கேள்வி (39): குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததா? அது பற்றித் தங்கள் கருத்தென்ன?
நண்பர் ஒருவர் தான் குமரிக்கண்டம் என்ற நூல் ஒன்று எழுதப்போவ தாகக் கூறி அதுபற்றி என்னிடம் அபிப்பிராயம் கேட்டிருந்தார். அவர் எழுப்பிய இந்தக் கேள்விக்கு என் எதிர்வினையைப் பொதுவாகச் சிறகில் தெரிவிக்க வேண்டியே இந்த பதில்.
குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்திருக்கலாம். லெமூரியாக் கண்டம் என்ற ஒன்றுகூட-அதைப்போல-இருந்தததாகச் சொல்கிறார்கள். இவையெல் லாம் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலப்பகுதிகள். அப்போது பூமியின் தோற்றமே வேறாக இருந்தது. இப்போதுள்ள பல நிலப்பகுதிகள் துண்டுபட்டும், பல நிலப்பகுதிகள் ஒன்றாக இணைந்தும் தோற்றமளித்தன. எந்தக் கலைக்களஞ்சியத்திலும் இதைப்பற்றிய தகவல்களைக் காணலாம்.
ஆனால் குமரிக்கண்டத்தில் ஏழுஏழு நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன, அவற்றில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை. (நண்பர் அவற்றின் பெயர்களையெல்லாம் வேறு தவறாகக் குறிப்பிட்டிருந்தார்.) சிலப்பதிகாரத்தில் “குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று வருவதெல்லாம் தொல்பழம் மனத்தின் நினைவுகள் அல்லது கூட்டு நனவிலியின் நினைவுகள் என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் கொள்வார்கள்.
ஏறத்தாழப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் இருந்ததாகச் சொல்லப்படுவதெல்லாம் கட்டுக்கதை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொழியே பிறக்காத கற்கால மனிதர்கள்தான் வாழ்ந்தார்கள். இன்று போற்றப்படுகின்ற எகிப்திய நாகரிகம் (பிரமிடுகளையெல்லாம் வானியல் அறிவோடு கட்டியவர்கள்) என்பதே இன்றைக்கு ஐந்தாயிரம்-ஆறாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுதான். சிந்து வெளி நாகரிகமும் அவ்வாறே. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கம் இருந்தது என்பது பழங்காலக் கற்பனை. ஒருவேளை ஆரியர்கள் அவர்களுடைய வேதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கதைகட்டியதற்கு மாற்றாகத் தமிழ்ப்புலவர்கள் இப்படிக் கதைகட்டினார்களோ என்னவோ!
லெமூரியா என்ற பெயர், லெமூர் என்ற ஆதிக்குரங்கின் பெயரால்தான் வருகிறது. இதனால்தான் புதுமைப்பித்தன் முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்று சொல்வதில் தமிழர்களுக்கு ஆசை என்று கிண்டல் செய்தார் போலும்.
இன்று நாம் செய்ய வேண்டியது லெமூரியாவையோ குமரிக் கண்டத்தையோ தேடுவது அல்ல. அப்படித் தேடிக் கண்டுபிடித்தாலும் அங்கு தமிழர்கள்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. வேறு கற்கால இனம் ஏதேனும் வாழ்ந்திருக்கவும் கூடும். ஏனென்றால் இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய நிலப்படங்களில் ஆப்பிரிக்காவும் இந்தியத் துணைக்கண்டப் பகுதியும் இணைந்திருந்ததாகக் காட்டப்படுகிறது.
இப்போது நாம் செய்யவேண்டியது, இன்று தமிழினம் தன்னை எப்படித் தற்காத்துக் கொள்ளப்போகிறது, எப்படி எதிர்காலத்தின் சவால்களை எதிர் கொண்டு வாழப்போகிறது என்பது பற்றிய சிந்தனைதான். குமரிக்கண்டம் இருக்கட்டும், இன்று போகும் போக்கில் இனி ஐந்து முதல் பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் விவசாயமே இருக்காது, நிலம் எல்லாம் பிளாட்போட்டு விற்பனை செய்யப்பட்டு விடும், சோற்றைவிடுங்கள் ஐயா, குடிக்கத் தண்ணீருக்கு எங்கே போகப்போகிறீர்கள்? அரசியல்வாதிகளுக்கு இதுபற்றிய அக்கறை எல்லாம் இல்லை
உணவு உடை உறைவிடம் என்றார்கள் பழங்காலத்தில். உணவையும் (விவசாயத்தையும்) உடையையும் (நெசவுத்தொழிலையும்) ஒழித்துவிட்டு வெறும் கான்கிரீட் காடுகளில் (உறைவிடம்) வாழ்ந்துவிட முடியும் என்ற எண்ணமா?
அன்பர்களே, தயவுசெய்து தமிழ்மீது உள்ள அக்கறை என்றபெயரில் குமரிக் கண்டத்தையும் பழங்கால நினைவுகளையும் தேடுவதைவிட்டு இன்றைக்கு வாழ்வதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி யோசியுங்கள்.
கேள்வி (40): அப்படியானால் தமிழ்நாடு வளமற்ற நாடு, தமிழனுக்குச் சரித்திரம் தேவையில்லை என்கிறீர்களா?
மேற்கண்ட (39)ஆம் கேள்விக்குரிய பதிலை என் மாணவர் ஒருவரிடம் காட்டியபோது அவர் கேட்ட கேள்வி இது. ஒரு கேள்வியல்ல, தொடர்பற்ற இரண்டு கேள்விகள் இதில் இருக்கின்றன.
முதல் கேள்விக்கு விடை: ஆம், தமிழ்நாடு வளமற்ற நாடுதான்.
“நாடென்ப நாடா வளத்தன, நாடல்ல
நாட வளந்தரு நாடு”
என்றார் வள்ளுவர். சோற்றுக்கும் தண்ணீருக்கும் பிறரை நாடுகின்ற நாடு எப்படி வளமான நாடாகும்? பக்கத்திலுள்ள நாட்டிடம் தண்ணீர் கேட்டு எத்தனை எத்தனை ஆண்டுகளாகப் பிச்சையெடுக்கிறோம்? அவர்களோ ஈவிரக்க மின்றி (சட்டத்தை விடுங்கள்) ஒருசொட்டுத் தண்ணீர்கூடத் தரமுடியாது என்கி றார்கள்.
தமிழ்நாட்டுக்கென்று ஒரு நதி உண்டா? எல்லா ஆறுகளும் அடுத்த மாநிலத்தில் பிறப்பவை. அவர்கள் மனம்வந்து தண்ணீர் கொடுத்தால்தான் உண்டு.
அதனால்தான் பழங்காலக் கரிகால் சோழன் முதலானவர்களும் பல்லவ மன்னர்களும் பிற்காலச் சோழர் பாண்டியர் விஜயநகர அரசர் முதலான யாவரும் தமிழ் நாட்டில் ஏரி குளங்கள் வெட்டிக் கண்மாய்கள் வைத்துக் காப்பாற்றினார்கள். மழைநீரைத் தேக்கினார்கள். இப்போது அவையெல்லாம் எங்கே? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தனக்கென்று ஓர் ஆறும் இல்லாத ஒரு நாட்டை- முற்றிலு மாகக் குளங்கள் ஏரிகள் கண்மாய்கள் எல்லாம்-நீர்ப்பாசன வசதிகள் முழுதும் பாழாக்கப்பட்டுவிட்ட நாட்டை வளமான நாடு என்று தமிழ்மீதுள்ள, தமிழ் நாட்டுமீதுள்ள அன்பால் சொல்லலாம்-குருட்டுக்குழந்தையையும் கண்ணாயிரமே என்று கொஞ்சுகின்ற தாய்போல. ஆனால் உண்மை? சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றித் தமிழ்நாடு என்று பெயர் வைப்பதில் ஆர்வம் காட்டிய அரசியல்வாதிகளுக்கு “நாடென்ப நாடா வளத்தன” என்ற முதுமொழி தெரியா மலா போயிற்று? மலையைக்கூடத் தின்கிறார்களே ஐயா பணத்துக்கு?
இரண்டாவது கேள்விக்கு பதில்: தமிழனுக்குச் சரித்திரம் தேவைதான். சரித்திரம் என்பது, எழுதியவனின் சார்பு ஓரளவு இருந்தாலும், முதன்மைச் சான்று, இரண் டாம்நிலைச் சான்று ஆகியவற்றின் அடிப்படையில் பிறப்பது. (அன்புகூர்ந்து வரலாறு எழுதும் கலையைச் சற்றே பாருங்கள்). இலக்கியம் போன்ற சான்றுகள் எல்லாம் மூன்றாம்நிலை (டெர்ஷியரி)ச் சான்றுகள்தான். இவை உண்மையாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. குமரிக்கண்டம் போன்றவையெல்லாம் மூன்றாம் நிலைச் சான்றுகளால்கூட நிறுவப்பட முடியாதவை.