மொழி குறித்த மற்றொரு சந்தேகம்

திரு. அற்புதராஜ்: தொழில்+நுணுக்கம் தொழிற்நுணுக்கம் என்று இணைக்கலாமா?

நான்: லகரத்துடன் (ல்) வல்லினம் (க்,ச்,த்,ப்) சேர்ந்தால்தான் ற் அங்கே வரும்.

அதாவது பழங்கால வழக்கின்படி, நிலைமொழி இறுதியில் லகரம் வர, வருமொழி தொடக்கத்தில் வல்லினம் (க,ச,த,ப) வந்தால்தான் றகர ஒற்று அங்கே மிகும்.

உதாரணமாக பல் + பொடி=பற்பொடி, நெல் + குவியல் = நெற்குவியல், சொல் + சிலம்பம் = சொற்சிலம்பம் என்பது போல.

லகரமும, நகரமும் (ல் + ந், இரண்டுமே மெல்லினம்) சேரும்போது இடையில் வல்லினம் வர வாய்ப்பே இல்லை. மெல்லினமும் மெல்லினமும் சேரும்போது வல்லினம் எப்படி இடையில் வரக்கூடும்? இது மொழிதெரியாத பெரும்பிழையாகும். அழுத்தமிருப்பின், ல் + ந் = ன் என்றுதான் ஆகும். புல் + நுனி = புன்னுனி என்பது போல.

சொற்கள் சேரும்போது இடையில் அழுத்தம் இருந்தால்தான் சந்தி வரவேண்டும். தொழில், நுட்பம் ஆகிய இரண்டும் சேரும்போது
“தொழில்ந்ந்ந்நுட்பம்” என்பது போலச் சொல்லழுத்தம் வர வாய்ப்பில்லை. இதைத்தான் இயல்பு புணர்ச்சி என்றார்கள் பழங்காலத்தில். அதாவது சொற்கள் அப்படியே இயல்பாக வரும். இடையில் வேறு எதுவும் வராது என்பது பொருள்.

தமிழ் கற்பவர்கள் மொழிப் பயன்பாட்டை (பேச்சு, எழுத்து) வைத்து யோசிக்க வேண்டும்.
வெறுமனே (நன்னூல் போன்ற நூல்களின்) விதிகளை வைத்து யோசிப்பதால்தான் மொழி கெட்டுவிட்டது. ஏனெனில் அவற்றில் மொழிப்பயன்பாட்டை ஒட்டி எவ்விதம் விதிகள் உருவாயின என்று சொல்லப்படுவதில்லை.

தினம்-ஒரு-செய்தி