இரணியகன்: நீ எனக்குப் பகைவன். உன்னோடு நான் நட்புக் கொள்ளலாகாது. பகைவன் தனக்கு அனுகூலமாக நடப்பவனாக இருந்தாலும் அவனோடு நெருங்கிப் பழகலாகாது. தண்ணீர், வெந்நீராக இருந்தாலும் நெருப்பை அவிக்கவே செய்யும். எது தக்கதோ அதைச் செய்ய வேண்டும். தண்ணீரில் வண்டியும் பூமியின்மேல் கப்பலும் செல்ல இயலுமா? ஆகவே பகைவர்களிடத்திலும், மனம்மாறும் வேசியரிடமும் நம்பிக்கை வைக்கலாகாது.
காகம்: நான் உன்னுடனே நட்புக் கொள்வேன். இல்லாவிட்டால் பட்டினியாக இருந்து இங்கேயே என் உயிரை விடுவேன். நெருப்பின் வெப்பத்தினால்பொன் முதலியவை உருகி ஒன்றாகின்றன. ஏதாவது ஒரு காரணத்தினால் விலங்கு பறவைகள் முதலியன நட்பினை அடைகின்றன. பயத்தினாலோ, வேறு ஏதாவது ஓர் ஆசையினாலோ மூடர்களுக்கு சிநேகிதம் உண்டாகிறது. சாதுக்களின் சிநேகிதம் நல்ல பண்பினைக் கண்ட இடத்தில் உண்டாகிறது. மண்பானை சீக்கிரம் உடைந்துபோகிறது. பிறகு அது பொருந்துவதில்லை. இப்படித்தான் கெட்டவர்களுடைய நட்பு. உலோகக் குடம் சீக்கிரம் உடையாது, உடைந்தாலும் பிறகு பொருந்தும். நல்லவர்களுடைய நட்பும் இதுபோன்றது.
இரண்யகன்: உன் பேச்சு விவேகம் மிக்கதாக இருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். நீ சொல்கிறபடியே நாம் நட்புக் கொள்ளலாம். நாம் இருவரும் ஒருமனதாக இருக்கவேண்டும். உபகாரம் செய்பவன் நண்பன் என்றும் அபகாரம் செய்பவன் பகைவன் என்றும் அறிந்து களங்கமில்லாமல் நடக்கவேண்டும்.
இப்படி எலியும் காகமும் நட்புப் பூண்டன. அதுமுதலாக தங்கள் நட்பைப் போற்றி, ஒருவருக்கொருவர் உணவும் கொடுத்துக்கொண்டு நல் வார்த்தைகள் பேசிவந்தன. ஒருநாள்
லகுபதனன், எலியைப் பார்த்து: நண்பனே, இப்போது இங்கே எனக்கு இரை அகப்படவில்லை. வேறொரு இடத்துக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்.
இரண்யகன்: சரி, எங்கே செல்லப்போகிறாய்?
லகுபதனன்: தண்டகாரண்யத்தில் கர்ப்பூரகௌரம் என்று ஒரு தடாகம் இருக்கிறது. அங்கே மந்தரன் என்ற ஆமை எனக்கு நண்பனாக இருக்கிறான். அங்கு சென்றால் அவன் தினமும் விதவிதமான மீன்களைப் பிடித்து எனக்கு உணவு தருவான். ஆகவே அங்குச் செல்ல இருக்கிறேன்.
இரண்யகன்: அப்படியானால் அங்கே என்னையும் கொண்டு செல்.
லகுபதனன்: நீ ஏன் அவ்விதம் விரும்புகிறாய்?
இரண்யகன்: நான் அங்கே சென்றதும் சொல்கிறேனே.
லகுபதனன் இரண்யகனையும் எடுத்துக்கொண்டு தண்டகாரண்யம் சென்றது. அவைகளை மந்தரன் வரவேற்றது.
லகுபதனன், மந்தரனிடம்: இந்த இரண்யகன் மிகவும் பரோபகாரி. சித்திரக்கிரீவன் என்னும் புறாவின் தலைமையிலான கூட்டத்தை வலையிலிருந்து விடுவித்தான். இவனது நல்ல பண்பைக் கண்டு நானும் இவனோடு நட்புக் கொண்டேன்.
இதைக் கேட்டு ஆமை மகிழ்ச்சியடைந்தது. பிறகு எலியிடம்,
ஆமை: நண்பனே, நீ இந்த மனித சஞ்சாரமற்ற காட்டுக்கு ஏன் வந்தாய்?
இரண்யகன்: நான் முன்பு இருந்த இடம் ஒரு சிற்றூர்ப் புறம் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கே ஒரு வயதான சன்யாசி இருந்தான். அவன் பிச்சை எடுத்துக்கொண்டு வந்த சோற்றைச் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை ஒரு கப்பரையில் போட்டு உறியில் தொங்கவிட்டு வைத்திருப்பான். நான் அதைச் சாப்பிட்டுக் கொண்டு சந்தோஷமாக இருந்தேன். அப்போது அங்கே ஒரு இளைய சன்யாசி வந்தான். அச்சமயத்தில் மூத்த சன்யாசி, என்னை விரட்டுவதற்காகத் தடியால் பூமியில் தட்டிக் கொண்டிருந்தான். இளைய சன்யாசி அதைப் பார்த்து “நீ என்ன செய்கிறாய்” என்று கேட்டான்.
மூத்த சன்யாசி: இந்த எலி என் பாத்திரத்திலிருக்கும் உணவை தினந்தோறும் தின்னுகிறது. அதை ஓட்டுகிறேன்.
இளைய சன்யாசி: கொஞ்சம் பலமுள்ள இந்த எலி இவ்வளவு உயரமுள்ள உறி வரைக்கும் எப்படி எகிறிக் குதிக்கிறது? இதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்.
மூத்த சன்யாசி: அது என்ன காரணம்?
இளைய சன்யாசி: ஒருவேளை இங்கே இந்த எலி சேமித்துவைத்த பொருள்கள் ஏதாவது இருக்கலாம். உலகில் பணமுள்ளவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அசாத்தியமான காரியங்களையும் சாதிக்கிறார்கள். பதவிகளை அடைவதற்கும் அது உதவுகிறது. அதனால் தானே பணமுள்ளவர்களை மற்றவர்களும் கூனிக்குறுகி வழிபட்டு நாடிச் செல்கிறார்கள்.
இவ்வாறு கூறி, அந்த சன்யாசி, பூமியை அங்கே தோண்டி, நான் சேமித்து வைத்திருந்த பொருள்களையெல்லாம் எடுத்துக் கொண்டான். அவனுக்குத் தேவையற்றவற்றை வீசிவிட்டான். அன்றுமுதலாக நான் இளைத்துப் போனேன். எனக்கு இரையும் மிகுதியாகக் கிடைக்காததால் மெல்ல மெல்ல நடந்துகொண்டிருந்தேன். இதைப் பார்த்து,
இளைய சன்யாசி: இப்போது இந்த எலியின் நடையைப் பார்! முன்பிருந்த மதம் போய்விட்டது! அதனால்தான் பணமில்லாதவர்களைப் பிறர் அற்பமாக நினைக்கிறார்கள்.
இதைக் கேட்ட நான், “இங்கே இனிமேல் இருப்பது சரியில்லை. இதை வேறொருவருக்கும் சொல்லவும் கூடாது. பொருள் இழப்பு, குடும்ப விஷயங்கள், தானம், அவமானம், ஆயுள், செல்வம் முதலியவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது தவறு. தன் விதி சரியில்லாத சமயத்தில் வீரமும் முயற்சியும் வீணாகவே செய்கின்றன. பணமில்லாதவனுக்கு வனவாசத்தைக் காட்டிலும் நல்லது எதுவுமில்லை. எந்த இடத்தில் நாம் பணக்காரர்களாக இருந்தோமோ அந்த இடத்திலேயே ஏழையாக வாழ்வது தகுதியல்ல. ஆகவே அந்த சன்யாசி வீசி எறிந்த பொருள்களையாவது எடுத்துக் கொள்ளலாம்” என்று முயலும்போது அவன் என்னைத் தடியால் அடித்தான். அதனால் மிகவும் துக்கப்பட்டு உன் நண்பனுடன் கூடச் சேர்ந்து இங்கே வந்துவிட்டேன்.
இதைக் கேட்ட மந்தரன் என்னும் ஆமை சொல்லிற்று.
நண்பனே, நீ இதனால் அதைரியப்பட வேண்டாம். இருக்குமிடத்தை விட்டு வந்தோம் என்ற கவலையும் வேண்டாம். சாதுக்கள் எங்கே போனாலும் மரியாதை பெறுகிறார்கள். சிங்கம் வேறொரு காட்டுக்குப் போனாலும் புல்லைத் தின்பதில்லை. உற்சாகமுள்ளவன், தைரியசாலி, சந்தோஷம் உள்ளவன், வீரன், களங்கமில்லாதவன் ஆகியவர்களை லட்சுமி தானாகவே நாடி வருகிறாள். நீ உன் பொருளை இழந்தாலும் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கிறாய். ஆகையால் உனக்கு இருக்கும் சுகம், பணத்தாசையால் மயங்கிக் கிடப்பவர்களுக்கு இல்லை.
கெட்டவனுடைய அபிமானம், மேகத்தினுடைய நிழல், புல்லின் இளமை, பெண்ணின் இளமை, செல்வம் ஆகியவை வெகுநாட்களுக்கு நிலைப்பதில்லை. ஆகவே இவற்றை இழந்துவிட்டாலும், அழுது கொண்டிருப்பதால் பயனில்லை.
கர்ப்பத்தில் குழந்தையை வைக்கும் ஆண்டவன், அதற்கான பாலைத் தாய் மார்பில் அமைத்துவைக்கிறான். அப்படிப்பட்டவன், ஆயுள் உள்ளவரை நம்மைக் காப்பாற்ற மாட்டானா? நீ நல்ல விவேகம் உள்ளவன். உனக்கு இவை யாவும் தெரிந்தே இருக்கும். இனிமேல் நாம் அனைவரும் நட்புடன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
லகுபதனன்: மந்தரா, நீ எல்லா நற்குணங்களும் வாய்ந்தவன். நல்ல குணமுள்ளவர்கள், பிறருக்கு வரும் ஆபத்தைத் தாங்களே நிவர்த்திக்கிறார்கள் என்பதால் உன்னை நாடி வந்தோம்.
இவ்வாறு கூறிய காகம், நீண்ட பெரிய மரத்தின் மேல் உட்கார்ந்து தன் சுபாவப்படி இங்கும் அங்கும் பார்த்தவாறு இருந்தது. அப்போது அங்கு ஒரு கலைமான் ஓடிவந்து மரத்தடியில் நின்றது.
எலி: ஏன் இப்படி ஓடிவருகிறாய்?
மான்: வேடர் பயத்தினால் இங்கிருக்கலாம் என்று ஓடிவந்தேன். என் பெயர் சித்திராங்கன்.
ஆமை: பயப்பட வேண்டாம். இது உன் வீடு. நாங்கள் உன் சேவகர்கள் என்று எண்ணிக் கொண்டு சுகமாக இரு.
இதனால் மானும் இம்மூன்றுடனும் நட்புக் கொண்டது. நான்கும் சுகமாக இருந்து கொண்டிருந்தன.
ஒருநாள், புல்மேயச் சென்ற மான் இரவாகியும் திரும்பிவரவில்லை. அதைக் கண்டு பிற பிராணிகள் மூன்றும் கவலையடைந்தன. மறுநாள் விடியற்காலை காக்கை பறந்து சென்று சுற்றிப் பார்க்கும்போது, மான் ஒரு வலையில் அகப்பட்டிருப்பதைக் கண்டது.
காகம், மானிடம்: நண்பனே, உனக்கு இந்த அவஸ்தை எவ்வாறு நேரிட்டது?
மான்: இப்போது இதைக் கேட்டுப் பயனில்லை. நீ போய் இரண்யகனை அழைத்து வா. வேடன் வருவதற்குள் அவன் வந்து கட்டுகளை அறுத்துவிட்டால்தான் நான் தப்ப முடியும்.
காகம் விரைந்து சென்று, இரண்யகனை அழைத்துவந்தது. ஆமையும் மெதுவாக அந்த இடத்திற்கு வரலாயிற்று.
இரண்யகன்: நீ தான் மிகவும் சாமர்த்தியசாலி ஆயிற்றே, எவ்விதம் வலையில் மாட்டிக்கொண்டாய்?
மான்: இப்போது என்னைச் சீக்கிரம் விடுவி. முன்பே குட்டியாக இருந்தபோது நான் வலையில் மாட்டிக் கொண்டு ஒருமுறை துன்பமடைந்தேன். அந்த பயத்தினால் இப்போதும் சிக்கிக் கொண்டேன்.
அப்போது அங்கே வந்த ஆமை: நண்பனே, இப்போது காலதாமதம் செய்யலாகாது. வேடன் வந்தால் சித்திராங்கனைப் பிடித்துக் கொள்வான் என்ற கவலையாய் இருக்கிறது. மனத்தில் இருப்பதை அறிகின்ற நண்பனும், மனோகரமான பெண்ணும், பிறர் துக்கம் அறிந்து உதவும் செல்வந்தனும் கிடைப்பது அருமை.
இப்படி அது சொல்லிக்கொண்டிருக்கும்போதே வேடன் தொலைவில் வந்து கொண்டிருப்பதை லகுபதனன் கண்டது. “வேடன் வந்து விட்டான். இப்போது பெரிய சங்கடம் நேரிட்டுவிட்டதே” என்றது. அதைக் கேட்ட இரண்யகன், வெகுவேகமாக மானின் வலையை அறுத்து அதை விடுவித்தது. காகம், எலி, மான் ஆகிய மூன்றும் வேகமாக ஓட்டம் பிடித்தன. ஆனால் ஆமை மட்டும் தன் வழக்கமான மந்த நடையில் சென்றவாறு இருந்தது.
வேடன்: பெரிய பிராணியைப் பிடிக்க முடியவில்லை. ஆமையாவது கிடைத்ததே, சரி.
ஆமையைப் பிடித்துத் தன் வில்லில் கட்டிக்கொண்டு வேடன் நடந்தான். இதைக் கண்ட பிற மூன்று பிராணிகளும் அவன் பின்னால் போகத் தொடங்கின.
இரண்யகன்: ஒரு சங்கடம் நிவர்த்தி ஆவதற்குள் மற்றொன்று வந்து நேரிட்டு விட்டது. வேடன் தொலைவில் செல்வதற்கு முன் மந்தரனை விடத்தக்க உபாயத்தைச் செய்யவேண்டும்.
மற்ற இரண்டும்: என்ன செய்யலாம், சொல்.
இரண்யகன்: அதோ பக்கத்தில் ஓர் எரிக்கரை இருக்கிறது. சித்திராங்கன் ஏரிக்கரையில் செத்தவனைப் போல் சென்று கிடக்கட்டும். அவன் மேல் காகம் உட்கார்ந்து கொத்துவதுபோல் நடிக்கட்டும். அப்போது வேடன் மான் இறந்துவிட்டதென்று நம்பி, மந்தரனை பூமியில் வைத்துவிட்டு மானுக்கு அருகில் செல்வான். அதற்குள் ஆமையின் கட்டை நான் விடுவித்து விடுவேன். ஆமை நீரில் இறங்கி ஒளிந்துகொள்ளட்டும்.
இதைக் கேட்ட எல்லாப் பிராணிகளும் அவ்விதமே செய்தன. மந்தரனை விடுவித்தன. வாய்த் தவிடும் போய், அடுப்பும் நெருப்பும் இழந்த பெண் போல அந்த வேடன் வெட்கி வருத்தமடைந்தான்.
“கைக்கு வராத பெரிய லாபத்தை நாடி, கையில் இருந்த சிறிய லாபத்தையும் இழந்துவிட்டேனே. அதிக ஆசை அதிக நஷ்டம். கிடைத்தது மட்டும் போதும் என்று நினைப்பவனே மகாபுருஷன்”
இவ்வாறு எண்ணிக்கொண்டு வேடன் வீட்டுக்குச் சென்றான். காகம், ஆமை, எலி, மான் என்ற நான்கும் மகிழ்ச்சியுடன் தங்கள் இடங்களில் முன்போல வாழ்ந்திருந்தன.
இரண்டாம் பகுதி முற்றிற்று.
மூன்றாம் தந்திரம்
சந்தி விக்கிரகம் அல்லது அடுத்துக் கெடுத்தல்.
சோமசர்மா தன் மாணவர்களாகிய அரசகுமாரர்களிடம் சொல்கிறான்:
“முன்னே பகைவர்களாக இருந்தவர்கள் இப்போது நம்மிடம் வந்து விசுவாசம் காட்டினால் அதில் நம்பிக்கை கொள்ளலாகாது. நம்பினால், காகம் எப்படி கோட்டான்களின் குகையைக் கொளுத்தி நாசம் செய்ததோ அப்படி ஆகிவிடும்”.
அரசகுமாரர்கள்: அது எப்படி? அந்தக் கதையைச் சொல்லுங்கள்.
சோமசர்மா: தென்தேசத்தில் மயிலை என்றொரு நகரம். அதன் அருகில் ஒரு பெரிய ஆலமரத்தில் மேகவர்ணன் என்று ஒரு காக அரசன் தன் கூட்டங்களோடு வாழ்ந்து வந்தது. அப்போது மலைக்குகை ஒன்றிலிருந்து அங்கே உருமர்த்தனன் என்னும் கோட்டான்களின் அரசன், தன் கூட்டத்தோடு இரவு நேரத்தில் அங்கே வந்தது. இரவில் காகங்களுக்குக் கண் தெரியாது ஆகையால், அகப்பட்ட காகங்களை எல்லாம் கொன்றுவிட்டு நாள்தோறும் அது போய்க்கொண்டிருந்தது. அந்த இடத்தை விட்டுச் செல்வதைவிட வேறு வழியில்லை என்று காகங்களுக்கு ஆகியது. அப்போது மேகவர்ணன், தன் மந்திரிகளாகிய ஐந்து காகங்களை அழைத்துக் கூறலாயிற்று:
“நம் பகைவர்களாகிய கோட்டான்கள் இரவுதோறும் வந்து நம் கூட்டத்தினரைக் கொல்கிறார்கள். நமக்கோ இரவில் கண்தெரிவதில்லை. மேலும் அவர்கள் இருக்கும் இடமும் தெரியவில்லை. அறிந்தாலாவது, பகலில் அவர்களுக்குக் கண் தெரியாமல் இருக்கும்போது நாம் அங்குச் சென்று அவர்களைக் கொல்லலாம். பகைவர்களை அசட்டை செய்தால் அது நோய் போல் பற்றிப் பெருகி நமக்குப் பொல்லாங்கு விளைவிக்கும். ஆகவே தக்கதொரு உபாயத்தை நீங்கள் சொல்லவேண்டும்.
மந்திரிகள், அரசன் கேட்பதற்கு முன்பே தக்க உபாயத்தைச் சொல்ல வேண்டும். இல்லாவிடில் கேட்டபிறகாவது சொல்லவேண்டும். அப்படியும் செய்யாமல் சும்மா இருந்து இச்சகம் பேசுபவன் அரசனுக்கு எதிரியே ஆவான் என்று தங்களுக்குள் அமைச்சுக் காகங்கள் பேசிக்கொண்டன. என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கத் தொடங்கின. அப்போது அவற்றில் முதல் அமைச்சனாகிய உத்தமஜீவி என்பது காக அரசனை நோக்கிச் சொல்லத் தொடங்கியது:
“மகாராஜா, வலியவர்களுடன் பகை கொள்ளலாகாது. சமாதானமே தகுந்தது. ஆனால் அப்படியே இருக்கத் தேவையில்லை. பகைவர்களை வணங்கிக் காலம் பார்த்து மோசம் செய்பவர்கள் சுகம் அடைகிறார்கள். ஆற்றில் நீர் பெருகிவரும்போது வணங்குகின்ற செடி நாசம் அடையாமல் பிறகு நிமிர்கிறது. நெருக்கடியான காலத்தில் துஷ்டர்களுடன் சமாதானம் செய்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால், பிறகு எல்லாச் செல்வத்தையும் சம்பாதிக்கலாம்.
மேலும் தனக்குப் பலபேர் பகைவர்கள் இருந்தால், அவர்களில் ஒருவனோடு உறவு கொண்டு எல்லாரையும் கெடுக்க வேண்டும். நிலம், நட்பு, பொருள் ஆகியவை தன்னிடமும் பகைவனிடமும் எவ்வளவு உள்ளன என்று ஆராய்ந்து, இயலுமானால், பின்பு அவனை எதிர்க்க வேண்டும். வெற்றியும் தோல்வியும் ஒரேபுறம் இருப்பதில்லை. ஆகவே மாற்றானுடைய பலத்தையும் பலமின்மையையும் பார்த்துக் கொண்டே இருந்து காலம்பார்த்துக் காரியம் ஆற்றவேண்டும் என்று பெரியோர் சொல்லியிருக்கிறார்கள்.
இவ்வாறு அது கூறியதும் அரசன், இரண்டாம் அமைச்சனிடம் “உன் கருத்து என்ன, சொல்” என்று கேட்டது.
(தொடரும்)