வியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்
பிறவகைகளில் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் பாஷமின் இந்த நுாலுக்கு ‘தி வொண்டர் தட் வாஸ் நார்த் இந்தியா’ அல்லது ‘தி ஒண்டர் தட் வாஸ் ஆர்யன் இந்தியா’ என்ற பெயரே பொருத்தமானது. பத்துக்கு ஒரு வீதம்கூட இந்நூலில் தென்னிந்தியாவுக்கு மதிப்பு அளிக்கப்படவில்லை. அவரே ஆங்காங்கு தம் நூலில் இந்து-இந்தியா என்ற சொல்லையே கையாளுகிறார். அவருடைய நோக்கம் இந்து மதத்தின் பெருமையைக் கூறுவதாகவே அமைகிறது. ஆரிய சமூகம் என்பதைத்தான் இந்தியா என்ற பெயரால் குறிப்பிட்டுச் செல்கிறார். அல்லது ஆரிய சமூகத்தை மட்டுமே இந்தியாவாக மதித்துள்ளார். மேலும் ஒரு சிறுபான்மைப் பார்ப்பனர் கடைப்பிடித்த அல்லது அவர்களுக்கு லட்சியமாக விதிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே இந்த நுால் முக்கால்பகுதியிலும் பேசுகிறது. இந்நுால் வேதகாலம் தொடங்கி இடைக்காலம் வரை வாழ்ந்த பார்ப்பனர்களின் இலட்சியங்களைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் நுால் என்பது பொருந்தும். (அந்த இலட்சியங்கள் நடைமுறையில் பெரும்பாலும் இல்லை என்பதை ஆசிரியரே ஒப்புக் கொள்கிறார்.)
நூலின் பிற்பகுதியில் சோழர்களின் வெற்றிகளை வருணித்தும், மதுரைக் காஞ்சியின் ஒரு பகுதியை எடுத்துக்காட்டியும் இருப்பதைப் பார்த்து இது சமநோக்குடன் எழுதப்பட்ட நூல் என நண்பர் சிலர் என்னிடம் உரைத்தனர். அப்படியன்று என்பதற்கு எவ்வளவோ காரணங்கள் உள்ளன.
இந்தியாவில் அக்கிரமங்கள் பல செய்த கிழக்கிந்தியக் கம்பெனியை “நமது மதிப்புக்குரிய (ஹானரபிள்) கம்பெனி” என்று அழைப்பதில் இந்த ஆசிரியரின் நாட்டுப்பற்றைப் பார்க்க முடிகிறதே ஒழிய உண்மைத்தன்மையைக் காணமுடியவில்லை. அதுபோலவே வெள்ளைத் தோல் ஆரியருடன் வெள்ளைத்தோல் ஆங்கிலரான இவர் எளிதில் இணைந்துகொள்கிறார்.
சங்ககாலத் தமிழகத்தின் மதச்சார்பற்ற பழங்காலத்திற்கு இந்துமதப் பெருமை ஒத்துவரவில்லை. ஆகவே அவர் தமிழகத்தின் வரலாற்றை முற்றிலும் புறக்கணித்துவிடுகிறார், சங்க இலக்கியத்தின் காலம் இப்போது ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நுற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நுற்றாண்டு வரை எனப் பல்வேறு ஆதாரங்களால் நிறுவப்பட்டுள்ளதாயினும் பல்லவர்கள் காலத்துக்கு முந்தியது என்று அதை மூன்று நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளுகிறார். மாறாக, பிற்பட்ட ப்ராக்ருத இலக்கியமான காதாசப்த சதியை கி.பி. முதல் நுற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்.
முதல் இயலில் சமஸ்கிருத நுால்கள் எவ்விதம் மூன்று நுாற்றாண்டுகளாக மொழிபெயர்க்கப்பட்டன, ஐரோப்பாவில் ஏற்கப்பட்டன என்ற செய்திகள் விரிவாகச் சொல்லப்படுகின்றன. திராவிட மொழியியல் ஆய்வுகள் பற்றியோ, திராவிட அல்லது தமிழ் நுால்களின் மொழிபெயர்ப்பு பற்றியோ ஒரு சிறு குறிப்பும் இல்லை.
ஐந்தாம் இயல் தொடக்கத்தில் வர்ணாசிரம தர்மம் நிலவிய தொடக்க காலம் பொற்காலம் என்குகிறார். மேலும் அவ்வியலில் நால்வருணத்தவரில் சூத்திரனின் வேலை மற்ற மூன்று வர்ணத்தினருக்கும் ஏவல் செய்வதே, அதற்குக் கூலி கிடையாது என்று குறிபிப்பிட்டுவிட்டு, அடுத்த ஓரிரு பக்கங்களுக்குள் இந்தியாவில் அடிமைகள் இருந்ததில்லை என்கிறார். அப்படியானால் கூலிவாங்காமல் மற்றவர்க்கு வேலை செய்த சூத்திரன் அடிமை இல்லையா?
மூன்றாம் இயலில் தமிழர்கள் நர மாமிசம் உண்டவர்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் ஆரிய நாகரிகம் புகுந்த பிறகுதான் அவர்கள் நாகரிகம் பெற்றார்கள் என்றும் கூறுகிறார். இதற்குச் சரியான சான்றுகளும் இல்லை.
நான்காம் இயலில், இந்தியாவின் பொருளாதார நுால்கள் பற்றிக் குறிப்பிடும்போது (நேரு எழுதிய ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நுாலில் போலவே) இந்த நுாலிலும் திருக்குறள் (பொருட்பால்) புறக்கணிக்கப் பட்டுள்ளது. அதைவிட மோசமான, சிற்றளவான கருத்துகளைக்கூறும் சமஸ்கிருத நுால்கள் குறிப்பிடப்படகின்றன. காணலாம். இத்தனைக்கும் இவர் திருக்குறள் பற்றி அறியாதவர் அல்ல, பின்னொரு இயலில் திருக்குறளை இவர் நன்கு மேற்கோள் காட்டவே செய்கிறார்.
தமிழர்கள் பற்றிய இவரது மோசமான பார்வைக்குப் பின்வரும் பகுதி போதுமானது.
The wild fertility cults of the early Tamils involved orgiastic dancing, and their earliest literature shows that prostitution was common among them. Thus religious prostitution came naturally to the Dravidian.
தமிழ்ச் சங்க இலக்கியத்தில் காணப்படும் பரத்தமை ஒழுக்கம் என்பதை வேசித்தனம் என்று புரிந்துகொண்டு இவ்விதம் எழுதுகிறார். வேசித்தனம் தமிழர்களுக்கு இயல்பாகவே கைவந்ததது, அதனால் மத (கோயில்) வேசித்தனம் அவர்களுக்கு இயல்பாகவே கைவந்தது என்று அவர் குறிப்பிடுவதை என்ன என்று சொல்வது? இவரது தமிழ் அறிவு எவ்வளவு மோசமானது என்பதற்கு இந்தக் குறிப்பே போதுமானது. உண்மையில் வேசித்தனத்தைப் பற்றி விரிவாகப் பேசிய நூல்கள், அர்த்தசாஸ்திரம், காமசூத்திரம் போன்றவையே.
மேலும் இடைக்காலத்தில்தான் தென்னகத்தில் கோயில் தாசி வழக்கம் வந்தது. அது இயல்பாகவே தமிழர் ரத்தத்தில் ஊறியதாம். ஆனால் ஸ்மிருதி நுல்களில் இந்த வழக்கம் கண்டிக்கப்பட்டது என்று பெருமையுடன் எழுதுகிறார். ஸ்மிருதி நுல்களின் காலம் இவர் கூற்றுப்படி கி.பி.முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என்றால் அவை கண்டிக்கும் இந்த வழக்கம் ஆரியர்களிடம் அதற்கு முன்னாலே இருந்து வந்தது என்பது தெரியவில்லையா? ஆனால் அது இவர் கண்ணுக்குப் புலப்படவே இல்லை.
‘ஆமுக்த மால்யதா’ என்பது ஆண்டாளின் திருப்பாவையின் தெலுங்கு வடிவம். இது அரசியல் பற்றியது என்று தவறாகக் குறிப்பிடுகிறார்.
வணிகச் சாத்துகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, சார்த்தவாகன் என்ற வடமொழிப்பெயரிலிருந்து வந்ததாகக் குறிப்பிடுகிறார். சாத்து என்பது தமிழ்ச்சொல். சிலப்பதிகாரம் கூறும் சாத்தன், மாசாத்துவான், மாநாய்கன் என்ற பெயர்களையும் பார்க்கலாம்.
மதம் பற்றிய ஏழாம் இயலில் திருக்குறளை பக்திப்பாக்கள் வரிசையில் சேர்க்கிறார். பதினொரு திருமுறைகளும் அறுபத்துமூன்று நாயன்மார்களும் எழுதியவை என்று குறிப்பிடுகிறார். (முதல் எட்டு திருமுறைகளையும் எழுதியவர்கள் நால்வர், அடுத்த நான்கு திருமுறைகளையும் எழுதியவர்கள் மொத்தம் இருபதுக்குள் அடக்கம். இவர்கள் நாயன்மார்கள் அல்லர்.) இவை எல்லாம் தகவல்பிழைகள்.
மரங்களை ஏதோ உழவர்கள்தான் வெட்டியதுபோல (ப.192) சொல்கிறார். உண்மையில் ஆங்கிலேயர்கள்தான் மிகப் பெரிய அளவில் இந்தியாவில் மரங்களை முதன்முதலில் (இரயில்வே அமைப்பதற்கும் பிற ஏற்றுமதிகளுக் காகவும்) கொன்றவர்கள், காடுகளை அழித்தவர்கள். அண்மைக்காலத்தில் அந்தப் பணியைப் பெருமுதலாளிகள் செய்துவருகிறார்கள்.
நீர்ப்பாசனப்பகுதியில் தமிழகத்தின் கல்லணை பற்றியோ பல்லவ அரசர் காலத்திலிருந்து வெட்டப்பட்டிருந்த மிகப் பெரிய ஏரிகள் பற்றியோ எவ்விதக் குறிப்பும் இல்லை.
எந்த ஆதாரமும் இன்றியே கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்கத்தில் ஆபீரர்களே கண்ணன் வழிபாட்டுக்குக் காரணம் என்கிறார். ஆனால் அதற்கு முன்னரே தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் மாயோன் (கருமை நிறத்தவன், கிருஷ்ணன்) வழிபாடு காணப்படுகிறது. தமிழகத்தையும் தென்னகத்தையும் பற்றி மிக மேம்போக்கான வாசிப்புதான் இவருக்கு உள்ளது என்பதற்கு இதுவே போதுமானது.
சமுத்திரகுப்தன் நாடகாசிரியன் என்பதைக் குறிப்பிடும்போது சமகால மகேந்திரவர்ம பல்லவன் நாடக ஆசிரியனாக இருந்ததையும் பலதுறை விற்பன்னனாக இருந்ததையும் குறிப்பிட மறந்துவிடுகிறார்.
பார்ப்பனர்களுக்கும் சட்டம் பொதுவாகவே இயங்கியது அல்லது அவர்களுக் குச் சாதகமாக நீதிமுறை இல்லை என்று வலிந்து குறிப்பிடுவது நகைப்பை விளைவிக்கிறது.
அதேபோல, ஆரிய அரசர்கள் நாடுபிடிக்கும் ஆசை இல்லாதவர்கள் என்றும் தென்னக அரசர்களுக்குத்தான நாடுபிடிக்கும் ஆசை இருந்ததென்றும் எழுதுகிறார். திராவிடர்கள் எந்த நாட்டைப் பிடித்தார்கள்? எந்தப் பேரரசை வைத்திருந்தார்கள்? அசுரவெற்றி இல்லாமல் வடநாட்டில் மகத, குப்த, ஹர்ஷப் பேரரசுகள் எவ்விதம் ஏற்பட்டன? ஆப்கானிஸ்தான் முதல் காஞ்சிக்கு வடக்கில்வரை நீண்டிருந்த அசோகப் பேரரசு நேர்மைவழிப் பேரரசா? மாறாக, தமிழகத்தின் சோழர்கள் கங்கை கொண்ட போதும் கடாரம் கொண்டபோதும் குலோத்துங்க சோழன் காலத்தில் கலிங்கத்தை வெற்றிகொண்டபோதும் நாட்டைப் பிடிக்காமல் திருப்பியே கொடுத்தனர். சாளுக்கியப் புலிகேசிகூட தமிழகத்தைப் பிடிக்கவில்லை. ஹர்ஷனை வெற்றிகொண்டு அவன் நாட்டையும் பிடித்துக்காள்ளவில்லை. அதேபோல் அவனைப் பழிவாங்கப் படையெடுத்துச்சென்ற நரசிம்ம வர்மனும் வாதாபியில் வெற்றித் தம்பம் நாட்டிவந்ததோடு சரி. சாளுக்கிய ராஜ்யத்தைப் பிடித்து ஆளவில்லை. உண்மையில் தமிழர்களும் திராவிடர்களும்தான் நேர்மையான வெற்றி கொண்டனர். பிடித்த நாட்டிலிருந்து திறைகூட வாங்கியதில்லை. அவர்களுக்கு வெற்றிப் பெருமிதம் ஒன்றே போதுமானதாக இருந்தது. வடநாட்டினர் சார்பான சுவடிகளை மட்டுமே படித்துவிட்டுத் தலைகீழாக வரலாற்றைப் புரட்டி எழுதுகிறார் ஆசிரியர்.
அதேபோல நாற்பெரு வர்ணம், க்ஷத்ரியன் தலைசிறந்த போர்வீரனாகத் திகழ்ந்தான் (ஏதோ நேரில் கண்டால் போன்ற கூற்று இது) போன்ற கூற்றுகளெல்லாம் பழைய சமஸ்கிருத நூல்களில் காணப்படுவதை அப்படியே உதிர்ப்பதைக் காட்டுகிறதே ஒழிய உண்மையைக் காட்டவில்லை.
ஐந்தாம் இயலில் வடநாட்டு நால்வர்ணத்தை அப்படியே தமிழ்நாட்டுக்குப் பொருத்தி பார்ப்பனர், சூத்திரர், தீண்டப்படாதார் என்ற மூன்று பிரிவுகளே இருந்தன என்று கூறுவது பொருந்தாது. உண்மையில் வடநாட்டு வர்ணப் பிரிவுக்கும் தென்னக சமூகத்திற்கும் தொடர்பே இல்லை. இங்கு பழங்காலத்தில் கிழார்கள் எனப்பட்ட வேளாண் மக்களே மிகுதி. இவர்கள் சூத்திரர் அல்ல. வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்த மிலேச்சர்களைக் கூட க்ஷத்திரியர்கள் என்ற தகுதி கொடுத்து ஏற்றுக்கொண்ட வடநாட்டுப் பார்ப்பன அமைப்புக்குத் தமிழக அரசர்களை சூத்திரர்களாகவே நோக்க முடிந்தது. அதை வெட்கமில்லாமல் வெளிப்படுத்துகிறார். இவரைப் பொறுத்தவரை தமிழகப் பார்ப்பனர்கள் மட்டுமே பார்ப்பனர், பிற அனைவரும் சூத்திரர்கள்.
மேலும் வலங்கை இடங்கை எனப்பட்ட பிரிவுகள் கைவினைஞர்களில் மட்டுமே உண்டு. பிள்ளைமார்கள், செட்டியார்கள், முதலியார்கள் முதலிய சாதிகளில் கிடையாது. ஆகவே பெருந்தொகையாகக் காணப்பட்ட சூத்திரர்கள் அனைவரும் வலங்கை இடங்கை எனப் பிரிந்திருந்தனர் என்ற ஆசிரியர் கூற்று தவறு.
எந்த நன்மைகள் எங்கிருந்தாலும் அவை ஆரியச் சார்புடையவை, எந்தத் தீமைகள் எங்கிருந்தாலும் அவற்றிற்கு திராவிடரே காரணம் என்பதுபோன்ற மனப்பான்மை ஆசிரியரிடம் காணப்படுகிறது.இந்துப் பண்பாடு நிலைத்ததற்கு தமிழக ஊராட்சி முறையே காரணம் என்கிறார்.ப.195 திரித்துக்கூறுதல். தமிழகத்தின் ஊராட்சி முறை தமிழகத்துக்கே உள்ள தனிச்சிறப்பு. உத்திரமேரூர், காவிரிப்பாக்கம் கல்வெட்டுகள். விஜயநகர ஆட்சியில்தான் இவை அழிந்தன.
இயல் பத்தில் சமஸ்கிருத அரிச்சுவடி முறையைப் பாராட்டுகிறார். அது அதன் மூல மொழிகளிலிருந்து வந்ததும் அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறார். அதைவிடச் சிறப்பான அரிச்சுவடி முறையைத் தமிழ் பெற்றுள்ளது. தமிழிலிருந்து சமஸ்கிருதம் அதைப் பெற்றிருக்கலாம் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
வழக்கம்போலவே பாணினி இலக்கணத்துக்கு ஒத்த நூல் எதுவும் பத்தொன்பதாம் நுற்றாண்டு வரை எழுதப்படவில்லை என்கிறார். தொல்காப்பியம் என்ன ஆயிற்று? சமஸ்கிருத அறிஞர்களின் கண்ணில் தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் படுவதேயில்லை.
கி.பி. 5ஆம் 6ஆம் நுற்றாண்டுகளில் தோன்றிய கிரந்த வடிவத்திலிருந்துதான தமிழ் நெடுங்கணக்குகள் வந்தன என்கிறார். இது தவறு. தமிழ் பிராமி எழுத்துகள் என்ற வடிவங்கள் (இவற்றை பிராமி என்பதோடு இணைக்க வேண்டாம் என்பவர்கள் தாமிழி என்று குறிப்பிடுவர்) வழங்கிவந்தன. இன்றைய நெடுங்கணக்கிற்கு மூலம் இவைகளே. இம்மாதிரித் தவறுகள் இந் நூலில் நிறைய இருக்கின்றன.
உயிரற்ற சமஸ்கிருத அவைக் கவிதைகளின் யாப்பையும் அலங்காரத்தையும் பாராட்டுகிறார். சமஸ்கிருதம் மட்டுமே படித்ததால் இக்கோளாறு தோன்றுகிறது. அக்காலத்துக்கும் முந்திய தமிழ்ச் சங்கக் கவிதைகளின் உயிர்ப்புள்ள தன்மை அவருக்குப் புலப்படவில்லை.
தமிழர்கள் மீது ஏதோ காழ்ப்புணர்ச்சி ஆசிரியருக்கு இருக்கிறது. இலங்கையின் மூதாதையர்களாக தமிழர்கள் வாழ்ந்து வந்தவர்கள். அவர்களைப் படையெடுப்பாளர்கள் என்கிறார். வடநாட்டிலிருந்து வந்த சிங்களர்களைச் சொந்த நாட்டினர், அவர்களுடைய தேசியத் தலைவன் துட்டகமுனு என்கிறார். (ப.459)
இன்னும் இவை போன்ற ஏராளமான முரண்பாடுகளை இந் நூல் முழுவதையும் படிப்பவர்கள் ஆங்காங்கு கண்டுணரலாம்.
பெருமளவு பௌத்தம் இந்துமதத்திற்கு ஒத்துவந்துவிட்டதால் பௌத்தத்தை மகிழ்ச்சியோடு போற்றுகிறார். ஜைனமதத்தின்மீது மட்டும் வெறுப்புக் காட்டுகிறார். அவர்களைப் போலவே அவர்கள் இலக்கியமும் வெறுமையானது என்கிறார். தமிழைப் பொறுத்தவரை பௌத்தர்களை விட சமணர்களே மிகுதியான பங்களிப்புச் செய்தவர்கள். சிறந்த இலக்கண இலக்கிய நுல்களை அளித்தவர்கள்.
இறுதியாக இதன் முறையியல் பற்றி: நூலின் ஒரே ஒரு பக்கத்தில் காணப்படும் சந்தேகக் கூற்றுகளை எடுத்துக்கொண்டால், அவையே (seems, doubtful, probably, though it was idea …but, however, might have been மிக அதிகம். இவற்றைத் தவிர்த்தால் இந்தப் புத்தகம் உறுதியாகக் கூறக்கூடியது மிகக் குறைவு.