பணி இறுதியாண்டுகளில் பார்த்த சில நிகழ்வுகள்
என் பணியில் ஏறத்தாழக் கடைசி ஆண்டுகளில் (2005) சந்தித்த, முதுகலையில் என்னிடம் படித்த இரு மாணவர்களை மறக்க முடியவில்லை. காரணம், இருவரும் மீடியாக்களில் இப்போது அடிக்கடி தென்படுபவர்கள். எங்கள் கல்லூரியிலேயே எம்.ஃபில் இருவருமே செய்தார்கள். இருவரும் பட்டிமன்றத்தில் பேசிக் கல்லூரிக்குப் புகழ் சேர்த்தவர்கள்(!), அக்காலத்தில் திருச்சியில் புகழ் பெற்றவர்கள். ஒருவன் ஈரோடு மகேஷ், மற்றவள்(ர்) பூங்குழலி. இவர்கள் ஜோடியாகத்தான் பேச்சுப் போட்டிகளுக்கும் பட்டி மன்றப் பங்கேற்புகளுக்கும் செல்வது வழக்கம். வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று சக மாணவர்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால் பூங்குழலி, கல்லூரியை விட்டு வெளியேறிய பிறகு தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளர் ஆனார். புதிய தலைமுறை சேனலில் இப்போது வாசித்து வருகிறார் என்று நினைக்கிறேன். ஏறத்தாழ தினமும் பார்க்கிறேன். ஆனால் ஈரோடு மகேஷுக்குப் படித்தபிறகு சரியான பணி அமைய வில்லை என்றுதான் தோன்றுகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு புரோகிராமில் பணிபுரிந்துவந்தான். அதில் நான் பார்த்த அளவில் வெறுமனே கைதட்டிச் சிரிப்பதுதான் அவன் வேலையாக இருந்தது. வினவில் அவனைப் பற்றி ஒருசமயம் ஏதோ “உதவுங்கள் அவனுக்கு” என்பது போல செய்திக்குறிப்பு வந்தது. பார்ப்பனியத்தை வெறுக்கும் வினவு அமைப்பு, பார்ப்பனிய ஆதரவாளனான மகேஷுக்கு எப்படிப் பரிந்துரை செய்கிறது என்ற கேள்வி தோன்றியது. பிறகு இப்போது பார்த்தால் திமுக உணவளிக்கும் போஸ்டர்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு காட்சியளிக்கிறான். வினவிலும் திமுக போஸ்டரிலும் அவன் வந்ததைப் பார்த்து எனக்கு அதிர்ச்சி. பார்ப்பனிய ஆதரவாளன் என்பதற்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. தமிழ்த்துறை வினாடிவினா நிகழ்ச்சிகளை நான்தான் நடத்துவது வழக்கம். ஒருசமயம், அப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், “எங்கள் திராவிடப் பொன்னாடே” என்ற பாடலைப் பாடியவர் யார் என்று கேட்டேன். உடனே எழுந்து “டி. ஆர். மகாலிங்க ஐயர்” என்றான். “அவரே தன்னை அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லை, போட்டுக் கொண்டதில்லையே அப்பா” என்றேன். நிகழ்ச்சி முடிந்த பிறகு தனியே வந்து “பார்ப்பனர்களின் கொடை தமிழகத்தில் மறைக்கப்படுகிறது சார்” என்றான். இல்லையே, உ.வே. சாமிநாதையர் போன்றவர்களை எவ்வளவு போற்றுகிறோம் என்றேன். இல்லை சார், சங்க காலத்திலேயே கபிலர், பரணர் போன்றவர்கள் பார்ப்பனர்கள்தானே சார். பார்ப்பனர் இல்லாமல் தமிழ் வளர்ச்சி இல்லை. நியாயமாக கோவூர் கிழார் என்று போடுவது போல கபில ஐயர், பரண ஐயர் என்றுதான் போட வேண்டும் என்றான். அடப்பாவி, இவ்வளவு விஷமா உனக்கு என்று ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டது. ஆனால் அப்படிப்பட்டவன் வினவிடம் பரிந்துரை எப்படி வாங்கினான், திமுகவில் எப்படி எப்போது சேர்ந்தான் என்றுதான் எனக்குப் புரியவில்லை. பேச்சுத்திறன் எங்கேயும் எப்போதும் எவரிடத்திலும் பாதை திறந்துவிடும் போலும்.