(ஹெமிங்வே சென்ற நூற்றாண்டின் முக்கியச் சிறுகதையாசிரியர்களில் ஒருவர், அமெரிக்கர். அவருடைய சிறந்த கதைகளில் ஒன்று. “வெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள்”. கதையில் ஆசிரியர் குறுக்கீடு அறவே இல்லை. உரையாடலிலேயே செல்லும் கதை. கடுமையான நாடக நோக்குநிலையில் சொல்லப்படுகிறது.)
*****
ஈப்ரோ (ஸ்பெயின் நாட்டு நதி) சமவெளியின் அப்-புறம் இருந்த குன்றுகள் நீண்டும் வெள்ளையாகவும் இருந்தன. இந்தப்புறம் நிழலோ மரங்களோ இல்லை. இரயில் நிலையம் இரு தண்டவாளங்களுக்கிடையில் வெயிலில் கிடந்தது. இரயில் நிலையத்தின் பக்கத்தில் அண்மையில் அக்கட்டிடத்தின் வெப்பமிக்க நிழல், மது அருந்துமிடம் (பார்). ஈக்களைத் தடுக்க ஒரு திரை, மூங்கில் மணிகளை நூலில் கோத்து நெய்தது, அதன் திறந்த வாயிலில் தொங்கியது. அந்த அமெரிக்கனும் அவனுடனிருந்த பெண்ணும், கட்டிடத்திற்கு வெளியே நிழலில் ஒரு மேஜையின் முன் உட்கார்ந்திருந்தார்கள். மிகவும் வெக்கையாக இருந்தது. பார்சிலோனாவிலிருந்து வரும் இரயில் இன்னும் நாற்பது நிமிடங்களில் வரும். அது இந்த நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று மாட்ரிடுக்குச் செல்லும். (மாட்ரிட்-ஸ்பெயின் நாட்டின் தலை நகரம்.)
“என்ன குடிக்கலாம்?” அந்தப் பெண் கேட்டாள். தலையிலிருந்து தொப்பியைக் கழற்றி மேஜை மீது வைத்தாள்.
“ரொம்ப வெக்கையாக இருக்கிறது” என்றான் அந்த ஆள்.
“பியர் குடிக்கலாம்”.
“டாஸ் செர்விசாஸ்” என்றான் அந்த மனிதன், திரைச்சீலைக் குள்ளாக.
“பெரிசா?” வாயில் அருகிலிருந்து ஒரு பெண்மணி கேட்டாள்.
“ஆமாம். இரண்டு பெரிசு”.
அந்தப் பெண்மணி பியர் நிரம்பிய இரண்டு கண்ணாடி டம்ளர்களையும் இரண்டு கம்பளி அட்டைகளையும் கொண்டுவந்தாள். அட்டைகளை மேஜைமேல் வைத்து, பியர் டம்ளர்களையும் வைத்து அந்த மனிதனையும் பெண்ணையும் நோக்கினாள். பெண், குன்றுகளின் வரிசையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வெயிலில் அவை வெள்ளையாக இருந்தன, ஆனால் நிலப்பரப்பு பழுப்பாகவும் உலர்ந்தும் காணப்பட்டது.
“அவை வெள்ளை யானைகளைப் போலக் காட்சியளிக்கின்றன” என்றாள்.
“நான் பார்த்ததில்லை” என்று பியர் குடித்தவாறே அந்த ஆள் சொன்னான்.
“ஆமாம். பார்த்திருக்க முடியாது.”
“ஒருவேளை பார்த்திருக்கலாம்” என்றான் அவன். “நான் பார்த்திருக்க முடியாது என்று நீ சொல்வதால் எதுவும் நிரூபணமாக வில்லை.”
அந்தப் பெண் மூங்கில் மணித் திரையைப் பார்த்தாள். “அதற்கு மேல் ஏதோ தீட்டியிருக்கிறார்கள். அதில் என்ன எழுதியிருக் கிறது?”
“ஆனிஸ் டெல் டோரோ. அது ஒரு பானம்.”
“அதைப் பருகிப் பார்க்கலாமா?”
அந்த மனிதன் திரையினூடாக, “இந்தா” என்றான். அந்தப் பெண்மணி பாரிலிருந்து வெளியே வந்தாள். “நான்கு ரியால்கள்” என்றாள். (ரியால்-ஸ்பானிஷ் பணம்)
“எங்களுக்கு ரெண்டு அனிஸ் டெல் டோரோ வேண்டும்.”
“சேர்க்கத் தண்ணி வேண்டுமா?”
“எனக்குத் தெரியாது” என்றாள் பெண். “தண்ணீருடன் சேர்த்துப் பருகினால் நன்றாக இருக்குமா?”
“சரியாத்தான் இருக்கும்.”
“அவைகளோடு சேர்க்கத் தண்ணி வேணுமா?” என்றாள் பெண்மணி.
“ஆமாம், தண்ணிதான்.”
“ருசி அதிமதுரம் போல இருக்கிறது” என்று சொல்லி டம்ளரைக் கீழே வைத்தாள் பெண்.
“எல்லாமே அப்படித்தான்.”
“ஆமாம்” என்றாள் பெண். “எல்லாமே அதிமதுரம் போலத்தான் ருசிக்கிறது. குறிப்பாக இதுவரை-ஆப்சிந்தி போல-நீ காத்திருந்த விஷயங்கள்.” (ஆப்சிந்தி-சோம்பு இட்ட ஒருவகை மது)
“வேண்டாம், விடு.”
“நீதான் ஆரம்பித்தாய்” என்றாள் அந்தப் பெண். “வேடிக்கையாக இருந்தது. நன்றாகப் பொழுதுபோயிற்று.”
“சரி, முயற்சி பண்ணி நன்றாகப் பொழுது போக்கலாம்.”
“ஆல்ரைட். நான் முயற்சி பண்ணிக்கொண்டுதான் இருந்தேன். அந்த மலைகள் வெள்ளை யானைகளைப் போல இருக்கிறது என்றேன். அது நன்றாக இல்லையா?”
“நல்ல புத்திசாலிதான்.”
“இந்தப் புதிய மதுவை ருசிபார்க்கலாம் என்று சொன்னேன். அவ்வளவுதான் செய்ய முடியும் இல்லையா? பொருள்களைப் பார்ப்பதும், புதிய பானங்களை ருசி பார்ப்பதும்?”
“அப்படித்தான் என்று நினைக்கிறேன்.”
பெண், குன்றுகளைப் பார்த்தாள்.
“ரொம்ப அழகான மலைகள்” என்றாள். “அவை வெள்ளை யானைகளைப் போல இல்லை. நான் மரங்களினூடாகத் தெரிந்த அவற்றின் நிறத்தைச் சொன்னேன்.”
“இன்னொரு பாட்டில் அருந்தலாமா?”
“ஆல்ரைட்.”
வெப்பமான காற்று மூங்கில்மணித் திரையை மேஜைமேல் வீசியது.
“பியர் ரொம்ப நன்றாக, குளிர்ச்சியாக இருக்கிறது.”
“ஆமாம், லவ்லி”, என்றாள் அவள்.
“அது ரொம்ப ரொம்ப எளிய ஆபரேஷன், ஜிக்” என்றான் அந்த மனிதன். “அது ஆபரேஷனே இல்லை. சிம்பிள்.”
மேஜையின் கால்கள் இருந்த தரையைப் பெண் நோக்கினாள்.
“நீ அதைப் பொருட்படுத்த மாட்டாய், ஜிக். அது ஒன்றுமே இல்லை. சும்மா காற்றை உள்ளே விடத்தான்.”
பெண் எதுவும் பேசவில்லை.
“நான் உன்னோடு வந்து, நேரம் பூராவும் உன்னோடே இருக்கிறேன். அவர்கள் சும்மா காற்றை உள்ளே விடுகிறார்கள், எல்லாம் ரொம்ப இயற்கையானதுதான்.”
“அப்ப, அதற்குப் பிறகு என்ன செய்யலாம்?”
“அதற்குப் பிறகு நன்றாக இருப்போம். முன்னால் இருந்த மாதிரியே.”
“எப்படி அப்படி நினைக்கிறாய்?”
“அதுதான் நமக்குத் தொல்லை தருகிற ஒரே விஷயம். அது ஒன்றுதான் நமக்குச் சந்தோஷமில்லாமல் செய்துவிட்டது.”
மணித்திரையை அவள் பார்த்தாள், கையை நீட்டி இரண்டு மூங்கில் மணி இழைகளைக் கையில் எடுத்தாள்.
“அப்புறம் நாம் சரியாக, சந்தோஷமாக இருப்போம் என்கிறாய்?”
“அப்படித்தான் இருப்போம். எனக்குத் தெரியும். நீ பயப்படத் தேவையில்லை. அதைச் செய்துகொண்ட பலபேரை எனக்குத் தெரியும்.”
“எனக்கும் தெரியும். அப்புறம் அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள்.”
“சரி”, என்றான் அவன். “நீ வேண்டாம் என்றால் வேண்டாம். உனக்கு விருப்பமில்லாமல் அதைச் செய்துகொள்ள வேண்டாம். ஆனால் அது ரொம்ப சிம்பிள்.”
“நிஜமாகவே செய்துகொள்ள வேண்டும் என்கிறாய்?”
“அதுதான் செய்யவேண்டிய மிகச்சிறந்த விஷயம். ஆனால் உனக்கு நிஜமாகவே விருப்பமில்லை என்றால் வேண்டாம்.”
“நான் செய்துகொண்டால், உனக்கு மகிழ்ச்சி, முன்னால் இருந்ததுபோலவே எல்லாம் இருக்கும், நீ என்னை விரும்புவாய்?”
“இப்ப உன்னை விரும்புகிறேன். அது உனக்கே தெரியும்.”
“தெரியும். ஆனால் செய்துகொண்டபிறகு, விஷயங்கள் வெள்ளை யானைபோல இருக்கின்றன என்று சொன்னால் எல்லாம் நன்றாக இருக்கும்; நீ அதை விரும்புவாய்?”
“விரும்புவேன். இப்போதும் விரும்புகிறேன், ஆனால் அதைப் பற்றி நினைக்க முடியவில்லை. எனக்குக் கவலை நேர்கிறபோது எப்படி ஆகிறேன் என்று உனக்குத் தெரியும்.”
“நான் செய்துகொண்டால், கவலையே உனக்கு வராது?”
“நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை, ஏனென்றால் அது ரொம்ப சிம்பிள்.”
“அப்படியானால் செய்துகொள்கிறேன். என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை.”
“என்ன சொல்கிறாய்?”
“நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை.”
“நான் உன்னைப் பற்றிக் கவலைப்படுகிறேன்.”
“ஆமாம். ஆனால் நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. நான் அதைச் செய்துகொள்கிறேன், அப்புறம் எல்லாம் நன்றாக இருக்கும்.”
“இப்படி நீ நினைத்தால், செய்துகொள்ள வேண்டாம்.”
பெண் எழுந்து நின்றாள், நிலையத்தின் கோடியை நோக்கி நடந்தாள். குறுக்கே, அப்-புறம், தானிய வயல்கள். ஈப்ரோ நதிக்கரையில் மரங்கள். தூரத்தில், நதிக்கு அப்பால், மலைகள். வயலின் குறுக்கே மேகத்தின் நிழல் ஒன்று கடந்துசென்றது. மரங்களினூடே அவள் நதியைப் பார்த்தாள்.
“நமக்கு இவை எல்லாம் கிடைக்கும்” என்றாள். “நம்மிடம் எல்லாம் இருக்கும், ஒவ்வொரு நாளும் நாம் அவற்றைச் சாத்தியமற்றதாக்குவோம்.”
“என்ன சொன்னாய்?”
“நம்மிடம் எல்லாம் இருக்கும் என்றேன்.”
“நாம் எல்லாவற்றையும் பெறலாம்.”
“இல்லை, முடியாது.”
“முழு உலகத்தையும் அடையலாம்.”
“இல்லை, நம்மால் முடியாது.”
“எங்கு வேண்டுமானாலும் போகலாம்.”
“இல்லை, முடியாது, இனிமேல அவை நம்முடையதல்ல.”
“நம்முடையதுதான்.”
“இல்லை. ஒருமுறை வெளியே எடுத்துவிட்டால், உன்னால் அதைத் திரும்பப் பெறமுடியாது.”
“ஆனால் யாரும் எடுத்துக்கொண்டு போய்விடவில்லை.”
“பொறுத்திருந்து பார்ப்போம்.”
“நிழலுக்கு வா” என்றான் அவன். “இப்படி நீ ஃபீல் பண்ணக்கூடாது.”
“நான் எப்படியும் உணரவில்லை” என்றாள் அவள். “எனக்குத் தெரியும்.”
“நீ விரும்பாத ஒன்றை நீ செய்வதை நான் விரும்பவில்லை-”
“அது எனக்கு நல்லதும் இல்லை” என்றாள். “எனக்குத் தெரியும். நாம் இன்னொரு பியர் சாப்பிடலாமா?”
“சரி. ஆனால் நீ தெரிந்துகொள்ள வேண்டும்-”
“தெரியும் என்றாள். நாம் பேசுவதை நிறுத்திவிடக் கூடாதா?”
மேஜையில் உட்கார்ந்தார்கள், அவள் சமவெளியின் வறண்ட பக்கம் உள்ள குன்றுகளைப் பார்த்தாள். அந்த மனிதன் அவளையும் மேஜையையும் பார்த்தான்.
“நீ தெரிந்துகொள்ள வேண்டும். நீ விரும்பவில்லை என்றால் அதைச் செய்துகொள்ளுமாறு நான் சொல்லவில்லை. முழுசாகவே நாம் அதைக் கடப்போம், அது உனக்கு அவ்வளவு பெரிய விஷயம் என்றால்.”
“அது உனக்கு ஒன்றும் இல்லையா? நாம் நன்றாகவே இருப்போம்.”
“ஏன் இல்லாமல்? ஆனால் உன்னைத் தவிர வேறு யாரும் எனக்குத் தேவையில்லை. அது ரொம்பவும் சிம்பிள் என்று எனக்குத் தெரியும்.”
“ஆமாம், அது ரொம்ப சிம்பிள் என்று உனக்குத் தெரியும்.”
“நீ அப்படித்தான் சொல்வாய், ஆனால் எனக்கு மெய்யாகவே தெரியும்.”
“எனக்காக இப்போது ஒன்று செய்வாயா?”
“நான் உனக்காக எதுவும் செய்வேன்.”
“தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து பேச்சை நிறுத்துவாயா?”
அவன் எதுவும் சொல்லவில்லை. நிலையத்தின் சுவர்மீது சாத்தியிருந்த பைகளைப் பார்த்தான். இதுவரை அவர்கள் இரவுகளைக் கழித்த எல்லா ஹோட்டல்களின் லேபில்களும் அவற்றின்மீது இருந்தன.
“நீ அதைச் செய்ய நான் விரும்பவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.”
“நான் கூச்சலிடுவேன்” என்றாள் அவள்.
அந்தப் பெண்மணி திரையின் வழியாக இரண்டு பியர் டம்ளர்களுடன் வந்தாள். அவற்றை ஈரமாக இருந்த கம்பளிஅட்டைகள்மீது வைத்தாள். “இரயில் இன்னும் அஞ்சே நிமிஷத்தில் வந்துவிடும்” என்றாள்.
“என்ன சொன்னாள்?” என்று பெண் கேட்டாள்.
“இரயில் இன்னும் ஐந்து நிமிடத்தில் வருகிறது.”
அந்தப் பெண்மணிக்கு நன்றிசொல்லும் விதமாகப் பெண் அவளைநோக்கி சந்தோஷமாகப் புன்னகைத்தாள்.
“நிலையத்தின் அந்தப்பக்கம் நான் பைகளை எடுத்துக்கொண்டு போகிறேன்” என்றான் அவன்.
“சரி. வைத்துவிட்டு வா. பிறகு பியரைக் குடிப்போம்.”
கனமான அந்த இரண்டு பைகளையும் அவன் எடுத்துக்கொண்டு நிலையத்தைச் சுற்றித் தண்டவாளத்தின் அப்-புறம் நடந்தான். தண்டவாளத்திலிருந்து நோக்கிய போது இரயில் இன்னும் தென்படவில்லை.
திரும்பி வந்து மதுக்கடை அறையின் குறுக்கே நடந்தான். அங்கே இரயிலுக்கான பயணிகள் மதுஅருந்திக்கொண்டிருந்தார்கள். பாரில் ஒரு ஆனிஸ் குடித்துவிட்டு, ஜனங்களைப் பார்த்தான். அவர்கள் இரயிலுக்காக வெகுநேரமாகவே காத்திருந்தார்கள். மணித்திரையின் வழியாக வெளியே வந்தான். அவள் மேஜையில் உட்கார்ந்து அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள்.
“இப்போது பரவாயில்லையா?” என்று கேட்டான்.
“நன்றாக இருக்கிறது. என்னிடம் ஒன்றும் குறை இல்லை. நன்றாகவே இருக்கிறது” என்றாள் அவள்.