விளைவுவாதமா, கடமைவாதமா?

விளைவுவாதமா, கடமைவாதமா?

அண்மையில் ஆந்திராவில் ஒரு குற்றத்திற்காகச் சில குற்றவாளிகள் போலீசாரால் என்கவுண்டர் கொலை செய்யப்பட்டனர். கொன்ற போலீஸ்காரர்களுக்குப் பெரிய பாராட்டு கிடைத்தது. பொதுமக்களுடன் சேர்ந்து, ஆந்திர அமைச்சர்கள் முதல் தமிழக அமைச்சர்கள் வரை இந்த என்கவுண்டர் கொலையைப் பாராட்டினர். ஆனால் ஜனநாயக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இதை எதிர்த்தனர். இந்த நிகழ்ச்சி நமது மரபில் சில சிந்தனைகளைத் தூண்டுகிறது.

இந்தியச் சிந்தனை மரபில் நீதி-நியாயம் என்ற இரண்டு உள்ளன. உதாரணமாக, குற்றவாளிகளை போலீசார் தண்டிக்கின்றனர். அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்தான், தகுந்த நீதி கிடைத்துவிட்டது என்று பலரும் அவர்களைப் பாராட்டுகின்றனர்.

ஆனால் கொல்லப்பட்டவர்களில் நிரபராதியும் இருந்திருக்கலாம், அது மட்டுமல்ல, அவர்களுக்குப் பின் அவர்கள் குடும்பம் என்ன ஆகும், மேலும் இத்தகைய தண்டனை குற்றங்கள் நிகழாமல் நிறுத்திவிடுமா, போலீஸ் நீதியைக் கையில் எடுக்கலாகுமா, குற்றவாளிகளின் பின்னணி வலுவானதாக இருந்தால் இப்படி நிகழுமா, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் (உதாரணமாக செம்மரம் கடத்தியதாக இருபது தமிழர்கள் கொல்லப்பட்டது) என்கவுண்டர் நியாயம் ஆகுமா போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இவை நியாயத்தின் பாற்பட்டவை.

நீதியைவிட நியாயம் முக்கியமானது என்பது என் கருத்து. இதற்காக நாம் பழைய இதிகாசமான பாரதக் கதையை நோக்கலாம் என்று நினைக்கிறேன். மகாபாரதத்தில் பகவத்கீதை முக்கியமான பகுதி. அதில் நடக்கும் உரையாடல் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

கதையின்படி, பாண்டவர்கள் நேர்மைமிக்க அரசக் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள். அவர்களின் தலைவன் யுதிஷ்டிரன் (அர்ஜுனனின் அண்ணன், அரியணைக்கு சட்டபூர்வ வாரிசு) ஒருபுறம். மறுபுறம், பாண்டவர்களின் பெரியப்பன் பிள்ளைகளான கெளரவர்கள். அவர்கள் தவறான முறையில் பாண்டவர்களுக்குரிய அரசைக் கைப்பற்றியவர்கள். இந்த இதிகாசப் போரில், இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் உள்ள அரசக் குடும்பங்கள் பல ஏதேனும் ஒரு பக்கத்தில் சேர்ந்துள்ளன. அவற்றின் ஆடவர்களில் நல்ல உடல்திடம் கொண்ட இளைஞர்கள் பெரும்பாலோர் படைகளின் இருபுறமும் உள்ளனர். பாண்டவர் களின் பக்கத்தில் உள்ள மிகப் பெரிய வீரன் அர்ஜுனன். அர்ஜுனனின் தேர்ச்சாரதி கிருஷ்ணன். அவன் கடவுளின் அவதார வடிவமாக நோக்கப் படுகிறான்.
அர்ஜுனன்-கிருஷ்ணன் இடையில் நடக்கும் விவாதத்தின் வலிமை இதிகாசக் கதைக்கு வளம் சேர்க்கிறது. ஆனால் பல நூற்றாண்டுகளாக அது அதிக அளவு ஒழுக்கம் சார்ந்த, அரசியல் சிந்தனைகளையும் தூண்டியுள்ளது. அதனால்தான் இங்கு அதை நோக்குகிறோம். விவாதத்தின் உணர்ச்சிகரமான இயல்பு சாதாரண மக்களையும் வசப்படுத்துகிறது. மேலும் மத, தத்துவ விசாரங்களை யும் ஈர்த்துள்ளது.

அர்ஜுனனும் கிருஷ்ணனும் இரு பக்கமும் உள்ள சேனைகளை நோக்குகிறார்கள். போரில் ஈடுபடுவது தனக்கு அவசியம்தானா என்ற தீர்க்கமான சந்தேகத்தினை அர்ஜுனன் வெளியிடுகிறான். தங்கள் தரப்பு நியாயமானது என்பதிலோ, இது செய்யவேண்டியதொரு நேர்மையான போர் என்பதிலோ, தனது பக்கம் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதிலோ அவனுக்குச் சந்தேக மில்லை. ஆனால் போரில் மிகுந்த அளவு மரணம் நிகழும் என்பதை அவன் உணர்கிறான். தானே நிறைய எண்ணிக்கையிலான பேர்களைக் கொல்ல வேண்டி வரும் என்பதும் அவன் கவலை. மேலும் போரில் ஈடுபட்டு இறக்கப் போகின்ற பெரும்பாலானோர், (விசுவாசத்தினாலோ, நட்பினாலோ, வேறு காரணங்களாலோ) குறிப்பிட்ட ஒரு தரப்பைச் சேர உடன்பட்டு வந்தவர்கள் என்பதற்கு மேல் குறிப்பாகத் தீமை எதையும் செய்தவர்கள் அல்ல.

அர்ஜுனனின் கவலையில் ஒரு பகுதி நிகழப் போகின்ற படுகொலைகளால் ஏற்படப்போகும் பேரழிவிலிருந்து எழுகிறது. மற்றொரு பகுதி, அவனே செய்யப் போகின்ற கொலைகள் பற்றியதாக, தான் அன்பு செலுத்துகின்ற, தனக்கு நெருக்கமான பலரையும் கொல்லப் போவது பற்றியதாக இருப்பதால் ஏற்படுகிறது.

போரிடவும் கொலைசெய்யவும் தனக்கு விருப்பமில்லை என்று அர்ஜுனன் சொல்கிறான். கெளரவர்கள் பறித்துக் கொண்ட நாட்டை அவர்களே ஆளவிட்டுவிடலாம், போரின் தீமையைவிட இது குறைந்ததாகும் என்று சொல்கிறான். கிருஷ்ணன் இதற்கு எதிராகப் பேசுகிறான். அவனது எதிர்வினை விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கடமையைச் செய்வதன் முதன்மை பற்றியதாக அமைகிறது. இந்திய மத, ஒழுக்க, தத்துவ விவாதங்களில் திரும்பத் திரும்பப் பேசப் படுகின்ற பிரச்சினை இது. பாண்டவர்களின் கட்சி சார்ந்த ஆதரவாளன் என்ற நிலையிலிருந்து கடவுளின் அவதாரம் என்ற நிலைக்கு (விசுவரூப தரிசனத்தின் வாயிலாக) மெதுவாக கிருஷ்ணன் மாறுகிறான். அதனால் கீதை இந்து இறையியல் சார்ந்த ஒரு பெரிய ஆவணமாக மாறிவிட்டிருக்கிறது.

என்ன வந்தாலும் சரி, அர்ஜுனன் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்கிறான் கிருஷ்ணன். போரிடும் கடமை அவனுக்கு இருக்கிறது. அதில் என்ன விளைவு ஏற்பட்டாலும் சரிதான். ஒரு பெரும் வீரன், படைத் தலைவன் என்ற முறையில் அவனை அவன் தரப்பினர் சார்ந்திருக்கிறார்கள். எனவே அவன் தன் கடமையில் தளரக்கூடாது. கிருஷ்ணனின் கடமை சார்ந்த, ஆனால் விளைவு சாராத, தத்துவம் பல நூற்றாண்டு களாக ஆழமான செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது.

இந்த விஷயத்தில் கடமை என்பது அர்ஜுனன் ஒரு பெரிய வன்முறைப் போரில் ஈடுபடுவது. நியாயமாக அதை அஹிம்சை போதகரான காந்தி ஆதரிக்த்திருக்கக்கூடாது. ஆனால் அவரும்கூட “விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கடமையைச் செய்” என்கின்ற கிருஷ்ணனின் வார்த்தைகளால் எழுச்சி கொண்டு கீதையை அடிக்கடி மேற்கோள் காட்டவும் செய்தார். இப்படிக் கிருஷ்ணனின் வாதங்களைப் பாராட்டுவது உலக முழுவதும் ஒரு நீடித்த நிகழ்வாக உள்ளது.
அர்ஜுனன் வாதங்கள் தவறா? ஒரு நேர்மையான, பயனை எதிர்பார்க்காத கடமையைச் செய்வது என்பது, தான் நேசிக்கும் மக்கள் உள்ளிட்ட பிறரைக் கொல்லக்கூடாது என்ற காரணத்தைவிட முக்கியமானதா? சண்டையிடாமல் மறுப்பது அர்ஜுனன் நோக்கிலிருந்து நிச்சயமாகச் சரியானது என்பது மட்டுமல்ல, கிருஷ்ணன் கவனம் செலுத்திய விஷயங்களைவிட அர்ஜுனன் போரிலிருந்து விலகுவதற்கு எதிரான வாதங்கள் பல இருந்தன.

குருட்சேத்திரப் போர் அன்றைய இந்திய மக்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கக் கூடியது. எனவே என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய பெரிய அளவு விவாதம் தேவை. என்ன வந்தாலும் கடமையைச் செய், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதே போன்ற எளிய விடை போதாது. இந்த வகையில் ஒரு மதநூல் என்ற வகையில் கீதை கிருஷ்ணனின் சார்பாகவே பேசுகிறது. ஆனால் அர்ஜுனன் கவலை முக்கியமானது. அர்ஜுனனின் ஆழ்ந்த சந்தேகங்களுக்கு நியாயம் இருக்கிறது. மகாபாரதம் பெருமளவு ஒரு துன்பியலாகத்தான் முடிகிறது. ‘நேர்மையான’ காரணத்துக்காகச் சண்டை யிட்டாலும் வெற்றியைத் தொடர்ந்து கவலையும் துன்பமும்தான் விளைகின்றன.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க அணுகுண்டுப் படைக்குத் தலைமை தாங்கிய ராபர்ட் ஓப்பன்ஹீமர், கிருஷ்ணனின் “பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்” என்ற வாதத்தினால்தான் கவரப் பட்டதாகச் சொல்கிறார். அணுகுண்டின் விளைவுகளைப் பார்த்த பிறகு, அவர் வருத்தப்பட்டிருக்கிறார். நீதியைவிட நியாயம் முக்கியமானது.

நமது ஒழுக்க, அரசியல் சிந்தனைகளில் உலக மக்களுக்கு என்ன நிகழ்கிறது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது முக்கியமானது என்பது அர்ஜுனனது நம்பிக்கை. உண்மையில் என்ன நடக்கிறது என்பதற்குக் கண்ணை மூடிக்கொண்டு, நடக்கப்போகின்ற விஷயங்களின் விளைவுகளை அறவே புறக்கணித்துவிட்டுத் தனது பயன்சாராத கடமையைச் செய்ய வேண்டும் என்பது கிருஷ்ணனின் போதனை.

மகாபாரதத்தில் கிருஷ்ணனின் தரப்பு நீதியின் பாற்பட்டது. அர்ஜுனனின் வாதங்கள் நியாயத்தின் பாற்பட்டவை. அர்ஜுனனின் வாதங்கள் மனித உயிர்களின் முக்கியத்துவம் பற்றியவை. தான் செய்யும் செயலின் விளைவுகள் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்கிறான் அர்ஜுனன். என்ன நிகழ்ந்தாலும் தான் செய்யும் செயல்களின் விளைவு களைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் ஒருவன் தன் கடமையைச் செய்யவேண்டும் என்கிறான் கிருஷ்ணன். அர்ஜுனனின் வாதங்களை விளைவுவாதம் அல்லது பயன்நோக்கு வாதம் என்று சொல்லலாம். கிருஷ்ணனுடைய கடமைவாதம் எனலாம். விளைவுவாதமா, கடமைவாதமா என்பதில் பகவத்கீதையில் கடமைவாதம் ஜெயித்தாலும் விளைவுவாதமே முக்கியம் என்பதை அனுபவம் காட்டுகிறது.

சமூகம்