பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6

(சித்திரக்கிரீவன் என்னும் புறாவின் கதை)

கொஞ்ச தூரம் பறந்தபிறகு புறா அரசன் தன் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது:

“கண்டகி ஆற்றின் கரையில் இருக்கும் சித்திரவனத்தில் என் நண்பனாகிய எலி அரசன் இரண்யகன் என்பவன் இருக்கிறான். அவன் நமது வலையை அறுப்பான், அங்கே செல்லுங்கள்.”

இதைக் கேட்டுப் புறாக்கூட்டம் பறந்துசென்று எலி அரசன் வளையருகில் இறங்கியது. தனக்கு எவ்வழியிலும் ஆபத்து நேரிடலாம் என்று வளைக்கு நூறு வழிகள் செய்து வைத்திருக்கும் எலியரசன், புறாக்கள் இறங்கிய ஒலியைக் கேட்டு பயந்து உள்ளேயே இருந்தது.

சித்திரக்கிரீவன் (புறா அரசன்): இரண்யகா, நண்பா! எங்களோடு ஏன் பேசவில்லை?

தன் நண்பன் குரலைக் கேட்ட எலியரசன் வளையிலிருந்து வெளிவந்தது.

siragu-panja-thandhiram-story6-1

இரண்யகன்: நான் மிகவும் புண்ணியம் செய்தவன். ஆகவே சித்திரக்கிரீவன் ஆகிய என் நண்பன் என் வீட்டுக்கு வந்தான். இவ்வுலகத்தில் மனம் ஒத்த நண்பர்களோடு பழகுவதைவிட வேறு ஆனந்தம் ஏது?

பறவைகளின் துன்பத்தை அது நோக்கியது.

இரண்யகன்: நண்பா, நீ எல்லாரைக் காட்டிலும் புத்திக்கூர்மை உடையவன் ஆயிற்றே, உனக்கு இப்படிப்பட்ட சோதனை எப்படி ஏற்பட்டது?

சித்திரக்கிரீவன்: எந்தக் காலத்தில் எது நடக்குமோ அது நடக்கும். விதி வலியது. அதற்கு முன் எந்த உபாயம் வெல்லும்? கடல் பெருகி மேலிட்டு வந்தால் அதற்குக் கரை ஏது?

எலியரசன்: ஆம், உண்மைதான். நூறு நாழிகை வழித் தொலைவில் இருக்கும் பொருள்களையும் ஆராய்ந்து அறிந்து செல்கின்ற நீயே இன்று வேடனின் வலைக்குள் சிக்கிக் கொண்டாய், பார்! சந்திரன், சூரியன் ஆகியோர்க்கும் ராகு கேது ஆகியவற்றால் கிரகணம் ஏற்படுகிறது. யானையும், பறவையும், பாம்பும் மனிதனுக்குக் கட்டுப்படுகின்றன. புத்திசாலிகளாக உள்ளவர்களுக்கும் வறுமை ஏற்படுகிறது. இவை யாவும் தெய்வச் செயல்களே.

இவ்வாறு கூறியபடி, சித்திரக்கிரீவனின் வலைக் கயிற்றை எலி அறுக்கத் தொடங்கிற்று.

புறா அரசன்: நண்பனே, முதலில் என் பரிவாரத்தின் கயிறுகளை அறு. பிறகு கடைசியாக என் கயிற்றை அறுக்கலாம்.

இரண்யகன்: முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொண்டுதான் தன் பரிவாரங்களைக் காப்பாற்ற வேண்டும். அறம் பொருள் இன்பம் ஆகிய இவைகளுக்கும் ஆதாரம் உயிர். ஆகவே முக்கிய சாதனமாகிய உயிரைக் காப்பாற்றினால் எல்லாவற்றையும் காப்பாற்றினாற் போல் ஆகும்.

சித்திரக்கிரீவன்: நீ சொல்வது சரிதான். ஆனால் இப்படிப்பட்ட வேதனைகளில் இருந்தெல்லாம் காப்பாற்றுவதற்காகத் தானே என்னை இவர்கள் அரசனாக நினைக்கிறார்கள்? ஆகவே என் உயிரைக் காப்பாற்றுவதற்கு முன் இவர்களைப் பிழைக்க வைப்பாயாக.

எலி அரசன்: நீ பரம சாது. அடுத்தவர்களை ஆதரிப்பவனாக இருக்கிறாய். எஜமானனிடம் விசுவாசமாக இருக்கின்ற சேவகனும், சேவகனிடம் அன்பாய் இருக்கின்ற எஜமானனும் சுகம் அடைவார்கள்.

இவ்வாறு கூறி, எலி அரசன், எல்லாப் புறாக்களின் கயிறுகளையும் பல்லினால் கடித்து அறுத்து, கடைசியாக சித்திரக்கிரீவனது கட்டையும் விடுவித்தது. பிறகு ஒன்றுக்கொன்று உபசார வார்த்தைகள் பேசிக் கொண்டன. சித்திரக்கிரீவன் நன்றி சொல்லித் தன் இடத்திற்குச் சென்றது.

லகுபதனன் ஆகிய காகம் இவற்றை எல்லாம் பார்த்து ஆச்சரியம் அடைந்தது. பிறகு அது எலி அரசனைப் பார்த்துச் சொல்லியது.

siragu-panja-thandhiram-story6-4

“நீ மிகவும் பாக்கியம் செய்தவன். நானும் உன் நட்பை விரும்புகிறேன். நீ அன்பு கூர்ந்து என் நண்பனாக வேண்டும்.”

இரண்யகன்: நீ யார்?

லகுபதனன்: நான் ஒரு காகம். என் பெயர் லகுபதனன்.

இரண்யகன்: உனக்கும் எனக்கும் வெகு தூரம். நான் உனக்கு இரை. நீ என்னைத் தின்கிறவன். ஆகவே உனக்கும் எனக்கும் நட்பு எவ்விதம் ஏற்படும்? அது ஆபத்துக்கே காரணமாகும். நரியின் நட்பினால் ஒரு மான் வலையில் அகப்பட்டது போல் எனக்கு உன்னால் தீமைதான் ஏற்படும்.

லகுபதனன்-அது எப்படி? மான் எப்படி வலையில் சிக்கியது?

(மான் நரியிடம் நட்புக் கொண்ட கதை)siragu-panja-thandhiram-story6-5

எலி அரசன்: மகத தேசத்தில் சண்பகவனம் ஒன்றில், மானும் காகமும் ஒன்றுக்கொன்று நட்பாக இருந்தன. அப்படி இருந்தபோது, அந்த மான் புல் முதலானவற்றை மேய்ந்து நன்கு கொழுத்திருப்பதை ஒரு நரி கண்டது. “இவனை நேரில் கொல்வது அசாத்தியம். ஆகவே வஞ்சனையினால் இவனைக் கொல்ல வேண்டும்” என்று நிச்சயித்துக் கொண்டது. மானிடம் சென்று, அது “நண்பா! சுகமா?” என்று விசாரித்தது.

மான்: நீ யார்?

நரி: என் பெயர் குத்திரபுத்தி. இந்தக் காட்டில் நான் எந்த நண்பனும் இன்றித் தன்னந்தனியாக ஒரு பாவியாகத் திரிந்துகொண்டிருந்தேன். இன்று உன்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி உண்டாயிற்று. உனக்குத் தேவையான வேலைகளைச் செய்துகொண்டு உன்னிடத்தில் நட்பாக இருப்பதற்கு விரும்புகிறேன்.

மான்: அப்படியானால் நல்லது. வா.

இரண்டும் சேர்ந்து மரம் ஒன்றின்கீழ்ச் சென்றன.

அந்த மரத்தில் மானின் நண்பனாகிய சுபுத்தி என்னும் காகம் வசித்து வந்தது. அது இரண்டையும் பார்த்தது.

காகம் (மானிடம்): நண்பனே, உன் அருகில் இருப்பவன் யார்?

மான்: இந்த நரி, என்னுடன் நட்பாய் இருக்க விரும்புகிறான்.

காகம்: நண்பனே, திடீரென்று நெருங்கிவந்து நட்புப் பாராட்டுபவனை நம்பலாகாது. ஒருவன் குலமும் நடத்தையும் தெரியாமல் அவனுக்கு இடம் கொடுத்தால் ஒரு பூனைக்கு இடம் கொடுத்து, கழுகு இறந்தாற்போல நேரிடும்.

மான் – கழுகு எப்படி இறந்தது?

(பூனையால் கழுகு இறந்த கதை)

siragu-panja-thandhiram-story6-2

காகம்: பாகீரதி ஆற்றங்கரையில் திரிகூடமலையில் ஒரு பழைய மரத்தின் பொந்தில் சரற்கவன் என்னும் கழுகு வசித்து வந்தது. அதற்கு வயதாகி விட்டது. நகமும் கண்ணும் போய்விட்டன. மற்றப் பறவைகள் அதன்மேல் ஆதரவு காட்டி, தங்கள் உணவில் கொஞ்சம் கொஞ்சம் அதற்குக் கொடுத்து அதைக் காப்பாற்றி வந்தன. அப்போது நெடுஞ்செவியன் என்னும் பூனை பறவைகளின் குஞ்சுகளைத் தின்ன வேண்டி அந்த மரத்தின்கீழ் வந்தது. அதைப் பறவைக் குஞ்சுகள் பார்த்துக் கூச்சலிட்டன. கண்தெரியாத கழுகு, “ஏன் கூச்சலிடுகிறீர்கள்? இங்கே வந்தது யார்?” என்றது. பூனை, ‘இந்தக் கழுகிடமிருந்து நாம் சண்டையிட்டுத் தப்ப இயலாது. தந்திரத்தினால்தான் தப்ப வேண்டும்’ என்று அதன் அருகில் சென்றது.

பூனை: ஆற்றல் மிகுந்தவனே, உனக்கு என் வந்தனம்.

கழுகு: நீ யார்?

பூனை: நான் நெடுஞ்செவியன் என்னும் பூனை.

கழுகு: இந்த இடத்தை விட்டு உடனே ஓடிப்போ. இல்லாவிட்டால் செத்துப்போவாய். கொன்றுவிடுவேன்.

பூனை: நான் சொல்வதைக் கேள். இன வேறுபாட்டினால் ஒருவரை ஒருவர் அழிப்பது சரியல்ல. அவனவன் நடத்தையைப் பார்த்தே எது செய்யத் தக்கதோ அதைச் செய்ய வேண்டும்.

கழுகு: நீ ஏன் வந்தாய், சொல்.

பூனை: நான் இந்த ஆற்றங்கரையில் நித்திய ஸ்நானம் செய்து, சாந்திராயணம் முதலான விரதங்களை அனுசரித்துக் கொண்டிருக்கிறேன். நீ மிகவும் தர்மவான் என்று பறவைகள் சொல்லக் கேள்விப்பட்டேன். முதிர்ந்த அறிஞனிடத்தில் தர்மத்தைக் கேட்கவேண்டும் என்று சாஸ்திரம் இருக்கிறது. அதனால் நான் உன்னிடத்தில் வந்தேன். நீயோ, தர்மத்தைவிட்டு என்னைக் கொல்லப் பார்க்கிறாய். இப்படிப்பட்ட ஆசாரத்தை நான் எங்கும் பார்த்ததில்லை. பகைவனும் தன் வீட்டுக்கு வந்தால் நல்லவர்கள் அவர்களை ஆதரிப்பார்கள். மரமும் தன்னை வெட்டுகிறவனுக்கு நிழல் கொடுக்கிறது அல்லவா?

விருந்தாளி, ஒரு வீட்டுக்கு வந்து முகம் வாடிச் சென்றால், அவனது பாவம் வீட்டுக்காரனுக்கு வருகிறது. வீட்டுக்காரனின் புண்ணியம் விருந்தாளியைச் சேர்கிறது. ஆகவே நல்லவர்கள் எல்லாரிடத்திலும் அன்பு காட்டுகிறார்கள். நிலவு எல்லார் வீட்டிலும் பிரகாசிக்கிறது அல்லவா?

கழுகு: பூனைஇனம் இறைச்சியைத் தின்கின்ற இனம். இங்கே பறவைகளைக் கொலைசெய்ய வந்திருக்கிறாய் என்று நான் அப்படிக் கூறினேன். நீ பிராமணப் பூனை என்பது எனக்குத் தெரியாது.

நெடுஞ்செவியன் அதைக் கேட்டு ‘சிவ சிவ’ என்று தரையைத் தொட்டுக் காதின் மேல் கையை வைத்துப் பொத்திக்கொண்டது.

பூனை: நான் தர்ம சாஸ்திரங்களைக் கேட்டு வைராக்கியம் அடைந்து பொல்லாத செயல்களை விட்டுவிட்டேன். அநேக சாஸ்திரங்களில் கொலையைப் போன்ற ஒரு பாதகம் இல்லை என்று சொல்லியிருக்கிறது. ஆகவே கனிகிழங்குகளைச் சாப்பிட்டுவருகிறேன். அப்படிப்பட்ட நான் பாதகம் எப்படிப் பண்ணுவேன்?

இவ்வாறு கூறி, கழுகுக்கு நம்பிக்கை வரச்செய்து, பூனை அதன் வீட்டில் இருந்தது. தினந்தோறும் ஒவ்வொரு பறவைக் குஞ்சாகப் பிடித்து தின்று கொண்டிருக்கத் தலைப்பட்டது. அப்போது குஞ்சுகளை இழந்த பறவைகள், மனக்கிலேசம் கொண்டு, தங்கள் குஞ்சுகள் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று தினமும் சோதிக்கத் தொடங்கின. இதை அறிந்த பூனை அந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விட்டது.

பறவைகள், கழுகின் பொந்தின் அருகில் வந்து பார்க்கும்போது, அங்குக் குஞ்சுகளுடைய எலும்புகளும் சிறகுகளும் விழுந்துகிடப்பதைக் கண்டன. ‘இந்தத் துரோகிக் கழுகுதான் நம் பறவைக் குஞ்சுகளைக் கொன்றது’ என்று நினைத்து கழுகை அவை கொன்றுவிட்டன.

ஆகவே ஒருவன் குணம் தெரியாமல் அவனுக்கு இடம் கொடுக்கலாகாது.

(மான் நரியிடம் நட்புக் கொண்ட கதை தொடர்கிறது)

siragu-panja-thandhiram-story6-3

இப்படி மான் கூறியதும், நரி, அதனிடம் சொல்லியது: நட்புக் கொள்வதற்கு முன்னாலேயே ஒருவனது பண்பு எப்படித் தெரியவரும்? ஆகவே என்னை நண்பனாக ஏற்றுக்கொள்.

மான் அதைக் கேட்டு, காகத்தைப் பார்த்து, “நீ எப்படி எனக்கு நண்பனாக இருக்கிறாயோ, அப்படியே இவனும் இருந்துபோகட்டும். நீ அதற்குத் தடை சொல்லாதே” என்று உரைத்தது.

இப்படியே மூன்றும் தங்கள் தங்கள் வழக்கப்படி இரைதேடித் தின்று அந்த மரத்தின் அடியில் ஒன்று சேர்ந்து வசித்தன. ஒருநாள்

நரி, (மானைப் பார்த்து): இந்தக் காட்டில் மிகப் பசுமையான இடம் ஒன்று இருக்கிறது. உனக்கு அதைக் காட்டுகிறேன், வா.

இவ்வாறு கூறிக் காட்டுக்கு அருகிலுள்ள ஒரு கொல்லையை மானுக்குக் காட்டியது நரி. அதைக் கண்டு மானும் தினம் தினம் அங்குச் சென்று பயிர் களை மேய்ந்து புசித்தவாறு இருந்தது. இதை ஒரு நாள் கண்ட கொல்லைக்குச் சொந்தக்காரன், மானைப் பிடிக்க வலைவிரித்தான். மானும் அந்த வலையில் சிக்கிக் கொண்டது. ‘இப்போது யார் என்னைக் காப்பாற்று வார்கள்? நண்பர்கள்தான் உதவ வேண்டும்’ என்று நினைத்தவாறு இருந்தது.

அப்போது நரி அங்கு வந்தது. தன் எண்ணப்படியே நடந்ததுகண்டு மகிழ்ச்சியடைந்தது.

மான்: நண்பா! ஏன் சும்மா இருக்கிறாய்? என்னை விடுவித்துவிடு. சங்கட காலத்தில் நண்பர்கள்தான் உடையிழந்தவன் கைபோல் அவனுக்கு உதவுகிறார்கள்.

நரி: நீ சொல்வது மெய்தான். ஆனால், இன்றைக்கு எனக்கு விரதம். ஆகவே இந்தத் தோல்வலையை இன்று என் பல்லினால் கடிக்க மாட்டேன். நாளைக்கு நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். நண்பனுக்காக உயிரும் கொடுப்பவன் அல்லவா நான்?

இவ்வாறு சொல்லிவிட்டு, அருகில் ஓரிடத்தில் சென்று ஒளிந்து கொண்டது. மான் இரவு நேரம் ஆகியும் வராததைக் கண்டு வருந்திய காகம் தேடிக் கொண்டு அங்கே வந்தது.

மான் (காகத்திடம்): நண்பா, உன் பேச்சைக் கேட்காமல் போனதால்எனக்கு வந்த பலன் இது.

காகம்: உன் கூட்டாளியாகிய நரி எங்கே போனான்?

மான்: என் இறைச்சியைத் தின்பதற்காக இங்கேதான் எங்கேயாவது ஒளிந்துகொண்டிருப்பான்.

காகம்: இந்தக் காலத்தில் எல்லாரும் தங்களுக்கு ஏதாவது லாபம் கிடைக்கும் என்றுதான் பணிவாக நடந்துகொள்வது போல நடிக்கிறார்கள். நல்லது சொல்கின்ற நண்பன் பேச்சைக் கேளாதவனுக்கு விபத்து விரைந்து வருகிறது. மேலும் அவன் தன் பகைவனுக்கே மகிழ்ச்சியை அளிக்கிறான்.

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது கொல்லைக்கார விவசாயி ஒரு தடியை எடுத்துக்கொண்டு தொலைவில் வருவதைக் காகம் பார்த்தது.

காகம்: நண்பனே, நான் சொல்வதை இப்போதேனும் கேள். இப்போது மூச்சை அடக்கிக் கொண்டு செத்தவனைப் போலக் கிட. விவசாயி உன்னைப் பார்த்துச் செத்துப்போய்விட்டாய் என்று எண்ணி, வலையை அவிழ்த்துவைக்கப் போவான். அப்போது நான் கத்துகிறேன். நீ உடனே விரைவாக ஓட்டம்பிடி.

இவ்வாறு கூறிவிட்டு, காகம் பொய்யாக, மானின் கண்ணைக் குத்தியவாறு இருந்தது. கொல்லைக்காரன், மான் செத்துப்போயிற்று என்று கருதி, வலையை அவிழ்த்து ஓரிடத்தில் ஒன்றாகக் கட்டிவைக்கச் சென்றான். காகம் அதைப் பார்த்துக் கத்த, மான் விரைந்து ஓட்டம் பிடித்தது. அதைக்கொல்ல நினைத்துக் குடியானவன் தன் தடியை அதன்மேல் வீசி எறிந்தான். அது மறைந்திருந்த நரியின்மீது பட்டு அது இறந்தது.

இக்காலத்தில் புண்ணியமோ, பாவமோ மிகுதியாகிவிட்டால், அதன் பலன் உடனே கிடைத்துவிடுகிறது. மானுக்கு நரியின் நட்புப் போல, எனக்கும் உன் சிநேகிதம் உதவாது.

(சித்திரக்கிரீவன் கதை தொடர்கிறது)

இதைக் கேட்ட காகம், எலி அரசனிடம்: “உன்னைத் தின்று என் பசியாறுமா? நீ உயிருடன் இருந்தால்தான் சித்திரக்கிரீவனைப் போல எனக்கும் நன்மை கிடைக்கும்” என்றது.

  (தொடரும்)


பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5

siragu-panjathandhira-kadhaigal1

ஆனால் துஷ்டபுத்தி தன் தந்தை கூறிய நல்லறிவுரையை ஏற்கவில்லை. வலுக்கட்டாயமாக அவரைத் தூக்கிக்கொண்டு சென்று மரப்பொந்தில் உட்கார வைத்தான். மறுநாள் காலையில் நீதிபதியையும் சுபுத்தி முதலான பிறரையும் அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, “எனக்கு இந்த மரமே சாட்சி. இதைக் கேளுங்கள்” என்று கூறினான். அப்போது அந்த மரத்திலிருந்து, “பணம் அனைத்தையும் சுபுத்தியே கொண்டுசென்றான்” என்று ஒரு குரல் எழுந்தது.

சுபுத்தி (தனக்குள்): இது என்ன மோசமாக இருக்கிறது? மரம் எங்கேயாவது பேசுமா? ஒரு பிராணியும் இல்லாமல் இந்தச் சத்தம் எங்கிருந்து வந்தது? இது தெய்வ சக்தியாக இருந்தால் உண்மையை அல்லவா சொல்ல வேண்டும்? இதைச் சோதித்துப் பார்த்தால்தான் உண்மை விளங்கும்.

(நியாயதிபதியிடம்): ஐயா, மரம் பேசுவது என்பது இயற்கைக்கு மாறானது. நான் மேலே ஏறிச் சென்று சோதித்துப் பார்க்கிறேன்.

மரத்தில் ஏறியபோது கிழவரை ஒளித்துவைத்த பொந்து காணப்பட்டது. ஆனால் உள்ளே ஆள் இருப்பது தெரியவில்லை. இங்கேதான் ஏதாவது சூழ்ச்சி இருக்க வேண்டும் என்று எண்ணிய சுபுத்தி, அங்கு நெருப்பை மூட்டினான். உள்ளே இருந்த கிழவர், கொஞ்சநேரம் வரை நெருப்பின் வேதனையைப் பொறுத்துப் பார்த்தார். இயலாமல் போகவே வெளியே வந்து விழுந்தார். அங்கிருந்த எல்லோரும் “இது என்ன” என்று அவரைக் கேட்டனர்.

கிழவர்-என் மகன் துஷ்டபுத்தி நான் சொன்ன அறிவுரையைக் கேட்காமல் பலாத்காரமாக என்னை இங்கே கொண்டுவந்து உட்காரவைத்தான்.
என்று சொல்லிவிட்டு, மூச்சுத்திணறிய அந்தக் கிழவர் இறந்துபோனார்.

பிறகு துஷ்டபுத்தியின் வாய்மூலமாகவே எல்லாச் செய்திகளையும் அரசன் அறிந்துகொண்டு, அவனைக் கழுவில் ஏற்றினான்.

இவ்வாறு கரடகன் தமனகனிடம் சொல்லியது. பிறகு, “பாம்பை வெகுநாள் பாலூட்டி வளர்த்தாலும், அது வளர்த்தவனையே கடிக்கும். ஆகவே எனக்கு உன்னிடம் பயமாக இருக்கிறது. இனிமேல் உன்னிடம் தேவதத்தனைப் போலத்தான் நடந்து கொள்ள வேண்டும்” என்றது.

தமனகன்-தேவதத்தன் எப்படி நடந்துகொண்டான், சொல்.

கரடகன்-ஒரு நகரத்தில் தேவதத்தன் என்னும் வியாபாரி இருந்தான். அவனுடைய பணம் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுக் கரைந்துவிட்டதால் மறுபடி பொருள் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து, தன்னிடம் கடைசியாக இருந்த ஆயிரம் இரும்புக் கம்பிகளைத் தன் நண்பன் பகதத்தன் என்பவனிடம் வைத்துவிட்டுச் சென்றான். சென்ற இடத்திலும் அவனுக்குச் சரிவர வியாபாரம் நடந்து பணம் கிடைக்கவில்லை. ஆகவே சொந்த ஊருக்கே திரும்பிவந்து, தன் நண்பனிடம் தான் கொடுத்து வைத்திருந்த இரும்புக் கம்பிகளைக் கேட்டான். பகதத்தன் பேராசை பிடித்தவன். இவனை ஏமாற்ற நினைத்து, “இரும்புக் கம்பிகளை எலிகள் தின்றுவிட்டன” என்று சொன்னான். தேவதத்தன் இவன் சூழ்ச்சியை வேறு ஒரு உபாயத்தினால்தான் முறியடிக்க வேண்டும் என்று நினைத்து, நண்பன் சொன்னதை ஏற்றுக்கொண்டதுபோல் நடித்துச் சென்றுவிட்டான்.

மற்றொரு நாள், பகதத்தனின் மகனுடன் தேவதத்தன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனைக் கடைக்கு அழைத்துச் செல்வதுபோல் தொலைவாக அழைத்துச் சென்று வேறு ஒரு இடத்தில் ஒளித்து வைத்துவிட்டான். வெகுநேரம் ஆகியும் பிள்ளை வராமல் போகவே, பகதத்தன் தேவதத்தனிடம் வந்து, “என் மகன் எங்கே” என்று கேட்டான்.

தேவதத்தன்: உன் மகனைப் பருந்து தூக்கிக்கொண்டு போய்விட்டது.

பகதத்தன் இதைக் கேட்டு மிகவும் கோபமும் துக்கமும் அடைந்து, தேவதத்தனை இழுத்துக் கொண்டு நியாயத்தலைவரிடம் சென்றான்.

பகதத்தன்: இந்த துஷ்டன் என் மகனை எங்கேயோ ஒளித்து வைத்துவிட்டுப் பருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டதாகச் சொல்கிறான். தாங்கள்தான் என் மகனைத் திரும்ப வருவித்துத் தரவேண்டும்.
நியாயத்தலைவன் (தேவதத்தனிடம்): இவன் மகன் எங்கே இருக்கிறான்? சொல்.

தேவதத்தன்: இவன் மகனைப் பருந்து தூக்கிக்கொண்டு போய்விட்டது.

நியாய அதிகாரி (குலுங்கிக் குலுங்கிச் சிரித்து): இப்படி எங்கேயாவது நடக்குமா? இது மாதிரி உலகத்தில் நடந்ததே இல்லை. ஏன் இப்படிப் பொய் சொல்கிறாய்?

தேவதத்தன்: ஐயா, இதுபோய் ஒரு ஆச்சரியமா? கொஞ்ச நாளுக்கு முன்னால் என் இரும்புக் கம்பிகளை எல்லாம் எலிகள் கடித்துத் தின்றுவிட்டனவே. அப்படித்தான் இதுவும் நடந்தது.

இதைக் கேட்ட அதிகாரி, முன்பு நடந்த விஷயங்களை எல்லாம் விசாரித்து அறிந்தான். பிறகு, பகதத்தனிடம், “நீ அவனுடைய இரும்புக் கம்பிகளை எல்லாம் திரும்பக் கொண்டுவந்து கொடுத்தால், அவன் உன் மகனைத் திரும்ப ஒப்படைப்பான்” என்றான். இருவரும் அப்படியே செய்து தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்றார்கள்.

இவ்வாறு சொல்லிய கரடகன், தமனகனிடம், “சொல்லிய பொருளைத் தெரிந்து கொள்ளாதவன் கல்லுக்குச் சமம். உனக்கு உபதேசம் செய்து பயனில்லை” என்றது.

இவ்வாறு கூறியபின், கரடகன், தமனகன் இரண்டும் சிங்கத்திடம் சென்றன. சிங்கம் அங்கே சஞ்சீவகனாகிய எருதைக் கொன்றுவிட்டு மிகுந்த வருத்தத்துடன் உட்கார்ந்திருந்தது.siragu-pancha-thandhira-kadhai4தமனகன்: சுவாமி, தாங்கள் உங்கள் எதிரியைக் கொன்றுவிட்டு வருத்தப்படுகிறீர்களே, இது நியாயம் இல்லையே? எதிரியைக் கொல்லலாம் என்று சாத்திரங்கள் சொல்கின்றன. தந்தையாக இருந்தாலும், உறவினராக இருந்தாலும், மகனாகவே இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், யார் தன்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்களோ, அவர்களை அதிகாரத்தில் இருப்பவன் முதலில் கொன்றுவிட வேண்டும். சுதந்திரமாகத் திரிகிற மனைவியும், கெட்ட சிநேகிதனும், தாறுமாறாக நடக்கும் சேவகனும், அஜாக்கிரதையான மந்திரியும், நன்றிகெட்டவனும் இருக்கலாகாது. மேலும், மெய், பொய், கடுமை, மென்மை, கொலை, தயை, உதாரண குணம், உலோப குணம், பலவழிகளில் பொருளீட்டுதல், அதிக எண்ணிக்கையிலான நண்பர்கள் இப்படி பல பண்புகள் அரசனுக்கு இருக்கவேண்டும் என்று அரசநீதி சொல்கிறது. அப்படியே தாங்கள் இதைச் செய்தீர்கள்.

இவ்வாறு கூறி, தமனகன், சிங்கத்திற்கு மகிழ்வூட்டியது. சிங்கமும் முன்போலவே அந்தக் காட்டில் தனது அரசாணையை நடத்தியவாறு சுகமாக இருந்துவந்தது.
[மித்திரபேதம் என்னும் முதற்பகுதி முற்றிற்று.]

இரண்டாம் பகுதி—சுகிர்லாபம் அல்லது நட்புப் பேறு

நட்பின் அவசியம் பற்றி அரசகுமாரர்களுக்கு சோமசர்மா சொல்லத் தொடங்கினான். “காகமும் எலியும் ஆமையும் நட்பினால் ஒன்றை ஒன்று காப்பாற்றினாற் போல, புத்திசாலியாக இருக்கின்ற நண்பர்கள், செல்வமில்லாவிட்டாலும், வேறு கருவிகள் இல்லாவிட்டாலும், ஒருவர்க்கொருவர் உதவுவார்கள்” என்று அவன் சொல்ல, பிள்ளைகள், “அது எவ்விதம்?” என்று கேட்டார்கள். சோமசர்மா உடனே கதை சொல்லத் தொடங்கினான்.

கோதாவரி நதிக்கரையில் ஒரு பெரிய வன்னிமரம் இருந்தது. அதில் லகுபதனன் என்னும் காகம் வசித்துவந்தது. ஒருநாள் காலையில் அங்கு பயங்கரமான வேடன் ஒருவன் வந்தான். இவன் என்ன செய்வானோ தெரியவில்லையே, தெரிந்துகொள்வது நல்லது என்று காகம் நினைத்தது. இதற்குள் அந்த வேடன் தன் வலையை விரித்து, அதன்மீது தானியங்களைத் தெளித்துவிட்டு, தான் ஒரு செடி மறைவில் பதுங்கியிருந்தான். அப்போது சித்திரக்கிரீவன் என்னும் புறா தன் பரிவாரத்தோடு அந்த மரத்தில் வந்து அமர்ந்தது. புறாக்கள் அந்த தானியங்களைச் சாப்பிட விரும்பின. ஆனால் சித்திரக்கிரீவன் சொல்கிறது.

“ஆள் அரவமற்ற இந்தக் காட்டில் தானியம் எப்படி வரும்? யாராவது கொண்டு வந்து போட்டிருக்கத்தான் வேண்டும். அது நமக்குத் தெரியாதவரை நாம் இதைப் புசிக்கலாகாது. ஒரு பார்ப்பனன் பொன்னுக்கு ஆசைப்பட்டு புலியினால் எப்படி இறந்தானோ அதுபோல இதுவும் எனக்கு விபரீதமாகத் தோன்றுகிறது.”

siragu-pancha-thandhira-kadhai112

பிற புறாக்கள்-அது எப்படி மகாராஜா?

சித்திரக்கிரீவன்-நான் ஒரு சமயம் வேறொரு காட்டில் மேய்ந்துகொண்டிருந்த போது நடந்ததைச் சொல்கிறேன். கேளுங்கள். ஒரு கிழப்புலி, பலவீனத்தால் உணவு தேடமுடியாமல், ஒரு யுக்தியைச் செய்தது. நீராடிவிட்டு, ஏரிக்கரை ஒன்றில் கையில் தருப்பைப் புல்லை வைத்துக்கொண்டு உட்கார்ந்தது. அப்போது அந்த வழியாக ஒரு பார்ப்பனன் வந்தான். புலி அவனைப் பார்த்து, “ஓ பிராமணரே, நான் உமக்கு இந்தப் பொன் காப்பைத் தருகிறேன், வந்து பெற்றுக் கொள்ளும்” என்றது. பிராமணன் யோசிக்கலானான். “இந்தக் காப்பு வலிய நமக்குக் கிடைக்கிறது. புலியோ மனிதர்களைக் கொல்லக் கூடியது. ஆகையினால் இந்தக் காப்பின்மீது ஆசை வைக்கலாகாது. ஆனால், மரணத்திற்குப் பலவேறு வழிகள் இருக்கின்றதே. எவ்விதத்திலேனும் ஒருவனுக்கு மரணம் சம்பவிக்கலாம். ஆகவே முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை” என்று நினைத்தான்.

பிராமணன் (புலியைப் பார்த்து): காப்பு எங்கே இருக்கிறது?

புலி (கையிலுள்ள காப்பைக் காட்டி): இதோ பாரும், பிராமணரே. என் கையில் உள்ளது.

பிராமணன்: நான் எப்படி உன்னிடத்தில் நம்பிக்கை வைத்து அருகில் வருவது?

புலி: நானும் பிராமணப் புலிதான். வைகறை எழுந்ததும் இந்தக் குளத்தில் நீராடி நித்தியதானம் செய்துகொண்டிருக்கிறேன். நான் நகமும் பல்லும் போன கிழவன். வேட்டல், ஓதல், கொடுத்தல், தவம், சத்தியம், உறுதி, பொறுமை, ஆசையின்மை என்னும் எட்டு தருமங்களையும் நான் அறிந்திருக்கிறேன். அதனால் எனக்குக் கிடைத்த இந்த அபூர்வப் பொருளை யாருக்கேனும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போதும் உமக்கு என்னிடம் நம்பிக்கை வரவில்லையா?

பிராமணன்: நான் உன்னை நம்பலாம்தான். ஆனால் புலிகள் தீங்கு செய்பவை என்று உலக அபவாதம் இருக்கிறதே.

புலி: நான் தர்ம சாஸ்திரம் அறிந்த புலி. தன் உயிர் எப்படித் தனக்கு இனிக்கிறதோ அப்படித்தான் எல்லாருக்கும். இதை அறிந்ததால் சாதுக்கள் பிராணிகளிடமும் கருணை காட்டுகிறார்கள். தன்னைப் போல சுக துக்கங்களைப் பிறரிடமும் எண்ணிப்பார்க்கிறார்கள்.

நீ மிகவும் ஏழையாகக் காணப்படுவதால் உனக்கு இந்தக் காப்பைத் தர நினைத்தேன். ஏழைக்குக் கொடுப்பதுதானே முறை? செல்வர்களுக்குக் கொடுத்து என்ன பிரயோஜனம்? நோயுற்றவனுக்குத்தான் மருந்து செல்லும். நோயில்லாதவனுக்கு அது எப்படிப் பயன்படும்? ஆகவே நீ இந்த ஏரியில் நீராடிவிட்டு வா. உனக்கு இதைத் தருகிறேன்.
அந்த பிராமணனுக்குப் பின்புத்தி. ஆகவே ஏரியில் நீராட இறங்கினான். அது சேறுமிகுந்த இடம். ஆகவே அவன் கால் உளையில் சிக்கிக் கொண்டது.

புலி: பிராமணரே, கவலைப்பட வேண்டாம். நான் உம்மைக் காப்பாற்றுகிறேன்.

இவ்விதம் சொல்லியவாறே மெல்லச் சென்று அவனைப் பிடித்துக்கொண்டது.

பிராமணன் (தனக்குள்): கெட்டவர்கள் வேதம் படித்தாலும் தர்ம சாஸ்திரம் அறிந்திருந்தாலும், அவர்கள் வார்த்தையில் நம்பிக்கை வைக்கலாகாது. கூடப் பிறந்த குணம் எப்போதும் நீங்குவதில்லை. நமது சாதிக்கு இயல்பாக இருக்கின்ற பேராசைக் குணத்தினால் இந்த துஷ்டனிடத்தில் நம்பிக்கை வைத்து மோசம் போனேன்.

என்று அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையிலேயே, புலி அவனைக் கொன்று தின்றது. ஆகையால் எதையும் மிகவும் சிந்தித்துத்தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் யாதொரு தீங்கும் நேரிடாது” என்று சித்திரக்கிரீவன் கூறியது.

siragu-panja-thandhiram-story1

மற்றொரு புறா: இப்படி ஆலோசித்தால் நமக்கு ஒரு இரையும் கிட்டாது. மேலும் வெட்கப்படுபவன், பொறாமை உள்ளவன், சந்தோஷப்படாதவன், குரோதம் உள்ளவன், தீராத சந்தேகம் உள்ளவன், பிறர் பொருளில் ஜீவனம் செய்பவன் ஆகிய இவர்கள் துக்கத்தையே அனுபவிப்பார்கள். ஆகவே நாம் இந்த தானியங்களைத் தின்னலாம் வாருங்கள்.
இதைக் கேட்ட பல புறாக்களும் தானியங்களைத் தின்னும் பொருட்டு இறங்கிக் கீழே வலையில் அகப்பட்டுக் கொண்டன.

சித்திரக்கிரீவன்: எல்லாரும் என் சொல்லைக் கேளாமல் போனார்கள். இப்போது அனுபவிக்கிறார்கள். ஆனால் நான் மட்டும் தனியாக இருந்து என்ன பயன்? அவர்களுக்கு வந்த கதி எனக்கும் வரட்டும்.
இவ்வாறு அதுவும் அந்த வலையில் சிக்கிக் கொண்டது. அப்போது வேடன் அந்த இடத்தை நோக்கி வரத்தொடங்கினான்.

புறாக்கள்: நாங்கள் நீசன் புத்தியைக் கேட்டு உன்னை அவமானம் செய்தோம். அதற்குப் பலன் இப்போது கிடைத்துவிட்டது.

சித்திரக்கிரீவன்: இப்போது வருத்தப்பட்டுப் பயன் என்ன? எனக்கு ஒரு உபாயம் தோன்றுகிறது. எல்லாரும் ஒரே சமயத்தில் வலையோடும் சேர்ந்து பறந்து வேறிடத்திற்குச் செல்லவேண்டும். அப்படிச் செய்தால்தான் நம் உயிர்களைக் காப்ப்ற்றிக் கொள்ள முடியும்.

இதைக் கேட்டவுடனே எல்லாப் பறவைகளும் சடுதியில் வலையோடு சேர்ந்து பறந்துபோயின. வேடன் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். ஆனால், இவைகள் ஒன்றுக்கொன்று விரைவில் சண்டையிடும். அப்போது என் கையில் அகப்படும் என்று நினைத்தவாறு வலையைப் பின்தொடர்ந்து ஓடினான். ஆனால் புறாக்கள் கண்ணுக்கு மறைந்துவிட்டதால் வருத்தப்பட்டுத் திரும்பினான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த லகுபதனன் என்னும் காகம் புறாக்களைப் பின்தொடர்ந்து போயிற்று.

(தொடரும்)


பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -4

பஞ்சதந்திரக் கதைகள் (தொடர்ச்சி)

இங்கும் அப்படித்தான் நடக்கிறது. கெட்டவர்கள் கையில் அகப்பட்டு இறப்பதைக் காட்டிலும் சண்டை செய்து இறப்பதே மேலானது. போர் முனையில் இறப்பவன் சொர்க்கம் அடைகிறான். பகைவர்களை வென்றால், அவனுக்கு ராஜ்யம் கிடைக்கிறது. ஆகவே வீரர்களுக்குச் சாவும் பிழைப்பும் சமம்தான் என்று சஞ்சீவகன் கூறியது.

தமனகன்:பகைவர்களுடைய பலத்தை அறியாமல் எவன் பகை கொள்கிறானோ, அவன் ஒரு சிட்டுக்குருவியினால் பெருங்கடல் அவமானம் அடைந்ததைப் போல அவமானம் அடைவான்.

சஞ்சீவகன்: அது எப்படி?

தமனகன், கதை சொல்லலாயிற்று.

siragu-panjathandhira-story3

ஒரு கடற்கரையில் உள்ள மரத்தில் இரண்டு சிட்டுக்குருவிகள் கூடுகட்டிக் கொண்டிருந்தன.

பெட்டை (ஆண்பறவையைப் பார்த்து): நான் எங்கே முட்டை இடுவேன்? ஆண்பறவை: இது நல்ல இடம்தான். இங்கேயே இடு.

பெட்டை: இந்தக் கடலினால் ஒருவேளை அபாயம் நேரிடலாம்

ஆண்குருவி: இந்தக் கடல் என்னுடன் பகைத்துக் கொள்ள முடியாது.

பெட்டை: உன் பலம் என்ன, கடலின் பலம் என்ன? யார் தன் பலத்தையும் பிறர் பலத்தையும் பார்ப்பதில்லையோ அவன் விபத்தை அடைகிறான். எவன் சீர்தூக்கிப் பார்க்கிறானோ அவன் சுகம் அடைகிறான். மேலும்தனக்கு நன்மை செய்கின்றவர்களின் பேச்சைக் கேட்காதவன், ஆமை கழியைவிட்டு இறந்ததைப் போலத் தானும் கெடுவான்.

ஆண்குருவி: அதெப்படிப் பெண்ணே? சொல்.

பெண்குருவி சொல்லலாயிற்று.

ஒரு குளத்தில் விகடன், சங்கடன் என்ற இரண்டு அன்னங்கள் இருந்தன. கம்புக்ரீவன் என்னும் ஆமை அவற்றுடன் நட்பாய் இருந்தது. மழை பெய்யவில்லை. அதனால் குளம் வற்றிவிடும்போல் இருந்தது.

விகடன் சங்கடனிடம் “நாம் வேறொரு குளத்திற்குப் பறந்துபோய்விடுவது நல்லது. இதை நம் ஆமை நண்பனிடம் சொல்லி விடை பெறலாம்” என்றது. அவ்விதமே இரண்டும் ஆமையிடம் கூறின.

கம்புக்ரீவன்: உங்களுக்குச் சிறகிருக்கிறது. பறந்து போய் விடுவீர்கள். நான் என்ன செய்வது?

அன்னங்கள் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தன.

அன்னங்கள்: எங்கள் சொற்களில் நம்பிக்கை வைத்து நீ வருவதானால் உன்னையும் நாங்கள் வேறிடத்திற்குக் கொண்டு செல்கிறோம். ஆனால் வழியில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வாயைத் திறக்கக்கூடாது.

இருபறவைகளும் ஒரு சிறு கழியைக் கொண்டுவந்தன.

siragu-panjathandhira-story1

அன்னங்கள்: இந்தக் கழியைப் பல்லினால் பலமாகப் பிடித்துக்கொள். விட்டுவிடாதே. நாங்கள் இருவரும் எங்கள் அலகினால் இதைக் கவ்விக்கொண்டு ஆகாயத்தில் பறந்துசெல்லப் போகிறோம்.

இவ்விதமே அவை ஆமையைத் தூக்கியவாறு பறந்தன. வழியில் ஒரு கிராமம் வந்தது. அந்த கிராம மக்கள் வானில் தெரிந்த இந்த நிகழ்ச்சியைப் பார்த்து அதிசயத்துடன் இரைச்சல் இட்டுப் பேசிக் கொண்டார்கள். இரைச்சலைக் கேட்ட ஆமை, “எங்கிருந்து இந்த இரைச்சல் உண்டாகிறது?” என்று நண்பர்களைக் கேட்பதற்காக வாயைத் திறந்தது. உடனே கழியிலிருந்து விடுபட்டுக் கீழே விழுந்தது. கிராமத்தினர் ஆமைக்கறி நன்றாக இருக்கும் என்று அதை உடனே கொன்று தின்றார்கள்.

ஆகையால் நமக்கு நன்மை செய்பவர்களின் பேச்சை அசட்டைசெய்யலாகாது. மேலும், எந்தக் காரியமாக இருந்தாலும் வருமுன் யோசிப்பவர்களும், வருகின்றபோது ஆராய்பவனும் நலம் அடைவார்கள். மாறாக, எது வருமோ அது வரட்டும் என்று நினைப்பவன், அவன், ‘வந்தபின் காப்போன்’ என்னும் மீன் போல நாசம் அடைவான்.

இப்படிப் பெண்குருவி கூறியது.

ஆண்குருவி: அது எப்படி?

பெட்டை மற்றொரு கதையைச் சொல்லத் தொடங்கியது.

ஒரு பெரியகுளத்தில், வருமுன்-காப்போன், வரும்போது-காப்போன், வந்தபின்- காப்போன் என்று மூன்று மீன்கள் இருந்தன. வெப்பத்தினால் குளத்தில் நீர் குறைந்து வரலாயிற்று. அதைப் பார்த்த மீனவர்கள் இருவரில் ஒருவன், “தண்ணீர் கொஞ்சமாக இருக்கிறது. நாம் நாளைக்கு வந்து எல்லா மீன்களையும் பிடித்துக் கொள்ளலாம்” என்றான்.

இதை வருமுன்-காப்போன் கேட்டது. தன் நண்பர்களிடத்தில் சென்று, “நாம் இந்த இடத்தைவிட்டு விரைவில் புறப்பட வேண்டும். இங்கே கொஞ்சநேரமும் இருக்கலாகாது” என்றது.

வரும்போது-காப்போன்: நமக்கு விபத்து வந்தால் பார்த்துக் கொள்ளலாம். அப்போது அதற்குத் தகுந்தவாறு புத்தி நமக்குத் துணை செய்யும்.

வந்தபின்-காப்போன்: தன் இடத்தைவிட்டு ஒருவன் செல்லுவது முட்டாள் தனம். எது நடக்குமோ அது நடந்தே தீரும். எது வராதோ அதை வருந்தி அழைத்தாலும் வராது. ஆகவே நான் வருவதற்கில்லை.

வருமுன்-காப்போன், வேறு இடத்திற்குப் போய்விட்டது.

siragu-panjathandhira-story2

மறுநாள் உதயநேரத்தில் மீனவர்கள் வந்தார்கள். வலைவீசி மீன்களைப் பிடிக்கலானார்கள். வரும்போது-காப்போன், தான் இறந்துவிட்டதைப் போல மிதந்தவாறு இருந்தது. அதை ஒரு வலைஞன் பிடித்துத், தரையில் போட்டான். உடனே அது துள்ளிக்குதித்து, மீண்டும் நீருக்குள் போய் ஒளிந்து கொண்டது. வந்தபின்-காப்போன், என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடியவாறு இருந்தது. அதை ஒரு மீனவன் பார்த்துத், தன் தடியால் அடித்துக் கொன்றான்.

இவ்வாறு பெட்டை கூறியது. இருப்பினும் கணவன் சொல்லைக் கேட்டு நடப்பதே நன்மை என்று கருதி, அந்த மரத்திலேயே முட்டை இட்டது.

அப்போது கடல் பொங்கி, மரத்தின் உயரத்திற்கு எழுந்து, முட்டைகளைக் கொண்டுபோயிற்று. பெட்டை, மிகுந்த துக்கத்துடன் ஆண் குருவியிடம் “நான் சொன்னவாறே ஆயிற்று. இப்போது என்ன செய்யலாம்” என்றது. ஆண்குருவி, “ஒன்றும் பயப்படாதே. நான் முட்டைகளைக் கொண்டு வருவேன். என் வலிமையைப் பார்” என்றது. பிறகு அது பறந்து சென்று கருடனிடம் சரணடைந்தது.

அதன் கதையைக் கேட்ட கருடன், தன் எஜமானாகிய விஷ்ணு பகவானிடம் சென்று, அந்தக் குருவியின் முட்டைகளை மீட்டுத் தர வேண்டும் என்று முறையிட்டது. உடனே விஷ்ணுவின் அருளால், கடல் அந்த முட்டைகளைத் திரும்பக் கொண்டுவந்து வைத்துச் சென்றது.

ஆகவே பகைவர்களுடைய வலிமை அறியாமல் பகைத்துக் கொள்ளலாகாது. அந்தச் சிங்கம் அகங்காரத்தினால் இவ்வாறுசெய்கிறது என்று தமனகன் கூறியது.

சஞ்சீவகன்: அப்படியானால், அந்தச் சிங்கம் சண்டைக்கு வருமானால், அதன் குறிப்பை எப்படி அறியலாம்?

தமனகன்: எப்போது அவன் காதுகளை நெறித்துக் கொண்டு, வாலைத் தூக்குகிறானோ, அப்போது அவன் கொல்ல வருகிறான் என்று புரிந்துகொள். நீயும் அப்போது அப்படியே செய்ய வேண்டும். சுத்தவீரனாகிய உனக்கு நான் சொல்லியா தரவேண்டும்?

இவ்வாறு சொல்லிவிட்டு, தமனகன், தன் நண்பன் கரடகனிடம் சென்றது.

கரடகன்: என்ன ஆயிற்று? சொல்.

தமனகன்: காரியம் நிறைவேறியது. இருவருடைய நட்பிலும் மண் விழுந்தது. சிங்கத்தின் கோபக்குறி எப்படி இருக்கும் என்று சஞ்சீவகனிடம் சொன்னேன். அப்படியே சிங்கத்தைச் செய்ய வைக்க வேண்டும்.

இப்படிச் சொல்லிவிட்டு, பிங்கலன் என்னும் அந்தச் சிங்கத்திடம் சென்று எருதின் முன்னர் தான் கூறியவாறே இருக்கச் செய்தது. அதைச் சஞ்சீவகன் கண்டு, மிகவும் துக்கம் கொண்டது. “சரி, போரிட்டே உயிரை விடலாம்” என்று மனத்தில் நிச்சயித்துக் கொண்டு, போரிட ஆரம்பித்தது. இரண்டிற்கும் பெரிய சண்டை விளைந்தது.

இதைக் கரடகன் கண்டது. தமனகனைப் பார்த்துப் பேசலாயிற்று.

கரடகன்: தமனகா! துஷ்டா! உன் சேர்க்கையால், நம் சிங்க அரசனுக்கும் அவன் நண்பனுக்கும் சண்டை உண்டாயிற்று.

ஆட்சிநீதியில் சாம தான பேத தண்டம் என்னும் நான்கு உபாயங்கள் இருக்கின்றன. அவற்றில் சாமம் என்னும் உபாயம் மிக முக்கியமானது. அதில் காரியசித்தி ஏற்படுவது போல மற்றவற்றினால் உண்டாவதில்லை. பகைமை இருந்தாலும், சாம உபாயத்தைக் கையாண்டால் அது நீங்கிவிடும்.

இப்படியிருக்க, நீ அரசனைப் பெரிய தீமையில் மாட்டிவிட்டாய். சில ஆட்சி யாளர்கள், ஈனர்களுடைய புத்தியைக் கேட்டுக் கடைசியில் தீமையே அடைகிறார்கள். ஆகவே ஆட்சியாளர்கள், நல்லவர்களை நண்பர்களாகக் கொள்ள வேண்டும். கபடம் நிறைந்தவர்கள் அருகில் இருந்தாலும் அவர்களின் சொல்லைக் கேட்கலாகாது.

தானே பதவியை, செல்வத்தை அடையவேண்டும் என்று நினைத்து, ஆட்சியாளரின் அருகில் வேறொருவரும் வரக்கூடாது என்று தடுப்பவர்கள், அவர்களுக்கு உபயோகப் படமாட்டார்கள். நல்லவர்கள் அருகில் இருந்தால், அரசன் பிரகாசம் அடைவான். கெட்டவர்களுடைய அண்மை இருந்தால் அவன் பிரகாசிக்க மாட்டான். தன்னைத்தவிர ஆட்சியாளன் அருகில் வேறு ஒருவரும் இருக்கலாகாது என்று நினைப்பவன் அவனுக்குப் பகைவனே ஆவான். அவ்வாறே நீயும் இந்தத் தீங்கினை ஏற்படுத்திவிட்டாய்.

தலைவனுடைய அன்பு கிடைக்கும்போது அருகில் இருப்பவர்கள் மிகவும் அடக்கமாக இருக்கவேண்டும். நீ அதைவிட்டு விபரீதமாக நடந்துகொண்டாய். தந்தையைப் போல் மகன் இருப்பான் என்ற சொல்லையும் நீ பொய்யாக்கி விட்டாய்.

கொக்கு குரங்குக்கு உபதேசம் செய்து எப்படி இறந்து போயிற்றோ, அதுபோல உன்னால் நானும் மரணம் அடைவேன் என்று தோன்றுகிறது.

தமனகன்: அது எப்படி நடந்தது, சொல்வாயாக.

கரடகன்: ஒரு நாள் இரவு கடுங்குளிர். அப்போது மின்மினிப் பூச்சிகளுடைய கூட்டத்தைப் பார்த்துச் சில குரங்குகள், இவை நெருப்புத் துண்டுகள், குளிர் காயலாம் என்றுநினைத்து அருகே சென்றன. அருகில் மரத்தின்மீது சுமுகன் என்னும் கொக்கு இருந்தது. இவை மின்மினிப் பூச்சிகள், நெருப்பு அல்ல என்று அது கூறியது. அதைக் கேட்ட குரங்கு ஒன்று, நீதானா எனக்கு புத்தி சொல்லத் தகுந்தவன் என்று கூறி அப்பறவையைக் கல்லில் அறைந்து கொன்றது.

ஆகையால் கெட்டவர்களுக்கு உபதேசம் செய்யலாகாது.

ஆனாலும், நீ இப்படி நடந்ததால் துஷ்டபுத்தி நாசம் அடைந்ததைப் போல நீயும் நாசம் அடைவாய்.

இப்படிக் கரடகன் சொல்ல, தமனகன் அமைதியாக இருந்தது.

தமனகன்: துஷ்டபுத்தி எவ்வாறு கெட்டுப்போனான், சொல்.

கரடகன்: பழங்காலத்தில் ஒரு செட்டியாருக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் சுபுத்தி, மற்றவன் துஷ்டபுத்தி. இருவரும் பணம் சம்பாதிப்பதற்காக வெகுதூரம் சென்றார்கள். ஓர் இடத்தில் சுபுத்திக்கு ஒரு புதையல் அகப்பட்டது. தன் சகோதரன்தானே என்று நினைத்து அந்தச் செய்தியை அவன் துஷ்டபுத்திக்குச் சொன்னான்.

துஷ்டபுத்தி: அந்தப் பணத்தை நாம் இங்கேயே வேறொரு இடத்தில் புதைத்து அடையாளம் வைத்துவிட்டு, இப்போது செலவுக்குக் கொஞ்சம் பணம் மட்டும் எடுத்துக்கொண்டு போவோம்.

சுபுத்தி: அவ்வாறே செய்யலாம்.

இவ்விதம் செய்தபிறகு, அவர்கள் வீட்டுக்குத் திரும்பினார்கள். ஒருநாள், துஷ்டபுத்தி, அந்த இடத்திற்குச் சென்று இருக்கும் பணத்தை எல்லாம் தானே கொண்டுவந்து வைத்துக் கொண்டான். பிறகு, சுபுத்தியிடம், “நாம் இப்போது ஒளித்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு வரலாம், வா” என்று அழைத்தான். புதைத்து வைத்த இடத்திற்குச் சென்றார்கள். அங்கே பணம் ஏது? சுபுத்தி அதைப் பார்த்து மிகவும் மனம் வருந்தினான்.

துஷ்டபுத்தி: இங்கிருந்த பணத்தை நீதான் திருடியிருக்க வேண்டும். திருடிவிட்டு இப்போது வருத்தப்படுவதுபோல நடிக்கிறாய்.

சுபுத்தி, இதைக் கேட்டு, அரசனின் நியாய சபைக்குச் சென்றான். அரசன், நியாய அதிபதியைப் பார்த்து, “இந்த வழக்கைப் பஞ்சாயத்தில் தீர்ப்பாயாக” என்றான். நீதிபதியும், “நான் ஐந்து நாளுக்குள் தீர்க்கிறேன்” என்றான். ஐந்தாம் நாள் நியாய சபை கூடியது.

துஷ்டபுத்தி: எனக்குச் சாட்சி இருக்கிறது. அந்தச் சாட்சியை நீங்கள் கேட்டு முடிவு செய்யவேண்டும்.

பஞ்சாயத்தார்: உன் சாட்சியைக் கொண்டுவா.

துஷ்டபுத்தி, வீட்டுக்குச் சென்று, தன் தந்தையிடம் கூறலானான்.

“அப்பா, உங்களுடைய ஒரு சொல்லினால் எனக்குப் பத்தாயிரம் பொற்காசுகிடைக்கும்”.

தந்தை: எப்படிக் கிடைக்கும்? சொல்.

துஷ்டபுத்தி: நீங்கள் இன்று இரவே சென்று, காட்டில் ஒரு மரப்பொந்தில் மறைந்து உட்கார்ந்திருக்க வேண்டும். அங்கே பஞ்சாயத்தார் வருவார்கள். “அங்கிருந்த பணத்தை யார் கொண்டுசென்றார்கள்” என்று அவர்கள் கேட்கும்போது நீங்கள் “சுபுத்தி கொண்டுசென்றான்” என்று அசரீரி போலச் சொன்னால் போதும். எனக்குக் காரியம் ஜெயிக்கும்.

இதைக் கேட்ட தகப்பனார், “தீமை நேரிடுகின்ற காரியத்தைச் செய்துவிட்டு, சுகம் அடையவேண்டும் என்று ஆசைப்படுவது, கொக்கைப் போல மூடத்தனமாக இருக்கிறது” என்றார்.

துஷ்டபுத்தி: அது என்ன கதை?

தந்தை: இரு கொக்குகள் வாழ்ந்துவந்தன. தான் பொரிக்கும் குஞ்சுகளை எல்லாம் ஒரு பாம்பு தின்னக் கொடுத்துவந்த மூட ஆண் கொக்கு, அவற்றைக் காப்பாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்று பெண்கொக்குடன் சேர்ந்து ஏரிக்கரையில் உட்கார்ந்து ஆலோசித்தவாறு இருந்தது. அப்போது கொக்கின் நண்பனாகிய குளிரன் என்னும் நண்டு, “ஏன் நீங்கள் துக்கமாக இருக்கிறீர்கள்?” என்று விசாரித்தது. கொக்குகள் தங்கள் கதையைச் சொல்லின.

குளிரன்: நல்லது. உனக்கு பாம்பைக் கொல்கின்ற உபாயம் ஒன்றைச் சொல்கிறேன். இங்கே பக்கத்தில் ஒரு கீரியின் பொந்து இருக்கிறது அல்லவா? அங்கிருந்து, பாம்பு இருக்கும் இடம்வரையில் மீன்களை ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டுசெல். உன் காரியம் நடக்கும்.

கொக்கு அப்படியே செய்தது. கீரி, தன் வளையிலிருந்து புறப்பட்டு மீன்களைத் தின்றவாறே சென்றது. கடைசியில் பாம்பு இருக்கும் இடத்தை அடைந்து, அதைக் கொன்றுவிட்டு, அதோடு நில்லாமல், கொக்கின் குஞ்சுகளையும் தின்றுவிட்டது. ஆகையால் தீய சிந்தனை கூடாது.

என்று தந்தை கூறினார்.

(தொடரும்)                


பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3

காகம்-அப்படியானால் பாம்பைக் கொல்ல நான் செய்ய வேண்டிய உபாயம் என்ன?

நரி-இந்த நகரத்து அரசகுமாரி குளிக்கிற நீராட்டுக்குளத்திற்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளைக் கழற்றுவாள். அந்த நகைகளில் ஒன்றைக் கொண்டுவந்து மக்கள் பார்க்கும்படியாக அந்த மரப்பொந்தில் போட்டுவிடு.

siragu-pancha-thandhira-kadhai2

காக்கையும் அவ்விதமே செய்தது. அதைப் பின்தொடர்ந்து வந்த அரசனின் பணியாளர்கள் நகையைத் தேடி பொந்தினைப் பிளந்தார்கள். அப்போது சீறிவந்த நாகத்தையும் கொன்றார்கள். இவ்விதம் காகம் தன் தொல்லை நீங்கிச் சுகமாக வாழ்ந்தது.

எனவே சரியான உபாயத்தினால் எல்லாம் கைவசமாகும். புத்தியிருப்பவன் பலவான். முன்பு புத்தி பலத்தினால் ஒரு முயல் சிங்கத்தையே கொன்றது என்று தமனகன் கூறியது.

கரடகன்-அது எப்படி?

தமனகன்-(முயல் சிங்கத்தைக் கொன்ற கதையைச் சொல்கிறது)

siragu-pancha-thandhira-kadhai3

ஒரு காட்டில் மதோன்மத்தன் என்று ஒரு சிங்கம் இருந்தது. அது எவ்வித முறையுமின்றி அக்காட்டிலுள்ள மிருகங்களை எல்லாம் கொன்று தின்று வந்தது. அப்போது மிருகங்கள் யாவும் ஒன்றுதிரண்டு அதனிடம் சென்று, “மிருகங்களுக்கெல்லாம் அரசனே! இம்மாதிரித் தாங்கள் எல்லையின்றி விலங்குகளைக் கொன்றுவந்தால் எல்லா விலங்குகளும் அழிந்துபோய்விடும். பிறகு தங்களுக்கும் இரை கிடைக்காது ஆகவே நாங்கள் தினம் ஒரு விலங்காக உங்களிடம் வருகிறோம். நீங்கள் அவ்விலங்கை உண்டு பசியாறலாம்” என்றன. சிங்கமும் “அப்படியே செய்கிறேன்” என்று சத்தியம் செய்துகொடுத்தது.

இவ்வாறு தினம் ஒரு பிராணியாகச் சிங்கம் புசித்துக்கொண்டு வந்தது. ஒரு நாள் ஒரு கிழட்டு முயலுக்கான முறை. “நமக்கு மரணகாலம் வந்துவிட்டதால் இதற்கு ஓர் உபாயத்தை நாம் யோசிக்கவேண்டும்” என்று அந்த முயல் நினைத்தது. அதன்படி அது மிகக் காலம்தாழ்த்தி சிங்கத்தின் பசிவேளை சென்ற பிறகு மெதுவாக அதனிடம் வந்தது.

சிங்கம்-அற்ப முயலே! யானையாக இருந்தாலும் என்னிடம் பசிவேளை தப்பி வருவதில்லை. அப்படி இருக்க, நீ எவ்வளவு சிறிய பிராணி? இப்படித் தாமதமாக வந்த காரணம் என்ன?

முயல்-ஐயனே! இது என் குற்றம் அல்ல. உங்களுடைய பசிவேளைக்குத் தவறாமல்தான் வந்தேன். வரும் வழியில் ஒரு கொடிய சிங்கத்தைக் கண்டு பயந்து ஒளிந்திருந்தேன். அது சென்ற பிறகு நான் இங்கே வந்தேன்.

சிங்கம்-என்னை அல்லாமல் இந்தக் காட்டில் வேறொரு சிங்கம் இருக்கிறதா? நீ பார்த்தாயா அதை? இப்போதே எனக்குக் காட்டு, வா.

முயல் சிங்கத்தை அழைத்துக்கொண்டு போய், ஒரு பாழும் கிணற்றைக் காட்டிற்று. அதில் மேலே மட்டும் தெளிவாக நீர் இருந்தது. உள்ளே வெறும் சேறுதான். “இந்த இடத்தில்தான் அந்தச் சிங்கம் இருக்கிறது” என்று முயல் கூறிற்று. சிங்கம் அதன் சொல்லை நம்பிக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது. அதில் அந்தச் சிங்கத்தின் பிம்பம் தோன்றியது. அதைக் கொல்ல வேண்டும் என்று எண்ணிக் கிணற்றுக்குள் பாய்ந்த சிங்கம், சேற்றில் அழுந்தி இறந்து போயிற்று.

ஆகவே, அறிவே பலம், புத்திமான், பலவான் என்றது தமனகன்.

கரடகன்-அவ்வாறாயின், நீ சிங்கத்திடம் சென்று வா. உனக்கு நலம் உண்டாகட்டும்.

தமனகன் கோள் சொல்கிறது

பிங்கலனாகிய சிங்கம் தனித்திருக்கும்போது, தமனகனாகிய நரி அதை வணங்கியது. பிறகு “சுவாமி, உங்களுக்கு இன்று ஒரு தீங்கு நேர இருந்தது. அதை நான் அறிந்து தங்கள் அனுமதியைப் பெற வந்தேன்” என்றது.

சிங்கம்-என்ன அது?siragu-pancha-thandhira-kadhai4தமனகன்-உங்களுடைய நண்பன் சஞ்சீவகன், உங்களிடம் நடிக்கிறான். தனக்கு அதிக பலம் இருப்பதால் தானே இந்தக் காட்டுக்கு அரசன் என்று அவன் மனத்தில் எண்ணம். தங்களைத் தக்க சமயம் பார்த்துக் கொன்றுவிட்டு அவன் அரசனாகிவிடுவான்.

பிங்கலன்-சீ, அப்படியெல்லாம் நிகழாது. அவன் எனக்கு நல்ல நண்பன்.

தமனகன்-நீங்கள் நான் சொல்வதைப் பொய்யென்று நினைத்து கோபித்தாலும், அல்லது தண்டித்தாலும் சரி. அரசனுக்கு ஒரு துன்பம் வரும்போது தன்னலம் பார்க்காமல் அவனுக்கு வேண்டிய நல்ல உபாயத்தைச் சொல்வது அமைச்சர்களின் கடமையானதால், உங்களுக்கு நான் இதைத் தெரிவித்தேன்.

பிங்கலன் இதைக் கேட்டு வியப்படைந்தது.

தமனகன்-நீங்கள் அதை முக்கியப் பிரதானியாக ஆக்கினீர்கள். அவனோ சுயநலக்காரனாக இருக்கிறான். எனக்கென்ன? அரசனும் அவன் கீழுள்ளவனும் சமமாக இருந்தால், திருமகள் (இராஜலட்சுமி) அவர்கள் இருவரில் ஒருவனைக் கைவிட்டு விடுவாள். ஆகவே அரசன் தனக்குச் சமமான இடத்தை வேறு ஒருவருக்கும் தரலாகாது. தாங்கள் எல்லாம் அறிந்தவர். எனவே இப்படிப்பட்ட பிரதானியை வேரோடு அழிப்பதுதான் நல்லது. உலகத்தில் பதவியையும் பணத்தையும் விரும்பாதவன் யார்?

சிங்கம் (சிரித்தவாறு)-சஞ்சீவகனுக்கும் எனக்கும் உள்ள நட்பு ஆழமானது. நண்பர்கள் சிலசமயம் தவறுகள் செய்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு பிரியமாகவே இருக்க வேண்டும்.

தமனகன்-இதனால் உங்களுக்கு அபாயம் நேரிடும். எவன் ஒருவன் அமைச்சர்களின் புத்தியைக் கேட்காமல் நடக்கிறானோ அவனுக்கு ஆபத்து நேரிடும்.

சிங்கம்-நான் புகலிடம் கொடுத்துக் காப்பாற்றிய என் நண்பன் எனக்கு துரோகம் செய்வானா? என்ன பேச்சுப் பேசுகிறாய் நீ? போய்விடு.

தமனகன்-கெட்டவனின் புத்தி மாறுமா? நாயின் வாலை நிமிர்த்த முடியுமா? எட்டி மரத்துக்குப் பாலூற்றி வளர்த்தாலும் அதன் கசப்புப் போகுமா? நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். இனி என்மேல் குற்றமில்லை.

சிங்கம்-இதை நான் இப்போதே போய் சஞ்சீவகனிடம் சொல்கிறேன்.

தமனகன்-அவனிடம் இதைக் கூறினால், அவன் எச்சரிக்கை அடைந்து வேறொரு உபாயத்தால் உங்களுக்குத் தீங்கு தேடுவான். ஆகையால் இதை அவனுக்குச் சொல்லாமல் இருப்பதே நல்லது. அரசனின் மந்திராலோசனை எப்போதும் இரகசியமாகவே இருக்கவேண்டும்.

சிங்கம்-அவன் எனக்கு எதிரியாகி, என்ன செய்யமுடியும்? அவனுக்கு என்ன சாமர்த்தியம் இருக்கிறது?

தமனகன்-நமக்கு அவன் வீரம், பராக்கிரமம் என்ன தெரியும்? ஒருவன் குணத்தை அறியாமல் அவனைச் சேர்க்கலாகாது. அப்படிச் சேர்த்தால், ஒரு சீலைப்பேன், மூட்டைப்பூச்சியால் கெட்ட கதையாகும்.

சிங்கம்-அது எப்படி, சொல்.

siragu-pancha-thandhira-kadhai6

நரி-ஒரு கட்டிலில், ஒரு சீலைப்பேன் நெடுநாட்களாக வாழ்ந்து வந்தது. அப்போது ஒரு மூட்டைப்பூச்சி அங்கு வந்து தங்க இடம் தேடிற்று. “நீ சமய சந்தர்ப்பம் தெரியாமல் கடிக்கிறவன், நீ இங்கே இருந்தால் ஆபத்து வந்து சேரும். போய்விடு” என்று சீலைப்பேன் விரட்டியது. “இல்லை, இரவில் இந்தப் படுக்கைக்கு உரியவன் நன்கு உறங்கியபின்னரே கடிப்பேன், எனக்கு இடம் கொடு” என்றது மூட்டைப்பூச்சி. அதை நம்பிய சீலைப்பேன் அதற்கு இடம் கொடுத்தது. ஆனால் படுக்க வந்த மனிதன் உறங்குவதற்கு முன்னாலேயே அவனை மூட்டைப்பூச்சி கடித்தது. அவன் உடனே விளக்கை எடுத்துத் தேட, கட்டிலின் மூட்டில் ஒளிந்திருந்த சீலைப்பேன் கண்ணில் பட்டது. அந்த மனிதன் உடனே அதைக் கொன்றான். ஆகவே ஒருவன் குணத்தை அறிவதற்கு முன் அவனிடம் நட்புக் கொள்ளலாகாது.

சிங்கம்– சஞ்சீவகனின் பண்பு இப்படித்தான் என்று நான் அறிந்துகொண்டால்தான் நீ சொல்வதை நம்புவேன்.

தமனகன்-அது உங்களைப் பார்த்துக் கொம்புகளை முன்னால் நீட்டியவாறு, வரும்போது உங்களுக்குத் தெரியவரும்.

இப்படிச் சொல்லியபிறகு நரி, சஞ்சீவகனாகிய எருதின் இடத்துக்குப் போயிற்று. தன் மனத்தில் பெரிய துக்கம் இருப்பதுபோல் நடித்தது.

(தமனகன் சண்டை மூட்டுதல்)

சஞ்சீவகன்-நண்பனே, சுகமா?

தமனகன்-பணியாளனுக்கு சுகம் எங்கே இருக்கிறது? செல்வமும், விபத்தும் அருகருகே இருக்கின்றன. ஆகவே மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

சஞ்சீவகன்-ஏன் இப்படிச் சொல்கிறாய்?

தமனகன்-அரச காரியத்தில் ஏற்படும் இரகசியத்தை மற்றொருவரிடம் சொல்லக்கூடாது. அரசன் அறிந்தால் கொல்லுவான் அல்லவா? ஆனாலும் நீ என்னை நம்பி, சிங்கத்துடன் நட்புக் கொண்டதனால், உனக்குச் சொல்கிறேன். உன் நண்பனான சிங்கம், உன்மேல் கோபம் கொண்டு, உன்னைக் கொன்று தன் சேனைகளுக்கு நல்ல விருந்து வைக்க நினைத்திருக்கிறது.

சஞ்சீவகன், இதைக் கேட்டு வருத்தத்துடன் சிந்தித்தவாறு இருந்தது.

தமனகன்-சிந்தனை என்ன? எது நிகழ்ந்ததோ அதற்குத் தக்கவாறு நாம் நடக்க வேண்டும்.

சஞ்சீவகன்-நீ சொல்வது சரி. உலகம் இப்படித்தான் இருக்கிறது. அரசர்கள் துஷ்டர்களைக் காப்பாற்றுகிறார்கள். கெட்டவர்களுடன் அதிக நட்பு வைத்தால் அவன் விபரீதமாக நினைக்கிறான். சந்தன மரத்தில் பாம்பு இருக்கிறது. தாழையில் முள் இருக்கிறது. அரசர்களைச் சுற்றி எப்போதும் கெட்டவர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவனும் அவர்களுடைய பேச்சைத்தான் கேட்கிறான் அதனால்தான் நமக்கு இப்படி நேர்கிறது.

தமனகன்-அரசர்களின் வாய்ப்பேச்சு இனிமையாக இருக்கும். ஆனால் மனத்தில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. கடவுள் கடலைக் கடப்பதற்குக் கப்பலைப் படைத்தான். இருளைப் போக்குவதற்கு விளக்கை உண்டாக்கினான். யானையை அடக்க அங்குசத்தைப் படைத்தான். ஆனால் கெட்டவர்களுடைய மனத்தை அடக்க எதையும் படைக்கவில்லை.

சஞ்சீவன் (பெருமூச்சுடன்)-எனக்குப் பெரிய தீங்கு நேரிட்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க எனக்கு சாமர்த்தியம் கிடையாது. எமன் வாயில் அகப்பட்டவன் பிழைப்பது ஏது? எப்படி ஒரு குற்றமும் இல்லாத ஒட்டகத்தைக் காகம் முதலானவை சேர்ந்து கொன்றனவோ, அப்படியே வஞ்சனை மிக்கவர்கள் குற்றமில்லாமலே ஒருவனைக் கொல்கிறார்கள்.

தமனகன்-அது எப்படி?

(சஞ்சீவகன் என்ற எருது சொல்கிறது-காகம் ஒட்டகத்தைக் கொன்ற கதை)

siragu-pancha-thandhira-kadhai5

ஒரு காட்டில் மதோற்கடன் என்று ஒரு சிங்கம் இருந்தது. அதற்கு நரி, புலி, காக்கை என்ற மூன்றும் அமைச்சர்கள். அப்போது அந்தக் காட்டில் ஒட்டகம் ஒன்று வந்தது. மந்திரியாகிய காக்கை, அதைக்கண்டு, “நீ யார்?” என்று கேட்டது.

ஒட்டகம்-நான் வழிதவறி இங்கே வந்து விட்டேன்.

காக்கை ஒட்டகத்தைச் சிங்கத்திடம் கொண்டுபோயிற்று.

சிங்கம்-பயப்படாதே, இந்தக் காட்டிலேயே சௌக்கியமாக நீயும் இரு. உனக்கு எந்தத் தீங்கும் நிகழாது.

இவ்விதம் கூறி அதைத் தன் காட்டில் வைத்துக் கொண்டது.

சிலநாட்கள் இவ்விதம் சென்றன. ஒருநாள் சிங்கத்துக்கு உடல் நலம் கெட்டிருந்தது. தன் மூன்று அமைச்சர்களையும் அது அழைத்தது.

சிங்கம்-இன்றைக்கு என்னால் இரைதேட முடியாது. எனக்கு உடல் நலம் கெட்டிருக்கிறது. நீங்கள் போய் எனக்காக இரை தேடிக்கொண்டு வரவேண்டும். ஆள்பவனின் எச்சில் எல்லாம் கூட இருப்பவர்களுக்குத்தானே? எனவே நான் சாப்பிட்டபிறகு, நீங்களும் வயிறாரப் புசிக்கலாம்.

மூன்று மிருகங்களும் சிங்கத்தின் கட்டளைப்படி, காட்டில் சென்று நான்கு பேருக்கும் போதுமான அளவில் ஒரு இரையைத் தேடின. அப்படி எதுவும் கிடைக்காத்தால் தங்களுக்குள் ஆலோசித்தன.

காகம்-நாம் இன்றைக்கு ஒட்டகத்தைக் கொன்றுவிட வேண்டும். அதுதான் சிங்கம் சாப்பிட்டபிறகு நம் மூவருக்கும் போதிய உணவாகும்.

நரி, புலி-இல்லை, இல்லை. அவனுக்கு நம் அரசன் அபயம் கொடுத்திருக்கிறான். ஆகவே நாம் அவனைக் கொல்லலாகாது.

காகம்-நான் சொல்வதைக் கேளுங்கள். நாம் இரைதேடிச் செல்லாமல் போனால் சிங்கத்தின் கையால் மரணமடைவோம். பசியெடுத்தால் தாயும் பிள்ளையை விட்டுவிடுகிறாள். பாம்பும் தான் இட்ட முட்டைகளையே சாப்பிடுகிறது. பசி வரும்போது ஒருவன் எந்தப் பாதகம்தான் செய்யமாட்டான்? உங்களுக்குத் தெரியாதா?

சிங்கத்திடம் காகம் சென்று, சுவாமி இன்றைக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்றது.

சிங்கம்-அப்படியானால் என்ன செய்யலாம்?

காகம்-தங்களிடத்திலேயே இரை இருக்கிறதே, பிறகு என்ன யோசனை? கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்யைத் தேடுவார்களா?

சிங்கம்-என்னிடத்தில் இரை எங்கே இருக்கிறது?

காகம்-ஒட்டகம் இருக்கிறதே

சிங்கம் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தது. பூமியைக் கையால் தொட்டு, பிறகு காதைப் பொத்திக்கொண்டு, சிவ சிவ நான் அவனுக்கு அபயம் கொடுத்திருக்கிறேன். அபயம் கொடுத்தவர்களைக் கைவிடலாமா? பசு, நிலம், தானியம் இவற்றின் தானத்தைவிட அபய தானமே மேலானது. அசுவமேத யாகத்தினால் வரும் புண்ணியத்தைவிட அபயம் தருவதால் வரும் புண்ணியம் அதிகம் என்று சாத்திரம் சொல்கிறதே.

காகம்-நான் சொல்வதைக் கேட்டருளுங்கள். ஒரு குலத்தின் நன்மைக்காக ஒருவனைக் கைவிடலாம். ஒரு கிராமத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு குடும்பம் அழியலாம். ஒரு தேசத்திற்காக ஒரு கிராமத்தை விடலாம். தன் நிமித்தம் ஒருவன் நிலத்தையே கைவிடலாம். ஆகவே இது தவறன்று. எனினும் நீங்களாக அவனைக் கொல்லவேண்டாம். தானாகவே அவன் சாகத் தயாராக இருந்தால் நாங்கள் உங்களுக்காக அவனைக் கொல்கிறோம்.

இப்படிக் காகம் கூறியபோது சிங்கம் சும்மா இருந்தது. அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டு, காகம் சென்று, புலி, நரி, ஒட்டகம் மூன்றையும் கூட்டி வந்தது.

காகம் (சிங்கத்திடம்)-சுவாமி, இன்றைக்கு ஓர் இரையும் கிடைக்கவில்லை. ஆகவே நீங்கள் என்னை உண்ணுங்கள்.

சிங்கம்-நீ எம்மாத்திரம்? உன் உடல் என் கடைவாய்ப் பல்லுக்குப் போதுமா? உன்னை உண்பதால் என் பசி தீருமா?

நரி-அப்படியானால் என்னைச் சாப்பிடுங்கள்.

சிங்கம்-நீயும் சிறியவன். அதிகமல்ல.

புலி-அப்படியானால், என்னைச் சாப்பிடுங்கள்.

சிங்கம்-நீ என்ன, உன்னை மிகப் பெரியவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? கர்வம் வேண்டாம்.

ஒட்டகம்-சுவாமி, நான் இவர்களைவிட அளவில் பெரியவன். தங்களுக்கு விருப்பமானால் நான் உணவாகத் தயார்.

இதைக் கேட்டவுடன் புலியும் நரியும் பாய்ந்து அதைக் கொன்றன. எங்கே கீழ்மக்கள் இருக்கிறார்களோ அங்கே சுகம் இருக்காது. உயிருக்கு நாசம் வரும் என்றே நினைக்கவேண்டும்.

(தொடரும்)


பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-2

(குறிப்பு: பஞ்சதந்திரக் கதைகள் சொல்லப்படும் முறை, ஈசாப் கதைகளை ஒத்திருக்கிறது. அதாவது இவை எனப்படும் நீதிபுகட்டும் கட்டுக்கதைகளாக உள்ளன. ஈசாப் கதைகளில் போலவே இவற்றிலும் பிராணிகள் மனித குணங்கள் உள்ளவையாகச் சித்திரிக்கப்பட்டு, அவை பேசவும் செய்கின்றன. ஆனால் இக்கதைகளின் அமைப்பு ஈசாப் கதைகளைப் போல இல்லை. ஈசாப் கதைகள் தனித்தனிக் கதைகள். பஞ்சதந்திரக் கதைகளின் அமைப்பு, ஒருவகையில் ஆயிரத்தோரு இரவுகள் எனப்படும் அரபிக் கதைகளைப் போல, ஒன்றினுள் ஒன்றாகத் தொடர்ந்து செல்வதாக உள்ளது.)
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)

அந்தச் சிங்கத்திற்கு ஒரு மந்திரி இருந்தது. அந்த மந்திரிக்கு இரண்டு மகன்கள் – கரடகன், தமனகன் என்ற நரிகள். சிங்கத்தின் பயத்தைப் பார்த்து அவை இரண்டும் பேசத் தொடங்கின.

siragu-panja-thandhira-kadhai

 

தமனகன்: நம் அரசன் தண்ணீர் குடிக்கப்போய், குடிக்காமல் ஏன் சும்மா இருக்கிறார்?

கரடகன்: அதை நாம் ஏன் விசாரிக்க வேண்டும்? நமக்கு அதனால் இரை கிடைக்குமா? பெருமை உண்டாகுமா? கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? அதனால் நீ சும்மா இரு. தனக்கு ஒவ்வாத காரியத்தைச் செய்பவன், ஆப்பைப் பிடுங்கிய குரங்கு போல் ஆவான்.

தமனகன்: அது என்ன கதை?

குரங்கு ஆப்பைப் பிடுங்கிய கதை

siragu-panja-thandhira-kadhai3மகத தேசத்தில் சுதத்தன் என்று ஒருவன் இருந்தான். கோயில் திருப்பணிக்காகச் சில மங்களை அவன் அறுப்பதற்காகப் போட்டிருந்தான். மரம் அறுப்பவன், ஒரு மரத்தைப் பாதி பிளந்துவிட்டு, பிளவு மூடிக்கொள்ளாமல் இருப்பதற்காக அதில் ஒரு ஆப்பைச் செருகிவிட்டுப் போனான். அந்தக் கோயில் நந்தவனத்துக் குரங்குகளில் ஒன்று அந்த மரத்தின் மேல், மிகச் சரியாக அந்தப் பிளவுக்கு நேர்மேலே வந்து உட்கார்ந்து விளையாட்டாக ஆப்பை அசைத்துப் பார்க்கலாயிற்று. பக்கத்திலிருந்த குரங்குகள், “வேண்டாம், அந்த ஆப்பை அசைக்காதே” என்று கூச்சலிட்டும் அது கேட்கவில்லை. ஆப்புமுளையை அசைத்து இழுத்தவுடனே பிளவு ஒன்று சேர்ந்துகொள்ள, அந்தக் குரங்கு உடல்நசுங்கி இறந்துபோயிற்று.
அதனால் தனக்குத் தகாத காரியத்தில் இறங்கினால் யாருக்கும் உயிர்ச்சேதம் வரும். நாம் பாட்டுக்கு நமது இரையைச் சாப்பிடுவோம் வா.
என்று கரடகன் சொன்னது.

கரடகன்-தமனகன் விவாதம்

இதைக்கேட்ட தமனகன், அரசகாரியம் இருக்கும்போது இரை சாப்பிடுவதையே பெரிதாக நினைக்கலாமா? நண்பர்களுக்கு உதவியும், பகைவர்களுக்கு அபகாரமும் செய்வது ஒருவன் கடமை. அரசனது சேவையில் இருக்கும் நாம், யாவருக்கும் நன்மை செய்வதே ஏற்றதாகும். நன்மை செய்ய இடமில்லாவிட்டால் உயிர் பிழைத்திருப்பதனால் உண்டாகும் பயன் என்ன? காக்கைகூட கண்டதைத் தின்று ஆயிரம் வருஷம் உயிரோடு இருக்கும் என்கிறார்கள். நாய்கூட, வெறும் எலும்பைக் கவ்விக் கடித்துக் கடித்து, பசி தீராமல் சந்தோஷம் அடைகிறது. மேலும், தன் எஜமானன் கையிலுள்ள சோற்றுக்காக அது முகத்தில் அன்பைக் காட்டி, வயிற்றை ஒடுக்கி, வாலைக்குழைத்து ஒடுங்கி, எச்சிலை வாங்கித் தின்கிறது. அதே சமயம், யானை ஒடுங்காமலும் குழையாமலும் பாகன் வேண்டி வேண்டி ஊட்ட ஆயிரம் மடங்கு உண்கிறது. உலகில் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நிற்கிறார்கள். பலர் நாயைப் போலக் குழைந்து பொருளுக்காகவும் பதவிக்காகவும் அலைகிறார்கள். அதனால் அரச காரியத்தைச் சிறப்பாகச் செய்து வாழ்வதே நல்லது.

கரடகன் இதைக் கேட்டு, “நாம் என்ன ராஜ காரியத்திலா இருக்கிறோம்? நாமும் இரைதேடிக் கொண்டுதான் இருக்கிறோம்” என்றது.

தமனகன்: பெரிய மந்திரியாக இருப்பவனும் காலத்தின் கோலத்தால் சாதாரண மனிதன் ஆகிறான். தன் முயற்சியாலும் பண்பாலும் சாதாரண மனிதனும் பெரிய பதவிக்கு வருகிறான். யாரும் மேலான விஷயத்தையே யோசிக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் பெருமையேனும் கிடைக்கும். அறிவற்றவர்கள் எளிய காரியங்களைத்தான் செய்வார்கள். அறிவுள்ளவர்கள் அரிய காரியங்களைச் செய்வார்கள். பெருமையும் சிறுமையும் அவரவர் பண்பினால் வருபவை.

கரடகன்: சரி. சிங்கத்திடம் நாம் போய் எதைப் பற்றிப் பேசவேண்டும் என்கிறாய்?

தமனகன்: நமது அரசர் அறிவின்மையால் பயந்திருக்கிறார். அதை நீ எப்படி அறிந்துகொண்டாய் என்று கேட்கலாம். சொன்னை பொருளை விலங்கு, பறவைகளும் அறிந்துகொள்ளும். சொல்லாமல் அறிபவனே புத்திசாலி. நான் இங்கே இருந்தே அரசர் செய்கையை அறிந்தேன். இதை வைத்தே இப்போது போய் சிங்கத்திடம் நட்புக் கொள்கிறேன்.
கரடகன், தமனகனை நோக்கி: அரசர்களும் நெருப்பும் பாம்பும் சரி. பழகுவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிங்கத்திடம் பழக்கமில்லாவிடில் நீ எப்படி அவனோடு தொடர்பு உண்டாக்கிக் கொள்வாய்?

தமனகன்: நான் பேசுவதில் சாமர்த்தியம் உள்ளவன். சாமர்த்தியசாலிக்கு எது பெரியது? பறக்கும் பறவைகளுக்கு எதுதான் தொலைவு? கற்றவனுக்கு அயல் நாடு எது? அன்பாகப் பேசுபவர்களுக்கு யார் பகையாவான்?

கரடகன்: அப்படியே ஆனாலும், அரசர்களிடம் அகாலத்தில் போனால் அவமானம் நேரிடும்.

தமனகன்: அவமானம் வந்தாலும் பொருட்படுத்தாமல் அரசன் அருகிலேயே இருக்கவேண்டும். யார் அண்மையில் இருக்கிறார்களோ, அவர்களிடம்தான் அரசர்கள் தங்கள் காரியங்களைச் சொல்வார்கள். கொடிகள் அருகிலிருக்கும் மரங்கள் மேல்தான் படரும். அரசர்களும், பெண்களும் தங்களைக் காப்பாற்றி இங்கிதமாக நடப்பவர்களிடம் மனமிரங்கி நடப்பார்கள்.

எப்படியும் காலம் அறிந்து பேசினால் எந்த அவமானமும் வராது. அரசர்கள் தங்கள் காரியம் யாரால் ஆகிறதோ, அவனிடம் சிறு குற்றங்கள் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் அவனை அனுசரித்து நடப்பார்கள். மலையைப் போல திடமாக இருந்தாலும் அவர்கள் சுபாவம் அறிந்து பேசி, தனக்கு இதம் செய்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு கூறி, தமனகன், சிங்கத்திடம் சென்று சற்றுத் தொலைவிலேயே வணங்கிவிட்டு, அதன் உத்தரவின்பேரில் உட்கார்ந்தது.

சிங்கமும் தமனகனும்

சிங்கம்: நீண்ட நாளாயிற்றே உன்னைப் பார்த்து?

தமனகன்: தங்களிடம் வரத்தக்க செயல் இருந்ததனால் தங்களை நாடி வந்தேன்.

சிங்கம்: இப்போது என்ன காரியமாக வந்தாய்?

தமனகன்: நான் தங்களுக்கு உதவி செய்ய வந்தேன். அரசர்கள் என்னைப் போன்ற சிறு பிராணிகளால் தங்களுக்குப் பயன் என்ன என்று நினைக்கலாம். ஆனால் சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பார்கள். மலை போல் உயர்ந்த தேரும் சிறு கடையாணியால்தான் இயங்குகிறது. நான் உங்கள் காரியத்தில் பற்று உள்ளவன். கருவியும் காலமும் அறிந்து செயலை முடிப்பவன். அருகில் சாமர்த்தியசாலி இல்லாத அரசனுக்கு அபகீர்த்தி உண்டாகும்.

சிங்கம்: தமனகா, நீ என் அமைச்சனின் மகன் அல்லவா?

தமனகன்: ஆம் சுவாமி.

சிங்கம்: அப்படியானால், ஏதாவது நீ சொல்ல வேண்டியிருந்தால் நேராகச் சொல்.

தமனகன்: தண்ணீர் குடிக்க வந்து நீங்கள் குடிக்காமல் தயங்குகிறீர்களே?

சிங்கம்: மெய்தான். நான் இத்தனை நாட்களாக இந்தக் காட்டில் சுகமாக இருந்தேன். இப்போது ஒரு சிறு பயம். என்றைக்கும் கேட்காத மேக முழக்கம் போன்ற ஒரு சப்தத்தை இன்று கேட்டேன். அந்த முழக்கம்போல் அல்லவா அதை உண்டாக்கும் விலங்கும் பெரிதாக இருக்கும்? அதற்கு என்ன செய்யலாம், சொல். வழுக்கி விழச் செல்பவனுக்கு ஊன்றுகோல் போல் நீ இப்போது இங்கு வந்தாய்.
தமனகன்: சுவாமி, வெறும் முழக்கத்தைக் கேட்டு, வெற்று ஆரவாரத்தைக் கண்டு பயப்படலாகாது. இப்படித்தான் ஒரு நரி பழைய காலத்தில் சப்தத்தைக் கேட்டு பயந்து, பிறகு நெருங்கிப் பார்க்கும்போது அது ஒன்றுமில்லை என்பதைக் கண்டது.

சிங்கம்: அது என்ன கதை?

தமனகன்: ஒரு நரி பசியால் வருந்தி இரைக்காக அலைந்து அந்த அசதியோடு செல்லும்போது, போர்க்களத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கே ஒரு பெரிய சத்தம். பயந்துபோய் திடுக்கிட்டது அது. பிறகு சற்று முன்னேறிச் சென்றது. அங்கே ஒரு மரத்தில் பெரிய பேரிகை ஒன்றை வைத்திருந்தார்கள். மரத்தின் கிளை காற்றில் அசைந்து அதில் அடிக்கும்போதெல்லாம் பெரிய சத்தம் உண்டாயிற்று.. அதன் அருகே போய்ப் பார்த்தால், பேரிகை என்பது என்ன-வெறும் தோலும் கோலும்தானே? பயமில்லை என்று தெளிந்தது. அதனால் சத்தத்தினால் மட்டும் பயப்படலாகாது. தாங்கள் உத்தரவு கொடுத்தால் இந்தச் சத்தத்தின் காரணத்தை அறிந்து வருகிறேன்.
சிங்கம் அதற்கு உத்தரவு கொடுத்து அனுப்பியது.

சிங்கமும் எருதும்

தமனகன் சென்று பார்க்கும்போது, சஞ்சீவகன் என்ற எருதைக் கண்டது. அதனிடம் பேசி அதை நட்புக் கொண்டது. பிறகு சிங்கத்திடம் வந்து தண்டனிட்டு நின்றது.

சிங்கம்: நீ அந்தப் பிராணி எது என்று அறிந்து வந்தாயா?

தமனகன்:  தங்கள் கட்டளைப்படியே போய்ப் பார்த்தேன். அங்கிருந்தது ஒரு எருதுதான். நன்கு சாப்பிட்டு புஷ்டியாக இருக்கிறான். ஆனால் அவன் தங்கள் நட்பை விரும்புகிறான். நீங்கள் உத்தரவிட்டால் நான் அவனை அழைத்து வருகிறேன்.

சிங்கம்: நல்லது. அப்படியே ஆகட்டும்.
தமனகன் எருதிடம் சென்றது. அதை அழைத்துவந்து சிங்கத்திடம் அறிமுகப்படுத்தியது. இப்போது சிங்கத்துக்கும் எருதுக்கும் மிக நட்பு உண்டாகிவிட்டது. அதனால் சிங்க அரசனுக்குத் துணை யாரும் வேண்டியதில்லாமல் போயிற்று.

ஒருநாள் கரடகன், தமனகன், இரு நரிகளுக்கும் உணவு கிடைக்கவில்லை. இரண்டும் சேர்ந்து ஆலோசிக்கத் தொடங்கின.

கரடகன்-தமனகன் சதி

தமனகன்: நாம் சிங்கத்திடம் எருதை சிநேகம் செய்வித்தது நமக்கே தவறாகிப் போயிற்று. யானை, தன்னை அடக்கும் அங்குசத்தை தானே எடுத்து பாகனிடம் கொடுத்தாற்போலவும், ஆட்டுக்கடா சண்டையில் நரி செத்தது போலவும், ஆஷாடபூதி கூட்டுறவால் சன்யாசி பொருள் இழந்ததுபோலவும் நம் குற்றத்தினாலேயே இது நடந்தது.

கரடகன்: அது என்ன கதை?

நம்பி மோசம் போன கதை

தமனகன்: ஒரு நாட்டில் தேவசர்மா என்ற ஒரு சன்யாசி, தான் பிச்சையெடுத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் ஒரு கந்தைத்துணியில் வைததுத் தைத்து அதைப் போர்த்திக் கொண்டு, மேலும் பிச்சைஎடுத்தே சாப்பிட்டு வந்தான். அதை ஆஷாடபூதி என்ற திருட்டு பிராமணன் ஒருவன் அறிந்துகொண்டான். அந்தக் கந்தையை எப்படியாயினும் அடையவேண்டும் என்று நினைத்தான்.

ஒரு பிரம்மச்சாரியைப் போல வேஷம்போட்டுக் கொண்டு, தேவசர்மாவின் காலில் விழுந்து, “எனக்கு ஞானோபதேசம் செய்து, இந்தச் சாரமற்ற உலகில் நான் வெறுமனே திரியாமல் என்னைக் கடைத்தேற்றும்படி தங்களை வேண்டிக் கொள்கிறேன்” என்று மிகவும் இரங்கி வேண்டினான்.

இதைப் பாசாங்கு என்று அறியாத அந்த சன்யாசி, பயப்படாதே என்று அவனுக்கு ஆறுதல் சொன்னான். அன்று முதல் ஆஷாடபூதி பயபக்தியுடன் அவன் காலால் இட்ட வேலையைத் தன் கையால் செய்துகொண்டு, கந்தையை அபகரிக்கச் சமயம் நோக்கியிருந்தான். ஒருநாள் ஒரு பிராமணன் வீட்டு திவச போஜனத்தில் இருவரும் நன்றாகச் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டனர். வெகுதொலைவு வந்த பிறகு, ஆஷாடபூதி, ஒரு சிறு சிமிழை எடுத்துத் தன்னிடம் வைத்துக்கொண்டு, அதைப் பார்த்து, “ஐயோ, அந்த பிராமணன் வீட்டுப் பொருள் என்னோடு எப்படியோ வந்துவிட்டதே, அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா? உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும் அல்லவா?” என்று நடுங்குவதுபோல் நடித்தான். பிறகு “இதை அந்த பிராமணன் வீட்டிலேயே கொண்டுகொடுத்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, செல்வதுபோல் போக்குக்காட்டி சிறிது தூரம் சென்று மறைவாக அமர்ந்தான். சற்றுநேரம் கழித்து, வெகுவேகமா இரைக்க இரைக்க ஓடிவந்து சன்யாசி காலில் விழுந்து, “உங்கள் அனுக்கிரகத்தினால்தான் இந்தப் பாவம் ஏற்படாமல் தப்பினேன்” என்று கூறினான்.

இதைக்கண்ட சன்யாசி, “இவன் மிக நல்லவன், பிறர் பொருளுக்கு ஆசைப்படாத பரமாத்மா” என்று நம்பிவிட்டான். அதனால் மறுநாள் தான் குளிக்கச் செல்லும்போது தன்னிடம் இருந்த கந்தையை இவனிடம் கொடுத்துப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றான்.

அப்போது சீடன், “இதுதான் நல்லசமயம். காற்றுள்ளபோதே துற்றிக் கொள்ள வேண்டும்” என்று சொல்லியவாறே, கந்தையை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் விட்டான். சன்யாசி, திரும்பிவந்து சீடனைக் காணாமல், “ஓஹோ, நம்மை ஆஷாடபூதி ஏமாற்றிவிட்டான், நாம் மோசம் போய்விட்டோம்” என்று மனம் தளர்ந்து ஒருவரிடமும் சொல்லாமல் இருந்துவிட்டான்.

கரடகன்: இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

தமனகன்: எது நம்மைவிட்டுப் போயிற்றோ, அதை மீண்டும் சேர்க்க வேண்டும். எது கிடைக்கவில்லையோ, அதைச் சம்பாதிக்க வேண்டும். எதிராக வரும் துன்பங்களைத் தடுக்கவேண்டும். இப்போது பிங்கலனும் (சிங்கமும்) சஞ்சீவகனும் (எருதும்) நட்பானதால் நமக்குச் சங்கடம். இவர்களுடைய நட்பை நாம் பிரிக்கவேண்டும்.

கரடகன்: அவர்கள் நல்ல நண்பர்களாக அல்லவா இருக்கிறார்கள்? அவர்கள் நட்பைப் பிரிப்பது முடியாத காரியம் அல்லவா?

தமனகன்: என்ன சொல்கிறாய்? உபாயத்தால் ஆகாதது என்ன? ஒரு காகம் தனக்கு எதிரியான பாம்பைக் கொன்ற கதை தெரியாதா உனக்கு?

கரடகன்: அது எப்படி?

காகம் தந்திரத்தால் பாம்பைக் கொன்ற கதை

ஒரு பெரிய மரத்தின் கிளைகளில் கூடுகட்டிக்கொண்டு ஆணும் பெண்ணுமாகிய இரு காகங்கள் நெடுநாட்களாக வாழ்ந்தன. அந்த மரப்பொந்தில் ஒரு நாகம் வந்து சேர்ந்தது. அந்தக்  காக்கை இடும் முட்டை களை எல்லாம் அது குடித்துவிட்டது. இதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்ட ஆண் காகம், தனக்கு நண்பனான நரி ஒன்றிடம்போய், “இனிமேலாவது முட்டைகளைக் காப்பாற்ற வேண்டும். என்ன செய்யலாம்?” என்றது.

நரி: நண்டு ஆசைகாட்டிக் கொக்கினைக் கொன்றாற்போல ஒரு உபாயத்தினால் தான் அப்படிச் செய்யவேண்டும்.

காக்கை: நண்டு கொக்கை எப்படிக் கொன்றது?

நண்டு கொக்கைக் கொன்ற கதை

 

siragu-panja-thandhira-kadhai2மீன்களை மிகுதியாகத் தின்ற கொக்கு ஒன்று, வழக்கமான தனது குளக் கரையில் வந்து சோகமாக நின்றுகொண்டிருந்தது. அதைக் கண்ட மீன்கள், “நீ ஏன் வழக்கம்போல் உன் ஆகாரத்தைப் பிடித்துத் தின்னாமல் சும்மா இருக்கிறாய்? சொல்” என்றன.

கொக்கு: நான் மீன்களைத் தின்பது மெய்தான். ஆனால் இன்றைக்கே வந்து இங்குள்ள மீன்களை எல்லாம் பிடித்துக்கொண்டு போகப் போவதாக ஒரு மீனவன் சொன்னான். என் இரைகள் எல்லாம் அழிந்துபோகப் போகிறதே, நாளை ஒன்றும் கிடைக்காதே என்று நான் சோகமாக இருக்கிறேன்.

இதைக் கேட்டு மீன்கள் கூட்டமாகக் கூடி ஆலோசித்தன. கடைசியில் கொக்கிடமே வந்து, “நீதான் எங்களை இன்று எப்படியாவது காப்பாற்ற வேண்டும்” என்றன.

கொக்கு: நான் போய் மீனவனோடு சண்டையிட முடியுமா?  மேலும் நான் கிழவன் அல்லவா?

மீன்கள்: ஐயோ, எங்களை எப்படியாவது காப்பாற்று.

கொக்கு: உங்களை வேறோர் இடத்திற்குக் கொண்டுபோய் நான் சேர்க்கிறேன். அதனால் எனக்கு உதவிசெய்பவன் என்ற பெயர் கிட்டும். நீங்களும் வெகுகாலம் பிழைத்திருக்கலாம்.

கொக்கின் பேச்சை முட்டாள் மீன்கள் அப்படியே நம்பிவிட்டன. “சரி அப்படியே எங்களைக் கொண்டுசென்று காப்பாற்று” என்று கேட்டன. அந்த வஞ்சகக் கொக்கு, நடைக்கு ஒன்றாக, குளத்திலிருந்த மீன்களை எல்லாம் அலகில் கவ்விச் சென்று, சில மீன்களை மட்டும் தின்றுவிட்டு, பிறவற்றை ஒரு பெரிய பாறைமேல் உலர வைத்தது. அச்சமயத்தில் குளத்திலிருந்த ஒரு நண்டு, “என்னையும் நீ காப்பாற்றி அந்த இடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்” என்றது. வருகின்ற காலத்தில் எல்லாம் வலிய வரும் என்று எண்ணிய கொக்கு, அந்த நண்டை எடுத்துக்கொண்டு சென்றது. வழியில் மீன்கள் செத்துக்கிடப்பதையும், மீன்முட்கள் சிந்திக்கிடப்பதையும், பாறைமேல் பலமீன்கள் உலர்கின்றதையும் பார்த்தது நண்டு. ஐயோ, இந்தக் கொக்கு இதே போல் நம்மையும் கொன்றுவிடும் என்று நினைத்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு உபாயத்தை எண்ணியது. கொக்கைப் பார்த்து, “நீ மிகவும் கஷ்டப்பட்டு என்னைக் கொண்டுவந்தாய். ஆனால், குளத்திலே என் சுற்றத்தார்கள் எல்லாம் இருக்கிறார்கள். அங்கே நீ என்னை மறுபடியும் கொண்டுசென்றால் அவர்களையும் நான் காட்டுவேன். நீ அவர்களையும் காப்பாற்றலாம்” என்றது.

அதைக் கேட்டுக் கொக்கு, பேராசையால் திரும்பி அந்தக் குளத்திற்கு வந்தது. குளத்தின் சமீபத்தில் அது வந்தபோது, நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை நறுக்கி இரு துண்டுகளாக்கி அதைக் கொன்றது. தான் குளத்தில் பழையபடியே சென்று சுகமாக இருந்தது.

“அந்த நண்டைப் போல சூழ்ச்சிசெய்து பாம்பைக் கொல்லவேண்டும்” என்று அந்த நரி காக்கையிடம் கூறியது.

(தொடரும்)

 


பஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்

 

siragu-panjathandhira-kadhaigal1

கதைகள் என்றால் ஆசைப்படாதவர்கள் இல்லை. சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களுக்கும் கதை என்றால் ஆசைதான். ஆங்கிலத்திலும் பெரியவர்களும் சிறுவர் கதைகளான ஈசாப் கதைகள், ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் போன்றவற்றைப் படித்து மகிழ்கிறார்கள். தமிழிலும் இவ்வாறே அநேகக் கதைகள் உள்ளன. தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தியன் கதைகள் என்று எத்தனை எத்தனையோ. சிறுவயதில் இவற்றையெல்லாம் படித்து மகிழ்ந்தது உண்டு. இப்போது நிறைய பேருக்கு ஆங்கிலப் படிப்பின் காரணமாக இம்மாதிரிக் கதைகளின் தொடர்பு விட்டுப்போய் விட்டது.

பஞ்சதந்திரக் கதைகள், அரிய அறிவுரைக் கதைகளாகும். இவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலவற்றைச் சிறிய தொகுப்புகளிலும், யூ ட்யூப் முதலிய காணொளிகளிலும் இப்போது காண்கிறோம். அசலான கதைகளை அப்படியே எடுத்துரைத்தலும் சொல்லுதலும் படித்தலும் கேட்டலும் இல்லாமல் போய்விட்டது. யாருக்கும் நேரமில்லை! அதற்காகவே இந்தப் பகுதி. இது சிறுவர்களுக்கு மட்டுமல்ல, உறுதியாகப் பெரியவர்களுக்கும் பயன்தரும்.

தமிழில் முதன்முதல் பஞ்சதந்திரக் கதைகளை எழுதியவர் வித்துவான் தாண்டவராய முதலியார் ஆவர். இவர் புதுவைக்கு அருகிலுள்ள வில்லியனூரில் பிறந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இளமையிலேயே தந்தை கந்தசாமி முதலியார் இறந்துவிட்டார். அதனால் பொன்விளைந்த களத்தூரில் தாய்மாமன் குமாரசாமி வீட்டில் வளர்ந்து கல்வி பயின்றார். தமிழன்றியும் வடமொழி, தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் இவருக்குப் பயிற்சி ஏற்பட்டது. அக்கால ராஜதானிக் கல்லூரியில் (இன்றைய பிரெசிடென்சி கல்லூரி) ஆசிரியர் பணி செய்தார்.

பின்னர் செங்கல்பட்டில் சுதேச நீதிபதி வேலையில் அமர்ந்தார். அப்போது பஞ்சதநதிரக் கதைகளை இயற்றினார். திருத்தணிகை மாலை, திருப்போரூர்த் திருப்பதிகம், கதாமஞ்சரி, இலக்கண வினாவிடை முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். திருக்குறள் பரிமேலழகர் உரை, நாலடியார், சீவக சிந்தாமணி, தொல்காப்பியம் முதலிய நூல்களைப் பதிப்பிக்கவும் செய்தார்.

“தமிழ் கற்கப் புக்கோர் தமிழில் எழுதி வழங்குகின்ற பஞ்சதந்திரக் கதையைக் கற்கப் புகுந்தால், குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்டாற்போல வழுக்களையே கற்றுத் தடுமாற்றமுறுதலால், சென்னைச் சங்கத்துத் தலைவராகிய மகாராஜஸ்ரீ ரிச்சட்டுக் கிளார்க்குத் துரையவர்கள் உத்தரவினால், மகாராஷ்டிரத்தில் அச்சுப் பதித்திருக்கின்ற பஞ்சதந்திரக் கதையைத் தமிழில்மொழிபெயர்த்துச் சொற்பொருளழகுறப் பலவிடத்துச் சில கூட்டியும், கற்போர் உலக நடையும் சில செய்யுள் நடையுமான தமிழ் நன்குணரவும், சுவையுற இம்மொழிபெயர்ப்புப் பஞ்சதந்திரக் கதை சாலீவாஹன சக வருடம், 1746மேல் செல்லாநின்ற பார்த்திவ வருடத்துக்குச் சரியான கிரித்து 1825ம் வருடம் செய்து முற்றுப்பெற்றது.”

என்று தம் நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். இதன்பின் ஓராண்டு கழித்து 1826இல் இந்நூல் பதிப்பிக்கப் பெற்றது. தமது குழந்தைகளும் தம்மைச் சேர்ந்தவர்களும் நல்ல தமிழ்நடை பயின்று தேறுவதற்காகவே இவர் பஞ்சதந்திரக்கதையை எளிய நடையில் தொடங்கிக் கடினமான நடையில் எழுதிமுடித்தார் என்று சிலர் கூறுவர்.

இப்போது அசலான பஞ்சதந்திரக் கதைகள் சந்தையில் கிடைப்பதில்லை. அவரவர் மனம்போன போக்கில் எதையோ பஞ்சதந்திரக்கதைகள் என்று வெளியிட்டுப் பணம் சம்பாதிக்கின்றனர். அதற்காகவே இந்தப் பதிப்பு, இன்றைய தமிழில் வெளியிடப்பெறுகிறது.

பஞ்சதந்திரம்

வரலாறு

கல்வியிலும் செல்வத்திலும் குறைவற்றவர்கள் வாழ்ந்துவந்த பாடலிபுரம் என்னும் ஊரில் எல்லாவித நற்பண்புகளுடனும் கூடிய சுதரிசனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவனுடைய பிள்ளைகள் படிக்காத மூடர்களாக இருந்தார்கள். அதைக் கண்டு கவலைப்பட்டான் அரசன். ஒருநாள் சபையிலேயே சிந்திக்கத் தொடங்கினான்.

“கல்வியும் நல்ல பண்பும் இலலாத பிள்ளைகள் இருந்து ஆகக்கூடியது என்ன? பால் கொடுக்காத எருமைகளைக் காப்பாற்றி என்ன பயன்? வேத சாத்திரம் அறிந்தவனாக ஒரே ஒரு மகன் இருந்தாலும் அவனால் குடும்பம் முழுதும் சுகம் அடையும். இவ்வாறற்ற பிள்ளைகள் கர்ப்பத்தில் அழிந்தாலும் நல்லது, அன்றிப் பிறந்தவுடனே இறந்துவிட்டாலும் நல்லதே. குலத்தில் அயோக்கியனான பிள்ளை பிறக்கலாகாது. பல பிறவிகளில் செய்த புண்ணியத்தினால், இம்மையிலும் மறுமையிலும் சுகம் கொடுக்கும் மகன் பிறக்கிறான். பாவம் செய்திருந்தால், குலத்தைக் கெடுக்கும் மகன் பிறக்கிறான். இந்தப் பிள்ளையைப் பெற்றவர்களஎன்ன தவம் செய்தார்களோ என்று கண்டவர்கள் சொல்லும்படி நடப்பவன் அல்லவா பிள்ளை?” என்று தனக்குள் ஆலோசித்துவிட்டு, சபையை நோக்கிச் சொல்லல் ஆயினான்.

“இளமையும் செல்வமும் ராஜச குணமும் அறிவில்லாமையும் ஆகிய இந்த நான்கினுள் ஒவ்வொன்றும்கேட்டுக்குக் காரணமாகும். இந்த நான்குமே ஒருவனிடம் இருந்தால் அவன் என்ன பாடுபடமாட்டான்? கெட்டவழியில் நடக்கின்ற என் பிள்ளைகளுக்கு நீதி சாத்திர உபதேசத்தினால் எந்த மகாபுருஷன் மறுபிறவி எடுக்குமாறு செய்வான்?”

அப்போது எல்லா நீதி சாத்திரங்களிலும் வல்லவனான சோம சர்மா என்பவன் எழுந்து, “இவர்களுக்குச் சமமான அறிவுடையவர்கள் இந்த உலகத்திலேயே இல்லை என்று சொல்லும்படி என்னால் ஆறுமாதத்தில் செய்யமுடியும். அதுவரை நீங்கள் பொறுத்திருந்தால் போதும்” என்றான்.

அதைக் கேட்டு, நடுக்கடலில் திசைதப்பி மயங்கிய மாலுமி ஒருவனுக்குக் கரை கண்ணில் பட்டாற்போல அரசன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சோம சர்மாவுக்கு உபசாரங்கள் செய்து தன் மகன்களை அவனிடம் ஒப்படைத்தான். உடனே அந்தப் பிள்ளைகளை சோம சர்மா தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி ஒரு கட்டியாகச் செய்ததுபோல நீதி சாத்திரங்களை எல்லாம் பஞ்சதந்திரக் கதை என்ற கருப்பங்கட்டியாக்கி, அரசகுமாரர்களுக்குச் சொல்லத் தொடங்கினான்.

சோம சர்மா: அரச குமாரர்களே, உங்களுக்குச் சில வேடிக்கைக் கதைகள் சொல்லப் போகிறேன், கேளுங்கள்.

அரசகுமாரர்கள்: என்ன விதமான கதைகள் அவை?

சோம சர்மா: பஞ்ச தந்திரக் கதைகள்.

அரசகுமாரர்கள்: பஞ்ச தந்திரம் என்றால் என்ன? நாங்கள் கேள்விப் பட்டதில்லையே? எங்களுக்குத் தெரியச் சொல்லவேண்டும்.

சோம சர்மா: பஞ்ச தந்திரங்கள் என்பவை, மித்திர பேதம், சுகிர்லாபம், சந்தி விக்கிரகம், அர்த்த நாசம், அசம்பிரேட்சிய காரியத்துவம் என்பன.

மித்திர பேதம் என்பது சிநேகத்தைக் கெடுத்துப் பகையை உண்டாக்குதல்;

சுகிர்லாபம் என்பது தங்களுக்குச் சமமானவர்களுடன் கூடிப் பகையில்லாமல் வாழ்தல்;

சந்தி விக்கிரகம் என்பது பகைவருடன் உறவுகொண்டாடி வெல்லுதல்;

அர்த்த நாசம் என்பது கையில் கிடைத்த பொருளை அழித்தல்;

அசம்பிரேட்சிய காரியத்துவம் என்பது ஒரு காரியத்தைத் தெளிவாக ஆராயாமல் செய்தல்.

இவ்வாறு விளக்கியதும், “ஐயா, அந்தக் கதைகளை எங்களுக்கு நன்கு விளக்கமாகச் சொல்லவேண்டும்” என்று அரசகுமாரர்கள் கேட்க, அவர்களை ஆசீர்வதித்து, சோம சர்மா பின்வரும் கதைகளைச் சொல்லத் தொடங்கினான்.

பஞ்சதந்திரக் கதைகள்

முதலாவது, மித்ரபேதம் அல்லது நட்பைப் பிரித்தல்:

“ஒரு காட்டில் ஒரு சிங்கமும் எருதும் மிக ஒற்றுமையாக வாழ்ந்திருந்தன. அந்த நட்பைக் கோள் சொல்கின்ற, லோப குணமுள்ள ஒரு நரி வந்து கெடுத்தது” என்று தொடங்கினான் சோம சர்மா. “அதெப்படி” என்று ராஜ குமாரர்கள் கேட்க. விரிவாகச் சொல்லத் தொடங்கினான்.

சிங்கம் எருதின் ஒலி கேட்டு மயங்கியது

தென்னாட்டில், மகிழாருப்யம் என்னும் பட்டணத்தில் வர்த்தமானன் என்று ஒரு வியாபாரி இருந்தான். அவனிடம் நிறையப் பணம் இருந்தது. இருந்தாலும், இன்னும் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசையினால், சிந்திக்கலானான்:

“எதைச் சம்பாதிப்பது மிக அருமையோ (அபூர்வமோ) அதைச் சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்ததைக் காப்பாற்ற வேண்டும். காப்பாற்றியதைப் பெருகச் செய்யவேண்டும். பெருக்கிய செல்வத்தைத் தானும் அனுபவித்து, தக்கவர்களுக்கும் கொடுத்துச் செலவழிக்க வேண்டும்.

காப்பாற்றாத பொருள் நாசமாகும்

பெருகச் செய்யாத பொருள் குறையும்

தானும் அனுபவித்து, நல்லவழியிலும் செலவழிக்காத செல்வம் வீணாகும்

என சோம சர்மா நூல்கள் சொல்கின்றன. மேலும், மனிதருக்குள் இன்பமும், புண்ணியமும், கீர்த்தியும், பெருமையும், உறவும், நினைத்தது முடித்தலும் யாருக்கு உண்டு? திரளாகப் பணம் சேர்த்தவர்களுக்கே உண்டு. இல்லாதவர்கள் உலகத்தில் நடைப் பிணங்கள் ஆவர். ஆகையினால் மேன்மேலும் சம்பாதிப்பதே யோக்கியம்”

என்று யோசித்து, தன்னிடத்திலிருந்த சரக்குகளை வண்டியில் ஏற்றி, அதில் சஞ்சீவகன், நந்தகன் என்னும் பெயர்களைக் கொண்ட இரண்டு எருதுகளைப் பூட்டி நடத்திக்கொண்டு வேறு நாட்டுக்குப் போனான்.

போகும் வழியில், ஒருநாள், அடர்ந்த காட்டில், பாரம் தாங்காமல் சஞ்சீவகன் என்ற எருது கால் இடறி விழுந்து நொண்டி ஆயிற்று. வர்த்தமானன் அதை அவிழ்த்துவிட்டு, அதற்கு ஒரு வேலையாளைக் காவல் வைத்து, வேறொரு எருதைக் கட்டி வண்டியைச் செலுத்திக் கொண்டு சென்றான். அந்த வேலையாள், இரண்டொரு நாள் கழித்து, எஜமானனிடம் ஓடிவந்து, “அந்த எருது செத்துப் போய்விட்டது” என்று பொய் கூறினான்.

ஆனால் காட்டில் விடப்பட்ட எருது சாகவில்லை. புல்முதலிய மேய்ச்சல் நன்கு கிடைத்ததால் மிகவும் கொழுத்திருந்தது. உடைந்த காலும் தானாகக் கூடி, காட்டில் அது தன்னிச்சையாகத் திரிந்துகொண்டிருந்தது.

காட்டுக்கு அரசன் சிங்கம் என்பது ஒரு கதை மரபு. அதன்படியே இந்தக்காட்டிலும் தன் வலிமையினால் அரசனாக மதிக்கப்பட்ட பிங்கலன் என்ற ஒரு சிங்கம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது தண்ணீர் குடிக்க யமுனை ஆற்றங்கரைக்குப் போயிற்று. திடீரென அந்த எருது அப்போது பேரிடி முழக்கம் போல முக்காரம் செய்தது. அந்த சத்தத்தைக் கேட்டு சிங்கம் “இது என்ன புதிதாக இருக்கிறதே” என்று பயந்துபோய், நடுநடுங்கித் தண்ணீர்கூடக் குடிக்காமல் அசையாமல் நின்றது.

(தொடரும்)


காப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2

 

siragu-manimegalaiபுண்ணியராஜன் சாவக நாட்டில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தபோதுதான் சோழநாட்டில் பூம்புகார் நகரில் கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாக மணிமேகலை பிறந்து வளர்ந்து வந்தாள். தன் தந்தை கோவலன் மதுரையில் பாண்டிய அரசனால் கொலையுண்ட செய்தி கேட்டு அவள் வருந்திக் கொண்டே இருந்ததை மாற்ற நினைத்த அவளுடைய தாய் மாதவி, ஒரு நாள் அவளை ஒரு மாறுதலுக்காக வெளியே அனுப்ப நினைத்தாள். “நீ தொடுக்கும் பூமாலை உன் கண்ணீரால் நனைந்து பூசைக்கு ஆகாததாயிற்று. ஆகவே நீ சோலை சென்று புதுமலர் பறித்துக் கொண்டுவா” என்று அவளை அனுப்பினாள். மணிமேகலை, தன் தோழி சுதமதியோடு பூப்பறிப்பதற்காக உபவனம் என்ற சோலைக்குச் சென்றாள்.

முன்னரே மணிமேகலையை விரும்பியிருந்த அந்நகரத்தரசன் கிள்ளி வளவனுடைய மகன் உதயகுமரன் என்பவன் இதைத் தன் தோழர் மூலமாக அறிந்தான். மணிமேகலையைச் சோலையில் வலிந்து கொண்டுசென்று விடலாம் என்ற எண்ணத்தோடு தேரில் ஏறிவந்தான். சோலையில் அவன் புகுந்ததைக் கண்ட சுதமதி, மணிமேகலையை அங்கிருந்த ஒரு பளிங்கு அறையில் புகச்செய்தாள். (பளிங்கறை என்பது இக்காலத்திலுள்ள கண்ணாடி பதித்த குளிர்சாதன அறையை நமது நினைவுக்குக் கொண்டுவருகிறது. அதற்குள் இருப்பவரை வெளியிலிருந்து பார்க்கமுடியும். ஆனால் அவர்கள் பேசுவதைக் கேட்க முடியாது.) வெளியிலிருந்த சுதமதி, உதயகுமரனுக்குப் பலவிதமான நீதிகளையும் கூறி அவனைத் தடுத்தாள். ஆனால் அவள் நல்லுரைகள் உதயகுமரன் மனத்தில் ஏறவில்லை. “நான் இவள் பாட்டி சித்திராபதி மூலமாக இவளை அடைவேன்” என்று கூறியவாறு அவன் சென்று விட்டான்.

உதயகுமரன் சென்றதும் மணிமேகலை, பளிங்கறையிலிருந்து வெளிவந்து சுதமதியோடு உரையாடிக் கொண்டிருந்தபோது அங்கு மணிமேகலா தெய்வம் வந்தது. (இந்தத் தெய்வம், கோவலனின் குலதெய்வம். இதன் பெயரைத்தான் மணிமேகலை பிறந்தபோது அவளுக்குக் கோவலன் இட்டான்.) தன்னிடம் பக்தி பூண்டிருந்த கோவலனின் மகளைக் காக்கவேண்டும், அவள் மனம் உலகியலில் ஈடுபடலாகாது, உதயகுமரனிடம் சென்றுவிடலாகாது என்று அத் தெய்வம் கருதியது. எனவே ஒரு பெண் உருவத்தில் அவர்களிடம் வந்தது. அவர்களை நோக்கி, “நீங்கள் இங்கிருந்தால் உதயகுமரனால் உங்களுக்குத் துன்பம் உண்டாகும், ஆகையால், முனிவர்கள் வசிக்கும் சக்ரவாளக் கோட்டத்திற்குச் செல்லுங்கள்” என்று கூறியது. அங்குச் சென்ற மணிமேகலையும் சுதமதியும் பொழுது சாயவே உறங்கலாயினர். மணிமேகலா தெய்வம், அப்போது மணிமேகலையை மட்டும் மயங்குமாறு செய்து அவளை எடுத்துக்கொண்டு ஆகாயவழியில் தெற்கில் முப்பது யோசனை தூரம் சென்றது. அங்கே மணிபல்லவம் என்னும் தீவில் அவளை விட்டுவிட்டுத் திரும்பியது. சுதமதியிடம் வந்து, மணிமேகலையைத் தான் மணிபல்லவத் தீவில் விட்டதைக் கூறி, “கவலைப்படாதே, மணிமேகலை பூர்வஜென்ம நிகழ்ச்சிகளை அறிந்துகொண்டு, ஏழாம் நாள் திரும்பி வருவாள்” என்று சொல்லிச் சென்றது. சுதமதியும் மாதவியிடம் சென்று நிகழ்ந்ததைக் கூறவும், இருவரும் மணிமேகலையின் நினைவாகக் காத்திருக்கலானார்கள்.

உறக்கம் நீங்கி எழுந்த மணிமேகலை, தான் இருக்கும் இடமும் தோற்றமும் வேறாக இருக்கக் கண்டாள். எனவே மனத்தில் திகைப்புடன் அந்தத் தீவில் எங்கேனும் சுதமதி இருப்பாளோ என்று கருதி, அவளைத் தேடி அலைந்தும், காணாமல் வருந்தி, தன் தந்தை கோவலனின் நினைவாகப் புலம்புபவள் ஆயினாள். அப்போது அவள் கண்முன்பு புத்த பீடிகை (புத்தரின் பாதப்பதிவுகள் கொண்ட பீடம்) ஒன்று தோன்றியது. அது முன்பு இந்திரனால் இடப்பட்டது. பழம்பிறப்பை உணர்த்துகின்ற தன்மை உடையது. இதைக் கண்ட மணிமேகலை விம்மிதம் எய்தி, கைகளைத் தலைமேல் குவித்து, அதை மும்முறை வலம் வந்து தொழுதாள். அதனால் அவளுக்குத் தனது முற்பிறவி நிகழ்ச்சிகள் தோன்றின. தன்னை மணிமேகலா தெய்வம் அங்குக் கொண்டு வந்ததையும் அறிந்துகொண்டாள். அதனால் அந்த தெய்வம் மறுபடியும் தன்னிடம் வரும் என்று காத்திருந்தாள்.

மணிமேகலை தன் முற்பிறவி வரலாற்றை அறிந்ததனால் பக்குவ நிலை பெற்றிருப்பதை அறிந்த மணிமேகலா தெய்வம் அவளிடம் வந்தது. முற்பிறவியில் அவளுடைய கணவனாக இருந்த ராகுலன் என்பவனே இப்போது உதயகுமரனாகப் பிறந்திருக்கிறான் என்பதைச் சொல்லிவிட்டு, மணிமேகலை, ஆகாய வழியில் பறந்து செல்லவும், உணவின்றியே உயிர்வாழவும், எந்த உருவத்தையும் எடுத்துக் கொள்ளவும் ஆகிய மூன்று வரங்களை அவளுக்கு அளித்துவிட்டுச் சென்றுவிட்டது.

அப்போது அத்தீவில் ஒரு பெண் மணிமேகலையின் எதிரில் வந்தாள். “மிகுந்த துயரத்தோடு இத்தீவில் திரிந்துகொண்டிருக்கும் நீ யார்?” என்று கேட்டாள். மணிமேகலை, தன்  முற்பிறவி, இப்பிறவி வரலாறுகளைக் கூறிவிட்டு, “நீ யார்?” என்று அவளைக் கேட்டாள். “இத்தீவின் அருகில் ரத்தினத் தீவு என ஒன்று இருக்கிறது. அதில் சமந்த கூட மலை என்ற உயர்ந்த மலை ஒன்றிருக்கிறது. அதன் உச்சியில் உள்ள புத்த தேவனின் பாதங்களை தரிசித்து விட்டு இத்தீவுக்கு முன்ஒரு காலத்தில் நான் வந்தேன். அது முதல் இந்திரனின் கட்டளையினால் இங்குள்ள புத்த பீடிகையைக் காத்துவருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று அவள் கூறினாள். பிறகு மணிமேகலையை நோக்கி, “இந்த புத்தபீடிகைக்கு முன்னே குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் மிகுந்த கோமுகி என்னும் பொய்கை இருக்கிறது. அப்பொய்கைக்குள் அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரம் ஒன்று அமிழ்ந்து கிடக்கிறது. அது ஒவ்வொரு ஆண்டும், புத்தருடைய பிறந்த நாளாகிய வைகாசிப் பௌர்ணமி அன்று  மட்டும் மேல் எழுந்து வரும். இன்று புத்த பூர்ணிமை நாள். அது தோன்றுகின்ற வேளையும் இதுவே. இப்போது அப்பாத்திரம் உன் கைக்கு வரும். அதில் எடுக்கும் உணவு அள்ள அள்ளக் குறையாமல் வந்தவாறிருக்கும், அதன் வரலாற்றைப் பின்னர் அறவண அடிகளிடம் கேட்டறிவாயாக” என்று கூறினாள். அதன்படியே மணிமேகலை அப்பொய்கையை வலம் வர, அட்சய பாத்திரம் அவள் கையில் வந்து சேர்ந்தது. அதைக் கண்ட தீவதிலகை, மணிமேகலையிடம், பசித் துயரத்தின் கொடுமையை எடுத்துரைத்து,

ஆற்றுநர்க்கு அளிப்போர், அறவிலை பகர்வோர்,

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை.

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

என்று பசியை ஆற்றுபவர்களின் சிறப்பையும் எடுத்துரைத்தாள்.

இதன்பின் மணிமேகலை சிறிதுநேரம் தீவதிலகையோடு அளவளாவி யிருந்து, பிறகு அவளைப் பணிந்து விடைபெற்றாள். ஆகாயவழிச் செல்லும் மந்திரத்தை உச்சரித்து, பறந்துசென்று புகார் நகரத்தை அடைந்தாள். தன் வருகையை எதிர்பார்த்திருந்த மாதவி, சுதமதி ஆகியோர் முன்னிலையில் சென்று தோன்றினாள். தனது முற்பிறப்புக் கதையை அவர்களுக்குக் கூறி, கையிலிருந்த அட்சய பாத்திரத்தையும் காட்டி, “இது ஆபுத்திரனின் திருக்கரத்தில் இருந்த அமுதசுரபி. இதை வணங்குங்கள்” என்று கூறி வணங்கச் செய்தாள். பின்னர் தவவழியை மேற்கொள்ளும் பொருட்டு, அறவண அடிகளை அடைந்தாள். தனக்கு தர்ம உபதேசம் புரிந்து, ஆபுத்திரன் வரலாற்றையும் கூறவேண்டும் என்று கேட்டாள். அவர், ஆபுத்திரன் வரலாற்றை அவளுக்குக் கூறிவிட்டு, “சிலநாட்கள் கழித்து உனக்கு தர்மோபதேசம் அளிக்கிறேன், அதுவரை நீ இந்த அமுதசுரபியைக் கொண்டு இங்கு பசிப்பிணியை நீக்குவாயாக” என்று உரைத்தார்.

அதன்பின் மணிமேகலை, புகார் நகரத்திலிருந்த ஆதிரை என்னும் கற்புடைய மங்கையின் கையால் அட்சய பாத்திரத்தில் முதன்முதலில் பிச்சைபெற்று, அதிலிருந்து வளரும் உணவினைக் கொண்டு பசித்துவந்தோர் பசியைப் போக்கிவரலானாள். காயசண்டிகை என்னும் வித்தியாதர மங்கையின் யானைத்தீ (பஸ்மக நோய்) எனப்படும் தீராப் பசிநோயையும்  தீர்த்தாள். பிறகு பல விசேட நிகழ்ச்சிகள் அவள் வாழ்க்கையில் நடந்தேறின.

பின்னர் அவள் அறவண அடிகளிடம் விடைபெற்று, ஆகாய வழியே சென்று சாவக நாட்டில் ஒரு நகர்ப்புறத்தில் ஒரு சோலையில் இருந்தாள். அங்கிருந்தோரிடம், அது நாகபுரம் என்னும் நகரத்தின் புறத்திலிருந்த சோலை என்றும், அதை ஆள்பவன் புண்ணிய ராஜன் என்றும் அறிந்து இருந்தாள். “புண்ணிய ராஜன் பிறந்த நாளாக, இந்நாட்டில் மழைவளம் பிழைத்ததில்லை. பூமியும் மரமும் தங்கள் பலன்களைத் தக்கவாறு அளிக்கின்றன. உயிர்கள் நோயின்றிச் சுகமாக வாழ்ந்து வருகின்றன” என்று மேலும் அந்த அரசனின் பெருமைகளைக் கூறினர். அச்சமயம், புண்ணிய ராஜன், தன் தேவியோடு அந்தச் சோலைக்கு வந்தான். அங்கே தர்ம சாவகன் என்ற முனிவனிடம் தர்மோபதேசம் கேட்டு, அவனருகிலிருந்த மணிமேகலையைப் பற்றி வினவினான்.

அப்போது  அருகிலிருந்த அமைச்சன், “முன்னொரு காலத்தில் கிள்ளிவளவன் என்னும் அரசனோடு  நட்புக்கொள்ள அறவண அடிகள் காவிரிப்பூம்பட்டினம் சென்றார். அவர் திரும்பியபோது இப்பெண்ணின் வரலாற்றை விளக்கி உரைத்தார் என்று முன்னரே உங்களுக்குக் கூறியிருக்கிறேன், அந்தப் பெண்ணே இவள்” என்று கூறினான்.

உடனே மணிமேகலை, “அரசே, முற்பிறப்பில் உன் கையிலிருந்த அட்சய பாத்திரம்தான் இப்பிறப்பில் என்னிடம் வந்து சேர்ந்தது. நீ இப்போது முற்பிறப்பை அறியாமையினால் தடுமாறுகின்றாய். மணிபல்லவம் சென்று அங்குள்ள புத்தபீடிகையைத் தொழுதால் உன் முற்பிறப்பை அறியலாம். உடனே வருவாயாக” என்று சொல்லிவிட்டு, தான் மட்டும் ஆகாய மார்க்கமாக முன்னதாக மணிபல்லவத்திற்குச் சென்றுவிட்டாள்.

புண்ணிய ராஜன், அரண்மனைக்குச் சென்று தன்னை வளர்த்த தாயாகிய அமர சுந்தரி என்பாளிடம் தன் வரலாற்றைக் கேட்டான். அவள் அவன் பிறப்பு வரலாற்றைக் கூற, அவன் வருத்தமடைந்து, அரசாட்சியில் வெறுப்புக் கொண்டு தான் துறவு எய்தி, மணிபல்லவம் செல்லவேண்டும் என்ற ஆசையை வெளியிட்டான்.

அதைக் கேட்ட ஜனமித்ரன் என்ற மந்திரி, “அரசே! வாழ்க! என் சொற்களைக் கேட்டருள வேண்டும். உன்னை நமது முன்னாள் அரசர் பெறுவதற்கு முன்பு இந்நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் மழைபெய்யாமல் பஞ்சமாக இருந்தது. அப்போதுதான் நீ கோடைகாலத்தில் மழைபெய்தாற்போல இங்கே தோன்றினாய். நீ தோன்றியபின் இந்நாட்டில் எல்லா வளங்களும் நிரம்பின. அதிலிருந்து இன்றுவரை எல்லாவகைச் சுகங்களோடும் இந்நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நீ இப்போது நீங்குவாயானால் எல்லா உயிர்களும் தாயைப் பிரிந்த கன்றுகளைப் போல் வருந்தும். நீ உன் நலம் ஒன்றை மட்டுமே கருதி நாட்டைவிட்டுப் பிரிவது நன்றல்ல” என்று கூறினான். புண்ணிய ராஜன், “மணிபல்லவத்திற்குச் சென்று புத்தபீடிகையை வணங்க வேண்டும் என்ற ஆவல் கரைகடந்து என் உள்ளத்தில் எழுகிறது. ஆகவே அங்கு நான் சென்று திரும்பிவரும் காலம்வரை நீ எனது சார்பாக இந்நாட்டைப் பாதுகாப்பாயாக” என்று கூறிக் கப்பலேறிச் சென்று மணிபல்லவத்தையும் அடைந்தான்.

அங்கு மணிமேகலை அவனுக்கு புத்தபீடிகையைக் காட்ட, அவன் அதனை வலம் வந்து துதித்துத் தன் முற்பிறவி வரலாற்றை அறிந்தான். தனக்கு அமுதசுரபியை அளித்த சிந்தாதேவியைத் துதித்தான். பிறகு அங்கிருந்து சென்று ஒரு புன்னை மர நிழலில் இருந்தான். அப்போது அத்தீவின் காவல் தெய்வமான தீவதிலகை, ஆபுத்திரனிடம் வந்தாள். “அக்காலத்தில், இத்தீவில், உன்னைத் தனியே விட்டுவிட்டுக் கப்பல் ஏறிச்சென்ற ஒன்பது செட்டிமார், பின்பு உன்னைக் காணாமல் இத்தீவுக்கு வந்தார்கள். நீ இறந்து போன வரலாற்றை அறிந்து, அவர்களும் உண்ணாவிரதம் இருந்து இறந்துபோனார்கள். அவர்களுடைய உடல் எலும்புகள் இவை. அவர்களுடன் வந்தவர்கள் சிலரும் பிரிவாற்றாமையால் உயிர்துறந்தார்கள். இவை அவர்களுடடைய எலும்புகள். இதோ இந்தப் புன்னைமர நிழலில்தான் உனது எலும்புகளும் புதையுண்டிருக்கின்றன. இவ்வாறு, உன் உயிரையும் போக்கிக் கொண்டு, உனக்கு இரங்கிய பிறஉயிர்களையும் கொலைக்கு ஆளாக்கிய நீ அல்லவா இப்போது புண்ணிய ராஜன் எனச் சாவக நாட்டை ஆளுகின்றாய். இது என்ன வியப்பு!” என்று கூறினாள்.

இவற்றைக் கண்ட புண்ணிய ராஜன் ஆச்சரியமும் துக்கமும் கொண்டு மயங்கி நின்றான். தீவதிலகை, பின்னர் மணிமேகலையை நோக்கிக் கூறலாயினாள். “மணிமேகலையே! உனது பிறப்பிடமாகிய பூம்புகாரைக் கடல் கொண்டது. சில நாட்களுக்கு முன்னர் காவிரிப்பூம்பட்டினத்து அரசனான கிள்ளிவளவன், நாகநாட்டரசன் வளைவணன் என்பவனின் மகளாகிய பீலிவளையைக் காதலித்துக் கந்தர்வ மணம் புரிந்துகொண்டான். ஒரு நாள் பீலிவளை, அரசனிடம் சொல்லாமல் தன்னிடத்திற்குச் சென்றுவிட்டாள். அரசன் வருந்தி அவளை எங்குத் தேடியும் காணாமல் திகைத்திருந்தான். அப்போது முக்காலமும் உணர்ந்த சாரணன் ஒருவன் அங்கு வர, அவனைக் கண்டு வினவினான். அவன், ‘பீலிவளை இனி உன்னிடம் வரமாட்டாள். உனக்கு அவள் வயிற்றில் பிறக்கும் மகன்தான் உன்னிடம் வருவான். ஆகவே நீ  இது பற்றி வருந்தாதே’ என்று கூறினான்.

அரசனைப் பிரிந்த பீலிவளை, ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அக்குழந்தையோடு சில நாட்களுக்கு முன் இத்தீவுக்கு வந்தாள். புத்தபீடிகை யை வலம் வந்து தொழுதுகொண்டிருக்கும்போது, கம்பளச் செட்டி என்னும் வணிகனின் கப்பல் இந்தத் தீவுக்கு வந்தது. பீலிவளை அவனிடம் சென்று, குழந்தையைக் கொடுத்து, “இவன் சோழ அரசனின் மகன். இவனை அரசனிடம் சேர்ப்பது உன் கடமை” என்று கூறினாள். அவன் மகிழ்ச்சியுடன் அக்கடமையை ஏற்றுக்கொண்டான். பிறகு அவன் கப்பலைச் செலுத்திக் கொண்டு சோழநாட்டை நோக்கி வரும் வேளையில், இடைவழியில் கப்பல் உடைந்து போயிற்று. பலர் மாண்டு போயினர். தப்பிப் பிழைத்த சிலர் காவிரிப் பூம்பட்டினம் வந்து, குழந்தையைப் பீலிவளை செட்டியிடம் ஒப்படைத்ததையும் கப்பல் உடைந்த விஷயத்தையும் கூறினர். அரசன் மிக வருத்தமடைந்து கடற்கரை ஓரமெல்லாம் ஓடித் தேடித் திரிந்துகொண்டிருந்தான்.

அதனால் இந்திரவிழா எடுக்க வேண்டிய காலத்தில் எடுக்காமல் தவறிப்போயிற்று. இதனால் மணிமேகலா தெய்வத்தின் சாபத்தினால், கடல் பொங்கிவந்து புகார்நகரத்தை அழித்தது. அரசன் முதலானோர் வேறிடம் சென்றனர். உன் தாயும் தோழியும் அறவண அடிகளோடு வஞ்சி நகரத்திற்குச் சென்றிருக்கிறார்கள். ஆகவே நீ வஞ்சிமா நகரம் செல்வாயாக” என்று கூறினாள். அதன்படியே மணிமேகலையும் வஞ்சிமாநகரம் சென்று அங்கு அறவண அடிகளைக் கண்டு, அறவுரை பெற்று, அங்கிருந்த பல மதத்தினரையும் தன் வாதத்திறமையால் வெற்றிகொண்டு வாழ்ந்திருந்தாள்.

ஏறத்தாழ இங்குச் சொல்லப்பட்ட ஆபுத்திரன் கதை, மணிமேகலைக் காப்பியக் கதையையும் உள்ளடக்கியிருக்கிறது. இதில் வருகின்ற மீயியற்கைச் செய்திகளை விட்டு விட்டாலும் நமக்குச் சில செய்திகள் தெளிவாகின்றன.

அக்காலத்தில் அரசர்களை (அல்லது தெய்வங்களை) மட்டுமே காப்பியத் தலைவர்களாகக் கொண்டு காப்பியம் படைப்பது வழக்கம். அறிஞர்கள் எல்லாருமே மணிமேகலை என்ற பெண்ணை, அதுவும் கணிகை குலப்பெண்ணைச் சீத்தலைச் சாத்தனார் தலைவியாகக் கொண்டு காப்பியம் வரைந்த புரட்சியைப் பாராட்டியுள்ளனர். அது மட்டுமன்று. அந்தக் காலத்திலேயே சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கும் பசியாற உணவு தந்து அதை அறச்சாலையாக மாற்றலாம் என்று சிந்தித்தவர் சீத்தலைச் சாத்தனார்தான்.

மணிமேகலை வாழ்ந்த காலத்தில்தான், சோழன் கிள்ளிவளவன் காலத்தில்தான் பூம்புகார் நகரம் கடற்கோளால் அழிந்தது என்பது. சிலப்பதிகாரக் காப்பியத்தில் பெருமையுடன் விளங்கிய இந்த நகரம், மணிமேகலைக் காப்பியக் காலத்தில் அழிந்துவிட்ட செய்தியைக் கேள்விப் படுகிறோம்.

கிள்ளிவளவன், பீலிவளை என்னும் நாகநாட்டரசியைச் சேர்ந்து ஓர் ஆண்குழந்தையைப் பெற்றான் என்ற செய்தி. இந்தக் குழந்தைதான் பின்னர் தொண்டைமானாக (பல்லவ அரசனாக)த் தொண்டை மண்டலத்தை ஆளலாயிற்று என்பது செய்தி. தொண்டைமான் அல்லது பல்லவன் என்ற பெயருக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

பௌத்த மதம் பசிப்பிணியைத்  தீர்ப்பதில் காட்டிய அக்கறை. சீத்தலைச் சாத்தனார் உலகத்தின் பெரும்பான்மைத் துன்பங்களுக்குக் காரணம், பசி என்பதை உணர்ந்தார் ஆகவே ஏழைபாழைகளுக்கு எவ்விதமேனும் உதவ வேண்டும் என்றும் கருதினார். ஆனால் அக்காலத்தின் போக்குப்படி அவரால் அட்சய பாத்திரம் என்ற ஒன்றைக் கற்பனை செய்து அதன் வாயிலாக ஏழைகள் யாவருக்கும் சோறிட்டு அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் சிந்திக்கமுடிந்தது. ‘உடோபியா’ போன்ற ஒரு கற்பனைத் தீர்வுதான் இது. ஆனால் இந்த அளவுகூட இந்தியாவில் வேறெந்த மொழிக் கவிஞனும் ஏழைகளின் நிலையைப் பற்றி எண்ணவும் இல்லை, அதற்கு ஒரு தீர்வுகாண வேண்டும் என்று கருதவும் இல்லை. அவர்கள் எல்லாம் அரசர்களைப் புகழ்ந்துபாடிப் பரிசு வாங்கிக் கொண்டு (உதாரணத்திற்கு, காளிதாசனைப் போல) பெருஞ்செல்வத்தோடு அரசவைகளில் மிகச் சுகமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இந்த வகையில் சீத்தலைச் சாத்தனாரின் தனி மாண்பு போற்றத்தக்கதாகிறது.

பொதுவாக இந்தக் காப்பியத்தில் பிராமணர்களின் இழிகுணங்களும், யாகங்களும் வெறுக்கப்படுகின்றன. செட்டியார்கள் காப்பியம் முழுவதும் முக்கியத்துவம் பெறுகின்றனர். முக்கியமாக, மணிமேகலை அட்சய பாத்திரத்தில் முதன்முதல் உணவு பெறுவது ஆதிரை என்ற கற்புக்கரசியிடத்திலிருந்து. கடல்கடந்து வணிகம் செய்வதற்காகச் சென்ற ஒரு செட்டியாரின் மனைவி அவர் என்பது கருதத் தக்கது. கடற் பயணங்களும் கடல்வணிகமும் காப்பியம் முழுவதும் நிறைந்துள்ளன. அக்கால வைதிக மதம் கடற்பயணங்களைத் தடுத்தது என்பதும் நினைக்கத் தக்கது.

கடைசியாக, பௌத்த மதத்திற்கென்றே உலகம் முழுவதிலும் உள்ள ஒரே பழைய காப்பியம் இதுதான். இந்தியாவிலோ, பௌத்த மதம் பரவிய பிற நாடுகளிலோ அதற்கான காப்பியம் ஒன்று தோன்றவில்லை. இதனால் மணிமேகலைக் காப்பியத்தின் பெருமை மேலும் பொலிவு பெறுகிறது.

(தொடரும்)


ஆபுத்திரன் – காப்பியக் கதைகள்

(ஆபுத்திரன் கதை மணிமேகலைக் காப்பியத்தின் ஒரு பகுதியாகும். தமிழின் முதல்சீர்திருத்தக் காப்பியம் மணிமேகலை. ஆனால் இக்காலத்தில் மணிமேகலைக் காப்பியத்தைப் படிப்பவர்கள் மிகக் குறைவு. ஆகவே வாசகர்கள் பயன்பெறும் வகையில் அதன் முக்கியப் பகுதியாகிய ஆபுத்திரன் கதையை இங்கே அளிக்கிறோம். கதையின் பயன்பாட்டை வாசகர்களே உணர்ந்துகொள்ளலாம்.)

siragu-kaappiyakadhaigal1

பண்டைக்காலத்தில் காசியில் அபஞ்சிகன் என்ற பிராமணன் ஒருவன் இருந்தான். இளமையிலேயே வேத வேதாங்கங்களைக் கற்று ஆரண உபாத்தியாயன் என்ற பெயரையும் பெற்றான். பிரமச்சரியம் கழிந்து சாலி என்ற பெண்ணை மணந்து வாழலானான். ஆனால் அவள் கணவனுக்கு விசுவாசமாக நடக்கவில்லை. வேறு யாரோ ஒருவனிடம் கர்ப்பமுற்றாள். ஒழுக்கம் தவறிய அவள் தானாகவே அதற்காக வருந்திக் கன்னியாகுமரிக்குச் சென்று புனிதநீராடித் தன் பாவத்தைக் களைந்து கொள்ளலாம் என்று நினைத்தாள். பல தேசங்களையும இடங்களையும் கடந்து பாண்டிநாட்டை அடைந்தாள். கொற்கையின் அருகில் ஓர் ஆயர்பாடியில் கர்ப்பம் முற்றிய அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். தாய்க்கு இயல்பாகப் பிள்ளைகள் மீதுள்ள பாசம் சிறிதும் அற்ற அவள், குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுக் குமரித்துறையை நாடிச் சென்றாள்.

அக்குழந்தை பசிமிகுதியினால் அழுதபோது அத்தோட்டத்தில் புல்மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசு, தானாகவே வந்து அக்குழந்தைக்குப் பால் ஊட்டியது. இவ்வாறே ஏழு நாட்கள் சென்றன.

அப்போது வயனங்கோடு என்னும் ஊரிலிருந்து பூதி என்ற பிராமணன் ஒருவன் தன் மனைவியோடு அவ்வழியாக வந்துகொண்டிருந்தான். அவனுக்குப் பிள்ளையில்லை. குழந்தையை அச்சோலையில் கண்ட அவன், இந்த அழகிய குழந்தை “பசுவின் மகனல்ல, என் மகனே” என்று சொல்லி அக மகிழ்ந்து, கடவுளே தனக்கு அந்தக் குழந்தையை அளித்ததாக நினைத்து, அதை வீட்டுக்குக் கொண்டுசென்றான். பசு வளர்த்ததால் பசுவின் மகன் என்று பொருள்பட ஆ-புத்திரன் என்று அவனுக்குப் பெயரிட்டு வளர்த்தான். இங்ஙனம் ஐந்தாண்டுகள் சென்றன.

மகனுக்கு உபநயனம் செய்யும் முன்னரே, அவனுக்குக் கலைகளையும் நாடகங்களையும் காவியங்களையும் கற்றுத்தந்தான் அப்பார்ப்பனன். ஆபுத்திரன் அவற்றை நன்கு கற்றதோடு மிக நல்ல பண்புடையவனாகவும் வளர்ந்துவந்தான். அச்சமயத்தில் அந்த ஊரிலிருந்த ஒரு பிராமணன் தனது யாகத்தில் பலியிடுவதற்காக ஒரு பசுவைக் கொண்டுவந்து தன் வீட்டில் கட்டி வைத்திருந்தான். அப்பசுவோ கதறியவாறு இருந்தது. இதைப் பார்த்த ஆபுத்திரன், அந்தப் பசுவை மீட்க வேண்டும் என்று நினைத்தான். தங்களை அந்தணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களுக்கு ‘அம்-தண்மை’, குளிர்ந்த கருணையோ அன்போ சற்றும் இல்லையே என்று வருந்தினான். இரவில் அதைக் கட்டவிழ்த்து, எங்கேனும் அதைக் கொண்டு விடும் நோக்கத்தில், கையில் பிடித்துக்கொண்டு, பருக்கைக் கற்கள் நிரம்பிய ஒரு காட்டு வழியில் ஊருக்கு வெளியில் சிறிது தொலைவு சென்றவாறு நடந்துகொண்டிருந்தான்.

யாகப் பசுவைக் காணாத பிராமணர்கள் துணுக்குற்று, நாலாபுறத்திலும் தேடலானார்கள். பிறகு அந்தப் பையனைப் பசுவோடு கையும் களவுமாகப் பிடித்தார்கள். “புலையனே! இந்தப் பசுவை எதற்காகக் களவாடிக் கொண்டு வந்தாய்?” என்று பலவாறு இழித்துப்பேசி, அவனைக் கோல்களால் அடிக்கலானார்கள். அதைக் கண்ட பசு, ஆபுத்திரனை அடித்து வருத்திய யாக உபாத்தியாயனைத் தன் கொம்புகளால் குத்தி, குடலைச் சரித்துவிட்டு, காட்டுக்குள் ஓடிப்போய்விட்டது.

இதைப்பார்த்த பிற பிராமணர்கள் அவனை மேலும் அடிக்கலானார்கள். “அடிக்காதீர்கள், நான் சொல்லும் செய்திகளைக் கேளுங்கள்” என்று கூறி, வேத உபநிஷதங்களில் இருந்தே பசுவைக் கொல்லல் ஆகாது என்பதற்கான காரணங்களை எடுத்துக்காட்டி, கடைசியாக, “பசுக்களைக் கொன்று ஆயிரம் வேள்விகள் செய்து அடையும் பயனைக் கொல்லாமை ஆகிய அறத்தைக் கடைப்பிடித்தால் அடையலாமே, இப்படிச் செய்தால் உங்களுக்கு அந்தணர் என்ற பெயரும் ஏற்கும்” என்றான்.

ஆனால்  பிராமணர்கள், அவன் சொன்ன விஷயங்களைச் சற்றும் மனத்தில் ஏற்றுக்கொள்ளாமல், “நீ வேதங்களைக் கற்றிருந்தும் வேத யாகங்களை நிந்தனை செய்யும் பேதையாக இருக்கிறாய். உன்னைப் பசுமகன் என்று சொல்வதற்குப் பொருத்தமாக நடந்துகொண்டாய்” என்று அவனை இழித்துக் கூறினார்கள்.

அதற்கு ஆபுத்திரன், “பசுவின் மகன் அசல முனிவன், மானின் மகன் சிருங்கி முனிவன், நரியின் மகன் கேசகம்பள முனிவன் இவர்களையெல்லாம் நீங்கள் உங்கள் குலத்து முன்னோர்கள், முனிசிரேஷ்டர்கள் என்று சிறப்பித்துக் கூறவில்லையா? பசுவின் வயிற்றில் பிறந்தால் என்ன இழிவு? கள்ளியின் வயிற்றிலும் அகில் பிறக்கும் என்ற மூதுரையை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டான். அச்சமயத்தில் அங்குள்ள பிராமணர்களில் ஒருவன், “எனக்கு இவன் வரலாறு தெரியும், நான் குமரி நீராட முன்னொருநாள் சென்றிருந்தபோது, அங்கிருந்த சாலி என்னும் பார்ப்பனியைப் பார்த்தேன். அவள் தன் குழந்தையைக் கைவிட்டுவந்த கதையைக் கூறினாள். அவள் பெற்ற மகனே இவன், சந்தேகமில்லை. சொல்லி என்ன பயன் என்று சொல்லாதிருந்தேன். கற்புத்தவறிய பெண் பெற்ற இவன், அசுத்தன். ஆகவே இவனைத் தீண்டாமல் ஒதுங்கிச் செல்லுங்கள்” என்றான்.

அதைக் கேட்ட ஆபுத்திரன், “முனிவர்களில் சிறந்தவர்களான அகத்தியரும், வசிட்டரும் தேவ கணிகை(வேசி)யான திலோத்தமையின் புத்திரர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அவ்வாறிருக்கும்போது என் தாய் சாலிமீது பழி சொல்லத் துணிந்தீர்களே” என்று சிரித்தான். ஆனால் இந்தப் பார்ப்பனர்கள் சொல் கேட்டு அவனை வளர்த்த பூதியும் அவனைக் கைவிட்டுத் துரத்திவிட்டான். தன்னை ஆதரிப்பார் ஒருவரும் இல்லாததால், பிச்சை எடுத்தேனும் இருப்போம் என்று கருதி ஆபுத்திரன் பிச்சை எடுக்க வீடுகள் தோறும் செல்ல, அவன் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர்ப் பார்ப்பனர்கள், “இவன் பசுதிருடிய கள்ளன்” என்று அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் கற்களை எடுத்துப் போட்டார்கள். அதனால் மனம் வெதும்பி, அலைந்து திரிந்து, கடைசியாக மதுரையை அடைந்தான் ஆபுத்திரன். அங்கு சிந்தாதேவி (சரஸ்வதி) கோயிலின் எதிரில் இருந்த அம்பலப் பீடிகை(பொது மன்றம்)யை அடைந்து அங்கேயே தங்கி வாழலானான். கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி, வீடுகள் தோறும் சென்று, பிச்சையெடுத்து, அங்கிருந்த குருடர்கள், முடவர்கள், அகதிகள், நோயாளிகள் எல்லோரையும் “வருக வருக” என்று அழைத்து, அவர்களுக்கு இட்டு, தானும் சிறிது உண்டு வாழ்ந்து வந்தான். இரவில் அந்தப் பிச்சைப்பாத்திரத்தையே தலையணையாக வைத்து உறங்கினான்.

இவ்வாறு சில நாட்கள் சென்றன. ஒரு நாள் இரவு. நல்ல மழை பெய்து கொண்டிருந்த நேரம். அப்போது அங்கே சிலர் வந்து, “எங்களுக்கு மிகுந்த பசியாக இருக்கிறது” என்று வருந்திப் பேசியவாறு இருந்தார்கள். ஆபுத்திரன்,  அவர்களுடைய பசியை ஆற்றும் ஆற்றல் தனக்கு இல்லையே என்று வருந்தியவாறு இருந்தான். அச்சமயத்தில் எதிரில் கோயில் கொண்டிருந்த சிந்தாதேவி, அவனுக்கு எழுந்தருளி, தன் கையிலிருந்த பாத்திரம் ஒன்றை அவனுக்குக் கொடுத்து, “வருந்தாதே! இது அட்சய (குறையாத) பாத்திரம். நாடெல்லாம் வறுமை அடைந்து வருந்தினாலும் இப்பாத்திரத்தில் உணவு என்றும் குறையாது. கொடுக்கக் கொடுக்க வளர்ந்துகொண்டே வரும்” என்று அவனிடம் கூறினாள். அவன் அவளைப் பலவாறு போற்றித் துதித்து, பணிவுடன் அந்தப் பாத்திரத்திலிருந்து பக்கத்தில் பசியால் வருந்திக் கொண்டிருந்த அவர்களுக்கு முதலில் சோறிட்டு, பிறகு அன்று முதல் ஏழைகள் பாழைகள் அனைவருக்கும் தன் பாத்திரத்திலிருந்து உணவளித்து வருவான் ஆனான். உண்பதற்காக மனிதர் பலரும் அவனை எக்காலமும் சூழ்ந்தவாறே இருக்க, பறவைகள், விலங்குகளும்கூட அவனை அன்புடன் சூழ்ந்திருந்தன.

அக்காலத்தில் பாண்டிய நாட்டில் மழையின்றிப் பன்னிரண்டாண்டுகள் பஞ்சம் ஏற்பட்டது. அப்போதும் தன்னிடமிருந்த அக்ஷய பாத்திரத்தினால் தன்னால் முடிந்த அளவுக்கு எல்லையற்ற பேருக்கு ஆபுத்திரன் உணவளித்து வந்தான். இவனுக்கு எல்லையற்ற புண்ணியம் இவ்வாறு வந்து சேரவே, அதனை இந்திரன் தனது பாண்டு(வெள்ளைக்) கம்பள நடுக்கத்தினால் அறிந்து கொண்டான். மக்களுக்கு அதிகப் புண்ணியம் சேர்ந்தால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று கருதி நயத்தாலோ பயத்தாலோ அவர்களைத் தடுப்பது இந்திரனின் வழக்கம். ஆகவே இவனுக்கு வரமளித்தேனும் (சாம பேத தான தண்டம் என்னும் நான்கில் தான உபாயம்) இவனைத் தடுக்கலாம் என்ற எண்ணத்துடன் இவன் முன் ஒரு முதியவனாக இந்திரன் தோன்றினான். “நான் இந்திரன், உன் புண்ணியத்தின் பலனை நீ அடைய வேண்டும், உனக்கு என்ன வரம்  வேண்டும், கேள்!” என்று கூறினான். அதைக் கேட்ட ஆபுத்திரன், தன் விலா எலும்பும் ஒடியும்படி நகைத்தான். “கொடுப்பவரும் கொள்பவர்களும் இல்லாததால் கொடைச் செயலினால் வரும் இன்பமும் தவமும் இல்லாத தேவர் நாட்டுத் தலைவனே! வாடிய முகத்தால் வருந்தி வந்தவர்களின் அரும்பசியைத் தீர்த்து, அவர்களுடைய இனிய முகத்தை நான் காணும்படி செய்கின்ற, ஈத்துவக்கும் இன்பம் அளிக்கின்ற, இந்த தெய்வப் பாத்திரம் ஒன்றே எனக்குப் போதுமானது. நான் அறவிலை வணிகன் அல்ல. (தர்மத்தை விற்பவன் அல்ல). வேறொன்றும் எனக்கு வேண்டாம்” என்று இந்திரனிடம் கூறினான்.

தன்னை எதிர்த்துப் பேசிய ஆபுத்திரன்மீது இந்திரன் கோபம் கொண்டான். மனிதர்கள் புண்ணியம் செய்தால் அது அதிகரித்து அதனால் தன் பதவிக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து உடனுக்குடன் அவற்றின் பலனைக் கொடுத்துவிடுவது அவன் வழக்கம். அதனால் பயந்த இந்திரன், ‘இவன் கையிலுள்ள பாத்திரமே உபயோகமற்றுப் போகும்படி செய்கிறேன்’ என்று கறுவியவாறு சென்றான். நாடு முழுவதும் வளத்தால் செழிக்குமாறு மேகங்களை ஏவி மழைபொழியச் செய்தான். அதனால் மாநிலம் முழுவதும் செழிப்பதாயிற்று. பசித்துவந்தவர்கள் தங்கிய அம்பலத்தில் இப்போது உணவு உண்ணும் ஓசை இல்லாமல் போய், தூர்த்தர்கள், வேழம்பர், பிரயாணிகள் முதலியோர் கூடி சூதாடி ஆரவாரிக்கின்ற இடமாகப் போய்விட்டது.

அதனால் ஆபுத்திரன் ஊர் ஊராகச் சென்று “உணவு வேண்டுவோர் யாரேனும் உண்டோ?” என்று கேட்டவாறே செல்லலானான். செல்வத்தினால் இறுமாப்பு உற்ற மக்கள் யாவரும், “இவன் என்ன பைத்தியமா!” என்று கேலிசெய்தனர். கடைசியாக அலைந்துதிரிந்து கொற்கைத் துறைமுகத்துக்கே வந்து சேர்ந்தான். அங்கே, மரக்கலத்திலிருந்து இறங்கி வந்த பயணிகள் சிலர், “சாவக நாட்டில் பெரும் பஞ்சம் நிலவுகிறது, மக்கள் மிக வறுமையுற்று, உயிர்கள் பசியால் வாடி வருந்துகின்றன; அங்கு நீ சென்று உதவி செய்வாயாக” என்று கூறினர். ஆபுத்திரனும் சாவகம் செல்லும் மரக்கலம் ஒன்றில் ஏறினான். அது புறப்பட்டுச் சென்றது. சில காலங்கள் சென்றதும் காற்றினால் கடல் கொந்தளிக்க, அந்த மரக்கலம் பாய் இறக்கி, மணிபல்லவம் என்னும் தீவின் அருகில் ஒரு நாள் தங்கியது.

அத்தீவின் காட்சிகளைக் கண்டுவர எண்ணி ஆபுத்திரன் கப்பலில் இருந்து இறங்கினான். அவன் திரும்பவும் ஏறிவிட்டான் என்று கருதி, கப்பல் தலைவன், இரவில் அக்கப்பலைச் செலுத்திக்கொண்டு போய்விட்டான். ‘நான் நினைத்தவாறு சாவகம் செல்ல முடியவில்லையே என்ன செய்வது’ என்று ஆபுத்திரன் வருந்தினான். ‘ஒரு தெய்வப் பாத்திரத்தைப் பெறுகின்ற அளவுக்குப் புண்ணியத்தை முற்பிறவியில் செய்த நான், மிகுதியாகத் தீவினையையும் செய்தேன் போலும். அதனால்தான் இந்தத் தீவில் தனியாகத் துன்பப்படலானேன்’ என்று நினைத்தான். ‘தனியாக இந்தத் தீவில் இருந்து பயன் என்ன’ என்று துயரம் மிகுந்த அவன், தன் கையிலிருந்த பாத்திரத்தைத் தொழுது, “வருடத்திற்கு ஒரு முறை நீ வெளிப்படுவாயாக” என்று கூறி, பக்கத்திலிருந்த கோமுகி என்னும் பொய்கையில் அதை விட்டான். அப்பாத்திரம் அமிழ்ந்து போயிற்று. அங்கேயே அவன் உண்ணாநோன்பிருந்து உயிர்விடலாம் என்று கருதி விரதம் இருக்கலானான். அச்சமயத்தில் அங்கே வந்த அறவண அடிகள் என்னும் பௌத்தத் துறவியிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டுத், தனக்குப் பாலூட்டிய பசுவை நினைத்தவாறே தனது உயிரை விட்டான்.

இதற்கிடையில், முன்னர் குழந்தை ஆபுத்திரனுக்கு ஏழு நாட்கள் வரை பால் ஊட்டிய பசு, அந்தப் புண்ணியத்தால் பொன்மயமான கொம்புகளையும் குளம்புகளையும் பெற்று மறுபிறவி எடுத்தது. சாவக நாட்டில் தவள மலையில் தவம் செய்துகொண்டிருந்த மண்முக முனிவனிடம் சென்று, கன்று போடும் முன்பே பால் சுரந்து எல்லா உயிர்களுக்கும் ஊட்டியவாறு இருந்தது. அதைப் பார்த்த முக்காலமும் உணர்ந்த அம்முனிவன், இப்பசுவின் வயிற்றில், ஒரு விசேஷ புருஷன் தோன்றுவான். ஆண்பெண் சம்பந்தமின்றி, ஒரு பொன்முட்டை வாயிலாக அவன் பிறப்பான் என்று யோசித்தான்.

அவன் நினைத்ததற்குத் தக்கவாறு ஆபுத்திரன் மறுபிறவி எடுத்து சாவக நாட்டில் இந்தப் பசுவின் வயிற்றில் ஒரு பொன் முட்டையில் வந்து தோன்றினான். அவன் உதித்த காலம், புத்தர் அவதரித்த வைகாசி மாதத்து புத்தபூர்ணிமையாகும். இவன் உதித்த காலத்திலும் பல நல் நிமித்தங்கள் தோன்றின. இந்நன்னிமித்தங்களைக் கண்ட முனிவர்கள் “ஓர் உத்தம புருஷன் இவ்வுலகில் அவதரித்திருக்க வேண்டுமே, அவன் யார் தெரியவில்லையே” என்று தங்களுக்குள் ஆலோசித்தவாறு இருந்தனர்.

இக்குழந்தையைப் பற்றி அந்நாட்டரசன் பூமிசந்திரன் என்பவன் கேள்விப் பட்டான். அவனுக்குக் குழந்தை இல்லை. அவன் மண்முக முனிவரைச் சந்தித்து, அவரிடம் இக்குழந்தையை வாங்கிக் கொண்டுபோய், புண்ணிய ராஜன் என்று இதற்குப் பெயரிட்டு வளர்த்தான். புண்ணிய ராஜனும் வளர்ந்து தன் வளர்ப்புத் தந்தைக்குப் பின் நாட்டை ஆளலானான்.

   (தொடரும்)