வெண்டி டோனிகரின் இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு
வெண்டி டோனிகர், சமஸ்கிருதத்திலும் இந்தியவியலிலும் தனித்தனியே டாக்டர் பட்டங்கள் பெற்றவர். இப்போது சிகாகோவில் பணியாற்றுகிறார்.
இந்துக்கள் ஒரு மாற்றுவரலாறு அவரது மிகச் சிறப்பான நூல். இந்நூல், முன்னுரையையும் இருபத்தைந்து இயல்களையும் கொண்டிருக்கிறது.
முன்னுரை, நிலவிலுள்ளது மானிடனா அல்லது முயலா என்ற கேள்வியுடன் தொடங்குகிறது. ஆசிரியர் இந்துக்கள் பற்றிக் கொண்டிருக்கும் இரட்டை தரிசனங்களுக்கு இது ஒரு உருவகம் என்கிறார். சமஸ்கிருதமும் வாய்மொழி மரபுகளும் ஒன்றுக்குள் ஒன்று முன்னும் பின்னுமாகப் பாய்ந்தன. ஆகவே கீழ்ச்சாதி மக்களுடைய சொற்களையும் சிந்தனைகளையும் தொடர்ந்து பிராமண உலகிற்குள் கொண்டுவந்தன, இதன் மறுதலையும் உண்மை.
ஆதிக்கத்தின் மொழியாகிய சமஸ்கிருதம், ஒரு சிறுபான்மையினரிடமிருந்து வந்தது. அதன் ஆதிக்கத்திற்குக் காரணம் அதன் புரியாமையும் அது கிடைக் காமையும் ஆகும். அதனால் அது ஓர் உயர்குடிச் சிறுகுழுவின் மொழி ஆகியது. சமஸ்கிருதமாக்கமும், தேசியமாக்கமும் ஒன்றையன்று பிறப்பிக்கின்றன. பிராமண அடையாளத்தை ஏற்றலின் வாயிலாக வட்டாரக் கடவுள்கள், சமஸ் கிருதப் பனுவல்களில் வரும் பெயர்களை ஏற்கின்றன. முருகன் ஸ்கந்தன் ஆகிறான் – ஒருவகை சமஸ்கிருதமாக்கல். இது வட்டார அடையாளத்தை ஏற்றலுமாகும். சமஸ்கிருதக் கடவுளர்களும் வட்டாரக் கடவுள்களின் பண்புகளை ஏற்கிறார்கள். முருகனை வழிபடுவோர்க்கு, முருகன்தான் ஸ்கந்தன் ஆகிறான், எதிர்மாறாக அல்ல. சமஸ்கிருதப் பனுவல்கள் வழக்கமாகப் பெண்களையும் வேட்டைவிலங்குகளையும் போதைக்கான முதன்மைப் பொருள் களாகக் கருதுகின்றன. போதையை ஏற்படுத்துகின்ற புலன்கள் குதிரைகளுக்கு ஒப்பிடப்படுகின்றன. பிராணிகள், வழக்கமாகப் பெண்களையும் கீழ்ச்சாதியினரையும் குறிக்கின்றன.
அஹிம்சை என்பது ஓர் அரசியல் கொள்கையோ, அல்லது ஒரு சமூகக் கோட்பாடோ அல்ல. ஓர் உயிருள்ள பிராணியைக் கொல்வதால் (அல்லது அதற்குக் காயம் செய்வதால்) ஏற்படும் வெறுப்புணர்ச்சிதான். பாலைவனத்தில் என்றும் வாழ்பவர்கள் பசுஞ்சோலைகளைக் கனவு காண்பதுபோலவே இந்துத் துறவிகள் அஹிம்சை பற்றிக் கனவுகண்டார்கள்.
இந்தியர்கள் இருவேறுபட்ட சிந்தனைகளையும் தங்கள் மூளைக்குள் வைத்திருக் கிறார்கள். இம்மாதிரி இரட்டைப் பார்வைக்கு உருவகம், நிலவில் காணப்படும் நிழல். இந்துமதத்தின் வரலாற்றை முதலில் இந்துக்கள் நோக்கிலிருந்து காணவேண்டும். பிறகு கல்விசார் நோக்கிலிருந்து. நிலவில் நீங்கள் முயலைப் பார்த்தால், மனிதனைப் பார்க்க முடியாது. ஆனால் இரண்டையும் இங்கே காண முயலவேண்டும். சான்றாக, நாம் உடன்கட்டை ஏறுவதை அல்லது சதியை ஆராயும்போது, அதன் முயலை நாம் காணவேண்டும். பிறகு மனிதனையும் காணவேண்டும். இந்துமதத்தைப் பற்றி ஆராய்வதில் ஒரு இந்துஅல்லாதவரின் நோக்கம் இரண்டையும் காண்பதாகவே இருக்கமுடியும்.
தான் ஐம்பது வருடங்களாக நேசித்து வந்திருக்கின்ற, மதித்துவருகின்ற இந்துக்களின் பன்முகத்தன்மை, பன்மைத்தன்மை ஆகியவற்றை மட்டுமல்ல, உலக விவேகத்தையும், இன்பவேட்கையையும் கூடக் கொண்டாடியவாறு செல்வதுதான் தன் உத்தேசம் என்கிறார் ஆசிரியர்.
இயல் 1 – திறவுகோலைத் தேடுதல்
(1) இந்துமதம் என்று ஒன்று உண்டா? (2) இருந்தால், அதை அப்படி வழங்குவதுதான் சரியானதா? (3) அப்படி முன்போ, இன்றோ இந்துக்கள் குறிக்கப்படவில்லை என்றாலும் நாம் வழங்கலாமா? முதலில் இந்தக் கேள்விகளை எழுப்பி விடைதேட முனைகிறார். மத அடிப்படையில் சமுதாயங்களை பிரிட்டிஷ்காரர்கள் வரையறுக்க முற்பட்டபோதுதான், இந்தியாவுக்கு வந்த அந்நியர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு கருத்தியல் பெட்டிகளில் அடைக்க முற்பட்டபோதுதான், இந்தியர்களும், தங்கள் சிந்தனைகளின் பன்முகத்தன்மையைக் கைவிட்டு, எந்தக் கருத்தியல் பெட்டிக்குள் தாங்கள் அடைபடுவது என்று சிந்திக்க லானார்கள். இந்துமதத்தை ஒற்றைத்தனமான ஒரு பொருளாகக் காண்பதற்கு ஆட்சேபணை, இந்துக்கள் யாவரும் எதை நம்புகிறார்கள் அல்லது செய்கி றார்கள் என்பதைச் சொல்ல முடியாத தன்மை. அதிகாரபூர்வ மதநூல் என ஒன்று இந்துக்களுக்கு இல்லை. அதனால் இந்துமதம் என்பது தங்கள் மதத்தை வரையறுக்க முடியாதவர்கள் அல்லது விரும்பாதவர்களின் மதம் என்றும் சொல்லப்பட்டது.
இந்துமதம், பல மையங்கள் கொண்ட மதம். பிராமணர்களுக்குரிய மையமும் இருந்தது, அதை நாம் பிராமணக் கற்பனை என்று குறிப்போம். ஆனால் வேறு மையங்களும்-மாற்றுமையங்கள் இருந்தன. வடக்கு / தெற்கு பிரிவை சமஸ்கிருதம் / தமிழ் வேறுபாடு பிரிக்கிறது. ஆனால் வடக்கிற்கு சமஸ்கிருதத்தையும், தெற்கிற்குத் தமிழையும் சமப்படுத்தவும் முடியாது. தென்னிந்தியச் சிந்தனைகள் பல-உதாரணத்திற்கு பக்தி போன்றவை – தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தின் வாயிலாக எழுதிய பிராமணர்களால் தமிழில் போலவே, சமஸ்கிருத இலக்கியத்திலும் இடம் பெற்றுவிட்டன. தென்னிந்தியச் சிந்தனைகள் வடக்கிற்குச் சென்றது மட்டுமல்ல, வடக்கின் சிந்தனைகளும் தமிழுக்கு வந்தன. சமஸ்கிருதத்தில் தமிழ் பாய்ந்தது போலவே, தமிழிலும் சமஸ்கிருதம் பாய்ந்தது. தமிழ் வடக்கிற்குச் சென்றது, சமஸ்கிருதம் தெற்கிற்கு வந்தது.
இந்நூலில் பெண்கள், கீழ்ச்சாதிகள், எப்படி உண்மையில் மக்கள் வாழ்ந்தார்கள் ஆகியவற்றை அறிவதற்குப் பனுவல்கள் வளமான மூலங்களாக எவ்விதம் உதவக்கூடும் என்பதைக் காட்டியிருக்கிறேன்.
சமஸ்கிருதப்பனுவல்களில் வாய்மொழி, நாட்டார் மரபுகள் இருப்பதும், பௌத்தர், ஜைனர் போன்ற இந்துமதத்திற்குப் புறமான மரபுகள் இருப்பதும் உண்மை. மூன்று விலங்குகள் – குதிரை, நாய், பசு – இவை இந்துமத நாடகத்தின் கவர்ச்சிகரமான நடிகர்கள். புராணப் பனுவல்கள் அவற்றை அதிகாரம், அசுத்தம், தூய்மை ஆகியவற்றின் குறியீடுகளாகக் குறிக்கின்றன. அவற்றை இந்துமதத்தின் மூன்று வர்க்கங்களோடு இணைக்கின்றன. க்ஷத்திரியர்கள் (ஆட்சியாளர்கள்), குறிப்பாக அயல்நாட்டு ஆட்சியாளர்கள் – குதிரை, கீழ்ச்சாதிகள் – நாய், பிராமணர்கள் – பசு. குதிரை இந்தியாவில் என்றும் படையெடுத்துவரும், ஆக்கிரமிக்கும் அயல்நாட்டினரைக் குறிக்கிறது.
இதற்குப் பிறகு வரும் இயல்கள் கால வரிசைப்படி இந்து வரலாற்றை நோக்குகின்றன.
இயல் 2 – கி.மு. 5 கோடி ஆண்டுகள் முதல் கி.பி. 50000 வரை: இந்தியாவில் காலமும் வெளியும்
ஆப்பிரிக்காவிலிருந்து உலகம் பிரிந்தது எனத் தொடங்குகிறார். கோண்ட்வனலாந்தும் லெமூரியாவும் இருந்தன. அதற்குப் பிறகு ஊழிவெள்ளம் என்னும் கருத்து தோன்றியது. நான்கு யுகங்கள் பற்றிய கருத்து உருவாயிற்று. பிராமணன் தலையும் பறையன் உடலும் சேர்ந்த கற்பனை மூலம் இந்துமதம் மீண்டும் மீண்டும் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்து மதத்தை முற்றிலும் ஒரு குழப்பம் என்றோ, கலாச்சார ரீதியாக முற்றிலும் ஒரே தன்மையுடையது, ஒற்றையருமை கொண்டது என்றோ அரசியல்குறிப்புடன் காண்பது திரித்துக்காண்பதாகும்.
இயல் 3 – கி.மு. 50000-கி.மு. 1500: சிந்துவெளியில் நாகரிகம்
சிந்து சமவெளியின் பொருளியல் கலாச்சாரம் பற்றிப் பேசுகிறது இந்த இயல். சிந்துசமவெளி நாகரிகம், ஏறத்தாழ 7,50,000 சதுரமைல் பரப்பில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தலங்களை உடையது. ஒரு தலத்தில் அங்கு நாற்பதாயிரம் பேருக்குமேல் வாழ்ந்திருக்கலாம். சி.ச.நா.வின் சில கூறுகளுக்கும் பிற்கால இந்துமதத்திற்கும் உள்ள ஒப்புமைகள் திகைப்பூட்டுமளவிற்கு ஒரேமாதிரி இருப்பதால் புறக்கணிக்கமுடியாது. பிற்கால ஹரப்பாக் கலாச்சாரம் வீழ்ச்சி அடைந்தபோது, அதில் எஞ்சியிருந்தவர்கள் அதன் கூறுகளை கங்கை-யமுனை ஆற்றுச்சமவெளிக்குக் கொண்டுசென்றிருக்க வேண்டும். இந்தப் பாணிகளும், நாம் பார்த்த பிற படிமங்களின் ஒழுங்கற்ற வரைவுகளும் ஒருவேளை கல் லிங்கங்களும் கவர்ச்சியான பெண்களும்கூட, வேதகால மக்களின் கலாச்சாரத்தில் மெதுவாகக் கரைந்துவிட்டன.
இயல் 4 – கி.மு. 2000-கி.மு. 1500: அழிவுகளுக்கும் பனுவலுக்கும் இடையில்
விஷ்ணுவும் பிரம்மாவும் ஒருவரை ஒருவர் உண்டாக்குவதாக வேதப்பாடல் கள் சொல்கின்றன. சமஸ்கிருதம் ஒரு இந்தோ ஐரோப்பிய மொழி. ஆரியர் களின் மூலம் எது என்பதற்கான யூகங்கள் நான்கு.
1. இந்தோஐரோப்பாவிலிருந்து இந்தியாமீது படையெடுத்தார்கள்
2. காக்கேசியர்கள், காக்கஸிலிருந்து நடந்துவந்தார்கள்
3. வேதமக்கள் இந்தியாவிலேயே தோன்றியவர்கள்
4. வேதமக்கள் சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள்
சிந்துவெளி நாகரிகத்தையும் வேதநாகரிகத்தையும் வேறுபடுத்துவன குதிரை, தேர். சிந்துவெளியில் குதிரை காணப்படவில்லை. அதேபோலச் செங்கற்கள். வேதநாகரிகம் குதிரை நாகரிகம். செங்கற்கள் அவர்கள் அறியாதவை. வேதங்களுக்கு முந்தியிருந்த அடித்தளத்தில் சிந்துசமவெளியும், வேறு பலவும், குறிப்பாக முன்னிருந்த வேதமற்ற கலாச்சாரங்களும் இருந்திருக்கவேண்டும். வேதமற்றவைதான் இந்துமதத்தின் ஆதியும் மூலமும் ஆகும்.
இந்தியாவின் பலவித கலாச்சாரங்கள்
1. இந்தியாவின் கற்காலக் கலாச்சாரங்கள் – சிந்துவெளிக்கும் முந்தியவை, பிறகு வந்த எல்லாக் கலாச்சாரங்களுக்கும் அடித்தளமாக அமைபவை. 2. ஆதிவாசிகள் 3. சிந்துசமவெளி நாகரிகம் 4. நாட்டுப்புற மரபுகள் 5. வேதமக்களின் கலாச்சாரம் 6. தமிழும் பிற திராவிட மொழிகளும் பேசியவர்களின் கலாச்சாரம்-இவை யாவற்றின் பரஸ்பரப் படைப்புதான் இந்து மதம்.
இயல் 5 – கி.மு. 1500-கி.மு. 1000: ரிக் வேதத்தில் மனிதர்கள், விலங்குகள், கடவுளர்கள்
ரிக்வேதத்தில் 10 மண்டலங்கள்-1028 பனுவல்கள் உள்ளன. நம்பாதவர்களும் நாத்திகர்களும், பறையர்களும் பெண்களும் வேதங்களைக் கற்கலாகாது. இரகசியப் புலனாய்வுச் சங்கேதம் ஒன்று மனப்பாடம் செய்துகொள்ளப்பட்டு, எதிரிகளின் கையில் விழுமுன்பு அழித்துவிடப்படுவதைப் போல ரிக் வேதம் வாய்மொழியாக அதன் பௌதிகஎச்சங்கள் எதுவும் புலப்படாவண்ணம் மனனம் செய்யப்பட்டது.
யாகம் என்பதே ஒரு வன்முறைச் செயல். மூன்று தொடர்புறவுகள் – 1. வேதத் தொடர்புறவு. தேவர்கள் + மனிதர்கள் x அசுரர்கள். யாக நிலை. வரலாறு முழுவ தும் அசுரர்களும் அரக்கர்களும் விளிம்புநிலை மக்களுக்கு உருவகமாகவே உள்ளனர். 2. மகாபாரதத் தொடர்புறவு. தேவர்கள் x மனிதர்கள், அரக்கர்கள். (நல்லவர்கள்) தனிப்பட்ட தவவலிமையால் ஆற்றலைப் பெறுதல் இக்காலத் தில் நிகழ்கிறது. 3. பக்தித் தொடர்புறவு.
பெரும்பாலான இந்தோ-ஐரோப்பியர்களைப் போல, வேதமக்களும் மேய்ச்சல் காரர் களாகவும் பசுக்களைத்திருடுபவர்களாகவும் இருந்தனர். பிறருடைய பசுக்களைத் திருடித் தங்கள் சொந்தப் பொருளைத் திரும்பக் கொண்டு வருவதுபோல பாவனைசெய்தனர். இந்தப் பழைய வேத மக்கள், தஸ்யூக்கள் அல்லது தாசர்கள் என்றழைத்த அந்நியர்களிடம் (அவர்களுடைய கால்நடை களையே திருடி, ஆனால் அவர்களைத் திருடர்கள் என்று அழைத்துப் புண்படுத்தி) காட்டிய அடாவடித்தனம், நாலாயிரம் ஆண்டுகள் கழித்து அமெரிக்க மேற்கில் அங்கிருக்கும் கௌபாய்கள் நடந்து கொண்ட அதே முறையிலேயே அமைந்திருந்தது.
வேதமக்கள் கால்நடைகளை யாகத்தில் பலியிட்டு அவற்றை உண்டனர். எருதுகளின், பசுக்களின் மாமிசத்தை உண்டனர். மனு ஒருவனைத் தக்க நேரத்தில் மாமிசம் உண்ணா மைக்காக தண்டிப்பதாகவே தோன்றுகிறது. “ஒருவன் ஒரு யாகத்தில் ஈடுபட்டிருக் கும்போது மாமிசத்தை உண்ணா விட்டால், தன் இறப்புக்குப்பிறகு அவன் இருபத்தொரு பிறவிகளில் யாகவிலங்காகப் பிறப்பான்” (5.35).குதிரைகளை உண்பதில்லை, மேய்ச்சல் நிலத்திற் காக நிலத்தை ஆக்கிரமித்தல் உருவாயிற்று. முதலில் இரு வர்ணப்பாகுபாடு (ஆர்ய ஜ் தாச). பிறகு நால்வருணம் தோன்றியது. ஆதி மனிதனின் பாடல், அவனிடமிருந்து நால்வருணம் தோன்றியதைச் சித்திரிக்கிறது. தவளைகள் பற்றிய அங்கதப் பாடல் ஒன்றும் வேதத்தில் உள்ளது. ரிக் வேதம், ஆண்களே ஆக்கிரமித்திருக்கும் பனுவல், ஆண்கள் உலகிற்கான பனுவல். அதில் பெண்கள் போகப் பொருள்களாகவே நடத்தப்படுகின்றனர். ஆண்களுக்குக் கால்நடைகளும் பெண்களும் உடைமைகள். அதிதி என்ற ஒரேஒரு பெண் மட்டும் விதிவிலக்காக தெய்வம். அதிதி தட்சனைப் பிரசவிப்பவள். பிறகு அவள் தட்சனிடமிருந்து உருவாகிறாள்.
வேதமக்கள் அந்தந்தச் சமயத்துக்கு ஒரு கடவுளை வழிபட்டனர். அக்னி, இந்திரன், வருணன். (வேதகாலத்தில் விஷ்ணுவும் சிவனும் இல்லை). இந்திரன் விருத்திரனைக் கொல்லுதல் பற்றிய வருணனை வருகிறது. வருணனின் கோபமும் கருணையும். மரணம் பற்றிய பாடல்கள். மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை. இவையெல்லாம் வேதப் பாடல்களில் சில.
இயல் 6 – கி.மு. 800-கி.பி. 500: பிராமணங்களில் பலியிடுதல்
இந்துத்துவத்தின் வரலாற்றில் மிக முக்கியமான புவியியல், சமூகஇடப்பெயர்ச்சி ஏற்பட்ட காலத்தில் பிராமணங்கள் இயற்றப்பட்டன. வாழ்க்கை மாற்றம். பஞ்சாபிலிருந்து கங்கைக்கு இடம்பெயர்ந்தனர். கங்கைச் சமவெளியில் செல்வம் பெருகியபோது, சொத்துரிமையும், அதனால் பெண்கள் கற்பும் பிரச்சினை ஆயின. முதன்முதலில் சாவு, மறுபிறவி பற்றிய சிந்தனைகள் எழுகின்றன. மறுபிறவி மரணத்திற்குத் தீர்வல்ல. முதுமையடைந்து சாவதை ஒருமுறை செய்வதே பயங்கரமானது, அதை மீண்டும் மீண்டும் செய்வது எவ்வளவு கடினம்? அரசுகளுக்கிடையில் எல்லைகள் இறுகின. செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் போட்டி, வளமான கங்கைச் சமவெளியின் ஆதிக்கத்தில் போட்டி ஆகியவை தீமையை எதிர்கொள்வதில் மேலும் குற்றம் காணும் போக்கைத் தொன்மங்களுக்குள் புகுத்தியிருக்கலாம். மேலிரண்டு வகுப்புகளிலும், அதிகாரமும், அதிகார துஷ்பிரயோகமும் பெருகியதும் தீ, சோமன், மழை, ஆறுகள் என்ற இயற்கைச் சக்திகளான தேவர்களை ஒழுக்கத்தில் நடுநிலையான போக்குள்ளவர்கள் என்று நோக்கும் தன்மை மாறி ஏறுமாறான நடத்தையும், அவ்வப்போது அழிவுண்டாக்கும் தன்மையும் கொண்டவர்கள், அல்லது கொடுமையும் புலனின்ப ஆசையின் போதையும் கொண்டவர்கள் என்று நோக்கினர். நன்மனமுள்ள மனிதத் தலைவர்கள் போன்றவர்கள் என்றோ, செல்வமும் அதிகாரமும் உள்ள ஆற்றல்மிக்க அரசர்கள், சுயநலம், பொறாமை, கெடுநோக் குக் கொண்ட பிராமணர்கள் போன்றவர்கள் என்றோ நோக்கும் நிலை ஏற்பட்டது.
இயல் 7 – கி.மு. 600-கி.மு. 200: உபநிடதங்களில் துறவு
சத்யகாம ஜாபாலா கதை. பிராமணர்களின் மேன்மைக்கென ஏற்பட்டது. உபநிடதங்கள் தங்களுக்கு முன்னிருந்த மதத்தை இடப்பெயர்ச்சி செய்ய வில்லை, அவற்றிற்கு இணைப்புகளாகவே இருந்தன. வேத இந்துமதமும் (யாகம் செய்வது, உலகியல் சார்ந்தது), வேதாந்த இந்து மதத்துடன் (தத்துவ நோக்கு, துறவு சார்ந்தது) ஒருங்கே இருந்துவந்தது. முந்திய பிறவியின் நடத்தையிலிருந்து உயிர்கள் மறுபிறவி எடுக்கின்றன என்ற கருத்து ஆழமாகியது. வேதங்களின் சொர்க்கம் – நரகம், பரிசு – தண்டனை ஆகிய கருத்துகளிலிருந்து பிறந்தது.
ரைக்வன் கதை எப்படி உபநிடதங்களில் நுழைந்தது என்று தெரியவில்லை. இவன் வண்டியின் அடியில் வாழ்ந்த ஓர் ஏழை. பெண்கள்-மைத்ரேயி, காத்யாயினி, கார்கி கதைகள். யாக்ஞவல்கியரின் மனைவிகள். மூன்று விதப் பெண்களைக் காட்டுகின்றன. சாண்டோக்கிய உபநிடதத்தில் நாய்களின் பாடல் ஓர் அங்கதமாக பிராமணர்களைப் பற்றி அமைகிறது.
இயல் 8 – இந்துக்கற்பனையில் வாழ்க்கையின் இலட்சியங்கள்
தர்ம அர்த்த காம என்ற மூன்று நோக்கங்களுக்கு மூன்று நு£ல்கள் சமஸ்கிரு தத்தில் மனுநூல், அர்த்த சாத்திரம், காமசூத்திரம் என்பவை உள்ளன. சத்வ ராஜச தாமச என்ற முக்குணங்களை இவற்றுடன் இணைக்கப் பார்த்தாலும், இணையவில்லை. “அகிம்சை, உண்மை, திருடாமை, தூய்மை, புலன்களை அடக்குதல் ஆகியவை நான்கு வர்ணங்களுக்குமான தர்மம்” என்று மனுநூல் கூறுகிறது. இது சாதாரண தர்மம் அல்லது சநாதன தர்மம் எனப்படுகிறது. பெண்களின் ஒரே தர்மம் கணவனுக்குக் கீழ்ப் படிந்து நடத்தல். கர்மவினை என்பதன் தோற்றமும் இக்காலப்பகுதியில் நிகழ்ந்தது.
இயல் 9 – கி.மு. 400-கி.பி. 200: இராமாயணத்தில் பெண்களும் அரக்கி களும்
மாறிவந்த அரசியல், மத, பொருளாதார நிலைகளில், பிராமணர்கள் மட்டுமே முறையான ஒருசீரான குழுவாக இருந்தனர். இதற்குக் காரணம், கல்வியில் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கும், பாரம்பரிய நிலவுடைமையாளர்களாக அவர்கள் இருந்த தும்தான். இராமாயண, மகாபாரதங்கள் முதன்முதலில் சமஸ்கிருதத்திற்கு பிராமணர் அல்லாதோர் அளித்த கொடை. இவற்றின் வாய்மொழிப் பண்பும் இதற்கு இடமளித்தது. ராமராஜ்யம் என்பது ஒரு முன் மாதிரி அரசு என்று போற்றப்பட்டாலும் உண்மையில் ராமராஜ்யத்துக்கு அடியில், தந்தைக்கொலைகளும் ஆட்சியைக் கவர்தல்களுமான காட்சிகள் அடங்கிய அரச பயங்கரத்தைக் கொண்ட மெய்யான வரலாறு உள்ளடங்கி யிருந்தது. இந்த இயலில் மிகவிரிவாக எல்லாக் கதாபாத்திரங்களும் உளப் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
இராமன் சிராத்தம் செய்ய நினைக்கும்போது ஜாபாலி என்ற பிராமணன் எள்ளி நகையாடுகிறான். “எவ்வளவு உணவு வீண்! எப்போதாவது செத்தவன் சாப்பிட் டிருக்கிறானா? ஒருவன் சாப்பிடும் உணவு மற்றவனுக்கு ஊட்டமளிக்கும் என்றால், பிரயாணம் செய்பவர்கள் உணவைக் கொண்டுசெல்லத் தேவை யில்லை. அவர்களுக் காக அவர்களுடைய உறவினர்கள் வீட்டில் சாப்பிட்டு விடலாம்” என்கிறான். மேலும் “வேதநூல்கள், அவற்றின் விதிகள் யாவும் புத்திக்கூர்மையுள்ள கற்றறிந்த மனிதர் களால் எளியமக்களை ஏமாற்றித் தங்களுக்குப் பணத்தைச் சேர்த்துக் கொள்வதற் கெனப்படைக்கப்பட்டவை. இந்த உலகத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்கிறான். இப்படி எதிர்க் கருத்துகளையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர், கடைசியாக, “விசுவாமித்திரன் உருவாக்கும் மாற்று சொர்க்கம், திரிசங்குவிற்கு மெய்யாக இருப்பது போல, வால்மீகி உருவாக்கிய இராமாயண உலகம், அதைக் கேட்காத, படிக்காத பலப்பல இந்துக்களுக்கும் நிஜமாகவே இருக்கிறது. இன்றுவரை சீதையும் இராமனும் பெண்கள் பற்றிய மனப்பாங்கையும், இந்திய அரசியல் மோதல் களுக்கான மனப்பாங் கையும் உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று முடிக்கிறார்.
இயல் 10 – கி.மு. 300-கி.பி. 300: மகாபாரதத்தில் வன்முறை
ஒரேஒரு மகாபாரதம் என்பது இல்லை. நூற்றுக்கணக்கான மகாபாரதங்கள் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான வெவ்வேறான கையெழுத்துப்படிகள் இருக்கின்றன. எண்ணற்ற வாய்மொழி வடிவங்கள் இருக்கின்றன. மகா பாரதமே தன்னை (1.1.23) காலத்திலும் இடத்திலும் கட்டுப்படுத்தமுடியாத, நிரந்தரமான எல்லையற்றநூல் என்று வருணித்துக் கொள்கிறது. “கவிஞர்கள் இதை முன்னமே சொல்லியிருக்கிறார்கள், இப்போதும் சொல்கிறார்கள், மறுபடியும் சொல்வார்கள். இங்கிருப்பது வேறிடங் களிலும் உள்ளது, ஆனால் இங்கில்லாதது வேறெங்கும் காணப்பட முடியாது”. மகாபாரதம் ஒரு நாயின் கதையில் தொடங்கி ஒரு நாயின் கதையில் முடிகிறது என்பது வியப்பானது.
இயல் 11 – கிமு. 300-கி.பி. 300: மகாபாரதத்தில் தருமநெறி
கீதை சொல்லும் சுயதர்மத்தைக் கடைப்பிடித்தல் என்பது, அந்தச் சமயத்தில் உருவாகிக் கொண்டிருந்த ஒரு புதிய சமூக அமைவின் ஒரு பகுதியாகும். அது சாதி ஒழுங்கமைவு என்பதைத் தெளிவாகவும் தானாகவும் அப்போது வர்ணங் களின் உபவகைகளாக ஒழுங்கமைப்பதுதான். நால்வர்ணங்களின் நிற அடிப் படை. தர்மத் தைப் பற்றிய ஒரு நீண்ட விவாதத்தில் ஒரு முனிவன் மற்றொரு முனிவனுக்குச் சொல்கிறான், “பிராமணர்கள் வெள்ளை நிறமாக உள்ளனர், க்ஷத்திரியர்கள் சிவப்பு, வைசியர்கள் மஞ்சள் நிறமாகவும் சூத்திரர்கள் கருப்பாகவும் உள்ளனர்.” வேதத்தின் ஆதிமனிதனின் பாடல் சொல்வதுபோல வர்ணாசிரம முறை தேவர்களால் உருவாக் கப் படவில்லை. மகாபாரதத்தில் அது தீயகர்மங்களை (செயல்களை) அந்தந்த வகுப்புகளே தேர்ந்தெடுத்ததால் உருவாக்கப்படுகின்றன. இது அந்தச் சாதிகளுடைய முட்டாள்தனமான தவறுதான். ஒருவகையில் இது ஆதிக்க விதிப்பிலிருந்து தற்காப்புப் பேச்சுக்கு பிராமணர் மாறியதைக்காட்டுகிறது என்கிறார் ஆசிரியர். பின்னர் அரக்கு மாளிகையில் பாண்டவர்களுக்காக நிஷாதர்கள் கொல்லப்பட்ட கதை, ஏகலைவன் கதை ஆகியவற்றை விவாதிக்கிறார். ஜைனர்களின் மாற்றுக்கதை ஒன்றை ஆசிரியர் இங்குக் கூறுகிறார்.
மகாபாரதத்தின் பெண்கள் அசாதாரண அளவுக்கு முதன்மை கொண்டவர்கள். சண்டையிடுபவர்கள், தனித்தன்மை பெற்றவர்கள். வியாசனே இந்தக் கதை யை உருவாக்கியவன், அவனே கதையின் நாயகர்களையும் உருவாக்குகிறான். (அம்பாலிகை, அம்பிகை போன்றவர்களுடன் சேர்ந்து). பலபுருஷ மணம் மகா பாரதத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது. தொடர்ச்சியான நான்கு தலைமுறை களில், பல பாலியல் துணைவர் களைக்கொண்ட (சிலசமயம் திருமணத்திற்கு முன்பும்) பெண்களின் நேர்முகப்படிமங்களைக் காட்டுகிறது. சத்யவதிக்கு இரண்டு புருஷர்கள். (ஒருவன் சட்டபூர்வமாக மணந்த சந்தனு, மற்றொருவன், வியாசருக்குப் பிறப்புக்கொடுத்த முனிவன்). அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் இரண்டு சட்டபூர்வத் துணைவர்கள் இருக்கிறார்கள் (அரசனும், சட்டம் அனு மதிக்கின்ற கணவனின் சகோதரமணத்தினால் வரும் வியாசனும்). குந்திக்கு ஒரு கணவன் (சட்டபூர்வமாக மணந்த பாண்டு, ஆனால் முதலிரவே நிகழ வில்லை அவளுக்கு; பிறகு தேவர்கள் நால்வர்). மாத்ரிக்கு மூன்று கணவர்கள் (பாண்டு, சட்டபூர்வமாக மணந்தவன், பிறகு இரண்டு அஸ்வினி தேவர்கள்). மற்றொரு மகாபாரத அரசி – மாதவி என்பவள்-தன்னை வரிசையாக நான்கு கணவர்களுக்கு விற்றுக் கொள்கிறாள். திரௌபதியோ ஐந்துபேரை மணந்தவள். மகாபாரதத்தில் தொடர்ச்சியாக அதன் நாயகிகள் பலகணவர் மணத்தில் ஈடுபடுவது, பெண்கள் சமத்துவத்தின் ஒரு நேர்முகக் கற்பனை, தந்தையாதிக் கத்திற்கு ஒரு முக்கியத் தடை என்று நினைக்கிறேன். சீதைக்கு பதிலாக திரௌபதி இந்தியப் பெண்களின் முன்மாதிரியாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! இந்துக்கள் பலரும் தங்கள் மகள்களுக்கு சீதா என்று பெயர்வைக்கிறார்கள், ஆனால் திரௌபதி என்று பெயர்வைப்பவர்கள் ஒருவருமில்லை என்கிறார் ஆசிரியர். ஆனால் மகாபாரதப் பெண்கள் யாவருமே உடன்கட்டை ஏறுகிறார்கள்.
இராமாயணம் உறுதிப்படுத்திச் செல்கிறது, மகாபாரதம் கேள்விகேட்கிறது. இராமா யணம் சொல்கிறது, “இதோ ஒரு முழுமையான மனிதன் இருக்கிறான், அவன் பெயர் இராமன்” என்று. மகாபாரதம் சொல்கிறது, “அப்படியெல்லாம் இல்லை, தர்மம் மிக நுட்பமானது, அதை யுதிஷ்டிரன்கூடப் பூர்த்திசெய்ய முடியவில்லை.”
இயல் 12 – கி.மு. 100-கி.பி. 400: சாத்திரங்களில் தப்பிப்புவிதிகள்
வர்ணங்களிலிருந்து சாதிகள் உருவாயின என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது. சாதிகள் எவ்விதம் தோன்றின என்பதற்குத் தொழில்களிலிருந்து, வணிகக் குழுக்களிலிருந்து, குடும்பங்களிலிருந்து, வேதஉலகிற்கு வெளியிலிருந்த பழங்குடிகளி லிருந்து என நியாயமான பல விளக்கங்கள் இருக்கின்றன.
பறையர்கள் மூன்று காரணிகளால் வரையறுக்கப்பட்டனர். பொருளாதாரச் சுரண்ட லுக்கு ஆளானவர்கள்; சமூக வேறுபடுத்தலுக்கு பலியானவர்கள்; சடங்குகளுக்கு நிரந்தரமாக அசுத்தமானவர்கள். அகிம்சை பற்றிய கருத்து ஈரடியானது. “வன்முறை எங்கும் இருக்கிறது. வன்முறையின்றி உணவு ஏது? உலகத்தில் வன்முறைக்கான மனப்போக்கு இல்லாதவன் ஒருவனும் உண்டா? மக்கள் வன்முறையினால்தான் வாழ்கிறார்கள். ஒருவன் தான்தான் நற்குணம் நிறைந்தவன் என்றும் பிறர் கெட்டவர்கள் என்றும் நினைப்பதே வன்முறை தான்.” என்று ஒரு பிற்காலப் பாடல் வருகிறது. மனு மாமிசம் உண்பதையும் ஆதரிக்கிறார், உண்ணாமையையும் ஆதரிக்கிறார். யாகங்களில் விலங்கு களைக் கொல்வதும், உணவுக்காக அவற்றைக் கொல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்.
மனு, கௌடில்யம், காமசூத்திரம் எல்லா நூல்களுமே போதையைக் கட்டுப் படுத்த வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் காரணங்கள் வேறுவேறு. சூதாடுவதில் எல்லாருமே ஆர்வம் காட்டினார்கள். முடிசூட்டலுக்காக நடத் தப்படும் வேதயாகம், ஒரு பகடை ஆட்டத்தையும் தன்னுள் அடக்கியுள்ளது. யுதிஷ்டிரன் மிகப் பெரிய சூதாடி.
மனுவின் கருத்துப்படி வேட்டை, சூது, பகல்தூக்கம், வஞ்சகமான வம்பளப்பு, பெண்கள், குடி, இசை, பாடல், நடனம், இலக்கின்றித் திரிதல் ஆகியவை ஆசை யிலிருந்து பிறக்கும் குற்றங்கள். அவற்றின் தீமைதரும் வரிசைப்படி நோக்கி னால், குடி, சூது, பெண், வேட்டை இவை மிகத்தீயவை. மனு, எப்போதும் ஒரு பாலியல் குற்றமாகவே பெண்ணை நோக்குகிறார். மது அருந்துதல், தீயவரோடு சேர்தல், தங்கள் கணவரிடமிருந்து நீங்குதல், சுற்றித்திரிதல், தூங்குதல், பிறர் வீட்டில் இருத்தல் ஆகிய ஆறும் பெண்களைக் கெடுப்பவை. ஒரு பெண் திரு மணமாகி இருந்தால், அவள் தன் கணவனைவிட்டுப் பிரியலாம் என்று மிகச் சாதாரணமாக வாத்ஸ்யாயனர் சொல்வது மனுவின் நிலைப்பாட்டுக்குக் கூர்மையான முரண்பாடாக உள்ளது.
மனு எட்டுவகை திருமணங்களைப் பற்றிச் சொல்கிறார். ஆபத்-தர்மம் என்ற சொல் ஓர் அவசரநிலையில் கடைப்பிடிக்கவேண்டிய சரியான வழி. இது சாதாரண, சுய தர்மங்களுக்கு மாறுபட்டது. எதைப்பற்றியும் யாரும் மெய்யாக என்ன செய்தார்கள் என்பதைப் பற்றிச் சாத்திரங்கள் சொல்லவில்லை. ஆனால் கோட்பாட்டுச் சிந்தனைகள் என்ற விதத்தில் அவற்றின் முக்கியத்துவம் உள்ளது.
இயல் 13 – கி.பி. 100-கி.பி. 900: தென்னிந்தியாவில் பக்தி
தமிழ் கற்றறிந்த மக்களிடையே தொடங்கிய பக்தி இயக்கம் பிறகு பிற திராவிட மொழிகளின் இலக்கியங்களிலும் பரவி, படிக்காத மக்களையும் சென்றடைந் தது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் அதன் அலை வீசியது. தீர்த்த யாத்திரை மரபையும், கோயில் திருவிழாக்களையும் உருவாக்கியது. எப்போ தும் அது தன் தமிழ்ப்பண்பைத் தக்கவைத்திருந்தது. அதனால் வடக்கிலும் தமிழ்ப்பண்புகளைக் குடியேற்றியது. இந்த இயலில் டோனிகரின் தவறான கருத்து ஒன்று இடம்பெறுகிறது. வடமொழிக் கருத்துகளும் சொற்களும் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றிருப்பதால் அவற்றின் காலத்தை கி.பி. ஆறாம் நு£ற்றாண்டுக்குப் பின்னர் கொண்டுவந்து விடுகிறார்.
தமிழகத்தின் பக்தி இயக்கத்தையும் கோயில்களையும் பற்றிய இயல் இது. முதல்முதலாகப் பெண் பக்தியாளர்களாக மங்கையர்க்கரசி, சுந்தரரின் தாய், காரைக் காலம்மையார் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். பின்னர் ஆழ்வார்கள், நாயன்மார்கள். தாயுமானவரின் கதையை விதந்து சொல்கிறார். கண்ணப்பரைப் போற்றுகிறார்.
பக்திக் குழுக்கள் அரசியல், சாதி, பால், தொழில் பாகுபாடுகளை ஊடுருவிச் சென்றன. சிலர் பறையர்கள்; பலபேர் பிராமணரல்லாதோர். எனினும் பிராமண ஆதிக்கம் வேரூன்றியே இருந்தது. திருநாளைப் போவார் கதையை இங்கு எடுத்துக் காட்டுகிறார். தமிழக பக்திஞானிகளிடம் காணப்பட்ட பிராமண ரல்லாத கூறுகள் ஒருபுறமிருப்பினும், அந்த இயக்கம் கடைசியில் பிராமண நோக்கங்களுக்குப் பெருமளவு உதவுவதாகவே முடிந்தது.
பக்தி வன்முறை சார்ந்ததாகவும் இருந்தது. உதாரணமாக சிறுத்தொண்டர் கதை. சம்பந்தர் சமணர்களை வென்ற கதை. சமணர்கள் உண்மையில் கழுவேறினர் என்பதற்கான ஆதாரங்கள் கிடையாது. இஸ்லாமின் பரவல். பிரபத்தி நெறி, இஸ்லாமின் தொடர்பினால் ஏற்பட்டிருக்கலாம்.
இயல் 14 – கி.பி. 300-600: ஆதிப் புராணங்களில் தேவியரும் தேவர்களும்
எவ்வளவுதான் அழகாக இருந்தாலும், குப்தர்கள் கலை, அதற்கு முன், பின் இருந்த காலங்களின் கலைகளைப் போலக் கற்பனைத்திறம் வாய்ந்ததோ உயிர்ப்புள்ளதோ அல்ல. உயிரற்றதாகவும், இரத்தமற்றதாகவும் தோன்றுகிறது. முந்திய சமஸ்கிருதப் பனுல்கள் அவ்வப்போது செய்ததைப்போலவே, நாட்டார் மரபுகளிலிருந்து சமஸ்கிருத அவைக்கவிதை தனக்கேற்றவற்றை எடுத்துக்கொண்டது.
வாய்மொழி மரபிலிருந்து நாடகங்களைத் தயாரித்த குப்தக் கவிஞர்கள், பெண்களின் சக்தி, கௌரவம் ஆகியவற்றைப் பற்றிய பலவற்றை விட்டுவிட் டார்கள். உதாரணமாக சகுந்தலை கதை. மகாபாரதம் சொல்லும் சகுந்தலை யின் கதை ஆதிக்கம், அரசுரிமை பற்றியது. காளிதாசர் அதை ஆசை, ஞாபகம் குறித்த கதையாக மாற்றிவிடுகிறார். சகுந்தலை கதை குப்தர்களுக்கு முக்கிய மானது, காரணம் சகுந்தலை-துஷ்யந்தனின் மகனான பரதனின் வம்சத்தில் வந்தவர்கள் தாங்கள் என்று குப்தர்கள் சொல்லிக்கொள்வது மரபாக இருந்தது. இக்காலப்பகுதியில் புராணங்கள் தோன்றி, நாட்டார் விஷயங் களையும் குப்த இலக்கியத்தையும் தங்களுக்கேற்ப உருவமைத்தன. பழங்கால இந்தியாவின் குப்பை நாவல்கள் போன்றவை இவை. ஆதிக்கத்துக்கு மாறான, வேதத்திற்கு மாறான மரபுகள் புராணங்களின் முக்கியமான சாராம்சப் பொருள்களை
அளிக்கின்றன.
கதாகாலட்சேப மரபினால் இதிகாசக் கதைகள் புராணங்கள் வாயிலாகச் சாதாரண மக்களிடையே பரவின. கிராமப்புற மரபுகளுக்கும் வட்டார நாட்டார் வழக்குகளுக்கும் மானிடவியலாளர் ராபர்ட் ரெட்ஃபீல்டு ‘சிறிய மரபு’ என்று பெயரிட்டார். ஆனால் இவைதான் மிகப் பெரும்பகுதி இந்துமதத்தைக் கட்ட மைப்பவை. அகில இந்திய மரபுதான் சிறியது; கிராமப்புறக் கலாச்சாரங்கள் தான் பெரிய மரபு. இந்துமரபின் மிகத்தூய்மையான பக்திமான்களை எதிர்த்து, சொந்தக் கடவுளரை யே கேலிசெய்து நகைக்கக்கூடிய இந்து மதத்தின் தன்மையைப் பாராட்டக்கூடிய இடங்களாக கிராமங்கள் இருந்தன. நாட்டார் மரபு, குறிப்பாக பிராமணர்களைக் கேலிசெய்வதில் சந்தோஷமடைகிறது. ஆனால் எல்லாவற்றையும் கடைசியில் பிராமணர்கள் வடிகட்டித் தங்களது ஆக்கிக் கொண்டார்கள். மொழி, உணவு (மாமிச உணவிலிருந்து மரக்கறி உணவுக்கு மாற்றுதல்), சாதி (கீழ்ச்சாதிப் பூசாரிகளைப் புரோகிதர்கள் ஆக்கிவிடுதல்), பால் (பெண் – கதைசொல்லிகளை, ஆண்களாக மாற்றிவிடுதல்) ஆகியவை இப்படிப்பட்ட வடிகட்டல்களில் சில.
மெய்யான வாழ்க்கையிலும் சூத்திர பிராமணர்கள், மிலேச்ச பிராமணர்கள், சண்டாள பிராமணர்கள், நிஷாத பிராமணர்கள் (இவர்கள் திருடர்கள், மீனும் மாமிசமும் இவர்களுக்கு விருப்பம் என்று சொல்லப்படுகிறது) ஆகியோர் உள்ளனர். இவர்களில் சிலர் தாங்கள் புராணங்களில் புகுத்திய நாட்டார் மூலங்களுக்கு நெருக்கமானவர்களாகவும் இருந்தனர். இக்காலத்தில் சமயப்போட்டிகள் அதிகரித்தன. அதன் ஒருவடிவம் அருணாசல ஈஸ்வரர் கதை.
அடுத்து பல தேவியர்கள் பற்றிய கதைகள் இடம் பெறுகின்றன. மகிஷாசுர மர்த்தினி அல்லது துர்க்கை. பல தொன்மங்களில் ஆண்கள், பெண்களின்றிப் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். ஆனால் தேவியர்கள், எல்லாவகைச் சக்திக ளும் பெற்றிருந்தும் மலடாகச் சபிக்கப்பட்டவர்கள். பெண்கள் ஆண்களுக்கு நிரந்தர அச்சுறுத்தலாக இருப்பார்கள். ஆண்கள் பலர் இதிலிருந்து பெறும் பாடம் என்னவென்றால், பெண்களைப் பூட்டிவைத்து மௌன மாக்க வேண்டும். இந்த அமைப்புக்கு ஒரேஒரு மீறல், பரவலாக இந்தியாவில் காணப்படும் பெண்க ளுக்கு தெய்வம் வரும் நிகழ்ச்சி. அதில் கொடூரமான தேவியால் பீடிக்கப்பட்ட பெண், சக்தியைப் பெறுகிறாள், அல்லது சக்தி ஆகிறாள்-அதன் மூலமாக அவள் மற்றபடி தடைசெய்யப்பட்ட பல விஷயங்களைச் சொல்லவும் செய்யவும் முடியும்.
சிவனின் மனைவியர்-சதி, பார்வதி. கௌரி, தன்னைப் பொன்னிறமாக மாற்றிக் கொண்ட காளி.
வாகனம் என்பது, “ஒரு விஷயத்தின் பொருள்சார் உருவப்படுத்தல் அல்லது வெளிப்பாடு”. எங்கு அந்த வாகனம் இருக்கிறதோ அந்த இடத்தில் தெய்வமும் இருக்கிறது. புராணங்களில் எதற்கும் ஒரு பரிகாரம் இருக்கிறது.
இயல் 15 – கி.பி. 600 900: தாந்திரிகப் புராணங்களிலும் தந்திரங்களிலும் பிரிவுகளும் பாலுறவும்
பூர்வதாந்திரிக இயக்கங்கள்-கி.பி. முதலாம் நூற்றாண்டில், லாகுலீசர் என்ற முனிவர் பாசுபத சமயம் ஒன்றை நிறுவினார். லிங்கபுராணம் பாசுபதர்களின் சில கொள்கைகளை எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் மயானத்தில் வாழ்ந்தனர். (பிணங்க ளைத் தொடுவதால், அவர்கள் பறையர்கள்). அவர்களின் படையல்கள் இரத்தம், மாமிசம், மது, சாதிவரைமுறையற்ற சடங்கு உடலுறவுகள் ஆகிய வை. உண்மையில் பாசுபதர்கள் முழுமையாகத் தன்னடக்கம் கொண்டவர் களாகவும் கற்புள்ளவர்களாக வும் இருந்தனர். அவர்கள் வெறுமனே குடியை யும் பெண்ணாசையையும் நடிக்கவே செய்தனர். காலப்போக்கில், பாசுபதர்கள், காபாலிகர்களாக மாறினர். பாசுபதர்களின் அவதூறான நடத்தையை அவர்கள் மேற்கொள்ளவில்லை, ஆனால் மண்டையோட்டுப் பிச்சைப் பாத்திரத்தை மட்டும் விடவில்லை.
சிவனே காபாலிகன், இவர்களின் முன்மாதிரி-பிரம்மனைக் கொன்றதால் மண்டையோட்டைப் பெற்றவன் எனப்படுகிறான். தட்சனின் மகள் சதியின் பிணத்தை உறுப்புக் குறைத்தலால் விழுந்த உறுப்புகளே சாக்த பீடங்கள் ஆயின. சதியை வழிபடும் மதம் சாக்தம்.
தாந்திரிகப் பனுவல்கள், தாந்திரிகச் சடங்குகள், தாந்திரிகத்தொன்மங்கள், தாந்திரிகக் கலை வடிவங்கள் உள்ளன, யாவற்றுக்கும் மேலாகத் தாந்திரிக பக்தர்கள் உள்ளனர். தாந்திரிக மந்திரங்கள், தாந்திரிக யந்திரங்கள், தந்திரங்கள் (இரகசியப் பனுவல்கள்) இவற்றோடு, தாந்திரிகக் கடவுளர்கள், அவர்களுடைய துணைவர்கள் ஆகியோரும் உள்ளனர். இந்து மதத்திற்குள்ளாக, சைவ, வை ணவ, சாக்த தந்திரங்களும், பிற கடவுளர்களுக்கான தந்திரங்களும் உள்ளன. இவற்றுடன் பௌத்தத் தந்திரங்களும் ஜைனத் தந்திரங்களும் உள்ளன. தாந்திரிக முறைகள் விளிம்பு நிலையினவாகவோ, தலைகீழாக்குவனவாக வோ இல்லை. இவற்றில் பல மக்களுக்குத் தெரிந்தவை, ராஜரீகம் சார்ந்தவை.
தந்திரம் என்பது ஆற்றலைப் பற்றியது, ஆற்றல்தான் அரசர்களுக்குத் தேவை யான பொருள். இந்துமத உலகுகளில் ஒன்று பக்தி, மற்றொன்று தத்துவம். தத்துவத்தில் முதலாவது வேதாந்தம், இரண்டாவது தந்திரம் (சடங்கு). இந்துக் கள் பெரும்பாலோர், தந்திரம் என்று சொல்லும்போது இடங்கை (வாம, மீறல்)மரபையே நினைக்கிறார்கள். நெறிபிறழ்ந்தவர்களுக்கு வாழ்வளிக்க சிவன் தந்திர மரபை உருவாக்கினான் என்கிறார்கள்.
தாந்திரிகச் சடங்குகள்-இவற்றுக்கு மிக முக்கியமானவை, ஐந்து மகரங்கள். மது, மாமிசம், மச்சம் (மீன்), முத்திரை, மைதுனம் ஆகிய ஐந்தும். இந்த ஐந்து மகரங்களும், இந்துமதத்தின் பழைய வைதிக வடிவங்களில் காணப்படும், பசுவின் ஐந்து பொருட்களின் தலைகீழ்மாற்றங்களாகும். தந்திரத்தின் மீறல்வடிவங்களைத் தாங்கிக்கொள்ள முடியாத பனுவல்கள் பல, சடங்குக் குறிப்புகள் அச்சடங்குகளைச் செய்வதற்காக ஏற்பட்டவை அல்ல, அவை குறியீட்டுத் தன்மை கொண்டவை என்று சொல்கின்றன. தாந்திரிக உடலுறவு பற்றிய கருத்துகள் மூன்று வகையாக உள்ளன.
முதல் யூகம்: அவர்கள் உண்மையாகவே ஈடுபட்டார்கள்.
மாற்றுவடிவம் 1: ஒருகாலத்தில் அவர்கள் ஈடுபட்டார்கள், இப்போது அதைப் பற்றிப் பேசுகிறார்கள்.
மாற்றுவடிவம் 2: முதலில் அவர்கள் அதைப் பற்றிப் பேசினார்கள், பிறகு அவர்கள் ஈடுபட்டார்கள்.
இரண்டாம் யூகம்: எப்போதுமே இதெல்லாம் அவர்கள் மூளைக்குள்தான் இருந்தது.
மூன்றாவது யூகம்: அவர்கள் எப்போதுமே ஈடுபட்டார்கள், அதேசமயம் அதைக் கற்பனையிலும் கண்டார்கள்.
இந்த ஆசிரியர் தாந்திரிக விஷயங்கள் உண்மை எனவே கொள்கிறார். வாமம் என்ற சொல்லுக்கு இடக்கை என்றும், பெண் என்றும் பொருள். பெண்கள் தாந்திரிகச் சடங்குகளின் மையங்கள். நெறிப்படுத்துபவர்கள். பெரும்பாலான சைவ தந்திரங்கள் சிவனுக்கும் பார்வதிக்கும் இடையிலான உரையாடலாக வரையப்பெற்றுள்ளன.
தந்திரம், பக்தி இயக்கங்கள் பலவற்றுக்கும் உள்ள சாதிவெறுப்புடன், துறவியக்கங்கள் பலவற்றிற்கும் உள்ள சாதி அலட்சியத்தையும் சேர்த்துக்கொண்டிருக்கிறது. சில புராணங்கள், சிவனே பறையன்தான், சூத்திரனைவிடக் கீழான சாதியைச் சேர்ந்தவன் என்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டு காலில் மணி கட்டிய பிட்சாடன உருவம்.
தாந்திரிகக் கோயில்கள் எலிஃபண்டாவும் எல்லோராவும். கஜுராஹோவும் கொனாரக்கும். இந்தக் கோயில்களின் காமஜோடிகள் பெரும்பாலும் தாந்திரிகர்கள் எனப்படுகின்றனர். பல்வேறு தாந்திரிகச் சமயங்களுக்குக் கஜுராஹோ முதன்மை யான மையமாக இருந்தது. சாந்தலர்களும் ஒருவேளை தாந்திரிகர்களாக இருந்திருக் கலாம். முஸ்லிம்களின் பிம்ப உடைப்புகளுக்கு இவை ஒருபோதும் பலியாகவில்லை. மிகத் தொலைவில் அமைந்திருந்ததால் முஸ்லிம்களின் கவனத்தை இவை கவரவில்லை. அல்லது ஒருவேளை, தாங்களே பழங்காலத்தில் காமக்கவிதை, காம ஓவியங்களில் மிகத்தேர்ச்சி பெற்றிருந்ததால், முஸ்லிம்கள் இந்தச் சிற்பங்களை ஒருவித அரைமனதான பாராட்டுடன் அழிக்காமல் விட்டுச் சென்றுவிட்டார்கள் போலும்.
இயல் 16 – கி.பி. 650- கி.பி. 1500: தில்லி சுல்தானியத்தின்கீழ் ஒருங்கிணைதலும் போட்டியும்
கோயில்களையும் சிலைகளையும் அழிக்கின்ற, பிராமணர்களின் கோயில் நிலங்களை அபகரிக்கின்ற, மாட்டிறைச்சி உண்கின்ற துருக்கனின் நிலைத்த வகைமாதிரி மிகத் தேய்ந்த சொல்லாகவும், பொதுவான சொல்லாகவும் மாறிவிட்டது. அது பயங்கரமான “மற்றது” என்பதைக் குறிக்கும் சொல் லாகிவிட்டது. இந்தியாவில் இஸ்லாம், கஜினி முகமதின் அரசியல் அதிகாரக் கைப்பற்றலோடு நிகழவில்லை. அதற்கும் பலகாலம் முன்பே நிகழ்ந்தது. அப்போது முஸ்லிம்கள் இந்தியாவுக்கு ஆக்கிரமிப்பாளர்களாக வரவில்லை, வணிகர்களாக வந்தார்கள். இந்தியாவில் எப்போதுமே அராபியக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
முதலில் அராபியர்களும், பிறகு துருக்கியர்களும், பாரசீகர்களும், ஆப்கானி யர்களும், மங்கோலியர்களும் படையெடுத்தனர். தில்லி சுல்தான்கள் ஜிஸ்யா வரியை விதித்தனர். வருமானத்துக்கேற்ப வரி அமைந்தது. கோயில்கள் அரசியல், பொருளாதார ஆதிக்கங்களின் மையங்களாக இருந்ததால், கோயில் களை அழிக்க முனைந்தனர். 1192இல் சில அரபு வரலாற்றுக் கூற்றுகளின்படி, கஜினிமகமூதின் படைகள் ஆயிரம் கோயில்களின் சிலைகளை உடைத் தெறிந்தன. ஆயிரத்து நானூறு ஒட்டகச் சுமைகளாகக் கொள்ளையடித்த செல்வத்தைக் கொண்டு சென்றன. பாழ்படுத்திய கோயில்களை மறுபடியும் மெய்யான கடவுளின் (அல்லாவின்) வழிபாட்டிற்குச் சமர்ப்பித்தன. இப்படியான செயல்கள் ஏராளமாக நிகழ்ந்தன.
இந்துக்கள் சித்திரவதையும் தண்டனையும் அடைந்ததற்கான சான்றுகள் காணப்பட்ட போதிலும், இஸ்லாமியர் கீழ் இந்துமதம் உயிருடன்இருந்தது, இந்தியாவில் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தது.
இந்தியாதான் பலவித முக்கிய முஸ்லிம் கலாச்சார மரபுகளுக்குத் தாயகம் என்பது உண்மை. சூஃபிகள் பலர் தங்களை ரிஷிகள் என்று அழைத்துக்கொண் டனர். அராபியர்களும் ஈரானியர்களும் இந்தியாவின் கதைசொல்லலைப் பெரிதும் கற்றுக் கொண்டார்கள். இந்த அறிவை ஐரோப்பியர்களுக்கு அவர்கள் அளித்தார்கள்.
கபீர்தாசர்-அரசியல் அல்லது சமூக அர்த்தத்தில் கபீர் ஒரு புரட்சியாளர் அல்ல. இறுகிப்போன கொள்கைகளை உடைத்தவர் என்றால் ஆம்; நிறுவனங்களுக்கு எதிரானவர், நிச்சயம்; ஏழை, அந்தஸ்தில் தாழ்ந்திருந்தவர், ஆமாம். ஆனால் ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று நினைத்தவர் அல்ல.
முஸ்லிம்களுக்கு எதிராக இராமனை ஒரு நாயகனாக்கி மானிடப்படுத்தக் கூடிய ஒருங்கிணைந்த இந்து உணர்வு எதுவும் இல்லை. இந்து சமஸ்கிருதக் கல்வெட்டு ஒன்று, பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்தது, தில்லியில் ஆண்டுவந்த அரசனை தில்லீசுவரன் என்று குறிப்பிடுகிறது. இறுதியாக வீரசைவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி விரிவாகப் பேசுகிறார்.
இயல் 17 – கி.பி. 800-கி.பி. 1500: பிற்காலப்புராணங்களில் அவதாரமும் தற்செயல் கருணை நிகழ்வும்.
விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பற்றி விரிவாக இந்த இயல் பேசுகிறது. புத்தரும் கல்கி அவதாரமும் – தற்செயல் கருணை அளிக்கப்படுதல்.
இயல் 18 – கி.பி. 800-கி.பி. 1300: தென்னிந்தியாவிலும் காஷ்மீரிலும் தத்துவச் சண்டைகள்
1. மீமாம்சை (விமரிசனத்தோடு கூடிய தேடல்) என்பது (ஏ. கி.மு. 400) ஜைமினியுடன் தொடங்கியது. தர்மத்திற்கும் கர்மத்திற்கும் வேதங்களை அதிகாரியாகக் கொண்டு அவற்றை விளக்க முனைந்தது. ஜைமினி, யாகம் செய்பவருக்கு மரணத்திற்குப் பின் சொர்க்கம் உண்டு என்று உத்திரவாதம் தந்தார். பெண்கள் யாகம் செய்யலாம் என்றும் சூத்திரர்கள் யாகம் செய்யக்கூடாது என்றும் விதித்தார்.
2. வைசேடிகம் கணாதருடன் (ஏ. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) தொடங்கியது. அணு சார்ந்த பிரபஞ்சவியல் ஒன்றை முன்வைத்தார். அதன்படி, எல்லாப் பருப்பொருள் களும் ஒன்பது மூலங்களின் அணுக்களால் ஆனவை. நான்கு பருப்பொருள் மூலகங் கள்-நிலம், நீர், தீ, காற்று; ஐந்து அருவ மூலகங்கள் – வெளி, காலம், ஈதர், மனம், ஆன்மா ஆகியவை இவை. இந்த நோக்கில் கடவுள் உலகத்தை முன்னரே இருந்த பாழ்வெளியிலிருந்து படைத்தார். ஏற்கெனவே உள்ள அணுக்களுக்கு அவர் வடிவம் மட்டுமே கொடுத்தார். ஆகவே சங்கரர் வைசேடிகர்களை அரைச்சூனியவாதிகள் என்றார்.
3. தர்க்கமீமாம்சம் கௌதமருடன (ஏ. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) தொடங்கியது. இது ஒரு பகுப்பாய்வு தொடர்பான தத்துவம், பின்வந்த எல்லா இந்துத் தத்துவங்களுக்கும் அடிப்படையானது மட்டுமல்ல, அறிவியல் நூல்கள் சாத்திரங்கள் போன்றவற்றிற்கும் தேவையானது.
4. பதஞ்சலியின் யோகசூத்திரம் (ஏ. கி.மு. 150). இது பல நூற்றாண்டுகளாகப் பயன் பட்டு வந்த யோகச் செயல்முறைகளை விதிப்படுத்தியது. யோகத்தின்படி தனிப்பட்ட கடவுள் உண்டு, அவர் காலமுறைப்படி படைப்பையும் அழித்தலை யும் மேற்கொள் பவர், சர்வஞானமும் சர்வ வல்லமையும் பெற்றவர். மனம், உடல் ஆகியவற்றின் பயிற்சியை வலியுறுத்தியது. “பயிற்சியின்மைக்கு உட் படுத்தும் (சும்மா இருக்கும்) பயிற்சி உட்பட.” மோட்சம் அறிவின் வாயிலாகக் கிடைப்பதல்ல, மனத்தையும் உடலையும் பண்படுத்துவதால் கிடைப்பதென்று யோகம் சொல்கிறது.
5. சாங்கியம், உபநிடத காலத்தில் தோன்றியது. கீதையில் முக்கியமாக சொல் லப் படுகிறது. சாங்கிய தத்துவத்தை முறைப்படுத்தியவர் ஈஸ்வர கிருஷ்ணர் (ஏ. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு). சாங்கியம் இருமைத் தத்துவம். பிரபஞ்சம் ஆண் தத்துவமான புருஷனாலும் (ஆன்மா, சுயம், ஆளுமை) பெண்மைத் தத்துவமான பிரகிருதியினாலும் (பொருள், இயற்கை) ஆனது. எல்லையற்ற, ஒத்தத் தன்மை கொண்ட புருஷர்கள் உண்டு. எதுவும் எதற்கும் மேம்பட்டதல்ல. தொடக்க சாங்கியத் தத்துவஞானிகள் கடவுள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், ஆனால் பிரபஞ்சத்தை விளக்குவதற்குக் கடவுள் தேவையில்லை என்றனர். பிற்காலச் சாங்கியவாதிகள் கடவுள் இருப்பதாகக் கொண்டனர்.
6. கடைசியாக வருவது வேதாந்தம். ஆத்மா (சுயத்தின் ஒருமை), பிரம்மம் (பிரபஞ்சத் தத்துவம்) ஆகியவற்றின் வாயிலாக உபநிடதங்களை வாசிக்கும் புலம் இது. உபநிடதங்கள், பகவத்கீதை, பாதராயணரின் வேதாந்த சூத்திரங்கள் (ஏ. கி.மு.400) ஆகியவற்றின் உரைகள் வாயிலாக வெளிப்படுத்தப்படுவது. வேதாந்தத்தின் வெவ் வேறு கிளைகள், நிகழ்வு உலகத்தை அறிவுப்புலப் பிழை (அவித்யா), உளவியல் நிலை (அத்யாயம்), மீமெய்ம்மையியல் மாயை ஆகியவற்றால் உருவாவதாகச் சொல்கின்றன. தொன்மங்களெல்லாம் விளக்குவதற்குப் போராடுகின்ற தீமை என்ற விஷயத்தைக் கூட, இன்னும் கேட்டால் மரணத்தைக்கூட, அவை மாயை என்றே சொல்லிவிடு கின்றன. வேதாந்தத்தின் மூன்று முக்கியப் பிரிவுகள் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம். சங்கரர் பற்றிய கதைகள்-வைணவத்தின் பூனையும் குரங்கும் உருவகம்-காஷ்மீர சைவமும் யோகவசிஷ்டமும்-பால் என்னும் மாயை-சுதலையின் கதை-சாதி என்னும் மாயை-லவணன் கதை.
இயல் 19 – கி.பி. 1500-கி.பி. 1700: முகலாயரின்கீழ் உரையாடலும் சகிப்புத்தன்மையும்
அக்பரின் புதிய மதம்-இந்துக்களை அவன் மத நம்பிக்கை அற்றவர்களாகக் காணவில்லை, குடிமக்களாகவே கண்டான். பீர்பல், தோடர்மல் இவன் அவையிலிருந்த இரு ரத்தினங்கள். அக்பர் எப்போதுமே இந்துக்களிடம் சாந்தமாக நடந்துகொள்ளவில்லை. ஆனால் அவர்களுக்குத் தீங்கிழைத்தபிறகு ஏறத்தாழ எப்போதும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். தாரா ஷிகோ ஷாஜஹானுக்குப் பிரியமான அவன் மூத்த மகன். இந்துமதத்தின் அடிப்படைச் சாராம்சம், இஸ்லாமின் சாராம்சத்துடன் முழுவதும் ஒத்தது என்று கூறிய அறிஞன் அவன். வெறி பிடித்த ஒளரங்கஜீப்.
இயல் 20 – கி.பி. 1500- கி.பி. 1700: முகலாயர்கள்கீழ் இந்துமதம்
சைதன்யர், மீராபாய், துளசிதாசர், துக்காராம், «க்ஷத்ரய்யா ஆகியோரின் பணிகள் இந்த இயலில் சொல்லப்படுகின்றன. பொதுவாக வெவ்வேறுபட்ட நிலைகளில் இந்துக்கள் இருந்தனர்.
இயல் 21 – கி.பி. 1600- & கி.பி. 1900: பிரிட்டிஷ் அரசின்கீழ் சாதி, வகுப்பு, மதமாற்றம்
இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள்-முதல் அலை: பிரிட்டிஷ் சாதி அமைவில் பழமைவாதிகளும் கீழையியலாளரும். பிரிட்டிஷ்காரர்கள் உயர்வகுப்பின ராகவே கருதப்பட்டார்கள். க்ஷத்திரிய மயமாக்கல். சில இந்துவல்லாத இனங்களின் அரசர்களையும் போர்வீரர்களையும் இந்துக்களின் க்ஷத்திரிய வகுப்பில் சேர்த்துக்கொண்டது போல, இப்போது பிரிட்டிஷ்காரர்களும் சேர்த்துக்கொள்ளப் பட்டார்கள். முதல் கீழையியலாளர்கள், நேர்மையாகவே இந்தியாவைப்பற்றி அறிய ஆவலாயிருந்தார்கள். பதினெட்டாம் நூற்றாண் டிலேயே ஆள்வோர்க்கும் ஆளப்படுவோர்க்கும் இடையிலான விரோதம் தொடங்கிவிட்டது. காலப்போக்கில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்களை அடக்கிவிரட்டுவதற்கு மட்டுமே அவர்களுடன் பேசநேரிடும்நிலை ஏற்பட்டுவிட்டது. இரண்டாம் அலையில், இந்தியாவை அறிவற்றவர்களும் விக்கிரகவழிபாடு செய்பவர்களும் உள்ள நாடு என்றும், அது மதம் மாறுவதனை நிர்ப்பந்தமாக வேண்டுகிறது என்றும் நினைத்தனர். மூன்றாம் அலை-1857 புரட்சி-மன்றோவின் கூற்று-“நம்மளவுக்கு யாரும் இகழ்ச்சியுடன் இந்தியர்களை நடத்தியதில்லை. எல்லாரையுமே நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவர்கள் என்று சொல்லி ஒதுக்கியதில்லை, நேர்மை என்பதே இயலாதவர்கள் என்று கருதியதில்லை, வேறுவழியின்றி அவர்கள் உதவி தேவையென்றால் மட்டுமே பணியில் அமர்த்தியதில்லை” என்று கூறினான். மெக்காலேயின் வசைமாரி-முதலில் பாராட்டுவதாகவும், சகிப்புடனும் கூடியதாக இருந்த (முதல்அலை), பிறகு இகழ்ச்சியுடன் நோக்கிய (இரண்டாம் அலை), கடைசியாகப் பகைமையைக் காட்டுகிற (மூன்றாம் அலை) தன்மைகளை இந்தியாவை நோக்கிய பிரிட்டிஷ் மனப்பாங்குகள் காட்டுகின் றன. உயர்பதவியிலிருந்த இந்துக்கள் பலரும் தங்கள் காலனியாதிக்கத் தலை மையைப் போற்றி வழிபட்டனர்.
நேப்பியர் கதை-1843இல் நேப்பியர் சிந்துவில் ஒரு கலகம் ஏற்படுமாறு செய்து, பிறகு தானே அதை நசுக்கிவிட்டு, அதை ஒரு முன்காரணமாகக் கொண்டு பிரிட்டிஷ் பேரரசுக்காக அதைப் பிடிக்கும் வேலையைச் செய்தான். பிறகு இதைப்பற்றி ஒரு செய்தி அனுப்பினான். பெக்காவி என்ற ஒரே அழுத்தமான வார்த்தை. இதற்கு ஐ ஹேவ் சிண்ட் என்று பொருள். சிண்ட் (ஆங்கில உச்சரிப்பில் சிந்து)ஐக் குறிக்கிறது.
கிப்லிங்கின் கிம் கதை-போலிஅறிவியல் கருத்தியலின் ஆதரவு பெற்ற பிரிட் டிஷாரின் இன வாதக் கொள்கைகள், தங்களைப்போன்ற உதவி இல்லாமலே சிந்திக்கப்பட்ட வெள்ளைத்தோல் – கருப்புத் தோல் என்ற இந்துச் சிந்தனை களின்மீது குதிரையேறிஆட்சிசெய்தன. இந்தியாவின்மீது பிரிட்டிஷ்காரர் கொண்ட அன்பைப் பற்றி, அந்த அன்பினால் எழுதப்பட்ட நாவல், கிம்.
இயல் 22 – கி.பி. 1800 & கி.பி. -1947: பிரிட்டிஷ் அரசின் அந்திமக் காலத்தில் உடன்கட்டையும் சீர்திருத்தங்களும்
பிரிட்டிஷ் பார்வையில் உடன்கட்டை ஏறுதல்-தானே விரும்பி உடன்கட்டை ஏறினாளா, தள்ளப்பட்டாளா-“அடித்தட்டு மக்கள் பேசமுடியுமா?” இந்த விஷ யத்தில் அடித்தட்டு மக்கள் என்பது, வாக்குமறுக்கப்பட்ட பெண்கள். இதற்கு எனது விடை, பேசமுடியும் என்பது. ஆனால் இதற்கு அவள் பேசுவதை நாம் கேட்கமுடியும் என்பது அர்த்தமல்ல. இறக்க விரும்பிய, அதில் வெற்றிபெற்று இறந்துபோன பெண்களால் பேசமுடியாது. ஆகவே மிஞ்சியிருக்கும் சான்றுகள், உள்ளார்ந்து திரிபானவை ஆகின்றன, வெற்றிகரமாகத் தப்பியவர்களுக்கு ஆதரவாக அமைகின்றன.
சிலபேர் நிலத்துக்காகவோ, பணத்துக்காகவோ, குடும்ப கௌரவத்துக்காகவோ கொலை செய்யப்பட்டார்கள். சிலர், மதக் காரணங்களுக்காகத் தங்களை உயிர்த் தியாகம் செய்துகொண்டார்கள். சிலபேர், குற்றவுணர்ச்சி, கலக்கம், பயம் போன்ற உணர்ச்சிகளால் தற்கொலை செய்துகொண்டார்கள். சிலபேர் எதிர்த் தார்கள், தப்பி ஓடினார்கள். அவர்கள் எதிர்கொண்ட விஷயம், இந்தக் கலாச் சாரம். எப்படி ஒரு பெண் இருக்கவேண்டும், எதை அவள் செய்யவேண்டும் என்ற இலட்சியம்.
பிரிட்டிஷ் ஆதிக்க மனப்பான்மை (“பழுப்பு ஆடவரிடமிருந்து பழுப்புப் பெண் களைக் காப்பாற்றும் வெள்ளையர்”) சார்புநிலை எதிர்வினை (“மற்றஒருவனின் மதத்தில் நான் தலையிட்டுக் குழப்பமாட்டேன்”) இரண்டும் இயங்கின.
கேப்டன் ராபர்ட்சன் என்பவன், புலனாய்வு செய்து மிக மெதுவாக எரியும் புல்லை யே சிதைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று இந்துப் புனிதநூல்கள் விதிக்கின்றன என்று கண்டுபிடித்தான். ஆனால் உண்மையான நடப்புகளில் அவ்விதம் பயன்படுத் தியதில்லை. அப்புனிதநூல்கள் சொல்வதை எழுத்துக்கு எழுத்து கடைப்பிடித்தால், உண்மையில் உடன்கட்டை என்பது மிக மெதுவாகப் பெண் எரியச்செய்வதாக மாறும், ஆகவே பெண்கள் உடன்கட்டை ஏற விரும்ப மாட்டார்கள் என்று கணக்கிட்டான். ஆனால் எதிர்மறை விளைவே உண்டா யிற்று.
தயானந்த சரஸ்வதி உருவாக்கிய சுத்திகரித்தல் சடங்கு. உடன்கட்டை ஏறுவது மதச்சடங்கு என்றால் பிரிட்டிஷ் தலையிட முடியாது, அது மதச்சடங்கு அல்ல என்றால் அவர்கள் தலையிடலாம். அது போலவே பசுக்கொலையும்.
வன்முறை: அமிர்தசரஸில் டையர், அகிம்சை: காந்தி. மெய்யான அகிம்சை என்பது இந்தியாவில் (வேறுநாடுகளிலும்தான்) ஒருபோதும் இருந்ததில்லை என்பது காந்திக்கு நன்றாகத் தெரியும். ஒருசமயம் அவர் குறிப்பிட்டார்: “வாழ்க் கையில் இன்றியமையாக் கூறாகஇருக்கின்ற வன்முறையைக் கைவிடும் முயற்சிதான் அகிம்சை.” அரசியல் தளத்திலும் (வன்முறையைக் கட்டுப் படுத்தல்) தனிப்பட்ட மனித தளத்திலும் (உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல்) கட்டுப்பாட்டை மேற்கொள்வதில் காந்தி அக்கறை கொண்டிருந்தார். இரண்டிற் குமான அச்சுறுத்தல்கள் பிரிட்டிஷாரிடம் இணைந் திருந்தன.
ஆதிவாசிகள் கள்ளருந்தினர். ஆனால் போதையை அனுமதிக்கவில்லை. பெண்களை உடைமையாகக் கருதவில்லை. மணவிலக்குச்செய்யவும், வித வைகளாயினும் மறுமணம் செய்துகொள்ளவும், விபசாரம் செய்யவும்கூட பெண்களுக்கு உரிமை இருந்தது. விபசாரத்தைத் தவறு என்று அவர்கள் கருதினாலும், கொடுந்தவறாகக் கருதவில்லை. அவர்கள் பிராமணர்களுக்கு எதிரானவரும் கூட. சிலர் பிராமணர்களைக் கொல்வதை உயர்ந்த செயல் என்றே கருதினர்.
காசிதாஸ் என்ற சமார், தெய்வங்கள், தேவியர்களின் படிமங்களைக் குப்பைத் தொட்டியில் எறிந்தார். பிராமணர்கள், கோயில்கள், இந்துப் பூஜைமுறை, காலனிய அதிகாரம் ஆகிய எல்லாவற்றையும் எதிர்த்தார். நிர்க்குணப் பிரம்ம மான வடிவமற்ற கடவுள் வழிபாட்டை மட்டுமே அவர் ஏற்றுக் கொண்டார். அந்த வடிவமற்ற கடவுளை சத்நாம் என அழைத்தார். இந்த இயக்கம் சத்நாமி கள் எனப்பட்டது.
தேவி இயக்கம். இது முழுக்க முழுக்க ஒரு பழங்குடியினர் இயக்கம். மீண்டும், தொன்மம், வரலாற்றை இயலச்செய்தது.
சத்நாமிகள் பிராமண, சமஸ்கிருதமயமான, தூய மதிப்புகளை ஏற்றனர். தாங்கள் யாருக்கு எதிராகக் கலகம் செய்தார்களோ அதே மக்களாக அவர்கள் ஆயினர். தங்களை ஒதுக்கிய சாதிப் படிநிலையைத் தாங்களே ஆதரித்து ஏற்கும் நிலைக்கு வந்தனர்.
தலித்துகள் அம்பேத்கர் காலமுதல் பௌத்தர்களாக மாறினர். ஆனால் அவர் களுக்குச் சலுகைகள் கிடைக்கவில்லை. 2006 நவம்பரில், நாக்பூரில் பத்து லட்சம் தலித்துகள் ஒருசேர புத்தமதத்தைத் தழுவ முயன்ற ஒரு பெரிய கிளர்ச்சிப்பேரணியை அரசாங்கம் தடைசெய்தது. இந்தியாவில் தொடர்ந்து தலித்துகள் ஒடுக்கப்பட்டே வருகின்றனர், அவர்களுடைய ஒடுக்குதலை எதிர்க்கும் போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன.
இயல் 23 – 1947 முதல் -அமெரிக்காவில் இந்துக்கள்
எதிர்திசைக் காலனியம்- 1893 – விவேகாநந்தர் உலக மதங்களின் பேரவையில் கலந்துகொண்டார். 1896 – 1977 பக்திவேதாந்த, சுவாமி பிரபுபாதர் (இஸ்கான் நிறுவனர்) காலம். 1918 – 2008 மகரிஷி மகேஷ் யோகி காலம் 1931 -1990 பகவான் ஸ்ரீ ரஜனீஷ் (ஓஷோ) காலம். 1970 முதல் ஐரோப்பா, அமெரிக்க ஐக்கியநாடு, கனடா நாட்டின் இந்துக்கள் கோயில்கள் கட்டத் தொடங்கினர். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மதர் மீரா, அமிர்தானந்த மயி, சந்த ராஜீந்தர்சிங்ஜீ மகராஜ், ஸ்ரீ மா – இவர்கள் யாவரும் (இன்னும் ஏராளமாக உண்டு), எண்பதுகள் தொடங்கி அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு ஒழுங்கான கால அவகாசங்களில் வருகை தந்தவர்கள்.
ஈப்ரார்த்தனா.காம் போன்றவற்றின் நடவடிக்கைகள். காளியை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள். அனுமனை சூப்பர்ஹீரோ ஆக்குதல். காமசூத்தி ரத்தின் வடிவங்கள். இந்துமதத்தின் அமெரிக்கமயமாக்கம். இந்துக்களின் எதிர்வினை.
இயல் 24 – 1950 முதல் -நிகழ்காலத்தில் இறந்தகாலம்
இந்த இயல், இன்றைய இந்தியாவில் இந்துக்களின் அரசியல் சூழலுக்கு வரலாற்றின் ஏற்புடைமையை ஆராய்கிறது. இன்றைய இந்தியாவில் இறந்த காலம் எவ்வளவு உயிர்த் துடிப்போடு இருக்கிறது, சமகால நிகழ்வுகள் எவ்வி தம் கடந்தகாலச் சுவரின்மீது மோதித் திரும்புகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்தியா முழுவதும் பொதுவாக, வேதமக்கள் செய்ததைப் போன்ற விலங்கு களைப் பலியிடும் சடங்குகளைக் கீழ்ச்சாதியினர் மட்டுமே செய்கிறார்கள். பிராமணர்களோ, வேதயாகங்களின் மரக்கறி உணவு பதிலீட்டுவடிவங்களை நிகழ்த்துகிறார்கள். ஒரு உண்மையான சடங்கினைக் கற்பனைச் சடங்காக மாற்றியது, நாம் தந்திரத்தின் வரலாற்றில் பார்த்த ஒரு செயல்முறையை எதிரொலிக்கிறது. பிராமணர்களுடைய அடையாளங்களுடன் ஒன்றுபடும் பெண்தெய்வங்கள், ஊரின் மத்தியில் இருக்கின்றன, அம்மாதிரி பிராமணத்தொடர்பற்ற பெண்தெய்வங்கள், ஊருக்கு வெளியே உள்ளன.
இந்துத்துவக் குழுவினர்க்கு பசு ஒரு மையப் பிரச்சினை. ஏராளமான வரலாற்றுச் சான்றுகளுக்கு முரணாக, முஸ்லிம்கள்தான் மாட்டுக்கறி உண்ணும் பழக்கத்தை இந்தியாவில் கொண்டுவந்தார்கள், அதற்குமுன் மாட்டுக்கறி யாரும் உண்டதே இல்லை என்று வாதிக்கிறார்கள். பசுவின் ஒரு போலிப் புனிதத்தன்மை என்பதை வைத்து முஸ்லிம்களைக் குடியுரிமை நீக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
பைரவன் கோயில்கள் இந்தியா முழுவதும் உள்ளன. அங்கெல்லாம் மக்கள் நாய்களின் சிலைகளுக்கும், நிஜமான நாய்களுக்கும் பூசைசெய்கிறார்கள். மகாராஷ் டிரக் குதிரைவீரக் கடவுள் காண்டோபாவை (சிவனின் ஒரு வடிவம், பெரும்பாலும் மல்லண்ணாவுடன் இணைக்கப்படும் வடிவம், மார்த்தாண்டன் என்றும் சொல்வார் கள்) வழிபடும் பக்தர்கள் அவனுடைய நாய்களாக நடிப்பதும், அவனுடைய திருவிழாக்களில் குரைப்பதும் வழக்கம்.
இந்துக்களில் பெரும்பாலோர் மோட்சத்தை அசட்டை செய்கின்றனர். பிறகு ஒரு பின்சிந்தனையாக அடுத்த பிறவி நல்லதாக அமையவேண்டும் என்கிறார்கள்.
1992இல் பாபர்மசூதி இடிப்பு-வில்லியம் டால்ரிம்பிள் கூறியதுபோல, “மசூதி யின் மூன்று கவிகைகளும் இந்தியாவின் சகிப்புத்தன்மை, ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றின் குறியீடுகள் என்பதுபோல உடைத்து நொறுக்கப்பட்டன”. இராமன் பாலம்-உச்சநீதிமன்றம், வாய்க்கால் துரப்பணப் பணி தொடர்ந்து நடைபெறலாம், ஆனால் இராமனின் பாலத்தைத் தொடக்கூடாது என்று தீர்ப்பளித்தது. முன்னூறு வகை இராமாயணங்கள் இந்தியாவில் உள்ளன.
“நாங்கள் இதை வேறுவிதமாகக் கேட்டுள்ளோம். எப்படி இது நிகழும்?” கதைசொல்லி விடையிறுக்கிறான்: “உண்மை தான், ஆனால் அது வேறு யுகத்தில் நடந்தது.” பிறகு அவன் கதையின் மற்றொரு வடிவத்தைச் சொல்கிறான்.
இராமானுஜன் மீது தாக்குதல்-சீதை பெண்கள் உரிமையை நிலைநாட்டுபவ ளாகக் கொள்ளப்படுகிறாள். மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் இராமன் இல்லாத சீதையின் கோயில் ஒன்று உள்ளது.
மகாபாரதம்-திரௌபதியையும் சத்யவதியையும் குந்தியையும் பற்றி தலித் பெண்கள் சந்தேகத்தையே கொண்டிருக்கிறார்கள். வியாசருடைய மகா பாரதத்தில் உண்மையா கவே குந்தி ஒரு காட்டுத்தீயில்தான் மரணமடை கிறாள். ஆனால் அவள் வேடுவச்சியைப்பற்றி நினைக்கவில்லை. ஆனால் மகாசுவேதா தேவி வேறுவிதமாக இப்போது கதையமைக்கிறார்.
ஏகலைவனின் கட்டைவிரல் போல, கண்ணப்பரின் கண்களும் பிற்கால உரு வகக் கதைகளில் வாழ்வுபெற்றன. வடக்கிலும் தெற்கிலும் நாட்டார்வழக்காறு களில் கண்ணப்பர், வன்முறைசார்ந்த சுயஅர்ப்பணிப்பின்வடிவமாக இடம் பெற்றார்.
இந்திய தேவியர் தொடர்ந்து பரிணமிக்கின்றார்கள். 2008 ஜனவரியில் கேரளத் தில் ஒரு திருவிழாவில், பகவதி தேவி யானை மீதேறித் தனது இரட்டையான கன்னிமேரியைச் சாலையிலுள்ள அவளது தேவாலயத்தில் காணப் புறப்பட் டாள். 1960களில் உத்தரப்பிரதேசத்தின் பல சிறுநகரங்களில் பெண்கள் சந்தோஷி மாதா என்ற தேவியை வணங்கினர். அவளுக்கு எந்த அகிலஇந்தியப் புராணத் தொன்மத்திலும் இடம்கிடையாது.
மகாராஷ்டிர விவசாயிகள் இன்றுவரை, இராமராஜ்யத்தை எதிர்நோக்கவில் லை (இராமனைத் தீயவனாகக் கருதுகிறார்கள்); மாறாக, மகாபலியின் ராஜ்யத்தை எதிர் நோக்குகிறார்கள்.
இயல் 25 – முடிவுரையின்மை அல்லது வரலாற்றின் தவறான பயன்பாடு
இந்துக்களும் முஸ்லிம்களும் நட்புடன் வாழ்ந்திருக்கிறார்கள், அல்லது அவ்வாறு இல்லை என்பதற்கு; இந்துக்கள் பொருள் உலகைத் துறந்திருக் கிறார்கள், அல்லது தழுவியிருக்கிறார்கள் என்பதற்கு; இந்துக்கள் பெண்க ளையும் கீழ்ச்சாதியினரையும் ஒடுக்கி வந்திருக்கிறார்கள் என்பதற்கு, அந்த ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடி வந்திருக்கிறார்கள் என்பதற்கு; இப்படிச் சமகால இந்தியாவில் எந்த ஒரு நிலைப்பாட்டுக்கும் மிக எளிதாக வரலாற்றைப் பயன்படுத்தலாம். நமது எதிர்காலம், நாம் நினைவில் வைத்திருப்பனவற்றால் அல்ல, மறந்துவிட்டனவற்றால் உருவமைக்கப் படுகிறது. இந்து மதத்திற்குள் கிறித்துவத்தின் பழமைவாதத்தைக் கடத்த முயன்று இன்று அப்படிப்பட்ட தலைமையை இந்தியாவில் சிலபேர் அமைக்கமுனைந்திருப்பது மிகப் பரிதா பத்திற்குரியது. இப்படி நிகழாமல் தடுப்பதற்கு எழுகின்ற பலப்பல குரல்கள்தான் பெரியதொரு நம்பிக்கையை அளிக்கின்றன. மேல்கீழ் என்னும் படிநிலைகளை யும், வன்முறையையும் ஒதுக்கிய, பெண்களையும் தலித்துகளையும் தங்கள் சமூகப் படிநிலைகளில் ஏற்றுக்கொண்டு அன்பின் இறையியலை முன்வைத்த பக்தி இயக்கங்களிலிருந்தும் நாம் கற்கமுடியும். நாலாபுறமும் நோக்கி, நிகழ் காலத்தை நன்கு பார்த்து, நல்லதொரு எதிர்காலத்தைக் கற்பனை செய்து கொண்டு பிறகுதான் வரலாற்றில் குதிக்கவேண்டும்.