தமிழ்மொழி செம்மொழி என இன்று அதைப் பற்றி நன்கு அறியாதவராலும் சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம், பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு அளித்த அங்கீகாரம். அதற்குப் பிறகு அநேகமாக முக்கிய திராவிட மொழிகள் அனைத்தும் செம்மொழி அந்தஸ்தினை அரசு அங்கீகாரத்தினால் பெற்றுவிட்டன.
ஒரு மொழி செம்மொழி அல்லது உயர்தனிமொழி என்ற அந்தஸ்தினை அரசு அங்கீகாரத்தினால் மட்டும் பெற இயலாது. அவ்வாறு பெறுவது சில அரசியல், பொருளியல் காரணங்களுக்காக; ஓட்டு வாங்குவதற்காக, செம்மொழிகளுக்கென அளிக்கப்படும் நிதிக்கொடைகளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சி என்றே கொள்ளத்தகும். 1902ஆம் ஆண்டில் பரிதிமாற் கலைஞர் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று யாவரும் உணரவேண்டும் என்றாரே, அதுதான் உண்மையான அங்கீகாரம். அதற்கு முன்பாகவே தமிழின் பெருமையை-சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது அது என்று-நிலை நாட்டினாரே கால்டுவெல், அதுதான் உண்மையான அங்கீகாரம்.
ஒரு மொழி உயர்தனிச் செம்மொழி என்பது அதன் பெருமையை உணர்ந்த அறிஞர்களால் வெளிப்படுத்தப்படுவது. அதன் பண்பை அறிந்த அம்மொழியினரால் முதலில் உணரப்பட்டு, பிறகு உலகினர் பலராலும் ஏற்கப்படுவது. அது ஏதோ சாதிச்சான்றிதழ் போல அரசு முத்திரை குத்திக் கொடுக்கும் சான்றிதழ் அல்ல. அப்படி ஒரு சான்றிதழைப் பெறுவது நமக்கு கௌரவமும் அல்ல. பழங்காலத்திலிருந்தே இவ்விதமாகப் பெருமை உணரப்பட்ட செம்மொழிகள்தான் ஹீப்ரூ, லத்தீன், கிரேக்கம், பாரசீகம், சீனம், அராபியம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள். கால்டுவெல்லின் பணி, தமிழ் இவற்றில் எதற்கும் எவ்விதத்திலும் குறைந்த மொழியல்ல என்பதை நிறுவிச் செம்மொழிகள் வரிசையில் அதைச் சேர்த்தது.
இன்று உலகில் மொழிக்குடும்பங்கள் பல உள்ளன. இந்தோ ஐரோப்பிய (முன்னால் இந்தோஆரிய என்று வழங்கப்பட்டது), ஆப்பிரிக்க, யூராலிக்-ஆல்டாய்க், சீன-திபேத்திய, திராவிட, தென்கிழக்காசிய, மலாய்-போலினீசிய, பப்புவன், ஆஸ்திரேலிய, அமெரிக்க இந்திய, பாஸ்கு எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். நம் வடநாட்டு (ஆறிய) அறிஞர்களுக்கு எல்லாமே சமஸ்கிருதத்திலி ருந்து பிறந்தவை என்று சொல்லிவிட்டால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைவார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு, தமிழ் மறுமலர்ச்சி நிகழ்ந்த நூற்றாண்டு. இதன் முதல் பாதியில் மேற்கத்தியச் சிந்தனைகளின் பரவல் நிகழ்ந்தது, இரண்டாம் பாதியில் திராவிட நாகரிகம் என்ற கொள்கை தோன்றியது. இவையிரண்டின் விளைவு, இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்த்தேசிய இயக்கம்.
ஒரு மொழியின் மறுமலர்ச்சி என்பது அதற்குரிய இனத்தின் அடையாளத்தை நினைவூட்டுகிறது. இறுதியாக அதன் பண்பாட்டுப் பாரம்பரியத்தை அந்த தேசிய இன விடுதலைக்குரிய தேவையாக மாற்றுகிறது. ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டில் உருவான மறுமலர்ச்சி, தேசிய அரசுகள் எழுவதற்கு வழிகோலியது. தமிழர்களைப் பொறுத்தவரை மிக நீண்ட வரலாறும் பாரம்பரியமும் இலக்கியமும் உடையவர்கள். ஆனால் அவற்றை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தவர்கள். தங்கள் இன அடையாளத்தையும், கடந்தகால வரலாற்றையும் அரசியலையும் அறிவ தற்குத் தமிழ் மறுமலர்ச்சி காரணமாயிற்று. ஆங்கிலக் கல்வியும், வீரமாமுனிவர் தொடங்கி, கால்டுவெல், ஜி. யூ. போப் வரை கிறித்துவச் சமயப் பணியாளர்களின் மொழிப் பணியும் இதற்குத் துணைபுரிந்தன. தமிழ் நாகரிகத்தின் பெருமை, முதன்முதலாக ராபர்ட் ப்ரூஸ் ஃபுட் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளில் தெரிய வந்தது. அதற்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களை சி. வை. தாமோதரம் பிள்ளை, உ. வே. சாமிநாதய்யர் போன்றோர் வெளிப்படுத்தினர்.
தமிழ் நாகரிகமும் மொழியும் ஆரியச் சார்பற்றவை என்ற உணர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஏற்பட்டது. இதற்குக் காரணமாக அமைந்தவர்களில் ராபர்ட் கால்டுவெல், ராமலிங்க அடிகள், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, தண்டபாணி சுவாமிகள் போன்றோர் குறிப்பிட வேண்டியவர்கள்.
ராபர்ட் கால்டுவெல் (மே 7, 1814 – 28 ஆகஸ்டு 1891) அயர்லாந்தில் கிளாடியில் ஸ்காட்லாந்தியக் குடும்பத்தினர்க்குப் பிறந்தார். இளமையிலேயே லண்டன் மிஷனரி சொசைட்டியில் சேர்ந்தார். அது அவரை கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற அனுப்பியது. அங்கு அவர் ஒப்பியல் மொழியியலிலும் இறையியலிலும் சிறந்த தேர்ச்சி பெற்றார். பன்மொழிப்புலமை அவருடைய ஒப்பியலாய்வுக்கு உதவியது. ஆங்கிலம் தமிழ் மட்டுமன்றி, கிரேக்கம், ஹீப்ரூ, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஜெர்மன், ஆகிய மொழிகளில் தேர்ச்சியுள்ளவர். பதினெட்டு மொழிகள் அறிந்தவர் என்று சிலர் பாராட்டியிருக்கிறார்கள்.
24 வயதில் சென்னைக்கு வந்தார். பிறகு எஸ். பி. ஜி. என்ற சபையில் சேர்ந்து திருநெல்வேலிப் பிரிவின் பேராயராகப் பணி புரிந்தார்.
திராவிட மொழிகளைத் தனி இனம் என்று நிறுவிய கால்டு வெல்லின் பணிக்கு ஈடு இணையில்லை. வேறெந்த ஐரோப்பியரின் தமிழ்ப்பணியையும் இதற்கு ஈடு சொல்ல முடியாது. 1856இல் அவரது ஒப்பிலக்கண நூல் வெளியிடப்பட்டது. நூறாண்டுகளுக்குப் பின் அவருடைய பணியின் சிறப்பை உணர்த்தும் வகையில் தமிழ்ப் பொழில் இதழ், 1958இல், இடையன்குடி (கால்டுவெல் வாழ்ந்த ஊர்) தான் தமிழகத்தின் திருப்பதி, அதற்குத் தமிழர்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் (யாத்திரை) சென்று வரவேண்டும் என்று உணர்ச்சிபூர்வமான செய்தியொன்றை வெளியிட்டது. கால்டுவெல், ஒப்பிலக்கணத்தை வெளியிட்டது மட்டுமல்ல, அதன் பின்னணியிலிருக்கும் தமிழ்ப் பண்பாட்டின் பெருமையையும் நன்கறிந்தவர். “தான் பிறரால் பெறுவதை விட அதிக வெளிச்சத்தைப் பிறருக்கு அளிக்கும் மொழி தமிழ்” என்று அவர் பாராட்டியிருக்கிறார்.
கால்டுவெல்லின் நூல் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) லண்டனில் வெளியிடப்பட்டபோது உடனே விற்றுத் தீர்ந்துவிட்டது. உடனே இரண்டாம் பதிப்பு வெளியாயிற்று. இதற்காக அவருக்கு 1866இல் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தினால் LL.D பட்டம் அளிக்கப்பட்டது. பிறகு டர்ஹாம் பல்கலைக்கழகம் இவருடைய திருச்சபைப் பணிக்கென D.D. பட்டமும் அளித்தது. கால்டுவெல்லின் நூல், அவரது வாழ்நாளிலேயே பல பதிப்புகளைக் கண்டது. பின்வந்த பதிப்புகளில் அவர் சில முக்கியக் கருத்துகளைச் சேர்க்கவும் செய்தார். சான்றாக, கொரமாண்டல், மலபார் போன்ற சொற்களுக்கு விளக்கங்கள் பின்னர்ச் சேர்க்கப்பட்டவை.
அவர் நூல் ஏறத்தாழ 600 பக்கங்களுக்கு மேல் கொண்டது. நூலின் தொடக்கப்பகுதியில் திராவிட என்ற சொல்லை விளக்குவதோடு செம்மை பெற்ற மொழிகள், செம்மைபெறா மொழி களுக்கான வேறுபாடுகளையும் அவர் விளக்குகிறார். இப்பகுதியில் திராவிட இலக்கியம் பற்றிய விவரங்களும் உள்ளன. இரண்டாவது பகுதியை நாம் ஏழு பிரிவுகளாக நோக்கலாம். ஒலிகள், வேர்ச்சொற்கள், பெயர்ச்சொல், எண்ணுச் சொற்கள், இடப்பெயர்கள், வினைச் சொல், அருஞ்சொல் உறவுகள் ஆகியவை அவை.
இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வில்லை என்றாலும், கவிதை, தத்துவம், சட்டம், கணிதம், கட்டடக்கலை இசை, நாடகம் போன்றவற்றில் அவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள் என்று பாராட்டுகிறார் கால்டுவெல். அதனால் அவர்கள் தத்தம் மொழிகளில் சிறந்த இலக்கணங்களைப் படைத்ததில் வியப்பில்லை. ஆனால் பலமொழிகள் கொண்ட இந்திய நாட்டில் அவர்கள் ஏனோ ஒப்பியல் துறையில் ஈடுபடவில்லை. இதற்கு சமஸ்கிருதமே ஆதி மொழி, பிற எல்லாம் அவற்றிலிருந்து பிறந்தவை என்று ஒருதலையாக அவர்கள் முடிவுகட்டிவிட்டதே காரணம்.
ஆனால் திராவிட மொழியினம் என்ற கருத்தோ, திராவிடம் என்ற சொல்லோ அவர் புதிதாகக் கண்டுபிடித்ததன்று. அவருக்கு முன்னரே சென்னை செயின்ட் ஜியார்ஜ் கோட்டைக் கல்லூரியிலும், சென்னை இலக்கியக் கழகத்திலும் அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்துவிட்டன. அதற்கும் முன்னால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நேபாளத்தில் வாழ்ந்த ஹாட்ஜ்சன் என்பவர், தென்னிந்திய மொழிகளில் பலசொற்களைத் தொகுத்து வெளியிட்டார். அவற்றில் ஆரியமொழியினத் தொடர்பற்றவைகளை திராவிட என்ற சொல்லால் குறிப்பிட்டிருந்தார். திராவிட என்ற சொல்லை உருவாக்கியவரும் அவர்தான். அதற்குப் பிறகு குறிப்பாக எஃப். டபிள்யூ. எல்லிஸ் (அப்போதைய சென்னைக் கலெக்டர்) என்பாரின் பணியைக் கூறவேண்டும். திராவிடம் என்ற சொல்லையும் திராவிடக் குடும்பம் என்ற சொல்லையும் அவர் ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தார். ஆனால் அவர் ஒப்பிலக்கணப் பணியில் ஈடுபடவில்லை.
ராஸ்மஸ் கிறிஸ்தியன் ராஸ்க் என்பவரும் முன்னரே தென்னிந்திய மொழிகளை இந்தோ ஆரிய இன மொழிகளோடு தொடர்புபடுத்த முடியாது என்று கூறியிருந்தார். இதேபோல், பம்பாயில் டாக்டர் ஸ்டீவன்சன் என்பவரும் பம்பாய் ஏஷியாடிக் சொசைட்டி பத்திரிகையில் சில கட்டுரைகளில், வடநாட்டு மொழிகளில் காணப்படும் சொற்கள் பல தென்னிந்திய மொழிகளுடன் மட்டுமே தொடர்புறுத்தக்கூடியவை என்ற தகவலை வெளியிட்டிருந்தார். அவருடைய பணிகள், தென்னிந்திய மொழிகள் தனி இனம் என்ற கருத்துக்கு வருவதற்குப் பின்வந்த அறிஞர்களுக்கு உதவியாக இருந்தன.
கால்டுவெல் முக்கியமாகத் தமது நூலில் வலியுறுத்திய கருத்துகள்-
1. தென்னிந்திய மொழிகள் தமக்குள் உறவுகொண்டவை.
2. அவை சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை அல்ல.
3. வேறெந்த ஆரியஇன மொழியுடனும் தொடர்புடையவை அல்ல.
4. அவை சித்திய மொழியினத்தோடு குறிப்பாக ஃபின்னிஷ் போன்ற மொழிகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கலாம்.
5. தென்னிந்திய மொழிச் சொற்கள் பல வடநாட்டு மொழிகளில் காணப்படுகின்றன.
6. திராவிட மொழிக்குடும்பத்தில் பன்னிரண்டு மொழிகள் உள்ளன. அவற்றில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு என்ற ஆறு மட்டுமே பண்பட்ட மொழிகள். தோடா, கோட்டா, கோண்டு (Gond), கோண்டு (Khond). ஒராவோன், ராஜ்மஹல் இவை பண்படா மொழிகள். (இன்று ஆஃப்கானிஸ்தானத்தில் வழங்கும் பிராஹுயி மொழி பின்னர்தான் அறியவந்து சேர்க்கப்பட்டது.)
7. பண்பட்ட மொழிகளில் செவ்வியல் மொழியாக இருப்பது தமிழே. அது மட்டுமே இன்று சமஸ்கிருதத்தை விலக்கித் தனியாக நிற்கக்கூடிய மொழி.
மேலும் பேச்சுமொழியாக உள்ள தமிழே, அதிகமாக சமஸ்கிருதச் சொற்கள் கலவாமையால், பழந்தமிழ் மொழியை ஒத்துள்ளது என்கிறார். அவர் கையாண்ட முறையியலை ஒருவாறு இப்படிக் கூறலாம்:
1. திராவிட, ஆரிய மொழிக்குடும்பங்களின் வரலாற்றுப் பழமையைத் தேடுதல்.
2. திராவிட மொழிகள் தம் காலத்திலும் பேசப்பட்ட இடங்களைக் கண்டறிதல்.
3. அவற்றின் இலக்கியப் பழமையையும் மரபையும் வரலாற்றையும் தேடியறிதல்.
4. அவை தம் மூலமொழி மரங்களிலிருந்து எப்போது கிளைகளாயின என்பதைக் கண்டறிதல்.
5. தத்தம் தாய்மொழிகளுக்கு எந்த அளவுக்குக் கடன்பட்டுள்ளன என்பதை அளவிடுதல்.
6. அடிப்படை மொழியிலிருந்து அவை கடன்பெற்றுள்ளதற்கு மேலாக, அவற்றின் தனிச்சிறப்புகள் எவை எனக் கண்டறிதல்.
7. அவற்றின் இலக்கண அமைப்புகள், எல்லைகள், ஓரினமாதல்கள், வேற்றினமாதல்கள், ஏற்புகள், தொகுத்தல்கள், பண்பாட்டு மயமாக்கல்கள் போன்றவற்றைக் கண்டறிதல்.
8. அவை தனியாகப் பிரிந்தபின் ஏற்பட்ட இலக்கியங்களைக் குறிப்பாகச் சொல் தொகுப்புகளுக்கென நோக்குதல். இவற்றுடன் கால்டுவெல், மரபுத்தொடர்கள், பிற சொற்கள், யாப்பு, தொடர் அமைப்புகள், கல்வெட்டு வடிவங்கள் போன்றவற்றையும் நாடினார். இவற்றின் வாயிலாகத்தான் தமிழுக்கெனத் தனிச்சிறப்புள்ள அடையாளம், வரலாறு, பழமை, தூய்மை, தனித்தன்மை உண்டு என்ற முடிவுக்கும் அவர் வந்தார். மேலும், பழமை, சீர்மை, தெளிவு, கட்டுப்பாடு, மாசின்மை, இலட்சியத் தன்மை, உலகளாவிய தன்மை, பகுத்தறிவுநோக்கு, ஒழுங்கு, மானிடநேயத்தன்மை ஆகியவை கொண்டிருப்பதால் தமிழ் உயர்தனிச் செம்மொழி எனப்படுவதற்குத் தகுதி வாய்ந்தது என்கிறார்.
அவருக்குக் கிடைக்காத தமிழ் நூல்கள் பல. சங்க இலக்கியங்களை அவர் படித்திருப்பார் எனத் தோன்றவில்லை. அவர் ஒப்பிலக்கண நூலை வெளியிட்ட பின்னரே அவை பதிப்பிக்கப்பட்டன. தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை அவர் காலத்தில் வெளி வந்திருந்தாலும் அவர் ஆழ்ந்து தொல்காப்பியம் முழுமையையும் படித்திருப்பது இயலாதென்றே தோன்றுகிறது. இவை போன்ற நூல்களையெல்லாம் அவர் கற்றிருந்தால் அவரது ஆய்வு இன் னும் செழுமைப்பட்டிருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். அவர் காலத்துப் பல ஐரோப்பியர்களைப் போல அவர் நன்னூலையே தமிழ் இலக்கணத்துக்குப் பிரமாணமாகக் கொண்டிருந்தால் அதில் வியப்பில்லை.திராவிட என்ற சொல் தமிழின் சிதைந்த வடிவம் என்று கூறும் கால்டுவெல், எங்குமே அந்தச் சொல்லை ஒரு மக்களினத்தைக் குறிப்பதாகப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு மொழியினத்தைக் குறிப்பதற்காக மட்டுமே அதை அவர் ஆளுகின்றார். (இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கால்டுவெல் நன்றாகவே அறிந்திருந்தார். மக்களினம் வேறு, மொழியினம் வேறு. இந்தோஆரிய மொழியினம் ஒன்று என்பதனால் இங்கிலாந்து-ஸ்பெயின் முதல் இந்தியாவரை ஒரே இன மக்கள் என்பதோ, ஒரே தேசம் என்பதோ பொருந்தாத ஒன்று. சீன மொழியினம் ஒன்று என்பதற்காக, மஞ்சூரியவைச் சேர்ந்தவனும், மாண்டரின் மொழி பேசும் சீனனும், திபேத்தியனும், ஜப்பானியனும், நாகாலாந்துக்காரனும் ஒரே நாடாகி விடுவார்களா? இது திராவிட என்ற சொல்லை இன்று கையாளுபவர்கள் புரிந்து கொள்ளவேண்டிய முக்கியக் கருத்து.)
அவரது ஒப்பிலக்கண நூலைச் சாடுபவர்களும் இருக்கிறார்கள். இந்தியத் திருநாட்டின் வடநாட்டு திராவிட வெறுப்பாளர்கள் மட்டுமல்ல, சில வரலாற்று ஆய்வாளர்களும் அந்தக்காரியத்தைச் செய்கிறார்கள். சான்றாக, யூஜீன் எஃப். இர்ஷிக் சொல்கிறார்: “தமிழின் பழமையையும், தூய்மையையும் பேசுபவர்களுக்கு சமஸ்கிருதத்திற்கு எதிராகப் போராடுவதற்கான ஆயுதத்தை அது அளித்தது.” வடநாட்டுப் போலி ஆய்வாளர்களுக்கோ, அயல்நாட்டு ஆய்வாளர்கள்தான் தமிழர்களை இந்தியக் கலாச்சாரத்திலிருந்து தனிமைப் படுத்திவிட்டார்கள் என்ற அபிப்பிராயம்.
இவற்றுடன் அவர் அகழ்வாராய்ச்சித் துறையிலும் ஈடுபட்டிருந்தார்; தென்னிந்திய மொழிகளைப் பற்றிய செய்திகள் கொண்ட சமஸ்கிருதக் கையெழுத்துப்படிகளையும் வெளிக்கொணர்ந்தார். கி.மு. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாலமோனின் ஆட்சியிலேயே துகி (தோகை) போன்ற தமிழ்ச் சொற்கள் உள்ளன என்பதையும், வேதங்களிலே இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதையும் சுட்டிக்காட்டி, ஆரியர்களின் வருகைக்கு முற்பட்டது திராவிட நாகரிகம், அது இந்தியா முழுவதும் பரவியிருந்தது (பிராஹுயி மொழியும் பிற பண்படா திராவிட மொழிகளும் இதற்குச் சான்று) என்பவற்றை நிரூபிக்கிறார். அகழ்வாராய்ச்சித் துறையில் நாட்டம் இருந்ததன் காரணமாகவே அவர் திருநெல் வேலிச் சரித்திரம் என்ற நூலை எழுத முடிந்தது. மேற்கண்ட இரு நூல்களைத் தவிர சமயத் தொடர்பான பதினான்கு நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதியுள்ளார். (அவற்றில் வேடிக்கையான ஒரு நூல் குடுமி பற்றிய நோக்குகள்-Observations on Kudumi என்பது என்று நான் நினைக்கிறேன்.)2010 மே 7ஆம் நாள் அவருக்கு (ஐந்து ரூபாய்) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 2011 பிப்ரவரியில் இடையன்குடியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதில் அவருடைய படமும் திறக்கப்பட்டது. அதற்குமுன்னரே 1968இல் உலகத் தமிழ் மாநாட்டின்போது சென்னைக் கடற்கரையில் அவருக்குச் சிலை திறக்கப்பட்டது. சென்னையில் ஒருமுறை வரலாற்றாசிரியர் எம். எஸ். எஸ். பாண்டியன், “தென்னிந்தியாவில் கிறித்துவத்திற்கும், தென்னிந்தியப் பண்பாட்டு விழிப் புணர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கும் கால்டுவெல்லின் பணிக்குக் கடந்த இருநூறு ஆண்டுகளில் ஈடு இணையில்லை” என்று பாராட்டினார். இந்து நாளிதழும், ஏழை பங்காளர் என்றும், முன்னோடிச் சீர்திருத்தவாதி என்றும் அவரைப் பாராட்டியிருக்கிறது (2007 நவம்பர் 6 இதழ்).