மேல்மட்டத்தில் இவர்கள்…

இரவு விடிந்த உடனே
ஒவ்வொருவரின் பணியும் இதுதான்:
‘வட்டாட்சியரிடம்’ செல்கிறார்கள்
‘விஏஓவிடம்’
‘மாவட்ட ஆட்சியரிடம்’
இன்னும் பல அலுவலகங்களுக்குச்
சென்று மறைகிறார்கள்.

நீங்கள் அலுவலகங்களுக்குள் நுழைந்தவுடன்
காகிதத்தாள் தொழில் பொழிகிறது
கரன்சியும் பொழிகிறது.
பெருமழைபோல கணினிகள் வந்தும்
‘நூற்றில் ஒன்றைப் பொறுக்கியெடு–
மிக முக்கியமானதை! — இவர் கேட்பதை அல்ல’.

அலுவகக் கூட்டங்களில்
சென்று மறைகிறார்கள் அதிகாரிகள்.

நான் சென்று கேட்கிறேன்:
‘இங்கே ஒருகாலத்தில் வந்திருக்கிறேன்.
அப்போது சங்கர் என்பவர் இருந்தார்
இப்போது யாரைப் பார்க்க வேண்டும்?’
‘பவானி சங்கர் இஆப
சென்றிருக்கிறார் புயல் நிவாரண
அமைச்சரிடம் ஆலோசனைக்கு’.

எண்ணற்ற படிக்கட்டுகள் காலை ஒடிக்கின்றன
ஏதோ கொஞ்சம் ஒளி மினுக்குகிறது
மறுபடியும்:
‘அடுத்தவாரம் வரச் சொல்கிறார்.
–கூட்டத்தில்: –
மின்கம்பங்கள் வாங்க வேண்டுவது தொடர்பாக
மத்தியக் குழுவிடம் நிதிக்காக’.

அடுத்த வாரம் —
எழுத்தர் ஒருவரும் வரவில்லை
அலுவலகப் பையனும் வரவில்லை
இருக்கைகள் காலி!
அத்தனை பேரும்
ஐந்தாம் மாடியில் அறிக்கைகள் தயாரிக்கும் கூட்டத்தில்.

இரவும் வந்துவிட்டது.
எனது தற்காலிக இருப்பிடத்தின் மிக உயரமான தளத்திற்கு
ஏறிக் கொண்டிருக்கிறேன்.
‘அதிகாரி வந்துவிட்டாரா?”
‘இன்னும் சந்திப்பில் இருக்கிறார்
தம்பானி குழுமப் பிரதிநிதிகளுடன்.’

அந்தக் கூட்டத்திற்குள்
பாய்கிறேன் எரிமலைக் குழம்புபோல
காட்டுத்தனமான வசைகள் உதிர்கின்றன.
அப்புறம் பார்:
அதிகாரிகள் துண்டு துண்டாக அமர்ந்திருக்கிறார்கள்
மேலே ஒன்றுமில்லை!
அவர்களின் மற்ற துண்டுகள் எங்கே?
‘வெட்டப் பட்டார்கள்!
கொல்லப் பட்டார்கள்!’

பித்துப்பிடித்தவன் போல் ஓடிக் கூச்சலிடுகிறேன்.
என் மனம் பேதலிக்கிறது.
மிக அமைதியாக ஒருவர்
சுட்டிக்காட்டுகிறார்:
‘அவர்கள் பல கூட்டங்களில் ஒரேசமயத்தில்
பங்கேற்கிறார்கள்’.
இருபது கூட்டங்களில் நாங்கள்
பங்கேற்க வேண்டும்.

இந்தவிழா அந்தவிழா நடத்த வேண்டும்
பத்துவழிச் சாலை போடவேண்டும்
பார்க்காமலே அறிக்கை தயாரிக்க வேண்டும்
மத்திய, மாநில… கேட்கவேண்டும்
தினமும்—
இன்னும் பல மிச்சம் இருக்கின்றன.
ஆகவே நாங்கள் எங்களை வெட்டிக் கொள்கிறோம்
துண்டுகளாக!

இங்கே இடுப்பு வரை
மீதிகளை அங்கே பார்.
எங்களுக்கு வேலை அதிகம்.
“கவனிக்கவேண்டும்” எங்களை
இல்லையேல் தேடியவர் கண்ணில் படுவாரா?

புதிர்நிலையில் தூங்க இயலவில்லை.
உணர்வு மழுங்கிய நிலையில்
விடியலைச் சந்திக்கிறேன்.
ம்ம், இன்னும் ஒரே ஒரு கூட்டம்
போடுங்கள்…
பாதிக்கப்படும் அனைவரையும்
ஒழிப்பதற்காக.


என் வாழ்க்கையில் ஓர் அலை

இன்று சிவாஜிகணேசன் நடித்த ‘தங்கை’ என்ற படத்தைப் பார்த்தேன். அதை நான் முதல் முறை பார்த்தது அநேகமாக 1966ஆம் ஆண்டு இறுதியாக இருக்கலாம். பிஎஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். ஒரு காரணத்தினால் அந்தப் படம் கொஞ்சம் என்னை மிகவும் பாதித்தது. வேறொன்றுமில்லை. அதில் வரும் கதாநாயகனுக்குக் காசநோயால் அவதிப்படும் ஒரு தங்கை இருப்பாள். அதேபோல எனக்கும் ஒரு தங்கை இருந்தாள்.
எனக்கு மூன்று வயது இளையவள். என் அப்பா ஆசையாக அறச்செல்வி என்று பெயரிட்டிருந்தார். எனக்குச் சிலகாலம் உயிராக இருந்தாள். ஆனால் காசநோய் அவளுக்கு.
காசநோய் மருத்துவ மனையில் சேர்க்கவேண்டும் என்ற அறிவுகூட என் தந்தை-தாய்க்கோ எனக்கோ இல்லை. தினமும் இருமி இருமி இரத்தம் உமிழ்ந்து அவள் படும் பாடு எவர் நெஞ்சையும் உருக்கும். பிறகு பெரிய இளைப்பு வந்து சோர்ந்து படுத்துக் கொள்வாள். சிறிய வயதிலிருந்தே அந்த நோய் தொற்றிக்கொண்டதால் அவள் வளர்ச்சியே குன்றியிருந்தது. படத்தில் வந்த தங்கை பிழைத்துக் கொண்டாள். கதாநாயகனின் காதலியாக இருந்த டாக்டர் அவளைக் காப்பாற்றிவிட்டாள். எனக்கு அப்படி யாரும் இல்லை. என் தங்கை இறந்துபோனாள்.
1968 மேயில் பட்டப்படிப்பை முடித்தேன். அநேகமாக ஜூன்மாதம் ரிசல்ட் வந்திருக்கலாம். 1968 ஆகஸ்டு 29ஆம் நாள் அணைக்கட்டு உயர்நிலைப் பள்ளியில் பயிற்சிபெறாத ஆசிரியனாகச் சேர்ந்த பிறகாவது அவளை நான் ஆஸ்பத்திரியில் சேர்த்து கவனிக்க ஏற்பாடு செய்திருக்கவேண்டும். செய்யவில்லை. விட்டுவிட்டேன்-எப்படியோ. அடுத்த ஆண்டு வல்லம் ஆரணி உயர்நிலைப் பள்ளிக்கு மாறினேன். (எல்லாம் தற்காலிகப் பதவிகள், ஜூன் முதல் ஏப்ரல்வரைதான் போஸ்டிங்). எழுபதாம் ஆண்டு ஜனவரியாக இருக்கலாம்-இப்போது நாள் மறந்துவிட்டது-அவள் துடிதுடித்து இறந்து போனாள். ஓரளவு சம்பாதித்தும், காப்பாற்ற முடியாத ஒரு மடத்தனமான அண்ணனாக இருந்தது பின்னர்தான் எனக்கு உறைத்தது.
அதற்குப் பிறகுதான் வேலூரை அடுத்த அடுக்கம்பாறையில் அரசாங்கக் காசநோய் மருத்துவ மனை தொடங்கினார்கள் என்று நினைக்கிறேன். முன்னாலேயே இருந்திருந்தால் ஒருவேளை அவள் அங்குச் சேர்க்கப் பட்டிருக்கக்கூடும். நிச்சயமாகத் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கும் அளவுக்கு எங்களிடம் காசு இல்லை. அதைவிடப் பெரியது எங்கள் மடத்தனம், அறியாமை. என் பெற்றோர் மட்டுமல்ல, நானும்கூட கிராமத்தின் கள்ளமற்ற தன்மையோடு இருந்துவிட்டோம்.
அந்தக் காலத்தில் கந்துவட்டிக்குப் பணம் கடன் வாங்கியாவது என்னை என் பெற்றோர் படிக்க வைத்தார்கள். பட்டப்படிப்பை மிகவும் முதல்தரமாக (பௌதிகத்தில் டி= வாங்கி) பத்தொன்பதாம் வயதின் தொடக்கத்திலேயே முடித்திருந்தும் வழிகாட்ட ஒருவரும் இல்லை. என் கல்லூரி பௌதிகத் துறைத் தலைவர் நினைத்திருந்தால் வழிகாட்டி யிருக்கலாம். ஆனால் அந்த சுந்தரராஜ ஐயங்கார், பார்ப்பனச் சாதியினருக்கு மட்டும்தான் வழிகாட்டினார். எங்களைச் சீயென்று விரட்டிவிட்டார், ஏமாற்றினார் என்றுகூடச் சொல்லலாம். அன்று எனக்குத் தெரிந்த ஒரே வேலை ஆசிரியர் வேலைதான். மேற்கொண்டு வேறு என்ன படிக்கலாம், என்ன வேலை செய்யலாம்-எதுவும் தெரியாது.

பதினேழு வயதில் இறந்துபோன என் தங்கையை இன்று நினைத்துக் கொள்கிறேன். 49 ஆண்டுகள் ஆயிற்று. அவள் முகம் என்னைக் குற்றம் சாட்டுகிறது. ஆனால் என்னசெய்ய?
சரி, இன்னொரு நாள் இன்னொரு அலையைக் காணலாம்.


ஜீவனாம்சம்

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மணவிலக்கு நடைபெறுவது அதிகம் என்பது நமக்குத் தெரியும். அச்சமயத்தில் ஆண், பெண்ணுக்கு மணவிலக்குத் தொகை (ஜீவனாம்சம்) பல சமயங்களில் தரவேண்டி வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் மிக அதிகமான மணவிலக்குத் தொகை தரவேண்டி ஆடவர்கள் நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதைப் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு இது:

ஒரு நீதிபதி பெண்ணுக்கு மேலும் அதிக ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்: கணவன் ஏற்கெனவே தன் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியை மனைவிக்கு ஜீவனாம்சமாகத் தர ஒப்புக் கொண்டுவிட்டான்.

“நீ இரண்டாம் 1/3 பகுதியைத் தரவேண்டும்” என்றார் நடுவர்.
“முடியாது, நான் ஏற்கெனவே அதைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்” என்றான் அந்த ஆள்.
“அப்படியா? அப்போது மூன்றாம் 1/3 பகுதியையும் தரவேண்டும்”.
“முடியாது, அதையும் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.”
“என்ன சொல்கிறாய்? உனது ஊதியம் முழுவதையும் முன்னாள் மனைவியருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறாயா? அப்படியானால் எதை வைத்து வாழ்கிறாய்?”
“என் மனைவி வேறு ஐந்து ஆண்களிடமிருந்து பெறும் ஜீவனாம்சத்தை வைத்து” என்றான் அந்த ஆள்.


பெண்கள் பற்றி லெனின்

ஒரு சமூகத்தின் முன்னேறிய அல்லது பின்தங்கிய இயல்பினை ஒரே ஒரு அடிப்படையில் மதிப்பிட முடியும் என்று லெனின் ஆழமாக நம்பினார். அதாவது, அது பெண்களை எவ்விதம் நடத்துகிறது என்பது. லெனின் தமது பேச்சுகளில் அவ்வப்போது சமூகத்தை மதிப்பிட ஃபூரியரின் அமிலச் சோதனையைத் திரும்பக் கூறுவது வழக்கம். அது Charles Fourier, ‘Degradation of Women in Civilisation’, in The’orie des Quatre Mouvements et des Destine’es Ge’ne’rales, 3rd ed., Paris, 1808 என்ற நூலில் இடம் பெற்ற கருத்தாகும்.

“பெண்களுக்கு நேரிட்ட விதியில் நீதியின் நிழலேனும் இருக்கிறதா? ஒரு இளம் பெண் தனது முழுச்சொத்தாக நினைக்கும், மிக அதிகமான விலைகொடுப்பவனுக்கு வெறும் வியாபாரப் பொருளாகக் காட்சியில் வைக்கப்படவில்லையா? ஓர் ஏளனமான திருமணப் பிணைப்புக்கு அவள் தரும் சம்மதம், அவளது குழந்தைப் பருவத்திலிருந்து பேயாட்டம் இடுகின்ற முற்சாய்வுகளின் கொடுங்கோன்மையினால் அவள்மீது திணிக்கப்பட்டது அல்லவா? மக்கள் அவளது சங்கிலிகள் பூக்களால் ஆக்கப்பட்டவை என்று கருதவைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவள் தன் கீழ்மையில் ஏதேனும் சந்தேகம் கொள்ள முடியுமா?
தத்துவங்களில் ஊதிப் பெருத்த இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் ஆடவன் ஒருவனுக்குத் தன் மனைவியைக் கழுத்தில் கயிற்றைக் கட்டி சந்தைக்குக் கொண்டு சென்று ஒரு சுமைதூக்கும் விலங்கைப் போல நல்ல விலைக்குக் கேட்பவனுக்கு விற்றுவிடும் உரிமை இருக்கிறது.
ஒரு நாகரிகமற்ற காலத்தில் மெய்யாகவே நாசவேலைக்காரர்களின் கழகமாக இருந்த கத்தோலிக்க மேகன் கவுன்சில், பெண்களுக்கு ஆன்மா உண்டா இல்லையா என்று வாதிட்டு, மூன்றே வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கிறது என்று உடன்படவில்லையா? அதைவிட இப்போதுள்ள பொதுமக்கள் கருத்து உயர்வாக இருக்கிறதா?
ஒழுக்கவாதிகள் ஆங்கிலச் சட்டத்தை மிக உயர்வானதென்று புகழ்கிறார்கள். அது ஆடவனுக்குத் தன் மனைவியின் ஏற்கப்பட்ட காதலன்மீது வழக்கிட்டுப் பண இழப்பீடு கேட்கின்ற உரிமை உள்பட எத்தனையோ உரிமைகளைப் பெண்களை இழிவுபடுத்துவதற்கு அளிக்கவில்லையா? ஃபிரெஞ்சு வடிவங்கள் சற்றே கடுமை குறைந்தவையாக இருந்தாலும் அடியில் எப்போதும் அதேமாதிரி அடிமைத் தனம்தான் இருக்கிறது…
பொதுவானதொரு கொள்கையாக: “பெண்கள் சுதந்திரத்தை நோக்கி முன்னேறும் அளவுக்கு சமூக முன்னேற்றமும் வரலாற்று மாற்றங்களும் உண்டாகின்றன. பெண்களின் சுதந்திரம் குறையும்போது சமூக ஒழுங்கின் நசிவு ஏற்படுகிறது.”
இன்று உலகத்திலிருக்கும் சமூகங்களின் மதிப்பீட்டுக்கான அடிப்படைகளில் ஒன்றாக (இது ஒன்றே போதாது என்றால்) மேற்கண்ட கடைசி வாக்கியம் அமைகிறது.


இன்றைய செய்தி

இன்று வையவன் என்ற எழுத்தாளர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார். என்னை விட வயதில் பத்தாண்டுகள் மூத்தவர். அடையாறு வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நூலை வெளியிட்டது பற்றியும் அவர் அனுப்பிய பிடிஎஃப் கோப்பில் தகவல்கள் இருந்தன. பேச்சிலேயே பிராமணர் என்பது தெரிந்தது. வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் (பள்ளிகொண்டாவில் பணி செய்தவர்). அவர் சொன்னதில் என்னை உறுத்திய விஷயம் ஒன்றே ஒன்று. தான் உறுதியான மாறாத சலனமற்ற மனநிலையை அடைந்து விட்டதாகக் கூறினார். அதில் வெளியான “நான்” என்பது என்னை உறுத்தியது. நான் என்ற விஷயத்தைத் தகர்க்காமல் எதை அடைய முடியும்? உறுதி என்பது மரணம்தான். அதுவரை மாறிக் கொண்டுதான் இருக்கிறோம். அதைத்தான் க்ஷணபங்க நியாயம் என்பதன் வாயிலாக புத்தர் கூறினார்.
முதலில் அவர் தமது அமைப்பில் என்னை அழைத்துப் பாராட்டுவதாகக் கூறினார். பேச்சின் போக்கில் நான் கடவுளை நம்பாதவன் என்று தெரிவித்தேன், ஆனால் அவரோ பகவத்கீதையை மொழிபெயர்த்தவர், ஆழ்ந்த பக்திமான் என்பதற்குமேல் இந்து என்பதில் பெருமை கொண்டவர். அவர் கருத்துகளுக்கு உடன்படாதவன் நான் என்றதும் தனது பேச்சை மாற்றிக் கொண்டார். சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் அவருடன் உரையாடினேன். ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. பார்ப்பனியத்தை நம் நாட்டிலிருந்து ஒழிக்க முடியாது என்பதும் புரிந்தது.
பேசிய பிறகு அவருக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பினேன். அதன் சாராம்சம் இதுதான். சலனமின்றி இருப்பது, தியானம், ஏன் முக்தியடைதல் எல்லாம் ஒருவருடைய நன்மைக்கு உதவலாம். சமுதாயத்திற்கு அதனால் என்ன பயன்? ஆதிகாலத்திலிருந்து அதைத்தானே இந்தியாவில் வலியுறுத்தினார்கள்? அதனால் சமூக அவலங்கள் ஏதேனும் தீர்ந்ததா? “சமூகத்திற்கு நம்மாலான பணியைச் செய்தால் அது போதும் எனக்கு” என்று எழுதினேன். என்னைப் பொறுத்தவரை உரையாடல் இறுதியில் கசப்புதான் மிஞ்சியது. பார்ப்பனர்கள் யாரோடு கருத்தியல் ரீதியாகப் பேசினாலும் ஏற்படுவது அதுதான். (இதற்கு ஒரே விதிவிலக்காக நான் கண்டவர் ஈழத்து பத்மநாப ஐயர்.)