சோகமும் சிரிப்பும்

ஒரு சொற்பொழிவாளர், சபையில் ஒரு நகைச்சுவைத் துணுக்கினைக் கூறினார். அது நன்றாகவே இருந்ததால், எல்லாரும் வெடித்துச் சிரித்தனர். ஒரு நிமிடத்திற்குப் பிறகு அதே நகைச்சுவைத் துணுக்கைக் கூறினார். இப்போது மரியாதைக்காகச் சிலர் மட்டும் சிரித்தனர். மீண்டும் மீண்டும் அதே நகைச்சுவைத் துணுக்கை ஓரிருமுறை சொன்னார்.
சபையில் யாருமே சிரிக்கவில்லை. இப்போது ஒரு புன்சிரிப்போடு அவர் கூறினார்: “ஒரே ஜோக்கை உங்களால் மறுபடி மறுபடி ரசிக்கவோ அதற்குச் சிரிக்கவோ முடியவில்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையில் ஒரே விஷயத்திற்கு ஏன் மறுபடி மறுபடி கவலைப்பட்டு அழுகிறீர்கள்?”


கருப்பும் வெறுப்பும்

ஒரு விமானத்தில் வெள்ளைப் பெண்மணி ஒருவர்-ஏறத்தாழ வயது 50 இருக்கும்-அமர்ந்திருந்தார். அவர் பக்கத்தில் ஒரு கருப்பர். இதனால் கலவரமடைந்த அந்தப் பெண்மணி விமானப்பணிப்பெண்ணை அழைத்தார். “என்னை ஒரு கருப்பருக்குப் பக்கத்தில் அமர வைத்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட வெறுக்கத்தக்க குழுவைச் சேர்ந்த ஒருவரின் பக்கத்தில் உட்கார எனக்கு விருப்பமில்லை. எனக்கு வேறு இடம் கொடுங்கள்” என்றார். “அமைதியாக இருங்கள், விமானத்தின் எல்லா இருக்கைகளும் பூர்த்தியாகி விட்டன. ஏதாவது இடம் கண்டுபிடிக்கமுடியுமா என்று பார்க்கிறேன்” என்றார் பணிப்பெண். சற்றுநேரம் கழித்து அவர் திரும்பி வந்தார். “நான் கேப்டனிடம் பேசினேன். அவரும் எல்லா இருக்கைகளும் நிரம்பி விட்டன என்கிறார். சிக்கனப் (எகானமி) பிரிவில் வேறு இடம் இல்லை. ஆனாலும் முதல் வகுப்பில் ஓர் இடம் இருக்கிறது” என்றார். பெண்மணி எதையும் கூறுவதற்கு முன் அவரே தொடர்ந்தார்: “எகானமி வகுப்பிலிருந்து உயர்வகுப்பில் ஒருவரை அமர வைப்பது எங்கள் கம்பெனியில் வழக்கமில்லை. ஆனால் இம்மாதிரிச் சூழ்நிலையில்-வெறுப்பூட்டுகின்ற ஒருவரின் அருகில் மற்றொருவரை அமரச் செய்வது வெட்கக் கேடானது என்று கேப்டன் கருதுகிறார்” என்று கூறிவிட்டுப் பக்கத்தில் கருப்பரிடம் திரும்பி, “ஆகவே சார், உங்கள் கைப்பொருள்களை எடுததுக் கொள்ளுங்கள், உங்களுக்கு முதல்வகுப்பில் ஓர் இடம் காத்திருக்கிறது” என்றார். இதுவரை நடந்ததை அதிர்ச்சியுடன் கவனித்துக்கொண்டிருந்த பிற பயணிகள், இப்போது எழுந்து நின்று கைதட்டலாயினர்.


தக்காளித் தோட்டம்

ஓர் இத்தாலியக் கிழவர் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் வாழ்ந்துவந்தார். ஆண்டுக்கொருமுறை அவர் தன் தோட்டத்தில் தக்காளி பயிரிடுவது வழக்கம். ஆனால் தரை கெட்டியாக இருந்ததால் அவருடைய வேலை மிகவும் கஷ்டத்தைக் கொடுத்தது. அவருக்கு உதவி செய்வது அவருடைய மகன் வின்சென்ட். ஆனால் இப்போது அவன் சிறையில் இருந்தான்.
இந்தக் கிழவர் தன் நிலையைப் பற்றித் தன் மகனுக்கு எழுதினார்: “அன்புள்ள வின்சென்ட், என்னால் இந்த வருடம் தக்காளித் தோட்டம் வைக்க முடியாதென்று நினைக்கிறேன். எனக்கு வயதாகி விட்டது. அதனால் தோட்டப்பகுதி முழுவதையும் கொத்தமுடியவில்லை. நீ இருந்தால் நிச்சயம் வழக்கம்போலவே தோட்டத்தை உருவாக்குவாய். ஆனால் என்ன செய்வது? அன்புடன், உன் தந்தை.”
அதற்கு அவர் மகனுடைய பதில் வந்தது: “அப்பா, நீங்கள் நிலத்தைக் கொத்தவேண்டாம். அங்கேதான் உடல்கள் புதைக்கப் பட்டிருக்கின்றன.”
அடுத்தநாள் விடியற்காலை நான்கு மணிக்கு அமெரிக்க உளவு நிறுவனத்தினர் வந்து தோட்டப்பகுதி முழுவதையும் கொத்திப் பார்த்தனர். அவர்களுக்கு உடல் எதுவும் கிடைக்கவில்லை.
அதே நாளன்று அவர் மகனிடமிருந்து மற்றொரு கடிதம் கிழவருக்கு வந்தது. “அன்புள்ள அப்பா, இப்போது தோட்டத்தில் பயிரிட முடியும். பயிரிடுங்கள். நான் இருக்கும் நிலையில் இதைத்தான் என்னால் செய்ய முடிந்தது. அன்புடன், வின்சென்ட்.”


சில தகவல்கள்

2015க்குரியனவாக இரண்டு பணிகள் என்னைப் பொறுத்த அளவில் நிறைவேறின. ஒன்று, அருட்தந்தை கிஸ்பர்ட் என்பார் எழுதிய சமூகவியல் நூலை மொழிபெயர்த்தமை. மற்றது, தொல்காப்பியப் பொருள்கோள் பற்றிய சிறு நூல் ஒன்றை எழுதி முடித்தமை. பொருள்கோள் பற்றிய நூல் அடுத்த மாதம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியாக இருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. சென்ற ஆண்டின் இடைப்பகுதியில் உலகத் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரின் சார்பாகப் பேராசிரியர் சதீஷ் இந்தத் தலைப்பில் என்னைப் பேச அழைத்தார். அப்போது ஏறத்தாழ இரண்டு மணிநேரம் பேசப் பட்ட குறிப்புகள்தான் இந்த நூல்வடிவம் பெற்றிருக்கின்றன.