மனம் திறந்த கடிதம்

பிரதமர் மோடி அவர்களுக்கு,
ஜனநாயகம் என்றாலே மக்களின் ஆட்சி என்றுதான் பொருள். மக்களுக்கு மதிப்புக் கொடுங்கள். இதுமாதிரிப் போராட்டத்தை ஒரு இருபது முப்பதுபேர் கையிலெடுத்திருந்தால், நக்சலைட், பயங்கரவாதி என்று பெயர் வைத்துச் சுட்டுத் தள்ளியிருப்பீர்கள். ஒரு சிலராவது ஏதாவது சிறிய அடிதடியில் ஈடுபட்டிருந்தாலும் காவலர்களை வைத்து குண்டர்கள் என்று அடித்து நொறுக்கியிருப்பீர்கள். ஆனால் பாவம், லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு அமைதியாக மழையிலும் பனியிலும் தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களை என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமும் இல்லை.
120 கோடி மக்களை பாதிக்கும் பெரிய அறிவிப்புகளை எல்லாம் ஒரு நிமிட நேரத்தில் வெளியிட்ட உங்களுக்கு ஜல்லிக்கட்டுக்கென ஒரு நிரந்தரச் சட்டம் ஓரிரு நாட்களில் கொண்டுவருவது முடியாததா என்ன? பெரும் பெரும் அறிவிப்புகளை எல்லாம் திடீரென்று வெளியிட்டுவிட்டு பிறகு முகம் காட்டாமல் ஓடிப்போய்விடுவதில் நீங்கள் சமர்த்தர் என்பதும், உங்கள் சொந்தப் பாராளுமன்றத்தையே சந்திக்கும் திராணியில்லாதவர் என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஜல்லிக்கட்டு விஷயத்திலும் அதையே செய்தீர்கள். முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் பொறுப்பைத் தள்ளிவிட்டு நீங்கள் விலகிக் கொண்டீர்கள். அவரும் பாவம், தன் கட்சிக்கும் தனக்கும் ஒரு அரசியல் ‘லாபம்’ கிடைக்கும் என்று ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்து விட்டுப் பிறகு ஒன்றும் செய்ய முடியாமல் திணறிப்போனார்.
தமிழர்களின் பாரம்பரியத்தை மதிப்பதாக நீங்கள் சொல்வது திரும்பத் திரும்பச் சொல்வது உண்மையானால் உடனே எங்களுக்கு ஜல்லிக்கட்டுக்கென நிரந்தரச் சட்டத்தைக் கொண்டுவாருங்கள். பவானி ஆறு, காவிரி ஆறு, உள்ளிட்ட மற்ற ‘டிமாண்ட்’களை நாங்கள் சில நாட்களுக்குள் வாங்கிக் கொள்கிறோம். தமிழர்களைப் பாரபட்சமாக நடத்தியே பழக்கப்பட்ட உங்களுக்கு இது கடினம்தான். மேலும் “தமிழகத்தில் நம் கட்சி காலூன்றமுடியாது, நாம் ஏன் இவர்களுக்கு எதுவும் செய்யவேண்டும்” என்ற உங்கள் குறுகிய கண்ணோட்டமும் இருக்கவே செய்கிறது. அதற்கும் அப்பால் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஒத்துப்போகாத உங்கள் காவிக் கலாச்சாரமும் இருக்கவே செய்கிறது.
இருந்தாலும், உடனடியாக நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான். முதலில் விலங்குநல வாரியத்தின் விதிகளில் திருத்தம் கொண்டுவாருங்கள். காட்சிப் பட்டியலிலிருந்து காளைகளை நீக்குங்கள். (இவையெல்லாம் உங்கள் அரசாங்க இலாகாக்கள் தானே?) அந்த வாரியம் உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டின்மீது போட்டிருக்கும் வழக்கை வாபஸ் வாங்கிவிடுங்கள். (உச்சநீதி மன்றத்தின்மீது உங்களுக்கு இருக்கும் மரியாதை ஊரறிந்த ஒன்று அல்லவா!) பீட்டா அமைப்பைத் தடைசெய்வதில் பிரச்சினை ஒன்றுமில்லை. அது உலகமுழுவதும் செய்திருக்கும் அட்டூழியங்கள் எங்களுக்கே தெரியும்போது உங்களுக்குத் தெரியாதா என்ன? அதைக் காரணம் காட்டியே அந்த என்ஜிஓ அமைப்பைத் தடைசெய்யலாம். அடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஒரு நிரந்தரச் சட்டத்தை வழங்கிவிடுங்கள். இதற்கெல்லாம் அதிகபட்சம் உங்களுக்கு மூன்று நாள் தேவைப்படலாம். எப்படியும் பத்துநாள் கழித்துக் கூடப்போகும் பாராளுமன்றத்தை உடனே கூட்டுங்கள். இவற்றை எல்லாம் செய்தால் நிச்சயம் உலகமுழுவதிலும் உள்ள தமிழர்கள் அமைப்புகள் மத்தியிலும் அந்தந்த நாடுகள் இடையிலும் உங்கள் மதிப்பு ஜனநாயகக் காவலர் என்பதாக உயரும். மதிப்பு என்பது இலட்ச ரூபாய் மதிப்புள்ள கோட்டுப் போட்டுக் கொள்வதில் இல்லை, பாருங்கள்!

தினம்-ஒரு-செய்தி