கேள்வி – பதில் வடிவத்தில்…
கேள்விகளுக்கு ஒரு முன்னுரை (கேட்பவர் விவேக்): மகாபாரதம் தான் இந்திய கலாச்சாரத்தின் (தமிழ்நாடு உட்பட) ஆகப்பெரிய படைப்பு என்பது போன்ற பிம்பம் இன்று உருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம். மகாபாரதக் கதையை ஆய்வு செய்து பார்த்ததில் அது ஒரு சாதாரணப் பழிவாங்கும் கதையாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. இவாளெல்லாம் கூப்பாடு போடுவது போல பெரிய ஒழுக்கப் பண்புகள் கூட அதில் இருப்பதாக தெரியவில்லை. அதன் தொடர்ச்சியாகவே எனக்கு தோன்றிய சந்தேகங்களை கீழே தொகுத்துள்ளேன்.
பதில் (பூரணச்சந்திரன்) : மகாபாரதத்தில் எனக்கு ஒரு நிறைவு உண்டு. இராமாயணம் போல ‘உயர்ந்த’ ‘இலட்சியத் தலைவனைக் கொண்ட’ என்று வேஷம் போட்டுக் கொண்டு அது வரவில்லை. சாதாரண மக்களை, உள்ளது உள்ளது போல குற்றம் குறைகளுடன் படைப்பதில் அது இன்றைய நாவல் களை ஒத்துள்ளது. அதுதான் அதன் சிறப்பு. மகாபாரதத்தில் கண்ணன், பீஷ்மர் உள்பட எவனும் சிறந்தவனும் இல்லை, தலைவனும் இல்லை. எல்லாம் குறைகள் கொண்ட மனிதர்களே. கிருஷ்ணன் கீதை உரைத்ததும் அவன் இறைவன் அவதாரம் என்பதும் பின்னால் (நான்கைந்து நூற்றாண்டுகளேனும்) பின்னால் சேர்க்கப்பட்டது. அதனால் உன் முன்னுரையை பரிசீலிக்கலாம் என நினைக்கிறேன். மகாபாரதத் கிருஷ்ணன், துவாரகை நகரத்தைச் சேர்ந்த ஓர் இடையன். சாதாரண மனிதன்.
மகாபாரதம் போன்ற காவியங்களைப் படிக்கும்போது காவியப் பாத்திரம் இறைவன் என்று சொல்லி, அவன் செயல்களாக நிறைய இடைச் செருகல்கள் இருக்கும். அவற்றை ஒதுக்க வேண்டும். முதலில் நாம் அற்புதச் செயல்கள் தவிர்த்த நமக்கான ஒரு Plotஐ உருவாக்க வேண்டும். பிறகுதான் ஆய்வு செய்ய முடியும். இறைவன் செயல்களையோ, அற்புதச் செயல்களையோ யாராவது ஆய்வு செய்ய முடியுமா? நம் உச்சநீதிமன்றம் போல “நம்பிக்கை” என்று சொல்லிவிடுவார்கள்.
பார்ப்பனர்கள் இதை உயர்த்திப் பிடிப்பதில்லை. இராமன், சீதை பெயரை எல்லாம் வைத்துக் கொள்ளும் பிராமணர்கள் யாராவது தருமன், அர்ஜூனன், பீமன், திரெளபதி என்றெல்லாம் பெயர்வைத்துப் பார்த்திருக்கிறாயா? (கிருஷ்ணன் விதிவிலக்கு-கடவுள்). உண்மையில் மகாபாரதப் பெயர்கள் எல்லாம் கீழ்ச் சாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெயர்கள். அதுவே அதன் பண்பை எடுத்துக் காட்டுகிறது.
தலித்துகள் நிறையப்பேர் அர்ஜுனன், பீமன், திரவுபதி என்று பெயர் வைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். திரவுபதி கீழ்ச்சாதிகள் வணங்குவதற்கென்று ஒதுக்கப்பட்ட கடவுள். நம் ஊரில் எல்லாம் கூட திரவுபதி கோயில் உண்டு. அவளும் ஒரு அம்மன் ஆகிவிட்டாள். திரவுபதி கோவிலில் சாதாரண மக்கள் பொங்கலிட்டு கூழ் ஊற்றுவதைப் பார்த்திருக்கலாம்.
அற்புதச் செயல்கள் தவிர்த்த ‘நமக்கான ஒரு பிளாட்’ என்பது முக்கியம். உதாரணமாக கிருஷ்ணன் திரவுபதிக்காக சேலையை வானத்திலிருந்து அனுப்பியதை அப்படியே ஏன் ஏற்றுக் கொள்ளவேண்டும்? சபையிலிருந்த சாதாரண மக்கள் சிலர் சேலை கொடுத்து திரவுபதியைக் காப்பாற்றிய செயலாக இதைக் கொள்ளலாம். ஏனென்றால் ஆள்பவர்களைவிட ஆளப்படுபவர்களுக்கு மனிதாபிமானம் நிறைய உண்டு.
அதேபோல, அர்ஜுனனுக்கு சிவபெருமானே வேடன் வடிவத்தில் வந்து பாசுபத அஸ்திரம் கொடுத்தார் என்பது பாரதக் கதை. உண்மையில் ஏகலைவன் (ஏக-லவ்யன்) என்ற வேடன் அர்ஜுனனை விட அதி வில்வீரனாகத் திகழ்ந்திருக்கிறான். (அதனால் கட்டைவிரலை ஒரு பிராமணனுக்கு பலி கொடுக்க வேண்டிவந்தது.) அதனால் வில்வித்தையில் சிறந்த ஒரு வேடனே (மனிதனே) அர்ஜுனனுக்கு அஸ்திரம் வழங்கியிருக்கிறான் என்றே கொள்ளவேண்டும்.
பாரதத்தை நான் போற்றுவதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. அது மக்கள் கதை. என் காலம் வரை மகாபாரதக்கதை மேமாதத்தில் (கோடையில்) மழை வேண்டி கிராமப்புறங்களில் வாசிக்கப்படுவதும், கதாகாலட்சேபம் செய்யப்படுவதும் உண்டு. அன்றன்று (மதியம் 2 முதல் 5 வரை) நடத்திய பாரதக் கதையை இரவில் 10 மணிக்கு மேல் கிராமங்களில் கூத்துத்திடல்களில் ஆட்டமாக (தெருக்கூத்தாக)ப் போடுவார்கள். மக்கள் விடியவிடிய அவற்றைப் பார்ப்பது வழக்கம். இந்தச் சிறப்பு இராமாயணத்துக்குக் கிடையாது.
நான் திமிரியில் 1957 முதலாகப் படித்தபோது, அங்கு பாரதக்கதையும் தெருக்கூத்தும் தவறாமல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது.
மகாபாரதக் கதையை என்று கிராமங்களில் போடுவதை நிறுத்தினார்களோ, அன்றே தெருக்கூத்துக் கலை அழிந்து விட்டது.