மனைவி-2

தமிழில் கணவன்-மனைவி குறித்த சொற்களை ஆராய்வது சுவாரசியமானது. கணவன் உண்டு, கணவி இல்லை. கணவி என்றால் கண் அவிந்து போகும். மனைவி உண்டு, மனைவன் இல்லை. மனைவன் என்றால் மனை, வன்மையாகிவிடும். புருஷன் உண்டு, புருஷி இல்லை. பெண்டாட்டி உண்டு, பெண்டாளன் இல்லை. தலைவன்-தலைவி இலக்கியத்தில்தான் உண்டு. துணைவன்-துணைவி இப்போதுதான் வழக்கிற்கு வந்துகொண்டிருக்கிறது. தோழன்-தோழி என்ற கருத்து நிச்சயமாக இல்லறத்தில் கிடையாது. கிழவன்-கிழத்தி பழைய வழக்கு. இப்போது பயன்படுத்தினால் ஓல்டுமேன், ஓல்டு உமன் என்று புரிந்து கொள்வார்கள். ஆம்படையான், ஆம்படையாள் என்பது ஒரு சாதியில் மட்டுமே பயன்படும் சொற்களாகி விட்டன. இன்னும் பல சொற்கள் உள்ளன, அவற்றை நீங்களேகூட ஆராயலாம்.

கணவன் பெயரை முதலில் எழுதி மனைவி பெயரைப் பின்னால் எழுதுவதில்லை. சுந்தர் சாந்தி என்கிறமாதிரி. மிகச் சிலபேர்தான் தலைப்பெழுத்தைக்கூட மாற்றுகிறார்கள். பலரும் தங்கள் தங்கள் தலைப்பெழுத்துகளை மாற்றுவது இல்லை. பொதுவாக மனைவிபெயர்தான் முதலில் வருகிறது, கணவன் பெயர் பின்னால்தான் வருகிறது. உதாரணமாக, சாந்தி சுந்தர். (இந்திரா காந்தி என்பதில்கூட இந்திரா அவர் பெயர், காந்தி கணவர் பெயர். கமலா நேரு என்றாலும் அப்படியே.)

ஆனால் எப்படியாயினும் சரி, மனைவிக்குத்தான் மதிப்பு. ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம். கணவன் ஒன்று என்ற இலக்கம், மனைவி (பலரும் கருதுவதுபோல, அவனை நம்பியிருப்பதால்) பூச்சியம் என்ற இலக்கம் என்று வைத்துக் கொள்வோம்.

சாந்தி பூச்சியம், சுந்தர் ஒன்று என்றால், சாந்தி சுந்தர்=01, அதாவது அதன் மதிப்பு ஒன்றுதான்.

மாறாக, மனைவி ஒன்று, கணவன் பூச்சியம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது பாருங்கள், சாந்தி-1, சுந்தர்-0 சாந்தி சுந்தர்=10. ஆக அதன் மதிப்பு 10 ஆகிவிடுகிறது. பத்து மடங்கு உயர்வு பாருங்கள்.

ஆகவே கணவன்மார்களே, நீங்கள் என்றைக்கும் பூச்சியம்தான். மனைவியர்தான் ஒன்று. ஒன்று முதலில் இருந்தால்தான் மதிப்பு. எத்தனை பூச்சியம் முதலில் இருந்தாலும் மதிப்பேயில்லை.

தினம்-ஒரு-செய்தி