கேள்வி 2. ஆமாம் மாமா… இந்த கேள்வியை நான் பிராமண நண்பர் களிடமே கேட்டிருக்கிறேன்… அவர்கள் கூறுவது, வேதத்தில் எங்கும் பிறப்பு அடிப்படையில் சாதி பிரிவுகள் இல்லை என்பதுதான். பின் பிற்காலத்தில் எப்படி பிறப்பு அடிப்படையில் மாறியது…. தற்போதும் ஏன் தொடர்கிறது என்றெல்லாம் தெரியவில்லை…
நீங்கள் கூறியது போல எனக்கும் ராமாயணம் விட மகாபாரதம் பிடிக்கும் தான். மனித இயல்புகளின் சிக்கல்களை காட்டுவதால். என்னுடைய எதிர்ப்பு அதை (மற்றும் சனாதான தர்மம்) மட்டுமே நம் அடையாளமாக மாற்றுவதில் தான் உள்ளது…
உதாரணமாக ஏன் தெருக்கூத்து பாரதத்தை மட்டுமே நம்பி இருந்தது… ஏன் பிற நாடகங்களோ (ஆங்கிலத்தில் Shakespeare முதல் Bernard Shaw வரை இருப்பன போல), பிற இலக்கியங்களோ படைக்கப்படவில்லை?
பதில். வேதத்தில் பிறப்படிப்படையில் சாதி இல்லை என்பது சரி, ஆனாலும் அது ஒரு மூடநம்பிக்கைக் களஞ்சியம்தான். எனினும் சாதிக்கான வேர்கள் அதர்வத்தில் உள்ளன. மூலமின்றி ஒன்று பிறந்து விட்டது என்பது தர்க்கத்திற்கு ஒவ்வாது. சரி, சாதிதான் வேதத்தில் இல்லை என்கிறார்களே, பிறகு அதை விட்டுவிட வேண்டியதுதானே? ஏன் மனுதர்மத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்? அதில்தான் சாதி பற்றி விரிவான சூத்திரம் வருகிறது.
சாதியின் வேரைத் தேடுவது சநாதனிகளுக்கு ஆபத்தானது, பிறகு இப்போதுள்ள அவர்களுக்கு வசதியான இந்த சாதிமுறையைக் கைவிட வேண்டி வரும். அதனால் அதில் பிடிவாதமாக ஈடுபட மறுக்கிறார்கள்.
தற்போது வரை சாதி தொடர்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இது பிரித்தாளும் சூழ்ச்சிதான். ஆங்கிலேயனாவது மொழி, இன, சாதி போன்ற இருக்கின்ற குழுக்கள் அடிப்படையில் பிரித்தாள்வதைத் தொடங்கினான். ஆரியர்கள் சாதி அடிப்படையிலும் தனிமனித அடிப்படையிலும் பிரித்தாள்வதைத் தொடங்கி விட்டார்கள்.
சாதிகளைப் பிரிக்கும்போதே நீ உயர்ந்தவன், அடுத்துள்ளவன் தாழ்ந்தவன் என்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதுபோல, அமைப்புகள். சிலசாதிகள், சிலபேர் மட்டும் பூணூல் அணியலாம் போன்ற சலுகைகள் இத்யாதி. அதனால் ஒவ்வொரு சாதிக்குள்ளும் கூட உபசாதிகள் தோன்றி நான் பெரியவனா நீ பெரியவனா என்ற ஓயாத போராட்டம்.
முக்கியமாக தலைவிதி-முற்பிறப்பு என்ற இரண்டின் வாயிலாகவும் தனிமனிதர்களைப் பிரித்து விட்டார்கள். உதாரணமாக பக்கத்தில் ஒருவன் கஞ்சியில்லாமல் சாகிறான் என்றால் அவனுக்கு உதவுவதற்கு பதிலாக, அது அவன் தலையெழுத்து, நாம் நன்றாக இருப்போம் என்ற இந்திய மனநிலை. எவன் என்ன செய்தாலும் எங்கு பிறந்தாலும் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தாலும் அது அவன் தலையெழுத்து என்று தலைமுழுகிவிடலாம்.
மனிதர்கள் எந்த அடிப்படையிலும் ஒன்று சேரவே முடியாத ஒரு கோட்பாடு இது. இது அரசுகளுக்கும் ஆள்வோருக்கும் எதிர்ப்புகளையும் கலகங்களையும் சமாளிக்க மிக உதவியாக இருந்ததால் அவர்கள் பிராமணர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால்தான் இந்தியாவில் புரட்சி வரவே வராது, வரமுடியாது என்று நான் சொல்வதுண்டு. அடுத்தவன் மேல் அபிமானமும் அன்பும், அதன் அடிப்படையில் ஒன்றுசேர்தலும் இருந்தால்தானே புரட்சி வரும்?
ஆனால் நான் முன்பே சொன்னதுபோல இராமாயணம் அளவுக்கு மகாபாரதம் பார்ப்பனர்களின் அடையாளமாக இல்லை. எல்லாச் சாதியினரின் அடையாளமுமாகப் பார்க்கப்பட்டது.
தெருக்கூத்து மகாபாரதத்தை மட்டுமே நம்பியிருந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றை இங்கே தொகுப்பது கடினம். அதைப் படித்தால் மழைவரும் என்பன போன்றவை நம்பிக்கை அடிப்படையிலானவை. இன்னும் பல சமூகம் சார்ந்தவை. முக்கியமாகப் பிற சாதியினர் படிக்கலாகாது என்ற பார்ப்பனரின் கட்டுத்திட்டம். அப்படியானால் பிராமணன் மட்டும்தானே நாடகங்களை உருவாக்கவும் எழுதிவைக்கவும் முடியும்? இதுதான் இசையிலும் இப்போது நடக்கிறது.
இயல் மட்டும் தப்பிப் பிழைத்ததன் காரணம், தமிழிலக்கியம் ஆரம்பத்திலிருந்தே வேளாளர் கையில் எடுக்கப்பட்டது, சமஸ்கிருதத்திற்கு எதிரானதாகக் கட்டமைக்கப் பட்டு விட்டது. இசையும் நாடகமும் இயலைவிடப் புரவலர் ஆதரவை வேண்டுபவை. இது ஓரளவு விடைதான். முடிந்தால் போகிற போக்கில் இதற்கான விடையையும் மேலும் தேடவேண்டும்.
மிக முக்கியமான ஒன்று, ஆரியர்கள் தங்களுக்கு எதிரானவற்றை ஒன்று தங்களிடம் ஏற்கெனவே உள்ளதாக உள்வாங்கிக் கொள்வார்கள், அல்லது அதற்கு ஒத்துவராத பனுவலாக இருந்தால் அழித்துவிடுவார்கள். அதனால் சாதியின் தோற்றத்தைப் பற்றிய ஆய்வு சிக்கலாகியது. முக்கியமாக சார்வாகம், நாத்திகம், ஆசீவகம் போன்ற எதிர் மதங்களுடைய நூல்கள் யாவும் அழிக்கப்பட்டன. பெளத்தம் கொஞ்சம் செல்வாக்குடன் இருந்ததால் இந்த விபத்திலி ருந்து தப்பியது.
நூல்களை அழிக்க முடியாதபோது ஆரியர்கள் ஆட்களையே அழித்துவிடுவார்கள். உதாரணமாக மன்னர்கள் ஆதரவுடன் சமணர்கள் அழிக்கப்பட்டது (தமிழகத்திலும் 8000 சமணர்கள் கழுவேற்றப்பட்டது) போன்றவை இத்தகையவை. ஆரம்பமுதலே ஆரியமும் சநாதனமும் ஆபத்தானவையாகத்தான் இருந்து வந்துள்ளன. இப்போதும் அப்படித்தான் நடக்கிறது.
தமிழ் இலக்கியத்திலும் மருத்துவத்திலும் பிற கலைகளிலும் முக்கியமானவை ஆரியர்களால் அழிக்கப்பட்டன. சித்தமருத்துவம் ஆயுர்வேதம் என்ற வடிவத்திற்குள் கொண்டுசெல்லப் பட்டது. கட்டடக்கலை, சிற்பக்கலை (தமிழகத்தில் ஊர் ஊருக்குக் கோயில்கள் இருந்தன, சிற்பங்கள் இருந்தன, யோசித்துப் பார், இவை பற்றிய நூல் எதுவும் தமிழில் கிடையாது.) நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு, மூல நூல்கள் ஒன்று கூட இல்லாமல் அழிக்கப்பட்டன. இப்படி அவர்கள் அழித்ததை எதிர்ப்பதற்கு அறிஞர்களுக்கோ சாதாரண மக்களுக்கோ போதுமான அரசாங்க ஆதரவோ, பணமோ, செல்வாக்கோ எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அரசாங்கமே ‘அவாளுக்கு’ ஆதரவு…எங்கு பார்த்தாலும் அக்கிரகாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள்…எல்லாக் கொடையும் பார்ப்பனருக்கே. ஒரு வேளாளனுக்கோ, மருத்துவனுக்கோ, பறையனுக்கோ, வைசியனுக்கோ கொடையளித்ததாக கல்வெட்டு இருக்கிறதா? அவர்கள் யாவரும் வாழப் போராடியாக வேண்டும், அவர்களிடம் வரி பிடுங்கப் படும். ஆனால் இவர்களுக்கு ஊர்களும் நிலங்களும் இனாமாக அளிக்கப் படும், இவற்றுக்கு வரியும் கிடையாது (இறையிலி, வரியிலி நிலங்கள்). வேடிக்கை என்னவெனில், பின்வந்த நவாபுகள்கூட இதே இறையிலி நிலங்களைப் பார்ப்பனருக்கு அளிக்கும் முறையைப் பின்பற்றியிருக்கிறார்கள். படித்தவர்கள் ஆதரவு வேண்டுமல்லவா? தங்களை மட்டுமே படித்த சாதியாக, பிறரைப் படிப்பதற்குத் தகுதியில்லாதவர்களாகக் கட்டமைத்தது பார்ப்பனர்களின் பாரிய சூழ்ச்சிகளில் ஒன்று.