பாஸிசம்

லாரன்ஸ் பிரிக் எனும் அரசியல் அறிஞர் பாஸிசம் என்றால் என்னவென்று பதிநான்கு கூறுகளாய்ப் பிரித்து நமக்கு விளக்குகிறார், அவை என்னவென்று பார்க்கலாம்.

1) அதீத தேசியவாதம்.
அதாவது நாடுதான் எல்லாமும் எனப் பேசுவது, நாடுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று பேசுவது, அது தேசப்பற்று என்பதை மிஞ்சி அடுத்தவர் மீதான வன்முறை என்று மாறிப்போவது.

2) மனித உரிமை மறுப்பு.
அதிகாரத்தில் இருப்பவர் தம்மைக் காத்துக் கொள்ள மனித உரிமையற்ற சூழலை உருவாக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, அதிகாரத்தில் இருப்பவர் எவரும் வன்முறையைக் கையில் எடுக்கலாம் என்பது போல.

3) பொது எதிரி என்கிற கற்பனையை உருவாக்குவது, அதாவது மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பாமல் இருக்க குற்றமே செய்யாத சம்பந்தமே இல்லாத ஒரு பிரிவினரை நாட்டுக்கே எதிரியென சித்தரிப்பது, அந்த எதிரி என்கிற ஒன்று ஒரு இனமாகவோ மதமாகவோ நாடாகவோ இருக்கலாம்.

4) ராணுவத்தின் அதிகாரம்.
அதாவது நாட்டின் பொருளாதாரம் பெருமளவு ராணுவத்திற்கே செலவழிக்கப்படும். அந்த ராணுவமும் வெளிநாட்டினருடன் போரிடுவதை விட உள்நாட்டு மக்களை கட்டுப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்குமே அதிகமாக பயன்படுத்தப்படும்.

5) ஆணாதிக்கம்.
அதிகாரத்திலிருப்பவர் அனைவரிடமும் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும். அதிகாரத்தில் பெண் அமர்த்தப்பட்டாலும் அவர் ஆணாதிக்கத்தைத் தூக்கிச் சுமப்பவர்களாகவே இருப்பார்.

6) ஊடகங்களில் அரசின் தலையீடு.
அரசிற்கு சாதகமாகவே ஊடகங்கள் செயல்படும் அல்லது செயல்படுத்தப்படும்.

7) தேசப் பாதுகாப்பு என்ற அச்சம்.
அதாவது தேசத்திற்கு பாதுகாப்பில்லை என்கிற ஒரு அச்சத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டேயிருப்பது. அதன் வழியே அரசு செய்யும் எல்லா செயல்களுக்கும் மக்களிடம் ஆதரவைத் திரட்டிக் கொள்ளுவது.

8) மதமும் அரசும் ஒன்றாக இருக்கும். அதாவது குறிப்பிட்ட மதத்தின் ஆதிக்கம் அரசில் அதிகமாக இருக்கும். அரசிலிருக்கும் அமைச்சர்கள் அதிகாரிகள் தம் பெரும்பான்மை மதத்தையே முன்னிருத்தி அரசியல் செய்வர். அரசின் குறைபாடுகள் எல்லாமும் மதம் என்கிற போர்வையால் மூடி மறைக்கப்படும்.

9) முதலாளிகள் பாதுகாக்கப்படுவர். அதாவது தொழிலதிபர்கள் முதலாளிகளின் சொகுசு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பையும் அரசு ஏற்படுத்தாது, அவர்களை முதற் கடமையாக பாதுகாக்கும். அவர்கள் மக்களைச் சுரண்ட அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

10) உழைக்கும் சக்தி ஒடுக்கப்படும். அதாவது தொழிலாளர் நலன் நசுக்கப்படும். தொழிலாளர்கள் சங்கங்கள் அழிக்கப்படும். தொழிலாளர்கள் அரசியல் சக்தியாக உருவாவதை அரசு முறியடிக்கும்…

11) அறிவு மறுக்கப்படும்.
அதாவது அரசு விரும்பும் கல்வி மட்டுமே அனுமதிக்கப்படும், அதை எதிர்க்கும் அறிஞர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள், கலைகளும் ஒடுக்கப்படும்…

12) தண்டனைகள் மீதான ஆர்வம். அதாவது பாஸிஸ ஆட்சியில் காவல்துறைக்கு கட்டுமீறிய அதிகாரம் வழங்கப்படும். தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட முன்னுரிமைகள் வழங்கப்படும். நியாயமான கோரிக்கைகள் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படும்.

13) ஊழல்.
அதாவது முதலாளிகளுக்கு ஏதுவான வழிமுறைகள் தங்கு தடையின்றி திறந்துவிடப்படும். முதலாளிகளுக்கு ஆதரவானவர்களே அதிகாரங்களில் நியமிக்கப்படுவர்.

14) முறைகேடான தேர்தல்கள்.
அதாவது பாஸிசம் பரவும் நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் முறைகேடுகள் மிகுந்திருக்கும். மாற்றுக் கட்சித் தலைவர்கள் கொல்லப்படுவர் அல்லது சட்டம் வளைக்கப்படும் அல்லது வாக்கு எந்திரங்கள் திருடப்படும் குளறுபடியாகும், வாக்கு எண்ணிக்கை பொய்யாக சொல்லப்படும்.

இந்த 14 விஷயங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இந்த 14 விஷயங்களும் உங்களுக்கு பரிச்சயமானதாகத் தோன்றுகிறதா என யோசியுங்கள்.

பரிச்சயமானது போல் தோன்றினால் குறித்துக் கொள்ளுங்கள் உங்களையும் முசோலினி போன்ற ஒரு பாஸிஸ்டே ஆண்டு கொண்டிருக்கிறார் என்று.
ஏனென்றால் பாஸிசம் மக்களின் ஆதரவின்றி வளர்வதில்லை.

சமூகம்