பழந்தமிழும் இலக்கியத் திறனாய்வும்

பழந்தமிழும் இலக்கியத் திறனாய்வும்

1
தமிழ்த் திறனாய்வு வரலாற்றுத் துறையில் புகுபவர்களுக்கு எதிரில் முன்நிற்கும் முக்கியமான கேள்வி ஒன்று உண்டு. பழந்தமிழில் திறனாய்வு இருந்ததா இல்லையா என்ற கேள்விதான் அது.
இக்கேள்விக்கு உண்டு என்று விடை சொல்பவர்களும், இல்லை என்று சொல் பவர்களும் உண்டு. பெரும்பாலும் கல்வியியலாளர்கள் உண்டு என்பர். புதிய நோக்குடைய திறனாய் வாளர்கள் இல்லை என்பர்.
எந்த ஒரு மொழியிலும் வளமான படைப்புகள் இருக்கவேண்டு மானால் திறனாய்வு இருந்தே தீரவேண்டும். அது உள்ளார்ந்த தாகவோ, வெளிப்படையாகவோ இருக்கலாம் என்ற ஒரு வாதம் உண்டு. தமிழில் உள்ளார்ந்த திறனாய்வு இருந்ததென்று கூறிப் பல சான்றுகளையும் காட்டுவர். பழந்தமிழில் கவிதை இலக்கியம் மட்டுமே இருந்ததால், திறனாய்வுக்கருத்துகள் விதிகளாகச் சொல்லப்பட்டன என்பர்.
சான்றாக,
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊங்கு இல் (குறள்-644)
என்பது ஒரு குறள். இது இலக்கியம் படைப்பதற்கான விதியாகக் கொள்ளப்படலாம் என்பர். விமரிசம் என்ற சொல்லைப் பரிமேலழகர் 356ஆம் குறள் உரையில் பயன்படுத்துகிறார்.
நன்னூலில்,
பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போல்பல
சொல்லாற் பொருட்கு இடனாக உணர்வினில்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்
என வரும் கருத்தையும் சான்று காட்டுவர். மிக முக்கியமாக, கம்பர், தமது இராமாவதாரத்தில், நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும், மோசமான கவிதை எப்படிஇருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுவதாகப் பின்வரும் சான்றுகளைக் காட்டுவர்.
புவியினுக்கணியாய்
ஆன்ற பொருள் தந்து
புலத்திற்றாகி
அவியகத் துறைகள் தாங்கி
ஐந்திணை நெறியளாவிச்
சவியுறத் தெளிந்து
தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.
கோதாவரியாறு, சான்றோர் கவிபோன்று காட்சியளித்ததாம். நல்ல கவிதை தெளிந்த ஆற்றுநீர் போன்றிருக்கவேண்டும் என்கிறார்.
அதேசமயம், கீழான கவிதை,
பொன்விலை மகளிர் மனம்எனக் கீழ்ப்போய்ப்
புன்கவியெனத் தெளிவு இன்றி
அகழி நீர்போலக் கிடந்தது
என்கிறார். ஆனால் தெளிவு என்ற ஒன்றை மட்டுமே இன்றைக்கு இலக்கியத்தின் அளவுகோலாகப் பயன்படுத்தமுடியமா?
இம்மாதிரி எடுத்துக்காட்டுகளை நோக்கினால், ஓரளவு பழந் தமிழில் திறனாய்வு மனப்பான்மை இருந்ததாகக் கொள்ளலாம். ஆனால் அதைப் பழந்தமிழர்கள் முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதும் எந்த நூலையும் திறனாய்வு நோக்குடன் அணுகவில்லை என்பதும் உண்மை. அதன் கோட்பாட்டு அம்சங்களில் சற்றேனும் கவனம் செலுத்தவில்லை என்பதும் உண்மை.
இம்மாதிரி தெளிக்கப்பட்டுள்ள கருத்துகளைவிட, தமிழின் முதல்நூலான தொல்காப்பியத்தில் அக்கறை காட்டவேண்டிய பகுதிகள் மிகுதி. தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் ஒரு கவிதையியல் நூல்.
தமிழிலக்கியப் பரப்பு மிகுதி. ஆனால் இதில் திறனாய்வு செய்யப்படாத துறைகள் மிகுதியாக உள்ளன. சங்க இலக்கியமும், காப்பிய இலக்கியமும் தற்கால இலக்கியமும் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்ட அளவு, பிற இலக்கியங்கள் திறனாய்வு செய்யப் பட்டதில்லை. சான்றாக, பக்தி இலக்கியத்துறையில் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. 1900 முதலாகவே திறனாய்வுத்துறை யில் இடைவிடாது எழுதிவந்தவர்கள் எண்ணற்றோர். ஆனால் இவர்களின் எழுத்தில் போற்றி மனப்பான்மையுடன் மட்டுமே பக்தி இலக்கியங்கள் அணுகப்படுகின்றன. நூல் என்றால் குற்றம் குறைகளும் இருக்கக்கூடும். ஆனால் பக்தி இலக்கியங்களில் குறை காண்பவர்கள் யார்? அத்தகைய தைரியம் யாருக்கு இருக்கக்கூடும்? அதனால் பக்தி இலக்கிய ஆய்வுகள் வளர்ந்த அளவு அதைப்பற்றிய திறனாய்வு வளரவில்லை. பக்தி இலக்கியத் திறனாய்வு என்பது ஏறத்தாழ 1990 அளவில்தான் புதிய மார்க்சிய வாதிகள், பின்நவீனத்துவவாதிகள், பெண்ணியவாதிகள், தலித்திய வாதிகள் ஆகியோரால் ஓரளவு செய்யப்படலாயிற்று.
பயத்தினால், திராவிட இயக்கத்தினரும் பக்தி இலக்கியங்க ளைத் தொடவில்லை. புராணங்களைக் குறை கூறினார்களே அன்றி, பக்தி இலக்கியத்தில் அவர்கள் ஆய்வு செய்யவே இல்லை. எனவே பெரியபுராணம் தவிர ஏனைப் பதினொரு திருமுறை நூல்கள், நாலாயிரப் பிரபந்தம், பிற (முஸ்லிம், கிறித்துவ) பக்தி இலக்கியங்கள் ஆகியவை எவ்விதத் திறனாய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை.
தமிழ் இலக்கியத் திறனாய்வில் இது ஒரு முக்கியக் குறை பாடு. பக்தி இலக்கியங்கள் மிகுதியாக உள்ள மொழிகளில் திற னாய்வுகள் வளர்வதில்லை, பாராட்டு நூல்கள் மட்டுமே வளரும் என்பதற்கு சமஸ்கிருதமும் ஒரு சான்று. சமஸ்கிருதத்தில் தமிழை விட மிகுதியாகவே கொள்கை நூல்கள் உள்ளன. ஆனால் அவற்றைப் பழைய பக்தி இலக்கியங்களுக்குப் பொருத்திப் பார்க்கும் செயல்முறைத் திறனாய்வுகள் இல்லை. பக்தி வரும் இடத்தில் ஆய்வும் மதிப்பிடலும் அழிந்துவிடுகிறது. வெறும் நம்பிக்கையும் விசுவாசமுமே எஞ்சுகின்றன.
திறனாய்வு என்பது முதலில் மதிப்பிடுதல், பிறகு அந்த மதிப்பீட்டிற்கான காரணங்களைப் பிறர் மனங்கொள்ளுமாறு விளக்குதல். ஆங்கிலத்தில், டி.எஸ். எலியட்டின் வார்த்தைகளில் சொன்னால் Evaluation and Elucidation. பழந்தமிழில் நூல்களைப் பாராட்டும் முறை இருந்தது. மதிப்பீடு இல்லை. வெறும் உரைகள் மட்டுமே இருந்தன, உரைகள், தாங்கள் கொண்ட மூல நூலா சிரியனை விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட தெய்வபுருஷனாக மதித்தன. விமரிசனம் இல்லை.
பழந்தமிழில் நூலின் தன்மையை ஆராய்ந்து மதிப்பிடுதல் இல்லாததால் திரிகடுகம், இன்னாநாற்பது, இனியவைநாற்பது போன்ற நீதிநூல்களும் இலக்கியமாக மதிக்கப்பட்டன. சைவ சாத்திரங்களும் இலக்கியத்தில் சேர்க்கப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுபோல எத்தனையோ குறைபாடுகளைக் காணலாம். தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் காணப்படும் நூற்பட்டியலைப் பார்த்தாலே போதும். இப்படிப்பட்ட தேர்ந்தெடுப்பு முறையே இங்கிருந்தது.
2
தொல்காப்பியப் பொருளதிகாரம் ஒரு கவிதையியல் நூல் என்பதில் ஐயமில்லை. அது இருபகுதிகளாகத் தெளிவாகவே அமைந்துள்ளது. அகத்திணையியல், புறத்திணையியல், களவி யல், கற்பியல், பொருளியல் ஆகிய முதல் ஐந்து இயல்களும் ஒருவகை-இலக்கியத்தின் பொருளைக் கூறும் பகுதி என்று கூறலாம். அடுத்த நான்கு இயல்கள்-மெய்ப்பாட்டியல், உவம வியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கும் இலக்கியவடிவத் தின் ஆக்கப்பகுதியைச் சொல்லுபவை என்பது வெளிப்படை. ஆகவே பொருளதிகாரமே கவிதையின் வடிவம்-உள்ளடக்கம் பற்றிய நூல்தானே தவிர, பலர் கருதுவது போல, வாழ்ககையைப் பற்றியதன்று.
தொல்காப்பியம் விளக்கும் திணைக்கோட்பாடு என்பது ஒரு எடுத்துரைப்பியல் அல்லது கதைசொல்லலியல் (Narratology). திணை எதுவாயினும் யார் கூற்று நிகழ்த்த வேண்டும், எந்த எந்தச் சூழல்களில் நிகழ்த்தவேண்டும் என வரையறுக்கின்ற ஒரு முயற்சி தொல்காப்பியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப் பாகக் களவியல், கற்பியல், பொருளியல் ஆகியவற்றின் உள்ளடக் கம் இதுவாகவே உள்ளது. ஆனால் இவ்வாறு தொல்காப்பியர் வரையறுத்த இந்த எடுத்துரைப்பியலைச் சங்க இலக்கியங் களைப் பிற்காலத்துத் தொகுப்புகளாக உருவாக்கித் திணை துறை வகுத்தோர் முழுதுமாகப் பின்பற்றவில்லை. அகநூல்களில் ஓரளவு பின்பற்றுகின்றனர், புறநூல்களில் பெரும்பாலும் பின்பற்ற வில்லை என்பது இன்னும் சற்றே துல்லியமான கூற்றாக அமையும்.
திணை, தமிழ்மொழிக்கேயுரிய தனிக்கோட்பாடு. உயர் திணை, அல் திணை என்ற அமைப்பும் அவ்விரண்டின் சார்பாகவே பால் பகுக்கப்படுவதும் தமிழுக்கே/திராவிட மொழிகளுக்கேஉரிய தனிஅமைப்புகள். உயர்திணை-அல்திணை என்பதி லுள்ள அதே திணைபற்றிய கருத்துதான் அகத்திணை, புறத்திணை என்பதிலும் அடிப் படையாக உள்ளது. இதனை நோக்கியே திணை என்பதற்கு ஒழுக்கம் என்றும் பொருள் சொல்லப்பட்டது.
திணை-துறை அமைப்புகள் யாவும் அக்காலத்தில் எவ்வாறு கவிதைஎழுதுவது என்பதற்கான விதிகளாக உருவானவை. மொழியின் எழுத்து-சொல்-தொடர்அமைப் புகளை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் பேசுவதுபோலவே, மொழியினால் விளையும் கவிதையை எந்த அடிப்படைகளில் படைப்பது எனச் சொல்வது பொருளதிகாரம்.
தொல்காப்பியத்தில் என்ப, என்மனார் புலவர் என்பதுபோல வரும் எண்ணற்ற தொடர்கள், தம் காலத்துக்கு முன்பு வரையறுக் கப்பட்ட விதிகளையே தொல்காப்பியர் கூறுகின்றார் என்பதைத் தெரிவிக்கும்.
தொல்காப்பியரின் பொருளதிகாரம், அரிஸ்டாடில் துன்பியல் நாடகங்களின் தன்மை பற்றி எழுதியுள்ள போயடிக்ஸ் என்ற நூலோடும், உயர்ந்த கவிதைகளின் கூறுகள் பற்றி கோலரிட்ஜ் எழுதியுள்ள பயோகிராபிய லிடரேரியா என்ற நீண்ட கட்டுரைத் தொடரோடும் ஒப்பவெண்ணக்கூடியதாகும் என்று பேராசிரியர் மருதநாயகம் ஒப்பிடுகின்றார். மேலும் அவர் உரையாசிரியர்களும் திறனாய்வாளர்களின் பணியையே ஆற்றியுள்ளனர் என்று அறுதியிடுகின்றார்.
திணைக்கோட்பாடு தமிழர்க்கே உரியது, தமிழர்களே உருவாக் கிய ஒன்று. இதனை வேறு இந்திய மொழிகளில் காணமுடியாது. எனவே இதெல்லாம் சமஸ்கிரு தத்திலிருந்து கடன் பெற்றதல்ல. இதனை இக்காலத் திறனாய்வுக்குப் பயன்படுத்தமுடியும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். நோக்கு, கூற்றெச்சம், குறிப் பெச்சம், உள்ளுறை, இறைச்சி போன்ற சிற்சில கருத்தாக்கங்க ளைத் திறனாய்வுக்குப் பயன்படுத்தலாம் என்று எடுத்துக்காட்டியி ருக்கிறார்கள். மலையாளக் கவிஞர் ஐயப்பப் பணிக்கர் போன்ற ஒர சிலர் தொல்காப்பியத்திலுள்ள திணைக்கோட்பாட்டினை இக்கால இலக்கிய ஆய்வுக்கு-குறிப்பாக நாவல்களுக்குப் பயன் படுத்தலாம் என்று அபிப்பிராயப் படுகின்றனர்.
சங்க இலக்கியம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அதைப் பின்னர்வந்தோர் தொகுத்துவைத்தனர். உதிரிப் பாக்களாகவே பெருமளவு எழுதப் பட்டதால் அதனைத் தொகுத்தோர் தம் சமகாலத்தினர்க்கும் பின்வந்தோர்க்கும் வழங்கிய குறிப்புகளே (notes) சங்கப் பாக்களுக் குரிய திணை துறைக் குறிப்புகள். அவற்றின் ஒரே சிறப்பு -சரி யாக இருப்பினும் தவறாக இருப்பினும் அகப்பாக்களுக்கு ஓரளவேனும்-முழுதுமாக அல்ல-சங்ககால/தொல்காப்பிய மரபைப் பின்பற்றுகின்றன என்பதே. (புறப்பாடல்களுக்குச் சங்ககால அல்லது தொல்காப்பிய மரபு பின்பற்றப்படவில்லை என்பது தெளிவு). இம்மாதிரித் திணை-துறைக் கோட்பாட்டை ஒரு கட்டமைப்பு (Semiotic Sturucture) என்று நோக்கமுடியும். குறியியல் கட்டமைப்பு என்பதன் உட்பொருள், இது பழங்காலத்தில் உருவாக் கப்பட்டு, தொடர்ந்து ஒருமரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதுதான். அதாவது சங்க இலக்கியம் பழங்கால முதல் தொடர்ந்து வரும் ஒரு இலக்கியக் கோட்பாட்டு மரபிற்குக் கட்டுப்பட்டு இயற்றப்பட்டது என்பதே இதன் வெளிப்படையான பொருள்.
3
தமிழில் திறனாய்வு பற்றிய கட்டுக்கதைகள் சில வழங்கி வருகின்றன.
காட்சி ஒன்று
உலகப் பொதுமறை என்று நாம் போற்றும் திருக்குறளைக் கையிலேந்தி அவையிலே அரங்கேற்றம் செய்ய வந்திருக்கிறார் வள்ளுவர். (அவரது சாதி காரண மாக அவர் அரங்கேற்றம் செய்ய விடப்படவில்லை என்று நாம் நன்றாகவே யூகிக்க இயலும். திருவள்ளுவர் காலத்திலும் சாதியில்லை என்று வாதிப்பதானால், புலமைக் காழ்ப்புதான் காரணமாக இருக்கவேண்டும்.)
ஒளவையார் உதவிபுரிய வருகிறார். (ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவருக்கு-ஒடுக்கப்பட்டவரான பெண்தானே உதவிசெய்ய வேண்டும்?) தமது நூலினை சங்கப் பலகைமீது வைக்கிறார். (சங்கப்பலகையும் ஒடுக்கப்பட்ட கைவிஞனர்கள் செய்த படைப்பு தான். ‘கீர் கீர்’ என்று சங்கறுக்கும் சாதியைச் சேர்ந்த நக்கீரனா என்னிடம் வாதம் புரிவது என்று கேட்டவரல்லவா சிவபெரு மான்?) சங்கப்பலகை திருக்குறளை ஏற்றுக் கொள்கிறது. இடம் தருகிறது. அவ்வளவுதான். உலகப்புகழ்பெற்ற படைப்பாளராகத் திருவள்ளுவர் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டார். (மேற்சாதியினர் அற்புதச் செயல்களை மட்டுமே ஏற்றுக்கொள்பவர்கள்).
காட்சி இரண்டு
தருமி என்ற புலவன் கவிதை கொண்டுசெல்கிறான் பாண்டி மன்னன் அவைக்கு. அது அவன் எழுதிய கவிதை அல்ல. ‘இறைவனே’ எழுதிக்கொடுத்தது. (இறைவன் ஆதிக்க சாதிக்கு ஆதரவு.) அதில் பொருட்குற்றம் இருப்பதாக வாதிடுகிறார் நக்கீரர். (நக்கீரர் சங்கறுக்கும் தாழ்ந்தசாதி. உயர்சாதியினர் சொல்லும் ‘பொருள்’ ஒடுக்கப்பட்டவர்க்கு எப்படி உவப்பானதாகும்?) தருமியின் சார்பாக இறைவனே வாதாட வருகின்றான். நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்கிறார் நக்கீரர். (ஆதிக்கசாதியினர் தங்கள் கீழ்ப்பட்டவரின் வாழ்க்கையை அழித்து விடுவதாக மிரட்டும் மிரட்டலுக்கு அவர்கள் அஞ்சுவதில்லை.)
காட்சி மூன்று
அகப்பொருளுக்கு உரைசெய்கிறார் புலவர் ஒருவர். (அது இறைவனே செய்ததல்லவா?) அவரது உரையின் மதிப்பினைக் கண்டறிய முடியவில்லை. அப்போது உருத்திரசன்மன் என்னும் ஊமைப்பிள்ளை இருக்கிறான் பாண்டிநாட்டில். (இறைவனின் பெருமையை ஊமைகளே அறிவர். கண்டவர் விண்டிலர் அல்லவா?) அவன்முன் உரை படிக்கப்படுகிறது. ஊமையின் கண்ணில் நீர் வழிந்தோடுகிறது. மயிர்க் கூச்செறிகிறது. (இப்படிப் பட்ட மெய்ப்பாடுகளை ஏற்படுத்தினால்தான் அது உயர்ந்த கவிதை என்று டி.கே.சி. போன்றவர்கள் வலியுறுத்தினர்.) உடனே அவ்வுரை மிகச் சிறந்ததென்று அறிவிக்கப்படுகிறது.
குறுக்கீடு
பழங்காலத்தில் அரங்கேற்றங்கள் இருந்தனவே, அவற்றில் நல்ல நூல்களைச் சான்றோர் சிரக்கம்பம், கரக்கம்பம் செய்து (தலையை அசைத்தும், கைகளைத் தட்டியும்) பாராட்டினார்களே, அது திறனாய்வுக்கு அறிகுறியல்லவா என்று சிலர் கேட்கலாம். ஆனால் யாருக்கு அரங்கேற்றம் நடந்தது? ஆனானப்பட்ட திருவள் ளுவரும், கம்பருமே அரங்கேற்றம் என்ற பெயரால் அலைக்கழிக் கப் பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் எந்த மூலைக்கு? சிறப்பாக நடந்த அரங்கேற்றம், ஒன்றே ஒன்று தான். அது சேக்கிழாரின் நூலுக்கு நிகழ்ந்தது. காரணம், இறைவனே வந்து அவருக்கு அடியெடுத்துக் கொடுத்தாராம். மெய்யான காரணம், அவர் சோழ மன்னனுக்கு அமைச்சராக இருந்தார் என்பதுதான்.
இவையெல்லாம் தான்தோன்றித்தனமான முடிவுகளாகவோ தெய்வக் குறுக்கீடுகளாகவோ காட்சியளித்தாலும், இவற்றில் ஒடுக்கப்பட்டவர் சார்பான பார்வையை நாம் காணமுடிகிறது என்பதற்குத்தான் இக்கதைகள். இவற்றிலிருந்து நாம் பெறக் கூடிய அளவைகள் இவைதான்.
‘நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே’ என்று இலக்கியத்தை ஆராய்ந்தவர்கள், சுவையான உரையைக் கேட்டு உருகி உருகிக் கண்ணீர் பெருக்கியவர்கள், இன்னா நாற்பதையும் இனியவை நாற்பதையும் இலக்கியமாக ஏற்பார்களா? ஆசாரக்கோ வையை இலக்கியப் பட்டியலில் சேர்ப்பார்களா?
குறுக்கீடு
சங்க இலக்கியங்களில் காண்கிறோம்: சங்கப் புலவர்கள் யாரிடம் பரிசில் வாங்கச் சென்றாலும் வரிசை வரிசை என்று கூறுகிறார்கள். வரிசையறிந்து (தரம் அறிந்து)தான் பரிசில் வாங்கு வர். இல்லையென்றால் மறுத்துவிடுவார்கள். வரிசை யறிந்து பரிசில் கொடுத்தால் குன்றியும் கொள்வேன்; வரிசையறியாது தந்தால் குன்றளவானாலும் மறுத்துவிடுவேன் என்று முழங்கு கிறார் வறுமைக்கே உதாரணமான புலவர் ஒருவர். எப்படி இந்த ‘வரிசை’யை அக்காலத்தில் அரசர்களோ அன்றிப் புலவர்களோ கண்டறிந்தார்கள்?
திருக்குறள் தோன்றிய காலத்திற்குப் பிறகு சில நூற்றாண்டு கள் கழித்து எழுதப்பட்ட பாக்களைக் கொண்ட திருவள்ளுவ மாலை என்றொரு நூல் இருக்கிறது. திருக்குறளின் பொருட்சிறப் பினை எடுத்துப் பாராட்டுகின்ற அருமையான சில கவிகள் அதில் இருக்கின்றன. சிலகவிகள் வெறும் சாற்றுக்கவி மரபிலும் இருக்கின்றன. (வழக்கம்போல் அதிலும் பிரமன், சரஸ்வதி ஆகிய கடவுளர்களெல்லாம் வந்து பாராட்டியதாகப் பாக்கள் இருக் கின்றன.)
காட்சி நான்கு
சான்றோர் அவையில் தண்டி கூறுகிறார்: “நூல்களின் பயன் அறம் பொருள் இன்பம் வீடு என்பனவற்றை உரைத்தல். இவை நான்கையும் கூறுவனவற்றைப் பெருங்காப்பியம் என்றும், ஒன்றோ இரண்டோ மூன்றோ மட்டும் கூறுவனவற்றைச் சிறுகாப்பியங்கள் என்றும் கூறலாம்.”
அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதுகிறார்: “தண்டியலங்கார விதிப்படி நோக்கும்போது சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தனித்தனியாகப் பெருங்காப்பியங்கள் அல்ல; இரண்டும் ஒன்றாகச் சேரும்போதுதான் பெருங்காப்பியம் ஆகின்றன”
நெடுநல்வாடையில் ஒரு காட்சி.
ஓர் அரசன் (இவன் யாரென்று தெரியாது, பாண்டிய மன்னன் என்பதைத் தவிர இவனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வேறுகுறிப்புகள் இல்லை). இரவில் தன் பாசறையைச் சுற்றி வருகிறான். அவனுடன் சில வீரர்களும் செல்கிறார்கள். ஒரு வீரனின் வேலில் வேப்பமாலை சுற்றப்பட்டிருக்கிறது. (வேப்ப மாலை அக்காலத்தில் பாண்டிய மன்னனுக்குரிய சின்னம்.)
நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார்: “‘வேம்பு தலை யாத்த நோன்காழ் எஃகம்’ என்று இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது வேப்பமாலையை உச்சியில் சுற்றிய வேல். வேலில் ஏன் வேப்பமாலையைச் சுற்றவேண்டும்? அது பாண்டிய மன்ன னுக்கு உரியது என்பதனால். எனவே பாசறையைச் சுற்றிவரும் அரசன் பாண்டியன். அக்காலத்தில் புகழ்பெற்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஒருவன்தான். எனவே அவன்தான் இங்கே சொல்லப்படுபவன். எனவே பாட்டுடைத் தலைவன் பெயரைச் சொல்லியாயிற்று.” (சொன்னது யார்? கவிஞரா, உரை எழுது பவரா?)
“எனவே இது சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர் (அகப் பாடலில் தலைமக்கள் பெயரைச் சொல்லமாட்டார்கள்) என்ற மரபை மீறிவிட்டது. ஆகவே நெடுநல்வாடை அகப்பாடல் அன்று. புறப்பாடல்தான்.”
இந்த ‘லாஜிக்’ கும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் (இங்கே தொடக்கூட இல்லை) கதைதான்.
4
தொல்காப்பியம், நன்னூல் பாயிரம் போன்ற இலக்கணங்க ளைப் படிப்பவர்கள், தமிழிலக்கிய மரபிலே இலக்கணம்தான் ஓரளவுக்கு இலக்கிய விமரிசனம் செய்ய வேண்டிய காரியத்தை யும் செய்யமுற்பட்டு வந்திருக்கிறது என்பதை ஒப்புவார்கள். ஆனால் அப்போதும் பழந்தமிழ் நூல்கள் ஏதும் திறனாய்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நூல்களுக்கு விளக்க வுரை சொல்வதற்குத்தான் இவை துணையாக இருந்துள்ளன.
உரையாசிரியர்கள் பழந்தமிழில் திறனாய்வாளர்களின் பணியை ஆற்றிவந்தனர் என்று முன்பகுதியில் மேற்கோள்காட்டிய மருதநாயகம் உட்படப் பற்பலக் கல்வியாளர்கள் கூறிச் சாதித்தி ருக்கிறார்கள். உரையாசிரியர்கள் என்ன செய்தார்கள்?
ஃ உரையாசிரியர்கள் பெரும்பாலும் உள்ளடக்க அடிப்படையி லேயே மதிப்பிட்டனரே அன்றி, உருவ அடிப்படையில் மதிப்பிட வில்லை.
ஃ தாம் உரை எழுத எடுத்துக்கொண்ட நூலாசிரியர் தவறு செய்ய மாட்டார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.
ஃ மூல ஆசிரியனுக்குத் தாம் ஒவ்வொருவரும் எழுதும் உரையே முற்றிலும் சரியானது என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. அந்த அடிப்படையிலேயே அவர்கள் தங்களுக்குள் மறுப்புகளையும் விடுத்தனர்.
மேலும், பழந்தமிழில் திறனாய்வு இருந்தது என்பதற்குச் சான்றாகக் காட்டும் எடுத்துக்காட்டுகள் யாவும், விளக்கப்பகுதி யைச் (Interpretation) சார்ந்தவை. மதிப்பிடுதல் இல்லை. பழந்தமிழ் ஆசிரியர் எவரேனும் திருவாசக ஆசிரியரையோ, திவ்யப்பிரபந்தப் பெரியாழ்வாரையோ குறையுடையவர்கள் என்று மதிப்பிடுவார் களா? அவ்வளவு வேண்டாம், தமிழ்விடு தூது எழுதியவரையோ, குற்றாலக்குறவஞ்சி எழுதியவரையோ குறைகண்டிருக்கிறார்களா? “அரிய கற்று ஆசற்றார் கண்ணும் இன்மை அரிதே வெளிறு” என்பது திருக்குறள் கருத்தல்லவா? இதை எவரேனும் உணர்ந்து பழந்தமிழ் நூல்களை நோக்கியுள்ளார்களா? நூல் எழுதிய எவரை யும் போற்றுதல் என்பது பழந் தமிழ்க் கொள்கையாக இருந்திருக் கிறது என்பதற்குச் சான்றுகள் நமது இலக்கியங்களில் ஏராளமாக உள்ளன.
பழங்கால முதலாகவே ஓர் இலக்கியப் புனிதத்தொகுதியை (Canon) உருவாக்கும் முயற்சிகள் இருந்துவந்துள்ளன என்பதை நாம் மறுக்கமுடியாது. ஒரு புனிதத் தொகுதியை, மதிப்பீடு இன்றியும், அதற்கு அடிப்படையான கருத்தியல் இன்றியும் உருவாக்க முடியாது. சங்ககாலத் தொகைநூல்கள் முதலாகவே இது நடந்து வந்திருக்கிறது. இந்தப் புனிதநூல் தொகுதியில், மதஅடிப்படையில், கருத்தியல் அடிப்படையில் சில நூல்கள் சில காலங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன, சில இடம் மறுக்கப்பட்டி ருக்கின்றன, பிறகு காலப்போக்கில் ஏற்கப்பட்டுள்ளன. சிலகாலம் மறைந்து ஒளிந்து வெளிப்பட்டிருக்கின்றன. இந்தத் தேர்ந்தெடுப்பு கள் எவ்வாறு நிகழ்ந் தன என்பது விரிவாக ஆராயப்படவேண்டிய ஒன்று. ஏனெனில் இலக்கியக் கோட்பாடுகள் அற்ற நிலையில், எந்த வகையில் இவை தேர்ந்தெடுக்கப்பட்டன?
பல வகைகளில் இந்தப் புனிதத்தொகுதி எழுந்திருக்கலாம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப் பழங்காலத்தில் எண்ணிக்கை வாயிலாக நல்ல நூல்களைத் தொகுத்துக் காப்பாற்றும் முயற்சி இருந்திருக்கலாம். பிறகு வந்த காப்பியங்களை அணிகலன்களாகப் பார்த்து-சிலம்பு, மேகலை, சிந்தாமணி, வளை, குண்டலம் எனக் கண்டு காப்பாற்றியுள்ளனர். பக்திக்காலம் வந்தபிறகு அந்தந்த சமயங்கள் அந்த வேலையைப் பார்த்துக்கொண்டன. இப்படிப் பலவிதமான வழிகளில் பலவிதமான இலக்கியங்கள் காப்பாற்றப் பட்டன. என்றாலும் அதற்கு பார்ப்பனர் சூழ்ச்சி தடையாக இருந்ததும் தெரிகிறது. சிதம்பரம்கோயிலில் திருமுறைகளை மறைத்துவைத்து ‘கடவுளே வந்தால்தான் தருவோம்’ என்று ஏமாற்றியுள்ளனர். ஆக பல இலக்கியங்கள் அழிந்தும் போயிருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.
நமது இலக்கிய மரபை கவனிக்கும்போது இலக்கியம் பழைய மரபுகளைத தழுவி யிருக்கவேண்டும், வலியுறுத்தவேண்டும், இனிமையாக இருக்கவேண்டும், தெளிவாக இருக்கவேண்டும், அறிவுபூர்வமான அமைவதைவிட உணர்வுபூர்வமாக அமைய வேண்டும் என்பவற்றோடு, “இலக்கியம் ஒரு தொழில் சார்ந்த விஷயம்” என்னும் கருத்தும் நிலவியிருந்ததை அறியலாம். ஒளவையார் “சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்” என்று கலைகளைப் பயிற்சியாகவே குறிப்பிட்டுச் செல்வது கவனிக்கத் தக்கது. அதனால் கவிஞர்களிடம் சென்று செய்யுள் இயற்றப் பயின்றிருக்கிறார்கள் நமது முன்னோர். (இதே மரபைத் தான் பின்வந்த ஜோசப் பெஸ்கி என்ற வீரமாமுனிவரும் பின்பற் றினார்). எதிர்மறையில் இந்த மரபின் தாக்கத்தைக் “காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகைகொட்டிப் பிழைப்பதுமேல்” என்ற பழமொழியிலும் காணலாம். நன்னூலாரும் இதே கருத்திலேயே நூல், பனுவல் என்னும் சொற்களை எடுத்தாளு கின்றார். காளமேகப் புலவரும், இத்திறன் பயிற்சியால் வந்த கவிதைத்திறன் என்பதை வலியுறுத்தும் போக்கிலே, “அம்மென் றால் அறுநூறும், இம்மென்றால் எழுநூறும் செய்யுள் இயற்ற முடியும்” என்று கூறியிருக்கிறார். இப்பயிற்சியினாலேயே மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்றவர்களால் ஒரு நாளில் முன்னூறும் நானூறுமாகக் கவிபாட முடிந்திருக்கிறது.
தொல்காப்பியம் முதற்கொண்டு எவற்றை எழுதவேண்டும், எவற்றை யார் பேச வேண்டும் என்றெல்லாம் விதித்திருக் கின்றன. இம்மாதிரி விதிகளைப்படைத்து இலக்கியம் உருவாக்கு என்று சொல்வது “தணிக்கை முறைக்கேற்ப எழுது” என்பது போலத்தான். உரையாசிரியரின் உரைமரபுகள் எவ்வாறெல்லாம் அர்த்தம்காண முடியும் என்பதன் சாத்தியங்களை வெளிப்படுத் தின. ஆனால், வேறுவகை அர்த்தம் காணல் நிகழ்ந்தபோது எதிர்த்தன.
கவிமணி சொன்ன “உள்ளத்து உள்ளது கவிதை, இன்பம் உருவெடுப்பது கவிதை” என்பதெல்லாம் மேனாட்டுப் பயிற்சியால் ஏற்றுக்கொண்ட விஷயம். ஆனால் முற்றிலும் உணர்ச்சிக் கொள்கை மேனாட்டு வரவு என்று சொல்லமுடியாது. பக்தி இலக்கியக் காலத்தில் உணர்ச்சிக் கொள்கைதான் பேரளவில் கடைப்பிடிக்கப்பட்டது. வறண்ட கருத்துகளைச் சொல்வது இலக்கியம் அல்ல என்றும், ஊனோடு உயிர் கலந்து உணர்வோடு படைக்கப்படுவதுதான் இலக்கியம் என்ற எண்ணத்தை உருவாக் கியவர்கள் பக்திப்பாக்கள் பாடிய நாயன்மாரும், ஆழ்வார்களும்.
பக்தி இயக்கத்திலும் குறைபாடுகள் இருந்தன. அக்குறைபாடு கள் நாளடைவில் மலிந்து இறுகின. அதனால் எந்த சமஸ்கிருதக் கலாச்சாரத்திற்கு எதிராகத் தமிழ் என்னும் உணர்வோடு பக்தி இயக்கம் தோன்றியதோ அதையே பிறகு இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது. எனவே இதற்கு எதிராக ஓர் இயக்கம் தேவைப் பட்டது. அது தான் சித்தர்கள் வாயிலாக வள்ளலார் வரை தமிழில் ஏற்பட்ட இயக்கம். சடங்குகள் ஆசாரங்கள் போன்றவற்றை எதிர்த்ததோடு சமணர்-பௌத்தர் போலவே ஒழுக்கங்களையும் சித்தர்கள் வலியுறுத்தினர். மேலும் பெரும் லோகாயதவாதிகளாக வும் அவர்கள் இருந்தனர்.
தமிழில் இப்படி இருவகையான இழைகளும் மாறிமாறியே வருவதைக் காணலாம். ஓர் இயக்கம் தேய்ந்து பெறுமானம் இழக்கும்நிலையில், இன்னொரு இயக்கம். இப்படியே மாறிமாறித்தான் மொழிகளும் சமூகமும் கலாச்சாரமும் இயங்கு கின்றன. இதுதான் இயங்கியல் முறை. இதை இங்கு சொல்லக் காரணம், இவற்றிலிருந்து நமக்கென ஒரு திறனாய்வு நெறி முறையை, கோட்பாட்டைப் பெறமுடியுமா என்று நோக்குவதற் காகத்தான். பழந்தமிழ் நூல்களில் திறனாய்வு உண்டா இல்லையா என்று ஆராய்பவர்கள் முற்கூறியதுபோன்ற உதாரணங்களை ஆராய்ந்து நிதானமான முடிவுக்கு வரட்டும்.
5
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஓலைச்சுவடி கள் யாவும் அச்சேற்றப்படலாயின. முதன்முதலில் திருக்குறள் பதிப்பிக்கப்பட்டது. பின்னர், தொல்காப்பியம் போன்ற நூல்கள் (மழவை மகாலிங்கையர்) பதிப்பிக்கப்படலாயின. அதன்பின் சி. வை. தாமோதரம் பிள்ளையும், உ. வே. சாமிநாதையரும் மூல பாடத் திறனாய்வில் செம்மையாக ஈடுபட்டு, பல நூல்களைப் பதிப்பித்தனர். சி. வை. தாமோதரம் பிள்ளை காலம் முதல், ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை காலம் வரை-1875 முதல் 1950வரை) மூலபாட ஆய்வின் (Textual Criticism) என்று கூறலாம்.
முதல்நூல்கள் பதிப்பிக்கப்பட்டவுடன் அவை பற்றிய கால ஆராய்ச்சி தொடங்கியது. பேராசிரியர் சுந்தரம்பிள்ளை இதைத் தொடங்கிவைத்தவர். திருஞானசம்பந்தர் வரலாறும் காலமும் பற்றிய நூலான Some Milestones in the History of Tamil Literature வாயிலாக இதனைச் செய்தார். கே. சீனிவாசபிள்ளை எழுதிய தமிழ் வரலாறு, மு. சி. பூரணலிங்கம் பிள்ளை எழுதிய Tamil Literature, கா. சுப்பிரமணிய பிள்ளை எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, கே.என். சிவராஜபிள்ளை எழுதிய The Chronology of the Early Tamils போன்ற நூல்கள் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாற்றைக் கட்டமைப்பதற்கு உதவியவை. ஏறத்தாழ வையா புரிப் பிள்ளை காலம் வரை இந்தக் கால ஆராய்ச்சி தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து வடமொழிச் சார்பானவர்கள் தமிழ் நூல்கள் பலவற்றிற்கும் முதல் நூல்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன என்று கூற, தமிழ் சார்பானவர்கள் அக்கூற்றுகளை மறுக்க, ஒரு பயனற்ற விவாதம் ஏற்பட்டது. ஆனால் இது ஓரளவு ஒப்பியல் பார்வை தோன்ற உதவியது என்று சொல்லலாம்.
6
மனிதன் எத்தனையோ வகையான பொருள்களைப் படைத்தி ருக்கிறான். அவன் படைத்துக்கொண்ட அறிவும் ஒரு பொருள் தான். பிற உயிரிகளுக்கு இல்லாத பொருள். மனிதன் படைத்த பொருள்களில் கலை, இலக்கியம் ஆகியவை சில. அவற்றின் விமரிசனம் என்பதும் ஒரு மனிதத் துறையே.
மனிதன் படைத்த பொருள்கள் எல்லாம் அவனுக்குப் பயன்பட வேண்டும். அவை அவனுக்குச் சேவை செய்யவேண்டுமே அல்லாமல், அவன் அவற்றுக்குச் சேவை செய்யக்கூடாது. மனிதன் ஒன்றிற்குச் சேவை செய்கிறான் என்றால் அதற்கு அவன் அடிமையாகிவிட்டான் என்று அர்த்தம். இன்று பலர் கண்கூடாகப் பணத்துக்கும் வாழ்க்கை வசதிகளுக்கும் சேவை செய்கிறார்கள். இம்மாதிரிச் சேவையிலிருந்து மனிதனுக்கு விடுதலை அவசியத்தேவை. தன்னைத் தளைப்படுத்துகின்ற எதுவும் மனிதனுக்குத் தேவையில்லை. கலை இலக்கியம் விமரிசனம் இவைகூட ஏதோஒரு வகையில் மனிதனைச் சிறைப்படுத்திவிடும் என்றால் அவை தேவையில்லை என்றுதான் கூறவேண்டும். மனிதவிடுதலைக்கு அவை துணைபுரியும் என்றால் அவை கண்டிப்பாகத் தேவையே.
கலை இலக்கியத்தைவிடவும் மேம்பட்டது விமரிசனம். ஏனென்றால் பகுத்தறிவே அதுதான். மனித வாழ்க்கையின் ஒரு கூறாக விமரிசனம் இருக்கிறது; அவன் விடுதலை பெற அது துணை புரிகிறது. மனிதன் எதை விமரிசனம் செய்யவில்லை? மனித வாழ்க்கையின் எல்லாக் கூறுகளின்மீதும் விமரிசனம் செயல்படுகிறது. “இந்த உணவு விடுதியில் உணவு நன்றாக இருக்காது, இன்னொரு விடுதியில்தான் நன்றாக இருக்கும்” என்றால் அங்கே மதிப்பீடு இல்லையா? “இந்த வாத்தியார் நன்றாகப் பாடம் சொல்லித் தர மாட்டார். இவர்தான் நல்ல வாத்தியார்” என்ற கூற்றில் விமரிசனம் இல்லையா? இது அன்றாட வாழ்க்கையில் காணும் எளிய மதிப்பீடு. மாறாக, கலைகளைப் பயின்று, அல்லது நூல்களைப் பயின்று, வாழ்க்கையின் அனுபவத்தோடு அவற்றைப் பொருத்திப் பார்த்து, மனித விடுதலைக்கு அவை உதவி புரிகின்றனவா இல்லையா என்று சோதித்து, இது ஏற்கத்தக்கது, ஏற்க இயலாதது என்று சொல்லும்போது அது திறனாய்வு அல்லது கலைஇலக்கிய விமரிசனம் ஆகிறது.
எளிய விஷயங்களில் விமரிசனம் செய்யத் தயங்காத நாம், சற்றே சிக்கலான விஷயங்களைத் திறனாய்வு செய்ய அஞ்சுகிறோம். ஒரு சிறு துறையிலிருக்கும் அதிகாரமானாலும் சரி, பெரும் அரசியல் ஆதிக்கமானாலும் சரி, நாம் விமரிசனம் செய்வதில்லை. சற்று தீவிரமாகச் சென்றால் எங்கே நம் பொரு ளாதார வாழ்க்கை அல்லது உலகவாழ்க்கை-இவை பாதிப்புக்குள் ளாகிவிடுமோ என்று பயப்படுகிறோம். ஒரு பத்திரிகையையோ, திரைப்படத்தையோ விமரிசனம் செய்யத் தயங்காத ஒருவன், தன் முதலாளியையோ, நிறுவன இயக்குநரையோ விமரிசனம் செய்ய அஞ்சுகிறான். அது அவன் பொருளாதார வாழ்க்கையோடு சம்பந் தப்படுகிறது. அதுபோலவே, வகுப்புகளில் மிக நன்றாகத் திற னாய்வு செய்து எழுத்தாளர்களை இனம் காட்டுகின்ற ஒரு பேராசிரியர், அக்கருத்துகளை எழுத்தில் பதிவுசெய்ய முன்வருவ தில்லை. ஏனெனில் அவருக்குக் கிடைக்கக்கூடிய பதவி உயர்வு, பல நிறுவனங்களில் கிடைக்கும் புகழ்மிக்க இடங்கள் முதலியன இதனால் காணாமற்போகலாம். ஆக இவர்களெல்லாம் அன்றாட வாழ்க்கையின் வசதிக்காகத் தங்கள் சுதந்திரத்தை இழப்பவர்கள் தான்.
உண்மையான சுதந்திரத்தை நோக்கமாகக் கொண்டதுதான் எந்த விமரிசனமும். இலக்கிய விமரிசனத்தின் நோக்கமும் அதுதான்.
இலக்கிய விமரிசனம் ஒருபுறம் இருக்கட்டும். இலக்கியம் என்றால் என்ன?
என் பார்வையில் நாம் இலக்கியமெனக் கொள்வது ஒரு குறிப்பிட்ட பிரதி அமைவையே (textual formation)ஆகும். இந்தப் பிரதிஅமைவு சில குறிப்பிட்ட ஒழுங்குகளுக்கேற்பச் சொற்களை, தொடர்களை அடுக்கிச்செல்லும்போது தோன்றுவதாகும். அவ் வாறு பிரதியை-அதன் சொல்லாடல்களை அமைப்பதினாலேயே அந்தச் சொற்கோவை ஒரு இலக்கியப்பிரதியாக மாறுகின்றது. அவ்வாறு அமைந்தபின்னர் இது தனித்துவமான வாழ்க்கையைப் பெறுகின்றது.
ஒரு பிரதியைப் புரிந்துகொள்ளுதல் என்பது அதன் அமைவைப் புரிந்துகொள்ளலேயாகும். அவ்வாறு புரிந்து கொள்வதற்கு அது எவ்வாறு கட்டப்பெற்றுள்ளது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? திறனாய்வு அதைத்தான் செய்கிறது. சிலர் கட்டடத்தைச் சுற்றிவருகிறார்கள், அதன் புற அழகைக் கண்டு பாராட்டுகிறார்கள். சிலர் அதன் பயன் என்னவாக இருக்கும் என்று காண்கிறார்கள். சிலர், கட்டடத்தின் அமைப்பின் படத்தை மனத்தில் வரைந்து பார்க்கிறார்கள். சிலர், பிரதியின் அமைவு ஒழுங்கைச் சற்றே கலைத்து, உடைத்து, சிதைத்துப் பார்க்கின்ற பொழுதுதான், அது எவ்வாறு கட்டப்பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது என்கிறார்கள்.
இலக்கிய ஒழுங்கமைவில் படைப்பாளியின் பங்கு வரையறுக் கப்பட்டது. படைப்பாளி கட்டடத்தைக் கட்டிய தொழிலாளி போன் றவன். கட்டடத்தைக் கட்டிமுடித்த பிறகு கட்டியவனுக்கு என்ன வேலை? அதற்குமேல் அங்கு வாழ்பவர்களின் பிரச்சினைதான். பிரதியைத் தோற்றுவிப்பதில் படைப்பாளிக்கு முக்கியத்துவம் உண்டு. அதன் தொடர்ச்சியான வாழ்க்கையில் அவனுக்குப் பங்கில்லை. பிரதியின் தொடர்ச்சியான வாழ்வில் படைப்பாளிக்கு அப்பாலான சக்திகள் பல செயல்படுகின்றன.
இப்போது இலக்கிய விமரிசனம் என்றால் என்ன என்ற கேள்விக்கு வருவோம்.
மேற்கூறிய இலக்கிய அமைவு அல்லது பிரதி அமைவு எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பதை அறிவதே விமரிசனத்தின் நோக்கு. அந்தக் கட்டமைவைத் தகர்த்து நோக்கும் பொழுது-அதாவது நமது மனத்திற்கேற்ற மறுஅமைப்புக்கு நாம் அதை உட்படுத் தும்போது அது புலனாகிறது.
“இலக்கியப்பிரதியின் அமைப்புமுறை அதற்கு இலக்கியத் தன்மையை வழங்குகிறது. இதனை விளங்கிக்கொள்பவர் வாசகரே. இலக்கியத்தின் புரிவுநிலையில் அல்லது விளக்க நிலையிலேயே அதன் இலக்கியத்தன்மை புலப்படும். எனவே இந்தப் புரிவுமுறையில் வாசகர் முக்கியமாகிறார். பொருள்கொள் ளுதல் என்னும் நடைமுறையில் அவருக்கு ஒரு முக்கியப் பங்குண்டு. அவருடைய அனுபவம், வாசிப்புப் பின்புலம் என்பவை முக்கியமானவை. அவர் மட்டத்திலேயே இலக்கியம் இலக்கிய மாக வாழ்கிறது. எனவே இலக்கியத்தைப் புரிந்துகொள்வதில் நாம் வாசகரின் எதிர்வினைக்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும்” என்பது கா. சிவத்தம்பியின் கருத்து.
எத்தனையோ ஆண்டுகளாகப் பாடநூல்களிலும் பிற நூல்களி லும் திறனாய்வு (விமரிசனம்) என்ற சொல்லின் விளக்கம், வரையறை, அர்த்தம் முதலியவை பேசப்பட்டிருக்கின்றன. திறனாய்வுக்கும்-மதிப்புரைக்கும், திறனாய்வுக்கும்-ஆராய்ச்சிக்கும் (ஆய்வுக்கும்) உள்ள வித்தியாசங்களும் கூறப்பட்டிருக்கின்றன. மீண்டும் அவற்றை இங்கே கூறத்தேவையில்லை.
திறனாய்வு வகைகளையும் அவரவர் மனப்பாங்கிற்கும், அவர்கள் காண்பதாகக் கருதும் பிரதியின் இயல்புக்கும் ஏற்ப, பலபேர் பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். இவை முக்கிய மல்ல. ஏறத்தாழ 1973 வாக்கில் எழுதிய கட்டுரையன்றில் க. கைலாசபதி, தமிழிலக்கியத் திறனாய்வு நான்கு வகைகளாக- இரசனை முறைத் திறனாய்வு, பகுப்புமுறைத் திறனாய்வு, பண்டித முறைத் திறனாய்வு, சமூக நோக்குத் திறனாய்வு என வளர்ந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்.
கா. சிவத்தம்பி, கூறுவது இது:
எழுபதுகளில் ஏற்பட்ட இலக்கியக் கொள்கைகளைத் தெளிவுபட எடுத்துக்கூற முனைவோர் இலக்கியவிமரிசனத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகத் தற்பொழுது நான்குமுக்கிய இலக்கியச்செல்நெறிகள் மேற்கிளம்பியுள்ளன. அவையாவன-
“1. பாடத்தை (text) அடிப்படையாகக் கொண்ட விமரிசன முறைமை
2. வாசகரை மையமாகக் கொண்ட விமரிசனக்கொள்கை
3. பாடத்தை மாத்திரமல்லாது படைப்பின் சூழமைவினையும் முக்கியப்படுத்தும் மார்க்சிய முறைமை
4. பெண்நிலைவாத விமரிசனமுறைமை
இவ்வாறு கூறிவிட்டு,
இந்நான்கும் மேனாடுகளிற் காணப்படுவதுபோன்று தமிழிலும் பயில்நிலையில் உண் டென்று கருதுவது பொருத்தமானதன்று. உதாரணமாக, இன்னும்தான் நம்மிடையே பெண்நிலைவாதக் கொள்கைகள் கண்ணோட்டங்கள் இலக்கியத்தில் முக்கியப்படுத்தப்
படவில்லை. பெண்நிலை எழுத்துக்கள்கூட இன்னும் பரந்துபட எழுதப்படவில்லை.
இந்தநிலையில் பெண் நிலைவாத விமரிசனம் என்பது இன்னும் இங்கு தொழிற்படாத ஒன்றாகவே எடுக்கப்படல் வேண்டும்”
என்று எச்சரிக்கை செய்கிறார்.
சில ஆசிரியர்கள் திறனாய்வு எட்டுவகை, பத்துவகை, பதினாலு வகை என் றெல்லாம் பட்டியலிட்டுக் குழப்பியும் பயமுறுத்தியும் இருக்கிறார்கள். இவையெல்லாம் உண்மையாகத் திறனாய்வுத் துறையில் ஈடுபடாமல், பாடப்புத்தகம் எழுதுவதால் வரும் குறைகள். பகுப்புமுறைத் திறனாய்வு, விதிமுறைத் திறனாய்வு, மதிப்பீட்டு முறைத் திறனாய்வு, வரலாற்றுமுறைத் திறனாய்வு, ஒப்பியல்முறைத் திறனாய்வு, பாராட்டு முறைத் திறனாய்வு, விளக்கமுறைத் திறனாய்வு, மனப்பதிவுமுறைத் திறனாய்வு என்றெல்லாம் பட்டியலிடுகிறார்கள்.
இம்மாதிரிப் பகுப்புகளில் பல சற்றும் பொருத்தமற்றவை. விளக்கம் என்பது அற்ற திறனாய்வு எதையேனும் பார்க்க முடியுமா? விளக்கம் தேவையான அளவு இல்லாவிட்டால் அது அபிப்பிராயமாக அல்லவா முடிந்துவிடும்? அப்புறம் என்ன விளக்கமுறைத் திறனாய்வு? தேவையான இடங்களில் தக்க விதிகளைப் (அது தொல்காப்பியமோ, மிஷல் ஃபூக்கோவோ) பயன்படுத்தாத திறனாய்வைக் காணமுடியுமா? அப்புறம் என்ன விதிமுறைத் திறனாய்வு என்றொரு பகுப்பு? ஓரளவேனும் மனப் பதிவு என்பது இல்லாத திறனாய்வு எதையேனும் காணமுடியுமா? அப்படி ஏதேனும் முற்றிலும் அறிவியல்பூர்வமான- அறிவியலைப் போன்ற திறனாய்வு எதுவும் உண்டா? பிறகு என்ன மனப்பதிவுத் திறனாய்வு?
இவையெல்லாம் பாடப்புத்தகத்திற்காக-விற்பனைக்காக, நாலு காசு பார்ப்பதற்காகச் செய்யப்படும் சாகசங்கள்.
அப்படியானால், திறனாய்வின் அடிப்படைப் பண்பு என்ன?
“விமரிசித்தல் என்பது மேலோட்டமான அபிப்பிராயம் சொல்வ தல்ல. அது நுண்ணிதான மதிப்பீடு ஆகும். அபிப்பிராயமாக அமையாது ஒரு தீர்ப்பாக அமைய வேண் டும். தீர்ப்பு என்பது எல்லா அமிசங்களையும் சீர்தூக்கிப் பார்த்து செய்யப்படும் ஒரு நடைமுறையாகும்” என்கிறார் கா. சிவத்தம்பி. மதிப்பீடு இல்லாவிட்டால் திறனாய்வு என்பது இல்லை.
வையாபுரிப்பிள்ளை இலக்கியத்திறனாய்வை இலக்கிய மதிப்புத்துறை என்றே குறிப்பிட்டுள்ளமை காணத்தக்கது.
திறனாய்வினை, அகவயத் திறனாய்வு, புறவயத் திறனாய்வு என்ற இரண்டிற்குள் அடக்கிவிடலாம் என்கிறார் ஒருவர். அல்லது இலக்கியத்தன்மைகளை ஆராயும், இலக்கியப் படைப்புமுறையை விளக்கும் திறனாய்வு என இரண்டிற்குள் அடக்கிவிடலாம் என்று கூறுகிறார். அகவயம்-புறவயம் இரண்டும் ஏதோ ஒரு விகிதத்தில் சேர்ந்திருப்பதுதான் திறனாய்வு. மதிப்பீடு என்பது அகவயம் இல்லாமல் புறவயமா? முற்றிலும் புறவயமாக மட்டுமே ஒரு நூலின் தகுதியை நிறுவமுடியுமா? அகவயமாக மதிப்பீடு செய்கிறோம். பிறகு புறவயமாக அதற்கான சான்றுகளைக் காட்டிப் பிறருக்கும் அந்தக் கருத்தினைத் தொற்ற வைக்க முயற்சி செய்கிறோம். திறனாய்வு என்பது ஒரு கருத்தேற்றம் தான்.
ஆனால் கருத்தேற்றம் என்பது எங்கே இல்லை? முன்பு சொன்ன உணவுவிடுதி உதாரணத்தில்கூட நமது கருத்தை இன்னொருவருக்கு ஏற்றுவதுதானே நிகழ்கிறது? இன்னொருவர் நம் கருத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்வரை அது கருத்தேற்றமாக எண்ணப்படுவதில்லை. அவர் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றால் கருத்தேற்றம் (இலக்கிய உலகில் ‘பிரச்சாரம்’) என்ற ‘கெட்டபெயரை’ இட்டு விடுகிறார்.
ஆகவே “ஐயோ, கருத்தேற்றமா, வேண்டாம் அந்தத் தொல்லை” என பயப்பட வேண்டாம். நம் குழந்தையை எந்தப் பள்ளியில் படிக்கவைக்க வேண்டும் என்று தீர்மானிக்கும்போது கூட நமது கருத்தேற்றம் அந்தக் குழந்தைமீது நிகழத்தான் செய்கிறது. அதற்கு அக்குழந்தை ஒருவேளை பின்னாளில் வருத்தப்படலாம். ஆனாலும் அதற்காகப் படிக்கவைக்காமல் இருந்துவிடுகிறோமா? எந்த நூலும் ஒரு குறித்த கருத்தமைவின் அடிப்படையில்தான் எழுதப்படுகின்றது என்பது வெளிப்படை.
விமரிசனம் அல்லது திறனாய்வு என்பது இயல்பான ஒரு மானிடச் செயல்பாடு; அதைச் செய்யாத மனிதன் எவனும் கிடையாது; கலை இலக்கியத் துறையில் அது செய்யப்படும்போது மானிட விடுதலைக்கு அது உதவுவதாக அமைய வேண்டும்.
இன்று பல விஷயங்களில் கருத்துமாறுபாடுகள் உள்ளன. உதாரணத்திற்கு, பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றைப் பற்றிச் சிந்தனைவேறுபாடுகள் உள்ளன.
பெண்கள் எழுதுவது என்பது மட்டும் பெண்ணியமாகாது. பெண்ணியம் என்பது பெண்களை ஆண்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களாகக் கருதுவதில்லை. பால்நிலை வேறுபாடுகளை யும், பால்நிலை வேறுபாடுகள் காரணமாகக் கற்பிக்கப்படும் சமமின்மைகள் யாவற்றையும் கண்டிப்பது பெண்ணியம் ஆகும்.
சிலர் பெண்ணிய எழுத்துகள் என்றால் பெண்கள்தான் எழுத வேண்டும், தலித்திய எழுத்தென்றால் தலித்துகள்தான் எழுத வேண்டும், ஏனெனில் அவர்களுக்குத் தான் அந்த வாழ்வனுபவம் இருக்கும் என்கிறார்கள். இது தவறான பார்வை. அப்படியானால், குழந்தையைப் பற்றிக் குழந்தைதான் எழுதவேண்டும்; நூறு வயதுக் கிழவனைப்பற்றி அவன்தான் எழுதவேண்டும்; முதலாளி யைப் பற்றி முதலாளிதான் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்ல வேண்டிவரும். இது சரியாகுமா? ஓர் எழுத்தாளன்- கலைஞன்-பிறர் அனுபவத்தில் தான் தோய்ந்து எழுதமுடியும். இதனை ஒத்துணர்வு-empathy என்கிறார்கள். இதை ஒப்புக்கொண்டு தான் இலக்கிய ஆய்வில் இறங்கவேண்டும்.
இன்று கருத்தியல் பற்றி மிகுதியாகப் பேசப்படுகிறது. கருத்தியல் என்றால் என்ன? சமூகத்தினுள் ஏற்படும் உறவுப் பரிமாறல்கள் வளரத் தொடங்கும்போது, அந்தச் சமூகத்தில் வாழும் மனிதர்கள் உலகம் பற்றியும், தங்களது சொந்தச் சமூக வாழ்க்கை பற்றியும், தெய்வம், சொத்து, அறம், நீதி ஆதியன பற்றியும், எண்ணங்களையும் நோக்குகளையும் மக்கள் உருவாக்கிக் கொள்கின்றனர். இவற்றினடியாகச் சமூகம் பற்றியும், அரசியல், சட்டம், கலை, இலக்கியம், தத்துவநோக்கு பற்றியும் கருத்தின் உருவமான பொதுவான எண்ண அமைப்பு ஒவ்வொரு வருக்கும் வளரத் தொடங்குகின்றது. அந்த எண்ண அமைப்புதான் கருத்தியல் என்பது. கருத்தியல்கள் மனிதர்கள்தம் அகத்திலும் புறத்திலும் இருக்கும் சூழலோடு கொள்ளும் உறவுகளா லேயே ஏற்படுகின்றன.
குறிப்பிட்ட சமூக, பொருளாதாரச் சூழல்கள் எத்தகைய கருத்தியல்களை ஏற்படுத்துகின்றன என்பதும், மனித இடர்ப் பாடுகள், சிக்கல்கள் தோன்றுவதற்கும், தொடர்வதற்கும் எவ்வாறு இடமளிக்கின்றன, எத்தகைய சமூக மாற்றங்களால் இவை மாறும் என்பதும் கருத்தியல்சார்ந்த விமரிசனத்துக்குள் வரும்.
எல்லாவற்றிற்கும் ஒரு புதிய வாசிப்புத் தருவதும் விமரிசனம் தான். காலத்தின் தேவை, அல்ல, கட்டாயம் அது. புதுமைப் பித்தன் இராமாயணக் கதையை மறுவாசிப்பு செய்தமாதிரி. ஆனால்: அதற்கான ஆயத்தங்கள் மிகுதியாகத் தேவை.
(விமரிசனம் என்ற சொல்லையும் திறனாய்வு என்ற சொல்லையும் சரிசமமாக இங்கே பயன் படுத்தப்படுகின்றன. ஒரே செய்கையைக் குறித்த இருவேறு மொழிச் சொற்கள் இவை என்றே நினைக்கிறேன். பத்திரிகைத் துறையில் ஈடுபட்டவர்கள் விமரிசனம் என்ற சொல்லையும், கல்வித்துறையில் ஈடுபட்டவர் கள் திறனாய்வு என்ற சொல்லையும் பயன்படுத்திவருகின்றனர்.)
நாம் மதிப்பீடு செய்ய முற்படும்போது முற்றிலும் புறவயமான மதிப்பீடு எதிலுமே சாத்தியமில்லை. நாம் ஒரு பங்கேற்பு ஆய்வாளராக மட்டுமே இருக்கமுடியும். நமது விருப்பு வெறுப்பு கள் பார்வைகள், கருத்தியல்கள், ஆகியவற்றின் அடிப்படையில்நம் மில் சிலருக்கு முக்கியமாகப் படக்கூடிய நிகழ்வுகள் வேறு சிலருக்கு முக்கியமற்றதாகத் தோன்றலாம் என்பதுபோன்ற சிக்கல்களை நாம் மறந்துவிடலாகாது. பல நூற்றாண்டுகள் முற்பட்ட கம்பனையே அண்ணாதுரை பார்த்த பார்வை வேறு, ஜீவா பார்த்த பார்வை வேறுதான்.
இன்னொன்று: பழைய முறையிலான வாசிப்பு முறைகளை வாசகர்கள் நன்கு அறிந்த பின்பே புதிய வாசிப்பு முறைகளுக்குச் செல்லவேண்டும் என்பது எனது கருத்து. இதைச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.
மேற்கத்திய நாடுகளில், அமைப்பியம், பின்அமைப்பியம் தோன்றுவதற்கு முன் னரே இலக்கியத் திறனாய்வுத்துறை, புதுத்திறனாய்வு அல்லது அழகியல் திறனாய்வு நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது. அதற்கு முன்னாலே புனைவியச் சார்பான படைப்பு களும் விமரிசனங்களும் இருந்தன. அவற்றிற்கு அடிப்படையான வாழ்நிலை அனுப வங்களும், தத்துவப் பின்புலமும் இலக்கியவளமும் அவர்களுக்கு இருந்தன. சுருங்கச் சொன்னால் ஒவ்வொரு பார்வையும், ஒவ்வொரு தத்துவமும் தோன்றுவதற் கான களம் அவர்களுக்கு இருந்தது.
எந்த ஒரு வாழ்க்கை அடிப்படையும் இல்லாமல், தத்துவப் பின்னணியும் இல்லாமல், புதிதாக மேற்கில் தோன்றிவிட்டதே, தவிர்க்க இயலாதே என்ற காரணத் திற்காக ஒன்றை அறிந்துகொள்ளலாம்: ஏற்றுக்கொள்வது வேறு. அறுபது சதவீத மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாட்டில், விவசாயிகளும் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில், பழங்குடிமக்கள் திட்டமிட்டுக் கொலை செய் யப்படும் நாட்டில், மார்க்சியம் தோன்றுவது இயல்பு, தவிர்க்க வியலாதது. ஆனால் பின்நவீனத்துவம் தோன்றுவது?
பின்நவீனத்துவம் இங்கு தோன்றுவது, பெரும்பாலோர் வாழ்க் கையை அடிப்படையாக வைத்து அல்ல, மேற்கத்திய பின்நவீனத் துவ, வணிகமயமாதலுக்குப் பிந்திய Late Capitalist சமுதாயத்தை இங்கே முற்றுமுழுதாகக் காணமுடியாது. உலகமயமாக்கலுக்குப் பின்பு உலகமுழுவதுமே ஒரேமாதிரியான மாற்றங்களுக்கு ஆட் பட்டுவிட்டன, ஆகவே இங்கும் அத்தகைய கலாச்சாரம் வந்து விட்டது என்று சிலர் கூறலாம். ஆனால் அப்போதும் நம் நாட்டின் தன்மை வேறு, அமெரிக்காவின் தன்மை வேறு.
எரிக் ஆப்ஸ்வாம் என்பவர், இருபதாம் நூற்றாண்டை Age of Extremes என்றார். அப்படிப்பார்த்தால், இந்தியாவை Land of Extremes எனலாம். இதில் முற்றிலும் மின்சாரத்தை அறியாத பழங்குடி மக்களும் உண்டு, விவசாயக் கூலி அடிமைகளாக, கொத்தடிமை களாக வாழ்பவர்களும் உண்டு. நகரங்களின் நடைபாதைகளில் வசதியென்பதையே அறியாமல் உறங்குபவர்களும் உண்டு, பெரிய மாடமாளிகைகளில் கோடிக்கணக்கான பணத்தில் புரள்பவர்களும் உண்டு. இடையில் ஒரு பன்றித்தனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு மேல்தட்டு மக்களைப் பார்த்து இது இல்லையே அது இல்லையே என்று ஏங்குபவர்களும் உண்டு.
இந்த நிலைமைக்கேற்ற கொள்கையைத்தான் நாம் கடைப் பிடிக்கவேண்டுமே தவிர, ஒரு சில உயர்மத்தியதர வாழ்க்கையி னர், பணக்காரர்களுடைய வாழ்நிலைகளை வைத்து அல்ல. இதற்கும் சிலர் கலை என்பதே மத்தியதர, உயர்மத்தியதர வர்க்கங்களின் செயல்பாடுதானே என்பார்கள்! இன்னும்கேட்டால், அது ஒரு சிறிய உள்வட்டத்தின் வேலை என்று சொல்லிவிடு வார்கள். கலை என்பது மக்களின் செயல்பாடு-அவர்கள் எந்த நிலையினராக இருந்தாலும்.
சிறுபான்மையினர் கருத்தியலைப் பெரும்பான்மையினர்மீது ஏற்றுவது காலங்காலமாக இந்தியாவில் நிகழ்ந்து வருகிறது. நிலவுடைமைச் சமூகத்தில் ஒருசில மேல் சாதியினர் அவ்வாறு இதுவரை செய்துவந்தனர். இப்போது மேற்கல்வி பெறும் வாய்ப் புள்ளவர்கள், வசதி பெற்றவர்கள் இவ்வாறு செய்துவருகின்றனர்.
தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றின் பின்னாலிருக்கும் தர்க்க நியாயங்களை ஏற்கத்தான் வேண்டும். ஆனால் அவற்றி லும் ஆப்பிரிக்க-அமெரிக்க கருப்பின வாதத்தையும், மேற்கத்திய வெள்ளைப் பெண்ணியத்தையும் முன்னோடிச் சிந்தனைகளாகப் பயன்படுத்துவதில் உடன்பாடிருக்கமுடியாது. நமக்கென்றொரு சிந் தனை-நமது மண்ணுக்கேற்ற சிந்தனை இல்லாமல் போய்விட் டதா?
7
அமெரிக்காவிலிருந்து வந்தது புதுத்திறனாய்வு. சி.சு. செல் லப்பா அதைப் பரிந்துரை செய்தார். அது நமக்கு அந்நியமானதா? புதுத்திறனாய்வின் அடிப்படை ஆழ்ந்த வாசிப்பு. பழந்தமிழ் நோக்கில்கூறினால் எழுத்தெண்ணிப் படித்தல். இது நமக்கு ஏற்கெனவே வாய்த்திருந்த நோக்குதான். சிவஞானமுனிவரைவிட எழுத்தெண்ணி நூல்களைக் கற்ற ஒருவரைக் காட்ட முடியுமா?
ஆனால் இரண்டு வேறுபாடுகள்: புதுத்திறனாய்வு முறையில் சமூகப்பின்னணி ஆராயப்படுவதில்லை. அதனால்தான் அது நாவல் என்ற இலக்கிய வடிவத்தை ஆராய இயலாமலே போயிற்று. இலக்கியத்தின் சமூக அடிப்படையைப் புறக்கணித்த தாலும், அமெரிக்காவில் தோன்றியதாலும், நமது மார்க்சிய விமரிசகர்கள் அதை மார்க்சியத்திற்கு முரணானது என்று கருதிவிட்டார்கள். ஆனால் ‘தமிழ் நாவல் இலக்கியம்’ எழுதிய மார்க்சிய விமரிசகர் கைலாசபதிதான், புதுத்திறனாய்வின் கொள் கைகளை விளக்கும் ‘கவிதை நயம்’ என்ற நூலையும் எழுதியிருக்கிறார். இலக்கியத்தை அழகியல் அடிப்படையில் ஆராய்வது எப்போதுமே முதல்தேவை. ஆனால், தேவையான அளவு எந்தத் திறனாய்விலும் சமூகப்பின்னணி நிச்சயமாக இடம்பெற வேண்டும், நன்கு ஆராயப்படவேண்டும்.
மார்க்சியத் திறனாய்வுகள் பலவற்றில் போதிய அளவு அழகியலுக்கு இடம்தரப் படுவதில்லை. இது முக்கியமான குறை. முதலில் நூல்களை அழகியலின் அடிப்படையில் ஆராய்ந்தபிறகு தான் அவற்றைத் தத்துவப்பின்னணியில் மதிப்பிடவேண்டும். ஆனால் இலக்கியத்தின் ஒரு குறிப்பிட்ட வடிவமே அதன் உள்ளடக்கத்தை-அதன் அடிப்படைக் கருத்தைப் பொதிந்து வைத்திருக்கக்கூடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
காலத்தினூடாக, நமது இன்றைய சிந்தனைக்கும் தத்துவப் பின்புலத்திற்கும் தொடர்பற்ற, அல்லது அதற்கு முரண்பட்ட இலக்கியங்களும் ஏராளமாக நிலைபேறு கொண்டுள்ளன. கார்ல் மார்க்ஸ் போன்ற அறிஞர்கள், கிரேக்க இலக்கியம் போன்ற பழங்கால, இன்றைக்குத் தேவையான மதிப்புகள் அற்ற இலக்கியங்களையும் போற்றி னர். இதனை உணராமல், பழைய இலக்கியங்களைத் தூக்கில்போடவேண்டும், நமக் குத் தேவையான சிந்தனை அடிப்படையிலேயே இலக்கியத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தவறானது. இதனால் வளமான நமது மரபை இழந்து விடுவோம். புதிதாகவரும் இலக்கியங்களும் வாழ்க்கை அடிப்படையில் உருவாகமாட்டாது.
1983இல் 1900 முதல் 1980வரை தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு என்ற நூலை நான் எழுதியபோது அதில் முன்னுரையில் கூறப்பட்ட ஒரு கருத்து இது:
“தமிழில் திறன் மிகுந்த திறனாய்வாளர்கள் மிகுதியாகக் கிடைக்கவில்லை. வரன்முறையாக வந்த பாராட்டுமுறைத் திறனாய்வுகள், இரசனை நெறிப்பட்ட மனப்பதிவுகள், உள்ளடக்க ரீதியான ஆய்வுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் இவை எந்தவகையிலும் படைப்புத்திறனும் தரமும்உயர உதவமாட்டா. ஆகவே இவ்வகை நூல்களைச் சிறந்த திறனாய்வு நூல்களாக ஏற்க மனம் ஒப்பவில்லை.” (ப.3)
இந்தக் கருத்தைக் கூறி முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு யோசிக்கும்போது இன்றைக்கும் நிலைமை ஒன்றும் பெரிதாக மாறிவிட்டதாகத் தோன்றவில்லை. இதற்கு முக்கியக் காரணமாக, இலக்கிய அரசியல் உள்ளது. பாராட்டு நெறியும், நிலவுடைமை வாழ்க்கைமுறையும் மாறாமல் இருக்கும்போது திறனாய்வு மட்டும் மாறிவிடுவதில்லை.
மேலும் அதே நூலில் கூறிய இன்னொரு கருத்தையும்- அதுவும் இன்றும் பொருந்தும் என்பதால்-இங்கே முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.
திறனாய்வு எது என்று விளக்குவதைக் காட்டிலும் எது திறனாய்வு இல்லை என்று சொல்லுவது எளிது என்று ஜான்குரோ ரேன்சம் என்ற அமெரிக்கப் புதுத்திறனாய்வாளர் எதிர் முகமாகத் திறனாய்வின் தன்மைகளை விளக்குகிறார். பின்வரும் வகைகள் யாவும் திறனாய்வு என்று ஏற்கப்படமாட்டா என்கின்றார் அவர்.
1. ஒரு நூலைப் படித்ததும், படிப்பவர்க்கு ஏற்பட்ட தனிப்பட்ட மனவெழுச்சிகள், உணர்வுகள், பதிவுகள் முதலியன;
2. ஒரு படைப்பின் விரிவுரை, விளக்கவுரை, சுருக்கம் முதலியன;
3. வரலாற்றாய்வுகள்; (இவற்றில் ஆசிரியரின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆய்வுகளும் அடங்கும்)
4. மொழியியல் ஆய்வுகள்; (இவற்றில் மறைக்குறிப்புகள், இணைக்குறிப்புகள் போன்றவற்றின் விளக்கமும் அடங்கும்)
5. அறக்கருத்துகள் பற்றிய ஆய்வுகள்;
6. இலக்கியத்தின் பொருளை அடிப்படையாகக் கொண்ட பிற ஆய்வுகள். ஆனால் இவை அனைத்தையுமே ஒரு திறனாய்வாளன் தனக்கேற்ற வகையில் பயன் படுத்திக்கொள்ள முடியும் என்கிறார்.
இது ஒரு புதுத்திறனாய்வாளரின் கருத்து. இக்கருத்து கூறப் பட்டு அறுபதாண்டுகளுக்கும் மேல் ஆனாலும், இடையில் அமைப் பியம், பின்னமைப்பியம், பின்நவீனத்துவம் போன்ற பல இயக்கங் கள் தோன்றி விமரிசகர்களின் பார்வையையும், விமரிச கர்கள் பற்றிய பார்வையையும் மாற்றியிருந்தாலும், இக்கருத்து மிக அடிப்படையானது. நாம் திறனாய்வுக்கான பிரதிகளைத் தேர்ந் தெடுப்பதற்கும் இப்படிப்பட்ட ஒரு வழி காட்டி தேவை. ஆனால் இதனை முழுவதும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ் இலக்கியத் திறனாய்வின் பெரும்பகுதியும் “ஒரு நூலைப் படித்ததும், படிப்பவர்க்கு ஏற்பட்ட தனிப்பட்ட மனவெழுச்சிகள், உணர்வுகள், பதிவுகள் முதலியன” என்ற முதல் வகையைச் சேர்ந்ததாகவே அமைந்திருக்கிறது.
8
இலக்கிய வளர்ச்சியும் திறனாய்வு வளர்ச்சியும் ஒன்றை யொன்று சார்ந்தவை. திறனாய்வு செம்மையாக அமைவது நல்லிலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்பது பழங்காலத்திலிருந்து நிலவிவரும் நோக்கு. கலைகளில் எதைத் தேர்ந் தெடுப்பது, குறிப்பாக, இலக்கிய நூல்களில் எவற்றைத் தேர்ந்தெடுப்பது என்று வழிகாட்டுவது திறனாய்வாளன் பணி என்றும் கருதப்பட்டுள்ளது.
இன்றைய நோக்கு, திறனாய்வும் ஓர் இன்றியமையாத இலக்கிய எழுத்துமுறை என்பதுதான். இலக்கியங்கள் சரிவர வளராத சில காலப்பகுதிகளில், கட்டுரைகளும் திறனாய்வுமே இலக்கியங்களாக அமைவதையும் உலகமொழிகள் பலவற்றில் காண்கி றோம். ஆனால் திறனாய்வும் இலக்கியம்தான் என்பதை ஏற்கும் கண்ணோட்டம் இன்னும் தமிழில்தான் தோன்றவில்லை.
அரிஸ்டாடில் முதலாகவே அறிஞர்கள் பலரும் திறனாய்வாளர் களாகவும் படைப்பாளிகளாகவும் ஒருங்குவைத்தே எண்ணப்பட் டுள்ளனர். ஆனால் தமிழில் பெரும்பாலும் படைப்பிலக்கியம் என்று பேசுபவர்கள் எவரும் திறனாய்வினை இலக்கியத்தின் ஒரு பகுதியாக ஏற்காமலேயே பேசுகின்றனர். இது இனிது, அது நல்லது என்று மட்டுமே கூறும் இனியவை நாற்பதையும், இது இன்னா, அது இன்னா என்று பட்டியலிடும் இனியவை நாற்பதையும் இலக்கியமாக ஏற்றுக்கொண்ட தமிழ் உள்ளம் திறனாய்வு மட்டும் இலக்கியமல்ல என்று கண்டுபிடித்துவிட்ட தாம்! சைவ சமய சாத்திரங்களையெல்லாம் இலக்கியமாக ஏற்றுக்கொண்டுள்ள தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களுக்கு, திறனாய்வு, இலக்கியப்படைப்பாகத் தோன்றாமல் போய் விட்டது ஆச்சரியம்தான்.
இந்த நோக்கு தவறு என்பதை மிகச் சாதாரணமான ஆங்கில இலக்கிய அறிவு இருந்தாலே புரிந்துகொள்ளமுடியும். ஆங்கில இலக்கியப் படிப்பு சாதாரணமாகவே சர் ஃபிலிப் சிட்னி, டிரைடன், ஜான்சன் போன்றவர்களின் திறனாய்வுகள், கட்டுரை கள் போன்றவற்றிலிருந்துதான் தொடங்குகிறது. மேற்குறிப்பிட்டவர் களில் டிரைடன் அன்றிப் பிற இருவரும் இன்றைய நோக்கில் படைப்பிலக்கிய அறிஞர்களாக அறியப்பட்டவர்கள் அல்ல. இவர்களைப் படிக்கும்போதே அடியோட்டமாக பிளேட்டோ, அரிஸ்டாடில் முதற்கொண்டு லாஞ்ஜைனஸ் வழியாக இலக் கியத்துக்குத் தேவையான தத்துவஞானிகளின் கருத்துகளும் பேசப்படுகின்றன. விமரிசனம் அல்லது திறனாய்வு இலக்கியப் படைப்பு அல்ல என்றால், ஆங்கில இலக்கியத்தைப் பாடமாக வைத்த எல்லாக் கல்வியாளர்களையும் எதில் சேர்ப்பது?
சரியான விமர்சனம் இல்லாத தனிமனிதனும் சரி, ஒரு சமூகமும் சரி, தானாகவே அழிந்துபோவர். தமிழிலக்கியம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் சரியான திறனாய்வு வளர வேண்டும். திறனாய்வு இல்லாத இடத்தில் இலக்கியமும் தன் இருப் பை இழந்துவிடுகிறது. இது வரலாறு. இது ஒருபுறம் இருக்க, அமைப்பியம், பின் அமைப்பியம் சார்ந்த அறிஞர்கள் திறனாய்வும் முதன்மையான ஓர் இலக்கியப் பிரிவுதான் என்பதை நன்கு நிலை நாட்டியும் உள்ளனர்.
ஒருவன் தன்னைத் திறனாய்வாளனாக ஆக்கிக் கொள்வது என்பது இலக்கிய அல்லது கலைமதிப்புகளைக் கணித்துத் தீர்ப்புக்கூறும் நீதிபதியாகத் தன்னை உருவாக் கிக்கொள்ளும் செயலாகும். ஏற்கெனவே இதைத்தான் கருத்தேற்றம் செய்வது என்று முன்னரே கூறினோம்.
இவன் என்ன தீர்ப்புக் கூறுவது, மதிப்பிடுவது என்ற அகம்பாவம் தமிழ் இலக்கியத் துறையில் மலிந்துகிடப்பதால் இலக்கியத்திறனாய்வுக்கு கௌரவம் அளிகக மறுக்கின்றனர். (விமரிசனம் எதிர்ப்புகளையும் ஏச்சுகளையுமே அதிகம் பெற்றுத் தரக் கூடிய விவகாரம். எதையும் தாங்கிக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களே விமரிசனத்துறையில் திறமையாகச் செயல்படமுடியும்.)
இரண்டாவதாக, மதிப்பிட்டால் வெளிப்படையாக நமது சார்பைக் காட்டிக்கொள்ள வேண்டுமே, அதனால் கிடைக்கக்கூடிய லோகாயத ஊதியங்களை இழந்து விடுவோமே என்று நினைக்கின்ற சிலர் மதிப்பிடுவதை-அதாவது திறனாய்வில் ஈடு படுவதை விரும்புவதில்லை. தங்களைக் காத்துக்கொள்ள அவர்கள் திறனாய்வுச் செயல்பாட்டின் மீது புழுதிவாரி வீசுகின்றனர்.
மூன்றாவதாக, இன்றைய தமிழ்த்திறனாய்வில் போதிய கலைச் சொற்கள் இல்லா மையால், அது சரிவரச் செயல்படவில்லை. மனம்போன போக்கில் ஆங்கிலச் சொற்க ளைத் தமிழில் மொழிபெயர்த்து மூஞ்சியில் வாரி வீசுகின்றனர். சமூக ஏற்பு நிலை யிலுள்ள, மரியாதையும் புகழும் பெற்றுவிட்ட சிலர் அவ்வாறு செய்யும்போது அவை நிலையாக ஏற்கப்பட்டும் விடுகின்றன. கடைசியில் வேறுவழியின்றி அவற்றை வழு வமைதி என்று ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
ஆனால் இந்த நிலை புதிய சிந்தனை உருவாக்கத்திற்கும், புதிய கலைச் சொற் கள் உருவாக்கத்திற்கும் ஏற்றதன்று. திறனாய்வாளன் தன்கால இலக்கிய மதிப்பீட்டை மட்டும் கவனிக்கலாகாது. எதிர்காலச் சிந்தனை வளர்ச்சியையும் கவனிக்க வேண்டும். காரணம், இன்று திறனாய்வு, சிந்தனை வரலாற்றின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது.
மேலும் கலைச்சொற்கள் பற்றிய சமனின்மையும் பொருந்தாப் பயன்படுத்தலும் குழப்பத்தை விளைவிக்கிறது. உதாரணமாக, Deconstruction என்ற ஒரு சொல்லுக்குக் கட்டவிழ்ப்பு, கட்டுடைத் தல், தகர்ப்பமைப்பு, சிதைவாக்கம், ஒழுங்கவிழ்ப்பு என்று எத்தனை சொற்கள்? இவை வாசகர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்கக்கூடியவை. டி-கன்ஸ்ட்ரக்ஷன் என்ற கருத்தாக்கத்தை /கருத்தின்மையாக்கத்தை உருவாக்கியவர் டெரிடா. அவருடைய ஆழமான நோக்கில் இச்சொல்லைப் பயன்படுத்தாமல், எந்த எதிர்ப்புக்கருத்தையும் இன்று கட்டுடைத்தல் என்று குறிப்பிடும் வழக்கம் வந்து விட்டது. இவ்வாறு திறனாய்வுக் கருத்துகள் ஆழமான சிந்தனையின்றிப் பயன்படுத்தப்பட்டு நீர்த்துப்போகும் நிலை தமிழில் உருவாகியுள்ளது. இருபதாண்டுகளுக்கு முன் இதுபோலத்தான்-நனவோடை என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஒரு மோஸ்தராக (fashion)இருந்தது.
இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம், “குறித்த கருதுகோள் பற்றி விமர்சகர்களிடையே நிலவும் சமனற்ற அறிவுமட்டங்கள் தான்” என்ற சிவத்தம்பியின் கருத்தை நாம் ஓரளவுதான் ஏற்றுக்கொள்ளமுடியும். திறனாய்வுத்துறை, முற்றிலும் கருத்து ரைக்கும் மானிடத் துறையுமன்று, அறிவியல் போன்றதொரு அறிவுத்துறையும்தான். இதனைப் புறக்கணித்து, அகவயமான கருத்துகளையும் தீர்ப்புகளையும் மதிப்பீடு களையும் செய்வது போலவே அகவயமான சொல்லாக்கங்களும் இங்கு நிறைந்துள் ளன. ஆனால் கூடியவரை இந்நிலையை மாற்றவேண்டும்.
இலக்கியத் திறனாய்வு பற்றி அறிஞர் கா. சிவத்தம்பி கூறுகின்றார்:
“விமரிசித்தல் என்பதுமேலைநாட்டு மரபுவழிவந்த ஒரு நோக்குமுறைமை; நயத்தல் என்பது ஏற்கெனவே நமது மரபிலி ருநத ஒரு நடைமுறையே. இது ஆங்கிலத்திற் கூறப்படும் Appreciation என்பதோடு இணைந்து நிற்பது. ஆனால் ஒரேயரு வித்தியாசம் உண்டு. மேலைநாட்டு மரபில் அப்பிரிசியேஷன் என்பது உரைப்பகுதிகளையும் உள்ளடக்கும். தமிழில் நயத்தல் என் பது கவிதைககு மாத்திரம் உரிய ஒரு செயற்பாடாகவே கொள்ளப்படும் ஒரு வழக்கு நம்மிடையே உண்டு. மற்றது, நமது மரபிலுளள கதாகாலட்சேப மரபாகும். இதில் ஒரு இலக்கிய சிலாகிப்பு முறைமை உள்ளே நிற்கிறது. படியாதவர்களுக்கு உயர் இலக்கிய மரபில் உள்ளன பற்றி அறிமுகம் செய்தலும், அவை யாவும் மிகுந்த ரசனைக்குரியன என்று கூறுதலும் இதன் பண்பாகும.
நயத்தலுக்கான பயிற்சியிலுள்ள முக்கியம் என்னவென்றால், இந்த அமிசங்கள் இல்லை யென்றால் அது நல்ல இலக்கியப் பகுதி ஆகாது என்பதை மறைமுகமாக உணர்த்துவது ஆகும். நயத்த லுக்கான பயிற்சியினூடாக மதிப்பீட்டுக்கான ஒரு பயிற்சியும் வழங்கப் படுகிறது. விமரிசனம் என்பது பிரதானமாக மதிப்பீடு தான். நயத்தல் விமரிசித்தலுக்கு இட்டுச் செல்லவேண்டும். விமரிசித்தல் என்பது மேலோட்டமான அபிப்பிராயம் சொல்வ தல்ல. அது நுண்ணிதான மதிபபீடு ஆகும். அபிப்பிராயமாக அமையாது ஒரு தீர்ப்பாக அமையவேண்டும். தீர்ப்பு என்பது எல்லா அமிசங்களையும் சீர்தூக்கிப்பார்த்து செய்யப்படும் ஒரு நடைமுறையாகும். நல்லவற்றை ரசிப்பது என்பது அடுத்து உடனே வந்துவிடுவதல்ல. அதற்கு நல்ல பழக்கம்வேண்டும். ரசிப்புக்குத் தரப்படுவன எல்லாம் நல்ல ரசனையுடையவை அல்ல”. (கா. சிவத்தம்பி, தமிழ் கற்பித்தல், ப.125)
மேற்கண்ட கூற்று திறனாய்வுக்கும், ஏன் அதற்கு அடிப்படையான ரசனைக்கும்கூடப் பயிற்சிவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பயிற்சி மிகக்குறைவு.
கடைசியாக ஒன்று: தமிழில் போதிய அளவு திறனாய்வு இல்லை, வளரவில்லை. திறனாய்வின்மை என்பது மொழி வறுமையை உண்டாக்கும். மொழிவறுமை என்பது ஓர் இனத்துக்கும் ஒரு நாட்டுக்கும் விளையும் வறுமையாகும்.
விமரிசனம் என்பது மொழியின், இலக்கியத்தின், சற்றே விரிவாக நோக்கினால், கலையின்- எல்லைக்குள் நின்று ஆராய்ந்து தீர்ப்புக்கூறும் செயல்முறை மட்டுமல்ல. முன்பு கூறியதுபோல, மனிதனின் ஆதாரச் செயல்பாடே திறனாய்வுதான். திறனாய்வு இன்றி ஜனநாயகம் இல்லை. வாக்களித்தல்கூட இல்லை. தனித்தியங்குதல் என்பதும் இல்லை. விடுதலை அறவே இல்லை.
இந்தியாவில் திறனாய்வு அற்றுப்போய் எல்லாரும் கோஷம்போடும் நிலை இருப்பதனால்தான் ஜனநாயகம் என்பதை நாம் அடைய முடியவில்லை. எதையும் பகுத்தாராய்ந்து திறனாய்வு செய்யும் மனநிலை இருந்தால் மனிதன் இவ்வளவு மோசமான நிலையில் வாழமாட்டான். ஏனென்றால் திறனாய்வு, ஒருதுறையில் செயல்படும் செயல்முறை மட்டுமல்ல, வாழ்க்கை யின் அனைத்துப்பகுதிகளிலும் செயல்படுவது. எனவே கட்சியா யினும், அரசியலாயினும், பொருளாதாரம் ஆயினும், அறிவியல் ஆயி னும் எத்துறையிலும் அது செயல்படும். திறனாய்வு வேறு பகுத்தறிவு வேறு அல்ல.
தங்களுக்கு ஆதாயம் இல்லாமல் போய்விடுமே என்பதற்காகப் பகுத்தறிவே வேண்டாம், (மூட)நம்பிக்கைகளே, விசுவாசமே போதும் என்று சில கும்பல்கள்-பெரு முதலாளிகள், உயர்சாதிகள், மதவாதிகள், அரசியல்வாதிகள் போன்றோர்களும் அவர் களின் அடிவருடிகளும் கூக்குரலிடலாம். அதற்காகத் திரைப்படம், தொலைக்காட்சி முதலிய ஊடகங்களையும் பயன்படுத்தலாம். ஆனால் பகுத்தாராய்ந்து, திறனாய்வு செய்யும் மனம்கொண்ட ஒரு சமூகம் மட்டும்தான் தனக்கு நன்மையானதைத் தேர்ந்தெடுக்க முடியும். எனவே திறனாய்வுக்கல்வி மனிதனுக்கு மிகஅடிப்படையானது மட்டுமல்ல, குழந்தைப்பருவத்திலிருந்தே வளர்க்கப்பட வேண்டிய ஒன்று.
விசுவாசமும் பக்தியும் நம்பிக்கையும் அரசியல் கட்சிக்காரர் களுக்கும் ஆதிக்க வாதிகளுக்கும், அவர்கள் நம்பியுள்ள அதிகாரி களுக்கும், முதலாளிகளுக்கும் தேவை யானவை. அவர்களுக்குத் திறனாய்வு ஆபத்தானது. எனவே நம் நாட்டில் மூடத்தனங்களும் புராணக்கதைகளும் இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் போற்றி வளர்க்கப்படுகின்றன. முதலில், இராமாயணம், மகாபாரதம் போன்ற தொலைக்காட்சித் தொடர்கள். அவையும்போய் அம்மன், அனுமான் முதற்கொண்டு ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றிய மூடத்தனமான புராணக்கதைகள் இவற்றில் வெளியிடப்படு கின்றன. திரைப்படங்களும் அவ்வாறே. மூடத்தனமான புராணக் கதைகளை வெளியிட முடி யாத கிறித்துவம் போன்ற மதங்களில் விசுவாசம், நோயிலிருந்து மீண்டெழுதல் அடிப்படையிலான கட்டுக்கதைகளை நிறுவும் சொற்பொழிவுகள் தொலைக்காட்சி களில் வெளியிடப்படுகின்றன. விசுவாசமும் அற்புதச் செயல்க ளும் தான் வாழ்க்கை என்றால் சுனாமிகள் ஏன் தோன்றுகின்றன?
அதனால்தான் “தமிழ் இலக்கியத் திறனாய்வு, குறைந்த பட்சமான பொதுப் பண்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் எழுத்தாளருக்கு மட்டுமின்றி, சமுதாயம் முழுவதற்குமே பயன்தரும் ஓர் ஆய்வறிவுத் துறையாக அமையும்” என்கிறார் கைலாசபதி. திறனாய்வு ஓர் ஆய்வறிவுத் துறையாக அமைவது இரண்டாம் பட்சமானது. முதலில் அது ஒரு மனப்பான்மை. அந்த மனப்பான்மை இன்றி நல்ல சமூகம் அமைய இயலாது. அறிவியல் என்ற துறையினால் விளைந்த பயன்களை நாம் எல்லா ரும் பயன்படுத்துகிறோம். ஆனால் அறிவியல் மனப்பான்மை என்பது எத்தனை விழுக்காடு பேருக்கு இருக்கும்? அந்த விழுக்காட்டை மேம்படுத்துவதுதான் நமது நோக்கம். அறிவியல் மனப்பான்மை வேறு, திறனாய்வு மனப்பான்மை வேறு அல்ல. மீண்டும், மானிடவிடுதலையே திறனாய்வின் நோக்கம் என்பதை வலியுறுத்திவிடலாம். இளம் தலைமுறை யினருக்கு இதனைச் சொல்லலாம்:
ஒரு தலைமுறைக்குமுன் எதிர்த்துப் போராடவேண்டிய கொடுஞ் சக்திகளாக உலக அளவில் பெருமுதலாளித்துவமும் இந்தியாவில் சாதியமும்தான் இருந்தன. இப்போது சமூகநோக்கம் கொண்டவர்களுக்குப் பொறுப்பு அதிகமாகியுள்ளது. (ஆனால் சமூக நோக்கற்றவர்களை, சிந்தனையற்ற கும்பல் மக்களை உருவாக்கு வதே நமது கல்விமுறையின் முக்கிய நோக்கமாகவும், தொலைக் காட்சி, திரைப்படம் போன்ற பெரும் ஊடகங்களின் செயல்பாடா கவும், அரசியல்வாதிகளின் நோக்கமாகவும் உள்ளது!) உலகளா விய பன்னாட்டு முதலாளித்துவமும், பெருங்கலாச்சாரச் சீரழிவும், இவை யாவற்றிற்கும் மேலாக இன்னும் எத்தனை காலத்திற்கு மனித இனம் உயிர் தரித்திருக்க முடியும் என ஏங்கவைக்கும் சுற்றுச்சூழல் பேரழிவும் நம்மை எதிர் கொள்கின்ற காலம் இது. இன்றைய படைப்புகளும் விமரிசனமும் இவற்றை எதிர்க்கப் பயன்படட்டும்!

—–

இலக்கியம்