தமிழில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அண்மையில் நான் அகர ஓரினமாதல் நிகழ்வதைப் பார்க்கிறேன். சாதாரணமாகத் தமிழில் உயிரெழுத்துகள் ஓரினமாக முடியாது. உடம்படுமெய் இடையில் வரும். (சமஸ்கிருதத்தில்தான் இம்மாதிரி ஓரினமாதல் உண்டு. அ + அ என்றால் ஆகாரமாக்கிவிடுவார்கள். ராம + அயந = ராமாயந என்பதுபோல. இம்மாதிரி ஓரினமாக்கலைத் தெலுங்கும் கன்னடமும் ஏற்றுக் கொண்டுவிட்டன.)
எனக்கு நினைவுவரும் சொற்களைச் சொல்கிறேன். ஊடகங்களில் இந்தாண்டு, அந்தாண்டு என்பதுபோன்ற சொற்களைக் கையாள்கிறார்கள். இந்த + ஆண்டு என்றால் தமிழ்முறைப்படி இந்தவாண்டு. (இடையில் வ் உடம்படுமெய்). இந்த-வாண்டு எனப் பொருள்படுகிறதே என்றோ, எதனாலோ இந்தாண்டு என்றாகிவிட்டது. அதேபோலப் பலகடைகளிலும் காணும் சொல் பாதணி. பாத + அணி, பாதவணி ஆகவேண்டும். காலணி என்ற சொல்லோடு ஒப்புமை கருதியோ என்னவோ, அது பாதணி ஆகிவிட்டது. (பாதம் என்பது வடசொல்லாக இருப்பினும்). காலணி, காதணி என்பவை சரியான சேர்க்கைகள், ஒற்று அல்லது குற்றியலுகரம் வருவதனால். பாதணி அப்படி அல்ல. இம்மாதிரித் தமிழில் புதிதாக வந்துள்ளவைகளில் முக்கியமாக மொழியியலாளர்கள்தான் கவனம் செலுத்தவேண்டும்.