காலப்போக்கில் நமது மதிப்பீடுகள் மாற்றமடைகின்றன. சிலரைப் பற்றிக் காலம் செல்லச் செல்ல உயர்வாக நினைக்கத் தோன்றுகிறது. சிலரைக் காலம் நமது மதிப்பில் தாழ்த்திவிடுகிறது. காலம் செல்லச் செல்ல என் மதிப்பில் உயர்ந்து வந்தவர் நாமக்கல் கவிஞர் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். “பலே பாண்டியா, நீர் ஒரு புலவன், ஐயமில்லை”என்று பாரதியாரின் பாராட்டைப் பெற்றவர் நாமக்கல் கவிஞர். “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு”என்று பாடியவர்.
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”என்ற உப்புச் சத்தியாக்கிரகப் பாட்டின் மூலமாகப் (1930) புகழ்பெற்றவர் நாமக்கல் கவிஞர். காந்தியின் சிறந்த சீடர். இப்பாடலைப் பாடுவதற்கு முன்பே அவர் பல பாடல்கள் இயற்றியிருந்தாலும் இந்தப் பாடல் இயற்றப்பட்ட சூழலும் பாடலின் உத்வேகமும் மக்கள் மத்தியில் அவருக்குச் செல்வாக்கை உருவாக்கின. இப்பாட்டைக் கேட்ட இராஜாஜி, “பாரதியார் இல்லாத குறையை நாமக்கல் கவிஞர் தீர்த்துவிட்டார்”என்று பாராட்டியிருக்கிறார்.
அறிஞர் பா. வே. மாணிக்க நாயக்கரின் சிறந்த நண்பர். திலகரின் செல்வாக்கினால் தொடக்கத்தில் தீவிரவாதியாக இருந்தவர், காலம் செல்லச் செல்ல காந்தியவாதியானார்.
தொடர்ச்சியாகப் புகழ் அவரை வந்தடைந்தாலும், புகழ்வெளிச் சத்தில் (in the limelight) அவர் அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கடைசியாக, தமிழ்நாட்டின் அரசவைக்கவிஞர் என்ற சிறப்பை அவர் 1949இல் எய்தினார்.
அவர் இருக்கும்போதே அவரை இகழ்ந்தவர்கள் உண்டு. “நாமக்கல்லாரை மதியோம்”என்றவர்கள் உண்டு. (நாம், அக் கல்லாரை – அந்தப் படிக்காதவரை என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.) ஆனாலும் பொதுவாக அவரைத் தமிழகம் ஒரு கவிஞராகவே மதித்தது. கவிதைக்கும் பாட்டுக்கும் வேறுபாடு காணுகின்ற நான், அவரைப் பாடலாசிரியராகவே மதித்துவந்துள்ளேன். கவிஞராக அல்ல. ஆனால் இன்று அவரை நான் மதிப்பது, அவர் ஒரு சிறந்த உரைநடையாளர், தன்வரலாற்றாசிரியர், திறனாய்வாளர் என்ற நிலைகளில்.
அவர் ஒரு சிறந்த ஓவியரும்கூட. அவர் பொருளாதார நிலையில் மிகுநிறைவு பெற்றவராக இல்லை. அண்மையில் நாமக்கல் சென்றபோதும், இன்று நூலகக் கட்டிடமாக இருக்கும் அவரது சிறிய வீட்டை-இப்படிப்பட்ட வீட்டிலா வாழ்ந்தார் ஒரு தமிழறிஞர் என்ற வியப்புடன்தான் காண நேர்ந்தது. அவ்வப்போது தம் பொருளாதாரத் தேவைகளுக்கென அவர் ஓவியம் தீட்டி வாழ்ந்து வந்திருப்பதை அறியமுடிகிறது. 1911இல் தில்லிக்குச் சென்ற கவிஞர், ஐந்தாம் ஜியார்ஜ் அரசனையும் அரசியையும் ஓவியம் தீட்டி அதற்காகப் பொற்பதக்கம் பெற்றவர் என்பது அவரது ஓவியத்திறமைக்கு ஒரு சான்று. பொதுவாக அக்காலக் கவிஞர்கள் எல்லாருக்கும் இருந்த பொருளாதார நெருக்கடி இவருக்கும் இருந்தது.
இராமலிங்கம் பிள்ளை 1888ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் நாளன்று பிறந்தவர். தந்தையார் பெயர் வேங்கடராமப் பிள்ளை. அவர் மோகனூரில் ஏட்டாக (ஹெட் கான்ஸ்டபிளாக) இருந்தவர். நாமக்கல் கவிஞருக்கு முன்பு அந்த வீட்டில் ஏழு பெண்கள். பிறவியிலேயே பாடலியற்றும் இயல்பு-அதற்கான போலிசெய்யும் திறன் இராமலிங்கரிடம் இருந்தது. இளமையில் அவர் கூத்துப்பார்க்கச் சென்றார். கூத்துப் பார்க்க வந்த கூட்டம் சலசலப்பு மிகுதியாகப் பேசிக்கொண்டே இருக்கிறது. கோமாளி வந்து, “கூத்துப் பார்க்க வந்தீகளா இங்கு குசலம் பேச வந்தீகளா”என்று பாடுகிறான். கூட்டம் கப்சிப்பென்று அடங்குகிறது. கூத்து முடிந்தவுடன் வீட்டிற்கு நாமக்கல் கவிஞர்-அப்போது அவர் வெறும் இராமலிங்கம்தான்-வருகிறார். அங்கே அவரது அக்காவும் மைத்துனியும் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். உடனே தாம் கேட்ட கூத்துப்பாணியிலேயே, “சாதம் போட வந்தீங்களா, இங்கே சண்டைபோட வந்தீங்களா”என்று பாடுகிறார்.
தம் சிறுபருவக் கல்வியை நாமக்கல்லிலும் கோயம்புத்தூரி லும் முடித்தவர். நான் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய பிஷப் ஹீபர் கல்லூரியில்தான் அவர் 1909இல் தமது பி.ஏ. படிப்பை முடித்தார் என்பதில் எனக்குத் தனிப்பெருமை இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லையே!
இன்று நாமக்கல் கவிஞரை நாம் நினைக்க முதற்காரணமாக இருப்பது அவரது உரைநடைத் திறன்தான். ‘என் கதை’ என்ற பெயரில் சுயவரலாற்று நூலினை அவர் எழுதியுள்ளார். உண்மையிலேயே அவ்வளவு சுவாரசியமாகக் கதை போன்றே செல்கிறது அந்த நூல். “என்ன அழகான உரைநடை!” என்று பாராட்டத் தோன்றுகிறது.
நிறைய ரொமாண்டிக் பாணியிலான கற்பனாம்சம் நிறைந்த கதைகளை நாமக்கல் கவிஞர் எழுதியுள்ளார். அவற்றுள் மிகப் புகழ்பெற்றது மலைக்கள்ளன். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் என்ற புரட்சிநடிகர் நடித்து ஓடு ஓடென்று ஓடிய படமாக அக்கதை எடுக்கப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் வெளிவந்த “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே”என்ற பாடலைத்தான் இன்னமும் மறக்கமுடியவில்லை (நாமக்கல் கவிஞரின் சார்பில் அந்தப் பாடலை இயற்றியவர் கவி கா.மு. ஷெரீப் என்று நினைக்கிறேன்.)
‘அவனும் அவளும்’என்ற கதைக்காவியத்தில் தமது கதாநாயகியை அவர் படைக்கும் முறை சிறப்பானது. ஒரு சமூகச் சீர்திருத்தவாதி என்பதற்கேற்பத் தம் தலைவியை அவர் படைக்கிறார்.
மான் என அவளைச் சொன்னால், மருளுதல் அவளுக்கில்லை
மீன்விழி உடையாள் என்றால், மீனிலே கருமை இல்லை
தேன்மொழிக்குவமை சொன்னால், தெவிட்டுதல் தேனுக்குண்டு
கூன்பிறை நெற்றி என்றால் குறைமுகம் இருண்டுபோகும்
மறுமணம் மாதர்க்கில்லை, மதலையை விதவையாக்கி
நறுமணப்பூவும் இன்றி நல்லதோர் துணியுமின்றி
உறுமணல் தேரை போல ஒளிந்திருந்து ஒடுங்கச் செய்யும்
சிறுமனப் பான்மையே நம் தேசத்தின் நாசம் என்பாள்
என்று செல்கிறது அக்கவிதை.
மலைக்கள்ளனைத் தவிர, தாமரைக்கண்ணி, கற்பகவல்லி போன்ற கதைகள் எழுதியுள்ளார். அவை அவ்வளவு சிறப்புப் பெறவில்லை. அரவணை சுந்தரம், மாமன் மகள் போன்ற நாடகங்களையும் இயற்றியுள்ளார்.
அவருடைய பாடல் தொகுதி வெளிவந்துள்ளது. தேசபக்திப் பாடல்கள், தெய்வ பக்திப் பாடல்கள் எனப் பல பிரிவுகள். ‘இந்தியத் தாய் புலம்பல்’என்ற தொகுதியில் இந்தியாவின் அடிமை நிலையை நன்கு எடுத்துரைத்துள்ளார். தமிழ்மொழியும் தமிழரசும், ஆரியராவது திராவிடராவது போன்ற கட்டுரைகள் பலவும் எழுதியிருக்கிறார். அவை அவரது தெளிந்த பார்வையினைக் காட்டுகின்றன.
திருக்குறளுக்கு இவர் எழுதிய உரை இன்றளவும் மிகச் சிறப்பானதொரு உரை என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் எழுதிய காலத்தில் அதற்கு எதிர்ப்பு மிகுதியாக இருந்தது. திருக்குறளின் சிறப்பினை நிறுவும் வகையில் அவர் எழுதிய நூல்கள் சிறந்த திறனாய்வுகள்.
இவர் பழைய இலக்கியங்களில் ஈடுபட்ட இரசனை உருவவியல் நெறியாளரும்கூட. வெறும் மனப்பதிவுகளை மட்டுமே கூறாமல் முன்பின் தொடர்பும் இயைபும் காட்டி ஒருவாறு தருக்க நெறியில் விளக்குவது இவர் பண்பு. இலக்கிய இன்பம் (1950), வள்ளுவரின் உள்ளம் (1954), திருவள்ளுவர் திடுக்கிடுவார் (1954), கலையின்பம் (1958), கம்பரும் வால்மீகியும் (1956), காந்தியடிகளும் கம்பநாட்டாழ்வாரும் (1964) முதலிய இரசனை நூல்களை எழுதியுள்ளார். இவருடைய ‘இலக்கிய இன்பம்’என்ற நூலை உதாரணமாக இங்குக் காண்போம். இதில் எட்டு கட்டுரைகள் உள்ளன.
‘உடலும் உயிரும்’ என்ற கட்டுரையில், தசரதன் என்ற உடலுக்கு, இராமனே உயிர் என்பதைக் கம்பன் வழி நிறுவுவதோடு, தசரதன் இறப்புக்கு இந்த நிலையே காரணமாக அமைவதைக் காட்டியுள்ளார். ‘போயினான் என்றபோழ்தே ஆவி போயினன்’ என்ற கூற்றின் இலக்கிய அழகைப் பாராட்டு கிறார். ‘மதியின் மறு’என்ற கட்டுரை, கம்பன் ஒவ்வொரு உவமையையும் குறிப்பிட்ட நோக்கத்தோடு மட்டுமே பயன் படுத்தியுள்ள தன்மையைக் கண்டுபிடித்துக் காட்டுகிறது. ‘உதயமும் அஸ்தமனமும்’என்ற கட்டுரை, கம்பன் இருசுடர்த் தோற்றம் மறைவு வருணனைகளைக் காரணத்துடன் இயைத்துக் காட்டுகிறது.
நாமக்கல் கவிஞர் கம்பரின் திறனாய்வாளர்களுள் முக்கிய இடம் பெறுபவர் என்பதை அவர் நூல்களைப் படிக்கும் எவரும் ஒப்புக்கொள்வர். ‘கம்பரும் வால்மீகியும்’என்ற ஒப்பீட்டு நூலில், மனித காதையான வால்மீகியின் காதையை கம்பர் தெய்வமாக் காதையாக எவ்விதம் திட்டமிட்டு மாற்றியமைத்துள்ளார் என்பதை விளக்குகிறார்.
1971இல் பத்மபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1972இல் மாரடைப்பால் அவர் மறைந்தார்.