மாற்று-நெகிழி

பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட போதிலும் நுகர்வோர் சந்தையில் பிளாஸ்டிக் பைகளின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கவே செய்கிறது. ஒவ்வொரு நாளிலும் நச்சுத்தன்மையுள்ள 40000 டன்கள் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. சுற்றுச்சூழலுக்கிசைந்த ஒரு பொருளை பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகத் தயாரிக்க வேண்டும் என அஷ்வத் ஹெக்டே என்ற மங்களூரைச் சேர்ந்த முதலீட்டாளர் முயற்சி எடுத்துக் கொண்டார்.

நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு அஷ்வத் ஒரு பசுமைத் தொழில்நுட்ப மாற்றினைக் கண்டுபிடித்தார். அவரும் அவரோடு சேர்ந்த 11 அறிவியலாளர்கள், சூழலியலாளர்களும் இந்தப் பொருளை உற்பத்தி செய்வதற்காக என்விகிரீன் பயோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் 100 சதம் இயற்கையான, மக்கக்கூடிய, பைகளை உற்பத்தி செய்யத் தொடங்கியிருக்கிறது. பார்ப்பதற்கு அவை பிளாஸ்டிக் பைகளைப் போன்றே இருக்கின்றன.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத இந்தப் பைகள் உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்குகளிலிருந்து கிடைக்கும் இயற்கையான மாவுப்பொருள், தாவர எண்ணெயிலிருந்து கிடைக்கும் பொருட்கள், காய்கறிக் கழிவுகள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. 180 நாட்களில் இந்தப் பைகள் மக்கிவிடும். தண்ணீரில் முக்கினால் ஒரு நாளில் கரைந்துவிடும். நாம் வழக்கமாக கடைகளுக்கு எடுத்துச் செல்லும் பைகள் எவ்வளவு எடையைத் தாங்குமோ அவ்வளவு எடையை இந்தப் பைகளும் தாங்கும். 8-லிருந்து 10 கிலோகிராம் வரை தாங்கக் கூடிய பெரிய பைகளும் உண்டு. இவற்றை உட்கொள்ளும் விலங்குகளுக்கு பிளாஸ்டிக் பைகளைப் போல் இவை தீங்கு செய்வதில்லை.

“என்விகிரீன் ( EG) பைகள் 100 சதம் இயற்கையானவை, உட்கொள்ளத்தக்கவை, மறுசுழற்சி செய்யப்படக்கூடியவை. தொடர்ந்து நாம் பயன்படுத்தினால் ஒரு கட்டத்தில் பிளாஸ்டிக்கையே நம் நாட்டிலிருந்து ஒழித்துவிடலாம்” என்கிறார் ஹெக்டே.

ஒரு பசுமைப் பையின் விலை பிளாஸ்டிக் பையின் விலையைவிட அதிகம்தான். ஆனால் ஒரு துணிப்பையின் விலையைவிடக் குறைவானது என்கிறார் அஷ்வத்தின் குழுவில் உள்ள ஓர் உறுப்பினர். “பசுமைப் பைகளில் ஒரு சதம் கூட பிளாஸ்டிக்கோ வேறு வேதியியல் பொருட்களோ கிடையாது. பைகளில் அச்சிடப் பயன்படுத்தும் பெயிண்ட் கூட பசுமைப் பொருட்களால் ஆனது” என்கிறது என்விகிரீன் நிறுவனம். கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட், தொழில் ஆராய்ச்சிக்கான ஸ்ரீராம் இன்ஸ்டிட்யூட் ஆகிய நிறுவனங்கள் பல சோதனைகளை நடத்தி இயற்கைப் பைகளில் சிறிதளவு கூட பிளாஸ்டிக் இல்லை என்பதை உறுதி செய்திருக்கின்றன.

கடைகளுக்கு எடுத்துச் செல்லும் பைகள் போக, குப்பை போடும் பைகள், எண்ணெய் அடங்கிய சிறு பைகள் (sachets)), குப்பைத் தொட்டிகள், பிலிம் பாக்கெட்டுகள், மேலங்கிகள், உறைகளுக்கான கவர்கள், சலவைப் பைகள் போன்ற பல்வேறு பொருட்களையும் என்விகிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. விவசாயிகளிடமிருந்து காய்கறிக் கழிவுகளை நல்ல விலை கொடுத்து வாங்கி விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கவும் நிறுவனம் உதவுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படூம் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் சுற்றுச்சூலுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்கவும் என்விகிரீன் நிறுவனம் எடுத்துவரும் முயற்சிகளை வரவேற்போம்.. வாழ்த்துவோம் !


மேனிலையாக்கத் தமிழர்கள்

தமிழர்கள் உயர்ந்த நிலை பெறும்போது தங்களைத் தமிழர்களாகக் காட்டிக் கொள்வதில்லை, வேறு மாநிலத்தவர்களாகக் காட்டிக் கொள்வது அடிக்கடி நடக்கும் விஷயம். ஏ.கே. இராமாநுஜன், ஆர்.கே. நாராயணன் போன்றவர்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தமிழகத்தில் அவர்களின் தந்தை/தாய்/பெற்றோர் இருவரும் பிறந்திருப்பர், அல்லது தாங்களே பிறந்திருக்கலாம், இருப்பினும் புகழ்வரும்போது அவர்கள் கர்நாடக மாநிலத்தவர் ஆகிவிடுகின்றனர். இவர்களின் முன்னோடி மாஸ்தி வேங்கடேச ஐயங்காரும் அப்படியே. சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் அப்படியே. சர்வபள்ளி திருத்தணிக்கு மிக அருகிலுள்ள சிற்றூர். ஆனால் இப்போதெல்லாம் அவரை ஆந்திரர் என்றே அடையாளப் படுத்துகிறார்கள்.
இந்த வரிசையில் அண்மையில் என் மருமகனும் சேர்ந்துள்ளார் என்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. திரு. டாக்டர் அருண் (அருணாசலம்) எம்.டி., ஐ.ஏ.எஸ்., என் தங்கை மகன். அவர் தந்தை சோளிங்கர் அருகில் ஆயல் கிராமத்தில் பிறந்தவர். தாய் ஆர்க்காடு. மைசூரில் தந்தை இரயில்வே வேலையிலிருந்த காலத்தில் பிறந்ததனால் அவர் மைசூர்க்காரர் ஆகிவிட்டார். ஐஏஎஸ் முடித்து இப்போது மிசோரம் பகுதியில் ஒரு கலெக்டராக இருக்கும் நிலையில் அவர் சிறந்த நற்பணிகள் ஆற்றிவருகிறார். அவரது சேவை மனப்பான்மை மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது. ஆனால் தன்னைப் பற்றி பேட்டி எடுத்த ஆங்கிலப் பத்திரிகையில் அவர் மைசூர்ப்பகுதியைச் சேர்ந்தவராக (கன்னடராக)த் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறார் என்பது வருத்தத்தை தருகிறது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்தது போல தமிழ்நாட்டு அறிவுஜீவிகளையும் அடுத்த மாநிலத்துக்கே தருகின்ற தமிழகத்தின் அவப்பேற்றினை என்ன சொல்ல?


தண்ணீர், தண்ணீர் !

மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக நீர்வளர்ச்சி அறிக்கை நம்மை மிகவும் அழுத்திக்கொண்டிருக்கும் தண்ணீர் நெருக்கடிக்கு விடைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது. நீடித்த வளர்ச்சிக்கான 2030 செயல்திட்டத்திற்கான கொள்கைகளும் நோக்கங்களும் மேற்கண்ட அறிக்கையோடு பொருந்தி வருகின்றன. தண்ணீர் நெருக்கடியை போகிற போக்கில் சமாளித்துவிட முடியாது என்பதும் தெளிவாகியிருக்கிறது. நீடித்த உணவு தானிய உற்பத்தி, குடிநீர் விநியோகத்தையும் பொது சுகாதாரத்தையும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, தண்ணீர் சம்பந்தமான விபத்துகள் நேரும் அபாயத்தைக் குறைப்பது, பருவநிலை மாற்றம் விளைவிக்கும் மாற்றங்களுக்கு நம்மைத் தகவமைத்துக் கொள்வது போன்ற துறைகளில் பெரும் நம்பிக்கை தரும் இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் நிச்சயம் உண்டு.

2050-க்குள் ஏற்படப் போகும் உலக மக்கள் தொகை வளர்ச்சியில் பாதிக்கும் மேற்பட்ட வளர்ச்சி ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும்தான் இருக்கப்போகிறது. எனவே, நீர் நெருக்கடியை அதிகம் சந்திக்கப் போகிறவர்கள் வளரும் நாடுகளில் உள்ள மக்களே. இந்திய நகரங்களில் உள்ள நீர்நிலைகள் மிக அதிகமாக மாசுபட்டிருப்பதால், கடும் நீர் பற்றாக்குறையைச் சந்திக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது. வளரும் நாடுகளில் தொழிற்சாலைகள் மற்றும் நகராட்சிகளின் கழிவுநீரில் 80 சதம் எவ்வித சுத்திகரிப்பும் இல்லாமல்தான் வெளியேறுகிறது. மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்டவை மாசடைந்தவை என இந்திய மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிடுகிறது. நாட்டில் மாநிலங்களுக்கிடையே ஓடும் 40 ஆறுகளில் 16 ஆறுகள் முற்றிலும் மாசுபட்டுப் போனதற்கு சாக்கடைக் கழிவுகளும் தொழிற்சாலைக் கழிவுகளுமே காரணம் என வாரியம் கண்டறிந்திருக்கிறது.

பயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும். ஆழமான உழவு, அடிமண் உழவு மற்றும் வருடாந்திர உழவு போன்றவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பு உழவு (conservation tillage) எனப்படுகிறது. அதோடு, பல்வகைப் பயிர்களைப் பயிரிடுதல், பருப்புவகைகளை அதிகமாகப் பயிரிடுதல், உயிரியல் முறைகள் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்ற சுற்றுச்சூழலுக்கிசைந்த இயற்கையோடு ஒட்டிய வேளாண் முறைகளை மேலும் மேலும் பயன்பாட்டிற்குக் கொணர வேண்டியது இங்கே அவசியமாகிறது.

கழிவுநீரைச் சுத்திகரிக்க ஈரநிலங்களை (wetlands) உருவாக்குவது செலவைக் குறைக்க உதவும். பயிரிட நிலம், ஆற்றல் தயாரிப்பு போன்ற கூடுதல் நன்மைகளும் இதனால் கிடைக்கும். உலகின் பல பகுதிகளில் இம்மாதிரி வழிமுறைகள் புழக்கத்தில் இருக்கின்றன. இயற்கையான அல்லது உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள் கழிவுகளை மக்கச் செய்கின்றன அல்லது செயல்பட விடாமல் தடுக்கின்றன.

நீர்ப்பிடிப்பு மேலாண்மை (watershed management) தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்க உதவும் மிக முக்கியமான இயற்கையோடு ஒட்டிய தீர்வு. விண்ணிலிருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு துளி நீரையும் நீர்நிலைகளிலும் நிலத்தடியிலும் சேமிப்பதுதான் நீர்ப்பிடிப்பு மேலாண்மை. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, வேலைவாய்ப்பை உருவாக்க, உயிரியல் பன்மையைப் பாதுகாக்க, பருவநிலை மாற்றங்களைத் தாக்குப் பிடிக்க என வேறு கூடுதல் நன்மைகளையும் அதன் மூலம் பெறலாம்.

ஒரு மாநகரம் வளர்ச்சி பெறும்போது வரும் சவால்களைச் சந்திப்பதில் இயற்கை எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக சென்னையை எடுத்துக் கொள்ளலாம். முன்பெல்லாம் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யும்போது ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள், வடிகால் அமைப்புகள் எல்லாம் நிலத்தடி நீரைப் புதுப்பித்துக் கொண்டு கூடுதல் நீரை கடலுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க உதவும். ஆனால் மாநகர வளர்ச்சி என்ற பெயரில் பல ஏரிகளும் குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களும் தொழிற்சாலைகளும் எழுப்பப்பட்டுவிட்டன. கூடுதல் நீரை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்த கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்நிலைகள் இன்று திறந்தவெளி சாக்கடைகளாக மாறிவிட்டன. கூடுதல் மழைநீரை உறிஞ்சிப் பாதுகாத்துக் கொண்டிருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம் இன்று அந்தப் பணியைச் செய்ய முடியாததாக ஆகிவிட்டது.

இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை நோக்கி நாம் செல்வோமானால் நீர் மேலாண்மையை மேம்படுத்த முடியும், நீர்ப்பாதுகாப்பையும் பெற முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.


கனவுகள்

1 தமிழர்கள் எல்லோருக்கும் உலக தரத்திலான மருத்துவம் இலவசமாக கிடைக்க வேண்டும்…
2 தமிழர்களின் குழந்தைகள் எல்லோருக்கும் உலகத் தரத்திலான ஒரே கல்வி முறையும் கல்வியும் கட்டணமின்றி கிடைக்க வேண்டும்
3 தமிழகமெங்கும் நீர் ஆதாரம் பெருகி நீர் வளம் மிக்க பூமியாக மாற வேண்டும்.
4 தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் ஒரு பைசா லஞ்சமில்லாமல் மக்களுக்கான சேவைகள் நடக்க வேண்டும்.
5 தமிழகத்தில் விவசாயம் சிறப்புற நடந்து ஏற்றுமதி செய்யுமளவுக்கு உபரி உற்பத்தி காய்கறி, பழங்கள், தானியங்களில் கிடைக்க வேண்டும்.
6 தன்னலமில்லாத , எளிமையும் பண்பும் கொண்ட அரசியல் தலைவர்கள் தமிழகத்திற்கு வேண்டும்.
7 தமிழர்கள் சாதி ஒழிந்த சமூகமாக ஒரே இன மக்களாக விளங்க வேண்டும்.


FDI

பொறியாளர் பக்கிரிசாமி என்பார் கூறியன, ஆர்வலர் அய்யநாதன் வழியாக–

FDI என்கிற அந்நிய நேரடி முதலீட்டு கொள்கைகள் மூலம் பல நிறுவனங்கள் உள்ளே நூழைந்துவிட்டன. உதாரணமாக 300 million euro (2500 crore INR) மதிப்பில் ஒரு பிரான்ஸ் தொழிற்சாலை(1200MW Turbine Generator) அண்மையில் குஜராத்தில் நிறுவப்பட்டது. முதலில் ஒரு இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இங்கே களத்தில் இறங்கியது. நிலம் தொழிற்சாலை கட்டுமானம் மனித ஆற்றல் முழுவதும் இந்திய நிறுவனம் ஏற்றது அதாவது வங்கி கடன் மூலம் மூலமே; அவர்கள் வெறும் தொழில்நுட்பத்தை தருவார்கள் என்கிற புரிதல் ஒப்பந்தம்!
ஆனால் முழுவதும் இந்திய பொருளாதாரத்திலேயே அமைக்கப்பட்டது.

கட்டுமானம் முடிந்து சாவி கைக்கு போனதும் இந்திய நிறுவனம் கழற்றிவிடப்பட்டது மற்றுமன்றி, இதை வாங்கிய பிரான்சு நிறுவனம் அப்படியே 30% இலாபம் வைத்து அமெரிக்க நிறுவனத்துடன் விற்றுவிட்டு கழன்றுகொண்டதோடு, இந்தியாவில் அதன் தடமே இல்லை குறிப்பாக டர்பைன் ஜெனரேட்டர் தயாரிப்பில்!

தற்போது இதை வாங்கிய அமெரிக்க நிறுவனம் எதிர்பார்த்த break even point ஐ எட்ட முடியாமல் ஒவ்வொரு யூனிட்டாக மூடிக்கொண்டு வருகிறது என்றால் இந்தியா பொருளாதாரத்தின் முக்கிய பங்கு யாரிடம் உள்ளது?

இது ஒரு நிறுவனத்தைப்பற்றிய கதை மட்டுமே, குஜராத்தில் உள்ள ஒட்டுமொத்த நிறுவனங்களின் கணக்கை போட்டால் நமக்கு மயக்கம் வரும் என்கிற நிலையில், இந்திய பொருளாதாரம் முற்றிலும் அந்நிய முதலீடு என்கிற விளையாட்டில் காணாமல் போய் நெல்லிக்காய் அளவிற்கு வந்துவிட்டது!

உள்ளே புகுந்துள்ள நிறுவனங்கள்–
ABB(old & existing)
SIEMENS (old &existing)
Schneider (old& existing)
Alstom (formal company)
GE (new)
MHI(new)
எனவே இவர்கள் இங்கிருக்கும் L&T, ESSOR, Relience, sapoorji palonji, Dalmia, mital, OP ZINDAL. TATA, ADHANI, VEDANTA மற்றும் பொதுத்துறை நவ மகா ரத்னா BHEL, BEL, SAIL, VIZAK, NOCL, CAI, STEEL, NLC போன்ற நிறுவனங்களுடன் கூட்டுவைத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஏன் நம்மை ஆளுகிற எண்ணம் வராது சொல்லுங்கள்? இதுதானே தாராளமயமாக்கல்? இதற்காகவா சுதந்திரம் பெற்றோம்?


மய்யம்

கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று பெயரிட்டு கட்சியைத் தொடங்கியுள்ளார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பே ‘மய்யம்’ என்று பத்திரிகை நடத்தியவர் கமல். பல பத்திரிகைகளில், சிறுகதை, தொடர்கதை, கட்டுரைத் தொடர் என்றெல்லாம் எழுதிய கமல்ஹாசன், மய்யம் பத்திரிகையில், அடிக்கடி கவிதைகள் எழுதிவந்தார்.

தன் முதல் மகள் ஸ்ருதிஹாசன் பிறந்த போது, ஓர் கவிதை எழுதி, மய்யம் பத்திரிகையில் பிரசுரித்திருந்தார் கமல். இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, சுஜாதா உட்பட பலரும் பாராட்டியுள்ளனர்.
அந்தக் கவிதை இதுதான்…

ப்ரதிபிம்பம் பழங்கனவு மறந்த
என் மழலையின் மறுகுழைவு
மகளே உனக்கு என் மூக்கு என் நாக்கு
என் தாய் பாடித் தூங்கவைத்த தாலாட்டு
தினமுனக்காய் நான் படிப்பேன் என் குரலில்.
பாசத்தில் என் பெற்றோர் செய்த தவறெல்லாம்
தவறாமல் நான் செய்வேன் உன்னிடம்
கோபத்தில் ச்சீ என நீ வெறுக்க
உடைந்த மனதுடனே மூப்பெய்வேன்
என் அப்பனைப் போல்.
அன்று சாய்வு நாற்காலியில் வரப்போகும்
கவிதைகளை இன்றே எழுதிவிட்டால்
உன்னுடன் பேசலாம்
எழுதிவிட்டேன் வா பேச!

The hindu tamil