பாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்

baaradhidasan1-756x1024பாரதிதாசன் புதுமைக் கவிஞர், புரட்சிக் கவிஞர் எனப்பட்டாலும், மரபில் அவருக்கு மட்டற்ற மரியாதை உண்டு. எல்லா நல்ல கவிஞர்களையும் போலவே இலக்கண நூல்களையும் நன்கு கற்றறிந்து அவற்றைக் கையாளவும் மீறவும் செய்தவர் அவர். அவர் தொல்காப்பியம் சொல்லும் சில இலக்கியக் கருவிகளையும் இலக்கிய வகைகளையும் மிக அருமையாகப் பயன்படுத்தியுள்ளார்.

தொல்காப்பியம்:

தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகக் கருதப்பட்ட போதிலும், பழந்தமிழ் இலக்கியக் கொள்கையை அறிந்துகொள்வதற்குப் பேருதவி செய்யும் கருவூலமாகத் திகழ்கிறது. தொல்காப்பியர் தம் காலத்துக்கு முன்னர் வழங்கிவந்த கொள்கைகளையும் நன்கறிந்து தம் நூலை எழுதியுள்ளார். தொல்காப்பிய எழுத்து, சொல் அதிகாரங்கள் மொழியமைப்பினை விளக்குகின்றன என்றால், பொருளதிகாரம், இலக்கிய அமைப்பினை விளக்குகிறது (அக்கால இலக்கியம் கவிதைவடிவில்தான் அமைந்திருந்தது).

இலக்கிய நெறி:

தொல்காப்பியர் இலக்கிய நெறியினை நாடக வழக்கு, உலகியல் வழக்கு, புலனெறி வழக்கு என மூன்றாகப் பகுக்கின்றார். வழக்கமாக இந்த நூற்பாவுக்கு நாடக வழக்கும் உலகியல் வழக்கும் ஆகிய இரண்டும் சேர்ந்த புலனெறி வழக்கு என்று பொருள் கொள்வார்கள். அவ்வாறன்றி, மூன்று வழக்குகளை அவர் கூறுவதாகவே நாம் கொள்ளமுடியும்.

நாடக வழக்கு என்பது முற்றிலும் கற்பனை சார்ந்து கவிஞரால் படைக்கப்படும் படைப்புகளைக் குறிக்கும் எனலாம்.

உலகியல் வழக்கு என்பது யதார்தத நோக்கில் உலகில் காணப்படும் உண்மை நிகழ்வுகளைக் கவிஞர் படைப்பவை.

புலனெறி வழக்கு என்பது அறிவுசார்ந்த படைப்புகளை, அகவுலகு சார்ந்த படைப்புகளை என இரண்டையும் குறிப்பவை எனலாம்.

புலன் என்பதற்கு அறிவு என்னும் பொருளும் உள்ளது. ஐம்புலன்கள் போன்ற சொல்லாட்சிகளில், மனவுணர்வை உருவாக்குகின்ற, உணர்ச்சிகளை அளிக்கின்ற, வெளியுலகை அறிய உதவுகின்ற நமது ஐவகை அகப்புலன்களைக் குறிப்பதாகவும் இச்சொல் அமைகிறது.

பொருளும் வடிவமும்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் முதல் ஐந்து இயல்களும் கவிதைப் பொருளைப் பற்றியவையாகவும், பின் நான்கு இயல்களும் படைக்கும் முறையைக் கூறுகின்றனவாகவும் அமைகின்றன. கவிதைப் பொருளை அகம்-புறம் என்ற இரு பரந்த தலைப்புகளில் அடக்கியது தொல்காப்பியரின் நுண்ணறிவைக் காட்டுகிறது. இது பிற மொழிகளில் காணப்படாத ஒரு பகுப்புமுறை.

அறம்பொருள்இன்பம்

கவிதையின் இலக்கினைப் பற்றிக் கூறும்போது, “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு” (பொருள்.89) என்றவாறு மூன்றாகக் கூறுகின்றார். இந்த முறையைத்தான் திருவள்ளுவரும் பின்பற்றுகின்றார். தர்மார்த்த காம மோட்சம் என்ற நால்வகை வடநெறிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

கவிதைப் பாத்திரங்கள்

அகப்பொருள் மாந்தர்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடுபவர்களை ஒருசார் வடமொழி நாடகப் பாத்திரங்களோடு ஒப்பிடலாம். தமிழில் வில்லன் என்ற பாத்திரமோ, விதூஷகன் என்ற பாத்திரமோ கிடையாது. இது தொல்காப்பியரின் யதார்த்த நோக்கினைக் காட்டுகிறது. எல்லா மனிதர்களுக்குள்ளுமே தீய பண்புகள் உள்ளன. அவற்றைத் தனியே வில்லன் என்ற பாத்திரத்தின் வாயிலாக வடிவமைக்கத் தேவையில்லை. அதேபோல எல்லாருக்குமே நகைச்சுவைப் பண்பு உள்ளது. தனியாக விதூஷகன் என்ற காமெடிப் பாத்திரம் தேவையில்லை. தலைவன், தலைவி, தோழன், தோழி முதலியவை எல்லாம் (பணக்காரன், தச்சுத்தொழிலாளி என்பதுபோல) வாழ்க்கை நிலையைப் பற்றியவையே தவிர குணத்தைப் பற்றியவை அல்ல.

இந்தந்த சந்தர்ப்பங்களில் இவர்கள் பேசவேண்டும், இன்னவாறு உரையாட வேண்டும் என்று குறிப்பிடுவதிலிருந்து மேற்கண்ட கருத்துகள் புலனாகின்றன. இருப்பினும் நாடக மாந்தராகப் படைக்கும்போது அவர்களுக்கும் சில பண்புகளைத் தர வேண்டியிருக்கிறது என்பதால் மெய்ப்பாட்டியலில் தலைவன் தலைவி பண்புகளை மட்டும் குறிப்பிடுகிறார். அதேபோல தமிழ் மாந்தர் வாழ்க்கையில் தெய்வ்ங்கள் குறுக்கிட்டுச் செயல்புரிவதாக (கிரேக்க, வடமொழி இலக்கியங்களில் காட்டப்படுவது போல) எங்கும் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.

கவிதைப் பொருள், வடிவம் என இரண்டாகப் பகுத்தது மட்டுமன்றி, வடிவத்தைக்குறிக்கும் நான்கு இயல்களில் யாப்பை வலியுறுத்திச் செய்யுளியலைத் தொல்காப்பியர் அமைத்துள்ளார். இதுதான் பொருளதிகாரத்தில் மிகப் பெரிய இயல் என்பதால் யாப்பு வடிவத்திற்கு எவ்வளவு மதிப்பளிக்கின்றார் தொல்காப்பியர் என்பது புலனாகிறது.

இலக்கிய வகைகள்:

baaradhidasan2பாட்டு உரை நூல் வாய்மொழி பிசி அங்கதம் முதுசொல் என்ற எழுவகைகளைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இவற்றுள் முதலிரண்டின் வாயிலாகப் படைப்புகள் படைக்கப்படும் என்பது குறிப்பு. பாட்டின் (கவிதையின்) வாயிலாகவோ, உரைநடையின் வாயிலாகவோ இலக்கியம் படைக்கப்படலாம். நூல் என்பது எழுத்து வழக்கையும், வாய்மொழி என்பது பேச்சு வழக்கையும் குறிக்கின்றன. இவை ஊடகங்கள். பிசி அங்கதம் முதுசொல் என்பவை படைப்புகளில் பயன்படுத்தப் படவேண்டிய இலக்கியக் கருவிகள்.

பண்ணத்தி என்று தொல்காப்பியர் குறிப்பிடு வதை நாம் இக்காலத்தில் பாட்டு (song) என்கிறோம். அவர் பாட்டு என்று குறிப்பிட்டதை இக்காலத்தில் கவிதை (Poetry)என்கிறோம். பண்ணத்தி (பாட்டு) என்பது இசைத் துறைக்குரியது. அக்காலத்தில் பாட்டு என வழங்கப்பட்ட கவிதை, பார்வை வாயிலாகப் படித்துணர வேண்டிய ஒன்று. அது இசைக்குரியதல்ல.

மொழிபெயர்ப்பு:

மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்” என்று மொழிபெயர்ப்புப் பற்றித் தொல்காப்பியர் உரைக்கிறார். பாரதிதாசனின் நல்ல மொழிபெயர்ப்புக் குறுங்காவியம், புரட்சிக்கவி. இது பில்கணீயம் என்னும் வடமொழிக் கதையைத் தழுவிப் படைக்கப்பட்டுள்ளது. பில்கணீயம் காஷ்மீரில் கி.பி. 11ஆம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டது என்பர். இதனைத் தமிழில் ஜம்புலிங்கம் பிள்ளை என்பவர் மொழி பெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பை அடியற்றியே பாரதிதாசன் தமது நூலைப் படைத்தார்.

இலக்கியக் கருவிகள்:

வண்ணம் வனப்பு போன்றவை தொல்காப்பியர் கூறும் இலக்கியக் கருவிகள் (உத்திகளும் அவை போன்றவையும்) ஆகும். இவற்றைச் செய்யுள் உறுப்புகள் என்று அக்காலத்தில் கொண்டனர். அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு ஆகியவை ஒவ்வொரு வகை இலக்கியக் கருவி எனவே கொள்ளுதல் தகும்.

தொன்மை என்பது பழங்காலக் கருப்பொருள்களை எடுத்துப் பயன்படுத்து வதாகும். இக்கால நூலாசிரியர்கள் இராமாயண, மகாபாரதக் கருப்பொருள்களைப் பயன்படுத்துவது போன்றது. சான்றாக, பாரதியார் மகாபாரதக் கதையின் ஒரு சிறு பகுதியை எடுத்துப் பாஞ்சாலி சபதமாகப் படைத்தது தொன்மை என்ற கருவியின் பாற்படும். இவ்வாறே வண்ணம் என்பதும் பலவகை இலக்கியக் கருவிகளைக் காட்டுகின்ற பகுப்பாகும்.

இவை தவிர, நோக்கு, மெய்ப்பாடு, முன்னம், உள்ளுறை, இறைச்சி போன்றவையும் இலக்கியக் கருவிகளே என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிதாசன்-தொன்மைப் படைப்புகள் நான்கு:

      தொன்மைதானே சொல்லுங்காலை

      உரையடு புணர்ந்த பழமை மேற்றே

என்பது தொல்காப்பிய நூற்பா. முன்பே பாஞ்சாலி சபதத்தை பாரதியார் வரைந்தது தொன்மை என்ற இலக்கியக் கருவியைக் கையாளுவதன்பாற்படும் என்று கூறினோம். பாரதிதாசனின் படைப்புகளிலும் தொன்மை என்னும் இலக்கியக் கருவி சிறப்புறக் கையாளப்படுகிறது. பிசிராந்தையார், சேரதாண்டவம், கண்ணகி புரட்சிக்காப்பியம், மணிமேகலை வெண்பா போன்றவை தொன்மையைத் தழுவியவை. பாரதிதாசனுக்கு வடமாழிப் புராணக் கதைகளில் உடன்பாடு இல்லை என்பதால், தமிழ்த் தொன்மங் களை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்.

பிசிராந்தையார் சங்க காலப் புலவர். பாண்டியன் அறிவுடை நம்பியின் அவையில் கவிஞராக விளங்கியவர். கோப்பெருஞ்சோழனின் இதயம் கவர்ந்த நண்பர். ஒருவரையருவர் பார்க்காமலே கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் உயர்ந்த நட்புப் பூண்டிருந்தனர். (இந்தத் தொன்மத்தைக் காதலுக்குப் பொருத்தி ஒருவரை ஒருவர் காணாமலே காதல் கொள்வதாக இக்காலத் திரைப்படங்களில் பயன்படுத்துகின்றனர்.) இந்தக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது பிசிராந்தையார் என்னும் நாடகம்.

ஆட்டனத்தி என்ற அரசனுக்கும், ஆதிமந்தி என்னும் அரசகுலப் பெண்ணுக்கும் இடையில் எழுந்த காதலை அடிப்படையாகக் கொண்டது சேரதாண்டவம். சிலப்பதி காரத்தில் காணப்படும் சில குறிப்புகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது இந்த நாடகம். ஆனால் அடிப்படையில் ஒரு தவறு இருக்கிறது. ஆட்டன் என்று நாட்டியம் ஆடுபவர்களைப் பழங்காலத்தில் குறிப்பதில்லை. (கூத்தர் போன்ற சொற்களால் குறித்தனர்). ஆட்டன் என்பது நீர்விளையாட்டில் ஈடுபடுபவர்களைக் குறிக்கும் சொல். நீரில் ஆடிய கதைத்தலைவன் அத்தி, வெள்ளநீரில் இழுக்கப்பட்டுச் செல்வதாகச் சிலப்பதிகாரக் குறிப்பு அமைகிறது. (சேரதாண்டவம், பிறகு மன்னாதி மன்னன் என்ற தலைப்புக் கொண்ட திரைப்படமாக ஆக்கப்பெற்றது.)

கண்ணகி புரட்சிக் காப்பியத்தில் சிலப்பதிகாரக் கதையிலுள்ள பகுத்தறிவுக்குப் பொருந்தாத கற்பனைகளை விலக்கிக் கண்ணகி கோவலன் வரலாற்றை 95 இயல்களும் 281 எண்சீர் விருத்தங்களும் கொண்ட குறுங்காப்பியமாக இயற்றியுள்ளார். சான்றாக, கண்ணகி வானுலகம் புகுந்து தெய்வமானதாக பாரதிதாசன் படைக்கவில்லை. மலையேறி வந்து இறக்கின்ற அவள் உடலைக் குறவர் புதைக்கின்றனர். அவள் கதையை மலைவளம் காணவந்த செங்குட்டுவனுக்குக் கூறுகின்றனர். இம் மாதிரிப் பகுத்தறிவுக்கேற்ற வகையில் கதையை பாரதிதாசன் மாற்றியமைக்கிறார்.

இரட்டைக் காப்பியக் கதைகளில் மற்றொன்று மணிமேகலையின் கதை. இதனையும் மணிமேகலை வெண்பா என்னும் தலைப்பில் ஒரு குறுங்காவியமாக்கியுள்ளார். பழைய மணிமேகலைக் காப்பியம் இந்திர விழாவில் தொடங்குகிறது. மணிமேகலை வெண்பா, பொன்னிவிழாவில் தொடங்குகிறது. வடமொழிப் புராணக் கதைகளை இந்த நூலிலும் தவிர்க்கிறார்.

இம்மாதிரித் தம் படைப்புகளில் தொன்மை என்னும் இலக்கியக் கருவியைச் செம்மையாக பாரதிதாசன் பயன்படுத்தியுள்ளார்.

புதுமைப் படைப்புகள்-விருந்து:

விருந்தே தானும், புதுவது புனைந்த யாப்பின் மேற்றே (பொருள். 540)

என்பது தொல்காப்பியம். விருந்து என்றால் புதுமை. புதியதாகப் புனைந்து பாடுவது விருந்து என்னும் இலக்கியக் கருவியின் பாற்படும். புதிய பொருளோ, யாப்போ, வடிவமோ அனைத்தும் விருந்து என்பதில் அடங்கும். பாரதிதாசன், அனைத்து நல்ல கவிஞர்களையும்போலவே, புதியதாகக் கற்பனையில் புனைந்து பாடுவதிலும் கவனம் செலுத்தியுள்ளார். பாண்டியன் பரிசு, குறிஞ்சித் திட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், குடும்பவிளக்கு, கடல்மேற் குமிழிகள், நல்லமுத்துக்கதை, அழகின் சிரிப்பு ஆகிய அனைத்திலும் புதுமைக்கூறுகளைக் காணலாம். சஞ்சீவி பர்வதத்தின் சாரலில், புதிய தொன்மம் ஒன்றையே பாரதிதாசன் படைக்கிறார். ஒரு மூலிகையை வாயில் அடக்கினால், உலகிலுள்ள செய்திகளைக் கேட்க முடியும், இன்னொன்றை அடக்கினால் அவற்றைக் காணமுடியும் என்ற புதுத் தொன்மத்தின் அடிப்படையில் அது அமைகிறது.

பாடாண் திணை-துயிலெழுப்புதல்:

தொல்காப்பியர் புறத்திணைக்குரிய பாடாண்திணையில் துயிலெடை நிலை என்று ஒரு துறையைக் குறிக்கிறார். அரசனை அல்லது மேன்மக்களைப் பணியாளர் துயில் எழுப்புவதாக எழுதுவது இந்த இலக்கியப் பொருள். இதனை பக்திக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாக-திருப்பள்ளியெழுச்சியாக-மாற்றிக்கொண்டனர். பாரதியாரும் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கிறார். பாரதிதாசன் இதனைக் காலைப்பத்து என்கிறார். தமிழியக்க இளைஞர்கள் பிற யாவரையும் துயிலெழுப்புவதாக அமைந்தது இப்பாட்டு.

      கிழக்கு மலரணையில் தூங்கிக் கிடந்து

      விழித்தான், எழுந்தான், விரிகதிரோன் வாழி!

      .. .. ..

      மொழிப்போர் விடுதலைப் போர் மூண்டனவே இங்கே

      விழிப்பெய்த மாட்டீரோ, தூங்குவிரோ மேலும்?  

 

நோக்குவ எல்லாம் அவையே போறல் என்னும் இலக்கியக் கருவி:   

நோக்குவ எல்லாம் அவையே போறல்” என்பது பாரதிதாசன் தொல்காப்பியத்திலிருந்து மேற்கொள்ளும் இன்னொரு உத்தி. எந்தப் பொருளைப் பார்த்தாலும் தலைவனின் நினைவோ தலைவியின் நினைவோ எழுவது இந்த உத்தியாகும். இதனைக் கம்பர் அருமையாகப் பயன்படுத்திச் சூர்ப்பநகை, இராவணன் பாத்திரப் படைப்புகளை அமைத்துள்ளார். பாண்டியன் பரிசில், வேலனுக்கும் அன்னத்துக்கும் காதல் மலர்ந்தது. பிரிவினைத் தாங்கமுடியாத அன்னம், பார்க்கும் பொருளில் எல்லாம் வேலனின் உருவத்தையே காண்கிறாள்.

எதிர்பாராத முத்தம் என்னும் காவியத்திலும், பொன்முடி தன் காதலி பூங்கோதையின் வடிவத்தையே பார்க்கும் பொருளில் எல்லாம் காண்கிறான். (இது, பொன்முடி என்னும் பெயர்கொண்ட திரைப்படமாக எடுக்கப்பெற்றது.)

இந்த இரு கதைகளிலும் முற்றிலும் «வறுபட்டதொரு கதை, நல்லமுத்துக் கதை.

கணவனை இழந்தவள் அம்மாக்கண்ணு. அவளுக்குத் திருமண வயதில் மகன் இருக்கிறான். வெள்ளையப்பன் என்பவனுக்கும் திருமண வயதில் மகள் இருக்கிறாள். இருப்பினும் அம்மாக்கண்ணுவுக்கும் வெள்ளையப்பனுக்கும் காதல் ஏற்படுகிறது. அம்மாக் கண்ணுவுக்குப் பார்க்கும் பொருளில் எல்லாம் வெள்ளையப்பன் நினைவு வருகிறது. இதனை பாரதிதாசன் நகைச்சுவையாகப் படைக்கிறார்.

      ஏக்கம் இருக்கையில் தூக்கமா வரும்?

      பூனை உருட்டும் பானையை; அவ்வொலி

      நீங்கள் வரும் ஒலி என்று நினைப்பேன்.

      தெருநாய் குரைக்கும். வருகின்றாரோ

      என்று நினைப்பேன், ஏமாந்து போவேன்.

      கழுதை கத்தும்; கனைத்தீர் என்று

      எழுந்து செல்வேன், ஏமாந்து நிற்பேன்.

      உம்மை எப்போதும் உள்ளத்தில் வைத்ததால்

      அம்மியும் நீங்கள், அடுப்பும் நீங்கள்

      சட்டியும் நீங்கள், பானையும் நீங்கள்

      வீடும் நீங்கள், மாடும் நீங்கள்

      திகைப்படைந்து தெருவில் போனால்

      மரமும் நீங்கள், மட்டையும் நீங்கள்

      கழுதை நீங்கள், குதிரையும் நீங்கள்

      எல்லாம் நீங்களாய் எனக்குத் தோன்றும்

என்று அம்மாக்கண்ணு உரைக்கிறாள்.

      ஆக, பாரதிதாசனின் கவிதைகள் புதுமையும் பழமையும் ஒன்றிசைந்து நடப்பவை. அவருடைய யாப்பும் புதுமையும் பழமையும் ஒன்றிசைந்து நடப்பது. பல கவிதைகளில் புதுக்கவிதைகளின் தன்மையும் உண்டு.

காலத்தினால் கவிதையின் பொருள் மாறினாலும், அடிப்படை விஷயங்களும், கற்பனைக் கூறுகளும் மரபின் வழியில்தான் செல்லுகின்றன. அவ்வழியில் பாரதிதாசனும் தொல்காப்பியத்தில் காணப்படும் பல கூறுகளையும் இலக்கியக் கருவிகளையும் காலத்திற்கேற்பப் பயன்படுத்தியுள்ளார் என்பது நிறைவு தருகிறது.

இலக்கியம்