மகாபாரதச் சிந்தனைகள்-தொடர்கிறது

ஏன் மகாபாரதக் கதையைத் தவிர இத்தனை நூற்றாண்டுகளாகத் தெருக்கூத்துக் கலைஞர்கள் வேறு எ‍தையும் கையாளவில்லை என்பது மிகப் பெரிய ஆய்வினை வேண்டுவது. மழை வேண்டுவது, பாரதம் படிப்பது, அதைக் கூத்தாகப் போடுவது எல்லாம் ஒரு தொடர்போல நிகழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் அந்தக் கதைகளை ஒட்டி மக்கள் தங்கள் கற்பனையைச் செலுத்திக் கூத்துப் பாடல்களையும் வசனங்களையும் தாங்களாகவே உருவாக்கி வந்துள்ளனர். உதாரணமாக, நான் வல்லம் (ஆரணி) என்ற ஊரில் ஆசிரியனாக 1969-70இல் பணியாற்றினேன். அது வந்தவாசிக்கும், செய்யாறுக்கும், சேத்துப்பட்டுக்கும் இடையிலுள்ள ஓர் ஊர். இந்த மூன்று ஊர்களுமே பழங்காலத்தில் தெருக்கூத்தின் பயிற்றுமையங்களாகச் செயல்பட்ட ஊர்கள். என்னிடம் படித்த ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் தானாகவே பக்கத்துப் பக்கத்து ஊர்களில் பாடப்படும் கூத்துப் பாடல்களைப் பாடுவான், அவனாகவே இட்டுக் கட்டவும் செய்வான். எல்லாம் எங்கேயோ மாயமாக மறைந்துவிட்டது…காரணம் திரைப்படமா, அரசியலா, கூத்து மட்டுமே நடத்தி வாழ்க்கை நடத்த வசதியற்றுப் போனமையா, மாறிவந்த நவீனமயமாக்கலா, ஆபாசக் கலைகளா…என்னத்தைச் சொல்வது?

4. கேள்வி: தமிழில் இயல் இசை நாடகம் என்று முத்தமிழ் இருப்பதாக சொல்கிறார்கள்… ஆனால் அதில் நாடகங்கள் பற்றி குறைவாகவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்…. அதை பற்றிய awareness ஏ மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை…. எனக்கு தெரிந்த நாடகங்கள்…. சினிமா மற்றும் TV நாடகங்கள் தான்…

பதில் : எனக்குத் தெரிந்தவரை இன்று இயலைத் தவிர இசை, நாடகத் தமிழ்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பகுப்புக்கான நோக்கமும் தெரியவில்லை. உண்மையில் இவை மூன்றையும் தங்கள் மொழியில் கொண்ட ஏராளமான நாடுகள் உள்ளன. அங்கெல்லாம் இப்படி போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இல்லாத இசைப்பாடல்களா, இசையமைப்பாளர்களா, ஆபராக்கள் முதலிய இசைநாடகங்களா, பிற நாடகங்களா? அவர்கள் மூன்றிங்லீஷ் என்று போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. தங்கள் தங்கள் போக்கில் இயல்இசைநாடகம் மூன்றையுமே வளர்க்கிறார்கள். நாம் வாய்ப்பேச்சு வீரர்கள். தமிழ்இசை வளரும் வரை, தமிழில் நாடகங்கள் தனித்துறை என்று சொல்லுமளவுக்கு வளரும் வரை, இருப்பது முத்தமிழ் அல்ல, ஒரேஒரு இலக்கியத் தமிழ்தான். முத்தமிழ் என்பது அதுவரை பொய்.

5. கேள்வி: பகவத்கீதை பற்றி உங்கள் கருத்தென்ன?

க பூரணச்சந்திரன்: எந்த ஆய்விலும் பகவத்கீதை நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு மேல் மகாபாரதத்துக்குப் பின் வந்தது என்பதை நினைவில் வைக்க வேண்டும். ஏனெனில் மகாபாரத காலத்தில் நெகிழ்வாக இருந்த சாதிகள் பகவத்கீதை காலத்தில் முற்றிலும் இறுகிப் போயிருக்கலாம். எனவே பகவத் கீதை சாதிகளை வற்புறுத்தும் ஒரு நூலாகவே அமைந்துவிட்டது.

அது சாதியை வற்புறுத்துகிறது என்பது எனக்கு முக்கியமில்லை. அது அதன் இயல்பு. ஆனால் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கு நடக்கும் விவாதம் ஜாதி பற்றியதல்ல. கடமை பற்றியது. அர்ஜுனன் கேள்வி, முன்னால் இருக்கும் உறவினர் மட்டுமல்ல, அவர்களுடன் சேர்ந்த பல லட்சக்கணக்கான பேர்களையும் தருமத்தின் பெயரால் கொல்வது தகுமா என்பதுதான். கிருஷ்ணன் சொல்லும் பதில் இதற்கு ஏற்புடையதல்ல. அவன் சொல்வது, “எத்தனை பேரானால் என்ன, சொந்தமாக இருந்தால் என்ன, தருமம் (உன் சாதிக்கடமை யான கொல்லுதல்)தான் முக்கியம், ஆகவே கொல்” என்பது. பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்களையும் தாண்டி அது என்ன தருமம், நீதி? தருமம் பற்றி எலலாருக்கும் இருப்பது ஒரு பார்வை தான். (நோஷன்). இது தருமமா, அது தருமமா என்றெல்லாம் ஆராய்ந்து எதையும் நிலைநிறுத்துவது அவ்வளவு எளிதல்ல. இன்னும் கேட்டால் எது உண்மை என்பது போலவே, ஆராய முடியாத முடிவற்ற ஒன்றாக இருப்பதுதான் எது தர்மம் (நீதி) என்பதும். (இங்கே தர்மம் என்ற வடசொல்லின் அர்த்தத்தை வைத்து (மதம்) பலபேர் குட்டை குழப்புகிறார்கள்.) நாம் பொதுவான எல்லா மனிதர்களுக்கும் ஏற்ற சமூகநீதியைப் பற்றித்தான் பேச இயலும். எல்லாருக்கும் உணவு தேவை. எனவே அதற்கு வழி செய்ய வேண்டும் என்பது சமூக நீதி.
கிருஷ்ணன் கூறும் நீதி, சிங்களர்கள் தமிழ் ஈழ மக்களைக் கொன்ற நீதிதான். அல்லது யூதர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று கருதி ஹிட்லர் செய்த நீதிதான்.
mass destruction எதற்கும் பின்னால் கிருஷ்ணனின் நீதிதான் இருக்கிறது.
அதைக் கேள்வி கேட்கும் அர்ஜுனனின் (பொதுமக்களின்) வாயைச் சாமர்த்தியமாக அடைப்பதுதான் பகவத்-கீதை.

இலக்கியம்