இரண்டு அதிசயங்கள்!

ஸ்விட்சர்லாந்தில் (நமது நாட்டில் அல்ல!) நிகழ்ந்த இரண்டு அதிசயங்கள்!

முதல் அதிசயம்:

சில நாட்களுக்கு முன்னால் ஸ்விஸ் அரசாங்கம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

1. ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் அடிப்படை ஊதியமாக 2500 பிராங்க் (ரூ.1,75,000) வழங்கப்படும்.

2. ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை ஊதியமாக 625 பிராங்க் (ரூ.45,000 ) வழங்கப்படும்.

ஸ்விஸ் நாட்டில் ஐந்துவருடமாக இருக்கும் வெளிநாட்டவர்க்கும் இந்தச் சட்டம் செல்லும்.

இதற்கு நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.
சும்மா இருந்தாலே போதும்.

உதாரணமாக, ஒரு குடும்பத்தில், ஒரு கணவன், மனைவி, குழந்தை இருந்தால், 5625 பிராங்க் (ரூ.3,95,000) ஊதியமாகக் கிடைக்கும்.

இரண்டாம் அதிசயம்:

இந்தச் சட்டத்தை அமல்படுத்த ஒரு பொது வாக்களிப்பை அந்த அரசாங்கம் நடத்தியது.

எழுபத்தெட்டு சதவீதம் பேர், இந்தச் சட்டம் வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர்.
அவர்கள் கூறிய காரணங்கள்.

1. இச்சட்டம் எங்களையும் எங்கள் சந்ததியினரையும் சோம்பேறிகளாக மாற்றும்.
2. இம்மாதிரி இலவச ஊதியத்தால் எங்கள் அடிப்படை உரிமையை நாங்கள் இழக்க நேரிடும்.
3. இதனால் அயல்நாட்டவர்கள் நமது நாட்டுக்குள் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் நுழைவார்கள்.

“ஆகவே இலவச ஊதியம் வேண்டாம்.”

ஆயிரம் ரூபாய் இலவசத்துக்காகத் தங்கள் வாக்குரிமையை விற்கும்  ‘முன்தோன்றி மூத்த குடியினர்’ கற்க வேண்டிய முதல் பாடம் இது.

நன்றி-நண்பர் மனோகர் ராஜன்


மொழி மாற்றங்கள்

தமிழில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அண்மையில் நான் அகர ஓரினமாதல் நிகழ்வதைப் பார்க்கிறேன். சாதாரணமாகத் தமிழில் உயிரெழுத்துகள் ஓரினமாக முடியாது. உடம்படுமெய் இடையில் வரும். (சமஸ்கிருதத்தில்தான் இம்மாதிரி ஓரினமாதல் உண்டு. அ + அ என்றால் ஆகாரமாக்கிவிடுவார்கள். ராம + அயந = ராமாயந என்பதுபோல. இம்மாதிரி ஓரினமாக்கலைத் தெலுங்கும் கன்னடமும் ஏற்றுக் கொண்டுவிட்டன.)

எனக்கு நினைவுவரும் சொற்களைச் சொல்கிறேன். ஊடகங்களில் இந்தாண்டு, அந்தாண்டு என்பதுபோன்ற சொற்களைக் கையாள்கிறார்கள். இந்த + ஆண்டு என்றால் தமிழ்முறைப்படி இந்தவாண்டு. (இடையில் வ் உடம்படுமெய்). இந்த-வாண்டு எனப் பொருள்படுகிறதே என்றோ, எதனாலோ இந்தாண்டு என்றாகிவிட்டது. அதேபோலப் பலகடைகளிலும் காணும் சொல் பாதணி. பாத + அணி, பாதவணி ஆகவேண்டும். காலணி என்ற சொல்லோடு ஒப்புமை கருதியோ என்னவோ, அது பாதணி ஆகிவிட்டது. (பாதம் என்பது வடசொல்லாக இருப்பினும்). காலணி, காதணி என்பவை சரியான சேர்க்கைகள், ஒற்று அல்லது குற்றியலுகரம் வருவதனால். பாதணி அப்படி அல்ல. இம்மாதிரித் தமிழில் புதிதாக வந்துள்ளவைகளில் முக்கியமாக மொழியியலாளர்கள்தான் கவனம் செலுத்தவேண்டும்.


என்ன செய்யலாம்?

என் மனத்தில ஏறத்தாழ 2011 முதல் அரித்துவரும் விஷயம் இது. அப்போது நான் சென்னை-கிண்டியில் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்தேன். காலையில் சுமார் ஏழுஏழரை மணிபோல ஏறத்தாழ ஆயிரம் பேர் பத்துப்பேர் இருபது பேராகச் செல்வார்கள். கையில் சாப்பாட்டு டப்பா. அநேகமாகக் கருப்பு உடை. அழுக்கு. வேலைக்குப் போகிறார்கள் என்பது வெளிப்படை. எந்தத் தொழிலகத்தில் அல்லது கட்டுமானப் பணியில் என்று தெரியாது. தமிழ் தெரியாது. சிலபேர் நல்ல இந்தி, பலபேர் உடைந்த இந்தி பேசுவார்கள். உத்தராஞ்சல் முதல் ஒரிசா, சத்தீஸ்கட் வரை பல மாநிலங்களிலிருந்து வந்தவர்களாக இருக்கும்.

காலப்போக்கில் இவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டுவருகிறது. இப்போது மேடவாக்கம் முதல்  இன்னும் தெற்குப்பகுதி வரை இவர்கள் நிறையப்பேர் வேலைசெய்வதைக் காணமுடிகிறது.   எனக்குத் தெரிந்த ஒரு (தமிழரின்) பெரிய கட்டுமானக் குழுமத்தில் தமிழன் ஒருவன்கூட வேலையில் இல்லை. இம்மாதிரி வேற்று மாநிலத்தவர்கள் தான்.

பெரும்பாலோர் தமிழ்நாட்டிலிருந்து திரும்பிச்செல்வதும் இல்லை. ஆங்காங்குள்ள ஏழ்மையான, சேரிப் பகுதிகளில் இணைந்து கொள்கிறார்கள். அடுத்த தலைமுறையில் இவர்கள் நல்ல தமிழ்பேசக்கூடும், கவுன்சிலர்கூட ஆகலாம், அதற்கடுத்த தலைமுறையில் ஒரு எம்.எல்.ஏ, எம்.பி.யாகக்கூட ஆகலாம்.

ஏற்கெனவே தமிழகத்தில் தெலுங்கர்களும், கன்னடர்களும், அடுத்த நிலையில் அடகுக்கடை வைத்திருக்கும் சேட்டு முதலான வடநாட்டவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள் என்ற பிரச்சினை இருக்கிறது. வடக்குச் சென்னையில் சில பகுதிகளில், பல தெருக்களில் நடந்துபோகக்கூட எனக்கு பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு வேற்று மாநிலத்தவர் கள் நிரம்பி வழிகிறார்கள். தமிழகத்தில் தமிழன் ஆட்சி பல காலமாக இல்லை என்பது பிரச்சினையாகி உள்ளது.

இந்தக் கூலிக்காரர்கள் பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது? இவர்களுக்கு நியாயமான கூலி, வாழ்க்கை வசதி கிடைக்கிறதா என்பதெல்லாம் சந்தேகம்தான். இன்னும் மாநிலத்தின் உள்பகுதிகளில் சென்று வேலை செய்பவர்களும் அதிகம். போனவருஷம் இராணிப்பேட்டை அருகில் தோல் தொழிற்சாலைக் கழிவுகளில் மாண்ட பத்துப்பேர் இப்படிப்பட்டவர்களே. பெரிய கட்டுமானப் பணிகளில் இறப்பவர்களும் உண்டு.

தங்கள் மாநிலங்களில் இங்கு கிடைக்கும் வசதிகூட இல்லாததனால்தான் இங்கே வருகிறார்கள். பெரும்பாலோர் தலித்துகள் என்பதும் வெளிப்படை. நம் தொழிலாளர்கள், நமது சந்ததியினர் வாழ்க்கையைப் பறிக்கும் வந்தேறிகள் என்று இவர்களைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளமுடியுமா? அல்லது எல்லாரும் இந்தியர்கள், பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட முடியுமா? இம்மாதிரி ஒரு மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள், வேற்றுமொழியினர் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதா? இதைச் சமாளிப்பது யார் கையில் இருக்கிறது?

எனக்குத் தெரிந்தவரை தமிழக அரசு இதுபற்றியெல்லாம் கவலைப்பட்டதே இல்லை.

அண்மையில் அஞ்சல்துறையில் வேண்டுமென்றே பல வட இந்தியர்கள் தமிழில் அதிக மதிப்பெண் போட்டுச் சேர்க்கப்பட்டார்கள் என்பதும் பத்திரி கைகளில் வந்தது. எல்லாருக்கும் நம்பமுடியாத வகையில் 99, 98 என்று மார்க்குகள்.  ஆனால் உண்மையில் ஒருவனுக்கும் தமிழ் தெரியாது.

இந்தியர்கள் என்று இல்லை, தமிழகம் முழுவதும் நேபாளிகளும் இலட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். ஒரு குடியிருப்பு ஏற்பட்டால் சில நாட்களில் அங்கு ஒரு கூர்க்கா வந்து குடியேறிவிடுவான். தமிழ்கூடத் தெரியாது. “கியா சாப், குச் ருப்யே இஸ் பேட் கேலியே தேனா சாப்” என்று கையேந்துவான். ஆனால் அடுத்த தலைமுறையில் அவன் மகன் இட ஒதுக்கீட்டு வசதியோடு இங்கே கம்ப்யூட்டர் அறிவியல் படிப்பான். என் கல்லூரியில் பணிசெய்த கூர்க்காக்கள் தங்கள் பிள்ளைகளை வசதியாக எங்கள் கல்லூரியிலேயே படிக்க வைத்தார்கள்.

நான் யாரையும் குற்றம் கூறவில்லை, பழிக்கவில்லை. “தமிழர்கள், வட இந்தியாவுக்குப் போகாவிட்டாலும் வெளிநாட் டுக்குச் சென்று சம்பாதிக்க வில்லையா” என்று சிலர் கேட்பார்கள்.இது மோசமான ஒப்பீடு. முதலில் எண்ணிக்கைப் பிரச்சினை. வெளிநாடு செல்லும் தமிழர்கள் சில ஆயிரம் பேர் என்றால் இம்மாதிரி வருபவர்கள் எண்ணிக்கை பல லட்சம். அடுத்ததாக வெளிநாட்டுக்குச் செல்பவர்களால் அந்நாட்டுப் பணம் தமிழ்நாட்டுக்கு வருகிறது, இவர்களால் தமிழ்நாட்டுப் பணம் வடக்கிற்குச் செல்கிறது.

இதில் நம்மைப் போன்ற தமிழர்கள் நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? சமூகவியலாளர்கள் இதுபற்றி என்ன சொல்கிறார்கள்? நாம் என்ன தான் செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது? தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.


காப்பாற்றியது யார், எது?

ஒருவர் மிகுந்த கடனில் மூழ்கி என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தார். நாலுபக்கமும் கடன்காரர்கள் வருத்தினர். வீட்டில் தொலைபேசி இடைவிடாமல் அடித்துக் கடனை நினைவூட்டியவாறே இருந்தது. தற்கொலை செய்து கொள்ளலாம், இல்லையென்றால் திவால் என அறிவித்து ஓடிப்போகலாம் என்று முடிவு செய்தார். வெளியிலே செல்லும் வழியில் ஒரு பெஞ்ச். அதன்மீது உட்கார்ந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த கிழவர் ஒருவர், “என்ன ரொம்ப சோகமாக  இருக்கிறீர்களே” என்று அன்போடு கேட்டார். இவருக்குக் கண்ணில் நீரே வந்துவிட்டது. தன் நிலைமையை விவரித்தார். “நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்றார் கிழவர். ஒரு செக்புத்தகத்தை எடுத்தார். ஏதோ எழுதிக் கையெழுத்துப் போட்டு, “இதை வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த ஆண்டு இதே நாளில் இதே  நேரத்தில் இங்கே வாருங்கள்” என்று சொல்லிப் போய் விட்டார்.

கடனாளி கையிலிருந்த செக்கைப் பார்த்தார். 10 லட்சம் ரூபாய் என்று எழுதி, டி. ராக்ஃபெல்லர் என்று கையெழுத்துப் போட்டிருந்தது. எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார். ‘இப்போது எளிதாக இந்தச் செக்கை மாற்றி என் கடனைத் தீர்த்து விட முடியுமே’ என்று நினைத்தார். ஆனால் செக்கை மாற்ற மனம் வரவில்லை. ‘நானே எப்படியாவது சமாளித்து விடுவேன், சமாளிக்க முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது செக்’ என்று மனத்தைத் தேற்றிக் கொண்டார். தன் அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு மிகுதியாக உழைக்கலானார்.  கொஞ்சம் கொஞ்சமாகக் கடன் அடைந்தது. ஏறத்தாழ பதினொரு மாதம் முடியும் நிலையில் எல்லாக் கடனும் தீர்ந்துவிட்டது.

ஓராண்டு கழித்து, அதே நாள், அதே நேரத்துக்கு அந்த இடத்துக்குப் போனார். செக் கொடுத்த முதியவரும் மிகச் சரியாக வந்து சேர்ந்தார். அவரிடம் கடன் தீர்ந்துவிட்டதைச் சொல்லி, செக்கைத் திரும்பத் தரப் போகும் நேரத்தில் ஒரு நர்ஸ் பெண்மணி ஓடிவந்து அவரைப் பிடித்துக் கொண்டாள். இவரிடம் திரும்பிச் சொன்னாள்: “உங்களுக்கு ஏதாவது தொல்லை கொடுத்து விட்டாரா? பக்கத்தில்தான் பைத்தியக்கார ஆஸ்பத்திரி இருக்கிறது. அங்கிருந்து ஓடிவந்து விடுகிறார், இந்த ஆள்! தன்னை ராக்ஃபெல்லர் என்று கற்பனை செய்து கொண்டு எல்லார் உயிரையும் வாங்கிவிடுவார்!”

இவரைக் காப்பாற்றியது யார்/எது?


பஞ்சப்பாட்டு

அறமிலா உலகில் எவ்விதம் வாழ்வது?

அதோ ஓர் கருந்தலை நச்சுப்பாம்பு

என்னையும் மனிதனாக்கு

அற்றது ஊர்தி உற்றது வீடு

இல்லாமலிருக்கின்ற இறைவனிடம்

வேண்டிக் கொண்டது போதும் போ.


இந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்

திரு. சியாம் சுந்தர் என்பவர் மின்னம்பலம் வாயிலாக வெளியிட்ட கட்டுரை இது.

பாஜக அரசு, கடைசி இரண்டு ஆண்டுகளை இந்தியைத் திணிப்பதற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கும்போலுள்ளது. அந்த அளவுக்கு இந்தி திணிப்பு மெள்ள மெள்ள மறைமுகமாகவும் நேரடியாகவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தித் திணிப்பு புதிய வடிவம் எடுத்திருக்கும் இந்தக் காலத்தில்தான் என்னுடைய ‘தனித்த’ வட இந்தியப் பயணத்தைத் தொடங்கினேன். இந்தியாவின் அனைத்து நிலப்பரப்பையும், வானத்தையும், காற்றின் வாசத்தையும், தண்ணீர் சுவையையும், மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் தரிசித்து விட வேண்டும் என்றுதான், பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஒரேயொரு முதுகுப் பையுடன் டெல்லிக்கு ரயில் ஏறினேன்.

வட இந்தியப் பயணம் என்றவுடன் நண்பர்கள் கூறியது இதுதான்… ‘இந்தி தெரியாம, தனியா நார்த் இண்டியா போறது கஷ்டம்டா. பார்த்துக்கோ’. இந்தி தெரியாமல் வட இந்தியாவில் தாக்குப்பிடிப்பது கஷ்டம் என்பதை ஏற்கெனவே பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தது. யாருக்காவது ஆங்கிலம் தெரியாமலா போய்விடும் என்றொரு நம்பிக்கை இருந்தது. நாம் வசிப்பது வல்லரசு நாடல்லவா, நம் மக்களுக்கு ஆங்கிலம் கூடவா தெரியாமல் இருக்கும் என்ற நம்பிக்கை.

அதிகாலையில் ரயில் ஏறி மறுநாள் இரவு டெல்லியில் இறங்கும்வரை தமிழிலோ, ஆங்கிலத்திலோ பேசுவதற்கு ஆள் இல்லாமல் கம்பார்ட்மென்ட்டில் இந்தியில் பேசுபவர்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டே வந்தேன். என் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த வெப்பமான வட இந்திய நிலங்கள் மட்டுமே அப்போதைக்கு ஆறுதலாக இருந்தது. எங்கும் அறை முன்பதிவு செய்யாமல் த்ரில்லான ஒரு பயணத்தை மேற்கொள்ளத்தான் திட்டமிட்டு இருந்தேன். டெல்லி ரயில் நிலையத்தில் இரவு பதினோரு மணிக்கு இறங்கி ஹோட்டல் ஒன்றை எடுப்பதற்குள் பின் இரவு ஆகிவிட்டது. அதுவரை மனதில் இருந்த ஒரு பெரிய நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை அந்த இரவே தகர்ந்து விட்டது. ஒருநாட்டின் தலைநகர், வெளிநாட்டவர் அடிக்கடி வந்து போகும் சுற்றுலாத் தலம் வேறு… கண்டிப்பாக இங்கே மக்களுக்குக் கொஞ்சமாவது ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், யாருக்கும் துளிக் கூட ஆங்கிலம் தெரியவில்லை. தெரியவில்லை என்பதன் அர்த்தம் அவர்களால் பேச முடியவில்லை என்பது மட்டும் அல்ல, நான் பேசுவதைப் புரிந்துகொள்ளக்கூட முடியவில்லை. ‘கோ’, ‘கம்’, ‘வேர்’ ‘லெஃப்ட்’, ‘ரைட்’ என்ற சில அடிப்படை ஆங்கில வார்த்தைகளைக் கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பொதுவாகத் தென் இந்தியா வில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களே குறைந்தபட்ச ஆங்கில அறிவோடு இருப்பார்கள். தென் இந்தியா வரும் பிற நாட்டு பயணிகளோடு எளிமையாக அவர்கள் உரையாடுவதைப் பார்த்திருக்கிறேன். அதேபோல வட இந்தியா விலும் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் இருப்பார்கள், அவர்களுக்குக் குறைந்த அளவாவது ஆங்கிலம் தெரிந்திருக்கும், தப்பித்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், உண்மை அப்படியில்லை. ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், ஹோட்டல் ரூம்கள் வைத்திருப்பவர்கள், ரயில்வே என்கொய்ரியில் இருப்பவர்கள், போலிஸ்காரர்கள் யாருக்கும்… யாருக்குமே துளிக்கூட ஆங்கிலம் தெரியவில்லை.

மேலே எழுதிய வரிகள் தமிழர்களின் இளகிய மனதுக்குக் கண்டிப்பாகக் கோபத்தை உண்டாக்கி இருக்கும். மற்றவர்களின் ஆங்கில மொழி அறிவைக் கிண்டல் செய்யாதீர்கள் என்று கமெண்ட் இட கைகள் பரபரத்துக் கொண்டிருக்கலாம். அப்படி கமெண்ட் இட உங்கள் மனது தயாராக இருந்தால் அதற்கு முன்பு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். சென்னை ஐஐடி-யில் படிக்கும் குஜராத்தை சேர்ந்த நண்பன் ஒருவனிடம் வாட்ஸ்அப்பில் இந்தித் திணிப்பு, தமிழக அரசியல் பற்றி எல்லாம் விவாதித்துக் கொண்டிருந்த சமயம், ‘உங்களுக்கு மொழிப்பற்று எல்லாம் கிடையாது. மொழி வெறி. அவ்வளவுதான். முக்கியமாக உங்களால ஒரு மொழிக்கு மேல கற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்குத் திறமை இல்லை. அதான் நீங்க இந்தியை எதிர்க்கறீங்க’ என்றான். இதே எண்ணம் பல வட இந்தியர்களிடம் இருப்பதைக் கவனித்து இருக்கிறேன். பன்மொழி அறிவு பற்றி அவர்கள் அப்படிக் கூறியதை வைத்து, சரி வட இந்தியர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பன்மொழி அறிவு இருக்கும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந் தேன். ஆனால் உண்மையில் ஒருமொழிக்கு மேல் கற்றுக்கொள்ளும் திறமை அவர்களுக்குத்தான் இல்லை. வட இந்தியர்களால்தான் இந்தியைத் தவிர வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தத் தலைமுறை தமிழ் இளைஞர்கள் பலர் தமிழ், ஆங்கிலம் மட்டும் அல்லாமல் கல்லூரிகளில் ஜெர்மன், பிரெஞ்ச் மற்றும் கல்லூரியின் இருப்பிடத்தைப் பொறுத்து மலையாளமோ, தெலுங்கோ கற்று இருக்கிறார்கள். நம்மவர்களுக்குப் பன்மொழி அறிவு நிறையவே இருக்கிறது.

டெல்லி செல்லும் ரயிலில் அமர்ந்திருந்தபோதுதான் அந்தச் செய்தியைப் படித்தேன். சென்னை மின்சார ரயில் டிக்கெட்டுகளில் இருந்து தமிழ் அகற்றம். தமிழுக்குப் பதில், இந்தி என்று செய்தியில் இருந்தது. இனி மின்சார ரயில் டிக்கெட்டுகளில் இந்தியும் ஆங்கிலமும் மட்டும்தான் இடம்பெறும். இந்தி திணிப்பு என்பதையும் தாண்டி இதில் வேறு ஒரு விஷயம் இருக்கிறது. தமிழர்களுக்கு இந்தி தெரியாது என்பது எல்லோருக்குமே தெரியும். அதனால்தான் ஆங்கிலம் இடம்பெற்றிருக்கிறது. ஒரு மாநிலத்து மக்களிடம் அவர்களது தாய்மொழிக்குப் பதிலாக வேறொரு மொழி அறிவை எதிர்பார்க்கும் வட இந்தியர்களிடம் நாமும் இயல்பாக ஆங்கிலத்தை எதிர்பார்ப்பது இயல்பு தானே. நம்மால் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள முடியும், பீச் ஸ்டேஷனில் மீன் கூடையோடு ஏறி தாம்பரத்தில் இறங்கும் பாட்டிக்கு டிக்கெட்டில் இருக்கும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடியும் என நம்பும் வட இந்தியர்களிடம் நாமும் ஆங்கில அறிவை எதிர்பார்ப்பது இயல்புதானே.

டெல்லி சென்று அவர்களின் மொழி கொஞ்சம் பழகிய பின்பும், டெல்லியில் இருக்கும் தோழி ராகவிஜயா கூறிய சில வழிமுறைகளைப் பின்பற்றியும் ஒருவாறு சமாளித்துக் கொண்டிருந்தேன். அந்தத் தோழிக்கும் இந்தி தெரியாது. ஒரு வருடமாக அவரும் சைகையை வைத்தும் கூகுள் டிரான்ஸ்லேட்டரை வைத்தும்தான் சமாளித்துக் கொண்டிருக்கிறார். அதன்படியேதான் நானும் டெல்லியின் தெருக்களைச் சுற்றிக் கொண்டிருந்தேன். சாந்தினி சவுக் பகுதியில் இருக்கும் செங்கோட்டைக்குச் சென்றுவிட்டு அப்படியே குதுப்மினார் சென்றபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. குதுப்மினாரில் இருக்கும் புல்வெளிகளில் இளைப்பாற உட்கார்ந்து இருந்தபோது மூன்று வட இந்திய இளைஞர்கள் வந்து பக்கத்தில் உட்கார்ந்தனர். கையில் இருந்த பானி பாட்டிலை பார்த்துவிட்டுக் குடிக்கக் கேட்டனர். பேச ஆரம்பித்தார்கள். எனக்கு இந்தி தெரியாது என்றவுடன் பேசாமல் அமைதியாக இருந்தனர். பின் நிறையக் கூச்சத்துடன் அந்த மூவரில் ஒரெ யொரு ஆள் மட்டும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசினார். வார்த்தைகளுக்கு இடையில் நானே இணைப்புகளை இட்டு புரிந்து கொண்டேன். பயணத் திட்டம் பற்றிக் கூறினேன். அவர்களின் சொந்த ஊர் வாரனாசி. சுற்றிப் பார்க்க டெல்லி வந்திருக்கிறார்கள். அந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசியவரின் பெயர் சந்தீப் திவாரி. அவர் படித்தது பெரிய கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ பட்டம். அவர்களுடன் இருந்த ஆருஷ் திவாரி, படித்ததோ பொறியியல். அவரால் ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. அவர்கள் மூவரும் நன்றாகவே பழகினார்கள். மொழி அரசியல் நம்மை எப்படி எல்லாம் பிரித்து இருக்கிறது. நாம் இந்தி கற்காததால் எந்த வகையிலும் பின்தங்கிவிடவில்லை. ஆனால் அவர்கள் ஆங்கிலம் இல்லாமல் பல வகைகளில் பல விஷயங்களை இழந்து இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் வரும் ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்காமல் ஆருஷ் எப்படிப் பொறியியல் முடித்தார் என்றே தெரியவில்லை.

இவர்களைப் பற்றி இங்குக் குறிப்பிட ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. மூவரும் அடுத்த மாதம் இறுதியில் சென்னை வரப் போகிறார்கள். சோழிங்கநல்லூரில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்கிறேன் என்று கூறி இருக்கிறேன். ஆனாலும் அவர்களை நினைத்து பாவமாய் இருக்கிறது. இந்தி என்ற ஒன்றை வார்த்தையை வைத்து நடக்கும் அரசியலால் அவர்கள் இழந்தது பல. அது அவர்களுக்கே தெரியவில்லை. தமிழ்நாட்டில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. ஏற்றுக்கொண்டாலும் கொள்ளவிட்டாலும் ஆங்கிலம் இல்லையெனில் பல விஷயங்களை இழக்கத்தான் வேண்டும். இந்தியை வைத்து இந்தியாவுக்குள் வேண்டுமானால் பேசலாம்.

டெல்லியில் இருக்கும் தமிழ் நண்பர்களைச் சந்தித்தபோது ஸ்ரீனிவாசன் என்ற நண்பன் இப்படிக் கூறினான், ‘ப்ரோ இவ்ளோ நாளா இங்க இருக்கேன், யாருக்குமே இங்கிலீஷ் தெரியாது. ஆனா கேஸ்ட் (caste) மட்டும் என்னன்னு கரெக்டா கேட்டுட்றாங்க. அதுக்கு மட்டும் இங்கிலீஷ் தேவைப்படுது’ என்றான். அவன் அப்படிக் கூறிய மறுநாளே என்னிடம் ஒரு வயதான ஆள் ‘சர்நேம் கியா ஹே’ என்று பல முறை அழுத்தி அழுத்திக் கேட்டார். கடைசி வரை பதில் இல்லை என்றதும். ‘நான் வெஜ், பீஃப் சாப்பிடுவியா?’ என்று கேட்டார் (பேசியதை வைத்து புரிந்துகொண்டேன்). ‘பீஃப் சாப்பிடுவேன்’ என்றதும் கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். நம் தென்னிந்தியர்களும் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் அல்ல. மொழி மாறினாலும் இந்தியாவில் சாதி எண்ணம் மாறவே மாறாது.

இதுவரை ஆறில் இருந்து எழு மாநிலங்களைச் சுற்றிவிட்டேன். இதெல்லாம் டெல்லியில் மட்டுமே நடந்த சம்பவங்கள். ம்ம்ஹும் மெட்ரோ சிட்டி, தலைநகர். இன்னும் நான் சென்ற வட இந்திய கிராமங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். நீட் தேர்வில் இந்தி ஆதிக்கம், மத்திய அரசின் பிற தேர்வுகளிலும் இந்தி ஆதிக்கம், ஊர் எங்கும் இந்திப் பெயர் பலகைகள் என எல்லாவற்றுக்கும் பின் அவர்களது ஆங்கிலம் மீதான பயம் இருக்கிறது. ஆங்கிலம் பேசுபவர்களை அவர்கள் அந்நியமாகப் பார்க்கிறார்கள். 200 வருடம் அடிமைப்பட்ட மனம் இன்னும் ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இந்தி திணிப்பின் பின்புறம் இருக்கும் மற்றுமோர் உண்மை இதுதான். அவர்கள் ஆங்கில அறிவு பெற இன்னும் நெடுங்காலம் ஆகும். ஐடி நிறுவனங்கள் தென்னிந்தியாவை நோக்கிப் படையெடுக்க முக்கியக் காரணம் நம்மவர்களின் ஆங்கில அறிவுதான். இந்தியைத் திணித்தபோது இதையெல்லாம் யோசித்துதான் நம்மவர்கள் அதை எதிர்த்தார்களா என்று தெரியவில்லை.

ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகப்பெரும் நன்மையை நமக்குக் கொடுத்திருக்கிறது. கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையால் எனக்குத் தமிழ், ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழி தெரியாது என்று வட இந்திய பல்கலைக்கழகத்தில் சொல்ல முடிவதில் இருக்கிறது நம் மொழிப்போரின் வெற்றி. அவர்களை மறக்காதீர்கள். முக்கியமாக நம் மொழிப் போராளிகளைப் பின்பற்றுங்கள். இந்தி திணிப்பை எத்தனை காலம் ஆனாலும் எதிர்த்திடுங்கள்.

மொழியே தெரியாவிட்டாலும் பிறந்த நாள் அன்று ஹரித்வார் கங்கை கரையில் அமர்ந்திருக்கும்போது தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த இந்திப் பாடலின் இனிமை இன்னும் காதுக்குள் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இந்தி உண்மையில் ஓர் இனிமையான மொழி. கற்பதற்கும் எளிமையான மொழி. நம்மவர்கள் எப்போதுமே இந்தியை எதிர்த்தது இல்லை. 60-களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்தபோதுதான் இந்திப் பாடல்களின் மீதான ஈர்ப்பும் அதிகமாக இருந்தது. நம்மவர்கள் எதிர்ப்பது எல்லாம் இந்தியின் ஆதிக்கத்தை மட்டும்தான். ஒருவனின் தாய் மொழியைக் கொன்று, புசித்து இந்தியை வளர்த்துவிடலாம் என்ற எண்ணம் கொண்டிருக்கும் அரசியலைத்தான் நம்மக்கள் எதிர்க்கிறார்கள். மேலும் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக்கொண்டால்தான் என்ன? வல்லரசு நாட்டு மக்கள் இதைக் கூடச் செய்யவில்லை என்றால் எப்படி?

ஏரோஸ்பேஸ் படித்துக்கொண்டிருந்தபோது ஐ.எஸ்.ஆர்.ஓ-வுக்கு ஒரு ஆய்வுக்காகச் சென்றிருந்தேன். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒரு தமிழரிடம் பேசினேன். இனிவரும் காலங்களில் ஐ.எஸ்.ஆர்.ஓ. கணினிகளில் சமஸ்கிருதத் தைப் பயன்படுத்த போகிறார்கள் என்று கூறினார். இப்போதும் அதை நினைத்தால் சிரிப்பு வருகிறது. இந்தி பேசியதற்கே இவ்வளவு பின்தங்கி இருக்கிறோம். மேலும் ஐ.எஸ்.ஆர்.ஓ-வில் அதிகமாக இருப்பது தமிழர்களும், மலையாளிகளும் தான்.அவர்களின் ஆங்கில அறிவுதான் பல ஆய்வுகளுக்கு உதவி இருக்கிறது. சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்தால் இந்தியா அறிவியலில் இன்னும் பின்தங்க ரொம்பக் காலம் ஆகாது.

இந்தியாவில் மொத்தம் 22 அதிகாரபூர்வ மொழிகள் இருக்கின்றன, 1500-க்கும் அதிகமான சிறு சிறு மொழிகள் (சமஸ்கிருதத்தையும் சேர்த்து) இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் தவிர மற்ற எல்லா மொழிக்காரர்களும் தற்போது அதிகபட்சம் இந்தியில்தான் பேசுகிறார்கள். அவர்களது மொழியை அவர்களே தெரியாமல் இழந்துவிட்டார்கள். மும்பையில் மராத்தி பேசுபவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஏன், இரண்டு மலையாளிகள் வட இந்தியாவில் சந்தித்துக்கொண்டால்கூட இந்தியில்தான் பேசுகிறார்கள். இத்தனை மொழிகளைக் காவு கொடுத்து, இந்தியாவின் பன்முகத்தைக் கெடுத்து அப்படி இந்தியைக் கட்டாயமாக்குவதன் நோக்கம்தான் என்ன?

தங்கள் மொழி, தங்களுக்கே தெரியாமல் அழிந்துப்போனதை இப்போதுதான் பிற மாநிலத்தவர்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். மேற்கு வங்கம், வடகிழக்குப் பகுதிகள், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இந்தி ஆதிக்கத்துக்கு எதிரான அலை வீசத் தொடங்கி இருக்கிறது. முதல் வரியில் எழுதியிருந்தேன்… இந்தி திணிப்பு என்ற வார்த்தைதான் பலகாலமாகத் தமிழ்நாட்டு அரசியல் தலைவிதியை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்று, இப்போது சொல்கிறேன் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்… இந்தி திணிப்பு தமிழ்நாட்டை மட்டும் அல்ல… இனி மொத்த இந்திய அரசியல் வரலாற்றையும் ஆட்டிப் படைக்கப் போகிறது. ஒருநாள் எல்லா மாநில மக்களும் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடுவார்கள்.

அதெல்லாம் சரி பன்னெடுங்காலமாக வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோமே… வேற்றுமை இருக்கிறது, ஒற்றுமை எங்கே?


இனம் இனத்தோடு சேரும்

ஒருவனின் வீட்டுவாசலில் ஒரு நாய் செத்துக்கிடந்தது.
அவன் போலீசிடம் சொன்னான்.
“போய்யா, இது எங்க வேலை இல்லை” என்று சொல்லிவிட்டு போலீஸ்காரன் போய்விட்டான்.
துப்புரவு ஆய்வாளரிடம் சொன்னான்.
“இது எங்கவேலை இல்லை, தினசரி குப்பைகூட்ட வருபவர்களிடம் சொல்” என்றான் அவன்.
குப்பைகூட்டப் பல நாட்களாக யாருமே அந்தப்பக்கம் வருவதில்லை.
கடைசியாக அந்த வார்டு கவுன்சிலரிடம் போய்ச் சொன்னான்.
“உன் வீட்டு வாசலில்தானேய்யா கிடக்கிறது? அது உன் வேலைதான். போய் நீயே எடுத்துப்போடு” என்றான் அவன்.
“சரி சரி, என் வேலைதான். ஆனால் செத்தவரை எடுத்துப் போடுவதற்குமுன் அவர்களின் சொந்தக்காரருக்குச் சொல்வது வழக்கம். அதன்படி சொன்னேன்” என்றான் வீட்டுக்காரன்.


யாருக்குத்தான் இல்லை கூர்த்தமதி?

மாருதி நிறுவனத்தில் கார்கள் தயாரிக்கப்பட்டு ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. காரை வெளியே கொண்டுவரும் போது சிக்கல் ஏற்பட்டது.

காரின் உயரத்தைவிட வாயிலின் உயரம் ஒரு அங்குலம் சிறிதாக இருந்தது. எப்படி வெளியே கொணர்ந்தாலும் மேற்கூரை இடிக்கும். குறைந்தபட்சம் காரின் மேற்புறம் கீறல் விழக்கூடும்.

“கீறல் விழுந்தால் பரவாயில்லை. மறுமுறை பெயிண்ட் அடித்து டபுள் கோட் கொடுத்து விடலாம்” என்றார் மேலாளர்.
“வேண்டாம். வாயிலின் மேற்புறம் ஒரு செங்கல் கனத்துக்கு இடித்துவிடுவோம். பிறகுமீண்டும் சிமெண்ட் பூசிவிடலாம்” என்றார் அந்த கட்டிடத்தின் இஞ்சினியர்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த வயதான காவலாளி சொன்னார்: “அதெல்லாம் வேண்டாம், கார்களின் சக்கரத்தின் காற்றைச் சற்றே இறக்கிவிடுங்கள். சரியாகப் போய்விடும்!”

கேட்டுக் கொண்டிருந்த கம்பெனியின் டைரக்டர் பொட்டில் அடித்தது போல் நிமிர்ந்தாராம்.
(மின்னம்பலம் செய்தி)


அடுத்த பிறவி

சாதியைவிடக் கடுமையாக நாம் எதிர்க்கவேண்டியது இந்துமதத்திலுள்ள முற்பிறவி-அடுத்தபிறவி-தலைவிதிக் கொள்கை. சமுதாயத்தை மாற்றமின்றி, போராட்டமின்றி வைத்திருக்கவும் அடிமைகளை அடிமைகளாகவுமே வைத்திருக்கவும் உருவாக்கப்பட்ட கொள்கை இது.

மலம் அள்ளுபவனையும் மாட்டுத்தோல் உரிப்பவனையும் “இதெல்லாம் உன் பூர்வ ஜென்ம பலன்”

“நீ இந்த சாதியில் பிறந்ததே உன் முன்வினை”

என்று சொல்லும்போது அவன் சமுதாயத்தை எப்படி எதிர்ப்பான்? பெண்ணாகப் பிறந்து அதனாலேயே பலவிதக் கஷ்டங்களுக்குள்ளாகும் ஒருத்தியைப் பார்த்து,

“எல்லாம் உன் தலைவிதி, போன ஜென்மத்தின் பலன், அடுத்தபிறவி உனக்கு நல்லதாகக் கிடைக்கும்”

என்று சொல்லிவிட்டால் அவள் என்ன செய்ய முடியும்?

“உனக்குக் குறைவான கூலி கிடைக்கிறதா, எல்லாம் போன ஜென்ம வினையப்பா, தலையெழுத்து”

என்று சொல்லிவிட்டால் அவன் அதிக ஊதியத்துக்குப் போராடுவானா?

பூர்வஜென்மத்தையும் மறுபிறவியையும் ஆதரிக்கும் முற்போக்காளர்கள், அடுத்தபிறவியில்தான் புரட்சி செய்யவேண்டும். இந்தக் கொள்கை இந்தியாவில் நிலைத்திருக்கும் வரை கார்ல் மார்க்ஸ் இங்கு உள் நுழையவே முடியாது.

சரி, “அப்படியானால் செய்த வினைக்குப் பலனே இல்லையா” என்று கேட்கிறீர்களா? உண்டு, எல்லாம் இந்தப் பிறவிக்குள்தான்.