பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13

இவ்வாறு கதைகூறிய குரங்கு, “சரி, நீ உன் இடத்துக்குப் போ” என்று முதலையை அனுப்பியது. அது தன் இடத்திற்குச் சென்று பார்த்தபோது வேறொரு முதலை அங்கு இருந்தது. அதைக்கண்டு மீண்டும் “நம் நண்பனாகிய குரங்கிடமே உபாயம் கேட்கலாம்” என்று திரும்பிவந்தது. “நண்பனே நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டது. முதலையைக் கடிந்து கொண்ட குரங்கு, “உனக்கு புத்தி சொல்வதே வீண். மூடனுக்கு உபதேசித்தால் வீடு உடையவனையும் வீடு இழக்கச் செய்வான்” என்றது.

முதலை: அது எப்படி?

 

Siragu-pancha-thandhir-kadaigal-13-1

குரங்கு: இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு மரத்தின்மேல் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் ஆலங்கட்டியுடன் கூடிய பெருமழை பெய்யலானது. அப்போது அந்த மரத்தின் கீழ் மழையில் ஒரு குரங்கு பற்கள் கிட்டி, குளிரால் மிகவும் நடுங்கிக் கொண்டிருந்தது. குருவிகள் அதைக் கண்டு இரக்கம் கொண்டன.

குருவி: உனக்குக் கைகால்கள் இருந்தும் குளிர்காற்று முதலிய துக்கத்தை நீ அனுபவிக்கக் காரணம் என்ன? நீ ஏன் வீடுகட்டிக் கொள்ளவில்லை?

துஷ்டக் குரங்கு: ஊசிமூஞ்சி மூடா! வல்லவர்களுக்கு புத்தி சொல்லும் அளவுக்கு வந்துவிட்டாயா நீ? எனக்கு வீடு கட்டுகிற சக்தி இல்லை; ஆனால் அதைப் பிரித்தெறிகின்ற சாமர்த்தியம் உண்டு.
என்று கூறி, தூக்கணாங்குருவிகளின் கூட்டைப் பிய்த்தெறிந்தது. ஆகவே உன்னைப் போன்றவர்களுக்கு உபதேசம் செய்யலாகாது” என்றது குரங்கு.

முதலை: நண்பனே, நான் குற்றவாளி என்பதும் மூடன் என்பதும் மெய்யே, ஆனால் பழைய சிநேகிதன் என்ற முறையில் உன்னை உதவி கேட்கிறேன்.

குரங்கு: நீ உன் இடத்திற்கே திரும்பப் போ. உன் பகைவனோடு போர் செய். இறந்தால் சொர்க்கம் அடைவாய். வென்றால் உன் வீடு உனக்குத் திரும்பக் கிடைக்கும். முன்பு ஒரு புத்திசாலி, உத்தமனுக்குக் கும்பிடும், சூரனுக்கு பேதமும், காரியக்காரனுக்கு தானமும், ஈடானவனுக்கு தண்டமும் செய்து தன் காரியத்தில் வெற்றி அடைந்தது. அதுபோல நடந்துகொள்ள வேண்டும்.

முதலை: அது எப்படி, சொல்வாயாக.

 

Siragu-pancha-thandhir-kadaigal-13-2

குரங்கு: இம்மலையின்மேல் சதுரன் என்னும் நரி இருந்தது. அதற்கு ஒரு நாள் பசி. அங்கங்கே திரிந்துவந்தபோது ஒரு செத்துப்போன யானையின் உடலைக் கண்டது. அதன் தோலைக் கிழித்து இறைச்சியைத் தின்னும் வலிமை அதற்கு இல்லை. எனவே அங்கே உட்கார்ந்திருந்தது. அங்கே ஒரு சிங்கம் வந்தது. நரி அதற்கு வணக்கம் கூறியது. “நீ யார்?” எனக் கேட்டது சிங்கம்.

நரி: நான் உங்கள் அடிமை. நீங்கள் அடித்த யானையைக் காவல்காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.

சிங்கம்: இது நான் கொன்றதல்ல. வேறு யார் கொன்றார்களோ, அன்றி இது தானாகவே இறந்ததோ தெரியாது. ஆகவே நான் இதைச் சாப்பிட மாட்டேன். உனக்கு வேண்டுமானால் சாப்பிடு.

நரி: சுவாமி, நீங்கள் உண்மையே சொன்னீர்கள். பெரியோர்கள் தங்கள் ஆண்மையினால் சம்பாதிக்கிறார்கள்.
சிங்கம் அதைக் கேட்டுவிட்டுப் போய்விட்டது. அப்போது அங்கே ஒரு புலி வந்தது.

நரி: புலி மாமா, நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்? இந்த யானையைக் கொன்ற சிங்கம் பக்கத்திலே எங்கேயோ இருக்கிறது. “ஏதாவது புலி வந்தால் தெரிவி” என்று எனக்குச் சொல்லிச் சென்றது. “நான் முன்பு ஒரு யானையை அடித்து விட்டுக் குளிக்கச் சென்றபோது, அங்கே ஒரு புலி வந்து எச்சில் செய்துவிட்டது. அது முதலாகப் புலியை நான் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைக்கவில்லை” என்று அது சொன்னது.

புலி: நரி மருமகனே, எனக்கு உயிர்ப்பிச்சை கொடு. நான் இந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விடுகிறேன்.
இவ்வாறு புலி சென்றுவிட்டது. அடுத்தபடி ஒரு குரங்கு வந்தது.

நரி: வானரனே, நீ நெடுநாளுக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறாய். உனக்குப் பசியாக இருப்பது முகத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. எனக்குச் சிங்கம் இந்த யானை இறைச்சியைக் கொடுத்தது. நீயும் கொஞ்சம் இதில் தின்று விட்டுச் சிங்கம் வருவதற்கு முன்னால் ஓடிப்போய்விடு.
குரங்கு அதைக் கேட்டு யானையைக் கிழிக்கத் தொடங்கியது. தேவையான அளவுக்கு இறைச்சி கிடைக்குமளவு கிழித்தது.

நரி: சிங்கம் அண்மையில் வந்துவிட்டது. நீ ஓடிப்போய்விடுவதே உத்தமம்.
இதைக் கேட்டுக் குரங்கு ஓடிப்போயிற்று. பிறகு யானை இறைச்சியை அது தின்றுகொண்டிருந்தபோது, மற்றொரு நரி அங்கே வர, அதைப் போரிட்டுத் துரத்தியது. இவ்வாறு ஆளுக்குத் தக்கவாறு நடந்துகொள்ளவேண்டும். நீ சென்று அந்த முதலையைத் துரத்திவிட்டுச் சுகமாக இரு. வேறொரு இடத்திலும் சுகமெல்லாம் கிடைக்கும் ஆயினும், தனக்கு அங்கே நண்பர்கள் யாரும் இல்லாவிட்டால், சித்திராங்கன் போல் தீங்குகளை அனுபவிக்க வேண்டிவரும்.

முதலை: சித்திராங்கனுக்குத் தீங்கு எப்படி நேரிட்டது?

குரங்கு: ஒரு நகரத்தில் சித்திராங்கதன் என்று ஒரு நாய் இருந்தது. அங்கு பஞ்சம் ஏற்பட்டதால், அது வேறொரு நகரத்துக்குப் போயிற்று. அங்கே ஒரு வீட்டுக்காரி அதற்குச் சோறு போட்டு ஆதரித்தாள். அதனால் வெகுநாட்கள் வரை அந்த வீட்டிலேயே இருந்துவந்தது. பின் ஒருநாள் அது சகஜமாகத் தெருவுக்கு வந்தபோது அந்த ஊரின் மற்றைய நாய்கள் அதன்மேல் விழுந்து கடித்துக் குதறிவிட்டன. அதனால் “என்ன பஞ்சம் வந்தாலும், சுய தேசத்தைவிட்டு ஒருவனும் செல்லலாகாது” என்று கூறிக்கொண்டு மீண்டும் தன் இடத்திற்கே வந்தது. அப்போது அதன் உறவான ஒரு நாய் “சித்திராங்கா, நீ சென்ற ஊர் எப்படி இருந்தது?” என்று கேட்டது.

சித்திராங்கன்: ஊர் செழிப்பாகவே இருக்கிறது. பெண்களும் கருணை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நம் ஜாதியிடையில் ஒற்றுமை இல்லை. அதனால் திரும்பிவிட்டேன்.
ஆகவேதான் தன் இருப்பிடத்தில் ஒருவன் இருப்பதைப் போலச் சுகம் வேறொன்றும் இல்லை” என்று முடித்தது குரங்கு.
இதைக் கேட்ட முதலை, தன் இடத்திற்குச் சென்று அங்கிருந்த முதலையுடன் போரிட்டு அதைத் துரத்திவிட்டு சுகமாக வாழ்ந்திருந்தது. வீரத்தினால் பாக்கியம் வழிதேடி வந்து அடைகிறது.

(இத்துடன் இந்தப் பகுதி முடிவடைகிறது.)

ஐந்தாம் பகுதி

அசம்பிரேட்சிய காரியத்துவம் அல்லது ஆராயது செய்தல்.
அரசன் மகன்களை நோக்கி சோமசர்மா கூறுகிறான்.

சோமசர்மா: உலகில் தீய செயல்களைப் பலபேர் செய்கிறார்கள். அவற்றைப் பார்த்தாலும் அவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டாலும், அறிவுடையவர்கள் அவற்றில் ஈடுபடலாகாது. அப்படியிருந்தும், வெள்ளரிவன் என்னும் மயிர்வினைஞன் ஒருவன் மணிபத்திரன் என்பவன் செய்த செயலைக் கண்டு தானும் ஆராயாமல் அவ்வாறே செய்து தனக்குத் தீங்கு தேடிக் கொண்டான்.

அரசகுமாரர்கள்: அது எவ்விதம் ஆசிரியரே, கூறுங்கள்.

ஆசிரியன்: தெற்குதேசத்தில் பைடணபுரி என்ற ஒரு நகரம் இருந்தது. அதில் மணிபத்திரன் என்ற ஒருவன் வாழ்ந்துவந்தான். நன்னெறியில் வாழ்ந்து வந்தாலும் அவனுக்கு வறுமை ஏற்பட்டது.

மணிபத்திரன் (தனக்குள்): சீச்சீ, தயை, அமைதி முதலாகிய குணங்கள் பொருளில்லாதவர்களிடம் இருந்தால் அவை விசித்திரமாகவே தோன்றுகின்றன. வறுமை உற்றவன், கணந்தோறும் துன்பமடைந்து, குடும்பத்தைப் பாதுகாப்பது எப்படி என்று ஏங்குவதால் அறிவு மழுங்குகிறது. தானியம் முதலிய பொருள்கள் இல்லாத வீடு சுடுகாட்டைப் போன்றது. வறியவன், கல்வி முதலிய பல பண்புகளைப் பெற்றிருந்தாலும், அவனைச் சுற்றத்தினர் சேர்வதில்லை. ஆகவே “நானும் பட்டினி கிடந்து உயிர்துறப்பேன்” என்று முடிவுசெய்து, பசியோடிருந்து சற்றே உறங்கினான்.

அவன் தூக்கத்தில் குபேரன் அவன் கனவில் ஒரு துறவியைப்போலத் தோன்றினான். “உனது நல்லொழுக்கத்தினால் நான் உனக்குக் காட்சியளித்தேன். நாளைக்கும் இதே வடிவத்தில் உன் கண்முன் வருவேன். அப்போது என் தலையில் ஓங்கி நீ ஒரு தடியால் அடித்தால், நான் பொற் குவியலாக மாறிவிடுவேன்” என்றான்.

தான் கண்ட கனவு மெய்யோ பொய்யோ என்று யோசித்தவாறு மணிபத்திரன் மறுநாள் வீட்டில் உட்கார்ந்திருந்தான். அப்போது ஒரு நாவிதன் அவன் மனைவியின் நகங்களை வெட்டிக்கொண்டிருந்தான். அச்சமயம் கனவில் கண்ட அதே துறவி உருவம் அவன் கண்முன்னால் தோன்றியது. உடனே அவன் கையில் கிடைத்த தடி ஒன்றை எடுத்துத் துறவியின் தலைமேல் அடிக்க, அந்த இடத்தில் ஒரு பொற்குவியல் கிடந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த மயிர்வினைஞனை நோக்கி, “நான் உனக்குச் சிறிது பொன் தருகிறேன். நீ இங்கே கண்டதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம்” என்று கூறினான். “அப்படியே” என்று கூறி மயிர்வினைஞன் தன் இல்லத்துக்குச் சென்றான்.

 

Siragu-pancha-thandhir-kadaigal-13-3

அவன், தன் வீட்டுக்கு ஒரு துறவியை அழைத்துவந்து, தலையிலடித்தால் பொன் கிடைக்கும் என்ற முடிவோடு சென்றான். அதன்படி நகருக்கு வெளியே இருந்த துறவிகள் கூட்டத்திடையே சென்று ஒரு துறவியைக் கண்டு, “நீங்கள் நாளை என் வீட்டுக்கு எழுந்தருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். அதற்கு அத்துறவி, “உன்னைப் போன்றவர்கள் பார்ப்பனர்களை அழைத்தல்லவா சடங்குகள் செய்வது வழக்கம்? அப்படியிருக்க எங்களை ஏன் அழைக்கிறாய்?” என்றான். “நீங்கள் அறச்செயல்கள் புரிந்து தவவலிமை உடையவர்களாக இருக்கிறீர்கள் என்பதால் உங்களை அழைத்தேன்” என்றான்.

அதன்படியே மறுநாள் காலை துறவி அவன் இருப்பிடத்திற்குச் செல்ல, அவன் ஒரு பெரிய தடியால் துறவியின் தலையிலடித்தான். துறவி இரத்தப் பெருக்கில் கீழே விழுந்தான். அதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கூச்சலிட, காவலாட்கள் அந்நாவிதனைக் கட்டி ஊர்த்தலைவனிடம் கொண்டு சென்றனர்.

ஊர்த்தலைவன்: நீ ஏன் இப்படிச் செய்தாய்?

நாவிதன்: மணிபத்திரன் தன்வீட்டில் இப்படிச் செய்ததனால் நானும் செய்தேன்.
ஊர்த்தலைவன் மணிபத்திரனை அழைத்து விசாரித்தபோது அவன் ஒன்றும் பேசாமல் மௌனமாக நின்றான். அதனால் ஊர்த்தலைவன், “இவன் ஆராயமல் துறவியை அடித்துக் கொன்றதனால், இவனைக் கழுவேற்றுங்கள்” என்று ஆணையிட்டான். மேலும் “முன்னாளில் இப்படித்தான் ஒரு பார்ப்பனி, ஆராயமல் தான் செய்த காரியத்தால், ஒரு கீரிப்பிள்ளையைக் குறித்துத் துயரமடைந்தாள்” என்று கூறினான்.

மணிபத்திரன்: அது எவ்விதம் ஊர்த்தலைவரே?

 

Siragu-pancha-thandhir-kadaigal-13-3

ஊர்த்தலைவன்: உஜ்ஜயினியில் தேவநாமன் என்னும் பார்ப்பனன் ஒருவன் வாழ்ந்தான். அவன் இல்லறம் நடத்திவரும் நாளில் குழந்தை இல்லாக் குறையினால் அவனும் அவன் மனைவியும் ஒரு கீரியை வளர்ப்புப் பிள்ளையாக வளர்க்கலானார்கள். சில நாட்கள் கழித்து அவளும் கருவுற்று அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதை வளர்த்துவரும் காலத்தில், ஒரு நாள், பார்ப்பனி தன் கணவனைப் பார்த்து, “நான் தண்ணீர் கொண்டு வரப்போகிறேன். நீங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிக் குடத்துடன் சென்றாள். அந்நேரம் பிராமணனைத் தேடி கருமம் செய்யச் சிலர் தேடிவரவே அவனும் சென்றான். தொட்டிலில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நல்ல பாம்பு தொட்டிலின்மீது ஊர, கீரிப்பிள்ளை அதைக் கடித்துக் கொன்றது. தன் செயலைப் பார்ப்பனி கண்டு மெச்சுவாள் என்று கருதிக் கீரிப்பிள்ளை வாயிலுக்கு ஓடியது. தண்ணீர் எடுத்துவந்த பார்ப்பனி, வாயில் இரத்தத்தோடு இருந்த கீரியைக் கண்டு, அது தன் குழந்தையைத்தான் கொன்றுவிட்டது என்று எண்ணி நீர்க்குடத்தை அதன் தலைமேல் போட்டுக் கீரியைக் கொன்றுவிட்டாள். பின்னர் வீட்டுக்குள் சென்று குழந்தை உறங்குவதையும் பாம்பின் துண்டுகளையும் கண்டு, “ஐயோ, என் குழந்தையை நான் ஆராயாமல் கொன்றுவிட்டேனே” என்று வருந்தி அழுதாள். அப்போது திரும்பிவந்த பிராமணன், “குழந்தைதான் உறங்குகிறதே, நீ ஏன் அழுகிறாய்?” என்று கேட்டான். “கொஞ்சம் பொருளுக்குப் பேராசைப்பட்டு நீங்கள் போனதால் இவ்விதம் ஆயிற்று. பேராசை பிடித்தவன் தலைமேல் சக்கரம் சுழன்றது போல் இது ஆனது” என்றாள்.

பிராமணன்: அது என்ன, தலைமேல் சக்கரம் சுழன்ற கதை?

 

பார்ப்பனி: அமராவதி நகரத்தில் நான்கு பிராமணர்கள் இருந்தனர். நல்ல வசதியான வாழ்க்கை வாய்த்தபோதும், அவர்களுக்கு மேலும் மேலும் பணத்தின்மீது பேராசை. ஆகவே பொருளைத் தேடி நாம் வேறு தேசம் போகலாம் என்று நால்வரும் புறப்பட்டனர். செல்லும் வழியில் க்ஷிப்ரா நதியின் கரையில் பைரவநந்தி என்ற யோகி ஒருவன் தவம் செய்தவாறிருந்தான். அவன் எல்லாச் சித்திகளும் வல்லவன். அதைக் கேள்விப்பட்ட பிராமணர்கள் அவனிடம் சென்று அவனுக்குத் தொண்டு செய்யலாயினர். அதைச் சிலநாள் கண்ட துறவி, “உங்களுக்கு என்ன வேண்டும்” என்று அவர்களை வினவினான். அவர்கள் “அடிகளே, எங்களுக்கு மிகவும் பணம் வேண்டும். அதனால் அதைத் தேடிப் புறப்பட்டோம். வழியில் உங்கள் பெருமையைக் கேள்விப்பட்டுத் தொண்டு செய்யலானோம். எங்கள் விருப்பத்தை அடைய நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என்றனர். அவன் நான்கு திரிகளை இவர்களுக்கு அளித்தான். “நீங்கள் இத்திரிகளைத் தலையில் வைத்துக்கொண்டு இமயமலை செல்லும் வழியைத் தவறாமல் பின்பற்றிச் செல்லவேண்டும். எவனொருவன் திரி எங்கே விழுகிறதோ அங்கே அவனுக்குச் செல்வம் கிடைக்கும்” என்று கூறினான். அத்திரிகள் ஒவ்வொருவன் தலையிலும் ஒட்டிக் கொண்டன.

இமயமலை செல்லும் பாதையில் அவர்கள் சென்றுகொண்டே இருக்க, ஒருவனுடைய திரி கீழே விழுந்தது. அது விழுந்த இடத்தை அவன் நோக்க, அங்கு தாமிரம் (செம்பு) மிகுதியாகக் கிடப்பதைக் கண்டான். அதை அள்ள அள்ளக் குறையாமல் வருவதாயிற்று. உடனே அவன் தன் நண்பர்களை நோக்கி, “வாருங்கள், நமது காரியம் முடிவடைந்தது. இச் செம்பு உலோகத்தை நல்ல விலைக்கு விற்று நாம் தேவையான செல்வத்தை அடையலாம்” என்றான். இதைக் கேட்ட மற்ற மூவரும், “முட்டாளே, எவ்வளவு தாமிரத்தை எடுத்து எந்தக் காலத்தில் விற்றுப் பணம் சம்பாதிக்கப் போகிறாய்? நாங்கள் எங்கள் வழிப்படி செல்கிறோம்” என்று மேலே சென்றனர்.

அப்போது மற்றொருவனுடைய தலையிலிருந்த திரியும் விழுந்தது. அங்கே அவன் தொட்டபோது அள்ளஅள்ளக் குறையாமல் வெள்ளி உலோகம் கிடைப்பதாயிற்று. ஆகவே அவன் அங்கே தங்கித் தனக்கென வெள்ளியைச் சேகரிக்கலானான். மற்ற இருவரும் அவனையும் ஏளனம் செய்து, “இனிமேல் நிச்சயமாக நமக்குத் தங்கம் கிடைக்கும்” என்றவாறு மேலே சென்றனர். இன்னும் வெகுதொலைவு சென்றபிறகு, மூன்றாம் பிராமணன் தலையிலிருந்த திரி விழுந்தது. அங்கு அவன் கைவைத்த இடமெல்லாம் தங்கம் கிடைக்கவும், அவன் மிகவும் மகிழ்ந்து, “நாம் இங்கேயே தங்கிவிடலாம், இனிமேல் செல்லவேண்டாம்” என்றான். ஆனால் நான்காம் ஆள், “நான் மேலும் சென்றால் எனக்கு மாணிக்கங்கள் வைரங்களும் கிடைக்கும். நீ இருந்து கொள்” என்று கூறி மேலே சென்றான்.

ஆனால் அவனுக்கு வழிதவறிவிட்டது. மேலும் பசியும் தாகமும் வருத்தின. அவ்வாறு அவன் அலைந்துகொண்டிருக்கும்போது, தலையில் சக்கரம் சுற்றிக் கொண்ருக்க அதனால் இரத்தம் பெருகி உடல் எல்லாம் நனைய, வருந்திக் கொண்டிருந்த மனிதன் ஒருவனைக் கண்டான்.

(தொடரும்)

இலக்கியம்