விலங்குப் பண்ணை

“கனவு காணுங்கள்” என்று சொல்லிக் கொண்டே இருந்தார் நமது மதிப்பிற்குரிய அப்துல் கலாம். இலட்சியவாதிகள் எல்லாம் கண்டிப்பாகக் கனவு காண்கிறார்கள். அந்தக் கனவுகள் ஒரு தனிமனிதனின் முன்னேற்றத்தை மட்டும் குறித்தவை ஆயின் பிரச்சினைகள் குறைவுதான். ஆனால் சமூகத்தின் ஒரு பகுதியை பாதிக்கும் கனவுகளும் உண்டு. ஒட்டுமொத்தச் சமூகத்தையே, ஏன் உலகத்தையே பாதிக்கும் கனவுகளும் உண்டு. அவை நல்ல பயனையோ தீய பயனையோ அல்லது இரண்டையும் சேர்த்தோ அளிக்க வல்லவையாக இருக்கின்றன. அவற்றை மதிப்பிடுபவர்களும்  தங்கள் கொள்கைகளை மனத்தில் வைத்தே மதிப்பிடுகிறார்கள். உதாரணமாக, லெனின் கண்ட கனவுதான் ரஷ்யாவில் சமதர்மச் சமுதாயத்தை மலர வைத்தது.  அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முதலாளித்துவச் சமூகங்களைச் சேர்ந்த ஒருவரால் அதை எதிர்மறையாகத்தான் நோக்கமுடியும். அப்படித்தான் நோக்குகிறார் ஜார்ஜ் ஆர்வெல் (1903-1950) என்னும் பிரிட்டிஷ் ஆசிரியர். அதற்கு ஓர் உருவகக் கதை வடிக்கிறார். அதுதான் விலங்குப்பண்ணை.

1984 என்னும் புகழ்பெற்ற கதையையும் அவர் எழுதியிருக்கிறார். அதில் ஒரு நாடு ஒரு “முத்தண்ணா”வால் (யாவருக்கும் பெரிய சர்வாதிகாரியால்-பிக் பிரதர்பிக் பாஸ்) ஆளப்படுகிறது. அதில் எல்லா மக்களுமே ஓர் உளவுச் செயலியால் (பெகாசஸ் நினைவுக்கு வருகிறதா?) கண்காணிக்கப் படுகிறார்கள். இரண்டு கதைகளும் முதலாளித்துவச் சார்பின என்றாலும் அவற்றில் பொதுவாக மனித இனம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. இன்றும் உலகில் அமெரிக்கா, பிரேசில், கொரியா, சீனா, (இந்தியா, இலங்கையும் கூட!) போன்ற பல நாடுகள் முத்தண்ணாக்களால்தான் ஆளப்படுகின்றன. இந்த இரு நாவல்களுமே தமிழில் பிரபல எழுத்தாளர் க. நா. சுப்பிரமணியம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

“விலங்குப் பண்ணை”யும் ஒரு கனவில்தான் தொடங்குகிறது. விலங்குகளின் வாழ்க்கையையே மாற்றி அமைத்த கனவு அது. மனித எஜமானர்களின் கொடுமையின்றித் தாங்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்னும் விலங்குகளின் கனவு.

“மேனர் பண்ணை” யின் உரிமையாளன் ஒரு குடிகாரன். பெயர் ஜோன்ஸ். அதை மோசமாக நிர்வகிக்கிறான். பண்ணையிலிருந்த விலங்குகளுக்குப் பசியாற உணவுகூடக் கிடைக்காத நிலை. ஒருநாள் ஓல்டு மேஜர் எனப்படும் ஒரு முதிய பெரும்பன்றி எல்லா விலங்குகளையும் ஒரு கூட்டமாகக் கூட்டுகிறது. நோக்கம், அது கண்ட ஒரு கனவைச் சொல்லி, புரட்சிக்கான விதையை விதைப்பதுதான். அது பாடும் “இங்கிலாந்தின் விலங்குகளே” என்ற பாட்டு பெரிய அதிர்வை எழுப்புகிறது.

ஓல்டு மேஜர் இறந்தபின், ஸ்னோபால், நெப்போலியன் என்ற இரு பன்றிகள் புரட்சிக்குத் தலைவர்கள் ஆகின்றன. பண்ணையின் பெயரை “விலங்குப் பண்ணை” என மாற்றுகின்றன. விலங்கியம் என்னும் கோட்பாட்டைத் தோற்றுவிக்கின்றன. அதில் ஏழு கட்டளைகள் உள்ளன.

இரண்டு கால்களில் செல்பவை யாவும் நமது எதிரிகள்;

நான்கு கால்களில் நடப்பவையும், பறப்பவையும் நமது நண்பர்கள்;

எந்த விலங்கும் உடை அணியக்கூடாது;

எந்த விலங்கும் படுக்கையைப் பயன்படுத்தலாகாது;

எந்த விலங்கும் மது அருந்தலாகாது;

எந்த விலங்கும் மற்றொன்றைக் கொல்லலாகாது;

எல்லா விலங்குகளும் சமம்

என்பன அக்கட்டளைகள். இக் கருத்தியலினால் தூண்டப்பட்ட விலங்குகள் ஒரு புரட்சியை நிகழ்த்தி, பண்ணையிலிருந்து ஜோன்ஸையும் பிற மனிதர்களையும் துரத்தி விடுகின்றன. பிறகு பகிர்ந்து உண்ணுகின்றன, யாவற்றுக்கும் மிக அதிக உணவு கிடைக்கிறது.

ஸ்னோபால் தலைவனாகிறது. விலங்குகளைப் படிப்பித்து, ஒரு காற்றாலை அமைத்து, புதிய கொள்கைகளை உருவாக்கி, பண்ணையின் முன்னேற்றத்துக்கு உழைக்கிறது. பண்ணையைத் திரும்பக் கைப்பற்ற வரும் ஜோன்ஸையும் ஒரு போரில் விரட்டியடிக்கிறது. ஆனால் ஆதிக்க வெறி பிடித்த நெப்போலியன் ஸ்னோபாலின் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கிறது. அதைப் பண்ணையை விட்டே வேட்டை நாய்களைக் கொண்டு துரத்திவிடுகிறது.

நெப்போலியன் ஆட்சியைக் கைப்பற்றியதும், விலங்குகளின் நிலை மோசமாக மாறுகிறது. ஓயாமல் உழைக்கின்றன. போதிய உணவு அவற்றுக்குக் கிடைக்கவில்லை. நெப்போலியனை எதிர்க்கும் விலங்குகள் தண்டிக்கப்படுகின்றன. அவற்றிடம் ஒப்புதல்கள் எழுதி வாங்கப்படுகின்றன.

காற்றாலை அமைப்பதில் பாக்ஸர் என்ற குதிரை மிகவும் உழைக்கிறது. ஆனால் ஒரு புயலில் அந்த ஆலை வீழ்ந்துவிடுகிறது. விலங்குப் பண்ணை தாழ்ந்து போனதற்கு ஸ்னோபாலின் தவறுகளே காரணம் என்று நெப்போலியன் பிரச்சாரம் செய்கிறது. அதன் ஆதிக்க வெறி அதிகரித்து, தன் மனத்தை மட்டுமே வெளிப்படுத்துகின்ற ஒரு சர்வாதிகாரி ஆகிவிடுகிறது. பன்றிகளால் அரசியலமைப்பின் ஏழு கட்டளைகளும் தகர்க்கப்படுகின்றன. உதாரணமாக, எந்த விலங்கும் மது குடிக்கலாகாது என்ற கட்டளை மிகுதியாகக் குடிக்கலாகாது என்று வசதிக்கேற்ப மாற்றப்படுகிறது.

மீண்டும் காற்றாலை அமைக்க பாக்ஸர் உதவுகிறது. அது களைத்துச் சோர்ந்து விழும் நிலையில் ஒரு கசாப்புக் கடைக்காரனுக்கு விற்கப்பட்டுவிடுகிறது. ஆனால் மற்ற விலங்குகளிடம் அது (கால்நடை) மருத்துவரிடம் சேர்க்கப்பட்டு நோய்ப் படுக்கையில் அமைதியாக இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆண்டுகள் செல்கின்றன. விலங்குகளின் வாழ்க்கை மேலும் மேலும் கொடுமையானதாக மாறுகிறது. ஆனால் பன்றிகள் மட்டும் ஆடம்பரத்தையும் அதிகாரத்தையும் அனுபவிக்கின்றன. மனிதர்களைப் போலவே உடை அணிகின்றன, படுக்கைகளில் உறங்குகின்றன, மது அருந்துகின்றன, சீட்டு விளையாடுகின்றன, முக்கியமாக மனிதர்களைப் போலவே பின்னங்கால்களால் – இரண்டு கால்களால் நடக்கின்றன. பில்கிங்டன் போன்ற பிற பண்ணை உரிமையாளர்களுடன் வியாபாரத்தில் ஈடுபடுகின்றன. கடைசியாக, ஏழு கட்டளைகளும் ஒரே கட்டளை ஆக்கப்படுகிறது.

எல்லா விலங்குகளும் சமம்ஆனால் சில விலங்குகள் பிறவற்றை விட அதிகச் சமம்

பண்ணையின் பெயரை பழையபடியே மேனர் பண்ணை என்று நெப்போலியன் மாற்றிவிடுகிறது. இறுதியாக ஜோன்ஸின் வீட்டில் பன்றிகள் யாவும் அவனுடன் அமர்ந்து மது அருந்துகின்றன. வெளியிலிருந்து நோக்குகின்ற விலங்குகளுக்கு, மேனர் பண்ணையில் உள்ள பன்றிகள், வித்தியாசமே இன்றி மனிதர்களைப் போலவே தோற்றம் அளிக்கின்றன.

இலக்கியம்