புனைவின் அடிப்படைகள்

புனைதல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே நம்மிடம் உள்ள சக்தி – எவரும் புனைய முடியும். ஆனால் புனைதலுக்கு நாம் முனைவதில்லை.

(புனைதல் – முனைதல்). முனைகின்றவர்கள் புனைகதையாளர்களாகவோ கவிஞர்களாகவோ ஆகின்றனர்.

எழுத ஆரம்பியுங்கள்!

புனைதலும் கலையே, புதிதாக இங்கு சற்றே

முனைதலும் கலையே, மழையில் சற்றே

நனைதலும் கலையே, புதிதாக எதையும்

வனைதலும் கலையே

என்று எழுதிக் கொண்டே போய்விடலாம்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக்குணம்.

சுருக்கம்தான் கவிதைக்கு அடிப்படை. ஹைக்கூ வடிவம் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். சுருக்கமாக, படிமங்களை நெஞ்சில் உருவாக்குவதாக இருக்கவேண்டும். சுஜாதாவின் ஹைக்கூ ஒன்று.   

‘விண்வெளிக்கு சென்று திரும்பினான்

வயதாகிவிட்டது  காதலிக்கு’

இதை அடிப்படையாக வைத்தே ஒரு கதை எழுதிவிடலாமே.

இருமை எதிர்வுகளைக் கையாளுதல் கவிதையின் அமைப்புக்கு அடிப்படை. உதாரணமாக அருணகிரிநாதர் எவ்வளவு இயல்பாக- இறைவனை வருணிப்பதில்- இருமைகளைக் கையாளுகிறார் பாருங்கள். (ஆனால் எல்லாமே எதிர்வுகள் அல்ல) 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் குகனே.

உடனே நீங்கள் எழுதத் தொடங்கலாம்–

தருவாய் தருவாய் என்று அரசாங்கம் எனைப் பிடுங்க

வருவாய் மொத்தமும் தந்து ஓட்டாண்டியாய் நிற்கிறேன்

குருவாய் நீ வரவேண்டாம் இடமில்லை வீட்டில்

தருவாய் வரியற்ற வருவாய் முருகா.

என்று எழுதிக் கொண்டே செல்லலாம்.

அண்மைகளை நிறுத்திக் கவிதை ஆக்குவதற்கு மற்றொரு உதாரணம்–

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி

உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரைக்

கூத்தாட்டுவானாகி நின்றாய்…

வெறுமனே எதிர்வுகள் அல்லது அண்மைகளை நிறுத்துவதை விட ஒரு சூழலுக்கேற்ப நிறுத்துவது மிக நல்ல கவிதையாகிறது. கூடவே ஒரு சந்தம் அமைந்துவிட்டால், ஆஹா, அற்புதம்தான்.

லிமரிக் என்ற கவிதை வடிவத்தைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா பேசியிருக்கிறார்.

ஓர் ஆங்கில உதாரணம் பார்க்கலாம்.

There was a young lady named Bright
Who travelled much faster than light,
She started one day
In the relative way
And returned on the previous night

இங்கே ஒளியைவிட வேகமாகச் செல்லக்கூடிய பொருளோ அலையோ எதுவும் இல்லை என்ற பெளதிகம் தெரிந்திருந்தால் இதன் பொருள் எளிதில் தெரியும். ரிலடிவ் வே என்பது ஐன்ஸ்டீனின் ரிலடிவிடி தியரியை நினைவுக்குக் கொண்டு வருகிறது. சுஜாதாவுடைய லிமரிக் ஒன்று.

வள்ளுவரும் மாணவராய் ஆனார்

திருக்குறளில் தேர்வெழுதப் போனார்

முடிவு வெளியாச்சு

ஃபெயிலாகிப் போச்சு

பாவம் அவர் படிக்கவில்லை கோனார்.   

நமக்குக் கவிதை எழுத குறுந்தொகை நல்ல முன்மாதிரியாக அமையும். 

யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்…

குக்கூ என்றது கோழி அதனெதிர் துட்கென்றது என் தூஉ நெஞ்சம்…

இம்மாதிரி ஒருமாதிரி சொற்களைத் தேர்ந்தெடுத்தல் கவிதைக்கு அடிப்படை. அத்துடன் உங்கள் உள்ளத்திலும் கனன்றுகொண்டிருக்கும் ஒரு நெருப்பு இருந்தால் அங்கே உயர்ந்த கவிதையே பிறந்துவிடும்.

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்…

கவிதைக்கு யாப்பு கண்டிப்பாகத் தேவை. ஆனால் அது கவிதைக்கு இசைந்ததாகத் தானாக வரவேண்டும். உதாரணமாக ஞானக்கூத்தன் கவிதை ஒன்று. வழக்கமான நான்குசீர் பாணியிலிருந்து மாறி மூன்று சீர் அடி என்ற பாணியை எவ்வளவு ஜாலியாகக் கையாளுகிறார் பாருங்கள்.   

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறத் தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனை பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனை பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

யாப்பு என்பதற்காக மட்டும் இதை மேற்கோள் காட்டவில்லை. இதிலுள்ள நயமான அங்கதத்தை இரசிக்க வேண்டும்.

இப்போது கவிதைக்கு மிகவும் அடிப்படையாகத் தேவையான மற்றொரு பண்பை அடைகிறோம். அங்கதம்.

அலெக்சாண்டர் போப் என்று ஒரு ஆங்கிலக் கவிஞர். The Rape of the Lock என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஒரு சிறு விஷயத்தைக் காவிய நடையில் எழுதிய கவிதை இது. பெலிண்டா என்ற உயர்குலப் பெண்ணின் தலைமுடிச் சிறுகற்றை ஒன்றை ஒரு பிரபு வெட்டித்திருட முயற்சி செய்கிறான். அதுதான் ரேப் ஆஃப் தி லாக்.

அதனால் கவிதைகள் எல்லாமே அங்கதமாகத்தான் இ்ருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஞானக்கூத்தன் அப்படிப்பட்ட கவிதைகளை நிறைய எழுதியிருக்கிறார். பொதுவாக ஒரு நல்ல மனச்சித்திரம் இருந்தாலே ஒரு கவிதை ஆகிவிடும். உதாரணம். கிணற்றில் விழுந்த நிலவு. வைத்தீஸ்வரனுடைய கவிதை. முதல் கவிதை.

கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு

நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு

மணக்கும் அவள் உடலை மணல்மீது தோயவிடு… என்று செல்கிறது அந்தக் கவிதை.

இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், யாப்பு, எதுகை, மோனை, சந்தம் எவ்வளவு இயல்பாக அமைகின்றன என்பது.

இதைச் சொல்லும்போது கவிஞர் சி. மணி எழுதிய நரகம் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. மூன்று மூன்று அசையாக அவர் எழுதும் காட்சி சுவையானது.

உள்ளங்கைக் கோடுகள் / இருளில் மறையும் வேளை / தந்த துணிவு செங்கையை / உந்த நின்ற தையலர் / தலைவன் வரவும் சற்றே / உயரும் தலைவி விழியாக / மறைக்கும் சேலை சாண்தூக்கி / காக்கும் செருப்பை உதறிவிட்டு…

இப்படி இயல்பான யாப்புடன் எழுதுவதுதான் நமது பாரம்பரியம். ஆனால், பாவம் சி.சு. செல்லப்பா பாராட்டிய நல்ல கவிஞர்கள் பெரும் இழித்துரைப்புக்கு ஆளானார்கள். மாறாக ராஜவீணை ராஜ ராகம் இசைக்கிறது என்றெல்லாம் அடுக்கிய வெற்றுச் சொற்றொடர்கள் கவிதைகளாகக் கருதப்பட்டு அந்தப் பாரம்பரியம் வைரமுத்து வரை தொடர்கிறது.

கவிதை எழுதுவது ஈசியா, உரைநடை–சிறுகதை எழுதுவது ஈசியா? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வடிவம் கைவருகிறது. இந்த இரண்டுமே கைவந்தவர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் கவிதைகளை அநேகமாக யாரும் கண்டுகொள்வதில்லை.

      “வேதம் படித்திடுவோம் வெறுங்கை முழம் போட்டிடுவோம்

                சாதத்துக் காகச் சங்கரனை விற்றிடுவோம்!

                ஆத்தனைக்கும் மேலல்லோ அஹிம்சைக் கதைபேசி

                வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்!

என்று அந்தக் காலத்திலேயே பாடியவர் புதுமைப்பித்தன். வேளூர் கந்தசாமிப் பிள்ளை என்ற பெயரில் எழுதிய அவரது மகாகாவியம், ஓடாதீர், இருட்டு போன்ற கவிதைகளைப் படித்தால் ஏளனமும் கிண்டலும் எப்படி யாப்புடன் வந்து அணி செய்கின்றன என்பதைக் காணலாம். உதாரணமாக, ஓடாதீர் என்ற கவிதை.

சொல்லுக்குச் சோர்வேது, சோகக் கதை என்றால் சோடி இரண்டு ரூபாய் காதல் கதை என்றால் கைநிறையத் தரவேணும் ஆசாரக் கதை என்றால் ஆளுக்கு ஏற்றது போல், பேரம் குறையாது–பேச்சுக்கு மாற்றில்லை…

என்று வளர்த்துக் கொண்டுபோய், “காசை வையும் கீழே, பின் கனவுதனை வாங்கும்” என்று கொண்டுசெல்கிறார்.

அது என்னவோ, சிறுகதையாசிரியர்கள் பலருக்கும் கவிதைமீது ஒரு காதல். ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் போல சிறு கவிதைகளை முயன்றுள்ளார். உதாரணமாக, ஒரு சிறிய கவிதை இது.

கைகேயி கெட்டவள் அல்ல, கூனிகூடக் கெட்டவள் அல்ல,

காடுவரை போனவனைப் பாதிவழிபோய் மறித்து

பாதுகையைப் பறித்துவந்தான் பரதனே பாவி…

கடைசியாக, கதை எழுதுவதைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியுமா? அதைப் பற்றியும் ஒரு சிறு மேற்கோளோடு முடித்துக்கொள்கிறேன்.        

சிறுகதை எழுதுவது எப்படி என்பதைப் பற்றி சுஜாதா சொன்னார்.    

முதல் வரியிலேயே  வாசகனை கவருங்கள். தலையில்லாத ஒரு ஆள் தெருவில் நடந்து வந்தான் என்று ஆரம்பியுங்கள். அடுத்தவரியில் தலை என்றா சொன்னேன்.. தப்பு.. ஒரு விரல்தான் இல்லைஎன்று மாற்றிக் கொள்ளுங்கள். அதைவிடுத்து, ‘சார் தபால் என்ற குரலைக் கேட்ட சர்மா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு…’ என்று ஆரம்பித்தால், படிப்பவன் அடுத்தபக்கத்துக்குத் தாவிவிடுவான்.

எதிர்ப்படும் எல்லாரிடமும் கதை உண்டு. அதை உணருங்கள். உங்களைப் பார்த்ததும் சௌக்கியமா என்று கேட்கிறான். முழுசாக நின்று கொண்டிருக்கிறீர்கள். அது என்ன சௌக்கியமா என்று கேள்வி என்று யோசித்து நூல் பிடித்தால், கதை பிறந்துவிடும்.

கடைசியாக, இதோ சிறுகதை எழுதுவதைப் பற்றி–எதை எழுத வேண்டும் என்பதைப் பற்றிப் புதுமைப்பித்தன் சொல்கிறார் கேளுங்கள்.

“இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் – இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை”  ஆகவே நேராக மனத்தில் பட்ட உங்கள் அனுபவங்களை அப்படியே எழுதுங்கள். செயற்கையாகக் கதையையோ கவிதையையோ செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டு முடித்துவிடுகிறேன்.

இலக்கியம்