பீமாயணம்

இராமாயணம் பற்றி அனைவரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். பீமாயணம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இராமாயணம் இராமனின் கதை என்றால், பீமாயணம் பீம் (பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்) என அழைக்கப்படும் பீமனின் கதை.

புனைவுகள் எதுவுமின்றி ஒரு யதார்த்தக் கதையையும் உருவாக்க இயலாது என்பது எழுத்தின், படைப்பின் அடிப்படை விதி. ஒரு வாக்கியத்தை அமைத்த உடனே புனைவு வந்து அதற்குள் புகுந்து கொள்கிறது. எழுத்தின் இயல்பு அப்படி. சித்திரக் கலையும் அதனுடன் சேர்ந்தால்…? சொல்லவே வேண்டியதில்லை. (நிழற்படம், திரைப்படமாயின், கேமிராவைக் கையாளத் தொடங்கிய கணத்திலிருந்தே அது புனைவுதான்.) அந்த விதத்தில் அம்பேத்கரின் “சரித்திரத்தைச்” சொல்லும் இதையும் புனைவாகவே கருத வேண்டும் என்பதை முக்கியமாக எழுத்தை வைத்துப் பிரச்சினை செய்யும் சில பேருக்காகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு கிராஃபிக் நாவல். அதாவது சிறார்களுக்குச் சொல்வது போல, காமிக் வடிவத்தில், படங்களைக் கொண்டு, குமிழி வடிவ அடைப்புகளுக்குள் கதையைச் சொல்லுகின்ற அமைப்பு. இதன் கிராஃபிக் பகுதிகளை உருவாக்கியவர்கள் துர்காபாய் வியம், சுபாஷ் வியம் ஆகியோர். இதனை எழுதியவர்கள் ஸ்ரீவித்யா நடராஜன், எஸ். ஆனந்த் ஆவர். (ஸ்ரீவித்யா தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.) இது 2011இல் வெளியிடப்பட்டு உடனே அனைத்துலகப் புகழ் பெற்றது.

நூல் நான்கு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. புத்தகம் 1 – நீர்புத்தகம் 2 – உறைவிடம்புத்தகம் 3 – பயணம்புத்தகம் 4 – பீமாயணத்தின் கலை என்பன அவை. “என்னடா இந்த இட ஒதுக்கீடும் கோட்டாவும்” என்று சலித்துக் கொள்ளும் ஒருவரிடம் விவாதத்தில் ஈடுபடுகிறார் மற்றொருவர் என்று கதை தொடங்குகிறது. “நீ போய் அம்பேத்கரைப் பற்றிப் படி, கயர்லாஞ்சியில் நடந்ததைப் பற்றி அறிந்துகொள்” என்கிறார் அடுத்தவர்.

புத்தகம் 1 – நீர்

1901இல் நிகழ்ந்தது. மஹர் இனத்தைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுவன் அம்பேத்கருக்கு பள்ளியில் பொதுக்குழாயில் நீர் அருந்துவது மறுக்கப் படுகிறது. இத்தனைக்கும் மற்றொரு ஊரின் குடிநீர்த் தேவைக்காக அம்பேத்கரின் தந்தை குடிநீர்த்தொட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்!

தந்தையிடம் குடும்பம் இடம்பெயர்ந்து செல்கிறது. இரயிலிலிருந்து இறங்கிய அம்பேத்கருக்கு ஸ்டேஷன் மாஸ்டர் இருமடங்கு கட்டணம் வாங்கிக் கொண்டு அவர் தந்தை இருக்குமிடத்திற்கு வண்டி தருகிறார். பின்னர் அவ்வூர் நீர்த்தொட்டியில் தீண்டப்படாதவர்களுக்கு நீரில்லை என்று மறுத்ததற்காக மஹர் சத்யாக்கிரகத்தில் ஈடுபடுகிறார், அம்பேத்கர்.

புத்தகம் 2 – உறைவிடம்

இந்தப் பகுதி 1917இல் நிகழ்கிறது. வெளிநாட்டில் படித்த அம்பேத்கர் பரோடா மகாராஜாவுக்காகப் பணிபுரிய பம்பாய் வருகிறார். இந்து ஹோட்டல்களில் அவருக்கு உணவு மறுக்கப்படுகிறது. தங்குமிடம் மறுக்கப்படுகிறது. பாழடைந்த ஒரு பார்சி சத்திரத்தில் தங்குகிறார், அங்கிருந்தும் ஓரிரு நாட்களில் துரத்தப்படுகிறார். அவர் தோழர்களும் அவரைத் தங்கவைக்கத் தயாராக இல்லை. சாக்குப்போக்குச் சொல்கின்றனர். தலித் மக்களுக்குத் தங்க இடம் கொடுக்கலாகாது என நகர்ப்புறங்களிலும் நிலவும் தீண்டாமை!

புத்தகம் 3 – பயணம்

இப்போது காட்சி 1934க்கு அவுரங்காபாதிற்கு மாறுகிறது. மஹர்களுடனும் பிற தீண்டப்படாதவர்களுடனும் அம்பேத்கர் ஒரு போராட்டத்திற்கென தவுலதாபாதிற்குச் செல்கிறார். அப்போது ஐந்தாண்டுகளுக்கு முன் தான் பம்பாய்க்கு சாலீஸ்காவ் என்ற கிராமத்தில் உறவினர்கள் வீட்டிலிருந்து சென்ற பயணத்தை நினைவுகூர்கிறார். மஹர்களுக்குக் குதிரைவண்டி ஓட்டமாட்டோம் என்று வண்டிக்காரர்கள் மறுப்பதால் ஒரு மஹர் ஆளே வண்டி ஒன்றை ஓட்ட, அது விபத்துக்குள்ளாகிறது. உயர்கல்வி பெற்றபுகழ்பெற்ற மனிதர் ஒருவருக்குக்கூடஅவர் தலித்தாக இருந்தால் பயணம் செய்வதும்மருத்துவ உதவி பெறுவதும் எளிதல்ல என்ற கசப்பான உண்மை அவருக்குள் உறைக்கிறது. தவுலதாபாத் வந்தவுடன், அங்கு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் பொது நீர்த்தொட்டியின் நீரை அருந்தலாகாது என்று அங்குள்ள முஸ்லிம்கள் தடுக்கின்றனர். (தீண்டாமை விஷயத்தில் முஸ்லிம்களும் இந்துக்கள் போலத்தான் நடக்கின்றனர்.)

அம்பேத்கரின் போராட்டங்கள், சமூகப்பணி, அரசியலமைப்பை உருவாக்கியதில் அவரது பங்கு இவற்றை எடுத்துரைத்து இந்தப்பகுதி முடிகிறது.

புத்தகம் 4 – பீமாயணத்தின் கலை

கோண்டு என்ற பழங்குடி மக்களின் சித்திரக்கலை இதில் பயன்படுத்தப் பட்டுள்ளது. துர்காபாய், சுபாஷ் வியம் ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் அம்பேத்கரின் முக்கியத்துவம் பற்றியும், முன் இயல்களில் பயன்படுத்திய கோண்டு கலைவடிவம் பற்றியும் சொல்கின்றனர்.

கோண்டு இன மக்களின் கலை சமுதாயம் சார்ந்தது என்பதையும் அதனை நம் போன்ற பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் விளக்குகிறார் ஆனந்த். இக்கதையின் உருவாக்கத்தில் இதன் திறன்மிக்க வெளிப்பாட்டுக்காக துர்காபாயும், சுபாஷும் எடுத்துக் கொண்ட சிறுசிறு உரிமைகளையும் மீறல்களையும் எடுத்துச் சொல்கிறார். (திரு. ஞானவேல் அவர்களுக்கு!). இறுதியாக இன்னமும் சாதிப்பாகுபாடு கோலோச்சுகின்ற, மனிதர்கள் மாற மறுக்கின்ற நம் நாட்டில் சாதிசார்ந்த எடுத்துரைப்புகளின் தேவையையும் எடுத்துக்கூறி, இறுதியாக ஜெய்பீம்!” என முழங்கி முடிக்கிறார்.

இந்நூலின் படிமஆக்கம் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. நீர் உரிமை பற்றிய முதல் இயலில், நீர் அடிப்படையிலான படிமங்களே பெருமளவு இடம்பெற்றுள்ளன. தனித்த டிக்னா (கோண்டு கலையின் ஒரு பகுதி) வகைச் சித்திரங்கள் ஆளப்பட்டுள்ளன. கதையைச் சொல்லும் குமிழி வடிவ அமைப்புகள் கூட கதைத்தன்மைக்கேற்ப உள்ளன. உதாரணமாக, இளம் பீம் பேசும் பகுதி மயில் தோகை வடிவக் குமிழிக்குள் அமைந்துள்ளது. காவலாளின் வசைப்பகுதி வரும்போது தேளின் கொடுக்கு வடிவத்தில் அது அமைகிறது. இப்படி இதன் படிமக் கலை, எடுத்துரைப்பில் இருந்து பிரிக்கவே முடியாத விதத்தில் அமைந்துள்ளது. பார்த்து, வியந்து பயன் பெறுங்கள் என்றுதான் கூற முடியும்.

இதனைப் புத்தகம் என்று சொல்வது குறுக்குவதாக முடியும், இது விதிவிலக்கான தலைவர் ஒருவரைப் பற்றிய, திகைக்கச் செய்யும் கலையினால் ஆன்மாவைத் தூண்டும் தன்மையுடைய வரலாறு” என்று தி இந்து ஆங்கில நாளிதழ் மதிப்பிட்டுள்ளது. “இறப்பதற்குமுன் படிக்க வேண்டிய 1001 காமிக்குகளில் இது ஒன்றாகும்” எனப் பாராட்டியுள்ளார், பால் கிரவெட் என்னும் இதழியலாளர், கலைஞர். பல பல்கலைக் கழகங்களில் இளங்கலைப் படிப்புக்குப் பாடமாகவும் இது உள்ளது. இணையதளத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இலவசமாகக் கிடைக்கிறது. வேண்டுபவர் இறக்கம் செய்துகொள்ளலாம். ஜெய் பீம்!

இலக்கியம்