கேட்ச்-22

பழைய கதைகளாகவே சொல்கிறீர்களே, அண்மைக் காலக் கதைகளை எழுதமாட்டீர்களா என்று நண்பர்கள் சிலர் கேட்டதால் இரண்டையும் மாற்றி மாற்றி எழுதுவதெனத் தீர்மானித்தேன். சற்றே அண்மைக்கால நாவல் கேட்ச்-22. இது வெளிவந்த ஆண்டு 1961.

எண்பதுகளில் ஒரு சமயம்.  திருச்சியில் (அது எங்களுக்கு வாசகர் வட்டக் காலம்)  புத்தகங்களைப் பற்றி உரையாடி இரசித்துக் கொண்டிருந்த ஒரு நன்னாளின்போது நண்பர் ராஜன் குறை “இந்த நாவலைப் படித்துப் பாருங்கள்” என்று கேட்ச்-22 ஐ என்னிடம் கொடுத்தார்.  உண்மையில் அப்போது இந்த நாவல் காட்டும் அபத்த வாழ்நிலை வேறெதோ உலகில் நிகழ்வது – இது மிகையாகச் சொல்கிறது என்று தோன்றியது.

கேட்ச் என்பதைக் கிடுக்கிப்பிடி என மொழிபெயர்க்கலாம். ஆனால் இருபத்திரண்டு என்பதற்கு மோனையாக இருக்கும் என்பதால் இறுக்குப்பிடி என மொழிபெயர்க்கிறேன். ‘கேட்ச்’ என்றால் என்ன? தன் (கு)தர்க்கத்திற்குள் மாட்டிக் கொள்ளும் எவரையும் தன்னை உருவாக்கிய மேலதிகாரிகளுக்கு பலியாக்கும் சட்டம் அல்லது நிலைமைதான் இறுக்குப்பிடி. எந்தப் பக்கமும் நீங்கள் தப்ப முடியாது. (22 என்பதற்கு அர்த்தம் ஒன்றுமில்லை).

உதாரணமாக நாட்டிலுள்ள எல்லா அலுவலகங்களிலும் மூன்றாண்டு முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே பணியில் எடுக்கப்படுவார்கள் என்று அறிவிப்பதாக வைத்துக் கொள்ளலாம். அப்படியானால் அந்த முன் அனுபவத்தை இளைஞர்கள் எங்கே பெற்றுவிட்டுப் பணியில் சேர்வது?

கடன் வாங்க ஒரு வங்கிக்குச் செல்கிறேன். வங்கி மேலாளர், “இந்தக் கடனுக்குப் பிணை காட்டும் அளவுக்கு உங்களுக்குச் சொத்து இருக்கிறது என்றால் கடன் தருகிறேன்” என்கிறார். கடன் தேவையில்லாத அளவுக்கு எனக்குச் சொத்து இருந்தால் நான் ஏன் கடன் வாங்கப் போகிறேன்?

இரண்டாம் உலகப்போரின் இறுதி. பியானோசா என்ற தீவிலுள்ள விமானப்படைப் பிரிவில் யோசேரியன் என்ற சிப்பாய் இருக்கிறான். தங்கள் மேலுள்ள கொடிய அதிகாரிகளால் வெறும் பொருள்கள் போலவே அவனும் அவன் நண்பர்களும் நடத்தப்படுகிறார்கள் என்ற உணர்வு அவனுக்கு இருக்கிறது . அவர்கள் வேலை விமானத்தில் வானில் பறந்து மோசமான சண்டை நிகழ்வுகளில் ஈடுபட்டு எதிரிப் படைத்தள இருப்புகளைப் படம் பிடித்து வருவதுதான். அவர்கள் வானில் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களும் வேண்டுமென்றே அதிகரிக்கப் படுகின்றன. போர் தன்னை அழிப்பதற்கென்றே நடக்கிறது என்கிறான் யோசேரியன். அவன் நண்பர்கள் “போர் எல்லாரையும்தான் இறக்கச் செய்கிறது, அதில் நீயும் ஒன்றுதானே” என்கிறார்கள். என்னைத் தனியாக அழித்தாலும் பலரோடு சேர்த்து அழித்தாலும்நான் அழிவது உறுதிதானே? அதனால் இது என்னை அழிக்கும் போர்தான்” என்று வாதிடுகிறான் யோசேரியன்.

மேலும் மேலும் வானில் பறப்பதுதான் அவர்கள் வேலை. அதிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. ஒருவனுக்கு மனநிலை சரியில்லை என்றால் அவன் விமானப் பயணமின்றிதரையில் இருத்தப்படுமாறு வேண்டலாம். ஆனால் அப்படிக் கேட்பதேஅவன் தனது வரப்போகும் ஆபத்தை உணர்ந்திருக்கிறான்ஆகவே அவனது மனநிலை சரியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாகும். ஆகவே அவன் பறந்தாக வேண்டும். இந்தச் சிப்பாய்கள் இருக்கும் நிலைதான் ‘கேட்ச்-22’ என்று விளக்குகிறார் டாக் டானீகா என்ற பாத்திரம்.

தன் குற்றம் எதுவும் இல்லாமலே தான் தொடர்ந்து அபாயத்தில் இருத்தப்படுவதனால் யோசேரியன் கோபமடைகிறான். அவனுக்கு வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அதனால் அவன் போலியான காரணம் கூறிப் பெரும்பாலான சமயத்தை மருத்துவ மனையில் கழிக்கிறான். தன் கையில் விழுந்து இறந்துபோன ஸ்னோடென் என்ற சிப்பாயின் நினைவு அவனை வாட்டுகிறது. தன் நண்பர்கள் தொடர்ந்து இறப்பதையும் மறைவதையும் அவன் காண்கிறான். தன் சொந்த அதிகாரிகளே அவர்கள் கெளரவத்துக்காக தங்கள் சிப்பாய்களை அழிப்பதையும் பார்க்கிறான்.

இந்த இறுக்குப் பிடி நாவலில் பல இடங்களில் வருகிறது. ஓரிடத்தில் இறுக்குப்பிடியைப் பற்றி அறிவதே சட்டப்படி தவறு எனப்படுகிறது. அப்படிச் சொல்வது யார்? கேட்ச்-22 சட்டத்திற்குள் ளாகவே அப்படி எழுதப் பட்டுள்ளது! நம் நாட்டிலும் பெகாசஸை ஆராய்வது குற்றம், ரஃபேலைப் பற்றி ஆராய்வது குற்றம், விவசாயச் சட்டங்களை எதிர்ப்பது குற்றம். எங்கே அப்படியெல்லாம் இருக்கிறதுநம் நாட்டு அமைச்சர்களின் மனங்களில்தான்!

இப்படிப்பட்ட அபத்தமான சூழலில்தான் யோசேரியனின் பல நண்பர்கள் கதை நிகழ்கிறது. ஒரு அதிகாரி- மைண்டர்பைண்டர் என்பவன், தானே பல குழுமங்களை நடத்தி அவற்றிற்குள்ளாகவே வணிகம் செய்து மிகப் பெரிய பணக்காரன் ஆகிறான். (உங்களுக்கு நமது பெருமுதலாளிகள் ஞாபகம் வரலாம்!) தன் முதலீடு எதுவுமின்றி, அவன் இராணுவ விமானங்களைக் கடன் வாங்கி, ஐரோப்பாவின் பல இடங்களுக்கு உணவை சப்ளை செய்து, மிகப் பெரிய செல்வம் சேர்க்கிறான், அதனால் பாராட்டப்படுகிறான்.

யோசேரியனுக்கு நேட்லி என்று ஒரு நண்பன். ஒரு வேசியைக் காதலிக்கிறான். முதலில் நேட்லியை வெறுக்கும் அவள், பின்னர் ஒப்புக் கொள்கிறாள். ஆனால் அடுத்த பறக்கும் பணியில் அவன் உயிரிழக்கிறான். அச்செய்தியைக் கொண்டுவரும் யோசேரியனையே அந்த இறப்புக்குக்காரணம் என்று கூறி அந்த வேசி அவனைக் கொல்ல முயலுகிறாள்.

இந்த நாவல் காட்டுகின்ற அபத்தமான வாழ்க்கை, உண்மையில் நம் வாழ்நிலைதான் என்பது 2016இல் திடீரென ஒருநாள் இரவு “இன்றுமுதல் காந்திஜி படம்போட்ட நோட்டுகள் (ரூ.1000, ரூ.500) செல்லாது” என்று அறிவிக்கப்பட்டபோதுதான் புரிந்தது. பிறகு ஜிஎஸ்டி. இவை போன்ற இறுக்குப்பிடிகள் ஏழைகள்மீது இல்லாவிட்டால் அதானி இந்தக் கொரோனா காலத்தில் தன் செல்வத்தை மூவாயிரம் நாலாயிரம் மடங்கு பெருக்கிக் கொள்வதும் பல கோடி ஏழைகள் மேலும் மேலும் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை இழந்து செத்துக் கொண்டிருந்தாலும் ஆளும் தலைவர் பதினாலு லட்சம் ரூபாய் கோட்டுப் போடுவதும் எப்படி நடக்க முடியும்?

இந்த ஐந்தாண்டுகளில் இந்த அபத்த வாழ்நிலை நமக்குப் பழக்கம் ஆகிவிட்டது.  இப்போதும் திடீர்திடீரென மீனவர் சட்டம், துறைமுகச் சட்டம், ஆறுலட்சம் கோடிக்கு மக்கள் சொத்துகளைத் தனியாருக்கு வழங்கும் சட்டம் என அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. திடீர்திடீரென புதிய சட்டங்கள் வரும், நம் வாழ்க்கை அடியோடு மாறிவிடும் என்பது நமக்கு இன்று நிச்சயமாகிவிட்டது!

தனக்கான அபத்தங்களுக்கு மத்தியில் வாழும் யோசேரியன், தப்பி ஓடி ரோம் நகரில் சுற்றுகிறான். அடையாள-கார்டு இல்லாததால் கைது செய்யப்படுகிறான். அவனது மேலதிகாரிகளான கேத்கார்ட், கார்ன் என்பவர்கள் அவனுக்கு இரண்டு தேர்வுகளை அளிக்கிறார்கள். ஒன்று, அவன் குற்றத்துக்காக இராணுவக் கோர்ட்டை எதிர்கொண்டு தண்டனை பெறவேண்டும். அல்லது, எல்லாச் சிப்பாய்களும் எண்பது முறை பறக்க வேண்டும் என்ற அந்த அதிகாரிகளின் கொள்கையை அவன் பரப்ப வேண்டும். ஆனால் அது பிற மனிதர்களின் உயிரைப் பணயம் வைப்பதாகும் என்று மறுக்கிறான். இனியேனும் இந்தப்பிடிகளிலிருந்து நீங்கி, தன் சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பது அவன் நோக்கமாக இருக்கிறது. எப்படியோ ஸ்வீடனுக்குத் தப்பி ஓடிவிடுகிறான் என்று நாவல் முடிகிறது!


புதையல் தீவு

மீண்டும் நாம் பழைய ஆங்கில நாவல்களுக்குத் திரும்புவோம். ஒரு 150 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்.

‘டிரெஷர் ஐலண்ட்’ (புதையல் தீவு) என்ற கதை சிறார்களுக்கிடையில் மிகப் பிரசித்தமானது. எழுதப்பட்ட 1881 முதலாக இன்றுவரை தொடர்ச்சியான வரவேற்பு அதற்கு உலக முழுவதிலும் கிடைத்துள்ளது.

சில தமிழ்த் திரைப்படங்களில்கூட, கையில் ஒரு பாதி வரைபடத்தை (மேப்பை) வைத்துக் கொண்டு ஒரு குழு புதையலைத் தேடி அலைவதைப் பார்க்கலாம். மேப்பின் மீதிப்பாதி எதிரிக் குழுவிடம் இருக்கும். (கடைசியாக இதை நான் பார்த்தது இரும்புக்கோட்டை…சிங்கம் என்ற கெளபாய் படத்தில். ஆமாம், அமெரிக்காவின் மேற்கிலிருந்து எப்போது கெளபாய்கள்- அதாவது மாடு மேய்ப்பவர்கள்- தமிழகத்திற்கு வந்தார்கள்?) முன்பெல்லாம் ஜெய்சங்கர், அசோகன் போன்ற நடிகர்கள் இம்மாதிரிக் கதைகளில் நடித்திருப்பர்.

இம்மாதிரியான வேடிக்கைப் பேராசைக் கதைகளுக்கெல்லாம் முன்னோடி புதையல் தீவு. ஆர். எல். ஸ்டீவன்சன் என்பார் எழுதிய கதை, பாய்மரக்கப்பல்கள், கடல்கொள்ளை காலப் பின்னணியில் நிகழ்வது. கேப்டன் ஃப்ளிண்ட் என்ற ‘தீய’ கொள்ளைக்காரன் புதைத்து வைத்த செல்வத்தைத் தேடுவதில் ஜிம் ஹாக்கின்ஸ் என்ற சிறுவன் ஈடுபட்டு வெற்றி பெறுவதைப் பற்றிய கதை.

ஜிம், ஒரு தங்குவிடுதிக்குச் சொந்தக்காரன். அதில் வந்து தங்குகின்ற பில்லி போன்ஸ் என்ற ஆள், ஒற்றைக்கால் மனிதன் ஒருவன் தென்பட்டால் எச்சரிக்கச் சொல்கிறான். இதற்குள்ளாக பிச்சைக்காரன் போன்ற ஒருவன் பில்லியிடம் ஒரு “கரும்புள்ளி” யைத் தருகிறான். கடற்கொள்ளைக்காரர் இடையே கரும்புள்ளி கிடைத்தால் உடனடி-மரணம் என்பது செய்தி. அவ்வாறே பில்லி போன்ஸ் இறக்கிறான்.

அப்பிச்சைக்காரன் திரும்பிவரும்முன், பில்லியின் பெட்டியில் ஒரு வரைபடம் கிடைக்கிறது. அதை எடுத்து ஜிம்மும் அவன் தாயும் பத்திரப் படுத்துகின்றனர். அதற்குள் கொள்ளைக்காரர் கும்பல் வந்து விடுதியைத் தாக்குகிறது. தொடர்ந்து சிப்பாய்கள் வர, மோதலில் பிச்சைக்காரன் இறக்கிறான், பிறர் ஓடிவிடுகின்றனர்.

இந்த மேப்பை, டிரெலானி துரை, டாக்டர் லிவ்ஸே என்ற நண்பர்களுக்கு ஜிம் காட்டுகிறான். கேப்டன் ஃப்ளிண்ட் புதைத்துவைத்த செல்வத்தின் இருப்பிடத்தை அது காட்டுகிறது. அதைத்தேடி டிரெலானியும் லிவ்ஸேயும் ஜிம்மும் புறப்படுகின்றனர். அதற்காக இஸ்பேனியோலா என்ற கப்பலை வாங்குகிறார்கள். இக்கப்பலின் தலைவர், கேப்டன் ஸ்மாலெட். கப்பலின் சமையல்காரனாக (தோளில் கிளியுடன்) ஓர் ஒற்றைக்கால் மனிதன்- அவன் பெயர் லாங்ஜான் சில்வர்- வந்து சேர்கிறான்.

அந்த ஒற்றைக்காலனும் கப்பலின் பிற மாலுமிகளும் உண்மையில் முன்பு ஃப்ளிண்ட்டிடம் வேலை செய்த கொள்ளைக்காரர்கள். புதையல் தீவை அடையும் நிலையில், அவர்கள் கப்பலிலுள்ள பிறரைக் கொன்றுவிட்டு தீவிலுள்ள “தங்கள்” செல்வத்தைப் பெற திட்டமிடுகின்றனர். இந்த திட்டத்தை ஜிம் ஒட்டுக்கேட்டு டிரெலானி, லிவ்ஸே ஆகியோரிடம் சொல்கிறான். கேப்டன் பெரும்பாலான கொள்ளைக்கார மாலுமிகளைத் தீவுக்குள் அனுப்பிவிடுகிறார். அவர்களுடன் சென்ற ஜிம், காட்டில் ஒளிந்து கொள்கிறான். அங்கு பென்-கன் என்பவனை சந்திக்கிறான்.

பென்-கன்னும் ஒரு பழைய கொள்ளைக்காரன்தான். அவன் சில ஆண்டு களுக்கு முன் அந்தத் தீவில் கைவிடப்பட்டவன். அவன் ஜிம்முக்கு உதவுவதாக வாக்களிக்கிறான். இடையில் ஜிம்மின் நண்பர்களும் கப்பலை விட்டு இறங்கித் தீவில் ஒரு மரவேலிப் பாதுகாப்பில் தங்குகின்றனர். தங்கள் ரகசியம் தெரிந்துவிட்டதென்று அறிந்த கொள்ளையர்களும் டிரெலானியிடம் உள்ள புதையல் மேப்பைக் கைப்பற்ற அவர்களைத் தாக்குகின்றனர். வேலிப் பாதுகாப்பு டிரெலானி குழுவினர்களுக்குப் புகலிடமாகிறது.

மறுநாள் ஜிம்மும் வந்து அவர்களுடன் சேர்ந்துகொள்கிறான். ஒற்றைக்கால் சில்வர், சமாதானம் பேச வருகிறான். படத்தைக் கொடுத்துவிட்டால் பத்திர மாக அவர்களை அனுப்பிவிடுவதாகச் சொல்கிறான். அதை டிரெலானி ஏற்காததால் மறுபடியும் சண்டை நிகழ்கிறது. இருபுறமும் சில மரணங்கள். ஸ்மாலெட்டுக்கு காயம்.

ஜிம் வேலிக் காப்பிலிருந்து தப்பி, பென்-கன் ஒளித்து வைத்திருந்த ஒரு படகின் உதவியால் தங்கள் கப்பலுக்கு வந்து, அதில் கடைசியாக இருந்த ஒரேஒரு கொள்ளைக்காரனைக் கொன்றுவிட்டு, தீவின் ஒரு மறைவான இடத்தில் கப்பலை நிறுத்திவிட்டு திரும்பவும் மரவேலிப் பாதுகாப்புக்கே வருகிறான்.

இப்போது காட்சி மாறியிருக்கிறது. அந்தக் காப்பிடத்தில் ஒற்றைக்கால் சில்வர்தான் இருக்கிறான். இடையில், படத்தையும் காப்பிடத்தையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு ஜிம்மின் நண்பர்கள் சுதந்திரமாகச் சென்று விட்டனர்! ஜிம்மைத் தங்களுடன் சேருமாறு சில்வர் கேட்கிறான், ஆனால் ஜிம் மறுத்துவிடுகிறான். (சில்வருக்கும் ஜிம்முக்கும் இடையில் ஏதோ ஒரு இனந்தெரியாத நட்பு முதலிலிருந்தே இருக்கிறது.) மறுநாள் மேப்பை வைத்துப் புதையலைத் தேடலாமெனக் கொள்ளையர் முடிவு செய்கின்றனர்.

கடும் வெயிலில் மறுநாள் ஜிம்மையும் இழுத்துக்கொண்டு கொள்ளையர் புதையலைத் தேடிப் புறப்படுகின்றனர். ஆனால் குறிப்பிட்ட இடத்தை அடையும்போது அங்கு வெறும் காலிப்பெட்டி ஒன்றைத் தவிர வேறெதுவுமே இல்லை!

கொள்ளையர்கள் தன்னைத் தாக்குவார்கள் என்று எதிர்பார்க்கும் சில்வர், ஜிம்முக்கு ஒரு பிஸ்டலைத் தருகிறான். மற்ற கொள்ளையர் தாக்க முற்படும் வேளையில் அருகிலுள்ள காட்டிலிருந்து வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஒரு கொள்ளையன் இறக்கிறான். டாக்டரும் பென்-கன்னும் அவர்கள் முன் தோன்றுகின்றனர். கொள்ளையர்கள் தோல்வியுற்று ஓடுகின்றனர். அவர்கள் தங்கள் இலக்கைஅடையும் முன்பே ஜிம்மும் அவன் நண்பர்களும் அங்குச் சென்று படகை அழித்துவிடுகின்றனர்.

பென்-கன், சில ஆண்டுகள் முன்பே கொள்ளைப் பொருளைத் தோண்டி ஒரு குகையில் வைத்துவிட்டான்! எளிதாகப் புதையல் கிடைத்துவிட்டது. ஜிம்மும் டிரெலானியும் பிற நண்பர்களும் செல்வத்தை பென்-கன் குகையிலிருந்து கப்பலுக்குக் கொண்டு செல்கின்றனர். இடையில் லாங்ஜான் சில்வரும் அவர்களுக்கு உதவி செய்யும் சாக்கில் இணைந்து கொள்கிறான். மீதியிருக்கும் கொள்ளையர் சிலரைத் தீவிலேயே விட்டுவிட்டுப் பிற யாவரும் கப்பலுக்கு மாலுமிகளைத் தேடுவதற்காக அமெரிக்காவுக்குச் செல்கின்றனர். கொள்ளையடித்த செல்வத்தின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அங்கே ஒற்றைக்கால் சில்வர் மறைந்துவிடுகிறான்.

பிறர் இங்கிலாந்து திரும்பி சுகமாக வாழ்கின்றனர். பென்கன் இப்போது மரியாதைக்குரிய ஒரு குடிமகனாகிறான். ஜிம் இதற்குமேல் புதையல் எதையும் தேடுவதில்லை என முடிவு செய்கிறான். லாங்ஜான் சில்வரை அதற்குப் பின் கண்டவர்கள் ஒருவருமில்லை!

44 வயதில் மறைந்த ஆர். எல். ஸ்டீவன்சன் ஸ்காட்லந்து நாட்டினர். ஒரு புதையல் கற்பனைக் கதையாளர் மட்டுமல்ல அவர். தம்காலத்தில் மிகப்பெரிய, மிகப் புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர், சிறுகதையாளர், கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியக் கொள்கையாளர், சிந்தனையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். ஒரே மனிதர் எவ்விதம் பகலில் நல்லவராகவும் இரவில் தீயவராகவும் மாறுகிறார் என்ற கதை டாக்டர் ஜெகில் மற்றும் ஹைட் என்ற நாவலில் சித்திரிக்கப்படுகிறது. சிறந்த உளவியல் நாவலாக அது கருதப்படுகிறது.

இடைவிடாமல் எழுதிக் குவித்தவர். புதையல் தீவையும், ஜெகில் மற்றும் ஹைட் நாவலையும் தவிர, கடத்தப்பட்டவன் (கிட்னாப்ட்), கருப்பு அம்பு, சிறுவர்களின் கவிதைப் பூங்கா போன்ற பல பிரபல நூல்களையும் எழுதியுள்ளார்.


மணிமேகலை

தமிழின் பெருமையை நமக்கும் பிறருக்கும் சுட்டிக்காட்ட அவ்வப்போது யாரேனும் தேவைப்படுகிறார்கள். அண்மையில் தமிழின் தொன்மையையும் கல்வெட்டுகளின் சிறப்பையும் அதற்கான தனித்துறையின் தேவையையும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகத்தில் அறைந்தது போலச் சொல்லியுள்ளனர்.

சிலப்பதிகாரம் என்ற காப்பியக் கதையைப் பெரும்பாலும் அனைவரும் அறிவார்கள். அதன் தொடர்ச்சிதான் மணிமேகலை என்ற காப்பியக் கதை. இக்காப்பியத்தைச் சீத்தலைச் சாத்தனார் என்பார் இயற்றியுள்ளார்.

இந்தியாவில் அல்லல்படும் கீழ்ச்சாதி மக்களுக்குப் புகலிடமாக பெளத்தம் தான் இருந்து வருகிறது. அம்பேத்கரும் இறுதியாக பெளத்தத்தில்தான் சேர்ந்தார். அவருக்கு முன்னோடி போல, ஏறத்தாழ 1700 ஆண்டுகளுக்கு முன்பே, தங்கள் கணிகைகுல இழிவிலிருந்து தப்ப மாதவியும் அவள் மகள் மணிமேகலையும் பெளத்த மதத்தில் சேர்ந்திருக்கின்றனர்!  

கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை. அவள் பாட்டி சித்திராபதி, “மணிமேகலையையாவது இந்திரவிழாவில் பங்குகொள்ளச் செய்” எனத் தூதுவிட்டிருக்கிறாள். ‘கண்ணகியின்’ மகளான மணிமேகலை அவ்வாறு கணிகைத்தொழிலுக்கு வரமாட்டாள் என மாதவி பதிலுரைக்கிறாள். அப்போதைக்குத் தப்பிக்க, மணிமேகலையைச் சுதமதி என்ற தோழியுடன் உபவனம் என்ற மலர்வனத்துக்கு அனுப்புகிறாள்.

வழியில் சோழ அரசன் மகனான உதயகுமரன் அவளைத் துரத்துகிறான். வனத்தில் பளிங்கறை ஒன்று இருக்கிறது. (அது இக்கால ஏசி அறைகள் போன்ற ஒன்று, வெளியிலிருந்து கண்ணாடிக் கதவினூடே பார்க்கலாம், உள்ளே பேசுவதை வெளியில் கேட்க இயலாது.) அதில் புத்தபீடிகை இருக்கிறது. உதயகுமரனிடமிருந்து தப்ப மணிமேகலையைச் சுதமதி அப்பளிங்கறையில் அடைக்கிறாள். புத்தபீடிகையை வழிபட வந்த மணிமேகலா தெய்வம், இருவரையும் மயங்கச் செய்து, மணிமேகலையை மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விடுகிறது.

அத்தீவில் தருமபீடிகை ஒன்று இருக்கிறது. மணிமேகலை அதை வழிபடும் போது, மீண்டும் மணிமேகலா தெய்வம் அவள்முன் தோன்றி, அவளது பழம்பிறப்புகளை உணர்த்தி, வேறு வடிவம் எடுத்தல், வானில் பறந்து செல்லுதல், பசியின்றி இருத்தல் ஆகியவற்றுக்கான மந்திரங்களை அவளுக்கு அளித்துச் செல்கிறது. தீவைச் சுற்றிவரும் மணிமேகலை தீவதிலகை என்பவளைச் சந்திக்கிறாள். அவள், அத்தீவிலுள்ள கோமுகி என்ற பொய்கையில் அன்று ஒரு பாத்திரம் தோன்றும், அது ஆபுத்திரன் என்பவன் கையிலிருந்தது, அதில் ஒருமுறை அன்னமிட்டுவிட்டால், அள்ள அள்ளக் குறையாமல் உணவு சுரந்துகொண்டே இருக்கும் என்று சொல்கிறாள்.

அவ்வாறே, அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை, வான்வழியாக புகார் நகரை அடைந்து மாதவிக்கும் சுதமதிக்கும் நடந்தவற்றைக் கூறுகிறாள். அப்போது காயசண்டிகை என்னும் வித்யாதரப் பெண் அவளைச் சந்தித்து, “முதன்முதல் இதில் தகுந்தவரிடமிருந்து உணவு பெற வேண்டும், அதற்குத் தக்கவள் ஆதிரை, அவளிடம் உணவு பெறுக” என்கிறாள். அவ்வாறே ஆதிரையிடம் உணவுபெற்ற மணிமேகலை, அமுதசுரபியி லிருந்து ஏழைகள் அனைவருக்கும் உணவளிக்கிறாள். காயசண்டிகைக்கு இருந்த யானைத்தீ என்னும் பெரும்பசியும் அவளால் தீர்கிறது.

பூம்புகாரிலும், ஏன், ஏனைத் தமிழகத்திலும் அக்காலத்திலேயே வயிற்றுப் பசிக்குக் கையேந்தும் பிச்சைக்காரர்கள் ஏராளமாக இருந்தார்கள் போலும். அவர்களைப் பார்த்து மனம் வருந்தியிருக்கிறார் சீத்தலைச் சாத்தனார். அவர்கள் பசியைப்போக்க அவருக்குத்தோன்றிய கற்பனைதான் அமுதசுரபி என்ற உணவுப் பாத்திரம்.

உதயகுமரன் மணிமேகலையைச் சந்தித்து, தன்னை அவள் மணக்க வேண்டுகிறான். அவள், “இந்த உடல், பிறத்தலும், மூத்தலும், பிணிபட்டு இரங்கலும், இறத்தலும் உடையது…ஆகவே நல்லறம் புரிய நினைக்கிறேன்” என்று பதில்சொல்லி, அவனிடமிருந்து தப்புவதற்காக சம்பாபதி என்ற தெய்வத்தின் கோயிலுக்குள் செல்கிறாள்.

பின்னர், தனது வேறு வடிவம் கொள்ளும் மந்திரத்தினால், காயசண்டிகை யின் வடிவம் எடுத்து வெளியே வருகிறாள். அதே வடிவில் சிறைகளுக்குச் சென்று அங்கிருந்தோர் யாவருக்கும் உணவளிக்கிறாள். அரசனுக்குச் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறாள்.

பின்னர், உலக அறவி என்ற பொது மன்றத்திற்குச் செல்கிறாள். அவளைக் கண்டுகொண்டு வந்த உதயகுமரனுக்கு அறிவுரை சொல்கிறாள். அதேசமயம், தன் மனைவி காயசண்டிகையைத் தேடிவருகிறான் காஞ்சனன் என்ற வித்யாதரன். அவள் வடிவிலிருந்த மணிமேகலையைத் தன் மனைவி என்று எண்ணி, உதயகுமரனைக் கொன்றுவிடுகிறான்.

அரசன் மணிமேகலையைச் சிறையிடுகிறான். அரசியோ அவளுக்கு எல்லையில்லாத் துன்பங்களை விளைவிக்கிறாள். அவற்றை எல்லாம் பொறுத்துக்கொள்கிறாள். அறவண அடிகள் அவளை மீட்டு அழைத்துச் செல்கிறார்.

அவள் இப்பிறப்பில் வடநாட்டில் புண்ணியராசனாகப் பிறந்துள்ள ஆபுத்திரனைச் சந்தித்துவிட்டு, கண்ணகி கோயிலுக்கு வந்து வணங்குகிறாள். காஞ்சி நகரத்தில் மாதவியும் சுதமதியும் இருப்பதை அறிந்து அங்குச் சென்று மக்களின் பசியைப் போக்குகிறாள். இடையில் இந்திரவிழா நடைபெறாததால் பூம்புகார் அழிந்த செய்தி வருகிறது.

பல சமய அறிஞர்களுடனும் உரையாடல் நிகழ்த்திய மணிமேகலை, இறுதியாக அறவண அடிகளிடம் நல்லுரை பெற்று “தவத்திறம் பூண்டு பவத்திறம் அறுகிறாள்” என்று கதை முடிகிறது. இக்காப்பியத்தில் பல கிளைக்கதைகள் உள்ளன. ஆதிரை கதை, காயசண்டிகை கதை, சுதமதி கதை எனப் பல. அவற்றைத் தனியேதான் நோக்கவேண்டும்.

மணிமேகலை, அன்றிருந்த சோழ அரசனுக்கு அவன் கடமைகளை நினைவூட்டினாள். இன்று இக்கதை, சுதந்திரநாளின் முன்நாள் வெளியிடப்படுவது நமது ஒன்றிய அரசுக்கும் பசியின்றி மக்களை வாழச்செய்வதே முதற்கடமை என்பதை நினைவூட்ட வேண்டியே.

இதன் தலைவி மற்ற மொழிக் காப்பியங்களில் போல ஓர் ஆண் மகனோ, வீரனோ, அரசனோ, கடவுளோ அல்ல, ஒரு சாதாரணப் பெண்.

அவளும் கணிகை குலத்தைச் சேர்ந்தவள், உயர்குலத்தினள் அல்ல. இத்தகைய கதைத்தலைவியை அக்காலத்தில் தேர்ந்தெடுப்பதற்கே கவிஞருக்குப் பெரும் துணிவு இருந்திருக்க வேண்டும்.

இந்து மதத்தில் சாதியிலிருந்து விடுபட இயலாது என்பதால் மணிமேகலை

தன் பிறப்புச் சார்ந்த இழிவிலிருந்து விடுபடுவதற்கு பெளத்தத்தில் சேர்கிறாள்.

யாவருக்கும் உணவளித்து உலகில் எங்கும் பசியே இல்லாமற் செய்ய வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்டவளாக இருக்கிறாள்.

சிறையிலிருப்பவர்களுக்கும் வயிற்றுக்குத் தொடர்ந்து உணவு கிடைத்தால் அவர்கள் அறவோர்கள் ஆவார்கள் என்ற கருத்தை அரசனுக்கு உரைக்கிறாள். சிறைக்கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்குதல் என்பது அக்காலத்தில் எவரும் சிந்திக்கவும் செய்யாத ஒரு அற்புதக் கருத்து.

அக்காலத்திலேயே பல்சமய உரையாடலை நிகழ்த்துகிறாள்.

தமிழின் இந்நூல், உலகெலாம் பல மொழிகளில் பரவிய பெளத்தத்திற்கு ஒரேஒரு தனிக்காப்பியமாக விளங்குகிறது என்பார்கள்.

அக்கால கிரேக்க, இலத்தீன், வடமொழிக் காப்பியங்கள் எல்லாம் தெய்வங் களின், அரச குலத்தவரின், மேன்மக்களின் சிறப்பைப் பாடுகின்றனவே ஒழிய, ஏழைகளைப் பற்றி எதுவுமே கவலைப்பட்டதில்லை.

எவ்வளவு பரந்த மனமும் அருள் நோக்கும் இருந்திருந்தால் இப்படியோர் கற்பனைப் பாத்திரத்தைக் கொண்டேனும் உலகில் அனைவரும் பசியின்றி இருக்க உணவளிக்க வேண்டும் என்ற எண்ணம் சாத்தனாருக்குத் தோன்றி யிருக்கும்! இக்காலமாக இருந்திருந்தால், “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று பாடிய அவர், விவசாயிகள் நிலைக்கு வருந்தியிருப்பார்.

யாவர்க்கும் சோறளிக்கும் செய்கையைக் கடைசியாக நிலைநிறுத்தியவர் வள்ளலார்.

இன்றைய நமது பார்வையில், பிச்சை எடுப்பதும் தவறு, பிச்சை அளிப்பதும் தவறுதான். மணிமேகலைக் கால நோக்குப்படி இதைத் தவிர வேறு வழியில்லை.


வழிகாட்டி

நம்மில் பலபேரும் லால்குடி (திருச்சி மாவட்டம்) என்ற ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய நாவல்களைப் படிப்பவர்களுக்கு மால்குடி என்ற பெயர் மிகப் பரிச்சயம். காலத்தில் வளர்ந்த இந்தக் கற்பனையூரையும் அதைச் சார்ந்த மனிதர்களையும் உருவாக்கியவர் ஆர். கே. நாராயண் (1906-2001).

அக்மார்க் தமிழ்நாட்டுக்காரர். சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவர். ஆனால் இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் அவரைக் குறிப்பிடுவோர் இந்திய ஆசிரியர் என்று குறிப்பிடுகிறார்களே ஒழியத் தமிழர் என்று குறிப்பிடுவதில்லை. இத்தனைக்கும் நீதிக் (கட்சிக்) கொள்கைகளை வலியுறுத்திய ஜஸ்டிஸ் பத்திரிகையிலும் அவர் பணியாற்றியிருக்கிறார்; கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்!

ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி ஐயர் நாராயணசுவாமி என்பது அவர் முழுப் பெயர். சுருக்கமாக ஆர். கே. நாராயண். இந்தியாவில் ஆங்கில எழுத்தை உருவாக்கிய மூன்று நாவலாசிரியர்களில் ஒருவர். (மற்ற இருவர், ராஜாராவ், முல்க்ராஜ் ஆனந்த்). இவரது இளவல் ஆர். கே. லக்ஷ்மண், புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்.

இவரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் கிரஹாம் கிரீன் என்ற புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர். பிறகு ஆர்.கே., பிரபலமாகி, சாகித்திய அகாதெமி விருதையும் பத்ம பூஷண், பத்ம விபூஷண் பட்டங்களையும் பெற்று ராஜ்ய சபா உறுப்பினராகவும் ஆனார். 94 வயதுவரை எழுதிக் கொண்டே இருந்தார்.

மிகப்பல ஆங்கில நாவல்களை எழுதிய ஆர். கே. நாராயணனின் புகழ் பெற்ற படைப்பு ‘வழிகாட்டி’ (தி கைட்-1956). நாவலின் கதை வித்தியாச மானது. இதன் நாயகன், ராஜூ, ஒரு பச்சோந்தி. சந்தர்ப்பத்திற்கேற்பத் தன்னையும் மாற்றிக் கொண்டு, பிறரையும் தன் வசப்படுத்தும் திறன் உள்ளவன். மால்குடியில் வசிக்கிறான். அதன் ரயில்நிலையம் அருகில் கடை வைத்திருக்கிறான். “ரயில்வே ராஜூ” என்று பிரசித்தம். அருகிலுள்ள ஊரின் (நமக்கு மாமல்லபுரம் நினைவுக்கு வருகிறது) குகைச் சிற்பங்களுக்குச் சில சமயங்களில் வழிகாட்டியாகவும் பணிபுரிகிறான்.

தேவதாசிக் குடும்பத்தைச் சேர்ந்த ரோஸி என்ற பெண்ணை ராஜூ  சந்திக்கிறான். அவளுக்கு நாட்டியத்தில் விருப்பம். அவள் கணவன் மார்க்கோ. தொல்லியலாளன், சென்னைக்காரன். ஆனால் அவள் நாட்டியம் பிரயோஜனமில்லை என்று கருதுகிறான்.

பணத்துக்காகவே அவள் மார்க்கோவிடம் இருக்கிறாள் என்று கணித்து அவளைத் தன் வயப்படுத்துகிறான் ராஜூ. அவளுக்கு வழிகாட்டியாகி பயிற்சியளித்து, அவளைப் புகழ்பெற்ற பெரீஇய நர்த்தகி ஆக்குகிறான். அவளுக்குப் புகழும், இவனுக்குப் பணமும் கிடைக்கின்றன. ஆனால் மார்க்கோ அவளுக்கு அனுப்பும் காசோலையில் இவன் பொய்க் கையெழுத் திட்டதால் இரண்டாண்டுகள் சிறைக்குச் செல்கிறான். ரோஸி அவனிட மிருந்து பிரிகிறாள்.

சிறையில் எளிதில் நற்பெயர் பெறுகிறான். சிறையிலிருந்து வெளிவந்த வுடன், மால்குடிக்குச் செல்ல விருப்பமின்றி, அருகிலுள்ள ‘மங்கல்’ (மங்கலம்) என்ற ஊரின் அருகிலுள்ள கோயிலில் தங்குகிறான். அங்கு இவனைச் சந்திக்கும் வேலன் என்ற விவசாயி, இவனை ஓர் ‘ஸ்வாமிஜி’ – – அதாவது துறவி என்று கருதுகிறான். அவ்விதமே இவனது புகழைப் பரப்பி விடுகிறான். வேலனின் ஒன்றுவிட்ட தங்கை அவர்கள் குடும்ப விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு செய்கிறான், ராஜூ.

ஆயினும் வேலனிடம் தான் ஒரு ‘ஸ்வாமிஜி’ அல்ல, ‘சாதாரணன்’தான் என்று தவறுகளை ஒப்புக் கொள்ளும் தருணம் வருகிறது. ஆனால், சிறைக்குப் போனாலும்தவறுகளை ஒப்புக் கொண்டாலும்ஸ்வாமிஜீஸ்வாமிஜீதானே… இந்தியாவில் எத்தனை ஆச்சாரியர்கள்சத்குருக்கள்பாபாக்கள்! எவருக்கு மவுசு எப்போது குறைந்திருக்கிறதுநமது ராஜூ ஸ்வாமிக்குக் குறைய?   

எப்போதும் பிறருக்கேற்ப மாறும் பண்புடைய ராஜூ, இங்கும் முதலில் தன் ஆன்மிக ‘வேலை’ யைச் சிறப்பாகவே செய்கிறான், ஆனால், உண்மையில் அவ்விதமே கொஞ்சம் கொஞ்சமாக மாறிப் போகிறான். எவ்விதச் சுயநலமும் இன்றிப் பிறருக்கு உதவும் பண்பைப் பெறுகிறான்.

இப்போது அவனிருக்கும் ஊரில் மழை பெய்யாமல் வறட்சி ஏற்படுகிறது. அவன் உபவாசம் இருந்தால் மழைபெய்யும் என்று ஊரார் நம்புகிறார்கள். மக்களுக்காக அவன் பட்டினி கிடக்கிறான். தான் நடக்கவே இயலாத தளர்ந்த நிலையில் அருகிலுள்ள சரயூ ஆற்றில் குளிக்க அழைத்துச் செல்லுமாறு கூறுகிறான். ஆற்றில் இறங்கியவுடன், “வேலன், மலையில் மழை பொழிகிறது. அது என் பாதங்களில், என் காலில் சிலிர்த்து எழுந்து வருகிறது” என்று கூறிச் சரிகிறான். இறந்துபோகிறான்.

ஒரு சாதாரண டூரிஸ்ட் கைடு, எவ்விதம் ஓர் ஆன்மிக வழிகாட்டியாகத் தன்னை யறியாமலே உயர்கிறான் என்று காட்டுகிறார் ஆர். கே. நாராயண். நம் வாழ்க்கை நம் கையில் இல்லைநமக்கு அப்பாலுள்ள பிரபஞ்ச சக்திகள் செயல்பட்டு நம்மை வழிநடத்துகின்றன என்று இக்கதையில் அவர் கூறுவதாகத் தோன்றுகிறது. இது ஓர் ஆன்மிக மாற்றத்திற்கான, தன்னை உணர்தலுக்கான கதை என்றும் பாராட்டப்படுகிறது.

பம்பாய்த் திரையுலகம் இதை ஓர் திரைப்படமாக எடுத்திருக்கிறது. தேவ் ஆனந்த், வஹீதா ரெஹ்மான் நடித்த இந்தப்படம் 1965இல் வெளியாகிப் பணமும் புகழும் பெற்றது!

ஆர். கே. நாராயண், பின்னாட்களில் மைசூரில் வசித்ததால் பலர் அவர் கன்னட எழுத்தாளர் என்று எழுதினர். (இதே கதிதான் தமிழரான ஏ. கே. இராமானுஜனுக்கும் ஏற்பட்டது.) ஆனால் ஆர்.கே., இறுதி நாட்களில் சென்னைக்குப் பேத்தி வீட்டுக்கு வந்துவிட்டார்.

கன்னடர் என்று அவரைக் குறிப்பிட்டதைவிட ஆச்சரியம், அவர் படைத்த மால்குடி என்ற ஊர் கர்நாடகத்தின் ஆகும்பே அருகிலோ, சித்ரதுர்க்கா அருகிலோ இருக்கிறதா எனத் தேடியவர்கள் உண்டு. ஒரு அம்மையார் “சரயூ” என ஆற்றின் பெயர் வந்ததால் மால்குடி உத்தரகாண்டில் உள்ளது என்று தேடிக் கொண்டிருக்கிறார், பாவம்! அங்கே வேலன், மணி போன்றவர்கள் இருக்கிறார்களா, எல்லம்மன் தெரு இருக்கிறதா, அறுவடைத்திருவிழா (பொங்கல்) கொண்டாடுகிறார்களா என்றும் அவர் தேடலாம். நாம் “இருக்குமிடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்” என்று பாடலாம்.