மனத்தைக் காணார் எதையும் காணார்

கந்தர் அனுபூதி என்று ஒரு நூல் உண்டு. அருணகிரிநாதர் எழுதியது. பலரும் அவர் தம் வாழ்நாளில் இறுதியாக எழுதியது என்பர். சிலர், சம்பந்தாண்டானின் தீச்செயலால் உடலை இழந்து கிளியுருப் பெற்ற அருணகிரிநாதர் ஒவ்வொரு பாடலாகத் தம் வாழ்நாள் இறுதியில் சொல்லியது என்றும் கூறுவர்.

அது ஒரு அற்புதமான நூல். சைவத்தின் பழைய தத்துவத்தில் ஊறியது. சைவத் தத்துவத்தில் ‘சும்மா இருத்தல்’ என்பது வேண்டப்படும் அடிப்படையான பண்பு. அருணகிரிநாதர் சொல்கிறார்:

சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே.

வள்ளலாரோ, “சும்மா இருக்கும் சுகம் இன்றைக்கு வருமோ, நாளைக்கே வருமோ, என்றைக்கு வருமோ அறியேன் எம் கோவே” என்று அதை அடையாதவர் போலப் பாடுகிறார். சரி, இதெல்லாம் ஒருபுறம்.

நான் இங்கு அதே கந்தர் பெயரால் திருஷ்டிப் புள்ளி போல கன்னங் கருப்பாய் ஏற்பட்டுள்ள ஒரு நூலைப் பற்றிப் பேச வேண்டும். அதன் முதல் பாதி உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாய்க் காப்பாற்று என்று மிக மிக பயந்த ஓர் ஆளாகப் பட்டியலிடுவது, மறுபாதி பிசாசு, பேய், பில்லி, சூனியம் போன்றவற்றைக் கொல்லு, அடி, குத்து, விரட்டு என்று கதறுவது. முதலில் கொஞ்சம், இறுதியில் கொஞ்சம் ஊறுகாய் போல முருகனின் வருணனை. ஒருபுறம் அடிபட்டுவிடுவோமோ என்ற பெரும்பயமும் மறுபுறம் அடுத்தவரை அடித்தலும் ஆகிய இதுவே பெரிய உளவியல் ஆய்வுக்கு உரியது. ஆனால் இந்துத்துவ வாதிகளின் தறுதலைத் தனத்தினால் யாரும் சமய நூல்களில் உளவியல் ஆராய்ச்சி செய்வதற்கே பயப்படுகின்ற நிலை உள்ளது. இப்படித்தான் முனைவர் நலங்கிள்ளி என்பவர் கீழ் (புதுவைப் பல்கலைக்கழகம்) சேக்கிழார் பற்றி நல்லதொரு ஆய்வேடு உருவாகி வெளிவராமல் நின்றுவிட்டது.

ஆய்வுத் துறையை சமயவாதிகள் வளரவிட மாட்டார்கள். அவர்களுக்கு இருக்கும் அதே மத நம்பிக்கை மற்ற எல்லாருக்கும் கட்டாயம் இருந்தே தீர வேண்டும் என்ற ‘பரந்த மனப்பான்மை’ உள்ளவர்கள். எதையும் கேள்வி கேட்கலாகாது என்ற கொள்கை உடையவர்கள். ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்று கூறிய வள்ளுவன் இன்றிருந்தால் அவனை அடித்தே கொன்றிருப்பார்கள் இந்தப் பெரியோர்கள்.

இங்கே நான் அதன் முன்பாதியையோ பின்பாதியையோ எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யவில்லை. அது வேறொரு சமயம். ஒரே ஒரு கருத்து மட்டும் இங்கே.

எல்லா மதங்களிலும் மனத்தைத் தீமை புகாமல் காப்பாற்று என்று தான் வேண்டுவார்கள். நல்லதைச் சிந்திக்க வேண்டும் என்பார்கள். அன்பு வேண்டும், அகிம்சை வேண்டும் என்பார்கள். நம் பெரியோர்களும் அப்படித்தான் கூறியிருக்கிறார்கள். ‘வழிபாட்டில் மனம்தான் முக்கியம். மனம் அமைதியானால் எல்லாமும் அமைதியாகும்’ என்போர் உண்டு. மேற்சொன்ன சும்மா இருத்தல் என்பதும் மனத்தைப் பற்றியதே.

சாதாரணமாக சாமி கும்பிடுகின்ற எளியவர்கள் கூட “என்னைக் காப்பாற்று, என் குடும்பத்தைக் காப்பாற்று, என் நண்பர்களைக் காப்பாற்று, எனக்கு வேண்டியவர்களைக் காப்பாற்று” என்றெல்லாம் வேண்டுவார்கள். அவர்களின் உள்ளம்கூட தன்னிலிருந்து புறப்பட்டு பிறரையும் இணைத்துக் கொண்டு அவர்களும் வாழவேண்டும் என்றுதான் விரும்புகிறது. மேலும் எதிரிகளை அழித்துவிடு என்றுகூடப் பல பேர் வேண்ட மாட்டார்கள். “அதெல்லாம் முருகன் பாத்துக்குவாம்பா” என்று விட்டுவிடுவார்கள்.

கோயில்களில் கூட ‘என்னைக் காப்பாத்தணும் சாமி’ என்று வேண்டுவதைப் பார்த்திருக்கிறேன். அதைவிட, நகைநட்டை, செல்வத்தை, நிலத்தை, மாட்டை, வீட்டைக் காப்பாற்று என்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நகத்தையும் மூக்கையும் வாயையும் பல்லையும் கழுத்தையும் மார்பையும் மார்புக் காம்பையும் தொப்புளையும் காப்பாத்து என்ற பிதற்றலை எங்கும், எந்த மதத்திலும், எந்த தேசத்திலும், எந்தக் கோயிலிலும், எந்த வீட்டிலும் கேட்க முடியாது. ஆனால் அப்படித்தான் கேட்கிறது இந்தப் பாட்டு. இப்படி விஸ்தாரமாக ஒவ்வொரு உறுப்பையும் காக்க காக்க என்று வேண்டும் என்று புலம்பும் இந்த நூலில், “என் மனத்தைத் தீய சக்திகள் புகாமல் காப்பாற்று”, “தீய எண்ணங்கள் என்னை அணுகாமல் காப்பாற்று” என்று ஒரு சொல்லும் கிடையாது.

வேறு எவரோ தொடக்கத்தில் எழுதிய காப்புச் செய்யுளில் மட்டும் “குமரன் அடி நெஞ்சே குறி” என்று வருகிறது. அது நூலுக்குப் புறத்தில். நூலின் அகத்தில் எதுவும் இல்லை.

தமிழில் உள்ள இப்படிப்பட்ட முழுநூல் இதுதான். மனத்தை விட்டுவிட்டு உடலை மட்டுமே பாடுகின்ற, அல்ல, தேடுகின்ற ஒரு நூல் இது. உடலை உறுப்பு உறுப்பாக முருகப் பெருமான் காப்பாற்றிவிட்டால், பிறகு உடலை அடிக்கின்ற, அதற்குத் தீங்கு செய்கின்ற பேய்பிசாசுகள், பில்லி சூனியங்கள் ஒழிய அவன் உதவ வேண்டும்.
நல்லது எதையுமே கேட்காத, மோசமான விஷயங்களை மட்டுமே கொண்ட நூல் ஒன்று உலகில் உண்டானால் அது இதுதான்.

இதையும் தமிழர்களில் இலட்சக்கணக்கான பேர் தினம் பாராயணம் செய்கிறார்கள், தினமும் ஒரு முறையோ இருமுறையோ தொலைக் காட்சிச் சேனல்கள் பலவற்றில் ஒலி பரப்புகிறார்கள் என்றால் என்ன‍ சொல்வது?

மனம் உண்டேல் மார்க்கம் உண்டு. மனம் திருந்தினால் எல்லாம் திருந்தும் என்று பொதுவாக யாவரும் நினைப்பர். மனத்தையே நினைக்காத இந்த நூல் எப்படி “ஆத்திகர்களால்(!)” போற்றப் படுகிறது?

மனத்தைக் காணாதவர் உடலையே காண்பர்.

மனத்தைக் கட்டுப்படுத்தாதவர் எதையுமே கட்டுப்படுத்தார்.

உன் மனத்தை ஆளாமல் உலகையே ஆண்டாலும் பயனென்ன? என்ன, தேவராய ஐயரே, நீரே சொல்லும்.

சமூகம்