மானிட அனுபவங்களின் வெளிப்பாடே கவிதை. அனுபவங்கள் புலன்களால் அமைகின்றன. உதாரணமாக, வசந்தகாலம் என்று சொல்லும்போதே, அது பற்றி நமக்குள்ள சில உணர்வுகள், அதைப்பற்றி நாம் சிந்தனையிற் கொண்டுள்ள சில எண்ணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் சில புலன்உணர்வுத் தொகுதிகள் தோன்றுகின்றன. நீலவானம், வெண்மேகங்கள், பூக்கள், அவற்றின் வாசம், காலைநேரத்தில் பறவைகளின் பாடல். நறுமணத்தின் பரவல். தூய காற்று உடலின்மீது மோதும் பரவசம். பசுமை. அழகிய வயல்கள், தோப்புகள், தோட்டங்கள் எல்லாம் கண்முன் வருகின்றன. எனவே கவிஞனின்மொழி சாதாரண மொழியைவிட அதிகமும் உணர்வுசார்ந்ததாக இருக்கவேண்டும். அதில் படிமத்தன்மை காணப்படவேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
மிகஆச்சரியமானமுறையில் வண்ணமயமான அனுபவங்களை எழுப்புவதில் படிமத்தன்மை சிறப்பாகப் பயன்படுகிறது என்பதால், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், சிந்தனைகளைக் குறிப்பாக உணர்த்தவும், உணர்வுகளைமனத்தில் மீளாக்கம் செய்யவும் பயன்படுவதால் கவிஞனுக்கு ஒரு விலைமதிப்பற்ற மூலவளம் இதுதான். கவிஞர்கள் அருவமான, படிமத்தைக் கொள்ளமுடியாத வார்த்தைகளை விரும்புவதில்லை. மாறாக, உருவத்தன்மைகொண்ட, பருமையான, படிமத்தை ஏற்கக்கூடிய வார்த்தைகளை மிகவும் விரும்புகிறார்கள்.
பலவேறு துறைகளில் படிமம் என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உண்டு. அடிப்படையில், ஒன்றைப் போன்ற உருவம், வழிபாட்டிற்குரிய சிலை, சிற்பம், ஓவியம் முதலியன, கண்ணாடியில் பிரதிபலிக்கின்ற பிம்பம், ஓர் உருப்பெருக்கியால் பெற்ற பிம்பம் போன்றவை இதன் அர்த்தங்கள். உணர்வும் அறிவுச் சேமிப்பும் இணைந்து உருவாக்கும் மனக்காட்சி இது. சொல்லோவியம் என்று படிமத்தைச் சொல்லலாம். மனக்காட்சி என்ற அர்த்தத்தில் சாதாரணமான மக்களும் பயன்படுத்துகிறார்கள். சான்றாக, அந்த நடிகரின் இமேஜ் இப்படி அமைந்திருக்கிறது, இந்த நடிகை ஏற்ற பாத்திரத்தினால், அவரது இமேஜ் கெட்டுவிட்டது போன்ற கூற்றுகளை எடுத்துக்காட்டலாம்.
இலக்கியப் படிமங்கள் என்றால், சொற்களால் உணர்வுச் சித்திரமாக அமைந் திருக்கும். ஓரளவு உருவகத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். அவ்வுருவகத்தின் அடித்தளத்தில் மனிதஉணர்வு ஒன்று தொக்கிநிற்கும். வாசகரை இழுத்துப் பிடித்து, அவர்கள் மனத்தில் தைக்கின்ற வேகம் அதனுள் இருக்கும். தான் உணர்த்தவரும் பொருளோடு மெய்யான நெருக்கம் கொண்டதாக இருக்கும். இதுவரை காணப்படாத, அனுபவிக்கப்படாத துல்லியத்தோடு அது அமைந்து, புதிய தரிசனத்தின் வெளிப்பாட்டுணர்வைத் தருவதாக இருக்கும் (Precision and Revelation).
தமிழில் படிமம்பற்றிய சிந்தனை பழங்காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. தொல்காப்பியம் ‘பல்புகழ் நிறுத்த படிமையோனே’ என்று ஆண்டுள்ளது. இன்று படிமம் என்றசொல் Image என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாக வழங்குகிறது. இச்சொல்லிலிருந்துதான் Imagination (கற்பனை) என்னும் சொல் பிறக்கிறது. ஏறத்தாழ எழுபதுகளி லிருந்து படிமம் என்ற சொல் மிகுதியாகத் தமிழில் வழங்கிவருகிறது. தொடக்கத்தில் உருக்காட்சி என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளனர் (தமிழண்ணல், குளோறியா சுந்தரமதி). இச்சொல், படிமத்தின் இயல்பைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது. கவிஞர் சொற்களால் வருணிக்கின்ற ஒரு காட்சி வாசகர் உள்ளத்தில் தெளிவான காட்சியாக உருப்பெறுவது படிமம் ஆகும். உருக்காட்சி என்ற சொல் இக்கருத்தைத் தெளிவாகவே தெரிவிக்கிறது.
புதுக்கவிதை பிரபலமாகுமுன்புவரை கற்பனை என்ற சொல்லே கற்பனையின் செயல்பாட்டையும் (அதாவது இமேஜினேஷன்), செயல்விளைவையும் (அதாவது இமேஜ்) குறிக்கும் ஒரேசொல்லாக வழங்கியது. 1960கள் வரை பாரதியாரின் கற்பனைத் திறத்தை விளக்குக போன்ற கேள்விகளையே வினாத்தாளில் காண இயலும். இன்றோ, பாரதியாரின் படிமத் தன்மை பற்றிக் கட்டுரை வரைக என்று கேட்கிறார்கள்.
புதுக்கவிதை புகுந்தபிறகு கற்பனை என்றசொல்லின் போதாமை கருதிப் போலும், படிமம் என்ற சொல்லை சுவீகரித்துக்கொண்டனர். எனவே படிமம் என்பது (கவிதையில்) கற்பனையின் விளைவான காட்சிப்படுத்தும் ஒரு சொற்கோவையையும், அச்சொற்கோவை உருவாக்கும் மனச்சித்திரத்தையும் ஒருங்கே குறிக்கிறது.
சங்க இலக்கியத்தில் அருமையான படிமங்கள் பலப்பல காணக்கிடக்கின்றன. இன்றைய படிமம், சங்க இலக்கியத்தில் உவமை, உருவகம், உவமப்போலி போன்ற பலவற்றைத் தன் கூறுகளாகக் கொண்டு இயங்கிவந்திருக்கிறது. படிமம் என்பது கவிதையின் அடிப்படை இயல்பு. எனவே எக்காலக் கவிதையிலும் (சங்ககாலமாயினும் பக்திக் காலமாயினும் சிற்றிலக்கியங்களாயினும்) படிமம் உண்டு. இன்றுதான் படிமம் தோன்றி விட்டது என்று கருதுவது அறியாமையிலும் அறியாமை. தமிழில்தான் இந்தச் சொல் புதியது. ஆங்கிலத்தில் மிகப் பழையது. 1900த்தில் ஆங்கிலப்பாடத் தேர்வு எழுதிய வரும் Shakespeare’s imagery பற்றிக் கட்டுரை எழுதியிருப்பார்.
‘‘படிமங்கள் தன்னுணர்வற்ற நிலையில் மனத்தில் சேகரிக்கப்பட்டு வகைப் படுத்தப்பட்ட அனுபவங்கள்’’ என்று ஒரு வரையறை சொல்கிறது.
அறிவாலும் உணர்ச்சியாலும ஆன ஒரு மன பாவனையை ஒரு நொடிப்
பொழுதில் தெரியக் காட்டுவதுதான் படிமம். ஒரு ஓவியமோ சிற்பமோ
தன்னை வேறுவித ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்திக்கொள்கின்ற
ஒரு கவிதையாகும்.
என்கிறார் எஸ்ரா பவுண்டு.
இக்காலத்தில் உருவகத்தையே படிமம் என்று தவறாகப் புரிந்து கொண்டவர்கள் இருக்கிறார்கள். இரண்டு அருவப்பொருள்களுக்கிடையிலான ஒப்புமை, படிமத்தை உருவாக்க இயலாது. எனவே எல்லா உருவகங்களையும் ஒப்புமைகளையும் படிமம் எனக் கூடாது. ஐ.ஏ. ரிச்சட்ஸ் தமது நூலான The Philosophy of Rhetoric என்பதில் ஓர் ஒப்புமைப்படிமத்தில் மூன்று உறுப்புகள் உள்ளன என்று குறிப்பிடுகிறார். அவை களம் அல்லது பொதுத் தன்மை(Ground), ஊர்தி (Vehicle), கருத்து (Tenor) என்பன. ஊர்தி என்பதை உவமானம் என்றும், கருத்து என்பதை உவமேயம் என்றும் ஏறத்தாழக் கூறலாம்.
ஒப்பீட்டிற்குத் தேவைப்படுவன இருபொருள்களோ, எண்ணங்களோ, உணர்வுகளோ ஆகும். முதலில் தோன்றுவது சிந்தனையால் உருவாகும் கருத்து (டெனர்). அதன் பயனாக ஒப்பீடு தோன்றுகிறது. ஒப்பீட்டின் விளைவாகத் தோன்றும் சொல்வடிவம் கருத் தினை ஏற்றிச்செல்லும் ஊர்தியாக வெளிப்படுகிறது. அதாவது சிந்தனையில் தோன்றிய கருத்து, சொல்லின் மூலமாகக் காட்சிப்பொருளையோ, கருத்துப்பொருளையோ குறித்த படிமமாக வெளிப்படுகிறது. இவ்வாறு படிமம் உருவாகும்போது கவிதையில் வெற்றுச் சொற்கள் அமைவதில்லை. இலக்கிய வெளிப்பாட்டு முறைகளில் சிறந்ததாகவும், படைப் போருக்கும் படிப்போருக்கும் இடையில் நெருக்கமான மனத்தொடர்பை ஏற்படுத்துவதாகவும் படிமம் அமைகிறது.
படிமம்என்பது அடிப்படையில் சொல்லவந்ததைக் காட்சிப்படுத்திக் கூறுவது தான். கண்ணால் காணமுடியாத அருவப்பொருள்களையும் கருத்துகளையும் உணர்வுகளையும் காட்சிப் படுத்தவல்லது படிமம். அவ்வாறு காட்சிப்படுத்துவதற்காகக் கவிஞன் சொற்றொடர்களையும், உவமைகளையும், உருவகங்களையும், வேறுபலவித அணிகளையும் பயன்படுத்துகின்றான். இவ்வகையில் படிமம் என்பது இலக்கியக்கருவிகளின் கூட்டுக் கலப்பாக இருப்பதால் இதனை உவமை உருவகம் போன்ற அணிவகையாக வரையறுப்பது இயலாது. உதாரணமாக விடியல் பூபாளம் என்று கூறிவிட்டாலோ அக்னிவீணை என்று சொல்லிவிட்டாலோ படிமம் வந்துவிடாது. இவை உருவகங்கள்தான். ஆனால் வானம் காயம் பட்டுக்கிடந்த காலைப் பொழுது என்று கூறும்போது விடியற்கால வானம் மட்டுமன்றி, காயம்பட்டுக்கிடக்கும் ஆண் அல்லது பெண் ஒருவரின் வடிவமாகவும் அந்த வானம் காட்சி தருகிறது. இது படிமமாகிறது.
படிமங்கள் புதிதாக உருவாவதற்கு ஒப்பீட்டில் புதுமை, தெளிவு, பொருத்தம், பொருட்தன்மை (Thinginess) வெளிப்பாடு, கூறவந்த யாவற்றையும் வெளிப்படையாகச் சொற்பெருக்கத்தால் விளக்கிவிடாதிருத்தல், குறித்த தன்மையை வெளியிடல், அறிவார்த்தத் தன்மை, சுருக்கம், உணர்ச்சி ஆகிய தன்மைகள் பயன்படுகின்றன.
படிமம் கவிதைக்கு அழகூட்டும் அலங்காரப் பொருளன்று. ஒரு படைப்பின் உள்ளடக்கம், உருவம், ஆத்மா என்னும் அளவிற்குப் படிமங்கள் செயல்படுவதுண்டு. படிமங்களை மிகச் செறிவாகப் பயன்படுத்தும் நிலையில் அவை இருண்மைப் பண்பு உடையனவாக மாறிவிடும் அபாயம் உருவாகிறது. பல சமயங்களில் தமிழில் எழுதப்படும் கவிதைகள் இருண்மை கொள்ளாவிட்டாலும், முயன்று பொருள்காண வேண்டிய அளவில் உள்ளன. எனினும் கூறவந்ததை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துவதில் படிமம் உறுதியான பங்குவகிக்கிறது. சான்றாக
அள்ளிக் / கைப்பள்ளத்தில் தேக்கிய நீர் /
நதிக்கு அந்நியமாச்சு /
இது நிச்சலனம். /
ஆகாயம் அலைபுரளும் அதில். / கைநீரைக் கவிழ்த்தேன் /
போகும் நதியில் எது என் நீர்?
இக்கவிதைப் பொருளைப் படிமப்பயன்பாடின்றி வெளிப்படுத்துவது கடினம்.
அருவமான விஷயங்களையும் படிமம் காட்சிப்படுத்தி எளிதில் மனத்தில் தைக்கச் செய்கிறது. சான்றாக ஒன்று: நமது வாழ்க்கையிலிருந்து நாம் அந்நியப்பட்டுக் கிடக்கிறோம். மிக நெருங்கியவர்களையும் நம்மால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதில்லை. ஏதோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று விசாரிக்கிறோம். ஆனால் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டபிறகும் நின்று நிதானமாகப் பேச யோசிக்கிறோம். அவரவர் ஜோலி அவரவர்க்கு என்று மனிதநேயமின்றிப் போய்க் கொண்டே இருக்கிறோம். இந்த அருவமான கருத்தை நகுலன் கவிதையாக்கும் முறையைப் பாருங்கள்.
ராமச்சந்திரனா / என்று கேட்டேன் /
ராமச்சந்திரன் / என்றார் /
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை /
அவர் சொல்லவுமில்லை.
அருவமான கருத்தை எப்படி உருவப்படுத்துகிறார் பாருங்கள். ஒரு கல்யாண வீட்டில், அல்லது இழவுக்காரியத்துக்குப் போன இடத்தில், அல்லது ஒரு நண்பர் சந்திப்பில், இக் காட்சி தினசரி நிகழக்கூடியதுதானே? பெயரைக் கேட்டவருக்குப் பெயர் தெரிந்து விடுகிறது. அது போதும். அதற்குமேல் எதுவும் தேவையில்லை. உடனே அவர் தமக்கு எல்லாம் தெரிந்ததாகத் திருப்தியடைந்துவிடுகிறார்.