மால்கம் எக்ஸின் சுயசரிதை

சென்ற வாரம் அம்பேத்கரின் வாழ்க்கைச் சரித்திரத்தின் சில பகுதிகளை பீமாயணம் என்ற நூல் வாயிலாகப் பார்த்தோம். இவ்வாரம் கருப்பினப் போராளியான மால்கம் எக்ஸ் என்பவரின் வாழ்க்கை பற்றி அவரது சுயசரிதை வாயிலாகக் காணலாம். அது The Autobiography of Malcolm X என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

மால்கம் எக்ஸ் (மே 19, 1925 – பிப்ரவரி 21, 1965) ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்க முஸ்லிம் மறை பரப்புனரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். கருப்பின மக்களின் உரிமைகளுக்காகத் துணிந்து குரல் கொடுத்தவர். வெள்ளை அமெரிக்காவை கருப்பினத்திற்கெதிரான கொடுமைகளுக்காகக் கடுமையான சொற்களால் சாடியவர். ஆனால் அவரது எதிர்ப்பாளர்கள் நிறவெறியையும், வன்முறையையும் போதித்தவர் என்று அவர் மீது குற்றம் சுமத்தினார்கள். ஆயினும் அவர் செல்வாக்கு மிக்க ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

இந்தத் தன்வரலாற்று நூல், மால்கம் எக்ஸின் கோபம், போராட்டம், நம்பிக்கைகளை மட்டுமல்லாமல், 1960களில் வாழ்ந்த பெரும்பான்மை ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் படைப்பு, இந்தத் தலைவர் மால்கம் லிட்டில் என்ற குழந்தையாக ஒமாஹா, நெப்ராஸ்காவில் 1925இல் பிறந்ததிலிருந்து 1965இல் நியூயார்க்கில் அவர் கொல்லப்பட்டது வரை அவர் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. முழு சமூகச் சமத்துவத்தை அமெரிக்காவின் ஆப்பிரிக்க இனத்தவர்கள் அடையவேண்டுமானால் புரட்சி ஒன்றுதான் வழி என்பதை வலியுறுத்த மிகக் கோபமான நடையை அவர் கையாளுகிறார்.

தனது நம்பிக்கைகளின் பின்னணியாக அவர் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த, தான் இழிவுபடுத்தப்பட்ட சம்பவங்களை அவர் தொடர்புறுத்துகிறார். அவரது தந்தை மார்க்கஸ் கிரேவி என்பவரின் பிரிவினை வாதத் தத்துவத்தில் ஈடுபட்டவர். அவரது சூடான பிரச்சாரத்தினால், மால்கமும் அவரது ஏழு உடன்பிறந்தோரும் நிறைய பயமுறுத்தல்ளைச் சந்திக்கவும்  சகிக்கவும் வேண்டி வந்தது.

இந்தப் படைப்பு இதன் ஆசிரியரின் வாழ்க்கையைக் காலவரிசைப்படி காட்டுவது மட்டுமல்லாமல், நாற்பதாண்டுக் காலமாக அமெரிக்காவில் வாழ்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மாறிவந்த பங்களிப்புகள், அவர்களிடையே வளர்ந்து வந்த சமூக-அரசியல் விழிப்புணர்வு ஆகியவற்றைப் பற்றிய சமூகவியல் ஆய்வாகவும் அமைந்துள்ளது.

முக்கியமாக அன்றிருந்த, வெள்ளையர்கள் பணிபுரிந்த கருப்பர்களின் நலவாழ்வுத் திடடத்தை மிகுந்த கசப்புடன் அவர் சாடுகிறார்.

அவர் தந்தை நிறவெறியர்களால் கொல்லப்பட்டார். அவர் தாய் எட்டுக் குழந்தைகளைப் பராமரிக்க மிகுந்த கஷ்டப்பட்டு உழைக்கவேண்டி யிருந்தது. ஆயினும் நலவாழ்வுத் திட்டம் என்ற பெயரால் எட்டுக் குழந்தைகளையும் அநாதை விடுதியில் பணியாளர்கள் விட்டனர். அதனால் அவர்கள் தாய் மனமுடைந்து போனார். அவரை அவர்கள் மிச்சிகன் மாகாண கலமாஜூ என்ற ஊரில் ஒரு மனநலக் காப்பகத்தில் சேர்த்தனர்.

இந்தச் சம்பவங்கள் ஆசிரியரின் மனத்தில் நிலையாக நின்றுவிட்டன. இருப்பினும் சிறுவயதில் அவர் தன்னைப் போன்ற பல கருப்பினத்தவர்கள் செய்தது போல, வெள்ளைச் சமூகம் தன்னிடம் எதிர்பார்த்த பங்கினை நிறைவேற்றி, ஒரு நல்ல நீக்ரோவாக வாழவே முயற்சி செய்தார். அதற்காகத் தனது முடியைச் சுருள் அமைப்பிலிருந்து நேராக்கியும், ஜூட் சூட் எனப்படும் ஆடையணிந்தும், தன்னை அவர்கள் மூளைச் சலவை செய்ய விட்டார்.

ஆனால் காலம் செல்லச்செல்ல, அவர் சட்டத்துக்குப் புறம்பான பல செயல்களில் ஈடுபட்டார். ‘மாமா’ வேலை செய்தல், போதை மருந்துகள் விற்றல், கொள்ளையடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். ஆனால் கைது செய்யப்பட்டபோது, அவர் ஒரு வெள்ளைப் பெண்மணியுடன் தொடர்பிலிருந்தார் என்று கூறி அவருக்குப் பிறரை விட மிக அதிகமான ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டது.

21 வயதான போது ஏழாண்டுகள் சிறைவாசம் முடித்திருந்தார். அப்போது சிறையிலேயே அவருக்கு நேஷன் ஆஃப் இஸ்லாம் (இஸ்லாமிய தேசிய இயக்கம்) என்பதன் அறிமுகம் கிடைத்தது. அதனால் அவர் கருப்பின-முஸ்லிம் மதத்தின் உறுப்பினரானார். விடுதலைக்குப் பிறகு, தனது மால்கம் லிட்டில் என்ற பெயரின் லிட்டில் என்ற சொல்லை விடுத்து, எக்ஸ் என்பதைச் சேர்த்துக் கொண்டார். (கணிதத்தில் எக்ஸ் என்பது அறியாத எண்/நிலை ஒன்றைக் குறிப்பதாகும்.)

தன் வரலாற்றின் இரண்டாம் பாதி கருப்பின முஸ்லிம்களின் கொள்கைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்களை எடுத்துக் காட்டுகிறது. ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவின் பல இடங்களிலும் அடிக்கடி கல்லூரி வளாகங்களிலும் உரைநிகழ்த்தி, புதிதாக இளைஞர்கள் பலபேரை மதமாற்றமும் செய்தார்.

1964 மார்ச் அளவில், இஸ்லாமிய தேசிய இன அமைப்பின் மீதும், அதன் தலைவா் எலையா முஹமது மீதும் மால்கம் எக்ஸுக்கு அதிருப்தி ஏற்பட்டது. அவா்களோடு இருந்து தன் நேரம் விரயமானதாக அவா் நினைத்தார், அதற்காக வருந்தி பின்னா் சன்னி மதப்பிரிவில் இணைந்தார். ஆப்ரிக்காவிலும். மத்திய கிழக்கிலும் பயணம் மேற்கொண்டு ஹஜ் பயணமும் செய்தார். தன் பெயரையும் அல்ஹஜ் மாலிக் அல் சபாஸ் என மாற்றிக்கொண்டார்.

இஸ்லாமிய தேசிய இயக்கத்தின் உறுப்பினர்களிடமிருந்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்தவாறே இருந்தன. தான் அடியோடு கைவிடப்பட்டதாக உணர்ந்தார்.

இறுதி இயல்கள் மூன்றும், மால்கம் எக்ஸ் ஏன் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பை விட்டு நீங்கினார் என்பதையும் நிறவெறியை நிராகரித்து முஸ்லிம் மசூதி என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். இந்த அமைப்பு பின்னர் ஆப்பிரிக்க-அமெரிக்க ஒருமைப்பாட்டு அமைப்பு எனப்பட்டது. தீவிர கருப்பின தேசியவாதம் என்பது அதன் கொள்கை. தனக்கு வந்த பலவேறு கொலை மிரட்டல்கள் நேஷன் ஆஃப் இஸ்லாமிலிருந்தே வருகின்றன என்பதை அவர் உணர்ந்தார்.

பின்னுரையில் அலெக்ஸ் ஹேலி என்ற அவரது நண்பர் மால்கம் எக்ஸ் நிச்சயமாகக் கொல்லப்படுவார் என்பதை உணர்ந்ததாகவும், கருப்பினச் சகோதரத்துவக்கான தியாகியாக அவர் ஆவார் என்று கருதியதாகவும் குறிப்பிடுகிறார்.

1965 பிப்ரவரி 21 அன்று. அவா் இஸ்லாமிய தேசிய அமைப்பைச் சார்ந்த மூன்று உறுப்பினா்களால் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்டதை எழுதும் ஹேலி, இந்த சுயசரிதையை எழுதியதில் மால்கம் எக்ஸின் நம்பிக்கை சமூகச் செயல்பாட்டினைத் தூண்டுவதாக இந்த நூல் அமையும் என்று குறிப்பிடுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பலரும் மால்கம் எக்ஸ் பற்றிப் பேசினார்கள். இப்போது அவ்வளவாக இல்லை. மால்கம் எக்ஸ் என்ற திரைப்படம் ஆங்கிலத்தில் 1992இல் வெளியானது.

தமிழக எழுத்தாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.இரவிக்குமார் மால்கம் எக்ஸ் எனும் நூலைப் பதிப்பித்துள்ளார்.

இலக்கியம்