வானம்பாடிகளும் சமூகக் கவிதைகளும்

வானம்பாடிகளும் சமூகக் கவிதைகளும்

(1984ஆம் ஆண்டு இலக்கு அமைப்பு நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை இது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னால். ஒரு வரலாற்றுப் பதிவு என்னும் முறையில் மட்டும் இது வெளியிடப்படவில்லை, இக்கட்டுரையில் சொல்லப்படும் விஷயங்கள் இன்றைக்கும் தேவையானவை என்றே நினைக்கிறேன். -க. பூரணச்சந்திரன்)

ஒரு பரந்த பார்வையில் எல்லாக் கவிதைகளுமே சமூகக் கவிதைகள்தான். கவிதை என்பது கவிஞனின் புறச்சூழலில் நிகழும் யதார்த்த நிகழ்வுகளின் தீவிர உணர்வினால் ஏற்படும் அனுபவ வெளிப்பாடு. இவ்வனுபவ வெளிப்பாட்டைக் கவிஞர்கள் இரண்டு எதிர்முனைகளில் நின்று செய்கின்றனர். சூழலின் உணர்வில் தமக்குள் சுருங்கி தம் இயலாமையை வெளியிடுவது ஒருமுனை. சூழலை மாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதுவது மற்றொரு முனை. இரண்டாவது வகைக் கவிதையே இங்கு சமூகக் கவிதைகள் என்று வரையறுத்துக் கொள்கிறேன். சமூகப் பொறுப்புள்ள கவிதைகளுக்கு நல்ல உதாரணம் பாரதியின் கவிதைகள். அவை வாழ்க்கையின் வெளியேயிருந்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்காமல் அன்றைய தேவைக்கு வேகமாகச் செயலில் இறங்கிவிடுகின்ற ஒரு மிஷனரியைப் போல இயங்குகின்றன. அதுபோல இன்றைய சமூகக் கவிதையும் கவிஞனின் உள்ளத்துக்குள் உட்கார்ந்திருக்கும் உலகின் நிகழ்ச்சிகளை அனுபவமாக்கிக்கொண்டு இயங்க வேண்டியிருக்கிறது. இந்த அடிப்படையில் எழுத்துக் காலத்திலிருந்து தமிழ்க்கவிதை செயல்பட்டு வருவதைக் காணலாம்.

இன்றைக்குத் தமிழ்ப்புதுக்கவிதை வணிகப்பொருளாகச் சீரழிந்து போயிருக்கிறது. புதுக்கவிதை மட்டுமல்ல, அதற்கு முன்னரே தமிழில் அறிமுகமான நாவல், சிறுகதை இவையும் மக்களின் அன்றாடப் பசிக்குத் தீனி போடும் இரையாகத்தான் மாறியுள்ளன. இது 1980 அளவிலான நிலை.

1971-75 காலப்பகுதி, எழுபதுகளின் முற்பகுதி-தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றின் முக்கியமான மாற்றக்காலப் பகுதி. எழுபதுகள்வரை, புதுக்கவிதை தமிழ்நாட்டில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ஓர் உயர்குழுவுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. 1971-75 காலப்பகுதிதான் புதுக்கவிதையைப் பரவலான பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்றது. எழுத்து பத்திரிகை புதுக்கவிதையை அறிமுகப்படுத்தி வளர்த்தபோது, அதன் தளம், சோதனை-வடிவச்செம்மை ஆகிய கால்களில் நின்றது. சோதனை முயற்சிகள் செய்யப்படும்போதே ஒரு பொருள் வணிகச் சந்தைப் பொருள் ஆவதில்லை. சந்தையில் இடம்பெறும் வாய்ப்பு தீர்மானிக்கப்பட்ட பின்னரே உற்பத்தி பெரிதளவு நடைபெறும். ஆகவே எழுத்துக் காலத்தில் புதுக்கவிதை புனிதப் பொருளாக இருந்ததென்றால் அதற்குக் காரணம், கவிஞர்களின் நேர்மை மட்டுமல்ல, அறிமுகப்படுத்தப்படும் புதுப்பண்டம் அது என்பதுதான். எதிர் முகாம்களில் இருந்தோர் அதை முதலில் ‘வெஜிடபிள் பிரியாணி’, ‘கோவேறு கழுதை’ என்றெல்லாம் ஏளனம் செய்து, பின்னர் அவை நசிவுக் கவிதைகள், வக்கிரங்கள் என்றெல்லாம் பழித்து, பிறகு இவ் வடிவத்தை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

எழுத்துக் காலப் புதுக்கவிதைகள் இவ்வளவு எதிர்ப்புக்குள்ளான தற்குக் காரணம் அவை தமிழ்க்கலாச்சார மரபோடு ஒட்டியவை அல்ல என்பதுதான். உலகப்போர்களில் சீரழிந்த மேற்கு நாகரிகத்தின் வீழ்ச்சியையும் மனமுறிவையும் மேற்குநாட்டுப் புதுக்கவிதைகள் கொண்டிருந்தன. இதே உணர்ச்சிகளை அப்படியே இங்கு பிரதிபலித்தன தமிழ்ப்புதுக்கவிதைகள். ஆனால் இவற்றின் உள்ளடக்கம் மட்டும் தமிழ்க்கலாச்சாரச் சீரழிவினைப் பிரதிபலிப்பதாக இருந்தது. சமூகவியல் ரீதியாகப் பார்த்தால், எழுத்துக் கவிதைகள், பெரும்பாலும் பிராமணர் குழு சார்ந்த மேலை மயமாதலின் வெளிப்பாடு. காலரீதியாகப் பார்த்தால், இவை வாழ்க்கையின் அனுபவத் தாக்கங்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிறைப்படுத்தியவை.

தொழில்நுட்ப யுகத்தைத் தாண்டி, மின்னணு பௌதிக யுகத்தின் இறங்கிவிட்ட போதிலும், மனிதனின் வாழ்க்கைப் பிரச்சினைகள் ஒன்றும் மட்டுப்படவில்லை. இன்றைய ஆன்மிக வாழ்வுகூடப் பன்னாட்டு அரசியல் பொருளாதார சமூக நிர்ப்பந்தங்களால் நிர்ணயிக்கப்படுகின்ற சூழ்நிலையில் எழுத்துக்கவிஞர்கள் பலரும் சமகால சமூகப் பிரச்சினைகளை மறந்து என்றைக்கும் உள்ளதான உள்முக உணர்வுகளைக் கவிதை செய்வது என்ற நிலையில் நின்றார்கள். இது அவர்கள் கவிதைக்கு ஒரு ஒற்றைப் பரிமாணத்தை அளித்தது. பிச்சமூர்த்தியின் ‘கிளிக்கூண்’டோ, நகுலனின் ‘கொல்லிப்பாவை’ யோ, வைத்தீஸ்வரனின் ‘ஞானக்கருமை’யோ, சுந்தர ராமசாமியின் ‘என் சிலையை உடை’, ‘நகத்தை வெட்டியெறி’ என்ற கவிதைகளோ, இவையெல்லாம் அகவுலகின் அறிவார்ந்த தளக் கவிதைகள். நாம் வரையறுத்துக்கொண்ட பொருளில் சமூகக் கவிதைகளல்ல.

அகவுலகென்ற ஒற்றைப் பரிமாணத்தில் கவிதை இயங்குவது ஒன்றும் தவறோ தாழ்ச்சியோ அல்ல. சமூகத்தில் இயங்கும் சக்திகளையும் நிகழ்ச்சிகளையும் கணக்கில்கொண்டு எழுதப்பட்டிருந்தால் அவற்றின் வீச்சு இன்னும் விரிந்திருக்கும். எழுத்து கவிதைகளின் மிகமுக்கியப் பணி, பாரதிதாசன் காலத்தி லிருந்து தொடர்ந்த தமிழ்க்கவிதையின் தேக்கத்தை உடைத்தது தான். தமிழ்நாட்டில் இந்த நூற்றாண்டு தொடங்கி பிராமணர்- அல்லாதார் போராட்டம் கூர்மைப்பட்டுப்போனது. பிராமணர் இயக்கம் எதுவாக இருப்பினும் அதற்கு வேளாளர் மரபுசார்ந்த, தமிழ்க்கலாச்சார மரபு சார்ந்த இயக்கம் ஒன்று எதிர்விளைவாகத் தோன்றியே தீரும் தேவை ஏற்பட்டது. பாரதிதாசன் திராவிடக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கவிதைகளைப் பாடினார். பாரதிதாசன் குழுவினர் – வாணிதாசன், முடியரசன், சுரதா போன் றோர் தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவம் கொண்டு கவிதை புனைந்துவந்தனர். பாரதிதாசன் காலத்திலிருந்தே பொதுவுடைமைக் கருத்து சார்ந்த மரபுக்கவிதைகளும் பாடல்களும் தோன்றின. இவை, ஜீவா, தொ.மு.சி. ரகுநாதன், கே.சி.எஸ். அருணாசலம் போன்றோரால் இயற்றப்பட்டவை. இவற்றையெல்லாம் நிராகரித்து எழுந்ததே எழுத்து சார்ந்த புதுக்கவிதைகள்.

பாரதியிடம் சமூகப்பொறுப்பும் எளிய முறையில் புனைவியல் குணத்தோடு மக்களிடம் சென்று சேரும் முறையில் கவிதை செய்ததும் காணப்பட்டன. அவரிடம் கலைத்தன்மையும் இருந்தது. இந்திய-தமிழ்க்கலாச்சார மரபுகளின் இணைப்பும் இருந்தது. பாரதிக்குப் பின் எழுத்து மரபினர், அவருடைய கலைப்பண்பையும் தேசியத்தையும் வேதாந்தக் கருத்தையும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் சமூகப்பொறுப்பை, எளிமையை, மக்களுக்குக் கொண்டு செல்லும் தன்மையை கைநழுவ விட்டனர். புதுக்கவிதை பிராமணர் இயக்கமாக இருந்ததும், அதன் எளிமையற்ற போக்கும், எழுத்து சார்ந்த கவிதைகள் பல புரியாமை கொண்டிருந்ததும், சமூகச் சார்பற்ற போக்கும், எழுத்துக்கு எதிரான புதுக்கவிதை மரபு ஒன்று உருவாக வேண்டிய சமூக நிர்ப்பந்தத்தை அளித்தன. இதனால் 1971 காலப்பகுதியில் வானம்பாடிகளின் தோற்றம் நிகழ்கிறது.

வானம்பாடி கவிதையில் சமூகப் பொறுப்பை வலியுறுத்திய இயக்கம். இது கோவையிலிருந்த பல்வேறு இலக்கியக்குழுக்கள் இணைந்து உருவானது. இதில் இரு தனித்த போக்குகள் இணைந்தன. ஒன்று, பாரதிதாசன் வழிவந்த பிராமணர் எதிர்ப்பியக்கம் சார்ந்த, தமிழ்ப்பண்பாட்டு மரபுசார்ந்த தமிழாசிரியர் கள் குழு. மற்றொன்று கவிதையில் மார்க்சியப் பார்வையை வலியுறுத்தும் இடது சாரிச் சிந்தனையாளர்கள் குழு. இவை இரண்டும் வானம்பாடிகள் இயக்கத்தில் இணைந்தாலும், ஆரம்பமுதலே கருத்து முரண்பாடுகள் இருந்துவந்தே உள்ளன. பாரதிதாசன் மரபுவழி வந்த தமிழாசிரியர்கள், பழைய மரபு வடிவம் புளித்துப் போய்ப் புதுக்கவிதைக்கு வந்தவர்கள். பொதுவான வலதுசாரிக் குணமும் மார்க்சியத் தத்துவங்களைக் கற்பதில் அக்கறையின்மையும் கொண்டவர்கள். திராவிட மரபு சார்ந்த சாதி எதிர்ப்பு, தேய்ந்த நாத்திகம், தமிழ்ப்பற்று, பட்டிமன்ற-கவியரங்கப் பாணி சொல் அலங்கார நேர்த்திகள் இவற்றை உடையவர்கள். இடதுசாரிச் சார்பினரோ, கவிஞர்கள் என்பதைவிட முதன்மையாகச் சிந்தனையாளர்கள். இவர்களும் அதுவரை இருந்த பொதுவுடைமைசார் கவிதைகளின் போதாமையை உணர்ந்தே இவ்வியக்கத்தில் பங்குகொண்டனர். இந்த இரு மரபினர்க்குமான தத்துவப் போராட்டமே பின்னர் 1975 அளவில் வானம்பாடிகள் இயக்கத்தை விரிசலுக்குள்ளாக்கியது.

புதுக்கவிதையின் சோதனைப் போக்கு வடிந்து, ஏற்புப்போக்கு உருவானதற்கு வானம்பாடிகள் ஒரு பிரதான காரணம். இந்திய பிராமணர் 19ஆம் நூற்றாண்டு முதலே மேலைமயமாதலுக்கு ஆட்பட்டவர்களாக இருந்தனர். பிறசாதியினர்-குறிப்பாக பிராமணர்க்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் இப்பிராமணர்களைப் பார்த்துத் தாமும் உயர்நிலைக் கலாச்சார மரபுகளை ஏற்கும் சமஸ்கிருதமயமாக்கலை மேற்கொண்டனர். இந்தப் பொதுச் சமூக நிகழ்வு, தமிழ்நாட்டின் சிறுபத்திரிகைச் சூழலிலும் வெளிப்பட்டது. எழுத்து பிராமணர்களின், மேலைமயமாதலின் வெளிப்பாடு என்றால், வானம்பாடி இதழ் பிராமணமயமாதலின் வெளிப்பாடு. வானம்பாடிக்ள் இயக்கம் அன்றைய ஒரு முக்கியச் சமூகத் தேவையை நிறைவேற்றியது. அதுவரை தமிழில இடதுசாரிச் சிந்தனையாளர்களுக்கெனத் தனிக் கவிதை ஏடு இல்லை. புதிய தலைமுறை போன்றவை அறிவார்ந்த கட்டுரைத் தளத்தில் இயங்கின. தாமரை போன்றவை வெறும் இயக்கப் பாடல்களைக் கவிதை என்ற பெயரில் வெளியிட்டன. இச்சமயத்தில் இடதுசாரிக் குரலுக்கு ஒரு உணர்வுத் தளமாக அமைந்தது வானம்பாடி இதழ். பாரதியிடமிருந்து இவர்கள், எழுத்து கவிஞர்கள் விட்டுவிட்ட சமூகப் பொறுப்பையும் புனைவியல் குணத்தையும் எளிமையையும் பெற்றனர்.

இக்கவிதை இயக்கம் சரியான திசையில் சென்றிருந்தால், அவர்களே சொல்வதுபோல, பாப்லோ நெரூடாக்களை உருவாக்கியிருக்கமுடியும். அவ்வா றின்றி, இந்தக் கவிதைகளின் வீழ்ச்சிக்கு, அன்றைய சீரழிந்த வெகுஜனக் கலாச்சாரத்தினின்றும் அவர்கள் பெற்ற சில இயல்புகளே காரணம். வானம்பாடிகளின் ஆரோக்கியமான பாதிப்புகளாகப் பின்வரு வனவற்றைச் சொல்லலாம்:

1. புதுக்கவிதைக்குப் பரவலான களம் ஏற்படுத்தியது.

2. புதுக்கவிதைகயின் பாடுபொருளை விரிவாக்கியதும் சமூகச் சார்பு தந்ததும்.

3. தமிழ் மண்ணிற்கே உரிய சித்தாந்த மரபுசார்ந்த மகிழ்நோக்கை இடதுசாரி மரபுக்கேற்ப மாற்றித் தந்தது.

4. தமிழ் மரபுசார்ந்த ஜனநாயகத் தன்மை, கிராமியத் தன்மை, லோகாயதத் தன்மை, தமிழ்தேசிய எழுச்சி இவற்றிற்குச் சார்பாகக் கவிதையில் நின்றது.

இவற்றிற்காகவே இவர்களை ஒரு தனி இயக்கமாக ஏற்க முடியும். இவர்கள் கவிதைகளின் பொது இயல்புகளாக, தன்னம் பிக்கை மிக்க வெளிப்பாடு, சாதி மத மறுப்பு, மனிதாபிமானம், சமகாலச் சிக்கல்களையும் சீர்கேடுகளையும் வெளிப்படுத்துதல், அனைத்துலகப் பார்வை, வரலாற்றுணர்வோடு வாழ்வில் நம்பிக்கையூட்டல் என்பவற்றைக் கூறலாம்.

இவர்களுடைய எதிர்மறைத் தன்மைகளும் பாதிப்புகளும்தான் விரிவானவை. பொதுவாக இவர்களின் குறைகள் அனைத்தையும் கவிதைநோக்கில் தெளிவின்மை, தத்துவ அடிப்படையின்மை என்ற இரண்டில் அடக்கிவிடலாம்.

1. கவிதை நோக்கில் தெளிவின்மை

வானம்பாடிகளில் கவிஞர்கள், தமிழக்கவிதைப் பாரம்பரியத்தின் மோசமான அம்சங்களை ஏற்றிருந்தவர்கள். தமிழ்க்கவிதை மரபில், வெறும் சொல் நேர்த்தி, சொல் ஜாலம் இவற்றையே கவிதை என்ற கொண்டாடும் பழக்கம் உண்டு. கவிதையில் சுவைபடச் சொல்லல், நயம்பட உரைத்தல் என்பது பழம்புலவர்கள் ஏற்றது. செய்நேர்த்தித் திறனையே கவிதை என்று கொண்டு சிற்றிலக்கியக் காலம் முதல் இன்றைய கவியரங்கக் கவிதைகள்வரை புனைவது உண்டு. இவர்களிடம வெறும் உத்திச் சேர்க்கைகள், அலங்கார வார்த்தைப் பந்தல்கள் கவிதை என்று இழிவது ஒருபுறம்; மற்றொரு புறம், சர்வ கொள்கைச் சமரசமும் கலாதரிசனமில்லாததால் கவிதையாகும். தன்னம்பிக்கை கொண்ட¢வெளிப்பாடு, மகிழ்நோக்கு கொண்ட வானம்பாடிகள் இதை வெளிப்படுத்திய முறை வெறும் சொல்லடுக்குகள்தான்.

பூமி உருண்டையைப் புரட்டக்கூடிய நெம்புகோல் கவிதை பாடுவோம்-

வானத்தைக் கீறி வைகறைகள் பறித்தெடுப்போம்-

மோனக் குரலுக்குள் முழங்கும் இடிவிதைப்போம்-

சூரியனைக் கண்களால் சுட்டெரிப்போம்-

நமது சிறகசைப்பில் ஞால நரம்பதிரும்-

என்பன இவர்களின் வீறாப்பு வசனங்களில் சில.

பாரதிதாசன் பாரம்பரியக் கவிஞர்களே அன்றி, ஆரம்பமுதலே முற்போக்காளர்களாக இருந்துவரும் கவிஞர்களும் இதேபோல ஆர்ப்பாட்டச் சொல்லடுக்குகளைத்தான் உபயம் செய்கின்றனர். உதாரணமாக-

எமது இதயச் சிவப்பு மைக்கூட்டை / உணர்ச்சி எழுதுகோல் தொடும்போதெல்லாம் / உதயரேகை போல் / சிவப்பாய்ச் சூடாய்க் / கவிதைவரிகள் புறப்படுகின்றன. (இன்குலாப், விடுதலை ராகம்) எம்

இதயத்தை உணர்ச்சி தொடும்போதெல்லாம் கவிதை பிறக்கிறது என்று சுற்றிவளைக்காமலே சொல்லலாம். இதில் கலைப்போர்வை இல்லை. நேர்மை இருக்கும். இவர் இதயத்தைச் சிவப்பு மைக்கூடாக்கி, உணர்ச்சியை எழுதுகோலாக்கி, வரிகளை உதயரேகையாக்கி, அதற்கு சிவப்பு சூடு என்றெல்லாம் அடைமொழி தரும்போது இதில் போலியுணர்ச்சிதான் மிஞ்சுகிறது. இதேபோல,

எமது அமுத தாரைகளால் / கூரைக் குடில்களின் / மண் குடங்களை / இளைய வேனிலின் / கனவுக் கிண்ணங்கள் ஆக்குவோம் / களைத்துக் கறுத்த சேரிப்புறங்களுக்காக / எமது புல்லாங்குழல்களில் / கீதாஞ்சலிகள் புனைந்துகொடுப்போம்…. (சிற்பி, நாங்கள்)

என்பதுபோன்று வரும் படிம அடுக்குகள் திகட்டுவது ஒருபுறமிருக்க, கவிதை என்ற பெயரில் பாமர மக்களை அணுகுகின்றன. கௌரவம் பெறுகின்றன. ஆனால் இவை செய்வதெல்லாம் மொழியை அலங்காரக் குப்பையாக்குவதே.

ஒரு சமூகப் பொறுப்புள்ள கவிதை வாழ்வின் அவலத்தை, மானிடக் கேவலங்களை, சமூகக் கொடுமைகளை, மக்கள் ஒடுக்கப்படுவதை, சுரண்டப்படுவதை வெளிப்படுத்தவேண்டும். அதேசமயம், அது கவிஞனின் வாழ்க்கை அனுபவமாகவும் இருக்கவேண்டும். இரவல் அனுபவங்களும், இரவல் கோஷங்களும் ஒருநாளும் கவிதையாக முடியாது.

அடக்குமுறை என்பது எங்கும் நடைபெறுவது. ஆனால் ‘அடக்குமுறையே ஒழிக’ என்று கத்துவது கவிதையல்ல. கவிஞனின் வாழ்வில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் அனுபவமானதைத்தான் அவன் கவிதையாக்க வேண்டும். சான்றாக, பாப்லோ நெரூடாவின் கவிதை ஒன்று: (சோஷலிசக் கவிதைகள் மொழிபெயர்ப்புத் தொகுப்பிலிருந்து, தலைப்பு-சர்வாதிகாரிகள்),

இரும்புக் காட்டில்/ அந்த வாசனை/ இன்னும் இருக்கிறது

என்று தொடங்குகிறது. அந்த வாசனை, ‘ரத்தமும் நிணமும் கலந்து குழம்பி வாந்தியெடுக்க வைக்கும் வாசனை.’ தென்னை மரங்களிடையே உடைந்த எலும்பு களால் நிரம்பிய சவக்குழிகளைக் கவிதை காட்டுகிறது. ‘இரும்புக்காடு’ என்பது கவனிக்கவேண்டிய பிரயோகமாக முதல் அடியிலேயே அமைய, ‘அந்த வாசனை’ என்பது எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. அடுத்த காட்சியில் நாசூக்கான ஓசைகள், அடிக்கடி கையுறை அணிந்த கனவான்களின் சிரிப்புகள். இவர்களால் நசுக்கப் பட்டவர்களோ, ஓயாது செடிகள் சொரிகின்ற விதைகள் போல அழுகிறார்கள். அவர்கள் அழுவது கண்ணுக்குத் தெரிவதில்லை. இவ்வாறு தேவையற்ற ஒரு சொல்லுமின்றி வளரும் கவிதை இப்படி முடிகிறது; “வெறுப்பு வளர்கிறது. சதுபபுநில அசிங்கமான தண்ணீர் போல ஈரமான மூக்கோடு ஓசை எழுப்பாத நனைந்த மிருக முகத்துடன்”.

இந்த விவரணத்தில் புனைவியல் தன்மையில்லை, யதார்த்தம்தான் இருக்கிறது. கனவுச் சார்பான படிமங்கள் இன்றி, உள்ளத்தில் பீறி எழும் வெறுப்பைத் தொற்ற வைக்கின்றன வரிகள். தொனிப் பொருளோடு, ‘ஈரமான மூக்கோடு ஓசை எழுப்பாத நனைந்த மிருக முகம்’ உள்ளதாக வெறுப்பு வளர்வது சொல்லப்படுகிறது. இக்கவிதையில் கோஷங்களோ உதவாத படிமங்களோ இல்லை. நெரூடா, அவர் சூழலில் பாதிக்கப்பட்ட அனுபவம் இது என்பதை இவ்வரிகளே உணர்த்துகின்றன.

ஆனால் தமிழக முற்போக்குக் கவிஞர்களும் வானம்பாடிகளும் வெறும் சொல்லடுக்குகளைக் கவிதையாக்குகின்றனர்.

நாங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கைவைக்க முடியாது

என்பதுபோல நாங்கள்-நீங்கள் போட்டு எழுதுவது,

ஏ ஏகாதிபத்திய வேசியே! / நீ இன்று விதைத்ததை / நாளை நீயே அறுவடை செய்வாய் /

என்பதுபோல விளித்தலும் மிரட்டலும், அல்லது

வரங்களே சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக (அப்துல் ரகுமான்)

(இதில் ‘கள்’ பிரயோகம் மிக எரிச்சலூட்டும் ஒன்று)

எங்கள்மீது சாம்பலைத் தூவாதீர்கள் நாங்கள் நெருப்புக் கோழிகள் (கங்கை கொண்டான்)

என்பதுபோல முரண்படத் தொடுப்பது அல்லது

ஒரு தலைவன் பிறக்காத / நாளும் ஒரு நாளா / 365 தலைவர் இல்லாத / நாடும் ஒரு நாடா / (பாலா)

என்று கிண்டல் செய்வது; இன்னும்

இரவில் வாங்கினோம், இன்னும் விடியவே இல்லை

என்று புதிர் போடுவது இப்படிச் சமூகச் சார்புக் கவிதைகளைக் குறிப்பிட்ட சில வாய்பாடுகளில் அடங்குமாறு செய்துவிட்டனர். இவையும் இன்று வணிகத் தலங்களாகிவிட்டன. இதற்காக, வானம்பாடிகளிடம் நல்ல கவிதைகளே உருவாகவில்லை என்பதல்ல. அவை வெகு அபூர்வம். புவியரசின் ‘ஏலி ஏலி லாமா சபக்தானி’ மாதிரி, சிற்பியின் ‘ஞானபுரத்தின் கண்கள் திறக்குமா’ மாதிரி, ரவீந்திரனின் ‘அடிமைகள்’ மாதிரி. அபூர்வம். மேற்சொன்ன ஃபார்முலாக்கள் படிமச் சேர்க்கைகள் இன்றி சுய அனுபவத்தை இயல்பாகத் தரும்போது கவிதையாகின்றன.

வானம்பாடிகளின் மிகமோசமான கொடை, ஓர் இன்ப நிறைவு தரும் கனவுப் பாணியைக் கவிதையில் கொண்டுவந்ததுதான். ஒரு பெண்ணின் சோகத் தைக்கூடக் கனவுமயப்படுத்தித்தான் இவர்களால் சொல்லமுடிகிறது.

அந்த மகரயாழின் அந்தரங்கத்திலே / தவங்கிடந்த ராகங்கள் / விரல்களின் நிராகரிப்பால் / சாபங்களின் / சந்தாத் தொகையாகி விட்டன (தமிழன்பன்)

இவர்கள் கவிதைகளின் தலைப்புகளிலேயே இந்தக் கனவுப்பாணிச் சொற்சேர்க்கைகளைக் காணலாம்.

சில நைலான் கனவுகள் எரிகின்றன, பசி தேவதைகள், ஒரு விஸ்வரூபத்தின் விழிப்புக்காக, துவாங்காத புயல்களின் பிரார்த்தனைகள், நித்திய வசந்த பூமியை நோக்கி, அப்போது இந்தப் புழுதிகள் பிரளயங்களாகும், சிகரங்கள் பொடியாகும் – இதுபோல கனவு மயக்கங்களிலேயே திருப்தியடை யும் இவர்கள் புரட்சி ஒன்று வந்தால் சந்திக்க இருக்கமாட்டார்கள். கனவின் தன்மையே Substitute Gratificationதானே?

ஆனால் கவிதை நிச்சயம் கனவல்ல. பழகிப்போன தடத்திலே சென்று ஒரு பார்வையும் அனுபவமும் அற்றுவிட்ட மனிதனுக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்து விழிக்க வைப்பது கவிதையின் முதல் பணி. கவிஞன் கொணரும் சொற்சேர்க்கைகள் ஒரு புதுமையை, பழக்கங்களிலிருந்து அந்நியத்தன்மையைக் கொண்டுவர வேண்டும். அதிர்ச்சியூட்ட வேண்டும். இவை மொழியின் சாத்தியப்பாட்டை விரிவாக்குவது மட்டுமல்ல, மொழியின் தளைகளிலேயே அனுபவத்தைக் குறுக்கிக் கொண்டு கிடக்கும் பொது மனிதனின் அனுபவ விரிவையும் ஏற்படுத்துகின்றன. ஒரு சில கணங்களிலேனும் மொழித் தளையை மீறி அனுபவத்தை நேர்முகமாக தரிசிக்க உதவுகின்றன. வானம்பாடிக் கவிதைகள் இந்த எல்லைக்குள் செல்லவே இல்லை. டி.எஸ். எலியட் ஒரு கட்டுரையில், “கீட்ஸ் ஈஸ் ஆல்சோ எ போயட்” என்று தொடங்குவதுபோல, “வானம்பாடிகளும் கவிஞர்களே” என்று ரொம்பவும் வேண்டாவெறுப்பாக (ரிலக்டண்ட்-ஆக) ஏற்கவேண்டி யிருக்கிறது.

வானம்பாடிகளிடம் கனவுத்தன்மை ஒரு தமிழ்த்தனத்தோடு செயல்படுவதை இவர்களுடைய அகம்-புறம் பாணிக் கவிதைத் தொகுப்புகளில் காணலாம். காமராசன், மீரா, மேத்தா, தமிழன்பன், சிற்பி முதலியோர் அகநானூறு-புறநானூறு போலக் காதல் புலம்பலுக்கு ஒரு கவிதைத் தொகுதி, சமூக விமரிசனத்துக்கு ஒரு கவிதைத் தொகுதி என்று புத்தகம் போட்டு வருகின்றனர். இவர்களுக்கு வாரிசுகளும் நிறைய. பாப்ரியா, சூர்ய காந்தன் என்று.

2. தத்துவ அடிப்படையின்மை

சமூகப் பொறுப்பேற்றுக் கவிதைகள் படைக்கும் எந்தக் கவிஞனுக்கும் தத்துவ அடிப்படை மிகத் தேவை. இதை வானம்பாடிகளில் கவிஞர் எனப் பெயர்பெற்றோர் உணர்ந்தனரா என்று தெரியவில்லை. மாறாக, ஞானி, ஜீவ ஒளி போன்றோர் இவர்களது கவிதைகளை விமரிசனம் செய்தபோது, “போடா விமர்சகா உன் நமத்துப்போன தீக்குச்சிகளைத் தூக்கிக்கொண்டு” என்றும் “கவிதையே வாழ்க்கையின் விமரிசனமாக இருக்கும்போது அதற்கொரு விமர்சனம் தேவையா?” என்றும் பழிக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்க்கை அனுபவங்கள் கவிதையாகின்றன என்றால் முரண்பட்ட அனுபவங்கள் ஏற்படும்போது என்ன செய்வது? இங்குதான் வாழ்க்கை நோக்கு உதவி செய்கிறது.

தத்துவ அடிப்படை என்னும்போது வெறும் மார்க்சிய அல்லது காந்திய அல்லது ஃப்ராய்டிய அடிப்படைகளை இங்குப் பேசவில்லை. வாழ்வின் அனுபவங்களைத் தனக்குள் ஒருமைப்பாட்டுக்குக் கொண்டுவரும் ஓர் அமைவு (சிஸ்டம்) கவிஞனுக்குள் வேண்டும். இந்த அமைவை உருவாக்கிக் கொள்ளும் பணிக்குத்தான் கவிஞனுக்குத் தத்துவ அடிப்படை தேவை. இல்லாவிட்டால் சந்தர்ப்பவாத சமரசக் கவிதைகள்தான் மிஞ்சும். உதாரணமாக, ‘ரோடுரோலரின் பவனி’ எழுதிய சக்திக் கனலே எப்படி ‘அனலைப் புனலாய் மாற்றுகிறேன்’ என்று முரண்பட முடிகிறது? முரண்பாடு என்பது நெறிப்பட்ட வளர்ச்சியின் விளைவு என்றானால் பரவாயில்லை. இன்றைக்கு ஒன்றும் நாளைக்கு ஒன்றும் பேசுவது கவிஞனுக்கு இயல்பாகல் ஆகாது.

சரியான தத்துவச் சார்பின்மைதான் கலை இலக்கியம் தன்னளவிலேயே விடுதலை உண்டாக்குவது, சமூக மாற்றத்தைச் சாதிப்பது என்ற மயக்க உணர்வை இவர்களுக்கு ஏற்படுத்தி கோஷங்களில் சரணடைய வைக்கிறது. “இனியொரு புனித வரி தருக; / என் பூமியில் / எழுந்தது புரட்சி என வரைக” என்று கவிதையின் வழியே புரட்சியைக் கொண்டுவரும் மயக்கத்தை ஊட்டுகிறது. கவிதை மானிட விடுதலையை உண்டாக்காது. ஆனால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள, எதிர்கொள்ள உதவும். ஆக இன்றைய வாழ்க்கையின் சோகங்களை சகித்துக்கொள்ள வைத்திருக்கும் அலித்தன்மையை விமரிசனம் செய்வதுதான் கவிதையின் பணியாகும்.

வாழ்க்கை விமரிசனம் செய்வது கவிதை என்றால் அதில் யதார்த்தம் வேண்டாமா? வானம்பாடிகள் எவ்வளவு தூரம் யதார்த்தக் கவிதை எழுதியிருக்கிறார்கள்? அல்லது இன்குலாப், தணிகைச் செல்வன், பரிணாமன் என்று ஒரு முற்போக்குக் கவிஞர் குழாம் இருக்கிறதே, அவர்கள் எவ்வளவு யதார்த்தக் கவிதைகள் எழுதியுள்னர்? காலங்காலமாக மிகைக் கற்பனைகளின் உறைவிடமாக இருந்துவரும் தமிழ்க்கவிதைகளில் யதார்த்தத்தைக் கொண்டுவர ரொம்பச் சிரமப்பட வேண்டும். யதார்த்தச் சித்திரிப்பில் உரைநடை-கவிதை முரண்பாடு ஒருபுறம் இருக்க, விமர்சகர்களும் இதில் ஏமாந்துவிடுகின்றனர். நாவல், சிறுகதைகளில் சோஷலிச யதார்த்தம், விமரிசன யதார்த்தம் தேடி முற்போக்கு முத்திரை குத்தித் தரமதிப்பீடு செய்யும் சமூக விமரிசகர்கள்கூட கவிதைப்பக்கம் வந்தவுடன் நிலைகுலைந்து, கவிதை வரிகளில் சிவப்பு, அக்னி, உதயம், விடியல், புரட்சி, வசந்தம் என்ற சொற்களைக் கண்டு முற்போக்குக் கவிதை என்று சான்றிதழ் கொடுத்துவிடுகின்றனர். யதார்த்தத்தைக் கவிதையில் கொண்டுவந்து ஓரளவு சாதனை நிகழ்த்தியவர்கள் என்றால் முற்போக்குக் கவிஞர்கள் எல்லாரையும்விட, சி.மணி, ஞானக்கூத்தன், தருமு சிவராமு, கலாப்ரியா போன்றோரைத்தான் சொல்ல வேண்டும். ஒரு சில கவிதைகளில் ஆத்மாநாம், நாரணோ ஜெயராமன் போன்றோரும் கூட.

இனி இவர்களிடம் உள்ள பிரச்சாரம் பற்றி. ஒருபுறம் சமூகக் கவிதைகள் என்றாலே வெளிப்படையான பிரச்சாரமும் கோஷமும் இருக்கவேண்டும் எனச் சிலர் நினைக்கின்றனர். “அடங்கிய குரலில்தான் எழுதவேண்டும் என்பது என்ன நியதி?” என்று கேட்பார்கள். மறுபுறம், சிலர் “கவிதைக்கும் பிரச்சாரத் துக்கும் ரொம்ப தூரம்” என்பார்கள்.

எல்லா இலக்கியங்களுமே அடிப்படையில் பிரச்சாரம் செய்பவைதான். ஒரு அர்த்தமுள்ள தளத்தில்-கவிஞன் தன்னிச்சையாக, தன் மனம் உணர்ந்து ஏற்றுக்கொண்டதை வலுவாக பாஷையின்மூலம் வெளிப்படுத்தும் போது அது வெறும் பிரச்சாரம் என்ற நிலையைத் தாண்டி இலக்கியமாகிறது. தான் மனப்பூர்வமாக ஏற்காததை-convince ஆகாததைச் சொல்லும்போதோ, மனம் உணர்ந்ததை மொழியில் வெளிப்படுத்த முடியாமல் பலவீனப்படும்போதோ தான் கவிதை வெறும் பிரச்சாரம், கோஷம் என்ற நிலை எழுகிறது. சான்றாக,

நாங்கள் ஞானசூரியன்கள் / சூரிய தீபங்கள் செந்தாமரைகள் / ஒத்த சமத்துவங் கள் மாக்சிம் கார்க்கிகள் / இந்திய மாநிலம் பயனுற வாழ்வதற்கே / சிறகடிக்கும் ஒளிப்பறவைகள் (அக்னிபுத்திரன்)

இது வெறும் வார்த்தைப் பந்தல். வெறும் கோஷம். இப்படிச் சிலர் வார்த்தைப் பந்தல் அடுக்குவதை விமர்சித்தால் “உங்கள் கலை ஆளும் வர்க்க ஆயுதம், சோஷலிசப் போஸ்டர் எழுதுவது ஒன்றும் கேவலமான காரியமில்லை” என்பார்கள். இவர்களால் தான் வெறும் பிரகடனங்களே முற்போக்குக் கவிதை என்றாகிப போனது. வானம்பாடிகளின் சமகாலத்தில் வெளிவந்த சுந்தர ராமசாமியின் பிரகடனம் ஒன்று (சவால்) இவர்களைப் போல் ஆர்ப்பாட்டமில்லாமல், ஆனால் ஆழ்ந்த கவிதையாகிறது.

நோவெடுத்துச் சிரம இறங்கும் வேளை / துடைகள் பிணைத்துக்கட்டக் / கயிறுண்டு உன் கையில் எனத் தொடங்கும் இக்கவிதை, ஓய்ந்தேன் என மகிழாதே, உறக்கமல்ல தியானம், பின்வாங்கல் அல்ல, பதுங்கல் என வளர்ந்து, எனது கொடி பறக்கிறது அடிவானத்துக்கு அப்பால் என்ற முழக்கத்தோடுதான் முடிகிறது. இந்தப் பிரகடனம் கவிதை யாகிறது.

கோஷங்களும் பிரகடனங்களும் கவிதையாகாது என்றல்ல, அவை அகத்தின் சாரத்தைப் புறத்துடன் இணைக்கவேண்டும். அவ்வளவுதான். வெறும் கருத்துகளிலிருந்து எழும்போதுதான் கோஷம் தன்னை அசிங்கமாக்கிக் கொள்கிறது. வானம்பாடிகள் முற்போக்குக் கவிஞர்கள். இவர்களின் பிரச்சாரங்களோ, கோஷங்களோ கவிதையாகாமல் போனால் போகட்டும், குறைந்தபட்சம் ஓர் இடதுசாரி கோஷம் என்ற அளவிலாவது வெற்றி பெற வேண்டுமா இல்லையா? அதற்கும் அனுபவபூர்வமான commitment வேண்டும்.

இனி இவர்களுடைய பாடுபொருள்கள் பற்றி. முற்போக்குக் கவிஞன் என்றாலே விபசாரிக்கு அனுதாபப் பட்டு ஒரு கவிதை, தொழிற்கூடப் பாட்டாளிகளைப் பற்றிச் சில, காந்தியை, மார்க்சை விளித்துச் சில, அரசியல்வாதிகளைக் கிண்டல், நையாண்டி செய்யும் கவிதைகள் சில, வரதட்சி ணைக் கொடுமை பற்றி ஒன்று-என்று இப்படி எழுதினால் போதும். ஏன் இவர்கள் மத்தியதர வாழ்க்கையின் சிறுமைகள், மேன்மைகள் பற்றியெல்லாம் கவிதை செய்வதில்லை? பாட்டாளிகள் என்றால் தொழிற்சாலைகளில்தானா? இந்தியாவில் மிகப் பெரும்பான்மை யான விவசாயிகள் பற்றி சரியாகக் கவிதை உண்டா? பெண்கள் வாழ்க்கையில் நொடிக்கு நொடி அனுபவிக்கும் எந்த விஷயம் இங்கே கவிதையாகியிருக்கிறது?

“ஈயாய்க் கண்கள் பல மொய்க்க, என்னை உணர்ந்தேன் தெருமலமாய்” என்று பாலகுமாரன் தற்செயலாக ஒரு கவிதையில் எழுதியதுபோல ஒரு மாறுபட்ட வீச்சைக் காட்டும் வானம்பாடிக் கவிதைகள் எத்தனை?

நாரணோ ஜெயராமன், சாக்கடையோரத்தில் / சிசுக்கள் நிலாக்கண்டு சிரித்து / மல்லாந்து கிடக்கும் / என வருணித்தமாதிரியான தரிசனங்கள் எத்தனை தேறும்? பாடுபொருளும் தலைப்பும்கூடப் பஞ்சம். ஒருவர் ‘என்னைக் கம்யூனிஸ்டு ஆக்கினீர்கள்’ என்று கவிதை பண்ணினால், இன்னொருவர் ‘என்னை சோஷலிஸ்டு ஆக்கினீர்கள்’ என்று கவிதை பண்ணுவார். ஒருவர் “ராஜத்தின் தந்தைக்கு ராஜம் ஒரு பிரியதர்சினிதானே” என்றால் இன்னொருவர், “பிச்சம்மாவிற்குப் பிள்ளையாய்ப் பிறந்தவன் பிரியதர்சினியின் மகனாக முடியுமா” என்பார்.

இதேகாலத்தில்-எழுபதுகளில்-செயல்பட்ட ஈழத்துக் கவிஞர்கள் சிலரைப் பற்றி.

ஈழத்துக் கவிதைகள் பெருமளவு சமூகப் பொறுப்புள்ளவைதான். அவை பிரச்சாரங்களாக வெளிப்படும் அதேசமயம் கவிதைகளாகவும் மலர்கின்றன. இன ஒடுக்குமுறையின் மத்தியில் பெரும்கோஷங்களாக வெளிப்பட வேண்டிய நியாயமுள்ள ஈழத்துக் கவிஞர்களின் குரல் ரொம்பவும் அடங்கிய தொனியில் வெளிப்படுவதைக் காண்கிறோம். தமிழகத்திலோ, ஈழம் போல எதுவும் பற்றியெரியாவிட்டாலும் வறட்டு ஆர்ப்பாட்ட கோஷங்கள்.

ஈழத்துக் கவிதைகள் இவ்வாறு அடங்கிய குரல் கவிதைகளாக இருக்கக் காரணம், அவர்கள் புறநிகழ்ச்சிகளை வருணிக்கும் பாங்கில் தங்கள் அனுபவத்தை அவற்றில் இணைக்கிறார்கள். ஒருசில சொற்களில், அல்லது சொற் களுக்கிடையிலான மௌனங்களில். ஈழத்திலும் மேமன்கவி போன்ற ஒருசில வணிக ஆர்ப்பாட்டக் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் மிகக் குறைவு. அறுபதின் தொடக்கமுதல் அறியப்பட்ட கவிஞர் முருகையன். மார்க்சிஸ்டாக இருப்பினும் ஆர்ப்பாட்டத் தொனிக்கு மாறாக அறிவுப்பாங்கையே அவர் கவிதைகள் கொண்டுள்ளன. இதேபோல்தான் நுஃமானும். தமிழகத்தில் எழுத்து குழு, வானம்பாடி குழு என்று சொல்வது போல அங்கு குழுப்பாணி கிடையாது. அவர்களிடம் துலக்கமான தனித்தன்மை உண்டு. காரணம், அங்கு தமிழகம் போல வணிக இதழ்கள் பெருமளவு இல்லை. வணிகக் கலாச்சாரம் இங்குப் போல அங்கு வேரூன்றவில்லை என்பதாக இருக்கலாம். இரண்டாவது, தமிழகத்தில் ஆதிமுதல் இருந்துவரும் பிராமணர்-அல்லாதார், ஆரியர்-திராவிடர் அங்கு இல்லை. மூன்றாவது, தமிழகத்தி லிருப்பதுபோல மார்க்சியச் சார்பு-மார்க்சிய எதிர்ப்பு என்பது அங்கு ஒரு போராட்டமாகவில்லை என்று கூறலாம். எஸ். பொன்னுத்துரை, மு. தளையசிங்கம் போன்றோர்கூட மார்க்சியத்தை முற்றாக நிராகரிக்கவில்லை. மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டு கடந்துசெல்லும் நிலை பற்றியே பேசினார்கள். இங்கோ, வறட்டு மார்க்சியச் சார்பு போல, வறட்டு மார்க்சிய எதிர்ப்பு என்பது ஓர் அடிப்படை குணமாகவே பல எழுத்தாளர்களிடம் ஊறிக்கிடக்கிறது. இதனால் ஈழத்துக் கவிஞர்கள் புறநிலை யதார்த்தம் என்பதை ஏற்று தத்தம் தனித்தமைகளை வடிக்கின்றார்கள். இவர்களில் மஹாகவி, சண்முகம் சிவலிங்கம், தா. இராமலிங்கம் போன்றோர் முக்கியமாகக் குறிக்க வேண்டியவர்கள். யாழ்ப்பாணம் பேச்சுத்தொனியை இவர்கள் இயல்பா கவே கவிதையில் கொண்டுவந்துள்ளனர். இங்கு ஞானக்கூத்தன் போல, வானம்பாடிகளும் மேடைப்பேச்சுப் பாணியைக் கவிதையில் கொண்டுவர முற்சி செய்துள்ளனர். ஆனால் அது சரியாக வரவில்லை.

ஈழத்துக் கவிஞர்கள் நாட்டுப்பாடல் வடிவத்தையும் கவிதையாக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக மஹாகவியின் மீனவர் பாடல், சண்முகம் சிவலிங்கத்தின் ஆக்காண்டி போன்றவை (இரண்டும் க்ரியா வெளியிட்ட ஈழத்துப் பதினொரு கவிஞர்கள் தொகுப்பில் உள்ளன). வைத்ததுவோ அஞ்சு முட்டை / பொரித்ததுவோ நாலு குஞ்சு / நாலு குஞ்சும் போர்புரிய / நடந்துவிட்டார் என்ன செய்வேன்? ஆககாண்டியின் குரலா இது? ஆக்காண்டி, இயல்பான குறியீடாகப் பரிணமித்துப் பல்வேறு அர்த்த தளங்களுக்கு உயர்வதை இக்கவிதையில் காணலாம். தா. இராமலிங்கத்தின் கவிதைகளில் பேச்சுத்தொனி மிகச் செறிவாக வருகிறது. சான்றாக ‘சீவியம்’. இவருடைய சொற்சேர்க்கைகள் அபூர்வமானவை. சான்றாக, “மணிக்கூட்டு வாழ்க்கைகாரர் என் சொல்லுக் கேட்கமாட்டார்”. “பிறர் ஆசார முட்டையிலே மயிர்பிடிக்கும் மேற்சாதி நான்”. சி. மணி போல தனது வரிகளூடே இலக்கிய வரிகளை இயல்பாக இணைக்கிறார்.

என் காதலர் மடியினிற் கிடந்தழுதேன் / நீடியி சிறையினில் பட்ட துனபம் / ஈடுசெய் இன்பம் தந்துவிட்டார் /

இன்னும் எழுபதுகளின் பிற்பகுதியில் உருவான சிவசேகரம், சேரன் போன்றோர் சங்கப்பாடலின் உருவ இயல்பையும் தொனியையும் தங்கள் கவிதைகளில் கொண்டுவருகின்றனர். புறக்காட்சி வருணனையும் ஆழ்ந்த உள்ளுணர்வும் சேர்ந்து இயங்கும் ஒரு Unification of sensibility-தமிழ்க்கவிதைகளில் கிடைக்க அரிதானது-இவர்களிடம் இயல்பாகக் காணக் கிடைக்கிறது. (சான்று, சேரனின் ‘இரண்டாவது சூரியோதயம்’). இன்றைக்குத் தமிழில் பிரம்மராஜன் போன்றோரிடம் ஒரு அறிவாதாரமான துருவுதலை நாடும் இருண்மைத் தன்மை காணப்பட, முற்போக்கு எழுத்தாளரிடம் வெறும் கோஷங்களாகக் கவிதை இருக்க, இவ்விரண்டு எல்லைகளிலும் செல்லாமல் தெளிவோடு கூடிய யதார்த்தச் சித்திரிப்பு ஈழத்துக் கவிஞர்களிடம் தான் காணப்படுகிறது. இதுவரை தமிழில சமூகச் சார்புள்ள புதுக்கவிதைகள் தரமுள்ளவையாக உருப்பெறவில்லை. இனிவரும் தமிழ்க்கவிதை ஈழத்துக்கவிதைகளின் மேற்கண்ட இயல்புகளைச் செரித்துக் கொண்டால் மிக நல்லது. புதுக்கவிதையின் ஒரு கட்டம் முடிந்துவிட்டது. இன்னொரு கட்டம் இனித்தான் துவங்க வேண்டும். —–

திறனாய்வு