எர்னஸ்ட் ஹெமிங்வே என்னும் புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியரின் கதை A Farewell to Arms. இவரது மற்றொரு கதையான கடலும் கிழவனும் என்பதைப் படித்திருப்பீர்கள்.
Farewell to Arms 1929இல் வெளியானது. இது சுயசரித்திரக் கதை என்பவர்கள் உண்டு. முதலாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்த ஒரு போர்வீரன் கதை இது. இன்று முதலாம் உலகப் போரிலிருந்து (1914-18) நூறாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், மூன்றாம் உலகப் போர் போன்ற ஒன்று உக்ரைனில் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தக் கதை பற்றிச் சிந்திப்பது பயனுடையது.
arms என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. கைகள், ஆயுதங்கள். இந்தக் கதை சிலேடையாகவே இந்தச் சொல்லைக் கையாளுகிறது. தழுவிய கரங்களிலிருந்து விடுதலை என்றோ, போரிலிருந்து விடுதலை என்றோ இருவிதமாகவும் இதை மொழிபெயர்க்கலாம். கதையின் இறுதியில் நாயகன் போரின் ஆயுதங்கள், தன்னைத் தழுவிய கைகள் – இரண்டில் இருந்துமே விடைபெறுகிறான். முதல் உலகப் பெரும்போரின் கொடுமைகளைச் சொல்லும் நாவல்களில் இது முதலாவது. இரண்டாம் உலகப் போர் பற்றிய மற்றொரு நாவலான கேட்ச் 22 என்பதைப் பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.
1915 கோடைகாலம். முதலாம் உலகப் போர் நடக்கிறது. பிரடெரிக் ஹென்றி, ரோமில் தங்கி கட்டடக்கலை பயிலும் அமெரிக்க மாணவன், இத்தாலியப் படையில் அவனாகத்தான் சேர்கிறான். போரின் வடக்கு முனையில் கோரிஜியா என்ற இடத்திலுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் குழு ஒன்றுக்குத் தலைவனாகிறான். போர் இத்தாலியர்களுக்குச் சாதகமாக இல்லை என்றாலும் அடுத்த ஆண்டில் அவர்கள் ஆஸ்திரிய-ஹங்கேரிப் படையினரை வெற்றி கொள்கிறார்கள். சில நாட்கள் கடும்போருக்குப் பிறகு லீவில் சென்றிருந்து திரும்பும் பிரடெரிக், கேதரின் பார்க்லி என்ற இங்கிலாந்து நாட்டு நர்ஸைக் காண்கிறான். அவள் ஏற்கெனவே நிகழ்ந்த தன் காதல் முறிந்த நிலையில் கவலையோடு இருப்பதாகத் தோன்றுகிறது.
காயம் பட்ட அவனை மிலன் நகர மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறார்கள். அங்கு கேதரீனும் வந்து சேர்கிறாள். அப்போதுதான் அவளைக் காதலிப்பதாக உணர்ந்து அவளிடம் தெரிவிக்கிறான். அவளும் அதை ஏற்கிறாள்.
கேதரீன் அவன் மனைவியாகவே ஆகிவிடுகிறாள். அவனை நன்கு கவனித்துக் காப்பாற்றுகிறாள். கொஞ்சகாலத்திற்குப் பிறகு அவள் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவிக்கிறாள். உடல் குணமான பிறகு இருவரும் ஆறுமாதம் விடுப்பில் செல்லலாம் என்று திட்டமிடுகின்றனர். என்றாலும் அவன் மிகுதியாகக் குடிக்கிறான். கடுமையான தொனியில் நர்ஸுகளிடம் பேசுகிறான். அவன் போக்கு பிடிக்காத மருத்துவமனைத் தலைவி அவனை உடனே விடுவித்துவிடுகிறாள். கோரிஜியாவுக்கே சென்று போர்முனையில் சேர ஆணை வருகிறது. காதலியோடு கொஞ்ச நேரம் இனிமையாகக் கழித்துவிட்டு இருவரும் இனி சந்திப்போமா என்ற ஏக்கத்தில் இருக்கும்போதே ஹென்றி இரயில் ஏறுகிறான்.
இப்போது 1917 கோடை. நிறைய ஆட்கள் இறந்திருப்பதால் படையின் மனநிலை சரியில்லை. நான்கு ஆம்புலன்சுகளை வடக்கில் கேபரெட்டோ நகருக்குக் கொண்டுசெல்லுமாறு இவனுக்கு ஆணை தரப்படுகிறது. செல்லும் வழியில் தாக்கப்படுவதால் இவர்கள் குறுக்குவழி ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓர் ஆற்றைக் கடக்கும்போது சேற்றில் சிக்கிக் கொள்கிறார்கள். இடையில் சேர்ந்துகொண்ட சார்ஜெண்ட் ஒருவன் உதவி செய்ய மறுப்பதால் அவன் ஆட்களுக்கும் இவன் ஆட்களுக்கும் சண்டை நடக்கிறது. இவன் ஒருவனைச் சுட்டுக் கொன்றுவிடுகிறான். இதுதான் அவன் செய்த முதல் கொலை. ஒன்று தப்பியோட வேண்டும் அல்லது கொலைக்காகச் சரணடைய வேண்டும் என்ற நிலையில் பயந்தோடும் பொது மக்களோடு இவனும் சேர்ந்து ஓடுகிறான், பிறகு நதியில் குதித்துவிடுகிறான் நீரிலிருந்து எழும்போது தான் சிப்பாய் என்ற அடையாளத்தை விட்டு சாதாரண மனிதனாக (போர்க்களத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய் ஆக) எழுகிறான். (Farewell to military arms).
எப்படியோ மிலனுக்குச் சென்று சேர்கிறான். கேதரினைத் தேடிச் செல்கிறான். அவள் ஸ்ட்ரெஸா என்ற இடத்துக்குப் போய்விட்டதாகத் தெரிகிறது. அங்குச் சென்று அவளை அடைகிறான். சில நாட்கள் காதலர்கள் மிக மகிழ்ச்சியாக அங்கு வாழ்கிறார்கள்.
போரிலிருந்து தப்பி வந்தவர்களைக் கைது செய்து இராணுவக் கோர்ட்டில் நிறுத்துவார்கள். அதனால் இவன் கைதுசெய்யப்படும் தருணம் ஏற்படுகிறது. இராணுவத்துக்கு பயந்து ஒரு சிறு படகில் இருவரும் மிக அருகிலுள்ள ஸ்விஸ் நாட்டுக்குத் தப்பிச் செல்கிறார்கள். குளிர்கால விளையாட்டு களுக்காக ஸ்விட்சர்லாந்துக்கு வந்த தம்பதியினர் என்று சொல்லி அங்கு தங்குகிறார்கள்.
ஸ்விஸ் நாடு எந்தப் போரிலும் ஒருபோதும் ஈடுபட்ட நாடு அல்ல. நிரந்தர நடுநிலை நாடு. அதனால் பயமற்று அவர்கள் அங்கே வாழ முடிகிறது.
ஆல்ப்ஸ் மலைகளின்மீது காதலர் இருவரும் மிக மகிழ்ச்சியோடு நடந்தும் ஓடியும் தழுவியும் தங்கள் தனிமையைக் கொண்டாடுகிறார்கள். மலைமுகட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். பிரசவத்துக்கு ஒரு மாதம் முன்புவரை வாழ்க்கை இனிமையோ இனிமை! கேதரினுக்குப் பிரசவகாலம் நெருங்குகிறது. மருத்துவமனைக்கு அருகில் இருப்பது நல்லது என்று பக்கத்திலுள்ள நகரத்துக்குச் சென்று ஒரு தங்கும் விடுதியில் தங்குகிறார்கள்.
பிரசவ வலி ஏற்பட்டபிறகு விஷயங்கள் தாறுமாறாகின்றன. குழந்தை மாலைசுற்றிப் பிறக்கிறது (நஞ்சுக்கொடி உடல் முழுவதும் சுற்றி இறந்து பிறத்தல்). கேதரினுக்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டதால் அவளும் இறந்துவிடுகிறாள். ஃபிரடெரிக் கையற்ற நிலையில் மருத்துவமனையை விட்டு நீங்குகிறான் (Farewell to the hugging arms of the wife).
காதலன் காதலியைச் சந்திக்கிறான்–அவளைக் கை நழுவ விடுகிறான்–ஒன்று சேர்கிறான்–மீண்டும் அவளை இழக்கிறான் என்ற எளிமையான கதைத்திட்டம் கொண்ட கதை இது. ஆனால் இதனை உணர்ச்சிப் பெருக்குடைய ஒரு பெருங்காவியமாக ஆக்கியிருக்கிறார் ஹெமிங்வே. அவரது மற்ற எல்லாக் கதைகளையும் விட இதுவே சிறந்ததாகப் போற்றப் படுகிறது.