாக இல்லை. இது ஒரு வழக்கிறந்த நிகழ்வாகலாம்.

     நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் தன் காதல் கைகூடாதபோது தன் கொங்கையைப் பிய்த்தெறிந்தாள் என வருகிறது. இதன்பொருள் கணவனோடு அனுபவிக் கும் இன்பவாழ்வு அழிந்துவிட்டது என்பதே. எனவே முலை குறைத்தல் வழக்கு கணவன் இல்லாமையையும் இன்பவாழ்வு போனது என்பதையும் குறிப்பிடும் வழக்கே என்கிறார்.

     திராவிடஇயக்கம் சார்ந்த நோக்கில் ஆய்வுகளைச் செய்துவந்தவர், பிறகு கருத்தியல் நிலையில் மாற்றம் எய்தியிருக்கிறார் என்பதை வேங்கடசாமியின் எழுத்துகள் வாயிலாக நன்கு காணமுடிகிறது.

     திராவிட இயக்கப் பார்வைகள் எதிர்மறையாக இருந்த காரணத்தினால் அப் பார்வைகள் மதிப்புப் பெறாமல் போயின. அதனால் அவ்வியக்கத்தின் பங்களிப்பும் பாராட்டப்படாமல் போயிற்று. இலக்கிய வரலாற்று நூல்களில் திராவிட இயக்கப் பங்களிப்பு பெரும்பாலும் சேர்க்கப்படுவதில்லை. அந்த அளவுக்கு இன்னும் மதம் நமது மனங்களில் ஆட்சிசெய்கிறது என்று காணலாம். மறைந்த சி.சு. செல்லப்பா, இன்று திறனாய்வுகள் எழுதும் ஜெயமோகன் போன்றோர் ஒரு கையசைப்பில் திராவிட இயக்கச் சார்பாளர்களைப் புறந்தள்ளிவிடும் அளவில் ஆழமற்ற எழுத்து களைக் கொண்டிருந்தது திராவிட இயக்கம்.

     திராவிட இயக்கக் கருத்துகள் பல எதிர்வினைகளை உருவாக்கின. சான்றாக, இராமாயணத்தில் வருணிக்கப்படும் அரக்கர்கள் தமிழரே என்ற கருத்து பரவலாயிற்று. இதை மறுத்து, அரக்கர் தமிழரா என்ற நூலை இரா.பி. சேதுப்பிள்ளை எழுதினார். இராவணன் பிரமனுடைய மரபில் வந்த பார்ப்பனன் என்றும், இராமன் அரச குலத்தவன் ஆனதால் சத்திரியன் என்றும் அவர் வாதிடுகிறார். இதற்கு சூர்ப்பநகை இராமனுடன் செய்யும் விவாதம் சான்றாக அமைகிறது என்கிறார். கம்பராமாயணம் பற்றிய விரிவான விவாதம் உருவாக திராவிட இயக்கம் காரணமாக அமைந்தது.

     திராவிட இயக்கத்தினர் இலக்கியத்தில் மேற்கொண்ட அணுகுமுறை மிக எளிமையானது. குறுக்கல்வாதம், எளிமைப்படுத்தல் ஆகியவை திராவிட இயக்க எழுத்துகளின் குறைகள். சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் பாராட்டுதல், காப்பியங்கள்-புராணங்களிலுள்ள கட்டுக்கதைகளின் ஒவ்வாமையையும், தீங்குகளை யும் எடுத்துரைத்தல், பாரதிதாசன், புலவர் குழந்தை, போன்ற திராவிட இயக்கக் கவிஞர்களைப் பாராட்டுதல் என்பவற்றில் அது அடங்கிவிடும். இவற்றை மீறிச் செயல் பட்டவர்கள் மிகவும் குறைவு.

     சமூகத்தில் சாதி ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள் திராவிட இயக்கத்தினர். சாதிமுறைக்கு அடிப்படை சமயமே என்பதனால், சமயம், கடவுள் போன்ற கருத்தாக்கங்களையும், இவற்றை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் என்ற முறையில் பார்ப்பனியத்தையும் எதிர்த்தனர். மூடநம்பிக்கைகளும் பார்ப்பனியக் கருத்துகளும் எந்த இலக்கியத்தில் இடம்பெற் றிருந்தாலும், எதிர்த்தனர். செல்வாக்குப் பெற்ற நூல் என்ற வகையில் கம்ப ராமாயணம் மிகுதியான தாக்குதலுக்கு உள்ளாயிற்று. பாரதியாரையும் ஒரு பார்ப்பனக் கவிஞன், வைதிகக் கவிஞன் என்று நோக்கியதால், அவரையும் புறக்கணித்தனர்.

     மதமும் மூடநம்பிக்கைகளும் ஆட்சிசெய்யும் ஒருசமூகத்தில் மதத்தைத் தோலுரித் துக்காட்டினர் என்பது முதன்மையாக திராவிட இயக்கம் செய்த நன்மை. பலசமயங்களில் சமூகவியல், மானிடவியல் நோக்குகளில் மதத்தையும் மதம்சார்பான நூல்க ளையும் நோக்கியுள்ளனர். இவை ஆரம்ப நிலையின என்றாலும், பின்னால் பெண்ணிய, தலித்திய, வரலாற்றியத் திறனாய்வுகள் வளர்வதற்குப் பயனுள்ளவையாக இருந்தன.

     இலக்கியக்கட்டுரைகள் என்னும் கட்டுரைவகையினை மிகுதியாகக் கையாண்டவர்கள் இவர்கள். உரைநடை வளர்ச்சியிலும், பத்திரிகைத் தமிழ் வளர்ச்சியில் திராவிட இயக்கத்தினரால், பெரும்பாலும் வடமொழிகலவாத எளிய து£ய தமிழ்நடை ஒன்று பத்திரிகைகளுக்கு இசைவாக உருவாயிற்று. அதேசமயம், திராவிட இயக்கத் தினரிடம் காணப்பட்ட மிகைஉணர்ச்சிப்பாங்கு இந்த நடையைச் சிறுமை கொண்ட தாக்கியது. நாடகம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் திராவிட இயக்கத்தினரின் பங்கினைக் குறைத்து மதிப்பிடஇயலாது. திராவிடஇயக்கத்தினர் முன்னெடுக்கவில்லை என்றால் பம்மல் சம்பந்தமுதலியாரின் நாடகங்களோடு தமிழ்நாடக வளர்ச்சி நின்று போயிருக்கக்கூடும்.

     புலவர்கள், தமிழாசிரியர்களிடம் திராவிட இயக்கத்தின் தாக்கம் மிகுதியாகக் காணப்பட்டது. தமிழ் ஆய்வில், ஏற்புநிலையில் சில இருமைஎதிர்வுகளை திராவிட இயக்கம் உருவாக்கியது. பதிப்புத்துறையில் சி.வை.தாமோதரம் பிள்ளை X உ.வே.சாமி நாதையர் என்ற இருமை செயல்பட்டது. சங்கஇலக்கியம் X கம்பராமாயணம், பாரதிதாசன் X பாரதியார் என்ற விதமாக எதிர்முனைகள் முக்கியமாகச் செயல்பட்டன. திராவிட இயக்கம் சார்ந்தோர், சமூகப் பார்வை நோக்கில் பாரதியைப் புறக்கணித்து, பாரதிதாசனை உயர்த்திப் பிடித்தனர். மார்க்சிய முற்போக்கு அணியினர், பாரதியை அவருடைய முற்போக்குப் பார்வைகளுக்காகவும், தேசிய நோக்குக்காகவும் பாராட்டினர். குறுகிய இன, மொழிப் பார்வையில் இலக்கியம் படைத்தவர் என்று பாரதிதாசனைப் புறக்கணித்தனர். பாரதிதாசன் மறைவுக்குப் பின்னர், 1970 அளவில் இம்முரண் பாடுகள் மறைந்தன. எனினும் இன்றும் தனித்தமிழாளர்களால், தமிழ்ப் பற்றாளர் களால் பாரதிதாசனே பாரதியைவிடச் சிறந்த கவிஞர் என மதிக்கப்படுகிறார். இரச னையாளர்களால் பாரதி உயர்ந்தவர் என மதிப்பிடப்படுகிறார்.

     பல்கலைக்கழகங்களில் மிகமுக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய பேராசிரியர்கள் மு. வரதராசனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகிய இருவரும். இவர்கள் பொதுநோக்கில் திறனாய்வு செய்வதுபோல் தோன்றினாலும், இருவருடைய நூல் தேர்வு என்பதன் வாயிலாகடச் சார்புகள் வெளிப்படுவதைக் காணலாம். சான்றாக, மு.வ., ஒருபோதும் கம்பராமாயணம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டதில்லை. (அதேசமயம் நேரடியாகக் குறைகண்டதும் இல்லை. தனிப்பட்ட முறையில் பாராட் டியும் இருக்கிறார்.)

     தெ.பொ.மீ.யும் கம்ப ராமாயணத்தைப் புறக்கணிக்கவில்லை. என்றாலும் சிலப்பதிகார ஆய்வில் ஈடுபட்டது போன்று விரிவாக அதில் ஆய்வில் இறங்கவில்லை. சங்கஇலக்கியச் சார்பானவர்கள், கம்பராமாயணச் சார்பானவர்கள் என்ற பிரிவுகள் கல்வியாளர்களிடையே இன்றுவரை காணக்கிடப்பதற்கு இந்நோக்கு காரணமாகிவிட்டது. திராவிடக் கருத்துகளை மறைமலையடிகள் போன்ற சைவர்கள் ஓரளவு ஏற்ற துண்டு. இவர்களிடமும் தேவாரம் X திவ்யபிரபந்தம் என்ற எதிர்நிலை செயல்பட்டது. இந்த மரபும் இன்றுவரை ஆய்வாளர்களிடம் தொடர்கிறது.

     பொதுவாக, திராவிட இயக்க ஆராய்ச்சியாளர்களிடம் நாம் காணக்கூடிய குறைகள் பல உள்ளன. இயங்கியல் முறையில் அவர்கள் ஆய்வு செய்யவில்லை. மதம் என்பதை ஓர் அழிவுச் சக்தியாகவும் மூடநம்பிக்கையாகவும் மட்டுமே கண்டனர். சிற்சில கருத்துபேதங்கள் இருந்தாலும், தமிழ் இலக்கியம் பற்றி அவர்களுடைய கருத்துகள் ஒரே மாதிரியாகக் காணப்படுகின்றன. உள்ளடக்கத்தை நோக்குதல் மட்டு மே அவர்களிடம் உள்ளது. உருவஆய்வில் அறவே ஈடுபடவில்லை. உள்ளடக்கத்திலும் அறநோக்கத்தை முதன்மைப்படுத்திக் காணும் நோக்கு உள்ளது.

     கொச்சையான மார்க்சியப் பார்வை, இலக்கியத்தை வர்க்க அரசியலாக மட்டும் நோக்கியதை ஒத்த ஒரு பார்வையே திராவிடப் பார்வையும். திராவிட இயக்கத்தில் சாதிய அரசியலின் இடமும் மார்க்சிய இயக்கத்தில் வர்க்க அரசியலின் இடமும் ஏறத் தாழ ஒரேமாதிரியானவை.

     திராவிட இயக்கம் சார்நத ஆய்வுகள், எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாலும், உள்ளடக்கத்தை முதன்மைப்படுத்தியதாலும், திறனாய்வுக்கான சிறந்த நிலையை எட்ட முடியவில்லை. நேர்முகமாக எழுந்த திறனாய்வுகளும் வெறும் பாராட்டுகள் என்ற அளவில் நிற்கக்கூடியவையே. எனினும் அதனால் தனித் தமிழ்க் கொள்கை வலுப்பெற்று, து£ய தனித் தமிழ்ப் பண்பாட்டையும், மொழியையும் பிரதி பலிப்பவை என்ற நிலையில் சங்க இலக்கிய ரசனை வளர்ச்சி பெற்றது.

     1960-70 காலப்பகுதியிலேயே பகுத்தறிவாளர் திறனாய்வு பாரதிதாசன் நூல்களின் திறனாய்வு என்ற நிலைக்கு ஒடுங்கிவிட்டது. பிற கவிஞர்கள், எழுத்தாளர்கள் மதிப்பிடப்பட்டது மிகவும் குறைவு. 1970-80 காலப்பகுதியிலும் இந்நிலையே நீடித்தது. 1971இல் பல இதழ்கள் பாரதிதாசன் நினைவு சிறப்பு மலர்கள் வெளியிட்டன. 1980-2000 காலப்பகுதியில் தனித்த திராவிட இயக்கத் திறனாய்வு என்பதை வே. ஆனை முத்துவும் அவருடைய கருத்தியலோடு தொடர்புடைய ஒரு சிலரும் மட்டுமே செய்து வந்தனர். மற்றப்படி திராவிட இயக்கத் திறனாய்வு என்பது இல்லாமற்போய், அதன் கொள்கைகளை மார்க்சிய இயக்கத்துடன் சேர்த்துப் பார்க்கும் நிலை உருவாயிற்று. மூடநம்பிக்கை சார்ந்தனவற்றை எதிர்க்கும் பகுத்தறிவுத் திறனாய்வு கைவிடப்பட்டு, சாதி பற்றிய, பெண் அடிமைத்தனம் பற்றிய பெரியாரின் கொள்கைகள் மட்டும் ஏற்கப்பட்டு, பெரியாரியம் என்று நோக்கப்படும் நிலை உருவாயிற்று.

     திராவிட இயக்கத்தின் எழுத்தும் பேச்சும் எல்லாநிலையிலும் மக்களைச் சிந்திக்க வைத்துள்ளன. ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பெரும்பாலானோர் நேரடியாக இயக்கப்பணி ஆற்றாவிடினும் இயக்கத்தாக்கம் பெற்று அதனைத் தம் எழுத்தில் காட்டியுள்ளனர். வெளி அரசியலில் மட்டுமன்றி, மக்கள் உள்ளத்திலும் மிக நுட்பமான நிலையில் திராவிட இயக்கத் தாக்கம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது.

     திராவிட இயக்கத் தாக்கம் பெற்ற பேராசிரியர்கள் 1960-90 காலப்பகுதியில் மிகுதியாகப் பல்கலைக்கழகங்களிலும் கல்லு£ரிகளிலும் பணியாற்றிவந்தனர். முதல் தலைமுறையைச்சேர்ந்த சி. இலக்குவனார் முதலாக, க. த. திருநாவுக்கரசு, இரா. தண்டாயுதம், பொன். கோதண்டராமன் போன்றவர் வழியாக, எழில் முதல்வன், தா.வே. வீராசாமி, மெ. சுந்தரம் எனப் பலரைப்பட்டியலிடஇயலும். தமது இளமைப் பருவத்தில் திராவிட இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டுப் பிறகு தமிழ் படித்துப் பேராசிரி யர்களாகவும் ஆசிரியர்களாகவும் ஆன அனைவரும் இப்பட்டியலில் வருவர். ஆனால் இவர்களது திறனாய்வுமுறை கல்வித்துறைசார் திறனாய்வாகும்.

     வானம்பாடி இயக்கத்தினராக-மார்க்சியச் சார்பானவர்களாக வெளிப்பட்ட கவிஞர்களும் திராவிட இயக்கத் தாக்கம் பெற்றவர்களே. அவர்களது கவிதைகளில் எல்லாம் திராவிட இயக்கச் சிந்தனைகள் வெளிப்படுவதைக் காணலாம். சான்றாக அப்துல் ரகுமான், முடியரசன், மீரா, புவியரசு, சிற்பி, மேத்தா, தமிழன்பன் போன்றோ ரைக் குறிப்பிட முடியும். தலித் இயக்கங்களின் பேச்சும் எழுத்தும்கூட திராவிட இயக்கத்தின் தாக்கம் பெற்ற ஒன்றாகப் பலசமயங்களில் அமைந்துள்ளது.

     அறுபதுகளின் இறுதிக்குள் திராவிட இயக்கத்தின் கருத்துகள் பின்பற்றுவோர் இன்றி வெறும் முழக்கங்களாக எஞ்சி இற்றுப்போயின. பொதுவாக, அமைப்பியம் முதலான இயக்கங்கள் தோன்றியதிலிருந்து ஆசிரியன் இறந்துபோனான், ஆசிரியனுக் கும் நூலுக்கும் தொடர்பில்லை போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கோஷங்கள் ஒருவகையில் உண்மையானதை திராவிட இயக்கம் காட்டுகிறது. தமிழ் நாட்டில் அதீதமான பிம்பங்களின் கலாச்சாரத்தினை உருவாக்கியதும் திராவிட இயக்கமே. பெரியார் ஒருவரைத் தவிர, திராவிட இயக்கச் சார்பான கொள்கைகளை உருவாக்கியவர்கள், அவற்றைப் பரப்புவதற்கான நூல்கள் எழுதியவர்கள், அவற்றைப் பின்பற்றுவதில் சற்றும் அக்கறை காட்டவில்லை. ஆகவே ஆசிரியன் வேறு, நூல்கள் வேறு என்பது உண்மையாகிவிட்டது. திராவிட இயக்க நூல்களைப் பொறுத்தவரை ஆசிரியன் இறந்து போனான் என்பது முற்றிலும் உண்மை. தாங்கள் கூறியவற்றைத் தாங்களே நம்பாதவர்களை-தங்கள் வாழ்க்கை வேறு, தங்கள் கொள்கை வேறு என்று ஆனவர்களை, வேறு என்ன பெயர் சொல்லி அழைப்பது?


திருக்குறளின் முதல் அதிகாரம்

thirukkural-1
உலகப்பொதுமறை என்று பாராட்டப்படுகின்ற ஒரு தலையாய இலக்கியம், திருக்குறள். திருக்குறளின் பகுப்புமுறை, அதிகாரங்களுக்குத் தலைப்புத் தந்துள்ள முறை போன்றவை யாரால் எப்பொழுது செய்யப்பட்டவை என்பதெல்லாம் சரிவரத் தெளிவாகவில்லை. இப்பொழுது நாம் காணும் அதிகாரப் பகுப்பு, அதிகாரத் தலைப்புகள், இயல் பகுப்பு போன்றவை எல்லாம் திருவள்ளுவரே செய்ததாகத் தோன்றவில்லை. சான்றாக, திருக்குறளின் முதல் நான்கு இயல்களைப் பாயிரம் என்று பகுத்துள்ளனர் சில ஆசிரியர்கள். பரிமேலழகர் போன்ற செல்வாக்குள்ள உரையா சிரியரும் இதனை ஏற்றுக் கடைப்பிடிப்பதால் இது பெரும்பாலும் ஏற்கக்கூடிய கருத்தாகி விட்டது. இப்பகுப்பு சரியானது என நிறுவப்படவில்லை. இயல்பகுப்பு உரையாசிரியருக்கு உரையாசிரியர் மாறுபடுகிறது. அதிகாரத்தலைப்புகளும் அவ்வாறே. மணக்குடவர் மக்கட்பேறு எனக்கூறும் அதிகாரத்தைக் காலத்தால் பிற்பட்டவராகிய பரிமேலழகர் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.
இவற்றையெல்லாம் இங்கு நினைவுகூறக் காரணம், திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதன் தலைப்பே பொருத்தமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டத்தான். பொதுவாக, திருக்குறளில், அதிகாரத் தலைப்பாக அமைந்த சொல், பெரும்பாலும் அந்த அதிகாரத்திலுள்ள ஓரிரு குறட்பாக்களிலேனும் இடம் பெறுவது வழக்கம். இதற்கு மிகச்சில விதிவிலக்குகளே உண்டு. அந்த விதிவிலக்குகளில் ஒன்று, கடவுள் வாழ்த்து. கடவுள் என்ற சொல்லோ, வாழ்த்து என்ற சொல்லோ கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எங்கும் இடம்பெறவேயில்லை.
இந்தச் சொற்களை முக்கியமாக ஆராய்வதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால் கடவுள் என்ற கருத்தும், வாழ்த்துதல் என்ற கருத்தும் திருவள்ளுவருக்கு உடன் பாடானவை என்று தோன்றவில்லை. இன்று இறைவன், தெய்வம், கடவுள் என்ற மூன்று சொற்களும் ஏறத்தாழ ஒரே அர்த்தத்தில் கையாளப்படுகின்றன. ஆனால் திருவள்ளுவருடைய ஆளுகையில் இம்மூன்று சொற்களுக்கும் பொருள் வேறு. கடவுள் என்ற சொல்லை அவர் திருக்குறளில் கையாளவே இல்லை. கட+உள் என்று இச்சொல்லைப் பிரித்து நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று நமக்கு உள்ளும் நம்மைக் கடந்தும்(அப்பாலும்) இருக்கிறது என்று இச்சொல்லுக்குப் பொருள் கூறுவர். அல்லது கடவுதல் (இயக்குதல், செலுத்துதல்) என்ற சொல் அடியாகப் பிறந்தது இச் சொல் என்ற கருத்தும் உண்டு. உயிர்களுக்கெல்லாம் அப்பால் நின்று ஒரு சக்தி அவற்றைக் கடவுகின்றது என்ற கருத்து இதில் இருக்கிறது. இப்படிப்பட்ட, உயிர்களுக்கும் மனிதருக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியில்(transcendent force) திருவள்ளுவருக்கு நம்பிக்கை இல்லாததனால்தான் அவர் இச்சொல்லைத் தமது நூலில் எங்குமே பயன்படுத்தவில்லை என்று கருதமுடியும்.

thirukkural-3

பழங்காலத்தில் வைதிக சமயத்தினர் தமக்கு அப்பாற்பட்ட சக்தியான கடவுள் ஒன்றில் நம்பிக்கைகொண்டவர்கள். வைதிகசமயத்தினர்க்கு மாறான சார்வாகர், சாங் கியர், பௌத்தர், சமணர் போன்ற மரபுகளைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை அற்றவர்கள். திருக்குறளை ஆழ்ந்து நோக்கும்போது திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கக்கூடும் என்பதை நாம் உணரமுடியும்.
இறைவன்-தெய்வம் என்ற சொற்கள் கடவுள் என்ற கருத்துக்கு மாறானவை. தேவன் அல்லது தேவ என்ற சொல்தான் தெய்வம் என்ற வடிவத்தில் தமிழில் வழங்குகிறது. இச்சொல்லுக்கு மனிதனைவிட உயர்உலகம் ஒன்றில் வாழும் (மனிதனைவிட அதிகமான, ஆனால் எல்லைக்குட்பட்ட சக்தியுடைய) உயர்பிறவிகள் என்பது அர்த்தம். வள்ளுவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொல்கிறார். மனிதர்கள் தங்கள் நிலையில் உயரும்போது தெய்வம் ஆகிறார்கள்.
இறை என்ற சொல் ஆதி என்ற சொல்லுக்கு எதிரானது. மனிதனால் ஆதி (யாவற்றிற்கும் முற்பட்ட நிலை)யையும் சிந்திக்க முடிவதில்லை, அந்தம் (இறை, இறுதி) என்ற நிலையையும் சிந்திக்க முடிவதில்லை. இறைவன் என்ற சொல்லை அரசன் என்ற அர்த்தத்தில்தான் வள்ளுவர் மிகுதியும் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால், மனிதர்களுக்குள் இறுதியான தலைமைநிலையில் இருப்பவன் அரசன்தான். இறு (வேர்ச்சொல் ‘இற்’) என்ற சொல்லிலிருந்துதான் இறையன், இறைவன், இறுதி, இற்றுப் போதல், இறுத்தல், இறப்பு போன்ற சொற்கள் உருவாகின்றன. இறத்தல் என்பதற்கு ஒரு எல்லையைக் (இங்கே மனித வாழ்க்கை எல்லை) கடந்து செல்லுதல் என்று பொருள். எனவே இறைவன் என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லன்று.
கடவுள் என்ற சொல் திருக்குறளில் எங்கும் இடம்பெறவேயில்லை என்ப தையும், காரணம் அது நமக்கு அப்பாற்பட்ட அதீத சக்தியைக் குறிக்கின்ற ஒன்று என்பதையும் முன்பே கூறினோம். கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவனைக் குறிப்பதாக இடம் பெறும் சொற்கள் அனைத்தும் மனிதநிலையிலிருந்து உயர்ந்த சான்றோர்களைக் (இவர்களை நாம் சமண முன்னோரான துறவிகளாகக் கொள்ள வாய்ப்பு உண்டு) குறிப்பவைதான்.
மனிதநிலைக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுளைக் கருத்தில் ஏற்றுக்கொள்ளாததால் திருவள்ளுவருக்கு அத்தகைய கடவுளை வாழ்த்துவது என்ற எண்ணமும் தோன்றவில்லை. திருக்குறள் கடவுள் வாழ்த்தின் பத்துச் செய்யுட்களையும் நன்கு கவனித்துப் பாருங்கள் – எந்தச் செய்யுளாவது, கடவுளை வாழ்த்துவதாக அமைந் துள்ளதா? எல்லாச் செய்யுட்களுமே – பத்துக்குறட்பாக்களுமே உயர்ந்த மானிடர்களின் பத்து இயல்புகளைக் குறிப்பிடுவனவாகத்தான் அமைந்துள்ளன. நம் சிந்தனையையும் மனத்தையும் கடந்த ஒன்றிற்கு இயல்புகளைச் சொல்வது எப்படி?
முதல் குறட்பாவைப் பார்ப்போம். அகரமுதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு என்பது குறள். இது சொல்வது என்ன? எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருப்பதுபோல, இந்த உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டிருக்கிறது என்பதுதானே? இதில் உள்ள இரு பகுதிகளும் நாம் கவனிக்க வேண்டியவை.
ஒன்று, எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாக உடையவை.
இரண்டு, (அதுபோல) உலகம் ஆதிபகவனை முதலாக உடையது.
முதல் பகுதியைக் கவனிப்போம். எழுத்துகள் அகரத்தை முதலாக உடையன என்றால் என்ன? இறைவன் உயிர்களை ஆக்குவது போல, எல்லா எழுத்துகளையும் (உயிர், மெய்) அகரம் ஆக்குகிறது, படைக்கிறது என்றா அர்த்தம்? முதல் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. மண்ணிலிருந்து குடம் ஆகிறது என்றால் மண் காரண முதல் என்போம். குயவனால் குடம் ஆகியது என்றால் குயவனைக் கர்த்தா முதல் என்போம். இந்த அர்த்தங்கள் எதுவும் இங்கு இல்லை.
பெரும்பாலான மொழிகளில் அகரம் முதல் எழுத்து. பிறகு மற்ற எழுத்துகளின் வரிசை தொடர்கிறது. ஒரு கியூ வரிசையில் முதலில் நிற்கும் ஆள், கியூவை உண்டாக்குபவரா? அதாவது காரணமுதலா? கர்த்தா முதலா? இரண்டும் அல்ல, அவர் வரிசை முதல். அவ்வளவுதான். அதுபோல எழுத்துகள் வரிசையில் அகரம் முதன்மையாக நிற்கிறது. வரிசை முதல். அதுபோல உயிர்களின் வரிசையில் ஆதிபகவன் முதலில் நிற்கிறார். அவ்வளவுதான். ஆதி என்றசொல்லும் குணங்களில் முதன்மையானவர் என்பதைத்தான் குறிக்கிறது.

thirukkural-2

இரண்டாவது, பகவன் என்ற சொல்லைப் பார்ப்போம். இது பகவான் என்ற வட சொல் அடிப்படையிலானது அல்ல. தமிழில் முற்றும் துறந்த முனிவர்களை-மனிதர்களை பகவன் என்று கூறினார்கள். கலித்தொகையில் ஒரு செவிலித்தாய் தலைவனுடன் போய் விட்ட தன் மகளைத் தேடிவருகிறாள். அவளுக்கு முக்கோல் பகவர்கள் (அதாவது திரிதண்டம் என்னும் கோலை உடைய பகவர்கள் சிலர்) ஆறுதல் சொல்கிறார்கள். இங்கு முக்கோல் பகவன் என்ற சொல்லுக்கு கடவுள், பகவான் என்றா அர்த்தம்? முனிவன் என்பதுதான் பொருள். அதே பொருளில் – அதாவது முற்றும் துறந்த முனிவன் என்ற பொருளில்தான் பகவன் என்ற சொல்லை இங்கும் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். ஆனால் இவர் நீண்ட காலத்துக்கு முன்னாலிருந் தவர் (ஒருவேளை அருகதேவராக இருக்கலாம்). அதனால் ஆதி பகவன்.
எனவே இந்த முதற்குறள் கூறுவது என்ன? மனித வரிசையிலே குணங்களால் உயர்ந்த, காலவரிசையில் முற்பட்ட ஒரு முனிவர் – ஆதி பகவன் – அவரை உதாரணமாகக் கொண்டது இவ்வுலகு என்பதுதான்.
இனி வரும் குறட்பாக்களும் அந்த ஆதி பகவனின் – அதாவது மனிதராக இருந்து உயர்ந்த நிலை அடைந்த – வள்ளுவர் வாக்கில், தெய்வநிலை அடைந்தவர் களின் பண்புகளைப் பற்றித்தான் பேசுகின்றன. இரண்டாவது குறட்பாவில் ‘வால் அறிவன்’ என்கிறார். அதாவது  தூய்மையான அறிவுடையவன். மூன்றாவது குறட்பா இன்னும் தெளிவானது. மலர்மிசை ஏகினான். இது புலனறிவைக் கடந்த கடவுளைக் குறிக்கும் சொல்லே அன்று என்பது மிக வெளிப்படை. மலரின்மீது நடந்தவன். இங்கு மலர் என்பது உருவகமாக பூமியைக் குறிக்கிறது. (மலர் தலை உலகம் என்று வருணிப்பதை நோக்குக). எனவே இந்தப் பூமியின்மீது வாழ்ந்த ஒரு தெய்வப் பண்புடைய ஒருவன் என்பது இச்சொல்லின் பொருள்.
அடுத்த குறள் வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறது. அதாவது அந்த நிலைகளைக் கடந்தவன். அதற்கடுத்த குறளில் இறைவன் என்றசொல் வருகிறது. அதாவது நாம் அடையவேண்டிய இறுதிநிலையாக இருப்பவன், அல்லது அந்த இறுதிநிலையை அடைந்தவன். பத்தாம் குறளும் இறைவன் என்ற சொல்லையே பயன்படுத்துகிறது. (இறைவன் அடி சேராதார், பிறவிப்பெருங்கடல் நீந்தார்).
அடுத்த குறள் இன்னும் தெளிவானது. பொறிவாயில் ஐந்து அவித்தான். எல்லாவற்றையும் கடந்த கடவுளுக்குப் பொறிவாயில்கள் (அதாவது புலன்நுகர்ச்சி உறுப்புகள் – கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) என்பன ஏது? இப்பொறிவாயில்கள் ஒருவனுக்கு உண்டு, அவற்றை அவித்தவன் (கட்டுப்படுத்தியவன்) என்றாலே கடவுள் என்ற அர்த்தமா வருகிறது? எந்தக் கடவுளும் புலன்களை அவிக்கத் தேவையில்லை. சாதாரண மனிதநிலையில் இருந்து, புலனுணர்வுகளைக் கட்டுப்படுத்தி, தெய்வ நிலையை அடைந்த சான்றோன் என்னும் பொருள் அல்லவா இந்தச் சொல்லுக்கு வருகிறது? அப்படிப்பட்ட சான்றோனுடைய பொய்தீர் ஒழுக்கநெறியில் நின்றவர்கள் நீடுவாழ்வார் என்பதில் கடவுளுக்கு எங்கே இடம்?
அடுத்த குறளில் வரும் சொல் தனக்குவமை இல்லாதான். பொறிவாயில் அவித்த ஒருவனுக்கு உலகிலுள்ள சுகபோகங்களில் ஈடுபட்ட யாரை அல்லது எதை உவமை சொல்ல முடியும்? அடுத்த சொல் அறவாழி அந்தணன் அறக்கடலாக விளங்குகின்ற அந்தணன். அந்தணன் என்பது பார்ப்பனச் சாதியைக் குறிக்கும் சொல் அல்ல. அந்தணர் என்போர் அறவோர் – திருவள்ளுவரைப் பொறுத்தமட்டில். அறவோனாக இருப்பவன் அந்தணன். அறக்கடலாகவே விளங்கும் முதன்மையான அந்தணன் இந்த பகவன்.
ஒன்பதாம் திருக்குறள் மிகமிக முக்கியமானது. ஏனென்றால் இதுவரை இறைவனுடைய பண்புகளாகக் குறிப்பிட்டவற்றைத் தொகுத்துரைக்கிறது. கோளில் பொறியில் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. எண்குணத்தான் என்ற சொல்லுக்கு நம் மனங்களில் எண்ணப்படுகின்ற நல்ல குணங்களையெல்லாம் உடையவன் என்று சமத்காரமாகப் பொருள்சொல்லலாம். எட்டு குணங்களை உடையவன் என்பதும் பொருள். அதாவது, இதற்கு முன்னுள்ள எட்டுகுறட்பாக்களில் சொல்லப்பட்ட எட்டு குணங்களையும் உடையவன். அதனால் தான் பத்தாம் குறளில் வேறு எந்தப் பண்பையும் புதிதாகச் சேர்க்காமல், ஐந்தாம் குறட்பாவில் ஆண்ட இறைவன் என்ற சொல்லையே திரும்பவும் பயன்படுத்தி விடுகிறார்.
இக்காலத்தில் தமிழ் இலக்கியம் படிப்போர் சொற்களுக்கு இக்காலப் பொருளையே கொண்டுவிடுகின்றனர் என்பது ஒரு குறைதான். அது சிலவித இலக்கிய ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடியதே என்றாலும், மிகப் பழங்கால இலக்கியங்களைப் படிக்கும்போது ஒரு சொல்லைக் கண்டால் அது அக்காலத்தில் எப்பொருளில் பயன்பட்டிருக்கும் என்று ஓரளவேனும் ஆராய்ந்தே பொருள்கொள்ளவேண்டும். அவ்வாறில்லாவிட்டால் குழப்பம்தான் ஏற்படும். பரிமேலழகர் போன்ற உரையாசிரி யர்களிடம் உள்ள குறைபாடு, அவர்கள் அவ்வக்காலத்திற்கேற்ற பொருளைக் கொண்டமையே ஆகும். அதனால் சமணசமயம் மேலோங்கியிருந்த – நீதி இலக்கிய காலத்தில், அறச்சிந்தனைக் காலத்தில் இயற்றப்பட்ட திருக்குறளுக்குச் சைவசித்தாந்த, வைணவசித்தாந்தப் பொருள் கூறி இடர்ப்பட்டனர். சான்றாக எண் குணத்தான் என்றசொல்லுக்குச் சைவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது, வைணவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது என்றெல்லாம் குறித்துள்ளனர். மாறாக, சமணசமயத்தில் எண்குணம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று நோக்கினால் பொருத்தமாக இருக்கும்.
எனவே திருவள்ளுவர் பாடிய கடவுள் வாழ்த்து கடவுளைப் பற்றியதும் அல்ல, அது வாழ்த்தாக அமைந்ததும் அல்ல என்று சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம்.


மனக்கோட்டை

மௌனியின் ஒரு சிறுகதை-மனக்கோட்டை

மௌனியின் கதைகள் பிரசித்தமானவை. தங்கள் உள்ளத்துக்ள்ளேயே உணர்ச் சிகளை அழுத்திக் கொள்பவர்கள் மௌனியின் கதாபாத்திரங்கள் என்பது போன்ற குறிப்புகள் திரைப்படங்களில்கூட வரத்தொடங்கிவிட்ட காலம் இது. மொத்தம் இருபத்திரண்டு கதைகளே எழுதிய மௌனி பலவகைகளில் தம் கால எழுத்துகளை மீறி ஒருவகையான புகழைப் பெற்றுவிட்டார். இங்கு அவரது கதையான மனக்கோட்டை பற்றிச் சற்றே நோக்கலாம். இக்கதை தெரிவிக்கும் அடிப்படையான விஷயங்கள் மூன்று.

1. தமிழ் எதிர்ப்பும் திராவிட எதிர்ப்பும்
2. தடைசெய்யப்பட்ட பாலுறவு
3. அத்வைத தத்துவம்

இது மௌனியின் கதைகளில் மிகவும் பாராட்டுப் பெற்ற ஒன்று. இக்கதையின் பாலியல் தளமே இதற்கு ஒரு “பயங்கரத்தின் கவர்ச்சி”யினை அளிக்கிறது. சாதாரணமாகப் பார்த்தால் இது ஒரு பெண்ணைத் தேடுகின்ற கதை. ஆனால் கதை யை மேலோட்டமாகப் பார்க்கும்போது அது வேதாந்தத் தளத்தில் இயங்குவது போலத் தோற்றம் தருகிறது. தெளிவாக உருப்பெறாத மூன்றுபேர் இக்கதையில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர். சேகரன்-சுமி-சங்கர் என்னும் மூன்று கதாபாத்திரங்களுக்கிடையிலான உறவைச் சொல்லுவதாக இக்கதை அமைகிறது. சுமி என்பவள் சங்கரின் தங்கை. சேகரன் சுமியைக் காதலிக்க சங்கரே து£ண்டு கோலாக இருக்கிறான்.

கதைப்பின்னல் பின்வருமாறு அமைகிறது. சேகரன் என்பவன் தனது நண்பன் சங்கர் இறந்துவிட்டான் என்பதை அறிந்து அதனால் ஏற்படும் மன அழுத்தத்திலி ருந்து விடுபட ஒரு மலைக்கோட்டையைப் பார்க்கச் செல்கிறான். சங்கரின் கடைசிக் கடிதம் அவனது “தங்கை சுமியுடன் அவன் (சேகரன்) பேசி அவன் (சங்கர்) பார்க்கவேண்டும்” என்பதாக இருக்கிறது. இதுவரை சுமி இறந்துவிட்ட செய்தி சேகரனுக்குத் தெரியாது. இக்கடிதம் சங்கர் வீட்டிற்குச் செல்லும் ஆவலை அவனுக்குள் உண்டாக்குகிறது. ஆனால் சங்கர் இல்லாமல் அவன் வீட் டிற்குச் சென்றால் அங்கு தன்னை எவரும் அறியமாட்டார்கள் என்பதனாலும், தற்சமயம் சங்கர் வீடு எது என்பது தனக்குத் தெரியாது என்பதனாலும் சேகரன் சங்கர் வீட்டிற்குச் செல்லக் கிளம்பினாலும் அதைத் தவிர்க்கிறான். எனவே வழியில் ஒரு மலைக்கோட்டை தென்படும்போது அங்கே இறங்கிவிடுகிறான். மலைக்கோட்டையைச் சுற்றிவந்த பிறகு மாலையாகிவிடுகிறது. தங்குவதற்காக அருகிலுள்ள நகருக்குச் செல்கிறான். அங்குத் தற்செயலாக அவன் மழைக்காக நிற்கச் செல்லும் வீடு சங்கரின் இன்னொரு தங்கையான சசி என்பவள் வீடாக அமைந்துவிடுகிறது.

இக்கதையின் வாயிலாக ஒருசேர இரண்டு விஷயங்கள் விமரிசனம் செய்யப்படு கின்றன. மலைக்கோட்டையைக் காணும்போது தற்கால அரசியல் விமரிசனத்துக் குள்ளாகிறது. சங்கரின் வீட்டினரைச் சந்திப்பதன் வாயிலாக ஒடுக்கப்படட ஒரு பாலியல் தளம்-தகாத பாலியல் உறவைச் சித்திரிக்கும் களம் கதைக்குள் வருகி றது.
மலைக்கோட்டை, “பருவகால வித்தியாசத்திலும் பார்ப்பவர் மனநிலையோடு கலந்து வெவ்வேறுவகைக்குக் காண எண்ணிலாச் சாயை கொண்டதாக” அமைந் திருக்கிறது. இங்கு ஒரு கவித்துவமான வருணனை இடம் பெறுகிறது. மலைக் கோட்டையைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது “நடுப்பகல் சரிவுகண்டுவிட, எல்லாம் எட்டி நகர்ந்து மறையத் துடித்துக் கானல் சலனத்தில் தெரிந்தன”.

இரவு நேரத்தில் ஆங்காங்கே தெரியும் குன்றுகளைப் பார்க்கின்ற அவனுக்கு அது தேவ அசுர யுத்தத்தினை நினைவூட்டுகிறது. தேவர்கள் என மௌனி இங்குச் சொல்வது ஆரியர்களையும் அசுரர்கள் என்று அவர் குறிப்பிடுவது திரா விடர்களையும் என்பது ஓரளவு வெளிப்படையாகவே தெரிகிறது. அங்குள்ள கோயிலைப் பார்க்கும்போது “பக்தியில் கோவிலுக்கு வெங்கலத் தேரை வார்த்து விட்டு எதிரிகளை முறியடிக்க விநோதமான குறுக்குப் பாதைகளை வெகு யுக்தி யுடன் கண்ட ஒரு மேதாவி வீரதீரச் சக்ரவர்த்தி” என்னும் நையாண்டியில் தமிழ்நாட்டுக் கோயில்களைக் கட்டிய சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. இச்சக்ரவர்த்தி, தோற்றுப்போன பிறகு தனது நிலை மறந்து மக்களுடன் மக்களாக ஜேஜே கோஷம் போட்டுக்கொண்டு வந்து கோட்டையை அடைந்து அந்த மக்களால் மீண்டும் தலைவனாக்கப்படுகிறான். மீண்டும் நையாண்டி தொடர்கிறது. அந்த அரசன், அவன் தகப்பன், அவன்-அவன் மகன் இவன் எனக் கொண்டு கடல் கடந்து வாணிபம் செய்தது, இமயத்தை வென்றது, பேரவை கூட்டியது, முத்தமிழ் பரிமாறியது, அது இது எல்லாமும் மனப்பிராந்தி யில் சரித்திரமாகிவிட, கற்பனைகளுடன் உண்மையும் மறந்துவிட்டது, மறைந்தும் விட்டது. இதில் குறிப்பாகச் சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிய கேலி இருப்பது தெளிவு. தமிழ்நாட்டு வரலாற்றையே மூன்று வரிகளில் அடக்கி அதுவும் மறந்துவிட்டதாகவும் மறைந்துவிட்டதாகவும் சொல்கிறார் மௌனி. தமிழின் எழுச்சியையே ஒரு மனப்பிராந்தி என்கிறார். தமிழர்கள் கடல்வாணிகம் செய்ததையும் தமிழ் வளர்த்ததையும் நீலகண்ட சாஸ்திரி, ராமச்சந்திர தீட்சிதர் போன்ற பார்ப்பன ஆசிரியர்களே விதந்து எழுதியிருக்க, அதை ஏற்றுக்கொள்ள வும் இந்த மௌனியின் பார்ப்பன மனம் மறுக்கிறது. தமிழ்நாட்டுப் பார்ப்பனர் கள் தமிழ் மக்களின்மீது எவ்விதக் காழ்ப்புணர்ச்சியோடு வாழ்ந்தார்கள் என்ப தைத் தெரிவிக்க மௌனியின் இந்த ஒரு பகுதி போதும்.
தேவ அசுர யுத்தம் பற்றிய நினைவு வரும்போதுதான் இந்த அரசனுடைய தோல் வியும் நினைவுக்கு வருகிறது. தேவ அசுர யுத்தத்தில் தேவர்கள் வெற்றி பெற்றது போலவே ஆரியர்கள் தமிழகத்தில் வெற்றி பெற்று விட்டார்கள் என்பதையும் இந்தக் கோயில்கட்டிய திராவிட அரசனின் தோல்வி தெரிவிக்கிறது. (ஒருவகை யில் நாம் இந்தத் தொன்மத்தை நீட்டிக்கொள்ளலாம். தேவ அசுர யுத்தத்தில் அசுரர்களை ஏமாற்றித் தாங்கள் மட்டுமே அமுதம் உண்ட தேவர்களைப் போலவே தமிழகத்திலும் பிறரை ஏமாற்றித் தாங்களே வெற்றி பெற்றுவிட்டார் கள் ஆரியர்கள் என்பதையும், அவர்களது சூழ்ச்சிகள் இன்றுவரை வென்று வருகின்றன என்பதாகவும் நாம் பொருள்கொள்ளலாம்.) கதைக்கிடையில் “ஆர்ப்பாட்டமாக, தமுக்கடி தமாஷாவாக, அபத்தமாக, அல்பசித்தியாக” திராவிட இயக்க முயற்சிகள் நோக்கப்படுகின்றன. வெளிப்படையாகவே கேட்கிறார் மௌனி: “இரவின் அந்தகார இருளைக் காண ஒரு சிறு ஒளிப்பொறி போன்றாக முடியுமா இப்பகல் தீவட்டிகளின் ஒளிகாட்ட முயலுதல்கள்?” என்று.

கதையில் பிரச்சாரம் வந்துவிட்டால் அது இலக்கியமாகாது என்று குரைக்கும் பல விமரிசகர்கள் கதைக்குத் தொடர்பே இல்லாத இந்தப் பார்ப்பனப் பிரச்சாரத்தைப் பார்த்து மௌனியை எப்படிப் பாராட்டுகிறார்கள்? ஒருவேளை மார்க்சியத்தையும் திராவிட இயக்கத்தையும் பெரியாரியத்தையும் அம்பேத் கார்இயத்தையும் மறுப்பது, கேவலமாக எழுதுவது பிரச்சாரம் ஆகாது போலும்!

உண்மையில் மௌனியின் கதைகள் அனைத்தும் பிரச்சாரங்களாக-அப்பட்ட மான வைதிக நோக்கின் ஆதரவுகளாக வெளிப்படுபவைதான்.

மௌனியின் கதைகளில் மழை ஒரு முக்கியமான நிகழ்வு. மழை பாலியல் உறவின் குறியீடாகவே மௌனியின் கதைகளில் இடம்பெறுவதைப் பல ஆண்டு களுக்கு முன்பே விமரிசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நனையாமலிருக்க ஒரு பங்களா வாசலில் ஒதுங்குகிறான் சேகரன். அப்போது இருபத்தைந்து வயது மதிக்கத் தக்க பெண் ஒருத்தி அவனைக் கூர்ந்து நோக்குகிறாள். தன்னை யாரென அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாத நிலையை மனவேதனையாகக் கண்ட அவன், “அப்பெண்ணின் கணவருக்குப் பின்னால் தன் பார்வையில் பட அவள் எப்போது வந்தாள் என்பதை கவனிக்கவில்லை.” அதேசமயம் அவள் கணவரும் “நாங்கள் எப்படி எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் என்பது புரியவில்லை” என்று தொடங்குகிறார். “உங்களுக்கு உங்கள் நண்பர் சங்கரை நினைவிருக்கிறது” என்று எப்படி அவர் இவனை அடையாளம் கண்டார் என்பதே புரியவில்லை நமக்கு. இதுவரை கதையில் அவன் என்றே சொல்லப்பட்டு வந்த அவன் இப்போது சேகரனாக மாறுகிறான். அவனது தன் வரலாற்றில் சங்கர் அவன் தங்கை சுமி ஆகியவர்களுடனான அவனது உறவு இப்போது முன்னுக்குத் தள்ளப்படுகிறது. ஆனால் இந்த விஷயம் முன்பே சங்கரின் கடித வாயிலாகச் சொல்லப்பட்டுவிடுகிறது. “என் கற்பனையில் பிறந்து அவர்கள் மனத்தில் நீ வாழ்வது எவ்விதமோ தெரியவில்லை” என்று அவன் எழுதியிருக்கிறான். சங்கரின் கற்பனையில் பிறந்தவன் சேகரன் என்றால் அவன் இதுவரை எப்படி வாழ்ந்தான், எப்படி மலைக்கோட்டையைப் பார்வையிட்டான், எப்படி மழையில் நனையாமலிருக்க வீட்டிற்குள் வந்தான்? இதுதான் மௌனியின் அற்புதமான “உன்னதமான பாஷை.”
சங்கரின் இறப்பைச் சேகரனுக்கு அவன் தங்கை கணவர் சொல்கிறார். தெற்கிலி ருந்து வடக்கே ஏதோ ஒரு படிப்புக்குச் சென்றவன், ஒரு சுரங்கக் கம்பெனியில் உயர்பதவி வகித்து பூமிக்கு இரண்டாயிரம் அடி கீழே சுரங்கத்தைப் பார்வை யிடும்போது ஏதோ விஷம்தீண்டி இறந்துவிடுகிறான் சங்கர். ஆனால் உண்மையில் கதையை நடத்திச் செல்லும் சேகரனுக்கு சங்கர் இறக்கவில்லை. சங்கர், அவனது தங்கை சுமி ஆகியோர் நினைவாகவே அவன் வாழ்ந்து கொண் டிருக்கிறான். சங்கர் தனக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அனுமானிக் கும் அவன் பிறகு வாயிலைத் தாண்டி படிகளைத் தாண்டி கதவையும் தாண்டி-எல்லாவற்றையும் “தாண்டிக்” கடந்து சென்றுவிடுகிறான். இவ்வளவுதான் கதை.

கதையின் இந்த இறுதிப்பகுதி முக்கியமானது. சங்கரும் அவன் தங்கை சுமியும் பிரிக்க இயலாமல் சங்கரின் நினைவில் வாழ்பவர்கள். ஆனால் சங்கரோ அவர் கள் நினைவில் தான் வாழ்வதாக நினைக்கிறான். இதுதான் கதையின் முக்கியச் செய்தி. அதாவது உயிரோடிருப்பவனாகிய இவன் நினைவில் அவர்கள் வாழ, இறந்துவிட்ட அவர்கள் நினைவில் இவன் வாழ்வதாக ஒரு சுழற்சியில்-விஷச் சுழலில் சிக்குகிறது கதை. இச்சுழற்சி, இக்கதா பாத்திரங்களின் உடனிருப்பை முற்றிலுமாக மறுக்கிறது. மேலும் சங்கரின் கனவாகத் தன்னைக் கருதிக்கொள் ளும் சேகரன், சுமி நாடிச் செல்லும் கனவும் தானே என்பதாக முன்னாலே வருகிறது.

கதையில் சேகரன் சுமியைத் திருமணம் செய்துகொண்டதற்கான குறிப்பு எதுவும் இல்லை. என்றாலும் இருவருக்குமிடையிலான ஈர்ப்பு, மிக நுட்பமாகச் சொல்லப் படுகிறது. சேகரனை அவள் கதவிடுக்கில் நின்று பார்த்ததையும், அவனைக் குறித்து அழகாகப் புரிந்துகொண்டவளாக இருந்ததையும் சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறான். சுமிக்கும் சேகரனுக்கும் சங்கருக்கும் இடையிலிருந்த உள்ளார்ந்த பாலியல் ஈர்ப்பைச் சொல்ல முனையும் ஆசிரியர், தம்மையறியாமலேயே தடை செய்யப்பட்ட பாலியல் உறவுக்குள் சென்றுவிடுவதால் அதைத் தவிர்கக்வேண்டி மூவரையும் உடலற்றவர்கள் ஆக்கிவிடுகிறார். சங்கரின் இறப்போடு தன் இருப்பும் கூடச் சந்தேகம் கொள்வது சரி என்று நினைக்கிறான் சேகரன். மேலும் சங்கரின் பேச்சில் தன்னைத் தான் பார்ப்பதாகவும் கருதுகிறான். இம்மா திரிப் பல்வேறு குறிப்புகள் சஙகரையும் சேகரனையும் ஓர் உடலின் இருவேறு உருக்களாகவே காட்டுகின்றன. அதாவது அவன் ஒரு பிளவுபட்ட ஆளுமை (ஸ்ப் ளிட் பெர்சனாலிட்டி) கொண்டவன். பிறருடன் அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது இன்னொரு சுயம் கனவுகாணத் தொடங்கிவிடுகிறது. “அநேக மாணவர் மத்தியில் ஒரு மதிப்பில் வீற்றிருக்கும்போது அவனை (சங்கர்) அங்கு பார்க்கமுடியாது. கொஞ்சம் எட்டியோ, அல்லது பார்வையில்கூடப் படமுடியாத வகையில் அவன் அங்கிருப்பது மட்டும் நிச்சயம். அவசியமானால் பார்வை கொள்ளக் கூடிய விதத்தில் அவன் எங்காவது பகற்கனவு கண்டுகொண்டிருப் பான்”. ஒரே உடல், ஆனால் ஓர் உரு அண்ணனாக இயக்கம் கொள்கிறது, மற்றொரு உரு காதலனாக, சங்கராக இயக்கம் கொள்கிறது.
சேகரன் என்னும் இவனது பெயரே, முதன்முதலில் இவன் மழைக்கு ஒதுங்கும் வீட்டின் சொந்தக்காரர், சங்கரின் தங்கை கணவர் சொல்வதாகத்தான் வருகிறது. கதையில் இவன்தான் உண்மையிலேயே சங்கரின் நண்பன் சேகரன் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. மௌனியின் எழுத்து இந்தத் தகாத பாலியல் உறவுச் சிக்கலை உருவெளித் தளத்திற்கு மாற்றி மறைக்கவே கோட்டை யைப் பார்க்கும் நிகழ்ச்சி நுழைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணன் தங்கை இடையிலான பாலியல் தொடர்பு சமூகத்தடைகளில் முக்கிய மான ஒன்று. இதனைத் தாங்கமுடியாமல்தான் சங்கர் இறந்துவிடுகிறான். அவனுக்குப்பின் அவன் தங்கையான சுமியும் இறந்துவிடுகிறாள். இதைச் சொல்வதே ‘மனக்கோட்டை’ கதை. மௌனியின் நினைவுச்சுழல் என்னும் கதையும் இதேபோன்ற தடுக்கப்பட்ட பாலுறவு அடிப்படையிலேயே அமைந்திருப் பதையும் விமரிசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தத் தடைசெய்யப்பட்ட பாலுறவுக் கதை, வெளிப்படையாகத் தோன்றாமலிருக் கவே
சேகரன் மலைக்கோட்டையைக் காண்பதையும் பிறகு வெளிப்படையான அரசியல் விமரிசனத்தையும் வைக்கிறார் மௌனி. அதுமட்டுமின்றி மூன்று பேரையும் மன வுருக்களாகவே மாற்றிவிடுகிறார். அதாவது தடைசெய்யப்பட்ட பாலியல் உறவுக் கதையை மறைப்பதற்காக அரசியல் விமரிசனமும் வேதாந்தமும்! இது மௌனியின் முக்கியமான ஒரு முகம்.


16. முடிவுரை

15. முடிவுரை

தமிழ் வளரவேண்டும் என்பதுதான் நம் அனைவர் விருப்பமும். இதற்குப் பல்வேறு தாக்கங்கள் உதவியும் உள்ளன. ஒவ்வொரு காலத்திலும் ஒவ் வொரு விதமான தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. பழங்காலத்திலேயே – சங்க நூல்கள் எழுந்த காலத்திலேயே – சமஸ்கிருத, பிராகிருத, பாலி நூற் கருத்துகளின் தாக்கங்கள் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ளன. விஜயநகர, நாயக்க ஆட்சியின்போது தெலுங்கு, கன்னட மொழித் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம்கள் ஆட்சியின்போது பாரசீக, அராபிய, உருது மொழித் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மேற்கத்தியவர்களின் வருகையினால் தமிழில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானியத் தாக்கங்கள் பரவலாக ஏற்பட்டுள்ளன. இவற்றிலும் ஆங்கில வாயிலாக வந்த தாக்கங்களே மிகுதி. எவ்வளவு கொள்கைகள் இதுவரை ஆங்கில வாயிலாக நம்மை எட்டியுள்ளன என்பதை இதுவரை வாசித்த பகுதிகள் தெளிவாகவே விளக்கியிருக்கும்.

தாக்கங்களின்றித் தூய வாழ்வு நடத்துவது என்பது கலாச்சாரரீதியாகச் சாத்தியமில்லை. எப்போதும் என்றும் ஏதோ ஒரு/சில அந்நியக் கலாச் சாரத்தின் தாக்குதல் இருந்துகொண்டுதான் இருக்கும். தமிழ் ஒருவகையில் அதிர்ஷ்டம் பொருந்திய மொழி. பிற திராவிட மொழிகள் போல சமஸ்கிருத நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படாமல், தனது தனித்தன்மையையும், தனக்கு ஆதியான மூலதிராவிடப் (அல்லது மூலத்தமிழ்ப்) பண்பாட்டையும் எக்காலத்திலும் காப்பாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. இந்தியாவின் அடிப்படை திராவிடப் பண்பாடு என்கிறோம். அதைக் கண்டறிய இன்ற தமிழைவிட்டால் வேறு கதியே இல்லை. ஆனால் தனித்தன்மையை அளவுக்கு மிஞ்சி வலியுறுத்தவும் முடியாது. தனிமனிதனுக்குத் தனது வீடு, அதே சமயம் வெளி உலகம் என்றிருப்பதுபோல, மொழிக்கும் தனக்குள்ள தனித்தன்மை, வெளித்தாக்கங்கள் என்ற இரண்டுமே உண்டு. ஒன்றை மட்டுமே வலியுறுத்துவது சிறப்பன்று.

இதுவரை வந்த எல்லாத் தாக்கங்களையும் விட ஆங்கிலத்தின் தாக்கம் கடுமையானது. எத்தனையோ மொழிகள், கலாச்சாரங்கள், உலகமயமாக்கலி னால் அழிந்து போயிருக்கின்றன. அழிந்தும் வருகின்றன. ஆனால் தமிழ் இதனை ஆக்கபூர்வமாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளது. இன்னும் ஆக்க பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும். இன்னும எத்தனையோ வகைப் படைப்பு முறைகள், கதையாடல்கள் தமிழில் வ(ள)ர வேண்டும். இந்நூலில் விவாதிக்காத மேற்கத்தியக் கொள்கைகள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக, இயற்கைவாதம் (நேச்சுரலிசம்), வெளிப்பாட்டியம் (எக்ஸ்பிரஷனிசம்), பதிவு நவிற்சியியம் (இம்ப்ரெஷனிசம்), மீயதார்த்த வாதம் (சர்ரியலிசம்) போன்ற எத்தனையோ கொள்கைகள்-நமக்குத் தேவையானவை-விவாதிக்கப்படவில்லை. எவை அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனவோ அவை பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யதார்த்தவாத, இயற்கைவாத, (இவையெல்லாம் காலாவதியாகி விட்டன என்பதில் நமக்கு உடன்பாடில்லை) வெளியீட்டுவாத….இன்னும் எத்தனை எத்தனையோ விதமான எழுத்துமுறைகள் தமிழில் பதிவாக வேண்டும்.

இன்று தன்னிச்சையான, இயல்பான இலக்கியக் கவிதை வெளிப்பாடு என்ற ரொமாண்டிக் கொள்கை இயலாதது. எவரும் பின்பற்ற முடியாதது. வாசிப்பவனுக்கும் திறனாய்வாளனுக்கும்தான் கொள்கைகள் தெரியவேண் டும் என்பதல்ல. எழுதுபவனும் அவற்றை நன்கறிந்திருக்க வேண்டும். ஆனால் எழுத்து வெறும் கொள்கை விளக்கமாகவோ, பிச்சாரமாகவோ போய்விடக்கூடாது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, அம்பர்ட்டோ ஈக்கோ வின் கொள்கைசார் திறனாய்வும் புனைவு எழுத்துகளும். குறியியலில் தொடக்கத்தில் எவ்வளவு ஆர்வ்த்துடன் ஈடுபட்டாரோ அதே ஆர்வத்தோடு அவர் ‘தி நேம் ஆஃப் தி ரோஸ்’, ‘ஃபூக்கோ’ஸ் பெண்டுலம்’ போன்ற நாவல்களையும் எழுதினார். இம்மாதிரியான வாசிப்பறிவும் எழுத்துப பயன்பாடும் தமிழுலகில் வரவேண்டும். தமிழ் எழுத்தாளப் பெருமக்களோ இன்னும் ரொமாண்டிக் காலத்திலேயே-உள்ளத்திலேயே எல்லாம் இருக் கின்றன என்ற கற்பனையில் இருக்கிறார்கள். இன்றும் பலர் கொள்கை களைப் படிப்பதோ கற்றறிவதோ பெரிய தீங்கு என்பதுபோலப் பார்க் கிறார்கள்.

அதேபோல நல்ல கூர்மையான விமரிசகர்களும் தோன்றவேண்டும். தமிழ் இலக்கியப் பரப்பு பெரியது. சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை-பின்நவீனத்துவ எழுத்துமுறை வரை, பலவேறு தளங் களைக் கொண்டுள்ளது. இவற்றைப் பல்வேறு வழிகளில் பல்வேறு கொள்கைகளின் ஊடாக வாசிக்க வாய்ப்பிருக்கிறது. சங்க இலக்கியத்தை இன்னும் எத்தனை எத்தனையோ விதங்களில் வாசிக்க இயலும். ஆனால் இக்காலக் கொள்கைகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளாமல், புதிதாக எந்த நாவல் அல்லது கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது என்று, அதன் தரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தேடி அலைவதை நான் ஓர் ஆய்வு மேற்பார்வையாளனாகக் கவலையோடு கவனித்திருககிறேன். புதியபுதிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, அவற்றின் சார்பான நூல்களைக் கற்றறிந்து, ஆய்வு செய்ய இது போன்ற நூல்கள் ஓரளவு ஆர்வத்தைத் தூண்டுமானால்கூட, வெற்றிதான் என்று சொல்லலாம்.

இதேபோலத் தமிழ் இலக்கியத்தைப் பிறமொழிகள் அனைத்திலும் (ஆங்கிலத்தில் மட்டும் அல்ல) நன்கு மொழிபெயர்க்கவும் நிறையப்பேர் தேவைப்படுகின்றனர். உலகத்தின் கவனததைத் தமிழின்பால் ஈர்க்க இது உதவும். ஏனெனில் தமிழ் தனக்குரிய கவனத்தை இதுவரை பெறவில்லை. உலகத்தரத்திலான ஏராளமான படைப்புகளைத் தன்னகத்தே வைத்துக் கொண்டு ஆனால் அவற்றை உலகம் அறியச் செய்ய இயலாமல் (உலகம் எதற்கு? வடக்கு மாநிலத்தவர்களே அறியச் செய்ய முடியாமல்) பிறரால் கேவலப்படுத்தப்படும் ஒன்றாகத் தமிழ்மொழி இன்று தயங்கி மயங்கி நின்று கொண்டிருக்கிறது. எனவே தமிழ் இலக்கியத்தை வெறும் வயிற்றுப் பிழைப்புக்கான படிப்பாக மட்டும் ஆக்கிவிடாமல், ஒரு சிறப்பூதியம் (இன்சென்டிவ்) பெற்றுவிட முடிகிறது என்பதற்காக மட்டும் படிக்காமல், சிரத்தையுடன் தமிழ் இலக்கியத்தைப் பயின்று அதன் மேன்மைகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய நெருக்கடியான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். புதியனவற்றைப் பயின்று, புதியனவற்றைப் படைத்து, தமிழ் இலக்கியம் அழிந்துபோகாமல் சிறப்புப் பெறச் செய்வது இன்றைய முதன்மைத் தேவை.


15. பிற்காலனியம்

14. பிற்காலனியம்

இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதிவரை உலகின் பல நாடுகள் மேற்கு நாடுகளின் நேரடிக் காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்தன. இருபதாம் நூற் றாண்டின் இறுதியிலோ நேரடிக் காலனி ஆதிக்கம் அகன்றாலும், உலக மயமாக்கம் போன்ற கொள்கைகளின் வாயிலாக மறைமுகமா பொருளாதார நெருக்கடிக்கும் புதிய காலனி ஆதிக்கத்திற்கும் உள்ளாகியுள்ளன. இவற் றால் ஏற்பட்ட (மேற்கத்திய) பாதிப்புகளை ஆராய்கின்ற பிற்காலனிய ஆய்வு போன்றவற்றிலும் நாம் மேற்கத்தியக் கொள்கைகளையே பயன்படுத்துவது/ பயன்படுத்த வேண்டியிருப்பது ஒரு வேடிக்கைமுரண்தான்.

தமிழில் பிற்காலனிய நோக்கிலான ஆய்வுகள் எதுவும் இதுவரை முழு மையாகச் செய்யப்பட்டு வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஆனால் பிற் காலனியச் சிந்தனைகள் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு மேலாக (அப்பெயரில் இல்லாவிட்டாலும்) தமிழ் மண்ணில் இருந்துவருகின்றன. இன்று முனைப்புப் பெறவேண்டிய ஆய்வுமுறை இது.

பிற்காலனியம் பற்றிய சிந்தனையிலும் ஒற்றைத்தன்மை வாய்ந்த, ஒருமைப்பட்ட கருத்துநிலைப்பாட்டைக் காண்பது அரிது. காரணம், பிற்காலனியக் கொள்கைகள், பேரளவு வீச்சுள்ள தத்துவ, அறவியல், அரசியல், முறையியல் அடிப்படைகளில் அமைந்தவை. பிற்காலனியம் என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின்விளைவாக உலகக் கலாச்சார அளவில் எழுந்த சில எதிர்ப்பியக்கங்களைக் குறிக்கிறது. ஐரோப்பியக் காலனியாதிக்கத்தை வீழ்ச்சியுறச் செய்த கலாச்சார, பொருளாதார, சமூக நிகழ்வுகளையும் இச்சொல் குறிக்கிறது. இந்நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டுள்ள கலாச்சார அடையாளம், பால், தேசியம், இனம் முதலிய கருத்தாக்கங்கள், அந்நிய ஆட்சியின்கீழ்த் தன்னிலை உருவாக்கம், காலனிய மொழியாதிக்கம் சம்பந் தப்பட்ட வினாக்களும் இத்துறையில் அடங்கும்.

எளிமையாகக் கூறினால், முன்பு காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த தேசங்களின் கலாச்சார நிலைகளை ஆராய்வது பிற்காலனியம். காலனி யாதிக்கமும், காலனிய மீட்பும் எவ்வாறு நிகழ்ந்தன? காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளின் இன்றைய கலாச்சாரச் சூழல்களுக்கும் விளைவு களுக்கும் எவ்வாறு அந்நிகழ்வுகள் காரணமாகியுள்ளன? இவை குறித்த விமரிசனபூர்வ ஆய்வும் பிற்காலனிய ஆய்வு என்பதில் அடங்கும்.

தேசியக் கலாச்சார உருவாக்கத்தையும், அக்காலச்சாரத்திலுள்ள தன் னிலை அடையாளங்களையும் காலனி ஆதிக்கம், அதிலிருந்து விடுபடுதல் ஆகியவற்றின் பருப்பொருள்சார் நிலைமைகள்தான் நிர்ணயிக்கின்றன. பலவேறு கலாச்சாரங்களின் உள்ளமைவுகளைப் பருமையான அரசியல், வரலாற்று, கலாச்சார ஊடுதொடர்புகள் எவ்வாறு பலவிதங்களில் பாதித்திருக்கின்றன என்று கண்டறியும் ஆர்வத்துக்கான எதிர்வினை இது. ஒரு கலாச்சாரத்தின் அழகியல், அதன் கடந்தகால் அரசியலின் விளைவு மட்டுமல்ல, குறித்த கலாச்சார ஊடாட்டத் திட்டங்களை அதில் நுழைப்பதற் கான கருவியும் ஆகும்.

பிற்காலனியம் என்பதிலுள்ள பின்- என்ற ஒட்டு, காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட கலாச்சாரங்களின்மீது அந்த ஆதிக்கத்தின் தாக்கம் முடிந்தவுடனே-அந்த அடிமை நாடுகள் விடுதலை பெற்றவுடனே முடிந்துவிடுகிறது என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும். அவ்வாறு அன்று. ஒரு தேசத்தின் எல்லை களுக்கு அப்பாலுள்ள (ஆதிக்க) நாடுகளின் மக்கள், அந்த தேசத்தில் குறுக்கீட்டையும் கட்டுப்பாட்டையும் செலுத்த இயலும், அப்படிச் செலுத்து வது, அந்த தேசத்தின் தோற்றத் தனித்தன்மையையும் தனிமதிப்பையும் நியாயப்படுத்துகின்ற தேசிய அடையாளத்தின் சமூக உறுதிப்பாட்டை உடைக்கும் செயல்.

காலனியம் என்பது வெறும் நாட்டை/நிலத்தைக் கைப்பற்றும் ஆதிக்கம் மட்டும் அல்ல. அரசியல், பொருளாதார, கலாச்சார ஆதிக்கங்களையும் அது உள்ளடக்கியிருக்கிறது. காலனி ஆதிக்கத்தை இம்மாதிரிப் புரிந்துகொண்ட கொள்கையாளர்கள், பிற்காலனியச் சமூகங்கள், அரசியல் விடுதலை பெற் றாலும் அவை உண்மையில விடுதலை பெற்றவை ஆகிவிடுவதில்லை என்பதை அறிவார்கள். அவை நவகாலனிய வடிவங்களுக்கு அடிமை யாகின்றன. காலனிய ஆதிக்கம் ஒற்றைத் தன்மை வாய்ந்தது அல்ல.

1. காலனிய நாட்டு மக்களை அடிமைப்படுத்துவது, அவர்களது எதிர்ப் பைத் தூண்டக்கூடிய செயல். ஆதிக்கநாட்டினரின் கலாச்சாரக் கட்டுப் பாட்டிற்கான கருவிகளை எப்படி ஆதிக்கத்திற்கு உட்படுவோர் தலை கீழாக்குகிறார்கள், எப்படி அவற்றை இரகசியமான கவலையுடனும் வீறாப் புடனும் எதிர்கொள்கிறார்கள் என்பவை பிற்காலனிய ஆய்வுகளின் முக்கியமான பொருளாகின்றன.
2. மேற்கு நாடுகள் நாகரிக உலகின் மையமாகத் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. அவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடு களின் மக்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு விளிம்புக்குத் தள்ளப்படும் மக்களின் கலாச்சார வரலாற்றைப் பற்றியும் பிற்காலனிய ஆய்வுகள் அக்கறை கொள்கின்றன. இந்த ஆதிக்க மையத் திற்கும் காலனிய விளிம்புக்குமான தொடர்பு பிற்காலனியக் கொள்கை யாளர்கள் பலரால் ஆராயப்படுகிறது.

3. பிற்காலனியப் பகுப்பாய்வு, கலாச்சார எல்லைகளின் பிரக்ஞையை உட்கொண்டுள்ளது. கலாச்சார எல்லைகள் என்பவை, தமதும் பிறரதுமான அடையாளங்கள் மாறக்கூடிய கற்பனை எல்லைக் கோடுகள் ஆகும். தங்க ளைச் சமூகக் களத்தில் தன்னிலைகளாக ஆதிக்கத்துக்கு உட்பட்டோர் எப்படி அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பிற்காலனியக் கொள்கை ஆராய்கிறது.

4. இவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளும் பிரச்சினை, மானிடக் கர்த்தா நிலையையும் தன்னிலையையும் பற்றி விவாதிப்பதிலுள்ள பிரச்சினைகளையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆதிக்க நாடுகளின் கருத்தியல் களும், கலாச்சாரச் சொல்லாடல்களும் சமூக அமைவுகளில் தனிமனித நிலைகளை நிர்ணயிப்பதில் எவ்விதப் பங்கு வகிக்கின்றன என்பதையும் பிற்காலனிய ஆய்வுகள் ஆராய்கின்றன. ஆதிக்கத்திற்குட்பட்ட தன்னிலை இருந்து, பேசி, எழுதி, தன்னைப் பிறர்மீது சுமத்திக்கொள்ளும் சமூகத்தளம், பிற்காலனியக் கொள்கையாளர்களுக்கு மிக முக்கியமானது. இத்தன்னிலை கள், தங்கள் தனித்த கலாச்சார, இன அடையாளங்களை மீண்டும் பெறுவதற்கான தேவை பற்றிச் சிலர் விளக்கியுள்ளனர். பொதுக் கலாச்சார வெளியின் வாயிலாகவே அவர்கள் தங்கள் குரலை எழுப்பமுடியும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்படி ஆய்வு நோக்குகள் பலவகைகளில் வித்தியாசப்படுகின்றன.

பின்அமைப்பியமும், பின்நவீனத்துவமும் கொண்டுள்ள பிரதி/பனுவல் பற்றிய கருத்தாக்கமும், சமூகச் சொல்லாடலின் பிரதித்துவம் (டெக்சு வாலிட்டி) பற்றிய கருத்தாக்கமும் பிற்காலனிய ஆய்வாளர்களின் அணுகு முறைகள் மீது அதிகச் செல்வாக்குடையவை. தன்னாட்டவன் (நேடிவ்) என்ற அடையாளத்தைக் காலனியாதிக்கக் கலாச்சாரம் சமைத்து ஒட்டும் செயலில் இலக்கியப் பிரதியின் தன்மை மையமானது. காலனியாதிக்கச் சூத்திரங்களுக்குப் பின்னால் உள்ள இடைவெளிகள், விடுபாடுகள், முரண்பாடுகள் ஆகியவற்றைச் சமகால இலக்கியக் கொள்கையாளர்கள் வலியுறுத்து கிறார்கள்.

இந்தியாவில் பிற்காலனிய ஆய்வுகளின் முன்னோடியாக அமைந்தது, ஆங்கிலப் பாடத்திட்டமாக அமைந்த காமன்வெல்த் இலக்கியம் என்னும் துறை. காமன்வெல்த் நாடுகள் என்பவை பிரிட்டனின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்து விடுதலை பெற்ற நாடுகள். காமன்வெல்த் நாடுகளில் ஆங்கிலத்தில் உருவான இலக்கியம் (சான்றாக, ஆர். கே. நாராயண், சினுவா அச்சுபே போன்றோர் எழுத்துகள்) பற்றிய படிப்பாக அது அமைந்தது. மொழிப் பயன்பாட்டின் அர்த்தம், விளைவு பற்றிய ஆய்வு களுக்கு இது இட்டுச்சென்றது. பிற்காலனியக் கலாச்சாரத்தில் (இந்தியா போன்றவற்றில்) காலனிய ஆடசியின் மொழியைத் (ஆங்கிலம் போன்ற வற்றைத்) தொடர்ந்து பயன்படுத்துவது அரசியல்ரீதியாக முன்னோக்கிச் செல்லும் உத்தியா, அல்லது ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தவர்கள் அதிலி ருந்து மீளமுடியாத அடிமைத்தனத்தைக் காட்டுவதா என்னும் விவாதங்கள் எழுந்துள்ளன.

5. காலனியத்தை எதிர்க்கும் உருவாக்குவதற்காகத் தங்களை ஒடுக்கி யவர்களின் வடிவங்களை எப்படித் தலைகீழாக்குகிறார்கள், ஆதிக்கத்திற்கு உட்பட்ட மக்களின் பிரதிகள் ஆதிக்கவாதிகளைநோக்கி எப்படித் திரும்ப எழுதுகின்றன (ரைட்-பேக்) என்பது பிற்காலனிய ஆய்வின் ஒரு முக்கியப் பகுதியாகும். மேம்போக்கான பார்வையில், ஆதிக்கக் கலாச்சாரத்திற்கு இலக்கியப் பிரதிகள் அடிபணிவதுபோலத் தோன்றினாலும், இரண்டாம் நிலையில், காலனியத்திற்கு எதிரான பன்முக அர்த்தங்களை எப்படி உருவாக்குகின்றன? சிலேடை, குறிப்புமுரண் (ஐரனி), முரண் மொழிவு (பேரடாக்ஸ்) போன்ற இலக்கியக் கருவிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகின் றன. இருக்கும் சொல்லாடலிலேயே காலனி ஆதிக்கத்திற்கு எதிரான அர்த்தங்களை உருவாக்க இவை பயன்படுகின்றன.

இறுதியாக, ஆதிக்கப்படுத்தும் கலாச்சாரத்துக்கும், அடங்கிச் செல்லும் கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள நெருக்கமான உறவு, கலப்பு (ஹைப் ரிடிடி) பற்றிய விரிவான விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. இருவழி ஏற்புகளையும், தடைகளையும் கொண்டதோர் இயங்கியல் உறவு இரு கலாச்சாரங்களுக்கும் இடையே நிலவுகிறது. அவ்வப்போது கலாச்சாரங்க ளுக் கிடையிலான குறுக்குமறுக்கான ஊடுருவல்கள் பறறிய சமரசமும் நிகழ்கிறது. காலனியாதிக்கத்தின் ஊடே இப்படிப்பட்ட இடைவினைகள் எவ்விதம் உருவாகின்றன என்பதை ஆராய்வதும் பிற்காலனிய ஆய்வின் முக்கியப் பகுதியாகிறது.

பிற்காலனியக் கொள்கையின் பரப்பு மிகப் பெரியது. சமூகவியல், மானிடவியல், தத்துவம், இலக்கிய ஆய்வு, கணிதம் போன்ற பலதுறை களின் மிதமிஞ்சிய அறிவை நாடுகிறது. எனவே இக்கொள்கையை மிகவும் சுருக்கிச் சொல்லுதல் என்பது இயலாதது. இத்துறையில் சில குறிப்பிட்ட அறிஞர்கள் பிறர்மீது பெருமளவு செல்வாக்கினை உருவாக்கியிருக்கிறார்கள். ஃபேனான், எட்வர்டு சயீத், காயத்ரி சக்ர வர்த்தி ஸ்பீவக், ஹோமிபாபா ஆகியோரின் பணிகள் விரிவானவை. எனவே அவர்களின் பணிகளைப் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

ஃபேனான் (1925-61)
இவர் ஒரு மேற்கிந்திய ஃபிரெஞ்சு உளவியலாளர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஃபிரான்சில் பயிற்சிபெற்றவர். ‘கருப்புத்தோல்-வெள்ளை முகமூடிகள்’ (1952), ‘உலகின் இரங்கத்தக்கவர்கள்’ (1962) ஆகிய நூல்கள் இவருக்குப் புகழ் தேடித்தந்தன. ஃபிரெஞ்சுக் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளில், ஆட்சியாளரின் காலனியாதிக்க நடைமுறைகள், ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த குடிகள்மீது அவை ஏற்படுத்திய விளைவுகள் ஆகியவற்றை ஆராய்ந்தவர் ஃபேனான். தேசிய அடையாளத்தின் வாயிலாக எழும் தடைக்கருத்தியலை அவர் ஆதரித்தார். இன்றுள்ள கொள்கையாளர்களுக்கு முன்னோடி. ஆதிக்கம் செய்வோர்-அடிமைப்பட்டோர் இருவர்க்கும் இடையிலான உளவியல் ரீதியான உறவுகளை அவற்றின் மிகச் சிக்கலான தன்மையோடு சிறப்பாக விளக்கியுள்ளார். காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட தன்னிலைகளின் ஒடுக்கப் பட்ட பிரக்ஞையை வெளிப்படுத்த உதவியிருக்கிறார். அவர்கள்மீது சுமத்தப்படும் விளிம்புநிலைகள், மற்றமை (அதர்னஸ்) போன்றவற்றிற்கு எதிரான தடைகளைக் கையாள அவர் கூறும் வழிமுறைகள் இன்றும் ஏற்றனவாகவே உள்ளன.

ஒரு கலாச்சாரத்தில் அறிவுஜீவிகளும் மேல்தட்டு மக்களும் மட்டுமே அந்நியக் கலாச்சாரத் தடைக்கான கருவிகளாகின்றனர். அதேசமயம், காலனியாதிக்க வகுப்பினருக்கு ஏற்றாற்போல நடந்துகொண்டு, ‘நல்ல குடிமக்கள்’ என்று தங்களை நிறுவிக் கொண்டு பதவிகளையும் பட்டங் களையும் பரிசுகளையும் பெறுபவர்கள் அவர்கள்தான். (நம் நாட்டில் பிராமணர்கள் நடந்துகொண்ட முறை இதுதான்.) ஆனால் இவர்கள்தான் ஓர் எதிர்க்கலாச்சாரத்திற்கெனப் போராடக்கூடியவர்கள். காலனி ஆதிக்கத்திற்கு எதிராக அரசியல் தளத்தில் போராடுபவர்கள். இன்றைய சூழல் அடிப்படை யில், பொருளாதாரத் தளத்தில் போராடினால், இவர்கள் தங்கள் போராட்டத் திற்கு ஆதாரமாகப் பழைய வரலாற்றையும் புராணங்ளையும் பயன்படுத்து கிறார்கள். அதனால் காலனிஆதிக்கம் செலுத்துவோர், (ஈராக்கிலும் ஆஃப்கானிஸ்தானத்திலும் அமெரிக்கா செய்ததுபோலவும், இலங்கையின் வடபகுதியில் சிங்களவர் செய்தது போலவும்) முதலில் அங்குள்ள மக்களின் பழங்கலாச்சாரச் சின்னங்களையும் வரலாற்றையும் அழிக்கிறார் கள். ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களும் முதன்முதலில் ஆதிக்க நாட்டினரின் பார்வையில் எது உகந்ததோ அங்கிருந்துதான் தொடங்குகிறார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்புக் கலாச்சாரம் வலுவடைகிறது. உதாரணமாக, நாவல் என்ற இலக்கிய வகை தோன்றியபோது மேற்கத்திய மதிப்பீடு அடிப்படையிலேயே அதன் வடிவம் போன்றவை நோக்கப்பட்டன.

அந்நிய ஒற்றையாட்சி, அல்லது காலனி ஆட்சி, தனக்குக் கீழ்ப்பட்ட மக்கள் “உள்செரித்துக்கொள்ளும்” செயல்முறை ஒன்றை ஆரம்பித்து வைக்கிறது. இந்தச் செயல்முறைக்கு ஆட்பட்டவர்கள், புற அளவில் மட்டும் பொருளாதார, அரசியல், சமூகத் தாழ்வுகளை அனுபவிப்பதோடு நிற்ப தில்லை. அக அளவிலும்-தங்கள் அடை யாளங்களை இழக்கும் நிலைக்கும் அதற்கு ஆட்படுகிறார்கள். எனவே புறவய, பொருளாதாரக் கீழ்ப்படுத்தல் என்பது இன, கலாச்சாரக் கீழ்ப்படுத்தலையும் உள்ளடக்கி யிருக்கிறது.

இதில் மொழியின் பங்கினை ஃபேனான் ஆராய்ந்தார். காலனி ஆதிக்கம் என்பது மொழியின் ஆதிக்கத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. மொழி யின் ஊடாகவும் செயல்படுகிறது. உதாரணமாக, ஃபிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ், க்ரியோல் என்ற மொழி தாழ்ந்த மொழியாக உணரப்பட்டது. இவ்வாறு மொழிவாயிலாக அடிமைப்படுத்தப்படும் தன்னிலைகள் தங்களை ஆதிக்கம் கொள்ளும் உயர்ந்த மொழியைப் பேசுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தங்கள் மொழித்திறன்கள், அடையாளம் ஆகியவற்றின் வாயிலாகத் தங்கள் தாழ்வினை உணர்கிறார்கள். கிழக்கு நாடுகளில் மட்டுமல்ல, ஆங்கிலத்தின் மேலாதிக்கம் ஐரிஷ் மொழி, வெல்ஷ் மொழி ஆகிய ஐரோப்பிய மொழிகளின் மீதும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஃபேனானின் இக்கருத்துகள், மேற்கத்தியக் கலாச்சார ஆதிக்கச் சூழலில் கலாச்சாரம், இனம் இவற்றின் வரையறை குறித்த நோக்கில் எழுத்தா ளர்களைச் சிந்திக்க வைத்தன.

இரண்டாம் நிலையில்தான் தேசிய இலக்கியம் என்பது உருவாகிறது. போராட்டக் காலத்தில் எழுதப்பட்ட சுதந்திர ஆர்வ எழுத்துகளுக்கு வரவேற்பு ஏற்பட்டது இந்த நிலையில்தான், இக்கட்டத்தில் நமது கலாச்சாரத்தை விளக்கும் எழுத்துகள் மிகுதியான வரவேற்புப் பெற்றன. தாகூர், பாரதி, திலகர் போன்றவர்கள் நமது பழங்கலாச்சாரத்தை மேம்படுத்திப் பேசிய கட்டம் இதுதான். இச்சமயத்தில் ஃபேனான் எச்சரித்த ஆபத்து நம் நாட்டில் உருவாகியே விட்டது. இம்மாதிரிச் சமயங்களில் ஆதிக்கத்தினரை வெளி யேற்றிவிட்டு, அந்த இடத்தில் அவர்களுக்கு பதிலாக அந்தந்த நாட்டு மேலாதிக்க வகுப்பினரே அந்த இடத்தில் அமர்ந்துவிடும் வாய்ப்பு அதிகம் என்பது ஃபேனானின் எச்சரிக்கை. ஃபேனானின் கலாச்சார அரசியல், பயன் வழி நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், கருப்பினத்தன்மை போன்ற கருத்துகளும் அனைத்து ஆப்பிரிக்க அரசியல் திட்டம் போன்ற இயக்கங்களும் ஏற்பட்டுள்ளன.

எட்வர்ட் சயீத்
இவரது ‘கீழையியம்’ (ஓரியன்டலிசம்) என்னும் நூல் பிற்காலனியச் சிந்தனைகளுக்கு வெகுவாகக் களம் அமைத்துத் தந்த ஒன்று. 1978இல் வெளியாயிற்று. கீழையியம் இன்று பல்கலைக்கழகங்களில் ஓர் கல்வித் துறையாகவே மாறிவிட்டது. மேற்கு-கிழக்கு என்னும் இருமை எதிர்வுகளை ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தும் நூல் இது. கிழக்கு நாடுகளின் மக்களின் சிந்தனை முறையைக் கேவலப்படுத்துவதே மேற்கத்திய ஆய்வு முறையாக இருக்கிறது. ‘கிழக்கு’ என்பதே மேற்கத்தியர்கள் தங்கள் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள, தங்களுக்கு அந்நியமான மற்றமைக்கு (தி அதர்) இட்ட பெயர்தான். எனவே கிழக்கு என்பதும் மேற்கத்தியப் பொருள்சார் நாகரிகம், இலக்கியம், இலக்கியம், மொழி பற்றிய கருத்துகளையே கொண்டிருக்கு மாறு நிர்ப்பந்திக்கப்பட்டது. அழகியலும் பிற கலாச்சாரங்களை இழிவு படுத்தும் மேற்கத்தியர் கைக்கருவியாகவே செயல்படுகிறது. சயீத்தின் ஆய்வு, ஃபூக்கோவின் நவ-வரலாற்றிய அடிப்படையில்தான் அமைந்துள்ளது. ஃபூக்கோ பொதுவரலாற்றில் ஆய்வுக்குள்ளாகாத கருத்துகளை (பிறழ் மனநிலை, பாலியல் போன்றவற்றை) எடுத்து ஆய்வு செய்தது போலவே, சயீத் கீழைத்தன்மை என்ற கருத்தை எடுத்து ஆராய்கிறார். மேற்கத்திய ஆதிக்கத்தின் பல இழைகள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதை வெளிப்படுத்துவதே இந்நூலின் நோக்கம். கீழைத்தன்மை என்பதை மேற்கு எப்படி உருவாக்குகிறது என்று அவர் ஆராய்ந்த விதம் பின்னால் வந்தவர்களுக்கு முன்னோடி ஆயிற்று.

மேற்கு உருவாக்கிய ‘கிழக்கு’ என்னும் கருத்து, கிழக்கு நாட்டினரின் உண்மையான கலாச்சாரங்களை நோக்குவதில்லை. ஆனால் கிழக்கின் உண்மையான கலாச்சாரங்களை எப்படி நோக்குவது என்பதை அவர் தெளிவுபடுத்தவுமில்லை. பலவித உறவுமுறைகளிலும தொடர்புகளிலும மேற்கின் கையே மேலோங்கியிருக்குமாறு எவ்விதம் மேற்குநாடுகள் நடந்துகொள்கின்றன என்பதை அவர் நூல் வெளிப்படுத்துகிறது. மேற்கத்திய அறிவியல், இறையியல், இராணுவ, மத, வணிகச் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் கருத்துக்கட்டுப்பாட்டினை மேற்கு எவ்விதம் மேற்கொள் கிறது என்பதை சயீத் நன்கு ஆராய்ந்துள்ளார்.

பூக்கோ போலவே, சயீத்தும் “அறிவுதான் ஆதிக்க அதிகாரம்” என்னும் கருத்தினைக் கொண்டவர். மேற்கத்திய அதிகாரத்தைத் தக்க வைப்பதில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இம்மாதிரி ஒடுக்கும் முறைகளி லிருந்து விடுபடுவதற்கான அரசியல் செயல்முறைதான் சயீத் முன் வைப்பது. ஃபூக்கோவும் டெரிடாவும் பிரதிகளைச் சந்தேகிப்பதில் ஒன்று படுகிறார்கள் என்றாலும், பிரதிகளின் விடுபாடுகளையும் இடைவெளி களையும் மட்டுமே டெரிடா நோக்குகிறார். பூக்கோ அவற்றை அதிகாரத் துடன் தொடர்புபடுத்துகிறார். அவற்றில் இரகசியமான ஆதிக்கக் கூறுகள் பொதிந்து அவை சமூகச் சொல்லாடல்களைக் கட்டுப்படுத்துவதை எடுத்துக்காட்டுகிறார். எனவே அரசியல் செயல்பாட்டுக்கு உதவக்கூடியவர் என்ற முறையில் டெரிடாவை விட ஃபூக்கோவை மதிக்கிறார் சயீத். பிரதிகளின் அர்த்தச் செயல்முறையை டெரிடா சந்தேகிப்பது அரசியல் செயல்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. ஆனால் நிறுவன ஆதிக்கம், பிரதியின் கருத்துநிலை இவற்றிற்கிடையிலான இணைப்புகளை அடையாளம் காண பூக்கோவின் ஆய்வுகள் உதவுகின்றன. எனவே ஒற்றைத்தன்மை வாய்ந்த மேற்கத்தியச் சொல்லாடலை எதிர்கொள்ள அது உதவும். சமூகச் சொல்லாடல்கள் சொல்ல விரும்பாத விஷயங்களை மறைத்துவைக்கும் காப்பகங்களாகப் பிரதிகள் செயல்படுகின்றன. அவற் றைக் கண்டறிந்து வெளிப்படுத்தும்போது அவை உடைகின்றன.

காயத்ரி ஸ்பீவக் சக்ரவர்த்தி
காலனிய ஆதிக்கவாதிகள் உருவாக்கும் கலாச்சார வெளிக்குள் காலனி யத் தன்னிலை எவ்வாறு அமைப்புறுகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக காயத்ரி ஸ்பீவக் சக்ரவர்த்தியின் நூல்கள் அமைந்துள்ளன. குறிப்பாகக் காலனியத்தில் இரட்டை விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் பெண்கள் பற்றி அவர் எழுதுகிறார். தந்தையாதிக்கம், காலனி ஆதிக்கம் என்னும் இரட்டை அடிமை நிலைக்கு உள்ளாகிறார்கள் பெண்கள்.

‘அடித்தட்டினர் பேசமுடியுமா?’ (கேன் தி சபால்டர்ன் ஸ்பீக்?) என்னும் அவரது கட்டுரையில் இரட்டை விளிம்புநிலைக்குள்ளான பெண்கள், ஆதிக் கக் கலாச்சாரத்தின் உரைகளில் அவர்கள் நுழைய முடியுமா என்ற வினாவை எழுப்புகிறது. சாத்தியமில்லை என்பதே அவரது கட்டுரையின் முடிவு. “ஆனால் அடித்தட்டு ஆய்வு: வரலாறு எழுதும் முறையைத் தகர்த்தமைத்தல்” என்னும் கட்டுரையில் அவர் உரைக்கும் கருத்துகள், காலனி ஆதிக்கம் செய்யும் கொள்கையாளர்களுக்கு உதவுபவையாகவே உள்ளன என்று பலரும் எதிர்த்துள்ளனர்.

சயீத்துக்கு மாறாக, ஃபூக்கோவைப் புறக்கணிக்கிறார் ஸ்பீவக். டெரிடாவை ஏற்கிறார். முதலில், ஒடுக்கப்பட்ட தன்னிலைகள் பேச முடியாது என்று கூறிய ஃபூக்கோ, அவர்களால் பேச இயலும் என்று தமது பிற்கால எழுத்துகளில் தெரிவிப்பது ஸ்பீவக்கின் கண்டனத்திற்கு அடிப்படை. ஃபூக்கோவின் கருத்துகள், மேற்கத்திய ஆதிக்கக் கருத்தியலுக்கு ஒத்தவை என்றும் சாடுகிறார். மேற்கத்திய பூர்ஷ்வா முதலாளித்துவம், கிழக்கு நாடுகளை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்னும் வகைமுறையைக் கணக்கில் கொள்ளாமல் ஃபூக்கோ சிந்திக்கிறார். மேற்கு உலகில் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பைத்தியங்கள்-குழந்தைகள்-சிறையினர் ஆகிய வர்களைப் பற்றி மட்டும் பேசுவதும் கிழக்கு உலகினரை ஒடுக்கும் மேற்குமையப் பேச்சாகவே அமைகிறது. ஏனெனில், கருப்பினத்தவர், சாதியமைப்பில் கீழ்ப்பட்டவர்கள் போன்றோர் அவர்களைவிடப் பன்மடங்கு ஒடுக்குதல்களை அனுபவிக்கின்றனர்.

அறிவுஜீவிகள் உண்டாக்கிய கதையாடல்கள்/வரலாறுகளின் வாயிலாக ஆதிக்கம்/ஆசை/ஆர்வம் ஆகியவற்றின் ஆதிக்கச் சொல்லாடல்களை வெளிப்படுத்த முடியும் என்பது ஃபூக்கோ, டெல்யூஷ் போன்றவர்களின் கருத்து. இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற இயலாதவை என்று சாடுகிறார் ஸ்பீவக். சமூகத்தின் மற்றமையை-அதாவது இருட்பகுதிகளை-புத்திஜீவிகள் வாசிக்க இயலும் என்பதும் ஆகாதது என்கி றார்.

ஒடுக்கப்பட்டவர்கள், தங்கள் நிலையை அறிவார்கள் என்பதும, வாய்ப்பளித்தால் அதனை வெளிப்படுத்துவார்கள் என்பதும் ஃபூக்கோவின் நிலைப்பாடு. ஆனால் தங்களை ஒடுக்கும் அமைப்பிலேயே பயனை விளை விக்கும்படியாகவும், அதன் உற்பத்தியில் பங்கேற்கும் விதமாகவும் அடித்தட்டினர் மழுங்கடிக்கப்பட்டுள்ளனர். விளிம்புநிலைக்குத் தள்ளப்பட் டுள்ள மற்றவர்/பிறர் பற்றி நன்கு அறிந்து கொள்ளவோ, அவர்களுக்காகப் பேசவோ அறிவுஜீவிகளால் முடியாது என்பது ஸ்பீவக்கின் கருத்து. மாறாக, அவர்கள் வரலாற்றை மீட்டெழுதுவதில் அக்கறை காட்ட வேண்டும். மீள் எழுத்து (ரெப்ரசண்டேஷன்) என்பது இயலாததாயினும், தேவையானது என்பது டெரிடாவின் கருத்து. இந்த வழியையே ஸ்பீவக் பரிந்துரைக்கிறார். அடித்தட்டு மக்களின் நிலையை மேம்படுத்த மார்க்சிய வகைபாடுகள் பொருந்தாது என்று கூறும் அவர், ஒடுக்கப்பட்டவர்களை வரையறுத்து அடிமைப்படுத்தும் மேற்கத்தியப் பெருங்கதையாடல்களின் திறனை ஒழிப்பதுதான் அரசியல் வழி என்கிறார். ஒடுக்கப்பட்ட பெண்களின் வரலாறு களை வரைந்துள்ள முறை ஸ்பீவக்கிற்கு இத்துறையில் செல்வாக்கினை நிலைநிறுத்தியுள்ளது.

பிற வேறுபாடுகள் இருப்பினும், தங்கள் அறிவு ஆய்வுச் செயல்களின் வழியாக ஓர் அரசியல் இலக்கை அடையும் விளைவுக்குப் பாடுபடுவதில் சயீதும் ஸ்பீவக்கும் ஒன்றுபடுகின்றனர்.

ஹோமி கே. பாபா
‘கலாச்சாரத்தின் இருப்பிடம்’ (தி லொகேஷன் ஆஃப் கல்ச்சர்) என்ற நூலில், ஒடுக்கப்படும் தன்னிலை எப்படி உருவாகிறது என்பதைக் கொள் கைப்படுத்தும் நோக்கில் எழுதியுள்ளார். ‘ஆஃப் மிமிக்ரி அண் மேன்’ என்னும் கட்டுரையில் தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரங்களுக்குத் தங்கள் நோக்கில் ஓர் அடையாளத்தைக் காலனியப் படுத்துபவர்கள் எவ்விதம் அளிக்கிறார்கள் என்பதை ஆராய்கிறார். போலி செய்தல் (மிமிக்ரி) என்னும் கருத்தை இதற்குச் சான்றாக்குகிறார். ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள், காலனியர்களின் அடையாளங்களைத் தாங்களும் மிமிக்ரி செய்பவர் களாக உள்ளனர். ஆனால், இதுவும் மிமிக்ரிச் செய்கை போலவே போலியாக நிகழும் ஒன்றுதான்.

ஓர் ஆளை மிமிக்ரி செய்பவன் எப்படி அந்த ஆளாக முடியாதோ, அது போலவே ஆதிக்கத்திற்கு உட்பட்டவனும் தன் மிமிக்ரியினால் காலனிய வாதி ஆகிவிட முடியாது. காலனிப்படுத்தப்பட்ட அடையாளங்கள் யாவற் றிலும் இந்தக் கலப்பு, ஒரே மாதிரியும் வேறுமாதிரியும் இருத்தல் என்ற ஈரடிநிலையில் செயல்படுகிறது. இதே கருத்தை ‘சைன்ஸ் டேக்கன் ஃபார் ஒண்டர்ஸ்’ என்னும் கட்டுரையிலும் வெளிப்படுத்தியுள்ளார். ஆதிக்கவாதி யைப் போலவே அடிமைநாட்டில் உள்ளவன் நடிக்கவேண்டி யிருப்பதால் அவனுடைய வழிகாட்டுதல் இவனுக்குத் தேவையாக இருக்கிறது. ஆனால் இவனால் அவனாக முடியாது. அடிமை, அடிமைதான். எனவே ஆதிக்க வாதியின் நாகரிகத்தையும் கட்டுப்பாட்டையும் எந்த அளவுக்கும் ஏற்கக் கூடிய வளமான பூமியாக இவன் இருக்கிறான். ஆனால் அவன் கட்டமைக் கும் பூமியின் விளிம்பிலேயே இவனுக்கு இடம் அளிக்கப்படுகிறது.

காலனி ஆதிக்கவாதியின் நிலையை ‘உற்றுநோக்குதல்’ (gaze) என்னும் லக்கானின் நிலைப்பாட்டின் ஊடாக பாபா விளக்கியுள்ளார். ஆதிக்கவாதி, தனக்குக் கீழ்ப்பட்டவர்களை, தங்கள் சொந்த நாடுகளிலேயே அந்நியர் ஆக்குகிறான். ஆதிக்கத்திற்கு முன்பு அவர்கள் அடிமைத்தனம் என்பதை அறியாதவர்களாக இருந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. அதே சமயம், ஆதிக்கத்தில் அவர்களுக்கு இடமும் இல்லை. இது வெளி பற்றிய பிரச்சினை. யாருக்கு உரியது இந்த வெளி? தன் அடிமைகள் அறியா வண்ணம் அவர்களைப் பின்னிருந்து கண்காணிக்கும் நோக்கினைப் பயன்படுத்துகிறான் காலனியவாதி. அதுவே அவனது இயலாமையையும் காட்டுகிறது. பயத்தினால்தான் ஒடுக்குதல் நிகழ்கிறது. பயமில்லாத இடத்தில்-சமத்துவம் நிகழும் இடத்தில்-ஒடுக்குபவர்களும் இல்லை, ஒடுக்கப்படுபவர்களும் இல்லை. பாபாவின் நூல்கள், இந்த இருவிதத் தன்னிலைகளின் உருவாக்கம் பற்றியதாகவே அமைந்துள்ளது. கலாச்சார ஆய்வாளர்களுக்கு இந்தத் தன்னிலைகளுக்கிடையிலான உறவே முதன் மையாக அமைந்துள்ளது.
பிற்காலனியக் கொள்கைகள்,
-:காலனி ஆதிக்கத்திற்கு முந்திய நிலைமைகளைக் கணக்கில் கொள்வ தில்லை,
-:ஒற்றைச் சாராம்சத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை,
-:மேற்கு-கிழக்கு என்ற இருமை எதிர்வை மட்டுமே மையப்படுத்துகின்றன,
-:மேற்கத்தியப் பெண்ணியத்திற்கு மாற்றாக, மூன்றாம் உலகப் பெண் என்ப வளைச் சாராம்சரீதியாக உருவாக்க உதவுகின்றன
என்று மேற்கத்தியக் கொள்கையாளர்கள் குறைசொல்கின்றனர். மேற்கத் தியக் கல்விமுறையில் உருவான மேல்தட்டு புத்திஜீவிகளின் கருத்துகளை ஏற்று, உண்மையான தனித்தன்மைகளைப் புறக்கணிக்கிறது பிற்காலனியம் என்றும் சொல்கின்றனர். இதிலும் மேற்கத்திய உலகமய அறிவுச் செயல் பாடுகளின் தீனியாகவே கிழக்கு ஆக்கப்படுகிறது.

பிற்காலனிய நிலைமைகளைப் பற்றி விரிவாகப் பேசலாம். ஆனால் அப்படிப் பேசுவது, அந்த நிலைகளையே மாறாத இருப்புக்குள்ளாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது; அல்லது அதைப்பற்றிப் பேசாமலும் இருக்கலாம், அப்படி இருந்தாலோ அந்த நிலைகள் உண்மையிலேயே மாறாதபடி இருக்கும் – என்ற ஈரடி நிலைக்குள் சிந்திப்பவர்களைத் தள்ளு வதாகப் பிற்காலனியக் கொள்கை அமைகிறது. இதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, உண்மையிலேயே ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகளை நீக்கும் அல்லது எதிர்க்கும் செயல்பாடுகளிலும் போராட்டங்களிலும் இறங்குவது தான்.

இறுதியாக, பிற்காலனிய ஆய்வில், தேசிய இனப் பிரச்சினை பல்லாண் டுகளாக ஆராயப்பட்டு வருகிறது. பாபா முதலியோரின் நூல்கள் இதற்குச் சான்று. ஐரோப்பியக் கலாச்சாரத்தின் குறித்த வடிவங்களில், ஐரோப்பியக் கலாச்சாரமே மேலானது, கிழக்குக் கலாச்சாரங்கள் கீழ்ப்பட்டவை என்ற கலாச்சார ஒருசார்புத் தன்மை உள்ளடங்கியுள்ளது. இதனை ஓரியண்டலிசம் போன்ற நூல்கள் எடுத்துக் காட்டியுள்ளன. பிற்காலனிய ஆய்வில், புலம் பெயர்ந்தோர் பற்றியும், கலப்பு பற்றியும் மிகுதியாக ஆராயப்படுகிறது. டயஸ்போரா, ஹைப்ரிடிடி போன்றவை, மூன்றாம் உலகின், அல்லது பிற்காலனியக் கலாச்சாரங்களின் அடிப்படையாக அமைந்துள்ள கலாச்சாரப் பன்முகத் தன்மையை அடையாளப்படுத்த ஏற்பட்ட சொற்கள். இதனை ஸ்டூவர்ட் ஹால், ஹோமி பாபா போன்றோர் விளக்கியுள்ளனர். இவற்றில் மேற்கத்தியக் கலாச்சாரங்கள் x மேற்கத்தியத்திற்கு மாறான கலாச்சாரங்கள் இவற்றின் வித்தியாசங்களை வெளிப்படுத்த எனச் சொல்லாடல்கள், கதையாடல்கள் போன்ற கொள்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மேற்கத்தியக் கொள்கைகளின் உயர்வு பற்றிய வினாக்களை எழுப்புகின்றன. இவற்றில் மார்க்சிய, பின்நவீனத்துவ, பின்அமைப்பியக் கொள்கைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

பிற்காலனியத் தன்னிலைகளின் அனுபவத்தை வெளிப்படுத்துவதில், பின்நவீனத்துவம்/பின்அமைப்பியக் கொள்கைகள் ஏற்கும் எதிர்யதார்த்த நிலைப்பாடுகள் எவ்விதம் பயன்படும் என்ற கேள்வியை எட்வர்டு சயீத் எழுப்புகிறார். ஏனெனில், பின்நவீனத்துவ, பின்அமைப்பியச் சிந்தனைகளின் பெரும்பகுதி மேற்கத்தியக் கலாச்சாரச் சிந்தனைகளின் வழி உண்டானவை.

காலத்தைக் குறிப்பதாகப் பிற்காலனியம் என்ற சொல்லைப் பயன் படுத்துவது முரணான கருத்துகளுக்கு இடம் தருகிறது. மேற்கத்தியக் கலாச்சாரம கடந்த இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகளில் எய்திய கலாச்சார மேன்மையை இன்னும் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்ற சிந்தனைக்கு இது இடமளிக்கிறது. ஆகவே பிற்காலனிய- என்ற அடை மொழிக்கு உட்பட, காலனியம் இன்னும் தொடர்ந்து பிற்காலனியத் தன்னிலைகளின் அடையாளத்தின்மீதும் அதன் கலாச்சாரங்கள்மீதும் செல்வாக்குச் செலுத்திவருகிறது என்னும் சிந்தனை அடிப்படையாக உள்ளது. மேலும், இரண்டாம் உலகப் போருக்கு உட்பட்ட காலம் மட்டுமே காலனிய வடிவங்களிலிருந்து வெளிநோக்கி நகரும் மனப்பான்மையை உருவாக்கியது என்பது போன்ற பொதுமைப் படுத்தல்களும் கேள்விக்குட் பட்டவை. ஒற்றை அரசு மேலாதிக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஐரோப் பிய தேசிய அரசின் தோற்றம், முதலாளித்துவத்துடன் தொடர்புடையது. இந்தத் தேசிய அரசின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டே விடுதலை பெற்ற நாடுகளின் அரசியலமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. உலகமயமாக் கலின் விளைவாக மேற்கு தனது மேலாதிக்கத்தினைத் தொடர்ந்து கிழக்கு நாடுகளின்மீதும், மூன்றாக உலக நாடுகளின்மீதும் செலுத்திவருவதை அறிவோம். இம்மாதிரிச் செயல்பாடுகளை எதிர்க்கும் கருவியாகப் பிற்கால னியம் பயன்படுகிறது. பின்அமைப்பிய, பின்நவீனத்துவக் கொள்கைகளின் ஒருசார்புத் தன்மை ஒருபுறம் இருப்பினும், பிற்காலனிய நோக்கினைப் பயன்படுத்த அவற்றை ஆராய்ந்து ஏற்கவேண்டிய நிலையும் உள்ளது.


14. தலித்தியம்

13. தலித்தியம்

தலித் இயக்கத்தை மேற்கத்தியத் தாக்கத்தின் விளைவாக உருவான ஒன்று எனக் காண இயலாது. என்றாலும், தமிழ் தலித் இயக்கத்தின் தோற் றம், மேற்கத்திய நாடுகளிலிருந்து பெறப்படாவிட்டாலும், இந்தியாவின் மேற்கு மாநிலங்களிலிருந்து (மகாராஷ்டிரம், கன்னடம்) உந்துசக்தி பெற்ற ஒன்று. இரண்டாவது, இன்றைய தலித் இயக்கத்தின் கருத்துகளின் பின்னணியில் அமைப்பியம், பின்னமைப்பியம், கருப்பினக் கொள்கை போன்ற பல மேற்கத்திய இயக்கங்களின் தாக்கம் மிகுதியாகக் காணப் படுகிறது. மூன்றாவது நமது தலித் இலக்கியத்தின் தோற்றத்திற்கு மேற்கத்தியச் சார்பான கல்விமுறை ஒரு காரணமாக நிற்கிறது. எனவே மேற்கத்திய நோக்குகள் பற்றிய இந்த நூலில் இதுவும் இடம் பெறலாயிற்று.
என்றாலும், தலித்தியம் தமிழ்ச் சிந்தனையே என்பதும் இன்று வெளி யாகியுள்ளது. இதற்குக் காரணம் அயோத்திதாச பண்டிதரின் சிந்தனைகள்.

அயோத்தி தாசர்-ஒடுக்கப்பட்டவர்களின் முன்னோடி
அயோத்திதாச பண்டிதர் (1845-1914), அம்பேத்கர் காலத்திற்கு முன்பே வாழ்ந்தவர், பௌத்த மதத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர் என்றாலும் அவர் வெளியுலகிற்குத் தெரியவரவில்லை. 1999க்குப் பின்னரே அவர் படைப்புகள் (அயோத்திதாசர் சிந்தனைகள், மூன்று பாகங்கள்) வெளியிடப்பட்டன. அவற்றிலிருந்து நோக்கும்போது முழு இந்தியாவிலுமே தலித்துகளின் அடையாளத்திற்கென முதன்முதலாகப் போராடியவர், விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்தவர் அயோத்திதாசர் என்பது தெரியவருகிறது.

நீதிக்கட்சியும் பெரியாருமே தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, ஆத்திகக் கொள்கை எதிர்ப்பு போன்றவற்றின் முன்னோடிகள் என்ற பார்வை அயோத்திதாசர் நூல்களின் வருகைக்குப் பின் பொய்யாகியிருக் கிறது. தமிழகத்தின் முதல் பொதுவுடைமையாளரான சிங்காரவேலரும் அயோத்திதாசரும் சமகாலத்தவர்கள். பௌத்த மதத்தில் பொதுவாக ஈடுபாடு காட்டியவர்கள். அயோத்திதாசர், வட ஆர்க்காடு மாவட்டத்தில் வழக்கமாக வள்ளுவர் (இவர்களைப் பண்டிதர் என்றும் சொல்வதுண்டு) எனப்பட்ட மருத்துவச் சாதியில் தோன்றியவர் என்று தெரிகிறது. அயோத்தி தாசர் பௌத்தம் என்ற சொல்லை சமண மதத்தையும் உள்ளடக்கிய சிரமண மரபைக் குறிக்கும் ஒன்றாகவே கையாளுகிறார். இந்தச் சிரமண மரபு மகாவீரருக்கும் புத்தருக்கும் முன்னாலிருந்தே வருவது. தமிழகத்தில் வைதிக மதங்களின் வருகைக்கு முன்னரே இத்தகைய மரபு இருந்ததைக் காணமுடியும்.

பெரியாருக்கு முன்னரே நாத்திகக் கருத்துகளையும் பிராமண எதிர்ப்புக் கருத்துகளையும் தமிழகத்தில் முதன்முதலாக வெளியிட்டவர் அயோத்தி தாசர். அவருடைய தமிழக வரலாற்று மீட்புணர்வு மிகப் பெருமைப்படத் தக்கது. தலித்துகள் தான் இந்திய வரலாற்றிலேயே பிராமண எதிர்ப்பாளர்க ளாகவும், சாதியுணர்வின் கொடுமைகளாலும் தீண்டாமையினாலும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருந்ததை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் இவர்தான். மேலும் அக்காலச் சுதேசிப் போராட்டத்தினர், ஆங்கிலேயரை வெளியேற்றினால் போதும் என்று கருதினார்களே தவிர, முதலாளித் துவத்தையோ சாதியமைப்பையோ எதிர்க்கத் தயாராக இல்லை என்பதையும் நிறுவியுள்ளார். அதேபோல நீதிக்கட்சி பற்றிய தனது ஐயப் பாட்டையும் அவர் தெரிவித்துள்ளார். நீதிக்கட்சியில் இருந்த பிராமணரல் லாத சாதிகளிடம் சாதியுணர்வு இல்லையா என்ற கேள்வியை எழுப்பி, அவர்கள் யாவரும் பணக்காரர்களாகவே இருப்பதையும் சுட்டிக்காட்டியுள் ளார். இன்று பெரியாரைப் பலர் சாதிமறுப்புக்காகப் பாராட்டினாலும், உண் மையில் அவரிடமிருந்து கற்றிருக்க வேண்டிய பாடங்களைப் பெரியார் கற்கவில்லை என்பது வெளிப்படை.

தலித் இலக்கியம்
தலித் இலக்கியம் குறித்த சொல்லாடல்கள் தமிழ்ச் சிற்றிதழ்களிலும் தமிழ் இலக்கிய உலகிலும் தவிர்க்கவியலாத இடத்தைப் பெற்றுள்ளன. தலித் இலக்கியம் குறித்த விவாதங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த பத்திரிகைகள் பல உண்டு. சுபமங்களா, நிறப்பிரிகை, களம் புதிது, கிழக்கு, சாரதா, நிகழ், செம்மலர், தாமரை எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் நிறப்பிரிகையின் பங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. படைப் பாளிகள் குறித்த நேர்காணல்களில் தலித் இலக்கியம் குறித்த விவாதங்கள் இடம்பெற்று வந்தன. தமிழில் தலித் இலக்கியம் குறித்துத் தொடர்ந்து ராஜ் கௌதமன், அ. மார்க்ஸ், ரவிக்குமார், கே. ஏ. குணசேகரன், ப. சிவகாமி, பிரபஞ்சன், பொன்னீலன், அருணன் போன்றவர்கள் பேசியும் எழுதியும் வந்திருக்கின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் பூலேவும், அம்பேத்கரும் தங்களுடைய பன்முகச் செயல்பாடுகளால் மராட்டிய ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினர். இதன் விளைவாகத் தோன்றியதே தலித் இலக்கியம். மராட்டிய தலித் இலக்கியத்தின் தொடக்கம் பற்றிப் பல்வேறு கருத்துகள் உண்டு. புத்தர் காலத்திலேயே தோன்றியதாகவும், சோகாமேளர் தொடங்கி வைத்ததாகவும் கருத்துகள் உண்டு. 1969இல் மராத்வாடா இதழில எழுந்த விவாதத்திற்குப் பிறகுதான் தலித் இலக்கியம் என்ற பெயர் தோன்றியது என்பது பரவலான கருத்து. மராட்டியத்தில் தலித் இலக்கியம் தோன்றி யதைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் அதன் பாதிப்பு ஏற்பட்டது. மராட்டி, கன்னட மொழிகளில் தலித் இலக்கியம் தோன்றிய பிறகே தமிழ் இலக்கியத்திலும் அதன் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பெரியாரின் தாக்கமும், மார்க்சிய சித்தாந்தப் பார்வையுடன் நடந்த பொருளாதாரப் போராட்டங்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் அமைப்புகளும் செயல்பாடுகளும் ஒரு வளமான தளம் அமைத்துக் கொடுத்துள்ளன.

தலித் இலக்கியத்தின் தன்மைகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
1. சாதியை எதிர்ப்பது
2. தலித் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பது
3. கலக இலக்கியம் ஒன்றினை உருவாக்குவது
4. ஒடுக்கப்பட்ட நிலையின் ஆழமான உளவியல் உலகினை ஆராய்வது
5. தலித்துகளுக்கு ஆதரவான அரசியல் எதிர்வினைகளை ஏற்படுத்துவது
6. பொருளதாரச் சமத்துவத்தை வலியுறுத்துவது
7. மனிதர்களுக்குள் புதைந்துள்ள ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவான உணர் வைக் கிளர்ந்தெழச் செய்து அவர்களை தலித்துகளோடு அடையாளம் காண வைப்பது
8. தலித் விடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கமாக இயங்குவது.

தலித் அல்லாதவர்களாயினும் தமிழ் எழுத்தாளர்கள் சிலர்-இன்குலாப், பா. செயப்பிரகாசம், மாற்கு, அ. மார்க்ஸ், பழமலய் போன்றோர் தலித்துக ளாகத் தங்களை உணர்ந்து படைக்க முனைந்தார்கள். இம்மாதிரிப் பிற சாதி யினரும் தங்களைத் தலித் உணர்வோடு ஐக்கியப் படுத்திக் கொண்டு தலித் இலக்கியம் படைக்க முடியும் என்பது ராஜ் கௌதமன் கருத்து.

இதற்கு மாறாக, தலித்துகளால் படைக்கப்படுவதே தலித் இலக்கியம் என்ற கருத்து ஆர்ம்பத்தில் இருந்தது. இது கேள்விக்குரியது. ஒரு குறிப்பிட்ட சாதி, இனம் சேர்ந்தவர் களால்தான் அதைப் பற்றிய இலக்கியம் படைக்க முடியும் எனறால் இலக்கியம் என்பதே இருக்காது. குஜராத்தி எழுத்தாளர் ஹரீஷ் மங்களமும் தலித்துகளால்தான் தலித் இலக்கியம் படைக்கமுடியும் என்று சொல்கிறார். “செருப்புப் போட்டிருப்பவனுக்குத்தான் அது எங்கே கடிக்கிறது என்பது புரியும். இது தலித் இலக்கியத்திற்கும் பொருந்தும். தலித்துகள் மீது கரிசனம் உடையவர்களாக இருந்தாலும்கூட, தலித் அல்லாத எழுத்தாளர்கள் எழுதும் படைப்புகளில் ஒரு வெறுமையை நாம் காணமுடியும். சகபயணிகள், சகபயணிகள்தானே?” என்கிறார் ரவிக் குமார். ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய படைப்புகளையெல்லாம் தலித் இலக்கியம் என்று அழைத்தாலும், தலித்தால்தான் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி உண்மையோடும், அனுபவரீதியில் நம்பகத்தன்மையோடும் எழுத முடியும் என்று சொல்கிறார்.

“இந்தச் சமூகத்தில் ஒரு சமமற்ற தன்மை உள்ளது. மேல்-கீழ் என்ற உணர்வு உள்ளது. தலித்துகள்மேல் அடக்குமுறை உள்ளது. தலித்துகளுக்குக் கொடுமை இழைக்கப்படுகிறது. இவற்றைப் பேசுகின்ற இலக்கியம் தலித் இலக்கியம். இவற்றிலிருந்து மாறி, வேறொரு சிறந்த சமநிலை வாய்ந்த சமூகத்தைக் கட்ட விழைவதே தலித் இலக்கியத்தின் கனவாக இருக்கிறது” என்கிறார் கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா. அதே சமயத்தில் அவர் சொல்கின்ற மற்றொரு கருத்து முக்கியமானது.

“சாதியைக் குறிக்கின்ற ஒன்றாக தலித் என்ற சொல்லைக் குறுக்கிவிடக் கூடாது. தலித் என்பது வேதனையின் குறியீடாக இருக்கவேண்டுமே தவிர, சுரண்டலின் குறியீடாகி விடக்கூடாது. சுரண்டல், கொடுமை, அக்கிரமங் களை எதிர்க்கிற சொல்லாக அது மலர வேண்டும். அவமானம், பாதுகாப் பின்மை, எதிர்ப்பு ஆகிய பொருள்களை தலித் என்ற சொல் தரவேண்டும்” என்கிறார் சித்தலிங்கையா. தலித்துகளால்தான் தலித் இலக்கியம் எழுதப்பட வேண்டும் என்று கூறும் அ. மார்க்ஸ், ரவிக்குமார் போன்றோர் கருத்து களை மறுப்பதற்கு இது போதுமானது. மேலும் சொல்கிறார்: “போராட்டம், தலித்துகள் மததியில் விழிப்புணர்வை ஊட்டுகின்ற அதேசமயத்தில் வெறும் சாதிப்போராட்டமாக நின்றுவிடக்கூடாது. சாதியை மீறிய ஒன்றாக வேண்டும். சமூகக் கொடுமைகளுக்குத் தீர்வுகாண்கின்ற, சுரண்டப்படுகின்ற எல்லாருக்கும் ஒரு தீர்வைக் காட்டுகின்ற ஒன்றாக எழவேண்டும்.”

ராஜ் கௌதமன் இந்தக் கருத்தை ஏற்பவர்தான். சாதி ஒழிப்பிற்காக நிற்பவர்கள் தலித்துகள், சாதி காத்து நிற்பவர்கள் தலித் அல்லாதவர்கள் என்பது அவர் கருத்து. மராட்டிய எழுத்தாளரான அர்ஜுன் டாங்ளே, “ஒடுக்கப்பட்டோர் என்றால் மதம் மற்றும் பிறசில கூறுகளின் பெயரால் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்த மக்கள்திரள்” என்கிறார். தாழ்த்தப் பட்டவர்கள், மலைவாழ் மக்கள், புதிய பௌத்தர்கள், உழைக்கும் மக்கள், நிலமற்றவர்கள், ஏழை விவசாயிகள், பெண்கள், அரசியல் ரீதியாகவும் மதத்தின் பெயராலும் சுரண்டப்படுகின்ற அனைவரும் தலித்துகள்தான் என்கிறார் கெய்ல் ஓம்வெட். ஆகவே தலித் என்ற சொல்லைச் சாதிகளைத் தாண்டி, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அடையாளப்படுத்துகின்ற ஒன்றாக ஏற்கலாம்.

தலித் இலக்கிய அழகியல் என்று பின்வருவனவற்றைச் சொல்லலாம்.
1. எதிர்மறைச் சொல்லாடல்களைப் பற்றி நிற்பது
2. புதிய தொன்மங்களை நிர்மாணிப்பது
3. மரபுகளை உடைப்பது
4. தலித் மொழியால் எழுத்துவடிவமுறையை மாற்றுவது
5. இலக்கியத்திற்கென வரையறுககப்பட்ட மரபுரீதியான இலக்கணங்களை மீறுவது
6. நாட்டுப்புறக் கலைகளின் நீட்சியாக இருப்பது

பொதுவாக நாட்டுப்புறக் கலைகளில் ‘நான்’ என்பது காணப்படாது. ‘நாங்கள்’, ‘நாம்’ என்ற சொற்களே இடம்பெறுவதைப் பார்க்கலாம். மேலும் பெரும்பாலோர் பங்கேற்கும் ஜனநாயகத்தன்மையும் சமநிலையும் அவற்றில் காணப்படும். அதனால் கலகம், எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் அரசியல் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்ட தலித் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியத்தின் தன்மைகளை ஏற்பது அவசியம். மேலும் நாட்டுப்புற இலக்கியங்களில் காணப்படும் இயல்பான வெளிப்பாடும் கூட்டு வாழ்க்கையின் அடையாளங்களும் ஒடுக்குபவர்களைப் பற்றிய கேலி, கிண்டல், நையாண்டி போன்றவையும் பாலியல் சார் அனுபவங்களும் தலித் இலக்கியத்திற்குப் பெரும் உந்துசக்தியாக அமையும்.

“ஒவ்வொரு இலக்கியப் போக்கிறகும் தனித்த அரசியல் உண்டு. முதலாளித்துவச் சமூகத் தோற்றத்தோடு உருவாகிய யதார்த்தவாத இலக்கியத்திற்கும் இது உண்டு. தனி நபரின் புறவயமான பார்வையில், உள்ள நிலைமைகளை உள்ளவாறே எழுத்தில் யதார்த்தமாகப் படைப்பதாக அது சொல்கிறது….தமிழ்ச் சூழலில் தலித் அல்லாதவர்கள் படைத்த யதார்த்த இலக்கியத்தில், தலித்துகளைப் பற்றிய யதார்த்தம், தலித் யதார்த்தமாக அன்றி, பார்ப்பன, வேளாள மரபால் கட்டுமானமாகிய ஒருசார்பான யதார்த்தமாக இருக்கிறது. இந்த யதார்த்தத்தில், தலித் ஒரு பாவி, குற்றவாளி, தாழ்வு மனப்பான்மை கொண்டவன், ஒழுக்கமற்றவன், உயர்வதற்கு விரும்பாதவன், முன்னேற அருகதையற்றவன், அடிமை வாழ்வில் சுகம் காண்பவன் என்ற படிமங்களே பதிவாகி யுள்ளன. எனவே இப்படிப்பட்டவர்களாக தலித்துகளை ஆக்கிய யதார்த்தத்தையும் இதனையே மேலழுத்தம் செய்து பழக்கப்படுத்துகின்ற இலக்கிய யதாத்தவாதத்தையும் தலித்துகளும் தலித் இலக்கியமும் தங்களுக்கு ஏற்றவையாக எண்ண முடியாது” என்பது ராஜ் கௌதமனின் கூற்று.

தங்களிடையே புழங்கிவரும் பாலியல் புனைவுகளைத் தொகுப்பதும், புதிய விதங்களில் படைப்பதும், தலித் இலக்கியம் பற்றி அக்கறை கொண் டோரின் பணிகளில் ஒன்று என்கிறார் ரவிக்குமார். ஆனால் வசவுகளையும் கெட்ட வார்த்தைகளாகக் கருதப்படுவனவற்றையும் அப்படியே பயன்படுத்தி இலக்கியம் படைத்தால் அது மக்களை ஈர்ப்பதாக அமையுமா என்ற வினா உண்டு. தமிழில் ஓரிரு எழுத்தாளர்கள் இப்படிச் செய்வதைத்தான் கலகம் என்று போற்றிவருகிறார்கள். ஆனால் தலித் மொழியை-அவர்களுடைய கொச்சை மொழியைப் பயன்படுத்துவது முக்கியமானது. தலித் மக்களிடம் உணர்வெழுச்சியைத் தூண்டும் எந்தச் செயலும் ஆதிக்க மக்களுக்கு எரிச் சலை ஊட்டுவது. தங்களிடம் உள்ளதெல்லாம் பெருமைக்குரியது, பார்ப் பனப் பண்பாடு மட்டுமே இந்தியாவுக்குரியதன்று, பெரும்பான்மையாக உள்ள ஒடுக்கப்பட்டோரின் பண்பாடே இந்தியப் பண்பாடு என்று தலித் மக்களை உணர வைப்பது, அவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையைப் போக்குவது என்பனவும் தலித் இலக்கியத்தின் கூறுகளாகும்.

தலித் இலக்கியம் மேற்கின் கருப்பர் இலக்கியத்திலிருந்து-ஆப்பிரிக்க இலக்கியம் போன்றவற்றிலிருந்து தன் அழகியலை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழகத்தில் பெண்ணிய இலக்கியத்திற்கும் தலித் இலக்கியத்திற்கும் தொடர்பில்லை என்றே கூறலாம்.

ஜனநாயகத்தன்மை கொண்ட திருவிழாக்கள் தலித் மக்கள் பண்பாட்டின் ஒரு முக்கிய அம்சம். கர்நாடக ராய்ச்சூர் மாவட்டத்தில் நடக்கும் ஒரு திருவிழாவில் கந்தலாடை அணிந்தவர்கள் மட்டுமே பங்கேற்கமுடியும் என்று சித்தலிங்கையா எடுத்துக்காட்டுகிறார். கந்தலாடையோடு எல்லாரும் காட்டுக்குச் சென்று சமையல் செய்து, அதனைக் கல்லின் மேல் வைத்து உண்பது வழக்கமாம். ஆண்டுக்கொரு முறை கடவுளைச் செருப்பால் அடித்து வழிபடும் வழக்கமும், ஒரு குறிப்பிட்ட நாளில் அம்மன்மேல் எச்சில் துப்பி வழிபடும் வழக்கமும் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இது பக்தீன் கூறும், ரஷ்ய நடப்பான கார்னிவலை ஒத்துள்ளது.

சேலம் மாவட்டத்திலும செருப்படித் திருநாள் என்ற விழா உண்டு. வரிசையாக நின்று ஒவ்வொருவரும் அம்மனைச் செருப்பால் அடிப்பதுதான் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். இம்மாதிரித் திருவிழாக்களின் நோக்கம் எதிர்ப்புக்குணம்தான். மனிதர்கள் தவறு செய்தால் கடவுள் தண்டிப்பான் என்பதுபோல, கடவுள் தவறு செய்தால் மனிதனும் தண்டிக்க முடியும் என்பதற்கான குறியீடாக இது இருக்கலாம்.

கீழ்த்தட்டு மக்களிடம்தான் உண்மையான கலைத்தன்மை உள்ளது. அவர்களின் மொழியில் காணப்படும் கேலி, கிண்டல், வக்கணையான சொற் கட்டுகள் போன்றவை இதற்கு அடையாளம். அதேசமயம், நடுத்தர வர்க்க மக்களின் வெற்றுக்கவலைகளையே எழுதி எழுதி யதார்த்தவாத இலக்கியம் தன் களையிழந்துவிட்டது. அதில் புதிதாக எதுவுமே சொல்லப் பெரும்பாலும் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் தெய்வங்களில் பெண் தெய்வங்கள் மிகுதி என்பதும் காணத்தக்க ஒன்று.

முற்றிலும் ஆணையே சார்ந்து நிற்கும் பண்பாடு தலித் பெண்களிடம் இல்லை. ஒத்துவராத ஆண்களை உதறிவிட்டுச் செல்லும் குணம் அவர்களிடம் உண்டு. கோ. கேசவன், தலித் குரலை ஆரம்பத்தில் ஒலித் தவர் சேக்கிழார் என்கிறார். மார்க்சியம் பெரியாரியம் இவற்றில் வேர்பிடித்துப் பார்ப்பனிய எதிர்ப்புச் சக்தியுடன் இணைந்த போர் முகமே தலித்தியம் என்பது ப. சிவகாமியின் வரையறை. தனது முதல் நாவலான பஞ்சமர் வழியாக அறியப்பட்ட டானியலை தலித் இலக்கிய முயற்சிகளின் முன்னோடி என்கிறார் மார்க்ஸ்.

தலித் இலக்கியப் படைப்பாளிகள்
‘கருக்கு’, ‘சங்கதி’ போன்ற நாவல்களை பாமா எழுதியுள்ளார். பெண்ணாகவும் தலித்தாகவும் கிறித்துவப் பெண் துறவியாகவும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தன் படைப்புகளில் அவர் தந்துள்ளார். கருக்கு, தலித் இலக்கியத் தன்வரலாற்று நூல் என்ற பாராட்டைப் பெற்றுள்ளது. விழி. பா. இதயவேந்தனின் ‘நந்தனார் தெரு’ என்னும் சிறுகதைத்தொகுப்பு பாராட்டுப் பெற்ற ஒன்று. ‘பழையன கழிதலும்’, ‘ஆனந்தாயி’ போன்ற நாவல்களை ப. சிவகாமி எழுதியுள்ளார். யுத்தம் தொடரும் என்னும கவிதைத் தொகுதியை க. சுப்பையா வெளியிட்டுள்ளார். முனைவர் கே. ஏ. குணசேகரன் நாட்டுப்புறப் பாடல்களைக் கொண்ட நிகழ்ச்சிகள் பலவற்றை நிகழ்த்தியுள்ளார். ‘மனுசங்கடா’ என்ற இசைப்பேழையை உருவாக்கியவர். ‘பலி ஆடுகள்’ என்ற இவரது நாடகமே முதல் தலித் நாடகம் என்பது இவர் கருத்து.

ராஜ் கௌதமன், இலக்கு காலந்தொட்டுச் சிற்றிதழ்கள் களத்தில் பணியாற்றியவர். தலித் இலக்கியம் பற்றிய தொடர்ந்த உரையாடலை முன் வைத்தவர். சுயசரித நோக்கிலான நாவல் (சிலுவைராஜ் சரித்திரம்) ஒன்றையும் எழுதியுள்ளார்.

உஞ்சை ராசன், தலித் இலக்கியத்திற்கென ‘மனுசங்க’ என்ற இதழை நடத்தியவர். அபிமானியின் ‘நோக்காடு’ என்ற சிறுகதைத்தொகுதியும் பரவலான கவனிப்பைப் பெற்றது.
இந்திரன் பெருமளவு தன்னை தலித் எழுத்தாளர்களோடு அடையாளம் காணாவிட்டாலும், ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர். உலகமெங்கும் உள்ள எதிர்ப்பு இலக்கியங்களை அறிமுகம் செய்தவர். பூமணி, இமையம், சோ. தர்மன் போன்றவர்களும் தலித் இலக்கியவாதிகளாகத் தங்களை அடையாளம் காண்பதில்லை. எனினும் சிறந்த இலக்கியப் படைப்புகளை அளித்துள்ளனர்.

“தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்கள் இணைந்து பார்ப்பனியத்தையும் முதலாளியத்தையும் எதிர்த்து சமூகப் புரட்சி செய்யவேண்டும்” என்று அருணன் கூறுகிறார். இன்று இது சாத்தியமாக இல்லை. முதலாளித்துவத்தின் மிக வலுவான நாடாக இந்தியாவை மாற்ற, பன்னாட்டு முதலாளியத்தை முற்றிலும் ஆதரித்து உள்நாட்டு மக்களை ஒடுக்குபவர்களாக இன்றைய ஆட்சிளாளர்கள் செயல் படுகின்றனர். அதேபோல சாதிக்கும் பிற்பட்ட மனப்பாங்கிற்கும் ஆதரவான இந்துத்துவ, பிறமதச் சக்திகளும் ஒன்றிணைந்துள்ளனர். மேலும் இம்மூன்று வகை மக்களிடையலும் பார்ப்பனிய, முதலாளித்துவ ஆதரவாளர்கள் வலுப் பெற்றுள்ளனர். சாதியுணர்வு எல்லா மக்களின் இரத்ததிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஊறிப்போயிருக்கிறது. சங்ககாலத்திலிருந்தே தமிழிகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களை நாம் இனம் காணமுடியும். இட ஒதுக்கீடு ஒன்றைத் தவிர ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டில் அக்கறை கொண்ட செயல்பாடுகள் எதுவும் நடை முறையில் இல்லை.

தலித்துகளின் கொடுமை மிகுந்த வாழ்க்கை அனுபவங்கள் போதிய அளவு இன்னும் இலக்கியத்தில் வெளிப்படவில்லை. அதாவது தலித் இலக்கியம் தமிழில் சிறப்பாக உருவாகவில்லை என்பது நிதரிசனம். சமூக மாற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க வேண்டும். தலித் மேம்பாட்டிற்குச் சாதி ஒழிப்பு இன்றியமையாதது. தலித் இலக்கியம் முதன்மையாக இந்த விஷயத்தைக் கையாள வேண்டும். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் தலித் இலக்கியம் குரலெழுப்ப வேண்டும். அர்ஜுன் டாங்ளேயும், தயா பவாரும், சித்தலிங்கையாவும் சொல்வதைப்போல் ஓர் உணர்வுக்கான அடையாளமாக தலித் இலக்கியம் இருக்க வேண்டும்.


13. பெண்ணியமும் இலக்கியமும்

12. பெண்ணியமும் இலக்கியமும்

“நமது கலாச்சாரச் செயல்பாடுகள் அனைத்திலும் பெண் இரண்டாந்தர இடம் பெற்றிருக்கிறாள், ஆணுக்கு அடிமையாக இருக்கிறாள்” என்பது பெண்ணியக் கொள்கையின் அடிப்படையான கருத்து. பெண்களின் ஒடுக்கு முறையை இல்லாமல் ஆக்குவதும் ஆண்களின் பார்வையில் கட்டப் பட்டுள்ள இன்றைய கலாச்சாரத்தை – அதாவது ஆணாதிக்கத்தை, தந்தை யாதிக்க முறையை, இவற்றின் அடிப்படையிலான கருத்துகளை இல்லாமல் போக்கி, பெண்களின் விழைவுகள், நோக்கங்கள் ஆகியவற்றை முழுமையாக ஏற்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதும் பெண்ணியத்தின் நோக்கம். பெண்ணியத்திற்குள் எத்தனையோ பிரிவுகள் இருப்பினும் மேற் கண்ட இலக்கு எல்லாவற்றிற்கும் பொதுவானது. புதிதாக உருவாகும் அப்படிப்பட்ட ஒரு சமூகம் எப்படியிருக்கும் என்பதன் கற்பனையிலும், அதனை உருவாக்கக் கையாள வேண்டிய நடைமுறைச் செயல்பாடுகள் யாவை என நிர்ணயிப்பதிலும்தான் பல்வேறு பெண்ணியக் கொள்கைகளும் வேறுபடுகின்றன.

முதன்முதல் பெண்ணியச் சிந்தனைக்கான சான்றாக நமக்குக் கிடைப்பது 1792இல் மேரி உல்ஸ்டன்கிராஃப்ட் எழுதிய ‘தி விண்டிகேஷன் ஆஃப் தி ரைட்ஸ் ஆஃப் விமன்’ என்ற நூல். ஓர் அரசியல் செயல்பாட்டு முறையை அதில் அவர் முன்வைக்கிறார். மேற்கத்தியப் பெண்ணியத்தின் மையமாக அவர் சிந்தனை ஏற்கப்பட்டுள்ளது.

உலகமுழுவதுமே பெண்ணடிமைத்தனம் நிலவுகிறது. அதிலும் சாதி யமைப்புடைய இந்தியச் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் மிகமிக அதிகம், பிறநாடுகளில் (இன்றும் சில இடங்களில் கருப்பர் இனத்தைத் தவிர) ‘ஆணுக்கு அடிமை’ என்ற ஒரேவித அடிமைத்தனத்திற்குத்தான் அவள் ஆட்பட்டிருக்கிறாள். இந்திய சமூகத்தில் பிராமணர்களைத் தவிர, பிற சாதி கள் ஒவ்வொன்றும் மற்ற ஏதோ ஒன்றிற்கு அடிமையாக உள்ளன. ஒவ்வொரு சாதியிலும் ஆணுக்குப் பெண் அடிமையாக இருக்கிறாள். ஆக இருமுறை அடிமையாக்கப்படுகிறாள். எனவே நமது நாட்டில் பெண்ணிய இயக்கத்தின் தேவை முதன்மையான ஒன்றாகிறது.

தொடக்கத்தில் ஆண்களுக்கு நிகரான பொருளாதார, அரசியல் சமத்து வத்தைப் பெறுவதாகவே பெண்களின் இயக்கங்கள் அமைந்தன. பாலியல் சமமின்மை பற்றிப் 19ஆம் நூற்றாண்டில் வெளியான சில நூல்களால் பெண்ணியத்தின் வேகம் அதிகமாகியது. சான்றுக்கு ஜே.எஸ். மில், ஹாரியட் டெய்லர் மில் இணைந்து எழுதிய ‘தி சப்ஜெக்ஷன் ஆஃப் விமன்’ என்ற நூலைச் சொல்லலாம். பெண்கள் குழுக்கள் பலவும் சமத்துவப் போராட்டத்தில் இறங்கினர். இருபதாம் நூற்றாண்டில் சிவில் உரிமைக் குழுக்களால் பெண்களுக்கு வாக்குரிமை, பொருளாதார சமத்துவம் போன்றவை ஓரளவேனும் கிடைத்துள்ளன. மேலும் சமமான கல்வி, தாய்சேய்நலம், சம ஊதியம் போன்ற நிலைகளும் ஏற்பட்டன. பெண்களின் மேம்பாட்டுக்குச் சமமான கல்வி, பொருளாதார நிலை, அரசியல் சமத்துவம் ஆகியவை அடிப்படை என்பது எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை. இவற்றிற்காகப் போராடுவதையும் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் எனக் கருதுபவர்கள் பலர் உண்டு. பெண்ணியத்தின் முதல் நிலை இது.

பெண்ணியத்தின் இரண்டாம் நிலையாக, பெண்ணாக இருக்கும் (ஒடுக்கப்படும்) நிலை என்பது இயற்கையான ஒன்றல்ல என்ற விஷயத்தை ஏற்றுக்கொள்வதும் புரியவைப்பதும் அமைந்தன. உலகில் எந்த ஒன்றின் ஆதிக்கமும், மேலாண்மையும் இயல்பானதல்ல. ஆணாதிக்கமும் இயல் பான ஒன்றல்ல. எனவே அதை மாற்ற முடியும், மாற்ற வேண்டும் என்ற உறுதி ஏற்படுகிறது. பாலியல் அடையாளங்களும் அவற்றிற்கான கலாச் சாரச் செயல்பாடுகளும் மொழி, கலாச்சார அமைப்புகளால் உருவானவை. சான்றாக, பெண் பூப்படைவது ஒரு பாலியல் அடையாளம். அதற்கான கலாச்சாரச் செயல்பாடுகளாக நீராட்டு விழா எடுத்தல், தனியே அமரச் செய்தல், மாமன்மார் சீர்செய்தல் போன்றவை நமது கலாச்சார அமைப் பினால் உருவான விஷயங்கள். இது உலகப் பொதுவானதல்ல. சான்றாக, ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய சடங்குகள் கிடையாது.

ஆண்மை, பெண்மை என்பவற்றிற்கான அடையாளங்கள், இப்படி நடந்து கொள்ளவேண்டும், பழக வேண்டும் என்பன போன்ற கட்டளைகள் கலாச் சாரத்தினால்தான் அளிக்கப்படுகின்றன. இப்புனைவுகள் ஆதிக்கம் சார்ந்த உத்தியாக மாறும் போது தகர்ப்பமைப்பும், எதிர்ப்புனைவுகளும் தேவைப் படுகின்றன. ஆணாதிக்கம் மட்டுமல்ல, எந்த வகை ஆதிக்கமாயினும், படைப்பிற்கும் புனைவுக்கும் கற்பனைக்கும் எதிரானவை. உயிர்ப்புள்ள கவிதை, கலைப்படைப்புகள் எவ்வித அதிகாரத்தையும் மையமாகக் கொள்வ தில்லை.

இந்தியாவில் பெண்ணியம்
1930களிலேயே பெண்களின் மேம்பாடு என்ற சொல்லாடல் பிறந்துவிட்டது. என்றாலும் அது பெண்ணியச் சிந்தனை குறித்ததல்ல. ஆயினும் எந்த ஒரு கருத்தமைவும் ஒரு நாட்டிற்கே உரியதல்ல என்பதால், மேற்கத்திய நாடுகளின் பெண்ணியக் கருத்துகள் விரைவில் இங்குப் பரவலாயின. இந்தியாவில் முதலில் சீர்திருத்த இயக்கங் கள்தான் தோன்றின. உதாரணமாக, சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்ற வழக்கத்தைக் கைவிட வேண்டி இராஜாராம் மோகன்ராய் போராடி அதற்கான சட்டத்தைக் கொண்டுவந்தார். பலதார மண எதிர்ப்பு, பெண் கல்வி, பெண்களுக்குச் சொத்துரிமை ஆகியவை குறித்தும் அவர் போராடியிருக்கிறார்.

மக்களின் உரிமைகள் பற்றியும், மக்களில் சரிபாதித் தொகையினரான பெண்களின் உரிமையற்ற நிலை பற்றியும் விழிப்புணர்ச்சி தோன்றியபோது, பெண்ணியமும் எளிய வடிவில் தோன்றிவிட்டது. தேசியப் போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் பெண்கள் சார்ந்த விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டது. விதவை மறுமணம், பலதார மணத் தடை, சரி ஒழிப்பு, குழந்தை மண எதிர்ப்பு, முகத்திரை ஒழிப்பு, பெண் கல்வி, சட்ட ரீதியான சமத்துவம் போன்றவை நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகள் பற்றிப் பெரிதும் அக்காலத் தில் பேசப்பட்டது. விதவை மறுமணத்திற்காகப் பாடுபட்டவர்களில் முக்கிய மானவர் ஈசுவர சந்திர வித்தியாசாகர். குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் போராடியவர்களில் முக்கியமானவர் கேசவ சந்திர சேன். இப்படிப் பெண்களுக்கான போராட்டங்களில் முதன்முதலில் ஆண்களே ஈடுபட வேண்டியதாயிற்று.

சுதந்திரப் போராட்ட காலத்தில் பெண்கள் ஏராளமாக அதில் பங்கேற்றனர். மராட்டியத்தில் ஜோதிபாய் பூலே பிராமண எதிர்ப்பையும் பெண் விடுதலையையும் ஒன்றிணைத்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் பெரியார் ஈ.வே.ரா. 1920 முதலாகவே பெண்கள் அடிமைத் தனத்தை நீக்கவேண்டுமென்று குரலெழுப்பிப் போராடிவந்தார். பாரதியாரும் பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்திருப்பதை அனைவரும் அறிவர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் ஆங்காங்கு பெண்கள் அமைப்புகள்-மஹிளா மண்டலிகள்-தோன்றின. 1960களின் நடுப்பகுதிவரை இந்த அமைப்புகள் எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. ஆந்திரம், பிஹார், மத்தியப் பிரதேசம் ஆகிய இடங் களில் பண்ணையார்களை எதிர்த்துப் போராட்டங்கள் உருவாகியபோது பெண்கள் அவற்றில் இணைந்தனர். 1980க்குப் பின் தோன்றிய மகளிர் அமைப்புகளைப் பின்வரு மாறு பகுக்கலாம்.

1. தன்னுரிமை அமைப்புகள்
2. வெகுஜன அமைப்புகள்
3. பெண்களுக்கு உதவி புரிய என ஏற்பட்ட அமைப்புகள்
4. தொழில் முறைச் சங்கங்கள்
5. அரசியல் கட்சிகளின் மகளிர் பிரிவுகள்
6. பெண்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்கின்ற குழுக்கள்

புதிய மார்க்சிய இயக்கங்கள் உருவாக்கிய பெண் குழுக்கள் பெண்ணடி மைத் தனத்திற்கு எதிராகப் போராடி வருகின்றன. பெண்களின் முற்போக்கு அமைப்பு, சமத்துவத்திற்கான பெண் போராளிகள் குழு போன்றவை இப்படிப்பட்டவை. சில சமயங்களில் தொழிலாளர்கள், பழங்குடி மக்கள், சாதி எதிர்ப்பு அமைப்புகள் இவற்றோடும் பெண்கள் இணைந்து போராடி யுள்ளனர். பெண்கள்மீது நடத்தப்படும் கொடுமைக்கு எதிராகன இயக்கங் களாக, தஹேஜ் விரோதி சேத்னா மஞ்ச், சிப்கோ இயக்கம், ஷகாதா இயக்கம் போன்றவற்றைக் கூறலாம்.

1984இல் தமிழகத்தில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. உலக மகளிர் தசாப்தத்தின் இறுதியில் 1985இல் மும்பையில் நடந்த கருத்தரங்கு மகளிர் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதாக அமைந்தது. மேற்கண்டது போன்ற அமைப்புகள் பல இருப்பி னும், தன்னுரிமை அமைப்புகளே சிறப்பாகச் செயல்படுவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

சோஷலிச ஆட்சி அமையும்போது சாதிப் பிரிவினைகள் மறைந்து போகும் என்று மார்க்சியவாதிகள் கருதினார்கள். அதுபோலவே பெண்கள் உரிமைகளும் தானாகக் கிடைத்துவிடும் என்று நினைத்தார்கள். இந்திய மார்க்சியவாதிகளின் குறை பாடு இது. வர்க்கப் போராட்டம் ஒன்றைத் தவிர பிற சமூக வேறுபாடுகள் குறித்து அவர்கள் அதிகம் கவனம் செலுத்திய தில்லை. சாதியத்தைப் போலவே, இந்தியாவில் பெண்கள் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளும் வேறுபட்டவை. இங்குப் பெரும்பாலான பெண்களுக்குப் படிப்பறிவு இல்லை என்பது முதல் குறை. ஆனால் படித்த பெண்களும், வேலை கிடைத்துப் பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற பெண் களும் கூட ஆணாதிக்கத்துக்கு உட்பட்டே இயங்குகிறார்கள். போராடுவதில் விருப்பமற்றவர்களாக உள்ளனர்.

பிற எந்த இயக்கத்தினை விடவும், பெண்ணியம் சார்ந்து போராட்டங் களை நடத்துவது கடினம். காரணம், பெண்கள் குடும்பத்தின் இன்றியமையா அங்கமாக உள்ளனர். தந்தை, கணவன், மாமனார், மாமியார், பிற உறவினர்கள், மகன் போன்றோருக்குக் கட்டுப்பட்ட நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். நம் நாட்டில் அறிவியல் சிந்தனை இல்லாததால், குழந்தை பிறக்கவில்லை என்றாலும் பெண்தான் குற்றம் சாட்டப்படுகிறாள்.

மேலும், இந்தியப் பெண்கள், பணியிடத்திலும், வீட்டிலும் என இரண்டு இடங்களிலும் வேலைசெய்ய வேண்டியிருக்கிறது. எனவே அவர்களுக்கு ஓய்வு என்பதும் இல்லை. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு பார்க்கும் போது, இந்தியாவில் பெண்கள் விழிப்புணர்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மிகுதி என்பதாகவே மதிப்பிடலாம்.

இந்திய நூல்களில் பெண்கள் நிலை
இந்திய அளவில் மகாபாரதம் பெண்கள் நோக்கில் ஆய்வு செய்யப்பட வேண்டிய சிறப்பான நூல் என்று இராஜம் கிருஷ்ணன் கருதுகிறார். வியாச பாரதத்தில் பாஞ்சாலி, சூதாட்டம் நடக்கும்போது எதிர்க்குரல் கொடுக்கிறாள். தருமன் தன்னை வைத்து இழந்தபின், “தன்னை வைத்துச் சூதாட அவனுக்கு என்ன உரிமை?” என்ற கேள்வியை எழுப்புகிறாள். ஆனால் வில்லி பாரதத்தில் இச்சம்பவம் சொல்லப் படவில்லை. கம்பராமாயணத் திலோ சீதை இராவணனிடம் சிறையிருந்ததற்கு இராமனால் பழிகூறப் படுகிறாள். தீக்குளிக்கிறாள். இராமன் அகலிகையிடம் கடைப்பிடிக்கும் நியாயம் வேறு, சீதையிடம் கடைப்பிடிக்கும் நியாயம் வேறு. புதுமைப் பித்தன் இதைச் ‘சாபவிமோசனம்’ என்னும் கதையில் சிறப்பாகக் கேள்விக் குள்ளாக்கியுள்ளார். பாகவதம் போன்ற நூல்கள், பெண்கள் கேளிக்கைக்குரிய போகப் பொருள்கள் என்னும் எண்ணத்தையே மிகுதியாக விதைக்கின்றன. கிருஷ்ணன் (பகவான் என்று சொல்லப்பட்டாலும்) பல பெண்களோடு-ராதை முதலிய ஏற்கெனவே திருமணமான பெண்களுடனும்-காதல் புரிகிறான், பலவித லீலைகளில் ஈடுபடுகிறான். மகாபாரதத்தில் அர்ஜுனனின் மனைவி யருக்கு எல்லையே இல்லை.

வேதகாலத்திலிருந்தே இந்திரனுக்கு எண்ணற்ற மனைவியர். இதற்கு மேல் இந்து மதத்திருமணத்தில் (குறிப்பாக வடநாட்டில்) பெண், ஏற்கெ னவே ஏழு தேவர்களால் நுகரப்படுபவள் என்றும், அவர்களிடம் இருந்து விடுதலைபெறுவதே சப்தபதி (திருமண மண்டபத்தில் கணவனுடன் ஏழடி நடத்தல்) என்றும் சொல்லப்படுகிறது. மனுநீதி போன்ற நூல்களோ, பெண் கள் இளமையில் தந்தைக்கும், நடுவயதில் கணவனுக்கும், முதுமையில் மகனுக்கும் அடிமை என்று பேசுகின்றன. இதன் தொடர்ச்சியாகவே பெண் குழந்தைகளால் பயனில்லை, ஆண் குழந்தைகள் மட்டுமே பெற்றோரைப் ‘புத்’ என்னும் நரகத்திலிருந்து காக்கமுடியும் என்னும் கருத்துகள் உருவாகியுள்ளன. மேலும் பெண்கள் சூத்திரர்களை ஒத்தவர்கள், அவர்களுக்கு வேதம் படிப்பிக்கக் கூடாது என்றும் பிராமணர் கருதிவந்துள்ளனர்.

பெண்களை வரதட்சிணை முதலியன கொடுத்துத் திருமணம் செய்வ தற்குச் செலவு பிடிக்கிற்து போன்ற எண்ணங்களால் பெண் சிசுக் கொலை என்பது இந்தியாவில் சகஜமாக இருக்கிறது. எல்லா உழைப்புக்கும் நாம் ஊதியம் தருவதாக வைத்துக் கொண்டால், உண்மையில் வாழ்க்கை முழுவதும் உழைப்பவர்கள் என்ற அடிப்படையில், பெண்கள் ஈட்டும் ஊதியமே மிகுதியாக இருக்கும்.

தமிழ் இலக்கியங்களில் பெண்கள்
உலகிலுள்ள பிற எல்லா இலக்கியங்களையும் போலவே தமிழ் இலக்கியங்களும் பெண்ணை அடிமைப்படுத்தியே நோக்கியுள்ளன. சங்க காலத்திலும் பெண்ணடிமைத் தனம் வேரூன்றியிருந்ததை “வினையே ஆடவர்க்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” போன்ற பாக்கள் தெளிவுறுத்துகின்றன. ஆனால் பிறமொழி இலக்கியங்களோடும், தமிழின் பிற்கால இலக்கியங்களோடும் ஒப்பீட்டு நிலையில் பார்க்கும்போது, சங்ககாலத்தில் பெண்கள் மிகுதியாகவே கல்வி கற்றிருந்தனர், புலவர் களாகவும் பாடினிகளாகவும் விறலியராகவும் விளங்கினர் என்பதை அறியமுடிகிறது. சங்கக் கவிதையில் பெண்குரலின் பதிவுகள் ஆழமாக இருக்கின்றன. ஒளவை என்ற ஓர் மகா ஆளுமையை அதில் நாம் காண்கிறோம். இன்னும்-ஆதிமந்தி, வெள்ளிவீதி, இப்படிப்-பலபேர் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.

திருக்குறளிலும், “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய் பெயனப் பெய்யும் மழை” என்பன போன்ற பெண்ணடிமைத்தனக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பெண்வழிச் சேறல் (செல்லுதல்) கூடாது என்று தனியாக ஓர் அதிகா ரமே அமைந்துள்ளது.

தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டில் மட்டுமே பெண்களை ஓரளவு மதித்துப் போற்றும் போக்கு காணப்படுகிறது. சிலப்பதிகாரம் பெண்ணை மேம்படுத்தி நோக்கினாலும், கற்பு என்னும் கூண்டிற்குள் அடைத்து அவளை தெய்வமாக்கிவிடுகிறது. மணிமேகலை யில் மட்டும்தான் மிகக் கீழ்நிலைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆசிரியர் உயர்த்திக் காட்டியிருக்கிறார். பிற எல்லா நூல்களும் பெண்களை நுகர்பொருள் என்னும் அளவிற்கு மேல் நோக்கவில்லை. இதனால்தான் பாதாதிகேச வருணனை போன்ற வருணனை மரபுகள் எழுந்தன.

சங்கக் கவிதையை விட்டால், பெண்குரல் பதிவுகள் ஆழமாக இடம் பெறுவது ஆண்டாள் வழியாகவே. ஆண்டாளுக்கு முன்னதாகவே காரைக் காலம்மையார் வாழ்ந் திருக்கிறார் என்றாலும் அவரது குரல் பெண்ணின் தனித்த குரலாகப் பதிவாகவில்லை. சிவபெருமானோடு புனிதவதியாரின் உறவு தந்தை-மகள் உறவாகவும், தாய்-மகன் உறவாகவும் இருக்கிறது. ஆனால் அதன் பதிவு ஆண்டாள் போல் வேகமாக, கிளர்ச்சியூட்டுவதாக இல்லை. காரைக்காலம்மை வாயிலாக ஒலிப்பது காலங்காலமாகப் பின்னர் பக்திக்காலத்தில் நாம் கேட்கப்போகும் ஆண் குரல்களே. ஆண்டாளுக்குப் பின் நீண்ட மௌனம்.

தமிழில் ஒளவையார் பெண் கவிஞர்களில் மிகச் சிறந்தவர். ஆனால் குறைந்தது ஆறு ஒளவையார்களேனும் வரலாற்றில் இருந்திருக்க வேண்டும் என்பர் அறிஞர். ஓர் ஒளவையின் நோக்கிற்கும் மற்றொரு ஒளவையின் நோக்கிற்கும் வேறுபாட்டை நாம் நன்றாகக் காணமுடியும். பாரியின் பெண்களோடு தொடர்பு கொண்டிருந்த ஒளவைக் கும், ‘பெண் சற்றே ஏறுமாறாக நடந்தாலும் கூறாமல் சந்நியாசம் கொள்’ என்று போதிக்கும் ஒளவைக்கும்தான் எவ்வளவு வேறுபாடு?

பக்தி இலக்கியங்களும் பிற இலக்கியங்களும் பெண் இறுதிநிலையில் வெறுத்து ஒதுக்கப்படவேண்டியவள் என்றும், அப்போதுதான் முக்தியடைய இயலும் என்றும் போதிக்கின்றன. இந்த நோக்குதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை கோலோச்சியிருந்தது. பெண்கள் உடல்களாகவே நோக்கப்பட்டனர். பெண் உடலின் சமூக அடையாளம் என்பது மறு உற்பத்தியில் அவள் ஈடுபடக்கூடியவள் (“ஈன்று புறந் தருதல் என் தலைக் கடனே”), குடும்ப அடையாளம் ஆகியவற்றைச் சார்ந்து இன்றுவரை அமைந்திருக்கிறது.

எழுத்து இலக்கியங்களில் பெண்ணடிமைத்தனம் மிகுதியாக இருந்தாலும், நாட்டார் இலக்கியங்களில் அவ்வளவாக இல்லை என்றே தோன்றுகிறது. இத்தனைக்கும் நாட்டார் இலக்கியங்களும் பெரும்பாலும் ஆண்களால்தான் படைக்கப் பட்டுவந்துள்ளன. நாட்டார் வழிபாடுகளிலும் கலைகளிலும் பாட்டுகளிலும் சடங்குகளிலும் பெண்களின் “மீறலை” அனுமதித்தல் மிகுதியாக உள்ளது.

இருபதாம் நூற்றாண்டு இறுதியில் பெண்கள் எழுத்து
இக்காலப் பெண்கவிஞர் ஒருவர் உடல் உறுப்புகளைக் கவிதையில் சொன்னதற்காக ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு நேர்முக, எதிர்மறை இருவித விளைவுகளும் இருந்தன. (நேர்முக விளைவுக்கு உதாரணமாக ‘ஷி ரைட்’ என்ற பெயரில் இதற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட டாகுமெண்டரிப் படம் போன்றவற்றைச் சொல்லலாம்.) இன்னொரு முனையில் கற்புடைய ஆண்கவிகள் கூட்டம்போட்டு இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று பெண்கவிகளை எழுத்துக் கடத்தினார்கள். இதுபோன்ற செயல்களும் தமிழகத்தில் மிகைநவிற்சிச் செயல்களாகவே அமைந் திருந்தன. தமிழில உடல் சம்பந்தமான எந்த நிகழ்ச்சியும் மிகைப் படுத்தப்படுவதே வழக்கம். ஆனால் ஆண்கள்தான் உடலைப் பற்றிப் பேசவேண்டுமா என்ன? பெண்கள் பேசக்கூடாதா? காலங்காலமாக ஆண்கள், சிற்றிடை, பெரிய மார்பு, அல்குல் என்று வருணித்துவந்தால், பெண்கள் வருணிப்பதிலும் எந்தத் தவறும் இல்லை.

பெண்கள் தங்கள் உடலில் உணர்வுகளையும் காதலையும் வெளிப்படுத்து வது ஒன்றும் புதியதும் அல்ல. பழங்காலத்தில் தொல்காப்பியர், “தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணுங்காலை கிழத்திக்கில்லை” என்கிறார். ஆனால் சங்க காலத்திலும், “காமம் பெரிதே களைஞரோ இலரே” என்றும் “நும்மும் பெறேஎம் இறீஇயர் என் உயிரே” என்று பாடிய பெண்கவிஞர்கள் இல்லையா?

எப்போது திரைப்படம் என்ற ஊடகம் வந்ததோ அப்போதே காதல் பாடல்களாகிய இருவர்ப்பாட்டுகளும் (டூயட்டுகளும்) உருவாகிவிட்டன. டூயட்டுகளில் ஆண்களுக்கு எதிராகப் பெண்கள் தங்கள் உண்ர்வுகளை வெளிப்படுத்திப் பாடுவதும் (தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல்) உருவாகிவிட்டது. இதுவும் ஆடவர் மிகைக்கற்பனையாகவே இருப்பதால் ஒருசார்புத்தன்மை உடையனவாக இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. என்றாலும் சில வேளைகளிலாவது உண்மை வெளிவந்துதானே தீரும்? ஒருவேளை இதற்குமுன் நமது நாடகப் பாரம்பரியத்தில் (தெருக்கூத்தில்), ஆண்களும் பெண்களும் தங்கள் உள்ள உணர்ச்சிகளை வெளிப்படையாகச் சொல்லும் ‘டூயட்டு’கள் இருந்தனவா என்று தெரியவில்லை. தன் கணவன்/காதலன் முன் பெண் தன் காதலுணர்வை வெளிப்படையாகப் பேசக்கூடாது என்ற நமது மரபை இந்த ‘டூயட் பாட்டு அமைப்பு’ முற்றிலும் தகர்த்துவிட்டது. இவை வெளிப்படையான நிலையில் பெண்களின் உடல் சார்ந்த காமத்தைத்தான் பேசுகின்றன. எனவே ஏதோ இன்றைய பெண் கவிஞர்கள் வந்துதான் பெண்களின் உடல்சார்ந்த உணர்வுகளைச் சமூகக் களத்தில் பேசத் தொடங்கினார்கள் என்பது சரியல்ல.

பிரதாப முதலியார் சரித்திரத்தில் ஞானாம்பாளை மிகுந்த அறிவோடு படைக்கும் வேதநாயகரும், இறுதியில் ஆண்களுக்குப் பெண்கள் அடங்கி நடப்பதே விவேகம் என அறிவுரைக்கிறார். பத்மாவதி சரித்திரம் போன்ற நாவல்கள்தான் முதன் முதலாகப் பெண்கள் நிலையை எடுத்துக் காட்டுவதிலும், சீர்திருத்தக் கருத்துகளை முன் வைப்பதிலும் ஈடுபட்டன.

இருபதாம் நூற்றாண்டில் நாவல்களில் பெரும்பாலும் “பெண் பாதுகாக்கப் படுபவள், சுகத்தைத் தருபவள், தீர்மானங்களைக் கேட்டுக் கொள்பவள், அடக்கமானவள், அழகு சாதனங்களுக்கானவள், வீட்டைப் பேணுபவள், தெய்வம் போன்றவள்” என்றுதான் படைக்கப்பட்டிருக்கிறாள். இதில் பாரதிதாசனும் வேறுபடவில்லை. அவரது கருத்துகளும் பெண்ணடிமைத் தனத்திற்கு ஒத்துச் செல்வனவாகவே அமைந் துள்ளன. குடும்ப விளக்கு, இருண்ட வீடு போன்ற அவரது கவிதைகள் இதை உணர்த் துகின்றன. ஒருசிலரே இந்த நோக்கிற்கு மாறான புனைவுகளைப் படைத்தவர்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் எழுத்தாளர் அம்பை, மிகத் தீவிரமான பெண்ணியநிலைப்பாடு கொண்டு சிறுகதைகளை எழுதியுள்ளார். வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, கருப்புக் குதிரைச் சதுக்கம் போன்ற அவரது சிறுகதைகள், பெண்ணின் விடுதலைக்கான வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. பெண்கள் சார்பாக எழுதுபவர்கள் என நோக்கும்போது, ப. சிவகாமி, பாமா போன்ற ஓரிருவரே நினைவுக்கு வருகின்றனர். இராஜம் கிருஷ்ணன், திலகவதி, சூடா மணி போன்ற சிலர் இருவித நோக்குகளிலும் எழுதியுள்ளனர். பிற பெண் எழுத்தாளர்கள் யாவரும் ஆண்நோக்கிலிருந்தே எழுதிவந்துள்ளனர். இதற்கு மிகச் சரியான உதாரணமாக, 1930களிலேயே எழுதவந்த வை.மு. கோதைநாயகி அம்மாளைக் கூறலாம். இந்தப் பாரம் பரியத்தை இன்றுவரை பெண் எழுத்தாளர்கள் காப்பாற்றி வருகின்றனர்.

இருப்பினும் 1920-30களில் ஒரு சில பெண் எழுத்தாளர்களேனும் பிரக்ஞை பூர்வமாகப் பெண்கள் நோக்கில் எழுதியுள்ளனர். உதாரணமாக, இராமாமிர்தத்தம் மாள் அக்காலத்து தாசிகளின் வாழ்க்கை முறை பற்றி எழுதியிருப்பது குறிப்பிடத் தக்கது. ஏறத்தாழப் பதினைந்தாண்டுகள் முன்பு வெளிவந்த ‘கவலை’ என்னும் நாவலும் ஒருதலைச் சார்பான சித்திரிப்பு முறையில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு பெண் குடும்பத்தில் எவ்வளவு பாடுபடவேண்டிவருகிறது என்பதை விவரிக்கும் போக்கில் முக்கியத் துவம் பெறுகிறது.

தொண்ணூறுகளில் மிகுதியாகப் பெண் கவிஞர்கள் தமிழில் தோன்றி னார்கள் என்பது ஒரு முக்கிய நிகழ்வு. இவர்கள் மிக ஊக்கத்தோடு பெண்ணடிமைத்தனத்திற்கு எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். ஏராளமான பெண் குரல்கள் இன்று கேட்கின்றன. ஆனால் எல்லா ஆண்களுமே பெண்களுக்கு எதிரிகள் போலச் சித்திரித்து எழுதுகிறார்கள். அதனால் புதிய சில சலனங்களைத்தான் இவர்களால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் வார்த்தைகளில் சொன்னால், “பெண் குரலின் பதிவுகளே இல்லாத தமிழ்ப் பாரம்பரியத்தில் சில சலனங்கள் தொடங்கியுள்ள சூழல் இது.”

பெண்கவிஞர் சல்மா ஒருமுறை கூறினார்: “தமிழில் எழுதும் பெண் படைப்பாளிகள் தொட வேண்டிய பரிமாணங்கள் எவ்வளவோ இருந்தாலும், தம் படைப்பின் எல்லைகளை முன்கூட்டியே திட்டமாக வரையறுத்துக் கொண்டு அதே இலக்குகளைத் திரும்பத்திரும்ப அடைந்துகொண்டிருப்பது படைப்பின் வீழ்ச்சியைக் குறிப்பதாக இருக்கிறது. அநேகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் கவிதையை அதன் பழக்கப்பட்டுப்போன சுற்றுப்பாதையிலிருந்து வெளிக்கொண்டுவரக்கூடியதாக இருப்பதில்லை.”

பெண்விடுதலை, பெண்ணியம் என்னும்போது, அண்மைக்காலத்தில், குறிப்பாக மேற்குநாட்டுப் பெண்ணிய இயக்கங்களின் பாதிப்பினால். குடும்பச் சிதைப்பும், ஓரினப் புணர்ச்சியும் முதன்மைப்படுத்தப்படுகின்றன. சிறு பத்திரிகைகளில் இவை அதிகம் விவாதிக்கப்பட்டும், பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் பேசப்பட்டும் உள்ளன. பெண் மொழி, உடல் சார்ந்த, ஓரினப் புணர்ச்சி உறவுகள், குடும்ப உடைப்பு அல்லது சிதைப்பு, தாய்மை மறுப்பு போன்றவை அனைத்தும் மேற்கத்திய உயர் நடுத்தர வர்க்கக் கருத்தியலின் இறக்குமதிகள். (இவற்றினால் தங்கள் சமூகங்களின் குழந்தை வளர்ப்பு, அவர்களின் ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றை அவர்கள் பலிகொடுத்துள்ளனர். இதனால் சமூகச் சீரழிவுகள் அதிகமாகின்றன.)

இவற்றிற்கு நமது சூழலில் எந்த அர்த்தமும் இல்லை என்பது என் கருத்து. இயற்கையின் ஒத்திசைவுடன் தங்கள் உடலையும் இனம் கண்டு, உடலை, காமத்தை, பாலியல்பைப் போன்றவற்றை யெல்லாம் கொண்டா டும் கவிதையியக்கத்தில் குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி ஆகிய மூவரும் முக்கியமான பிரதிநிதித்துவக் குரல்களாகக் காணப்பட்டுள்ளனர். ஆனால் நமது பாரம்பரியம், மிக வலுவானது, சுமையானது, எழவிடாமல் அழுத்தக்கூடியது. நமது பாரம்பரியத்தை மீறுதல் எளிய காரியமல்ல.

ஆர். மீனாட்சி, சுகந்தி சுப்பிரமணியன், பொன்மணி, ஆண்டாள் பிரியதர்ஷினி, சுபத்ரா, சல்மா, வத்சலா, கிருஷாங்கினி, கனிமொழி, குட்டி ரேவதி, தாமரை, உமா மகேஸ்வரி, சுகிர்தராணி, வெண்ணிலா, வைகைச் செல்வி, மாலதி மைத்ரி, இளம் பிறை, விஜய பத்மா, திலகபாமா என எத்தனை எத்தனையோ பெண் கவிஞர்களின் குரல்கள் இன்று கேட்கின்றன. சங்ககாலத்திற்குப் பிறகு பெண்கவிஞர் இத்தனை பேரின் பெயர்களை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் கேள்விப்பட்டோம்.

வாழ்க்கையின் சில சிறு சம்பவங்கள் கூட, ஆண்களின் பார்வையில் முக்கியத்துவம் அற்றவையாக இருப்பவைகூட, பெண்களுக்கு மிக முக்கி யத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன என்பதை சுகந்தி சுப்பிரமணியன் மட்டுமே சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். எல்லையற்ற வெளியில், சுதந்திர உலகில் தாவித் திரிய விரும்பும் பெண்மனத்தின் வெளிப்பாடுகளாக அவரது கவிதைகள் உள்ளன. பெண்ணியக் கவிஞர்களுக்கு அவரது எழுத்துகள் நல்ல முன்னுதாரணமாக அமையக் கூடியவை. சல்மாவின் கவிதைகள் சிலவற்றிலும் தனிப்பட்ட வெளிப்பாடுகள் சிறப்பாக உள்ளன. ஆண்பெண் உறவுகளைப் பற்றிய அவநம்பிக்கையையும், அவற்றைச் சீர்படுத்த இயலாத நிலையையும் கவிதைகளில் சிறப்பாக வெளிப்படுத்தி யிருக்கிறார். பெண் கவிதைகள் பொதுவான பிரச்சினைகளைப் பேசும்போதுதான் உயிர்பெறுகின்றன. தங்களைப் பற்றி எழுதும்போது செத்துவிடுகின்றன. உதாரணமாக எத்தனை எத்தனையோ கவிதைகளை எடுத்துக்காட்டலாம்.

இறுதியாகப் பார்க்கும்போது, ஆற்றலுடைய பெண்கவிதைகள் தமிழில் இன்னும் தோன்றவில்லை என்றே படுகிறது. இப்போதிருக்கும் பெண் கவிஞர்கள் பலரும் ஒரு வித்தியாசமான, புதிய மொழிநடையில் உணர்வு களை வெளிப்படுத்த வேண்டும் என்னும் மோகத்தில் ஒரு அந்நியமான மொழிநடையில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்புக் கவிதை களைப் படிக்கும் உணர்வே பெரும்பாலான பெண் கவிஞர்களின் கவிதைகளைப் படிக்கும்பொழுதும் ஏற்படுகிறது. (பெண்களின் மொழி என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் இவர்கள் என்று தோன்று கிறது.)

ஊடகங்களில்-குறிப்பாகத் திரைப்படம், தொலைக்காட்சி இரண்டிலும்-பெண்கள் மிக மோசமாக, போகப் பொருளாக மட்டுமே சித்திரிக்கப்படும் நிலை தொண்ணூறுகளில்தான் தொடங்கியது. தமிழ் ஊடகங்கள் என்றுமே பெண்களுக்குப் பெருமையளித்தது கிடையாது. ஆனால் இப்போதைய நிலை-குறிப்பாக 2010 அளவில்-மிகமிக மோசமானது என்பதில் சற்றும் ஐயமில்லை. உண்மையில் பெண்ணிய இயக்கம் என்பது, தமிழ்நாட்டில் (முழுஇந்தியாவிலும் கூடத்தான்) ஊடகங்களுக்கு (ஜனரஞ்சகப் பத்திரிகைகள் உட்பட) எதிராகத்தான் உருவாக வேண்டும்.


11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்

11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்

பின்நவீனத்துவக் கோட்பாடுகள் என்று குறிக்கப்படுபவை எவை? ஃபிரெஞ்சு அறிஞர்களான லியோடார்ட், ழான் போத்ரியார் ஆகியோருடைய பிரதிகளில் கூறப்பட்ட கருத்துகளோடு ழாக் லக்கான், மிஷல் ஃபூக்கோ, ரோலான் பார்த், டெரிடா போன்ற பின்னமைப்புவாதிகளுடைய பிரதிகளின் பல்வேறு வாசிப்புக் கருத்துகளும் இணைந்தவை அவை என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். தங்களை இம்மாதிரி ஒரு லேபிலுக்குள் அடைப்பதை அவ்வறிஞர்கள் விரும்பமாட்டார்கள். இருப்பினும் வேறு வழியில்லை.

பின்நவீனத்துவம் என்ற சொல்லை முதன்முதல் கையாண்டவர் அர்னால்ட் டாயின்பீ என்னும் வரலாற்றறிஞர். என்றாலும் 1979இல் லியோடார்டின் The Postmodern Condition என்னும் நூலில் அவர் வெளியிட்ட கருத்துகளோடுதான் இச்சொல் பற்றிய விவாதம் முனைப்பாகத் தொடங்கியது. (இலக்கிய உலகில் இச்சொல்லைப் பிரபலப்படுத்தியவர் இஹப் ஹாசன். ஜான் பார்த், டொனால்ட் பார்த்தெல்மே, தாமஸ் பிஞ்ச்சன் போன்றோரால் 1960இல் உருவாகிய இலக்கியப் போக்கினைக் குறிக்க இச்சொல்லைக் கையாண்டார் அவர்.)

பின்முதலாளித்துவ அல்லது முற்றிய முதலாளித்துவ நாடுகளில் வசிப் போர், குறைந்தபட்சமாக, 1960களின் மத்தியிலிருந்தேனும் பின்நவீனத்துவ வாழ்க்கைக்கு ஆட்பட்டுவிட்டார்கள் என்றார் அவர். முக்கியமாக அந்நூலில் அவர் அறிவியலின் தகுதி பற்றி இருந்த இரண்டு தொன்மங்களை உடைத்தார். அவை பின்நவீனத்துவ நிலைக்கு உரியவை.

அவர் உடைத்த தொன்மங்களில் முதலாவது, விடுதலைபற்றியது. (The Myth of Liberation). இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஹாலோகாஸ்ட், சோவியத் குலாக்குகள், ஆஷ்விச், அணுகுண்டுகள் போடப்பட்டமை போன்ற எந்த அழிவு நிகழ்வோடும் அறிவியலும் அறிவியலாளருமே முதன்மை யாகச் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது விடுதலைத் தொன்மத்தை உடைத் தது. இப்போது நாம் இன்னும் அதிகமாக வியட்நாம், ஈராக், ஆப்கா னிஸ்தான் போன்ற நாடுகளின்மீது அமெரிக்கா படையெடுத்த நிகழ்வுக ளையும் ஈழத்தமிழர் அழிக்கப்பட்டதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இன்னொன்று, அறிவியல் உண்மையைக் கூறுவது என்ற தொன்மம் (The Myth of Truth). ஃபெயரபெண்ட், தாமஸ் கூன் போன்ற அறிவியல் தத்துவ வாதிகளாலேயே இந்த பிம்பம் உடைக்கப்பட்டது. இம்மாதிரி விஷயங்க ளைத்தான் பெருங்கட்டுக்கதைகள் (meta-narratives/grand narratives) அல்லது பெருங்கதையாடல்கள் என்றார் லியோடார்ட். நமது சமூகத்தில் மதம், ஜாதி, கட்சி, கடவுள் பற்றிய கோட்பாடுகள் போன்ற யாவும் பெருங்கதையாடல் களில் அடங்கும்.

இம்மாதிரிக் கலாச்சார அமைப்பை மிகச் சரியாக விவரித்தவர் மார்க்சியத் திறனாய்வாளரான ஃபிரடெரிக் ஜேம்சன். ஆழமற்ற மேம்போக் கான மேற்பரப்புகளை மட்டுமே பிடித்துக்கொண்டு அவற்றையே அலங்கரித் துக்கொண்டு வரலாற்றையும் காலத்தையும் பற்றிச் சற்றும் கவலைப் படாமல் வாழும் ஒரு சமூகத்தின் நிலையை நாம் பின்நவீனநிலை (postmodernity) என்று வருணிக்கலாம். ஆழமற்ற பிம்பங்களே ஆட்சிசெய்யும் கலாச்சாரம், அதனால் அங்கதக் குறிப்புமுரண்கள், ஒட்டுவேலைகள், மேம்போக்கான அழகுபடுத்தல்கள் மட்டுமே இசைந்த ஒரு கலாச்சாரம்; அதனால் பிளவுபட்ட ஆளுமை (schizophrenia)களால் மக்களை உருவமைக் கவே அமையும் ஒரு கலாச்சாரம்; இருந்தாலும் எல்லாவற்றையும் ஏதோ விதத்தில் எப்படியோ சரியாக்கிவிடலாம் என்னும் உடோபிய மனப்பான்மை யும் கொண்டது இது. இப்படிப்பட்ட கலாச்சாரத்தில் என்னவிதமான கலைகள் தோன்றும்? அவைதான் பின்நவீனத்துவக் கலைகள்.

எந்த வடிவில் எப்படிச் சொல்லப்பட்டாலும் பின்நவீனநிலை என்பது நவீனத்துவ நிலைப்பாட்டின் (modernist condition) ஒழுங்கமைவுகள் சிதைந்த நிலையைத்தான் காட்டுகிறது. பொதுமைப் பண்புகள் என எவையும் கிடை யாது. மனிதனைச் சிதைத்து விட்ட பெருமுதலாளித்துவத்தில் மனிதத் தன்னிலை, சமூகம், அரசு, பயன்மதிப்பு, வர்க்கம், ஜாதி முதலிய எதற்குமே மரியாதை கிடையாது. யாவும் அழிந்துவிடுகின்றன. பாராலஜி (paralogy) எனப்படும் அளக்கமுடியாதவற்றைப் பற்றிய புதிய கலாச்சாரம்தான் உண்டு. எனவே பின்நவீனத்துவம் என்பது வாழும் உலகங்களின் பன்முகப்பட்ட தன்மையைக் குறிக்கிறது. பௌமன் என்பாருடைய கருத்துப்படி, பின்நவீனத் துவத்தின் முக்கியத்தன்மைகள், பலவேறுபட்ட தன்மை(variety), தற்செயல் எதிர்வுகள்(contingency), இருமனப்போக்கு(ambivalence) ஆகியவையே. கலாச்சா ரங்களின் பன்முகத்தன்மை, சமூக மரபுகளின் பன்முகத்தன்மை, கருத்தியல் களின் பன்முகத்தன்மை, வாழுலகுகளின் பன்முகத்தன்மை, கடைசியாக எல்லாமே மொழி விளையாட்டுகள் (language games).

இப்படிப்பட்ட பின்நவீனத்துவ நிலை, அமெரிக்காவிலோ, வளர்ந்த G8 நாடுகளிலோ நிலவுவது ஒருபுறம் இருக்கட்டும்; நம்நாட்டில் நிலவுகிறதா என்ன? நிலவவில்லை என்றால் பின்நவீனத்துவப் படைப்புகள் எப்படி முகிழ்க்கமுடியும்? ஆனால் பின்நவீனத்துவ நிலை நிலவவில்லை என்றா லும், நமது நாட்டில் முதலாளித்துவம் சிதையவில்லை என்றாலும், அதற் கான குணாதிசயங்கள் பல வந்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக virtual reality எனப்படும் போலி யதார்த்தத்திற்கு மக்கள் இருபது முப்பது ஆண்டுகளாகவே பழகிவிட்டார்கள். பிம்பங்களை வழிபட்டு, பிம்பங் களுக்காகப் போராடி, பிம்பங்களுக்காகவே ஓட்டுப்போட்டு, நிஜத்தில் எந்த மகிழ்ச்சியையும் காணாமல் அவற்றையும் கனவுகள் அல்லது பிம்பங்கள் வாயிலாகவே அடைந்து மறைந்துபோகும் நம்நாட்டு மக்கள், உலகின் பிற மக்களை விடப் பின்நவீனத்துவப் படைப்புகளுக்கு ஏற்ற களமாகத்தான் அமைந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சமூகத்தில், பொருட்களின் உற்பத்தியைவிட அவற்றின் நுகர்வினால் சமூகச் சமமின்மைகள் அதிகமும் வடிவமைக்கப்படும் நிலையில், வர்க்க, இன பேதங்கள் உடைத்துத் துண்டுதுண்டாக்கப்பட்டு சமன்படுத்தப்படுகின்றன என்று பாகுல்ஸ்கி, எம். வாடர்ஸ், எல். குரூக் ஆகிய சமூகவியலாளர்கள் சொல்கிறார்கள். பொருள்கள் அவற்றின் பயன் மதிப்பை இழந்துவிட்டன. அவற்றிற்கு அவற்றின குறியியல் (பிம்ப அடையாள) மதிப்பு மட்டுமே இருக்கிறது. அதுவும் சமமற்ற ஒரு சமூகத் தை எப்படி யெல்லாம் உற்பத்தி செய்யலாம் என்ற அளவிலேயே அவை இயங்குகின்றன. சமூக இன/வர்க்க எல்லைக்கோடுகள் தெளிவற்றவை யாகிவிட்டன.

வர்க்கசமூகங்கள் உடைபட்டுக்கொண்டிருக்கும் நாட்களில் நாம் வாழுகின் றோம். நன்கு வளர்ந்த நாடுகளில் வர்க்க எல்லைக் கோடுகள் காணப்படு வதே இல்லையாம்! பொருளாதார வேறுபாட்டுக் கருவிகள் இருபதாம் நூற்றாண்டில் முன்பே முடிந்துவிட்டன. மத்தியதர வர்க்கம் வரை பரவிச் செல்லும் செல்வம், தொழில்களின் பெருக்கம், வேலைத்திறனுக்கான சான்றுகள், வேலைகளைத் தரப்படுத்துதல், பெரும் வணிகப் பிரிவுகள் உருவாதல், உலகமயமாக்கம், வாழ்க்கை மதிப்பிற்காகவும், அந்தஸ்திற் காகவும் மேலும் மேலும் நுகர்பொருட்களை உருவாக்குதல், இவற்றின் விளைவாகப் போலியாக உருவாக்கப்படும் பங்குச் சந்தைகள் அவற்றின் உயர்வுகள்-சரிவுகள் போன்றவை வர்க்க சமுதாயத்திற்கு எதிரான ஒரு நுகர்வுச் சமுதாயத்தை உருவாக்கி விட்டன.

மரபு சார்ந்த இலக்கியம் அனுபவ யதார்த்தத்தை எடுத்துரைப்பதாகச் சொன்னாலும் எடுத்துரைக்க முடியாமல் தடுமாறுகிறது என்கிறார்கள் பின் நவீனத்துவவாதிகள். அறிவுக்கும் அறிவியலுக்குமான தொடர்பு என்பது முற்றிலும் உடையும்போது உலகம் பைத்தியக்கார விடுதியாகிவிடும். மொழி விளையாட்டுகள் என்பவை ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும் மட்டுமே பயன்படும்போது அதிகாரம் முழுமை பெற்று அது விரும்புவது கிடைப்பதற்கு அலைகிறது. தடியைக் கையிலெடுப்போர் இடுவது சட்டமாகி விடுகிறது. இப்படிப்பட்ட கலாச்சாரத்தில் வெறும் அங்கதக் குறிப்புகள், ஒட்டு வேலைகள், மேம்போக்கான அழகுபடுத்தல்கள் மட்டுமே வெளிப்படும் எழுத்துகளும் கலைமுறைகளும் தோன்றுவது இயல்பு.

பின்நவீனத்துவ இலக்கியம் என்பது நவீனத்துவ இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும், தொடர்ச்சிகளைக் கைவிட்டதாகவும் பார்க்கப்படுகிறது. நவீனத்துவ இலக்கியம் ஒரு முன்னணி இலக்கியம், சோதனை விருப்ப இலக்கியம். அது முற்றிலும் செவ்விய ஒரு வடிவத்தை வலியுறுத்துகிறது. வடிவச்சோதனைகள் நவீனத்துவ காலத்திலேயே மிகுதியாகச் செய்யப் பட்டன. தமிழில் புதுமைப்பித்தன் காலத்தில் நவீனத்துவ நிலை ஆரம்பமாகி, எழுத்து பத்திரிகையில் ஏறத்தாழ முழுமை பெற்றுத் தொடர்ந்து வளர்ந்தது. பின்நவீனத்துவமோ எதிர்வடிவம்(anti-form) என்பதை வலியுறுத்துகிறது. அதாவது வடிவ இணைப்புகளை மறுப்பது, திறந்த வடிவத்தைக் கையாள்வது போன் றவற்றை ஆதரிக்கிறது.

நவீனத்துவ இலக்கியத்திற்குக் குறித்த நோக்கம் உண்டு. அந்நோக்கத்தை நிறைவேற்றுதல் இலக்கியத்தின் ஈடேற்றமாகக் கணிக்கப்படுகிறது. பின் நவீனத்துவ இலக்கியத்தில் குறித்த நோக்கம் என்பது கிடையாது. அதற்குப் பதிலாக ஆட்டம்(play) என்பது முக்கியமாகிறது. அதேபோல நவீனத்துவ இலக்கியத்தில் சரியான வடிவமைப்பு என்பது முக்கியமானது. பினநவீனத் துவ இலக்கியத்திலோ வடிவமைப்பு என்பதை விடத் தற்செயல் ஆக்கத் திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

நவீனத்துவவாதிகளின் நோக்கம் ஒரு முழுமையான கலைப்படைப்பு அல்லது கலைப் பொருளை உருவாக்குவது. பின்நவீனத்துவவாதிகளின் நோக்கம் ஒரு கலைப்படைப்பினை உருவாக்கி முடிப்பது என்பதைவிட அதனை இயற்றும்/செய்யும் முறை(process) எவ்வாறென ஆழ்ந்து சிந்திப்பது எனலாம். இதனால் பின்நவீனத்துவப் படைப்புகளில் சுயஆழ்வு(self-reflection) முக்கியப்பண்பாக அமைகிறது. மேலும் பின்நவீனத்துவவாதிகளின் நாவல் எழுதும் முறை, மொழியமைப்புகள், கதைப்பின்னல்களின் சிதைப்புகள், கதை கூறும் குர்ல்களின் பன்மைநிலை, கதைமுடிவு¢தீரமானத்தில் தெளி வின்மை, நடையியல் விளையாட்டுகள் ஆகியவை கையாளப்பட்ட தன்மை, வரன்முறையான குணச்சித்திரம், விளக்கம், வருணிப்பு போன்றவற்றில் அதுவரை நாவல்கள் கொண்டிருந்த பொதுமை, எழுத்தாளர் ஆதிக்கம் (author-ity) போன்றவற்றை உடைத்துவிட்டன.

படைப்பாளன் தன்னைப் படைப்பிலிருந்து விலக்கிக்கொண்டு அல்லது தொலைவில் நிறுத்திக்கொண்டு அதனைக் காண்பது என்பது நவீனத் துவத்தில் முக்கியமான ஒரு நிலைப்பாடு. ஆனால் பின்நவீனத்துவப் படைப் புகளில் ஆசிரியன், குறுக்கிடுவதற்கு அஞ்சவேண்டியதில்லை. கதைக்குள் பங்கேற்கவே செய்யலாம்.

நவீனத்துவ இலக்கியத்தில் படைப்பு என்பதும் ஒருங்கிணைத்தல் என்பதும், தொகுத்தல் என்பதும் முக்கியமானவை. பின்நவீனத்துவப் படைப்புகளிலோ தகர்த்தல் (கட்டுடைப்பு) என்பதும், எதிர்நிலைப்பாடும் முக்கியமானவை. பின்நவீனத்துவப் பிரதி, தன்னில் பயின்றுவரும் சொற் களால், தொடர்களால், மையப்படுவதைத் தவிர்த்து, அவற்றைக் கலைத்துப் போட்டு, ஒரு விளையாட்டுப் பலகைபோல் இயங்குகிறது. ஒரே பிரதிக்குள் பலவேறு பிரதிகள் வெவ்வேறு வாசிப்புகளில் உருவாக வழிசெய்கிறது.

நவீனத்துவம் இருப்பை வலியுறுத்துகிறது. ஆசிரியனின் இருப்பு, பொருளின் இருப்பு, சம்பவ இருப்பு, சுயத்தின் இருப்பு, கலைக் கருவிகளின் இருப்பு-எல்லாவற்றையும். பின் நவீனத்துவம் இன்மையை வலியுறுத்து கிறது.

ஒன்று அல்லது பல அர்த்தங்களின் இருப்பையும் நவீனத்துவம் வலியுறுத்துகிறது. பின்நவீனத்துவம் நிச்சயமின்மை, நிர்ணயத்தன்மை இன்மையை முக்கியமாகக் கருதுகிறது.

ஜான் பார்த், பின்நவீனத்துவ இலக்கியத்தைத் ‘திருப்தி செய்யும் இலக்கியம்’ என்கிறார். சார்லஸ் நியூமன் ‘பணவீக்கப் பொருளாதாரத்தின் இலக்கியம்’ என்கிறார். லியோடார்டுக்குப் ‘பின்நவீனநிலை’ என்பது சமகாலத் தகவல்தொடர்பு வீக்க நிலையில் அறிவின் பொதுநிலை. இஹப் ஹாசனுக்குப் பின்நவீனநிலை என்பது மனித குலத்தை ஆன்மிக இணைப்புச் செய்யும் பாதையின் முதல் கட்டம். இப்படிப் பல பார்வைகள். ரொமாண்டிசிசம் என்பது ஒன்று அல்ல, பல ரொமாண்டிசிசங்கள் இருக்கின்றன என்று லவ்ஜாய் என்ற திறனாய்வாளர் ஒருமுறை சொன்னார். நாமும் அதேபோலச் சொல்லலாம்: பின்நவீனத்துவம் ஒன்று அல்ல, பல பின்நவீனத்துவங்கள் இருக்கின்றன.

பின்நவீனத்துவத்தை இனம் காணக்கூடிய பல தன்மைகள் இருக்கின்றன. முதலாவதாக அவற்றுள் வருவது நிச்சயிக்கவியலாத்தன்மை அல்லது நிர்ணயத்தன்மை இன்மை(indeterminacy).எதுவுமே நிச்சய மில்லை. நாம் எதைப்பற்றியும் உறுதியோடிருக்க முடியாது. பழஞ்செவ்விலக்கியங்களின் உறுதிப்பாடும் சமயங்களின் உறுதிப் பாடும் நமக்கு இல்லை என்றாகிவிட்டது. யாரும் எதைப்பற்றியும் உறுதியாக எதையும் சொல்லிவிட முடியாது. இவ்வுறுதியற்ற தன்மை நமது பிளவுநிலையால் ஏற்பட்டது. கடவுளின் மறைவோடு உலகம் துண்டுதுண்டாகிவிட்டது. சமூகம் பிளவுபட்டுவிட்டது. குடும்பம் துண்டுதுண்டாகிவிட்டது. இவ்வாறு பிளவுபடுவதையே நாம் தினந்தோறும் கண்டுகொண்டிருக்கிறோம்.

பின்நவீனத்துவத்தில் இப் பிளவுநிலை, வடிவங்களைச் சிதைத்தலாக முடிகிறது. மோன்டாஜ், கொலாஜ், எதிர்பாரா முறைகளில் இலக்கிய வகைகளைக் கலத்தல், ஆகியவை நிகழ்கின்றன. பின்நவீனத்துவக் கலாச்சாரம் என்பது ஒரு வெகுஜனக் கலாச்சாரம் ஆகையால், எல்லா விதிகளும் உடைக்கப்படுகின்றன. எல்லாச் சாத்திரங்களும் மீறப்படுகின்றன. மரபான மதிப்புகள் ஏளனத்துக்குள்ளாகின்றன. கலாச்சார மதிப்புகள் அழிகின்றன.

இதற்கு முதல் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது, பழைய மோனா லிசாவின் ஓவியத்தில் ஒரு வெள்ளாட்டை வரைந்து சேர்த்த டியூ சாம்ப்பின் ஓவியம். கலை இழிவுக்குள்ளாக்கப்பட்டு கேளிக்கையாகிறது. தமிழ்த் திரைப்படப் பாடல்களில்கூட புதிய பாடல்களையும் இசையமைப்பு களையும் உருவாக்கத் திணறி, பழைய பாடல்களையும் இசையமைப்பு களையும் மேற்கத்திய இசையோடு கலந்து மிக்சிங், ஃப்யூஷன் என்றெல்லாம் செய்துகொண்டிருப்பதைக் காண்கிறோம். வெறும் நுகர்வுக் கலாச்சாரம் நிலவுமிடத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

பின்நவீனத்துவத்தின் கேளிக்கைக் கோட்பாடு எல்லையற்று, இலக்கிய வடிவங்கள் கலப்புறுவதற்கும், ஊடகங்கள் கலப்புறுவதற்கும், அழகியல் சிந்தனையும் கருத்து சார் கலையும் கலப்பதற்கும், உதவுகிறது. திரைப்படமும் இலக்கியமும், முன்னணிக் கலையும் வெகுஜனக்கலையும், துன்பியலும் இன்பியலும், உயர்ந்ததும் தாழ்ந்ததும், உள்மனப் பேச்சும் ஜாலயதார்த்தமும் என எவைஎவையெல்லாமோ கலப்புறுகின்றன. எல்லாம் குப்பையாக ஒன்றாக்கப்படுகின்றன. எல்லாம் கடைசியில் நம் கண்ணெதிரே உள்ள சமுதாயம் போலவே அர்த்தமின்றி இருக்கிறது.
எந்தக் கோட்பாட்டையும் சுருக்கி அதன்அடிப்படைப் பண்புகளை மட்டும் சொல்லுதல் என்பது இயலாது. என்றாலும் முக்கிய விமரிசகர்களின் கருத்துகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. டேவிட் லாட்ஜ் முதன்மை யாக ஐந்து எடுத்துரை உத்திகளைப் பின்நவீனத்துவப் படைப்புகளுக்கு உரியாக எடுத்துக்காட்டுகிறார்.
முரண்படுத்தல் (Contradiction),
வரிசைப்படுத்தல் (Permutation),
தொடர்ச்சிஅறுத்தல் (Discontinuity),
குறித்த நோக்கமின்மை (Randomness),
குறைச்சுற்று (Short circuit)
என்பன அவை. இவற்றோடு மிகையளவு (Excess) என்ற ஒன்றையும் சிலர் சேர்க்கிறார்கள்.

இவையனைத்தும் பழங்கால முதலே கையாளப்படும் இலக்கியக் கருவிகள்தான். என்றாலும் இவற்றை ஆங்காங்கு இலக்கிய ஒருமைப் பாட்டுக்கெனக் கையாளும் தன்மை பின்நவீனத்துவ முறைக்கு மாறுபட்டது. இவையனைத்தையும் பெரும்பாலும் கையாண்டு, அதேசமயம் பொருள் நிர்ணயித்தலையும் மறுத்துச் செல்லும் போக்குடையன பின்நவீனத்துவ இலக்கியம் என்று சொல்லலாம்.

புரியாமல் எழுதுவது பின்நவீனத்துவ எழுத்து எனச் சமகாலத் தமிழ்ப் படைப்பாளிகள் சிலர் நினைக்கின்றனர். புரியாமல் எழுதுவது நவீனத்துவத் தன்மையே அன்றி, பின்நவீனத்துவத் தன்மை அன்று. ஜோசப் ஹெல்லரின் ‘கேட்ச் 22’, தாமஸ் பிஞ்ச்சனின் ‘V’ போன்ற எந்தப் பின்நவீனத்துவ நாவ லும் புரியாமல் இல்லை. ஆனால் சென்ற நூற்றாண்டின் முற்பாதிக்குள் ஜாய்ஸ் எழுதிய ‘யுலிசிஸ்’, ‘ஃபினிகன்ஸ் வேக்’ போன்ற நவீனத்துவ நாவல்கள் புரியாமைக்குப் பேர்போனவை. பொருள்கொள்வதில் பன்முகத் தன்மை என்பது வேறு, புரியாமல் எழுதவேண்டும் என்றே எழுதிச் சிரமப் படுத்துவது வேறு.

முரண்படுத்தல், வரிசைப்படுத்தல், தொடர்ச்சியறுத்தல் போன்ற சொற்க ளின் பொருள் பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். குறித்த நோக்க மின்மை என்பது அதிகாரங்களை அல்லது அத்தியாயங்களை எந்த ஒரு குறித்த நோக்கிலும் அமைக்காமை. அது போன்ற பிறசெயல்களும் இதில் அடங்கும். உதாரணமாக, பி.எஸ். ஜான்சன் என்னும் கனடா நாட்டு நாவலாசிரியரின் ‘தனித்தாள்-நாவல்கள்’ எனப்படுபவை, தனித்தனித் தாள்க ளாக இணைக்கப்பட்டிருக்கும். நாம் அவற்றை எந்த வரிசையிலும் முறை மாற்றிப் படித்துக்கொள்ளலாம். இதுபோல நிகழ்ச்சிகளும் அமைக்கப்படலாம்.
தமிழில் சங்க இலக்கியங்களான குறுந்தொகை, நற்றிணை, புறநானு£று, பரிபாடல் போன்றவற்றின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளமையும் இன்று நோக்கமற்ற ஒன்றாகத்தான் நமக்குத் தோற்றமளிக்கிறது. திருக்குறட் பாக்கள் ஒவ்வோரதிகாரத்திலும் அநேகமாகக் குறித்த நோக்கமற்று, வரிசை யற்றுத்தான் அமைக்கப்பட்டுள்ளன. காமத்துப்பாலில் பல அதிகாரங்கள்கூட நோக்கமற்ற வரிசையில் உள்ளன. நந்திக் கலம்பகம் போன்ற பல துறைகள் பயின்றுவரும் நூல்களிலும் அவற்றை நாம் வெவ்வேறு வகைகளில் முறைமாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

குறைச்சுற்று என்று லாட்ஜ் பெயரிட்டிருப்பது நூலாசிரியரும் நூலினுள் தாமே தம்மைப் பாத்திரங்களுக்கிடையே செயல்படுபவராக நுழைத்துக் கொள்ளுதல். இதனைப் பழங்காலக் காப்பிய நூல்கள் பலவற்றிலும் பார்த்திருக்கிறோம். இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் சிலப்பதிகாரம் போன்ற காப்பியங் களிலும் இத்தன்மை காணப்படுகிறது.

மிகையளவு என்பது பிரதியினுள் வாசகன் தொகுத்துப் பகுத்துப் பார்த்துச் சம்பவங்களை அல்லது கூறுகளைத் தனக்குள் வாங்க முடியாத வகையில் மிகுதியான தகவல்களை அமைப்பது. இதனை நாம் வில்லிபாரதம், கம்பராமாயணம் போன்ற காப்பியங்களில் நாம் காணமுடியும், லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும்’ போன்ற பெருநாவல்களிலும் காணலாம். இக்காலத்திலும் ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் போன்ற நாவல்களிலும், பிரேம்-பிரேதா எழுதிய நாவல்களிலும் இத்தன்மை காணப்படுகிறது. இப்படிப்பட்ட இக்காலப் படைப்புகளைப் பின்நவீனத்துவப் படைப்புகள் என்பதில் தடையில்லை.

முரண்படுத்தல், வரிசைப்படுத்தல் என்னும் இலக்கியக் கருவிகளைப் பழங்கால முதலே, சங்ககாலப் புலவர்கள் முதலாக இன்றைய கவிஞர்கள் வரை பல்வேறு நிலைகளில் கையாண்டுள்ளனர். உடோபியத் தன்மை களைக் கம்பரின் கதையாடலில் மட்டுமின்றிப், பிற பல புலவர்களின் பிரதி களிலும் கண்டிருக்கிறோம். உடோபியத் தன்மை மட்டுமே பின்நவீனத்துவத் தன்மையன்று. உடோபியத் தன்மைக்கு எதிரான ‘டிஸ்டோபியா’ என்பதும் பின்நவீனத்துவத் தன்மையே. இத்தன்மையை நாம் கலிங்கத்துப் பரணியில் காண்கிறோம். குறிப்பாகப் பேயுலகு ஒன்றை மிக நகைச்சுவையாகச் சித்தி ரப்படுத்துவதில் பிற தமிழ் இலக்கியப் படைப்புகளிலிருந்து முதன்மையாக அது வேறுபட்டுள்ளது.

தொடர்ச்சியறு எழுத்துகள்(Non-linear writings) அல்லது நேர்க்கோட்டு முறையில் படைக்கப்படாத பல எழுத்துகள் இன்று தமிழில் வந்து கொண்டிருக்கின்றன. அவை யாவும் பின்நவீனத்துவப் படைப்புகள் என்று சொல்லமுடியாது. நேர்க்கோட்டு முறையில் அமையாப் படைப்புகள் யாவும் பின்நவீனத்துவம் சார்ந்தவையாக இருக்கத் தேவையில்லை. நவீனத்துவப் படைப்புகள் பல நேர்க்கோடற்ற முறையில் எழுதப்பட்டவையே. உதாரணத்திற்கு டி.எஸ். எலியட்டின் ‘பாழ்நிலம்’ கவிதையைச் சொல்லலாம். அல்லது ‘டிரிஸ்ட்ராம் ஷேண்டி’ நாவலைச் சொல்லலாம். இப்படிப் பல உதாரணங்கள் உள்ளன.

‘ஒரு நூற்றாண்டுத் தனிமை’ நாவலின் பாதிப்பில் தமிழவன் எழுதிய முதலிரு நாவல்களும் மாந்திரிக யதார்த்தம் என்பதற்குச் செயற்கையாகச் செய்யப்பட்ட உதாரணங்கள்போலத்தான் அமைந்தன. பின்னர் அவர் எழுதிய ‘ஜே.கே.எழுதிய மர்மாநாவல்’ என்பதில் பின்நவீனத்துவக் கூறுகள் பல உள்ளன. எழுத்தைப் பற்றிய எழுத்து என்னும் முறையில் அது பின்நவீனத் துவப் பிரதியாகிறது. ஜீ. முருகனின் நாவல்கள் பின்நவீனத்துவப் பண்பு களைக் கொண்டுள்ளன. இருப்பினும் அவரது வாழ்க்கை நோக்கு இன்பியல் சார்ந்து வெளிப்படவில்லை. புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’ போன்ற சிறுகதைகள் மாந்திரிக யதார்த்தம் எவ்விதம் தமிழில் எழுதப்படவேண்டும் என்பதற்கு முன்னுதாரணங்கள்.

எத்தனை வகையான பின்நவீனத்துவப் பிரதிகள் சொல்லப் படுகின்றன வோ அவற்றிற்கெல்லாம் ஒவ்வொன்று உதாரணம் எழுதியே தீரவேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு எம்.ஜி. சுரேஷ் எழுதியிருக்கிறார். அதனால் அவற்றில் ஒரு செயற்கைத் தன்மை இழையோடுகிறது. பின்நவீனத்துவப் பண்புகளில் பல, சுயசிந்தனையில் ஆழ்வு, எழுத்தைப் பற்றி எழுதுதல், ஒரே கதைக்கு இரண்டு அல்லது மூன்று முடிவுகள் அளித்தல் போன்றவை அவரிடம் காணப்பட்டாலும், இன்று பின்நவீனத்துவப் பிரதிகளுக்கு அடிப்படையாக நோக்கப்படும் குறிப்புமுரண், நையாண்டி, பாஸ்டிஷ் போன்றவை அவரது படைப்புகளில் மிகுதியாக இல்லை. இவையின்றிப் படிக்கும்போது அவரது நாவல்கள் வித்தியாசமான முறையில் எழுதப் பட்டட துப்பறியும் கதைகளாக மட்டுமே தோற்றமளிக்கின்றன. பிரேம்-ரமேஷ் நாவல்களிலும் ரொமாண்டிக் தன்மை முக்கியத்துவம் பெறுகிறது. அவர்கள் சொல்கிறார்கள்:

“முதலில் இவை எப்படி பின்நவீனத்துவ எழுத்துகளாகின்றன என்று பார்ப்போம். இதுவரைக்குமான தத்துவங்கள் அளித்துவந்த மீட்பு, விடுதலை, மேலான உலகம் என்ற நம்பிக்கைகள் கொடூரமான முறையில் தகர்ந்து போன நிலையில் உண்மைகளை, சுதந்திரத்தை, தர்க்கபூர்வமாக நிறுவுவதாக வந்த நவீனத்துவமானது உயர்தொழில நுட்பமாகவும், உலக ஆதிக்க சக்தியாகவும் மாறிநின்றபோது ஏற்பட்ட பிரமைக் கலைப்பு, பின் நவீனத்துவத்தில் முக்கியமான உடைப்பு. ஒவ்வொரு மனிதரின் இருப்பும் செயலும் அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ வேறுசிலரின் இருப்பையும் நிகழ்வையும் நசுக்குவதாக மாறிவிட்ட கொடூரங்களின் வலைப்பின்னல், எவரொருவரின் கொடூரமும் எங்கு ஆரம்பித்து எந்தவழி நகர்ந்து எங்கு முடிகிறது என்பது அறியப்படாத அளவிற்கு நுண்மையான அழிவமைப்பு உருவாகிவிட்டது. இந்த அழிவுக்கூறு எந்தத் தனி உடலாலும் தன்மூலம் பாயாமல் நிறுத்தக்கூடியதாக இல்லை. வெறுமையாக ஒரு வரலாற்றுக் கலாச்சாரப் பரப்பில் பிறந்துவிட்டதனாலேயே இந்தக் கொடூரங்கள் வன்முறைகள் அனைத்தாலும் நசுக்கப்படுவதும், அவற்றை வேறு பலர் மீது செலுத்துவதுமான பயங்கரம் ஏன்? இவை எல்லாம் மொழிக்குள் வரியாகி, மொழியால் தீர்க்கப்பட முடியாதவை. அதேசமயம், மொழியால் பெருக்கப் படுபவையும் கூட. மொழி இங்கே உடலைக் கவிகிறது. குறிகளும் குறி களின் குறிகளும் வெளிகளைச் சூழ்ந்துள்ளன. இவை எந்த அர்த்தத்தையும் உருவாக்குவதும் இல்லை. இந்தப் பின்நவீன சாத்தியமின்மையின் திகைப்பை Poetics of Crueltyயால் demonstrate செய்வதன்மூலம் பிரேம் ரமேஷின் எழுத்துகள் பின்நவீனத்துவ எழுத்தாக நடுங்குகின்றன.” (பேச்சு-மறுபேச்சு, பக்.110-111)

ஒருவகையில் மேற்கண்ட கூற்றின் இன்றியமையாமை புரிகிறது, அதே சமயம் சற்றே அதீதமாகவும் தென்படுகிறது. இன்றைக்குத் தமிழ்இலக்கிய உலகினை நோக்கும்போது அதிகமாகப் பின்நவீனத்துவப் பிரதிகள் வந்துள்ள தாகத் தெரியவில்லை. காரணங்கள் வெளிப்படை. பலர் பின்நவீனத்துவம் என்பதை மாந்திரிக யதார்த்தப் படைப்புகள் மட்டுமே என்பதாகவோ, புரியாமல் படைத்தல் என்பதாகவோ எடுத்துக்கொண்டு எழுதுகிறார்கள். ஒன்று, தத்துவரீதியான புரிதலேனும் தேவை, அல்லது பிறமொழிகளிலுள்ள படைப்புகளை ஆழ்ந்து படித்து, எந்தமாதிரியாக எழுதப்படுகின்றன என்பதை அறிவதேனும் தேவை. இரண்டுமற்ற தான்தோன்றித்தனமான ஒரு நிலையைத் தமிழ் எழுத்துலகில் பார்க்கிறோம். கோட்பாடுகளை அறிந்து படைக்க முடியுமா என்ற கேள்வி இங்கு எழலாம். கோட்பாடுகளைப் புரிந்துகொண்டுதான் எழுதவேண்டும் என்பது தேவையில்லை. அப்படிப் பட்டவர்கள் லேபில்களுக்காகக் கவலைப்படத் தேவையில்லை. தமது பிரதிகள் ஒரு தனிரகம் என்கிறமாதிரியாக விட்டுவிடலாம். அவற்றுக்குத் தக்க கோட்பாடுகளை விமரிசகர்கள் வகுத்துக்கொள்ளட்டும்.

எல்லாப் பின்நவீனத்துவக் கருவிகளையும் ஒருவர் கட்டாயம் ஒரே நாவலில் அல்லது பிரதியில் கையாண்டுவிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் குறைந்தபட்சமாகத் தற்சிந்தனையுள் ஆழ்தல், சுயபிரக்ஞையோடு எழுதுதல், அர்த்தம் நிர்ணயம் செய்யவியலாத் தன்மை, மையமழிந்த தன்மை, முழுமை-நிச்சயம் போன்ற பண்புகளை விலக்குதல், பலபிரதிகளோடுள்ள உறவு போன்றவற்றை எப்பிரதிகள் கொண்டுள்ளனவோ அவற்றை நாம் பின்நவீனத்துவப் பிரதிகள் எனக் கொள்ளலாம். தாமதம், இடையீடு, காலவயப்பட்ட தன்மை, இடப்பெயர்ச்சி போன்ற தன்மைகளோடு வாசகனையும் ஆசிரியன் அர்த்த உருவாக்கத்திற்கு அடிப்படைத் தேவை யானவனாகக் கொள்ளும் நிலை ஏற்படும்போது கட்டாயம் இவற்றைப் பின்நவீனத்துவப் பிரதிகள் என்ற முத்திரையினைத் தரலாம்.

எழுத்தைவிட இன்று ஊடகப் பிரதிகளிலே பின்நவீனத்துவப் பண்புகள் நிறைந்துள்ளன. வெகுஜனக் கலாச்சாரத்திற்குரிய மேலோட்டமான பண்புகளை இவை முற்றிலுமாக உள்வாங்கிக்கொண்டிருப்பதே காரணம். ஆனால் இவற்றை எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளமுடியும், எத்தனை நாட்களுக்கு இவை நிலைநிற்கும் என்பன எல்லாம் அடிப்படைக் கேள்விகள். இம்மாதிரிப் பிரதிகளை ஏற்றுக்கொண்டால் கலை என்பதற்கான அடிப்படைப் பண்புகளாக நாம் வைத்திருக்கும் அனைத்தையுமே மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும்.


10. அமைப்பியமும் பின்அமைப்பியமும்

10. அமைப்பியமும் பின்அமைப்பியமும்

அமைப்பியம் (பலபேருடைய வழக்கில் ‘அமைப்பியல்’) என்பது, சமூகவியல், மானிடவியல், இலக்கியத் திறனாய்வு போன்ற பல துறைகளில் கையாளப்படும் திட்டவட்டமான முறைசார்ந்த அணுகுமுறை எனச் சுருக்கமாக வரையறுக்கலாம். அமைப்பியத்திற்கு அடிப்படையாக அமைந்தது, ஸ்விஸ் நாட்டு மொழியியல் அறிஞரான ஃபெர்டினாண்ட் டி சசூர் எழுதிய பொதுமொழியியல் பற்றிய நூல் (1916) என்பர். ஆனால் அமைப்பியம் (ஸ்ட்ரக்சுரலிசம்) என்ற சொல்லை உருவாக்கியவர் ரோமன் யாகப்சன்.

சசூர், தமது நூலில், குறித்தல் செய்கை பற்றிய ஓர் அறிவியல் ரீதியான கொள்கையை முன்வைக்க முயன்றார். குறிகள் வாயிலாக நிகழும் குறித்தல் செய்கை பற்றிய அறிவியலுக்குக் குறியியல் (செமியாடிக்ஸ்) என்று பெயரிட்டார். அவருடைய கருத்துப்படி மொழி என்பது குறித்த உறவுகளின் ஓர் அமைப்பொழுங்கு. இவ்வுறவுகளால்தான் அர்த்தம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சொல், தானே ஒரு பொருளைக் ‘குறிப்பதில் லை’. மாறாகப் பிற சொற்களோடு அதற்குள்ள உறவினால் அர்த்தம் உருவாகிறது.

மொழியின் பொதுவான அமைப்பு ‘லாங்’ எனப்படும். இது மொழியின் அமைப்புக்கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று. இதற்கு மாறாக இருப்பது, ‘பரோல்’ எனப்படும் தனிவெளியீடு (தனிப்பேச்சு). இதில் மொழியமைப்பின் கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோலவே குறியின் (சொல்லின்) அமைப்பிலும், குறிப்பான்-குறிப்பீடு என்னும் இரு தன்மை களைக் காண இயலும். குறிப்பதற்கெனக் கொள்ளப்படும் பொருள் பற்றிய நினைவுத் தோற்றத்தைக் குறிப்பீடு (சிக்னிஃபைடு) எனலாம். அதை ஒலிகளால் அல்லது பிற முறைகளால் குறிக்கும் விதத்தைக் குறிப்பான் (சிக்னிஃபையர்) எனலாம். இவ்விரண்டிற்கும் இடையிலான தொடர்பு தன்னிச்சையானது, வரையறுக்கப்படாதது.

மொழியின் இயக்கத்திலும் இவ்வகை இருமை நிலைகளைக் காணலாம். சொற்களை நாம் தொடராக அமைக்கும்போது தொடர் இணைவு (சிண்டாக் மேடிக் ஸ்ட்ரக்சர்) முறையைப் பயன்படுத்துகிறோம். பெயர்ச்சொல் முத லில் வரவேண்டும், தொடர்ந்து வினைமுற்று வரவேண்டும் என்பதுபோன்ற அமைப்பு முறைகளை உருவாக்குகிறோம். ஆனால் எந்தப் பெயர்ச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும், எந்த வினைமுற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று கருதும்போது பல சொற்களில் ஒன்றினைத் தேர்ந் தெடுக்கிறோம். இதனைச் சட்டக (வாய்பாட்டு) அமைப்பு (பேரடிக்மாடிக் ஸ்ட்ரக்சர்) என்போம். இம்மாதிரியே கலாச்சாரச் செயல்பாடுகள் யாவிலும் சட்டகத்திலிருந்து கூறுகளைத் தேர்ந்தெடுக்கும் தெரிவு முறையும், அவற் றைத் தொடர் இணைவுகளாக்கும் அமைப்பு முறையும் செயல்படுகின்றன என்று அமைப்பியம் சொல்கிறது.

அமைப்பியம் இம்மாதிரி இருமை எதிர்வுகளில் (சிக்னிஃபைடு x சிக்னி ஃபையர், லாங் x பரோல், சிண்டாக்மேடிக் x பேரடிக்மாடிக் என்பன போல எதிரெதிராக நிறுத்தப்படும் இருமைகள்) கவனம் செலுத்துகிறது. கலாச் சாரத்திலும் இம்மாதிரி இருமை எதிர்வுகள் நிரம்பிக்கிடக்கின்றன. நன்மை-தீமை, ஒளி-இருள், ஆதிக்கம்-ஒடுக்கம் என்பன போன்றவை இருமை எதிர்வுகள். எல்லா மொழிகளுக்கும் அடிப்படை அமைப்பு இருமை எதிர்வுகளால் உருவாகுவதாக ரோமன் யாகப்சன் சொல்கிறார். இத்தன்மையை இலக்கியத் திறனாய்வு நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு பனுவலில் இருமை எதிர்வுகள் எப்படி அர்த்தத்தைக் கட்டமைக் கின்றன என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.

எனவே அமைப்பிய நோக்கின்படி, ஒரு குறித்த, நிலையான, புறவய மான, அர்த்தம் என்பது இருக்கிறது. அது உள்ளாழத்தில் மறைந்திருக்கிறது. அதனை வெளிப்படுத்தத் திறனாய்வினால் இயலும். எனவே தன்னை ஒரு புறவயமான அறிவியல் என்று நிலைநிறுதத அமைப்பியம் முனைகிறது. ஒரு குறித்த அமைப்பின் பல்வேறு கூறுகளுக்கிடையிலான தற்செயலான தொடர்பினால் விளைவது அர்த்தம் என்று நோக்கியதால், அமைப்புவாதிகள், அனுபவவாதம், மனிதமையவாதம் ஆகியவற்றிற்கு எதிரான கருத்துகளை வைத்தனர். அனுபவவாதம், தனித்தனிப் பதிவுகளாக விஷயங்களை ஆராய் கிறதே ஒழிய, ஒட்டுமொத்த அமைப்பினைக் கண்டறிய முற்படுவதில்லை. மனிதமையவாதம், அமைப்புறவுகளுக்கு மாறாக, மானிட சுயத்தினை மையப்படுத்துகிறது. எனவே நிகழ்வியல், இருத்தலியம் ஆகியவற்றிற்கு எதிரான கருத்துகளை அமைப்பியம் முன்வைத்தது. இவ்வகையில் அமைப் பியத்திற்கும் பின்அமைப்புவாதத்திற்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.

மானிடவியல் அறிஞரான கிளாட் லெவி ஸ்டிராஸ், மானிட சமூகத் திலும் கலாச்சாரத்திலும் செயல்படும் உலகப் பொதுவான அமைப்புகளை வெளிப்படுத்துவதற்கு அமைப்பியத்தைப் பயன்படுத்தினார். மார்க்சிய அமைப்பிய அறிஞரான அல்தூசர், மார்க்சியக் கொள்கைகளை அமைப்பிய அடிப்படையில்-குறிப்பாகக் கருத்தியல் அடிப்படையிலான நோக்கில் முன்வைத்தார்.

அமைப்புவாதத்தை ஆய்வில் பயன்படுத்தும் முறை
ஒவ்வோர் அறிஞரும் ஒவ்வொருவிதமான முறையில் அமைப்பியத்தை ஆய்வுக்குப் பயன்படுத்தியுள்ளனர். எனவே பொதுமைப்படுத்தி இதுதான் என்று காட்டுவது கடினம். வ்ளாதிமிர் ப்ராப் முதலாக ரோலான் பார்த், ஜெனட் வரை பலவேறு முறைகள் கையாளப்பட்டுள்ளன. பொதுவாக, மொழியியலின் மாதிரியை அமைப்பியம் பயன்படுத்துகிறது. மொழியின் அமைப்பில் தொடர்நிலை அமைப்பு, அடுக்குநிலை அல்லது வாய்பாட்டு அமைப்பு என்பவை முக்கியமானவை.

தொடர்நிலை நோக்கு அடிப்படையில் முதன்முதலில் நாட்டுப்புறக் கதைகளை வைத்து ஆராய்ந்தவர் விளாதிமிர் பிராப். பிறகு ஆலன் டண்டிஸ். இவர்களைத் தவிர லெவி ஸ்டிராஸ், ஜெரார்டு ஜெனட், தொட ரோவ் போன்றோரும் தொடர்நிலை அமைப்பினைப் பல ஆய்வுகளுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

அமைப்புவாதிகள் பிரதிகளைத் தொடர்நிலை அமைப்புகள் (சிண்டாக் மேடிக் ஸ்ட்ரக்சர்ஸ்) என்ற வகையில் ஆராய்கிறார்கள். தொடர்நிலை ஆய்வு என்பது ஒரு பிரதியின் அமைப்பினை அதன் பகுதிகளுக்குள் ஊடான தொடர்புகள் வாயிலாக ஆராய்வது. பிரதியில் காணப்படுகின்ற பகுதிக் கூறுகளான தொடர்க்கூறு (சிண்டாகம்)களை முதலில் கண்டறிய முற்படு கிறார்கள். இம்மாதிரித் தொடர்க்கூறுகளைக் கண்டுபிடித்தால், அவை எந்த உற்பத்தி விதிகளின்படிப் பிரதிகளில் இணைந்துள்ளன என்ற அமைப்பு கிடைக்கிறது. ஆனால் ஒரே ஒரு தொடர்நிலை அமைப்புவிதிமுறை என்பது கிடையாது. ஒரு அமைப்புவிதிமுறைக்கு பதிலாக இன்னொன்றினைப் பயன்படுத்தும்போது வேறுவிதமான அர்த்தங்கள் கிடைக் கின்றன.

கதைகளை ஆராய்வது பற்றி பார்த் கூறும்போது, அமைப்புரீதியாக ஆராய வேண்டுமானால், முதலில் கதைகளை மிகச் சிறிய கூறுகளாகப் பகுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். எந்த அடிப்படையில் அவற்றைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை வரையறுக்கவேண்டும். பலர் செயல் என்பதன் அடிப்படையில் அக்கூறுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ‘தி மார்ஃபாலஜி அவ் தி ஃபோக் டேல்ஸ்’ என்ற செல்வாக்குமிக்க நூலினை எழுதிய பிராப், நூறு நாட்டுப்புறக் கதைகளை ஆராய்ந்து முப்பது செயல்களைக் கண்டறிந்தார். செயல் என்பது, கதைப்போக்கில் ஒரு கதை மாந்தரின் முக்கியத்துவம் வாய்ந்த செயல் ஆகும். பிராப் ஆராய்ந்த கதைகள் அனைத்தும் ஒரே விதமான சூத்திரத்தின் அடிப்படையில் அமைந்தனவாக இருந்தன.

இவ்வகையான ஆய்வு, தனித்தனிப் பிரதிகளின் தனித்தன்மைகளைக் கருத்தில் கொள்வதில்லை. ஒரு குறித்த பிரதி என்ன அர்த்தம் தருகிறது என்பதற்கு பதிலாக, எப்படிப் பிரதிகள் ஒட்டுமொத்தமாக அர்த்தக் கட்டமைப்பைப் பெற்றுள்ளன என்பதை நிறுவுகிறது. உலகின் கதைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஒரே அமைப்பில் குறுக்குவதற்கான ஆய்வுகளே முதலில் செய்யப்பட்டன என்று பார்த்தும் குறிப்பிடுகிறார். ஒரு பிரதி தனது தனித் தன்மையை இறுதியாக இழந்துவிடுவதால், இந்த வகை ஆய்வு விரும்பக்கூடியதன்று என்ற நிலையும் ஏற்பட்டது. இருந்தாலும் இந்த ஆய்வுமுறையில் சில நன்மைகள் உள்ளன என்று ஃபிரடெரிக் ஜேம்சன் குறிப்பிடுகிறார். உதாரணமாகக் கதைப்பின்னல்களின் இத்தகைய அமைப்பு என்பது ஒரு தலைமுறை எப்படிப்பட்ட மாதிரியில் சிந்திக்கிறது என்பதை வெளிப்படுத்த உதவுகிறது என்கிறார்.

பிராப்பினைப் போல அல்லாமல், கதையமைப்புகளுக்கு உள் இருக்கும் எதிர்வுகளை வைத்து லெவி ஸ்டிராஸ், கிரீமோ இருவரும் நோக்கினர். ஒரு கலாச்சாரத்தின் தொன்மங்களை, இயற்கை ஜ் கலாச்சாரம் என்ற முரண்பாட்டின் அடிப்படையில் எழுந்த எதிர்வுகளின் அடிப்படையிலான வரையறுத்த கருப்பொருள்களைக் கொண்டு அமைந்தவை என்று லெவி ஸ்டிராஸ் நோக்கினார். மிக வேறுபட்ட கதாபாத்திரங்களிலிருந்து சில அடிப்படையான செயல்களை உருவமைத்தால், பல்லாயிரக்கணக்கான கதைகளையும் ஒருசில வகைகளுக்குள் அடக்கிவிடலாம் என்று அவர் கூறினார். நமது முன்னோர்கள் நமக்குத் தருகின்ற செய்திகள்தான் தொன்மங்கள். ஆனால் அவற்றைத் தனித்தனித் தொன்மத்தில் தேடாமல், தொன்மங்கள் ஓர் ஒழுங்கமைவின் பகுதிகள் என்ற முறையில் தேட வேண்டும். அவற்றிலிருந்து தொன்மக்கூறுகள் (மிதீம்ஸ்) என்பவற்றைப் பகுக்கவும் செய்தார். வார்த்தைகளுக்கு உருபன்கள் எப்படியோ, அப்படியே தொன்மங்களுக்குத் தொன்மக்கூறுகள். உதாரணமாக, சிறார்க்கதையான ரைடிங்ஹூட் என்பதை அவருடைய முறையில் லாருசியா என்பவர் விளக்குகிறார்: (ரைடிங்ஹூட் என்பவள் ஒரு சிறுமி).
1.பாட்டி நோய்வாய்ப்பட்டதால்
தாய் சமையல் செய்கிறாள்
2. தாயின்கட்டளைப்படி
காட்டுக்குச் செல்கிறாள் சிறுமி
3. நண்பன் உருவத்தில் இருக்கும்
ஓநாயைப் பார்க்கிறாள் சிறுமி
1.விறகுவெட்டி காரணமாக
ஓநாயிடம் பேசுகிறாள் பெண்
2. ஓநாயின் அறிவுரைப்படி வீட்டுக்கு
நீண்டபாதையில்செல்கிறாள்
3. சிறுமி என நினைத்துப் பாட்டி
ஓநாயை உள்அனுமதிக்கிறாள்
4. ஓநாய் பாட்டியைக்
கொன்றுதின்கிறது
3. பாட்டியின் உருவிலுள்ள ஓநாயைச்
சிறுமி பார்க்கிறாள்
2. பாட்டி சொல்லுக்கேற்பப்
படுக்கச்செல்லுகிறாள்
3. பாட்டி உருவிலுள்ள
ஓநாயை வினவுகிறாள்
4. ஓநாய் சிறுமியைக்
கொன்றுதின்கிறது
இது லெவிஸ்டிராஸின் தொடர்நிலை அணுகுமுறை.

கிரீமோ என்பவர் பிராப்பின் முறையை இன்னும் குறுக்கினார். செயல் களும் போராட்டங்களும், ஒப்பந்தங்களை அமைத்தலும் உடைத்தலும், புறப்பாடுகளும் வருகைகளும் என மூன்றே வகையான தொடர்க் கூறுகளைக் கட்டமைத்தார். தன்னிலை/பொருள், அனுப்புவோன்/பெறு வோன், உதவியாள்/எதிரி என்னும் மூன்றே மூன்று ஆக்டண்டுகள்தான் எல்லாக் கதைகளிலும் இருப்பவர்கள் என்றும் சுருக்கினார்.

இதேபோல டெக்காமரான் கதைகளுக்கு தொடரோவ் ஓர் அமைப்பை உருவாக்கிக் காட்டினார். குறியியலாளரான அம்பர்ட்டோ ஈக்கோவும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படக்கதைகளுக்கென ஒரு தொடரியல் அமைப் பினை உருவாக்கிக்காட்டினார்.

எம் என்பவன், பாண்டுக்கு ஒரு பணியை அளிக்கிறான்
வில்லன் பாண்டுக்குக் காட்சியளிக்கிறான்
பாண்ட் வில்லனுக்கோ, வில்லன் பாண்டுக்கோ முதல் தடையை உருவாக் குகின்றனர்
ஒரு பெண் பாண்ட் முன்னால் தோன்றுகிறாள்
பாண்ட் பெண்ணை அனுபவிக்கிறான் அல்லது ஈர்க்கிறான்
வில்லன் பாண்டைச் சிறைப்பிடிக்கிறான்
வில்லன் பாண்டைச் சித்திரவதை செய்கிறான்
பாண்ட் வில்லனை வெற்றி கொள்கிறான்
ஓய்வெடுக்கும் பாண்ட் பெண்ணை அனுபவிக்கிறான், இழக்கிறான்.

அடுக்குநிலை நோக்கு அல்லது வாய்பாட்டுநிலை நோக்கு
எந்த ஒரு அமைப்பினையும் புறநிலை, ஆழ்நிலை என இருவகைகளாகப் பார்க்க இயலும். தொடர்நிலை நோக்கு, புறநிலை அமைப்பினை (சர்ஃபேஸ் ஸ்டிரக்சர்) மட்டுமே ஆராய்கிறது. அடுக்குநிலை ஆய்வு, ஆழ்நிலை அமைப் பினை ஆராய உதவுகிறது. ஏற்கெனவே அமைந்துள்ள குறிப்பான்களின் அடுக்குகளின் பல்வேறு அமைப்புகளை ஆராய்வதுதான் அடுக்குநிலை ஆய்வு. ஒவ்வொரு குறிப்பானும் எந்தவிதமான நேர்முக அல்லது எதிர்மறை உள்ளர்த்தங்களைக் கொண்டிருக்கிறது என்பதை இது கணக்கில் கொள்கிறது. பிறகு எவ்வித இருமை எதிர்வுகளால் ஆன கருப் பொருள் சார்ந்த அடுக்குகள் அந்த அமைப்பில் காணப்படுகின்றன என்பதை ஆராய்கிறது. ஒரே கணத்தைச் சேர்ந்த குறிப்பான்களுக் கிடையிலான எதிர்வுகள், முரண்பாடுகளைத்தான் நாம் அடுக்கியல் உறவுகள் என்கிறோம்.

ஒரு குறித்த சூழலில் இந்தக் குறிப்பானுக்குப் பதிலாக இன்னொரு குறிப்பானை ஏன் பயன்படுத்தியிருக்கக்கூடாது என்று ஆராய்வது ஓர் அணுகுமுறை. இப்போது நாம் அடுக்கியல் உறவுகள் என்று குறிப்பன வற்றை சசூர் தொடர்பு உறவுகள் என்று குறிப்பிடுகிறார். ஒரு குறித்த அடுக்கிற்கு மாற்று அடுக்கு இல்லாமற் போனால், அப்போது ஓர் இன்மை உருவாகிறது. இன்மைகள் தொடர்நிலை ஆய்வுக்கு மிகவும் உதவுகின்றன. குறிகள், தாங்கள் என்னவாக இல்லை என்பதிலிருந்தே தங்கள் அர்த்தங்க ளைப் பெறுகின்றன.

ஒரு பிரதியில் காணப்படுகின்ற குறிப்பான்களை, அந்தச் சமயத்தில் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய வேறு குறிப்பான்களுடன் ஒத்தும் உறழ்ந்தும் பார்க்கும் முறையில் அடுக்கியல் ஆய்வு அமைகிறது. இவ்வாறு நோக்கும் போது இருமை எதிர்வுகளை முதன்மையாக ஆராய்கிறார்கள் அமைப்பு வாதிகள். நான் – மற்ற(து)வர், நாம் – அவர்கள் என்பவை மிக அடிப்படையான இருமை எதிர்வுகள். இயற்கைசார்ந்த – இயற்கை இறந்த என்பது பொதுவாக நம் கதைகளில் காணப்படும் சிறப்பான இருமை எதிர்வு. எல்லாக் கதைகளிலுமே நன்மை – தீமை என்ற இருமை எதிர்வும் முன்வைக்கப்படுகிறது.

முரண்களைப் பொதுவாக எதிர்நிலைகள், முரண்நிலைகள் என இரண் டாகப் பார்க்க இயலும். எதிர்நிலை என்பது முன்னது இல்லாதது. உதாரண மாக, உயிரோடிருத்தல் – இறத்தல் என்பது எதிர்நிலை. இறப்பது என்றாலே உயிரோடு இல்லாதது என்றுதான் பொருள். உயிரோடு இருப்பது என்றாலே இறப்பு நேராதது என்றுதான் பொருள். முரண்நிலை என்பதில் சாயை வேறுபாடுகள் இருக்கும். உதாரணமாக நன்மை – தீமை. நன்மையற்றது என்றால் தீமையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. தீமையற்றது என்றால் நன்மைதான் என்று கருத வேண்டியதில்லை.

ஒரு கலாச்சாரத்தின் உறுப்பினர்களுக்கு அதன் இருமை எதிர்வுகள் இயல்பாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிடுகின்றன. உதாரணத்திற்கு ஆண் – பெண், மனம் – உடல் இவை போன்று. விமரிசனபூர்வமாக நோக்கும்போது பல இருமைகள் போலி எதிர்வுகள் போலத் தோன்றினாலும் அன்றாடத் தொடர்பியல் பொதுப்புத்தி நோக்கில் இயல்பாகவே இருக்கின் றன. எல்லா எதிர்வுகளிலும் சுயம் – மற்றது என்ற எதிர்வுதான் மிக அடிப்படையானது.

ரொமாண்டிய இயக்கத்தில், எல்லா எதிர்வுகளும் செவ்வியல் இயக்கத் தின் கூறுகளுக்கு மாற்றாக அமைக்கப்பட்டன. உணர்ச்சி – சிந்தனை, தன்னிச்சையான வெளிப்பாடு – தேர்ந்தெடுத்து அமைப்பது, அகத்தெழுச்சி – முயற்சி, மேதைமை – முறைமை, படைப்பாற்றல் – கட்டமைப்பு, சுயத்தன்மை – மரபுத்தன்மை இப்படியாக. சர்ரியலிசத்தில், எல்லா எதிர்வுகளும் இறுதியில் தோற்ற அளவிலான எதிர்வுகளே என்பது அடிப்படை. எதிராகக் காட்சியளிக்கும் இருமைகள் எல்லாம் கடைசியாக ஆழமான ஓர் ஒருமையின் தோற்ற எதிர்வுகள். எனவே இந்த அடிப்படை ஒருமையை வெளிக்காட்டுவதை சர்ரியலிசவாதிகள் தங்கள் கடமையாகக் கருதினார்கள். தொடர்க்கூறுகள் நோக்கில் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை ஆராய்ந்த ஈக்கோ, அடுக்குக்கூறுகள் அடிப்படையிலும் ஆராய்ந்தார்.

பாண்ட் – வில்லன்,
அமெரிக்கா – சோவியத் நாடு,
மேற்கத்திய இனம் – பிற இனம்,
கடமை – காதல்,
தற்செயல் தன்மை – திட்டமிடுதல்,
மிகைத்தன்மைகள் – கட்டுப்பட்டு நடத்தல்கள்,
இயல்புக்கு மாறான தன்மை – கள்ளமற்ற தன்மை,
விசுவாசம் – விசுவாசமின்மை
போன்ற இருமை எதிர்வுகளால் அந்தக் கதைகளை விளக்கினார்.

எனவே மொழியியல், சமூக உறவுகள் யாவற்றையும் உருவாக்குகின்ற, ஆழ்நிலையில் காணப்படுகின்ற புறவயமான அமைப்புகளை வெளிப் படுத்தும் ஒரு முயற்சியாகவே அமைப்பியம் உள்ளது.

அமைப்பியம் தோன்றியவுடனே அதற்கெதிரான கருத்துகள் டெரிடா, ரோலான் பார்த் போன்ற பலரால் முன்வைக்கப்பட்டன. சான்றாக, டெரிடாவின் “ரைட்டிங் அண் டிஃபரன்ஸ்” (1967) என்பதிலுள்ள ‘ஆற்றலும் குறித்தலும்’ (ஃபோர்ஸ் அண் சிக்னிஃபிகேஷன்) என்ற கட்டுரையைக் காட்டலாம். மொழியிலோ சமூகத்திலோ குறித்த, நிலையான, உலகப் பொதுவான அமைப்புகள் உள்ளன என்பதை விவாதத்திற்கு உள்ளாக்கியதன் காரணமாகவே பின்அமைப்பு வாதம் பிறந்தது.

அமைப்பியத்தின்மீது வேறுவித குறைகளும் சொல்லப்படுகின்றன. உதாரணமாக, தன்னிலை அல்லது கர்த்தாத்தன்மை அல்லது சுயம் (சப்ஜெக்டிவிடி) எவ்விதம் கட்டமைக்கப்படுகிறது என்பதை (அதாவது, அமைப்புக்கும் கர்த்தாவாக இயங்குவதற்கும் உள்ள உறவை) அமைப்பிய ஆய்வில் காணும் விதம் ஒரு குறுகிய அணுகுமுறையாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேபோல (சமூக/வரலாற்று) மாற்றம் பற்றிய விஷயத்திலும் அமைப் பியம் சரிவரக் கருத்துக் கூறவில்லை. இறுக்கமான கட்டமைப்புகளால் அர்த்தம் உருவாகும் என்றால், வரலாற்று மாற்றம் எவ்விதம் சாத்திய மாகிறது என்பது தெளிவாகவில்லை. அமைப்புகளே மாற்றக் கூறுகளை உட்கொண்டுள்ளன என்றால், அமைப்பு என்ற கருத்தாக்கமே சிதைகிறது. அல்லது மாற்றம் என்பது அமைப்புக்கு வெளியிலிருந்து வருகிறது என்றால், அப்போது அது சமூக அல்லது மொழியின் அமைப்புகளைச் சார்ந்திருக்கவில்லை, வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது என்று ஆகிறது. அவ்வாறாயின் அமைப்பியம் முழுமையாகத் தனது பொருளை விளக்க முடியாது. மேலும் விட்ஜென்ஸ்டீன் கூறியதுபோல, அர்த்தம் என்பது பயன்பாடு (Meaning is Use) என்றால், அர்த்தம் என்பதை அமைப்பின் வாயிலாக வெளிப்படுத்த இயலாது. இதேபோல இருமை எதிர்வு பற்றிய கருத்தாக்கமும் பிரச்சினைக்குள்ளான ஒன்றே.

பின்அமைப்புவாதம், பின்நவீனத்துவம், பிற்காலனியம் என்பவற்றிலுள்ள பின்- (போஸ்ட்-) என்ற முன்னொட்டின் பொருள் பிரச்சினைப்பாடு உடையது. வெறும் காலப் “பின்மை”யைக் குறிக்கும் ஒட்டாக அது இல்லை. அமைப்பியம், நவீனத்துவம், காலனியம் போன்றவற்றின் விளைவான, அவ்ற்றை இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய எதிர்க் கருத்துகளையும் கொண்ட ஒட்டா என்பது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

பின்அமைப்பியமும் பலதுறை சார்ந்ததோர் இயக்கம்தான். இலக்கியத் திறனாய்வு, கலாச்சார ஆய்வுகள், அரசியல் கொள்கை, சமூகவியல், இனவரைவியல், வரலாற்று வரைவியல், கலாச்சாரச் சங்கேதங்கள், உளப்பகுப்பாய்வு போன்ற பல்வேறு துறைகளின் சிந்தனைகள் இதில் அடங்கியுள்ளன. 1950-60களில் அமைப்பு வாதிகளாயிருந்த அறிஞர்கள் பலர் பின்அமைப்புவாதிகளாக மாறினர்.

பின்அமைப்புவாதமும் சசூரின் மொழியியல், குறியியல் கருத்துகளை ஏற்கிறது. ஆனால் பனுவல்கள், குறியமைவுகள், கலாச்சாரச் சங்கேதங்கள், கருத்தியல் அமைப்புகள், சமூகச் செயல்முறைகள் ஆகியவற்றின் ஆய்வில் எவ்வித அறிவியல் அடிப்படையையும் கையாளுவதாக அது கொள்வ தில்லை. அவ்விதம் சொல்வதையும் எதிர்க்கிறது. காரணம், எந்த ஒரு துறையும் தான் ஆய்வதற்கு எடுத்துக்கொள்ளும் ஆய்வுப்பொருளுக்கு வெளியே/புறநிலையில் நின்று கருத்துகளைக் கூறமுடியும் என்று கருத இயலாது. ஆய்வுப்பொருளுக்குள்ளாகவே ஆய்வுமுறையும் இயங்கவேண்டி யிருக்கிறது. ஆராயும்போதே ஆய்வுப் பொருளின் தன்மையும் மாறுகிறது. எனவே “இதுதான் அறுதியானது” என எதையும் நிர்ணயம் செய்ய முடிவ தில்லை. மேலும் பிரதியையும் – உரையையும், மொழியையும் – இலக்கண (அல்லது மேல்-) மொழியையும் (மெடாலாங்வேஜ்), கருத்தியல் சார்ந்த நம்பிக்கை அமைவுகளையும் – அறிவியல் கொள்கைசார் நிலைப்பாடுகளை யும் எங்கு வேறுபடுத்துவது என்பதை அவ்வளவு எளிதில் தெளிவு படுத்தி விடமுடியாது. கருத்தியலைத் தவறான பிரக்ஞை என்றோ, அல்தூசர் கூறியது போல கற்பனையான புரிந்துகொள்ளல்/தவற்றின் ஒரு வடிவம் என்றோ எளிதில் கூறி விடமுடியாது. அறிவியலிலும் கருத்தியலும் கற்பனையும் செயல்படவே செய்கிறது.

சமூகத்தில் இயல்பானவை என்று கருதப்படுகின்ற, அல்லது இயல்பாக வே சரியானவை, உண்மையானவை என்று தோன்றுகின்ற பொதுப்புத்திக் கருத்துகள் ஏராளமாக உள்ளன. இவற்றிற்கு நாம் நிரூபணம் தேடுவதில்லை. ஆனால் இவைகளும் அந்தந்த சமூகத்தின், அரசியல் ஒழுங்கமைவின் கலாச்சார மதிப்புகளை உள்ளடக்கித்தான் இருக்கின்றன. அவற்றை அறியாமலே, அவை நடுநிலையானவை, உலகப் பொதுவானவை என்று நாம் கருதுகிறோம். பின்அமைப்புவாதிகளின் கருத்து கள் இவற்றிலிருந்து ஓர் அறிவாராய்ச்சி இடைவெளியை (எபிஸ்டமாலஜிகல் பிரேக்) உருவாக்குகின்றன. ஆனால் எல்லாத் தன்னிலைமைகளும் (சப்ஜெக்ட் பொசிஷன்ஸ்), பகுப்பாய்பவரின் கருத்துகள் உட்பட, இடப் பெயர்ச்சிச் செயல்முறையின் எல்லையற்ற தொடர்ச்சங்கிலியில் சிக்கியுள்ளன என்று அறியவரும்போது மேற்கண்ட நம்பிக்கைகள் பொய் என்பது புரிகிறது. இந்த நிச்சயமின்மை மொழியின் நிலையற்ற தன்மை, குறிப்பான்-குறிப்பீடு இவற்றிற்கிடையிலுள்ள தன்னிச்சையான உறவு, சொல்பவனின் உள்நோக்கத்தில் சிறைப்படுத்த முடியாத அர்த்த இயலாமை ஆகியவற்றினால் ஏற்படுகிறது.

பின்அமைப்புவாதம் தனக்கென ஒரு தீவிர அரசியல் கொள்கையைக் கொண்டிருக்கிறது. செயல்முறையில் உருவாகிக்கொண்டிருக்கும் தன்னிலை என்பது இதன் அடிப்படை. மொழியிலோ சொல்லாடலிலோ அதன் மாறும் வடிவங்கள் அறிவொளிக்கால அடிப்படையில் தோன்றிய கொள்கைகளால் கைப்பற்ற இயலாதவை. (அறிவொளிக்கால அடிப்படையில் தோன்றிய கொள்கைகள் என்பவை, அறிவு, உண்மை போன்ற கருத்துகளின்மீது நிலைத்திருக்கும் கொள்கைகள். மார்க்சியம், பெண்ணியம், அமைப்பியம் யாவும் இதன்பாற்படும்.)

இங்கு ரோலான் பார்த் தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே வந்த எழுத்து முறையை விமரிசகர்கள் நோக்குகிறார்கள். அவரது எழுத்துமுறையின் அமைப்பியக் காலம் என்பது ‘மிதாலஜீஸ்’, ‘எடுத்துரைப்புகளின் அமைப் பியப் பகுப்பாய்வு’ போன்றவற்றை எழுதிய காலம். பின்னமைப்பியக் காலம் என்பது, ‘எஸ்/இஜட்’, ‘பிரதியின் பேரின்பம்’ போன்றவை எழுதப்பட்ட காலம். காலம் செல்லச் செல்ல அவர் அறிவியல்சார் கட்டுத்திட்டமான முறையிலிருந்து மாறி, மனத்திற்குத் தோன்றிய எத்துறையையும் குறித்த முறையியல்-கட்டுறுதி என்பதின்றி எளிதாகக் கையாளுகின்ற நிலைக்கு மாறுகிறார்.

தொன்மங்கள் (மிதாலஜீஸ்) எழுதும்போது விளம்பரங்களிலிருந்து ஃபிரெஞ்சு உணவுமுறை வரை, ஐன்ஸ்டீனின் மூளை என்பதிலிருந்து நவீன குத்துச்சண்டை வரை நவீன தொன்மங்களை விளக்குவதில் திட்டவட்ட மான முறையியலைக் கையாண்டவர் அவர். ஆனால் பத்தாண்டுகளில், மேல்நிலைமொழி ஆய்வினை மறுத்து, தமது ஆய்வுப் பொருளை மாற்றிக்கொண்டே செல்கின்ற வாசிப்புகளை உருவாக்கினார். குறிப்பாக நவீன தொன்மங்களைப் படைப்புரீதியான பிரதியாக்க (நூலாக்க) எழுத்து மூலமாக மீள்-எழுத்து முறை வாயிலாகப் புத்தாக்கம் செய்வதன் மூலம் அவற்றை விமரிசனத்துக்கு உட்படுத்தினார். இல்லாவிட்டால் தீவிர சிந்தனைகளும் குறிப்பிட்ட வடிவத்திற்குள் கட்டுப்பட்டுப் புதுமை இழக்க நேரிடும்.

நனவிலிமனம் (அன்கான்ஷியஸ்) என்பது மொழியின் அமைப்பைக் கொண்டுள்ளது என்பது லக்கானின் கூற்று. இதுவே பின்அமைப்பியத்தின் அடிப்படை ஆயிற்று. நனவிலியின் வேலைகள் அன்றாட மொழியினால் அறியப்பட இயலாதவை. மனிதத் தன்னிலை, கற்பனை நிலைக்கும் குறியீட்டு நிலைக்கும் இடையில் பிளவுபட்டு நிற்பதான நிலைமைக்கு நிரந்தரமாக ஆளாகிவிட்டது. (லக்கான் கூறும் கற்பனை நிலை என்பது, தன்னிலை ஈகோவுடன் ஒன்றுபடும் நிலை. குறியீட்டு நிலை என்பது சொல்லாடலின் மாறும் வடிவங்களால் தன்னிலையின் அடையாளம் அமையும் நிலை.)

ஃபூக்கோவின் வம்சாவளி ஆய்வுகளும் பின்அமைப்பியத்தில் முக்கியத்து வம் பெறுகின்றன. எங்கும் எப்போதும் உண்மை என்பது ஆதிக்க சக்திகளின் கடடுப்பாட்டிற்குள்தான் இருக்கிறது என்றார் ஃபூக்கோ. தானாகவே மனிதர் கள் உள்வாங்கிக்கொள்ளும் கண்காணிப்பையும், கட்டுப்பாடுகளையும் பற்றி அவர் பேசினார். தன்னிச்சையான சுதந்திரமும் தேர்வும் மனிதர்களுக்கு இருப்பதுபோலத் தோன்ற வைக்கின்ற மனிதமையவாதச் சொல்லாடலுக்கும் அதன் மதிப்புகளுக்கும் அப்பாற்பட்ட உலகம் ஒன்றினைப் பின்அமைப்பு வாதக் கருத்துகள் உருவாக்கிவிட்டன.

எனவே விடுதலையைக் கொடுக்கக்கூடிய, பன்மைத் தன்மை வாய்ந்த, மையமற்ற அல்லது மையமழிந்த, என்றைக்கும் தன்னிலைகள் மாறிக் கொண்டே இருக்கக்கூடிய ஓரிடத்திற்கு வழிகாட்டவல்லது பின்அமைப்பியம் என்ற கருத்து நிலவுகிறது. பாலியலோ, வர்க்கச் சார்போ-எந்த ஒரு சார்பும் கொண்ட நிலையான தன்னிலைகளுக்கு இங்கு இடமில்லை. எர்னஸ்டோ லாக்லா போன்றோர் இதுதான் உண்மையான பிற்கால மார்க்சியம் என்கின்றனர். ஒரு குறிப்பிட்ட கொள்கையைச் சார்ந்திருப்பது என்பது ஒரு பெருங்கதையாடலைச் சார்ந்திருப்பதாகும்.

பல இருப்புகள், சொல்லாடல்கள், போராட்டக் களங்கள் ஆகியவற்றில் தன்னிலைகள் கலைத்து வீசி எறியப்படுகின்றன. இந்தக் குழுவுக்கெனவோ அந்தக் குழுவுக்கெனவோ சார்பாக நின்று பேசக்கூடிய பெருங்கொள்கைகள் எதுவும் இன்று இல்லை என்கிறது பின்அமைப்பியம். எப்போதுமே-ஏற்கெனவே இருக்கக்கூடிய சொல்லாடல்களுக்குள் தன்னிலை பொருத்தப் படுவதால், தேர்வுகள் இயலுகின்றன என்றால், எவருமே ஒரு சரியான திட்டமிட்ட தேர்வினைத் தன் வாழ்க்கையில் செய்வது என்பது இயலாது. இவ்வகையில் பின்அமைப்பியம் ஒரு புதிய அவநம்பிக்கை வாதமாகக் காட்சியளிக்கிறது.

போத்ரியா போன்றோர் இன்றுள்ள வெகுஜன ஊடகங்களால் கட்டமைக் கப்பட்ட உலகில் யதார்த்தம் (உண்மை, விமரிசனம், கருத்தியல் போன்றன வும்) என்பதே இல்லை என்கின்றனர். எல்லாமே கற்பனாநிஜமாக, தோற்றமெய்ம்மைகளாக மாறிவிட்டன. வளைகுடாப்போர் என ஒன்று நிகழவேயில்லை, அது ஊடகங்கள் உருவாக்கிய தோற்ற மெய்ம்மை என்ற போத்ரியாரின் கருத்து பிரபலமானது.

பழங்கருத்துகளைத் தகர்ப்பது மூலமாக, அல்லது தகர்க்கவேண்டும் என்று கூறுதல் மூலமாக, இறுகிய மூடத்தனங்களிலிருந்து பின்அமைப் பியம் விடுதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்ணியம், தலித்தியம், கருப்பினக் கொள்கை, பிற்காலனியம் போன்ற பலவிதக் கருத்துகளை முன்வைத்து ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடுகின்ற உறுதுணையாக டெரிடா கூறிய தகர்ப்பமைப்பு (டிகன்ஸ்ட்ரக்ஷன்) இருக்கும் என்று ஒருபுறம் நோக்கப்பட்டாலும், உண்மை என்று எதுவுமே இல்லை, எல்லாம் தோற்றமெய்ம்மைகளே என்று கூறும் ஐயுறவுவாதமாகப் பின்னமைப்பியக் கருத்துகள் அமையும்நிலை, விடுதலைக்கான அதன் பயன்பாட்டுச் சாத்தியங்களை இல்லாமல் ஆக்கிவிடுகின்றன.

அமைப்பியம், பின்னமைப்பியம் சார்ந்த நோக்கிலிருந்து தமிழ் இலக்கி யத்தையும் ஊடகங்களையும் விமரிசனப்படுத்துவது ஏறத்தாழ 1990களி லிருந்து தொடங்கிவிட்டது. சாதியம் பற்றிய சொல்லாடல்களைத் தகர்க்கும் விதமாக ராஜ்கவுதமன், மார்க்ஸ் போன்றோர் செயல்பட்டுள்ளனர். ‘மேலும்’ இதழில் தமிழவன் நாகார்ஜுனன் போன்றோர் எழுதிய அமைப்பியம் சார்ந்த விமரிசனங்கள் மிகத் தொடக்கநிலையிலேயே இருந்தன. தமிழவன் திருப் பாவை நூலின் அமைப்பை உடல் x பாடல் என்ற எதிர்மையை அடிப்படையாக வைத்து விளக்கியதை நினைவுகூரலாம். நாகார்ஜுனனோ கட்டுடைப்பு அல்லது அமைப்பிய விமரிசனம் என்பது எழுத்துகளையும் சொற்களையும் சிதைத்து அன்வயப்படுத்துவது போன்ற நோக்கினைக் கொண்டிருந்தார் எனத் தோன்றுகிறது. எம்.டி. முத்துக்குமாரசாமி, நோயல் இருதயராஜ் போன்றோர் சில சரியான நோக்குகளை அச்சமயத்தில் முன் வைத்தனர். சண்முகம், ஜமாலன் போன்றோர் வாயிலாகச் சில இலக்கிய ஆய்வுகள் வெளிவந்தன. பின்னர் அ. ராமசாமி ஊடகங்களை ஆய்வு செய்ய அமைப்பியத்தைப் பயன்படுத்தினார். இந்த நூலின் ஆசிரியரும், தமிழ் இலக்கியங்களை-குறிப்பாகச் சங்கக் கவிதைகளை அமைப்பிய, குறியியல், தகர்ப்பமைப்பு ஆய்வுகளுக்கு உட்படுத்தியிருக்கிறார். சங்ககாலத்தின் வரலாற்று நிலைகளை ஆராய்வதில் ராஜ்கவுதமன் போன்றோர் இவ்வித வாசிப்பு முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஏறத்தாழப் பதினைந்து இருபதாண்டுகளுக்கு முன்பு இவற்றின்மீதிருந்த கவர்ச்சி இன்று இல்லை. ஒருவகையில் பிற ஆய்வுமுறைகளுடன் இவை இணைந்துவிட்டன என்று தோன்றுகிறது. இவ்வித நோக்குகளிலான ஆய்வுகள் ஓரளவு பயனுடையவையாகத் தோற்றமளிப்பினும், அவற்றின் அடிப் படைகளை நன்கறிந்து பயன்படுத்துவோர் மிகக்குறைவாகவே உள்ளனர்.


8. நவீனத்துவம்

8. நவீனத்துவம்

காலத்தைப் பற்றிய பிரக்ஞை காலத்திற்குக் காலம் வேறுபடுகிறது. இருபதாம் நூற்றாண்டில் காலம் மிக விரைந்து மாறியிருப்பதுபோல் தோன்றுகிறது. இவ்வளவு விரைவாகக் காலம் மாறியதான தோற்றம் கொண்டதற்கு எத்தனையோ புறச்சூழல்கள் காரணமாக உள்ளன. இந்தப் புறச்சூழல்களை எல்லாம் இலக்கியம் பிரதிபலித்துக் காட்டவேண்டும் என்று எப்போதுமே மானிட இயக்கம் இடைவிடாமல் முயன்றுகொண்டிருக்கிறது.

இன்னொருபுறம், இந்தப் புறச்சூழல்கள் மனிதனுக்குள் உருவாக்கிய அக உலகங்கள், அவை உருவாக்கிய மனச்சிதைவுகள், உளைச்சல்கள் இவற் றைப் பற்றிய அகயதார்த்தத்தை வெளிப்படுத்தவேண்டியதே இலக்கியத்தின் பணி என்று நினைக்கும் எழுத்தாளர்கள். வெளிப்படுத்தவேண்டும் என்றால் மொழியைப் பயன்படுத்தியாகவேண்டும். ஆனால் பேசும் வலுவழந்து குன்றிப் போய்விட்டது மொழி. இத்தனை வேகமான மாறுதல்களால் உண்டான அக உளைச்சல்களைக் காலங்காலமாக இறுகிப்போன மொழிக் குள் பதிவுசெய்ய முடியாமல் கையற்று நிற்கும் நிலை. இந்த உணர்வு என்றைக்கு எழுதுபவனுக்குள்ளே தோன்றுகிறதோ அன்றைக்கு நவீனத்துவம் என்னும் இயக்கம் தோன்றுகிறது.

நவீனத்தன்மை (மாடர்னிட்டி) வேறு, நவீனத்துவம் (மாடர்னிசம்) வேறு. மேற்கத்திய உலகில் முதல் உலகப் போருக்கு முன் தொடங்கி வளர்ச்சி பெற்ற வணிகப்போட்டிகள், அவை நாடுகளுக்கிடையில் உருவாக்கிய முரண்பாடுகள், பொருள்மயமாக்கப்பட்ட வாழ்நிலை போன்றவை நவீனத் தன்மை என்று வரையறுக்கப்படுகின்றன. இந்தியாவில், அச்சுச் சாதனத்தின் வருகை, அதனால் ஏற்பட்ட பத்திரிகைகளின் எழுச்சி, ஆங்கில ஆட்சி உண்டாக்கிய தன்னுணர்வும் வரலாற்று போதமும், தாழ்ந்து போயிருந்த நம் சமூகத்தின் நிலை, அதில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தியாக வேண்டும் என்ற முனைப்பு, இம்மாதிரிப் புறக்காரணிகள் உண்டாக்கிய மனப்பான்மை, நவீனத்தன்மை என்று வரையறுக்கப் படுகிறது. நவீனத்தன்மையை வெளிப் படுத்தக் கலைகள் உருவாக்கிக் கொண்ட ரீதிதான் நவீனத்துவம்.

தமிழ் போன்ற இந்திய மொழிகளில் செய்யுளில் ஏதோ சில விஷயங்க ளை மட்டும் சொல்லிக் கொண்டிருந்த தன்மையை மாற்றி, உரைநடையின் வாயிலாக இன்னும் எத்தனை எத்தனையோ உலகளாவிய உணர்வு நிலைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற சாத்தியப்பாட்டினை உருவாக் கியது நவீனத்துவம். ஆனால் ஒரு கருவியைப் பயன்படுத்தும் சாத்தியக் கூறுகளை மனித மனம் உணரும்போதே இன்னொருபுறம் அதன் போதா மைகளையும் உணர்ந்துகொள்கிறது. இந்தப் போதாமையுணர்வு புதியபுதிய கருவிகளைக் கண்டுபிடிக்கச் சொல்லி மனிதனைத் தூண்டுகிறது. புத்தம் புதிதாகக் கருவியை மாற்றியமைக்கச் சந்தர்ப்பம் இல்லாவிட்டால் புதிய பயன்பாடுகளுக்கெனப் பழைய கருவியை வடிவமைக்க முயலுகிறது. இது போல மொழியைப் புதிய பரிமாணங்களுக்கு விஸ்தரிக்க முயலுகின்றபோது மொழி உடன்பட மறுக்கிறது. மொழி இன்று நேற்று உருவான கருவி யல்லவே? பல சமயங்களில் கருத்தை உணர்த்துவதற்குச் சக்தியற்றுச் சொல்லவந்ததைத் திணறிச் செயலற்று வேறொன்றைச் சொல்லித் திண்டாடுகிறது. கடைசியில் மொழியைப் பகிர்ந்துகொள்வதே பெரிய பிரச் சினை ஆகிவிடுகிறது. இப்படிப்பட்ட மொழிச்சூழல்தான் நவீனத்துவத்தைக் கட்டமைக்கிறது.

இந்த மனப்பான்மை, ஐரோப்பிய மொழிகளில், குறிப்பாக நமக்கு ஆதரிசனமான ஆங்கிலமொழியில் ஏறத்தாழ 1890களில் தோன்றி, 1910-30 காலப்பகுதியில் உச்ச கட்டத்தினை அடைந்து, அதற்கப்பால் மெல்ல மெல்ல மாற்றம் பெறத் தொடங்கியது. ஏனெனில் இலக்கியத்தில் எந்த இயக்கமும் நிரந்தரம் இல்லை. சாசுவதமாக நிலைத்துவிட்டால் இயக்கமும் இல்லை.

தமிழில் மணிக்கொடி இதழ்க் காலம் வரை மொழி ஒரு பெரிய பிரச்சி னையாக உணரப்பட்டதில்லை. ‘உள்ளத்திலுள்ளது கவிதை’ என்றும் அத னைத் ‘தெளிவுறவே மொழிந்திடுவதில்’ எந்த்த் தடையுமில்லை என்றும் ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்’ என்றும் படைப்பாளிகள் நம்பிவந்தனர். இதற்கு மாறாகச் சொல்லவந்ததைச் சொல்லுவதற்குப் பழைய வழிமுறைகளின் போதாமையை உணர்ந்து வேறுவித வெளிப்பாட்டு முறைகளைத் தேடிப் புதிய பாதைகளைப் போட்ட புதுமைப்பித்தனிலிருந்துதான் நவீனத்துவம் தமிழில் கால் கொள்கிறது. கவிதையிலும் புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி முதல்தான் நவீனத்துவம் மலர்ந்தது.

ஆங்கில இலக்கியத்தில் 1910-30கள் நவீனத்துவ காலம் என்று வரை யறுத்துச் சொன்னமாதிரி, தமிழில் அவ்வளவு எளிதாக வரையறுத்துவிட முடியாது. அதாவது டி. எஸ். எலியட், வர்ஜீனியா வுல்ஃப், எஸ்ரா பவுண்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், டி. எச். லாரன்ஸ் ஆகிய மிகப் பெரும் எழுத்தாளர்கள் சாதனை புரிந்த காலம் நவீனத்துவ காலம் என்று ஆங்கில இலக்கியத்தில் வரையறுக்க முடியும். தமிழில் அவ்வாறு முடியாது.

ஐரோப்பாவில் முதல் உலகப்போரும் அது உண்டாக்கிய பேரழிவுகளும் பலத்த அதிர்ச்சிகளைத் தந்தன. இவை இலக்கியத்திலும் கலையிலும் யதார்த்தவாதத்திற்குப் பெரும் நெருக்கடியைத் தந்தன. இதன் விளைவாக யதார்த்தவாதத்தை மறுக்கும் கலை, இலக்கிய இயக்கங்கள் பல உரு வாயின. யதர்த்தவாதத்தை எதிர்த்து எழுந்த இயக்கம்தான் நவீனத்துவம் என்ற கருத்து உண்டு. பதிவு நவிற்சிக் கலை, கியூபிசம், வார்ட்டிசிசம், ஃப்யூச்சரிசம், வெளிப்பாட்டியம், டாடாயிசம், சர்ரியலிசம் போன்ற கலை இயக்கங்கள் யாவுமே யதார்த்தவாதத்தை எதிர்த்து எழுந்தவைதான். இவற்றின் தொகுப்பாக நவீனத்துவத்தைக் காணஇயலும். மார்க்சியமும் யதார்த்தவாதமும் கேள்விக்குறியாகின்ற நிலையில்தான் நவீனத்துவம் தோன்றுகிறது என்பது விமரிசகர்கள் பலரின் கருத்து. ஆனால் (தமிழ்ச் சூழலில்) “நவீனத்துவம் யதார்த்தவாதத்தை மறுக்கவில்லை” என்கிறார் ஞானி.

உலகப்போர்களின் நடுக்கங்கள் உலகமுழுவதும் உணரப்பட்டாலும் ஐரோப்பா காயம் பட்டமாதிரியாக இந்தியா காயம்படவில்லை. இந்தப் போர்க் காயங்களாலும் இதற்குக் காரணமாக இருந்த பெருவணிகப் போட்டிகளாலும் இதற்கு முன்னால் மனிதன் என்ற பிராணியைப் பற்றி மனிதனுக்கிருந்த பல பிம்பங்கள் உடைநது நொறுங்கிப்போயின. இரண்டாம் உலக யுத்தம், அணுகுண்டு போன்ற பேரழிவுகள் உண்டாக்கிய அதிர்ச்சிகள், தொடர்புத் தொழில்நுட்ப வளர்ச்சியினால் இந்தியப் பிரக்ஞையிலும் பேரதிர்வுகளை ஏற்படுத்தும் அளவுக்குப் பரவியே இருந்தன.

ஆகவே சநாதன சாதிவயப்பட்ட கட்டுகளிலிருந்து மீள்வதற்குத் திணறிக் கொண்டிருந்த (இன்றும் திணறிக்கொண்டிருக்கும்) இந்தியாவின் மொழிகளிலும் நவீனத்துவம் பரவவே செய்தது. ஒரு பெரிய இயக்கமாக அல்ல – திரும்பத் திரும்ப அந்த எழுத்தாளர்களே சொன்னதுபோலச் சோதனை முயற்சிகளாக – சில எழுத்தாளர்கள் மட்டுமே கொண்ட ஒரு விசித்திர, தனித்த மனப்பான்மையாகத் தோன்றியது. எலியட்டையும் ஜாய்ஸையும் படித்திருந்த புதுமைப்பித்தன் போன்ற அக்கால எழுத்தா ளர்களுக்குத் தாங்களும் புதிய வெளிப்பாட்டு முறைகளைக் கையாண்டு பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்ததில் வியப்பில்லை.

ஆனால் புதுமைப்பித்தன் எழுதவந்த 1933இலும் சரி, ஏறத்தாழ எழுபத்தைந்து ஆண்டுகள் கழித்தும் சரி, நவீனத்துவம் ஓர் இயக்கம் என்று சொல்லுமளவுக்குத் தமிழில் உருப்பெற்றது என்று சொல்லவே முடியாது. “மொழி எனது நண்பன். நான் பேச நினைத்ததையெல்லாம் அது பேசும்” என்ற அசட்டு நம்பிக்கை இன்றும் தமிழில் பெரும்பாலான எழுத்தா ளர்களுக்கு இருக்கிறது. இந்த நம்பிக்கை இருக்கும்வரை நவீனத்துவம் பரவுவது சாத்தியமே இல்லை. நினைத்ததைச் சொல்லவேண்டும் என்ற வெறிக்கும் சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கத்திற்கும் இடையி லுள்ள இடைவெளியில் தோன்றும் போராட்டம்தான் நவீனத்துவத்தின் தோற்றக் களம். இந்தப் போராட்டம் பாரதிக்கு ஓரளவு இருந்தது. பின்வந்த பாரதிதாசனுக்கோ பாரதிதாசன் பரம்பரைக்கோ மார்க்சியம் சார்ந்த எழுத்தாளர்களுக்கோ ஜனரஞ்சகப் படைப்புற்பத்தியாளர்களுக்கோ அணு வளவு கூடக் கிடையாது.

கல்கி, அகிலன், மு. வ., நா. பார்த்தசாரதி என்று நமது வாசகர்களைக் கவர்ந்த பிரபலமான எழுத்தாளர்களுக்கும் நமது வாசகர்களுக்கும் ஒரு பொதுவான தளமும் இலட்சியங்களும் இருந்தன. பொதுவாகப் பிரபல எழுத்தாளர்கள் தங்களுடைய வாசகர்களுக்கும் தங்களுக்கும் பகிர்ந்து கொள்ளக்கூடிய யதார்த்தமும் மெய்ம்மைகளும் இருப்பதாக திடமாக நம்பினார்கள். பாரதியார் காலத்திலிருந்து நடந்துவந்த சுதந்திரப் போராட்ட உணர்வுகொண்ட இதழ்களுக்கும் சுதேசமித்திரன் போன்ற பரவலான சுற்று கொண்ட பத்திரிகைகளுக்கும் பிறகு தோன்றிய ஆனந்தவிகடன், கல்கி போன்ற ஜனரஞ்சக இதழ்களுக்கும் பிறகும் நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்ற தொடர்புறுத்தல் பணியே முதன்மையாக இருந்ததைப் பார்க்கிறோம்.

அக்கால அறிஞர்களுக்க இலக்கியத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளும் இருந்தன, தேசத்திற்கு விடுதலை வாங்கித் தருவது, மனிதனை மேம்படுத்துவது, சற்றுப்பிறகு எல்லார்க்கும் எல்லாம் கிடைப்பதான ஒரு சமுதாயத்தை உருவாக்குவது இப்படி இலக்கியத்திற்குக் கடமைகளும் இருந்தன. நவீனத்துவத்திற்கு இதுபோன்ற பிரமைகள் இல்லை.

நவீனத்துவத்திற்கு உகந்த மனப்பான்மைதான் என்ன என்ற கேள்வி இப்போது எழலாம். உளவியல் ஆழ்தன்மை என்று இதனைச் சுருக்கமாகச் சொல்லலாம். இதனுடன், அழகியல் பிரக்ஞை. ரொமாண்டிக் எழுத்தாளர் களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் பிரபல ஜனரஞ்சக எழுத்தாளர் களும் தங்கள் வாசகர்களை அல்லது இரசிகர்களைப் படைப்போடு ஒன்றச் செய்வதையே பெருமையாகக் கருதினார்கள். (இன்றும் கருதிவருகிறார்கள்). வாசகர்களை ஒன்றச் செய்யாமல் அவர்களைத் தொலைவிலேயே நிற்கச் செய்யவேண்டும் – இது படைப்புதானே தவிர வாழ்க்கையல்ல, யதார்த்த மல்ல என்று அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது நவீனத்துவம். பிரெஹ்ட் இதனை ‘அந்நியமாதல் விளைவு’ என்றார். இதேபோலக் கலைஞர்களும் தாங்கள் படைக்கும் படைப்போடு, பாத்திரங் களோடு ஒன்றிப் படைக்கிறேன் என்று சொல்லாமல், அழகியல் தொலை வைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த இயல்பு களையெல்லாம் புதுமைப் பித்தன் படைப்புகளிலேயே காணலாம்.

நவீனத்துவ காலத்திற்கு முந்திய கலைஞர்கள், வாழ்க்கையில் உண்மை என்று ஒன்று உண்டு என்று நம்பினார்கள். அதைச் சொல்வதே அல்லது சொல்ல முயல்வதே கலை என்று நினைத்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை சுயம் என்பது பிளவுபடாதது. முழுமையானது. ஒருமையுடையது. நவீனத்துவப் படைப் பாளர்கள் முழுமை என்பதிலும் நிலைத்த உண்மை என்பதிலும் நம்பிக்கை அற்றவர்கள். தங்கள் காலத்தில் தாங்கள் கண்ட உள்ளீடற்ற மனிதர்களையும் பிளவுபட்ட, சிதைந்த ஆளுமைகளையும்தான் அவர்களால் படைக்கமுடிந்தது. மனத்தில் சிக்கலான தன்மைகளை ஆழ்ந்து சிந்தித்தவர்கள் அவர்கள. ஃப்ராய்டின் கொள்கைகள், அவருக்குப் பின்வந்த நவஃப்ராய்டியர்களின் கொள்கைகள் இதற்கு மிக உதவியாக இருந்தன.

இந்த மனப்பான்மைகள் யாவுமே சமூகத்தைச் சீர்திருத்தி அமைக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்களுக்கு எதிரானவையாக அமைந் தன என்பதில் வியப்பில்லை. எனவே நவீனத்துவ இலக்கியங்களை மார்க்சியவாதிகள் நசிவு இலக்கியம், பாலியல் பிறழ்வு இலக்கியம், தனிமனிதச் சார்புடைய இலக்கியம், கலை கலைக்காகவே என்னும் அடிப்படையில் தோன்றிய இலக்கியம் என்றெல்லாம் வசைபாடிப் புறக்கணித்தார்கள்.

போதிப்பதும் பிரச்சாரம் செய்வதுமே கலை என்ற மனப்பான்மை நமக்கு மிக நெருக்கமான ஒன்று. ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே’ என்று இலக்கியத்தைக் கருவியாக மட்டுமே கண்ட பாரம்பரியம் நம்முடையது. தமிழில் முதல் நாவலை உருவாக்கிய வேதநாயகம் பிள்ளை, நவீன கதைகள் எவ்வாறு நீதி போதிப்பனவாக அமையவேண்டும் என்று பெரியதொரு இலக்கணத்தையே தமது முன்னுரையில் கூறியிருக்கிறார்.

இங்கிலாந்தின் பியூரிடன் மனப்பான்மையும் இதற்குச் சற்றும் குறைந் ததல்ல. ஜான் ரஸ்கின் போன்றவர்களும் கலை அறத்தை போதிப்பதாக இருககவேண்டும் என்றே கருதினர். ஆனால் ஆஸ்கார் வைல்டு போன்ற எழுத்தாளர்கள், ‘கலை எதனையும் போதிக்கவேண்டியதில்லை, அது கலையாக இருந்தாலே போதுமானது’ என்றனர். அதாவது அது அழகியல் இன்பம் பயப்பதாக அமைந்து விட்டால் போதுமானது. இதைத்தான் ‘கலை கலைக்காகவே’ என்று பிறர் குறைகூறினர். அழகியல் இயக்கம் என்றே அவர்கள் கொள்கை அறியப்பட்டது. கலை தன்னளவில் முழுமை பெற்றதாக இருககவேண்டுமே தவிர, இன்னொன்றின் கைப்பாவையாக, எடுபிடியாக இருக்கக் கூடாது என்பதே முக்கியம். இதறகு அழகியலாளர்கள், நெகிழ்வுக் கலைகளையும், நிகழ்த்துகலைகளையும் இலக்கிய்ததின் பக்கம் நிறுத்திப் பார்த்தனர். ஓர் ஓவியமோ சிற்பமோ எதைச் சொல்கிறது? ஓர் இராக ஆலாபனை எதை போதிக்கிறது? அதுபோல இலக்கியமும் இருந்தால் போதும் என்றனர்.

இந்த அம்சங்கள் சமூக அக்கறை கொண்டவர்களுக்கு எரிச்சல் தருபவையாக இருந்தன. தமிழில் மணிக்கொடி காலந்தொட்டு இந்த விவாதங்கள் இடைவிடாமல் நிகழ்ந்தன. 1970-80களில் வெங்கட் சாமிநாதனின் ‘மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்’ போன்ற கட்டுரைகளும், அதற்கு மார்க்சியர்களின் (குறிப்பாக நுஃமான் போன் றோரின்) எதிர்வினைகளும் இந்த விவாதத்தை உச்ச கட்டத்திற்கு எடுத்துச் சென்றன. வானம்பாடிகளின் ரொமாண்டிக் தன்மை வாய்ந்த பிரகடனக் கவிதைகளும் அவற்றிற்கு எதிர்வினையாக பிரமிளின் ‘சோறு முளைக்கப் பயிரிடு போ’ போன்ற கவிதைகளும் இங்கே குறிப்பிடத்தக்கவை. ஆக எழுத்து பத்திரிகை, அதைத் தொடர்ந்து வந்த நடை, பிரக்ஞை, கசடதபற, தொடங்கித் தொண்ணூறுகள் இறுதிவரை கலை, கலைக்காகவா, மக்களுக்காகவா என்ற இந்த விவாதம் திருமபத்திரும்ப நடைபெற்றுவந்தது. (இரண்டிற்கும் முரண்பாடில்லை என்பது எனது கருத்து.)

தமிழ்ப் பிரக்ஞையின் காரணமாக நவீனத்துவம் தமிழ் இலக்கியத்தில் முற்றிலும் நுழைய முடியவில்லை என்றாலும், நவீனத்துவம் பற்றிய விவாதங்களுக்குக் குறைவில்லை. ஆனால் அந்த விவாதங்களும் ஓர் அடங்கிய குரலிலேயே நடந்தன. பிரெஹ்ட், லூகாச், வால்டர் பெஞ்சமின் இவர்களுக்கிடையே நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் தமிழில் கொண்டு வரப்பட்டிருந்தால் பல தெளிவுகள் எளிமையாக ஏற்பட்டிருக்கும்.

புதுமைப்பித்தன் பலவிதமான சிறுகதைகளை எழுதிப்பார்த்தவர். அவர் எழுத்துகள் பலதன்மைகளை ஒரேசமயத்தில் உள்ளடக்கியிருக்கின்றன. அவர் எழுத்துகளில் ஒரு மாந்திரீக/தொன்மக் கவிதையியல் (mythopoetics) ஊடுருவியிருக்கிறது. அவருடைய எழுத்துப் பண்புகளில் ஒவ்வொரு பண்பை ஏற்றுக் கொண்டுதான் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், வண்ண நிலவன் போன்ற பல படைப்பாளிகள் பின்னனால் உருவாக முடிந்தது. இன்று நின்நவீனத்துவப் படைப்புமுறை சார்ந்து பேசப்படும் மேனிலை நாவல், தொடர்ச்சியறு எழுத்து, மாந்திரீக யதார்த்தம் முதலிய கூறுகளைப் புதுமைப்பித்தன் எழுத்துகளில் காணலாம். உளளத்தின் சிக்கலான தன்மை களை வெளிப்படுத்த முயன்றதன் காரணமாகவே கு. ப. ரா.வின் எழுத்து களில் நவீனத்துவம் இடம் பெற்றது. ஓர் அயலான் போலத் தமிழ் மொழியைக் கையாள முயன்றதனால் மௌனிக்கு நவீனத்துவம் கைவந்தது.
மணிக்கொடிக்காலத்தின் பார்வையாளர்களாக இருந்து சற்றே பின்னிட்டு எழுதத்தொடங்கிய லா.ச.ரா., எம்.வி. வெங்கட்ராம் இருவரது எழுத்துக ளிலுமே நவீனத்துவம் உண்டு. எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் நாவலில் நிகழும் விவாதங்களும் எதிர்விவாதங்களும் கூடிய மனப்போராட்டம் நவீனத்துவப் படைப்புகளுக்கே உரியது.

தமிழ் நவீனத்துவப் படைப்புகள்மீது மற்றொரு விமரிசனமும் எழுந்தது. ‘அவை புரியவில்லை’ என்றார்கள். ‘யாருக்காக எழுதுகிறார்கள் இவர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்கள். இதன் விளைவாக வாசகர்களை முன்னிருத்தி ஒரு எழுத்தாளன் எழுத வேண்டுமா, அன்றி வாசகனைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னிச்சையாக எழுதவேண்டுமா என்ற விவாதம் எழுந்தது. ‘வாசகர்களைக் கருத்தில் கொள்ளாத எழுத்தாளர்கள் தங்கள் டயரியில் எழுதிக்கொள்ளட்டுமே’ என்று ஜனரஞ்சக எழுத்தாளர்கள் கூறியதோடு, ‘எங்களுக்கு இத்தனை லட்சம் பேர் வாசகர்களாக இருக்கிறார்கள்’ என்று பெருமையடித்துக் கொள்ளவும் செய்தார்கள். ஆனால் வாசக ரசனைக்குத் தீனிபோடுவது மட்டுமே இலக்கியமல்ல, வாசகர்களைக் கருத்தில் கொள்ளாமல் எழுதினால்தான் நல்ல இலக்கியங்கள் உருவாகும் என்று க. நா. சு., சுந்தர ராமசாமி போன்றோர் பதிலளித்தனர். அமைப் பியத்தின் அறிமுகம் இந்த விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

வெங்கட் சாமிநாதனின் நூல்களில் ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டது. அது உள் வட்டம்-வெளிவட்டம் சார்நதது. இதற்குப் பல தளங்களிலிருந்து, குறிப்பாக மார்க்சியத் தளங்களிலிருந்து எதிர்ப்புக்கருத்துகள் முன்வைக் கப்பட்டன. உள்வட்டம் என்ற கருத்தே இலக்கியம் பற்றிய குறுகிய புரிந்துகொள்ளலினால் ஏற்பட்டது. இலக்கிய முயற்சிகள் பலவகை. அவற்றிறகு ஆதாரமாக இருக்கக்கூடிய இலக்கிய மனப்பான்மைகளும், இலக்கியக் கொள்கைகளும் பலவகை. ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கியத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு அதை மட்டும் பாராட்டி, இலக்கியத்தை வளர்ப்பது உள்வட்டமே என்ற முடிவுக்கு வருவது தவறு. ஆனால் அக்காலத்தில் நவீனத்துவ முயற்சிகள் செய்தவர்களுக்கு இக்கருத்துகள் மிக உற்சாகம் தருவனவாக இருந்தன.

மணிக்கொடிக் காலத்திற்குப் பிறகு நவீனத்துவ எழுத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகை யின் தோற்றம், நவீனத்துவ வாதிகளுக்கும் சோதனை முயற்சி யாளர்களுக்கும் ஒரு நல்ல களம் அமைத்துத் தந்தது. சுந்தர ராமசாமியின் ‘உன்கை நகம்’ போன்ற கவிதைகள் இன்றும் நவீனத்துவக் கவிதைககு நல்ல எடுத்துக்காட்டுகள். பிருமீள், சி. மணி போன்றோரும் எழுத்து இதழில் எழுதினர். அவை பெரும்பாலும் நவீனத்துவ தொனி கொண்டிருந்தன. இன்னும் சற்றுப் பின்னால் ‘நடை’ இதழ் முதலாக ஞானக்கூத்தன் எழுதலானார். பிறகு கசடதபற, ஞானரதம், பிரக்ஞை என்று நவீனத்துவ முயற்சிகளுக்கு ஆதரவளித்த இதழ்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எழுத்து இதழ் முதலாகத் தங்களை நவீனத்துவவாதிகளாக வெளிக் காட்டிக் கொண்டவர்கள், பின்னர் அதே பாணி எழுத்தைப் பின்பற்றினார்கள் என்று கூற முடியாது. உதாரணமாக, பசுவய்யாவின் ‘உபயம்’, ‘சவால்’ போன்ற கவிதைகள் நவீனத்துவ பாணியைச் சேர்ந்தவை அல்ல. ஞானக் கூத்தனின் ஆரம்பகாலக் கவிதைகள் பல அங்கதம், நையாண்டி என்னும் வகைகளில் அடங்குபவை.

நவீனத்துவம் என்பது ஒரே பாணியும் அல்ல. எஸ்ரா பவுண்டின் உணர்ச் சிக் கலப்பற்ற சித்திரங்கள் முதல் டி. எச். லாரன்ஸின் ரொமாண்டிசிசம் கலந்த எழுத்து வரை பல பாணிகள் உண்டு. பெருமபாலும் தமிழ்கக் கவிஞர்களின், எழுத்தாளர்களின் படைப்புகளை ரொமாண்டிக் தன்மை கலந்த நவீனத்துவ எழுத்துகள் என்றே மதிப்பிட முடியும். அபி, பசுவய்யா போன்றவர்களின் கவிதைகளும் பிருமிளின் கவிதைகளும் ஆத்மாநாமின் கவிதைகளும் பொதுவாக இத்தன்மையைப் பலவேறு அளவுகளில் பெற்றிருந்தன. சா. கந்தசாமியின் ‘சாயாவனம்’ நாவலும் இத்தன்மை உடையது. இவை மனித ஆளுமையின் சிதைவைச் சொல்லக்கூடியவை அல்ல. மேற்கத்திய நவீனத்துவத்தின் ஒரு முக்கியப் போக்கு மனித ஆளுமையின் சிதைவைச் சொல்லுதல். இத்தன்மையை ஓரளவேனும் சித்திரித்தவர்கள் என்று ஜி. நாகராஜனையும் நகுலனையும் மட்டுமே குறிப்பிட முடியும்.

சி. சு. செல்லப்பா வெளியிட்ட ‘புதுக்குரல்கள்’ கவிதைத் தொகுப்பும் நகுலனின் ‘குருக்ஷேத்திரம்’ தொகுப்பும் நவீனத்துவ இலக்கியப் போக்கிற்கு உகந்தவையாக இருந்தன. ‘குருக்ஷேத்திரம்’ தொகுப்பில் சிறுகதை எழுதிய சுஜாதா பின்னர் ஜனரஞ்சகத் தளத்திற்கு மாறிவிட்ட போதிலும் அவரது சில சிறுகதைகள் நவீனத்துவ பாணியில் அமைந்தவை. ஜனரஞ்சகப் பததிரிகை களில் எழுதிவரும் ஜெயகாந்தனின் பல படைப்புகளில் நவீனத்துவம் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. ‘பாரிஸுக்குப் போ’ நாவல் முழுதுமே நவீனத்துவத்திற்கு மாறான, ரபான கலைப்போக்குகளையும் நவீனத்துவப் போக்கையும் ஒப்பிட்டு விவாதிக்கும் ஒரு விவாதக்களம்தான். கவிதையில் முற்றிலும் நவீனத்துவப் போக்கைக் கடைப்பிடித்தவர்களாக எழுபதுகளில் தென்பட்டவர்கள் நகுலன், சி. மணி மட்டுமே.

சிறுகதையில் நவீனத்துவப் பாணியைக் கையாளப் பலரால் முடிந்தது. மீண்டும் ஜி. நாகராஜன், நகுலன் எழுதிய சிறுகதைகள் நினைவுக்கு வருகின்றன. ந. முத்துசாமியின் சிறுகதைகள் பல நவீனத்துவமானவை. ‘நாற்காலிக்காரர்கள்’, ‘காலம் காலமாகி’ போன்ற நாடகங்களும் நவீனத் துவத் தன்மை பெற்றவை.

சா. கந்தசாமியின் மூன்று நாவல்கள் – ‘அவன் ஆனது’, ‘சூரிய வம்சம்’, ‘தொலைந்து போனவர்கள்’ ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்கவை. சற்றும் மிகையான உணர்ச்சி வெளிப்பாடற்ற நவீனத்துவப் பண்பு அசோகமித்தி ரனின் பல நாவல்களிலும் சிறுகதைகளிலும் காணக் கிடக்கிறது. சுந்தர ராமசாமியின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’ ஒரு நவீனத்துவப் பாணி நாவலே என்றாலும், எழுததமைப்பில் அது வெளிப்படுகிறதே ஒழிய உள்ளடக்கத்தில் வெளிப்படவில்லை. காரணம், ஜே. ஜே. வுக்குப் பெரிய பிரச்சினைகள், மனப்போராட்டங்கள் எவையுமே இல்லை. சிக்கல்களே இல்லை. எல்லாவற்றிற்கும் தீர்க்கமான முடிவுகளை வைத்திருக்கிறான். அம்பை, சில்வியா ஆகியோரின் சில சிறுகதைகள் நவீனத்துவப் பாணியில் அமைந்தவை.

பிரம்மராஜன் கவிதைகள் யாவுமே நவீனத்துவப் பாணிக் கவிதைகள். ஆனால் அவரது பெரும்பாலான கவிதைகள் நேரடி ஆங்கில மொழி பெயர்ப்புகள் போலவோ கம்ப்யூட்டர் கவிதைகள் போலவோ அமைந்து சலிப்பூட்டுகின்ற.ன. ‘அறிந்த நிரந்தரம்’ தொகுதியைவிடப் பின்வந்த தொகுதிகளிலுள்ள பல கவிதைகள் பரவாயில்லை எனத் தோன்றுகிறது. ‘அறிந்த நிரந்தரம்’ கவிதை, பலவித உருவகங்களைச் சிறப்பாக உருக்கி இணைத்துப படிமப்படுத்துவதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இன்னும் தேவதச்சன் ஆனந்த் போன்ற பலரை நவீனத்துவக் கவிஞர்களாகக் குறிப்பிட முடியும்.

மார்க்சியவாதிகள் இத்துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்க இயலும். அவர்கள் அடிக்கடி பாராட்டிப் பேசும் மயகாவ்ஸ்கி, பாப்லோ நெரூடா இருவரமே நவீனத்துவவாதிகள்தான். கார்க்கியின் ‘தாய்’ நாவ லிலேயே நவீனத்துவக் கூறுகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ் நவீனத்துவப் படைப்புகளை பிறழ்வு இலக்கியம் என்று ஒதுக்கிவிட்டார்கள். அதனால் சோதனை முயற்சிகள் யாவும் இங்கு ஒரு குறிப்பிட்ட குழுவினரின் அல்லது சாதியின்ரின் சாதனை என்று சொல்லும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டன. இத்தனைக்கும் மார்க்சியர்கள் அவ்வப்போது மொழிபெய்ர்த்து வெளியிட்ட பன்னாட்டுக் கவிதைகள் அநேகமாக நவீனத்துவப் பண்பு கொண்டவை யாகவே இருந்தன. இருப்பினும் அவறைற அவர்கள் சிரத்தையோடு உள்வாங்கிக் கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் ‘பிரக்ஞை’ பத்திரிகையின் முயற்சிகள் முன்னோடியானவை. இலங்கையிலிருநது வெளிவந்த ‘அலை’ பத்திரிகையும் இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கது. நாடகத் துறையில் ஆறுமுகத்தின் ‘கருஞ்சுழி’ போன்ற நாடகங்களைக் குறிப்பிடலாம்.

சர்வதேச நவீனத்துவ இயக்கத்தின் ஒரு பகுதியான தமிழ் நவீனத்துவப் படைப்பாளிகளின் சில சாதனைகளை இங்கே குறிப்பிடலாம்.

1. நவீனத்துவ எழுத்தாளர்கள்தான் யதார்த்தவாதத்தின் எல்லையற்ற சிக்கல்களை முதன் முதலாக எதிர்கொண்டவர்கள். மொழி என்னும் ஊடகமே இந்தச் சிக்கலான தன்மைகளின் ஒரு பகுதியாகவேனும் அமையக்கூடும் என்று உணர்த்தியவர்கள். இந்த உணர்த்தல்தான் அமைப்பியம், பின்நவீனத்துவம் போன்ற மொழி மையப்பட்ட இயக்கங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தினை உருவாக்கியது.

2. நவீனத்துவக் கலை என்பது வடிவத்திலும் மொழியமைப்பிலும் எதிர்பாராத அல்லது முன்னுதாரணமற்ற நவீனமான சூழல்களைப் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவது. இவ்வகையில் இன்றைய சூழல்களால் ஏற்படும் ஆளுமைச் சிதைவையும் உளவியல் சிக்கல்களையும் ஓரளவுக்கேனும் நேர்த்தியாக எடுத்துரைத்த பாங்கு நவீனத்துவக் கலைஞர்களுக்குரியது. மேலும் நவீனத்துவக் கலை உணர்ச்சியை மட்டாக வெளிப்படுத்துவதில் தனித்த பாங்கினை உடையது. மிகையுணர்ச்சியை அறவே வெறுப்பது. இத்தகைய படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்த வர்கள் நவீனத்துவப் படைப்பாளர்களே.

3. படைப்புகளில் காலத்தின் இயக்கம் யதார்த்தத் தன்மையில் அமைவ தில்லை. காலம் மிக விசித்திரமானது. நம்மால் உள்வாங்கிக் கொள்ள இயலாததாகப் பல சந்தர்ப்பங்களில் இயங்கக்கூடியது என்பதை நவீனத்துவ வாதிகள் காட்டியிருக்கிறார்கள்.

4. நவீனத்துவக் கலை என்பது ஒருஙகமைத்தல் இன்மை அன்று. மாறாக அகவடிவம் எனப்படும் உள்ளிருந்து எழும் ஒருங்கமைப்பைக் கொண்டது என்ற தெளிவை அளித்திருக்கிறார்கள்.

5. கலையின் பிரச்சினை பற்றிய பிரக்ஞை ஓர் இடைவிடாத உள்ளுணர்வு என்பதை நவீனத்துவத்தின் குறிப்பிடவேண்டிய சிறப்பியல்பாக உணரச் செய்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் நல்ல சாதனைகள். பெரிதும் பாராட்டி முனனெடுத்துச் செல்ல வேண்டியவை. ஆனால் நவீனத்துவ இயக்கம் தமிழில் தான் பெறவேண்டிய இடத்தைப் பெறவில்லை. இதற்கான அடிப்படைக் காரணங்கள் வருமாறு.

1. கலை அல்லது இலக்கியம் எந்தக் குருவிமூளைக்கும் எட்டுமாறு எதையேனும் போதித்ததே தீரவேண்டும் என்ற ஜனரஞ்சக மனப்பான்மை.

2. இந்த மனப்பான்மைக்குத் தீனிபோட்டு வளர்க்கக்கூடிய கல்வித் துறையினரும், ஜனரஞ்சகப் பத்திரிகைகளும், தொலைக்காட்சி, வலைப்பின்னல் தளங்கள் போன்ற ஊடகங்களும்.

3. இச்சாதனங்கள் நவீனத்துவக் கலையின் உத்திகளை நேர்த்தியாக எடுத்துப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் கலையை மலினப் படுத்துகின்றன.

4. இந்த இயக்கத்தில் ஈடுபட்ட எழுத்தாளர்கள் அனைவருமே பெருமளவு தங்களுக்கிருநத் ஆங்கிலப் பரிச்சயத்தால் ஈடுபட்டவர்கள்தான். இவர்களின் ஆங்கில மனப்பான்மையைத் தமிழ்வழி மட்டுமே இலக்கிய்ததில் ஈடுபட்டவர்களாலும் தமிழ் வாசகர்களாலும் ஜீரணித்துக் கொள்ள முடிய வில்லை.

5. மேற்கு நாடுகளில் ஏற்பட்டிருப்பது போன்ற குடும்பச் சிதைவு, ஆளுமைச் சிதைவு,, உளவியல் சிக்கல்கள் போன்றவை இன்னும் முற்ற முழுதாகத் தமிழகத்தில் ஏற்படவில்லை. இதற்கு நமது பாரம்பரியக் குடும்ப அமைப்பு முக்கியக் காரணம். மேலும் இங்குள்ள முக்கியப் பிரச்சினைகள், வறுமை, ஊழல் போன்றவை தனிமனிதப் பிரச்சினைகள் என்பதைவிட சமூகம் சார்ந்தவை.

6. எல்லாவற்றிற்கும் மேல்£க ஒடுக்கப்பட்டவர்கள், போலி ஒழுக்கங்களைப் பேணும் மத்தியதர வர்க்கத்தினர், வசதி படைத்தவர்கள் என நமது சமூகம் பிளவுபட்டுக் கிடக்கின்ற தன்மை, அதன் தேவைகள்.

என்றாலும், காலம் மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த இருபதாண்டு களாகவே உலகமயமாக்கலின் விளைவாகவும் கேபிள் தொலைக்காட்சி, இண்டர்நெட் போன்றவற்றாலும் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. இலக்கிய இயக்கங்களும் பாணிகளும் மாறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக எ.ழுத்தை வாசிக்கும் கலாச்சாரம் மாறி, பிம்பங்களைக் காணும், வாசிக்கும் ‘பார்வைக் கலாச்சாரம்’ ஒன்று வேகமாக உருவாகிவிட்டது.