மணிமேகலை

தமிழின் பெருமையை நமக்கும் பிறருக்கும் சுட்டிக்காட்ட அவ்வப்போது யாரேனும் தேவைப்படுகிறார்கள். அண்மையில் தமிழின் தொன்மையையும் கல்வெட்டுகளின் சிறப்பையும் அதற்கான தனித்துறையின் தேவையையும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகத்தில் அறைந்தது போலச் சொல்லியுள்ளனர்.

சிலப்பதிகாரம் என்ற காப்பியக் கதையைப் பெரும்பாலும் அனைவரும் அறிவார்கள். அதன் தொடர்ச்சிதான் மணிமேகலை என்ற காப்பியக் கதை. இக்காப்பியத்தைச் சீத்தலைச் சாத்தனார் என்பார் இயற்றியுள்ளார்.

இந்தியாவில் அல்லல்படும் கீழ்ச்சாதி மக்களுக்குப் புகலிடமாக பெளத்தம் தான் இருந்து வருகிறது. அம்பேத்கரும் இறுதியாக பெளத்தத்தில்தான் சேர்ந்தார். அவருக்கு முன்னோடி போல, ஏறத்தாழ 1700 ஆண்டுகளுக்கு முன்பே, தங்கள் கணிகைகுல இழிவிலிருந்து தப்ப மாதவியும் அவள் மகள் மணிமேகலையும் பெளத்த மதத்தில் சேர்ந்திருக்கின்றனர்!  

கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை. அவள் பாட்டி சித்திராபதி, “மணிமேகலையையாவது இந்திரவிழாவில் பங்குகொள்ளச் செய்” எனத் தூதுவிட்டிருக்கிறாள். ‘கண்ணகியின்’ மகளான மணிமேகலை அவ்வாறு கணிகைத்தொழிலுக்கு வரமாட்டாள் என மாதவி பதிலுரைக்கிறாள். அப்போதைக்குத் தப்பிக்க, மணிமேகலையைச் சுதமதி என்ற தோழியுடன் உபவனம் என்ற மலர்வனத்துக்கு அனுப்புகிறாள்.

வழியில் சோழ அரசன் மகனான உதயகுமரன் அவளைத் துரத்துகிறான். வனத்தில் பளிங்கறை ஒன்று இருக்கிறது. (அது இக்கால ஏசி அறைகள் போன்ற ஒன்று, வெளியிலிருந்து கண்ணாடிக் கதவினூடே பார்க்கலாம், உள்ளே பேசுவதை வெளியில் கேட்க இயலாது.) அதில் புத்தபீடிகை இருக்கிறது. உதயகுமரனிடமிருந்து தப்ப மணிமேகலையைச் சுதமதி அப்பளிங்கறையில் அடைக்கிறாள். புத்தபீடிகையை வழிபட வந்த மணிமேகலா தெய்வம், இருவரையும் மயங்கச் செய்து, மணிமேகலையை மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விடுகிறது.

அத்தீவில் தருமபீடிகை ஒன்று இருக்கிறது. மணிமேகலை அதை வழிபடும் போது, மீண்டும் மணிமேகலா தெய்வம் அவள்முன் தோன்றி, அவளது பழம்பிறப்புகளை உணர்த்தி, வேறு வடிவம் எடுத்தல், வானில் பறந்து செல்லுதல், பசியின்றி இருத்தல் ஆகியவற்றுக்கான மந்திரங்களை அவளுக்கு அளித்துச் செல்கிறது. தீவைச் சுற்றிவரும் மணிமேகலை தீவதிலகை என்பவளைச் சந்திக்கிறாள். அவள், அத்தீவிலுள்ள கோமுகி என்ற பொய்கையில் அன்று ஒரு பாத்திரம் தோன்றும், அது ஆபுத்திரன் என்பவன் கையிலிருந்தது, அதில் ஒருமுறை அன்னமிட்டுவிட்டால், அள்ள அள்ளக் குறையாமல் உணவு சுரந்துகொண்டே இருக்கும் என்று சொல்கிறாள்.

அவ்வாறே, அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை, வான்வழியாக புகார் நகரை அடைந்து மாதவிக்கும் சுதமதிக்கும் நடந்தவற்றைக் கூறுகிறாள். அப்போது காயசண்டிகை என்னும் வித்யாதரப் பெண் அவளைச் சந்தித்து, “முதன்முதல் இதில் தகுந்தவரிடமிருந்து உணவு பெற வேண்டும், அதற்குத் தக்கவள் ஆதிரை, அவளிடம் உணவு பெறுக” என்கிறாள். அவ்வாறே ஆதிரையிடம் உணவுபெற்ற மணிமேகலை, அமுதசுரபியி லிருந்து ஏழைகள் அனைவருக்கும் உணவளிக்கிறாள். காயசண்டிகைக்கு இருந்த யானைத்தீ என்னும் பெரும்பசியும் அவளால் தீர்கிறது.

பூம்புகாரிலும், ஏன், ஏனைத் தமிழகத்திலும் அக்காலத்திலேயே வயிற்றுப் பசிக்குக் கையேந்தும் பிச்சைக்காரர்கள் ஏராளமாக இருந்தார்கள் போலும். அவர்களைப் பார்த்து மனம் வருந்தியிருக்கிறார் சீத்தலைச் சாத்தனார். அவர்கள் பசியைப்போக்க அவருக்குத்தோன்றிய கற்பனைதான் அமுதசுரபி என்ற உணவுப் பாத்திரம்.

உதயகுமரன் மணிமேகலையைச் சந்தித்து, தன்னை அவள் மணக்க வேண்டுகிறான். அவள், “இந்த உடல், பிறத்தலும், மூத்தலும், பிணிபட்டு இரங்கலும், இறத்தலும் உடையது…ஆகவே நல்லறம் புரிய நினைக்கிறேன்” என்று பதில்சொல்லி, அவனிடமிருந்து தப்புவதற்காக சம்பாபதி என்ற தெய்வத்தின் கோயிலுக்குள் செல்கிறாள்.

பின்னர், தனது வேறு வடிவம் கொள்ளும் மந்திரத்தினால், காயசண்டிகை யின் வடிவம் எடுத்து வெளியே வருகிறாள். அதே வடிவில் சிறைகளுக்குச் சென்று அங்கிருந்தோர் யாவருக்கும் உணவளிக்கிறாள். அரசனுக்குச் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறாள்.

பின்னர், உலக அறவி என்ற பொது மன்றத்திற்குச் செல்கிறாள். அவளைக் கண்டுகொண்டு வந்த உதயகுமரனுக்கு அறிவுரை சொல்கிறாள். அதேசமயம், தன் மனைவி காயசண்டிகையைத் தேடிவருகிறான் காஞ்சனன் என்ற வித்யாதரன். அவள் வடிவிலிருந்த மணிமேகலையைத் தன் மனைவி என்று எண்ணி, உதயகுமரனைக் கொன்றுவிடுகிறான்.

அரசன் மணிமேகலையைச் சிறையிடுகிறான். அரசியோ அவளுக்கு எல்லையில்லாத் துன்பங்களை விளைவிக்கிறாள். அவற்றை எல்லாம் பொறுத்துக்கொள்கிறாள். அறவண அடிகள் அவளை மீட்டு அழைத்துச் செல்கிறார்.

அவள் இப்பிறப்பில் வடநாட்டில் புண்ணியராசனாகப் பிறந்துள்ள ஆபுத்திரனைச் சந்தித்துவிட்டு, கண்ணகி கோயிலுக்கு வந்து வணங்குகிறாள். காஞ்சி நகரத்தில் மாதவியும் சுதமதியும் இருப்பதை அறிந்து அங்குச் சென்று மக்களின் பசியைப் போக்குகிறாள். இடையில் இந்திரவிழா நடைபெறாததால் பூம்புகார் அழிந்த செய்தி வருகிறது.

பல சமய அறிஞர்களுடனும் உரையாடல் நிகழ்த்திய மணிமேகலை, இறுதியாக அறவண அடிகளிடம் நல்லுரை பெற்று “தவத்திறம் பூண்டு பவத்திறம் அறுகிறாள்” என்று கதை முடிகிறது. இக்காப்பியத்தில் பல கிளைக்கதைகள் உள்ளன. ஆதிரை கதை, காயசண்டிகை கதை, சுதமதி கதை எனப் பல. அவற்றைத் தனியேதான் நோக்கவேண்டும்.

மணிமேகலை, அன்றிருந்த சோழ அரசனுக்கு அவன் கடமைகளை நினைவூட்டினாள். இன்று இக்கதை, சுதந்திரநாளின் முன்நாள் வெளியிடப்படுவது நமது ஒன்றிய அரசுக்கும் பசியின்றி மக்களை வாழச்செய்வதே முதற்கடமை என்பதை நினைவூட்ட வேண்டியே.

இதன் தலைவி மற்ற மொழிக் காப்பியங்களில் போல ஓர் ஆண் மகனோ, வீரனோ, அரசனோ, கடவுளோ அல்ல, ஒரு சாதாரணப் பெண்.

அவளும் கணிகை குலத்தைச் சேர்ந்தவள், உயர்குலத்தினள் அல்ல. இத்தகைய கதைத்தலைவியை அக்காலத்தில் தேர்ந்தெடுப்பதற்கே கவிஞருக்குப் பெரும் துணிவு இருந்திருக்க வேண்டும்.

இந்து மதத்தில் சாதியிலிருந்து விடுபட இயலாது என்பதால் மணிமேகலை

தன் பிறப்புச் சார்ந்த இழிவிலிருந்து விடுபடுவதற்கு பெளத்தத்தில் சேர்கிறாள்.

யாவருக்கும் உணவளித்து உலகில் எங்கும் பசியே இல்லாமற் செய்ய வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்டவளாக இருக்கிறாள்.

சிறையிலிருப்பவர்களுக்கும் வயிற்றுக்குத் தொடர்ந்து உணவு கிடைத்தால் அவர்கள் அறவோர்கள் ஆவார்கள் என்ற கருத்தை அரசனுக்கு உரைக்கிறாள். சிறைக்கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்குதல் என்பது அக்காலத்தில் எவரும் சிந்திக்கவும் செய்யாத ஒரு அற்புதக் கருத்து.

அக்காலத்திலேயே பல்சமய உரையாடலை நிகழ்த்துகிறாள்.

தமிழின் இந்நூல், உலகெலாம் பல மொழிகளில் பரவிய பெளத்தத்திற்கு ஒரேஒரு தனிக்காப்பியமாக விளங்குகிறது என்பார்கள்.

அக்கால கிரேக்க, இலத்தீன், வடமொழிக் காப்பியங்கள் எல்லாம் தெய்வங் களின், அரச குலத்தவரின், மேன்மக்களின் சிறப்பைப் பாடுகின்றனவே ஒழிய, ஏழைகளைப் பற்றி எதுவுமே கவலைப்பட்டதில்லை.

எவ்வளவு பரந்த மனமும் அருள் நோக்கும் இருந்திருந்தால் இப்படியோர் கற்பனைப் பாத்திரத்தைக் கொண்டேனும் உலகில் அனைவரும் பசியின்றி இருக்க உணவளிக்க வேண்டும் என்ற எண்ணம் சாத்தனாருக்குத் தோன்றி யிருக்கும்! இக்காலமாக இருந்திருந்தால், “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று பாடிய அவர், விவசாயிகள் நிலைக்கு வருந்தியிருப்பார்.

யாவர்க்கும் சோறளிக்கும் செய்கையைக் கடைசியாக நிலைநிறுத்தியவர் வள்ளலார்.

இன்றைய நமது பார்வையில், பிச்சை எடுப்பதும் தவறு, பிச்சை அளிப்பதும் தவறுதான். மணிமேகலைக் கால நோக்குப்படி இதைத் தவிர வேறு வழியில்லை.

இலக்கியம்