ஹாபிட் (Hobbit)

ஜே.ஆர்.ஆர். டோல்கியன் என்பவர் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அற்புதக்கதை எழுத்தாளர். இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அவரது மோதிரங்களின் தலைவன் (Lord of the Rings), ஹாபிட் (Hobbit) போன்ற நூல்கள் மிக அதிகமாக உலகெங்கும் விரும்பிப் படிக்கப்படுகின்றன. இவற்றில் தனித்ததோர் உலகத்தையும் (middle earth) அதற்கான நிலப்பரப்பையும் பலவேறு இனங்களையும் அவர்கள் பேசும் மொழிகளையும் உருவாக்கிச் சாதனை படைத்துள்ளார். அதில் ஹாபிட் என்ற கதையை இப்போது காண்போம்.

ஹாபிட் என்பவர்கள் குறுமனிதர்கள் எனச் சொல்லக்கூடியதொரு இனம். நம் போன்ற மனிதர்களின் உயரத்தில் பாதிக்கும் குறைவான உயரமே உள்ளவர்கள். வளைகளில் வீடுகட்டி வாழ்பவர்கள். நமது கதாநாயகன் அவர்களில் ஒருவன்- பில்போ பேகின்ஸ் என்பது அவன் பெயர். ஹாபிடன் என்ற ஊரில் அவன் அமைதியாக வசித்துவருகிறான். ஆனால் ஒருநாள் அவனைத்தேடி காண்டால்ஃப் என்ற மந்திரவாதியும், பதின்மூன்று குள்ளர்களும் வருவதனால் அவன் வாழ்க்கையே மாறிப் போகிறது. அவர்களின் தலைவன் தாரின் ஓக்கன்ஷீல்ட் என்பவன். அவன் தாத்தா தனது செல்வத்திற்கான வரைபடத்தையும் சாவியையும் காண்டால்ஃபிடம் தந்து மறைந்துவிட்டார். ஸ்மாக் என்ற டிரேகன் அக்குள்ளர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து அவர்களை விரட்டிவிட்டிருக்கிறது. தங்கள் “கொள்ளையனாக” பில்போ இருக்கும்படி அவர்கள் அழைத்துச் செல்கிறார்கள்.

வழியில் மூன்று ராட்சதர்கள் (ட்ரால்கள்) அவர்களைப் பிடித்துக் கொள்கிறார்கள். காண்டால்ஃப் தந்திரமாக அவர்கள்மீது சூரிய ஒளி படும்படியாகச் செய்து அவர்களைக் கல்லாக்கிவிடுகிறார். பிறகு இந்தக் குழு எல்ஃபுகள் (elfs) எனப்படும் தேவதைகளின் இருப்பிடமான ரிவெண்டலில் தங்குகிறது. அவர்களின் தலைவனான எல்ராண்டின் ஆலோசனைப்படி இவர்கள் மிஸ்டி-மலைகளைக் கடக்கப் புறப்படுகிறார்கள். ஒரு பனிப்புயலின்போது ஒரு குகையில் தங்குகிறார்கள். அப்போது காப்ளின்கள் (goblins) எனப்படும் அருவருப்பான தீங்குயிரிகள் அவர்களைத் துரத்துகின்றன. தப்பியோடும்போது பில்போ பின்தங்கி வழிதவறி மலையின் சுரங்கப்பாதைகளில் மாட்டிக்கொள்கிறான். அப்போது அவனுக்கு வழியில் ஒரு பொன்மோதிரம் கிடைக்கிறது. அதைத் தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறான். உடனே மலையடியில் ஒரு நீர்நிலையில் வசிக்கும் கோலும் (Gollum) என்ற தவளை போன்ற உயிரி அவனைப் பிடித்து உண்ண நினைக்கிறது. அந்த மோதிரமும் அது வைத்திருந்ததுதான். விடுகதை மீது அதற்கு ஆசை. விடுகதை சொன்னால் உனக்கு வழிகாட்டுகிறேன் என்று அது சொல்கிறது. மாறிமாறி விடுகதைகள் போடுகின்றனர். ஆனால் விரைவில் விடுகதை தெரியாமல் பில்போ “என் பாக்கெட்டில் என்ன இருக்கிறது?” என்று நேர்க் கேள்வி கேட்கிறான்.

கோலுமுக்கு விடை தெரியாமல் விழிக்கும்போது, தப்பி ஓடுகிறான் பில்போ. அவனுக்குக் கிடைத்தது ஒரு மாயமோதிரம். அதை அணிபவர்கள் யார் கண்ணுக்கும் தெரியமாட்டார்கள். அதை அணிந்துகொண்டு கோலும் இடமிருந்து தப்பி மலையிலிருந்து வெளியே ஓடி, காண்டால்ஃபையும் குள்ளர்களையும் காண்கிறான். ஆனால் குழுவினரிடம் மாயமோதிரம் பற்றிச் சொல்லவில்லை. அவர்களை வார்குகள்(wargs) எனப்படும் பெருஓநாய்கள் துரத்துகின்றன. அவை காப்ளின்களுக்கு நண்பர்கள். நல்லவேளையாக கருடன்கள் அவர்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்கின்றன.

பிறகு அவர்கள் பியோர்ன் எனப்படும் கரடிமனிதனைச் சந்தித்து இளைப்பாறுகிறார்கள். அவர்களின் வழி மிர்க்வுட் எனப்படும் இருட்காட்டைக் கடப்பதாக அமைகிறது. காண்டால்ஃப் இச்சமயத்தில் வேறொரு வேலையாகச் சென்றுவிடுகிறார். பியோர்ன் இவர்களைக் காட்டு எல்லை வரை வந்து விடுகிறான். ஆனால் இவர்கள் வழிதவறி, அரக்கச் சிலந்திகளின் வலைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். பில்போ மட்டுமே தன் மோதிரத்தால் சிலந்திகளிடமிருந்து தப்ப முடிகிறது. ஸ்டிங் என்னும் தனது குறுவாள், மோதிரம் இவற்றால் அவர்களை வலைகளிலிருந்து தப்புவிக்கிறான்.

தப்பிய இந்தக் குழுவை எல்ஃபுகள் கைது செய்கிறார்கள். மீண்டும் பில்போ மட்டுமே தன் மாயமோதிரத்தின் உதவியால் சிறையிலிருக்கும் அவர்களை மீட்டு எல்ஃபுகளுக்கு ஒயின் வரும் பீப்பாய்களில் அவர்களை அடைத்து நதியில் மிதக்கவிடுகிறான். பீப்பாய்கள் லேக்டவுன் என்ற மனித-நகரத்தை அடைகின்றன. அதுதான் குள்ளர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து வைத்திருக்கும் டிரேகனின் தனிமை-மலைக்கு (lonely mountain) அருகிலுள்ள ஒரே மானிட நகரம். அங்கு அனைவரும் இளைப்பாறி உதவி பெறுகிறார்கள்.பிறகு மலைக்குச் செல்லும் அக்குழு, மலைக்குள் டிரேகன் ஸ்மாக் வசிப்பதால் பயந்து ஒரு மலைப்பொந்தில் தங்குகிறது. அதனுள் செல்லும் பில்போ செல்வக் குவியலின்மீது படுத்திருக்கும் டிரேகனைக் காண்கிறான். தொடரும் சந்திப்புகளில் அந்த டிரேகனின் தடித்த உடலில் மார்பில் ஒரு பலவீனமான இடம் இருப்பதை அறிகிறான். அவனிடம் குரோதம் கொள்ளும் ஸ்மாக், வேகமாக மலையை விட்டு வெளியேறி, லேக்டவுன்மீது பறக்கிறது. அதன் பலவீன இடத்தை ஒரு பறவை வாயிலாக அறியும் பார்ட் (Bard) என்ற வீரன் தன் அம்பால் அதை மாய்க்கிறான். ஆனால் அதன் தீமூச்சினால் லேக்டவுன் அழிந்து போகிறது.

இடையில் ஸ்மாக் போய்விட்டதால், குள்ளர்கள் மலையைக் கைப்பற்றித் தங்கள் சொந்தச் செல்வத்தைப் பெறுகிறார்கள். லேக்டவுனைச் சேர்ந்த மனிதர்களும் எல்ஃபுகளும் அச்செல்வத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று மலையின் மீது படையெடுக்கிறார்கள். பில்போ அம்மலைச் செல்வத்தில் முக்கியமான ஒரு பெரிய மாணிக்கத்தை-ஆர்க்கன்ஸ்டோன் என்பதைத் திருடிக் கொள்கிறான். அவன் குள்ளர்களுக்குத் தெரியாமல் வெளிவந்து மனிதர்களுக்கு அதை அளித்து போரைக் கைவிட்டுச் சமரசம் செய்து கொள்ளுமாறு சொல்கிறான்.

இச்சமயத்தில் காப்ளின்கள், வார்குகள் உள்ளிட்ட பெரும்படை அவர்களைத் தாக்குகிறது. மனிதர்கள், எல்ஃபுகள், குள்ளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவற்றை எதிர்க்கிறார்கள். ஐந்து சேனைப் போர் எனப்படும் பெரும்போர் நிகழ்கிறது. ஆனால் மனிதர்கள் தோல்வியுறும் நிலை வருகிறது. அப்போது பியோர்னும், கருடன்களும் வந்து அவர்களைக் காப்பாற்றுகின்றனர். பில்போ மோதிரத்தைத் திருடியதைக் குள்ளர்கள் தலைவனான தாரின் மன்னித்துவிடுகிறான், ஆனால் போரில் இறந்து விடுகிறான். போருக்குப் பின் பில்போ ஹாபிடனுக்குத் திரும்பி மகிழ்ச்சியுடன் வாழ முனைகிறான்.

அசாதாரண சம்பவங்கள் நிகழும்போது எப்படிச் சாதாரண மனிதர்களும் நினைக்க முடியாத அளவு பண்பு மாற்றம் அடைகிறார்கள் என்பதை இந்தக் கதை அற்புதமாக எடுத்துச் சொல்கிறது. தனது ஊரில் பில்போ ஒரு வீரம் தேவையற்ற, சாதாரண ஹாபிட், அவ்வளவுதான். ஆனால் கதையிறுதியில் அவன் வீரனாவது மட்டுமல்ல, நற்பண்புகளிலும் வளர்கிறான். பலமுறைகள் குள்ளர்களை அபாயங்களிலிருந்து காப்பாற்றுவதோடு குள்ளர்களுக்கு உயிரான ஒரு பெரிய மாணிக்கத்தையே போர் நிறுத்தத்துக்காக எதிரிகளுக்கு அளிக்கிறான். இறுதியாக அவனுக்குக் கிடைக்கும் பரிசு ஒரு மாயமோதிரம். இதுதான் டோல்கியனின் அடுத்த பெரும்புத்தகமான “மோதிரங்களின் தலைவன்” கதைக்குக் காரணமாக அமைகிறது.

இலக்கியம்