பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்

Intermountain West Dairy Cow Blend

Cows, Pigs, Wars, Witches என்ற நூல் மார்வின் ஹாரிஸ் என்ற மானிடவியல் பேராசிரியர் எழுதியது (1974). ஹாரிஸ் (1927-2001) கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியவர். அவருடைய நூலின் ஒரு பகுதி துக்காராம் கோபால்ராவ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு எனிஇந்தியன் பதிப்பகம் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது (விலை ரூ.95; ஜனவரி 2005). (மூலநூலின் சூனியக்காரிகள் பற்றிய பகுதி மொழிபெயர்க்கப்படவில்லை). நூலில் அடங்கியுள்ள விஷயத்திற்கு இந்த விலை சற்று அதிகம்தான்.
மார்க்சிய கலாச்சாரப் பொருள்முதல்வாத நோக்கில் இந்நூலின் கட்டுரைகள் அமைந்துள்ளன. இக்கட்டுரைகள் வெளிவர கோ. ராஜாராம் தொடங்கிய திண்ணை.காம் உதவி புரிந்துள்ளது.
இந்நூலில் ஐந்து கட்டுரைகள் உள்ளன. ‘ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை?’
என்பது முதல் கட்டுரை. பயனற்றுப் போகும் பசுக்களை இந்துக்கள் கொன்று தின்றுவிடலாம் என்பது மேற்குநாட்டினரின் பொதுவான கருத்து. ஆனால் அப்படிக் கொன்று தின்னாமல் இருபபதன் மூலம், உண்மையிலேயே இந்தியர்கள் தங்கள் கால் நடைகளை அமெரிக்கர்களை விட அதிகத் திறனான முறையில் உபயோகிக்கிறார்கள் என்று நிரூபிக்கிறார். அவை தங்கள் உணவுக்கு விவசாயியை நம்புவதில்லை; அவற்றின் சாணம் எரிபொருளாகவும் வேறுவிதங்க ளிலும் பயன்படுகிறது; அவை கடும் பஞ்சங்களைத் தாங்கும் ஆற்றல் பெற்றுள்ளன; பஞ்சத்திற்குப் பிறகும் விவசாயத்திற்கு உதவிசெய்கின்றன என்று வாதிடும் அவர், மாட்டைக் காப்பாற்றும் ஓர் இந்தியப் பிரஜை வீணாக்குவதைவிடப் பலமடங்கு அதிகமான எரிபொருள் சக்தியை அமெரிக்கர்கள் வீணாக்குகிறார்கள் என்று சாடுகிறார்.
இரண்டாவது கட்டுரை, ‘பன்றியை விரும்புபவர்களும் பன்றியை வெறுப்பவர்களும்’ என்ற விஷயத்தைப் பற்றியது. பொதுவாக யூதர்களும் முஸ்லிம்களும் பன்றியை (அசுத்தமான பிராணி என்பதற்காக) வெறுக்கிறார்கள். சீனர்கள் பன்றியை விரும்புகிறார்கள். இதற்கான வரலாற்றுக்காரணத்தை ஆராய்கிறார் ஆசிரியர். யூதர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்த நீரற்ற பிரதேசங்களில் பன்றியை வளர்ப்பது சூழலுக்குப் பொருந்தாது (பன்றிகளுக்கு அதிக நீர் தேவை). மாரிங், செம்பகா என்ற பழங்குடி மக்கள் எவ்வாறு பன்றிகள் மீது அன்பு செலுத்துகிறார்கள், அவற்றைக் கொன்று விழா நடத்துகிறார்கள் என்பதையும் வருணிக்கிறார். இவ்வாறு நடத்தும் விழாக்கள், அவர்கள் தங்களைப் போருக்குத் தயார் செய்துகொள்ளவும், புது நண்பர்களை உருவாக்கிக் கொள்ளவும் உதவுகின்றன. இவர்களது ஏற்பாடுகள் திறமையான முறையில் தாவரங்களும் மிருகங்களும் மனிதர்களும் சுற்றுச் சூழலில் இணைந்து அதன் வளத்தைச் சிறப்பாகப் பகிர்ந்துகொள்ள உதவுகின்றன.
மூன்றாவது கட்டுரை, ‘ஏன் போர்கள்நடக்கின்றன?’ என்பது பற்றியது. பொதுவாகப் பழங்குடி சமூகங்களில் பெண்கள் போர் செய்வதில்லை. ஆண்கள் போர் செய்து இறந்து போகின்றார்கள். ஆண் பெண் விகிதத்தைச் சமன் செய்து மக்கள் தொகையைச் சரிசெய்து தங்கள் பொருளாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பழங்குடி மக்கள் கையாளும் ஒரு உத்தியாகவே போர் இருக்கின்றது.
‘ஆண் என்ற காட்டுமிராண்டி’ என்பது அடுத்த கட்டுரை. போர் என்பது ஆணாதிக்கம் சார்ந்த செயல்முறை. இதற்கு யானோமாமோ என்ற பழங்குடி மக்களின் நடைமுறையை ஆதாரமாகக் காட்டுகிறார். இவர்களிடையே பெரிய வன்முறைச் சண்டைகள் நடக்கின்றன. பெண்கள் யாரும் போரில் ஈடுபடுவதில்லை. என்றாலும் பெண்சிசுக் கொலை மூலமாகப் பெண்கள் மக்கள்தொகையைக் -குறிப்பாக ஆண்-பெண் விகிதத்தைக் காப்பாற்றுகிறார்கள். ஆண்கள் போரில் ஈடுபடுவதற்குக் காரணம், முரட்டுத்தன உருவாக்கம் (brutalisation). முரட்டுத்தனத்தினால் உணவு வசதி, ஆரோக்கியமான வாழ்வு, பாலுறவு ஆகியவை எளிதாகக் கிடைக்கின்றன. சமூகத்தில் ஆண்-பெண் இரண்டு பால்களும் முரடர்களாக இருக்கமுடியாது. எனவே ஏதாவது ஒரு பாலை(ஆணை) தைரியமாக்கவும், இன்னொரு பாலை(பெண்ணை)க் கோழையாக்கவும் கலாச்சாரம் போதிக்கிறது. இன்றைய போர்முறை மாற்றங்களும் ஆண்- பெண் பேதத்தை முற்றிலுமாகத் தவிர்க்கவில்லை. உண்மையான ஆண்-பெண் சமத்துவம் வருவதற்கு இன்றைய இராணுவம் போலீஸ் போன்ற சக்திகளை முழுமையாக நீக்கவேண்டும் என்கிறார்.
ஐந்தாவது கட்டுரை ‘போட்லாட்ச்-அந்தஸ்துக்கான போட்டி’ என்பது. («)பாட்லா(ட்)ச் (potlatch) எனப்படும் பெருவிருந்துகளைப் பற்றியது. பழங்குடி மக்களிடையே நிகழும் அந்தஸ்துக்கான போட்டி இது. நமது காலத்திலும், அடிக்கடி ஆடைகளையும் கார்களையும் மாற்றி சிலர் தங்கள் அந்தஸ்தைக் காட்டுவதுபோலச் சில பழங்குடி மக்களின் குழுத்தலைவர்கள் தங்கள் அந்தஸ்தைக் காட்டப் பெருவிருந்துகளை நடத்துகின்றனர். இதில் நிறையப் பரிசுகள் சேகரிக்கப்பட்டுப் பிறருக்கு வழங்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுமுழுதும் குழுத்தலைவர்கள் உழைத்துச் சேகரிக்கிறாக்ள், ஆனால் மற்றவர்களைவிடக் குறைவாக எடுததுக்கொள்கிறார்கள். அவர்களுடைய ஒரேபரிசு அந்தஸ்து மட்டுமே. இந்த விருந்துகள் பொருள்களின் மறுவிநியோகத்தின்மூலம் (redistribution) ஒருவகையான சமத்துவ வாழ்வு முறையை ஏற்படுத்துகின்றன. ஆனால் எல்லாப் பழங்குடி மக்களும் இப்படி இல்லை. எக்சிமோ, புஷ்மன், செமெய், போன்றோர் ‘சவுக்குகள் நாய்கள் உருவாக்குவதைப் போல, பரிசுகள் அடிமைகளை உருவாக்குகின்றன’ என்கிறார்கள். என்றாலும் பெருவிருந்தின் மூலமாக அந்தஸ்து தேடுவதின் ஊடே பெரும் மனிதக்கூட்டம் வளமாக முடிகிறது என்கிறார் ஆசிரியர்.
இதற்கு திண்ணை.காம் ராஜாராமின் பதிப்புரை, மார்வின் ஹாரிஸின் முன்னுரை, ரவிசங்கரின் முன்னுரை, மொழிபெயர்ப்பாளர் முன்னுரை என எத்தனை உரைகள்(!) ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய நூல். சமூகவியல்-குறிப்பாக மார்க்சியச் சமூகவியல் அணுகுமுறையை அவர்கள் அறிந்துகொள்ளப் பயன்படும்.
மொழிபெயர்ப்பு படிக்கச் சரளமாக இருந்தாலும் சிலசமயங்களில் நெருடலாகவும் இருக்கிறது. முதல் பக்கத்திலேயே ‘பஞ்சத்தில் அடி(ப்)பட்ட’ ‘அடிப்பட்ட’ என இருமுறை எழுதுகிறார் ஆசிரியர். அடிப்பட்ட= ‘பலகாலமாக வழக்கிலுள்ள’ என்று பொருள்படும். (கோவில்களில் தேவாரம் பாடுவது அடிப்பட்ட வழக்கு என்பதுபோல). ‘பஞ்சத்தில் அடிபட்ட’ என இருக்க வேண்டும். Holy cow என்ற ஆங்கில மரபுத்தொடரினை விலாவாரியாக விளக்கும் ஆசிரியருக்குத் தமிழ் மரபுத்தொடர்கள் பற்றிய தெளிவில்லை. பக்கம் 106இல் feedback என்பதை ‘உள்திரும்புதல்’ என்பது அபத்தம். (பின்னூட்டு/பின்னூட்டம் என்ற சொல் தொடர்பியலில் 1990இலிருந்தே வழக்கிலுள்ளது). ஆங்காங்கு எழுத்துப்பிழைகள் சொற்பிழைகளுக்கும் பஞ்சமில்லை. தமிழ் நாட்டில் ஆங்கிலம் தெரிந்தால்போதும், எழுதுவதற்கு. தமிழ் அறிந்துதான் எழுதவேண்டும் என்று யார் சொன்னது?
—–
அன்புமிக்க தீராநதி ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
தாங்கள் அனுப்பிய நூலுக்கு மதிப்புரை உடனே எழுதி அனுப்பவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்றாலும் பல அலுவல்களினூடே மறந்துவிட்டேன். காலதாமதத்திற்கு மன்னிக்கவும். அன்புகூர்ந்து தஙகள் இதழில் வெளியிட வேண்டுகிறேன்.
க.பூரணச்சந்திரன்.

நூல்-பரிந்துரை