நாமும் பார்ப்பனர்களும்

பூர்வகுடி இந்தியர்களாக உங்களைக் கருதிக் கொள்பவர்களே, பார்ப்பனர் அல்லாதவர்களே, சிந்தியுங்கள்..

இன்னும் எத்தனை ஆண்டுகள் பார்ப்பனர்களைக் குறை சொல்லியே வாழப் போகிறோம்? இந்த நோக்குமுறை போதாது.

நாட்டில் வெறும் மூன்றுசதவீதமே உள்ள பார்ப்பனர்களை ஏன் எதிர்க்க வேண்டும்?

உண்மையில் தவறு யார் மீது என்று கேட்டால் பிரித்தாளும் சூழ்ச்சி , மந்திரம், தந்திரம் என்று சொல்லுகிறோம்…இதில் உண்மை இருக்கிறது. என்றாலும்,

அவர்களது சுயநல வாழ்க்கை, சமூக நோக்கம் அறவே இன்மை குறித்த சில விஷயங்களை கவனியுங்கள். அவற்றில் நல்லவற்றை (உதாரணமாக மது அருந்தாமை போன்றவை) நாம் பயன்படுத்த வேண்டும்.

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது 1000 ரூபாய், வேண்டாம்… ஒரு நூறு ரூபாய் டிக்கெட் எடுத்து எந்த சினிமா தியேட்டரிலாவது படம் பார்த்ததுண்டா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைத்து, அந்த நடிகரின் படங்களுக்கு பாலபிஷேகம், கட்அவுட், சுவர் விளம்பரங்கள், போஸ்டர் ஒட்டுதல் போன்ற கண்றாவிகளை செய்து தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், தெரு மின்விளகு, இலவச மனைப் பட்டா, இலவச வீடுகள் கேட்டு எந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்போ, வட்டாட்சியர் அலுவலகம் முன்போ போராடியதைப் பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது சொந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒயின் ஷாப்பில் பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானம் குடித்து அவர்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்ததைப் பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது அவர்களுக்குச் சம்பந்தம் இல்லாத எந்தக் கட்சியிலாவது கூட்டாகச் சேர்ந்து மக்களுக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி , சாலை மறியல், ரயில் மறியல், அரசு அலுவலகங்கள் முன் முற்றுகை, சிறை போன்றவற்றைச் சந்தித்ததை பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது, தேர்தல் நேரங்களில் எந்தக் கட்சியாவது ஓட்டுக்கு பணம் கொடுக்காதா என்று வீட்டு லைட்டை ஆஃப் செய்துவிட்டு, வீட்டு வாசலில் இரவு முழுவதும் கண் விழித்துக் காத்திருக்கும் அவலத்தை பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது அரசு அலுவலகங்களிலோ , தனியார் நிறுவனங்களிளோ கடை நிலை ஊழியர்களாக பணி செய்வதைப் பார்த்திருக்கிறோமா?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது, உடலுழைப்பு செய்தோ, விவசாயம் செய்தோ, சாக்கடை அள்ளும் வேலையிலோ, துப்புரவு பணிகளிளோ, இயற்க்கை பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளிளோ ஈடுபட்டதை பார்த்திருக்கிறோமா?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது சொந்தப் பணத்தைப் போட்டு கோயில் கட்டி, கூழ் ஊற்றி, முதுகில் அலகு குத்தித் தேர் இழுத்தோ, காவடி எடுத்தோ, வேலை தாடையில் மற்றும் உடல் முழுவதும் குத்திக்கொண்டோ, காலில் ஆணி செருப்பு போட்டுக்கொண்டோ, சாமி வந்து மிரண்டோ பார்த்திருக்கிறோமா ?

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்,

மேற்கண்ட எதுவுமே செய்யாத 3 சதவீத பிராமண மக்களுக்கு எல்லாம், குறிப்பாக எல்லா உயர் அதிகாரி வேலைகளும் எப்படி கிடைக்கின்றன?

நாட்டில் 97 சதவீதம் BC மக்களான SC /ST, MBC/OBC Religious minorities, போன்ற சாதி முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் ஏன் இன்னும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், இலவச மனை பட்டா, தெருவிளக்கு, சாலைவசதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அலைந்து, திரிந்து காத்துக்கிடக்கிறோம்?

உண்மையில் 3 சதவீத பார்ப்பனர்கள் 97 சதவீத நாட்டின் பெரும்பான்மை மக்களான SC /ST, MBC/OBC மக்களை ஏமாற்றி அதிகாரத்தில் இருக்கிறார்களா?

இதில் பெருமளவு உண்மை யிருக்கிறது. அவர்கள் தங்கள் புராணங்களால், கட்டுக்கதைகளால் நம்மை இன்றுவரை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் மனுநீதி போன்ற வற்றை அழிக்கச் சொல்லுகிறோம். அவர்கள் ஏமாற்றுவதை நாம் மறுக்கும்போது அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் நீதித்துறை, அதிகாரங்கள், பதவிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி நம்மை அழிக்கிறார்கள். இருந்தாலும், பெருமளவில்

97 சதவீத நாட்டின் பெரும்பான்மை மக்களான நாம் வெறும் 3 சதவீத பார்ப்பனர்களிடம் ஏமாந்து போகிறோம் என்பதிலும் உண்மை இருக்கிறது.

காலணாவுக்குப் பொறாத பூணூல் கும்பலுக்கு , அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்தையும் நாம் தான் அவர்களுக்கு கொடுக்கிறோம்…

கல்யாணம் தொடங்கி கருமாதி , நினைவு நாள் போன்ற வீட்டில் நடக்கும் அத்தனை சுக துக்க நிகழ்வுகளுக்கும் பிராமணர்களை வரவழைத்து வேட்டி, துண்டு உட்பட, பச்சரிசி, பழம், தேங்காய், நெய் போன்ற பொருட்களை கொடுத்து தட்சணையாக 2000, 3000 கொடுத்து “போய்ட்டு வாங்க சாமி” என்று அனுப்புவது நாம்தான்,

அரசியல் அதிகாரம், நிர்வாக அதிகாரம், சினிமா, விளையாட்டு, பத்திரிகைகள், ஊடகங்கள் இவைகளில் கோலோச்சுவது பார்ப்பனர்களே, ஆனால் இவை அனைத்திற்கும் பணத்தை மட்டுமே விரயம் செய்துகொண்டிருக்கும் கூட்டம் வேறு யாருமல்ல நாம்தான்,

சினிமா, ஊடகம், பத்திரிகைகள், விளையாட்டை நாம் புறக்கணித்து விட்டாலே ஒன்று முதல் ஒன்றரை சதவீத பார்ப்பனக் கூட்டம் துண்டை தலையில் போட்டுக்கொள்வார்கள்.

(BC, SC /ST, MBC/ OBC மற்றும் மதச் சிறுபான்மையினர்)-பொது மக்கள் தங்கள் புத்தியை தீட்டி அரசியல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்…

இதற்குத் தடையாக இருக்கும் சாதிய, மத, இன, மொழி வாதப் பிரிவினைகளை விதைக்கும் பார்ப்பனியச் சனாதனத்தைத் (Brahminism) தூக்கி எறிந்துவிட்டு

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற ஜனநாயக( Democracy) ஒற்றை முழக்கத்தோடு நாம் யாவரும் ஓரணியில் திரண்டு விட்டால்..

மீதி 1-1 1/2 சதவீத பார்ப்பனக் கூட்டத்தின், கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களின் சாதிய ஏற்றத்தாழ்வு அடிமை முறைக்கு முடிவுகட்டமுடியும்..

இதையெல்லாம் விட்டுவிட்டு ..
சுய சாதிப் பெருமை, மதவாதப் பிரச்சினைகள், நான் பெரியவன், நீ பெரியவன் என்று பார்ப்பனிய-சாதிய அடிமைச் சிந்தனையோடு நமக்குள்ளே அரைவேக்காட்டுத் தனமாகச் சண்டை போட்டுக் கொண்டு , ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக்கொண்டு செத்து போவோமானால்,

அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் தற்போது 3 சதவீதமாக உள்ள பிராமணர்கள் மட்டுமே உயிரோடு இருப்பார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில், ஏமாற்றும் கும்பலும் இருந்து கொண்டே இருக்கும்…

மாறவேண்டியது நாம்தானே அன்றி, பார்ப்பனர்களோடு வீண் போராட்டம் வேண்டாம்.

முதலில் நம்மை நாம் மாற்றிக்கொள்வோம், “நம்முடைய அனைத்து துன்பப் பூட்டுகளுக்கும் “ஆட்சி அதிகாரமே திறவு கோல்”.

ஆட்சியை மாற்றி ஆட்சியாளராக மாறுவதே நம்முடைய இலக்கு…
எதிர்த்து அழித்து ஒழிக்க வேண்டியது பார்ப்பனர்களை அல்ல…

பார்ப்பனியத்தைத்தான்.

பார்ப்பனியக் கொள்கைகளான சாதி மதத்தைத் தாங்கி வாழும் பார்ப்பனியர்களாக இருந்து நம்மால் ஒரு போதும் அதைச்செய்ய முடியாது.

நாம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட வேண்டும்.

அப்போது தான் இந்தியாவும், இந்தியர்களும், உயர்வடைவார்கள்.


மொழி குறித்த மற்றொரு சந்தேகம்

திரு. அற்புதராஜ்: தொழில்+நுணுக்கம் தொழிற்நுணுக்கம் என்று இணைக்கலாமா?

நான்: லகரத்துடன் (ல்) வல்லினம் (க்,ச்,த்,ப்) சேர்ந்தால்தான் ற் அங்கே வரும்.

அதாவது பழங்கால வழக்கின்படி, நிலைமொழி இறுதியில் லகரம் வர, வருமொழி தொடக்கத்தில் வல்லினம் (க,ச,த,ப) வந்தால்தான் றகர ஒற்று அங்கே மிகும்.

உதாரணமாக பல் + பொடி=பற்பொடி, நெல் + குவியல் = நெற்குவியல், சொல் + சிலம்பம் = சொற்சிலம்பம் என்பது போல.

லகரமும, நகரமும் (ல் + ந், இரண்டுமே மெல்லினம்) சேரும்போது இடையில் வல்லினம் வர வாய்ப்பே இல்லை. மெல்லினமும் மெல்லினமும் சேரும்போது வல்லினம் எப்படி இடையில் வரக்கூடும்? இது மொழிதெரியாத பெரும்பிழையாகும். அழுத்தமிருப்பின், ல் + ந் = ன் என்றுதான் ஆகும். புல் + நுனி = புன்னுனி என்பது போல.

சொற்கள் சேரும்போது இடையில் அழுத்தம் இருந்தால்தான் சந்தி வரவேண்டும். தொழில், நுட்பம் ஆகிய இரண்டும் சேரும்போது
“தொழில்ந்ந்ந்நுட்பம்” என்பது போலச் சொல்லழுத்தம் வர வாய்ப்பில்லை. இதைத்தான் இயல்பு புணர்ச்சி என்றார்கள் பழங்காலத்தில். அதாவது சொற்கள் அப்படியே இயல்பாக வரும். இடையில் வேறு எதுவும் வராது என்பது பொருள்.

தமிழ் கற்பவர்கள் மொழிப் பயன்பாட்டை (பேச்சு, எழுத்து) வைத்து யோசிக்க வேண்டும்.
வெறுமனே (நன்னூல் போன்ற நூல்களின்) விதிகளை வைத்து யோசிப்பதால்தான் மொழி கெட்டுவிட்டது. ஏனெனில் அவற்றில் மொழிப்பயன்பாட்டை ஒட்டி எவ்விதம் விதிகள் உருவாயின என்று சொல்லப்படுவதில்லை.


மொழி குறித்த ஒரு சந்தேகம்

கேள்வி (விவேக்): வணக்கம் மாமா, ஆங்கில உரையாடல்களில் ஒருவர், well!, how are you? என்று பேசுகிறார் என்றால், ‘well’ என்ற சொல்லை தமிழில் எப்படி மொழிப்பெயர்ப்பு செய்வது?

பதில் : Well, your question is not correct. In speech, each and every language has its own customs and we need not/ should not translate them.

1) well என்ற சொல் அது ஒரு உரையாடலின் தொடர்ச்சியாக வருகிறது என்பதைக் காட்டுகிறது. கட்டாயம் மொழிபெயர்த்தாக வேண்டுமென்றால், ‘சரி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்கலாம். (இங்கும் சரி… என்பது உரையாடலின் தொடர்ச்சியே.)

2) ஒரு ஜோக் உண்டு. தமிழில் “நீ உன் குடும்பத்தில் எத்தனையாவது பிள்ளை?” என்று கேட்பதை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க லாம்? how manyieth issue are you in your family என்றா? அதனால் தான் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பேச்சு மரபு உண்டு என்றேன்.

அவரவர் மொழியின் வழக்காற்றை அந்தந்த மொழியில் பயன்படுத்த வேண்டுமே அன்றி, மறறொரு மொழியின் வழக்காற்றை அல்ல. அதனால்தான் கேள்வி தவறு என்றேன்.
மேலும் ஒரு தெளிவாக்கம்.

3) மொழிப்பெயர்ப்பு அல்ல, மொழிபெயர்ப்பு-தான்.

வல்லினம் மிகும் இடங்களுக்கு வல்லின ஒற்று போடாமல் விடுவதை விட, தேவையற்ற இடங்களில் போடுவது மிகக் கொடுமையானது. இப்போதெல்லாம் தவறான வழக்குகளை யாராவது கொண்டுவந்துவிட, அதை அப்படியே பின்பற்றிவிடுகிறார்கள். உதாரணமாக, புகைப்பிடிப்பது. [ஓரெழுத்துச் சொல் (கைப் பிள்ளை) லுக்குப் பின், இரண்டாம் வேற்றுமையில் ஐ உருபு-க்குப் பின் (அதைச் செய்வது) வல்லெழுத்து வரலாம். மற்ற இடங்களில் வரலாகாது.]

இப்படித்தான் ஒரு கூமுட்டை நடிகன் அருணாசலம் என்ற சொல்லை “அருணாச்சலம்” என்று எழுதப்போக அதையே பின்பற்றுகிறார்கள் மற்ற கூமுட்டைகள். இப்படித்தான் தமிழ் கெடுகிறது. (ஆனால் சினிமாத்துறையில் இருந்த பஞ்சு அருணாசலம், இறுதிவ‍ரை தன் பெயரை அருணாசலம் என்றுதான் எழுதிவந்தார் என்பதை கவனிக்கவும், அந்தக் கூமுட்டை நடிகனுக்காகத் தன் பெயரை அவர் தவறாக எழுதவில்லை).




நாட்டைக் கெடுப்பவர்கள்

இதோ நாட்டை வீழ்த்தியவர்கள் விவரம்!

(டெல்லியினை அடிப்படையாகக் கொண்ட ‘யங் இந்தியா’ எனப்படும் நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் கிடைக்கிறது இத்தகவல் )

ஃ ஜனாதிபதி செயலகத்தின் மொத்தப் பதவிகள் – 49.
பிராமணர்கள் – 39,
SC/ST – 4,
OBC – 06.

ஃ துணை ஜனாதிபதி செயலகப் பதவிகள் – 7.
பிராமணர்கள் – 7,
SC/ST – 00,
OBC – 00.

ஃ கேபினட் செயலாளர் பதவிகள் – 20.
பிராமணர்கள் – 17,
SC/ST – 01,
OBC – 02.

ஃ பிரதமரின் அலுவலகத்தில்
மொத்த பதவிகள் – 35.
பிராமணர்கள் -31,
SC/ST – 02,
OBC – 02

ஃ விவசாயத் திணைக்களத்தின்
மொத்த பதவிகள் – 274.
பிராமணர்கள் – 259,
SC/ST – 05,
OBC – 10.

ஃ பாதுகாப்பு அமைச்சக பதவிகள் – 1379.
பிராமணர்கள் – 1300,
SC/ST – 48,
OBC – 31.

ஃ சமூக நல & சுகாதார அமைச்சகத்தின் மொத்த பதவிகள் – 209.
பிராமணர்கள் – 132,
SC/ST – 17,
OBC – 60.

ஃ நிதி அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள் – 1008.
பிராமணர்கள் – 942,
SC/ST – 20,
OBC – 46.

ஃ பிளானட் அமைச்சகத்தில் பதவிகள் மொத்தம் – 409.
பிராமணர்கள் – 327,
SC/ST – 19,
OBC – 63.

10 – தொழில் அமைச்சகத்தின்
மொத்த பதவிகள் – 74.
பிராமணர்கள் – 59,
SC/ST – 5,
OBC – 10.

ஃ கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த பதவிகள் – 121. பிராமணர்கள் – 99,
SC/ST -00,
OBC – 22.

ஃ கவர்னர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் ஒட்டுமொத்தம் – 27.
பிராமணர்கள் – 25.
SC/ST – 00,
OBC – 2.

ஃ வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இந்திய தூதர்கள் – 140.
பிராமணர்கள் – 140,
SC/ST – 00,
OBC – 00.

ஃ மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் – 108.
பிராமணர்கள் – 100,
SC/ST – 03,
OBC – 05.

ஃ மத்திய பொதுச் செயலாளர்
பதவிகள் – 26.
பிராமணர்கள் – 18,
SC/ST – 01,
OBC – 7.

ஃ உயர் நீதிமன்ற நீதிபதிகள் – 330.
பிராமணர்கள் – 306,
SC/ST – 04,
OBC -20.

ஃ உச்ச நீதிமன்ற நீதிபதிகள் – 26.
பிராமணர்கள் – 23,
SC/ST – 01,
OBC- 02.

ஃ மொத்த I.A.S. அதிகாரிகள் – 3600.
பிராமணர்கள் – 2750,
SC/ST – 300,
OBC – 550,

கோயில்கள், ஜோதிடம், சாதி மதப் பாகுபாடு போன்றவை மட்டுமே பிராமணர்களின் தந்திரமான ஆயுதங்கள் ஆகும்.

நாட்டின் மக்கள் தொகையில்
3% க்கும் குறைவான பிராமணர்கள்
எவ்வாறு 90% பதவிகளைகளைப் பெற்றனர்?

3 விழுக்காடு பெரிதா 97 விழுக்காடு பெரிதா.?


தகவல் தொழில்நுட்பச் சொற்கள் சில

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் இவை. புலனத்தின் வாயிலாகப் பகிரப்பட்ட செய்தி இது :

WhatsApp – புலனம்

youtube – வலையொளி

Instagram – படவரி

WeChat – அளாவி

Messanger – பற்றியம்

Twtter – கீச்சகம்

Telegram – தொலைவரி

skype – காயலை

Bluetooth – ஊடலை

WiFi – அருகலை

Hotspot – பகிரலை

Broadband – ஆலலை

Online – இயங்கலை

Offline – முடக்கலை

Thumbdrive – விரலி

Hard disk – வன்தட்டு

GPS – தடங்காட்டி

cctv – மறைகாணி

OCR – எழுத்துணரி

LED – ஒளிர்விமுனை

3D – முத்திரட்சி

2D – இருதிரட்சி

Projector – ஒளிவீச்சி

printer – அச்சுப்பொறி

scanner – வருடி

smart phone – திறன்பேசி

Simcard – செறிவட்டை

Charger – மின்னூக்கி

Digital – எண்மின்

Cyber – மின்வெளி

Router – திசைவி

selfie – தம் படம் – சுயஉரு – சுயப்பு

Thumbnail சிறுபடம்

Meme – போன்மி

Print Screen – திரைப் பிடிப்பு

Inkjet – மைவீச்சு

Laser – சீரொளி

சொல்லாக்கக் குறைபாடுகள் சில இருப்பினும் பெரும்பாலும் பயனுடைய தொகுதி.


குளித்து மணல் கொண்ட கல்லா இளமை

இது புறநானூறு 243ஆம் பாட்டில் வரும் தொடர். அக்கவிதையை எழுதிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. “தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி” என்று பாடலில் வரும் தொடரினால் அவருக்கு இந்தப் பெயரை அளித்து விட்டிருக்கிறார்கள். பாட்டு இதோ:


இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவு வழி தழீஇ, தூங்குவழி தூங்கி,
மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறி, சீர்மிக
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்து துடுமெனப் பாய்ந்து
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே – யாண்டு உண்டு ‍ கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே!

இது கவிதை. இதன் பொருள்:

இனி நினைந்து – இப்போது நினைக்கும்போது,
இரக்கம் ஆகின்று – பச்சாத்தாபமாக உள்ளது
திணிமணல் செய்வுறு பாவைக்கு – மணலில் செய்த பெண் உருவத்துக்கு அல்லது பொம்மைக்கு
கொய்பூத் தைஇ – பூக்களால் அலங்காரம் செய்து
தண்கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து – குளிர்ந்த மடுவில் குளிக்கும் பெண்களோடு கைகோத்து விளையாடி
தழுவு வழி தழீஇ – தழுவும் நேரத்தில் தழுவி
தூங்குவழி தூங்கி – ஓய்வெடுக்கும் நேரத்தில் ஓய்வெடுத்து
மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு – கள்ளம் கபடறியாத இரகசியமற்ற கரவற்ற இளைஞர் கூட்டத்தில் கலந்து
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து – உயர்ந்த கிளைகளைக் கொண்ட மருத மரங்களைக் கொண்ட துறைக்குச் சென்று
நீர் நணிப் படிகோடு ஏறி – நீரை நோக்கித் தாழ்ந்த மரக்கிளைகளில் ஏறி
சீர்மிக – எல்லாரும் பாராட்டும் படியாக, கரையவர் மருள – கரைகளில் இருப்பவர் வியந்து பார்க்கும்படியாக, திரையகம் பிதிர – நீர்ப்பரப்பு அலையடித்துத் திவலைகளை உதிர்க்க,
நெடுநீர்க் குட்டத்து – ஆழமான நீரையுடைய மடுவில்
துடுமெனப் பாய்ந்து – தடாலென்று குதித்து
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை – மூழ்கி மண்ணெடுத்து வந்த அறியாப் பருவத்து இளமைக் காலம்
அளிதோ தானே யாண்டு உண்டுகொல்லோ – இப்போது அரியதாகிவிட்டதே, அது எங்கே சென்றது?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி – பூண் போட்ட கெட்டியான தடியை ஊன்றிக் கொண்டு
இரும் இடை மிடைந்த சில சொல் – இருமலுக்கு இடையே தடுமாறித் தடுமாறிப் பேசுகின்ற சொற்கள் சிலவற்றுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்ட
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே – மிகவும் முதியவர்களாகிவிட்ட நமக்கு (அல்லது எங்களுக்கு).


பெருமூதாளரேம் ஆகிய எமக்கு இளமைப் பருவம் யாண்டு உண்டு கொல் என்று முடிக்கவும்.
(உரை, எனது சொந்த உரை)

எனது மட்டுமல்ல, என்னைப்போல எழுபதுகளில் (அல்லது அறுபது வயதுக்கு மேல்) இருப்பவர்கள் அவ்வப்போது இளமைப் பருவத்து நினைவுகளில் வாழ்வதுண்டு. அதற்கான புறநானூற்று எடுத்துக்காட்டு இந்தக் கவிதை. இப்போது 82 வயதாகும் ஆல்பர்ட் அண்ணாச்சி கேட்டுக் கொண்டதற்காக இந்தக் கவிதையை எடுத்தேன். அதன் பொருளையும் எழுதினேன்.


கரும வினை

ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்.
அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே, ஏனென்று எனக்குப் புரியவில்லை! ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான்.
மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான். மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்.
அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்.
அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான். அதற்குத் தான் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன்
“என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை. கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர். சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின் றனர். நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர்! ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான்.
அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்.
“இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்… அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும், எனக்கு நல்ல வியாபாரமும் ஆகி என் கஷ்டம் தீரும்” என்றான் கடைக்காரன்.
அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது.
இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனத்தில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!
மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தைச் சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான். தான் யாரென்பதைக் காட்டிக்கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்.
அதன்பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் முந்திய நாள் அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு அவற்றைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அந்தக் கட்டினை அரசனிடம் தந்தான்.
அதைப் பிரித்துத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்.
அந்தக் கடைக்காரனைக் கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்.
அரசன் அந்தக் கடைக்காரனுக்குச் சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான். அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்.
அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது. அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்.
அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்.
குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மவினை என்றால் என்ன?” என்றார்.
பல சீடர்கள் அதற்குப் பல விதமாக “கர்மவினை என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்.
குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் “இல்லையில்லை, கர்மா (கர்மவினை) என்பது நமது எண்ணங்களே!
நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த உடன்பாடான எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்…
மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும்” என்றார் குரு.

சந்தேகம்1: இந்தக் கதையும் அதன் வாதமும் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் இது பலபேர் குழுமிய ஒரு சமூகத்துக்குப் பொருந்துமா? உதாரணமாக, ஓர் ஆட்சியாளன் தீய சட்டங்களைக் கொண்டுவந்து அதிக வரிவசூல் செய்து மக்களைத் துன்புறுத்துகிறான். அப்போது, அந்த மக்களின் எண்ணங்கள் ஆட்சியாளனை பாதிக்குமா? ஆனால் நமது நேர்ப் பார்வையில் எத்தனையோ தீய ஆட்சியாளர்கள் மிக நன்றாகத்தானே வாழ்ந்திருக்கிறார்கள்? உடனே, அவசரப்பட்டு அவர்கள் வாழ்க்கையிலோ மனத்திலோ சோகம் நிரம்பியிருந்திருக்கும், அவர்கள் சொந்த வாழ்க்கை நன்றாக இருந்திராது என்று பதில் சொல்லவேண்டாம். அது பொருத்தமன்று என்பது நமக்கே தெரியும்.

சந்தேகம்2: இந்தக் கர்மவினை என்பது 1 : 1 தன்மை கொண்டதா? அதாவது ஒருவனுக்கு ஒருவனின் எண்ணம் பாதிக்கும் என்று மட்டும் கொள்வதா? அல்லது 1 : பலர், பலர் : 1 என்ற தன்மை கொண்டதா?

சந்தேகம் 3: பலகாலமாக வழங்கி வரும் இத்தகைய கதைகளைக் கேட்டவர்களுக்கு நான் முன் சொன்ன சந்தேகங்கள் வந்திருக்காதா? வந்தால் ஏன் கேட்கவில்லை? ஒருவேளை கேட்டால் நாத்திகன் என்று முத்திரை குத்திவிடுவார்கள் மற்றவர்கள் என்று அஞ்சி ஒடுங்கி இருந்தனரா?


மகாபாரதம் பற்றி மேலும் சில…

மேலும் உனது கேள்விகளுக்கெல்லாம் பதில்களை இங்கே தொகுத்துத் தருகிறேன். இத்துடன் முடிக்கலாம் என்றும் தோன்றுகிறது.

க பூரணச்சந்திரன்: 1. சாந்தனு செய்தது, அவன் மனைவி கங்கை செய்தது எல்லாமே தவறுதான். ஓரவஞ்சனை.
2. ஒரு மனிதன் தன் செயல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறான், வெறும் சொற்களால் அல்ல என்பது உண்மை என்றால், மகாபாரதத்தின் அத்தனை கேரக்டர்களும் தவறு செய்தவர்கள், தீயவர்கள்தான். அதில் சந்தேகமேயில்லை.

3. தன் தம்பியின் சுயம்வரத்திற்கு பீஷ்மன் சென்றது தவறு. சென்றது மட்டுமல்ல, மூன்று பெண்களைத் தூக்கிக் கொண்டுவந்தது மிகமிகத் தவறு. அது அவனது பிரம்மச் சரியத்துக்கு ஏற்றதும் அல்ல. ஏன் விசித்திரவீரியன் செல்லவில்லை என்று தெரியவில்லை. சுயம்வரத்தில் பெண்தான் நாயகனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இங்கு பீஷ்மன் ஒரு பெண் தேவைப் பட்டதற்கு மூன்றுபேரை தூக்கிக் கொண்டுவருகிறான். இதுவே முரண்பாடுதான். (எந்த மூலிகை பயன்படும் என்று தெரியாமல் அனுமன் சஞ்சீவி மலையையே தூக்கி வந்தது போல இருக்கிறது இது). அம்‍பை ஏற்கெனவே ஒருவனை வரித்தவள் என்று தெரிந்து அவளை அவள் தந்தையின் இடத்திலேயே விட்டிருக்க வேண்டும். மற்றப் பெண்களை தூக்கி வந்தது காட்டு தர்பார். வல்லான் வகுத்ததே வாய்க்கால். ஆணாதிககத்தின் உச்சம்.
4. மகாபாரதக் கதை மாந்தர்க்கு குடும்ப வரைபடமே தேவை யில்லை. ஒருவனும் முறையாகப் பிறந்தவன் அல்ல. ஆனால் அதுதான் கதையின் தெய்விகத் தன்மையை காட்டுகிறது என்கிறார்கள். (எல்லாமே அற்புதச் செயல்கள் அல்லவா?)மேலும் குந்தியுடனும் மாத்ரியுடனும் உறவு வைப்பவர்கள் எல்லாமே தேவர்கள் அல்லவா? அவ்வளவு உயர்ந்தவர்கள் எல்லாரும். (அல்லது தேவர்கள் அத்தனை பேருமே அவ்வளவு இழிந்தவர்கள் என்றும் கொள்ளலாம். புராண தேவர்களுக்கு பெண்களைக் கூடி பிள்ளை தருவதை விட வேறு வேலை இருந்ததாகத் தெரியவில்லை).

தமிழர் ஒழுக்கம் இலட்சியப் படுத்தப் பட்டதுதான் (stylized). ஆனால் உலகியலுடன் நெருக்கமானது. மகாபாரதம் முற்றிலும் புனைவு. அதாவது உயர்ந்த மேன்மையான மனிதர்கள் முயன்றால் தமிழர்தம் இலட்சிய வாழ்வை அடையலாம். பாரதத்தில் போல எந்த மேன்மையான மனிதனும் சூரியனுடனும் யமனுடனும் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியாது.

5. மகாபாரதம் ஒரு பங்காளிச் சண்டை என்பதற்கு மேல் வேறில்லை என்பது உண்மை.

6. கிருஷ்ணனைப் பற்றி நீ‍ கேட்கும் கேள்விகளைக் கேட்டால் அதெல்லாம் அவரவர் தலைவிதி என்று கூறிவிடுவாரகள். கர்ணன் குந்தி புத்திரன் என்பதை வெளிப்படுத்தியிருந்தால் மகா பாரதப் போரே நடந்திருக்காது. பாண்டவர்கள் கர்ணனிடம் தஞ்சமடைந் திருப்பார்கள். துரியோதனனுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். எல்லாம் சுபம். ஆனால் அப்படி நடக்கலாகாது என்பதற் காகத்தான் இந்தக் கதைத் திருப்பங்கள் வைக்கப் படுகின்றன.

கடைசியாக, பாரதத்தை நீ நல்ல விமரிசனக் கண்ணோட்டத்துடன் பார்த்திருக்கிறாய். இதில் கதையமைப்பில் உள்ள தவறுகளாக நீ சுட்டிக் காட்டுவன சரியானவை, ஏற்கத் தக்கவை. ஆனால் ஒரு புராணக் கதையில், ஒரு பக்கம் கடவுளர்களும், மறுபக்கம் மனிதர்களும் ஊடாடும் ஒரு கதையில், எப்படி நல்லது கெட்டது என்பதை தீர்மானிப்பது? கேரக்டர்களும் அப்படியே தீர்மானிக்கப்பட முடியாதவை. பாரதக் கதையில் எனக்கு முக்கியமாகப் படும் சில நீதிகள்.

பங்காளிச் சண்டை, குறிப்பாக மண்ணுக்காகச் சண்டை கூடாது. அது அனைத்தையும் அழித்து விடும்.

பெண்களை இழிவுபடுத்தக் கூடாது (பாஞ்சாலியை துரியோதனன் செய்ததைப் போல, அல்லது மூன்று பெண்களை பீஷ்மன் தூக்கி வந்தத‍ைப் போல…)இவை அனைத்துமே மோசமான எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றன. பாஞ்சாலி சபதம் செய்ய வில்லை என்றால் பாரதப் போர் நடக்கக் காரணம் இல்லை. பாண்டவர்கள் எதுவும் வாங்காமல்கூடப் போயிருப்பார்கள். துகில் உரிக்கும்போதுதான் பீமன் துரியோததனைக் கொல்வதாகச் சபதம் செய்கிறான். அதேபோல அமபையும சிகண்டியாப் பிறந்து பீஷ்மனைக் கொல்கிறாள். பெண்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பது இராமாயணத்தைவிட மகாபாரதத்தில் முனைப்பாக இருக்கிறது.

எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்ல பண்புகள், தீய பண்புகள் அனைத்துமே உள்ளன. உண்மையில் முற்றிலும் நல்லவன் என்றோ, தீயவன் என்றோ ஒருவனும் இல்லை. பலசமயம் நடத்தைப் பிறழ்வுகள்தான் உண்டு. இது இன்றைய உளவியல் நோக்கிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. எனவே எந்த மனிதனையும் அநாவசியமாக வெறுக்கவோ, அளவுக்கு அதிகமாக நேசிக்கவோ தேவையில்லை. எல்லா விஷயங்களிலும் ஒரு நடுநிலை தேவைப் படுகிறது.

இம்மாதிரிக் கருத்துகளைச் சொல்ல வந்ததாகத்தான் பாரதம் தோன்றியதாகப் படுகிறது. ஆனால் அந்தக்கால பிராமணர்களுக்கு இது போதியதாக இருந்திருக்காது. அதனால் எவனோ ஒருவன் தங்களுக்குச் சார்பாக, சாதியை வலியுறுத்த வேண்டி பகவத்கீதையை எழுதி இடையில் புகுத்திவிட்டான்.

கர்ணனை அவமானப் படுத்துமிடங்களிலும் ஏகலைவன் கதையிலும்…இப்படிப் பல இடங்களில் சாதி நிலைநிறுத்தத்தான் படுகிறது. அதில் சந்தேகமில்லை. மிக முக்கியமாக கவனத்தில் வராத சின்னச் சின்ன இடங்களில்கூட சாதித் தன்மை நோக்கப் படுகிறது. உதாரணமாக, குந்தி பாண்டவர்களுக்கு பதிலாக, ஒரு காட்டுச் சாதியினர் பிள்ளைகள் ஐவரையும் அவர்கள் தாயையும் அரக்கு மாளிகையில் படுக்க ஏற்பாடு செய்கிறாள். அவர்கள் கீழ்ச்சாதி என்பதால் திட்டமிட்டு எரிக்கப்படுகிறார்கள்.
பகவத் கீதை ஏற்கெனவே உள்ள சாதியமைப்பை இன்னும் அதிகமாக வலியுறுத்துகிறது. பிராமணர்கள், ஊழ்வினை, ஜாதிக்கொரு நீதி ஆகிய தங்கள் முக்கியமான கருத்துகளைக் கதையில் புகுத்தியும் ஆயிற்று. முடிந்தது மகாபாரதம்.

விவேக்: நன்றி மாமா.


மகாபாரதம் பற்றிய சிந்தனைகள்…

Vivek GK: ஆனால் ஏன் இந்த கண்ணோட்டத்தில் கீதை ஆராயப்படுவதில்லை…. இந்தியாவில் காந்தி, நேரு முதல் அப்துல் கலாம் வரை கீதையை புகழ்ந்திருக்கிறார்கள்…. மற்றும் western philosphers like Thoreau, Emerson, Herman Hesse to scientist Robert Oppenheimer… இவர்கள் அனைவரும் அதை புகழ்கிறார்கள்….
ஆனால் காந்தியை கொன்ற கோட்ஸேவும் கீதை தான் தன்னை influence செய்ததாக கூறுகிறான்… This is the reason I hate the concept of religious texts… The moral is twisted by people according to their desires…
என்னுடைய ஆதங்கம்… திருக்குறள் போன்ற அறம் போற்றும் தமிழ் text கீதை போன்ற sanskrit text overshadow செய்வது தான்…
ஒருவேளை கீதை மக்கள் self-identity செய்து கொள்ளும் வகையில், ஒரு grand romantic narrative கொடுப்பதால் (தர்மத்தின் பக்கம் தான் நின்று போர் செய்யும் தருவாயில் தன் சொந்தங்களே தனக்கு எதிராக நிற்பது) தான் popular ஆக‌ இருக்கிறதோ?…

க பூரணச்சந்திரன்: மக்கள் தர்மம் (நீதி) என்பது தர்மனின்/யுதிஷ்டிரனின் (பெயரையே பார்) பக்கமே இருப்பதாக மூளைச் சலவை செய்யப்படுகிறது என்பதுதான். மகாபாரதத்தில் நீதி எவர் பக்கமும் இல்லை. காரணம், மண்ணாசை என்று சொல்லப்படுகிறது. சாந்தனுவின் வம்சத்தில் மூத்தமகன் திருதராஷ்டிரன். அவனது மூத்தமகன் துரியோதனன். பழங்காலத்தில் மூத்த மகன்களே வாரிசுகள். அப்படியிருக்க பாண்டுவின் மகன்களுக்கு ஆட்சியுரிமை எங்கிருந்து வரும்? பாண்டு திருதராஷ்டிரன் சார்பாக ஆண்டுவந்தவன்தானே? இப்படி ஆரம்பத்திலிருந்தே கோளாறுகள். எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒருதலைப்பட்சமான முடிவுகள் திணிக்கப்படுகின்றன. அதனால்தான் புவிமன்னர்கள் யாவரும் சமமாகவே இரு பக்கமும் பிரிந்து நிற்கிறார்கள். உண்மையில் தர்மம் என்பது ஒன்றானால், அனைவருக்கும் அது தெரிந்தது தானே? கடைசிவரையிலும் பாண்டவர்களும் தவறுதானே செய்கிறார்கள்? (கிருஷ்ணனின் தூண்டுதலால் துரியோதனை இடைக்குக் கீழ் அடித்துக் கொல்லவில்லையா பீமன்? ஜெயிக்க வேறு வழி இல்லையே?) அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற பொய்சொல்லியே ஜெயிக்கிறான் தருமன். இதெல்லாம் தருமம்தானா? பிறகு அஸ்வத்தாமன் பழிவாங்க முனைந்து அனைத்துப் பாண்டவ வமிசத்தையும் கொல்கிறான். இறுதியில் பாண்டவர் ஐவர், பாஞ்சாலி, உத்தரை தவிர வேறு எவரும் மிச்சமில்லையாம். போர் என்றால் இப்படித்தான் இருக்கும் – இரண்டு பக்கமும் முற்றிலும் அழியும் என்றுதான் மகாபாரதம் காடடுகிறது.

மக்கள் பாண்டவர் பக்கம் ஐடெண்டிஃபை செய்துகொள்கிறார்கள் என்பது வாஸ்தவம். இன்று ஹீரோக்கள் பக்கம் அடையாளப்படுத்திக் கொள்வதுபோல. நான் பலமுறை யோசித்திருக்கிறேன். எல்லா சினிமாவிலும் வில்லனைக் கொல்லும் முன்பு அவன் அடியாட்கள் அனைவரையும் கதாநாயகன் கொல்லுவான். அது குற்றம் என்று யாரும் சொல்வதில்லை. ஏன் அவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு மனைவி மக்கள் இல்லையா? வில்லன் ஹீரோவின் தாய்/தந்தை/நெருங்கிய ஓர் உறவைக் கொன்றதற்காக இவன் நூறுபேரைக் கொல்வதாகக் காட்டுவார்கள், ஆனாலும் ஹீரோ செய்ததே சரியென்று நிறுவப்படும் (மூளைச் சலவை செய்யப்படும்). இது போலத்தான்…

(உண்மையாக/கற்பனையாக) போரிடும் எல்லாருக்கும் ஒரு கிருஷ்ணன் தேவைப்படுகிறான். அதனால் அவர்கள் எல்லாருக்குமே கீதை தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். போரிடுபவன் காந்தியாக இருந்தால் என்ன, கோட்ஸேவாக இருந்தால் என்ன? இருவருக்குமே தங்களை நியாயப்படுத்த கிருஷ்ணன் தேவைதானே?
தமிழில் (வடமொழியிலும்கூட) நியாயம்-நீதி என்று இரண்டு இருக்கின்றன. அர்ஜுனன் சொல்வது நியாயம். கிருஷ்ணன் சொல்வது வறட்டு நீதி. (இன்றைய கோர்ட்நீதி). நீதியை விட நியாயமே முக்கியமானது.


மகாபாரதச் சிந்தனைகள்-தொடர்கிறது

ஏன் மகாபாரதக் கதையைத் தவிர இத்தனை நூற்றாண்டுகளாகத் தெருக்கூத்துக் கலைஞர்கள் வேறு எ‍தையும் கையாளவில்லை என்பது மிகப் பெரிய ஆய்வினை வேண்டுவது. மழை வேண்டுவது, பாரதம் படிப்பது, அதைக் கூத்தாகப் போடுவது எல்லாம் ஒரு தொடர்போல நிகழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் அந்தக் கதைகளை ஒட்டி மக்கள் தங்கள் கற்பனையைச் செலுத்திக் கூத்துப் பாடல்களையும் வசனங்களையும் தாங்களாகவே உருவாக்கி வந்துள்ளனர். உதாரணமாக, நான் வல்லம் (ஆரணி) என்ற ஊரில் ஆசிரியனாக 1969-70இல் பணியாற்றினேன். அது வந்தவாசிக்கும், செய்யாறுக்கும், சேத்துப்பட்டுக்கும் இடையிலுள்ள ஓர் ஊர். இந்த மூன்று ஊர்களுமே பழங்காலத்தில் தெருக்கூத்தின் பயிற்றுமையங்களாகச் செயல்பட்ட ஊர்கள். என்னிடம் படித்த ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் தானாகவே பக்கத்துப் பக்கத்து ஊர்களில் பாடப்படும் கூத்துப் பாடல்களைப் பாடுவான், அவனாகவே இட்டுக் கட்டவும் செய்வான். எல்லாம் எங்கேயோ மாயமாக மறைந்துவிட்டது…காரணம் திரைப்படமா, அரசியலா, கூத்து மட்டுமே நடத்தி வாழ்க்கை நடத்த வசதியற்றுப் போனமையா, மாறிவந்த நவீனமயமாக்கலா, ஆபாசக் கலைகளா…என்னத்தைச் சொல்வது?

4. கேள்வி: தமிழில் இயல் இசை நாடகம் என்று முத்தமிழ் இருப்பதாக சொல்கிறார்கள்… ஆனால் அதில் நாடகங்கள் பற்றி குறைவாகவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்…. அதை பற்றிய awareness ஏ மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை…. எனக்கு தெரிந்த நாடகங்கள்…. சினிமா மற்றும் TV நாடகங்கள் தான்…

பதில் : எனக்குத் தெரிந்தவரை இன்று இயலைத் தவிர இசை, நாடகத் தமிழ்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பகுப்புக்கான நோக்கமும் தெரியவில்லை. உண்மையில் இவை மூன்றையும் தங்கள் மொழியில் கொண்ட ஏராளமான நாடுகள் உள்ளன. அங்கெல்லாம் இப்படி போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இல்லாத இசைப்பாடல்களா, இசையமைப்பாளர்களா, ஆபராக்கள் முதலிய இசைநாடகங்களா, பிற நாடகங்களா? அவர்கள் மூன்றிங்லீஷ் என்று போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. தங்கள் தங்கள் போக்கில் இயல்இசைநாடகம் மூன்றையுமே வளர்க்கிறார்கள். நாம் வாய்ப்பேச்சு வீரர்கள். தமிழ்இசை வளரும் வரை, தமிழில் நாடகங்கள் தனித்துறை என்று சொல்லுமளவுக்கு வளரும் வரை, இருப்பது முத்தமிழ் அல்ல, ஒரேஒரு இலக்கியத் தமிழ்தான். முத்தமிழ் என்பது அதுவரை பொய்.

5. கேள்வி: பகவத்கீதை பற்றி உங்கள் கருத்தென்ன?

க பூரணச்சந்திரன்: எந்த ஆய்விலும் பகவத்கீதை நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு மேல் மகாபாரதத்துக்குப் பின் வந்தது என்பதை நினைவில் வைக்க வேண்டும். ஏனெனில் மகாபாரத காலத்தில் நெகிழ்வாக இருந்த சாதிகள் பகவத்கீதை காலத்தில் முற்றிலும் இறுகிப் போயிருக்கலாம். எனவே பகவத் கீதை சாதிகளை வற்புறுத்தும் ஒரு நூலாகவே அமைந்துவிட்டது.

அது சாதியை வற்புறுத்துகிறது என்பது எனக்கு முக்கியமில்லை. அது அதன் இயல்பு. ஆனால் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கு நடக்கும் விவாதம் ஜாதி பற்றியதல்ல. கடமை பற்றியது. அர்ஜுனன் கேள்வி, முன்னால் இருக்கும் உறவினர் மட்டுமல்ல, அவர்களுடன் சேர்ந்த பல லட்சக்கணக்கான பேர்களையும் தருமத்தின் பெயரால் கொல்வது தகுமா என்பதுதான். கிருஷ்ணன் சொல்லும் பதில் இதற்கு ஏற்புடையதல்ல. அவன் சொல்வது, “எத்தனை பேரானால் என்ன, சொந்தமாக இருந்தால் என்ன, தருமம் (உன் சாதிக்கடமை யான கொல்லுதல்)தான் முக்கியம், ஆகவே கொல்” என்பது. பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்களையும் தாண்டி அது என்ன தருமம், நீதி? தருமம் பற்றி எலலாருக்கும் இருப்பது ஒரு பார்வை தான். (நோஷன்). இது தருமமா, அது தருமமா என்றெல்லாம் ஆராய்ந்து எதையும் நிலைநிறுத்துவது அவ்வளவு எளிதல்ல. இன்னும் கேட்டால் எது உண்மை என்பது போலவே, ஆராய முடியாத முடிவற்ற ஒன்றாக இருப்பதுதான் எது தர்மம் (நீதி) என்பதும். (இங்கே தர்மம் என்ற வடசொல்லின் அர்த்தத்தை வைத்து (மதம்) பலபேர் குட்டை குழப்புகிறார்கள்.) நாம் பொதுவான எல்லா மனிதர்களுக்கும் ஏற்ற சமூகநீதியைப் பற்றித்தான் பேச இயலும். எல்லாருக்கும் உணவு தேவை. எனவே அதற்கு வழி செய்ய வேண்டும் என்பது சமூக நீதி.
கிருஷ்ணன் கூறும் நீதி, சிங்களர்கள் தமிழ் ஈழ மக்களைக் கொன்ற நீதிதான். அல்லது யூதர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று கருதி ஹிட்லர் செய்த நீதிதான்.
mass destruction எதற்கும் பின்னால் கிருஷ்ணனின் நீதிதான் இருக்கிறது.
அதைக் கேள்வி கேட்கும் அர்ஜுனனின் (பொதுமக்களின்) வாயைச் சாமர்த்தியமாக அடைப்பதுதான் பகவத்-கீதை.