‘மேக்பெத்’ ஷேக்ஸ்பியரையோ, ‘மகாபாரதம்’ வியாசரையோ, ‘இராமாயணம்’ கம்பரையோ, அவ்வளவு ஏன், ‘சிலப்பதிகாரம்’ இளங்கோவடிகளையோ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இம்மாதிரித் தொடர்களை எல்லாம் கேள்விப்பட்டிருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழர்தான். ‘மனோன்மணீயம்’ சுந்தரம் பிள்ளையையும் கேள்விப்படத் தகுதி உள்ளவர்தான். கலைஞர்கள் பெயருக்குமுன் ஊர்ப்பெயரை இணைப்பதுண்டு. நூல் பெயரையே இணைத்து ஒரு புரட்சி செய்தது ‘மனோன்மணீயம்’ சுந்தரனார் பல்கலைக் கழகம். வேறு எத்தனை ‘சுந்தரனார்’கள் தமிழகத்தில் இருக்கிறார்களோ தெரியவில்லை – இப்படி ஒரு வேறுபடுத்தல் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. (தொடக்கத்தில் பலபேர் அவரை மணியக்காரரும் ஆக்கினார்கள்-மனோன்’மணியம்’ சுந்தரனார் என்று எழுதி!) நல்லவேளை, இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் கூச்ச மின்றி ஒருவர் இந்து நாளிதழில் எழுதுகிறார்: “The answer I found in the book is Prof. Sundaram Pillai, better known as ‘Manonmaniam’ Sundaram Pillai”. (27-10-2012). வேறொன்றுமில்லை, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியவர் யார் என்று பலத்த சந்தேகம் அவருக்கு வந்துவிட்டதாம், ஒரு புத்தகத்தில் இந்த விடை கிடைத்ததாம்.
சுந்தரம் பிள்ளை:
எழுதியது மிகுதி, மறைந்தபோது வயதோ குறைவு (42-தான்) என்றாலும், தம் வாழ்நாளிலேயே பெரும்புகழ் பெற்றவர் சுந்தரம் பிள்ளை. 1855இல் ஆலப்புழையில் பிறந்தவர். பெற்றோர், பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள். 1855இல் பிறந்தவர். 1897இல் மறைந்தார். திருவனந்தபுரத்தில் மகாராஜா கல்லூரியில் தத்துவம் கற்றார். அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்குப் பின்னர் கிடைத்தது. இடையில் திருநெல்வேலி ம. தி. தா. (மதுரை திரவியம் தாயுமானவர்) இந்துக் கல்லூரி, ‘இந்துக் கலாசாலை’ யாக இருந்தபோது அதன் முதல்வராகவும் (1878) இருந்து அந்தக் கல்லூரியை மேம்படுத்தினார்.
பயின்றது தத்துவம் என்பதால் புகழ்பெற்ற பேராசிரியர் ஹார்வியின் அன்புக்குகந்த மாணவரானார். புகழ்பெற்ற சமூகவியலாளர் ஸ்பென்சரைப் போற்றுபவர்களில் ஒருவராக இருந்தார். கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் சீடர். சிறுவயது முதலாகவே தேவாரம் திருவாசகம் முதலிய பக்தி இலக்கியங்களைத் தம் தந்தையாரின் வழிகாட்டுதலில் பயின்றவர். திரு வனந்தபுரத்திலும், சட்டாம்பி சுவாமிகள், தைக்காட்டு அய்யாவு சுவாமி, நாராயண குரு போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.
தமிழின் நிலை:
பிற்காலத்தில் அவருடைய நண்பராக இருந்த ஜே. எம். நல்லசாமிப் பிள்ளைக்கு ஒரு கடிதத்தில் எழுதுகிறார் சுந்தரம் பிள்ளை: “Most of what is ignorantly called Aryan Philosophy, Aryan civilization is literally Dravidian or Tamilian at the bottom.” (19-12-1896). அதாவது, பொதுவாக ஆரியத் தத்துவம், ஆரிய நாகரிகம் என்றெல்லாம் சொல்லப்படுவனவற்றில் பெரும்பகுதி உண்மையில், அடித்தளத்தில் திராவிட அல்லது தமிழ்த் தத்துவம், நாகரிகம் ஆகும் என்கிறார். இதேபோல் அடுத்த ஆண்டு, 1897இல் எழுதியிருக்கிறார்: “India south of the Vindhyas, the Peninsular India, still continues to be India proper” (30-01-1897, Madras Standard). அதாவது மெய்யான இந்தியா என்பதே விந்தியத்திற்குத் தெற்கிலுள்ள பகுதிதான் என்பது அவர் கருத்து.
இந்தக் கருத்துகள்தான் இதற்கு முன்னரே (1891) அவர் எழுதிய மனோன்மணீயம் நாடகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்திலும் வெளிப்பட்டன. முழுமையாக அவ்வாழ்த்துப்பகுதி:
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திரவிட நல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழணங்கே
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலயாளமும் துளுவும்
உன்உதரத்து உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.
என்றைக்குமே பிறருக்கு பயப்படுகின்ற தமிழ்நாடு அரசு, இப்பாட்டைச் சிதைத்தும் வெட்டியும் ‘ஒருமாதிரியாக’ 1970இல் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. நியாயமாக 1955இல், அவர் பிறப்பு நூற்றாண்டில் இது செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதும் வடக்கின வால்கள்தான் நாம், இல்லையா? ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கவே பயம் ஆயிற்றே! தெக்கணம் இந்தியத் தாயின் பிறைநுதல், அதில் திலகம் தமிழ்நாடு (‘திரவிட’ என்ற சொல் ‘தமிழ்’ என்பதன் வடமொழியாக்கம், அந்த அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறார் சுந்தரம் பிள்ளை.) அத்திலகவாசனை போல் இருப்பவள் தமிழணங்கு.
இவை, கால்டுவெல்லின் பாதிப்பு சுந்தரம் பிள்ளைக்கு இருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் தவறான கருத்துகளை வெளியிட்டபோது கால்டு வெல்லை அவர் மறுக்கவும் தயங்கவில்லை.
திருஞான சம்பந்தரின் காலம்:
தமிழில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் இலக்கியம் இல்லை என்றும், திருஞான சம்பந்தர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்றும் கால்டுவெல் எழுதினார். (பாவம், அவர் சங்க நூல்களைப் படிக்கவில்லை என்று தோன்றுகிறது). இதனை மறுத்து சுந்தரனார் திருஞான சம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பதை நிலைநாட்டினார். இதற்காக எழுதப்பட்ட நூல்தான் ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் அல்லது திருஞான சம்பந்தரின் காலம்’ என்ற ஆங்கில நூல். இது நூலாக வருவதற்கு முன் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழ்களில் 1891இல் கட்டுரைகளாக வெளிவந்தது. காலடி சங்கராச்சாரியார் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்பது முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது (சமஸகிருதப் பெரியவர்களின் வரலாற்று ஆராய்ச்சி அல்லவா?) அவர் ‘திரவிட சிசு’ என்று ஞானசம்பந்தரைக் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக்காட்டி ஆதிசங்கரருக்கு முற்பட்டவர் ஞானசம்பந்தர் என்பதை நிலைநாட்டினார்.
இந்நூலுக்கு ஆதாரமாக அவர் திரட்டிய, ஆண்ட செய்திகள் பல. சான்றுக்குச் சில: ஞானசம்பந்தர் தஞ்சாவூரைக் குறிப்பிடுகிறார், அதனால் அவர் காலம் பிந்தியது என்ற வாதம். (இப்போதுள்ள தஞ்சை, கி.பி. எட்டாம் நூற்றாண்டு அளவிலே உருவாயிற்று). ஆனால், ஞானசம்பந்தர் குறிப்பிடும் தஞ்சாவூர் நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ‘பொத்தைத்’ தஞ்சாவூர் என்று சுந்தரனார் எடுத்துக்காட்டினார். இன்றைய தஞ்சை, மருக(ல்)நாட்டுத் தஞ்சை எனக் கருவூர்த் தேவரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருஞானசம்பந்தர், கோச்செங்கணான் என்ற சோழஅரசன், கும்பகோணத்திற்கருகில் வைகல் என்னுமிடத்தில் கோயில் கட்டியுள்ளதைக் குறிப்பிடுகிறார். எனவே அச்சோழன் காலத்தை உயர்ந்தபட்சக் கால எல்லையாகக் கொள்கிறார். அதேசமயம் தர்க்கத்திற்கு மாறானவற்றைப் புறக்கணிக்கவும் அவர் தயங்கவில்லை. சான்றாக, சி. வை. தாமோதரம் பிள்ளை, ‘கூன் பாண்டியன் இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் வாழ்ந்தவன், ஞானசம்பந்தர் காலமும் அதுவே’ என்று கூறினார். இதை மிக எளிமையாக மறுக்கிறார் சுந்தரனார். ஞானசம்பந்தர் மடத்துத் தலைமை காலவரிசை, 1500 ஆண்டுகளுக்குள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். சுந்தரனார் மிகச் சிறந்த ஆய்வாளர் என்பதைத் திருஞான சம்பந்தர் காலம் நிலைநாட்டியது.
பிற சில நூல்கள்:
சுந்தரனார் சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ இருபது நூல்களுக்கு மேல் எழுதியதாகச் சொல்வார்கள். எழுதிய நூல்களில் முக்கியமானவை நூற்றொகை விளக்கம், மனோன்மணீயம், திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் காலஆராய்ச்சி (The Early Sovereigns of Travancore), தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல் கற்கள் (Some Milestones in the History of Tamil Literature) ஆகியவை.
பத்துப்பாட்டு பற்றிப் பொதுவாக எழுதப்பட்ட நூல் The Ten Tamil Idylls (பத்து வாழ்க்கைச் சித்திரங்கள்) என்பது. இதைத் தவிர, கிறித்துவக் கல்லூரி இதழ்களில் ஹாப்ஸ் பற்றியும், பெந்தாம் பற்றியும், நம்பியாண்டார் நம்பியின் காலம் பற்றியும் எழுதியிருக்கிறார்.
பத்துப்பாட்டு:
The Ten Tamil Idylls என்ற நூலில், பத்துப் பாட்டில் மூன்று பாடல்களை-திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி- நல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். 1889இல் பத்துப்பாட்டின் பதிப்பு, உ. வே. சாமிநாதையரால் வெளியிடப்பட்டவுடனே 1891இல் இவற்றை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமிநாதையர் தம் வாழ்க்கை வரலாற்றில், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமக்கு மிக அன்புடன் கடிதங்கள் எழுதியது பற்றிக் (துரதிருஷ்டவசமாக, இந்தக் கடிதப் போக்குவரத்து, 1896இல் தான் தொடங்கியது) குறிப்பிட்டிருக்கிறார்.
திருவிதாங்கூர் மன்னர் வரலாறு:
சுந்தரனார் சிறந்த கல்வெட்டாராய்ச்சியாளரும் ஆவார். 1896இல் திருவிதாங்கூர் அரசு கல்வெட்டுத் துறையைத் தொடங்கியது. அந்தக் கல்வெட்டுத்துறை வளரவும் துணையாக இருந்தார் சுந்தரம் பிள்ளை. அதற்கு ஐந்தாண்டுகள் முன்பிருந்தே கல்வெட்டுகளை ஆராய்ந்து திருவிதாங்கூர் அரசர்களின் வழிமரபு பற்றி சுந்தரனார் எழுதினார். இந்நூலின் நான்காம் இயல், Miscellaneous Travacore Inscriptions என்பது. இவற்றை வெளியிட்டதோடு, For the first time brought to notice with their dates determined by inscriptions என்ற குறிப்பையும் அளித்துள்ளார்.
சாத்திர சங்கிரகம்:
சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம் என்பது 1888இல் வெளியாயிற்று. எவ்விதம் சாத்திரங்களைப் பகுக்கலாம் என்பது பற்றிய நூல் இது. “தற்கால நிலைமைக் கேற்பச் சாஸ்திரங்களை எத்தனை வகுப்பாய் வகுக்கலாம் என்பதும், அவற்றின் முக்கிய முறைமையும் அதை வகையெடுத்து விளக்குவதே கீழ்வரும் நூற்றொகை விளக்கம். இது திருவி தாங்கோட்டுக் கவர்ன்மென்றாருடைய நூதன பிரசங்க ஏற்பாட்டின்படி, ஓர் உபந்நியாசமாக எழுதப்பட்டு திருவனந்தபுரம் சர்வகலாசாலையில் வாசிக் கப்பட்டது” என்று முகவுரையாகக் குறிப்பிடுகிறார் சுந்தரனார். தமிழ் உரைநடைக்கு இந்நூல் புதியதொரு பரிமாணத்தையும் வடிவத்தையும் தந்துள்ளது என்று கருத்துரைப்பர்.
மனோன்மணீயம்:
சரியான திறானய்வு நோக்கில், இந்நூலை ஒரு நாடகம் என்பதைவிடக் காப்பியம் என்று சொல்லுவது பொருத்தமாகும். (எந்தச் சுவையுமற்ற உதயணன் கதை போன்ற நூல்களையும் சிறு காப்பியங்கள் என்று சேர்ப்பவர்களாயிற்றே நாம்!) சுவையில், சிலப்பதிகாரத்துககுச் சற்றும் குறையாதது மனோன்மணீயம் என்று சொல்லுவது மிகையாக இருக்கலாம். ஆனால் மணிமேகலைக்குச் சற்றும் குறைந்ததல்ல. யாப்பு வடிவிலும், கதைமாந்தர் பேசும் முறையிலும் கதை சென்றாலும், இதை வாசிப்பவர்க்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றதொரு நூலை நாம் படிக்கிறோம் என்ற எண்ணமே உண்டாகும்.
இதனை மேடையேற்றுவதும் இயலாது. (இதற்கு முன்னோடியாக ஆங்கிலத்தில் குளோசெட் டிராமா என்ற ஒருவகை இருப்பதை எடுத்துக்காட்டுவார்கள். ஆனால் அது ஒரு நல்ல இலக்கிய வகையாக அங்கும் அது உருப்பெறவே இல்லை.) ஒருவகையில் பின்னர் தமிழில் கவிதைநாடகம் என்ற ஒரு மோசமான படைப்புவகை தோன்ற இது காரணமாகிவிட்டது என்று சொல்லலாம். ஏனெனில், சுந்தரம் பிள்ளையின் படைப்பாற்றல் பின்வந்தவர்களுக்கு இல்லை. நாடகமாகச் சரிவர இயலவில்லை என்றாலும் சுந்தரனாரின் படைப்பாற்றல் இதை ஒரு காப்பியமாக நிலைநிறுத்துகிறது. எல்லாருக்கும் அத்தகைய திறன் இருக்குமா?
மனோன்மணீயம் “நாடக நடையில் எழுதப்பட்டிருக்கிறதே, காப்பியம் என்று சொல்லலாமா” என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது. சிலப்பதிகாரத்தை நாடகக் காப்பியம் என்று சொல்லுவது போல இதைக் காப்பிய நாடகம் என்று சொல்லிக் கொள்ளுங்களேன்!
“மனோன்மணி(!)யம், மானவிஜயம் இவையெல்லாம் நாடகம் இல்லையா என்று கேட்கலாம். என்னைப் பொறுத்தவரையில், ஜவுளிக் கடையில் சேலைகட்டிய மாதாய் நிற்கும் பொம்மையை, பெண் என்று ஒப்புக்கொள்ளத் தயாரானால், இவற்றையும் நாடகம் என்று ஒப்புக்கொள்ளத் தடையில்லை” என்று தொ. மு. சி. ரகுநாதன், தம் இலக்கிய விமரிசனம் என்ற நூலில் கூறியுள்ள கருத்து பொருந்துவதுதான். சிறந்த தமிழ்ப் பற்றாளர், சிறந்த நூலாசிரியர் என்ற பாராட்டுப் பார்வை, தவறான மதிப்பீட்டுக்கு வழியமைக்கக் கூடாது என்பதை சுந்தரம் பிள்ளையே ஒப்புக்கொள்வார்.
இதன் கதை ஒரு மூன்றாந்தரமான ஆங்கிலப் படைப்பிலிருந்து பெறப்பட்டது (லார்டு லிட்டன் என்பவர் எழுதிய தி சீக்ரெட் வே என்ற கதை). என்றாலும் இதனைச் சிறந்த காப்பியமாகப் படைத்துள்ளார் சுந்தரனார். குறிப்பாக இதில் கதைக்குள் கதையாக வரும் ‘சிவகாமியின் சரிதம்’. இதன் தத்துவப் பொருள் போன்றவை எல்லாம் ஒருபுறமிருக்க, இதைப் படிக்கும்போது, ‘அடடா! ஒரு மிகச்சிறந்த இலக்கியப் படைப்பினைச் சுவைக்கும் இரசனையை அளிக்கிறது’ என்று மனதாரப் பாராட்டாமல் இருக்க இயலாது.
மனோன்மணீயத்திற்கு சுந்தரனார் அளித்த தமிழ்த்தாய் வாழ்த்து உலகப்புகழ் பெற்றுவிட்டது. சமஸ்கிருத நூல்களுடன் ஒப்பிட்டு அவற்றின் தர்க்கமின்மையையும் சங்கநூல்களின் சிறப்பையும் சுந்தரனார் இதில் பாராட்டினாலும், சமஸ்கிருதத்தின்மீது அவருக்கு வெறுப்பு இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடையிலும் சமஸ்கிருதச் சொற்கள் சரளமாகவே வழங்கின. நமது மொழி தனிச் சிறப்புடையது என்பதை நிலைநாட்டுவதும், பெருமை கொள்வதும் சரி. ஆனால், அதற்காகப் பிறமொழி எதையும் வெறுக்கத் தேவையில்லை என்ற கருத்தை இளமையிலேயே எனக்குள விதைத்த நூல் மனோன்மணீயம். அப்படியானால் இந்த ஒப்பீடுகள் எதற்காக? நாமாக இதைச் செய்யவில்லை. நம் தலைமீது மற்றவர் ஏறி உட்காரும் போதும் அவர்களை நாம் பாராட்டிக் கொண்டிருக்கமுடியாது என்ற அரசியல் நோக்கினை அளித்ததும் இந்த நூல்தான்.
நாற்பத்திரண்டு வயதுக்குள், கல்வெட்டாராய்ச்சி, தர்க்கமுறை, அறிவியல்முறை ஆய்வுகள், நூற்பகுப்பு முறைகள், இலக்கிய ஆய்வு எனப் பலவற்றிலும் தோய்ந்து அவற்றை முறையாக வெளிப்படுத்தியவர் சுந்தரனார். தமிழ், ஆங்கிலம், தத்துவம் ஆகிய முத்துறைகளில் வல்லுநர். ஒருபுறம் சைவப் பற்றும், அக்கறையும் இருந்தாலும், ஸ்பென்சர், ஹாப்ஸ் என அவர் போற்றிய அறிஞர்களின் கொள்கைகள் சுந்தரனாரின் இன்னொரு முகத்தையும் காட்டவல்லவை. இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் மிக அரிய படைப்புகள் இவரால் தமிழுலகிற்கு மட்டுமல்ல கேரளத்திற்கும் கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.