அப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க இயலாது. அவருடைய முதல் திரைப்படம் பதேர் பாஞ்சாலி 1955இல் வெளிவந்தது. தொடர்ந்து அபராஜிதா என்ற படம் 1956இலும், அப்பு சம்சார் என்ற படம் 1959இலும் வெளிவந்தன. இந்த மூன்று படங்கள்தான் அப்பு மூவரிசை (அப்பு டிரைலஜி) என்று அழைக்கப்படுகின்றன. மூன்றிலும் கதாநாயகன் ஒருவனே-அபூர்வகுமார் ராய், சுருக்க மாக அப்பு.
1975இல் திருச்சியில் பணிக்குச் சென்ற நான், அங்கே உள்ள சினிஃபோரம் என்ற திரைப்படக் கழகத்தில் 1978இல் சேர்ந்தேன். அங்கே முதன்முதலாக நான் பார்க்க வாய்ப்புக் கிடைத்த படங்களில் ஒன்று பதேர் பாஞ்சாலி. பிறகு இரண்டு மூன்றாண்டுகளுக்குள் திரைப்பட விழாக்களில் பிற இரண்டு படங்களையும் பார்த்துவிட்டேன். பதேர் பாஞ்சாலியின் கதையைச் சுருக்கமாகச் சொன்னால், ஹரிஹர் என்ற வங்காளி பிராமணனின் கதை. அவனுக்கு இரண்டு குழந்தைகள்- அப்பு, துர்க்கா. இந்த இரண்டு குழந்தைகளையும் சத்யஜித் ராய் படைத்திருக்கும் விதம் மனதை உலுக்கும். எத்தனையோ காட்சிகள் ஓவியம் போல நினைவில் நிற்கின்றன. உதாரணமாக மழைக்காட்சி, இரயிலைப் பிள்ளைகள் ஓடிச் சென்று பார்க்கும் காட்சி என.
ஒரு விஷயம்-இந்த மூன்று படங்களையுமே சத்யஜித் ராய், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயில் எடுத்தார் என்கிறார்கள். பதேர் பாஞ்சாலிக்கு ஆன செலவு ஏறத்தாழ முப்பதாயிரம் ரூபாய் மட்டுமே. இன்றைக்கு நூறு மடங்கு விலைவாசி உயர்ந்திருப்பதாக வைத்துக்கொண்டாலும் இன்று முப்பது லட்சம் ரூபாயில் ஒரு திரைப்படம் எடுப்பதற்குச் சமம் இது. நம் தமிழ்த் திரைப்படக் காரர்கள் ஒரு காட்சிக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தாலும் இந்தப் படம்போல ஒரு காவியத்தை உருவாக்க முடியவில்லை.
அபராஜிதா என்றால் வெல்லமுடியாதவன் என்று அர்த்தம். இது அடுத்த திரைப்படம். முன் கதையில் பிழைப்புக்காக வாரணாசிக்குச் சென்ற குடும்பம் மறுபடியும் வங்காள கிராமத்திற்கே திரும்பிவருகிறது. எப்படியோ அப்பு நன்றாகப் படித்து முன்னேறுகிறான். அவன் தாய் இறந்துவிடுகிறாள்.
மூன்றாவது திரைப்படம், அப்பு சம்சார் (அப்புவின் திருமணபந்தம்). தொடர்ந்து அப்பு ஓர் எழுத்தாளனாக முயலுவதையும், ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிவருவதையும், குழந்தைப் பேற்றின்போது அவள் இறந்துவிடுவதையும், துறவுமனப்பான்மையோடு குழந்தையை விட்டுச் செல்லும் அப்பு, பின்னர் திரும்பிவந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதையும் காட்டுகிறது.
உலகின் சிறந்த கலைத்திரைப்படங்களின் வரிசையில் இடம்பெறும் இந்தப்படங்கள், திரைப்படக் கல்லூரிகளில் பயில்பவர்களுக்குப் பாடங்களாகவும் வைக்கப்படுகின்றன.
மூன்று படங்களையும் பார்க்கமுடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பதேர் பாஞ் சாலியை மட்டுமாவது பாருங்கள். அரியதோர் வாய்ப்பு என்றே அதனை நான் நினைக்கிறேன். (ஒரு குறிப்பு-சத்யஜித் ராய், ஒரு திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல, நல்ல சிறுகதை எழுத்தாளரும்கூட. அதைப் பற்றி இன்னொரு சமயம்.)