தமிழ்நாட்டில் பல நாட்டுப்புறக் கதைகள் வழங்கிவருவதை அறிவோம். அது போல் இங்கிலாந்திலும் பல பழங்கதைகள் வழங்கிவருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ராபின்ஹூட் என்பது. இந்தப் பெயரை வாசகர்கள் பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். சந்தர்ப்பவசத்தினால், தான் கொள்ளைக் காரன் என்றோ, கொலைகாரன் என்றோ பெயரெடுத்து வாழ்ந்தாலும், பிறருக்கு உதவுகிறவர்கள் உண்டு. அல்லது பிறருக்கு உதவி செய்யப் போய் தான் கெட்ட பெயரெடுத்துக் கொள்ளும் நல்லவர்களும் உண்டு. மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி போன்ற திரைப்படங்கள் இம்மாதிரி வந்துள்ளன. புதுமைப் பித்தனும்கூட சங்கிலித்தேவன் என்ற திருடன் ஒரு கிழவிக்கு உதவியதைப் பற்றிய கதை எழுதியுள்ளார். நாமக்கல் கவிஞர் எழுதிய மலைக்கள்ளன் (எம்ஜிஆர் நடித்து திரைப்பட மாக வந்தது) ராபின்ஹூடைத் தழுவிய கதைதான்.
ஆங்கிலத்தில் ராபின்ஹூடைப் பற்றிப் பழங்காலத்தில் பல இசைப் பாடல்கள் (இவற்றை ballads என்பார்கள்) பாடப்பட்டுள்ளன. பின்னர் பல நாடகங்களும் திரைப்படங்களும் வந்துள்ளன. இப்படிப்பட்ட கதைகள் பல எல்லா மொழிகளிலும் உள்ளன.
ராபின்ஹூட் என்பவன் உயர்ந்த குடும்பத்தில் பிறந்த ஒருவன். அவன் காலத்தில் நார்மன்கள் எனப்படும் ஃபிரெஞ்சு இனத்தினர் இங்கிலாந்தில் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி புரிந்து வந்தார்கள். அவர்கள் ஆட்சி புரியாத இடங்களில் சாக்ஸன்கள் எனப்படும் இங்கிலாந்தின் சொந்த மக்கள் ஆட்சியில் இருந்தனர். இருவருக்கும் போராட்டம் நடந்த காலம் அது. சாக்சன் அரசனான சிங்கம்போன்ற வலிய இதயம் கொண்ட ரிச்சட் என்பவன் சிலுவைப் போருக்குப் போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது. அவனிடம் பணியிலிருந்த சாக்சன் பிரபு ஒருவர் போராட்டத்தில் கொல்லப்பட்டு அவர் மாளிகையும் கொளுத்தப்படுகிறது. அப்போது அநாதையாகி விட்ட அவரது மகன்தான் ராபின்ஹூட். அருகிலுள்ள காட்டில் ஷேர்வுட் காட்டில் மறைந்து வாசம் செய்கிறான்.
ராபின்ஹூட், வில் வித்தையில் வல்லவன். அவனைச் சுற்றி பாதிக்கப்பட்ட ஓர் இளைஞர் பட்டாளம் சேர்கிறது. அவர்கள் அருகிலிருந்த நாட்டிங்காம் என்ற நகரத்தின் தீய தலைவனை எதிர்த்து, அவனைக் கொள்ளையடித்து ஏழைமக்களுக்கு உதவுகிறார்கள். சட்டபூர்வமாக அரசாங்கத்தால் அவனைப் பிடிக்க முடியாததால் அவனுக்கு ‘அவுட்லா’ – சட்டத்திற்குக் கட்டுப்படாத வன், தேடப்படுபவன் என்ற பெயர் கிடைக்கிறது, நல்லவர்கள் அவனைப் போற்றுகிறார்கள், தீயவர்கள் அவனைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
ராபின்ஹூட் கதையில் முக்கியத் தீயவர் பாத்திரங்கள்: நாட்டிங்காம் நகரத் தலைவன் (ஷெரீப்), அவனுக்கு உதவும் பேராயர், ரிச்சட் ஆட்சியில் இல்லாத சமயத்தில் ஆண்டுவந்த அவன் தம்பி ஜான் ஆகியோர். ராபின்ஹூடைச் சேர்ந்தவர்களாக லிட்டில் ஜான், ஃப்ரையர் டுக், வில் ஸ்கேர்லட், ஆலன்-எ-டேல், ராபின்ஹூடின் மனைவி மரியான் ஆகியோர் உள்ளனர். ராபினுடன் இவர்கள் ஒவ்வொருவரின் சந்திப்பும் அதற்குப் பிறகு அவர்கள் அவனோடு சேர்ந்து ஈடுபடும் வீரசாகசச் செயல்களும் தனித்தனிச் சம்பவங்களாக அமைந்துள்ளன. இறுதியில் ராபின்ஹூட், சிலுவைப் போரிலிருந்து திரும்பிவந்த ரிச்சட் அரசனின் படையில் சேருகிறான், ஆனால் சூழ்நிலையால் பிரிகிறான். நிறைவாழ்க்கைக்குப் பிறகு அவனது மரணத்துடன் கதை முடிகிறது. சில கதைப் பதிப்புகள் அவன் இறந்தது கி.பி.1242இல் என்று சொல்கின்றன.
இக்கதையின் ஒருசில சம்பவங்களைப் பார்ப்போம். ஒருநாள் ஒரு கசாப்புக் கடைக்காரன் உடையில் நாட்டிங்காம் சந்தைக்கு ராபின் செல்கிறான். மக்களுக்கு மிகமிக மலிவாக மாமிசத்தை விற்கிறான். பிற கடைக்காரர்கள் முதலில் இவனைப் பார்த்து கோபப்படுகிறார்கள். அவர்கள் அனைவர்க்கும் பணத்தை வாரி இறைப்பதால், பிறகு யாரோ பிழைக்கத் தெரியாத பைத்தியம் என்று விட்டுவிடுகிறார்கள்.
நாள் முடிவில் அந்த வணிகக் குழுவினருக்கு நகரத்தலைவனின் வீட்டில் விருந்து நடைபெறுகிறது. அதற்கு ராபினையும் அழைக்கிறார்கள். அவனை நகரத் தலைவனின் வலப்புறம் மரியாதைக்குரிய இடத்தில் அமரவைக்கி றார்கள். நகரத்தலைவனிடம் தன்னிடம் மிகப்பெரிய நிலப்பரப்பில் இன்னும் நிறையப் பிராணிகள் இருப்பதாக அளந்துவிடுகிறான் ராபின். அவற்றை மலிவாக வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற பேராசையால் ஐநூறு பொற்காசுகளையும் சில ஆட்களையும் அழைத்துக் கொண்டு மறுநாள் காலை ராபினுடன் கிளம்புகிறான் ஷெரீப். ராபின் அவனைத் தன் காட்டுக்குள் அழைத்துச் சென்று அங்கு ஓடுகின்ற நூற்றுக்கணக்கான மான்களைத் தன் பிராணிகள் என்று காட்டுகிறான். அப்போதுதான் தான் ஏமாந்துவிட்டது தலைவனுக்குப் புரிகிறது. இருந்தாலும் ராபின், அவனது இளைஞர் பட்டாளம் முன்னால் அவனால் என்ன செய்ய முடியும்? அவனுக்கு நல்ல விருந்தளித்து விட்டு பணத்தைக் கேட்கிறான் ராபின். ஷெரீப் எதுவும் தராததால் தானே அவனிடமிருந்த ஐநூறு பொற்காசு களையும் பிடுங்கிக் கொண்டு அவன் மனைவி முந்தியநாள் அளித்த சிறந்த விருந்துக்காக நன்றி தெரிவித்துப் பாராட்டி அவனை அனுப்பி வைக்கிறான்.
இப்படிப் பல சம்பவங்கள். குறிப்பாக ஆலன்-எ-டேல் என்பவனுக்கு அவன் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துவைக்கும் காட்சி மிகச் சிறப்பானது. அதேபோல் தன்னைப் பிடிக்க முற்படும் பிஷப்பை ஏமாற்றித் தப்பும் காட்சிகளும். இம்மாதிரிக் காட்சிகள் திரைப்படங்களில் மிகுதி.
ராபின்ஹூட் மிக நீண்டகாலம் தன் இளைஞர் பட்டாளத்துடன் நன்றாக வாழ்கிறான். இறுதியில் அவனுக்கு நோய் ஏற்படுகிறது. தன்னை குணப் படுத்த வேண்டி, பக்கத்து கிராமத்தின் கன்னியாமடத் தலைவியிடம் அழைத்துச் செல்லுமாறு சொல்கிறான் ராபின். அவளுக்குப் பல உதவி களை ராபின் செய்திருந்தாலும் அவள் நன்றிகெட்டவளாக இருக்கிறாள்.
இங்கிலாந்தில் அக்காலத்தில் நோய்வாய்ப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் உடலில் இருந்து மிகுதியாக இரத்தத்தை வெளியேற்றிவிடுவார் கள். அதனால் கெட்டரத்தம் நீங்கி அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை. ராபினுக்கு நோய் வந்ததை அவனைக் கொல்வதற்குச் சரியான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறாள் மடத்தலைவி. அவன் இறப்பதற்கு வேண்டிய அளவு காயத்தை உண்டாக்கிவிடுகிறாள். ஓரிரவு முழுவதும் காத்திருந்த லிட்டில் ஜான், காலையில் சென்று பார்க்கும்போது ராபின் இறக்கும் நிலையில் இருக்கிறான். தான் கடைசியாக அம்புவிட வேண்டும், அது தன் கடைசி ஆசை என்று ராபின் சொல்கிறான். அப்படியே அவனை அம்பு எய்யுமாறு கூற, அது மிகச் சமீபத்திலேயே விழுகிறது. அது விழுந்த இடத்தில் தன்னைப் புதைக்குமாறும் மடத்தலைவியை மன்னித்து விடுமாறும் கூறிவிட்டு ராபின்ஹூட் இறந்துபோகிறான்.
பொதுவாக ஏழை பங்காளர்களாக இருக்கும் வீரசாகசத் தலைவர்கள் அதிகாரத்தை எதிர்ப்பதால் இளம் வயதிலேயே தண்டிக்கப்பட்டு மாண்டு போவதாகவே தமிழ்நாட்டுக் கதைகள் அமைந்துள்ளன. நிறைவாழ்வு வாழ்ந்து முதுமையில் இறப்பதாக வரும் ராபின்ஹூட் போன்ற கதைகள் இங்கு அரிதினும் அரிது.