தமிழை நடைமுறையில் கையாள முனையும்போதும், தமிழில் பாடங்களைக் கற்பிக்கும்போதும் எழும் சிக்கல்களில் மொழிபெயர்ப்பதா ஒலிபெயர்ப்பதா என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த விஷயத்தில் தூயதமிழாளர்கள் குழப்பி விட்டவை பல. தமிழைப் பாதுகாக்கின்ற நோக்குதான் அவர்களிடம் இருக்கிறதே ஒழிய, அதன் வளர்ச்சி பற்றிய நோக்கு இல்லை. பயிருக்கு வேலியிட்டுப் பாதுகாத்தால் மட்டும் அது வளர்ந்துவிடுமா? அல்லது வளரும் பயிரை அப்படியே விட்டுவிட்டால் அது பாதுகாப்பாக இருந்துவிடுமா? பாதுகாப்பு வேறு வளர்ச்சி வேறு என்பது முதலில் தெளிவாக வேண்டும். முதலில் வளர்ச்சி, பிறகுதான் பாதுகாப்பு. வளர்ச்சியே இல்லாமல் பாதுகாப்பு எதற்கு? தமிழில் திராவிட இயக்கக் காலத்தில் உருவானவர்கள் எல்லாம் பாதுகாவலர்கள் தான். சான்றாக முத்தமிழ்க் “காவலர்” போன்ற அடைமொழிகளைப் பார்த்தாலே தெரியும்.
நடைமுறையில் புழங்கிவரும் பல சொற்களை அப்படியே தமிழில் ஏற்றுக்கொள்ளலாம். அதிகமாகப் புழங்காத சொற்களைத் தமிழ்ப்படுத்துவது போதுமானது. சான்றாக, பம்பு (pump) என்ற சொல்லை எதற்குக் கஷ்டப்பட்டு மொழிபெயர்த்துக் கொண்டிருக்கவேண்டும்? அதற்கு இவர் ஒன்று சொல்ல, அவர் ஒன்றுசொல்ல, நேரான சொல் கிடைப்பதே இல்லை. சிமெண்டு, பட்ஜெட் போன்ற சொற்களை ஒலிபெயர்த்தால் போதும். மொழிபெயர்ப்பு தேவையில்லை. தொடக்கத்தில் இருந்தே எந்தமாதிரிச் சொற்களை ஒலிபெயர்க்கலாம், எவற்றை மொழிபெயர்க்கலாம், எவற்றுக்கு மட்டும் கலைச்சொற்கள் தேவை என்ற தெளிவு இருந்திருந்தால் இன்று தமிழை எவ்வளவோ வளப்படுத்தி இருக்கலாம்.
சிலர் எந்தச் சொல்லையும் உருவாக்கிப் பயன்படுத்தினால் காலப்போக்கில் அது நின்றுவிடும், கொஞ்சம் காத்திருக்கவேண்டும் என்பார்கள். உதாரணமாக ‘பஸ்’ என்ற சொல்லுக்குப் ‘பேருந்து’ என்ற மொழிபெயர்ப்பு வந்து ஏறத்தாழ நாற்பது ஆண்டாயிற்று. ஆனாலும் நடைமுறையில், பேச்சுவழக்கில் இன்றும் பஸ் என்ற சொல்தான் புழங்குகிறதே ஒழிய பேருந்து என்ற சொல் பயன்பாட்டுக்கு வரவே இல்லை. ஆகவே இம்மாதிரி முயற்சிகளை வீண் என்றுதான் சொல்லவேண்டும்.