சிறுபத்திரிகைகளில் இடம்பெற்ற தமிழ்க்கவிதைகள்

சிறுபத்திரிகைகளில் இடம்பெறும் தமிழ்க்கவிதைகளின் வடிவ உள்ளடக்கக் கோட்பாடுகள்

(“கோட்பாட்டியல் நோக்கில் இக்காலத் தமிழ்க் கவிதை இலக்கியம்”-என்ற தலைப்பில் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம் 1991 அக்டோபர் 4,5,6 தேதிகளில் நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை)

கட்டுரையில் புகுமுன் சில கருத்துகள்

1. விமரிசன வளர்ச்சியின்றி கோட்பாட்டு ரீதியாகக் கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதோ அவற்றைத் தொகுப்பதோ இயலாது. விமரிசனத்திற்குப் பிந்தித்தான் கோட்பாடு. எது சிறந்த கவிதை, நல்ல கவிதை, கவிதையல்லாதது என்ற பாகுபாடு இன்றி வெறும் உள்ளடக்க வடிவ உத்தி அடிப்படைகளில் கவிதைகளைத் தொகுப்பது தொகுப்பின் நோக்கத்தையே குலைத்துவிடக்கூடும். எழுதப்படுவன எல்லாம் கவிதையல்ல.

2. புதுக்கவிதை என்பது மேலை மண்ணிலிருந்து தமிழ் மண்ணுக்குப் பிடுங்கி நடப்பட்ட ஒரு செடி. சரியான முறையில் அது உருப்பெற்றிருக்கிறதா என்ற ஐயப்பாடும் இருக்கிறது. எனவே தொகுப்புச் செய்வதற்கான அவசரம் உடனடியாக இல்லை. மேலும், மேற்கு நாட்டுக் கவிதைத் தொகுப்புகள் பலவும் கூட, கோட்பாட்டு அடிப்படையில் தொகுக்கப்பட்டவை அல்ல. சிறந்த கவிஞர்கள், அவர்களுடைய தவிர்க்கமுடியாத படைப்புகள் என்ற நோக்கிலேயே தொகுப்புகள் செய்யப்படுகின்றன. தமிழிலும் இப்படிப்பட்ட தொகுப்புகள் (சான்றாக, சி.சு. செல்லப்பா தொகுத்த ‘புதுக்குரல்கள்’) பல வெளிவந்த பிறகே (சங்க இலக்கியம் போலக்) கோட்பாட்டு அடிப்படையில் தொகுக்க வாய்ப்பு உண்டு.

3. மேலும், இன்றைய கவிதைகளைச் சங்கக் கவிதைகள்போலத் தொகுத்து வைத்தால்தான் நிலைபேறடையும் என்று சொல்வதற்கில்லை. படித்தவர்கள் தொகை குறைவாகவும், படித்தவர்களும் ஏட்டில் எழுத்தாணியால் பனையோலைகளில் எழுதிவைத்துக் காப்பாற்ற வேண்டிய நிலையும் இருந்த அக்காலத்தில் சங்க இலக்கியம் போன்ற தொகுப்புகளுக்குத் தேவை இருந்திருக்கலாம்.

இன்று அச்சுச்சாதனத்தில் நூல்கள் வெளிவருகின்றன. அவையும் மைக்ரோ பிலிம் முதலான சாதனங்களால் பாதுகாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே இம்மாதிரித் தொகை நூல்கள் மட்டுமே காலத்தினால் காப்பாற்றப்படும் என்று சொல்ல இயலாது. இனி கட்டுரைக்குள்:

உலகெங்கிலும் சிறுபத்திரிகைகளே தரமான இலக்கியத்தை இந்த நூற்றாண்டில் வளர்த்து வந்திருக்கின்றன. இலக்கியச் சிற்றிதழ்கள் என்னும் நிகழ்வு தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரியதன்று. எல்லா நாடுகளிலும், மொழிகளிலும் சிறுபத்திரிகைகள் உண்டு. புகழ்பெற்ற எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய யுலிசிஸ் என்னும் நாவல், லிட்டில் ரிவியூ என்னும் ஆங்கிலச் சிறுபத்திரி கையில்தான் வெளிவந்தது. டி.எஸ். எலியட்டின் பாழ்நிலம் (வேஸ்ட்லண்ட்) என்னும் கவிதை, டயல் என்னும் சிற்றிதழில் வெளியானது. வில்லியம் ஃபாக்னரின் சிறுகதைகள், விமரிசனங்கள் பல டபுள் டீலர் என்னும் சிற்றிதழில் வெளியாயின. சிற்றிதழ்கள் வாயிலாகவே இலக்கியம் இந்த நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்தமைக்குப் பல சமூகவியற் காரணங்கள் உண்டு. அவற்றைப் பற்றி வேறிடத்தில்.

தமிழில் மணிக்கொடி என்னும் சிற்றிதழே சிறுகதையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்பதைப் பலரும் அறிவர். எழுத்து பத்திரிகை, ஐம்பதுகளின் இறுதிமுதலாகப் புதுக்கவிதை வளர்ச்சிபெறக் காரணமாக அமைந்தது. எழுத்து இதழைத் தொடர்ந்து அறுபதுகள், எழுதுபதுகள், எண்பதுகளில் பல இலக்கியச் சிற்றிதழ்கள் புதுக்கவிதை வளர்ச்சிக்குத் துணைபுரிந்துள்ளன. ந. பிச்சமூர்த்தி முதலாக இன்று எழுதுகின்ற இளங்கவிஞர்கள் வரை, தரமான படைப்பாளிகள் யாவரும் இச்சிறுபத்திரிகைகள் வாயிலாக அறிமுகமாகிப் பிறகு நூல்கள் வெளியிடுவோராக மாறியிருக்கிறார்கள்.

எழுத்து இதழில் புதுக்கவிதைகள் வெளியாகும்வரை, தமிழ்க்கவிதை, ரொமாண்டிக் தன்மை வாய்ந்ததாக அமைந்திருந்தது, அல்லது செய்யுளாக்கலாக இருந்தது. அக்கவிஞர்கள் கையாண்ட கவிப்பொருள்கள், ஏற்கெனவே பலமுறை பலரும் “போட்டிடித்துக் காய்ச்சி வறுத்த கவிப்பொருட்கள்”. (வானம் நிலவு இயற்கை தமிழ் இத்தியாதி). இலங்கைக் கவிஞர் இ. முருகையன் இவற்றை வெளியதுக்கற் கவிதைகள் என்பார். இம்மாதிரிக் கவிதைகளுக்கு முற்றிலும் மாற்றாக எழுத்து இதழ்க் கவிதைகள் அமைந்திருந்தன. இவற்றைத் தனிநபர்க் கவிதைகள் என்று சுருக்கமாகக் கூறலாம். இன்றிருக்கும் நல்ல கவிஞர்கள் பலர், எழுத்து பாரம்பரியத்தில் வந்தவர்கள்.

எழுத்து கவிதைகளின் இயல்புகள்

1. உயிருள்ள கவிதை மொழியை உருவாக்க முயன்றார்கள் எழுத்துக் கவிஞர்கள். தருமு சிவராமு போலப் புத்தம்புதிதாகவோ, நகுலன் போலப் பழைய கவிதைகளின் மொழியைக் கையாண்டோ இதனை உருவாக்க முயன்றனர். அடிப்படையில் பேச்சோசையிலிருந்து மாறுபடுவதாக இருக்கலாகாது.

2. பருமையான அனுபவங்களைப், பருமையான சொற்களால் வெளிப்படுத்துவதாகக் கவிதை அமையவேண்டும். இந்த அனுபவங்கள், உணர்ச்சி அடிப்படையிலோ, புத்திசார்பு கொண்டவையாகவோ இருக்கலாம். எந்தக் கவிதை ஆயினும், புலனுணர்வுக்கு உடனடியாக எட்டும் வகையில், பருமையான சித்திரிப்புப் பெற வேண்டும்.

3. பிரச்சாரத்திலிருந்து கவிதை விலகியிருக்கவேண்டும். கவிஞன் தன்னளவில் நேர்மையாக இயங்கவேண்டும்.

4. சோதனை முயற்சிகள் வேண்டும். இருண்மை, இயல்பு விலகல், படிமச் சேர்க்கைகள் ஆகியவை இருப்பின் நல்லது.

5. போலிசெய்தலைத் தவிர்க்க வேண்டும். கவிஞனின் திறன் என்பது தனித்துவம் சார்ந்தது. பிறர் பாணியில் உருவாகுவதல்ல.

6. ரொமாண்டிசிஸம் கூடாது. கனவுகளை நெய்வதும், தப்பிப்புக்குச் செலுத்துவதும் கவிதையாகாது. அர்த்தமற்ற இலட்சியவாதமும் கூடாது. கூடியவரை யதார்த்தத்தை ஒட்டியிருக்கவேண்டும்.

7. விளம்பர மொழி, சினிமா பாஷை போன்ற பாதிப்புகளும், தேய்ந்துபோன மொழி வழக்குகளும் தவிர்க்கப்பட வேண்டியவை.

8. கவிதையில் கவிஞனின் தனிக்குரல் ஒலிக்கவேண்டும். இன்று வெகுஜன சமூகக் கூக்குரலும், கும்பல் மனப்பான்மையும் ஆதிக்கம் செலுத்தும் காலம். இதிலிருந்து விலகி வாழ விரும்பும் கவிஞன், தனக்கென ஒரு கூட்டுக்குள் ஒடுங்க வேண்டியவனாகிறான். அவன் அவனைப்போன்ற யாரோ ஒருவனுக்காக எழுத வேண்டியவனாகிறான்.

தன்னுணர்ச்சிக் கவிதை, தனிமனித வெளிப்பாட்டின் வடிவம். தனித்த இயல்பு கொண்ட, வித்தியாசமான, இலட்சிய நோக்குக் கொண்ட, கும்பலில் சேர விரும்பாத, தனி-மனிதர்கள் தங்களைப் போன்றவர்களுக்காக உருவாக்கிய வடிவம் தன்னுணர்ச்சிக் கவிதை.

எழுத்துக்கவிதைக்கு இம்மாதிரி வாசகர்களை எட்டுவதே நோக்கம். கும்பலை ஈர்த்துக் கைதட்டல் பெறுவதல்ல. (இவையாவும் முன்பே கூறிய தனிநபர்க் கவிதைகளின் இயல்புகள்).

9. யாப்பினால் செய்யுள் கட்டும் செய்யுள் கொத்தர்களாகக் கவிஞர்கள் ஆக வேண்டாம் என்பதால் பழைய யாப்பும் தேவையில்லை. வசனநடையிலேயே கவிதை இயங்கவல்லது. யாப்பினைப் புறக்கணித்துச் சுதந்திரமாக எழுதலாம். அதேசமயம், யாப்பு, கட்டாயம் புறக்கணிக்க வேண்டியதும் அல்ல.

ஆக, எழுத்து கவிதை, மரபுவழியான மொழியை வெறுத்தது, ரொமாண்டிக் கூச்சல்களை ஒதுக்கியது, கனவுப்படுத்தல்களை விலக்கியது. இலட்சியத்திற்கும் நடை முறைக்குமான இடைவெளியை முக்கியக் கவிப்பொருளாக்கியது. இந்த இடைவெளி, ஒரு பாழ்நிலமாக, அல்லது நரகமாக உணரப்பட்டது. குறுகிப்போன, சாதாரண, சிற்றளவு வாழ்க்கையைச் சிறந்த முறையில் வெளிப்படுத்தும் ஒன்றாக அமைந்தது. விண் முதல் பாதாளம் வரை பாயும் கவிஞனின் சர்வஞானப் பார்வை தூக்கி எறியப் பட்டது. புத்திச் சார்பும், வெளிப்படையாக எல்லா உணர்ச்சிகளையும் தடையின்றிப் பேசுவதும் கவிதைக்குள் வந்தன. எனவே உண்மையிலேயே இது புதுக்கவிதை ஆயிற்று. இவற்றோடு ஒரு துயரம் சார்ந்த வாழ்க்கை நோக்கும் இவற்றில் இருந்தது.

மேற்கூறியவை யாவும் மேற்கு நாடுகளில் நவீனத்துவம் (மாடர்னிசம்) என்று சொல்லப்பட்டதன் இயல்புகள். நவீனத்துவம், புதிய பரிமாணங்களைத் தமிழ்க் கவிதைக்குத் தந்தது. புதிய கவிப்பொருட்களை எழுத்து கவிஞர்கள் பயன்படுத்தினர். (சான்றுக்கு, பசுவய்யாவின், ‘உன் கை நகம்’). எழுத்து கவிஞர்களின் சொல்தேர்வு, படிமங்கள், பேச்சோசை போன்ற பண்புகள், இன்னும் பலவிதக் கவிதை உத்திகளில் ஆர்வத்தைப் புதிய தலைமுறைக் கவிஞர்களிடம் ஏற்படுத்தின.

எழுத்து கவிதைகள் முதல் தலைமுறை என்றால், ஞானக்கூத்தன் தொடங்கி இரண்டாம் தலைமுறை எனலாம். பிரம்மராஜன் போன்றவர்கள் அடுத்த தலைமுறையினர் எனலாம்.

கடந்த முப்பதாண்டுச் சாதனைகள், ஒருபுறம், மனிதனின் அந்நியப்பட்ட நிலையையும், வேரற்ற நிலையையும் காட்டுகின்றன. மறுபுறம், தமிழ்க் கவிஞர்களின் சோதனை முயற்சிகள், சவாலை ஏற்றல் ஆகியவற்றையும் காட்டுகின்றன. ஆனால் இக்கவிதைகள் குறைகளே அற்றவை என்றும் சொல்லமுடியாது.

எழுத்து காலத்திற்கு முன்பு வரை, கவிதை சமூகத்தின் பொதுக்குரலாக கூட்டுக்குரலாக அமைந்திருந்தது. எனவே அதற்கு அங்கீகாரம் எளிதில் கிடைத்தது. ஆனால் எழுத்து கவிதைகளில்தான் கவிதை தனிமனித வெளிப்பாடு என்பது ஓர் அதிர்ச்சியூட்டும் விதத்தில் உணரப்பட்டது. அதனால் இவ்விதக் கவிதையை மார்க்சிய முகாமைச் சேர்ந்தவர்கள் எதிர்த்தனர்.

தனிநபரின் அந்நியமாதலை உணர்த்தும் குரலாக அமையும்போதே கவிதை சமூகப் பிரச்சினைகளையும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். (சான்று, பாப்லோ நெரூடா, பிரெஃட் போன்றோரின் கவிதைகள்). எழுத்து கவிதைகள் இத்தகையனவாக இல்லை. எழுத்து கவிஞர்கள், பாப்லோ நெரூடாவையும் பிரெஃடையும்விட, எஸ்ரா பவுண்ட், டி.எஸ். எலியட் போன்றவர்களையே தங்கள் முன்மாதிரிகளாகக் கொண்டனர். எழுத்து கவிதைகளில் சமூகத்தன்மை அருகியிருந்த காரணத்தினால்தான், வானம்பாடி இயக்கம் தோன்றியது.

எழுத்து கவிதைகளில் பல, படிம நிலையில் சிறப்பாக இருந்தபோதிலும், தமிழின் வழக்குமொழியோசை (இடியம்) சிறப்பான முறையில் இவற்றில் அமையவில்லை. இக்கவிதைகளின் மொழி, ஓர் அந்நியத்தன்மையைக் கொண்டிருந்தது. புதுமைப்பித்தன் கவிதைகளில் காணப்பட்ட இயல்பான பேச்சோசையும் மொழியும் இக் கவிஞர்களிடம் வரவில்லை. இதற்கு யாப்புக் குறைபாடும் ஒரு காரணம். சரியான யாப்பறிவும் பேச்சுமொழியும் இருந்திருந்தால், எழுத்து கவிதை, “யாயும் ஞாயும் யாராகியரோ?” என்ற சங்கக் கவிதையின் நேர்வாரிசாக அமைந்திருக்கும்.

மேலும் எழுத்து கவிதை, கட்டாயம் இருண்மை, தெளிவின்மை, பன்முக அர்த்தநிலை (பொருள்மயக்கம்) போன்றவை கவிதையில் இருக்கவேண்டும் என்பது போன்ற தவறான எண்ணங்களையும் கொடுத்தது. ஆகவே தமிழ்க்கவிஞர்கள் தெளிவும் ஆழமுமே நல்ல கவிதையின் இயல்புகள் என்பதை மறந்தனர்.

வானம்பாடிகளும் சமூகக் கவிதையும்

எழுபதுகளின் இறுதியில் வானம்பாடி இயக்கம் தோன்றியது. இந்த இயக்கத்திலிருந்த கவிஞர்கள் பெரும்பாலோர் தமிழாசிரியர்களாக இருந்தவர்கள். தமிழ் மரபின் வாரிசுகள். இவர்களிடம், கவிதை தனிக்குரலாக அன்றி, சமூகத்தின் பொதுக்குரலாக மறுபடியும் மாறியது. இவர்களின் வரவினால், அதுவரை ஒரு தீண்டாத சாதியாகக் கருதப்பட்டு வந்த புதுக்கவிதை, எல்லாரிடையிலும் ஏற்பும் பெற்றது. தமிழில் மீண்டும் சமூகக் கவிதை பிறந்தது.

ஆனால் வானம்பாடிகளிடம், குணங்களைவிடக் குறைகள் மிகுதியாக இருந்தன. தேவையற்ற வடமொழிக் கலப்பு, அலங்கார நடை, போலிசெய்தல் ஆகியவை மிகுந்தன. அனுபவச் சார்பு குறைந்தது. சமூகக் கவிதை படைக்கவேண்டும் என்று விரும்பிவந்த இவர்கள், உண்மையில் மக்களிடமிருந்து விலகியவர்களாகவும், ரொமாண்டிக் தன்மை கொண்டவர்களாகவும், தப்பிப்புக் கவிதை படைப்பவர்களாகவும் இருந்தனர். அதீதச் சொற்சேர்க்கைகள் (ரத்த புஷ்பங்கள், ராஜராகம், அக்கினி வீணைகள் போன்றவை) இருந்தாலே கவிதையாகிவிடும் என்ற எண்ணம் பிறந்தது.

இவர்களால் வணிக இதழ்களில் புதுக்கவிதைககு அங்கீகாரம் கிடைத்தது. அதனால், துணுக்குகளும், சமத்காரங்களும் மட்டுமே கவிதையாகிவிடும் நிலை ஏற்பட்டது. இதனால் இலக்கியச் சிற்றிதழ்களிலும் அலங்கார வார்த்தைச் சேர்க்கைகள் துணுக்குகள் ஆகியவை கவிதையாகிவிடும் நிலை ஏற்பட்டது. (இம்மாதிரிக் கவிதைகளை இனம் கண்டு, அவற்றை ஒதுக்கிய பிறகே ஒரு சரியான பெருங் கவிதைத் தொகுதியை உருவாக்க முடியும்.)

வானம்பாடி இயக்கத்திற்குப் பிறகு மார்க்சியப் பார்வை கொண்ட சமூகக் கவிதைகள் பிறந்தன. (சான்றுக்கு இன்குலாப்). இவற்றில் அலங்கார வார்த்தைச் சேர்க்கைகள், துணுக்குகள் போன்றவை இருக்காது. ஆனால் அனுபவத்தின் இடத்தைச் சமூகத்தை உற்றுநோக்கிக் காட்சிப்படுத்தும் தன்மை பிடித்திருக்கும். பல சமயங்களில் இவ்வகைக் கவிதைகள் உரத்த குரல் கோஷங்களில் முடியும்.

புதுக்கவிதைகளின் வடிவம்

மேலோட்டமாகப் பார்க்கும்போது, எல்லாப் புதுக்கவிதைகளுமே ஒரேவிதமான அமைப்புக் கொண்டவை போலவே தோன்றுகின்றன. மரபுவழி யாப்புக்கும் சந்தத்திற்கும் பதிலாக, உரைநடையில் இருப்பதுபோல, சிந்தனை அலகு (தாட் யூனிட்) என்பதை வைத்தே புதுககவிதையின் அடிகள் அமைகின்றன. இன்னும் தெளிவாகச் சொன்னால், அண்மையுறுப்புகளின் தொடர்ச்சி, அவற்றின் பின்னர் வரும் தற்காலிக நிறுத்தம் (pause) ஆகியவை, புதுக்கவிதைகளின் ஒலிநயமாக அமைகின்றன. குறுங் கவிதைகள், சிறு கவிதைகள், நெடுங்கவிதைகள் என்று நாம் அடி எல்லையை வைத்து இன்றைய கவிதையைப் பாகுபாடு செய்யலாம். ஆனால் இவற்றிற்கான அடி வரையறை செய்வது எளிதல்ல.

கவிதைப் பகுப்பு

மேற்கில், தன்னுணர்ச்சிக் கவிதை, எடுத்துரை கவிதை, நாடகப்பாங்குக் கவிதை என்னும் மூன்று பிரிவுகள் உண்டு. இவற்றைத் தமிழ்ப் புதுக்கவிதைகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியும்.

பொருள் அடிப்படையில் பிரித்தால், முன்பே கூறியதுபோல, தனிநபர்க் கவிதைகள், சமூகக் கவிதைகள் என்ற பொதுப்பாகுபாடு கிடைக்கும். அல்லது அகம் புறம் என்ற சங்கச் சொற்களைச் சற்றே வேறு அர்த்தத்தில் பயன்படுத்தினால், தனி நபர்க்கவிதைகள் அல்லது எழுத்துபாணிக் கவிதைகளை இன்று அகக் கவிதைகள் என்றும், வானம்பாடிக் கவிதைகள், சமூக நோக்குக் கவிதைகள் ஆகியவற்றைப் புறக் கவிதைகள் என்றும் பிரிக்கலாம்.

1. நாங்கள் நீங்கள் வடிவம்: பெரும்பாலான சமூகக் கவிதைகள், நாங்கள்-நீங்கள் என்ற வடிவம் கொண்டவை ஆயின. இந்தச் சுட்டுச் சொல் வேறுபாடு, மக்கள் நிலையை அல்லது செயல்களுக்கிடையிலான முரணை, அதனால் சமூகச் சார்பைக் காட்டுவதாக அமைகிறது. சான்றாக,

நாங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால்

நீங்கள் சோற்றில் கைவைக்க முடியாது

2. ஏவல் கவிதைகள்: இவ்வகைக் கவிதைகள் ஓர் ஆணையாக, ஏவலாக வடிவம் பெற்றிருக்கும். நீ என்பது ஒடுக்கப்பட்ட சமூக அமைப்பின் உறுப்பினர். நான் வெளிப் படையாக இடம்பெறாது.

பெண்ணே!

உன்னில் பதிந்த அம்பை உருவு!

திருப்பி வீசு!

குறிவைத்து வீசு!

இது இந்தக் கவிதைகளின் பாணி.

3. விவரிப்புக் கவிதை: சமூகத்தின் இருப்புநிலையை மட்டும் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ விமரிசனத்தோடு எடுத்துரைப்பதாக அமைந்தவை இக்கவிதைகள். எடுத்துரைப்புக் கவிதையின் கூறுகள் கொண்டவை. சான்றுக்கு,

கலப்படம் செய்து / கடைவிரித்து / கொள்ளை லாபமடித்து /

மாடிமேல் மாடி கட்டி / மாண்புடன் வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா /

விவஸ்தை கெட்ட / தமிழ் வியாரிபாரிகள் //

எப்போதுமே வியாபாரிகள் முன்தான் /

பல்காட்டிக் கொண்டு நிற்கும் / துப்புக்கெட்ட சமூகம். //

இம்மூன்று வகைக் கவிதைகளிலும், முரண், குறிப்பு முரண், படிமங்கள் போன்றவை சேர்ந்து பலவேறு வடிவ மாற்றங்களை அளிக்கின்றன.

எழுத்து பாணிக் கவிதைகள்

இவற்றின் இயல்புகளை முன்னர்க் கண்டோம். எழுத்துவுக்குப் பின் வந்த நடை, கசடதபற, அஃ, பிரக்ஞை, ழ, கவனம், மீட்சி, போன்ற தூய இலக்கியச் சிற்றிதழ்களில் வெளிவந்த கவிதைகளை எழுத்து பாணிக் கவிதைகள் எனலாம். வானம்பாடிக் கவிதைகளையும் சமூகக் கவிதைகளையும் முன்பு பகுத்தது போன்ற அடிப்படையில் இவற்றையும், நான்-கவிதைகள், நாம்-கவிதைகள், புறப்பொருள் கவிதைகள் என மூவகையாகப் பகுக்கலாம். நான்-கவிதைகள் பொதுவாக, தன்னுணர்ச்சிப் பாங்கா னவையாகவும், நாம்-கவிதைகள் நாடகத் தன்மை கொண்டவையாகவும், புறப்பொருள் கவிதைகள் என்பன தற்சார்பற்ற கவிதைகளாகவும் அமைவதைக் காணலாம்.

நான்-கவிதைகளுக்கு உதாரணம்

காக்கையை எனக்குத் தெரியும்

யாருக்குத்தான் தெரியாது

ஆனால் இந்தக் காக்கையை எனக்குத் தெரியாது

எனக்கு நேரே ஏதோ என்னிடம்…..(ஞானக்கூத்தன், ழ இதழ்)

 

நாம்-கவிதைகளுக்கு உதாரணம்

உனக்கும் எனக்கும் இடையில்

கணக்கில்தான் வேறுபாடு

உன் பலநூறு வருடங்கள்

என் சிறு பொழுதில் விரைந்தோடும்….(ஆனந்த், ழ)

புறப்பொருள் கவிதைகள்-உதாரணம்

மல்லாந்த மண்ணின் கர்ப்ப

வயிறெனத் தெரிந்த கீற்றுக்

குடிசைகள் சாம்பற்காடாய்ப் போயின……

இரவிலே பொசுக்கப்பட்ட அனைத்துக்கும் அஸ்தி கண்டார்

நாகரிகம் ஒன்று நீங்க (கீழ்வெண்மணி, ஞானக்கூத்தன்)

இன்னும் பலவேறு முறைகளிலும் உள்ளடக்க அடிப்படையிலும், எடுத்துரைப்பு முறை அடிப்படையிலும் வடிவ அடிப்படையிலும் இக்கவிதைகளைப் பகுக்கமுடியும். சான்றாக, குறியீட்டுக் கவிதைகள், படிம அடுக்குக் கவிதைகள்….என்பதுபோலப் பகுத்தல் ஒருவகை முறை. உணர்ச்சி வெளிப்பாட்டுக் கவிதைகள், சுயசிந்தனைக் கவிதைகள்….என்பதுபோலப் பகுத்தல் இன்னொரு முறை. மோன்டாஜ் கவிதைகள், கொலாஜ் கவிதைகள் என்பது போலப் பகுத்தல் வேறொரு முறை. எந்தப் பகுப்பிலும் அடக்கமுடியாத சோதனைமுறைக் கவிதைகளும், சர்ரியலிசக் கவிதைகளும் உள்ளன.

ஆட்டோமேடிசக் கவிதைகள் அல்லது தாமே நிகழும் கவிதைகள் என்று ஒரு வகை உண்டு. இத்தகைய முயற்சிகள் சில பிரம்மராஜனாலும், கலாப்ரியாவாலும் செய்யப்பட்டுள்ளன.

சோதனைக் கவிதைகளுக்கு இரு உதாரணங்கள் தரலாம். மீட்சி-33 இல், நாகூர் ரூமி தமிழில் ஒரு கம்ப்யூட்டர் கவிதை என எழுதியுள்ளார். பேசிக் மொழியின் சில கட்டளைகளைப் பயன்படுத்தி கணினித்திட்டம் எழுதும் முறையில் இது எழுதப்பட்டுள்ளது. இக்கட்டளைகளின்படி வாசித்து இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள (?) வேண்டும். விருட்சம்-3இல் நகுலனின் கவிதை இப்படி அமைகிறது.

நில்-போ-வா

வா-போ-நில்

போ-வா-நில்

நில்-போ-வா?

உத்தி அடிப்படையில் நோக்குதல்

கவிஞன், தான் உணர்த்த விரும்புவதை (அல்லது தனது நோக்கத்தினை) நிறை வேற்றுவதற்காக வடிவத்தில் செய்யும் எவ்விதத் தொழில் நுட்பத்தினையும் உத்தி என்கிறோம். தமிழ்க்கவிதைகளில் காணப்படும் முக்கிய உத்தி முரண் (காண்ட்ராஸ்ட்). சமூகக் கவிஞர்களால் வெறுப்பூட்டக்கூடிய அளவுக்குப் பயன்படுத்தப்பட்ட உத்தி இது. (நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம், ஆடைகள் வாங்க….இது போல)

ஞானக்கூத்தன் எள்ளலைச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். (தோழர் மோசிகீரனார், பரிசில் வாழ்க்கை போன்றவற்றைப் பார்க்க). போலிசெய்து எள்ளல் (பேரடி) என்பதும் காணக்கிடக்கிறது. சான்றாக:

களப்பிரர்கள் நாட்டில் திரும்பிவந்த காலம்

இருளாடைக் காரர்கள் ஆளுகின்ற காலம்

…..வாளாத் தமிழர்கள் மங்கிவிட்ட காலம்

மக்கள் வாழ்வு திரைப்படமாய் மாறிவிட்ட காலம் (காலம்-காசியபன், ழ இதழ்)

நந்திக் கலம்பகக் கவிதையைப் போலிசெய்து எள்ளும் கவிதை இது.

சிலசமயங்களில் துணுக்குகள், ஜோக்குகள்கூடப் புதுக்கவிதைகளாய் மாறிவிட்டிருக்கின்றன. சான்றாக,

தெருவெங்கும் பான்சாய்க்காரர்

என் தோட்டத்தைக் காப்பாற்ற வேண்டும். (அப்துல் ரகுமான், அன்னம்விடுதூது)

ஹைக்கூ பாணியில் சில கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் சில நல்ல படிமங்கள் காணக்கிடைக்கின்றன.

இப்படிப் பலவகைகளாகப் பகுத்தாலும் எந்த ஒன்றும் முடிந்த முடிபாக அமைய இயலுமா என்பது அடிப்படைக் கேள்வி.

கவிதைப் பொருள் அடிப்படையில்

கவிஞர்கள் பெரும்பாலும் தத்தமக்கென உரிய, தங்கள் ஆழ்மனத்தில் புதைந்துள்ள கவிப்பொருளையே ஆளுகின்றனர். சான்றாக, பழமலை, விளவை ராமசாமி போன்றோரின் பழையநினைவுக் கவிதைகள். தேவதேவனின் கவிதைகளில் இயற்கைச் சார்பு. பிரம்மராஜன், சுகுமாரன் போன்றோர் கவிதைகளில் எந்திரமயமாதல் எதிர்ப்பு, அணுசக்தி எதிர்ப்பு, சுற்றுச்சூழல் மாசுபடல் எதிர்ப்பு போன்ற பொருள்கள்.

இவையன்றி ஆன்மிகம் சார்ந்த கவிதைகள், சமூகச் சிக்கல்கள் சார்ந்தவை, பாலியல் சார்ந்தவை, அறிவியல் சார்ந்தவை, அந்நியமாதல் சார்ந்தவை என்றெல்லாம் உள்ளடக்க அடிப்படையில் பகுக்கலாம்.

மேலே வடிவ அடிப்படையில், உள்ளடக்க அடிப்படையில், உத்திகள் அடிப்படையில் பகுக்கச் செய்த முயற்சிகள் யாவும் இறுதியாகக் கோட்பாட்டு ரீதியாகத் துல்லியமாகப் பகுப்பதற்கு உதவ வேண்டும். கடைசியாக நோக்கும்போது, கோட்பாட்டு அடிப்படையில், அகவுலகம் சார்ந்தவை, புறவுலகம் சார்ந்தவை (சமூகம் சார்ந்தவை, சமூக மாற்றத்தை வேண்டுபவை) என இரண்டே வகைகளில் தமிழ்க்கவிதைகளை அடக்கலாம். எந்தக் காலத்திலும், சமூகத்தைப் பற்றிக் கவலைப்பட்டு சமூக மாற்றத்தை விரும்பும் கவிஞர்கள் உள்ளனர். இதற்கு எதிராகத் தங்களுக்குள் அமிழ்ந்து ஆன்மிக, அகவுலகங்களில் மூழ்கிப் படைக்கும் கவிஞர்களும் உள்ளனர். தமிழில் பெரும்பாலும் இவற்றின் நல்ல கலப்பு உருவாகவில்லை. ஆனால் சமூகக் கவிதைகள் எழுதுவோரில் வெளிப்படையான கூச்சலாக எழுதுவோரும், உள்ளடங்கிய தொனியில் எழுதுவோரும் உண்டு. இவர்களுக்குள் கோட்பாடு சற்றே வேறுபடுகிறது. பெரும்பாலும் இதுவரை நோக்கும் போது, எழுத்துபாணிக் கவிதைகள் பெரும்பகுதி அகவுலகக் கவிதைகளாகவும், வானம்பாடிப் பாணிக் கவிதைகளும் மார்க்சிய இதழ்களில் வெளிவரும் கவிதைகளும் புறவுலகக் கவிதைகளாகவும் அமைந்துள்ளன என்று கோட்பாட்டு அடிப்படையில் நோக்கலாம். இன்னும் சற்றே ஆழமாக நோக்கினால், கருத்துமுதல் வாத அடிப்படையிலான கவிதைகள், பொருள்முதல்வாத அடிப்படையிலான கவிதைகள் என்றும் பகுக்கலாம். மேலும் துல்லியமாகக் கோட்பாட்டு நோக்கில் கவிதைகளைப் பகுக்கும் அளவுக்குக் கவிஞர்களும் கோட்பாடுகளை உணரவில்லை, அல்லது கோட்பாடுகளை வெறுக்கின்றனர் என்றும் கூறலாம், விமரிசகர்களுக்கு இடையிலும் கோட்பாட்டு அடிப்படையில் நோக்கும் பார்வை துல்லியமாக உருவாகவில்லை என்றும் கூறலாம்.