காகம்-அப்படியானால் பாம்பைக் கொல்ல நான் செய்ய வேண்டிய உபாயம் என்ன?
நரி-இந்த நகரத்து அரசகுமாரி குளிக்கிற நீராட்டுக்குளத்திற்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளைக் கழற்றுவாள். அந்த நகைகளில் ஒன்றைக் கொண்டுவந்து மக்கள் பார்க்கும்படியாக அந்த மரப்பொந்தில் போட்டுவிடு.
காக்கையும் அவ்விதமே செய்தது. அதைப் பின்தொடர்ந்து வந்த அரசனின் பணியாளர்கள் நகையைத் தேடி பொந்தினைப் பிளந்தார்கள். அப்போது சீறிவந்த நாகத்தையும் கொன்றார்கள். இவ்விதம் காகம் தன் தொல்லை நீங்கிச் சுகமாக வாழ்ந்தது.
எனவே சரியான உபாயத்தினால் எல்லாம் கைவசமாகும். புத்தியிருப்பவன் பலவான். முன்பு புத்தி பலத்தினால் ஒரு முயல் சிங்கத்தையே கொன்றது என்று தமனகன் கூறியது.
கரடகன்-அது எப்படி?
தமனகன்-(முயல் சிங்கத்தைக் கொன்ற கதையைச் சொல்கிறது)
ஒரு காட்டில் மதோன்மத்தன் என்று ஒரு சிங்கம் இருந்தது. அது எவ்வித முறையுமின்றி அக்காட்டிலுள்ள மிருகங்களை எல்லாம் கொன்று தின்று வந்தது. அப்போது மிருகங்கள் யாவும் ஒன்றுதிரண்டு அதனிடம் சென்று, “மிருகங்களுக்கெல்லாம் அரசனே! இம்மாதிரித் தாங்கள் எல்லையின்றி விலங்குகளைக் கொன்றுவந்தால் எல்லா விலங்குகளும் அழிந்துபோய்விடும். பிறகு தங்களுக்கும் இரை கிடைக்காது ஆகவே நாங்கள் தினம் ஒரு விலங்காக உங்களிடம் வருகிறோம். நீங்கள் அவ்விலங்கை உண்டு பசியாறலாம்” என்றன. சிங்கமும் “அப்படியே செய்கிறேன்” என்று சத்தியம் செய்துகொடுத்தது.
இவ்வாறு தினம் ஒரு பிராணியாகச் சிங்கம் புசித்துக்கொண்டு வந்தது. ஒரு நாள் ஒரு கிழட்டு முயலுக்கான முறை. “நமக்கு மரணகாலம் வந்துவிட்டதால் இதற்கு ஓர் உபாயத்தை நாம் யோசிக்கவேண்டும்” என்று அந்த முயல் நினைத்தது. அதன்படி அது மிகக் காலம்தாழ்த்தி சிங்கத்தின் பசிவேளை சென்ற பிறகு மெதுவாக அதனிடம் வந்தது.
சிங்கம்-அற்ப முயலே! யானையாக இருந்தாலும் என்னிடம் பசிவேளை தப்பி வருவதில்லை. அப்படி இருக்க, நீ எவ்வளவு சிறிய பிராணி? இப்படித் தாமதமாக வந்த காரணம் என்ன?
முயல்-ஐயனே! இது என் குற்றம் அல்ல. உங்களுடைய பசிவேளைக்குத் தவறாமல்தான் வந்தேன். வரும் வழியில் ஒரு கொடிய சிங்கத்தைக் கண்டு பயந்து ஒளிந்திருந்தேன். அது சென்ற பிறகு நான் இங்கே வந்தேன்.
சிங்கம்-என்னை அல்லாமல் இந்தக் காட்டில் வேறொரு சிங்கம் இருக்கிறதா? நீ பார்த்தாயா அதை? இப்போதே எனக்குக் காட்டு, வா.
முயல் சிங்கத்தை அழைத்துக்கொண்டு போய், ஒரு பாழும் கிணற்றைக் காட்டிற்று. அதில் மேலே மட்டும் தெளிவாக நீர் இருந்தது. உள்ளே வெறும் சேறுதான். “இந்த இடத்தில்தான் அந்தச் சிங்கம் இருக்கிறது” என்று முயல் கூறிற்று. சிங்கம் அதன் சொல்லை நம்பிக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது. அதில் அந்தச் சிங்கத்தின் பிம்பம் தோன்றியது. அதைக் கொல்ல வேண்டும் என்று எண்ணிக் கிணற்றுக்குள் பாய்ந்த சிங்கம், சேற்றில் அழுந்தி இறந்து போயிற்று.
ஆகவே, அறிவே பலம், புத்திமான், பலவான் என்றது தமனகன்.
கரடகன்-அவ்வாறாயின், நீ சிங்கத்திடம் சென்று வா. உனக்கு நலம் உண்டாகட்டும்.
தமனகன் கோள் சொல்கிறது
பிங்கலனாகிய சிங்கம் தனித்திருக்கும்போது, தமனகனாகிய நரி அதை வணங்கியது. பிறகு “சுவாமி, உங்களுக்கு இன்று ஒரு தீங்கு நேர இருந்தது. அதை நான் அறிந்து தங்கள் அனுமதியைப் பெற வந்தேன்” என்றது.
சிங்கம்-என்ன அது?தமனகன்-உங்களுடைய நண்பன் சஞ்சீவகன், உங்களிடம் நடிக்கிறான். தனக்கு அதிக பலம் இருப்பதால் தானே இந்தக் காட்டுக்கு அரசன் என்று அவன் மனத்தில் எண்ணம். தங்களைத் தக்க சமயம் பார்த்துக் கொன்றுவிட்டு அவன் அரசனாகிவிடுவான்.
பிங்கலன்-சீ, அப்படியெல்லாம் நிகழாது. அவன் எனக்கு நல்ல நண்பன்.
தமனகன்-நீங்கள் நான் சொல்வதைப் பொய்யென்று நினைத்து கோபித்தாலும், அல்லது தண்டித்தாலும் சரி. அரசனுக்கு ஒரு துன்பம் வரும்போது தன்னலம் பார்க்காமல் அவனுக்கு வேண்டிய நல்ல உபாயத்தைச் சொல்வது அமைச்சர்களின் கடமையானதால், உங்களுக்கு நான் இதைத் தெரிவித்தேன்.
பிங்கலன் இதைக் கேட்டு வியப்படைந்தது.
தமனகன்-நீங்கள் அதை முக்கியப் பிரதானியாக ஆக்கினீர்கள். அவனோ சுயநலக்காரனாக இருக்கிறான். எனக்கென்ன? அரசனும் அவன் கீழுள்ளவனும் சமமாக இருந்தால், திருமகள் (இராஜலட்சுமி) அவர்கள் இருவரில் ஒருவனைக் கைவிட்டு விடுவாள். ஆகவே அரசன் தனக்குச் சமமான இடத்தை வேறு ஒருவருக்கும் தரலாகாது. தாங்கள் எல்லாம் அறிந்தவர். எனவே இப்படிப்பட்ட பிரதானியை வேரோடு அழிப்பதுதான் நல்லது. உலகத்தில் பதவியையும் பணத்தையும் விரும்பாதவன் யார்?
சிங்கம் (சிரித்தவாறு)-சஞ்சீவகனுக்கும் எனக்கும் உள்ள நட்பு ஆழமானது. நண்பர்கள் சிலசமயம் தவறுகள் செய்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு பிரியமாகவே இருக்க வேண்டும்.
தமனகன்-இதனால் உங்களுக்கு அபாயம் நேரிடும். எவன் ஒருவன் அமைச்சர்களின் புத்தியைக் கேட்காமல் நடக்கிறானோ அவனுக்கு ஆபத்து நேரிடும்.
சிங்கம்-நான் புகலிடம் கொடுத்துக் காப்பாற்றிய என் நண்பன் எனக்கு துரோகம் செய்வானா? என்ன பேச்சுப் பேசுகிறாய் நீ? போய்விடு.
தமனகன்-கெட்டவனின் புத்தி மாறுமா? நாயின் வாலை நிமிர்த்த முடியுமா? எட்டி மரத்துக்குப் பாலூற்றி வளர்த்தாலும் அதன் கசப்புப் போகுமா? நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். இனி என்மேல் குற்றமில்லை.
சிங்கம்-இதை நான் இப்போதே போய் சஞ்சீவகனிடம் சொல்கிறேன்.
தமனகன்-அவனிடம் இதைக் கூறினால், அவன் எச்சரிக்கை அடைந்து வேறொரு உபாயத்தால் உங்களுக்குத் தீங்கு தேடுவான். ஆகையால் இதை அவனுக்குச் சொல்லாமல் இருப்பதே நல்லது. அரசனின் மந்திராலோசனை எப்போதும் இரகசியமாகவே இருக்கவேண்டும்.
சிங்கம்-அவன் எனக்கு எதிரியாகி, என்ன செய்யமுடியும்? அவனுக்கு என்ன சாமர்த்தியம் இருக்கிறது?
தமனகன்-நமக்கு அவன் வீரம், பராக்கிரமம் என்ன தெரியும்? ஒருவன் குணத்தை அறியாமல் அவனைச் சேர்க்கலாகாது. அப்படிச் சேர்த்தால், ஒரு சீலைப்பேன், மூட்டைப்பூச்சியால் கெட்ட கதையாகும்.
சிங்கம்-அது எப்படி, சொல்.
நரி-ஒரு கட்டிலில், ஒரு சீலைப்பேன் நெடுநாட்களாக வாழ்ந்து வந்தது. அப்போது ஒரு மூட்டைப்பூச்சி அங்கு வந்து தங்க இடம் தேடிற்று. “நீ சமய சந்தர்ப்பம் தெரியாமல் கடிக்கிறவன், நீ இங்கே இருந்தால் ஆபத்து வந்து சேரும். போய்விடு” என்று சீலைப்பேன் விரட்டியது. “இல்லை, இரவில் இந்தப் படுக்கைக்கு உரியவன் நன்கு உறங்கியபின்னரே கடிப்பேன், எனக்கு இடம் கொடு” என்றது மூட்டைப்பூச்சி. அதை நம்பிய சீலைப்பேன் அதற்கு இடம் கொடுத்தது. ஆனால் படுக்க வந்த மனிதன் உறங்குவதற்கு முன்னாலேயே அவனை மூட்டைப்பூச்சி கடித்தது. அவன் உடனே விளக்கை எடுத்துத் தேட, கட்டிலின் மூட்டில் ஒளிந்திருந்த சீலைப்பேன் கண்ணில் பட்டது. அந்த மனிதன் உடனே அதைக் கொன்றான். ஆகவே ஒருவன் குணத்தை அறிவதற்கு முன் அவனிடம் நட்புக் கொள்ளலாகாது.
சிங்கம்– சஞ்சீவகனின் பண்பு இப்படித்தான் என்று நான் அறிந்துகொண்டால்தான் நீ சொல்வதை நம்புவேன்.
தமனகன்-அது உங்களைப் பார்த்துக் கொம்புகளை முன்னால் நீட்டியவாறு, வரும்போது உங்களுக்குத் தெரியவரும்.
இப்படிச் சொல்லியபிறகு நரி, சஞ்சீவகனாகிய எருதின் இடத்துக்குப் போயிற்று. தன் மனத்தில் பெரிய துக்கம் இருப்பதுபோல் நடித்தது.
(தமனகன் சண்டை மூட்டுதல்)
சஞ்சீவகன்-நண்பனே, சுகமா?
தமனகன்-பணியாளனுக்கு சுகம் எங்கே இருக்கிறது? செல்வமும், விபத்தும் அருகருகே இருக்கின்றன. ஆகவே மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
சஞ்சீவகன்-ஏன் இப்படிச் சொல்கிறாய்?
தமனகன்-அரச காரியத்தில் ஏற்படும் இரகசியத்தை மற்றொருவரிடம் சொல்லக்கூடாது. அரசன் அறிந்தால் கொல்லுவான் அல்லவா? ஆனாலும் நீ என்னை நம்பி, சிங்கத்துடன் நட்புக் கொண்டதனால், உனக்குச் சொல்கிறேன். உன் நண்பனான சிங்கம், உன்மேல் கோபம் கொண்டு, உன்னைக் கொன்று தன் சேனைகளுக்கு நல்ல விருந்து வைக்க நினைத்திருக்கிறது.
சஞ்சீவகன், இதைக் கேட்டு வருத்தத்துடன் சிந்தித்தவாறு இருந்தது.
தமனகன்-சிந்தனை என்ன? எது நிகழ்ந்ததோ அதற்குத் தக்கவாறு நாம் நடக்க வேண்டும்.
சஞ்சீவகன்-நீ சொல்வது சரி. உலகம் இப்படித்தான் இருக்கிறது. அரசர்கள் துஷ்டர்களைக் காப்பாற்றுகிறார்கள். கெட்டவர்களுடன் அதிக நட்பு வைத்தால் அவன் விபரீதமாக நினைக்கிறான். சந்தன மரத்தில் பாம்பு இருக்கிறது. தாழையில் முள் இருக்கிறது. அரசர்களைச் சுற்றி எப்போதும் கெட்டவர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவனும் அவர்களுடைய பேச்சைத்தான் கேட்கிறான் அதனால்தான் நமக்கு இப்படி நேர்கிறது.
தமனகன்-அரசர்களின் வாய்ப்பேச்சு இனிமையாக இருக்கும். ஆனால் மனத்தில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. கடவுள் கடலைக் கடப்பதற்குக் கப்பலைப் படைத்தான். இருளைப் போக்குவதற்கு விளக்கை உண்டாக்கினான். யானையை அடக்க அங்குசத்தைப் படைத்தான். ஆனால் கெட்டவர்களுடைய மனத்தை அடக்க எதையும் படைக்கவில்லை.
சஞ்சீவன் (பெருமூச்சுடன்)-எனக்குப் பெரிய தீங்கு நேரிட்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க எனக்கு சாமர்த்தியம் கிடையாது. எமன் வாயில் அகப்பட்டவன் பிழைப்பது ஏது? எப்படி ஒரு குற்றமும் இல்லாத ஒட்டகத்தைக் காகம் முதலானவை சேர்ந்து கொன்றனவோ, அப்படியே வஞ்சனை மிக்கவர்கள் குற்றமில்லாமலே ஒருவனைக் கொல்கிறார்கள்.
தமனகன்-அது எப்படி?
(சஞ்சீவகன் என்ற எருது சொல்கிறது-காகம் ஒட்டகத்தைக் கொன்ற கதை)
ஒரு காட்டில் மதோற்கடன் என்று ஒரு சிங்கம் இருந்தது. அதற்கு நரி, புலி, காக்கை என்ற மூன்றும் அமைச்சர்கள். அப்போது அந்தக் காட்டில் ஒட்டகம் ஒன்று வந்தது. மந்திரியாகிய காக்கை, அதைக்கண்டு, “நீ யார்?” என்று கேட்டது.
ஒட்டகம்-நான் வழிதவறி இங்கே வந்து விட்டேன்.
காக்கை ஒட்டகத்தைச் சிங்கத்திடம் கொண்டுபோயிற்று.
சிங்கம்-பயப்படாதே, இந்தக் காட்டிலேயே சௌக்கியமாக நீயும் இரு. உனக்கு எந்தத் தீங்கும் நிகழாது.
இவ்விதம் கூறி அதைத் தன் காட்டில் வைத்துக் கொண்டது.
சிலநாட்கள் இவ்விதம் சென்றன. ஒருநாள் சிங்கத்துக்கு உடல் நலம் கெட்டிருந்தது. தன் மூன்று அமைச்சர்களையும் அது அழைத்தது.
சிங்கம்-இன்றைக்கு என்னால் இரைதேட முடியாது. எனக்கு உடல் நலம் கெட்டிருக்கிறது. நீங்கள் போய் எனக்காக இரை தேடிக்கொண்டு வரவேண்டும். ஆள்பவனின் எச்சில் எல்லாம் கூட இருப்பவர்களுக்குத்தானே? எனவே நான் சாப்பிட்டபிறகு, நீங்களும் வயிறாரப் புசிக்கலாம்.
மூன்று மிருகங்களும் சிங்கத்தின் கட்டளைப்படி, காட்டில் சென்று நான்கு பேருக்கும் போதுமான அளவில் ஒரு இரையைத் தேடின. அப்படி எதுவும் கிடைக்காத்தால் தங்களுக்குள் ஆலோசித்தன.
காகம்-நாம் இன்றைக்கு ஒட்டகத்தைக் கொன்றுவிட வேண்டும். அதுதான் சிங்கம் சாப்பிட்டபிறகு நம் மூவருக்கும் போதிய உணவாகும்.
நரி, புலி-இல்லை, இல்லை. அவனுக்கு நம் அரசன் அபயம் கொடுத்திருக்கிறான். ஆகவே நாம் அவனைக் கொல்லலாகாது.
காகம்-நான் சொல்வதைக் கேளுங்கள். நாம் இரைதேடிச் செல்லாமல் போனால் சிங்கத்தின் கையால் மரணமடைவோம். பசியெடுத்தால் தாயும் பிள்ளையை விட்டுவிடுகிறாள். பாம்பும் தான் இட்ட முட்டைகளையே சாப்பிடுகிறது. பசி வரும்போது ஒருவன் எந்தப் பாதகம்தான் செய்யமாட்டான்? உங்களுக்குத் தெரியாதா?
சிங்கத்திடம் காகம் சென்று, சுவாமி இன்றைக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்றது.
சிங்கம்-அப்படியானால் என்ன செய்யலாம்?
காகம்-தங்களிடத்திலேயே இரை இருக்கிறதே, பிறகு என்ன யோசனை? கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்யைத் தேடுவார்களா?
சிங்கம்-என்னிடத்தில் இரை எங்கே இருக்கிறது?
காகம்-ஒட்டகம் இருக்கிறதே
சிங்கம் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தது. பூமியைக் கையால் தொட்டு, பிறகு காதைப் பொத்திக்கொண்டு, சிவ சிவ நான் அவனுக்கு அபயம் கொடுத்திருக்கிறேன். அபயம் கொடுத்தவர்களைக் கைவிடலாமா? பசு, நிலம், தானியம் இவற்றின் தானத்தைவிட அபய தானமே மேலானது. அசுவமேத யாகத்தினால் வரும் புண்ணியத்தைவிட அபயம் தருவதால் வரும் புண்ணியம் அதிகம் என்று சாத்திரம் சொல்கிறதே.
காகம்-நான் சொல்வதைக் கேட்டருளுங்கள். ஒரு குலத்தின் நன்மைக்காக ஒருவனைக் கைவிடலாம். ஒரு கிராமத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு குடும்பம் அழியலாம். ஒரு தேசத்திற்காக ஒரு கிராமத்தை விடலாம். தன் நிமித்தம் ஒருவன் நிலத்தையே கைவிடலாம். ஆகவே இது தவறன்று. எனினும் நீங்களாக அவனைக் கொல்லவேண்டாம். தானாகவே அவன் சாகத் தயாராக இருந்தால் நாங்கள் உங்களுக்காக அவனைக் கொல்கிறோம்.
இப்படிக் காகம் கூறியபோது சிங்கம் சும்மா இருந்தது. அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டு, காகம் சென்று, புலி, நரி, ஒட்டகம் மூன்றையும் கூட்டி வந்தது.
காகம் (சிங்கத்திடம்)-சுவாமி, இன்றைக்கு ஓர் இரையும் கிடைக்கவில்லை. ஆகவே நீங்கள் என்னை உண்ணுங்கள்.
சிங்கம்-நீ எம்மாத்திரம்? உன் உடல் என் கடைவாய்ப் பல்லுக்குப் போதுமா? உன்னை உண்பதால் என் பசி தீருமா?
நரி-அப்படியானால் என்னைச் சாப்பிடுங்கள்.
சிங்கம்-நீயும் சிறியவன். அதிகமல்ல.
புலி-அப்படியானால், என்னைச் சாப்பிடுங்கள்.
சிங்கம்-நீ என்ன, உன்னை மிகப் பெரியவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? கர்வம் வேண்டாம்.
ஒட்டகம்-சுவாமி, நான் இவர்களைவிட அளவில் பெரியவன். தங்களுக்கு விருப்பமானால் நான் உணவாகத் தயார்.
இதைக் கேட்டவுடன் புலியும் நரியும் பாய்ந்து அதைக் கொன்றன. எங்கே கீழ்மக்கள் இருக்கிறார்களோ அங்கே சுகம் இருக்காது. உயிருக்கு நாசம் வரும் என்றே நினைக்கவேண்டும்.
(தொடரும்)