மாற்று யாப்பு

அருணகிரிநாதர் கந்தரனுபூதியின் முதல் செய்யுள் இது.

நெஞ்சக்கன கல்லுநெகிழ்ந் துருகத்

தஞ்சத்தருள் சண்முகனுக் கியல்சேர்

செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே

பஞ்சக்கர வானைபதம் பணிவாம்

ஒவ்வோரடியிலும் மூன்று சீர்கள் உள்ளன. ஆகவே இது வஞ்சித்துறை. ஆனால் இதையே

நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத்

தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்

செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே

பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்

இவ்வாறு பிரித்து நோக்கும்போது நான்கு சீர்கள் ஓரடியில் உள்ளன. இது கலிவிருத்தம் ஆகிறது.

அதே கந்தரனுபூதியின் இறுதிப் பாடலை நோக்குவோம்.  

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் அருள்வாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

சற்றும் சொற்பிரிப்புச் சிதைவின்றி இது அடிக்கு நான்கு சீர். கலிவிருத்தம்.  

உருவாயரு வாயுளதா யிலதாய்

மருவாய்மல ராய்மணியா யருள்வாய்

கருவாயுயி ராய்கதியாய் விதியாய்

குருவாய்வரு வாயருள் வாய்குகனே

என்று சீர்பிரித்தால் அடிக்கு மூன்று சீர். வஞ்சித்துறை.

கந்தரனுபூதி முழுவதுமே இப்படித்தான் அமைந்துள்ளது. இதில் எந்தவித யாப்பை நாம் கொள்ளப்போகிறோம் என்பது நமது மனத்தைப் பொறுத்தது. அருணகிரிநாதர் எவ்வகை யாப்பை மனத்திற்கொண்டு இயற்றினார் என்பதை நிச்சயிப்பது கடினம். ஏனெனில் முதற்பாவில் மும்மூன்று சீராகப் பிரிப்பது இயல்பாக அமைந்திருக்க, இறுதிப் பாவில் நந்நான்கு சீராகப் பிரிப்பது இயல்பாக உள்ளது.   இம்மாதிரியாக, பழங்கவிஞர்களின் ஒரே செய்யுளைப் பலவித யாப்புகளில் நோக்கலாம். பல தமிழ்ப் பாக்களை ஒருவகையாக அலகிட்டால் அறுசீர் யாப்பிலும், அவற்றையே வேறுவிதமாக அலகிட்டால் எண்சீர் யாப்பிலும் வருவதைக் காணலாம். இந்த ஜாலத்தை இருபதாம் நூற்றாண்டுக் கவிஞன் கண்ணதாசனின் பாக்களில் நாம் மிகுதியாகக் காண இயலும். பழங்காலத்தில் கம்பன் உள்ளிட்ட பல கவிஞர்களின் பாக்களில் இவ்விதத் தன்மையைக் காணலாம். ஆனால் அதை முதன்மையாக நோக்கமாகக் கொண்டு எவரும் எழுதவில்லை.

இலக்கியம்