பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12

 

siragu-panjathandhira-kadhaigal

(முதலை குரங்கிற்குக் கதை கூறுகிறது)

ஒரு நாள் தனிமையிலிருக்கும்போது உதிட்டிரனைப் பார்த்துக் கேட்கிறான் அரசன்: எந்தப் போரில் உனக்கு இந்த வெட்டுக்காயம் ஏற்பட்டது?

குயவன்: நான் சூளை இட்டுக்கொண்டிருந்தபோது, ஓர் ஓடு விழுந்து இந்தக் காயம் ஏற்பட்டது எசமான்!

அரசன்: எப்படியோ தவறு நிகழ்ந்து விட்டது. இது இரண்டாம் பேருக்குத் தெரிவதற்கு முன்னால் நீ ஓடிப்போ. பெரு வீரர்கள் எதிரில் உன் உயிர் சல்லிக்காசும் பெறாது.

குயவன்: சுவாமி, என் கைகால்களைக் கட்டி, என்னைப் போர்க்களத்தில் விட்டு என் திறமையை நீங்கள் காணுங்கள்.

அரசன்: நீ பிறந்த குலம் போர் இடும் அனுபவத்தில் வந்ததன்று. அப்படியாக, நீ நரிக்குட்டிபோல் வீணாக ஏன் துள்ளுகிறாய்? குலைக்கிற நாய் வேட்டை பிடிப்பதில்லை.

குயவன்: இந்த நரிக்குட்டி யாரிடத்தில் தன்னைப் புகழ்ந்துகொண்டது? சொல்லுங்கள் அரசே!

அதற்கு அரசன்: ஒரு வனத்தில் ஒரு சிங்கம் தன் துணையோடு வசித்துவந்தது. அதற்கு இரண்டு குட்டிகள் பிறந்தன. அது பல விலங்குகளைக் கொன்று தன் பெண் சிங்கத்திடம் கொடுத்தது. “இக்குட்டிகளுக்கு புத்தி தெரிகின்ற வரை இவர்களை நம்பித் தனியாக விடவேண்டாம்” என்று எச்சரித்தது. தினமும் தான் மட்டும் சென்று வேட்டையாடி வந்தது. ஒரு நாள் அதற்கு ஒன்றும் கிடைக்காமல் திரும்பும்போது வழியில் ஒரு அப்போதுதான் பிறந்திருந்த ஒரு நரிக்குட்டியைக் கண்டது. அடிக்காமல் பிடித்துக் கொண்டுவந்து, தன் பெட்டையிடம் கொடுத்தது. அது மிகவும் அழகாக இருந்ததால், பெண்சிங்கம் அதைக் கொல்லாமல் தன் பிள்ளைகளோடு அதையும் வைத்துக் காப்பாற்றலாயிற்று. வயதுவந்ததும் மூன்று குட்டிகளும் ஒன்றாக ஒருநாள் காட்டுக்குள் சென்றன. அங்கே ஒரு யானையைப் பார்த்ததும், அதைக் கொல்லவேண்டும் என்று சிங்கக்குட்டிகள் தயங்கிநிற்க, “இது நமக்கு ஆகாத வேலை” என்று சொல்லிவிட்டு நரிக்குட்டி தங்கள் இடத்திற்கு ஓடிப்போயிற்று. தாய்ச்சிங்கத்திடம் சிங்கக்குட்டிகள் அதன் செயலைக் கூறின.

நரிக்குட்டி: நான் இவர்களைவிட வீரத்தில் குறைந்தவனோ? இவர்கள் என்னைப் பழித்து ஏன் சிரிக்கிறார்கள்? கூழுக்கு மாங்காய் தோற்குமா? நான் இவர்களைவிட வீரத்தில் சிறந்தவன் என்று காட்டுவேன். கொட்டினால்தான் தேள், இல்லாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
அதைக் கேட்ட பெண்சிங்கம், அதைத் தனியே அழைத்துக் கொண்டு சென்று: நீ நரிக்குட்டி, உன் குலத்தில் யானையைக் கொல்லும் சக்தி கிடையாது. உனக்கு நான் பால் கொடுத்து வளர்த்ததால் இப்படிப்பட்ட வீரம் பேசுகிறாய். என் குட்டிகள் உன்னை இன்னான் என்று அறிந்துகொள்வதற்கு முன்பாக நீ ஓடிப்போய்விடு. இல்லாவிட்டால் இவர்கள் கையில் அகப்பட்டு இறந்து போவாய்.
அதைக் கேட்ட நரி ஓடிப்போயிற்று. அதுபோல நீ குயவன் குலத்தைச் சேர்ந்தவன் என்பது வெளிப்படும் முன்பாக ஓடிப்போய்விடுவது நல்லது” என்றான் அரசன். அதைக் கேட்ட குயவன் அங்கிருந்து ஓடிப் போய்விட்டான்” என்றது முதலை.
இதைக் கேட்டும் சுமுகன் ஆகிய குரங்கு அயரவில்லை.

குரங்கு: பெண்களின் மனத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. ஆகையால் உன் பேச்சில் நம்பிக்கை வரவில்லை.

முதலை: எப்படி நீ இதைச் சொல்கிறாய்?

குரங்கு: ஒரு நகரத்தில் ஒரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி எல்லாரோடும் கலகம் செய்து சண்டை போடுகிறவளாயிருந்தாள். அதனால் அவன் தன் ஊரை விட்டு வெளியேறிச் சென்றான். அப்போது அவன் மனைவி, “கணவரே, எனக்குத் தண்ணீர் தாகம் எடுக்கிறது. எங்கேயாவது சென்று கொண்டுவாருங்கள்” என்றாள். அவளைத் தனியே விட்டு அவன் நீர் கொண்டுவரச் சென்றான். திரும்பி வந்து பார்க்கும்போது அவள் இறந்துகிடந்தாள். அதைக் கண்டு அவன் அழுது புலம்பும்போது, “உன் வயதில் பாதியை அவளுக்குக் கொடுத்தால் அவள் பிழைத்து எழுந்திருப்பாள்” என்று ஓர் அசரீரி வாக்கு கேட்டது. அதைக் கேட்ட பார்ப்பனனும் மூன்று முறை, “என் பாதிவயதை இவளுக்குக் கொடுத்தேன்” என்று மந்திரம் போல் உச்சரித்தான். அவள் பிழைத்தெழுந்தாள். பிறகு இருவரும் ஒரு நகரத்துக்குச் சென்றனர். அப்போது பார்ப்பனன் செலவு வாங்கக் கடைக்குச் சென்றான். அச்சமயத்தில் பக்கத்தில் ஒரு முடவன் மிகச் சிறப்பாகப் பாட்டுப் பாடுவதைப் பார்ப்பனி கேட்டாள். அவனிடம் சென்று “உன் இசையில் நான் மயங்கிவிட்டேன்; என்னை ஏற்றுக் கொள்” என்று வேண்டினாள். அவனும் ஏற்றுக்கொண்டான். பிறகு பார்ப்பனியின் பரிந்துரையின் பேரில் அவனும் பார்ப்பனன் வீட்டிலேயே வாழ்ந்து வரலானான். “நீங்கள் இல்லாத போது இவன் எனக்குத் துணையாக இருக்கட்டும்” என்று மனைவி கூறியதை அவன் நம்பினான். எங்கு சென்றாலும் அப்பெண் அந்த முடவனைத் தன் முதுகில் கட்டி எடுத்துக்கொண்டு சென்றாள். அவள் கணவனும் அதைத் தவறாக நினைக்கவில்லை. ஒருசமயம் அவர்கள் காட்டுவழியில் செல்லும்போது அப்பெண், தன் கணவனை ஒரு கிணற்றில் உருட்டிவிட்டு, முடவனை ஒரு பெட்டியில் வைத்துத் தலைமீது தூக்கிச் சென்றாள். அடுத்த நகரம் வந்தது. அங்கு அவள் பெட்டியைச் சுமந்து செல்வதைக் கண்ட அரசன், அவளிடம் “இது என்ன?” என்று கேட்டான். “இவர் என் கணவர். இவர் நடக்க முடியாமல் இருப்பதால் இப்படித் தலையில் சுமந்து செல்கிறேன்” என்றாள் அவள். ‘மிகக் கற்புடைய பெண்மணி இவள்’ என்று மகிழ்ச்சியடைந்த அரசன், அவளைத் தன் உடன்பிறப்பு என்றே எண்ணி ஒரு வீட்டை அளித்து வாழ வைத்தான். இது இப்படியிருக்க, கிணற்றிற்கு நீர் பருக வந்த ஒருவன் பிராமணனைக் காப்பாற்றினான். அவன் வெளியே வந்து தன் மனைவியையும் முடவனையும் தேடிக் காணாமல் திகைத்து, தேடியவாறே நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டுவிட்ட அவன் மனைவி, அரசனிடம் சென்று, “இவன் என் கணவனுக்கு விரோதி. என் கணவன் காலை வெட்டியவன் இவன்தான்” என்று கூறினாள். அரசன் அதைக் கேட்டு பிராமணனைக் காவலில் வைக்க முனைந்தான். அப்போது அப்பார்ப்பனன், “ஓ அரச சிகாமணியே! நீங்கள் மிகவும் தர்ம குணம் வாய்ந்தவராக இருக்கிறீர்கள். ஆகவே நான் சொல்வதை தயவு கூர்ந்து கேளுங்கள்” என்று தன் குறைகளை எல்லாம் சொன்னான். அதைக் கேட்ட அரசன் ஒரு பஞ்சாயத்தை நியமித்து விசாரிக்குமாறு சொல்ல, அவர்களும் அடுத்த ஊர்களுக்கெல்லாம் சென்று விசாரித்துவந்து பார்ப்பனன் குற்றமற்றவன், அந்தப் பெண்தான் கெட்டவள் என்று தெரிவித்தனர். அதைக் கேட்ட அரசன் பார்ப்பனனை விடுவித்து அவன் மனைவியை தண்டித்தான். அதுபோலப் பெண்கள்தான் எங்கும் அனர்த்தங்களுக்கு மூலமாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் பேச்சுக்குக் காதுகொடுக்கலாகாது” என்று குரங்கு கூறியது.

மேலும் அவ்வாறு காதுகொடுத்து, நந்தனன் என்னும் அரசனும் வரருசி என்ற அவன் அமைச்சனும் சபை நடுவில் ஏளனம் அடைந்தார்கள் என்றது.

முதலை: அது எவ்விதம்?

குரங்கு: ஒரு காலத்தில் நந்தனன் என்ற நல்லரசன் ஆண்டுவந்தான். ஒருநாள் அவனிடம் ஊடல் கொண்ட அவன் மனைவி, அவன் என்ன சமாதானம் கூறியும் கேட்காமல், “நீ வாயில் கடிவாளம் போட்டுக்கொண்டு உன் முதுகின்மேல் என்னைக் குதிரைபோலச் சுமந்து செல்லவேண்டும். மேலும் குதிரைபோலக் கனைக்கவும் வேண்டும். அப்போதுதான் உனக்கு நான் செவி கொடுப்பேன்” என்று கூறினாள். அவளும் ஏதோ அன்பால் கேட்கிறாள் என்று கருதி அப்படியே அரசன் செய்தான். அதை அமைச்சனின் மனைவி கேள்விப்பட்டாள். அவளும் தன் கணவனிடம் பேசாமல் முறுக்காக இருந்தாள். “நீ ஏன் பேசாமலிருக்கிறாய்” என்று அமைச்சன் தன் மனைவியைக் கேட்டான். “நீ தலையை மொட்டை அடித்துக் கொண்டு என்னை வலமாகச் சுற்றிவந்து காலில் விழுந்தால்தான் நான் உன்னிடம் பேசுவேன்” என்று அவள் சொன்னாள். அவனும் வேறு வழியின்றி அப்படியே செய்தான்.

மறுநாள் அரச சபையில் அவனைக் கண்ட அரசன், “ஏன் இப்படி மொட்டை அடித்துக் கொண்டு வந்திருக்கிறாய்” என்று கேட்டான். “நீங்கள் குதிரையைப் போல் கனைத்தபடியால் அடியேன் மழுங்க மொட்டை அடித்துக் கொள்ள நேர்ந்தது” என்று அமைச்சன் கூறினான். அதைக் கேட்ட சபையினர் விசாரித்து மிக எளிதாக நடந்தவற்றை அறிந்துகொண்டார்கள். ஆகவே பெண்களுடைய உசிதமற்ற வார்த்தைகளைக் கேட்டால் அமைதியாக இருந்துவிட வேண்டும். அப்படிச் செய்யாதவர்களோடு உரையாடுபவன், புலித்தோலைப் போர்த்திய கழுதையைப் போல் துன்பமடைவான்.

முதலை: அது எப்படி நேர்ந்தது?

pancha-thandhira-kadhaigal12-1

குரங்கு: ஓர் ஆற்றங்கரையில் ஓர் ஏழை வண்ணான் வாழ்ந்தான். அவ்வூரில் அக்கழுதைக்கு உரிய தீனி கிடைக்கவில்லை. அவன் தன் கழுதை தீனியின்றி நாளுக்கு நாள் இளைத்துவந்ததைப் பார்த்துக் கவலைப்பட்டான். ஒருநாள் காட்டுப்பக்கம் போகையில் ஒரு புலித்தோல் அவனுக்குக் கிடைத்தது. அதைக் கொண்டுவந்து தன் கழுதைமேல் நன்றாகப் போர்த்திக் கட்டிவிட்டான். அது புலித்தோலோடு ஊரார் பயிர்களுக்கிடையில் புகுந்து நன்றாக மேய்ந்துவந்தது. அதைப் புலி என்று நினைத்து ஊரார் பயந்திருந்தார்கள். ஓரிரவு அக்கழுதை இவ்வாறு மேய்ந்து கொண்டிருக்கும்போது எங்கோ தொலைவில் ஒரு பெண் கழுதையின் குரலைக் கேட்டு இதுவும் பெருங்கூச்சல் போட்டுக் கத்தலாயிற்று. அப்போது அதைக் கழுதை என்று அறிந்துகொண்ட கொல்லைக்காரன் நன்றாக அதை அடித்துத் துரத்தினான். ஆகவே பெண்களுடன் வீணாகப் பேசலாகாது. அப்படியிருக்கும்போது அவளுக்காக நீ என்னைக் கொல்வதற்கு எண்ணினாய். நம்பிக்கைக்குக் கேடு விளைவித்தல் உன் இனத்துக்கு இயல்பாக இருக்கிறது. அது சாதுக்களின் சேர்க்கையாலும் சரியாகாது. மேலும் உன்னைப் போன்ற துஷ்டர்களுக்கு உபதேசம் செய்தும் பயனில்லை.

அச்சமயத்தில் மற்றொரு முதலை அங்கே வந்து, “உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த உன் மனையாட்டி ஏதோ காரணத்தினால் இறந்துபோனாள்” என்று தெரிவித்தது. அதைக் கேட்ட

முதலை: நான் கொடியவன் ஆதலினால் இத்தகைய துயரம் நேர்ந்தது. நண்பனுக்கும் பொல்லாதவன் ஆனேன். பெண்டாட்டியும் இறந்துபோனாள். வீடும் காடாயிற்று. ஆகவே நண்பா, என் பிழையை மன்னித்துவிடு, நானும் இறக்கப் போகிறேன்.

குரங்கு: உன் மனைவியின் பேச்சைக் கேட்டு என்னைக் கொல்லவந்தாய். இப்போது அவள் சாவைக் கேட்டு மிகவும் துக்கப்படுகிறாய். துர்க்குணம் உடைய அவள் இறந்துபோனதை மறந்துவிடு. தன் கணவனைவிட்டு முன்பு ஒரு பெண், வேறொருவனை நாடியதால் அவளைப் பார்த்து நரியும் சிரித்தது.

முதலை: நரி யாரைப் பார்த்து சிரித்தது? அது என்ன கதை?

குரங்கு: ஒரு நகரத்தில் ஓர் அரசாங்க அலுவலன் இருந்தான். அவன் மனைவி அந்நிய ஆடவர்கள் மேல் ஆசை கொண்டிருந்தாள்.
அவளைக் கண்ட ஒரு வாலிபன்: பெண்ணே, என் மனைவி இறந்துபோனதால் நான் மிகவும் துயரடைந்துள்ளேன். என் துக்கத்திற்குப் பரிகாரமாக நீ துணையிருந்தால் மிகவும் புண்ணியமுண்டு. உன்னைப் பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தேன்.

பெண்: என் கிழக் கணவன் மிகவும் செல்வம் சேர்த்து வைத்திருக்கிறான், உன் ஆசை இப்படி இருக்குமானால், நீ அவன் பணத்தை எடுத்துக் கொண்டு வந்துவிடு. நாம் இருவரும் வேற்றூர் போய்விடலாம்.

வாலிபன்: மிகவும் நல்லது. அப்படியே செய்கிறேன்.
அவன் மறுநாள் நேரம் பார்த்து அந்த அலுவலன் வீட்டில் கொள்ளையடித்துக் கொண்டு அவன் மனைவியையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான். இரண்டு காதம் சென்ற பிறகு வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது.

அதைக் கண்ட வாலிபன்: இந்த ஆறு மிகவும் ஆழமாக இருக்கிறது. ஆகவே நான் முதலில் பொருள்களை எல்லாம் கொண்டுபோய் அக்கரையில் வைத்துவிட்டு வந்து உன்னைத் தூக்கிக் கொண்டு செல்கிறேன்.
அவளிடமிருந்த பணத்தையெல்லாம் பெற்றுக் கொண்ட பிறகு,

வாலிபன்: உன் சுமையான பட்டுப்புடவையையும் கொடுத்தால் வைத்துவிட்டு வருகிறேன். அதற்குப் பிறகு உன்னைத் தூக்கிச் செல்லுதல் எளிதாக இருக்கும்.

அவளும் அதை நம்பித் தன் புடைவையையும் அவிழ்த்துக் கொடுத்தாள். அவன் அக்கரை சென்றதும் பணத்தையும் புடைவையையும் எடுத்துக் கொண்டு ஓடிப்போனான். அதைக் கண்ட பெண், “நான் செய்த காரியத்துக்குப் பலன் கைமேல் கிடைத்துவிட்டது. இதை என் கணவன் அறிந்தால் என்ன செய்வானோ” என்று நினைத்து ஏங்கியபடி, வெட்கத் தினால் ஆற்றில் சற்றே இறங்கி நீரில் அமர்ந்திருந்தாள். அப்போது அங்கே ஒரு நரி வந்தது. ஆற்றில் கரையருகே பெரிய ஒரு மீன் துள்ளிக் குதித்ததைக் கண்டு அது தன் வாயிலிருந்து மாமிசத்தைக் கரையில் போட்டுவிட்டு, மீனைப் பிடிக்கத் தாவியது. ஆனால் மீன் சடக்கென்று ஆழத்தில் போய்விட்டது. நரி மீண்டும் வந்து மாமிசத்தை எடுக்க முனைவதற்குள் ஒரு பருந்து திடீரென்று அதை எடுத்துக்கொண்டு பறந்து விட்டது. அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த

பெண்: மாமிசமும் போயிற்று மீனும் போயிற்று. இனி வானத்தைப் பார்த்து ஆவதென்ன?
என்று நரியைப் பார்த்துச் சிரித்தாள். இதைக் கேட்ட

நரி: நானாவது பரவாயில்லை. நீ உன் கணவனையும் விட்டு காதலனையும் விட்டு, செல்வத்தையும் புடவையையும் ஒன்றாக விட்டல்லவா உட்கார்ந்திருக்கிறாய்?

என்று அவளைப் பார்த்துச் சிரித்தது. அவள் கணவனோ தன் செல்வம் போனதற்குச் சற்றே கவலைப் பட்டாலும், மனைவியைக் குறித்து, “கெட்டவள் விட்டுப் போனாள்” என்று மகிழ்ச்சியாகவே இருந்தான். ஆகவே நீயும் மகிழ்ச்சியாக வீடுபோய்ச் சேர்” என்றது குரங்கு.

(தொடரும்)

இலக்கியம்